கால்டுவெல் ஒப்பிலக்கணம்/011-033

விக்கிமூலம் இலிருந்து

(VI) ஓராவோன் :

சூடிய நாகபுரியிலும், அதைச் சுற்றிலும் வாழும் ஓராவோன் இனத்தாரின் தொகை 8,00,000. “வங்காள மக்களின் வரலாறு”[1] என்ற நூலில் கர்னல் டால்டன் இவர்களைப் பற்றிய சுவையான வரலாற்றுக் குறிப்பொன்று எழுதியுள்ளார். இவர்கள் மொழியும் திராவிட மொழியையே அடிப்படையாயுடையதாகும். பாட்ஸ்க் பாதிரியார் இம் மொழிக்குரிய இலக்கணச் சுருக்கம்[2] ஒன்று எழுதியுள்ளார்.

இவர்கள் தங்களைக் குர்ங்கர்கள்[3] என்று கூறிக்கொள்கின்றனர். கொங்கணத்திலிருந்து வந்ததாகவும், ரோதா[4] மலைகளிலும் பாடலிபுரக் கோட்டத்தை யடுத்த மலைகளிலும் நெடுநாள் வாழ்ந்திருந்ததாகவும், அங்கிருந்து துரத்தப்பட்ட பொழுது இராஜ்மஹால் மலைகளுக்கு ஒரு பகுதியினரும், சூடிய நாகபுரி மலைகளுக்கு மற்றொரு பகுதியினருமாகச் சென்று குடியேறியதாகவும் அவர்கள் கூறிக்கொள்கின்றனர். மொழி யொற்றுமைகளும், பழக்க வழக்க வொற்றுமைகளும் இதனை வலியுறுத்துகின்றன. மூண்டர்களும் கோலேரியர்களும் வந்து குடியேறுவதற்கு முன்னரே ஒராவோனியர்கள் சூடிய நாகபுரியில் வந்துவிட்டார்கள் என்பது வழக்காறு.

துதம், கோதம், கோண்டு முதலிய மொழிகள் திருத்தமற்றவையா யிருந்தபோதிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய திருந்திய மொழிகளைப் போலவே அவை தூய திராவிட மொழிகள் என்பதில் ஐயமில்லை. அவற்றிற் கடுத்தபடியாக, இராஜ்மஹால், ஒராவோன் என்ற இரண்டு மொழிகளையும் திராவிட மொழிகளாகக் கொள்ளலாம். ஏனெனில், இவற்றில் சுட்டுப் பெயர்கள், முதல் நான்கு எண்கள் போன்ற இன்றியமையாச் சொற்களை உள்ளிட்ட முதற் சொற்களில் பெரும்பாலானவை திராவிடச் சொற்களே யாயினும் அவற்றோடுகூடப் பிற குழுச் சொற்களும் கலந்துள்ளன. இப் பிறகுழு கோலேரியக் குழு எனக் கொள்ளப்படுகிறது. எனவே, இவ்விரு மொழிகளும் திராவிட மொழிகளேயாயினும் பிற திராவிட மொழிகளைவிடத் தூய்மை குறைந்தவையே. இவற்றுள்ளும், ஒராவோன் இராஜ்மஹாலையும், கோலேரிய இனத்தையும் இணைப்பதென்றும், இராஜ்மஹால் அதேபோன்று ஒராவோனையும் திராவிட மொழிகளையும் இணைப்ப தென்றும் ஹாட்ஜ்ஸன் கொள்கிறார். எப்படியும் ஓராவோனைவிட இராஜ்மஹாலே திராவிடச் சார்பு மிகுதியு முடையதென்பது தேற்றம்.

மத்திய மண்டிலத்திலும், வங்காளத்திலும் வழங்கும் திருந்தா மொழிகளுள் இரண்டிலாவது திராவிடத் தொடர்பு இருக்கின்றது என்பது மேற்கூறிப் போந்தவற்றால் இனிது விளங்கும். எனவே, திராவிடப் பெருங் குழுவினர் கங்கைக் கரையி லில்லாவிட்டாலும், வங்காள மண்டிலம் வரையிலும் பரவி யிருந்தார்கள் என்பது போதருகின்றது. முன்னைப் பழங்காலத்தில் திராவிடக் குழுவினர் இந்தியா முழுதுமே பரவியிருந்திருத்தல் வேண்டும் என்ற கொள்கை ஒருவாறு இதனால் வலியுறுத்தப்படுகின்றது.

