உள்ளடக்கத்துக்குச் செல்

காதல் ஜோதி/காதல் ஜோதி—நாடகம்

விக்கிமூலம் இலிருந்து

காதல் ஜோதி

காட்சி—1

இடம்:— ஆண்டானூர் கிராமத்தில் ஒரு பாதை.

இருப்போர்:— போக்கிரி பொன்னன், சாது சம்பந்தம், சந்திரசேகர ஐயர், தடித்தாண்டவராயன்.
[சாது சம்பந்தம் தலையில் சிறுமூட்டை எடுத்துக் கொண்டு பாதையில் செல்கிறான். அவன் முதுகிலே ஒரு கல் வந்து விழ, அவன் ‘ஐயோ’ என்று அலறியபடி திரும்பிப் பார்க்கிறான். மறுபக்கமிருந்து, போக்கிரி பொன்னன் வருகிறான்.]

சம்பந்தம்:— என்னப்பா இது அக்ரமம்.. கல்லாலே அடிக்கறே...

பொன்னன்:— அடடே! உன்மேலே பட்டுட்டதா கல்லு...

சம்:— உயிர் துடிக்கறது போலாயிட்டடது. ஏன் கல்லாலே அடிச்சே ...?

பொ:— அட யார்டா அவன் அறிவு கெட்டவனா இருக்கிறே.. உன்னை ஏன் கல்லாலே அடிக்கப்போறேன்... நாயை அடிச்சேன், அது தவறி உன் மேலே விழுந்திருக்கும். (பீடி பற்ற வைக்கிறான்)

சம்:— இது நல்லா இல்லைப்பா. கண்மண் தெரியாம, ரோடிலே யாரு போறது யார் வர்ரதுன்னு பார்க்காமலா, கல்லை வீசறது...

பொ:— (கோபமாக) என்னடா. லாபாயின்ட் பேசறே.. டேய்! போற கழுதே பாதை ஓரமாப் போவாமே, நடு ரோடிலே
ஏன் போறே...? பெரிய பிரபுவா, நீ... உன்னைப் பார்த்ததும் நாங்க விழுந்து கும்பிட வேணுமோ?... பொன்னன் கதை தெரியாதா உனக்கு போடா வாயை மூடிகிட்டு சொல்லியாச்சுன்னா (முறைத்து) போன்னு பொன்னன் போயிடணும், ஆமாம்... போ, பேசாமே ...

சம்:— நல்லா இருக்கப்பா உன் நியாயம்... துளிகூட மட்டு மரியாதை இல்லாம பேசாதே...ஏதோ நான் வயசிலே பெரியவன், தலை நரைச்சவன் என்கிறதைப் பார்த்தாவது, கொஞ்சம் மாரியாதையோட பேசு.

பொ:— (மேலும் கோபமாக) மரியாதை வேணுமா, மரியாதை! (கேலியாக) ஐயாவைக் கண்டதும் விழுந்து, கும்பிட வேணுமோ...(கோபமாக) போடா வாயை அடக்கிகிட்டு.

(சம்பந்தம் போகப் புறப்படுகிறான். எதிரே சந்திரசேகர ஐயர் வருகிறார். அவரைக் கண்டதும் போக்கிரி பொன்னன், பீடியைக் கீழே போட்டுவிட்டு, தலையில் இருந்த முண்டாசை எடுத்து கட்கத்தில் வைத்துக்கொண்டு, வளைந்து குழைந்தபடி)

பொ:—எங்கே சாமி! வெய்ய வேளையிலே நடந்து—

சந்:— (அவனைப் பார்த்து அடையாளம் தெரியாமலிருக்கிற நிலையில்) யாரது— பொன்னனா?...

பொ:— ஆமாஞ் சாமி!

சந்:— பொன்னா? சௌக்யமாடாப்பா...

பொ: இருக்கிறேன் சாமி உங்களோட ஆசிர்வாதத்தாலே... எங்க சாமி இந்த வெய்ய வேளையிலே கிளம்பினிங்க. எனக்கே கால் கொப்பளிச்சுப் போவுது...

சந்:— பொன்னா? கடைத் தெருவுக்குப் போயிண்டிருக்கேன்... காமாட்சி செட்டியார் கடையிலே நல்ல காயம் வந்திருக்குன்னு சொன்னா...ஒரு அரை பலம் வாங்கிண்டு வரலாம்னு போறேன்....

பொ:— இதுக்கு நீங்க போகவேணுமா சாமி? சொல்லி அனுப்பினா, காமாட்சி கடை பையன் எடுத்துக்கிட்டுவாரான்...சாமி...போங்க வூட்டுக்கு...காயம் நான் வாங்கி கிட்டு வந்து வீட்டண்டை கொடுக்கறேன்...

ச:— தங்கமான மனுஷன்... உன்னைப் போயி, விஷயம் புரியாதவா, போக்கிரி, சாக்கிரின்னு, பேசறா—(வேட்டி முடிப்பிலிருந்து சில்லரை எடுத்து நீட்டியபடி) இந்தா பொன்னா...!

பொ:— பணமா, சாமி! வேண்டாம். இருக்கட்டும் உங்களிடமே.. செட்டியைக் கேட்டாக் கொடுக்கறான்...பொன்னன் கேட்டுக் கொடுக்காமலிருக்க, காமாட்சி என்ன மடயனா...போங்க வீட்டுக்கு...நான் வாங்கிகிட்டு வர்ரேன்... ஒரு பலமா கேட்டிங்க...

ச:— எந்த மூலைக்குப் போதும்டா பொன்னா, ஒரு பலம்! ஓரு ஐஞ்சி பலம் வேணும்டா.

பொ:— சரி, போங்க, எடுத்துக்கிட்டு வர்ரேன்...

(பொன்னன் போகிறான், கடைவீதி நோக்கி)
(பொன்னன் அடக்க ஒடுக்கமாகவும் அன்பாகவும் பேசக் கண்டு, சம்பந்தம் ஆச்சரியமடைந்து நிற்கிறான். ஐயர் அவனைக் கண்டு...)

ச:— நீ யார்டாப்பா. என்ன மூட்டை?

சம்:— சோளமுங்க..

ச:— சோளமா...சோளம் சத்தான ஆகாரம்னு சொல்றா... அதுதான் சாப்பாட்டுக்கோ, உனக்கு...

சம்:— அதுதானுங்களே கிடைக்குது...அதுவே, காலா காலத்திலே கிடைச்சாப் போதும்னு இருக்குதுங்க...

ச:— ஏண்டாப்பா. ஆயாசமாப் பேசறே... சோளம்னா மட்டமானதுன்னு எண்ணிண்டயா.. பைத்யக்காரா, அரிசிச் சோத்திலே என்ன இருக்குங்கறே சத்து? சோளம் சாப்பிட்டா, கஷ்டப்பட்டு வேலை செய்ய வலிவு ஏற்படும்....

சம்:— (சலிப்பாக) அது சரிங்க...

ச:— கஞ்சி காய்ச்சிச் சாப்பிடறதா, களியாக்கித் தின்றதா— சோளத்தை...

சம்:— அப்படி ஒருவேளை, இப்படி ஒரு வேளை..

ச:— ருசியாக்கூட இருக்கும்னு சொல்றா... நான் சாப்பிட்டதில்லை...

சம்:— (கேலியாக) உங்க உடம்புக்கு ஒத்துக்காதுங்க... பெருங்காயம், லால்ஜி கம்பெனி பெருங்காயம்ங்களா...

ச:— (அலட்சியமாக) ஏதோ ஒரு கம்பெனி... எதுவானா என்ன... என்னமோ ஒரு பழக்கம்.. சாம்பார்லே பெருங்காயம் போட்டாத்தான் எனக்குப் பிடிக்கும்..அப்படி ஒரு அசட்டுப் பழக்கமாயிடுத்து.

சம்:— (மேலும் கேலியாக) இதுக்கு அதெல்லாம் தேவை இல்லிங்க..

ச:— (முறைத்தபடி) ஏண்டா? உன் பேச்சிலே திமிர் இருக்கு...கேலியா பேசறே...இப்பப் போனானே பொன்னன் யார் தெரியுமோ...?

சம்:— தெரியுங்களே.. போக்கிரி! செவனேன்னு போய்க்கிட்டு இருந்த என்னை, இப்பத்தானே கல்லாலே அடிச்சான்...கண்டபடி பேசினான். ஓடியிருக்கான் இப்ப, உங்களுக்குக் காயம் வாங்கிவர. உங்க யோகம் அப்படி இருக்கு...எங்க பிழைப்பு (மூட்டையைக் காட்டி) இப்படி இருக்கு.. (பெருமூச்செறிந்தபடி) என்னா செய்றது. விதி நமக்கு அப்படி...

(போகிறான்)
(அவன் போன திக்கில் வெறுப்புடன் பார்க்கிறார் ஐயர் முணுமுணுத்துவடி)
(எதிர்ப்புறமிருந்து தாண்டவராயன் வருகிறான்)
(அவனையும் அடையாளம் கண்டுபிடிக்கச் சிரமம் எடுத்துக் கொள்வதுபோலப் பார்த்து)

ச:— யார்டாப்பா அது? கண் செரியாத் தெரியல்லே! (அடையாளம் தெரிந்தவராகி) அடடே தாண்டவராய மொதலியா?

(தாண்டவராயன் அசட்டுச் சிரிப்புடன் கும்பிடுகிறான்)

வாப்பா, தாண்டவா1 என்ன விசேஷம்? தடித் தாண்டவராயன்னு, நம்ம பையன் எப்பவும் உன்னை வேடிக்கையாக் கூப்பீட்டுண்டு இருப்பானே, கவனமிருக்கோ!

தா:— ஏனில்லைங்க! நேத்து ராத்திரி வந்தேனுங்க ஊருக்கு... சாமியைப் பார்த்துவிட்டுப் போகலாம், வருஷம் மூணு ஆகுதே பார்த்துன்னு, வந்தேனுங்க. க்ஷேமந்தானுங்களே

ச:— இருக்கேன் பகவத் சங்கற்பத்தாலே. ஏண்டாப்பா தாண்டவராயா! ஊரைவிட்டே போயிட்டே. போன இடத்திலாகிலும், ஏதோ காலட்சேபம் சரியா நடக்கறதோ?...

தா:— இழுத்துப் பறிச்சிக்கிட்டு இருக்குதுங்க. ஏழரைநாட்டான் விலகி ஏழு மாசந்தானுங்களே ஆகுது.... (ஆயாசமாக) படவேண்டிய பாடு அவ்வளவும் பட்டாச்சி...

ச:— வாஸ்தவத்தான் — ஆனா தாண்டவராயா கஷ்டப்படறதும் சுகப்படறதும் நம்ம கையிலா இருக்கு...இராமச்சந்திரர், தர்மராஜா, நளச்சக்ரவர்த்தி இப்படிப்பட்டவாளெல்லாம் பட்ட கஷ்டத்தை விடவா நாமெல்லாம் கஷ்டம் அனுபவிக்கப் போகிறோம்.... அரிச்சந்திரனோட கஷ்டம் சாமான்யமோ.. ராஜ்யமே போய்விட்டுதேன்னோ ...

தா:— பூமி வீடு எல்லாம் இங்க இருக்கிறபோதே போயிட்டுதுங்களே.. போன இடத்திலே ஒரு மகாராஜன் கிடைச்சாருங்க...அவர் வீட்லேதான் வேலை செய்து, பிழைப்பு நடத்தறேன், ஒரு மாதிரியா...

ச:— கண்ணைப் பறிச்ச தெய்வம், கோல் கொடுக்காமப் போகுமா... சரி...உன் மகன் என்ன செய்திண்டிருக்கான்...

தா:— (வருத்தமாக) அந்தக் கண்றாவியை ஏன் கேக்கறிங்க...... டிராமா ஆடராங்களே, அதுகளோட சேர்ந்துகிட்டுச் சுத்தறான்...பபூன் வேஷமாம்...

ச:— அதனாலே என்னடா, தாண்டவா! பபூன் சாமண்ணா ஐயர்ன்னு கேள்விப்பட்டிருக்கயோ... பிரமாதமான பேர்!

தா:— இப்ப யாரோ என். எஸ். கிருஷ்ணன்னு இருக்காராம்... அவருக்குத்தான் பிரமாதமான பேராம் — சொல்றான் நம்ம பையன்...

ச:— (முகத்தைச் சுளித்தபடி) ஆமாம்.. சொல்றா...அப்படித்தான்...சரி, பொண்ணு பொன்னி என்னமா இருக்கா?

தா:— (வருத்தமாக) பொலம்பிகிட்டு கிடக்குது! போன வருஷம் தாலி அறுத்துட்டுதுங்க...

ச:— கர்ம பலன்—என்ன செய்யறது— நீ மகா உத்தமன். உனக்கு ஒரு குறையும் வராது. ஊருக்கு எப்ப போகப்போறே?

தா:— காலங்கார்த்தாலே புறப்பட வேண்டியதுதான் சாமி! சின்ன ஐயரு எங்கே இருக்காரு—கண்ணிலேயே இருக்குதுங்க — பார்க்கவேணும்னு ஆசை...

ச:— சின்ன ஐயர், சீமை போயிருக்கான், என்ஜினியர் பரீட்சைக்குப் படிக்க... அடுத்த வருஷம் வருவான்... ஆயிரம் ரூபாய் சம்பளம்டா சின்ன ஐயருக்கு... சந்தோஷம்தானே உனக்கு...

தா:— ரொம்பச் சந்தோஷம்...அவருக்கென்னங்க தங்கக் கம்பி...

ச:— மாட்டுப் பொண்ணு, பெரிய இடண்டா, தாண்டவா! உன்னிடம் சொல்றதிலே நேக்குப் பரம திருப்தி...ஜட்ஜு ஜம்புகேச ஐயர்னு, பெரிய ஆசாமி — அவரோட மக— வைதேஹின்னு பேர்.. ஒரே மக...

தா:— நம்ம தம்பி எங்கே இருக்காரு?

ச:— யாரைக் கேட்கறே... இரண்டாவது பிள்ளையையா! அவன் சினிமாவிலே பெரிய ஆக்டர்டா இப்ப. நீ இருக்கிற ஊரிலே சினிமா இருக்கோ? அதிலே பார்க்கலாமே— அவன் படம் அடிக்கடி வரும்—போன மாசம் வந்திருந்தான் — நன்னாத்தான் இருக்கான் —(தன் கை விரலைக் காட்டி) பார்த்தயோ அவன் வந்துபோனதோட அடையாளம்...

தா:— (பயந்து) என்ன சாமி இது...காயம் பட்டிருக்கு போலிருக்கு..

ச:— (சிரிப்பாக) ஆமாம்... விரல் நசுங்கியே போயிட்டுது...

தா:— ஏன்... எப்படி அடிபட்டுது...?

ச:— அவன் புதுசா ஒரு மோட்டார் கார் வாங்கிண்டு வந்தான்—பணம் கண்மண் தெரியாமே கொட்டிக் கொடுத்திருக்கான் மோட்டாருக்கும் —பதினெட்டு ஆயிரம் விலை—அந்தக் காரிலே ஏறிண்டு போனேன் — கதவு இருக்கே, மோட்டார் கதவு —அதை சாத்தினான்—நான் அசட்டுத்தனமா, அதன் இடுக்கிலே, கை வைச்சிண்டிருந்துட்டேன்..விரல் நசுங்கிட்டுது... என்ன செய்யறது...

தா:— துடிதுடிச்சிப் போயிருப்பிங்களே!...

ச:— ஆமாம்...வலி......அந்தப் பய, சிரிக்கிறான்....என்னப்பா இது, கதவைச் சாத்தறப்போ ஜாக்ரதையா இருக்க வேணாமோ?... கர்நாடகமா இருக்கீரே இன்னமும்னு கேலி செய்யறான்...... சௌக்யமா இருக்கான்.... சினிமாப் பேர் வேறேடா, தாண்டவா? நீ பழயபடி, பிச்சுமணின்னு எண்ணிண்டு நோடீசிலே பார்த்தா. புரியாது...அவனுக்கு சினிமாவிலே அருள்குமார்னு பேர்! என் மக, சுகுணாடா... அதுதான் கர்மம்.. விதவையாகிவிட்டது..... பெரிய சொத்துக்காரருக்கு வாழ்க்கைப்பட்டா. பார்த்துப் பார்த்துப் பூரிச்சுப் போனேன்...போய்ட்டான்... அதான் பெரிய மனக்குறை...

தா:— சுகுணாம்மாவுக்கா இப்படி ஆகணும்...என்னா தங்கமான கொணம். எங்கே இருக்கிறங்க...

ச:— மெட்ராஸ்லே டாக்டரா வேலை பாரிக்கறா... பிடிவாதமாப் படிச்சே ஆகணும்னு சொன்னா...அவ இஷ்டத்தைக் கெடுப்பானேன்னு அனுப்பினேன் —இப்ப, டாக்டர்

தா:— தள்ளாத வயதிலே, நீங்க மாத்திரம், ஏன் சாமி இங்கே தனியா இருக்கவேணும். சினிமாப் பிள்ளையோட இருந்து விடலாமுங்களே...

ச:— எப்படிடா முடியும்; கோயில் காரியம் ஒண்ணு இருக்கேடாப்பா..அதை விட்டுவிட முடியுமோ!.....பொண்ணை யார் கண்டா! பிள்ளையை யார் கண்டா! இறக்கை முளைத்தா அதது தானா பறக்கறது. நாம் எங்கேயோ ஒரு இடத்துலே, ராமா கிருஷ்ணா கோவிந்தான்னு பஜனை செய்துண்டு இருந்துட வேண்டியது தானே.. என்னடா இருக்கு. தாண்டவா, உலகத்திலே — போற கதிக்கு நல்லது தேடிக்கொள்ள வேணாமோ... கோயில் காரியத்தைக் கவனிச்சிண்டு, இருக்கேன்—வீடு வாசல், தோட்டம், துறவு, நிலபுலம் எல்லாம் இங்கேயே தானே இருக்கு......அதையும் கவனிச்சிண்டு இருந்திண்டிருக்கேன். அது கிடக்கு, நீ இருக்கற ஊர்லே என்னென்ன சாமான் விசேஷம்.

தா:— அது சுத்தப் பட்டிக்காடு, சாமி!

ச:— பட்டிக்காடா இருந்தா, பச்சின்னு இருக்குமே, காய்கறி, நல்லதா கிடைச்சா அனுப்புடா தாண்டவா.... பழைய விஸ்வாசத்தை மறந்துடாதே...போய்வா...சௌக்யமா இரு...

தா:— ஒங்க ஆசீர்வாதம் இருந்தா போதும்ங்க.. சொகத்துக்கு துக்கு என்னங்க கொறை...

ச:— தாண்டவராயா! பலாப்பழம் நல்லதா கிடைச்சா, நாலு அனுப்பு... என்ன மறந்துடுவயோ...?

தா:— அனுப்பறேன் கட்டாயமா...

(கும்பிட்டுவிட்டுப் போகிறான்)
(போகப் புறப்படும்போது, எதிரே பண்ணையாள் வேலன், வருகிறான்.)

ச:— வேலா! என்ன, ஊர்லே விசேஷம்...

வே:— என்ன விசேஷமுங்க.. எங்கே பார்த்தாலும் காஞ்சிபோயும் தீஞ்சிபோயும் இருக்கு...மாடு கண்ணு மடியுது—ஜனங்களோட கஷ்டம் அதிகமானது.

ச:— காலம் கெட்டே போச்சு...

வே:— ஆமாஞ் சாமி! வர வரக் கெட்டுகிட்டே இருக்குதுங்க...

ச:— மகா பெரிய மேதாவிகள்னு எண்ணிண்டிருக்கா... சில பேர்... காலம் போற போக்கைப் பார்த்தா, இதுகளோட யோக்கியதை தெரியறது— ஸ்பஷ்டமா...

வே—: ஆமாமங்க... சொகத்தையே காணோம்....

ச:— இப்படியா இருந்தது வேலா. பழையகாலம்! சாப்பாட்டுக்கேன்னா ததிங்கிணதோம் போடறா ஜனங்க... மதாச்சாரம், சதாச்சாரம், ஜாதியாச்சாரம் எல்லாம் நாசமாயிண்டிருக்கு... சோறு கிடைக்குமோ... சொல்லு, வேலா? கிடைக்குமோன்னேன்...?

வே:— ஆயிரத்திலே ஒண்ணு, அருமையான பேச்சு சொன்னிங்க, சாமி.

ச:— விதைச்சா முளைக்கல்லே..அறுத்தா ஆகவேண்டிய அளவுக்கு நெல் ஆகல்லே...நோய்னு படுத்தா பிழைச்சி எழுந்திருக்க முடியல்லே.

வே:— (கேலியா) இப்பத்தான் ஆஸ்பத்ரிக்காரன் எதுக்கும் ஒரு ஊசியை எடுத்துக்கறானே. என்னமோ இன்ஜக்ஷன்னு...

ச:— பார்த்தயோ அந்தக் கோரத்தை! இந்தக் காலத்திலே இன்ப்ளுயன்சாவாம், டைபாயிட்டாம், நிமோனியாவாம், ஏதேதோ பேர் சொல்றா ஜூரத்துக்கு— அந்தக் காலத்திலே இப்படிப்பட்ட பேர்களைக் காதாலே கேட்டதுகூடக் கிடையாது.. எல்லாரும் இப்ப மேதாவிகளாயிட்டா...அதுக்கென்ன காரணம், இதுக்கென்ன அர்த்தம்னு கேட்கறா, பெரிய ஞானஸ்தாளாட்டம்...

வே:— அன்யாயம் நடக்குது சாமீ ! நேத்து ஒரு பய, என்கிட்டச் சொல்றான், இராவணனுக்குப் பத்து தலை கிடையாதுன்னு...

ச:— காலம் கெடாமலிருக்குமோ... உலகமே நாசமாயிண்டு வரது...

(எதிரே ஒரு சிப்பாய் வரக்கண்டு, வேலன் அவனை அடையாளம் கண்டுபிடித்து)

வே:— தம்பி! நில்லப்பா. சாமி! யாரு தெரியுதா? நம்ம சாது சம்மந்தன் மகன்!

ச:— ஓஹோ! பட்டாளத்திலே இருக்கானா? ரொம்பச் சந்தோஷம். வாப்பா, என்னென்ன தேசம் போயிருந்தே?

சி:— நானுங்களா! பர்மா, பினாங்கு, கிரீஸ், இட்டாலி, எல்லாந்தான்.

க:— உலகமே சுத்திவிட்டேன்னு சொல்லு.

வே:— எல்லாம் ஒரு ஜாண் வயதுக்குத்தானே...

சி:— எல்லோரும் அப்படித்தான். எந்த வேலையும் அதுக்காகத்தானே...

ச:— சண்டை பிரமாதமா இருந்ததோ?

சி:— அதை ஏன் கேக்கறிங்க போங்க! (நடிப்புடன்) ஏரோப்ளேன், விர்ருன்னு வரும்...

ச:— மேலே...

சி:— ஆமாம், பறந்துதானே வரும்... சத்தம் கேட்டதும் கப்சிப், நாங்க சந்தடியே செய்யாமே, குழியிலே போய் இறங்கிவிடுவோம். இரண்டொரு நிமிஷத்திலே.. டமால்—டப்—டிப்—பட—படா,—டமீல்—ன்னு சத்தம் — மலை தூள் தூளாகும் கட்டடம் இடியும்—நெருப்பு எங்கு பார்த்தாலும் கிளம்பிவிடும்.

(சந்திரசேகரரும் வேலனும் பீதி கொண்டவர்களாகிறார்கள்)

எங்க ஆளுங்க சும்மா இருப்பாங்களா? ஆன்ட்டி ஏர் கிராப்ட் கன், அப்படின்னா, ஏரோப்ளேனைச் சுடற துப்பாக்கி—அதை எடுத்து, சட சட சட சட—சட்—சட சட சடசட்—னு சுடுவாங்க குண்டு, பிளேன் மேலே பட்டதும், “ங்கொய்ய்” னு ஒரு சத்தம், கேட்கும் —பிளேன் சுழலும் பம்பரம் போல... நெருப்பு பிடிச்சிடும்—கீழே விழும். பிளேன் அச்சுவேறே ஆணிவேறேயாகிவிடும்.

ச:— கேட்டாலே பயமா இருக்கே...

சி:— இதுதானா பிரமாதம்! நாங்க சாதாரணமா, பிணத்து மேலேயே கூட நடந்து போவோம். காலையிலே எங்க கூட உட்கார்ந்து சாயா சாப்பிடுவான், சாயந்திரம் என்னடான்னு பார்த்தா, பிணமாக் கிடப்பான்.

வே:— அடி ஆத்தே! பாழாப்போன சண்டையாலே பாதி ஜனங்க மாண்டு போனாங்க....

ச:— அதை ஏன் சொல்றே! அன்யாயம், இவ்வளவும் எதுக்காகத் தெரியுமோ? மார்க்கட் பிடிக்கத்தான்!

வே:— மார்க்கட்...?

ச:— அதாவது, ஒவ்வொரு தேசமும் மலை மலையாச் சாமான்களைச் செய்து குவிச்சுடறான்—கொள்ளை கொள்ளையா இலாபம் அடிக்க வேணும் என்கிற பேராசை, சாமான்கள் தயாரானதும். மார்க்கட் வேணுமோன்னோ! அதுக்குக் கிளம்புவான். இவனைப் போல இன்னொரு தேசத்தானும் கிளம்புவான். இரண்டு தேசமும் ஒரே மார்க்கட்டைக் கண்டதும், சண்டைதான், உனக்கா மார்க்கட் எனக்கா மார்க்கட்டுன்னு...

வே:— அன்யாயக்காரப் பாவிங்க .. மார்க்கட்டுக்காக ஒரு சண்டை—அதுக்காக மக்களெல்லாம் மடியறது...

ச:— அப்படி இருக்கு இந்தக் காலத்து யோக்யதை...

சி:— அது இருக்கட்டுங்க....மார்க்கட்டுக்காகச் சண்டை போடறானுங்க மகா பாவிங்கன்னு சொல்றீங்க...நான் ஒத்துக்கறேன்—சண்டை கூடாது—மார்க்கட்டுக்காகச் சண்டை போடத்தான் கூடாது—ஆனா, நம்ம மகா பாரதத்திலே, மார்க்கட்டுக்குக் கூட இல்லிங்களே, மாடு பிடிக்கிற சண்டையே நடந்ததாக இருக்கே! அதுதானே விராட பருவம்!

ச:— ஆமாம்! புத்திசாலியாத்தான் இருக்கான்...படிச்சிருக்கான்... ஆனா, அந்தக் காலத்திலே சண்டை, அரக்கர்களை அழிக்க நடந்தது—தெரியாதோ... இப்ப, மனுஷ்யாளுக்குள்ளாகவே சண்டை நடக்கறது...புரியாதோ...ஜெர்மனியர்களும் கிருஸ்தவா...வெள்ளைக்காரனும் கிருஸ்தவா... இருந்தாலும் சண்டை அவர்ளுக்குள்ளாகவே! அக்ரம மில்லையோ அது...?

வே:— ஆமாம் சாமி, அன்யாயம்.

சி:— இது இப்ப மட்டுந்தானா? கௌரவர் யார்? பாண்டவர்கள் யார்! சகோதராதானே! குடும்பச் சண்டை தானே, குருக்ஷேத்ர யுத்தம்!

வே:— தம்பி, சொல்றதும் சரியாத்தான் இருக்கு...

ச:— (அசடு தட்டிய நிலையில்) ஆனா, அந்தக் காலத்திலே நிரபராதிகளைக் கொல்றது கிடையாது. இந்தக் காலத்திலே, பாரு, வேலா! குண்டு வீசறாளே —ஊர்பூராவும் தானே நாசமாறது— பழியோரிடம் பாவமோரிடம்—எவனோ செய்த அக்ரமத்துக்கு, ஜனங்க என்ன செய்வா?...அவா தலையிலே குண்டைப் போட்டா, அக்ரமமில்லையோ...? அதர்ம யுத்தம்தானே இது...?

சி:— ஆமாம்... ஆனா, அந்தக் காலத்திலேயும்தான் இருந்தது அந்த அக்ரமம்...ஒரு உதாரணம் பாருங்க... இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான்...

...இலங்கைக்குத் தூது போனார் அனுமார்... என்ன செய்தார்! இராவணன் செய்த அக்ரமத்துக்காக, இலங்கையையே கொளுத்திவிட்டார். இல்லையா...நியாயமா அது...? இலங்கா தகனம். இலங்கா தகனம்னு.... கொண்டாட்டமாத்தான் பேசிக் கொள்கிறோம்....ஆனா, நீங்க இப்பச் சொன்னது போல; இதுவும் அக்ரமம்தானே!....

ச:— (கோபமாக) ஏம்பா! நீ, என்ன, இந்தச் சூனாமானாவோ?... வேலா?... வீண் வேலை நமக்கேன், வா, போவோம்.

வே:— ஏஞ் சாமி ! இந்தப் பய வாயை அடக்கவா முடியாது— எடுத்து வீசுங்க, ஒரு பதிலு...

(ஐயர் போகிறார் தனியாகவே)

வே:— அடே..ஐயரு. என்ன வாயை மூடிகிட்டுப் போய்ட்டாரு...ஏண்டா, தம்பி! அவரை மடக்கிப் போட்டுட்டயே பேச்சாலயே. நீ சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு, யோசனை செய்து பார்த்தா...

சி:— யோசனை செய்து பார்க்கிற வழக்கம்தானே கிடையாது. நம்ம ஜனங்களிடம்...

வே:— படிச்ச, சாதி, உசந்த ஜாதி, மேதாவிங்க. அதனாலே, அவங்க எதாச்சும் சொன்னா நம்ம ஜனங்க நம்பறாங்க.

சி:— மேதாவிங்க !.. என்ன இங்க! இங்கே, நாம்தான். இவங்களை மேதாவிங்க, மேல் குலத்தவங்கன்னு புகழ்ச்சியாச் சொல்றோம், உண்மை புரியாததாலே... ஆனா, இந்த மேதாவிங்களோட பேச்சு, கேட்டா, உலகத்திலே, சிரிப்பாகச் சிரிக்கிறாங்க.

வே:— ஏனாம். எதுக்காக...

சி:— எதுக்காகவா? இப்படி ஒரு பைத்தியக்காரக் கூட்டம் இருக்கான்னுதான்... நாம்தான் இவங்களை, மேதாவிங்க. ஞானஸ்தாள், குரு, அப்படி இப்படின்னு கொண்டாடுறோம்... கண்டதும், சாமி! சாமி!ன்னு சொல்லிக் கும்பிட்டுக் குழையறோம்... இந்த மேதாவிங்க, நம்ம ஜனங்களிடம் சொல்ற விஷயமிருக்கேல்லோ, அதை ஒண்ணைக்கூட உலகம் ஒப்புக்கொள்ள மாட்டேங்குது...அவ்வளவும் அபத்தம்—கட்டுக்கதை—தலையுமில்லே காலும் இல்லே—அர்த்தம் துளியும் கிடையாது — எப்படிடா அவனுங்களோட அபத்தப் பேச்சை நம்பிக்கொண்டிருக்கிறீங்கன்னு கேட்டு, பல தேசத்து அறிவாளிங்க, பரிகாசம் செய்கிறாங்க...

வே: —அப்படியா... இவங்க சொல்றதை ஏத்துக் கொள்கிறதில்லையா அவங்களெல்லாம்...

சி:— காரித் துப்பறான் அவனெல்லாம்! இந்த மேதாவிங்க, உலகம், தட்டைன்னுதான் சொல்றாங்க...

வே:— ஆமாம்... தட்டை தான்...

சி:— தட்டையா இருக்குன்னுதானே சொல்றாங்க...போய் சொல்லச் சொல்லு, சீமையிலே, பாரிசிலே, அமெரிக்காவிலே... ரஷியா பக்கம்கூடப் போக வேண்டாம், அங்கே இந்த மாதிரி மனுஷனுங்களே, உள்ளேகூட விடமாட்டான் — மற்ற தேசம் போய் சொல்லச்சொல்லு, உலகம் தட்டைன்னு — பைத்தியக்கார ஆஸ்பத்ரிக்கு அனுப்புவான் —ஆசாமிக்கு, என்னமோ மூளைக்கோளாறுன்னு... உலகம் உருண்டை; தட்டையில்லை. இந்த மேதாவிங்க சொல்றதுபோல இல்லே..

வே:— உருண்டையாவா இருக்கு...!

சி:— ஆமாம்...! இவனுங்க சொல்றாங்களேல்லோ, கீழே ஏழுலோகம், மேலே ஏழு லோகம் இருக்குன்னு....

வே:— ஆமாம் — கீழே ஏழு — மேலே ஏழு!

சி:— சுத்தப்புளுகு, அங்கே போய்ச் சொன்னா, கோபக்காரனா இருந்தா அறைவான் கன்னத்திலே. சாந்தமானவனா இருந்தா, இப்படி ஒரு பைத்யம் இருக்கானேன்னு சிரிப்பான்... இவங்க இங்கே சொன்னது அவ்வளவும் புளுகு— அண்டப்புளுகு...... மேதாவி, ஞானஸ்தன்னு, நம்ம ஜனங்க விவரம் தெரியாததாலே, புகழ்ந்துகிட்டு இருக்கறாங்க... இவங்களெல்லாம் மேதாவியுமில்லே, மேலான குலமுமில்லே...ஏமாந்தவன் முதுகிலே ஏறிச் சவாரி செய்வதிலே கெட்டிக்காரனுங்க... பாடுபடாது வாழக் கத்துகிட்டவங்க... பார்க்கறயே கண்ணாலே, அவங்கள்ளே ஒரு ஆசாமியாவது, நாம் மாடு போல உழைக்கிறோம், நாய் போல அலைகிறோமே, அதுபோல, கஷ்டமான வேலை செய்கிறாங்களா...

வே:— கிடையாது...

சி:— குப்பை கூட்டறோம்—கட்டை வெட்டறோம்—மூட்டை சுமக்கிறோம்—கல் உடைக்கிறோம்—,—வண்டி இழுக்கறோம்-படாதபாடுபட்டுப் பிழைக்கிறோம்...

வே:— பாதி வயிறுதான் ரொம்புது, அப்பவும்...

சி:— அவங்களோட வாழ்வைப் பாரேன்...அழுக்குப்படுதா நகத்திலே....

(இல்லை யென்று ஜாடை காட்டுகிறான் வேலன்)

சேத்திலே இறங்கி செந்தாமரையைப் பறிச்சிக்கிட்டு வந்து நாம் கொடுத்தா, வாங்கிப் பார்த்து, வாசனையாத்தான் இருக்குன்னு சொல்றாங்க...!

வே:— டே, தம்பீ! என் தலை சுத்துதுடா நீ பேசுறதைக் கேட்டா நியாயமாத்தான் இருக்கு... உன் பேச்சு... நான் வர்றேன். இன்னொரு நாளைக்கு, அப்ப எல்லாம் விவரமாச் சொல்லு.

(வேலன் போகிறான். சிப்பாய் திருப்தியுடன் மேலால் செல்றான், வீடு நோக்கி)

காட்சி—2

[சில நாட்களுக்குப் பிறகு]

இடம்:— சம்பந்தம் வீடு.

இருப்போர்:— சம்பந்தம், ஒரு கிழவர்.
(கிழவருக்கு வெற்றிலைப் பாக்கு இடித்துக் கொடுத்தபடி சம்பந்தம் பேசுகிறான். கிழவன் வாயைக் குதப்பிக் கொண்டே பேசுகிறான்)

ச:— என்னா ஜென்மமோ போங்க நம்ப ஜென்மம்—கால முழுவதும் கவலையும் கஷ்டமும் கொட்டிகிட்டே இருக்குது—மனசு நிம்மதி இல்லே...மகனாலே சுகப்படலாம்னு மனக்கோட்டை கட்டினேன், இப்ப பாருங்களேன், அவன் செய்கிற காரியத்தை?

கி:— தங்கமானவன் — உன்மேலே உசிரெ வைச்சிருக்கான் குடி கிடி எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது...

ச:— பொடிகூடப் போடமாட்டான் — குடும்பத்தை மேன்மையாக்க வேணும் என்கிற அக்கறை உண்டு.

கி:— பட்டாளத்திலே இருந்து உனக்கு மாசா மாசம் பணம் அனுப்பிக்கிட்டுத்தானே இருந்தான்....

ச:— ஒரு மாசம்கூடத் தவறினதே கிடையாதே — அவன் தானே ஒரே பிடிவாதமா, கல்லாட்டமா நான் இருக்கிறேன், நீ எதுக்காகத் தோட்டக்காரனா இருக்கிறது? வேண்டாம் அந்த வேலைன்னு சொன்னேன் — பூரிச்சுப் போனேனே அந்தப் பேச்சு கேட்டு...

கி:— எல்லாம் சரி ...ஆனா, இந்த அக்கிரமத்தைச் செய்யணும்னு சொல்றானே...

ச:— என் தலையிலே ஒரே அடியாப் பாராங்கல்லைத் தூக்கிப் போடறான்...

கி:— நாலு நாளா நீ நல்ல பேச்சுச் சொல்லலியா...?

ச:— என்னாலே ஆனமட்டும் சொல்லியாச்சு...

கி:— எதிர்த்துப் பேசறானா?

ச:— இல்லையே..... என் கையைக் காலைப் பிடிச்சுகிட்டு கெஞ்சி கெஞ்சித்தான் பேசறான்...... பயப்படாதே அப்பா! ஒரு ஆபத்தும் வாரதுன்னு சொல்றான்.

கி:— பட்டாளத்துக்குப் போய் வந்தவனாச்சே படபடப்பா இருப்பானோன்னு பார்த்தேன்...

ச:— அது இல்லிங்க.. அவன்மேலே சொல்றதிலே என்ன பிரயோசனம். எல்லாம் என் எழுத்து.

(கண்ணைத் துடைக்க)

கி:— ஏண்டாப்பா கலங்கறே! அழாதே... அழாதே...

ச:— விவரம் தெரியாமப் பேசறான். எப்படி ஏற்பட்டதோ அந்தச் சனியன் பிடிச்ச சினேகிதம்—என் உயிருக்கு எமனா வந்து நிற்குது...

கி:— ஆமாம்டா, அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் எப்படிச் சினேகிதம் உண்டாச்சாம்.

ச:— அந்தக் கர்மத்தை எப்படி. நான் கேட்டுத் தெரிஞ்சிக்கிறது

கி:— பக்குவமாப் பேசித் தெரிஞ்சுக்க வேணும்டா...

ச:— கேட்டேன்—அந்தப் பொண்ணு—டாக்டராம்—இவன் சென்னைப் பட்டணத்திலே அவளைச் சந்திச்சானாம். காதலாயிட்டதாம்.

கி:— பாரேண்டா வேடிக்கையை! பார்த்ததும் காதலாமா? அது என்ன காதலாம் காதலு!

ச:— என்ன சொக்குப்பொடி போட்டாளோ தெரியலை — என் மகன், நான் போட்ட கோட்டைத் தாண்டாதவன், இந்த ஒரு விஷயத்தில் மட்டும், பிடிவாதமா இருக்கான்.

கி:— நல்லா இல்லையே அவன் நடத்தை. நாலு பேரு காதிலே விழுந்தா என்ன சொல்லுவாங்க.

ச:— ஊர்ப்பகை மட்டுந்தானா ஏழேழு ஜென்மத்துக்கும் அந்தப் பாவம் விடாதே.

கி:— சந்தேகமென்ன!

ச:— அவன் கலகலன்னு சிரிக்கிறான், இதைச் சொன்னா! பழியாவது பாவமானது — ஜாதியாவது குலமாவதுன்னு கேலி செய்கிறான்.

கி:— பெரிய மேதாவியா இவன்! நம்ம பெரியவங்க செய்துவைத்த ஏற்பாடு, பைத்தியக்காரத்தனமான ஏற்பாடா?

ச:— பைத்தியக்காரத்தனமானதுன்னுதான் சொல்றான். இப்ப, படிச்சவங்க, ஊரு உலகம் தெரிஞ்சவங்களெல்லாம், ஜாதி கூடாதுன்னுதான் பேசறாங்களாம்......என்னமோ சொல்றான்...

கி:— அவனா பேசறான் — அவன் மனசிலே இருக்குதே காதலு—அது பேசுது—காதலும் கத்தரிக்காயும், பொதுவாச் சொல்றேண்டா சம்பந்தம், காலம் ரொம்பக் கெட்டுப்போச்சு. நீ கேட்கக்கூடாதா, தங்கவேலு! இது என்னாடாப்பா தலைக்குத் தீம்புகொண்டு வருகிறாயேன்னு.

ச:— கேட்டேன்—ஒரு தீம்பும் வராது என்கிறான்.

கி:— மகா கண்டவன் — பார்த்தானாம், பார்த்ததும் ஆசைவந்து மனசிலே புகுந்து குடையுதாம்—போக்கிரித்தனமாப் பேசறான்—

ச:— போறாத வேளை — எல்லாம் என் கெட்ட காலம்.

கி:— சரி, சரி போறாத வேளை, கெட்டகாலம், தலை எழுத்து அப்படி இப்படின்னு பொலம்பிக்கிட்டு இருந்தாப் போதுமா—இண்ணக்கி கண்டிப்பாப் பேசு— வழவழா கொழகொழான்னு பேசாதே — தெரியுதா—நான் வீட்டுப்பக்கம் போயிட்டு, வாரேன் மறுபடியும்.

(கிழவர் போகிறார். சம்பந்தம் கவலையுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். தெருவிலே யாரோ பிச்சைக்காரன் பாடுகிற சத்தம் கேட்கிறது.

பிச்சைக்காரன் ‘ஜாதி ஏதய்யா மனபேதம் தா’னய்யா என்ற கருத்துள்ள பாடலைப் பாடுகிறான்.

பாடலைக் கேட்டு முகத்தைச் சுளித்துக்கொள்கிறான் சம்பந்தம் முதலில்; பிறகு சிரிக்கிறான்.)

பாட்டைப் பாரேன் பாட்டு! ஒரு ஆண்டிப் பண்டாரம். கழுகுமலை அப்பா! இப்படிப் பாடாமப்படிக்கு, ஜாதி ஏதய்யான்னு பாட்டு! பிச்சைக்காரனுங்களெல்லாம் கூடவா கெட்டுப் போகணும், உம்! காலம் கெட்டுத்தான் போச்சு—கெட்டே போச்சு—

(தங்கவேல் உள்ளே வருகிறான். சம்பந்தம் கோபமாக இருக்கக் கண்டு, அருகே சென்று அன்புடன்)

த:— அப்பா! என்ன, இன்னமுமா, மனசு சரியாகவில்லை.

ச:— எப்படிச் சரியாகும், தங்கவேலு? இவ்வளவு நேரம், உன் சின்ன பாட்டனாரு, பேசிக்கிட்டு இருந்தாரு...

த:— (ஆவலாக) என்னப்பா சொன்னாரு?

ச:— நாளைப் பார்க்கச் சொன்னாரு—கொளம் குட்டையிலே விழுந்து சாவறதுக்கு.

த:— போங்கப்பா! வீணா மனசைக் குழப்பிக் கொண்டு இருக்கிறே.

ச:— நீ செய்யற காரியம் சரின்னு சொல்லவேணும் — அப்பத் தான் என் மனசு கொழம்பலே தெளிவா இருக்குதுன்னு சொல்லுவேபோல இருக்குது. நல்ல நியாயம்டாப்பா! நல்ல நியாயம்!!

த:— காலம் போற போக்குத் தெரியாததாலே, நீ பயப்படறேப்பா... இது சகஜம் இப்ப..

ச:— நிலைமை தெரியாம, நீ, தடுமாடுரே தங்கவேலு...ஏண்டா, என்னமோ ஐயர் வீட்டம்மா, அவசரத்திலே, ஆசை மிகுதியிலே, சொல்லியிருப்பாங்க, கல்யாணம் செய்து கொள்றேன்னு—நீ எப்படிடா சரின்னு சொல்லலாம். நாம்ம என்ன குலம்... நம்ம நிலைமை என்ன. எப்படிடா, உனக்குச் சரின்னு பட்டுது, இந்தக் காரியம். சொன்னாலே, ஊர் சிரிக்கும்—ஐயரோட செல்வாக்கு எவ்வளவு—நம்மை உருவில்லாமச் செய்துட முடியுமே அவராலே—ஊரைவிட்டே ஓட்டிவிட முடியும்டா அவராலே...நீ, சொல்றே, ஐயர் வீட்டம்மாதான், கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க; அவங்கதான் தைரியமா இருக்காங்கன்னு—ஊரிலே அப்படியா சொல்லுவாங்க... சம்பந்தம் மகன் ஐயர் வீட்டம்மாவை எப்படியோ, மயக்கிக் கெடுத்துப் போட்டான்னுதானே தூற்றுவாங்க..ஊர்ப்பகை சும்மா விடாதேடா நம்மை...

த:— வீணான பயம்பா உனக்கு.. அப்பா தடுத்தாலும், ஆகமதைக் காட்டினாலும், அண்ணன் தடுத்தாலும். சாஸ்திரத்தை நீட்டினாலும், என் உறுதியைக் குலைக்க முடியாது. உலகத்து நடவடிக்கையைத் தெரிந்து கொள்ளாத கிணத்துத் தவளைகளுடைய எதிர்ப்பைக் கண்டா, அறிவாளிகவெல்லாம், கைகொட்டிச் சிரிப்பாங்க. ஜாதியாவது ஜாதி! நான் டாக்டர்! எங்க குலத்துக்குன்னு இருக்கே வேதம்...ஒண்ணுக்கு நாலு!... அதிலே எதிலேயாவது ஆதாரம் இருக்கா டாக்டர் வேலைக்குப் படிக்கலாம் என்பதற்கு? என் அண்ணன் சீமை போயிருக்கான்... போகலாமோ.. எங்க குல ஆசாரப்படி?..என்றெல்லாம் சுகுணா சொன்ன பிறகுதானப்பா, எனக்கும் பயம் போய் தைரியம் பிறந்தது.

ச:— உன் பேச்சைக் கேட்டா அழகாத்தாண்டா இருக்குது தங்கவேலு? ஆனாலும், ஊரோட போக்கைப் பார்த்தா பயமாயிருக்கு... என்ன விபரீதம் வந்து சேருமோன்னு. பெரிய இடத்துப் பொண்ணு... சந்திர சேகர ஐயரோட செல்லாக்கும் சாமான்யமானதில்லை... நாமோபஞ்சைக...

த:— அப்பா! உனக்கு உலகம் போற போக்குத் தெரியல்லே. உள்ளம் பதறுது. நந்தனார், சிதம்பரம் போயி நடராசாவைத் தரிசிக்கணும்னு சொன்னபோது, தீட்சிதரு என்னென்ன பாடு படுத்தினாருன்னு, காலட்சேபம் செய்கிறங்க

ச:— நெருப்பிலே முழுகி எழுந்த பிறகுதானே, நந்தனாரு, கோயிலுக்குள்ளே போனாரு...

த:— போனாருன்னு கதை சொல்றவங்க சொல்றாங்கன்னு சொல்லப்பா— நீயேவா கூட இருந்து பார்த்தே, நந்தனார் உள்ளே போனதை...

ச:— அடெ போடா, அணு அணுவாப் பிளந்து பிளந்து அதுக்கென்னா காரணம் இதுக்கென்னா காரணம்னு கேட்டா? நான் என்னத்தைக் கண்டேன், அதுக்கெல்லாம் பதில் சொல்ல...

த:— கோயிலுக்குப் போக நந்தனார் அவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது; இப்ப..?

ச:— அதான் தொறந்து விட்டுட்டாங்களே..

த:— சாமி ஓடியாப்போச்சு! அது போலத்தாம்பா. எல்லாம் — நீ வீணா மனசைக் கொழப்பிக் கொள்ளாதே. எங்க கல்யாணம், ஒரு பெரிய சங்கத்திலே, நடக்கப்போகுது — பெரிய பெரிய அதிகாரிகளெல்லாம் வரப்போறாங்க...

ச:— எனக்கென்னமோ, பயம் போகல்லே...

(வெளியே செல்கிறான், தங்கவேல் உடையைச் சரிப்படுத்திக்கொண்டு)

காட்சி—3

அபிஷேகபுரம் கிராமத்தில்

இடம்:— தாண்டவராயன் வீட்டுத் திண்ணை.

இருப்போர்:— பபூன் பக்கிரி, அவன் நண்பன்.

(பக்கிரி, தான் நாடகத்திலே பாட இருக்கும் புதிய பாட்டைப் பாடிக்காட்டுகிறான். நண்பன் கடம் அடிக்கிறான்.

தாண்டவராயன் வெளியே இருந்து உள்ளே வருகிறான். மகனை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டே உள்ளே போகிறான்.

