உள்ளடக்கத்துக்குச் செல்

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்/கடவுளரைப் பாடியவை

விக்கிமூலம் இலிருந்து

6. கடவுளரைப் பாடியவை

தலயாத்திரை நிமித்தமாகப் பல திருத்தலங்களுக்கும் சென்றவர் கவிஞர்; அவ்வவ்வூர்களில் இவர் பாடிய செய்யுட்கள் இவை. சில போற்றுதலாகவும், சில நிந்திப்பது போலத் தோற்றி போற்றுதலை உட்கொண்டவையாகவும் அமைந்து, இலக்கியச் செழுஞ்சுவையுடன விளங்குவதனைக் காணலாம்.

அன்னம் இறங்கான்


கம்பமத கடகளிற்றான் தில்லைவாழும்
        கணபதிதன் பெருவயிற்றைக் கண்டுவாடி
உம்பரெலாம் விழித்திருந்தார் அயில்வேற்செங்கை
        உடையவறு முகவனுங்கண் ணீராறானான்
பம்புசுடர்க் கண்ணனுமோ நஞ்சுண்டான்மால்
        பயமடைந்தான் உமையுமுடல் பாதி யானாள்
அம்புவியைப் படைத்திடுவ தவமேயென்
        றயனு மன்ன மிறங்காம லலைகின் றானே. (90)

சிதம்பரத்திலேயுள்ள கற்பக விநாயகரைப் பற்றிப் பாடிய செய்யுள் இது. நிந்திப்பது போலத் தோற்றினும், போற்றுதலாகவே அமைந்துள்ள சிறப்பினைக் கண்டு இன்புறலாம்.

அசைவினைக்கொண்ட மதம் பொழியும் யானை முகத்தினை உடையவனாகிய, தில்லை நகரிலே கோயில் கொண்டிருக்கின்ற கணபதியினுடைய பெருவயிற்றினைக் கண்டு வாட்டமுற்றுத் தேவர்கள் எல்லோருமே கண் இமையாது கவலையுடனே இருந்தார்கள். கூர்மையான வேற்படையினைக் கைக்கொண்டோனாகிய ஆறுமுகப்பெருமானும், கண்ணீரை ஆறாகப் பெருக்கி நின்றனன் (கண் ஈராறு. ஆனால் என்பதனை இப்படிக் கூறினர்) நெருப்பான ஆலகால நஞ்சினையே உண்டு விட்டனன். திருமாலும் பயம் அடைந்தான் (பாற்கடல் அடைந்தான்) உமையும் உடல் பாதியாகிப் போயினாள் (சிவனுடலிற் பாதியானதைக் கூறினர்) அழகிய இவ்வுலகினைப் படைப்பதும் வீணே என்று கருதியவனாக, அயனும் அன்னமிறங்காமல் அலைகின்றவன் ஆயினானே! இனி, இவ்வுலகந்தான் யாதாகுமோ? (அன்ன வாகனத்தே உலவுகிறானே)! என்பது பொருள்.

பெரு வயிறு - மகோதரம் என்னும் நோய்; அதனால் அனைவரும் வருந்தித் துயருற்றனர் என்று வருந்துவது போலக் கொள்ளுக; உலகின் துயருக்கு இரங்குவது போலவும் கொள்ளுக.

புலி போகுமோ?

தில்லை நடராசப் பெருமானைப் போற்ற நினைக்கிறார் காளமேகம். பெருமானின் திருநடனத்தைக் கண்டு அகலாதிருக்கும் புலிக்கால் முனிவர்; பெருமானின் நடனம் இரண்டும் அவரை ஒரே சமயத்தில் ஆட்கொள்ளுகின்றன. கவிஞர் பாடுகின்றார்.


நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகா லையாநின்
ஆட்டுக்கு இரண்டுகா லானானும்-நாட்டமுள்ள
சீர்மேவு தில்லைச் சிவனேயில் வாட்டைவிட்டுப்
போமோசொல் லாயப் புலி. (91)

சீர் மேவும் தில்லைச் சிவனே! - புகழ் விளங்கும் தில்லை நகரத்தே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே, ஐயா - ஐயனே! நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலு கால் - நாட்டிலே ஆடுகட்கு நான்கு கால்களே, நின் ஆட்டுக்கு இரண்டுகால் நின்னுடைய ஆட்டுக்கோ (நடனத்திற்கோ) இரண்டுகால்கள் தாம்; ஆனாலும், நாட்டமுள்ள இவ்வாட்டை விட்டு-விருப்பமுள்ள இந்த ஆட்டை விட்டுவிட்டு? போமோ சொல்லாய் அப்புலி - அந்தப் புலியாகிய வியாக்கிர மாதரும் நீங்கிப் போவாரோ? நீயே சொல்லுவாயாக.

வியாக்கிர பாதர் - புலிக்கால் முனிவர்; இவரைப் புலி எனவும். பெருமானின் நடனத்தை ஆடு எனவும் குறிக்கின்றார் கவிஞர். அவர் எப்போதும் நடராசனின் திரு நடனத்தைக் கண்டு தொழுதிருப்பவர் என்பதும் குறித்தனர், புலி ஆட்டை விட்டுவிட்டுப் போகாது என்பது உலகியல் உண்மை. அதனை நயமுற அமைத்துப் பாடிய திறத்தைப் போற்ற வேண்டும்.

நீ ஏழையானால்?

சிவபெருமான் அடியவர்க்கு மிகமிக எளியவன். அந்த ஏழைமையாளனாகிய அவன் உள்ளத்தை வைத்து நிந்தாஸ் துதியாகப் பெருமானைப் பாட நினைக்கிறார் கவிஞர். தில்லைப் பெருமானைப் போற்றிய அத்தகைய சுவையுள்ள பாடல் இது.


தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானோ- மீண்டொருவன்
வையானோ வின்முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீ யேழையா னால். (92)

தென்புலியூர் ஐயா - அழகிய புலியூர் ஆகிய சிதம்பரத்திலே வீற்றிருக்கும் பெருமானே! நீ ஏழையானால் - நீ எளியவனானால், தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ - ஒருத்தி (கங்கை) குதித்து வந்து நின் தலைமீதும் ஏற்றிக்கொள்ள மாட்டாளோ? பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ - தன் காலிலே போட்டிருக்கும் செருப்பினாலேயே (கண்ணப்பனாகிய) ஒருவன் நின்னை அடிக்கவும் மாட்டானோ? மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ - மற்றுமொருவன் (பார்த்தன்) உம்மை வைய்ய மாட்டானோ? வில் முறியும்படி அடிக்கவும் செய்யானோ? (மாட்டுதல் - அடித்து துன்புறுத்தல்)

பெருமானை எளியவன் என்று கருதியே இப்படி அவர்கள் துன்புறுத்தினார்கள் என்கிறார். இதனால் அடியார்க்கு எளியவனான நீ கங்கை, கண்ணப்பன், பார்த்தன் ஆகியோரின் அச்செயல்களைப் பொறுத்து அவர்களையும் ஆட்கொண்ட பெருமானாவாய் என வியந்து போற்றினரும் ஆம்.

எந்த உபாயம்?

சிதம்பரம் சபாநாயகரின் ஆட்டத்தை வியந்து காளமேகம் பாடுகிறார். "கோவிந்தக் கோனார் இருக்கின்றார்; அண்டர் பலர் காத்திருக்கின்றார்கள்: இருந்தும் கையிலே ஓடெடுத்த நீ. தில்லையுள்ளே புகுந்து ஆடும் எடுத்தனையே? அது எந்த உபாயத்தினால் எடுத்தனை அப்பனே?" என்கிறார். 'ஆடு திருடியவன்' என்று நிந்திப்பது போலத் தோற்றும் நிந்தாஸ்துதி இது. 'பிச்சைக்காரன் எதற்காக ஆடு திருடும் கள்ளனாக ஆயினாய்?' என்று வியக்கின்றார் போலவும் செய்யுள் அமைந்துள்ளது.


கொங்குலவும் தென்றில்லைக் கோவிந்தக் கோனிருக்கக்
கங்குல்பக லண்டர்பலர் காத்திருக்கச் - செங்கையிலே
ஓடெடுத்த அம்பலவ ஓங்குதில்லை உட்புகுந்தே
ஆடெடுத்த தெந்த உபாயம். (93)

கொங்கு உலவும் தென்தில்லைக் கோவிந்தக்கோன் இருக்க -நறுமணம் கமழும் அழகிய தில்லைக்கோவிந்தராகிய கோனார் அங்கே இருக்கவும்; கங்குல் பகல் அண்டர் பலர் காத்திருக்க - இரவும் பகலுமாக இடையர்கள் (தேவர்கள்) பலரும் கூடிக் காவல் காத்திருக்கவும்; செங்கையிலே ஓடு எடுத்த அம்பலவா- சிவந்த நின் கையிலே திரு வோட்டை எடுத்துவிட்ட அம்பலவனே! ஓங்கு தில்லையிற் புகுந்து ஆடு எடுத்தது எந்த உபாயம்? - புகழ் ஓங்கிய சிதம்பரக்கோயிலுள்ளே புகுந்து ஆட்டினை எடுத்தது தான் எந்தத் தந்திரத்தினாலோ? நீ ஆட்டத்தினைத் தொடங்கியது எதனாலோ?" எதற்காகவோ?

ஆடு - ஆடும்; ஆட்டமும் ஆம். கொங்கு - மகரந்தம்; அதினின்று எழும் மணத்தைக் குறித்தது. உபாயம் - தந்திரம்; ஆடு எடுத்தல் - ஆட்டைத் தூக்கிப் போதல்; நடனத்தைத் தொடங்கல்; கோவிந்தக் கோனாரும் பிறரும் காவல் காத்து இருக்கவும், பிழைக்க வழியற்றுப் பிச்சைக்கு ஓடேந்திய நீ, எவ்வாறு அவர்களறியாதே புகுந்து ஆட்டை எடுத்தனையோ! இப்படிக் கேட்கிறார் கவிஞர்.

மான் கன்றின் செயல்

தில்லை மூவாயிரவர்கள், 'தில்லைவாழ் அந்தணர்கள்' என்னுஞ் சிறப்பினை உடையவர்கள். ஒரு சமயம் காளமேகம் தில்லைக்கூத்தனைக் தரிசிக்கச் சென்றிருந்தார். கூத்தப் பெருமானின் முன் நின்றவராக அவனைப் போற்றியபடியும் நின்றார். 'அப்போது, பெருமான் கையிலிருக்கும் மான்மறி முகத்தையும் முன்னங்கால்களையும் மேலே தூக்கியவாறு நிற்பதன் காரணம் யாதோ?' என்று சிலர் கேட்கக் கவிஞர் இப்படிக் கூறுகிறார்.


பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்னெஞ் சுவகையுறத் தாவுமே- அன்னங்கள்
செய்க்கமலத் துற்றுலவும் தில்லை நடராசன்
கைக்கமலத் துற்றமான் கன்று. (94)

"அன்னப் பறவைகள் வயல்களிடத்தேயுள்ள தாமரை மலர்களிடத்தே உலவிக் கொண்டிருக்கின்ற வளத்தினையுடைய சிதம்பரத்து நடராஜப் பெருமானின் கையாகிய கமலத்தே பொருந்தியிருக்கின்ற மான் கன்றானது, பொன்னிறத்துச் சடாமுடியிலே அன்பர்கள் சார்த்தியிருக்கும் அறுகம் புல்லிடத்தும் கங்கையின் சிறந்த நீரிடத்தும் தன் நெஞ்சமானது விருப்பங்கொள்ள, அவற்றை அடைதலை விரும்பி அப்படித் தாவிக் கொண்டிருக்கிறது."

மானின் நிலைக்கு விளக்கம் கேட்க முனைந்தவர்கட்கு வேடிக்கையாக விளக்கங்கூறி அவர்களைக் களிக்கச் செய்கிறார் கவிஞர்.

ஆட்டுக்கு இசைந்தவர்

சிதம்பரத்திலே, கோவிந்தராயரின் சந்நிதியும் இருக்கிறது. சிலர், சபாநாதர் நடனமிடும் இடம் நோக்கிக் கோவிந்தராயர் கால் நீட்டிப் பள்ளிகொண்டிருப்பதனைக் காட்டிக் குறும்பாகப் பேசினர். அதனைக் கேட்டுக் காளமேகம் பாடியது இது. அப்படிப் பேசியவர்கள் வெட்கித் தலைகுனியுமாறு திருமாலைக் கேலிப் பேசுகிறார் கவிஞர்.


ஆட்டுக் கிசைந்தவ ரம்பலவாண ரவர்க்கெதிரே
நீட்டிற்று மால்வட பாலினிற் காலென நீநினையேல்
சூட்டுற்ற முப்புறஞ் செற்றவர் தம்மைச் சுமந்தலுத்த
மாட்டுக்கென் னோவிடங் கானிட்டல் சொல்ல வழக்கில்லையே. (95)

"ஆடலுக்குப் பொருத்தமானவர் அம்பலவாணர்தாம். அவருக்கு எதிரே வடதிசையிலே திருமால் தம் காலைநீட்டி யுள்ளனரே?" என்று நீ தவறாக எதுவுமே நினையாதே. தீப்பற்றி யழிந்த திரிபுரக் கோட்டைகளை அப்படி அழியச் செற்றவரான சிவபிரானைச் சுமந்து சுமந்து அலுத்துப் போன மாடாகிய அத்திருமாலுக்குக் கால் நீட்டுவதற்கு உரிய இடம் எது, நீட்டக் கூடாத இடம் எது என்று தெரியுமோ? தெரியாததனால் அதனைக் குற்றம் சொல்லுதலும் நமக்கு ஒரு மரபில்லை என்றறிவாயாக.

திரிபுர தகன காலத்ததே, திருமால் விடையாகிப் பெருமானைச் சுமந்து சென்றனன். அதனைச் சுட்டிப் பேசுகிறார் கவிஞர். மாட்டுக்கு எது மரபு, எது மரபில்லை என்று உணர முடியுமோ? மேலும், அது சுமை சுமந்து அலுத்துக் கிடக்கும் மாடு; அதன் செயலைக் குறித்து நாம் பாராட்டலாமோ? விட்டுத்தள்ளும் என்கிறார்.

எளியவன் அவன்!

அம்பலவாணர் அடியார்களுக்கு எளியவராயிருப்பவர். வேடனாகி வந்தகாலத்திலே அருச்சுனன் வில்லால் அடித்து நின்றான். கண்ணப்பர் ஒரு கண்ணைத் தோண்டி அப்பி விட்டுப் பெருமானின் மற்றொரு கண்ணினும் நீர் வழியக் கண்டு, இடம் அறிதற்குத் தம் செருப்புக் காலினாலே மிதித்துத்கொண்டு தம் மற்றொரு கண்ணையும் அப்பினார். சாக்கியரோ கல்லையே மலராகப் பாவித்து எறிந்தனர். மதுரை மன்னனோ பிட்டுக்கு மண்சுமந்த காலத்தே பெருமானைப் பிரம்பாலே அடித்தான். எனினும், அவர்கட்கும் அருள் செய்த தயாளன் அவன். இதனைக் குறித்தும், அவன் பிறப்பிலியாகிய தன்மையைப் போற்றியும் இச் செய்யுளைப் பாடுகின்றார் காளமேகம்.


வில்லா லடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறியப் பிரம்பா லடிக்கவிக் காசினியில்
அல்லார் பொழிற்றில் லையம்பல வாணற்கோ ரன்னைபிதா
இல்லாத தாழ்வல்ல வோவிங்நு னேயெளி தானதுவே! (96)

மரச் செறிவினாலே இருள் நிறைந்திருக்கும் சோலைகளை யுடைய சிதம்பரத்தே, அம்பலத்தில் நடனமிட்டிருக்கும் பெருமானுக்கு, இந்த உலகத்திலே ஓர் அன்னை பிதா இல்லாத தாழ்ச்சியினால் அல்லவோ, ஒருவன் வில்லால் அடிக்கவும், மற்றொருவன் செருப்பால் உதைக்கவும், கோபித்து ஒருவன் பிரம்பினாலே அடிக்கவும், ஒருவன் கல்லால் எறியவும் இவ்வாறான தாழ்ச்சிகள் எல்லாம் எளிதாகிப் போயின! அன்னை பிதா இருந்திருந்தால் இப்படி நடக்கப் பார்த்திருப்பார்களோ?" என்பது கருத்து.

இதனால் தாய் தந்தையரின் சிறப்பும் கூறப்பெற்றது. மேலும் பெருமானின் கருணைப் பெருக்கமும் காட்டப் பெற்றது.

