காட்டு வழிதனிலே/மலையேறும்போது

விக்கிமூலம் இலிருந்து

மலையேறும்போது


க்கினி நட்சத்திரம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் உருவில்லாத ஒரு ஜூவாலே தக தகவென்று மேலெழும்புவது போல் காணப்படுகின்றது. அது கானல் நீர்; பேய்த் தேர். அது அலையலையாக மேலெழுகின்ற உச்சி வேளையிலே பூமா தேவி மூர்ச்சையுற்றவள்போல் அசைவற்றுக் கிடக்கிறாள்.

ஆனால், இந்த வெயிலிலும் பழநியங்கிரியிலே பக்தர்களின் கூட்டத்திற்கும், உற்சாகத்திற்கும், முழக்கத்திற்கும் குறைவே இல்லை. சித்திரை இறுதி வாரத்திலும், வைகாசி முதல் வாரத்திலும் அங்கு வந்து குழுமுகின்ற மக்களின் எண்ணிக்கையைச் சொல்லி முடியாது. பயணத் தொல்லையோ, வெயிலின் கொடுமையோ அவர்களை எவ்விதத்திலும் தடைப்படுத்துவதாகக் காணோம். அவர்களுடைய பக்தியைச் சோதிக்கவே இறைவன் இவற்றையெல்லாம் உண்டாக்கியிருக்கிறான் என்பது அவர்கள் எண்ணம் போலும். அதனால் அக்கினி நட்சத்திரத்தின்போது பழநியில் ஒரே கூட்டம்.

'அரஹரா, அரஹரா' என்ற பக்தி வெள்ள முழக்கம் இடைவிடாமல் எழுகின்றது. 'வேலும் மயிலும், வேலும் மயிலும் - சாமியே சரணம்' என்று மலையாளத்துக்காரர்கள் மெய்மறந்து கின்றார்கள். மலையாளத்து மக்களுக்கு முருகனிடத்திலே ஒரு தனிப்பட்ட பக்தி இருக்கின்றது. அதைக் காணும்போது நமது உள்ளத்திலும் அது ஊற்றெடுக்கத் தொடங்குகின்றது. எங்கு பார்த்தாலும் விதவிதமான காவடிகள். எங்கும் ஒரே பக்தி வெள்ளம்.

நல்ல வெயிலிலே மலையேறும் அடியவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை பொங்கி அதிற் பூசியிருக்கும் திருநீற்றைக் கரைத்துக்கொண்டு விழுகிறது. நீண்ட பெருமூச்சு மார்பை விம்மச்செய்கிறது. உள்ளத்திலே பக்தி தளராவிட்டாலும் மலையேறும் சிரமத்தால் கால்கள் தளர்வடைகின்றன. அந்தச் சமயத்திலே ஒரு கானம் பிறக்கின்றது.

ஏறாத மலையேறி எருது ரண்டும் தத்தளிக்கப்

பாராமல் கைகொடுப்பார் பழநிமலை வேலவனே

வாழ்க்கையெனும் தொல்லை மிகுந்த செங்குத்தான மலையிலே ஏறும்போது நெஞ்சமும், மனமும் தத்தளிக்கத்தான் செய்கின்றன. அம்மலையின் சிகரத்தில் உள்ள வீட்டை அடைவது எளிய செயலா? பல தடவைகளில் மனமுடைந்து போகிறது; நெஞ்சம் வெதும்புகிறது. ஏற முடியாத இந்த மலையிலே ஏறி வருந்துவானேன் என்று தளர்ச்சியுண்டாகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் பழநியப்பனைத் துதித்தால் அவன் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பானா? கருணைக் கடலல்லவா அவன்? நமது வருத்தத்தைப் பார்த்துச் சகியாமல் கைகொடுத்து நம்மைச் சிகரத்திற்கு அழைத்துச் செல்வான். இம்மாதிரி பொருள் செய்யும்படியாக அந்த நாடோடிப் பாட்டு அமைந்திருக்கின்றது.