தகப்பன் வந்ததும், ஒரு விநாடி பாட்டை நிறுத்திய பக்கிரி, மீண்டும் பாட்டைத் துவக்குகிறான். உள்ளே இருந்து “ஐய்யய்யோ அடே! பக்கிரி! ஓடியாடா!” என்று தாண்டவராயன் அலற பக்கிரியும் நண்பனும் உள்ளே ஓடுகிறார்கள்.

உள்ளே பொன்னி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு தொங்குகிறாள்.

தகப்பன் அவளைத் தாங்கிப் பிடித்தபடி இருக்கிறான். பக்கிரி, பாய்ந்து, சுருக்கை அருத்து விடுகிறான். பொன்னி, குற்றுயிராகக் கிடக்கிறாள். தண்ணீரை முகத்தில் தெளித்தும் உள்ளுக்குக் கொடுத்தும், பொன்னியைக் காப்பாற்றுகிறார்கள்.

பொன்னி, கண் திறந்ததும். கண்ணீர் பொழிகிறாள்.

தாண்டவராயன் கதறுகிறான். பக்கிரி பதைக்கிறான்.
தா:— இதென்னம்மா கோரம்...

ப:— பொன்னி! ஏனம்மா இந்தக் காரியம் செய்யத் துணிஞ்சே...

தா:— உனக்கு என்னம்மா துரோகம் செய்தோம் பொன்னி! எந்தப் பாடுபட்டாவது நான் கால் வயத்துக் கஞ்சிக்கு வழி செய்யாமலா இருந்தேன்— என்னாத்துக்காகம்மா பிராணனை மாச்சிக்கத் துணிஞ்சே.

பொ:— (கதறியபடி) அப்பா—அண்ணா! குடும்பத்துக்கும் கொலத்துக்கும் இழிவு தேடிவிட்ட இந்தப் பாவியை ஏன் காப்பாத்தனிங்க...

தா:— (பதறி) பொன்னி... என்னம்மா சொல்றே—மனம் பதறுதே. குடும்பத்துக்கு இழிவா...?

ப:— என்னம்மா இழிவு..

பொ:— (கதறி) அண்ணா! உன் கையாலேயே இந்தப் பாவியைக் கொண்ணு போட்டுடு— அப்பா உன் காலடியிலேயே விழுந்து சாகவேணும் நானு—நான் அப்படிப்பட்ட மகா பாவியாகிவிட்டேன் — அப்பா — அண்ணா நான்.. நான்... ஐய்யோ! என்னான்னு சொல்வேன்—எப்படி நான் சொல்வேன்.

(வயிற்றருகே கையை வைத்துக்கொண்டு விழிக்கிறாள்.)

தா:--நீயா...பாவி.. என் தலைக்குத் தீம்பு தேடிவிட்டாடா பக்கிரி! நம்ம குடும்பத்தை நாசமாக்கிவிட்டாடாப்பா! அடிப் பாவி மகளே!

(கதறுகிறான்—தலையில் அடித்துக்கொண்டு.)

ப:— (கோபமாக) பொன்னீ! புத்தி கெட்டவளே! எப்படித் துணிந்தது இந்த இழிவான நடத்தைக்கு, உன் மனசு. மாடு போல உழைக்கிறாரு அப்பா—தின்னு கொழுத்து திமிர்பிடித்து ஆடி, மானத்தையா அழிக்கிறே. அடி பாதகீ! குனிந்த தலை நிமிராதவ இந்தப் பொன்னி—ஒருவரோடும் பேசமாட்டா — அடக்க ஒடுக்கமான பொண்ணு — இப்படிப் புகழ்ந்தாங்களே, ஊரார் உன்னை— கள்ளி! இந்தக் காரியம் செய்தாயே (அவள் தலையில் அடித்து) பாவமூட்டையைச் சுமந்துகொண்டு, என் எதிரே நிற்கிறயே, பாவி! (அழுகிறான்)

தா:— (கோபமாக) அட, ஏண்டா பொம்பளேபோல அழறே— போய் எடுத்து வாடா அரிவாளே.

பொ:— கொல்லு அப்பா. இந்தக் கொடியவளைக் கொன்னு போட்டா பாவம் கிடையாது—சத்தியமாச் சொல்கிறேன், நான் செய்த அக்ரமத்துக்கு, தண்டனை, உங்க கையாலேயே கொடுங்க...

ப:— (கோபமாக) யார் அந்தப் பய...?

(பொன்னி வாய்மூடி இருக்க, கோபம் அதிகமாகி)

ப:— யார் அந்தப் பய? யார் அந்தப் பய...

(அவள் தலைமயிரைப் பிடித்துக் குலுக்கியபடி அதிக ஆவேசமாக)

ப:— யார் அந்தப் பய?

தா:— சொல்லடி சொரணை கெட்ட ஜென்மமே! உன் சோர புருஷன் யாரு...

பொ:— அந்தப் பாவி பேரு — பொன்னன்—இங்கே வருவாங்களே, ஆடு வாங்க...

தா:— பொன்னனா!

ப:— போக்கிரி பொன்னனா!

(தலை அசைக்கிறாள் பொன்னி, அரிவாளை எடுத்துச் செருகிக்கொண்டு கிளம்புகிறான் பக்கிரி. அவன் கையைப் பிடித்திழுத்துத்தடுத்து நிறுத்துகிறான் தாண்டவராயன்)

தா:— (பயந்து) பக்கிரி, வேண்டாம்டா இந்த அவசரம்—அவன் பெரிய போக்கிரி...

ப:— போக்கிரிகளுடைய போக்கு எனக்கும் தெரியும்— விடப்பா...

(போக முயற்சிக்கிறான்)
தா:— வேண்டாம்டா—வேண்டாம்டா...

ப:— சும்மா இருப்பா—போக்கிரியாம் போக்கிரி!—

(வேகமாக ஆண்டாளூர் போக வெளியே செல்ல)

தா:— (தலையில் அடித்துக்கொண்டு) ஒண்ணு மேலே ஒண்ணா விபரீதமாகுதே — இந்தப் பய, போயி, ஆத்திரத்தாலே கொலை கிலை செய்துட்டா இவன் கதி என்னாகும்—(பொன்னியின் தலையிலே அடித்து ஆத்திரமாக) உன் சேஷ்டையாலே பாரடி அறிவு கெட்டவளே! குடும்பம் என்ன பாடுபடுது—(பக்கிரி போன திக்கு நோக்கி) டே பக்கிரி—பக்கிரி...

(கூவிக்கொண்டே செல்கிறான்)


காட்சி—4

இடம்:— பொன்னன் வீடு.

இருப்போர்:— சின்னான், பொன்னன், பக்கிரி
(சின்னான் கசரத்து செய்துகொண்டிருக்கிறான். பக்கிரி அவனிடம் கோபமாக)

ப:— பொன்னன் எங்கே...?

சி:— (முறைத்துப் பார்த்து)... யாரைக் கேக்கறே...

ப:— பொன்னனைத்தான்...

சி:— ஏண்டா, டேய்! என்னா திமிருடா—உனக்கு—பொன்னன் உங்க வீட்டிலே மாடு மேச்சாரா. எங்க குரு...

ப:— டேய், சிஷ்யப்புள்ளே—உன் குரு பக்தியை உன்னோடு வைத்துக்கொள்ளு—எங்கே பொன்னன்—கூப்பிடு— சி:— அண்ணேன் — அண்ணேன் — வரட்டும்டா அவரு—உன் கதி என்னா ஆகுதுன்னு பாரு... அண்ணே...

(உட்புறமிருந்து பொன்னன் வருகிறான்)

அண்ணேன்—இதோ பாரண்ணேன் எவனோ கிறுக்கன் — மட்டு மரியாதை இல்லாம, பேரிட்டுக் கூப்பிடுகிறான்.

(பொன்னன் பக்கிரியைப் பார்த்ததும் தலையைச் சொரிந்தபடி)

பொ:— அடடே! பக்கிரியா?..வா, தம்பீ! (சீடனைப் பார்த்து) டேய் சின்னா! உள்ளே போய் இரு (அவன் போனபிறகு பக்கிரி — எப்ப வந்தே? ஏதாவது நாடகம் இருக்கா இந்தப் பக்கம்.

ப:— (கோபமாக) ஆமாம்—இந்த ஊர்லேதான் நாடகம்— இன்னக்கித்தான்—சூரசம்மாரம்...

பொ:— சூரசம்மார நாடகமா... ராத்திரி பத்துக்கு ஆரம்பமாகுமா...?

ப:— ராத்திரிக்கா! இப்பவே ஆரம்பமாகுது...

பொ:— என்னடா, பக்கிரீ!—ஏதோ ஒரு மாதிரியாப் பேசறே...

ப:— (கேலியாக) ஐய்யோ. பாவம் — எதாச்சும் தெரியுமா உனக்கு — பால்மணம் மாறாத பாலகனில்லே.... படுபாவி!... என் குடும்பத்தைக் கெடுக்கவாடா, ஆடு வாங்கறேன் ஆடு வாங்கறேன்னு வந்து குலவினே—டே! பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மம், மனுஷ ஜென்மந்தானா— ஊரை மிரட்டிக்கிட்டு, இளைச்சவனை அடிச்சிகிட்டு, ஏமாந்தவன் கிட்டே பொருளைப் பறிச்சிகிட்டு இருக்கறே—அது போதாதுன்னு...

பொ:— பக்கிரி— பதறாம் பேசு... நான் கொஞ்சம் முன் கோவக்காரன் — நிதானமாகப் பேசு...

ப:— கோபமாப் பேசினா, என்னடா செய்துடுவே—கொலை செய்வாயா — செய்யி— நீ, என் குடும்பத்துக்கு செய்திருக்கிற கொடுமையை விடவாடா, கொலை, பாவ காரியம்...

பொ:— பக்கிரி—தப்புக் காரியம்தான்—இல்லேன்னு சொல்லலே — என் மனதுக்கே பெரிய சஞ்சலம்—அதனாலே தான் இவ்வளவு பொறுமையா இருக்கிறேன்...

ப:— (கேவியாக) ஐய்யோ...இல்லென்னா தலையைச் சீவி விடுவே... பொன்னா! நீ இந்த ஊருக்கே பெரிய போக்கிரியா இருக்கலாம் — ஆனா—இந்தப் பக்கிரி மனதிலே மூண்டு இருக்கிற ஆத்திரம் இருக்கே—சாமான்யமில்லே...உன்னைக் கசக்கிப் பிழிந்துவிடுகிற பலம் இருக்கு, எனக்கு—உன்னுடைய அக்ரமம், என்னைப் புலியாக்கிவிட்டதடா பாவி...

(அரிவாளை எடுத்துவீச, பொன்னன் அதை எளிதாகப் பறித்துக்கொண்டு)

பொ:— பக்கிரி! பதறாதே—நான்தான் சொல்றனே—தப்பு என் மேலேதான்னு. நல்ல பருவம், பொன்னிக்கு—பாவம், அது தங்கமானது—நான் தான் பாவி. அதன் மனசைக் கெடுத்து

ப:— எவ்வளவு நிதானமாச் சொல்றே பொன்னா, இந்த நீசத்தனமான காரியத்தை — பெண்களோட மானம் மரியாதை வாழ்வு எல்லாம் கற்பு ஒண்ணாலேதானேடா பாவி, மணக்கோணும், சிறப்படையவேணும் — அந்தக் கற்பைக் கெடுத்து, அவளை விபசாரப் படுகுழியிலே தள்ளிவிட்டு, என்னோடு, கதா காலட்சேபமா செய்யறே...

பொ:— பக்கிரி! பொன்னிக்கு அவமானம் வரக்கூடாது— என் மனம் பதறுது, நான் செய்தூட்ட அக்ரமத்தை எண்ணிக் கொண்டா...

ப:— (கதறி ) ஐஞ்சு மாசமாண்டா, மோசக்காரா? என் குடும்பம், ஊரிலே எப்படிடா இருக்க முடியும்...

பொ:— என்ன செய்யணும் பக்கிரி! போக்கிரி பொன்னன் பேசறதாக எண்ணாதே—வகையில்லாத காரியம் செய்துவிட்டோம்னு வேதனைப்படுகிற பொன்னன் பேசறேண்டாப்பா. என் கொணம் உனக்கே தெரியும். இவ்வளவு சாந்தமாக நான் எப்பவும் இருந்தது இல்லே. என் மனசே என்னைச் சுடுது. அதனாலேதான் உன் காலிலே விழக்கூடச் சித்தமா இருக்கறேன். என்ன செய்தா, நான் செய்த பாவம் தொலையும் — சொல்லு— உண்மையாச் சொல்றேன் பக்கிரி

ப:— (வேதனையுடன்) பொன்னா? குடும்பத்தை ஊராரு எவ்வளவு கேவலமாப் பேசுவாங்க—ஏழை என்கிற ஒரு காரணத்துக்காகவே, இழிவாப் பேசறாங்க, கேவலமா நடத்துகிறாங்க —போதாக்குறைக்கு நீ செய்த பொல்லாங்கும் வந்து சேர்ந்தா, சொல்லவேணுமா— பொன்னா! என் குடும்பத்தைச் சீரழிக்கவா பொறந்தே. உனக்கு ஒரு அக்கா தங்கச்சி இருந்து, இதுபோலக் கதி வந்தா, இவ்வளவு நேரம், எவ்வளவு கொலை விழுந்திருக்கும். எங்க அப்பன் ஒரு சாது— வாழ்ந்து கெட்டவரு—என்னா செய்து விடுவாரு — நாம்பதான் போக்கிரி பொன்னன்னு பட்டமே வாங்கியிருக்கிறமே என்கிற மண்டைக் கர்வம்தானே உனக்கு.

பொ:— பக்கிரி! நீ என்னை எவ்வளவு திட்டினாலும், நான் வாய் தொறந்து பதிலுக்கு ஒரு சொல் பேசப்போவதில்லை. உண்மையாச் சொல்றேன், வெட்டிப் போடு என்னை அரிவாளாலே —சாகக்கூட நான் பயப்படலே— ஆனால், நான் செத்து என்ன பிரயோஜனம் — பொன்னியோடே கதி என்ன ஆகும்?

ப:— குடும்ப கெளரவம் பாழாகுதே...

பொ:— என்ன நேரிடும், எந்த மாதிரியான ஈனத்தனமான காரியம் செய்கிறோம் என்கிற எண்ணம் இல்லாமெ, நான் செய்துவிட்ட பாவம், என்னைச் சும்மாவா விட்டுவிடும்...

ப:— பொன்னா! உன் மனதுக்கே நீ செய்த காரியம் தப்புன்னு தோணினா, உன் பேச்சு என்னை ஏமாத்த அல்லன்னா, ஒரு காரியம் செய்...

பொ:— சொல்லு, பக்கிரி! என்ன செய்ய?

ப:— பொன்னியைக் கல்யாணம் செய்து கொள்ளு...

பொ:— பொன்னியை...!...

ப:— எந்தப் பொன்னியைத் தப்பு வழியிலே இழுத்துக் கொண்டுபோய், பாழாக்கிவிட்டாயோ. அவளையே பலரறியக் கல்யாணம் செய்துகொள்ளு—விபசாரி என்கிற இழிவு அவளுக்கு ஏற்படாது...

பொ:— பொன்னி, தாலி அறுத்தவளாச்சே.

ப:— இருக்கட்டுமே — மறுதாலி கட்டினா கழுத்து மாட்டேங்குதா...

பொ:— ஊர்லே இழிவாத்தானே பேசுவாங்க —அறுத்தூட்டவளுக்குக் கல்யாணம்னு...

ப:— இப்ப, நீ செய்த காரியத்துக்கு, ஊர்லே ‘மெடல்’ போடுவாங்களா? பொன்னா! தாலி அறுத்தவ, தப்பு வழியிலே நடந்து, சோரம் போனவன்னு கேவலமான பேர் எடுக்கறதுதான், தாங்கமுடியாத அவமானம், சகிக்க முடியாத வேதனை, மறு கலியாணம், தவறானதுமல்ல, கேவலமானதும் அல்ல —விதவா விவாகப்பாட்டு நான்கூட நாடகத்திலே பாடியிருக்கேன் பல தடவை. ஒவ்வொரு தடவை பாடுகிறபோதும் ஜனங்க, அது சரி, அது நியாயம்னு சொல்லிச் சந்தோஷப்பட்டதையும் பார்த்திருக்கறேன். மறுமணம் செய்வதுதான், அறிவுள்ள செயலுன்னு, இப்ப, மேதாவிகளெல்லாம் பேசறாங்க, எழுதறாங்க — பல இடத்திலே நடக்குது...

பொ:— பக்கிரி! எனக்கும் — நெஜமாச் சொல்றேன் பொன்னியோடு காலமெல்லாம் வாழவேணும் என்கிற எண்ணந்தான்...

ப:— உன் எண்ணத்திலே எனக்குச் சந்தேகம் ஏற்படாததாலே தான், நானும் தைரியமாச் சொல்றேன். இந்த ஏற்பாட்டை...

பொ:— நான் வேறே ஜாதி— உங்க ஜாதி வேறே...

ப:— பைத்தியக்காரத்தனம் பொன்னா! எப்பவோ, எவனோ ஜாதி ஜாதின்னு சூது பேசி, ஜனங்களே பிரிச்சிப் பிரிச்சு, பாழ் செய்துவிட்டான்...

பொ:— ஜாதியே கிடையாது என்கிறயா...

ப:— இந்தத் தேசம் தவிர, உலகத்திலே வேறே எவ்வளவோ தேசங்கள் இருக்கு பொன்னா! ஆனா, அங்கே எங்கேயும், இந்த பாழாப்போன ஜாதி கிடையாது—இங்கேதான் காரணமில்லாமெ, அர்த்தமில்லாமெ, அவசியமில்லாமெ, பலன் இல்லாமெ ஜாதி ஜாதின்னு கட்டிகிட்டு அழறோம்.

பொ:— வேறே எங்கேயும், ஜாதி கிடையாதா?

ப:— கிடையவே கிடையாது—எதுக்கும், ஒரு காரணம், ஒரு அர்த்தம். ஒரு பலன் இருக்கவேணுமேல்லோ — இந்த ஜாதிக்கு என்ன காரணம், என்ன அர்த்தம், என்ன பலன் — நீதான் சொல்லேன் பார்க்கலாம் — ஜாதி ஏதய்யா. மன பேதம்தானய்யா—ன்னு, நான் கூட டிராமாவிலே ஒரு பாட்டுப் பாடுவேன்.

பொ:— பக்கிரி! நியாயமான பேச்சாத்தான் இருக்கு, நீ சொல்றது — ஆனா, பலபேரு பலமாதிரியாப் பேசுவாங்க வரைமுறை கெட்டுப்போச்சு, பரம்பரை பரம்பரையா இருந்து வார பழக்கம் கெட்டுப்போச்சு, அப்படி இப்படின்னு பேசுவாங்களேன்னுதான், பயமா இருக்கு...

ப:— பயமா இருக்கா! பொன்னா! ஒரு பொண்ணைக் கெடுக்கறமே. கற்பை அழிக்கறமே, அவ கதி என்ன ஆகும் — குடும்பத்தோடே கதி என்ன ஆகும்—என்கிற பயம், பொன்னியைச் சீரழிச்சப்ப ஏற்படவில்லே. உனக்கு. இப்ப, ஜாதி, வரைமுறை இதைக் கெடுத்துவிட்டேன்னு, ஊர்லே யாராவது பழிப்பாங்கன்னு, பயமா இருக்கு!—என்னா நியாயம் இது பொன்னா? காரணமில்லை, பலன் இல்லை, உலகத்திலே வேறு எங்கேயும் காணப்படலே இந்த ஜாதி—இது அழியுதுன்னு ஊர் பதைக்குமாம்—இதுதானா—பொன்னா! உங்களோட நியாயம்—நீதி

பொ:— என் மனதிலே, ஒரு நாளும் தோணாத அளவு தைரியமும், நியாயமும் தோணியிருக்கு. உன் பேச்சாலே —பக்கிரி! நான் இனி, பொன்னியைக் கைவிட மாட்டேன்— உன் குடும்ப கெளரவமும் கெடவிடமாட்டேன்—ஜாதிவிட்டு ஜாதியிலே கல்யாணம் செய்றது— தாலி அறுத்தவளுக்குக் கலியாணம் செய்யறது, இதெல்லாம் தப்பு, பாவம், அப்படி இப்படின்னு யாராவது ஏதாவது பேசினா, அவங்க பாடு உன்பாடு...

ப:— நீ சும்மா இரு பொன்னா! என்னைக் கேட்கட்டும், எவனா இருந்தாலும், நான் பேசிக்கொள்றேன் — ஜாதியாம் ஜாதி! நெத்தியிலே எழுதி ஒட்டியிருக்கா— சொல்லேன் நீதான். ஐயர் தொட்ட உப்பு இனிக்குதா, நாம்ப தொட்ட சர்க்கரை கசக்குதா? ஏமாத்து வித்தை பொன்னா, இந்த ஜாதி முறை — எவன் கேட்டாலும், நான் சொல்லிக்கிறேன் சமாதானம்...

பொ:— பக்கிரி! டிராமாவிலே இருந்துக்கிட்டே, எப்படி நீ, இதை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே...

ப:— தெரிஞ்சுட்டது மட்டுமா... டிராமாவிலே, நான் பாடற பாட்டெல்லாமே. இதுபோலத்தான்—பபூன் வேடிக்கையா பாடறான்னு முதல்லே கேட்டு சிரிச்சாங்க ஜனங்க —வரவர, அந்தப் பாட்டுகள்லே உள்ள நியாயம் புரிஞ்சுது ஜனங்களுக்கு—இப்ப, அதுபோல இருக்கற பாட்டைத்தான், ஜனங்க விரும்பறாங்க...

பொ:— இந்தக் காலமே, எல்லாம் தலைகீழா மாறுது..

ப:— இப்படித்தான் மூக்காலே அழுவானுங்க, சிலபேரு... அடடா அந்தக் காலம் எப்படிப்பட்டது தெரியுமான்னு பெருமூச்சு விடுவானுங்க...

பொ:— ஆமாம் — அந்தக் காலம் சிலாக்யமானதாத்தானே இருந்தது— மாதம் மும்மாரி பொழியுமாம்...

ப:— பொழிஞ்சுதாமா...! ஏன் பொன்னா? மாதம் மும்மாரி பொழிஞ்சுதுன்னு சொல்லிப் பூரிச்சுப் போறாங்களே. அவங்களேதானே சொல்றாங்க நல்லதங்கா கதை — பன்னிரண்டு வருஷம் மழையே இல்லாமப் போச்சு, பஞ்சம் உண்டாச்சின்னு...

பொ:— ஆமாம்...

ப:— அது, எந்தக் காலமாம்! போக்கிரி பொன்னன் பபூன் பக்கிரி காலமா அது — புண்யவானுக காலம்தானே— ஏம்பா! பன்னிரண்டு வருஷம் மழையே இல்லே...

பொ:— ஆமாம், பக்கிரி! விந்தையாகத்தான் இருக்குது.

ப:— இவ்வளவுதானா விந்தை—சொல்லச் சொல்ல, சுரீல சுரீல்னு சவுக்காலே அடிக்கிறதுபோல இருக்கும். இந்த மாதிரி விந்தைகள்— வண்டி வண்டியா இருக்கு...

(‘அந்தக் காலம்’ என்ற பாட்டு பாடுகிறான்)

பொ:— பலே! பக்கிரி! ஜோரா இருக்கு பாட்டு.

ப:— அர்த்தம்?

பொ:— பாட்டைவிட ஜோரு, போ—

ப:— சரி... நான் சொன்ன விஷயம்...

பொ:— கல்யாண விஷயம்தானே!...நாள், ‘ரெடி’, இண்ணைக்கே வேணுமானாலும்.

ப:— (அவனைத் தழுவி) பொன்னா! மானம் காப்பாத்தினே— குடும்ப நாசம் இனி இல்லே...

பொ:— உன்னோட நான் இப்பச் சொல்றேன், பக்கிரி! பொன்னி பொலம்பறப்போ, நான் இதுவேதான் சொன்னேன், பயப்படாதே புள்ளே நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்றேன்னு சொன்னேன்...

ப:— புளுகு பேசினே...

பொ:— (தலையைச் சொரிந்தபடி) அது என்ன காரணமோ தெரியலே, பொய் மளமளன்னு பொறக்குது, அந்த மாதிரி சமயத்திலே...

ப:— பக்கிரியோட எண்ணம் பலிச்சுது. பொன்னா? நான் போயி, எங்கப்பாவிடம் பேசி, அவரையும் வழிக்குக் கொண்டுவர வேணும்—

பொ:— பக்கிரி! அவர் சம்மதம் தராவிட்டா...

ப:— போக்கிரிப் பொன்னனே என் பேச்சைக் கேட்டுச் சம்மதம் கொடுத்தாச்சின்னா, எங்க அப்பாவோட சம்மதத்தைப் பெறுவதுதானா, முடியாத காரியம்...

பொ:— என்னமோ பக்கிரி, எல்லாம் நன்மையா முடிய வேணும்...

(பக்கிரி விடை பெற்றுக்கொண்டு செல்கிறான்; பொன்னன் புது மகிழ்ச்சியுடன் செல்கிறான்.)



காட்சி—5

இடம்:— வீதி

இருப்போர்:— பக்கிரி, இரண்டு முரடர்கள்.


(இரண்டு முரடர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். பக்கிரி, இடையில் புகுந்து தடுக்க முயற்சிக்கிறான். இருவரும் மாறி மாறிப் பக்கிரியைப் பிடித்துத் தள்ளிவிடுகிறார்கள்; தாக்கவும் செய்கிறார்கள். பக்கிரிக்குக் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிகிறது. போலீஸ் ஊதுகுழல் சத்தம் கேட்டு, முரடர்கள் ஓடிவிடுகின்றனர். பக்கிரி, இரத்தம் கசித்திருப்பதை மேல் துணியால் துடைத்துக்கொண்டு, செல்கிறான்.)

காட்சி—6

இடம்:— தாண்டவராயன் வீடு.

இருப்போர்:— தாண்டவராயன், பொன்னி, பக்கிரி.
(பொன்னி, கண்ணீர் வழிய வழிய அதைத் துடைத்தபடி, சோர்வுடன் நிற்கிறாள். தாண்டவராயன், தலையில் அடித்துக் கொண்டும், கைகளைப் பிசைந்துகொண்டும், பதறியபடி இங்குமங்கும் உலாவிக்கொண்டிருக்கிறான்.)

தா:— அவன் ஓட்டத்தைப் பிடிக்க என்னாலே ஆகுமா...(பொன்னியைப் பார்த்து) படுபாவி! உன்னாலே, என் தலைக்கு இன்னும் என்னென்ன வர இருக்கிறதோ (உலவியபடி) இன்னேரம் என்ன நடந்திருக்குதோ... (பொன்னி அழக்கண்டு) ஏண்டி, நீலி வேஷம் போடறே...இப்ப அழாதேடி, இப்ப அழாதே. பூரா விவகாரமும் முடிஞ்ச பிறகு அழலாம்— கொலைகாரன்னு சொல்லிப் பக்கிரியை தூக்கிலே போடட்டும். நானும் அவன் காலின் கீழே விழுந்து பிராணனை விடறேன். அப்ப, அழுடி, அப்ப அழு. பாடிப்பாடி அழு... (பொன்னியின் தலை மயிரைப் பிடித்து இழுத்து, அவள் தலையைச் சுவரிலே இடிக்கிறான்.)

(அப்பா, என்று அழைத்தபடி, பக்கிரி உள்ளே நுழைகிறான்.)

(அவன் மேல்துணியிலே இரத்தக்கறை இருந்தது கண்டு, தாண்டவராயன் பதறி)

தா:— பக்கிரீ...பக்கிரீ ! என்ன காரியம் செய்துட்டடா, பக்கிரீ ! (என்று கூறியபடி; அவனைக் கட்டித் தழுவிக்கொள்கிறான்.)

ப:— அப்பா பதற வேண்டாம்பா. ஒரு கெடுதியும் நேரிலே. பயப்படாதே...(தாண்டவராயன், இரத்தக் கறையுள்ள துணியைப் பார்க்கக் கண்டு) பொன்னனோட இரத்தமல்ல—தெருவிலே, போக்கிரிகளோட சண்டை நடந்தது—தடுத்துப் பார்த்தேன் — அதிலே கிடைச்சது — பயப்படாதீங்க...பொன்னி!

(பொன்னி ஓடிவந்து பக்கிரி காலிலே விழ)

பயப்படாதே (அவளைத் தூக்கி நிறுத்தி) அழாதே!

பொ:— (கதறியபடி) அண்ணா உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லையே..

ப:— எனக்கும் இல்லை, உன் புருஷனுக்கும் ஆபத்து இல்லை.

(பொன்னி, ‘அண்ணா!’ என்று மறுபடியும் கதறுகிறாள். தாண்டவராயன், பக்கிரீ என்று பதறிக் கூறுகிறான்.)

அப்பா! போக்கிரி பொன்னனைச் சாகடித்து விட்டேன்.

(இருவரும் பதற) பொன்னியோட புருஷன் பொன்னன்— இருக்கிறான்..

தா:— (கைகளைப் பிசைந்து கொண்டு) ஐயய்யோ! மூளை கொழம்பிப் போச்சி போலிருக்கே...

ப:— அதெல்லாம் இல்லேப்பா? பதறாமப்படிக்கு நான் சொல்றதைக் கேள் —பொன்னனைக் கொலை செய்து விடத்தான் போனேன் — ஆனா அவனோட மனசு எனக்கு நல்லா புரிஞ்சுது — ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறோம்பா...

தா:— (திகைத்து) என்னப்பா, தீர்மானம்?

ப:— பொன்னியைப் பொன்னன் கல்யாணம் செய்து கொள்றதுன்னு தீர்மானம்.

(தாண்டவராயன், கண்ணீரையும் துடைக்காமல் பதறியபடி இருக்கிறான். பொன்னி, இன்னதென்று புரியாமலேயே திகைக்கிறாள்.)
திகைக்க வேணும்பா! பொன்னன் சம்மதம் கொடுத்துவிட்டான்...நம்ம குடும்ப கௌரலம் கெடாது—பொன்னியோட வாழ்வும் நாசமாகாது...

தா:— என்ன சொல்றேன்னே புரியலையேடா, பக்கிரி!

ப:— (அவரை உட்கார வைத்து. கண்களைத் துடைத்துவிட்டபடி) பொன்னியைப் பொன்னனுக்குக் கலியாணம் செய்துவிடலாம்பா!

தா:— தாலி அறுத்தவளுக்கு...

ப:— மறுதாலி கட்டறது...(தாண்டவராயன் மருட்சியுடன் பார்க்க) விதவைக்குக் கலியாணம்...

தா:— பக்கிரி! அடுக்குமாடா. இது...

ப:— (பொன்னியைக் காட்டி) இது, அடுக்குமா? பொன்னனைக் கொலையே செய்துவிட்டாலும், பொன்னியைச் சாகடிச்சாலும், நாமே செத்தாலும், வெட்டுப் போனவ என்கிற இழிவு நம்ம குடும்பத்தைச் சுத்திக்கொண்டு தானே இருக்கும், அதனாலேதான், பொன்னனை, வெட்டிப் போட்டுவிட்டு, மறு காரியம் பார்க்கறதுன்னு போன நான். இந்தத் தீர்மானத்துக்கு வந்தேன். அவனும் பொன்னியோட வாழ்வு நாசமாகக் கூடாது. நம்ம குடும்பத்துக்கு இழிவு வரக்கூடாது என்பதிலே அக்கறை கொண்டவனாத்தான் இருக்கிறான். அப்பா! பொன்னனுக்கு உள்ளபடியே பொன்னியிடம் அன்பு இருக்குது.

த:— ஊர் உலகம் என்ன சொல்லும்...

ப:— அறிவாளிங்க புகழ்ந்து பேசுவாங்க. விவரம் விளக்கம் தெரியாதவங்க, பழய குட்டையிலே. ஊறிக் கிடக்கறவங்க உளறிக் காட்டுவாங்க.. நாம் அதைப்பத்திக் கவலைப்படக்கூடாது. நம்ம பொன்னியோட வாழ்வு சுகப்படும், மானம் நிலைக்கும், குடும்பம் தழைக்கும்.

(பொன்னி சிறிது வெட்கமடைந்து உள்ளே செல்கிறாள்.)
தா:— நம்ம குலத்திலேயே இதுவரை நடக்காத விஷயம்... நம்ம பரம்பரைக்கே புரியாத புதுமையாச்சேப்பா...

ப:— நம்ம குலத்துக்கும் குடும்பத்துக்கும், பொன்னி செய்து கொண்ட விவகாரம் மட்டும் சகஜமானதாப்பா... அதனாலே ஏற்படக்கூடிய இழிவுதான் தாங்க முடியாதது... அவமானத்தை ஒருபோதும் துடைக்கவே முடியாது விதவைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பதை அறிவாளிகளெல்லாம் ஆதரிக்கிறாங்கப்பா! விதவைகளுக்குக் கலியாணம் செய்வது கூடாது என்கிற பழமையாலே தான், குடும்பத்துக்கும் குலத்துக்கும் இழிவு உண்டாகிற பழியெல்லாம் ஏற்படுது.

தா:— எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலையே பக்கிரீ! தெரியலையே...

ப:— குழம்பிகிட்டு கிடக்காதிங்க... பேரனோ, பேத்தியோ, பிறக்கும். ஆனந்தமா வைத்துக்கொண்டு கொஞ்சிகிட்டு இருங்க..பொன்னன் சம்மதம் கிடைச்சுப் போச்சு. கெடுத்ததைக் கெடுத்து விட்டோம், இனி நமக்கு என்னன்னு, கையை விரிச்சி விடுகிறானோன்னு பயமா இருந்தது. நான் சொன்ன புத்திமதியைக் கேட்டு, அவனும் நல்லவனாயிட்டான். பயமில்லை, அப்பா, பயமில்லை. இனி, நான் கலியாணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன்...

(தாண்டவராயன் கவலையுடன் உட்காருகிறான்.

பிறகு உள்ளே செல்கிறான்.

பக்கிரி வெளியே செல்கிறான்.

உள்ளே இருந்து பொன்னி வெளிப்பக்கம் வருகிறாள். கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். வீட்டு வேலைகள் செய்தபடி, யோசிக்கிறாள். அவளையுமறியாமல் மகிழ்ச்சி அரும்புகிறது. முகத்திலே ஓரளவு மலர்ச்சி இருக்கிறது.

தாண்டவராயன், உள்ளே இருந்து வெளிப்பக்கம் வருகிறான். கயிற்றுக் கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு, பொன்னி வேலை செய்வதைக் கவனித்தபடி இருக்கிறான். கடுகடுப்பாக இருந்த
முகம், மெள்ள மெள்ள மாறுகிறது. இலேசாகப் புன்னகை தோன்றி மறைகிறது.)

தா:— பொன்னீ! கோழியைக் கொண்டுவந்து, கூடைக்குள்ளே போட்டு, மூடேன்— நேரமாகுதில்லே...

(பொன்னி வெளிப் பக்கம் சென்று, குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த தோழியைப் பிடித்து வந்து. கூடை போட்டு மூடிவிட்டு, உள்ளே சென்று விடுகிறாள்.)


காட்சி—7

சில நாட்களுக்குப் பிறகு — அதே இடத்தில்

(கயிற்றுக் கட்டிலின்மீது உட்கார்ந்துகொண்டு தாண்டவராயன், புதுத் துணிகளை, பிரித்துப் பார்ப்பதும், மடித்து வைப்பதுமாக இருக்கிறான். பொன்னி, உள்ளே இருந்து வருகிறாள். கவிழ்த்து இருக்கிற கூடையை எடுக்கிறாள். உள்ளே இருந்து, நாலைந்து குஞ்சுகளுடன், கோழி வெளியே வருகிறது.)

இடம்:— வீதி

இருப்போர்:— பொன்னன், சந்திரசேகரய்யர்.
(பொன்னன் வந்துகொண்டிருக்கிறான். எதிரில் சந்திரசேகரய்யர் வருகிறார்.)

ச:— என்னடா, பொன்னா — கண்ணிலேயே காணல்லியே!

பொ:— ஆமாங்க... ஒரு முக்கிய விஷயமா...

ச:— அதேன்னடா, நேக்குக் கூடச் சொல்லக்கூடாத விஷயம்.

பொ:— (சங்கோஜத்தோடு) வந்துங்க...நான்...

ச:— சொல்லும்போதே, சிரிப்பு வருதேடா, பொன்னா— விவாக ஏற்பாடு ஏதாவது...

பொ:— ஆமாங்க.. கல்யாணம் பண்ணிக்கிறதுங்கிற முடிவுக்கு வந்துட்டேன்.

ச:— நானே உன்னண்டை வெகுநாளாச் சொல்லணும்னு இருந்தேன். நீயே செய்துட்டே... பரமசந்தோஷம் பொன்னா, பொண்ணு யாருடா?

பொ:— அதாங்க, தாண்டவராயர் மகள்.

ச:— தாண்டவராயன் மகளா — அவனுக்குக் பண்ற வயதிலே பொண்ணு ஏதடா?

பொ:— இருக்குங்க.. பொன்னியம்மான்னு பேருங்க.

ச:— அட, அந்த குட்டி தாலியறுத்தவன்னா...

பொ:— தெரியுங்க... ஆனாலும், அந்தப் பொண்ணையேதான் கட்டிக்கிறதுன்னு முடிவு செய்துட்டேன்.

ச:— பரவாயில்லேடா பொன்னா, இதிலே தப்பேதுமில்லே.

பொ:— (ஆச்சரியமாக) அட நீங்களே தப்பில்லேங்கிறீங்களே.. நான் இன்னமும் தயங்கிகிட்டுதான் கிடந்தேன்.. என்னடா அவ ஒரு ஜாதி, நாமொரு ஜாதி..அதுவும் அவதாலியறுத்தவ—ஊர் என்ன சொல்லும், பெரியவங்க ஒத்துக்குவாங்களா... இப்படியெல்லாம் யோசிச்சேன்— ஊர்ப் பெரிய அய்யரே தப்பில்லை யென்கறபோது இனி என்னங்க — முடிச்சுப்புடரேன்.

ச:— காதலுக்கு ஜாதி ஏதடா— எந்த சாஸ்திரமும், காதலை எதிர்ப்பதில்லை — சுப்ரமண்ய சுவாமி, வேடுவப் பெண் வள்ளியை மணம் முடிக்கல்லியோ! சந்தனு மகராஜன், மச்சகந்தியை மணம் செய்து கொள்ளல்லயோ...சந்தனு, மகாராஜன்.... மச்சகந்தி, மீன் பிடிக்கும் குலம். பொன்னி—பொன்னன், பெயர்ப் பொருத்தம் ஒண்ணே போதும்டா! பொன்னா, நீ எதுக்கும் யோசனை பண்ணாதே — ஜாம் ஜாம்முன்னு விவாகத்தை நடத்து.

பொ:— நீங்க எல்லாம் படிச்சவங்க ஊரிலே இருக்கிற அரை குறைகள் உளறாமப் போகுமா— உளறட்டும்! நான் நடத்திடரேன்.

ச:— அதுபத்தி யெல்லாம் யோசிச்சுண்டு காலத்தை கடத்தாதேடா பொன்னா— யாராவது ஏதாவது சொன்னா, என்னைச் சொல்லடா.. பெரிய அய்யரே பிசகில்லேங்கறார்னு சொல்லு.. பொன்னா, நானே இருந்து உன் திருமணத்தை நடத்திவைக்கிறேன் — போதுமோ? போடா! போ! போய் ஆகவேண்டிய காரியங்களைப் பாருடா!

(பொன்னன் மகிழ்ச்சி யடைகிறான். மறுபடியும் சஞ்சலத்துடன்)

பொ:— சாமி ஜாதியை விட்டு ஜாதியிலே கல்யாணம் கட்டிகிட்டா, பாவம்னு சொல்வாங்களே...

ச:— எந்தப்பாவத்துக்கும் பிராயச்சித்தம் உண்டுடா பொன்னா. தெரியறதோ? மேலும், மனம் ஒத்தா இனம் ஒத்துப்போச்சி என்கிறது லோகப் பிரசித்தியான வாசகமல்லவோ?

பொ:— மனம் ஒத்துப் போனதாலே தான் சாமி, நானும் கண்ணை மூடிக்கிட்டு...

ச:— (குறும்பாக) பலே பேர்வழியாச்சே நீ......ஏண்டா பொன்னா... காரியமே முடிஞ்சு போச்சா...

பொ:— (வெட்கத்துடன்) போங்க சாமி, வேடிக்கை செய்றீங்க நீங்க.. எனக்கு நெஜமா, வேதனையா இருக்கு...

ச:-வேதனை கிடக்கட்டும்டா...காரியம் முடிஞ்சே போச்சா—அதைச் சொல்லுடா...

பொ:— ஐஞ்சு மாசமாத் தலை முழுகலிங்களாம் பொண்ணு—

ச:— அப்படிச் சொல்லு...ஆசாமி நீ என்ன சாமான்யப் பட்டவனா? அவனவன அலையறான் கோயில் கோயிலா, ஒரு பிள்ளை வேணும்னு...சரி, சரி — இனியும் யோசிக்கக் கூடாது.. விவாகத்தை சீக்கிரமா முடிச்சு விடுவதுதான் நியாயம் — புறப்படு—போய் ஆகவேண்டிய காரியத்தைக் கவனி.

பொ:— இனி எனக்கு என்னங்க தைரியத்துக்குக் குறைச்சல்! நாலு பேரு நாலு சொல்வாங்கத்தான் — சொல்லிகிட்டுப் போகட்டும்—

ச:— நாலு பேர் சொன்னா என்ன, நாலாயிரம் பேர் சொன்னா என்ன—ஏண்டா, நான் சொல்றப்போ, உனக்கு என்னடா பயம்! இதோ பார்டா பொன்ன! நம்ம பொண்ணு விதவையா யிட்டதோன்னே — சாஸ்திரப்படி, தலையை மொட்டை அடிச்சி வெள்ளைச் சேலையைத் தரவேணும்— மனசு கேட்கிறதோ—கிளி — அப்சரசு—தங்கப்பதுமை —சுகுணா — அதை மொட்டை அடிச்சு மூலையிலே உட்கார வைக்கிறதுன்னா, மனசு இடம் தருமோ — நம்ம ஊர், பக்கத்துக்கிராமம் இங்கே உள்ளதுகள் ஏதேதோ கூவின சுகுணாவோ அழகு; இவாளோ, வேதம் இடம் கொடுக்குமோ, சாஸ்திரம் சம்மதிக்குமோ, ஆகமம் அனுமதிக்கு மோன்னு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யறா— மனசு எப்படி இருக்கும் எனக்கு?

பொ:— கொழம்பித்தான் போயிருக்கும்.

ச:— சர்வேஸ்வரா! ஏண்டாப்பா எனக்கு ஒரு புத்திரியைக் கொடுத்து, இந்தப் பாடுபடவைக்கிறேன்னு கதறினேன். —கதறினா காரியம் முடிந்து போறதோ—இந்தப் பக்கம் பார்த்தா, சுகுணா...

பொ:— அந்தப் பக்கம் பார்த்தா ஆர்பாட்டக்காரனுங்க...

ச:— அவாளே தூஷிக்காதேடா பொன்னா! அவாளுக்கு நம்ம ஆச்சாரம் கெடப்படாது என்கிற நல்லெண்ணம் தானே—அவா பேர்லே என்ன தவறு இருக்க முடியும் — பார்த்தேன்—ஆச்சாரம் கெடப்படாது என்பது அவளோட எண்ணம் —சுகுணாவோட வாழ்வு கெடப்படாது என்பது என்னோட எண்ணம் — கடைசீயிலே, பொண்ணோட பக்கம்தான் நான் சேர்ந்துண்டேன்—தோப்பன், மகளோட க்ஷேமத்தைக் கவனிச்சாக வேணுமோன்னோ— அதுதானே தர்மம்— அந்தத் தர்மத்தின்படி நடக்கிறபோது, அதனாலே சாஸ்திரத்துக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டாலும் தோஷமில்லேன்னு தீர்மானிச்சேன் — பொண்ணு இப்ப சௌக்யமா இருக்கிரு...

பொ:— அதுதானுங்களே முக்யம்..

ச:— நம்ம சௌகரியத்துக்குத்தானே எல்லா சாஸ்திரமும்...! அதனாலே பயமே வேண்டாம்—கல்யாண ஏற்பாட்டைக் கவனி—போ.,,


காட்சி—8.

இடம்: ஆண்டானூர்—கலியாண மண்டபம்.

இருப்போர்: மணமக்கள், பக்கிரி, தாண்டவராயன், மற்றும் சிலர்.
(பொன்னன் பொன்னி திருமணக் கோலத்துடன் உள்ளனர். மாலை மாற்றிக்கொள்கின்றனர் வாத்ய இசை கேட்கிறது, பக்கிரி மகிழ்ச்சியுடன் காணப்படுகிறான். பொன்னி கண்களில் நீர் தளும்பிய நிலையில், தாண்டவராயன் காலிலே வீழ்ந்து வணங்குகிறாள். பக்கிரி, பொன்னனைக் குறும்பாகப் பார்க்கிறான். பொன்னனும், தாண்டவராயன் காலில் விழுந்து வணங்குகிறான். பக்கிரி வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குக்கொடுத்து அனுப்புகிறான்.)

காட்சி—9.

இடம்:— ஆண்டாளூர் வீதி.

இருப்போர்:— நாலைந்து பட்டிக்காட்டு வைதீகர்கள்.

ஒரு வைதீகர்:— என்னய்யா அனியாயம் — இந்த போக்கிரி பொன்னன் செய்த காரியத்தைப் பார்த்தயா...

இன்னொரு வைதீகர்:— யார் கேட்க முடியும் என்கிற மண்டைக் கர்வம்

வேறொரு வைதீகர்:— தாலி அறுத்தவ—...

ஒரு.வை :— ஜாதியும் வேறுதான்...

வேறொரு வைதீகர்:— நாடு நாசமாகாமலா இருக்கும்...

ஒரு வை:— அது சரி—இப்படிப்பட்ட அக்ரமத்தைக் கண்டிக்காமலே விட்டுவிடுவதா—ஊரிலே பெரியவங்க இருக்கிறாங்கன்னு துளியாவது அச்சம் இருந்ததா அந்தப் பயலுக்கு...

வே.வை:— இதோ இருக்கிறாரே பெரியதனக்காரரு, பேசாமே—ஊமை மாதிரி...

பெரியதனக்காரர்:— சும்மா இருங்கடா...சும்மா இருங்க... பெரியதனக்காரன் பேசாம இருக்கிறானேன்னு நியாயம் பேசவந்தூட்டிங்க, நியாயம்—எவன் இப்ப என்பேச்சைக் கேட்டு நடக்கிறான் — எந்தப்பய கட்டுக்கு அடங்கி நடக்கிறான் — இப்பத்தான் எவனுமே காலாலேயே நடக்கறதில்லையே — பொன்னனை மட்டும் நான் எப்படிக்கட்டுப் படுத்த முடியும் — அவனோ போக்கிரி..

ஒ.வை:— இப்படி பயப்பட்டுச் சாகறவங்க, பெரியதனம் வேண்டாம்னு விட்டுப் போடணும் — போக்கிரியா இருந்தா என்னா — ஜாதியாரைக் கூட்டி அவனைத் தள்ளி — வைக்கறது — கொம்பு முளைச்சி இருக்குதோ பொன்னனுக்கு — அவன் வீட்டு நல்லது பொல்லதுக்கு நாம்ப யாரும் போகப்படாதுன்னு கட்டு திட்டம் செய்யறது — கிராமத்து ஊழியர்களை எல்லாம் கூப்பீட்டு உத்தரவு போடறது, பொன்னனை ஜாதியிலேயிருந்து தள்ளிப் போட்டோம், இனிமேல்பட, யாரும் அவனுக்கு ஊழியம் செய்யக்கூடாதுன்னு சொல்றது. நாறிப்போக மாட்டானா! நடுங்கிப்போக மாட்டானா!

பெரி:— ஏம்பா! முடிஞ்சுதா உன் வீராவேசம் — முடிஞ்சுதா — இல்லே, இன்னும் ஏதாச்சும் பாக்கி இருக்குதா...

ஒ.வை:— கேலியும் கோவமும் காசுக்குப் பிரயோசஜனப் படாதுங்க—ஆமாம்— பெரிதனக்காரருன்னா, நடுவூட்லே மணையும், கை நிறைய தாம்பூலமும் வாங்கி கிட்டுக் கிடக்கறது மட்டும் இல்லிங்க — ஜாதி, குலம், வரைமுறை இதை எல்லாம் கட்டிக் காப்பாத்த வேணும்...