செயலைக் கருதாது, செய்பவரின் பக்திமையைக் கருதி உவப்பவன் சிவன் என்பது இதனால் விளங்கும்.

பரம்பொருள் எது?

தில்லைக் கோயிலுள்ளே நடராசர் சந்நிதிக்கு அருகேயே கோவிந்தராயர் சந்நிதியும் இருக்கிறது என்றோம். காளமேகம் தில்லைப் பெருமானைத் தொழுது போற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராயரின் கோவிலைச் சேர்ந்த நம்பியார், 'விஷ்ணுவே பரம்' என்று உரக்கச் சொல்லினார். அதைக் கேட்ட காளமேகம் இப்படிக் கூறுகிறார்.


சத்தாதி யைந்தையும்
        தாங்காத தெய்வம் தனிமறையும்
கர்த்தா வெனுந்தெய்வம் அம்பலத்
        தேகண்டு கண்களிரு
பத்தான வண்மைந்தன் பொய்த்தேவி
        யைக்கொல்லப் பார்த்தழுத
பித்தான வன்றனை யோதெய்வ
        மாகப் பிதற்றுவ தே? (97)

சத்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்னும் ஐந்து தன் மாத்திரைகளாகிய உடம்பை ஒருபோதுமே எடுத்தறியாத கடவுள்! (புறப்பிலி என்பது கருத்து); ஒப்பற்ற வேதங்களும் தமக்கு அவனே முதல்வன் என்று துதிக்கும் முதற் கடவுளாகிய பெருமான்! அப்பெருமானைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்த பிற்பாடு,

இருபது கண்களையுடைய இராவணனின் புதல்வனாகிய இந்திரசித்து, மாயா சீதையைக் கொல்வதைப் பார்த்து அழுத பைத்தியக்காரனையோ, 'தெய்வம்' என்று கூறி நாமும் பிதற்றுவது? அது சற்றும் பொருத்தமல்லவே என்பது பொருள்.

"தெய்வமெனப் போற்றற்கு உரியது மாயையினாலே பற்றப்படாததும், பிறவியற்றதும் ஆகிய முழுமுதலே. அஃதன்றி, மாயா காரியமான உடலினை எடுத்துப் பிறந்தவனும், மாயா சீதையை இந்திரசித்தன் கொல்லக்கண்டு மதிமயங்கி அழுதவனும் ஆகிய மாயைக்கு உட்பட்ட ஒருவனையோ, நாம் தெய்வமென்பது?" என்கின்றனர். இதனால், நம்பியாரை வாயடக்கியதும் பெற்றனம்.

மேளமேன்? ராஜாங்கமேன்?

தில்லையிலே, சபாநாயகர் பிச்சாடன வடிவுடனேயே திருவீதி வலம் வருகின்றனர். அவருக்குமுன் எக்காளம் முழங்குகின்றது. யானை அணிபுனைந்து செல்லுகின்றது. மேளவாத்தியங்களின் ஒலியும் இடியொலி போன்று எழுகின்றது. குடை கொடி முதலிய ராஜாங்க விருதுகளும் செலுத்துகின்றன.

"பிச்சாடன மூர்த்தியே! பிச்சை எடுக்க தெரு வீதியிலே புறப்படுகிறவர் தாமே நீர்? உமக்கு ஏன் ஐயா இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள்?" என்று கேட்பவரே போலக் கவிஞர் அந்த ஊர்வலக் காட்சியை வியந்து போற்றுகின்றார்.


நச்சவரம் பூண்டதில்லை நாரதரே! தேவரீர்
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்க மேன்? (98)

நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! நஞ்சினைக் கொண்ட பாம்பினை அணியாகப் பூண்டிருக்கும் தில்லை நகர்க்கு உரிய தலைவரான எம்பிரானே! தேவரீர் பிச்சை எடுத்து உண்ணும் பொருட்டாகவே திருவீதியிலே எழுந்தருளியும், உச்சிதமாம் - சிறப்புடையதான, காளம் ஏன் - எக்காளம் எதற்காகவோ? குஞ்சரம் ஏன் - யானையும் எதற்காகவோ? கார்க்கடல்போல் தான் முழங்கும்மேளம் ஏன்? - கருமையான கடலின் ஒலிபோல முழக்கமிடுகின்ற மேள வாத்தியங்கள் எதற்கோ? ராஜாங்கம் ஏன்? மற்றும் அரச விருதுகளும் எதற்காகவோ?

"பிச்சைக்குப் போகையிலேயும் நுமக்கு இவ்வளவு தடபுடல்கள் எதற்கப்பனே?" என்கிறார் கவிஞர்.

சிவனும் அரங்கனும்

சிதம்பரத்திலே கூத்தப்பிரானைப் போற்றிச் சொல்லிய அதே செய்யுளைத் திருவரங்கத்திற் சென்றபொழுது சொல்லி அரங்கநாதப் பிரானையும் போற்றினாய் காளமேகம். கண்டவர் வியப்புற்று நிற்க, இருகடவுளர்க்கும் ஏற்பப்பொருள் கூட்டி உரைத்து அவர்களைத் தெளிவு படுத்தினார், அந்த அருமையான செய்யுள் இது.


