உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டு வழிதனிலே/புகழ முடியுமா ?

விக்கிமூலம் இலிருந்து

புகழ முடியுமா?


விதைக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது. அது என்னென்னவோ சாதிக்க முடியாதனவற்றை யெல்லாம் சாதித்து விடுகிறது. ஒரு இரண்டு மணிநேரம் சொற்பொழிவு நிகழ்த்திக்கூடக் கேட்பவர் உள்ளத்திலே கருத்தை நன்றாகப் பதிய வைக்கவோ, தெளிவாக்கவோ முடிகிறதில்லை. அந்தக் காரியத்தை ஒன்றிரண்டு வரிகளில் கவிதை மிக நல்ல முறையில் செய்து விடுகிறது. ஒரு சமயம் இங்கிலாந்திலே ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. கிறிஸ்து நாதர் தண்ணிரைத் திராட்சைரச மதுவாக மாற்றியளித்த கதையைப் பொருளாகக்கொண்டு கட்டுரை எழுத வேண்டுமென்று ஏற்பாடு. பலர் போட்டியிற் கலந்துகொண்டார்கள். ஜான் பணியன் என்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர் அப்பொழுது சிறுவராக இருந்தார். அவரும் இதில் கலந்துகொண்டார். எல்லோரும் நீள நினைந்து, பக்கம் பக்கமாக வரைந்து தள்ளினார்கள். ஆனால், பனியன் மட்டும் ஒன்றுமே எழுதாமல் ஏதோ எண்ணமிட்டுக்கொண்டிருந்தார். கடைசி வரையிலும் ஒரு எழுத்துக்கூடத் தாளில் பதிவாகவில்லை. இன்னும் இரண்டு நிமிஷம்தான் உண்டு; அதற்கு மேலே யாரும் எழுதக் கூடாது ' என்று அறிவித்தார்கள். அப்பொழுதுதான் அவருக்கு எழுத வேண்டுமென்று தோன்றியது. உடனே, "தண்ணீர் தனது நாதனைக் கண்டு நாணத்தால் சிவந்தது ” 

(Water saw its Lord and blushed) என்றுஒரு கவிதை வரியைத் தாளிலே பொறித்துக்கொடுத்தார். அவருக்குத்தான் பரிசு கிடைத்தது. அந்தக் கவிதை வரிஎத்தனையோ செய்திகளை, உணர்ச்சிகளைச் சொல்லாமற் சொல்லிவிட்டது. நம்முள்ளத்திலே அவை யெல்லாம் உயிர்த்தெழுந்து நிறைகின்றன. அந்த வரியை நினைக்க நினைக்கக் கருத்தும் உணர்ச்சியும் பெருகுகின்றன. அதனால்தான் கவிதைக்கு நாம் அத்தனை உயர்வு கொடுக்கிறோம்.

வயல் வளம் மிகுந்த மருத நிலத்திற்கு ஒரு தனிப் பட்ட அழகிருக்கிறது. "தண்டலை மயில்களாட ” என்று தொடங்கும் ஒரு பாட்டிலேயே அதன் வனப்பைக் கம்பன் நமக்குக் காட்டிவிடுகிறான். பழங் காலத்துப் புலவனொருவன் இதே இயற்கைக் காட்சியை எப்படி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறானென்று இப்பொழுது பார்ப்போம்.

புலவன் பாட வந்தது ஒருவனுடைய வள்ளன்மையைப்பற்றி. அவன் எப்படிப்பட்டவன் என்றால் புகழ முடியாத அவ்வளவு பெரிய கொடைத் திறம் உடையவன். அவனுக்குச் சொந்தமானது கழனிகள் சூழ்ந்த ஓர் ஊர். ஆதலால், கவிஞன் அவனுடைய செழுமை மிக்க கழனியூரை வருணித்து அதன் வழியாக அவனுடைய புகழ முடியாத வள்ளன்மையைப் பற்றிக் குறிப்பாக எடுத்துக் காட்டுகிறான்.

நன்றாகக் கொழுத்து மதமேறி யிருக்கும் எருமையினுடைய கண்கள் சிவந்து தோன்றும், அப்படிப்பட்ட எருமையொன்று ஒரு கரும்பு  வயலிலே புகுந்தது. வளம் சுரந்து கிடந்ததால் யாருமே அதை வயலைவிட்டு விரட்டி ஒட்டவில்லை. அது தன்னிச்சையாகக் கரும்புப் பயிர்களினிடையே சென்று அவற்றை ஒரு கலக்குக் கலக்கிற்று. பிறகு அங்கிருந்து வெளிப்போந்து ஒரு தடாகத்தினுள்ளே பாய்ந்தது. அங்கே குவளை மலர்கள் ஏராளமாக மலர்ந்திருந்தன. அவற்றை வேண்டியமட்டும் அருந்திற்று. கரும்பின் சுவை, குவளையின் சுவை எல்லாம் பார்த்தாகிவிட்டது. தடாகத்தில் நீராடியும் முடிந்தது. பிறகு ஒரு காஞ்சி மரச் சோலையில் நுழைந்து நல்ல நிழலிலே படுத்துக் கவலையின்றித் தூங்கத் தொடங்கிற்று. இப்படிப்பட்ட செழிப்பு மிக்க கழனி சூழ்ந்த ஊரை உடையவனாம் அந்த வள்ளல். பாட்டைப் பார்க்கலாம்.