பெரி:— அட, யார்டா சுத்த அறிவு கெட்டவனா இருக்கறே —ஜாதிக் கட்டு கட்டவேணுமாமில்லே ஜாதிக் கட்டு — கட்டினா என்னா நடக்குதுன்னுதான் தெரியுதே, வெட்ட வெளிச்சமா — பெரிய தர்மவானாட்டம் பேசறியோ? உன் யோக்யதைதான் என்னா — ஜாதியை விட்டுத் தள்ளிவைச்ச இடத்திலேதானே, நீ, பொண்ணு எடுத்தே உன் மகனுக்கு பெரிய மனுஷாளோட பேச்சு காதிலே ஏறிச்சா உனக்கு — பெரிய இடம்னு ஓடினே...

ஒ.வை:— சம்பந்தியை ஜாதியிலேயிருந்து தள்ளினாங்கன்னு பேசறயே, அறிவு கெட்டுப்போயி......

பெரி:— ஜாதியை விட்டுத் தள்ளிவைக்கலியா உங்க சம்பந்தி ஜெம்புலிங்க மோலியை...

ஒ.வை:— மறுபடியும் சேர்த்துகிட்டாங்க, தெரியுமேல்லோ......

பெரி:— ஆமாம் — பணம் பாதாளம் வரைக்கும் பாஞ்சுது! அடே சிரிக்காதிங்கப்பா! பணம் இருந்தா ஒரு நியாயம், இல்லேன்னா வேறே ஒண்ணுண்னு ஆயிப்போச்சி — தன் முதுகிலே இருக்கற அழுக்குத் தெரியாம தாவித் தாவிக் குதிச்சா, கோபம் வராது எனக்கு? ஜெம்புலிங்க மோலி வீட்லே பொண்ணு எடுக்கப்படாது, அவரை ஜாதியை விட்டுத் தள்ளி வைச்சிருக்குன்னு ஊர்லே எல்லோரும்தான் சொன்னோம். கேட்டாரா? கட்டுப்பட்டாரா! தோட்டம் இருக்கு துரவு இருக்குன்னு மகிழ்ந்து போனாரு — பிற்பாடு ஜெம்புலிங்க மோலி காசு பணத்தை வீசி, ஜாதியாரைச் சரிப்படுத்திக்கிட்டாரு — இவரு. இப்ப நியாயம் பேசறாரு — பெரிதனக்காரன் மேலே பழியைப் போடறாரு. அந்த நாள்லே, நான் சொன்னதைக் கேட்டு, இவரு கட்டுப்பட்டிருந்தா, இப்போ பொன்னன் கூடத்தான் கட்டுப்படுவான்...

ஒ.வை:— எக்கேடோ கெடட்டும், எனக்கு என்னய்யா—

(போகிறார்)

பெரி:— தனக்கு ஒரு நியாயம். மத்தவங்களுக்கு ஒண்ணு—

(ஒவ்வொருவராகப் போகிறார்கள்)

பொன்னனை மிரட்டவேணுமாம்—ஏன்—அவன் ரெண்டு போடட்டும்னு எண்ணம், கெட்ட நினைப்புக்காரனுங்களுக்கு — இவனுங்களெல்லாம் ஜாதி ஆச்சாரத்தைத் துளிகூட மீறி நடக்காதவனுங்க போலே பேசறது. பிரமாதமா! ஒவ்வொருத்தனும் தனக்கு இலாபம், சுகம்னு தெரிஞ்சா, ஜாதியாவது குலமாவதுன்னு, தூக்கி வீசிவிட்டுக் காரியத்தை முடிச்சிக்கிறான் — வேறே ஆளுவிஷயம்னா பாரேன், தீட்டிக்கிட்டு வந்துவிடறானுங்க—ஏன்—பெரிதனக்காரனை ஏவி விடலாம்— போயி படட்டும்னு எண்ணம் — கெட்ட நினைப்புக்காரனுங்க கெட்ட நினைப் புக்காரனுங்க!

(பெரியதனக்காரனும் செல்கிறான்)

காட்சி—10

இடம்:— அழகூரில் ஒரு ஸ்டூடியோ.. பூந்தோட்ட செட்.

இருப்போர்:— அருள்குமார், அம்பிகா, டைரக்டர், காமிராக்காரர், வேலையாட்கள்.

(படப்பிடிப்புக்கான மெஷீன்கள் மீது விபூதிப் பட்டையும் குங்குமப் பொட்டும் இருக்கிறது.

அருள்குமார், கதாநாயகன் வேஷத்தில் காமிராமுன் நிற்கிறான்.

டைரக்டர், அருள்குமாரை சற்றுத் தொலைவில் உள்ள கற்பாறைமீது உட்காரச் சொல்லுகிறார். காமிராவைச் சரிபார்த்து விட்டு)

டைரக்டர்:— காதர் சார் ரெடி!

காமிரா காதர்:— ரெடி...

டை:— பைய்யா!

(ஒரு வாலிபன் ஓடிவந்து தேங்காயில் கற்பூரம் வைத்துக் கொளுத்தி திருஷ்டி கழித்து டைரக்டர் ஆகியோரிடம் காட்ட)

கா:— சரி, சரி, போடா...

டை:— என்ன சார், கோபம்...!

கா:— கோபம் என்ன சார்...! எனக்கு இந்த பைத்யக்காரத்தனம், வரவரக் கொஞ்சம்கூடப் பிடிக்கல்லே...

டை:— (ஆச்சரியத்துடன்) என்ன மிஸ்டர் அப்துல்காதர்! எது பைத்யக்காரத்தனம் — எது பிடிக்கல்லே...

(தேங்காயுடன் நிற்கும் பையனைக் காட்டி)
கா:— இது, பைத்யக்காரத்தனமில்லாமல் வேறு என்னவாம்! என்ன குருட்டுத்தனமான வேலை சார் இது!

அற்புதமான மெஷின், குட்டிச் சூரியன்போலப் பிரகாசம் தரும் எலக்ட்ரிக் விளக்கு—படம் பிடிக்கும் காமிரா — பேச்சு எடுக்கும் மெஷின். இவ்வளவு விஞ்ஞான அற்புதங்கள் இருக்கு இங்கே...

டை:— (திகைத்து) ஆமாம்...இருக்கு...

கா:— (கேலியாக ) இதோ இதுவும் இருக்கு...

(தேங்காய் சூடத்தைக் காட்டி)

டை:— (சிரித்தபடி) அடடே! அதைச் சொல்கிறீரா....;

கா:— தொழிலுக்கு விஞ்ஞானம்—பிழைப்புக்கு விஞ்ஞானம் நடவடிக்கையோ, இப்படி.. வெட்கம் இல்லையே சார்? அந்தந்த நாட்டுக்காரன், இந்த விஞ்ஞானப் பொருளை எல்லாம் கண்டுபிடிக்க எவ்வளவு பாடுபட்டு இருக்கிறான்? உரிச்செடுத்த பழத்தைச் சாப்பிடுவது போல, நாம் அந்த அற்புதங்களை வாங்கிப் பிழைப்பை நடத்திக் கொள்கிறோம். அந்தப் பொருளுக்கு, விபூதிப்பட்டை, குங்குமப் பொட்டு, சூடம் — செச் சேச் சே! எவ்வளவு கேவலம்! கேலிக்கூத்து சார் இது! கோடாலி, மண்வெட்டி, உரல், உலக்கை, ராட்டினம் இதுகளுக்குப் பொட்டு போடட்டும். நம்ம பரம்பரைச் சொத்து! அதெல்லாம் நம்ம பூர்வீக ஞானம் தந்த பொருள்...

டை:— ஒரு பழக்கத்தாலே செய்றதுதானே சார்!

கா:— பைத்தியக்காரத்தனமா இல்லையா இது! எவனாவது மேல் நாட்டுக்காரன், விஞ்ஞானம் படித்தவன், இதைப் பார்த்தா, என்ன எண்ணுவான், என்ன சொல்லுவான்? இந்த இலட்சணத்திலே, விளம்பரம் இருக்கு ஜம்பமா, சீர்திருத்தச் சித்திரம், புரட்சிப் படம்னு! இதுவா சார்

சீர்திருத்தம்! (பையனைப் பார்த்து) போடா போய் தேங்காயை சட்னி செய்து சாப்பிடு போடா? பைத்யக்காரச் சேஷ்டைகளைச் செய்துகொள்வது. பெயர் சீர்திருத்தப் படம்!

டை:— நமக்கு என்ன சார், இதைப் பத்தி எல்லாம் — நாம் உண்டு நம்ம தொழில் உண்டு.

கா:— இப்படிப்பட்டவர்கள் இருக்கிற வரைக்கும் — நாடு உருப்படுமா, சார்!

டை:— மிஸ்டர் காதர்! உம்மோடு விவாதம் நடத்தத் தயாராக இல்லை.

கா:— விவாதம் நடத்தத் தயாராக இல்லையா? விவாதம் நடத்த முடியாது சார்!

(பலர் சிரிக்க)

டை:— (கோபமாக) சைலன்ஸ்! சார்! வேலை நடக்கட்டும். மிஸ்டர் அருள்! இப்படி ‘டிலே’ செய்தா, என்ன வேலை நடக்கும்—படம் வருஷப்பிறப்புக்கு ரிலீசாக வேணும். முதலாளி முகத்தைப் பார்க்கச் சகிக்கல்லே...

அ:— சார்—என்னாலே ‘டிலே’ ஆகாது எப்பவும்—மேக்கப் மார்க், வந்தாதானே.

டை:— மார்க்! மார்க்!... ஏய், மார்க்!

(வேலைக்காரன் ஓடிவந்து)

வே:— மேக்கப் சார், அம்மாவுக்கு மேக்கப் செய்திண்டு இருக்கார்...

டை:— ஓ—சாரி! மிஸ்டர் அருள்குமார்...! மார்க், வேலையா இருக்கார்—ஹீராயின் வர்ரதுக்குள்ளே, ஒரு ரிகர்சல் பார்த்துவிடுவோம்—காமிரா சார். ரெடியா...

கா:— ஓ, எஸ்;

அ:— ஹீரோயின் இல்லாமலே, ரிகர்சலா சார்...! (கேலியாக)

டை:— (கோபமாக) மிஸ்டர் அருள்! கேலி செய்தா, எனக்குப் பிடிக்காது—ஆமாம்... டேய்! சோ.னா. நில்லு இப்படி.., மிஸ்டர் அருள்! அதுதான் ஹீராயின் பொசிஷன்...

அ:— ரைட்...!...(கரங்களை நீட்டுகிறான், சோ.னா. பக்கம்)

டை:— நோ! நோ!... கண்ணாலே பாருங்க சார், முதலிலே...

(சாதாரணமாகப் பார்க்கிறான் அருள்)

நோ! நோ! லவ் டச்—கொடுக்கணும் பார்வையிலே— டேய்! சோ.னா. புன்சிரிப்பா இரு...

அ:— சார். வேண்டாம் சார்...அந்தப் பய, புண்சிரிப்பா இருந்தா, எனக்குச் சிரிப்பு தாங்கமுடியலே சார்— அவ்வளவு ‘கோரமா’ இருக்கு...

(காதல் பார்வை செலுத்தி)

அ: (கரங்களை நீட்டியபடி) டாக்டர்... ஓ! மை, டாக்டர்! ஓ! மை, டியர், டாக்டர்!

(அம்பிகா வருகிறாள். லேடி டாக்டர் மேக்கப்புடன். சோ.னா. விலகுகிறான்.)

அம்:— ரிகர்சல் நடக்கட்டும்...

டை:— மூன்று தடவை ரிகர்சல் நடந்தாகி விட்டது!...ப்ளீஸ்...

(நிற்க வேண்டிய இடத்தைக் காட்டி)

அம்:— கண்ணாளா! புது வாழ்வு பெறுகிறேன். தங்களால்! விதவையின் கண்ணீரைத் துடைத்த வீரரே!

டை:— அருள் சார்! பெருமூச்சு...விடவேணும், இப்போ...

(அருள் செய்து காட்ட)

என்ன சார்! மூட்டை சுமப்பவன் போலவா—நைசாக...

(மீண்டும் அருள் செய்து காட்ட)

ஓகே... (அம்பிகாவைப் பார்த்து)

டை:— கொஞ்சம், பாசமாகப் பேசினா நல்லது...

அம்:— பாசமா.. எப்படின்னு சொல்லுங்க...

டை:— (அசட்டுச் சிரிப்புடன்)... காதலன் வரவில்லையே வரவில்லையே என்று ஏக்கம்...அந்த ஏக்கம், தாபம்.. தொனியிலே தெரியவேணும்... லவ் சிக்!...காதல் நோய்...தாபம் ஏக்கம்...

அம்:— டைரக்டர் சார்! நீங்க ஒரு பைத்யம்!...லவ் சிக் ஆக்ட் செய்ய வராது சார்...எந்த ஸ்டார்ஆலும் செய்ய முடியாது...

டை:— அப்படிச் சொன்னா... முயற்சி செய்தா முடியும்...

அம்:— முடியாது, சார்! சார் எங்களுக்குத் தாபம், ஏக்கம், தெரியுமா... அனுபோகம் ஏற்பட்டது உண்டா...லவ் சிக் எப்படி, சார் எங்களாலே ஆக்ட் செய்ய முடியும்?

அரு:— ஆடவனுடைய பிரேமைக்காக பெண் ஏங்கித் தவிக்கிறாள்— அந்தத் தவிப்பைத்தான் காட்டச் சொல்கிறார் டைரக்டர்...

அம்:— நாங்க எப்பவாவது அதுபோலத் தவீச்சு இருந்தாத் தானே சார், அந்த ஆக்ட் வரும்—ஏன்—தவிக்கப் போகிறோம். ஏக்கம் எப்படி ஏற்படப் போகுது—ஆடவன் பிரேமை கிடைக்காவிட்டா ஏக்கம் தவிப்பு ஏற்படும்... (புன்சிரிப்பாக) சார்! நாங்கதான் சதா சர்வ காலமும், ஆண்களோட தொல்லையை விரட்டவே பாடுபட வேண்டி இருக்கே, எங்களுக்கு எப்படி லவ்சிக் ஆக்ட்செய்ய வரும்...

(கதாசிரியரைப் பார்த்து)

டை:— சார், ஸ்டோரி, சார்! பஸ்ட் கிளாஸ் ஹ்யூமர்! எதிலாவது சேர்த்தா பஸ்ட் கிளாஸாக இருக்கும்...

கதா:— இதிலேயே சேர்க்கட்டுமா சார்...

டை:— வேண்டாம், சார்... வேறே கதையிலே....

அரு:— வேறே கதையா! வேறே யாரும் துணியலே சார், இவரைக் கொண்டு கதை தயாரிக்க...

(அம்பிகா போய் விடுகிறாள். மேக்கப் மார்க்கும் கூடச் செல்கிறான்.

டைரக்டர், பத்தவைக்காத பைப்பை வாயில் வைத்துக்கொண்டு நிற்கிறார். அருள் காப்பி சாப்பிடுகிறான். கதாசிரியர், குறிப்பு எழுதுகிறார். காமிராக்காரர் கைக்கடிகாரத்தைச் சரி பார்த்துக் கொள்கிறார்.

மேக்கப் மார்க் வருகிறான்)

மார்:— சார்! அரைமணி நேரமாகும்-—அர்ஜண்ட், டிரங்கால் பேசிவிட்டு வருவார்களாம்...

டை:— நாசமாப் போச்சு... (கோயமாக) டே! சோ.னா.—வந்து நின்னு தொலைடா—சார்! அருள்... (அவன் காப்பி சாப்பிடக் கண்டு) சரி, சரி, சாப்பிட்டு முடியுங்கோ—ஏழாவதா எட்டாவதா...(அருள் அவசரமாக வந்து நிற்கிறான்)

டை:— சார்! அந்த லாங் டைலாக்கைச் சொல்லுங்க... கதாசிரியர்! பிறகு எழுதலாம். இதைக் கேளுங்கோ...சரியா இருக்கான்னு பாருங்கோ—

அரு:— டாக்டர்! தாங்களோ உயர் ஜாதி—நானோ பண்ணைக்காரன் மகன்—உயர் ஜாதி அல்ல... பட்டாளத்திலே வேலை செய்யும் பராரி...

கதா:— சார்! இப்படித் திருத்தி இருக்கிறேன் இந்த இடத்தை—

(படிக்கிறார்)

டாக்டர்! தாங்களோ பணக்காரக் குடும்பத்துப் பாவை—பாரோர் பாராட்டும் பண்பான ஜாதியில் பிறந்த பாவை—பாவி நானோ பட்டாளத்தில் பணிபுரியும் பராரி—பண்ணைக்காரன்.

(டைரக்டர் முகத்தைச் சுளித்துக் கொள்கிறார்)

டை:— என்ன சார் இது, ஒரு நிமிஷப் பேச்சிலே, இத்தனை ‘பா’வா...அருள்! பழய டைலாக்கே போதும்.

(கதாசிரியர் சோகமாகிறார்)

அரு:— டாக்டர்! பெற்றோர் கோபிப்பார்களே, பெரியவர்கள் கண்டிப்பார்களே...

(கதாசிரியர்)

பேதைகள் தூற்றுவார்களே...

அரு:— பேதைகள் தூற்றுவார்களே என்று துளியும் பயப்படாமல், என்னை மணம் செய்துகொள்ள...

(கதாசிரியர்)

திரு—திரு—திரு

அரு:— திருமணம் செய்துகொள்ள முன் வந்ததைக் கேட்டு, நான் புது மனிதனானேன்...

டை:— சோனா!— நீ படி...

சோனா:— ஆருயிரே! ஜாதி பேதம் காதல் ஜோதியை அணைக்க முடியுமா! ஜாதி என்பதே சூதுதானே? என் கண்ணுக்கு, ஒரு வீர புருஷன் தெரிகிறார், ஜாதி அல்ல—குலம் அல்ல...

அரு:— இன்பமே! அன்பே! உலகம் எதிர்த்தாலும் — உன்னை நான் கைவிடேன்—ஜாதியை விரட்டுவோம்—காதல் ஜோதியைக் காணுவோம்...

(கதாசிரியர்)
ஜோதி—ஜோதி!
காதல்ஜோதி—காதல்ஜோதி
கண்டேன்
களிப்பு மிகக்கொண்டேன் —

இதுதான் சார் ட்யூயட்—

(மேக்கப் மார்க் வருகிறான்)

மார்:— சார்? ஷூட்டிங், கான்சல்—அவசரமாகச் சேலம் புறப்படுகிறார்கள்... அம்மா...

டை:— படம், படந்தான்—நான்சென்ஸ்!

(போகிறார். அனைவரும் போகின்றனர். இரண்டு பிரமுகர்கள் உள்ளே வருகிறார்கள்)

படமுதலாளி:— பூந்தோட்ட செட்டா, டைரக்டர்... ஆமாம்...இங்கேதான் நான் சொன்ன ‘காதல் ஜோதி’ பாட்டு...

பிரமுகர்:— அம்பிகாவா பாடறது?

மு:— இல்லே, இல்லே, நம்ம மாணிக்கத்தோட மகதான் பாட்டு..அம்பிகா லிப் மூவ்மண்ட்...

டை:— லிப் மூவ்மண்ட் கொடுக்கிறதிலே, அம்பிகா போல வேறு யாரும் கிடையாது...

(கதாசிரியரைப் பார்த்து பிரமுகரிடம் காட்டி.)

மு:— இவர்தான் கதாசிரியர்... வாத்தியார் கோவிந்தப் பிள்ளை மகன்தான்— கதையைச்சுருக்கமாச் சொல்லு தம்பி, இவரிடம் {டைரக்டரைப் பார்த்து) கோயமுத்தூரை ‘கோல்ட்வான், கம்பெனிக்குக் கொடுக்க வேணும்னு உயிரை வாங்கினயே, உன் பேச்சைக் கேட்டிருந்தா என்ன ஆகி இருக்கும்—இவர் வந்து விட்டார்...நான் இருக்கிறபோது, வேறு ஆசாமிக்குப் படம் தருவதான்னு.. (கதாசிரியரைப் பார்த்து) ஏன்யா? சொல்லேன்.

பிர:— சுருக்கமாச் சொன்னா போதும்.

கதா:— காதலின் மேன்மை—ஜாதி பேதக் கொடுமை—ஏழை பணக்காரன் தகறாரு...

மு:— கதையைச் சொல்லய்யா—கருத்து தானாத் தெரியுது இந்தக் காலத்திலே, பணக்காரனைப் பாராட்டியா கதை எடுக்க முடியும்...

கதா:— குமார் என்கிற சிப்பாய்—அதாவது பட்டிக்காட்டு வாலிபன்—பட்டாளத்திலே சேர்ந்து வேலை செய்கிறான்...

டை:— பட்டாளத்துக்கு ஆள் சேர்க்கிற கட்டம் — கவர்னர் பிரசங்கம்—மிலிடரி பாரேட் இதெல்லாம் படத்திலே வருது...

கதா:— அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போகிறான்—குமார்—அங்கே ஒரு லேடி டாக்டர்—

டை:— நம்ம அம்பிகா—!

மு:— அசல் டாக்டரேதான்—நல்லா ஆக்ட் செய்திருக்கா அம்பிகா

கதா:— ஆஸ்பிட்டலிலேயே லவ்...இரண்டு பேரும் ஜாதி வேறே, டாக்டர் பணக்காரக் குடும்பம்...

பிர:— இந்தப் பய, பட்டிக்காடு, பராரி, தாழ்ந்த ஜாதி...

அரு:— (வேடிக்கையாக) கதையிலே சார்! நான் பிராமணன்...

மு:— யார் தெரியுமோ, நம்ம அருள்குமார்...சந்திரசேகர ஐயர்...

அரு:— அவர் பேரைச் சொன்னா தெரியாது—ஜட்ஜ் ஐம்புகேச ஐயர் தெரியுமோ உங்களுக்கு... தெரிந்திருக்கணுமே...

பிர:— நல்லாத் தெரியுமே... அவருக்கு என்ன உறவு?...

அரு:— அவருடைய மகளை, என் அண்ணனுக்குத்தான் கொடுத்திருக்கு—

பிர:— ஓ! பெரிய இடத்துப் பிள்ளை... அண்ணன், என்ன வேலை பாக்குது...

மு:— சீமையிலே படிக்கிறார்...அருளுக்கு, சினிமாக் கலை மேலே உயிர்... அதனாலேதான், ஆக்ட் உயர்தரமா அமைஞ்சிருக்கு...

கதா:— ஊரார் பகை கிளம்புது — ஆனா காதலர்கள், திருமணம் செய்துகொண்டு, பகையை இலட்சியம் செய்யாமலிருக்கிறார்கள்.

பிர:— இவ்வளவுதானா, கதை—கதை முடிஞ்சுடுதா!

மு:— இந்தக் கதையிலே இருக்கிற விசேஷமே இதுதான் — கதை முடிஞ்சு போச்சுன்னு ஜனங்க நினைப்பாங்க— ஆன முடியாது—விறுவிறுப்பான பாகம், பின்னாலே மளமளன்னு வரும்...

பிர:— டான்சு, எப்படி...?

டை:— பாரிசுக்குப் போகிறானே ஹீரோ... அங்கே ஒரே டான்ஸ் மயம்தானே—

பிர:— சரிங்க...ஊருக்குப் போனதும் ‘செக்’ அனுப்பறேன் —ஜோலி இருக்கு, வரட்டுமுங்களா...

(விடைபெற்றுக்கொண்டு போகிறார்)

மு:— (கதாசிரியரிடம்) ஏன்யா தாழ்ந்த ஜாதிப் பையன், உயர்ந்து ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ற கதையை, ஊர்லே ரசிப்பாங்களா —இல்லேன்னா, இது அடாதுடி கதைன்னு வெறுப்பாப் பேசுவாங்களா...

டை:— அப்படி நினைக்காதீங்க... கதை ரொம்பப் பிடிக்கும்...

அரு:— சமூக நீதிக் கதை... சகலரும் பாராட்டி எழுதுவா...

மு:— பாராட்டுவானுங்க—பணம் போட்டிருக்கே.. கொஞ்சமாவா...

டை:— கவலையே வேண்டாம்—‘காதல் ஜோதி’ படம் தங்கச் சுரங்கம். சந்தேகமே வேண்டாம்.

(முதலாளி போகிறார்)

கதா:— சார்! காதல் ஜோதின்னு போடுவதைவிட, ஜாதியை விரட்டிய ஜோதின்னு பேர் போட்டா ரொம்ப அழகா இருக்கும்...

டை:— படம் முடியட்டும். பேருக்கு என்ன, இப்ப... அருள் சார்! ஊருக்குப் போகவேணும்னு...

அரு:— ஆமாம் சார்! டென், டேஸ் ஆகும். போனா...

டை:— டேய், சோ. னா. கார் ரெடியா பாரு...

அரு:— வர்ரேன், சார்...

டை:— போங்க...சார்...!

கதா:— நான்.....

டை:— கதைச் சுருக்கம் ஒன்று தயார் செய்யுங்க சார்— எவனாவது படம் வாங்க வந்தா, கதைச் சுருக்கமாவது கொடுத்தாத்தானே. தைரியமா, விலை கொடுப்பான்—

கதா:— நான், என்ன சார், செய்ய! கதையைத்தான், ஒவ்வொரு நாளும், மாத்தச் சொல்றீங்களே—முடிவு என்னன்னு தெரியாம, கதைச் சுருக்கம் தயார் செய்ய முடியல்லே...

(டைரக்டர் போகிறார்)

காட்சி—11

இடம்:— சம்பந்தம் வீடு.

இருப்போர்:— சம்பந்தம், தங்கவேல் (பிறகு) கிழவர்.
(தங்கவேல், உடையைச் சரிப்படுத்திக்கொண்டு புறப்படுகிறான். சம்பந்தம் அவனைப் பெருமை ததும்பும் கண்களால் பார்த்த படி)

ச:— தங்கவேலு! அந்த உடையைப் போட்டதும், ஜோராத்தான் இருக்கு... ஆமா, கடுதாசி போட்டாயே, பதில் வந்துடுத்தா...

த:— (புன்சிரிப்புடன்) ஓ...

ச:— என்னவாம்.

த:— என்னாப்பா...?

ச:— என்ன, எழுதி இருக்கு, கொழந்தே.

த:— யாரு? ஓ! சுகுணாவா! ஜாதிக்காரனுங்க மிரட்டுகிறனுங்களாம்—

ச:— ஐய்யோ! பிறகு...

த:— மிரட்டினா என்ன! சுகுணா எல்லோருக்கும் சரியான சூடு கொடுத்ததாம்!

(கிழவர் வருகிறார்)

த:— வாங்க, தாத்தா?

கி:— இதிலே ஓண்ணும் குறைச்சலில்லே! சொல்ற பேச்சேக் கேட்கிறதில்லை. உபசாரம் மாத்திரம் ஒழுங்காப் பேசி விடறே...

த:— ஏன், தாத்தா, அந்த சோகை மூஞ்சிச் சொக்கியைக் கலியாணம் செய்து கொள்ளமாட்டேன்னு சொல்கிறனே, அந்தக் கோபம்தானே உனக்கு...

(சம்பந்தம் சிரிக்கிறான்)

கி:— சிரிடா, சிரி! மகன் இவ்வளவு சாமர்த்தியமாப் பேசறானேன்னு சிரிக்கறயோ... சொக்கிக்கு என்னடா சொட்டு சொல்ல முடியும்... சோகையாமே. இல்லே, சோகை! பத்து இருபது பேரு வந்துட்டாலும் மளமளன்னு சமையல் செய்து போடுவா— களத்துமேட்டு வேலையானாலும் சரி, உழவுகால வேலையானாலும் சரி எவ்வளவு சுறுசுறுப்பு — எவ்வளவு சாமர்த்தியம் —இரண்டு பசுவை வளர்த்து, பால் வித்து, பத்து பவுன் சேர்த்திருக்காடா, அந்தச் சின்னப் பொண்ணு, குடும்பத்துக்கு அப்படி ஒருத்தி குதிரவேணுமே—கொண்டைக்குப் பூவேணும், கொலுசுக்கு பொன்னு வேணும், கோணை வகுடு வேணும், மகமல்லு சேலை வேணும்னு கேக்கற குட்டியா, குடும்பத்துக்கு ஏத்தவ?

த:— (கேலியாக) சேச்சே! உழவு மாடு மாதிரி உழைக்க வேணும், தவசுபிள்ளை மாதிரி சமைக்க வேணும், ஐஞ்சாறு குழந்தையாவது பெறவேணும்—அப்படில்ல இருக்கவேணும்—பெண்ணு

(சிரித்துக் கொண்டே போகிறான். சம்பந்தமும் சிரிக்கிறான். கிழவன் அவனைப் பார்த்து)

கி:— என்னடா சம்பந்தம—ஒரே சிரிப்பும் கூத்தும்—வழிக்குக் கொண்டுவந்து விட்டாயா, தங்கவேலுவை.

ச:— இல்லே! நான் அவன் வழிக்குப் போறதாகத் தீர்மானித்துவிட்டேன்.

கி:— என்னாது...என்ன சொல்றே?

ச:— தங்கவேலு சொல்றதுதான் நியாயம்னு எனக்குத் தோணுது. அவனோட இஷ்டப்படியே கலியாணம் நடத்தறதுதான் சரின்னு முடிவு செய்து விட்டேன்.

கி:— என்னடா வம்பு இது? நல்ல வார்த்தை பேசி, நியாயா நியாயத்தை எடுத்துச் சொல்லி, தங்கவேலு மனசை மாத்தச் சொன்னா...

ச:— நீ சொன்னபடியே பேசினேன் — நியாய நியாயத்தை அவனும் சொன்னான், நானும் சொன்னேன். கடைசியிலே, அவன் என் மனசைத்தான் மாத்திட்டான்—என்னாலே மறுக்க முடியலையே, அவன் சொல்ற காரணங்களை.

கி:— என்னடாப்பா, அப்படிப்பட்ட காரணத்தை எல்லாம் கொட்டிக் காட்டிவிட்டான்—ஒரு பொண்ணைக் காண்றது. உடனே காதல் பொறந்து விடுதுன்னானே, சரியா? அது...நியாயமா?...

ச:— ஏன் இல்லை! அவன்தான் கேக்கறானே — முருகனுக்கு வள்ளியைக் கண்டதும் காதல் பொறந்ததே தவறா அதுன்னு கேக்கறான்.

கி:— அம்மாந்தூரம் பேசறானா..சரி சரி...

ச:— நானும் ரொம்ப ரொம்ப யோசனை செய்துதா பார்த்தேன்...இவன் சொல்றது நியாரம்னுதான் படுது... ஜாதி, பேதம் இதுகளெல்லாம் சும்மாத்தான்—பிரயோ ஜனமில்லே...

கி:— ஜாதியைவிட்டு ஜாதியிலே பொண்ணு கொள்றதும் கொடுக்கறதும், சரியா காரியந்தானா! இல்லே தெரியாமக் கேட்கறதாகவே வைச்சுக்கோ, சரியான காரியற்தானா? பெரியவங்க, செய்கிற காரியந்தானா?

ச:— பெரிய பெரியவங்களெல்லாம் செய்து இருக்காங்களே... சொல்றானே தங்கவேலு. மகாத்மா மவனுக்கு ராஜ கோபாலாச்சாரி பொண்ணைக் கட்டிக்கொடுத்தாங்க—அதை உலகம் புகழுதா இகழுதான்னு கேட்கிறான்—என்ன பதில் சொல்றது? நீதான் சொல்லேன்— அவங்களெல்லாம் விஷயம் தெரியாதவங்களா, விவரம் அறியாதவங்களா? காலம் மாறுது—நாமும் மாற வேண்டியதுதானே—மாறிக்கொண்டேதானே இருக்கிறோம்.

கி:— (கோபமாக) நீ மாறுவேடா, நீ மாறுவே—புள்ளெயை அடக்க முடியாதவன் நீ, —நீ மாறுவே — எனக்கென்ன! நான் ஏன் மாறவேணும்.

ச:— (சிரித்தபடி) தாத்தாக் கூடத்தான் இந்தக் காலத்துக்குத் தகுந்தபடியா மாறிவிட்டாருன்னு சொல்றான் தங்கவேலு.

கி:— நான் மாறி விட்டனாமா...எதிலேயாம்...

ச:— மூக்குக்கண்ணாடி போட்டுகிட்டு இருக்காரே தாத்தா. போடலாமா... அவங்க தாத்தா காலத்திலே மூக்குக் கண்ணாடி இருந்துதா, அப்ப இல்லாத வழக்கம் இப்ப எதுக்குன்னு தாத்தா யோசிச்சாரா — மூக்குக்கண்ணாடி போட்டா சௌகரியம்னு தோணின உடனே, போட்டுக் கொள்ளலையான்னு கேட்கறான்...

கி:— இதுவொரு காரணம் கண்டு பிடிச்சுட்டானா...?

ச:— சரியாத்தானே இருக்கு அவன் சொல்றது... ராமர் காலத்திலே இல்லாத ரயில் ஓடுது, அரிச்சந்திரன் காலத்திலே இல்லாத ஆகாசவிமானம் பறக்குது, தருமராஜா காலத்திலே இல்லாத தபாலாபீசு இருக்குது, ரேடியோ பாடுது, சினிமா நடக்குது... நாம்பகூட அண்ணக்கி ஒருநாள் சினிமா பார்க்கலே

கி:— சினிமா ஒரு பெரிய அதிசயம்தாண்டா சம்பந்தா— ஒண்ணும் இல்லே அங்கே — வெள்ளைத் துணியைக் கட்டி வைச்சிருக்கான் — விளக்கை அணைச்சதும், என்ன அருமையான ஆட்டம் தெரியுது, பாட்டுப் பாடுது, அதிசயம்னா அதிசயம்தான்...

ச:— அந்த அதிசயத்தை எல்லாம் கண்டுபிடித்த நாட்டிலே இந்த ஜாதி கிடையாதாம், தெரியுதா?

கி:— ஜாதியே கிடையாதாமா?

ச:— உஹும் — கிடையவே கிடையாது. ஜாதி தேவைன்னா அவங்க ஏற்படுத்திக்கமாட்டாங்களா.. எவ்வளவு சூட்சமபுத்தி இருந்ததாலே, இவ்வளவு அதிசயத்தை எல்லாம் செய்து காட்டறானுங்க — அவனுங்களுக்குத் தெரியாதா, ஜாதி இருக்க வேணுமா, வேணாமான்னு...

கி:— புத்தி பலம் இருந்துதான் உலகத்தையே ஆள்கிறானுங்க...

ச:— தங்கவேலு, உலகத்தைப்பத்தி எல்லாம் படிச்சிருக்கிறான், அவனைவிட அதிகமாப் படிச்சவங்க சொல்றதைக் கேட்டு இருக்கிறான். அதனாலே புரியது, தெரியுது.

கி:— ஆமாம் — நாம் என்னத்தைக் கண்டோம் — வயலோரம் கொளத்தாங்கரை, ஆலமரத்தடி இதுதானே நாம்ப பழகற இடம் — அப்ப, உனக்கு நியாயம்னு தோணுது...

ச:— ஆமாம்...

கி:— சரி... பொண்ணு இலட்சணமா இருக்காம?

ச:— போட்டோவைக் காட்டினான்—பூங்கொடிபோல இருக்கு கொழந்தே...

கி:— சரி...இனி ஏன் வீணா பேசிகிட்டு காலத்தை ஓட்ட வேணும் — முடிச்சுப்போடுவோம் — ஐயமாருக கொக்கரிப்பாங்க — நாம்ப கொஞ்சம் கட்டா இருக்கவேணும் — எதுக்கும் நான் அழகூருக்குப் போயிட்டு வந்துவிடறேன்...

ச:— அழகூரிலேதான் கலியாணம்!

கி:— ரொம்ப நல்லதாப் போச்சு— அழகூர்லே இருந்து மருமகன் கடிதாசி போட்டிருக்கான், அதனாலேதான் பொறப்படப் போறேன்—

ச:— என்னா விசேஷம்—?

கி:— அதைச் சொன்னா தங்கவேலு கேலி செய்வான் — மருமகனுக்குப் பல்நோயாம், அதனாலே பல்லை எடுத்துவிட்டு புதுப்பல்லைக் கட்டிக்கொள்ளப் போறானாம்—கூடமாட இருக்க நான் போறேன்—

(புறப்படுகிறார்)

காட்சி—12

இடம்:— அழகூர், சுகுணா வீடு.

இருப்போர்:— சுகுணா, அருள்.
(லேடி டாக்டர் சுகுணா வீடு. மேஜை மீது சிப்பாய் படம் இருக்கிறது. ரேடியோ பாடுகிறது. சுகுணா, கட்டிலின் மீது படுத்துக் கொண்டு பத்திரிகை படிக்கிறாள். அருள்குமார் வருகிறான்)

அ:— சோம்பேறி! எங்கே ஒரு வாரமா, ரூம் பக்கமே வரல்லே...

சு:— ஆஸ்பிடல்லே, ரொம்ப வேலைண்ணா.

(மேஜை மீதிருந்த படத்தைப் பார்த்துவிட்டு)

அ:— இது யார், இந்த மேஜர்...

சு:— என் பிரண்ட்! சோல்ஜர்தான் — நம்ம கிராமம்.

(படத்தை எடுத்துப் பார்த்தபடி)

அ:— நம்ம ஊர் பையனா! அங்கே ஏது சுகுணா இப்படி ஆசாமி — பட்டிக்காட்டுப் பயல்கள்தானே — இருக்கா...

சு:— சம்பந்தன்னு, ஒருத்தர் — தெரியுமோ...

அ:— எந்தச் சம்பந்தம்!...ஏகாதசி உத்சவம் நடத்துவானே ஏகத்தடபுடலா...

சு:— அவரேதான் — அவரோட மகன், இவர்...

அ;— இவர்...ரு..என்னடிம்மா அவ்வளவு மரியாதை அந்தப் பயலுக்கு...

கூ:— அண்ணா! பயப்படாதே. கேள் விஷயத்தை—நான் இவரை தான் மேரேஜ் செய்துகொள்ளப் போறேன்...

அ:— இவனை — மேரேஜ் — என்னடி உளறிண்டிருக்கே— இவன் என்ன ஜாதி, தெரியுமோ...

சு:— பிற்பாடுதான் தெரிஞ்சுது — நான் அவரை லவ் பண்ணி, மேரேஜ் செய்துகொள்றதா பிராமிஸ் செய்தான பிறகுதான், அவரோடே ஜாதி தெரிஞ்சுது...

அ:— சுகுணா! விளையாடாதே — ஊரிலே நமக்கு இருக்கிற கௌரவத்தைக் கெடுக்கற மாதிரியா அசட்டுத்தனமான காரியம் செய்திண்டிராதே — லவ் பண்றாளாம் லவ். யாரோடடி லவ் — ஜட்ஜி ஆத்லே தெரிஞ்சா காரித்துப்புவா..

சு:— ஏனாம் விடோ மேரேஜ் அவசியம் ஏற்பட்டாகணும்னு ஜட்ஜி போன வாரங்கூட ரிபப்ளிக்லே எழுதியிருக்கார்.

அ:— எழுதினா — இப்படி ஒரு பராரிப்பயிலை மேரேஜ் செய்து கொள்ளணும்னு சொன்னாரா! விடோ மேரேஜ் சரி, செய்துக்கோ — யாரை? நம்ம கிராமத்துப் பண்ணைக்காரன் மகன்தானா கிடைச்சான்—அடி அசடு, அசடு ! லேடி டாக்டரா இருக்கறே! சொத்துக்கு என்ன குறை. நம்ம உறவிலே எவ்வளவு பேர் இருக்கா, டீசன்ட் பெலோஸ்... போய் லவ் பண்றாளாம் இந்தப் புரூட்டை

சு:— அவரும் ஆயிரம் தடவை தடுத்தார்—நான்தான் அவருக்குத் தைரியம் சொன்னேன்; ஜாதி பேதம், இதெல்லாம் நான்சென்ஸ்; காதல் ஜோதி முன்பு இதெல்லாம் தலை காட்டாது என்று சொன்னேன்.

அ:— இடியட்.

சு:— நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து எடுத்துண்ட போட்டோ கூட அடுத்த ரிபப்ளிக்லே வாறது; சீர்திருத்தத் தம்பதிகன்னு தலைப்பு.

அ:— சுகுணா! ஆத்திரத்தைக் கிளப்பாதே. இதை நான் அனுமதிக்க முடியாது. அப்பா காதிலே விழுந்தா, தூக்கு போட்டுக்கொண்டு சாவார்.

சு:— என் முடிவை மாற்ற முடியாது.

அ:— உளறாதே, அசடே! ஒரு நாலு நாளைக்கு மனதிலே குடையும்; நம்மகுலம், கோத்திரம், அந்தஸ்து இவைகளை நாசமாக்கிக் கொள்றதா, காதல் பைத்தியத்தாலே? சுகுணா நீ சமத்துன்னு எண்ணிண்டிருந்தேன், இப்படி ஒரு பைத்யக்காரச் சேஷ்டையிலே ஈடுபடுவாளா?

சு:— என் மனதிலேயும் இதேபோலச் சந்தேகமும் சஞ்சலமும் தான் ஆரம்பத்திலே இருந்தது அண்ணா. ஊர் பழிக்குமே, ஜாதி ஆச்சாரம் பாழாகிறதுன்னு பெரியவா ஏசுவாளேன்னுதான், நானும் முதலிலே, எண்ணிண்டிருந்தேன். தெளிவு, தைரியம், மனதிடம் எல்லாம் நேக்கு உன்னாலே தான் ஏற்பட்டுது.

அ:— என்னாலே ஏற்பட்டதா? என்னடி அசடே! பிதற்றல் இது.

சு:— நீ ‘ஆக்ட்’ செய்கிறயே ‘காதல் ஜோதி’ அந்தக் கதையைப் படிச்சேன், கலாவாணி பத்திரிகையிலே. பிறகுதான் எனக்கு மனதிடம் ஏற்பட்டது. காதல் ஜோதியை ஜாதிப் புயல் அணைக்காது என்கிற தைரியம் ஏற்பட்டது.

அ:— (கோபமாக) என்ன சுருணா இது; சினிமாக் கதை அது. எவனெவனோ அவனவனுக்குத் தெரிஞ்சதை எழுதறான். ஏதோ ஜனங்களுக்குப் பிடித்த மாதிரியான கதையைப் படமாக்கினாப் பணம் நிறைய வரும்னு முதலாளிகள் அப்படிப்பட்ட படமாப் பிடிக்கிற. நாங்களும் பணம் கிடைக்கும் நல்ல பேரும் வரும்னு ‘ஆக்ட்’ செய்கிறோம், அதனாலே, நீ நெஜமாவே அதுபோலச் செய்யறதா. வயத்துப் பிழைப்புக்காக ஆயிரத்தெட்டு போறதுதான். பலமாதிரி வேஷம்போட்டுக் கொள்றதுதான். அதனாலே, சினிமாக் கதையிலே வர்றமாதிரியா நடக்கிறதா? நான் என்னதான் சினிமாவிலே நடித்தாலும், எவ்வளவு சீர்திருத்தக் கதையிலே, புரட்சிக் கதையிலே நடித்தாலும், நான் யார்; குலம் என்ன; கோத்திரம் என்ன; அந்தஸ்து என்ன; என்கிறதை மறந்துவிடுவனோ. உன் போல அசடுகள்ன்னா. அந்தக் கதையிலே இப்படிச் சொல்லியிருக்கு, இந்தப் படத்திலே இப்படி சொல்லியிருக்குன்னு பேசிண்டு கிடக்கும். பொழுதுபோக்குக்குப் படம் பார்க்கச் சொன்னாளா உன்னை, இல்லே படத்தைப் பார்த்து, அதன்படி நடக்கச் சொன்னாளா!

சு:— கோபமும் வருது, சிரிப்பும் வருதுண்ணா உன் பேச்சைக் கேட்டு. உங்க ‘காதல் ஜோதி’ விளம்பரம் என்ன சொல்லுது தெரியுமா? ‘புது உலகுக்குப் புது அறிவு தரும் புதுமையான படம்.’

அ:— ஆமாம்! புது விளம்பரம் பத்து இலட்ச ரூபாய் செலவில் தயாராகிறதுன்னுகூட விளம்பரம் இருக்கு. இரண்டு இலட்ச ரூபா கூடச் சரியாச் செலவாகவில்லை.

சு:— படம் ஊரை ஏமாத்தத்தான் எடுக்கிறான்னு சொல்லுங்க...

அ:— சொல்ல வேணுமா? படம் எடுக்கறது ஒரு தொழில். கற்பூரக் கடைக்காரன் கற்பூரம் விற்றானானா, அவனோட அக்கறை எல்லாம் கற்பூரம் விற்பனையாகணும் இலாபத்தோ என்கிறதே தவிர, கற்பூரத்தை கணபதிக்குக் கொளுத்துறாங்களா, காளிக்கா, கண்ணனுக்கா. முருகனுக்கா, மூக்காயிக்கா என்பதுபற்றி அவனுக்கு என்ன அக்கறை. ஏன் ஏற்படவேணும், அந்த அனாவசியமான அக்கறை? படம் பிடிக்கறது ஒரு தொழில்; பள்ளிக்கூடமா அது? இல்லயான பார்லிமெண்டா; புது சட்டப் போடற இடமா? பைத்யம், பைத்யம். நான் ‘ஆக்ட்’ செய்ற ‘காதல் ஜோதி’ கதையைப் படிச்சாளாம், தைரியம் வந்ததாம், ஜாதியைக் கெடுத்துக் கொள்ள.

சு:— உங்க தொழிலின் இரகசியமும் தெரியுது; உன் போக்கும் நன்னா புரியறது. ஆனா வேற ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளல்லே நீங்களெல்லாம். சோப் வியாபாரம் செய்கிறானே அவன், உடல் அழுக்காக்கூட இருக்கும். ஆனா, அவன் விற்கிற சோப்பை வாங்கி உபயோகப் படுத்துகிறாங்களே பல பேர், அவர்களோட அழுக்கை எல்லாம் சோப் போக்கிவிடுது. அதுபோலத்தான், இலாபத்துக்காக ஆசைப்பட்டு படம் எடுக்கிறீங்க. கொள்கையிலே துளிகூட பற்றுக் கிடையாது. ஆனாலும், படங்களைப் பார்க்கிற ஜனங்களோட மனதிலே புதுமையான எண்ணம், புரட்சியான எண்ணம், பொன்னான எண்ணம் பூத்துவிடுது. அழுக்குப் போகுது அண்ணா! சோப் வியாபாரிக்கு அல்ல; சோப் உபயோகிக்கிறவங்களுக்கு.

அ:— சுகுணா வாயாடினது போதும். விபரீதமான காரியம் எதுவும் செய்துவிடாதே. இப்ப நீ, என்னிடம் பேசினதை லேடிஸ் கிளப்பிலே பேசு, கை தட்டுவா; ரிபப்ளிக்லே எழுது, பாராட்டுவா. ஆனா, அசட்டுத்தனமாக இவனைக். கல்யாணம் செய்து கொள்ளாதே. ஊர் பூரா உன்னோட பைத்தியக்காரத்தனத்தைக் கண்டிக்கும்; சபிக்கும்.

சு:— ஊர்லே, இரண்டு கட்சி இருக்கு அண்ணா. இல்லே, இல்லே மூணு இருக்கு. ஒண்ணு எங்க கட்சி; அதாவது சீர்திருத்தக் கட்சி. இன்னொண்ணு வைதீகக் கடசி, உங்க கட்சி; மூணாவது—இரண்டு கட்சியையும் ஏமாத்ற சுயநலக் கும்பல்.

அ:— வீண் பேச்சு வேண்டாம் சுகுணா—இந்தக் கல்யாணத்தைத் தடுத்தே தீருவேன்.

சு:— மிரட்டாதே அண்ணா. சுகுணாவுக்கு வயது ஐஞ்சல்ல, ஆறல்ல.

அ:— வயது கழுதைக்கு ஆற மாதிரி ஆய்த்தான் இருக்கு.

சு:— நாய்போல வள் வள்னு பேசாதே அண்ணா.

அ:— கொரங்கே! உன் வாலை ஒட்ட நறுக்கிடுவேன் தெரியுமா. பார் உன்னை என்ன கதியாக்கறேன்னு. கிளிப்புள்ளைக்குச் சொல்றதுபோல், நாலு நாழியா நான் சொல்லிண்டிருக்கேன். எதிர்த்துப் பேசறே என்னோடு.

சு:— இனிப் பேசுறதா உத்தேசமில்லே; போகலாம் அண்ணா. போய், கத்தி தயார் செய், வாலை நறுக்க. ‘காதல்ஜோதி’ படத்திலே கதாநாயகன் பகுத்தறிவு வீரன், படத்திலே—பழய பஞ்சாங்கம், இங்கே.