கர்னல் டால்டன் தம்முடைய ”வங்காள மக்கள் வரலாறு” என்ற நூலில் திராவிடத் தொடர்பைக் குறித்துக் கூறியுள்ள பகுதி வருமாறு:

"பொதுவாக இப்பொழுது நம்பப்பட்டு வருவதைக் காட்டிலும் மிகப் பெருவாரியாகக் திராவிடத் தொடர்பு வங்காள மக்களிடை காணப்படுகிறது. இன்று இந்துப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டவர்களாகக் காணப்படும் வங்காளப் பழங்குடிகளிற் பெரும்பகுதியினர் திராவிடக்குழுவைச் சேர்ந்தவர்களே. வங்காளக் கோட்டங்களிலும், சூடிய நாகபுரி, ஒரிஸாப் பகுதிகளிலும் அவற்றை யடுத்த காடுகளிலும் வாழ்ந்துவரும் பூயியர்கள்[5] அனைவரும் திராவிடர்களே; கொச்சர்கள்[6] என்ற இனத்தாரும் திராவிடர்களே. பூயியர்களின் தொகை ஏறக்குறைய 25,00,000; கொச்சர்களின் தொகை 15,00,000. இந்த நாற்பது நூறாயிரவரும் வங்காள மண்டில மக்கட்டொகையில் பத்தில் ஒரு பங்கினராவர். இவர்கள் திராவிட இனத்தாருள் சேர்க்கப்பட வேண்டியவர்களே.” இம் முடிபு ஆராயத்தக்க தொன்றாகும்.

கொள்கை வேற்றுமைக் கிடமுள்ள இத்தகைய பகுதிகளை நீக்கி, ஐயத்திற்கே இடமின்றித் திராவிடர் என ஏற்றுக்கொள்ளத்தக்க வகுப்புகளும் அவற்றின் தொகைகளும் 1911-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி கீழே தரப்படுகின்றன.

திராவிட மொழிகள் பேசுபவர் தொகை
1. தமிழ்
1,91,89,740[7]
2. தெலுங்கு
2,35,42,859
3. கன்னடம்
1,05,25,739
4. மலையாளம்
67,92,277
5. துளு
5,31,498
6. குடகு
42,881
7. துடம்
730
8. கோதம்
1,280
9. கோண்டு
15,27,157
10. கந்தம் (கு)
5,30,476
11. இராஜ்மஹால்
64,875
12. ஒராவோன்
8,00,328
மொத்தத் திராவிடர்
6,35,49,846

இக் கணக்கின்படி திராவிடமொழி பேசுவோரின் மொத்தத் தொகை 6 கோடியே 40 நூறாயிரம் ஆதல் காண்க. இக் கணக்கில் நாடோடிகளான இராமூஸிகள், இலம்பாடிகள் முதலியவர்களைச் சேர்க்கவில்லை. ஏனெனில், இலம்பாடிகள் பேசுவது ஒருவகை இந்துஸ்தானியேயாகும். இராமூஸிகள் மொழியோ தெலுங்கின் மரூஉ. ஆதலால், அவை தனியாகக் கூறப்பட வேண்டியவையல்ல. மேற்குத்தொடரின் தென் பகுதியில் வாழும் மலையரசர்களிலோ சற்று வடக்கில் மலையாள மொழி வழங்கும் பகுதியின் அண்மையிலுள்ளோர் மலையாளச் சிதைவுமொழி ஒன்றையும், தெற்கே தமிழ் மொழி வழங்கும் பகுதியின் அண்மையிலுள்ளோர் மலையாளக் கலப்புற்ற தமிழ்ச் சிதைவுமொழி ஒன்றையுமே பேசுகின்றனர்.

இனி, மத்திய இந்தியாவிலும் வங்கத்திலும் உள்ள ஹோ, முண்டா முதலிய கோலேரிய மொழிகளும், சவரர்களின் மொழிகளும் திராவிட மொழிகளுள் சேர்க்கப்பட வில்லை. இவற்றை சர் ஜார்ஜ் காம்பெல் கோலேரிய இனமென்றும் ஹாட்ஜ்ஸன் தமிழினம் என்றும் வகுத்துள்ளார்கள். கோண்டு, கு, இராஜ்மஹால், ஒராவோன் முதிலிய மொழிகளுடன் இவை உறவுடையவையாகத் தோற்றுகின்றன என்பது உண்மையே. ஆனால் இவ்வுறவு ஒருசில திராவிட முதற்சொற்களுடன் நின்றுவிடுகிறது. இலக்கண அமைப்பில் யாதோர் ஒற்றுமையுமில்லை. இத்தகைய உறவு இன உறவாகமாட்டாது; நெடுநாளைய இட அண்மை யையும் பழக்கத்தையுமே காட்டுவதாகும்.