இருந் தாரை கேள்வனை
        யோங்கு மராவை எழுபுனலைத்
திருந் தாரை வன்னியை
        முடிமுடித் தோன்செய்ய வேளைப்பண்டு
தருந் தாதை நாயகன்
        சுந்தரன் தூதன் சமரிலன்று
பொருந் தார் புரத்திட்ட
        தீப்போள் மதியம் புறப்பட்டதே! (99)

சிவபெருமான் - அழகினாலே சிறப்புற்ற தாரையின் விருப்பத்திற்கு உரியவனான சந்திரனையும், படமெடுத்து உயரும் பாம்பினையும், எழுகின்ற புலனான கங்கையினையும், செவ்வையான ஆத்திமாலையினையும், வன்னி மலரையும், முன்னாளிலே திருமுடியிற் கொண்டோன், செய்யவனாகிய முருகவேளை முற்காலத்தே தந்தருளிய தாதையுமானவள்; உலகுக்கெல்லாம் ஒரு நாயகன்; சுந்தரமூர்த்திகளுக்காகத் தூதும் நடந்த பெருமான். போரிடத்தே அன்று பகையானோரின் முப்புர கோட்டைகளுக்கும் அவன் இடுவித்த தீயைப்போன்ற கொடுமையுடனே, அதோ சந்திரனும் செவ்வொளி பரப்பிக் கீழ்வானத்தே எழுந்ததே? இனிச்செய்வதுதான் என்னே?

திருமால் - பெருமை பொருந்திய தாரையின் கணவனான வாலியையும், ஓங்கி உயர்ந்த மராமரத்தையும், எழுகடலையும், பகைவரையும், வன்னியென்னும் அரக்கனையும் முன்னாளிலே கொன்று அழித்தவன் திருமால். சிறந்த மன்மதனை முன்னாளிலே பெற்றுத் தந்த தகப்பனும் அவனேயாவான். உலகுக்கு நாயகனாம் அழகான இராமனும் அவனே; அவன் தூதனாகிய ஆஞ்சனேயன் அந் நாளிலே பகைவரூரான இலங்கையிலே இட்ட தீயைப் போன்றதான கொடுமையுடனே சந்திரனும் இப்போது எழுந்ததே? இனி யான் யாது செய்வேன்?

காதலனைப் பிரிந்திருந்து வாடும் ஒரு தலைமகள் சந்திரனின் உதயத்தினாலே மனங்கலங்கி இங்ஙனம் கூறி வாட்டமடைவதாகக் கொள்ளுக. சந்திரனால் அவள் அடைந்த வேதனையின் மிகுதி இப்படிக் கூறப்படுகிறது.

நடேசனின் உடைமை

தில்லை நடராசப்பெருமானின் உடைமைகள் என்னென்னவோ? அவர் உமையை மணந்து எப்படித்தான் குடித்தனம் நடத்துகிறாரோ? கவிஞர் விளங்கத் தருகிறார்.


ஏறு கட்டிய கொட்டி லரங்கமே
        யீரி ரண்டு முகன்வாயி லாயமே
மாறுகண் ணப்பன் வாய்மடைப் பள்ளியே
        வாய்த்த வோடை திருமால்வ தனமே
வீறு சேர்சிறுத் தொண்டனில் லாளுந்தி
        வேட்ட நற்கறி காய்க்கின்ற தோட்டமே
நாறு பூம்பொழில் சூழ்தில்லை யம்பல
        நாரி பகற்கு நாடக சாலையே! (100)

ஒரு பாகத்தே பெண்ணினைக் - கொண்டவனாகிய பெருமானுக்கு வாகனமாகிய காளை கட்டியிருக்கும் கொட்டில் திருவரங்கமேயாகும்; வேதமோதும் நான்முகனின் வாயே குதிரை லாயமாகும்; வேடனாகவிருந்து பக்தனாக மாறிய கண்ணப்பனின் திருவாயே மடைப்பள்ளியாகும்; தாமரைப் பூப் பொருந்திய ஓடையானது திருமாலின் திருமுகமேயாகும்; சிறப்புப்பொருந்திய சிறுத் தொண்டரின் மனைவியினுடைய திருவயிறே விரும்பிய நல்ல காய்கறிகள் காய்க்கும் தோட்டமாகும்; மணம் நாறும் பூஞ்சோலைகளையுடைய தில்லையம்பலமே அவனுக்குரிய நாடக சாலையாகும்.

குறிப்பு: முப்புரம் எரித்தபோது திருமால் ரிஷபமாகித் தாங்கினான்; வேதங்கள் அப்போது தேர்க்குதிரைகளாயின; கண்ணப்பர் வாயிற் குதப்பியே ஊனைப் படைத்தார்; திருமால் தம் தாமரைக் கண்ணினைத் திருவடியிலே சார்த்திப் பெருமானைப் பூசித்தனர்; சிறுத் தொண்டரின் மனைவியின் வயிற்று வளர்ந்த பிள்ளைக்கறியினை விரும்பினர்; இவற்றை அமைத்துப் பாடிய முறையினைக் கற்று இன்புறுக!

அன்னம் இரங்காமல்

மதுரையிலே ஒரு சமயம் திருவிழா நிகழ்ந்து கொண்டிருந்தது. மீனாட்சியம்மை அன்னவாகனத்தே பவனிவந்து கொண்டிருந்தனள். அதனைக் கண்டு மிகவும் இன்புற்ற கவிஞர் இப்படிப் பாடுகின்றார்.

"சிவ பெருமான் ஒரு பித்தன். அவன் அப்படிப்பித்தன் ஆயினதனால், அவன் தேவி உணவும் உண்ணாது, வீதியிலே சோகத்துடன் இப்படி வந்து அலைந்து கொண்டிருக்கிறாளே?" என்று பரிதாபப்படுகிறார் கவிஞர்.