(கோபமாக அருள் வெளியே செல்கிறான். உள்ளே ஒரு ஆள் வருகிறான்.)

ஆள்:— (ஒரு டிக்கட் கொடுத்து) சபா, கச்சேரி:

சு:— இருபதாம் தேதிதானே.

ஆள்:— ஆமாம்; இன்னிக்கி இருபது தானே!

சு:— ஆமாம், மறந்து போனேன்.

(ஆள் போகிறான்)

காட்சி—13

இடம்:— சந்திரசேகரய்யர் வீடு.

இருப்போர்:— சந்திரசேகரய்யர்.

(ஒரு ஆள் கொண்டுவந்து கடிதம் தர, அதை வாங்கிப் படித்துப் பதறுகிறார் சந்திரசேகர ஐயர். ஆளை அனுப்பிவிட்டு; மறுபடியும் படிக்கிறார் கடிதத்தை. மனதுக்குள் யோசிக்கிறார். கடிதத்தை உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு, வருகிறார். வெளியே புறப்படுகிறார்.

(எதிரே வந்த ஒரு ஆளைப் பார்த்து)

ச:— ஏண்டாப்பா! உங்க ஆத்திலே திதி நாளைக்கா?

ஆள்:— இல்லிங்களே இருபத்திநாலு.

ச:— தேதி இன்னக்கி? ஓஹோ! இருபத்திரண்டு தேதிதானே. சரி; சரி போய்வா.

காட்சி—14

இடம்:— வீதி.

இருப்போர்:— சந்திரசேகரர், பொன்னன்.

ச:— (கெஞ்சும் குரலில்) பொன்னா? நேக்கு ஒரு உபகாரம் செய்யணும்.

பொ:— (மரியாதையாக) என்ன, சாமி இது, என்கிட்டே இப்படி கெஞ்சிப் பேசறிங்க. நீங்க இந்தப் பொன்னனை இன்னது செய்டான்னு உத்திரவுபோடலாம். உங்களுக்கு உதவிசெய்யாத சரீரம் எதுக்குங்க. சொல்லுங்க சாமி. என்ன செய்யவேணும், சொல்லுங்க.

சு:— பொன்னா! என் மனசு குளிரப் பேசினே! உன்னோட சகாயத்தைத்தான் நான் எப்பவும் நம்பிண்டிருக்கேன். விஷயம் என்னான்னா— (அக்கம்பக்கம் பார்க்கிறார்)

பொ:— சொல்லுங்க; என்ன விஷயம் என் வீட்டுக்கு விளக்கேத்தி வைச்சவரு சொல்ற பேச்சையா—தட்டி நடப்பேன் சொல்லுங்க.

ச:— ஒண்ணுமில்லே; சம்பந்தம் இருக்கான் பாரு சம்பந்தம்...

பொ:— ஆமாம்; ஒருநாள் அவனுக்குச் சரியானபடி ‘தும்பு’ தட்ட இருந்தேன்.

ச:— அவன். அப்பாவிடா பொன்னா. அவனுக்கு ஒரு மகன் இருக்கான் — பெரிய சிப்பாய் — தங்கவேலுன்னு பேரு—அந்த வால் இருக்கே, அது இப்ப இந்த காக்கி டிரசை மாட்டிண்டுடுத்து - உடனே மண்டைக்கர்வம் பிடிச்சுண்டுடுத்து அதுக்கு...

பொ:— பட்டாளத்திலே சேர்ந்துகிட்டானா...

க:— ஆமாம் — அதனாலே தலைகால் தெரியாமப்படிக்கு ஆட்டம்— பெரியவா என்கிற மட்டு மரியாதை இல்லாதபடிக்குப் பேச்சு...

பொ:— அவ்வளவு திமிர் பிடிச்சிருக்கா பயலுக்கு...

ச:— ஏண்டா பிடிக்காது? ரொட்டியும் வெண்ணையும் ஆடும் கோழியுமா தின்றானேல்லோ, பட்டாளத்திலே... கொழுத்திருக்கிறான் — அவனோட அக்ரமம் இவ்வளவுன்னு சொல்லி முடியாது...அவன் என்னைக் கொலை செய்துடறேன்னு கொக்கரிச்சிண்டிருக்காண்டா பொன்னா!

பொ:— நீங்க ஒரு பைத்யம்! அந்தப் பய அரிவாள்னாலே அலறுவான்— அவன் போயி கொலையாவது, செய்றதாவது—சும்மா மிரட்டி இருக்கான்...

ச:— மிரட்டல் இல்லே பொன்னா! உன்னோடு பிறகு, சில விஷயம் சொல்றேன்— அந்தப் பயலைத் தொலைக்காவிட்டா என் உயிருக்கும் ஆபத்து, என் குடும்பத்துக்கும் நாசம்...

பொ:— நீங்க பொலம்பறைதைப் பார்த்தா, விஷயம் பெரிசின்னு.. தெரியுது சாமி. காரணம் கிடக்கட்டும். சாமி! அந்தப் பய தொலையணும்.... அவ்வளவுதானே...

ச:— ஆமாம்.. நன்னா பூஜை கொடுத்துப் புத்தி வரச் செய்யணும்...

பொ:— இவ்வளவுதானே சாமி! இதுவா பிரமாதம்—ஏஞ்சாமி இந்தப் பொன்னனோட விஷயம் உங்களுக்குத் தெரியாதா...

ச:— தெரியும் — அதனாலேதான், தைரியமா சபதம் செய்துண்டேன் — பயலைத் தொலைத்துவிடறதுன்னு.. பொன்னா!—அவன் சோல்ஜர்!...

பொ:— அடெ, கொம்பு இருக்கா தலையிலே.. கிட, சாமி! பொன்னனும் சோல்ஜர்தான்—இந்த பிர்க்காவுக்கு...

ச:— பொன்னா!—கோவிக்கப்படாது... இது, (சில நோட்டுக்கள் கொடுத்து) உன் சிரமத்துக்கு அல்ல — உன்னோடு யாராவது சிநேகிதா வருவாளோன்னா, அந்தச் செலவுக்கு...

பொ:— ஐய்யய்யே—வேண்டாஞ்சாமி.

ச:— (செல்லக் கோபத்துடன்) மறுக்கப்படாது...இதோ பார்—பிடி இதை. என் வார்த்தையைத் தட்டப் படாது...(அவன் கையில் நோட்டுக்களைத் திணித்து) இந்த ஒரு தடவை மட்டும்; வாங்கிண்டுதானாகணும்...

பொ:— பிடிவாதம் செய்றிங்க...

ச:— போடா பைத்தியக்காரா! முன்னேதான் ஒண்டிக்கட்டை எதுவும் வேணாம் — இப்ப; பொன்னி புருஷனாயிட்டே நாலு காசு இருக்கணும்டா கையிலே —போ ஜாக்ரதையா..

பொ:— வர்ரேன் சாமி!...

(இளித்துக்கொண்டே போகிறான்)

காட்சி—15

இடம்:— அழகூர், ஸ்டுடியோ முதலாளி, தனி அறை.

இருப்போர்:— முதலாளி, அருள்குமார்.

மு:— அருள்குமார் சார்! ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் — கேட்டதுலே இருந்து திகிலாவே இருக்குது...

அ:— (திகைப்புடன்) என்ன கேள்விப்பட்டிங்க...

மு:— உன் மனசோட இருக்கட்டும்—சர்க்கார்லே ரொம்பக் கண்டிப்பா இருக்கப் போறாங்களாம் இனிமேல் பட—கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கிக் காட்டறாங்க; அதனாலே ஜனங்க கெட்டே போறாங்க... இனி கண்டிப்பாக இருக்கவேணும்...

அ:— (புன் சிரிப்பாக) அதுவா? உங்களுக்கு அது இப்பத்தான் தெரியுமா; எனக்கு முன்னமேயே தெரியுமே. நான் சொன்னா நீங்க எங்கே கேட்கப்போறீங்கன்னு நான் இதுவரை சொல்லாமலிருந்தேன் — சர்க்கார்லே கண்டிப்பாத்தான் இருக்கப்போறான்னு சர். சாம்பசிவ ஐயரோட் மச்சினன். என்னிடம் சொன்னார்... மதம், ஜாதி, பழய ஆச்சாரம், அனுஷ்டானம் இவைகளெல்லாம் பாழாகிவிடுகிறபடியான கதைகளெல்லாம் படமா எடுத்துக் காட்டுவதாலே, ஜனங்களோட ஒழுக்கமே கெட்டுப் போறதுன்னு, சர்க்கார்லே பேசிக்கிறாளாம். யோசிச்சுப் பார்த்தா சர்க்கார் சொல்றது, சரிதானே சார்!

மு:— (முகத்தைச் சுளித்தபடி) என்ன சார், சரி! குடிக்க வேணும், கொலை செய்ய வேணும், கற்பைக் கெடுக்க வேணும், களவாடவேணும், வரி கட்டக்கூடாது. ஜாதித்திமிர் பிடித்தவங்களை சாகடிக்க வேணும், அப்படி இப்படின்னா படம் எடுக்கறோம். சர்க்கார் அப்படிப் படம் எடுத்தா, தடுக்கவேணும். நியாயம். உலகத்திலேயாகட்டும், நம்ம தேசத்திலே ஆகட்டும், மேதாவிங்க, இந்தக் காலத்துக்கு எது எது சரின்னு சொல்றாங்களோ, அதை எல்லாம் விளக்கித்தானே படம் எடுக்கறோம்.

அ: (அசடு தட்ட) நீங்க சொல்றது, சரி! ஆனா நல்ல புராணக் கதையா, படம் எடுத்தா; ஜனங்களுக்கு, நல்லது செய்யும்னு சொல்றா...

மு:— இது என்னய்யா புத்தம் புது யோசனையா! ஒண்ணு பாக்கியில்லாமே எல்லாப் புராணமும் எடுத்தாச்சே—பக்த துருவன் முதற்கொண்டு பக்த கோராகும்பர் வரையிலே எடுத்தாச்சி— ராமாயணத்தை, மூலை முடுக்கு விடாமே படம் எடுத்தாச்சி—பாரதத்தையும் விடலே, பாகவதக் கதை எல்லாம் எடுத்தாச்சி, திருநீலகண்டரு, திருமழிசை ஆழ்வாரு, ஆண்டாள் சரித்திரம், ஐயனாரப்பன் கதை, எது எடுக்காம விட்டிருக்கு. வல்லாள மகாராஜா வந்தாச்சி. காரைக்காலம்மையாரைக் காட்டியாச்சி கண்ணப்ப நாயனார் படம் எடுத்திருக்கிறோம், சிறுத்தொண்டரு, சிவகவி, வாமனாவதாரம், பிரகலாதா, அகல்யா, அனுசூயா, தாராசசாங்கம் எல்லாம் காட்டியாச்சி, எந்தப் புராணத்தைக் காட்டலே—எந்தப் புண்ய கதை காட்டலே. பட்டனத்தார் படம் எடுக்கலியா, தாயுமானவரைக் காட்டலையா, சொல்லு, அருள்குமார், என்ன புண்ய கதையை வேண்டாம்னு சினிமாக்காரரு தள்ளிவிட்டாங்க. மறுபடியும், அதையே திருப்பித் திருப்பி படமாக்கறதா...

அ:— (முகம் சுளித்தபடி) அது முடியுமா..?

மு:— முடியுதா, இல்லையா, என்கிறது இல்லைய்யா...புராணம் தவிர வேறே தேவை இல்லைன்னா, ஏற்கனவே எல்லாப் புராணமும் இருக்கறதாலே, படம் பிடிக்கிற தொழிலையே நிறுத்திவிட்டு, ஏற்கனவே உள்ள புராணப் படங்களையே திரும்பத் திரும்ப சினிமாவிலே காட்டி கிட்டே இருந்துவிடலாமே—பணம் மிச்சம்—வேலை மிச்சம்—சௌகரியமாப் போயிடுமே... யோசனை சொல்ல வருகிறாங்க பாரு...யோசனை புராணப் படம் எடுக்கணுமாம்—எடுத்து, ஊரூருக்கும் திருவிழா நடக்குதே, அப்ப போட்டுக் காட்டிகிட்டு, உண்டியைக் குலுக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

அ:— உங்களோட, வாதாட முடியுமா... சர்க்காராலேகூட முடியாது..

மு:— இவ்வளவு புராணப் படம் காட்டியிருக்கிறமே, அவ்வளவையும் பார்த்த ஜனங்க, எவ்வளவு ஒழுக்கம், சத்யம், நீதி, நேர்மை, நாணயம் தெரிஞ்சிகொண்டிருக்கணும்—எங்கே போச்சு அதெல்லாம்—எப்படிப் போயிடும்—புது சினிமாப் படங்க வந்தா ஜனங்க கெட்டுப் போறாங்கன்னு தெரிஞ்சா, மறுவாரம், மார்க்கண்டன் படம் காட்டு, கைவசம் இருக்குதே படம். மகாபலி படம் போடு, இருக்கே ரெடியா, உடனே ஜனங்க திருந்திப் போறாங்க, நியாயம் பேசறாங்க நியாயம்! என்னமோ ஒரு தினுசான வயத்தெரிச்சல்!

அ:— சரி சார்! என்னைப் பொறுத்த வரையிலே ஒரு தகறாரும் நான் செய்யலே — நீங்க எந்த மாதிரி படம் எடுத்தாலும் நான் ஆக்ட் செய்யச் சித்தமா இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் — சர்க்கார், ரொம்பக் கண்டிப்பாத்தான் இருக்கப்போறா, சர்க்கார்லே இது விஷயமா ஒரு தீர்மானத்துக்கு வந்தாச்சி...

மு:— அது சரி... ஜனங்க இந்த சர்க்கார் விஷயமாக ஒரு தீர்மானத்துக்கு வராமலா போவாங்க.. அது கிடக்கட்டும், நம்ம ‘காதல் ஜோதி’ விஷயமா என்ன செய்யலாம், உன் யோசனை என்ன? கலப்பு மணம் நடைபெறுவதாகக் கதை மங்களகரமான முடிவு—இருக்கலாமா...

அ:— (குறும்பாக) நீங்கதான் தைரியமா இருக்கறேளே சர்க்கார் என்ன சொன்னா என்ன? என்ன செய்துடுவா?

மு:— சொல்லய்யா! சர்க்காரைப் பத்தியா பயப்பட வேண்டி இருக்கு... கொள்ளைப் பணமில்ல போட்டிருக்கு படத்திலே... அந்தப் பயம்தான்... வேறே என்ன...அவங்க சொல்றதிலே, அறிவு ததும்புதுன்னா?

அ:— என்னைக் கேட்டா. கலப்பு மணம் கூடாதுன்னு தான் சொல்வேன்.

மு:— படம், சுபமா முடியாதே!

அ:— வழி இருக்கு... நான் ஒரு மறுமலர்ச்சி எழுத்தாளாரோடு பேசிண்டிருந்தேன் — அவர் கலப்பு மணத்தை காட்டுவதிலே, நிச்சயமா ஜாதி ஆச்சாரம் கெட்டுத்தான் போகும்னு அபிப்பிராயம் தெரிவிச்சார்.

மு:— அவரோட அபிப்பிராயம் இருக்கட்டும்; படம் சுபமா முடியணுமே...

அ:— அவர் சொல்றார், கதையிலே கடைசி கட்டத்திலே, கலப்பு மணம் நடைபெறக்கூடாது — ஜாதியால் நாம் வேறு வேறு — காதல் நம்மை ஒன்று சேர்க்கிறது — என்றாலும், பாரததேசத்தின் பண்பாட்டைக் கெடுக்கும் பாவிகளாகலாமா நாம்! ஆகவே காதலீ! இந்த ஜன்மத்திலே நாம் சதிபதிகளாக முடியாது. பகவானுடைய அனுக்ரகத்தால் நாம் அடுத்த ஜென்மத்திலாகிலும் ஒரே ஜாதியில் பிறந்து, சதிபதிகளாகி, இன்பம் அனுபவிப்போம்—என்று, கதாநாயகன் கூற வேண்டுமாம் — உடனே, கதாநாயகி காதாநாயகனுடைய காலில் விழுந்து, பிராணபதே! அடுத்த ஜென்மம் என்ன தங்களைப் பதியாக அடைவதற்கு — ஏழு ஜென்மங்கள் வேண்டுமானலும் நான் காத்திருப்பேன். ஆனால், தங்களுக்கு சேவை செய்யும் பாக்யம் பெறமுடியாமல், உயிர் சுமந்துகொண்டு மட்டும் இருக்கமாட்டேன் என்று கூறி, அவன் காலடியிலேயே விழுந்து இறந்துவிட வேண்டும் — அவள் பிணமானது கண்டு, அவனும் பிராணத்தியாகம் செய்து கொள்ள வேண்டும்...

மு:— இரண்டு பிணத்தையும் காட்டி, படத்தை முடிக்கறதா...

அ:— அதுதான் இல்லை துக்கத்தோடு முடிக்கலாமா—உடனே, தேவலோக சீன் — கற்பக விருட்சத்திலே ஒரு தங்க ஊஞ்சல்—அதிலே, இந்தக் காதலர்கள்— ரம்பை , பன்னீர் தெளிக்கிறாள்—மேனகை ஆடுகிறாள். ஸ்ரீமந் நாராயணமூர்த்தி ஆசீர்வதிக்கிறார் — படம் இதோடு முடியும்...

மு:— மறுமலர்ச்சி எழுத்தாளர் சொன்ன யோசனையா இது?

அ:— ஆமாம் — உங்களுக்குப் பிடிக்காது...

ழு:— உனக்குப் பிடிக்குதா...

அ:— பேஷா!

மு:— சரிதான்! நான் ஒரு முடிவுக்கு வருகிற வரைக்கும் படம் எடுக்க வேணாம் — ஒரு மாதம் லீவு — போகலாம்.

(அருள், சோகமாக வெளியே செல்கிறான்.)

காட்சி—16

இடம்:— இருட்டான பாதை.

இருப்போர்:— பொன்னன், சின்னான்.
(பாதையிலே தங்கவேல் போய்க்கொண்டிருக்கும்போது, எதிர்ப்புறம் இருந்து சின்னான் வருகிறான். ஏதோ தூவுகிறான், தங்கவேல் முகத்தில்...அவன் அலற பின்புறம் இருந்து வந்த பொன்னன், அவனைச் சரியாகத் தாக்குகிறான். கத்தியாலும் குத்துகிறான். தங்கவேல் துடி துடித்துக் கதறுகிறான். பொன்னனும் சின்னானும் ஓடி விடுகிறார்கள்.)

காட்சி—17

இடம்:— பொன்னன் வீடு.

இருப்போர்:— பொன்னி, பக்கிரி.

ப:— பொன்னி! எங்கே போயிருக்காரு உன் புருஷன்...

பொ:— வெளியே போனாங்கண்ணா! வந்து விடுவாங்க...

ப:— உனக்கு உடம்புக்கு ஒன்னுமில்லையே.

பொ:— அதெல்லாம் ஒண்ணுமில்லே — அவருகூட... (உள்ளே போய் ஒரு பாட்டிலை எடுத்து வந்து காட்டி) என்னமோ டானிக்காம் இது — வாங்கிட்டு வந்தாரு. சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கறேன்...

ப:— பொன்னன் இன்னமும் பழய மாதிரிதான். கண்ட காவாலிளோட கூடிக்கிட்டு, சுத்திவாரானா— இல்லே எதாச்சும் மாறி இருக்கா அவன் போக்கு... உன்னைக் கேட்கறனே நான் — நீதான் அவனுக்கு இப்ப வக்கீலாயிட்டியே.

பொ:— இரு அண்ணா, காபி போட்டு எடுத்துவாரேன்—

(உள்ளே போகிறாள். பக்கிரி, கையிலே கொண்டு வந்த பத்திரிகையைப் படித்துக்கொண்டும், பாடிக் கொண்டும் இருக்கிறான்.)

காட்சி—18

இடம்:— காட்டுப்பாதை

இருப்போர்:— பொன்னன், சின்னான்.

பொ:— டேய், சின்னான். (ஒரு நோட்டு கொடுத்து) போ, ரெண்டு நாளைக்கு இந்தப் பக்கம் இருக்க வேணாம்—தங்கவேலு உயிர் போகலையேலோ... கவனிச்சயா...

சி:— இல்லெண்ண! ஆசாமி, பரவாயில்லே, சமாளிச்சிக்கிட்டான்... வீட்டிலே, தூக்கிக்கிட்டுப் போயி போட்டிருக்கானுங்க...

பொ:— யாரு...

சி:— வழியே போனவனுங்க...

காட்சி—19

இடம்:— சம்பந்தம் வீடு.

இருப்போர்:— சம்பந்தம் அழுதபடி. தங்கவேல், கட்டுகளுடன் படுக்கையில்.

ச:— விபரீதம் நேரிடும்னு நான் பயந்தது போலவே நடந்திருக்கு... எமகாதகனாச்சே அந்த ஐயன் — இந்தக் கோலம் செய்திருக்கான் — தங்கவேலு! வேண்டாம்டா அவனோட பகைன்னு சொன்னா கேட்டானா...

(தங்கவேல் ஆயாசமாகப் பேசுகிறான்)

- த:— உயிருக்கு ஆபத்து இல்லேப்பா — பயப்படாதே — கூலி வாங்கின பேர்வழிங்கள்...கொல்லத்தான் பார்த்தானுங்க—முடியல்லே...நாலு நாளையிலே கொணமாயிடும்—பிறகு போலீசிலே கேஸ் எடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்யறேன்...

ச:— பேசாதடா தங்கவேலு! பேசாதே......வலி அதிகமாயிடும்

த:— படுபாவிப்பய, எதிரே வந்து நின்னு சண்டை செய்திருந்தா, ஒரு கை பார்த்திருப்பேன் — பின்பக்கமா வந்து அடிச்சிட்டான்...

ச:— போக்கிரிகளோட வேலையே அது தான் — அக்ரமக்காரனுங்க வேலை இப்படித்தான்—ஒளிஞ்சி இருந்து. மறைஞ்சு இருந்து; தாக்குவானுங்க...

த:— அப்பேர்ப்பட்ட அவதார புருஷரு ராமரே, வாலியை மறைஞ்சிருந்துதானே சாகடிச்சாரு என்கிற எண்ணம் போலிருக்கு, அந்தக் காவாலிப் பயலுக்கு...

காட்சி—20

இடம்:— ஐயர் வீடு.

இருப்போர்:— ஐயர், பொன்னன்.

ஐ:— பொன்னா! விஷயம் விபரீதமாயிடுமோன்னு எனக்கு ஒரே திகிலா இருக்கு —நீ, அந்தப் பயலை தாக்கினதைக் கண்ணாலே பார்த்துட்டான் தோட்டக்காரத் துரைசாமி — அவன் வாய் அறுதலேன்னோ — அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி, கொஞ்சமும் பணமும்கொடுத்து, வெளியூருக்கு அனுப்பிவிட்டேன். இனி அவனாலே ஆபத்து இல்லே...

பொ:— வேறே எவனாலேயும்கூட ஆபத்து வராது சாமி—

ஐ:— பொன்னா! தங்கவேலு, சோல்ஜரு—போலிசிலே அவன் ரிப்போர்ட் கொடுத்தா, போலீசார், அவனுக்காக வேலை செய்வா...சர்க்காரும் சிரத்தையா இருக்கும்...

பொ:— ரிப்போர்ட் என்னன்னு கொடுப்பான்—பொன்னன் அடிச்சான்னா? சாட்சி யாரு? யாரு சாமி சாட்சி சொல்ல வருவாங்க, எனக்கு விரோதமா... அவ்வளவு தைரியமான பயகூட இந்த ஊரிலே இருக்கானா?

ஐ:— இருக்காண்டா—இருக்கான்— அதனாலேதானே நேக்கு மனம் பதறிண்டிருக்கு, என்ன ஆகுமோ எது நேருமோன்னு...

பொ:— துரைசாமி சொல்லிப் போடுவான்னு கிலியா சாமி...

ஐ:— அவன் வாயை அடைச்சாச்சிடா—அவன் பயந்த பய...உன் உப்பை தின்னு கொழுக்கிறானே சின்னான், அவனைப் பத்தித்தான் நேக்குப் பயம்—

பொ:— நீங்க ஒரு பைத்யம்—சின்னான் நம்ம சிஷ்யப் பய...

ஐ:— ஆமாம்.. ஆனா, கெட்ட எண்ணக்காரனாச்சே...

பொ:— சாமி! இவ்வளவு யோசனை எதுக்கு—தங்கவேலு உயிர் பிழைச்சாத்தானே, போலீஸைத் தேடுவான்...

ஐ:— ஆமாம் — உடம்பு கொணமானதும், முதல் வேலை போலீசுக்குப் போறதாத்தான் இருக்கும்...

பொ:— ஆளே பைசலாயிட்டா...

ஐ:— ஐய்யய்யோ... எப்டிடா சாத்தியமாகும்...

பொ:— பொணம்கூடப் போய் ரிப்போர்டு கொடுக்குமான்னு கேட்கறேன் — உங்க நெஞ்சு எப்பவும் இப்படித்தான் பஞ்சுமாதிரி—சாமி! பொன்னனோட மனம், இரும்பு — இரும்பு—ஆமாம்...(வெளியே செல்கிறான்)

ஐ:— (களிப்புடன்) பலே! தங்கவேல் இனி—பிணம்தான் — தீர்ந்தான் பயல்...சுகுணாவைக் கல்யாணம் செய்து கொள்ளப்போற மாப்பிள்ளை...!மடப்பய. மடப்பய! சந்திரசேகர ஐயரோட சங்கதி என்ன தெரியும் அந்தப் பயலுக்கு? சட்டை மாட்டிண்டா போதுமோ... ஒழிச்சுவிட வேண்டும்னு தீர்மானிச்சேனானா, தீர்ந்தது—அவ்வளவுதானே!

காட்சி—21

இடம்:— பொன்னன் வீடு.

இருப்போர்:— பொன்னி, பக்கிரி, பொன்னன்.
(பொன்னன் வருகிறான் கவலையுடன்)

ப:— பொன்னா? போதுகாலமாச்சே இப்படி ஊர் சுத்திகிட்டு இருக்கறயே, பொன்னிக்கு யாரு துணை... உன் போக்கு பழயபடிதான் இருக்கு இன்னமும்...

பொ:— பக்கிரி, (பழம் கொடுத்து) இந்தா சாப்பீடு...பொன்னி! பொன்னீ? (பொன்னி வர, அவளிடம் ஹார்லிக்ஸ் கொடுத்து) இது ரொம்ம நல்லதாம் — பலம் தருமாம் — சாப்பிடு...பக்கிரி! எப்படி உன் க்ஷேமமெல்லாம்.

ப:— எப்பவும் போலத்தான். அது சரி, என்ன, பழம் பிஸ்கட்டு, ஹார்லிக்ஸ் தடபுடலா இருக்கு — எங்கே வேட்டை

பொ:— அட, ஏதோ ஒரு சான்சு...

ப:— பழயபடி தானே! எவனாவது அக்ரமக்காரன் கூலி கொடுத்திருப்பான். எவனை என்ன பாடுபடுத்திவிட்டு வாரயோ ...இதோ பாரு பொன்னா! அனியாயத்துக்கும் அக்ரமத்துக்கும் துணைபோகக் கூடாது, கூலி கிடைக்குதேன்னு, அக்ரமத்துக்கு வேவை செய்யலாமா...?

பொ:— சரிடா... வந்ததிலே இருந்து உபதேசமாகவே இருக்கு...நானும் இனி மேலே, வீண் ஜோலிக்குப் போகிறதில்லேன்னு முடிவு கட்டிவிட்டேன். பாவம்! பலமான அடி கத்திக் குத்து...

ப:— யாருக்கு—ஏன் என்ன செய்தான் உன்னை...

பொ:— சரியாப் போச்சு போ...போலீசார் போலவே கேள்வி மேலே கேள்வியா...?

ப:— கெட்ட எண்ணக்காரனுங்க பணத்தை வீசி, ஏழையைக் கொண்டே ஏழையைத் தாக்கச் சொல்றானுங்க...பொன்னா! எனக்கு தலை இறக்கமா இருக்கு. உன்னோட போக்கை எண்ணிகிட்டா. உழைச்சி சாப்பிட உடலிலே நல்ல வலுவு இருக்குது—ஏதாச்சும் ஒரு தொழிலைக் கொள்ள புத்தி இருக்குது — இது—இருக்கிறபோது, ஏம்பா. எவனுக்கெவனுக்கோ அடி ஆளாப் போக வேணும்...அக்ரமத்துக்கு துணை செய்ய வேணும்...—நல்லா இல்லே பொன்னா! என்னோட சினேகிதம் உனக்கு வேணுமானால், நீ கண்டிப்பா இந்தத் தொழிலை விட்டுத் தொலைக்கோணும்...

பொ:— சரி, பக்கிரி! சத்யமாகச் சொல்றேன், இனி அதுமாதிரியான பொழைப்பு வேண்டாம்—பொன்னியைக் கல்யாணம் செய்து கொண்டதிலே இருந்தே, எனக்கும், நம்ம போக்கை மாத்திக்கொள்ள வேணும்னுதான் தீர்மானம். இப்ப, நமக்கு ரொம்ப வேண்டியவருக்காக ஒரு காரியம் செய்ய வேண்டி நேரிட்டது—இனி கிடையாது அந்த வேலை — ஈனத்தனமான காரியம்... பாடுபட்டு பிழைக்கவா முடியாது—பக்கிரி என்னை நம்பு...

ப:— நீ, சொன்னா அதன்படியே நடப்பேன்னு, எனக்குத் தெரியும்...(கையிலுள்ள பத்திரிகையைப் பிரித்துக்காட்டியபடி) பார்த்தாயா—படத்தை..!

பொ:— அடே...

ப:— யாரு...? இவரு! ஆமாம்—போட்டோ போட்டு, என் ஆக்ட் ரொம்ப ஜோரா இருக்குதுன்னு, எழுதி இருக்கு—பேப்பர்லே —(பொன்னன், படத்தைப் பார்த்து பரவசப்பட்டு)

பொ:— புள்ளே — பொன்னி — அடே இங்கே வா...

(பொன்னி வர, அவளிடம் காட்டி)

பார்த்தாயா? பக்கிரி!... பேப்பர்காரரு, உங்க அண்ணனோட போட்டோ போட்டு, புகழ்ச்சியா எழுதியிருக்கான்...

ப:— நல்ல பத்திரிகை இண்ணேன்— கலாவாணின்னு பேரு—

பொ:— இதிலே போட்டோ வந்தா நல்லதா பக்கிரி!

ப:— ஆமாம்—டிராமாக்காரரும், சினிமாக்காரரும், படிக்கிறாங்களேல்லோ, யாருடா, இந்தப் பக்கிரி, இவனுக்கு அந்த வேஷம் கொடுத்தா நல்லா இருக்கும், இந்த வேஷம் கொடுத்தா நல்லா இருக்கும்னு யோசனை செய்வாங்களேல்லோ...

பொ:— சான்சுதான்னு சொல்லு...

ப:— (மார்பைக் காட்டி) இது இருந்தா, சான்சு மேலே சான்சு இன்னேரம் குவிஞ்சு இருக்கும். பொன்னா! நானும் டிராமாவிலே சேர்ந்து வருஷம்—பத்து ஆகுது—பாடுவேன் — ஆக்ட் சுத்தமாகச் செய்வேன் — தமிழும் எழுதப் படிக்கத் தெரியும் எந்த வேஷம் கொடுத்தாலும், தொழிலைச் சுத்தமாகச் செய்ய முடியும் — ஆனா எங்கே கிடைக்குது சான்சு... சினிமாவிலே போனா எல்லாம், ‘அவா’...

பொ:— அவா...ன்னா...

ப:— பாக்யசாலிங்க! பாடமாட்டான்—ஓடமாட்டான்—கத்திச் சண்டை தெரியாது—- கண்ணிலே ஒளி இருக்காது—ஆனா சினிமாவிலே ஆயிரமாயிரமாச் சம்பளம் — பேப்பர்காரனுங்க, பக்கம் பக்கமா எழுதுவாங்க, பாராட்டி...

பொ:— ஏன்...

ப:— (மார்பைக் காட்டி) எல்லாம் இந்த ‘பாக்யம்’ தான்...! நானும் ‘சான்சு’ கிடைக்கும்னு, காத்துக் காத்துப் பார்த்தேன் — ஒரு மண்ணும் கிடைக்கல்லே—இதுகூட (படத்தைக் காட்டி) எப்படி தெரியுமா...

பொ:— எப்படி...?

ப:— இது ஒரு நல்ல பத்திரிகை— செல்வாக்கு—இதிலே இவ்வளவு நாளா (மார்பைக் காட்டி) அது ஒண்ணு இருந்து கொண்டு, அவளோட போட்டோவா போட்டுகிட்டு இருந்திருக்கு — பிற்பாடு நம்மவங்க நல்லா வாழவேணும், எதிலேயும் முன்னுக்கு வர வேணும்னு பாடுபடற கட்சி ஒண்ணு இருக்கு—திராவிட இயக்கம்னு...

பொ:— எது, எது திராவிட இயக்கமா...அட எழவே, போன மாசம், அவனுங்க கூட்டத்தைக் கல்லை வீசி நான்தான் கலாட்டா செய்து, கலைச்சேன் — நம்ம ஐயரு சொன்னாரு. பொன்னா! இந்தப் பயலுங்க, சாமி இல்லேன்னு பேசறவங்க— புத்திகற்பிக்கணும்னு சரி, சாமின்னு சொல்லி...

ப:— நம்மளவங்களுக்காக பாடுபடுகிறவங்க தலையிலே கல்லெப் போட்டே—

பொ:— எனக்கு என்ன பக்கிரி, தெரியும்—இப்பத்தான் புரியுது... இவங்களும் எதுக்காகப்பா, சாமியே கிடையாதுன்னு பேசறது?

ப:— சாமி கிடையாதுன்னு சொல்லலியே! கடவுள் பேராலே கட்டி இருக்கிற கதைகள் எல்லாம் ஆபாசமா இருக்கு, கடவுள் பேர் சொல்லி கபட நாடகமாடி கொழுத்துப் போகிறாங்க சிலரு—ஜனங்களோ சோத்துக்கே திண்டாட்டப்படுகிறாங்க—இப்படி ஏம்பா நாட்டைக் குட்டிச்சுவராக்கரிங்கன்னு பேசறாங்க, பொன்னா நீயே சொல்லு, உன்னை யாராவது, பொன்னா, பக்கிரி எப்படிப் பட்டவன், அவன் எப்படி இருப்பான் அப்படின்னு கேட்டா, என்ன சொல்லுவே? ........என்ன சொல்லுவே பொன்னா?

பொ:— உள்ளதைச் சொல்ல வேண்டியதுதான்.

ப:— உள்ளதைச் சொல்லாமப்படிக்கு, ‘பக்கிரியா? அவள் பெரிய ஆசாமியப்பா, ஆள் ஆறடி உயரம் இருப்பான். தடிப்பய, வேளைக்கு ஒரு படி அரிசி சோறு வேணும், அப்படின்னு சொல்றது ஒரு சமயம். இன்னொரு சமயம் கேட்டா, பக்கிரியா! அவன் குள்ளப்பய, புல் தடுக்கினா கீழே விழுந்து போவான், அவ்வளவு சொத்தை அப்படின்னு சொல்றது, ஒரு இடத்திலே கேட்டா, பக்கிரி கருப்பு நிறம் என்கிறது; இன்னொரு இடத்திலே கேட்டா, நல்ல சிவப்பு நிறமுங்க பக்கிரி என்கிறது. இப்படிப்பேசினா என்னான்னு அப்பா அர்த்தம்...இப்படி நீ பேசினா என்னா சொல்வாங்க பொன்னன் என்னா இப்படி உளறிக் கொட்டறானே — பைத்தியம் பிடித்திருக்கோன்னு கூடச் சொல்லுவாங்களா, இல்லையா? நீயே, சொல்லு...

பொ:— ஆமா, வேளைக்கு ஒருமாதிரியா, ஆளுக்கு ஒரு தினுசா பேசினா, உளறலுன்னுதான் சொல்லுவாங்க...

ப:— விஷயம் புரியாமப்படிக்குப் பேசறதுன்னுதானே அர்த்தம்...

பொ:— ஆமா...ம்

ப:— அதுபோலத்தானே, கடவுள் எப்படி இருப்பாரு, என்ன செய்வாரு, அவருடைய குணாதிசயம் என்னான்னு கேட்டா, என்னென்ன சொல்றாங்க தெரியுமா?

இன்னிறத்தான் இவ்வண்ணத்தான்
என்றெழுதிக் காட்ட ஒண்ணாதானை

அப்படின்னா, கடவுள் இன்னவிதமான வர்ணமா நிறமா இருப்பார்; இப்படிப்பட்ட உருவத்திலே இருப்பார்னு சொல்ல முடியாது—அவர் மனதுக்கு எட்டாதவர்னு சொல்றாங்க... சொல்றாங்களேல்லோ, அதோடு சும்மா இருந்தாங்களா...இல்லே, கடவுளா? ஆனை முகத்தோடு இருப்பாரு...யாரு...

பொ:— ஆமா, நம்ம புள்ளையாரு... விநாயகரு—

ப:— ஆறுமுகம் இருக்கும், கருடன்மேலே வருவாரு, காளை மேலே வருவாரு, தலைமேலே, ஒரு பெண்சாமி இருக்கும், ததிங்கிணதோம்னு ஆடுவாரு. ஓடு எடுத்துகிட்டுப்பிச்சை எடுப்பாரு, ஓட்டாண்டியைக் கோடீஸ்வரர் ஆக்குவாறு...

பொ:— ஆமா — பல தினுசாதான் பேசறாங்க...

ப:— புரிஞ்சவங்க. தெரிஞ்சவங்க ஒரே கடவுளைப் பத்தி இப்படி கண்ட கண்ட மாதிரியாப் பேசினா, சரியா பொன்னா! வேப்பமரத்திலே ஒரு சாமி இருக்கு. வேல் தூக்கிட்டு ஒரு சாமி வருது. மூணு தலையிலே ஒரு சாமி இருக்குது, நாலு கைகொண்ட ஒரு சாமி உலாவுவது. இப்படி இவங்க மனசு போனபடியெல்லாம் சொல்லிகிட்டே போனா, கடவுளைப்பத்தின ஞானம், ஜனங்களுக்கு உண்மையா ஏற்படுமா பொன்னா?

பொ:— ஆமா... கஷ்டந்தான்...

ப:— அதனாலே தான், ஏம்பா, கடவுள் விஷயமா கண்ட கண்ட கதை எல்லாம் சொல்லி, ஜனங்க மனசைக் குழப்பறிங்கன்னு கேட்கறாங்க...

பொ:— அப்படித்தான் கேட்கறாங்களா......... அப்படிக் கேட்டாத் தப்பு இல்லையே...கடவுளைத் திட்டுவதாச் சொன்னானே ஐயன்...

ப:— நீ எப்பவாவது அவங்க பேசறதைக் கேட்டயா... (பொன்னன் ‘இல்லை’ என்று ஜாடை காட்ட) கேட்காமப்படிக்கு, கடவுளைத் திட்டுவதாக எப்படி நம்பலாம், நீ...

பொ:— அப்படின்னு சொல்றாங்க...

ப:— உன்னிடம் அப்படிச் சொன்னா, நீ உடனே நம்பிவிட வேண்டியதா...ஏன் பொன்னா! பக்கிரி, அர்த்த ராத்திரி வேளையிலே, அந்தரத்திலே தலைகீழா தொங்கறானாம் அப்படி யாராவது உன்னிடம் சொல்லிவிட்டா, ஆமா ஆமாம், இருக்கும் இருக்கும்னு நம்பிவிட வேணுமா? திராவிட கட்சிக்காரரு, கடவுளைத் திட்டறாங்கன்னு யாராவது சொன்ன, உண்மையாத்தான் திட்டறாங்களான்னு, அவங்க கூட்டத்திலே பேசறதைக் கேட்டு, சிந்திச்சுப் பாத்துத்தானேப்பா, தீர்மானிக்கணும்...வேலமரத்திலே சேலையைச் சுத்தி வைச்சா, பொம்பளைதான்னு எண்ணிக் கொள்ள வேண்டியதுதானா!

பொ:— அவ்வளவு நிதானம் தோணுதா... என்னமோ ஏதோன்னு திகில் பொறக்குது...கோவம் வருது...

ப:— உடனே, கூட்டத்திலே கல்லைப்போடறது, கண்டபடி ஏசறது. இதுதானேப்பா, செய்யறிங்க ...யோசிக்க எங்கே முன் வாரிங்க...கடவுளை அவுங்க ஒண்ணும் திட்டுகிறது இல்லே... தெரிஞ்சுக்கோ... ஒரு பெரியவர் இருக்காரு, ரொம்ப ரொம்ப நல்லவரு. அவர் காலை நம்ப கண்ணிலே ஒற்றிக்கொள்ளலாம். அவ்வளவு பெரிய மகான் அவரு, அவரு அவர் மனசு வைத்தா குஷ்டரோகியை ழகேசனாக்கி விடமுடியும். குருடனை பார்க்கச் செய்ய முடியும். அப்படிப்பட்ட மகான்...அப்படின்னு நான் சொன்னா, உனக்கு எப்படி இருக்கும் மனது?

பொ:— அப்படிப்பட்ட மகானைத் தெரிசிக்கவேணும், அவரோட தயவு கிடைக்க வேணும்னுதான் தோணும்...

ப:— தோணுமேல்லோ! உடனே, நீ, என்னைப் பார்த்து அப்படிப்பட்ட மகானோட கதை என்ன, எந்த ஊரு. எப்படி இருப்பாரு, என்னென்ன செய்தாரு சொல்லு பக்கிரின்னு கேட்பயேல்லோ...

பொ:— கேட்காமெ...!

ப:— உடனே நான், அந்த மகான், ஒரு நாள் தாசி வீடு போக வேணும்னு ஒருத்தரிடம் சொன்னாரு...

பொ:— தாசிவீடு போகணும்னா.

ப:— கேள் பூரா.. தாசி வீடு போகணுமா, அதுக்கென்ன ஏற்பாடு செய்கிறேன்னு, அவரு—யாரு,—

பொ:— யாரோ ஒருவரிடம் கேட்டாரே. அவரு..பக்தரு—

ப:— ஆமாம், பக்தர்! பக்தர், தாசிவீட்டுக்குச் சொல்லி அனுப்பினாரு, இப்படி ஒருமகான் வந்திருக்காரு மகராஜின்னு...ஒரு தாசி வீடுகூட, காலி இல்லை...

பொ:— வேடிக்கையா இருக்கே, சொல்லு, சொல்லு... பெரிய மகானுன்னு சொல்றே, அவருக்குப் போயி மகா கேவலமான ஆசை பொறக்குதுன்னு சொல்றே, அந்தக் கேவலமான ஆசையை, அந்த மகானே தன் பக்தனிடம் சொல்றார் என்கிறே, அந்த பக்தனும், மகானுக்கா இப்படிப்பட்ட கேவலமான ஆசை பொறக்குதுன்னு அருவருப்பு அடையாமப்படிக்கு, தாசி வீடுகளைத் தேடினாரு என்கிறே....

ப:— தாசி வீடுகளிலே, ஒரு இடத்திலேயும் காலி இல்லை......

பொ:— பிற்பாடு...

ப:— என்ன செய்தார் தெரியுமா, பக்தரு...!

பொ:— சரி, சாமி! தாசி வீடுகள் எதுவும் கிடைக்கல்லே...உங்களோட ஆசையை விட்டு விடுங்கன்னு சொன்னாரா!

ப:— சொல்லுவாரா? பக்தராச்சே! பக்கிரியா, பொன்னனா, அப்படிச் சொல்ல!... கேட்டவரும் சாமான்யப் பட்டவரில்லா... மகான்... ஆகவே, பக்தர் சொன்னார்; சாமீ, தாசிகள் கிடைக்கலே, எனக்கு இரண்டு சம்சாரம்!

அதிலே ஒருத்தியோடு இன்பமா இருந்து (பொன்னன் முகம் சுளிக்கிறான்) என்னை ஆசிர்வதிக்க வேணும்னு சொன்னார்...

பொ:— செச்சே! கேட்கப் பிடிக்கல்லேப்பா... இப்படியா ஒரு மகானைப்பற்றி இழிவா பேசறது.

ப:— பொன்னா! இப்ப நான் சொன்னனே, இது ஒரு மகானோட கதையில்லே... கடவுளைப்பத்தி அவருடைய வக்கீல்களா இருந்து பேசறாங்களே பக்தருங்க, அவங்க சொல்கிற கதை...... வல்லாள மகாராஜா கதைன்னு பேர். நாங்க அதை நாடகமாடக்கூட ஆடினோம் முன்னே...

பொ:— கடவுள் இப்படி செய்தார்னா கதை இருக்கு...

ப:— புண்ய கதை!

பொ:— எது, இதுவா?...

ப:— இப்படித்தான், பொன்னா! இப்ப, நீ கேட்டாயே, இதுவா புண்ய கதைன்னு — அதேபோலத்தான், திராவிடக்காரனுங்க, கேட்கறானுங்க. ஐயா! பெரியவங்களே! இப்படி எல்லாம், கடவுளை இழிவுபடுத்துகிற விதமான ஆபாசக் கதைகளைக் கட்டி, புண்ய கதைன்னு புளுகு பேசி. ஜனங்க மனதைக் கெடுக்கறீங்களே, சரியான்னு கேட்கறாங்க — தப்பா பொன்னா!

பொ:— கேட்காம இருக்கறதுதான் தப்பு பக்கிரி! யோசிக்கப் போனா, கடவுளைக் கேவலப்படுத்துகிறவங்க, பக்தானு வேஷம் போட்டுத் திரிகிறவங்கதான்னு புரியுது...

(இதற்குள் பத்திரிகை வாங்கி, மற்றப் பக்கங்களைப் பார்க்கிறான், பொன்னன், தங்கவேலும் சுகுணாவும் சேர்ந்து எடுத்த போட்டோ போடப் பட்டிருக்கிறது. அது கண்டு, பொன்னன்)

பொ:— பக்கிரி — பக்கிரி!... இதோ பாரு—இந்தப் படம்...

ப:— ஆமாம் — கலப்பு மணம்...! இது யாரு தெரியுமா...

பொ:— தெரியும்—நம்ம ஊரு சம்பந்தம் மகன்—பட்டாளத்திலே இருக்கறவன்—

ப:— தங்கவேல்...

பொ:— ஆமாம், சொல்லு...இது?

ப:— இதுவா! பொன்னா! இது லேடி டாக்டர் சுகுணா! நம்ம ஊர் சந்திரசேகர ஐயரோட மக—விதவை—திருமணம் நடக்கப் போகுது இந்த ஜோடிக்கு...

பொ:— நெஜமாவா...

ப:— ஆமாம் — எழுதியிருக்கே—படிக்கட்டுமா (படிக்கிறான்) லேடி டாக்டர் சுகுணா. ஒரு வைதீகப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, பால்ய விவாகக் கொடுமைக்குப் பலியாகி, விதவையானவர்கள். தகப்பனார் குடும்பப் பெரியவர்கள், ஜாதி வெறியைக் காட்டி மிரட்டியதற்குத் துளியும் அஞ்சாமல். தான் மனமாரக் காதலிக்கும் தங்கவேல் என்னும் சோல்ஜரைக் கலியாணம் செய்து கொள்ள முன்வந்து விட்டார்கள். சீர்திருத்தக் திருமணம், அழகூரில், கோகலே மண்டபத்தில், ஜஸ்டிஸ் குணசுந்தரம் தலைமையில் நடைபெற இருக்கிறது.

பொ:— (ஏதோ யோசனையில் ஈடுபட்டு) பெரிய அக்ரமம்செய்துவிட்டேன் பக்கிரி, முட்டாள்தனமா... பக்கிரி! எனக்கு இந்த சூட்சமம் தெரியாது—ஐயரு —சந்திர சேகர ஐயரு இவனைப்பத்தி என்னென்னமோ சொல்லி, சரியான புத்திகற்பிக்க வேணும்னு சொன்னாரு...

ப:— அடடே! தங்கவேலைத்தான் அடிச்சயா...

பொ:— ஆமாம்—பலமான அடி—கத்திக்குத்து...ஆனா பிராணபயம் இல்லே...

ப:— படுபாவி! பார்த்தயா, தன் மகளை இவன் கலியாணம் செய்து கொள்வது, தனக்கும் தன் ஜாதிக்கும் கேவலம், இழிவுன்னு, எண்ணம் கொலைகாரன். உன்னை ஏவி இருக்கிறான்...

பொ:— நான் ஒரு மடயன்—எதனாலே விரோதம்னு கேட்கல்லே—ஆகட்டும் சாமின்னு ஒப்புக்கொண்டேன்.