செங்கண்மேதி கரும்புழக்கி
அங்கண் நீலத் தலர் அருந்தி
பொழிற்காஞ்சி நிழல்துயிலும்
செழுநீர்,
நல்வயற் கழனியூரன்
புகழ்தல் ஆனாப் பெருவண்மையனே.

மேதி-எருமை. உழக்கி-மிதித்து. அங்கண்நிலத்தலர்-அழகியகண்போன்ற குவளைமலர். ஆனா-அடங்காத.

இது ஒரு பழம் பாடல். வஞ்சிப்பா என்ற வகையைச் சேர்ந்தது. ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டும் இக்காலத்திலும்கூட யாப்பு வழக்கில் இருக்கின்றன. கலிப்பா எப்பொழுதாவது அரிதாகப் புலவர்களின் முயற்சியால் உண்டாகிறது. ஆனால், வஞ்சிப்பர பெரும்பாலும் மறைந்து விட்டது என்று கூறலாம். இந்த யாப்பு வகை இன்று யாரையும் கவருவதாகத் தெரிவதில்லை. மேலே எடுத்துக் காட்டிய பாடல் மிகச் சிறந்த வஞ்சிப்பாவாக அமைந்திருக்கிறது. கம்பன் பாட்டிலே உள்ள உருவகம் ஒன்றும் இதிற் கிடையாது. செழுமை மிக்க மருத நிலத்தில் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு செயலே இப்பாட்டு யாதொரு வகையான அணியுமின்றிச் சொல்லுகிறது.

அதனுடைய விளைவுதான் என்ன? பச்சைப்பசேலென்று பரந்த வயலிடமும், அதில் ஆங்காங்கு கரும்பின் தோற்றமும், தடாகங்களின் மிளிர்வும், மரஞ் செறிந்த சோலைகளின் கரும்பசுமையும் நம் கண் முன்பு பளிச்சென்று தோன்றுகின்றன. கைதேர்ந்த ஒவியன் ஒருவன் துTரிகையை எடுத்து வண்ணத்தில் தோய்த்து இரண்டு மூன்று வீச்சிலே ஒரு இயற்கைக் காட்சியை நம் கண் முன்பு நிறுத்தி விடுவது போல இந்தக் கவிஞன் செய்து விடுகிறான். அந்த ஒவியன் செய்ய முடியாத இன்னும் பல காரியங்களையும் இவன் செய்து விடுகிறான் என்பதையும் உணரும்போது நமது இன்பம் மேலும் பெருகுகின்றது.

எருமை மாட்டிற்கே அந்த வள்ளலின் ஊரிலே இத்தனை சுகங் கிடைக்கும்போது அழகிய கவிதைகளே உண்டாக்கும் கவிஞனுக்குச் சிறப்புக் கிடைப்பதைப் பற்றி ஐயப்பட வேண்டியதே இல்லை. அதுவும் பாட்டிலே தொனிக்கின்றது.



பெ. தூரன் இயற்றிய நூல்கள்



கவிதை
இளந்தமிழா
மின்னல் பூ
நிலாப் பிஞ்சு
பட்டிப் பறவைகள்

சிறுகதை
பிள்ளை வரம்
உரிமைப் பெண்
காளிங்கராயன் கொடை
தங்கச் சங்கிலி
மாவிளக்கு

கட்டுரை
பூவின் சிரிப்பு
காட்டு வழிதனிலே
தேன் சிட்டு

நாடகம்
மனக் குகை
ஆதி அத்தி
அழகு மயக்கம்
பொன்னியின் தியாகம்

காதலும் கடமையும்
சூழ்ச்சி

உளவியல்
மனமெனும் மாயக் குரங்கு
குமரப் பருவம்
அடி மனம்
தாழ்வு மனப்பான்மை
குழந்தை உள்ளம்
பாரம்பரியம்

சிறுவர் இலக்கியம்
நிலாப் பாட்டி
ஆனையும் பூனையும்
ஜிம்மி
பறக்கும் மனிதன்
ஓலைக் கிளி


பிற நூல்கள்
கருவில் வளரும் குழந்தை
பாரதி தமிழ்
காற்றில் வந்த கவிதை

Jacket Printed at New Art Press, Madras-4.