மாயனார் போற்று மதுராபுரிச் சொக்க
நாயனார் பித்தேறினா ரென்றே-நேயமாம்
கன்னன்மொழி யங்கயற்கட் காரிகையாள் ஐயையோ
அன்னமிறங் காமலலை வாள். (101)

மாயனார் போற்றும் மதுராபுரிச் சொக்க நாயனார் பித்தேறினார் என்றே - மாயனான திருமாலும் துதிக்கின்ற சிறப்புடையவரான மதுராபுரியிற் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் பித்துக்கொண்டவர் ஆயினர் என்று கருதியே,

நேயமாம் - அவரிடத்தே அன்புடையவளான, கன்னன் மொழி - கருப்பஞ்சாற்றைப் போல இனிக்கும் பேச்சும், அம்கயல் கண் - அழகிய கயல்போன்ற கண்களும் (உடைய) காரிகையாள், அழகுடையவளான மீனாட்சி அம்மையானவள், அன்னம் இறங்காமல் - அன்ன வாகனத்தைவிட்டு இறங்காமல் (சோறு தொண்டையில் இறங்காமல்), அலைவாள்; தெருவிலே பவனி வருவாள் (தெருவீதியிலே அலைவாள்); ஐயோ! (இரக்கக் குறிப்பு) அவள்நிலை இரங்கத் தக்கதே என்பது கருத்து.

குதிரைக்காரன் மகன்

மதுரையிலே காளமேகம் மீனாட்சியம்மையைத் தரிசனம் செய்துகொண்டிருந்தார். அருகிலிருந்த ஒருவர் விநாயக பக்தர், விநாயகரைப் பற்றிப் பாடுமாறு காளமேகத்தைக் கேட்டனர். கவிஞர், விநாயகரைக் 'குதிரைக்காரன் மகன்' என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டு இப்படிப் பாடுகிறார்.


நல்லதொரு புதுமை நாட்டிற்கண் டேனதனைச்
சொல்லவா சொல்லவா சொல்லவா-தொல்லை
மதுரைவிக்கி னேச்சுரனை மாதுமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவனைக் கூடி. (102)

நல்லதொரு புதுமை நாட்டிற் கண்டேன் - மிகவும் விந்தையான ஓர் அதிசயத்தை இந்த நாட்டிலே கண்டேன்; அதனைச் சொல்லவா - அதனை உங்கட்கும் எடுத்துச்சொல்லவா? தொல்லை மதுரை விக்கினேச்சுரனை - பழமையான மதுரையம் பதிலே எழுந்தருளியிருக்கும் விக்கினேசுவரப் பெருமானை, மாது உமையாள் - உமை அம்மையானவள், குதிரை விற்க வந்தவனைக் கூடிப் பெற்றாள் - (மாணிக்கவாசகரின் பொருட்டாகக்) குதிரை வியாபாரியாக வந்த ஒருவனைக் (சிவபெருமானைக்) கூடியே பெற்றெடுத்தனள்.

'குதிரைக்காரன் மகன் இந்த விநாயகன்' என்று கூறி அந்த விநாயக பக்தரைத் திகைக்கச் செய்கிறார் கவிஞர். பிறகு, எப்படி என்று விளக்குகிறார்.

அக்காளை ஏறினார்!

சிவபெருமான் ரிஷப வாகனத்தார். அவரை அவமானமாகப் பேசுவதுபோல ஆனால் போற்றுதற் பொருளோடு இப்படிக் காளமேகம் பாடுகின்றார். ஆலவாய்ச் சொக்கனைக் குறித்தது இது 'பெண்களைச் சுமந்த பித்தன், தங்கைக்கு மேலே நெருப்பை இட்டவன்; அக்காளைச்சேர்ந்தவன்' என வருவனவெல்லாம் முறையாகச் சிறந்த பொருள் தருவனவே என்பதனை உய்த்தறிக!


கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தலைசுமந்த பித்தனார்-எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினா ராம். (103)

கடம்ப வனத்து ஈசனார் - கடம்பவனத்து ஈசனாராகிய ஆலவாய்ப் பெருமான், பெண்டீர் தலைச்சுமந்த பித்தனார். தலையிற் கங்கையையும் இடப்பாகத்தே மலைமகளையும் என இரு பெண்களைச் சதா சுமந்துக்கொண்டேயிருக்கின்ற ஒரு பைத்தியக் காரர். அவர் என்ன செய்தார் தெரியுமா? எண்டிசைக்கும் மிக்கான தம் கைக்கு மேலே நெருப்பை இட்டார் - எட்டுத் திசைகளிலும் மிகுதியாகப் புகழ்பெற்ற தம்முடைய கையின் மேலே அக்கினியை வைத்துக்கொண்டிருப்பவர்; அக்காளை ஏறினாராம் - புகழ் பெற்ற அந்த நந்தியெனும் காளை மாட்டின் மீதும் ஏறி வருபவர்; கண்டீரோ பெண்காள் - பெண்களே! அவரை நீங்களும் பார்த்தீர்களோ?

பெண்களைச் சுமந்த அந்தக் காமப்பித்தன்; தங்கையையும் அக்காளையும் கெடுத்தானே! என்று நிந்தித்தது போல் வரும் வாசகத்து மெய்ப்பொருளை அறிந்து உண்மை காண்க.

சிற்றிடைச்சி காண்!

சிதம்பரத்திலே திருக்கோயில்கொண்டு வீற்றிருக்கும் அம்மையின் பெயர் சிவகாமி. அம்மையைப் போற்ற நினைக்கிறார் காளமேகம். அவள் குடும்பம் இடையர் குடும்பம் என்கிறார். அவள் ஒரு சிற்றிடைச்சி; மாட்டுக்காரக் கோனாருடைய தங்கை; ஆட்டுக்கோனானுக்குப் பெண்டானாள்; குட்டி மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள்; இப்படிச் சொல்வது போலத் தோன்றுவது பாடல்.


மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் - கேட்டிலையோ
குட்டி மறிக்கவொரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண். (104)

கேட்டிலையோ! - பெண்ணே! நீ இதனையும் கேட்டதில்லையோ? மாட்டுக்கோன் தங்கை - மாடுகளைக் காப்போனாக விளங்கிய கோபாலனின் தங்கையான இந்தப் பார்வதிதேவி, மதுரைவிட்டு - தான் பிறந்த மதுராபுரியை விட்டு வந்து, தில்லை நகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டு ஆயினாள் - தில்லைப் பதியாகிய இச் சிதம்பரத்தே நடனமாடுகின்ற ஆட்டுக் கோனுக்கு (கூத்தப் பெருமானுக்கு) மனைவியானாள்; கட்டி மணிச் சிற்றிடைச்சி - மேகலை கட்டிய அழகிய இடைச்சியடி அவள்; (சிறிதான இடையினை உடையவள் அவள்) குட்டி மறிக்க-ஆட்டுக் குட்டிகளை மறிப்பதற்காக (நம் தலையிலே குட்டிக்கொண்டு வணங்குமாறு) ஒரு கோட்டு ஆனையையும் பெற்றாள் - கோட்டானைப் போன்ற ஒருபிள்ளையையும் (ஒற்றைக் கொம்பனான ஆனைமுகனையும்) பெற்றாளடீ!

சிற்றிடைச்சி - கன்னிப் பருவத்து இடைப் பெண் எனவும், குட்டி மறித்தல் ஆட்டுக் குட்டிகளை மறித்தல் எனவும், ஆட்டுக் கோன் - ஆட்டிடையன் எனவும் பொருள் படுதலை அறிக; அவற்றின் உண்மையான பொருளையும் அறிந்து இன்புறுக. இது நிந்தாஸ்துதி.

கண்ணன் வேறா!

'திருமாலே பரம்பொருள்; சிவன் பரம்பொருள் அல்லன்' என்று சிலர் கூறினர். இது மதுரையை அடுத்த அழகர் கோயிலிலே ஒருசமயம் நிகழ்ந்தது. இதனைக் கேட்ட காளமேகம் நகை கொண்டார். "அவர் வேறு, இவர் வேறா?" இப்படி மெய்ப் பொருள் விளங்கப் பாடினார்,


கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன்றான் வேறோ
இடம்பெரிய கண்ணொன்றை ஈந்தான்-உடம்பதனில்
செம்பாதி யானான் சுமக்க எருதானான்
அம்பானான் தேவியுமா னான். (105)

கடம்பவனமாகிய மதுரையிலே கோயில் கொண்டிருக்கிற சொக்கநாதப் பெருமானுக்குக் கண்ணன்தான் அயலானவன் ஒருவனோ? ஒருபோதும் இல்லையே! விசாலமான பெரிய ஒரு கண்ணினையே முன்பு காணிக்கையாகக் கொடுத்த அன்பன் அவனாயிற்றே! அன்றியும் எம் பெருமானின் திருமேனியிற் சரிபாதியாக விளங்கும் அம்மையும் அவனாயிற்றே! அவரைச் சுமக்கக்கருதி அந்நாளில் காளையாக ஆகியவனும் அவனல்லனோ! திரிபுரதகன காலத்தே எய்தற்குரிய அம்பாகி உதவியவனும் அத்திருமாலே அல்லனோ! மற்று எம்பெருமானின் தேவியும் அவனேயன்றோ?

திருமாலைச் சிவனுடைய சக்தியாகவே கொள்வது சைவ மரபு. அதனை, இப்படி விளக்கியுள்ளார் கவிஞர் சிவவிஷ்ணு பேதங்களைக் கடந்த செறிவான பாடல் இது.

புதுமை! புதுமை!

மதுரையிலே மீனாட்சியம்மையை தரிசித்த காளமேகம் அம்மையை ஆனந்த பரவசமாகத் துதிக்கும் சிலேடைப் பாடல் இது.


விள்ளப் புதுமையொன் றுண்டால
        வாயிளின் மேவு தென்னன்
பிள்ளைக் கொருகுலை மூன்றே
        குரும்பை யிடித்ததிலே
கொள்ளிக் கணன்றிட்டி யாலோர்
        குரும்பை குறைந்த மிர்தம்
உள்ளிற் பொதிந்த விரண்டிள
        நீர்க்கச் சுறைந்தது வே. (106)

நேர்பொருள்: சொல்வதற்கு ஒரு புதுமை ஒன்று உண்டு. அது திருவாலவாயிடத்தே இருக்கும் தென்னம் பிள்ளையிடத்தே, ஒரு குலையில் மூன்றே குரும்பைகள் பிடித்தன; அவற்றுள் கொள்ளிக்கண்ணனின் திருஷ்டியாலே ஒன்று குறைந்து போயிற்று; அமுதம் உள்ளே பொதிந்ததாகப் பிற இரண்டும் இள நீராகிக் கைப்பு உடையதாகவும் ஆயிற்று.

அம்மையைக் குறித்த பொருள்: திருவாலவாயினிடத்தே சொல்லுவதற்குத் தக்கதான புதுமையொன்று உள்ளது. தென்னவனான மலையத்துவசனுடைய பெண்ணாகிய தடாதகைக்கு ஒரு வரிசையிலே மூன்று தனங்கள் முகிழ்த்தன. அவற்றுள் ஒன்று நெருப்புக் கண்ணனான சோமசுந்தரப்பிரானின் பார்வைபட்டு மறைந்தது. உயிர்களைக் காப்பாற்றும் அமுதம் உள்ளிடத்தே பொதிந்த இரண்டு இளநீர்கள் போன்ற தனங்களும், பின்கச்சுக்குள்ளே அடங்கு வனவுமாயின.