ப:— நீ, காரணம் கேட்டா மட்டும் சொல்லுவானா! பொன்னா பார்த்தயா, இதுகளோட போக்கை...

பொ:— இப்ப எனக்கு சூட்சமம் தெரிஞ்சதாலே, தங்கவேலு பிழைச்சான் — இண்ண ராத்திரி, ஆளைப் பைசல் செய்துடறதுன்னு ஏற்பாடு—பக்கிரி! ஏன்னா, ஐயன்தான் சொன்னான், தங்கவேலு உன்னைப் போலீசிலே சிக்கவைத்து விடுவாண்டான்னு—நமக்குத்தான் முன் கோபமாச்சே. ஆள் உயிரோட இருந்தாத்தானே—பிணமானா, போலீசுக்கு எப்படிப் போக முடியும்னு, சபதம் செய்துவிட்டு வந்தேன்...நல்ல, வேளையா என் கண்ணைத் தொறந்த—இல்லையானா கொலைகாரனாகி இருப்பேன்—

ப:— பொன்னா! உன் கலியாண விஷயமா, அதே ஐயன் என்ன சொன்னான்...

பொ:— அதானே ஆச்சரியமா இருக்கு — காதலுக்கு ஜாதி பேதம் கிடையாதுன்னு, கதை கதையாச் சொன்னான்—காரணமெல்லாம் காட்டினான்—

ப:— ஆனா, தன்னோட ஜாதி மட்டும் காப்பாத்தப்பட வேணும்னு, பாடுபடறான் — அதுக்காக, கொலை செய்யக்கூடத் தயாராகிறான்—

பொ:— அநியாயமா இருக்குடா—பக்கிரி!

ப:— ஏன், தெரியுமோ— கலப்பு மணத்தாலே தப்பு இல்லேன்னு உனக்குச் சொன்னவன், தன் மகளோட கலியாணத்தைத் தடுக்கறது ஏன் தெரியுமோ...

பொ:— ஜாதித் திமிரு..

ப:— அதுமட்டும் இல்லே... தங்கவேலுக்குப் பதிலா, தர்பங்கா மகாராஜா, அல்லது ஒரு ஜெமீன்தாரன் சுகுணாவைக் கல்யாணம் செய்துகொள்கிறதுன்னு ஏற்பாடு இருந்தா, கலப்பு மணம் கூடாதுன்னு பேசமாட்டான் — அதுதான் ‘மேதை’ன்னு புகழுவான்—அதாவது பொன்னா! எந்தக் காரியம் செய்கிறதானாலும், ஜாதியைக் காப்பாத்தறதானாலும் சரி—ஜாதியை அழிக்கிறதானாலும் சரி—எந்தக் காரியம் செய்கிறதானாலும், இலாபம் இருக்கான்னுதான் சுயநலக்காரனுங்க பார்ப்பானுங்க — நியாயம், நீதி — தர்மம் — சாஸ்திரம், வேதம்—எல்லாம் சும்மா, பேச்சுக்கு—குறிமட்டும், எப்பவும் இலாபம் — சுயநலம்— இதிலேதான்.

பொ:— என் மனம் பதறுது பக்கிரி! பாவம்! தங்கவேலைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு தோணுது—ஆனா, அவன் போலீசிலே சொல்லிவிடுவானோ என்னமோ...

ப:— உண்மையைச் சொன்னா, அவன் உன்மேலே பரிதாபப்படுவான், கோபிக்கமாட்டான்...

பொ:— என்னா கோவம் வருது தெரியுமா எனக்கு அந்த ஐயன் மேலே! பசப்பினான் முன்னே — பாவமில்லை ஒண்ணுமில்லே — பொன்னியைக் கட்டிக் கொள்றதிலே தப்பு இல்லேன்னு—இப்ப, தன் மக கலியாண விஷயம் வரச்சே கொலை செய்தாவது கொலப்பெருமையைக் காப்பாத்தவேணும்னு கிளம்பறான்—என்னா கேடுகெட்ட புத்தி...போய், என் ஆத்திரம் தீர அவனை ஏசினாத்தான் என் மனசு சமாதானமாகும் பக்கிரி! ஒரு பாவமும் செய்யாத தங்கவேலை நான் சாகடிக்கக்கூட ஏற்பாடு செய்துவிட்டேன் — அந்த ஐயனோட கலகப் பேச்சாலே ...

(பக்கிரி ஏதோ ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டு)

ப:— ஆத்திரமாப் பேசி ஆகப்போவது ஒண்ணுமில்லே...பொன்னா! எனக்கு ஒரு யோசனை தோணுது—ஐயனுக்குச் சரியான பாடம் கற்பிக்கவேணும்...

(இரசியமாக பொன்னனிடம் ஏதோ பேசுகிறான். பொன்னன் முகமலர்ச்சியுடன் அதைக் கேட்டுவிட்டு)
பொ:— ஓ! சரியான வேலை...ஆமாம், அப்படித்தான் செய்யவேணும்...
(மடியிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து)

பக்கிரி! இதைத் தங்கவேலு அப்பனிடம் கொடு—டாக்டருக்குத் தரக்கூட பணம் இராது...

ப:— ஐயனோட காசு....

பொ:— ஆமாமாம்... ஒரு நல்ல காரியத்துக்காவது செலவாகட்டும்... நீ தங்கவேலுவைக் கவனிச்சுகோ—நான் போய், ஐயனைப் பார்த்துவிட்டு வாரேன்...

ப:— ஆத்திரமாப் பேசினே, காரியம் கெட்டே போயிடும். கோபக்குறியே தெரியக்கூடாது—துளிகூட...

பொ:— பயமாத்தான் இருக்கு—அந்தப் பாவியைப் பார்த்ததும், எனக்கு மனம் பதறத்தான் பதறும்—படபடன்னு பேசத்தான் தோணும்...

ப:— அதுதான் கூடாது என்கிறேன். நான் சொன்னது போல், ‘ஆக்ட்’ செய்யணும்...

பொ:— பாக்கறேன்... நமக்குப் பழக்கமில்லாத காரியம்...

(போகிறான்)

காட்சி—22

இடம்:— சம்பந்தம் வீடு.

இருப்போர்:— சம்பந்தம், படுக்கையில் தங்கவேல்.

த:— அப்பா வேறே யாரையாவது எனக்குத் துணையா இருக்கச் சொல்லிவிட்டு, நீ போய், சுகுணாவுக்கு விஷயத்தைச் சொல்லிவிட்டு வாப்பா... எனக்கு உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லே...

ச:— எப்படிடா தங்கவேலு, உன்னை விட்டு விட்டுப் போக மனம் வரும்—மறுபடியும் படுபாவிப் பயலுக, ஏதாச்சும் செய்ய வந்தா, என்னடா செய்றது...

த:— சுகுணாவுக்கு விஷயம் தெரிஞ்சாக வேணுமே...

(பக்கிரி வருகிறான்)

ச:— வாப்பா!.. பக்கிரிதானே...

ப:— ஆமாங்க (தங்கவேலைப் பார்த்து) பயப்படாதே, தங்கவேலு...இனி ஒரு ஆபத்தும் கிடையாது...

த:— ஆபத்துக் கிடக்கட்டும்—அப்பா, பக்கிரி இருக்கட்டும் இங்கே. நீங்க, போயிட்டு வாங்க...

ப:— எங்கே-என்னா வேலையா...

த:— அழகூருக்கு...

ப:— சுகுணாம்மாவுக்குச் சேதி சொல்லத்தானே! அதுக்கெல்லாம் நான் ஏற்பாடு செய்தாச்சி...

த:— எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கா, உனக்கு...

ப:— இதுவரையிலே நடந்ததுமட்டுமில்லே. இனி நடக்கப் போறதும் தெரியும்—நீ நிம்மதியாத் தூங்கு—எல்லாம் உன் இஷ்டப்படி நடக்கும். ஒரு குறையும் வராது...யார் உன்னை இந்தச் சதி செய்தானோ, அவனே, இப்ப உனக்கு தொண்டு செய்யப்போயிருக்கான்...

(தங்கவேல் தகப்பனிடம் பணம் கொடுத்து)
மருந்துக்கு, செலவுக்கு...

காட்சி—23

இடம்:— ஐயர் வீடு.

இருப்போர்:— ஐயர், பொன்னன்...
(பொன்னன் தந்திரமாக நடிக்கிறான்.)

பொ:— பலமாதிரி யோசனை செய்து பார்த்தேன் — கடைசியிலே இதுதான் சரின்னு பட்டுது...

ச:— (சந்தோஷமாக)—இலங்கா தகனம்...!

பொ:— ஆமாங்க — துளிகூடச் சந்தேகம் ஏற்படாது — காரியமும் கச்சிதமாக முடியும்...

ச:— பேஷான ஏற்பாடு—ஆமாம் நான் என்ன விதமான உதவி செய்ய...

பொ:— ஒண்ணுமில்லிங்க... பெட்ரோல் இருந்தா...இலங்காதகனம் கனகச்சிதமாக முடிச்சுடலாம்...

ச:— பெட்ரோலா?...இது ஒரு பிரமாதமா...

பொ:— எனக்கு எப்படிங்க கிடைக்கும்... கூப்பன் வேணுமே—

ச:— நான் தர்ரேண்டா! ஏண்டா, பொன்னா! நான் இருக்கிறபோது உனக்கென்ன கவலை—நீ இருக்கிற வரையிலே எனக்கு என்ன கவலை—உட்கார் —கடிதம் எழுதித்தர்ரேன் என் மகனுக்கு—பெட்ரோல் தரச்சொல்லி...

பொ:— என்னைப் பார்த்ததும், இவனுக்கு பெட்ரோல் எதுக்குன்னு சந்தேகப்படப் போறாங்க — அவர் நம்பறவிதமா வெளக்கமா எழுதிக் கொடுங்க...

(ஐயர் எழுதுகிறார்.)

சிரஞ்சீவி பிச்சுமணிக்கு,

அநேக கோடி ஆசீர்வாதம். இப்பவும் இந்தக் கடிதம் கொண்டுவரும் பொன்னன், நம்முடைய ஆசாமி, இவனைத் தான் ஏவினேன் தறுதலை தங்கவேல்மேலே. மரணாவஸ்தையிலே கிடக்கிறான். பாம்பை அடிச்சுவிட்டா ஆபத்து என்கிறபடி, தங்கவேலை சாகடிக்காமே விட்டா நமக்கு ஆபத்து. அதனாலே, அவனைக் ‘குளோஸ்’ செய்துவிட ஏற்பாடாகியிருக்கு. எல்லாம் சுபமா முடிந்துவிடும். தங்கவேல் வீட்டைக் கொளுத்திவிட பொன்னனை, ஏற்பாடு செய்தாச்சு. வேலையைச் சுலபமா முடிக்க வேணும்னா, பெட்ரோல் தேவைன்னு பொன்னன் சொல்றான், பெட்ரோல் கூப்பன் காலமாக இருக்கறதாலே இங்கே கிடைக்கலே—நீ எப்படியாவது இரண்டு காலன் பெட்ரோல் கொடுத்தனுப்பினா—இலங்காதகனம் ஜாம் ஜாம்னு முடிந்துவிடும். தங்கவேல் தொலைவான். அவசியம் உடனே பெட்ரோல் கொடுத்தனுப்பு.

சந்திரசேகர ஐயர்
(கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, இளித்தபடி)

பொ:— சின்னவரு, கொடுப்பாரேல்லோ, கடுதாசியைக் கொடுத்தா—விவரமா எழுதியிருக்கிங்களேல்லே...

ச:— விவரமா எழுதியிருக்கிறேன் -—நிச்சயம் தருவான்...

பொ:— சாமி! பெட்ரோல் ஊத்திட்டா, திகு திகுன்னு தீ பிடிச்சுடாது...

ச:— ஆமாம்... அணைக்கறதுகூட ரொம்பச் சிரமம்டாபொன்னா!

பொ:— வீடு—சுடுகாடுதான்...

ச:— ஆமாம் பய பிணம்தான்.

பொ:— நீங்க ஒரு பைத்தியம்—பிணமா.

ச:— (பயந்து) ஏன்—ஏன்—என்னடா பொன்னா!

பொ:— பிணமாவா கிடப்பான் தங்கவேலு! பஸ்பம் ஆகிவிடமாட்டானா...

ச:— ஆமாமாம்... உருத்தெரியாதபடி ஆகிவிடும்...

பொ:— சாமி உங்களுக்கு ஒருத்தன் விரோதம் செய்தபிறகு, விட்டு வைக்கலாமா உயிரோடே! சுட்டுச் சாம்பலாக்காமலா இருப்பேன்... சாமியோய்! இந்தப்பய, தங்கவேலு! ரொம்ப வாலாட்டம் காட்டினானா...

ச:— ஆமாண்டா பொன்னா! என் குடும்பத்துக்கே, கேவலமான நிலையை உண்டாக்கத் துணிவு கொண்டு விட்டான்...

பொ:— யாரு? இந்தப் பயலா!

ச:— ஆமாம்... உன்னண்டே சொல்றதிலே என்ன தப்பு...என்மக, இருக்காளே சுகுணா, மெட்ராசிலே...

பொ:— புருஷன் செத்துப்போயிட்டாரே...

ச:— அவதான் அவ பாவம், சிவனேன்னு காலந் தள்ளிண்டு, தனக்கு ஏற்பட்ட விபத்தை எண்ணிஎண்ணி விம்மிண்டு, ஏதோ பரோபகாரமான டாக்டர் தொழில் செய்தாவது போறகதிக்கு நல்லது தேடிக் கொள்ளலாம்னு இருந்திண்டிருக்கா — இந்தப் பயலோட திமிரைப்பாரு...சுகுணாவைச் சுத்திச் சுத்தி வட்டமிட்டுண்டு, பார்க்கறது, பேசறது, சிரிக்கிறது, இப்படி சேஷ்டை செய்துண்டு வந்தான்...

பொ:— பாருங்களேன், போக்கிரித்தனத்தை—யார் வீட்டுப்பொண்ணு, என்னா குலம், என்ன மாதிரியான நிலைமை, இது எதையும் கவனிக்காம...

ச:— திமிருடா பொன்னா! யார் என்ன செய்ய முடியும் என்கிற கர்வம்—சுகுணா, சூது தெரியாதவ — எப்பவும் யாரிடமும் களங்கமில்லாமெ சிரிச்சுப் பேசுவா — இந்தப்பய, அதைச்சரியா புரிஞ்சுகொள்ளாமப்படிக்கு சுகுணா தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக ஊரெல்லாம் தமுக்கடிக்க ஆரம்பிச்சான்.

பொ:— அப்பாடி—அம்மாந்தூரம் போயிட்டானா—

ச:— பலபேர் புத்தி சொல்லி யிருக்கா பயலுக்கு — பிறாமணா வீட்டுக் கொழந்தைடா, பாவம் உன்னை பஸ்பம் ஆக்கிவிடும். ஜாதிகுல ஆச்சாரத்தைக் கெடுக்காதேன்னு — சொல்லியிருக்கா—

பொ:— பய, கேட்கல்லே — அவ்வளவு ஏறிப்போச்சு — தியிரு — சாமி! தீண்டி விட்டிருப்பானோ—

ச:— செ—சே! அதெல்லாம் இல்லே — அப்படி ஒண்ணுமில்லே—

பொ:— கல்யாணம் செய்து கொள்றதாவா சொன்னான்?—

ச:— ஆமாண்டா—

பொ:— சுகுணாம்மா என்னமோ இந்தச் சுந்தராங்கதன் மேலே ஆசைப்பட்டது போலவும்—போலவும், சம்மதம்னு சொன்னது போலவும்—

ச:— சம்மதம்னு சுகுணா சொன்னாக்கூட, இவன் சம்மதிக்கலாமோ? நியாய அநியாயம், இவன் கவனிக்க வேண்டாமோ, குலம், கோத்திரம், அந்தஸ்து, இது இவனுக்குத் தெரியாதா — எப்படி நாம் இச்சைப்படலாம், சுகுணாமீது, என்கிற எண்ணம் வரவேண்டாமோ—

பொ:— அவன் சுத்த பைத்யக்காரன் சாமி! அவன், என்ன எண்ணிகிட்டு இருப்பான்னா சுகுணாம்மா சம்மதிச்சுவிட்டா, ஜாதி குலம் இதுகளைக் கவனிக்கமாட்டிங்க, கலப்பு மணத்துக்குச் சரின்னு சொல்லிவிடுவிங்கன்னு எண்ணிக்கிட்டான் போலிருக்கு—

ச:— சரின்னு, சொல்லிவிடுவதா யாரு? நானா?— எதுக்கு— இந்தப் பஞ்சப் பய, சுகுணாவைக் கலியாணம் செய்து கொள்ளவா—

பொ:— அவன் எண்ணிக்கிட்டான் போலிருக்கு — கலப்பு மணத்துக்கு சம்மதித்துவிடுவிங்க—ஏன்னா! கேள்விப்பட்டிருப்பானேல்லோ. என்னோட கலப்பு மணத்துக்கு நீங்க சம்மதம் தந்ததை...

ச:— அது வேறு விஷயம்—இது வேறு விஷயம்...

பொ:— மட்டிப்பய... இவன் கண்டானு உங்களோட போக்கு எப்படிப்பட்டதுன்னு... கலப்பு மணம் செய்து கொள்ளலாம், தப்புகிடையாதுன்னு சொன்னிங்க, என்விஷயமா—ஆனா, நான்தானா நீங்க.. நானு மட்டம் ஜாதியிலே, செல்வத்திலே, பெருமையிலே, எல்லாத்திலேயும்... நீங்க அப்படியா...மொகத்திலேருந்து பொறந்த ஜாதிக்காரராச்சே—அந்த ஜாதிப் பெருமையைக் கொடுக்கலாமா...மகா பாவமாச்சே...

ச:— பொன்னா? நீ பேசறது...ஒரு தினுசா இருக்கே...

பொ:— நெஜம் பேசறேன்... அது ஒரு தினுசாத்தான் இருக்கும் சூதுக்கார ஜென்மமே! உன் ஜாதி கெடக்கூடாது என்கிறதுக்காக, கொலைகூடச் செய்யத் துணிகிறே... என் கலியாணத்துக்குச் சொன்னயே, ஆயிரத்தெட்டு காரணம், காதலுக்கு ஜாதி கிடையாதுன்னு, அதெல்லாம் எங்கே போச்சு... முருகன், குறவள்ளியைக் கலியாணம் செய்து கொள்ளலையா...மனம் ஒண்ணுபட்டா இனம் என்ன செய்யும்... என்னென்ன சொன்னே — இப்ப? என் குலம் கெடலாமா, என்ஜாதி கெடலாமான்னு, பேசறே? ஒரு குத்தமும் செய்யாதவனை, நான் ஒரு முட்டாள், குற்றுயிராக்கி விட்டேன்...ஏன்யா, இப்படி ஊரைக் கெடுக்கற புத்தி இருக்கு...?

ச:— என்னடா இது, போறாத வேளை. பொன்னா! நீயா இப்படிப் பேசறே... யார்டா உன் மனதைக் கெடுத்தா? ஐய்யய்யோ! என்னடா கர்மம் இது...

பொ:— ஏன்யா கதறினா போதுமா...சுகுணவுக்கும் தங்கவேலுக்கும் கல்யாணம் நிச்சயமா நடக்கத்தான் போகுது... தலைகீழா நீ நின்னாக்கூட நிற்கப் போறதில்லை. தெரியுமா...இதோ போறேன்...

ச:— (அழுகுரலுடன்) எங்கேடா போகிறே...

பொ:— எங்கேயா....போலீசு ஸ்டேஷனுக்குத் தான்—போயிகாட்ட வேணுமேல்லோ, பெட்ரோல் கதையை—என்னா கொடுமையான மனம்யா உனக்கு — ஆளை அடிச்சாக்கூடப் போதாது—இலங்கா தகனமில்லே செய்ய வேணும்...

ச:— பொன்னா! பொன்னா! உன் காலிலே வேணுமானாக்கூட விழறேண்டா—நில்லுடா—பொன்னா!

பொ:— ஏனாம்...! கொலைகாரன் நானு—கொலை செய்யத் தூண்டிவிடற குடிகெடுக்கறவங்களோட யோக்யதை வெட்ட வெளிச்சமாக வேணுமில்லே— வெவரமா எழுதியிருக்கயே கடுதாசி—

ச:— (கும்பிட்டுக் கூத்தாடியபடி) வேண்டாம்டா பொன்னா! வேண்டாம்...

பொ:— சிக்கிக்கிட்டா, கம்பி எண்ண வேணுமே என்ற திகில்—! ஏன்யா! எங்களாட்டம் ஆசாமி கிடைச்சா, பயப்படாதேடா, தலையா போயிடும், போ, வெட்டு, குத்து, கொல்லுன்னு தூண்டி விடறது, இதுதானேய்யா, உங்களோட யோக்யதை—

க:— பொன்னா! புத்தியில்லாமல் நடந்துண்டேன் — காட்டிக்கொடுத்துடாதே —வயதான காலம்—

பொ:— இதோ பாரய்யா—தடை சொல்லாதே, கேடு நினைக்காதெ கலக மூட்டாதெ, உன் மகளோட கல்யாணத்தை நீயே, கிட்ட இருந்து நடத்தி வை. இல்லென்னா, பெட்ரோல் கடிதாசி இருக்கு பாரு, அது போலீசுக்குப் போகும்—

ச:— பொன்னா கல்யாணத்தைத் தடுக்கல்லே — சத்யமா—

பொ:— ஊரைக் கெடுக்கற சுபாவத்தை விட்டுத் தொலைய்யா

ச:— இனி, தவறா நடக்கவே மாட்டேன்.

காட்சி—24

இடம்:— சம்பந்தம் வீடு.

இருப்போர்:— தங்கவேல், பொன்னன்.
(தங்கவேல், களைப்புடன் காணப்படுகிறான், கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறான். தலையில் கட்டு இருக்கிறது. பொன்னன், ஓசைப்படாமல் உள்ளே நுழைந்து தங்கவேல் எதிரே நிற்கிறான். தங்கவேல் அவனை உட்காரச் சொல்லி ஜாடை காட்டுகிறான்.)

பொ:— பக்கிரி, பூரா விஷயமும் சொல்லியிருக்கும் — என்ன— சொன்னாரா...

தங்:— சொன்னார்...

பொ:— தெரியாமப்படிக்கு, அவசர புத்தியாலே, அக்ரமம் செய்துவிட்டேன், என் கதையே அதுபோலத்தான். பக்கிரிதான், என் கண்ணைத் திறந்தான்...

தங்:— கேள்விப்பட்டேன்...

பொ:— பழய விஷயம் கேள்விப்பட்டிருப்பே...இப்ப, நடந்திருக்கிறது தெரியுமா... தெரிஞ்சிருக்காதே...

(கடிதத்தைத் தங்கவேலிடம் தர, தங்கவேல் அதைப் பார்க்கிறான்.)

ஐயன், சிக்கிக்கிட்டான், சரியா. பக்கிரி யோசனை தான், நானும், கன ஜோரா ஆக்ட் செய்தேன்—பார்த்தயா கடுதாசி... இதை வாங்கிக்கொண்டதும், ஐயனை, வாட்டி வாட்டி எடுத்துவிட்டேன்...ஈட்டி முனையாலே குத்தனாகூட, மனஷன் அவ்வளவு வேதனைப்பட மாட்டான் நான் பேசின பேச்சு, அவனை துளைச்சி எடுத்துவிட்டுது போ. இப்ப, கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கட்டும்; நான் ஒரு வம்புக்கும் வரமாட்டேன் பொன்னா! என்னை மட்டும் போலீசிலே மாட்டிவிடாதேன்னு கெஞ்சறான், கூத்தாடறான்—கடுதாசி எப்படி...?

தங்:— சாமர்த்தியமான வேலைதான் நடந்திருக்கு — பலே, ஆள்...

பொ:— யாரு? நானா? உம்! நான் ஒரு விவரமறியாத முரட்டுப்பய. பக்கிரி புத்திசாலி, அவன் யோசனைதான் இது, தங்கவேலு! இனி நான் உனக்குப் பிராண சினேகிதன் — ஆமாம் இந்த முரட்டுப் பயலோடா சினேகிதம் செய்கிறதுன்னு, கேவலமா எண்ணாதேப்பா — இப்ப, நான் புது மனுஷன்— புது மனுஷன்னா — செச்சே—இப்பத்தான் நான் மனுஷனாகி இருக்கறேன். உன்னைப்போல, நல்லவங்களோட சினேகிதம் இல்லாததாலேதான், போக்கிரி பொன்னனாக இருந்தேன் — இனி என்னை நல்லவனாக்கற பொறுப்பு, உன்னுடையதுதான்—பக்கிரி, ஏற்கனவே என்னைப் பாதி திருத்திவிட்டான் — பொன்னி ஒரு கால்பாகம் திருத்தி இருப்பா — நீயும் கொஞ்சம் என்னைத் திருத்து— என்னடா இது, நம்மைத் தாக்கின பய, இப்ப, இப்படிப் பேசறானேன்னு யோசிக்கறயா...

தங்:— செச்சே, அதெல்லாமில்லே — இவ்வளவு நல்ல ஆளு எப்படிப் போக்கிரியாக முடிந்ததுன்னு யோசிக்கறேன்...

பொ:— அது பெரிய கதை—நான் சின்ன புள்ளையிலே இருந்தே போக்கிரிதான் — எங்க அப்பனும் பெரிய பயில்வானாம்—அம்மா சொல்லும்...

தங்:— எனக்கு இன்னொரு ஆச்சரியம் என்னான்னா, போக்கிரி பொன்னனாக இருந்துகொண்டே, எப்படி நீ, பொன்னியைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டே என்கிறது.

பெ:— அட, இதிலே என்னப்பா ஆச்சரியம்! போக்கிரிபா இருந்தா, அவனுக்கு, காதலே உண்டாகாதா! புலி சிங்கமெல்லாம் கூடத்தானேப்பா, ஜோடி தேடிகிட்டு, குடும்பம் நடத்துது... ஆனா, என் காதல் கதை இருக்கே...அடே அப்பா, அதுவும் பெரிசு....

தங்:— பொன்னா? அதைக் கொஞ்சம் சொல்லேன், கேட்போம்...

பொ:— எப்படிச் சொல்றது...

தங்:— சும்மாச் சொல்லு...

பொ:— சும்மாச் சொல்லாதெ காசா கேட்கப் போறேன்...எனக்கும் அந்தப் பழய விஷயத்தை எல்லாம் யாரிடமாச்சும் சொல்லிக் கொள்ளவேணும் என்கிற ஆசைதான். நல்ல ஆள் யாரும் கிடைக்கல்லே இது வரையிலே — பொன்னி, தெரியுமேல்லோ, பக்கிரியோட உடன் பிறந்தா...

தங்:— அது தெரியாதா... தாண்டவராயர் மக...

பொ:— சின்ன வயசிலேயே, புருஷன் இறந்து போயிட்டான்...இது, அவன் செத்த மூன்றாவது வருஷம்தான், பெரிய மனஷியாச்சாம்...பொண்ணு நல்ல குணம், லட்சணம்...என் கண்ணுக்கு, பொன்னிபோல அழகி வேறே கிடையாது. நான், அடிக்கடி. தாண்டவராய மொதலி வீட்டுக்குப்போறது உண்டு — சந்தையிலே ஆடுகளை வாங்கறது. விற்கிறது...அதுக்காக... போறபோதெல்லாம், பொன்னி அங்கே அப்படியும் இப்படியுமா உலாவும், ஏதாவது வேலை செய்துகொண்டே. நான் பார்க்கிறது மறக்கறது, மறுபடியும் பார்க்கிறது மறக்கறது. இப்படி கொஞ்ச காலம் இருந்தது. பிறகு, இலேசா என் மனசு, ஒரு மாதிரியாச்சி. பொன்னியைப் பார்த்தா ஒரு தினுசான சந்தோஷம்—பார்க்காமலிருந்தா, ஒரு மாதிரி விசாரம்—இப்படி இருந்தது. பிறகு, எனக்குப் பொன்னியைப் பார்க்கவில்லைன்னா தூக்கம் பிடிக்காத மாதிரியான நிலை ஏற்பட்டுவிட்டுது. பொன்னியிடம் ஆசை ஏற்பட்டுப் போச்சி. என்ன செய்யறது? தாண்டவராய் மொதலிக்கோ துளிக்கூடச் சந்தேகம் கிடையாது என்னைப் பத்தி. நான் போக்கிரியே தவிர, பொம்பளைங்க விஷயமா, எனக்குக் கெட்ட பேர் கிடையாது அதனாலே, அவருக்கு என்னிடம் சந்தேகம் கிடையாது. பொன்னியோட எண்ணம், என்னான்னு என்னாலே தெரிஞ்சிக்க முடியவில்லை, ரொம்ப நாளா... நான் பொன்னியை விழுங்கி விடுவதுபோலப் பார்ப்பேன்...அது ஓரக்கண்ணாலே பார்க்கும்... நான் உங்க அப்பாரு எங்கேன்னு கேட்பேன் — என் குரல் கொஞ்சம் நடுங்கும் — அது கணீர்னு பதில் சொல்லும், வயக்காடு போனாரு, சேட் கடை போனாருன்னு—பொன்னி! பொன்னி! ன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, நானே சந்தோஷப்பட்டுக் கொள்வேன், பொன்னியை எப்படியும் அடைந்தாகணும்னு முடிவு கட்டிவிட்டேன். ஆனா அவளோட சம்மதம் கிடைச்சாகணும்னு வேறே எண்ணம். பல சமயம், முயற்சிக்கலாம்னு கிளம்புவேன். பிறகு, பயம்—இன்னொரு சமயம் பார்த்துக் கொள்லோம்னு இருந்து விடுவேன்...

தங்:— ஆமாம்... நீதான் முரடனாச்சே... பொன்னி விஷயத்திலே மட்டும், ஏன், அவ்வளவு பயம் உனக்கு...

பொ:— அதுதான் எனக்கு முதலிலே புரியலே. பிறகு புரிஞ்சுது. எனக்கு பொன்னிமேலே உண்மையான அன்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. சமயத்தை எதிர் பார்த்திருந்தேன. ஒருநாள், தாண்டவராயர் வீட்டுக்குப் போனேன்...

காட்சி—25

(பழைய சம்பவம்—தாண்டவராயன் வீடு)

பொ:— யாரு வீட்லே? தாண்டவராய மொதலி, ஐய்யோய், தாண்டவராய மொதலீ!

(உட்பக்கமிருந்து பொன்னி வருகிறாள். ஒரு விநாடி, அவனைப் பொன்னன் பார்க்கிறான். அவள் கூச்சமடைகிறாள்.)

பொ:— எங்கே உங்க அப்பா?

பொன்ளி:— வெளியே போனாங்க.

பொ:— அதுதான் தெரியுதே — உள்ளே இல்லைன்னா வெளியே போனாங்கன்னுதானே அர்த்தம், போயிருக்கிற இடம் எது?

பொன்னி:— எனக்கு எப்படித் தெரியும், சொல்லி விட்டா போறாங்க. சந்தைப் பக்கம் போயிருப்பாரு.

பொ:— நான் அங்கே இருந்துதானே வாரேன், அங்கே காணோமே.

பொன்னி:— அப்படின்னா, சௌகாரு கடைக்குப் போயிருப்பாரு.

பொ:— சௌகாரு கடைக்கா?

பொன்னி:— ஆமாம் — அப்பாரு கொஞ்சம் கடன் பட்டிருக்காரேல்லோ. சேட்டு, தேளாக் கொட்டறான்—இரண்டு ஆடு இருந்தது. அதை வித்துப்போட்டு, பணத்தை அந்தப் பாவிக்கிட்ட கொடுத்தூட்டு வரப்போனாரு. நாம்ப யாருக்காச்சும் கடன்பட்டிருந்தா மென்னியைப் பிடிக்கறாங்க, நமக்கு யாராச்சும் பணம் சேரவேணுமுன்னு இருந்தா, ஒய்யாரம் பேசறாங்க.

பொ:— என்னா பிள்ளே! குத்தலாப் பேசறே. நான் உங்க கடனைத் திருப்பித் தரவில்லைன்னா மறைமுகமாக இடிச்சிக் காட்டறயே.

பொன்னி:— (புன்சிரிப்பாக) உங்களை மட்டும் சொல்லலே...பொதுவாச் சொன்னேன்... உங்களையுந்தான் அப்பா, எத்தனையோ தடவை கேட்டுக் கேட்டுப் பார்த்தாரு. வெள்ளி தர்ரேன், வியாழன் வரட்டும், சனிக்கிழமை பார்க்கலாம்னு சொல்லிக்கிட்டே நாளை ஓட்டறீங்க.

பொ:— கடனைக் கொடுத்துவிட்டுப் போகத்தான் வந்திரிக்கறேன் — பொன்னி!

கொஞ்சம் மோர் இருந்தா கொடேன்.

(பொன்னி உள்ளே போகிறாள்,

பொன்னன் பெஞ்சியின் மேலே உட்கார்ந்துகொண்டு, மெல்லிய குரலில், தன்னானே தானனன்னே என்று பாடுகிறான். முகம் மலர்ச்சியாக இருக்கிறது.

பொன்னி ஒரு டம்ளரில் மோர் கொண்டுவந்து கொடுக்கிறாள். பொன்னன் அதை வாங்கிக் குடித்துக்கொண்டிருக்கிறான். அவன் அதைக் குடிக்கும்போது, பொன்னி, கையை உதறிக் கொள்கிறான்.

சாப்பிட்டானதும், டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, பொன்னன் பொன்னியை ஒரு மாதிரியாகப் பார்க்கிறான்.)

பொன்னி:— என்னா, அப்படிப் பாக்கறீங்க...

பொ:— ஒரு டம்ளர் தண்ணி கொடு பொன்னி...

பொன்னி:— இதென்ன வேடிக்கை! இப்பத்தான் மோரு...

பொ:— ஆமாம்—அதிலே ஒரே உப்பு!

பொன்னி:— இது அதைவிட வேடிக்கையா இருக்கே. நான்தான் அவசரத்திலே உப்புபோட மறந்தூட்டேன். நீங்க மோரு சாப்பிடறப்போ கவனம் வந்துது, அடடா உப்பே போடலியேன்னு பதறிப் போனேன். நீங்க என்னான்னா, உப்பு அதிகம்னு சொல்றீங்க...

பொ:— உப்பே போடலியா...பொன்னீ? நான் கவனிக்கவே இல்லை! உப்பு இருந்தாலும் இல்லேன்னாலும், உன் கையாலே மோரு கொடுத்தா, அது ஒரு தனி ஜோருதான்.

பொன்னி:— (வெட்கப்பட்டு) இது மாதிரியா எல்லாம் பேசாதிங்க.

பொன்னன்:— ஏனக்கும் இதுபோலப் பேசுற பழக்கமே கிடையாது பொன்னி.
(பாசத்துடன் பொன்னியைப் பார்க்கிறான், பொன்னி வெட்கப்படுகிறாள். மறுவிநாடி பயப்படுகிறாள்.)

பொன்னி:— அப்பா வந்த பிறகு வாங்க—இப்ப போங்க—எனக்குப் பயமா இருக்குது...

பொன்:— பயம் எதுக்கு? போக்கிரியாச்சேன்னா! பொன்னன், மண்டையை உடைக்கிறவனாச்சே, என்கிற பயமா...அதெல்லாம் வேறே பொன்னன்...

பொன்னி:— (சிரித்தபடி) இது ஆளை மயக்கற பொன்னனா?

(கேட்டுக்கொண்டே உள்ளே ஓடுகிறாள்.

பொன்னன் அவளைத் தொடர்ந்து உள்ளே போவதா வேண்டாமா என்று யோசிக்கிறான். ஆசை, உள்ளே போகும்படி தூண்டுகிறது. அச்சம் போகவிடாமல் தடுக்கிறது.

இந்த நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு, பொன்னன் வெளியே செல்கிறான் தயக்கத்துடன். அவன் சென்றதும், பொன்னி ஓடி வந்து, அவன் சென்றபக்கம் பார்த்துவிட்டு, மீண்டும் உள்ளே செல்கிறாள்.)

காட்சி—26

(சம்பந்தன் வீடு—பொன்னன் தங்கவேல் உரையாடல்)

பொன்:— இப்படித்தான் ஆரம்பமாச்சு தங்கவேல்! எனக்கு என்னமோ, ஆரம்ப முதலே, பொன்னியிடம் பாசந்தான்—ஆனாலும் பயமுந்தான்—பயம்னா, என் தலை போயிடும்னு இல்லா, நான்தான் பட்டப் பெயரே வாங்கினவனாச்சே, போக்கிரின்னு. அதனாலே எனக்குத் தாண்டவராய மொதலியோ, வேறு யாரேனுமோ, சண்டைக்கு வருவாங்க, தாக்குவாங்க என்கிற பயம் ஏற்படுமா? எனக்கு . இருந்த பயமெல்லாம், களங்கமத்த பொண்ணு பொன்னி; அது கண் கலங்கினா என்ன செய்யறது என்கிற பயம் தான்...

தங்:— அது தான், உண்மையான காதல் பொன்னா! நானுந்தான் பயந்து பயந்து, மனதிலே மூண்டுகிடந்த பாசத்தை அடக்கி அடக்கிப் பார்த்தேன்...

பொன்:— நான் மட்டும்? சே! நாம்ப அந்தப் பக்கம் போனாத்தானே அந்த நினைப்பு வரும், நாலு நாள் அந்தப் பக்கமே திரும்பக்கூடாதுன்னு தீர்மானிப்பேன். நம்ம ஜதைகள் இருக்குதேல்லோ, அறுப்புக்காரன், ஆள் விழுங்கி, இப்படிப்பட்டவனுங்க அவனுங்களோடவே சுத்திக்கிட்டிருக்கிறது — இப்படியும் இருந்து பார்த்தேன். விட்டாதானே பொன்னி! கூடவே தொடர்ந்து வர ஆரம்பிச்சா பொன்னி!

தங்:— உன்னைத் தேடிக்கொண்டா...

பொன்:— அந்த எண்ணத்தைச் சொல்றேன்... எங்கே சுத்தினாலும், எந்த வேலையிலே ஈடுபட்டாலும், பொன்னியோட நினைப்புத்தான்!

தங்:— அதை ஏன் கேக்கறே, போ! நானும் அதே பாடுபட்டுக் கொண்டுதான் இருந்தேன், எந்தப் பக்கம் திரும்பினாலும், சுகுணாதான்!

பொ:— நான் எப்பவும் தூங்க ஆரம்பிச்சா, மரக்கட்டை போல ஆயிடுவேன் — பொன்னியிடம் காதல் ஏற்பட்ட பிறகு தூக்கமே சரியா இருக்கறதில்லை. நம்மப்பய சின்னான்கூடச் சொல்லுவான், தூக்கத்திலே கினா கண்டு, பொன்னி பொன்னின்னு உளறுவேனாம்!

தங்:— அப்படித்தான், பொன்னா, அப்படித்தான்! எவ்வளவு பெரிய முரடனாக இருக்கட்டும், போக்கிரியாக இருக்கட்டும், இந்தக் காதல் தீ மூண்டுவிட்டா, ஆசாமிகள் பாடு...உம் ! என்னான்னு சொல்றது அதை—அணையாத்தீ—அப்பா அது, நாளாக வளருகிற நெருப்பு.

பொ:— நல்லாச் சொன்னே தங்கவேல்! நெருப்புத்தான்! என்னா பொன்னா உடம்புக்கு, ஒரு மாதிரியா இருக்கறியேன்னு பலபேர் கேட்டாங்க—அது மாதிரியா ஆகிவிட்டேன். மல்லிகைப்பூவைப் பார்த்தா, பொன்னிக்கு வாங்கித் தரலாம்னு நினைப்பு, மத்தாப்புக் கலர் சேலையைப் பார்த்தா, பொன்னிக்கு வாங்கிக் கொடுக்க வேணும்னு எண்ணம், ஆணும் பெண்ணும் ஜோடியா எங்கே தெரிஞ்சாலும், உடனே நாமும் பொன்னியும், எப்ப இதுபோலப் போகப் போகிறோமோ என்கிறஏக்கம், பெரிய கதை, தங்கவேல். நான் பட்டபாடு முழுவதையும் சொன்னா, பெரிய கதையாப் போகும்.

தங்:— என் விஷயமும் அப்படித்தான். நீ சொல்லு, பொன்னா! கடைசியிலே, துணிஞ்சு கேட்டிட்டயா?

பொ:— நாக்குக் குளறுதே—பேச்சு எங்கே வருது...?

தங்:— வராது வராது... நான் உளறு உளறுதுன்னுதானே உளறினேன், சுகுணாவிடம் — பைத்யம், பைத்யம்னு சிரிக்கிறது சுகுணா... வெட்கமாக இருக்கும் எனக்கு.

பொ:— எனக்கு ஒரே பயம்...கேளேன், விஷயத்தை. நாலு நாள்... பொன்னி வீட்டுப் பக்கமே போகாமலிருந்தேனா—வீட்டுப் பக்கம் போகிறதில்லையே தவிர, பக்கத்துத்தோட்டம், சந்தைத் தோப்பு, இங்கே போயி வருவது வழக்கம். ஒருநாள் சந்தைத் தோப்பிலே, உட்கார்ந்துகிட்டு, ‘போடு ராஜா போடு’—நடத்திக்கிட்டு இருந்தேன்...

த:— என்னது...?

பொ:— உனக்குத் தெரியாதா...சீட்டு ஆட்டம்...

(மூன்று சீட்டுகளை எடுத்து ஆட்டத்தைக் காட்டுகிறான்.)
ஆள் அதிகம் இல்லை. இரண்டே இரண்டு சோணகிரிகள் தான் கிடைச்சாங்க. அங்கே ஓடிவந்தா, பொன்னி இறைக்க இறைக்க...

காட்சி—27

(பழைய சம்பவம்—சந்தைத் தோப்பு)

(பொன்னன் சீட்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறான். இரண்டுபேர், காசு வைத்து ஆடுகிறார்கள்.

பொன்னி, ஓடோடியும் வருகிறாள்.

பொன்னன், அவளைக் கண்டதும், சீட்டுக்களை எடுத்துக்கொண்டு எழுந்திருக்கிறான்.)

பொன்:— ஓடியாங்க, வீட்டுக்கு, அப்பாவை, அடிக்கிறானுங்க, பாவிப் பயலுங்க...

(அந்தப் பேச்சைக் கேட்டதும், பொன்னன் ஓடுகிறான், பொன்னி வீடு நோக்கி,

பொன்னி அவனுடன் ஓடுகிறாள்.

பொன்னி வீட்டிலே, ஒரு முரடன், தாண்டவராயன் கழுத்திலே துணியைப் போட்டு முறுக்கியபடி அடிக்கிறான். மற்றொரு முரடனும், தாக்குகிறான் சேட் பக்கத்திலே நின்றுகொண்டு, தூண்டி விடுகிறான்.)

சேட்:— திருப்பதிக்கு போறான் சாமி கும்பிட, உனக்கும் புண்ணியம் சேட், ஐம்பது கொடுன்னு கேட்டான். வாங்கின பணத்தைக் கேட்டா நம்ம தலையே மொட்டை அடிக்கிறான்... நாமம் சாத்றான் நமக்கு.....என்ன எண்ணிவிட்டான் நம்பளை...

(முரடர்கள் அடிக்கிறார்கள், தாண்டவராயன் அழு குரலில் பேசுகிறான்.)

த:— அடிக்காதீங்கய்யா, ஐயய்யா, ஐயய்யா! பட்ட கடனைக் கொடுக்கா திருக்கமாட்டான்யா... கொஞ்சம் பொறுத்துக்க சேட்... பசுமாடு, அடுத்த மாசம் கண்ணு போடும்... உன் பணத்துக்கு ஏற்பாடு செய்து தர்ரேன் ஓட்டல்காரர் பால் கேட்டாரு, அவரிடம் பணம் வாங்கப்போறேன், அடுத்த மாசம்—

சேட்:-—அடுத்த மாசம். அடுத்த மாசம், எத்தனை மாசம் வந்து போவுது — நம்ப வட்டி ஏறிக்கிட்டே போகுது. இப்பக்காசு கொடுத்தா. கொடு, இல்லே. பசுவைக் கொடு...ஆமாம் — நம்ம டெல்லி பக்கம் இருந்து வந்திருக்கான். ஏமாத்திப் போடலாம்னு நினெப்பா—இதோ பார்த்துக்கோ. (முரடர்களைக் காட்டி) உங்க மனுஷாள்தான். இவங்க யாரு பக்கம் பார்த்துக்கோ—

(பொன்னன் உள்ளே வந்து காட்சியைக் கண்டு பதறி.)

பொ:— யார்டா நீங்க—?

(இரண்டு முரடர்களையும் கழுத்தைப் பிடித்து ஆட்டியபடி)

யார்டா இரண்டு பேரும்—?

(இருவரும் சற்று திணற, அவர்களைத் தாக்கிவிட்டு, சேட் இருந்த பக்கம் கோபமாகத் திரும்ப, சேட் நடுங்கி)

சேட்:— நம்பள் மேலே கோவம் வாணாம் பொன்னப்பா? நம்பள் ஒண்ணும் செய்யறான் இல்லே! நம்பள் கடனைக் கேட்க வந்தான்—தொணைக்கு இவனுங்க வந்தான் -—இவனுங்க அவனும் சண்டை போட்றான்—

பொ:— சேட்! இந்த வேலையிலே இறங்கிவிட்டாயா; ஆட்களைக் கொண்டு வந்தா, பணம் வசூல் செய்யறே...

சேட்:— நாம்ப அடிக்கச் சொல்லலே—ராம்! ராம்! பொன்னப்பா! நாம்ப சொல்வானா அடிக்கச் சொல்லி.

பொன்னி:— உள்ளே நுழைஞ்சதும் நீதானே பாவி! இழுத்துப்போட்டு, உதைன்னு சொன்னே இதோ இந்தத் தடியன்களும், புலிபோலப் பாஞ்சானுங்க.

மு:— அண்ணே! தெரியாம, நடந்துப் போச்சு — உன் காலிலே விழறோம் விட்டுவிடு

பொ:— ஏண்டா!...டேய்! தாண்டவராய் முதலி நமக்கு வேண்டியவர்னு தெரியாதா — நமக்கு வேண்டிய இடத்திலேயே உங்க கைவரிசையைக் காட்டத் துணிஞ்சிங்களா — விழுங்கடா அவர் காலிலே... உம்!

(இருவரும் தாண்டவராய முதலியார் காலில் விழுந்து, எழுந்து, போகிறார்கள்.

சேட்டும் பயந்து கொண்டு போகிறான்.

தாண்டவராய முதலி கண்களைத் துடைத்துக்கொள்கிறார்.)

தா:— நல்ல சமயத்திலே வந்து சேர்ந்தே; பொன்னா! இல்லேன்னா அந்தப் பாவிகள், என்னைச் சாகடிச்சி இருப்பானுங்க...... பொன்னிக்குச் சரியான, சமயத்திலே நல்ல யோசனை வந்துது — உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தா... நீ, எங்கே இருந்தே?

பொ:— சந்தைத் தோப்புப் பக்கமாத்தான் — நீங்க படுத்துக்கங்க — ரொம்ப ஆயாசமா இருக்கும்... பொன்னி, ஒரு முழுங்கு காப்பித் தண்ணி போட்டுக் கொடு அப்பாவுக்கு...

பொன்னி:— உங்களுக்குந்தான்—இருங்க, போட்டு எடுத்துகிட்டு வாரேன்...

(உள்ளே போகிறாள்!

தாண்டவராய முதலி படுத்துக் கொள்கிறார்.

பொன்னன் உட்கார்ந்து கொண்டு, உள்பக்கம் பார்த்தபடி இருக்கிறான்.)

காட்சி—28

[சம்பந்தன் வீடு—பொன்னன், தங்கவேல் உரையாடல்]

பொ:— காப்பி அதுபோல நான் ஒருநாளும் சாப்பிட்டதில்லே தங்கவேல்! ரொம்ப ஜோரு போ!

த:— ஆமாம். அப்படித்தான் இருக்கும் — பொன்னி போட்டுக்கொடுத்த காப்பி அல்லவா... விருந்து ஆரம்பமாயிடுத்துன்னு சொல்லு...

பொ:— ஆமாம். அடிக்கடிகாப்பி பலகாரம் — சில வேளைகளிலே சாப்பாடே நடக்கும்—நானும்—சந்தையிலே ஆடு வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன்—புதன் சாயந்திரம் இரண்டு ஆடு மூணு ஆடு கொண்டுகிட்டுப் போவேன்—பொன்னி வீட்லே தான் கட்டி வைப்பேன்—தழை கிழைபோடும் பொன்னி ஆடுகளுக்கு — எனக்கும் ராத்திரி சாப்பாடு அங்கேதான்—மறுநாள் சந்தையிலே கிடைக்கிற பணத்திலே...