இதோ இன்னுமொரு பாட்டு அனல் வீசுகின்ற காற்றிலே பொருள் செறிந்து மிதந்து வருகின்றது.

எருக்கிலைக்குத் தண்ணீர் கட்டி
      எத்தனைப் பூப் பூத்தாலும்
மருக் கொழுந்து வாசமுண்டோ

      மலைப் பழநி வேலவனே

இதில் ஒரு பெரிய உண்மை தொனிப்பதை நாம் கவனிக்கலாம். “விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்” என்று கவிஞர் பாடுகின்றாரே அதுபோல, பயனில்லாத செயலைச் செய்து ஆயுளைக் குறைத்துக் கொள்வது அறிவுடைமை ஆகாது என்பதை இப் பாட்டுக் கூறுகின்றது. பாத்தி கட்டித் தண்ணீர் விட்டு எருக்கஞ் செடியை வளர்ப்பதால் என்ன பயன்? மருக்கொழுந்தை நட்டுத் தண்ணீர் பாய்ச்சினால் பயனுண்டு; இனிய நறுமணத்தைத் துய்க்கலாம். ஆதலால், மருக்கொழுந்தைப் போன்ற நல்ல மணமுள்ள செயல்களைச் செய்வதில் நாம் நம் வாழ்க்கையைச் செலவிடவேண்டும் என்பதை இப்பாட்டுக் குறிப்பாக உணர்த்தி நிற்கின்றது.

அதோ அங்கொரு துறவி பாடிக்கொண்டே மலையேறுகிறான். அவன் உலகத்தைத் துறந்துவிட வேண்டுமென்ற விரதம் கொண்டவன். அந்த விரதத்தை என்றும் மறவாமலிருக்கும்படியாக எப்பொழுதும் நினைவூட்ட வேண்டுமென்று சடை சடையாக மாறிய தன் தலை மயிரை உச்சியிலே சேர்த்து முடிந்திருக்கிறான்; நெற்றியிலே நிறைய வெண்ணீற்றை அணிந்து கொண்டிருக்கிறான். முனிவர்களும் பயந்து நடுங்கும்படியான காமம், வெகுளி, மயக்கம் என்பன போன்ற அசுரர்களை இறைவன் மாய்ப்பான் என்பதற்கு அடையாளமாக நிற்கும் வேலையும் அவன் கையில் வைத்திருக்கிறான். இருந்தாலும் ஒவ்வொரு சமயத்தில் அவனுடைய உள்ளம் தடுமாறுகின்றது. நெறியில்லா நெறியில் செல்ல விரும்புகின்றது. அதனால், அவன் முருகனை நோக்கிக் கதறுகின்றான்.

உச்சியிலே சடையிருக்க
        உள்ளங் கையில் வேலிருக்க
நெற்றியிலே நீறிருக்கக் கந்தையா என்

        நினைவு தப்பிப் போவதென்னோ.

இந்தப் பாட்டிற் பிறக்கும் சோகம் எங்கும் பரவுகின்றது. இறைவன் காதிலும் புகுகின்றது. கலங்கிய உள்ளம் அமைதி பெறுமாறு கருணை வள்ளல் புன்சிரிப்புடன் நோக்குகிறான். துறவி மலை உச்சியை அடைந்து, இறைவன் பாதத்தில் விழுந்து வணங்கி எழுந்து அவன் திருமுகத்தை ஆவலோடு அண்ணாந்து பார்க்கிறான். இறைவனிடம் மாறாது பொலியும் புன்முறுவல் அவனுக்குச் சாந்தி அளிக்கின்றது.

மேலே எடுத்துக் காட்டிய நாடோடி பாடல்கள் கால வரையில்லாது பழநியங்கிரியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் புதைந்து கிடக்கும் பொருளும், இசையும் உள்ளத்தைக் கவர்கின்றன. அவற்றைக் கேட்பதும், அவற்றை வாய்விட்டுக் கூவும் அடியவர்களின் கூட்டத்தைக் காண்பதும் ஒரு தனி இன்பமாக இருக்கின்றன.