இந்தியாவின் வடகிழக்கில் போடோவர்[8] திமாலர்[9] முதலியவர் மொழிகளையும், குமாவோன்[10] அஸாம் இவற்றிடையேயுள்ள மலைக்காட்டு மக்களின் மொழிகளையும் இவ்வாறே திராவிட மொழியினத்திற் சேர்க்கவில்லை. ஹாட்ஜ்ஸன் இவற்றையும் தமிழ்க்குழு என்றே மதித்தனர். இதற்குக் காரணம் அவர் ஆரிய இனமல்லா மொழிகள் எல்லாவற்றையும் ஒரே குழு என்றும், அதில் தலைமையான மொழி தமிழ் என்றும் கொண்டதே யாகும். ஆனால் இலக்கண அமைப்பு, முதற்சொல் தொகுதி இவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவை திராவிட மொழிகளுடன் அத்தகைய நேரான இன ஒற்றுமை உடையவையாகத் தோற்ற வில்லை. அவர் காட்டிய சிற்சில இலக்கண அமைப்பு ஒப்புமைகள் இம் மொழிகளுக்குமட்டுமேயன்றிச் சித்திய இன மொழிகள் அனைத்திற்கும் பொதுப்பட்டவையாம். ஆதலால் அவற்றைத் திராவிடக் குழுவுடன் சேர்ப்பது துருக்கியக் குழுவுடன் சேர்ப்பதை யொப்பதேயாகும் என்க.

பலூச்சிஸ்தானத்தில் கெலத்துத் தொகுதியில் பேசப்படும் பிராகுவீ மொழி திராவிடச் சொற்கள் மட்டு மன்றித் திராவிட இலக்கண அமைப்புக்கூட உடையதாதலால், அது ஹாட்ஜ்ஸன் தமிழ்க்குழுவில் சேர்த்த நேபாள, பூதானத் தமிழ்மொழிகளைவிட, திராவிடக் குழுவுடன் சேர்க்கப்படுவதற்கு எத்தனையோ மடங்கு உரிமையுடைய தேயாகும். ஆனால் அதிலுங்கூடத் திராவிடப் பகுதி குறைவாகவும், பிற பகுதி மிகுதியாகவும் இருப்பதால், திராவிட ஒப்பியல் இலக்கணத்திற்கு உதவும் இடங்களில்மட்டும் அஃது எடுத்துக்காட்டப்படும்.

1911-ம் ஆண்டுக் கணக்கில் பிராகுவீ திராவிட மொழிகளுள் வைத்து எண்ணப்பட்டுள்ளது. அக் கணக்கின்படி பேசுவோர் தொகை 170,998 ஆகும். இது தவிர 236 பேர் பேசும் மல்ஹர்[11] என்பதொன்றும், 24,074 பேர் பேசும் கொலாமீ[12] என்பதொன்றும் திராவிட இனத்துள் சேர்க்கப்பட்டுள்ளன. பிராகுவீ மொழியில் ஒருசில தலைமையான சொற்கள் திராவிடச் சார்புடையவையாயினும், சொற்களுள் பெரும்பாலான திராவிடத்தின் வேறாயிருக்கின்றன. ஆனால் இலக்கண அமைப்பிலோ தெளிவான திராவிட ஒற்றுமைகள் உள்ளன. பிராருவீ மக்கள் தாங்கள் ஹாலெப்பி[13] (அலெப் போவி) லிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். இஃது ஒருகால் அவர்களிடையே பின்வந்த ஒரு கூட்டத்தாரைக் குறிப்பதாயிருக்க வேண்டும். அஃது ஆரியக் கூட்டமாகவும் இருந்திருக்கக்கூடும். ஆனால், எப்படியும் திராவிடச் சார்பான ஒரு முதல் கூட்டம் இருந்திருக்க வேண்டும். அதைப்பற்றி இத்திராவிட ஒற்றுமைகளால் தெரிவது தவிர வேறெதுவும் தெரியவில்லை. பின்வந்த கூட்டத்தார் இவர்களை வென்று இவர்களுடன் கலந்திருக்கலாம்.

பிராகுவீ மொழி திராவிட வகுப்பைச் சிந்து ஆறு கடந்து நடு ஆசியாவரையிற் கொண்டுபோய்ச் சேர்க்கின்றது. அம்மொழி உண்மையில் பஞ்சாபி, சிந்தி இவற்றுடன் ஒத்த மொழியாயினும் திராவிடப் பகுதி ஒன்றுடன் இணைந்துள்ள தென்பது மறுக்கக்கூடாத உண்மையாகும். இத் திராவிடப் பகுதியை நோக்கத் திராவிடரும் பின்னாளைய ஆரியர், கிரேக்கர், சித்தியர், மங்கோலியர் முதலியவர்களைப்போல் வட மேற்கிலிருந்து வந்தவர்தாமோ என்று எண்ண இடமிருக்கின்றது.

 

 
  1. Ethnology of Bengal-Col. Dalton.
  2. An Epitome of the grammar of Oraon by Rev. F. Batsch.
  3. Khurnk.
  4. Rhotas
  5. Bhuyias
  6. The Kocch
  7. கிழக்கிந்தியத் தீவுகள். மோரீஸ் முதலிய தொலை நாடுகளிலுள்ள தமிழ்மக்கள் தொகை சேர்க்கப்படவில்லை. அதையுஞ் சேர்த்தால் தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை 21,000,000 ஆகும்
  8. Bodos
  9. Dhimals
  10. Kumaon
  11. Malhar
  12. Kolami
  13. Haleb (Aleppo)