த:— ஒண்ணு ரெண்டு, கொடுப்பயா, பொன்னியிடம்.

பொ:— காலணாகூட வாங்கமாட்டாங்க—நானா, பலாப்பழம், பூசனிக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், இப்படி தினுசுகளாக வாங்கிக் கொண்டுபோய் கொடுப்பேன். அதை வாங்கிக்கொள்ளவே, மறுப்பாங்க... வற்புறுத்திக் கொடுத்துவிட்டு வர்ர வழக்கம்.. இப்படிச் சில நாளாக ஆக, எனக்குப் பொன்னியிடம் ஆசைவளர்ந்துகொண்டே இருந்தது. ஒரு ராத்திரி...

காட்சி—29

[பழைய சம்பவம்—பொன்னி வீடு]

(தாண்டவராய முதலியார் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார், ஒரு பக்கமாகக் கீழே பொன்னி படுத்துக்கொண்டிருக்கிறாள். வெளியே படுத்துக்கொண்டிருக்கும் பொன்னன், பாடுகிற பாட்டு, பொன்னியின் காதில் விழுகிறது. பொன்னி சிறிதளவு ரசித்தபடி பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.)


உன்மேலே கொண்ட ஆசை
         உத்தமியே! மெத்த உண்டு!

சத்தியமாச் சொல்லுரேண்டி தங்க ரத்தினமே!
        தாளமுடியாது கண்ணே! பொன்னு ரத்தினமே!

சுத்திச் சுத்தி வாரேண்டி சுந்தரியே!
       உன்னுடைய, சொர்ணமயமான கோயிலை, தங்க
                                                                                                 ரத்தினமே!

இதைக் கண்டு மனம் இளகலியோ பொன்னு ரத்தினமே!

(தன்னானே தானன்னே மெட்டிலே, பொன்னன் பாடும் இந்தப் பாடலைக் கேட்டு, பொன்னி ரசிக்கிறாள்.

சில வினாடிகள் பாடும் சத்தம் கேட்கவில்லை. பொன்னி உற்றுக் கேட்கிறாள். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்கிறாள். தூங்கும் தகப்பனைக் கவனிக்கிறாள். எழுந்து சென்று சரியாகத் தாள் போட்டிருக்கிறதா என்று பார்க்கிறாள். வெளிப்புறம் பொன்னன்படுத்திருக்கிறானா என்று பார்ப்பதற்காகக் கதவைத் திறக்கிறாள். அதே நேரம், கதவை தட்டலாமா என்ற எண்ணத்துடன், கதவருகே பொன்னன் நின்றுகொண்டிருக்-
கிறான். கதவைக் கொஞ்சமாகத் திறந்து வெளிப்பக்கம் பொன்னி எட்டிப் பார்க்கிறாள்—பொன்னன் தழதழத்த குரலில்...)

பொ:— பொன்னீ...

பொன்னி:— கூவாதே! அப்பாரு...போ...போ...போ! போய்ப்படுத்துக்கோ...

பொ:— (அருகே நெருங்கியபடி) பொன்னீ! நெடுநாளா...

பொன்னி:— (கதவைச் சாத்திக்கொண்டு வெளிப்புறம் வந்துநின்று கொண்டு) வீணான நினைப்பு! விபரிதமான யோசனை! வேணாம்...நான் கொடுத்து வைக்காதவ...வாழப்பிறந்தவளல்ல... வேணாமுங்க...பழியும் பாவமும் தேடிக்காதிங்க...படுத்துத் தூங்கப்போங்க அப்பாரு விழிச்சிக்கப்போறாரு.

பொ:— பொன்னீ! என் மனசைத் தெரிஞ்சிக்காமப்படிக்குப்பேசாதே... இதோ பாரு...

(அவள் கரத்தைப் பிடித்துக்கொள்ள, அவள் மெதுவாக அவன் பிடியை விலக்கிக்கொண்டு)

பொன்னி:— தாலி அறுத்தவ கிட்ட தகாத பேச்சுப் பேசறது தர்மமான்னு நீயே யோசிச்சிப்பாரு... உன்னோட எண்ணம் எனக்கு நல்லாத் தெரியும். நான் இந்தக் கதிக்கு ஆளாகாமே இருந்திருந்தா, அப்பாகிட்ட ஆயிரம் சண்டை போட்டாவது, கண்ணாலத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருப்பேன்—இப்ப தான் புழுத்துப்போன பழம்... கெட்டுப்போன பண்டம்—தாலி அறுத்தவ —சகுனத்தடை—இந்தப் பாவிமேலே இருக்கிற ஆசையாலே, வீணா கெட்டுப் போகாதேன்னுதான் சொல்றேன்.

பொ:— பொன்னி! அப்படி உட்கார்ந்து பேசுவம், வாயேன்! சத்யமாச் சொல்றேன், நான் தவறா நடக்க மாட்டேன்— உன்னோட சம்மதம் கிடைக்காத வரையிலே...

(பொன்னி மெளனமாக, அவன் காட்டிய இடம் செல்கிறாள். பொன்னன், கயிற்றுக் கட்டிலின் மீது! உட்கார்ந்து கொள்கிறான். பொன்னி கீழே உட்கார்ந்து கொள்கிறாள்.)

பொன்னி:— (சுற்றுமுற்றும் பார்த்தபடி) பனமரத்துங் கீழே இருந்து பாலைக் குடிச்சாலும், கள்ளைக் குடிச்சதாப் பேசுவாங்க. அதுபோல, இந்தப் பாதி ராத்திரி வேளையிலே. இப்படி நாம்ப ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கறதைப் பார்த்தா, வீணா பழி சுமத்துவாங்க, மேலும் பேசத்தான் என்ன அவசியம் இருக்குது. எனக்கு எல்லாம் முன்னமயே தெரியும்—தெரிஞ்சி என்ன பிரயோஜனம்...நான் போறேன் உள்ளே...

(முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொள்கிறாள்)

பொ:— பொன்னீ! நான் ஏதாச்சும் விபரீதமா நடந்து கொள்வேன்னு மட்டும் பயப்படாதே, உன் விஷயத்திலே நான் போக்கிரி பொன்னன் இல்லை—இதை நம்பு. விபரீதமா நடக்கறதுன்னு தீர்மானிச்சிருந்தா, இப்படி, கோயிலைச் சுத்தி வர்ரதுபோல உன் வீட்டைச் சுத்திகிட்டு இருக்கமாட்டேன், ஆபத்து, எதிர்ப்பு, இதுக்கெல்லாம் அஞ்சி இருக்கிறவனில்லே—உனக்கே தெரியும்—ஆனா உன் விஷயத்திலே மட்டும், நான், பல்லு பிடுங்கப்பட்ட பாம்பு போலத்தான்—

பொன்னி:— (லேசாகச் சிரித்துவிட்டு) ரப்பர் பாம்புன்னுகூடச் சொல்லலாம்— எனக்கும் அது தெரியுது...புரியது...இல்லைன்னா, நானும், ஒரே நாளிலே கடுகடுப்பைக் காட்டி, உன்னைக் கிட்ட நெருங்க விடாமப்படிக்குச் செய்து விட்டிருக்க மாட்டேனா...

(பொன்னன் அவள் முகவாய்க்கட்டையைத் தொட்டபடி)

பொ:— அப்படின்னா, உன் மனசிலேயும் கொஞ்சம், ஒரு எள்ளுப் பிரமாணமாவது ஆசை இருக்குன்னு சொல்லு...

பொன்னி:— எள்ளு அளவு இருந்து, எலுமிச்சை அளவாகி, இப்ப பூசனிக்கா அளவாயிருக்குன்னுதான் வைச்சிக்கயேன்—என்னா பிரயோஜனம்?

பொ:— பிரயோஜனமா, இல்லையா என்கிறது இருக்கட்டும் பொன்னி! என்மேலே துளியாவது...

பொன்னி:— (வெட்கத்துடன்) இருக்கு என்கிறதைத் தெரிந்து கொள்ள முடியலையா...

(உள்ளே எழுந்துபோக முயற்சிக்கிறாள்; பொன்னன் தடுக்கிறான்)

பொன்னி:— இப்ப, என்ன நேரம்? அப்பாரு விழிச்சுக் கிட்டா, என் கதி என்ன ஆகும்? போங்க...

பொ:— நீ என்னதான் சொல்றே? என்னாலே, உன்னை மறக்க முடியாது...

பொன்னி:— நாள் வேறே ஒருத்தர் பொருளாச்சே—உரியவரு போயிட்டாக்கூட, நான் இனியும் வேறே ஒருத்தர் பொருள் ஆகமுடியாதே. இந்த நிலையிலே இருக்கிற என்னோடு நீ கெஞ்சினாலும் கொஞ்சினாலும் என்ன பிரயோஜனம்?

பொ:— வக்கீலாட்டம் பேசறே... பொன்னி! ஏதாச்சும் ஒரு வழி தெரிஞ்சாகணுமே—எனக்கு என்னமோ உன்னோடு காலமெல்லாம்கூடி வாழவேணும்னு தோணுது...

(பொன்னி, பொன்னனைப் பாசத்தோடு பார்க்கிறாள். பொன்னன் அவளை அணைத்துக் கொள்கிறான். ஓரிரு விநாடிகளில் பொன்னி தன்னை விடுவித்துக்கொண்டு, கண்களைத் துடைத்தபடி...)
பொன்னி:— ஊர் முழுவதும் ஏசும்—ஐய்யோ! பாவம்! அவ ஒரு சுகத்தையும் காணாதவ! புருஷன் முகத்தைக்கூடச் சரியாப் பாக்காதவ—வாலிபம்—வாழவைக்கிறேன்னு ஒருத்தன் அன்போடு சொன்னான்—சரின்னு சம்பதிச்சா—அப்படின்னு உலகம் பேசாது. நான் தாலி அறுத்தப்ப, தெரு பூராவும் கூடி, ஐய்யோ பாவம்! சின்னப் பொண்ணு அவ தலையிலே கல்லு விழுந்ததுன்னு ஒப்பாரி வைச்சுது—அதே ஜனங்க இப்ப உன் யோசனைப்படி நான் நடந்தா, என்னா கொழுப்பு இந்தப் பொண்ணுக்கு! எவனையோ தேடிக்கிட்டாளாமே? என்ன அக்ரமம் இது? இந்த மாதிரி ஆசாமியை உலாவ விடலாமா? இதைப் பார்த்தா மத்ததுங்களும் கூடத்தானே கெட்டுப்போகும்—அப்படின்னு கூவுவாங்க; கொக்கரிப்பாங்க. இப்ப என்னைக் கண்ணைப்போலக் காப்பாத்தர என் அப்பாரு, தலை தலைன்னு அடிச்சிகிட்டு அழுவாரு. அண்ணன் அரிவாளையே தூக்கிகிட்டு ஆவேசமாடும். இவ்வளவையும் யோசிச்சுப்பாரு. நான் இதுகளை எல்லாம் யோசிச்சுப் பார்க்காத நாளே கிடையாது. உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடமுடியாது... இவது யோசிச்சு, என் மேலே இருக்கிற ஆசையை விட்டுவீடு, தொந்தரவு செய்யாதே — தொல்லையைத்தேடிக்காதே. எங்க குடும்பம் ஏழைக் குடும்பமா இருந்தாலும், ஊர்லே மானமுள்ளவங்க, நாணயமானவங்க நல்லவங்கன்னு பேர் இருக்குது. இதை எல்லாம் நாசம் செய்யாதே—நீயும், இந்தப் பாவி மேலே ஏற்பட்ட ஆசையாலே, நாசமாகாதே... என் பேச்சைக் கேளு...

காட்சி—29

சம்பந்தன் வீடு—பொன்னன்; தங்கவேல் உரையாடல்

பொ:— மறுக்கமுடியாத நியாயத்தைத்தான் பொன்னி சொல்லி என்னைத் தடுத்துது—நானும் துணிவு கொள்ளவில்லை. ஆசையோ அழியல்லை, அவ, தர்ம நியாயம் பேசப் பேச அந்தச் சனியன் இருக்கே — ஆசை — அது ஒண்ணுக்குப் பத்தா ஓங்கி வளர்ந்து கொண்டே இருந்தது. என்னை ஏசி இருந்தால், எனக்குக் கோபம் வந்திருக்கும். ஆனது ஆகட்டும்னு பொன்னியைத் தூக்கிக்கொண்டே போயிட்டு இருப்பேன். பொன்னியோ, புலம்பறா — புத்திமதி சொல்ற ஊர் நிலைமை உலகத்து நியாயம், இதை எல்லாம் சொல்றா—எப்படி அவளிடம் கோபம் வரும்—பாசத்தோட பார்க்கறா — பொல பொலன்னு கண்ணீர் விடறா கடைசியிலே துணிஞ்சி, நானே ஒரு யோசனை சொன்னேன் பொன்னியிடம்.

தங்:— அது என்ன யோசனை?

பொ:— ஊரைவிட்டே கிளம்பி, எங்காவது போயிடலாம்—அந்த இடத்திலே கல்யாணம் வேணுமானக்கூடச் செய்து கொள்ளலாம்னு சொன்னேன். திகில்பட்டா—முடியாதுன்னு பிடிவாதம் செய்தா—தாண்டவராய மொதலி பொண்ணு ஓடிப் போயிட்டாளாம்னு ஊர் பழிக்குமேன்னு பயப்பட்ட... ஆனா, லேசா, பொன்னி மனதிலே நான் சொன்ன யோசனை புகுந்துவிட்டுது—அரைச் சம்மதம்—அதுக்குள்ளே...

தங்:— அதுக்குள்ளே? என்ன, பொன்னா! பொன்னியோட அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சுப்போச்சா...

பொ:— அதெல்லாமில்லே...

தங்:— தயக்கம் என்ன, சொல்லு பொன்னா! அதுக்குள்ளே...

பொ:— (வெட்கத்துடன்) ஆகவேண்டியதெல்லாம் ஆயிப்போச்சு...

தங்:— (சிரித்தபடி) ஓஹோ! எண்ணம் கைகூடிப் போச்சா?

பொ:— நீ, வேடிக்கையாய்ப் பேசறே தங்கவேலு—அண்ணக்கி, ஊரையே மிரட்டற நானு நடுங்கின நடுக்கம் எனக்கல்லவா தெரியும், பாவம் பொன்னி இருக்கே, அது பேயறைஞ்சது போலாயிட்டுது.

தங்:— எப்படியோ ஒண்ணு, விவசாரம் முடிஞ்சுப் போச்சு...

பொ:— விவகாரம் முடிஞ்சுதுன்னா, வேதனை தீர்ந்துப் போச்சா. அப்பாருக்குத் துளிக்கூடச் சந்தேகம் வராதபடிக்கு நடந்து கொண்டோம். ஆனா, ஒவ்வொரு நாளும் திகில்தான், எங்கே குட்டு வெளியாகி விடுதோன்னு...

தங்:— ஓடிப் போகணும்னு யோசனை செய்தது என்ன, ஆச்சி...

பொ:— அந்தக் கண்றாவியைக் கேளேன் — பொன்னியோட அப்பா. காச்சல்லே படுத்துக்கிட்டாரு ஒரு மாசம்—எப்படி ஊரைவிட்டுப் போயிட முடியும். பாவி மனுஷன், என் கையை எடுத்துக் கண்ணிலே ஒத்திகிட்டு, பொன்னா! நான் இனிப் பிழைக்கமாட்டேன்! என் மகனோ, குடும்பத்தைக் கவனிக்காதவனாயிட்டான்—பொண்ணோ தாலி அறுத்தது— என் குடும்பம் என்ன ஆகுதோ—என்னா கதியோன்னு சொல்லிக் கதறுவார். ‘சாதாரண ஜுரம்தானே, ஆபத்து ஒண்ணும் கிடையாது, வீணா மனசை அலட்டிக்காதேன்னு’ தைரியம் சொல்லறது. ‘என் மகளே இல்லேன்னா, நான் செத்த இடத்திலே இன்னேரம் பில்லு முளைச்சிப் போயிருக்கும்’ என்பாரு எப்படி இருக்கும் எங்க ரெண்டு பேரோட மனசு. ஒரே கொழப்பம். இந்தக் கொழப்பத்திலே, ஓடிப்போயி, வேற ஊரிலே குடும்பம் நடத்தவேணும் என்கிற என்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிச்சுது — ஊருக்குத் தெரியாமப்படிக்கு, இப்படியே காலந்தள்ளினா என்னான்னு தைரியம் பிறந்தது. பிறந்து வளர்ந்து பழக்கமான ஊர் இது இங்கே என்னைக் கண்டா யாருக்கும் பயம்—போக்கிரி பொன்னன் இங்கே. பொன்னியைக் கூட்டிக்கிட்டு வேற ஊருபோனா என்னென்ன கஷ்டப்பட வேண்டி வருமோன்னு கவலை தோண ஆரம்பிச்சுது. ‘பொன்னி! பயப்படாதே! வயதான காலத்திலே, உன் அப்பாவை தனியாத்தவிக்க விட்டுவிட்டு, நாம்ப போயிடக் கூடாதுன்னு’ காரணம் சாட்டினேன். பொன்னிக்கு அந்தக் காரணம் சரின்னு பட்டுது. எங்க சினேகிதம் தங்கு தடையில்லாமே வளர்ந்துது. ‘கூத்தாடிக்கிட்டு ஊரைச் சுத்தற எங்க அண்ணன், ஒரு கல்யாணத்தைச் செய்துகிட்டு, வீட்டோடு வந்துவிட்டா. அப்பாவுக்கு நிம்மதி ஏற்படும்—நாம்ப போய்விட்டாலும் அப்பாவைக் கவளித்துக் கொள்ள வழி ஏற்பட்டுவிடும். பக்கிரி அண்ணனோ பாட்டும் கூத்தும் போதும்னு இருக்காரு—இந்த இக்கட்டுக்கு நாம்ப என்ன செய்யறதுன்னு’ பொன்னியே சொல்லுவா? இந்தச் சமயத்திலேதான் பொன்னி...

தங்:— கர்ப்பமா...?

பொ:— ஆமாம்...... பொன்னி, புலியா மாறிவிட்டா—உடனே எதாச்சும் வழி செய்தாக வேணும்—இனியும் காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தா முடியாதுன்னு வற்புறுத்த ஆரம்பிச்சா... எனக்கு, அப்போ சந்தர்ப்பம் சரியில்லை. பக்கத்துக் கிராமத்து மிராசுதாரன் தன் பண்ணையாள் ஒருத்தனைத் தடியாலே அடிச்சு கொண்ணுபோட்டான்—மத்த பண்ணையாள் பூரா கிளம்பிவிட்டுது பண்ணையாரைத் தீர்த்துக் கட்டிவிடறதுன்னு—போலீசு போட்டாங்க—ஒண்ணும் பலிக்கவில்லை — மிராசுதாரன் அறுவடைக்கே ஆள் கிடைக்காமெ திண்டாடினான்—எனக்கு ஆள் வந்துது—ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாபோல தர்ரதா சொன்னான்—பண்ணையாட்களை உருட்டி மிரட்டி வைக்கவேணும்—அறுவடை வேலைக்கு புது ஆளுகள் வந்திருந்ததே, அவங்களைப் பழைய ஆளுக அடிக்காமப் பாத்துக்க வேணும், இது நம்ம, ட்யூடி—மொத்தமா ஐநூறு கொடுத்தான். என் ஆளுங்களுக்கும் பங்கு கொடுத்து விட்டு, நானும் செலவு செய்துவிட்டேன். ஒரு மூணு மாசம் போனா, பண்ணையாரு, மேலும் பணம் தருவாரு—அதனாலே, எனக்கு அந்தச் சமயம், பொன்னியோட யோசனைக்கு இணங்க முடியல்லே. பணம் தாராளமா நடமாடின நேரம். என்னோட ஆட்களோட அதிகமான பழக்கம், எப்பவும் வெள்ளைக் குதிரை மேலேயே இருக்கவேண்டி இருந்தது சுருக்கமாகச் சொல்லவேணும்னு, நான் அந்தச் சமயம் போக்கிரி பொன்னனாக இருந்தேன். பொன்னியோட நாயகனா இல்லே. இது தெரியாமப்படிக்கு, பொன்னி, கொஞ்சம் பிடிவாதமா, கோவமா, பேசினா, எனக்குப் பழய சுபாவம் வந்துட்டுது. போடி போன்னு சொல்ல ஆரம்பிச்சேன்...

தங்:— அட படுபாவி! நம்பினவளை மோசம் செய்யலாமா? அவளோ கர்ப்பம்—ஊரிலே தலைகாட்ட முடியுமா...? அதனாலேதான் வற்புறுத்தினா, பாவம், ஓடிப்போயாகனும்னு...

பொ:— நீ சொல்றது சரி, தங்கவேல்! ஆனா நான்தான் பழைய பொன்னனா இருந்தேனே—நான் இருந்த நிலைமையும், ஈடுபட்டிருந்த வேலையும், என்னை நியாய அனியாயத்தைக் கவனிக்க வைக்குமா?

தங்:— அதைச் சொல்லப்போனா, உன்னைப்போலக் கேடுகெட்டவன் யாரும் இல்லைன்னு தான் சொல்லவேணும். மாடுபோல உழைக்கிற பண்ணைக்காரனைச் சாகடிக்கிறான் மிராசுதாரன், நீ அவனுக்காக, படை திரட்டிக்கொண்டு போறே? நியாயமா? நீயும் ஏழை, பண்ணையாட்களும் ஏழைகள்... ஏழையை அடிக்க ஏழை! பணக்காரன் ஏவுகிறான், பழிபாவம் கவனிக்காமப்படிக்கு, நீ போறே, பண்ணையாட்களை அடிக்க, உதைக்க...

பொ:— நான் செய்ததெல்லாம் தப்பு என்கிற புத்தி இப்பத்தானேப்பா வந்துது. அப்பொ, இந்த தர்ம நியாயத்தை நினைக்க நேரம் ஏது? கொளுத்து குடிசையை என்பான் மிராசுதாரன்—போடு ஐம்பதுன்னு கேட்பேன். கொடுப்பான். குடிசை சாம்பல்! அவ கொண்டையைப் பிடிச்சு இழுத்து வாடா என்பான் மிராசுதாரன். எடு இருபதுன்னு கேட்பேன், இருபது கிடைக்கும். உடனே துகிலுரியற நாடகம் நடக்கும் — அக்ரமம்தான்—அனியாயம் — ஆனா பணம் கண்ணை மறைக்குது—இந்தப் பிழைப்பிலே தனியான சுவை—புலி, இரத்தம் குடிக்குதேல்லோ. அது போலத்தான்...

தங்:— ஏழைகளுக்கு எதிரி பணக்காரனிடம் பல்லிளித்துக் கொண்டிருக்கிற மத்த ஏழைகள்தான், பொன்னா?

பொ:— எனக்கு கெட்ட பெயர்தான் இதனாலே! ஆனா, என்னைக்கொண்டு இத்தனை அக்ரமம் செய்ய வைச்சாரே பண்ணையார், அவரைப்பத்தி விசாரிச்சிப்பாரேன். தர்மசத்திரம் கட்டினவரு—சிவன் கோயில் தர்மகர்த்தா... இவ்வளவு எதுக்கு, மந்திரியே இந்தப் பக்கம் வந்தா, அவர் வீட்டிலேதான் தங்குவாரு போயேன்...

தங்:— மந்திரி! மந்திரி வேலையிலே இருங்கிறவங்களிலேயும் உன் ரகம் இருக்கத்தான் செய்யுது, உனக்கு ஐம்பது போதும் — அவனுங்க ஐயாயிரம் பத்தாயிரம் கேட்பாபானுங்க—நீ அடிப்பே குத்துவே வெட்டுவே — அவனுங்களோட ஆயுகம் வேறே — முறை வேறே...நீ போக்கிரி! அவனுங்களுக்கு ‘கணம்’—‘ஸ்ரீ’—‘சீமான்’ ‘திருவாளர்’னு பட்டம் பலது உண்டு.

பொ:— அட அது கிடக்கட்டும்பா... இதை எல்லாம் ஒழிச்சுக்கட்ட என்னா வழின்னு ஜனங்களே கூடி யோசிச்சா நொடியிலே தீர்ந்துபோகுது, என் கதையைக் கேளு; பொன்னி என்னை வற்புறுத்த வற்புறுத்த, எனக்கு மிருக சுபாவம்தான் வளர்ந்துது.

தங்:— ஆமாம்பா; ஆமாம்! இருக்கிற குற்றத்தை எடுத்துச் சொன்னா, உனக்கு மட்டுமா, ரொம்பப் பேருக்கு இப்படித்தான் மிருக சுபாவம் வளருது. ஐயா! இந்த வரி அக்கிரமம், ஏழைகளாலே தாங்கமுடியாதுன்னு சொன்னா, மந்திரிகள் புலியாப் பாயறாங்களே, பார்க்கிறமேல்லோ! 144!—உத்திரவு பிறக்குதே. ஐயா பட்டினி!— ஏழைகள் கூவினா, கொடு தடியடி! அது என்னய்யா அக்ரமம்னு கேட்டா, தள்ளு ஜெயிலிலே — இல்லைன்னா சுட்டுத் தள்ளுன்னு சொல்கிற சுபாவக் காரனுங்ளெல்லாம், ரொம்ப லேசா, கனமாயிடறாங்கப்பா!

பொ:— பாரேன் அக்ரமத்தை! பொன்னன் ரகத்திலே, பலபேரு, பல இடத்திலே இருக்காங்கன்னு சொல்லு...இதை எல்லாம் ஒழிச்சாகவேணும்...அதுக்கு வேண்டியதை, உன்னைப்போல விஷயம் தெரிஞ்சவங்க கண்டு பிடிக்கவேணும் — அது இருக்கட்டும் — என் கதையைக்கேளு — பொன்னியோ பிடிவாதமா இருக்கா—சீறிப் சீறிப் பேசறா... கண்ணைக் கசக்கறா, கையைப் பிசைந்து கொள்றா — எனக்கோ, பொன்னியை அடிக்கடி போய்ப் பாக்கக்கூட நேரம் கிடையாது...

தங்:— நீதான், ஏழைகள் மண்டையைப் பிளக்கற புண்ய கைங்கரியத்திலே ஈடுபட்டிருந்தாயே...நேரம் ஏது....!

காட்சி—30

[பழைய சம்பவம் — சந்தைத் தோப்பில் ஒரு தனி இடம்]

பொன்னி:— (தலைவிரி கோலமாக) இனியும் காலதாமதம் செய்யக்கூடாது. அப்பாருக்கு விஷயம் தெரிஞ்சிடும் போலிருக்கு...

பொன்னன்:— அட அடா அடா! உன் தொல்லை பெரிய தொல்லையாப் போச்சு, மாசம் ஐஞ்சுதானே இப்ப, இதுக்குள்ளே ஏன் பொன்னி, உயிரை வாங்கறே...

பொன்னி:— என் கோபத்தைக் கிளறாதே—நேத்து சாப்பாட்டுக்கு உட்கார்ந்ததும் வாய்க் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்தேன். அப்பா, என்னமோ ஏதோன்னு பயந்துபோயி, வைத்யரைக் கூப்பிட்டான்னாரு. அவன் வந்து, கை பார்த்திருந்தா என்ன கதியாகும்? வேணாம் இன்னமும் விஷப்பரீட்சை, இனி வீட்டிலே இருக்கறது விபரீதம்தான்.

பொன்னன்:— ஒரு விபரீதமும் வராது. இப்ப எனக்கு அப்படி இப்படித் திரும்பக்கூட அவகாசம் கிடையாது. இன்னும் ஒரு மூணுமாதம், இந்த மிராசுதாரனோட வேலை இருக்கு, அதைக் கவனிச்சாக வேணும். பிற்பாடுதான் எந்தக் காரியமும்.

பொன்னி:— அடப்பாவி! என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்காதே.

பொன்னன்:— நீயும் என் கோபத்தைக் கிளறாதே. இப்ப ஒண்ணும் தலை போயிடாது. அப்பனுக்கும் தெரிஞ்சிடாது. ஊருக்கும் யாரும் பிட் நோடீஸ் போட்டுக் கொடுத்துவிட மாட்டாங்க.

(பொன்னி அழுகிறாள்)
ஏண்டி, வீணா நீலி வேஷம் போட்டுக் காட்டறே.

பொன்னி:— தா! நீ, என்ன, சின்னக் குழந்தையா, விவரம் தெரியாத ஆளா? வயத்தைக் காட்டறேன் நான்—நீ வேலை இருக்கு என்கிறயே—அப்பா சந்தேகப்பட ஆரம்பிச்சா, என்ன செய்றது

பொ:— (கோபமாக) சொல்றது அவர்கிட்டே...கர்ப்பம்னு...

பொன்னி:— அடப்பாவீ!

பொ:— தலையைச் சீவிடுவானோ உங்க அப்பன், நடந்தது நடந்துப் போச்சி. இப்ப நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்றதுபோல சொல்லிகிட்டே இருக்கறேன். நீ என்னை இப்பவே கிளம்புடான்னு சொன்னா — நான் என்ன பண்டாரமா பரதேசிப் பயலா—உன் பின்னோட உடனே கிளம்பறதுக்கு. பத்து பேருடைய பிழைப்பு என்னோடு இருக்கு. ஒரு பெரிய மனஷனோட உயிருக்கு நான் பாதுகாப்புத் தரவேணும்? போலீசு வேறே வட்டமிட்டுகிட்டு இருக்கு. நீ வயத்தைக் காட்டி, வாய்க்கு வந்தபடி கூவினா நான் என்ன செய்றது. இப்ப என்னாலே உன் யோசனைப்படி நடக்க முடியாது. ஆமாம், பொன்னி! நான், கொஞ்சம் கோவத்திலே இருக்கறேன். சமயம் தெரிந்து நடத்துக்க—இல்லைன்னா நான் மனஷனல்ல; சொல்லிவிட்டேன்...

பொன்னி:— ஐய்யோ! இப்படி மோசம் செய்வேன்னு தெரிஞ்சிருந்தா. நான் ஜாக்ரதையா இருந்திருப்பேனே...

பொ:— நானுந்தான் — இப்படிச் சனியனா வந்து முடியும்னு தெரிஞ்சிருந்தா, இந்த இழவுக்கு ஆசைப்பட்டே இருக்கமாட்டேன்

பொன்னி:— சனியனாயிட்டதா இப்போ! இழவு ஆயிட்டதா இப்ப. அப்ப, இளிச்சு இளிச்சிப் பேசினவே—ஆயிரத்தெட்டு நியாயம் எடுத்து எடுத்துச் சொன்னனே — கெஞ்சிக் கூத்தாடிக் கெடுத்துவிட்டு இப்பச் சட்டம் பேசறியா, சட்டம்—நல்லா இருக்கு உன் யோக்யதை? உன் புத்தி வேறே எப்படி இருக்கும்? நல்ல சகவாசம் இருந்தாத்தானே—

பொ:— பொன்னி! அளந்து பேசு, ஆளைப் பார்த்துப் பேசு....வீணா அவஸ்தையைத் தேடிக்காதே...

பொன்னி:— அவதியை இனி மேலேயா தேடிக் கொள்ளப்போறேன். என் வாழ்வை நாசமாக்கத்தான் வந்து சேர்ந்தாயே? பாவி! உன்னை நம்பி மோசம் போனேனே!

பொ:— மோசம் போயிட்டயா... என்னை நம்பி நாசமாயிட்டயா......

பொன்னி:— சந்தேகமென்ன...

மொ:— சந்தேகமில்லையேல்லோ...நான் அயோக்யன்—உன்னைக் கெடுத்துவிட்டு கைவிட்டு விட்டேன்—அதுதானே, உன் எண்ணம்..

பொன்னி:— கைப்புண்ணுக்கு கண்ணாடியா வேணும். உன் வஞ்சகம்தான் வெட்ட வெளிச்சமாத் தெரியுதே. பெண் புத்தி பின் புத்தி — என்கிறதுதான் சரியாப் போச்சு, ஒரு குடிகாரன், கொலைகாரன், போக்கிரி, இப்படிப்பட்ட ஆசாமியை நம்பினா, மோசம்தான் ஏற்படும் என்கிற முன்யோசனை இல்லாமப் போச்சே! ஐய்யய்யோ! என் கதி என்ன ஆகுமோ?

(பொன்னியின் தலைமயிரைப் பிடித்திழுத்து அவளைக் கீழே தள்ளியபடி)

பொ:— கண்டபடி உளறாதே கழுதே!

பொன்னி:— கொல்லு—சாகடி—ஆமாம்—என்னைச் சித்ரவதை செய்யறதைவிட, சாகடிக்கறது எவ்வனவோ மேல்...

பொ:— நான் சாகடிக்கவேணுமா... ஏன் ஊரிலே, குளம் குட்டை, மரம், மடுவு இல்லையா...

(போகிறான். அவன் காலைப் பிடித்திழுக்க பொன்னி முயல்கிறாள். அவன் அவளைத் தள்ளிவிட்டு)

பொ:— இண்ணைக்கோட, எனக்கும் உனக்கும் இருந்த சம்பந்தம், சினேகிதம் தீர்ந்துப் போச்சு. இனி நீ, எக்கேடாகெடு, என்ன பாடோ, எனக்கென்ன... சனியனே!

(போய் விடுகிறான்)

காட்சி—31

[சம்பந்தன் வீடு—பொன்னன், தங்கவேல் உரையாடல்]

த:— என்ன கல்மனசு பொன்னா உனக்கு....

பொ:— கோபம் வந்துட்டா அப்படித்தான் எனக்கு. கண்மண் தெரியறது இல்லை. பொன்னியைத் திரும்பிக்கூடப் பார்க்கறதில்லே. மிராசுதாரனோட வேலையும் முடிஞ்சுது. பொன்னியோட ஞாபகம் வந்து குடையுது — ஆனா வெட்கமாகவும் இருந்தது. எப்படி மறுபடியும் அவளோடு பேசுவதுன்னு பயமாயுமிருந்தது.

த:— அந்தப் பொண்ணு தத்தளிச்சிருக்கும்.

பொ:— நான் உண்மையாகவே மோசம் செய்து விட்டேன்னு தீர்மானிச்சி, உயிரைப் போக்கிக் கொள்றதுன்னு துணிஞ்சி, தூக்கு மாட்டிக்கிட்டா. நல்ல வேளையா பக்கிரி காப்பாத்தினான்—என் கண்ணையும் திறந்தான்—எனக்கும் தைரியம் பிறந்தது. இடையிலே நான் முரட்டுத்தனமா நடந்துகொண்டேனே தவிர. எனக்குத்தான், ஆரம்ப முதல் பொன்னியிடம் உண்மையான அன்பு இருந்து வந்ததே. அதனாலே பக்கிரி சொன்ன யோசனைப்படி, தாலி கட்டிவிட்டேன். பொன்னியோட வாழ்வு நல்லவிதமாச்சி. நானும் புது மனுஷனாகிவிட்டேன். இது தான் என் காதல் கதை. சந்தைத் தோப்பு, குடிசை வீடு, சல்லாபம், சண்டை, இப்படி நம்ம காதல் கட்டம் இருந்தது. உன் காதல், பட்டணத்துக் காதலாச்சே—பீச்சு, சினிமா, டான்சு, கடிதம் இப்படி இருந்திருக்கும். நீ, சோல்ஜர்! உனக்குச் சேர்ந்த ஜோடி, டாக்டர். கேட்க வேணுமா—உங்க காதல் கதையே, தனி தினுசாத்தான் இருந்திருக்கும். ஏன், தங்கவேலு, அப்படித்தானே...அட, சொல்லேன்... இப்ப நான் சொல்லலியா விவரமா, எங்க பட்டிக்காட்டுக் காதலை... அதுபோல உங்க பட்டணத்துக் காதலைக் கொஞ்சம் சொல்லேன்—அது, எப்படி இருக்குன்னு பார்ப்போம்... வெட்கமா...இதிலே என்னப்பா வெட்கம்... நீ, கேட்டிருந்தா, நான் இன்னம் விவரமாக்கூடச் சொல்லுவேன், எங்க காதலை...

த:— என் கதையையா கேட்கிறாய், பொன்னா! பட்டிக்காடு பட்டணக்கரை எதுவாக இருந்தாலும், இந்தக் காதல் விவகாரம் ஒரே தினுசாத்தானேப்பா இருக்கும்...

பொ:— இந்த ‘நைஸ்’ பேச்சு வேணாம்—சொல்ல இஷ்டமில்லேன்னு சொல்லேன்—நீ சோல்ஜராச்சே, உன் காதல் கதை, கோட்டையைத் தாக்கி, படையை விரட்டி, பிற்பாடு அந்தப்புரத்துக்குள்ளே போயி, பொண்ணைத் தூக்கிட்டு வெளியே வந்து, பஞ்ச கல்யாணி குதிரைமேலே ஏத்திக்கிட்டு, காத்தாப் பறந்து வாரதா இருக்கு போலிருக்கு.

த:— (புன்னகை செய்து) பொன்னா! ஒரே அடியாக் கிண்டல் செய்யறியே... கோட்டை கொத்தளம் குறுக்கிடலே என் காதல் விவகாரத்திலே......

பொ:— குறுக்கிட நினைச்ச கொடும்பாவியைத்தான் நான் சரிப்படுத்தியாச்சே— இனி என்ன; ஜெயம்தான் உன்பாடு......

“லாலீ, லாலீ, சுப லாலீ லாலீ"

(கேலியாகப் பாடுகிறான்)

த:— (சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு) சொல்ல வேணும்னு எனக்கும் தோணுது பொன்னா! கேள் என் கதையை... நான் பட்டாளத்திலே சேரும் போதே கொஞ்சம் படிச்சவன் தான் ...அங்கே போய், மேலும் கொஞ்சம் உலக விவகாரத்தை அறிய முடிஞ்சுது... ஓய்வு கிடைக்கிறபோதெல்லாம், படிப்புதான்... பட்டாளத்தைக் கலைக்கிற போது எனக்கும் சீட்டு கொடுத்து விடலே—மேலதிகாரி என்னை ரொம்பச் சிபார்சு செய்ததாலே, அழகூரிலே சிப்பாய்களுக்கு உதவி செய்கிற சங்கத்திலே எனக்கு நல்ல உத்தியோகம் கிடைச்சுது—சண்டையிலே ஈடுபட்டு, கைபோய், கால்போய், கண்ணைண இழந்து கஷ்டப்படுகிறவங்களெல்லாம் உண்டு தெரியுமில்லோ, அவங்களுக்கு உபகாரம் செய்ய அந்தச் சங்கம். அதிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்...

பொ:— ஓஹோ புரியுது, புரியுது, உள் ஜோடி அங்கே டாக்டரா வேலை பார்த்துதா?

த:— இல்லே, பொன்னா? இல்லே!

பொ:— சொல்லு, தங்கவேலு, சொல்லு...முத முதல் எங்கே பார்த்தே? எப்படி?

த:— முதமுதல் பார்த்ததா..! வேடிக்கையாத்தான் இருக்கும் அது...... கேளு சிப்பாய்களோட உதவிக்குத் தானே சங்கம்... அதிலே தான் எனக்கு வேலை.. அந்தச் சங்கத்துப் பெரிய அதிகாரி, சங்கத்துக்குப் பணம் சேர்க்க, ஒரு நாடகம் போடவேணும்னு சொன்னார்...

பொ:— யாரை? உன்னையா?... என்னா நாடகம்...

த:— எதுவா இருந்தா என்னா சங்கத்துக்குப் பணம் வேணும்...சரின்னு, என்னோட சினேகிதர்களைக் கொண்டு நாடகம் தயார் செய்தேன்...

பொ:— பலே, நாடகத்திலே டாக்டரய்மா வர, நீ அவங்களைப் பார்க்க, அவங்க உன்னைப் பார்க்க, அப்படியே காதல் வளர்ந்தது...

த:— இல்லே, பொன்னா! இல்லே! நாடகம் ஏற்பாடாச்சா...அதிலே ஒரு டான்சு...

பொ:— டான்சு வேறேயா...!

த:— ஆமாம்—டான்சுக்கு மட்டும் யாராவது ஒரு பொண்ணு வேணும், இருவதோ முப்பதோ கொடுத்துடலாம்னு யோசனை சொன்னாங்க—சரின்னு ஒப்புக் கொண்டேன்.—ஒப்புக்கொண்டேனா— யாரை டான்சுக்குப் கூப்பிடறது—அதுவும் என் தலையிலே — தங்கவேலுதான் நல்ல டான்சுக்காரியை ஏற்பாடு செய்ய வேணும்னு சொல்லிட்டாங்க—என்ன செய்யறது. அதுக்கும் சரின்னு சொல்லிவிட்டு, ஓரு ஆசாமியை அழைச்சிகிட்டு—அவனுக்கு இந்தமாதிரி விஷயத்திலே பழக்கம்—டான்சு ஆடுகிறவர்களைத் தேடப் பொறப்பட்டேன்.

பொ:— (தங்கவேல் முதுகைத் தட்டியபடி) பலே ஆளப்பா நீ... சொல்லு, சொல்லு...டான்சுக்கு ஆள் தேடப் படை எடுத்தே...என்னா நடந்தது!...

த:— (சிரித்தபடி) அந்தக் கூத்தை ஏன் கேக்கறே, போ! அந்த சனியன் பிடிச்சவன் ஒவ்வொரு இடமா அழைச்சிகிட்டுப் போனான்! ஒரு கண்றாவியா பார்த்தேன்...!சகிக்கில்லே சிலது...ஒரு இடத்திலே எனக்குச் சிரிப்புத் தாளாமப்படிக்கு, ‘ஓ’ன்னு சிரிச்சிக்கூடப் போட்டேன். அந்தப் பொம்பளையோட அம்மா பிடிச்சிகிட்டது சண்டைக்கு...

காட்சி—33

(பழைய சம்பவம்—ஒரு நாட்டியக்காரி வீடு)

[தங்கவேல், ஒரு தரகன், நாட்டியமாடுபவள். நடன ஆசிரியன், நாட்டியமாடுபவள் தாய் ஆகியோர் உள்ளனர்.

நாட்டியமாடுபவள் நடுத்தர வயதுடையவள். கனமான சரீரம்—களையற்ற முகம்.

அவள் ஆடுவதை, தாயும் ஆடல் ஆசிரியனும் பாராட்டுகிறார்கள். தரகன், தங்கவேலுவின் அதிருப்தியைத் தெரிந்துகொண்டு திகைக்கிறான்.]

உனைத் தேடித் தேடி தேடி ஓடினேன்
ஊரெல்லாம் உலகெல்லாம். (உனைத் தேடி)

தேடித் தேடி நான் ஓடியதால்
மிகத் தேடி தேடி நான் ஓடியதாலே
தேகம் மிக வாடி மெலிந்தேன், அடி சேடி! (தேடி)

(இந்தப் பாடலை, காது குடையும் விதமாக, ஆடல் ஆசிரியன் பாட, நாட்டியமாடுபவள் வாயசைத்தபடி நடனமாட அதைக்கண்டு அவளுடைய தாயார் மிக உருக்கமாக மகளைப் பார்த்து ரசிக்கக் கண்ட தங்கவேலுவால், சிரிப்பை அடக்க முடியவில்லை. உரத்த குரலில் சிரித்து விடுகிறான். ஆடல் ஆசிரியன், முறைத்துப் பார்க்கிறான். அம்மா! என்று அழுகுரலில் கூவிக் கொண்டே, நாட்டியக்காரி, தாய் அருகே செல்கிறாள்.)

தாய்:— (அவளை அணைத்தபடி, தங்கவேலுவைச் சுட்டுவிடுபவள் போலப் பார்த்துவிட்டு, மகளிடம், கொஞ்சும் குரலில்) நீ சும்மா இருடா கண்ணு. சும்மா இரு. (தங்கவேலைப் பார்த்தபடி) இதுவோ, ரசிக்கத் தெரியாத, காக்கிச்சட்டே—உன்னோட ஆட்டத்தோட அருமை இப்படிப்பட்டதுங்களுக்கு, என்னா தெரியும் — (தரகனை முறைத்துப் பார்த்து) எல்லாம் இவனைச்சொல்லவேணும், பெரிய ஜெமீன்தாரனை அழைச்சுகிட்டு வந்துட்டான். வகை கெட்டவன் (இருவரையும் பார்த்து) போங்க, போங்க எழுந்து. (பெண்ணிடம்) நீ அழாதேடா கொழந்தை, அழாதே! போன வெள்ளிக்கிழமை போடி மிட்டாதார் பார்த்தாரே. உன் ஆட்டத்தே, என்னா புகழ்ந்தாரு, எவ்வளவோ பாராட்டினாரே, தெரிஞ்சவுங்களுக்குத் தெரியும், தெருவிலே சுத்தறதுகளுக்கு எல்லாமா தெரியப் போவுது, உன் நாட்டியத்தோட அருமை பெருமை...போ, போ, எழுந்து வந்துட்டான் நாட்டியம் பாக்க...

(தரகன் நழுவுகிறான்.)
த:— கோவம் ஏம்மா, இவ்வளவு... எனக்கென்னமோ, இந்த அம்மா தேகம் மெலிஞ்சு போச்சுன்னு பாடி ஆடினதும், ‘பக்’குன்னு சிரிப்பு வந்துவிட்டுது... இதுக்கு இவ்வளவு கோவம்...பேச்சு...கூடாது பாருங்க...

நாட்டியமாடியவள்:— (அவனைக் கேலி செய்யும் விதமாக) சரிங்க...நீங்க போங்க...ஒங்களுக்குக் கோடி புண்யமுங்க...

(உள்ளே தாயும் மகளும் செல்கிறார்கள். தங்கவேல் சிரித்தபடி வெளியே செல்கிறான். தரகன், பயந்தபடி உடன் வருகிறான். ஆடலாசிரியன் வெற்றிலை போட்டுக்கொள்கிறான்.)

(வீதியில் நடந்தபடி)

தங்:— நாட்டியமாம், நாட்டியம் — ஏம்பா! இந்தப் பொம்பளைக்கு வயது நாற்பது இருக்கும்போல தோணுதே—சரீரமோ (கேலி செய்து காட்டியபடி) இப்படி இருக்கு— இதிலே ஆடலாம் ஆடல். சகிக்கலேயே...

தர:— சரீரம் கொஞ்சம் பெருத்துப் போச்சிங்க—அதனாலே நாட்டியம் உங்க கண்ணுக்குப் பிடிக்கல்லே—ஆனா, பரத நாட்டிய ஞானம் பரிபூரணமா இருக்கிற ஆட்டமுங்க இது...பெரிய மனுஷாளெல்லாம் இந்த நாட்டியத்தைப் பார்த்து பெருமையாகச் சொன்னாங்க.

(பாடியபடி)

பூங்கொடி! ஆடுதுபார்!!
புதுமணம் அதுதரும்
அழகிய முன்கைப் பூங்கொடி
ஆடுதுபார்!

என்கிற பாட்டுக்கு ஆட்டம் ஆடும், நம்ம, அற்புதம். ரொம்ப....

தங்:— பெயரு, அற்புதமா?

தங்:— ஆமாங்க, அபிநயசுந்தரி அற்புதம்னு பேரு...

தங்:— லட்சணந்தான்—பூங்கொடி ஆடுது பார்னு பாட்டு...அதற்கு இந்த அம்மா ஆடுவாங்க!...கண்ணறாவி...

தர:— உங்களுக்கு என்னமோ பிடிச்கல்லீங்க. போனமாசம், மந்திரி ஒருத்தரு தலைமை வகிச்சி, அற்புதத்தோட டான்சு நடந்தது பாருங்கோ, ரொம்பப் பிரமாதம்...

தங்:— மந்திரி தலைமை வகிச்சாரா? இந்த டான்சுக்கா!...

ஆச்சரியமாக! ஆமாங்க... ஏனுங்க...மந்திரின்னா டான்சு விஷயம் தெரியாதுன்னு நெனைக்கிறீங்களா...

தங்:— (கேலியாக ) சேச்சேசே! அப்படி நினைப்பனா! எல்லாம் தெரிந்தவர்னுதானே மந்திரியாக்கினாங்க... டான்சு விஷயம் மட்டும் தெரியாமலா இருக்கும்...

தர:— அண்ணக்கி ஒரு ஸ்பெஷல் டான்சுங்க—வீராவேசமான ஆடலு...மந்திரி அதை ரொம்பப் பாராட்டிப் பேசினாரு...நாடெல்லாம் அந்த டான்சு நடக்க வேணும்னு அடிச்சிப் பேசினாருங்க...

தங்:— அதென்ன டான்சு? மந்திரி பாராட்டுகிற மாதிரியான் டான்சு...

தா:— (அபிநயத்துடன்) பாருங்க — புருவத்தை நெறிச்சி, கண்ணைத் தொறந்து, ஒரு விறைப்பு விறைச்சி, கையை மடக்கிட்டு,

பஞ்சம் பஞ்சமென்று பதறுகிறீர்களே
எங்கும் பஞ்ச பஞ்ச மென்று பதறுகிறீர்களே
பாரத தேசத்து மக்களே!
நீங்கள் நம்பண்டிதர் சொல்வதைக் கேட்டீரோ...

இந்த இடத்திலே ரொம்பப் பணிவா, கொஞ்சுகிற மாதிரியா அபிநயமுங்க.

பண்டிதர் சொல்வதைக் கேட்டீரா
ஜவஹர் பண்டிதர் சொல்வதைக் கேட்டீரா
                                                                   (பஞ்சம் பஞ்சமென்று)

உடனே துரித காலம்—அதாவதுங்க, கொஞ்சம் வேகத்தோட, பாட்டு

பாடுபட்டால்தானே
பலன் காணலாம்
நீங்க ளெல்லாம்
நித்த நித்தம்
ஓயாமல்
எல்லோரும்
பாடுபட்டால்தானே
பலன் காணலாம்.

பட்டினி பசி என்று
பதறிடலாமா?
பண்பு இது ஆமா?
பஞ்சம் பஞ்சம் என்று பதறுகிறீர்களே
பாரத தேசத்து மக்களே!

இந்தப் பாட்டுக்கு அற்புதத்தோட நடனம் இருக்கே மந்திரி, அப்படியே அசந்து உட்கார்ந்து விட்டாருங்க. அவர் பேசினபோது, இந்தப் பாட்டைக்கூட அடிக்கடி சொன்னாரு — இந்தப் பாட்டைப்பாடி அற்புதத்தோட டான்சை ஊரூருக்கும் நடத்துனா, பஞ்சம் பசி, பட்டினி, வேலையில்லை, கூலி போதல்லேன்னு சதா சர்வ காலமும் மூக்காலே அழுது கொண்டிருக்கிறவங்க ளெல்லாம்கூட கப்சிப், வாயை மூடிக்கொண்டு விடுவாங்கன்னு மந்திரி சொன்னாரு. ஜனங்க...

தங்:— கை தட்டி இருப்பாங்க...

தர:— (சலிப்பாக) இல்லிங்க! ஹே! ஹேன்னு கேலியாக் கூவினாங்க...

தங்:— ஆமாம்... இந்த ஜனங்களும், என்னைப் போலத்தான், ரசிக்கத் தெரியாததுங்க....அது கிடக்கட்டும்பா, இந்த மாதிரி டான்சுகள் மந்திரிகள் வருகிற இடத்திலேயே இருக்கட்டும் — அப்பத்தான் சௌகரியமா நடக்கும் —ஏராளமாய்ப் போலீசு வரும்; ஜனங்க ஒரு ரகளையும் செய்ய முடியாது—நீ, நமக்கு வேறே டான்சு ஏற்பாடு செய்யணும்.....ஜனங்க பாக்கறது போல.

தர:— டான்சு, உங்களுக்குப் பிடித்தந்தானுங்களே...

தங்:— அற்புதத்தோட ஆனைத் தாண்டவமா?

தர:— இல்லிங்க...பொதுவா...

தங்:— பொதுவா, பிடிக்கும்தான்...

தர:— அதானே கேட்டேன்—சில பேர் டான்சு கூடாது என்பாங்க... ஏனுங்க, நம்ப ஜவாஹர்லால் நேரு எங்கேயோ டான்சு ஆடினாராமே, தெரியுங்களா? பேப்பர்காரன் போட்டிருக்கானாமே...

தங்:— எதை? படமா?

தர:— படம் இன்னும் போடலிங்க...ந்யூஸ் போட்டிருக்காம்—எங்கயோ மலை ஜாதியாரு நம்ம பண்டிதரு வந்திருக்காருங்கிற சந்தோஷத்திலே டான்சு ஆடினாங்களாம். நம்ம ஜவாஹர், பார்த்துக்கிட்டே இருந்தாராம். ஜோரான டான்சாம்! குஷியாகி விட்டாராம். உடனே அவரும் அவங்ககூட சேர்ந்துகிட்டு டான்சு ஆடினாராம்—நம்ம அற்புதம் அதைப் படிச்சூட்டு, ஒரே ஆச்சரியப்பட்டுது. அவ அம்மா இல்லின்க, ஆற்காட்டா, அவ சொன்னா, இதென்னடி அச்சரியம், அந்தக் காலத்திலே கோபாலகிருஷ்ணன் கோபீகாஸ்திரீகளோட கோலாட்டம் ஆடலியா...ன்னு...

தங்:— அப்பா! உன் பேச்சை நிறுத்திக்கோ—நீ ரொம்பப் பெரியவங்க விஷயமல்லாம் பேசறே—நான் அதுக்கெல்லாம் ஆளல்ல—டான்சு வேறே உண்டா?

தர:— வாங்க...எத்தனையோ இருக்கு. நீங்க சிறுசுகளா டான்சு ஆட வேணும்னு கேட்கறீங்க... வாங்க, வாங்க...

(ஒரு வீட்டில் நுழைந்து)

தர:— முத்தம்மா! ஓ! முத்தம்மா!

(ஒரு மாது வருகிறாள்: கும்பிடுகிறாள்)

தர:— கொழந்தெ, எங்கே...? இதோ இவரு பெரிய, சபா நடத்தறாரு...டான்சு வைக்கறாரு...

யாது:— சந்தோஷமுங்க... ஜலஜா...ஜலஜா... இதோ வந்து விடும்ங்க... பக்கத்து வீட்லேதான் இருக்கு... உட்காருங்க.

(வெற்றிலைத்தட்டு வைத்து) போடுங்க...
(எட்டு வயதுப் பெண் உள்ளே ஓடி வருகிறாள் சோல்ஜரைக் கண்டு சிறிது பயம் ஏற்படுகிறது. ஆனால் தரகன் புன்னகை செய்யவே பெண்ணும் புள்னகை செய்கிறது. தங்கவேல் முகம் சுளித்துக் கொள்கிறான். உள்ளே பெண் செல்கிறாள்.)

தங்:— (கேலியாக) ஏம்பா! இதும் பேரு, ஜலஜா...வா...

தர:— ஆமாங்க, ஜலஜா...நல்லா இல்லிங்க?

தங்:— பொண்ணா?

தர:— (அசட்டுத்தனமாக) பேருங்க...

தங்:— அற்புதமா இருக்குது—இது ஆடுதா...

தர:— ஆமாங்க...! ஊசி பட்டாசே—ன்னு டான்சு பாத்தீங்களேல்லோ, சினிமாவிலே...

தங்:— இது தான் ஆடினதா...?

த:— இதைத்தாங்க ஏற்பாடு செய்தாங்க முத முதலு—பிற்பாடு ‘ரேட்’விஷயமான தகறாரு—வேறு பெண்ணே போட்டு எடுத்துட்டாங்க இப்பக்கூட ஊசிப்பட்டாசு ஆடச் சொல்றேன்—

(இதற்குள் தாயார் வந்துவிடுகிறாள்)

மாது:— பெரிய சபாவிலே, ஊசிபட்டாசு, ஆனை வெடி, அப்படி இப்படின்னு அபத்தமான டான்சா வைக்கறது—வேறே நேர்த்தியானதா இருக்குது—பாருங்க.

(சிறுமி நடனக் கோலத்தில் வருகிறாள். தாயார் பாட, சிறுமி ஆடுகிறாள்)
என்னடி? எனை மருவிச் சுகித்த குகன், வராத, காரணம் என்ன?
(ஆடல் முடிவதற்குள்)

தங்:— பிறகு வருகிறேன்.

(என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறான் தங்கவேல், தரகனைப் பார்த்து முறைக்க)

தர:— சாமீ—! உங்களுக்கு டான்சு ஏற்பாடு செய்ய, நம்மாலே ஆகாது — நீங்க போயிட்டு வாங்க...

(போகிறான்)

தங்:— ஏய்! இந்தா...

(ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டு மேலால் செல்கிறான்)

காட்சி—34

(தங்கவேல் பொன்னன் உரையாடல்)

தங்:— இதுபோலப் பல கண்றாவிக் காட்சி...பல இடம் விதவிதமான டான்சு...எனக்கு என்னமோ எதுவும் பிடிக்கல்லே அட டான்சே வேண்டாமேன்னு சொன்னா நம்ம சினேகிதர்களோ, விடல்லே...போடா, போய்த் தேடிப் பார்த்தா, கிடைக்காதான்னு கேலி பேசுறாங்க...

பொ:— ஆமாம்...தேடிப் பார்த்தா ஒரு டான்சு ஏற்பாடு செய்யவா முடியாது...

தங்:— தேடித் தேடிப் பார்த்தேன்—கடைசியா என் மனதுக்குப் பிடித்தமாகக் கிடைச்சது...

பொ:— அப்படிச் சொல்லு...!

தங்:— கிடைச்சி..? கேள்,கதையை! டான்சுக்கு வரமுடியாதுன்னு அந்தப் பெண்ணு பிடிவாதம் பேசி....

பொ:...அடே!! அது என்ன பிடிவாதம்...? டான்சு ஆடுகிற பொண்ணுதானே...

தங்:— ஆமா... நான் கூப்பிட்டா, மறுக்குது பொண்ணு—ஏன் தெரியுமா? கேள்... ஒரு நாள் விளக்கு வைத்த பிறகு, இப்படி ‘ரோந்து’ வந்தேன்—

பொ:— உனக்குத்தான் புது ‘டூடி’ இருக்கே—டான்சு வேலை...

தங்:— அந்த ட்யூடிக்காகத்தான்! ஒரு மூட்டுச் சந்து — ஓட்டு வீடு — ஜல்ஜல்னு வெளியே சத்தம் கேட்டுது — உள்ளே போனேன்...

பொ:— தைரியம் வந்தூட்டுது!

தங்:— ஆமாம்—உள்ளே போனா ஒரு பென்ணு—அழகானவ—இருவது அல்லது அதுக்கும் குறைவான வயசுதான் இருக்கும் — ஆடிக்கொண்டு இருந்தது — ஒரு நாலைந்து ஆசாமி டான்சை பார்த்துக்கொண்டிருந்தாங்க—சினிமாக்காரருன்னு கேள்விப்பட்டேன். பிறகு — நானும் உட்கார்ந்தேன்—சினிமாக்காரரு நான் டான்சருக்குத் தெரிந்தவன்னு எண்ணிக் கொண்டாங்க போலிருக்கு—டான்சரு, நான் சினிமாக்காரருக்கு வேண்டியவன் போலிருக்குன்னு எண்ண வேண்டியதுதானே — ஆக மொத்தம், என்னை யாரும், யாரு என்னன்னு கேட்கலே — மேலும் நான் பட்டாள ‘டிரசிலே’ போகலே...

காட்சி—35

(பழைய சம்பவம் — நாட்டியமாடுபவள் வீடு)

(இருபது வயது மதிப்பிடத்தக்க பெண் ஆடிக்கொண்டிருக்கிறாள். டாம்பீகமாக உடையணிந்த நாலைந்து பேர், உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நடனம் ரம்மியமாக இருக்கிறது. தங்கவேல், உள்ளே நுழைந்து, உட்கார்ந்து நடனத்தை ரசிக்கிறான் நடனம் முடிந்ததும், நாலைந்து பேரில் ஒருவர், சில நோட்டுகளைத் தட்டிலே வைத்துவிட்டு)

ஒரு:— திருப்தியாகவே இருக்கு... நாளைக்கு மறுநாள்—

இன்னொருவர்:— வெள்ளிக்கிழமைதான் நான் இருப்பேன்...

ஒரு:— சரி, வெள்ளிக்கிழமை, கார் அனுப்புகிறேன் — வந்துவிட்டால், எல்லாம் பேசி முடித்து விடலாம்...

பெண்:— சரிங்க...

(அவர்கள் விடைபெற்றுக்கொண்டு போகிறார்கள். தங்கவேல் மட்டும் போகவில்லை. இதைக் கண்டு, பெண்ணும், அவளுடன் இருந்த ஒரு முதியவரும், தங்கவேலுவைப் பார்த்து)

பெண்:— நீங்க...

முதி:— ஆமா, நீங்க...

தங்:— நான், அவர்களோடு வந்தவனல்ல...தெருவழியாகப் போகும்போது, டான்சு சத்தம் கேட்டது—உள்ளே வந்தேன் — நல்ல டான்சு, அதனாலே உட்கார்ந்து விட்டேன்.

(டான்சுக்கு இசைக் கருவி வாசித்தவர்கள் வெளியே செல்கிறார்கள்)

பெண்:— அப்பா! நான் இவர் வந்து உட்கார்ந்ததும் டைரக்டரோ, என்னவோன்னு எண்ணிக்கொண்டேன்—

தங்:— நான் டைரக்டருமல்ல, சினிமாகாரனுமல்ல...ஒரு சபாக்காரன்...

பெண்:— அப்படிங்களா...சபாவிலே கச்சேரி நடத்துவதுதானுங்க சிலாக்யம்...

முதி:— ஆமா, கவுரவம்! ஆனா, சபாக்காரரு, வாய் நிறையப் பேசுவாங்க, வாழ்த்துவாங்க, பணம்?...

பெண்:— அது, சினிமாக்காரர் கொடுப்பாங்க.

தங்:— சினிமாக்காரருக்கு, உங்களாலே ஏராளமாக கிடைக்குது —உங்களுக்குக் கொடுக்க கசக்குதா. எங்க சபாவிலே ஒரு நாடகம்— நிதி நாடகம்—அந்த நாடகத்திலே, ஒரு டான்சு இருக்கவேணும் — இதுக்குப் பொருத்தமான டான்சுக்காரராத் தேடித் தேடி, அலுத்துப் போயிட்டேன். கடைசியிலே, இங்கே வந்தேன் — திருப்தியா இருக்கு—நீங்க, பணத்தைப் பெரிசாக் கருதாமபடிக்கு, உபகாரம் செய்யறதா எண்ணிக்கொண்டு, எங்க சபா நாடகத்திலே டான்சு ஆட வரவேணும்...

முதி:— கச்சிதமாப் பேசறீங்களே...

தங்:— ஐயய்யோ! அதெல்லாம் இல்லீங்க...எனக்கு முந்திப்பிந்தி பழக்கமே கிடையாது.

முதி:— பழக்கம் இல்லாவிட்டா என்ன...எப்ப அந்த நாடகம்?

தங்:— அடுத்த மாதம் பதினாலு...

முதி:— பதினாலாம் தேதியா...அடடே! வேறே ஒரு கச்சேரி இருக்குமே...

தங்:— தேதியை மாத்திப்போடச் சொன்னாலும் பரவாயில்லை...

முதி:... செச்சே! வேண்டாம்பா, அதே தேதியே இருக்கட்டும்... ஏம்மா, பொற்கொடி! என்னா! நல்ல மனுஷரா எனக்குத் தோணுது — சபாவும் நல்லதாத்தான் இருக்கும்...

பெண்:— நாடகம் எப்படிப்பட்டதோ...?

தங்:— நாடகம் நல்ல கதைதாம்மா! சோஷல்!

பெண்:— சோஷல்னு சொல்வாங்க...போனா, ஒரு சீனிருக்கும், ஐஞ்சாறு தடியன்க குடிச்சுட்டுக் கிடப்பாங்க— நீ டான்சு ஆடிக்கிட்டே அவங்களுக்குக் ‘கிளாஸ் கிளாசா’ கொடு என்பாங்க...சகிக்காது.

தங்:— அதைப்போல் இல்லம்மா! இதிலே டான்சு, நல்ல, நாகரிகமான சந்தர்ப்பத்திலே தான் இருக்கு...

முதி:— சரீ...நூறு ரூபா தரவேணும்...

தங்:— ஆயிரம்கூட, கேட்கலாம். ஆனா, எங்க சபா, வியாபாரம் நடத்தறது இல்ல...பணம் அதிகம் கிடையாது... ஐம்பது ரூபாதான், டான்சு செலவுக்குன்னு ஒதுக்கி இருக்கு—இதிலே இப்பவே ஆறு ரூபா நான் செலவாக்கிவிட்டேன்...

பெண்:— அப்பா பணம் அவர் சௌகரியம் போலக் கொடுக்கட்டும்...

முதி:— சரி...சபா கச்சேரின்னா பொற்கொடி கண்டிப்பாவே இருக்காது—

பெண்:— சபா பேர் என்ன?

தங்:— சிப்பாய் சகாய சபா—!

முதி:— சோல்ஜர் கிளப்பா?

பெண்:— ஆமாம்பா! சோல்ஜர் கிளப்தான்—தெரியும் எனக்கு—(கண்டிப்புடன்) நான் வரமுடியாது...

தங்:— என்னம்மா! சோல்ஜர்களுக்கு உபகாரம் செய்ய நிதி திரட்டத்தான் நாடகம்...

பெண்:— சோல்ஜர் கிளப்பிலே நான் டான்சு ஆட வரமுடியாது.

முதி:— பொற்கொடிக்குப் பயம்! பட்டாளத்துக்காரருங்க எதிரே ஆடினா, ஒருவகையிலே கேவலமாக்கூட எண்ணுவாங்க...

பெண்:— பயமுமில்லை — கேவலமுமில்லே! என் மனம் இடந்தராது, அவ்வளவு தான் — நீங்க மன்னிக்க வேணும்—நீங்களும் சோல்ஜர்தானா..?

தங்:— ஆமாம்...

பெண்:— உடையை மாத்திக்கொண்டு வந்திங்க...(கும்பிட்டபடி) என்னை மன்னிச்சிடணும்—நான் வரமுடியாது—(கண்களில் நீர் தளும்புகிறது)

தங்:— ஏம்மா, ஒரு தினுசா பேசறே... என்னா?

பெண்:— (முதியவரைக் காட்டி) இவர், என் அப்பா இல்லா...தூர பாத்தியம்—திக்கற்ற என்னைப் பாதுகாக்க, இவரை நான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதாலே, இங்கே இருக்கிறாரு...

முதி:— அந்தக் கதையை எல்லாம் ஏம்மா இப்பச் சொல்லவேணும் — மகதான் நீ—பெத்தாதானா மக.

பெண்:— வருத்தப்படாதேப்பா! அதுக்குச் சொல்லலே நான்—இவர் சோல்ஜர்னு தெரிஞ்சதும், என்னாலே பழய விஷயத்தை மறக்க முடியலே...மனசு வேதனையாகி...

தங்:— அடடா! எந்த சோல்ஜராவது, தகாத முறையிலே நடந்து கொண்டானாம்மா...!

பெண்:— அதெல்லாமில்லை...உங்களை நான் அண்ணான்னு கூப்பிட்டா, கோபிக்காதிங்க—ஒரு டான்சுக்காரி இப்படிச் சொந்தம் பாராட்டலாமான்னு எண்ணிவிடாதிங்க...

தங்:— எனக்கு அப்படிப்பட்ட பேத எண்ணமெல்லாம் கிடையாது...அம்மா...

பெண்:— (கண்களைத் துடைத்தபடி) அண்ணா! ஒரு சோல்ஐருடைய கல்மனதாலே கெட்ட குணத்தாலே, நம்பிக்கை துரோகத்தாலேதான், நான் டான்சுக்காரியானேன்...விவசாயக் குடும்பத்திலே பிறந்தவ, நானு. பெயர் பொற்கொடி இல்லே, பட்டு எங்க கிராமத்துக்காரர்தான்— கண்ணுக்குக் கட்டழகராகத்தான் தெரிவார் — என்னை மயக்கினார்... மயக்கினார்னு இப்ப சொல்கிறேன் — அந்த நாளிலே, அண்ணா! எனக்கு அவர் கண்கண்ட தெய்வமாகத் தெரிந்தார்... என்னை அவரிடம் ஒப்படைத்தேன்—பரிபூரணமான நம்பிக்கையோட — பச்சை மரங்களெல்லாம் சாட்சின்னு சொன்னாரு— பால்போலக் காய்கிற நிலவு சாட்சின்னு சொன்னாரண்ணா. பயந்தபோது பைத்யமே பைத்யமே!ன்னு சொல்லி, ஒரு பெண்ணோட மனம் பாகா உருக என்னெள்ள சொல்லலாமோ, அதை எல்லாம் சொன்னார்—எப்படி எப்படி நடக்கவேணுமோ அப்படி எல்லாம் நடந்தாரு...

முதி:— என்னிடம் இவ்வளவு விவரமாச் சொல்லலியேம்மா...

தங்:— பாவம்...அடடா! இப்படி எல்லாம் நடந்தவன்...

பெண்:— காதலனா இருந்தவர். காரியம் கைகூடிய பிறகு, ஆடவராகி என்னை ஆட்டக்காரியாக்கி விட்டார் அண்ணா.

தங்:— எனக்கு உள்ளபடியே வருத்தமா இருக்கு...

பெண்:— கோபமா இருக்குமோன்னு பார்த்தேன் — ஆடவனாகி விட்டார்னு சொன்னேனே, நீங்களும் ஒரு ஆடவராச்சே-என்ன எங்க குலத்தையே கேவலமாப் பேசறியேன்னு, கோபிக்கப் போறீங்களோன்னு பயந்தேன் என் வேதனையாலே அப்படிச் சொன்னேன், பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் ஆண்கள் காட்டுகிற கொடுமையை எண்ணி அப்படிச் சொன்னேன்...

தங்:— உன் பேச்சை மறுக்கவில்லை, பொற்கொடி! ஆனா, இப்ப காலம் மாறிக்கொண்டு வருதம்மா. பெண்களைக் கொடுமைப்படுத்துகிற ஆண்களோட தொகை குறையுது...

பெண்:— அதுவரையிலே சந்தோஷம்தான்— என்னைக் கர்ப்பவதியாக்கிவிட்டு பட்டாளத்துக்குப் போனார் — அவர் திரும்பி வருவதற்குள்ளே நான் ஒரு தாய் ஆனேன் — தாலி இல்லை கழுத்திலே, கையிலே ஆண் குழந்தை, அவரை அப்படியே உரிச்சு வைத்ததுபோல்—வீட்டிலேயோ, ஊரிலேயோ இருக்க முடியுமா—விவரம் சொன்னா வீண்பழி சுமத்தாமலா இருப்பாங்க — அதனாலே என் சினேகிதி ஒருத்தி டான்சு ஆடுவா. அங்கே வந்து சேர்ந்தேன்—ஒரு வருஷத்துக்குப் பிறகு, அவர் திரும்பிவந்தார்...

தங்:— வந்து...

பெண்:— வாய்க்கு வந்தபடி திட்டினாரே தவிர, தனக்குப்பிறந்த செல்வத்தை வாரி அணைத்துக்கொள்ளவில்லை...வாடி பட்டு! ஊருக்குப் போவோம், ஊரைக் கூட்டிவைத்து, நான் உன் புருஷன், என்று சொல்லிப் பழி பேசினவங்க வாயை அடைக்கிறேன்னு சொல்லவில்லை—நானாகத் தேடிக்கொண்டு ஓடினேன்— ஊர்க் கோடியிலேயே தடுத்து நிறுத்தி, இந்த நிலையிலே ஊருக்குள்ளே வராதே, மானக்கேடு எனக்கு என்று பேசினார்...

தங்:— படுபாவி!

பெண்:— நானும்தான் அண்ணேன், படுபாவி, பழிகாரா, என்னை மோசம் செய்யலாமான்னு சுடச்சுட கேட்டேன்—சோல்ஜர் அல்லவா! சாகடிக்கிற வேலைதானே... நான் அழ அழ அவர் சிரித்தார் — என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். உமது காதல் விளைவு இதோ என்று குழந்தையைக் காட்டினேன்—ஆணவத்தோடு, அக்ரமக்காரன், ஸ்டாம்பா ஒட்டியிருக்கு பைத்தியக்காரி! ஊர்லே உலகத்திலே நம்பத்தான் செய்வாங்களா? பட்டாளத்துக்குப் போறபோதே பட்டு கர்ப்பம், இவன் தான் குழந்தையோட தகப்பன் என்று சொல்லுமா! கேவலமாப்பேசும்!... என்றான்... ஊர் ஆயிரம் சொல்லட்டும், உனக்குத் தெரியாதா...உன் உள்ளம் சொல்லாதா என்று கேட்டேன்—அண்னா அந்தக் காதகன், என்ன சொன்னான் தெரியுமா?

(அழுகிறாள்)

தங்:— (கண்களைத் துடைத்தபடி) அழாதேம்மா...அழாதே..என்ன சொன்னான் அந்த மிருகம்...

பெண்:— என் குழந்தை என்று நான் மட்டும் எப்படி நம்ப முடியும் — நம்ம கிராமத்திலே நான் ஒருவன்தானா ஆண் பிள்ளைன்னு கேட்டான் — அண்ணா! என்னைக் கெடுத்தவன் ஈட்டியாலே குத்தினான் என் இருதயத்தை! என்னைக் கட்டித் தழுவி அழியவைத்தவன், என்னை எட்டி உதைத்தான் எரிகிற நெருப்பிலே! மீண்டும் மீண்டும் கெஞ்சினேன்—மனம் மாறிவிடும், இரக்கம் பிறக்கும், பழைய காதல் சம்பவம் நெஞ்சை உறுத்தும், பாலகனை எண்ணியாவது பாவியின் மனம் மாறும் என்று எண்ணினேன்—பல தடவை சந்தித்தேன் — அவனுடைய முரட்டுத்தனம்தான் வளர்ந்தது—மீண்டும் பட்டாளத்துக்கே போய்விட்டான் — குழந்தையும் இறந்தது—நான் டான்சுக்காரியானேன்...

தங்:— அவன்...?

பெண்:— சாகவில்லை...சோல்ஜராக இருக்கிறான்—சௌக்யமாக இருக்கிறான். அவனுக்கென்ன ஆண்மகன் — ஒரு பெண்ணைப் படுகுழியிலே தள்ளினான் என்பது தெரிந்து உலகம் அவனைத் தண்டிக்கவா செய்யும்?

தங்:— என்னாலே தாங்கிக்கொள்ளவே முடியவில்லையம்மா, இந்த வேதனை...பெரியவரே! நீரும் அழுது என்னை வாட்டவேண்டாம். காதலின் மேன்மையும், பெண்ணின் பெருமையும் தெரியாத பேயன்—பொற்கொடி; அவன் எங்கே இருக்கிறான் இப்போது — பெயர் என்ன...!

பெ:— அழகூரிலேயே அடிக்கடி...நான் பார்க்கிறேன் அண்ணா! அவன் பெயர்! வேதனை தருகிற வேடிக்கை அண்ணா! அது, அந்தப் பாவியின் பெயர், தருமலிங்கம்...

தங்:— தருமலிங்கமா...ஒல்லியாக சிகப்பாக.

பெ:— (தலை அசைத்தபடி) அரும்பு மீசை... அழகான பல் வரிசை. பெரிய காது...பேச்சு சாதுரியமாக இருக்கும்...

தங்:— அடப் பாதகா! அவன், என் நண்பன்தான்—ஒரு வார்த்தை சொன்னதில்லையே என்னிடம்...

பெ:— கொட்டுகிற தேளும், கடிக்கிற பாம்பும் ஓடி ஒளியுமே தவிர, செய்த காரியத்தைச் சொல்லுகிறதா, அண்ணா, அவன் மனிதப் பாம்பு; என்னைத் தீண்டினான், விஷம் ஏறி! பட்டு செத்தாள், பொற்கொடிதானே இருப்பது இப்போது...

தங்:— எவ்வளவு கொடுமை செய்துவிட்டான் பாதகன்... என்னோடுதானம்மா வேலை செய்கிறான்...சோல்ஜர்ஸ் கிளப்பிலேதான்...

பெ:— அப்படியா அண்ணா; நான் டான்சுக்கு வருகிறேன்—கத்தி நடனம் பார்க்க அருமையாக இருக்கும். ஏற்பாடு செய்ய முடியுமா... தர்மலிங்கம் மட்டும் நிச்சயமாக அதைப் பார்க்கவேண்டும்—

தங்:— (பயந்து) வேண்டாமம்மா, எனக்குப் புரியாமலில்லை...வேண்டாம்...

பெ:— (கெஞ்சும் குரலில்) என் கடைசீ—நாட்டியமாக இருக்கட்டுமே, அண்ணா! நாட்டியத்தாலே ஒரு நாசகாரனை ஒழித்த பெருமையாவது கிடைக்கட்டுமே எனக்கு...

தங்:— தங்கையே...!

பெ:— (கதறி) அண்ணா!

தங்:— அழாதே அம்மா, அழாதே...நான் இனி உன் அண்ணன்தான் — தருமலிங்கம் என் தங்கையைக் கெடுத்த துரோகி—அவனுக்குப் புத்தி புகட்டும் உரிமை எனக்கு...

பெ:— இவ்வளவு நல்லவர்களும் சோல்ஜர்தான்...

தங்:— சோல்ஜர்களிலே, தருமலிங்கம் அதிகம் இல்லை அம்மா,—நிச்சயமாக...

பெ:— அண்ணா! மறந்துவிட்டேனே—நான் தருமலிங்கத்தின் நடவடிக்கைகளை இப்போதும் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறேன் — இப்போது பாம்பு வேறு ஒரு பெண்ணைச் சாகடிக்க உலவிக் கொண்டிருக்கக் கண்டேன் அண்ணா! யாரோ நர்சாம்—பெயர் நீலாவாம்...!

தங்:— அப்படியா...

பெ:— நீலாவையாவது தப்பவைக்கலாமே அண்ணா!

தங்:— நிச்சயமாச் செய்யவேணும் பொற்கொடி! நீலா, எங்கே இருப்பது...

பெ:— விசாரித்தேன் — யாரோ, லேடி டாக்டராம், சுகுணா — அந்த டாக்டரிடந்தான் நீலா, நர்சாம்—மைலாப்பூரில்...

தங்:— லேடி டாக்டர் சுகுணா?

பெ:— ஆமாம் அண்ணா! மாடவீதியோ, அதற்கு அடுத்த தெருவோ, சரியாகத் தெரியாது...

தங்:— பொற்கொடி! நான் வெற்றிச் செய்தியோடு பிறகு வந்து உன்னைப் பார்க்கிறேன்...

பெ:— சோல்ஜர் கிளப்புக்கு நான் டான்ஸ் ஆட வராதது பற்றிக் கோபமா அண்ணா!

தங்:— இனி நான் உன்னை அழைப்பேனா பொற்கொடி எப்படி உனக்கு மனம் இடம் தரும்! மேலும் அந்தத் துரோகி இருக்கும் சபையில், நீ, ஆட வருவதா? அதை நான் அனுமதிப்பதா—பிறகு வருகிறேன்...

(விடைபெற்றுக் கொண்டு செல்கிறான்.)

காட்சி—36

(சம்பந்தம் வீடு—தங்கவேல் பொன்னன் உரையாடல்)

பொ:— சர்தான்! நம்ம ஜதைக்காரன்போல இருக்கு அந்தத் தர்மன்...

தங்:— ஆனா, நீ கடைசீயிலே...

பொ:— நான் கண்ணாலம் செய்துகிட்டேன் — பொன்னிக்குக் கெட்ட பேரு வரவிடுவேனா...ஆனாலும், தங்கவேலு! பெண்களோட கதி விதவையாகிவிட்டா வேதனையாத்தான் போகுது.

தங்:— சத்திரத்துத் திண்ணையிலே தங்கச் செயின் இருந்தா, தலையாரியே கூடத் திருடனயிட மாட்டானாப்பா.

பொ:— என் கதையைத்தான் கேட்டாயே... பொம்பளைங்க விஷயத்திலே நான் அலைகிறவனா — பொன்னியைக் கண்டதும் நான் இப்படி, ஒருவிதமான ஆசை ஏற்பட்டுது—

தங்:— விதவைகளைக் கெடுத்து, கைவிட்டு விடுகிற பாவிகளாலே, எத்தனை கொழந்தைகள் கிணத்திலேயும் காடு மேட்டிலேயும் பிணமாகுது—எத்தனை பெண்கள் தூக்குமாட்டிக்கிடுது — உயிரையாவது போக்கிக் கொள்ளவேணும், இல்லே, மானத்தையாவது அழிச்சிக் கொள்ளவேணும் — இதுதானே விதவைக்கும் கதியா இருக்கு—ஏன் விதவைக்கும் கல்யாணம் செய்யலாம்னு இருந்தா...

பொ:— தொல்லை இருக்காது...நான்கூட தங்கவேலு, நினைச்சிப் பாக்கறதுதான்...ஆனா, நாம்ப சொன்னா, ஊர் கேட்கவா போவுதுன்னு பயம். பாவம்னு சொல்வாங்க—பழய காலத்து பழக்க வழக்கம்னு சொல்வாங்களேன்னு பயம்...

தங்:— சொல்லுவாங்க. சொல்லுவாங்க...

பொ:— கிடக்குது தள்ளு! நம்ம காலத்திலே, எல்லாம் சீர்பட்டுப் போயிடும்! எனக்கென்னமோ, நீ, பக்கிரி, இப்படிப் பட்டவங்களோட தொகை கொஞ்சம் வளர்ந்தா இந்தப் பீடை எல்லாம் ஒழிஞ்கபோகும்னு தைரியம் பிறக்குது. ஆமாம் தங்கவேலு! எத்தனை காலத்துக்கு ஜனங்க ஏமாளிகளாகவே இருப்பாங்க... கிடக்கட்டும். நீ மேலே சொல்லு...அந்தத் தருமனை என்னா செய்தே—நான் அவன் தலையைச் சீவிடச் சொன்னாக்கூடத் தயக்கமில்லாமெச் செய்வேன், உங்க கிளப்பிலே அவனைப் பத்திச் சொன்னயா? அவன் மானத்தை வாங்கனயா...?

தங்:— அது கலபந்தானே, பொன்னா? ஆனா என்ன பிரயோஜனம்? முதல் வேலை நீலாவிடம் இவன் யோக்யதையைச் சொல்லி, கல்யாணம் செய்துகொள்ளாதபடி தடுக்க வேணும்னு தோணிட்டுது...

பெ:— சரியான மூளை உனக்கு தங்கவேல்! சரியான மூளை! சரி, நீலாவைப் பார்த்து பேசினயா..?

தங்:— (புன்சிரிப்புடன்) பேசினேன். அந்த வேடிக்கை இருக்கே அதுதான் எல்லாத்தையும் விடப் பெரிய வேடிக்கை—கேள் பொன்னா! அந்தச் சங்கதியை... மைலாப்பூரிலே லேடி டாக்டர் சுகுணவோட வீட்டைக் கண்டுபிடித்தேன் முதல்லே......போர்டே இருந்தது லேடி டாக்டர் சுகுணான்னு...உள்ளே நுழைஞ்சி...

காட்சி—37

(பழைய சம்பவம் — லேடி டாக்டர் சுகுணா வீடு)

(லேடி டாக்டர் சுகுணாவின் வீட்டு உட்கூடம். லேடி டாக்டர் சுகுணா, மேஜை எதிரே நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ‘ரிபப்ளிக்’ என்ற ஆங்கில வாரத்தாளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். காலடிச் சத்தம் கேட்டு சுகுணா, தங்கவேலுவைப் பார்க்கிறாள். ஒரு விநாடி உற்று நோக்கிவிட்டு,)

சு:— யார் நீங்கள்...? உட்காரலாம். இப்படி... (நாற்காலியை காட்ட)

தங்:— (பணிவாக) நர்ஸ் நீலா என்பவரைப் பார்க்க வந்திருக்கிறேன்...

சு:— நர்ஸ் நீலாவையா.. என்ன விசேஷம்?

தங்:— சில சொந்த விஷயம்...

சு:— சொல்லுங்களேன் — நான்தான்...

தங்:— ஓ! நான் பார்த்ததில்லை. நீங்கள்தான் நீலாவா?

சு:— கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீலாவின் பெயர் பிரமாதமாக விளம்பரமாகி இருக்கிறது. சரி... என்ன விசேஷம்...ஏன்? நர்சு நீலா, நர்சு உடையில் இல்லையே என்றா! ட்யூடியின்போதுதான் நர்ஸ் டிரஸ்.. என்ன விசேஷம்...?

தங்:— தங்கள் விஷயத்திலே அனாவசியமாகத் தலையிடுவதாக எண்ணிவிடக்கூடாது...

சு:— இதென்னய்யா வேடிக்கை! என் விஷயமாக ஏதோ தலையிட்டுக் கொண்டுதானே, பேசவந்திருக்கிறீர் சரி. சொல்ல வேண்டியதைச் சொல்லும்...

தங்— தங்களுடைய உண்மையான நண்பனாக, நான் வந்திருக்கிறேன்...

சு:— நமக்குள் அறிமுகமே கிடையாது...சோல்ஜர்...பெயர்?...

தங்:— என்பெயர் தங்கவேல்! சோல்ஜர்ஸ் கிளப் மானேஜருக்கு அசிஸ்டெண்ட்...

சு:— சரி...என் விஷயமா என்ன...

தங்:— எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை... அதுபோல பேசியும் பழக்கம் கிடையாது அதிகமாக...நீலா?...

(சுகுணா ஆச்சரியத்தால் வாய் பிளந்தபடி)

சு:— எவ்வளவு! அழகாக உச்சரிக்கிறீர்கள் என் பெயரை...நீலா ...!நீலாவுக்கு என்ன?

தங்:— என்னவா! என்ன ஆபத்து உன்னைச் சூழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலிருக்கிறாயே, நீலா...!

சு:— ஆபத்தா...? எனக்கா? என்ன ஆபத்து?

தங்:— பூ பறிப்பதாக நீ எண்ணுகிறாய் நீலா. புல் தரையிலே கட்டுவிரியன் இருக்கிறது உன்னைக் கடிக்க—உன்னைக் காப்பாற்ற வந்திருக்கிறேன்... அதிகம் சொல்லவேண்டுமா நீலா! உனக்குத் தெரியுமே...தர்மலிங்கம் விஷயமாகத்தான் சொல்கிறேன். அவனுடையச் ஆசை வலையில் விழாதே — அவன் காதல் மொழி பேசுவானம்மா, அது அவ்வளவும் விஷம்.

சு:— ( ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு) காதல் மொழி... ஆசைவலை... தருமலிங்கம்... இதெல்லாம், என்ன?

தங்:— ஒரே அடியாக என்னிடம் மறைக்காதே நீலா! உன் நன்மைக்காகத்தான் பேசுகிறேன். தருமலிங்கம், என் நண்பன் — சோல்ஜர் கிளப்பிலேதான் அவனுக்கும் வேலை. அவனுக்கும் உனக்கும் வளர்ந்து வரும் காதல் எனக்குத் தெரியும். தெரிந்துதான் தடுக்க வந்திருக்கிறேன்...

சு:— நீலாவை நான் காதலிக்கிறேன் என்று உம்மிடம் தருமு சொன்னாரா...

தங்:— இல்லை, இல்லை—சொல்லுவானா...?

சு:— உமக்கு எப்படி இந்த, நீலா—தர்மன் காதல் புராணம் தெரிய வந்தது...

தங்:— எப்படித் தெரிந்தது என்பதிலே ஏனம்மா அக்கறை! இதோ பார், உன் முகத்தைப் பார்த்தாலே, நீ சுலபத்திலே, ஏமாந்து விடக்கூடிய பெண் என்று தெரிகிறது...

சு:— (சிரித்தபடி) ஏமாந்து விடுவேனா! யார்? நானா? முகத்தைப் பார்த்தாலேவா தெரிகிறது? அசடு சொட்டுகிற முகமா எனக்கு?

தங்:— தவறான—பொருள் கொண்டுவிட்டீர்கள்! உங்கள் முகம் அசட்டுத்தனத்தையா காட்டுகிறது, சேச்சே! வட்டவடிவமான, வசீகரமான முகம்...

சு:— (வெட்கமடைந்து, உடனே அதை மாற்றிக்கொண்டு) கண்ணாடி இருக்கிறது, பார்த்துக் கொள்கிறேன் — வர்ணனை வேண்டாம் —விஷயத்துக்கு வாருங்கள்...

தங்:— வர்ணனை, உங்களைக் சொக்க வைக்கும் அளவுக்குத் தருமலிங்கம் பேசியிருப்பானென்று எனக்குத் தெரியுமே. உண்மையைச் சொல்கிறேன், தருமலிங்கம் அதிர்ஷ்டக்காரன்...நான் நீலா! இவ்வளவு அழகும், அதேபோது கெம்பீரமும் இருக்குமென்று எதிர்பார்க்கவே இல்லை. உம்! கள்ளன் கையிலேதானே தங்க நகை கிடைத்து விடுகிறது. சொந்தக்காரன் அதைப் போட்டு அனுபவிக்க கூட மனமில்லாமல் பூட்டியல்லவா வைத்திருக்கிறான்

பெட்டியிலே. நீலா! அழகும் இளமையும் படைத்த உன் கருத்தைக் கெடுக்கும் தருமலிங்கத்தை நம்பிவிடாதே—

சு:— இதென்ன தமாஷ்! சரி. என்னைத் தர்மலிங்கம் காதலித்தால், உமக்கு என்ன? ஆதிலே தலையிடுவதும், தழதழத்த குரலில் பேசுவதும், காதலால் ஆபத்து வரும் என்று மிரட்டுவதும், இதெல்லாம் என்ன வேடிக்கை...அவருக்கு பிரியமானவளோடு அவர் காதல் கொள்கிறார் — அவள் அவரைக் காதலிக்கிறாள் — இதிலே நீர் நுழையும் காரணம் என்ன?

தங்:— காரணம் இருக்கிறது நீலா...காரணம் இருக்கிறது... தருமன், அயோக்யன்...காமுகன்...கயவன்...

சு:— பொறாமையாலே இப்படிச் சொல்கிறீர் என்று நான் கூறுகிறேன்...

தங்:— பொறாமையாலே வந்தவனல்ல நீலா! கோபிக்காதே! இங்கே வந்து, உன்னைக்கண்ட பிறகு, எனக்கு இலேசாகப் பொறாமைகூட ஏற்பட்டது உண்மை...

சு:— அப்படிச் சொல்லுங்கள் உண்மையை! தர்மலிங்கத்தின் காதலியிடம், குழையக் குழையப் பேசி, ஏதேதோ கலகம் மூட்டி மிரட்டி, காதலர்களைப் பிரித்து வைத்துவிட்டு, நீலாவை நம்மவளாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உமக்கு...

தங்:— கெட்ட எண்ணம் துளியும் கிடையாது. கேள், நீலா! நான் சொல்வதை!!

சு:— ஆடவர்களுக்கே இது சகஜமான சுபாவம்தானே!நமக்குக் கிட்டாதா, நமக்குக் கிட்டாதா என்ற ஆசை—எப்போதும் —பொறாமை—சச்சரவு—அடேயப்பா! கொலைகள்கூட நடக்கிறதல்லவா இதனால்...நான் அவ்வளவு சுலபத்திலே இதற்கு ஏமாறுகிறவள் அல்ல. நீலா தர்மன் காதல் விவகாரம் அவர்கள் இருவருக்கும் சொந்தமான தனி விஷயம் — உமக்கு அதிலே நுழைய ஒரு பாத்யதையும் கிடையாது.

தங்:— (சற்றுக்கோபமாக) நிச்சயமாக உண்டு! உலகம் அறியாத ஒரு பெண், உத்தமனென்று ஒரு கொடியவனை எண்ணிக் கொள்வது தெரிந்தால், உண்மை தெரிந்தவன், தடுக்காமலிருக்கலாமா? பாதையிலே படுகுழி இருப்பதைச் சொல்லயாருக்கும் உரிமை இருக்கிறது நீலா! யாருக்கும்! உன் அழகு, யாரையும் மயக்கக் கூடியது தான் — அதிலும் அந்த தர்மன், மதுகுடிக்கும் வண்டுபோல!

சு:— (கேலியாக) அடாடாடா? இவர்தான் ஆடவர் குலத்திலேயே, அப்பு அழுக்கற்றவர்! மது தேடாத வண்டு! வண்டை விரட்டிவிட்டு, மதுவைத் தேடும் தந்திர புத்திதான், உம்மை இப்படிப் பேசவைக்கிறது...

தங்:— (பதறி) ஐய்யோ, ஐய்யோ! நான் சொல்வதை நம்பு நீலா! நம்பு! தர்மனால், நம்பி மோசம்போன ஒரு இளம் பெண்ணின் கண்ணீரை நான் பார்த்தேன்—மாலை சூட்டுவதாகச் சொன்னான்—மங்கையைக் கெடுத்தான்—கைவிட்டு விட்டான்—நீலா! அவளையே இங்கு அழைத்து வருகிறேன்—அவளுடைய பரிதாபகரமான கதையை நீயே கேள்... நீயும் ஒரு பெண்—உன்னைப்போலத்தான் அவளும் அந்த பசப்புக்காரனிடம் மனதைப் பறிகொடுத்தாள்...

சு:— நான் இன்னமும் பறிகொடுக்கவில்லை...பயப்படாதீர்.

தங்:— அப்பா! ஆபத்திலிருந்து தப்ப வழி இருக்கிறது. நீலா! பட்டு என்பவளை அந்தப் பாதகன், ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு, கலியாணம் கிடையாது போ என்று சொல்லி விட்டான். நான் ஆயிரத்தெட்டு காரணத்தைக் காட்டுவது போதாது — ஒரு முறை அந்தப் பெண்ணைப் பாரம்மா, அப்போது உனக்கு தர்மலிங்கத்தின் உண்மையான உருவம் தெரியும்—பட்டுவைப் பாழாக்கிய பாதகன், இப்போது உன்னை வலைபோட்டு பிடிக்கும் வேலையிலே இருக்கிறான் என்று, பட்டுதான் எனக்குச் சொன்னாள்.

சு:— பட்டு என்கிற பெண்ணுக்கும், உமக்கும் என்ன சம்பந்தம்...?

தங்:— நான் இனி உன் அண்ணன் என்று பட்டுவிடம் கூறினேன் நீலா...! சம்பந்தம் என்ன, ஒன்றுமில்லை.. சிறகொடிந்த பறவை! வழியில் கண்டேன், வருத்தமாக இருந்தது... வேறு மாடப்புறாவுக்கு வலை வீசுகிறான் என் சிறகொடித்த வஞ்சகன், என்று சொன்னாள், உன்னைத்தான் குறிப்பிட்டாள், பட்டு. ஓடோடி வந்தேன்—உன்னைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற உறுதியோடு, உன்னைக் கண்டதும் அந்த உறுதி ஆயிரம் மடங்கு அதிகமாகிவிட்டது...

சு:— பெண்களை மயக்கும் புதுரகப் பேச்சு இது... இருக்கட்டும்.. தர்மலிங்கம் போன்ற ஒருவருடன் இன்ப வாழ்வு நடத்தத் தீர்மானிக்கும் என்னைத் தடுப்பது சரியா? அன்பு கொண்டவர்—தர்மு—அரூபி—என்கிறீரா?

தங்:— அழகாகக்கூட இருப்பான் நீலா? ஆனால், வீணாகப் பேசுவதாகவோ, பொறாமையால் ஏசுவதாகவோ எண்ணாதே. உன் அழகுக்கு அவன் ஈடல்ல... நான் பல நர்சுகளைப் பார்த்திருக்கிறேன்—உன் கவர்ச்சி மிகச் சில பெண்களிடமே உண்டு—

சு:— டாக்டர்களைப் பார்த்ததில்லையா...

தங்:— எத்தனையோ டாக்டர்களை...

சு:— இந்த வைத்யசாலையின் சொந்தக்காரி, லேடி டாக்டர் சுகுணாவைப் பார்த்ததுண்டா?

தங்:— இல்லை, நீலா! பார்த்ததில்லை...

சு:— அப்படியா, இப்போது பாரும்...!

(தங்கவேல் பின்புறம் திரும்பிப் பார்க்க)

சு:— இதோ. இங்கே! நான்தான் லேடி டாக்டர்—சுகுணா!...

தங்:— என்ன, என்ன! நீலா அல்லவா?

சு:— (புன்னகையுடன்) அல்ல! சுகுணா!

தங்:— (தழதழத்த குரலில்) லேடி டாக்டர் சுகுணாவா...நான் ஓர் ஏமாளி...

சு:— நீலாவிடம் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டீர் என்னிடம்...

தங்:— நான் துளியும் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. நீலா, அல்லவா! அப்பா! மனம் ஓரளவு நிம்மதியடைந்தது...சுகுணா...

சு:— சரி, நீலாவிடம் சொல்ல வேண்டியது தீர்ந்தது — சுகுணாவிடம் பேச வேண்டியது...ஏதாவது... உண்டா... நான் டாக்டர், நீரோ, நோயாளி அல்ல...

தங்:— டாக்டர், நீலாவிடம் சொல்ல வேண்டியதன் சுருக்கம்தான் சொன்னேன்...

சு:— (சிரித்தபடி) விரிவாக — காலட்சேபமே நடத்துவீர்கள் போலிருக்கே...

தங்:— விரிவாக நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை—மேலும் இப்போது என்னைத் திணறவைத்தாகி விட்டது—டாக்டர்! நீங்கள்தான் நீலாவுக்கு, உண்மைக் காதல் எது, போலிக் காதல் எது, நல்லவன் எப்படி இருப்பான், நயவஞ்சகன் எப்படி இருப்பான், பெண்கள் ஆண்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும், என்பதை எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

சு:— பரவாயில்லையே! சரியான உத்யோகம்தான் கொடுக்கிறீர், எனக்கு, காதல் விஷயமாக நீலாவுக்கு நான் வகுப்பே நடத்தவேண்டும் போலிருக்கிறது. சரி, இவ்வளவு அக்கறையோடு நீங்கள் சொல்வதால், சொல்லலாம். ஆனால்...

தங்:— ஆனால் என்ன!

சு:— எனக்கே தெரியாதே, எது உண்மைக் காதல், போலி, என்ற விவரமும் விளக்கமும். எனக்கே தெரியாதே...

தங்:— என்ன டாக்டர்! கேலி பேசலாமா? உங்களுக்குத் தெரியாதா..... அப்படிப்பட்ட சிரமமான வைத்யப் படிப்பையே படித்துப் பட்டம் பெற்ற உங்களுக்கு, இது ஒரு பிரமாதமா...

சு:— (சிரித்துவிட்டு) வைத்யப்படிப்பிலே, காதல் ஆராய்ச்சி சேர்க்கவில்லையே, தெரியாதா! டைபாயிட் எப்படி இருக்கும், நிமோனியா எப்படி இருக்கும், பிரசவம் வேதனை இல்லாமலிருக்க என்ன மருந்து, இவைகளெல்லாம்தான், வைத்யப் படிப்பு! நீலா கொண்டுள்ள காதல் சரியல்ல என்று விளக்கவா, கற்றுக் கொண்டிருக்கிறேன்.

தங்:— வெட்கமாகத்தான் இருக்கு, டாக்டர், நீங்க கேலி செய்கிறபோது. அப்படிப் பார்க்கப்போனால், எனக்கும் எப்படி இது புரியும். எனக்கும் சுடக் கற்றுக் கொடுத்தார்கள். டாங் ஓட்டப் பழகி இருக்கிறேன். அகழி வெட்டி அதிலே பதுங்கத் தெரியும், காதல் உலகத்திலே உள்ள கஷ்ட நஷ்டங்கள் அவதிகள், ஆபத்துக்கள், எனக்கும்தான் எப்படித் தெரியும்? நானும் அந்த உலகத்தில் உலவியது இல்லையே, டாக்டர்!

சு:— எந்த உலகத்திலே...

தங்:— காதல் உலகத்திலே....

சு:— அதுவா?...நான் மட்டும்..?

தங்:— (பாசத்துடன்) அப்படியா...மணம்?...

சு:— மணமா? உம்...! மணம்; நிலைக்கவில்லை. மணம் பிறந்தது, விரைவிலே இறந்தது—பால்ய விதவை...

தங்:— என்ன, பரிதாபம்... நெஞ்சிலே நெருப்புப் போன்ற நிலைமை...

சு:— நீலா பாக்கியசாலி ஒருவகையில்...

தங்:— என் பேச்சால், உங்களுக்கு விசாரமூட்டிவிட்டேன்...

சு:— இல்லை, இல்லை; ஆடவரில், பெண்ணின் வாழ்வு கெடக்கூடாது என்று இவ்வளவு பாடுபட முன் வந்தவர் அதிகம் பேர் ஏது? உங்கள் பேச்சு, எனக்கு விசாரத்தைக் குறைக்க உதவுகிறது...... நீலாவை ஆபத்திலிருந்து காப்பாற்றத்தான் இங்கு வந்தீர். ஆனால்... என்னை ஆபத்திலே சிக்கவைத்து விட்டீர்...

தங்:— டாக்டர் ஆபத்தில் சிக்கவைத்து விட்டேனா...நானா... புரியவில்லையே...

சு:— (பாசமும் வெட்கமும் கலந்த பார்வையுடன்) புரியத்தான் இல்லை...

தங்:— டாக்டர்...

சு:— நோயாளியா நீர், டாக்டர், டாக்டர் என்று கூப்பிட சுகுணா என்றே அழைக்கலாம்...

தங்:— சரி, டாக்டர் சுகுணா...

சு:— இதோ பாருங்கள். இனி டாக்டர் என்று கூப்பிட்டால், கூப்பிடும் போதெல்லாம் பீஸ் கொடுத்தாக வேண்டும். பத்து ரூபாய் ஒரு விசிட், தெரிந்ததா...

தங்:— நான் பட்டாளத்துக்காரன்—என்னை விலைக்கு விற்றுத்தான், பணம் கட்டவேண்டி நேரிடும்.

சு:— சாகசமான பேச்சுக்காரர்—அப்பப்பா! நம்பவே கூடாது இப்படிப்பட்ட, மயக்கமொழி பேசுபவர்களை...சரி, நீலா லீவில் இருக்கிறாள், வேலைக்கு வருவாள் நாளைக்கு — வந்ததும் எல்லா விஷயமும் கூறுகிறேன். எதற்கும் நீங்களே மறுபடி இங்கே வந்தால் நல்லது. நீலாவிடம் நேரிலேயே பேசலாம்...

தங்:— நாளைக்கே வருகிறேன்...

சு:— அவசியம் வரவேண்டும்...

தங்:— கட்டாயம் வருகிறேன்...

சு:— காலையிலா, மாலையிலா?

தங்:— ஓய்வு எப்போது...?

சு:— நீங்கள் இங்கே வருகிறபோது, ஓய்வுதான்.

தங்:— (புன்னகையுடன்) காலையிலேயே வருகிறேன்.

சு:— நாளைக்காலை...நிச்சயம்...

தங்:— வருகிறேன்...

(குழைவாகக் கூறுகிறான். சுகுணா பாசத்துடன் பார்க்கிறாள். தங்கவேல் விடைபெற்றுக் கொள்ளுகிறான்.)

காட்சி—38

[சம்பந்தம் வீடு—தங்கவேல், பொன்னன் உரையாடல்]

தங்:— (பாசத்துடன்) மறுநாளே சென்றேன் — பிறகு ஒவ்வொரு நாளும் சென்றேன்...

பொ:— பால்பானையைப் பார்த்துவிட்ட பூனைபோலத்தான், அங்கேயே வட்டமிட்டிருப்பே...

தங்:— நீ? பொன்னி இருக்கிற ஊரையே கோயிலா எண்ணிக் கொண்டுதானே பிரதட்சணம் வந்தே?...

பொ:— அடெ ஏம்பா, நாம்ப ஒருத்தருக்கு ஒருத்தர் கேலி பேசிக்கொள்ள முடியுமா?சரி—டாக்டர் வீடே கதின்னு ஆயிட்டே.

தங்:— நாடகம் கீடகம்... ஒண்ணு கிடையாது—எல்லாத்தையும் மறந்தாச்சி...

பொ:— அது அப்படித்தான்! அந்த விவகாரம் கிடச்சுப் போனா, அவ்வளவுதான் எல்லா வேலையும் மறந்து போகும்...ஆமா, அந்தப்பய தருமலிங்கம் என்ன ஆனான்?...

தங்:— நீலாவுக்குச் சுகுணா புத்திமதி சொல்லவே, நீலா அந்தப் பயலை கிட்டவே நெருங்கவிடலே, அவனையும், பெங்களூருக்கு மாத்திவிட்டாங்க ஆபீஸிலே...

பொ:— சர்தான்! நீலா தர்மன் காதல்லே ஆரம்பமாகி, சுகுணா தங்கவேல் காதலிலே முடியுது கதை...

தங்:— ஆமா, பொன்னா! ஆடு வியாபாரத்திலே ஆரம்பமாகி, பொன்னி புருஷனாகிறதிலே போய் முடியலியா, உன் கதை...

பொ:— ஒரு வேடிக்கையைப் பார்த்தயா... பொன்னியும் விதவை—சுகுணாவும் அப்படித்தான் —இரண்டு பேருக்கும் சேர்ந்ததுங்க, ஒரே ரகம்... ஏன், தங்கம்! அப்படித்தானே இருக்கும்—என பேர் பொன்னு—உன் பேரு—தங்கம்! அதிலேயே பொருத்தம் பார்த்தாயா?...

தங்:— (எதையோ எண்ணிக்கொண்டு) பொன்னா! இப்ப, நீ கூப்பிட்ட பார், தங்கம்னு? அதேதான்; சுகுணா என்னை, அப்படித்தான் கூப்பிடும்—என்னிடம் சுகுணாவுக்கு என்ன அன்பு தெரியுமா...?

பொ:— அன்பு இருக்கவேதான், அப்பன் அண்ணன், அக்ரகாரம், எதையும் சட்டை செய்யலே!...

தங்:— சுகுணாவுக்கும் எனக்கும் காதல் வளர வளர, எனக்குப் பயம் வளர்ந்துவிட்டுது. எப்படி நமக்குள்ளே கலியாணம் நடக்கும்; சுகுணா. ஐயர் மக... நாம்ப பண்ணைக் குடும்பம்...

பொ:— ஐயர்களோட காலைக் கழுவி நீரைச் சாப்பிட்டா, மோட்சம்னு நம்புகிற ஜாதி நாம்ப...

தங்:— எப்படி கலியாணம் நடக்க முடியும்—வீண் கனவுதான் இது—ஊத்து கிடைக்காத இடத்திலே வெட்டி வெட்டிப் பார்த்தா, என்ன பலன் காணமுடியும்! அதைப்போல சுகுணாவுக்கும் நமக்கும் காதல் வளர்ந்து என்ன பிரயோஜனம். ஊரார் சும்மாவா இருக்கப் போறாங்க. சுகுணாவோட நல்ல மனசை, அண்ணன் அப்பாரு, மத்த ஐயர்மாரு எல்லாம் கெடுத்துவிடுவாங்களே — குடும்பத்துக்கும் குலத்துக்கும் கெடுதல், அவமானம்னு பேசினா, ஏசினா, மிரட்டினா, பொம்பளை மனசுதானே, மாறிப்போயிடுமேன்னு, எனக்குப் பயமாகத்தான் இருந்துது...ஆனா பாசம் மலையா வளருது. சுகுணாவோ, என் பயத்தைப் பார்த்து, கேலி பேசுறதும், கையைத் தட்டிச்சிரிக்கிறதும், சீர்திருத்தக் கருத்து உள்ள புத்தகங்களை எல்லாம் எடுத்துப் படித்துக் காட்டுவதுமாக இருந்தது, என் மனசிலே இருந்த பயத்தை ஓட்டுவது... இப்படி சுகுணாவோட ‘மருந்து’ தான் எனக்குப் புது வலிவு கொடுத்துது...ஆகிறது ஆகட்டும் — துணிய வேண்டியதுதான் — அப்படின்னு தீர்மானம் செய்தேன். ஓய்வு கிடைக்கிற போதெல்லாம், கடற்கரைக்கு உலாவப் போகிறது. சினிமா பார்க்கப்போகிறது. இப்படி சந்தோஷமாத்தான் ஊரிலே பலபேர் பார்த்து, முதல்லே, கேலி, கிண்டல்! பிறகு, ‘அவங்க கலப்பு மணம்செய்துகொள்ளப் போகிற ஜோடி அப்பா!’ன்னு பேசுவது—இப்படி...

பொ:— ஒண்ணு கேட்க மறந்தூட்டேனே — சுகுணா ஐயர் பொண்ணு என்கிறது எப்பத் தெரியும்?

தங்:— இரண்டாம்நாளே, பூரா சரித்திரமும் பேசிவிடலே!...சுகுணாவே சொல்லி கலகலன்னு கிரிச்சுது — எங்க அப்பாதான் தெரியுமே, ஏகாதசி உத்சவம் முன்னே அமக்களமாச் செய்யறவர் — சுகுணா சொல்லும், உங்க அப்பா செலவழிச்சாரே, ஏகாதசி உற்சவத்துக்குன்னு, அதிலே பாதித் தொகைக்கு மேலே, அக்ரகாரத்திலேதான் இருக்குதுன்னு சொல்லி சிரிக்கும்.

பொ:— நீ கேட்கக்கூடாதா—ஊரை ஏமாத்திப் புழைக்குறது சரியா...ன்னு?

தங்:— கேட்டனே! சுகுணா கேட்டுது, ஊரை ஏமாத்திப்பிழைக்கறது சரியான்னு கேட்கறியே, நீங்க ஏமாறுகிறது சரியா, ஏன் ஏமாளியா இருக்கறீங்கன்னு கேட்குது.

பொ:— அதுவும் நியாயமாத்தான் இருக்குது. ஆனாலும், இவங்கதானே இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கறாங்க...தப்புத்தானே... அது..!

தங்:— தப்புதான்! ஒத்துக் கொள்ளுது, சுகுணா! ஆனா சுகுணா கேட்டுது, திருப்பதிக்கு போனா புண்யம், ராமேஸ்வரம் போய்வந்தா பாபம் போகும்னு எல்லாம் எங்களவங்க சொல்றாங்க—ஆனா நீங்க ஏன் கவனிச்சுப் பார்க்கக்கூடாது. திருப்பதிக்கு நாங்க போறபோது, ரோடிலேயா கோவிந்தா கோவிந்தான்னு புரள்றோம் — மொட்டை அடிச்சிக்கிட்டு தலையைத் தடவிக்கொண்டா வந்து சேர்கிறோம்? காவடி தூக்கறமா, நாக்கைக் குத்திக் கொள்றது, மூக்கை அறுத்துக் கொள்றது, இப்படி எல்லாமா செய்யறோம்—இதைக் கவனிச்சித்தானே மத்தவங்க நடந்துகொள்ள வேணும்னு, சுகுணா விளக்கமாகச் சொல்லும்—

பொ:— அதுவும் உண்மையாத்தான் இருக்கு, நம்ப ஜனங்களுக்கு, அறிவு வளரவேணும்—இதோ பாரேன் எனக்கு விஷயம் புரியறதுக்கு, இம்மாங்காலமாச்சி... என்னைப் போல எவ்வளவோ, பேரு!

தங்:— உன்னைப்போல உள்ளவங்கதான் அதிகம்—ஏராளம்—

பொ:— ஆனா ஒரு விஷயம் கவனிச்சயா — எங்களுக்குச் சுலபத்திலே புரியாது — புரிஞ்சிப் போச்சுன்னா. அவ்வளவுதான், மாறமாட்டோம்; பயப்படமாட்டோம்? அப்புறம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான், குழம்பிக்கிட்டுக் கிடக்க மாட்டோம்.

தங்:— ஆமாம் — உன்னைப்போல உள்ளவங்களுக்கு இருக்கற நெஞ்சழுத்தம் இருக்குதே, அது, நல்ல வழியிலே திரும்பிவிட்டா, நாட்டிற்குக் குறை ஏது? கெட்ட வழியிலே போறவன் காலாடி — நல்ல வழிக்கு பலத்தைச் செலவு செய்கிறவன், வீரன்...

பொ:— போக்கிரி பொன்னனை, இப்ப வீரனாக்கி விட்டிங்க...பக்கிரி, நீ எல்லாம்...

தங்:— அதெல்லாம் இல்லேப்பா! போக்கிரி என்கிற வேலை போச்சி — பொன்னி புருஷன் என்கிற புதுவேலை கிடைக்சுது — இனி மனுஷனாகத்தானே வேணும்—

பொ:— போய்க் கேட்டுப் பாரேன். உங்க மாமனாரை—பொன்னன் எப்படி இருந்தான் எப்படி ஆகி இருக்கிறான்னு—ஐயன், பெட்டிப் பாம்பாயிட்டான்—

தங்:— நான் பயந்தபோது சுகுணாவும் இதேபோலத்தான். சும்மா இரு! உறுதியா நாம் இருக்கிறோம்னு தெரிஞ்சா, அப்பா, பெட்டிப் பாம்பாகி விடுவார்? பயம் எதுக்காக! நான் சின்னப் பெண்ணல்ல!! என்று பேசி, என் பயத்தை ஓட்டியே விட்டா சுகுணா. ஆனா சோல்ஜர் கிளப்பிலே உள்ள என்னோட சிநேகிதாளெல்லாம் பயம் காட்டிக்கொண்டே இருந்தாங்க. தங்கவேலு தத்தளிக்கப் போறான் பாரு! டாக்டர், கடைசியிலே இவனை ஏமாத்தி விடாவிட்டா என் பேரையே மாத்தி வைத்துக் கொள்கிறேன் பாரு! இப்படி எல்லாம் பேசுவாங்க. எனக்கும் அச்சம், அப்போதைக்கப்போது முளைத்தபடி இருந்தது—சுகுணா, என் எதிரே இருந்து சிரித்துப் பேசினா, பயம் பஞ்சு பஞ்சாப் பறந்து போயிடும்—தனியா நான் இருந்தா, பயம் மனதைக் குடையும். பலநாள் இப்படி தவியாத் தவித்தேன் பொன்னா! சிலநாள், சுகுணாவைப் போய்ப் பார்க்காமக்கூட இருந்து பார்த்தேன்...

பொ:— அப்பத்தான் வேதனை அதிகமாயிடும் — நான் பட்டேனே. படாதபாடு... பொன்னியை ஒருநாள் போய்ப் பார்க்கலேன்னா, மனசே கெட்டுப் போயிடுமே! காரணமில்லாமலே கோவம் வரும்! யாரையும் கண்டபடி ஏசணும்னு எண்ணம். என்னமோ ஒரு மாதிரியான சலிப்பு...

வீண் சண்டைக்கெல்லாம் போகத் தோணும்...நான் அனுபவிச்சுப் பார்த்தனே அந்தத் தொல்லையை...

தங்:— வீண் சண்டை, நான் கூடத்தான் போட்டேன்...நான் தானே பொறுப்பு, கிளப் நாடகத்துக்கு — நான் அதைக் கவனிக்காம இருந்தா, கோபம்தானே வரும் யாருக்கும், கண்டிக்கத்தானே செய்வாங்க...என்ன தங்கவேலு! உன்னோட காதல் நாடகம்தான் நடக்குதே தவிர, சபா நாடகத்தை அடியோடு மறந்துவிட்டாயே, இது சரியான்னு கேட்டாங்க—கோபம், பாரேன், எனக்கு....கெப்பளிச்சிகிட்டு வந்துது—ஏதேதோ பேசிவிட்டேன்...

பொ:— நீ செய்ததுதானே தப்பு! நாடகத்தை நடத்தறதா ஒப்புக்கொண்டா. ஏதோ ஒரு நாடகம், சொத்தையோ சோடையோ, நடத்தத்தானே வேணும்...

தங்:— ஆமாம் — அதனாலேதான் மறுபடியும் அந்த வேலையைக் கவனிக்கணும்னு சொல்லவே...

பொ:— தேவியோடே கட்டளையை மீறலாமோ...

தங்:— அடடே வேடிக்கையா இருக்கே! எங்க சபா நாடகத்தோட பேர், தேவி தான்.

பொ:— தேவின்னு பேரா?

தங்:— ஆமாம்—ஒத்திகை எல்லாம் நடந்தது — எனக்குக் கொஞ்சம் நாடகப் பழக்கம் உண்டு — பாடுவேன் — பிரமாதமா இராது—ஆனா, காதைக் குடையாது — கடைசி ஒத்திகை நடக்குது—மளமளன்னு பத்துசீன் ஒத்திகை நடந்து முடுஞ்சு, பதினோராவது சீன் ஆரம்பமாகுது, சுகுணா, வந்தாச்சி...

பொ:— சர்தான்! அவ்வளவுதான் ஒத்திகை!

தங்:— நான் அப்படித்தான் சொன்னேன்! சுகுணாதான். பூரா ஒத்திகையும் நடக்கட்டுமனு...

பொ:— உத்தரவு போட்டுதா...! அப்படி!

தங்:— ஆமாம்...

காட்சி—39

[பழைய காட்சி—ஒத்திகை பார்க்கும் இடம்]

(நாடக ஒத்திகை நடக்கிறது. நாலைந்து சோல்ஜர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். சுகுணாவும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, ஒத்திகையைக் கண்டு களிக்கிறாள். தங்கவேல், அவள் அருகே அமர்ந்தபடி, ஒத்திகையை நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஒரு ராஜகுமாரன் தன் காதலியிடம் உருக்கமாகப் பேசும் காட்சியின் ஒத்திகை நடைபெறுகிறது.)

ராஜ:— தேவி! தேவீ! எங்கெங்கு தேடுவது உன்னை... பூந்தோட்டம், நீராழிமண்டபம், எல்லாம்...

(தேவி கண்களைக் கசக்கியபடி)

தேவி:— தேடினீர்களா...

ராஜ:— ஆமாம், தேவி! பொய்யா சொல்கிறேன்... நம்பவில்லையா?

தேவி:— நிஜமாகவா தேடினீர்!

ராஜ:— நிஜமாகத்தான்!

(தேவி, முகத்தைக் கைகளால் மறைத்துக்கொண்டு விம்முகிறாள். ராஜகுமாரன் பதறி, அவள் அருகே சென்று)

ராஜ:— ஏன்! என்ன, தேவீ!

தேவி:— என்னைத்தான் தேடுகிறீர்களே! உண்மையான காதல் இருந்தால், தேடவும் வேண்டுமா—உங்கள் மனதிலே நான் எப்போதும் இருக்க வேண்டுமல்லவா?

ராஜ:— (அவளை அணைத்தபடி) அடடா! அதைக் கூறுகிறாயா, தேவி! நீ, எப்போதும் என் மனதிலேதான் இருக்கிறாய். என் மனதிலே வேறு மங்கையும் புக இடந்தருவேனா...

(பாட முயற்சிக்கிறான். மற்றவர்கள் தங்கவேலுவைப் பார்த்து)

மற்:— தங்கவேல்! காதல் பாட்டை நீ பாடு...

(எல்லோரும் சேர்ந்து, ‘பாடவேணும். தங்கவேல்தான் பாடவேண்டும்’ என்று கூச்சலிருகிறார்கள். சுகுணாவும் ஜாடை செய்கிறாள். தங்கவேல் எழுந்து நின்று பாட ஆரம்பிக்கிறான்.)

(தங்கவேல் பாடுகிறான்)

மனதை மயக்கும் மங்கை
என் மனதை மயக்கும் மங்கை
இவன்
மலரடி வருடிட மாதவம் வேண்டும்! (மனதை)

சித்திரமே!
பத்தரைமாத்துப் பசும்பொன்
அதனால் செய்த சித்திரமே!
கைத்திறன் முழுவதும்
காட்டுகிறேன் எனக்
கடவுள் அளித்திடும்
பொற் சித்திரமே!
வா! வா! வந்தெனக்கு உன்
அருள், தா! அருள் தா! (மனதை)

செங்கரும்பின் சாறு
அதோ செம்பவளக் கோப்பை!
சிரித்திடும் முல்லை!

கருத்தைப் பறித்திடும், நிலவு!
என் சித்தமதில் ஒரு புத்தம் புதிய
செந்தேனைச் சிந்திடும் செல்வீ! தேவி! (மனதை)

(சுகுணாவும் மற்றவர்களும் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். தங்கவேல் சிறிதளவு கூச்சமடைகிறான்.)

சு:— பிரமாதமா இருக்கே, பாட்டு!

தங்:— போ சுகுணா! நீ இருந்தால், ஒத்திகை நடத்த வராது—கேலி செய்வாய் பிறகு......(மற்றவர்களிடம்) நாளைக்கு...உம்...! என்ன...

மற்:— சரி .....

சு:— அடடா! என்னாலே உங்க வேலை பாழாகிவிட்டதே...

ஒரு:— பரவாயில்லை...பத்து சீன்வரை ஒத்திகை நடந்தது....எங்களுக்கும் களைப்புதான்...

சு:— எனக்கும் களைப்பா இருக்கவேதான், இப்படி வந்தேன், பொழுது போக்காக டிராமா பார்க்கலாம்னு...சரி...

(தங்கத்தைப் பார்க்க)

தங்:— போகலாமா....

சு:— உம்!

(இருவரும் வெளியே செல்ல, ஒரு நடிகன் ‘மனதை மயக்கும் மங்கை, தங்கத்தின் மனதை மயக்கும் மங்கை’ என்று பாடிக்கேலி செய்கிறான். சுகுணா வெட்கித் தலை குனிகிறாள். தங்கவேல், இடியட், பாடத்தைச் சரியாப் படி போ.... என்று கூறிவிட்டுப் புன்னகை செய்கிறான், இருவரும் வெளியே சென்று கை கோர்த்தபடி செல்-
கிறார்கள்; பூந்தோட்டம் சென்று உலவுகிறார்கள்: தனிமையான ஓர் இடத்திலே உட்காருகிறார்கள்.)

சு:— உண்மையாகவே, பாட்டு, அருமையாக இருந்தது A.1.

தங்:— போ சுகுணா ! கேலி!

சு:— இல்லே தங்கம்! நிஜமாத்தான் சொல்றேன்....

தங்:— அப்படியானா, அதற்குக் காரணம் நீயாகத்தான் இருக்கவேண்டும்...

சு:— நானா...!

தங்:— ஆமாம்—நான் நாடகப்பாட்டு என்கிற நினைப்புடனா பாடினேன்—சுகுணா! உன்னை எண்ணிக்கொண்டு தான் பாடினேன் — நிச்சயமாக..

சு:— எனக்குக் கொஞ்சம் வெக்கமாக்கூட இருந்தது—என்னை அப்படியா பார்க்கிறது...

(சுகுணாவின் இரு கன்னங்களையும் தன் கரங்களில் பிடித்தபடி அவளைக் கனிவுடன் பார்த்து)

தங்:— எப்போதும்தான், அவ்விதம் ! அன்புக் கனியே! வேறு எப்படிப் பார்க்க முடியும், மனதைப் பறிகொடுத்துவிட்டவன்...

சு:— ஐய்யய்யோ! நாடக நினைப்பு போகவில்லை போலிருக்கு...ஏதேது, இன்பமே! இன்னுயிரே! இதயராணி என்றெல்லாம் பாட ஆரம்பித்துவிடுவீர்கள் போல இருக்கு...

தங்:— எனக்கென்னமோ சுகுணா! அப்படி எல்லாம் பாடலாமா, பேசலாமா என்றுகூடத்தான் எண்ணம் வருகிறது......

சு:— (கனிவுடன்) பேசுங்களேன்...எனக்கும் அப்படித்தான்,

தங்:— கண்ணே!

சு:— உம்! (முகத்தை மூடிக்கொண்டு) வேண்டாம் தங்கம்; எனக்கு வெட்கமா இருக்கு.

(அவள் கரத்தைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு)

தங்:— உன் அன்பு கிடைத்த பிறகு, நான் புது உலகிலே அல்லவா வாழ்கிறேன்...வாழ்வு ஒரு விளையா நிலமாக இருந்தது — இப்போது... பூந்தோட்டமாகி விட்டது. (அவள் கூந்தலை முகர்ந்தபடி) புதுமணம் வீசுகிறது (அவளை மார்பிலே சாய்த்துக்கொண்டு) புது இன்பம்!

சு:— (தழதழத்த குரலில்) தங்கம்? அறியாப் பருவத்திலே விதவையானேன் — அரும்பு...ஜாதி ஆச்சாரம் அரும்பைக் கசக்கி குப்பையிலே வீசிவிட முனைந்தது — துணிந்து போராடினேன் டாக்டரானேன் — அரும்பு மலராயிற்று. ஆனால் மணமற்ற மலர், காகிதப்பூவாக இருந்தேன்—காதல் உயிரூட்டி, கண்ணாளா! எனக்கு வாழ்வளித்தீர், எத்தனையோ இரவு கண்ணீர் வடித்திருக்கிறேன், விம்மி இருக்கிறேன் — என் மனமோ என் வசம் இருக்க மறுத்துவிட்டது—ஜாதியோ முரட்டுப் பிடிவாதம் கொண்டது—குருட்டுத்தனமான கொள்கைகளைக் கூறும் வேலை செய்யும் ஜாதி. அதையும் உருட்டி உருட்டி மிரட்டித்தான் பேசும் — விதவைக்கு மறுமணம் என்றால், பேயாட்டமல்லவா ஆடும்...

தங்:— (சிறிது பயந்து) அதைத்தானே குணா! நான் ஆயிரம் தடவை சொன்னேன்—என்னைப் பித்தனாக்கி விட்டு, இப்போது நீயே, ஜாதி மிரட்டுமே என்று பேசுகிறாயே;..

(சுகுணா தங்கத்தின் முகவாய்க் கட்டையை அன்புடன் தொட்டுவிட்டு)

க:— பயமா! அது போயே விட்டது தங்கம்! முதலிலே, அப்படி எல்லாம் எண்ணினேன்...

தங்:— இப்போது...

சு:— இப்போதா! பைத்யமே! அப்பா சீறினாலும், ஆகமத்தைக் காட்டினாலும், அண்ணன் கோபித்தாலும், அக்ரகாரம் கொதித்தாலும், சுகுணா, பயப்படப்போவதில்லை. (அவன் கன்னத்தை இலேசாகத் தட்டியபடி) உம்மையும் பயப்பட விடப்போவதில்லை.

தங்:— எவ்வளவு இன்பம், சுகுணா! இந்தப் பேச்சு...!

சு:— கேட்பதற்கு மட்டுமா...சொல்வதற்கும் இன்பமாகத்தான் இருக்கிறது...

தங்:— ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே...லண்டனில், ஒரு பயிற்சி வகுப்பு பட்டாளத்து ஆபீசர்களுக்கு—அதற்கு என்னை அனுப்புவதாக உத்திரவு வந்திருக்கிறதாம்—இன்னும் என் கைக்கு வரவில்லை — ஆபீசர் சொன்னார்

(சுகுணா, தங்கவேலுவின் கரத்தைப் பிடித்துக் குலுக்கி)

சு:— இதுவரையிலே சொல்லவில்லையே! லண்டன் போகப் போறீரா? பேஷ்! எப்போது...

தங்:— ஆறு மாதமாகுமாம்...

சு:— லண்டனில் எவ்வளவு காலம்...?

தங்:— ஒரு வருஷமாவது இருக்கவேண்டி வருமாம்...

சு:— ஓஹோ! உம்மை இனி நம்பக்கூடாது... விரைவிலே திருமணத்தை நடத்திவிடவேண்டும்...தங்கம்! திருமணம் முடித்துக்கொண்டுதான், நாம், லண்டன் போக வேண்டும்.

தங்:— நாமா?

சு:— ஏன்... என்னை இங்கே தவிக்க விட்டுவிட்டு நீங்கள் தனியாக லண்டன் போய் ‘குஷி’யாக இருக்கத் திட்டமா?

தங்:— செச்சே! லண்டன் போவதற்கில்லை என்று மேலதிகாரிக்குச் சொல்லிவிட அல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன்....நீ இங்கே—நான் அங்கேயா!

சு:— அப்படி...! அதுதானே, கேட்டேன், போவதானால் இருவரும்—இல்லையானால், லண்டலும் பாரிசும் இங்கேயே...

தங்:— லண்டன் என்ன செய்யும், பாரிஸ் என்ன செய்யும், இதோ இந்த இன்பபுரிக்கு இணையாகுமா?

(என்று கூறியவண்ணம், சுகுணாவை அருகில் இழுத்து அணைத்துக்கொள்ள முயல, சுகுணா, ஓயிலாக அதைத் தடுத்தபடி)

சு:— வீடு போகலாம்...தங்கம்! என் உடம்பு, ‘ஜிலு ஜிலு’ என்று ஒருவிதமாக இருக்கிறது...

(தங்கமும் சுகுணாவும் கை கோரித்தபடி பூந்தோட்டத்தை விட்டுச் செல்கிறார்கள்.)

காட்சி—40

(தங்கவேல், பொன்னன் உரையாடல் தொடர்ச்சி)

பொ:— உன்னோட காதல் கதை ‘பஸ்ட் கிளாசா’ தானிருக்கு...

தங்:— எல்லாவற்றையும் கெடுத்துவிட அல்லவா, சுகுணாவோட தகப்பனார் ‘பிளான்’ போட்டார்...

பொ:— இவரு சாமான்யப்பட்டவரா? ஐயனோட ‘பிளான்’ என்னா ஆச்சு, பார்த்தாயா!

தங்:— ஐயனோட பிளானை, இப்ப கெடுத்துவிட்டே. ஆனா, முதலிலே போட்ட ‘பிளான்’ (தலைக்கட்டைக் காட்டி) இதோ, இருக்கே...

பொ:— (வெட்கி) போப்பா! எதுவோ தெரியாம நடந்துபோன விஷயத்தைச் சொல்லி, குத்தலாப் பேசறியே...நான்தான் புதுப் பொன்னனாயிட்டேனே... போய் வரட்டுமா...மத்த விஷயத்தைக் கவனிக்கணும்.

(தங்கவேல் சரி என்று தலை அசைக்க, பொன்னன் வெளியே செல்கிறான்.)

காட்சி—41

இடம்:— அழகூர், அருள்குமார் வீடு.

இருப்போர்:— அருள்குமார், சந்திரசேகர ஐயர்.

ச:— பிச்சு! நான் என்ன செய்யட்டும்—அவசர புத்தியாலே அனர்த்தம் வந்தூட்டுது...

அ:— சுத்த பைத்யக்காரத்தனமா மாட்டிண்டீர்... பெட்ரோல் வேணும்னா, வேறே எதுவும் எழுதாமப்படிக்கு பெட்ரோல் 2 காலன் வேணும்னு எழுதப்படாதோ...


ச:— நம்ப திட்டம் பலிச்சுப்போச்சு என்கிற சந்தோஷம்— அதனாலே எல்லாவற்றையும் எழுதிவிட்டேன்—

அ:— அந்த லெட்டரைக் கொண்டு, அவா, என்ன வேணுமானு செய்ய முடியுமே — ஆபத்தான நிலைமையான்னா வந்து சேர்ந்தது.

(யோசித்து)

இனி வீணா மனரைக் குழப்பிண்டு பிரயோஜனமில்லே...பேசாது, கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டியதுதான்.

ச:— நம்ம சம்மதம் இல்லைன்னாலும், கல்யாணம் நடந்துடப் போறது...

அ:— தடுக்கவும் முடியாது...தலை தப்பினா போதும்னு இருக்கு இப்போ, கடுதாசி கொடுத்தீரே கடுதாசி, உம்ம உயிருக்கு உலை வைக்கிற கடுதாசி...

ச:— (சிறிது கோபமாக) ஏண்டா, அதையே திருப்பித்திருப்பிச் சொல்லி, என் பிராணனை வாட்டிண்டிருக்கே. நீதானே, கடிதம் கொடுத்தனுப்பினே — தங்கவேலை ஒழிச்சாகணும். இல்லேன்னா நம்ம குடும்ப கௌரவமும் குலப் பெருமையும் நாசமாகும்னு...

அ:— ஆமாம் — ஆன. உம்மை இப்படி அசட்டுத்தனமான காரியம் செய்து, ஆபத்திலே மாட்டிக்கொள்ளச் சொன்னேனா...வரவர, உமக்கு மூளை வறண்டு போயிண்டிருக்கு. இனி நாமும் கல்யாணத்திலே கலந்திருப்பதுதான், புத்திசாலித்தனமான காரியம்...

காட்சி—42

(சில நாட்களுக்குப் பிறகு)

இடம்:— அழகூர், கோகலே மண்டபம்.

இருப்போர்:— தங்கவேல், சுகுணா, பக்கிரி, பொன்னன், அம்பிகா, பொன்னி, அருள்குமார், தாண்டவராயன், சந்திரசேகர ஐயர், சம்பத்தன் முதலியோர். திருமணப் பதிவாளர், திருமணவிழாத் தலைவர்.
(திருமணப் பதிவாளர், தங்கவேல்—சுகுணா பதிவுத் திருமணத்தை நடத்திவைக்கிறார். மணமக்கள் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.)

விழாத்தலைவர்:— மணமக்களே! பெரியோர்களே! நண்பர்களே! இந்தத் திருமண விழாவுக்கு என்னைத் தலைவனாக இருக்கும்படி அழைத்தார்கள். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன்.

(அருள்குமாரும் தங்கவேலுவும் ஏதோ இரகசியமாகப் பேசுகிறார்கள்.)

பரவாயில்லை. தலைமை வகிக்கும்படி பிரேரேபிக்காமல் விட்டோமே என்று அருள்குமார் கவலைப்படுகிறார். அதனால் என்ன? இந்தத் திருமணத்துக்கு நான் தலைமை வகிப்பது என்று ஏற்கனவே ஏற்பாடாகிவிட்டது. அதனாலே இப்போது ஒரு முறை பிரேரேபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையான காட்சி இது. கலப்புத் திருமணம். விதவைக்கு மறுமணம். காலப்போக்கை உணர்ந்து, அறிவுக்குப் பொருத்தமான முறையிலே நடத்தப்பட்ட காதல் மணம். அம்மி மிதித்து, அரசாணைக்கால் வைத்து, அக்னி சாட்சியாக நடத்தப்பட்டது தோழியர் சுகுணாவின் திருமணம்—முன்பு! சந்திரசேகர ஐயரே, பெரிய வைதீகர். அவருடைய மகள் திருமணம் என்றால், எவ்வளவு சாஸ்திரோக்தமாக நடைபெற்றிருக்க வேண்டும்! சுப முகூர்த்தம் பார்த்துத்தானே வைத்திருப்பார்கள் இருந்தும் என்ன நடந்தது? சுகுணா விதவையான கொடுமை! இப்போது, பழமை, அதாவது மடமை ஒழிக்கப்பட்டு வருகிற காலம். ஆனால் பலருக்குப் புதிய முறையில் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள தைரியம் வருவதில்லை. அந்தத் தைரியம் சுலபத்திலே வரத்தான் செய்யாது. வீண்பயம் பிடித்தாட்டும். சந்தேகம் மனதுக்குள்ளே நுழைந்து சஞ்சலத்தை உண்டாக்கும். அதனாலேதான், இன்னமும் பாமர மக்கள் அறிவுக்குப் பொருத்தமற்ற முறையிலே வைதீகக் கலியாணத்தை நடத்திக் கொண்டு வருகிறார்கள். பாமர மக்களுக்கு சீர்திருத்த விஷயமாகத் தெளிவும் தைரியமும் ஏற்பட வேண்டுமானால், இப்படிப்பட்ட பெரிய குடும்பத்திலே, அறிவுப் புரட்சி ஏற்பட வேண்டும். இந்தத் திருமணம், அறிவுப் புரட்சியின் விளைவுதான். புரட்சித் திருமணம் இது. புது உலகை நோக்கி நாடு மெள்ளமெள்ளச் செல்லுகிறது என்பதைக் காட்டும் திருமணம். மணமக்களை வாழ்த்துகிறேன் இதுபோல், சீர்திருத்தத் திருமணம், விதவைக்கு மறுமணம், நாட்டிலே எங்கும் நடைபெற வேண்டும். நாட்டின் மீது பூட்டப்பட்டுள்ள பழைய விலங்குகள் நொறுக்கப்பட வேண்டும். புதுக் கருத்துக்கு இடமளிக்க வேண்டும். சுகுணா—தங்கவேல் திருமணம் இதற்குத் துணை செய்யும். வாழ்க மணமக்கள்! வளர்க சீர்திருத்தம், மலர்க புது சமுதாயம்!

(அனைவரும் கை தட்டுகிறார்கள். அருள்குமார் எழுந்து பேச முன் வருகிறான்.)

அருள்குமார்!—இப்போ, நான் எல்லோருக்கும் வந்தனோபசாரம் சொல்ல வந்திருக்கேன்—திவ்யமா, ஆனந்தமா, இந்த விவாஹத்தை நடத்திக் கொடுத்தார், ஜட்ஜ் அவா. அவருக்கும், இங்கே வந்து இந்த வைபவத்திலே கலந்திண்ட, எல்லோருக்கும் வந்தனம். தலைவர் இங்கே பேசினார் சீர்திருத்தத் திருமணம்—அறிவுத் திருமணம்னு பாராட்டிப் பேசினார். அவர் பெரிய கல்விமானோன்னோ, அதனாலே, இப்படிப்பட்ட காரியத்தைச் சிலாகிச்சுப் பேசினார், நீங்களெல்லாம்கூட ஆரம்பத்திலே ஆச்சரியப் பட்டிருப்பேள்—அதாவது எங்க தோப்பனாரைப் பார்த்ததும்...

(சந்திரசேகர ஐயர் முகத்தில் அசடு வழிகிறது பலர் சிரிக்கிறார்கள்.)

ஏன் சிரிக்கறேள்—என் தோப்பனார்தான் அவர்—

(மீண்டும் சிரிப்பு)

புஷ்கோட்டும், ஸ்பெக்ட்சுமா நான் இருக்கறேன், அவர் பஞ்சகச்சமும், (தலையைத் தடவி) இப்படியுமா இருக்கார்னுதானே சிரிக்கறேள். இதோ பாருங்கோ, எப்படி உடை இருந்தா என்னா, மனசு இருக்கு பாருங்கோ மனசு, அதுதான் முக்யம். எங்க அப்பாவோட மனசு உங்களுக்குத் தெரியாது. பார்வைக்கு அவர் வைதீகம்தான்—ஆனா, மனசு, எப்பவும் சீர்திருத்தம் நிரம்பியது.

(கைதட்டுகிறார்கள்.)

பாருங்கோ என் தமக்கை சுகுணா, விடோ ஆனதும் எவ்வளவோ பேர், சாஸ்திரம் வேதம், அது இதுன்னு சொல்லி, தலையை மொட்டை அடிக்க வேணும்னு சொன்னா—முடியாதுன்னு சொல்லிவிட்டார்—ஆச்சரியமில்லையோ—பெரிய சீர்திருத்தக்காராளெல்லாம் கூடப் பயப்படுவா. ஆனால் எங்க அப்பா துளிக்கூடப் பயப்பட மாட்டார். பிற்பாடு, என்னைச் சினிமாவிலே சேரச் சம்மதிச்சார்—என் தமயனைச் சீமைக்குப் போகச் சொன்னார்... இப்படி பலசீர்திருத்தம் — அவர் செய்தது. அதனாலே இந்த விவாகத்தாலே கிடைக்கற கீர்த்தி பூராவும் அவருக்குத்தான்.

(கைதட்டுகிறார்கள்)

மறுபடியும் எல்லாருக்கும் நமஸ்காரம்.

(அனைவரும் எழுந்திருக்க)

இருங்கோ — இருங்கோ — பெரியவா சிலபேர், அனுப்பி இருக்கிற வாழ்த்துக்களை வாசிச்சுடறேன்—

(மீண்டும் உட்காருகிறார்கள்.)

(ஒரு தந்தியைப் பிரித்து)

‘ஆர்ட்டி கன்கிராஜலேஷன்.’ யார் தெரியுமோ! ஜட்ஜ் ஜம்புகேச ஐயர் — எங்க பந்து— சுருக்கமா தந்தி அடிச்சிருக்கார்—ஆசீர்வாதம்னு.

(மற்றொன்று)

இது, எங்க ஸ்டூடியோ முதலாளி. நமஸ்காரம். வந்தனம் அவுட்டோர் ஷூட்டிங் சமயம். அதனால் வரவில்லை. ஆயிரம் ரூபாய் செக் அலுப்பியிருக்கிறேன், லேடீடாக்டர் சுகுணாவதி அவர்களுக்கு.

(பலர் எழுந்திருக்க முயல)

இருங்கோ—பொறுமை வேணும்னு பெரியவா சொல்லி இருக்காளான்னோ.

யோகி சுகிர்தானந்த பாரதியார்.

ஜாதி ஒழிக ஜாதி ஒழிக
பேதம் அழிக பேதம் அழிக
வேதியர் வேறவர்
என்பது பழமை
வாழ்ந்திடும் உலகமோ புதுமை
பழமை ஒழிக்கும்
சுகுணா வாழ்க
சுகுணம் கொண்ட
வேலன் வாழ்க
அருமறை திருமறை
பெருமறை வாழ்க
அகிலம் வாழ்க
அன்பு வாழ்க

                  சு. பா.

பார்த்தேளா! எவ்வளவு அழகா எழுதி இருக்கார்—எங்க ஸ்டுடியோ முதலாளியிடம் தலைப்பாடா அடிச்சிண்டேன், சுகிர்தானந்த பாரதியாரைக் கொண்டு பாட்டு எழுதணும்னு. என்னமோ காரணம் சொல்லி, முடியாதுன்னு சொல்லிவிட்டார் முதலாளி. என்ன அருமையா பாடறார்,


அருமறை திருமறை
பெருமறை வாழ்க
அகிலம் வாழ்க
அன்பு வாழ்க!

(பலர் வெளிஏறக் கண்டு)

போதும்னு தோணறது. மத்ததெல்லாம், பேபர்லே வரும்—நமஸ்காரம்.

(அனைவரும் செல்கிறார்கள்.)

காட்சி—43

இடம்:— அழகூர், சுகுணா வீடு.

இருப்போர்:— சுகுணா. அருள்.

அ:— சுகுணா! சாமர்த்யமா நடந்துண்டே! ஜெயம் உனக்குத்தான்...

சு:— அண்ணா! நான் வாஸ்தவமாச் சொல்றேன், கலப்பு மணத்துக்கு நீ எதிர்ப்புப் பேசுவேன்னு எண்ணவே இல்லை...

அ:— சரி சுகு! ஏன் பழய விஷயத்தைக் கிளறிண்டிருக்கே. எல்லாம் இப்ப, சுபமா முடிஞ்சிருக்கு. இனி ஒரு சகாயம் செய்யவேணும் நீ . அப்பாவோட பிராணச வாட்டக்கூடிய கடிதம் ஒண்ணு, சிக்கிண்டிருக்கு பொன்னனிடம். அவன் எந்தக் காரணத்தாலாவது, போலீசுக்குக் கொடுத்துவிட்டா, ஆபத்துதான் அப்பாவுக்கு. அதனாலே அவனிடம் சொல்லிக் கடுதாசியை வாங்கிக் கொடு, அப்பாவுக்கு அப்பத்தான் மனம் நிம்மதியாகும்.

சு:— பொன்னா!...பொன்னா!...பொ...ன்..னா!

(பொன்னன் வருகிறான்)

சு:— அண்ணா சொல்றார், உன்னிடம் என்னமோ லெட்டர் இருக்காமே...

பொ:— என்னமோ லெடராமா அது? விவரம் சொல்லலியா? வெட்கமா இருக்குமேல்லோ, விவரம் சொல்ல...இருக்குது கடுதாசி—அதனாலே என்ன...

சு:— பயப்படறா...பொன்னா!

பொ:— அந்தப் பயம் இருக்கிறது நல்லதுதான் — இருக்கட்டும்...

அ:— பொன்னா! இப்ப, எல்லாக் காரியமும் சுயமா முடிந்திருக்கு—இன்னமும் ஏன், அந்த லெட்டர்

பொ:— மறுபடியும் ஏதாவது சூது செய்தா...

சு:— யார்? அப்பாவா...?

பொ:— இவரும் கூடத்தான்...

சு:— இனி என்ன செய்ய முடியும்! ரிஜிஸ்தர் திருமணம் நடந்திருக்கு...

பொ:— இதைக் கெடுக்க முடியாதே இவர்களாலே...

சு:— துளிக்கூட முடியாது...

பொ:— அப்படியா...! (காகிதத்தை எடுத்துச் சுருட்டிக் கொளுத்தியபடி) இனித் தேவையில்லை கடுதாசி...

(எரிவது கண்டு அருள்குமாரும், அப்போது வந்த சந்திரசேகரரும் மகிழ்கிறார்கள்.)

குளிருதா மனசு! இனிமேல்படவாவது...

சந்:— பொன்னா! என் மனதிலே இருந்துவந்த சூது வஞ்சனை எல்லாம் பஸ்பமாயிடுத்து...

(தங்கவேல் வருகிறான்)

தங்:— என்ன, பொன்னா இது... வேடிக்கை!

பொ:— இதுவா... இதுதான் காதல் ஜோதி...!

(அருள்குமார் மெல்லிய குரலில் ‘காதல் ஜோதி’ பாட்டுப் பாடுகிறான்.)



அறிஞர்
சி. என். அண்ணாதுரை, எம். ஏ
அவர்களின் நூல்கள்

பார்வதி பி.ஏ..

ரங்கோன் ராதா

காதல் ஜோதி

ஓர் இரவு

மாஜிக்கடவுள்கள்

அண்ணாவின் சொற்செல்வம்

ஏ. தாழ்ந்த தமிழகமே!

தமிழரின் மறுமலர்ச்சி

முத்துக் குவியல்

பாரி நிலையம்
59. பிராட்வே. சென்னை–1