தடாதகைப் பிராட்டிக்கு மூன்று தனங்கள் எழுந்தன. என்பதும், சிவபிரானைக் கண்டதும் ஒன்று மறைந்ததென்பதும் திருவிளையாடற் புராணத்திலே கூறப்பட்டிருக்கிறது. அதனையே இப்படிச் சுவையாகப் பாடுகிறார் கவிஞர்.

பருந்து எடுத்துப் போகிறது!

காஞ்சிபுரத்திலே வரதராசப் பெருமாளின் கருடோத்சவம் நடந்து கொண்டிருந்தது. கருட வாகனத்தே பெருமாளும் நகர் வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருமாளைப் பற்றி நிந்தாஸ்துதியாகப் பாடியது இது.


பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்-பெருமாள்
இடந்திடத்திற் சும்மா இராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிறதே பார். (107)

"இந்தப்பெருமாளும் ஒரு நல்ல பெருமாள்! அவர் திரு நாளும் ஒரு நல்ல திருநாள்! அந்தப் பெருமாள் இருந்த இடத்திலே சும்மா இராமையினால், ஐயோ! அவரைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதே?" அதனைப் பார்! மேற்போக்காகப் படித்தால், பெருமாளையும், அவர் திருநாளையும் புலவர் நிந்திப்பதாகவே தோன்றும். ஆனால் பொருள் பின்வருமாறு கொள்க.

பெருமாளும் நல்ல பெருமாள் - வரதராசப் பெருமாளும் அடியவர்க்கு நலந் தருகின்ற பெருமை உடையவரே; அவர்தம் திருநாளும் நல்ல திருநாள் - அவரைக் குறித்துக் கொண்டாடப் பெறும் திருநாளும் நன்மை தருவதான ஒரு திருநாளே, (அன்பர்க்குத் தாமே அவரவர் இருக்கும் இடம் சென்று அருள்புரியும் கருணைப் பெருக்கினாலே); பெருமாள் இருந் திடத்திற் சும்மா இராமையினால் - பெருமாள் தாமிருந்த இடத்திலேயேவாளா இருந்து விடாமையினாலே, பருந்துஎடுத்துப் போகிறதேபார் - கருடன் சுமந்துகொண்டு திருவீதி வழியாகச் சொல்லுகின்றதே. அதனைக் கண்டு போற்றுவாயாக; ஐயோ! அங்ஙனம் போற்றி உய்திபெற நீ முயலாய் ஆயின், ஐயோ! (நின் நிலை இரங்கத்தக்கதே) என்பது கருத்து.

கனவிலே வந்தான்

ஒரு பெண்; அவள் கச்சி ஏகாம்பரநாதரின் மேற்காதல் கொண்டாளாம்; அவரைக் கனவிலேயும் கண்டாளாம்; தன் தோழிமாரிடம் தன் கனவுக் காட்சியைக் கூறி, 'அவனைக் கண்டீரோ பெண்களே!' என்றும் கேட்கிறாளாம்! இப்படி ஒரு சிறிய கனவுக் காட்சியைக் கற்பனையிலே பின்னிக் கொண்டு அவள் ஏக்கத்தைப் புலப்படுத்துவது போல ஏகாம்பர நாதனைப் போற்றுகின்றார்.


நேற்றிராவந் தொருவன் நித்திரையிற் கைப்பிடித்தான்
வேற்றுாரான் என்று விடாயென்றேன்-ஆற்றியே
கஞ்சிகுடி யென்றான் களித்தின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து. (108)

வஞ்சியரே - வஞ்சிக் கொடிபோன்ற பெண்களே! நேற்றிரா வந்து ஒருவன் நித்திரையில் கைப்பிடித்தான் - நேற்றிரவு ஒருவன் வந்து என் உறக்கத்திலே என்கையைப் பற்றினான்: வேற்றுாரான் என்று விடாய் என்றேன் - அவனை, அயலூர்க்காரன் என்று முதலிலே நினைந்துக் 'கையைவிடு' என்றேன்; ஆற்றியே கஞ்சி குடி என்றான் - என் சினத்தைத் தணிவித்தவனாகத் தான் காஞ்சியிலே குடியிருப்பவன் என்று அவன் உரிமையுடனே சொன்னான்; களித்து இன்று போ என்றேன் - அவன் என் காதலனே என்று அறிந்ததும் இன்று என்னுடன் களித்திருந்துவிட்டுப் போவாயாக என்று வேண்டினேன்; மறைந்து சென்றான் - அந்த வேளையிலே அவன் மறைந்து போய்விட்டான்; அவனை நீங்கள் யாராவது பார்த்தீர்களோ? என்பது குறிப்பு.

'அவன் கஞ்சியை ஆற்றிக்குடி என்று என்னை ஏளனம் செய்தான்; நான் களி இருக்கிறது தின்று விட்டுப்போ என்று சொன்னேன்' எனத் தன்னை மறைத்துச் சொல்லினாள் என்க.

கருங் குயிலே

கவிஞர், காஞ்சியிலே காமாட்சி அம்மையைத் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அம்மையைக் கருங்குயில் என்று குறிப்பிட்டு, அதற்கேற்பச் சொற்களையும் நளினமாக அமைத்துப் பாடுகின்றனர்.



மாக்கைக் கிரங்கும் குருகும்
        வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபங் குழைந்த
        தெவ்வாறு சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருவறச்
        சாலையில் அன்னமிட்டுக்
காக்கைக் கொருகொக்கின் கீழே
        இருக்குங் கருங்குயிலே. (109)

நின் பெருமை பொருந்திய கைகளிலே யிருந்து ஒலிக்கும் வளைகளும், வருகின்ற சக்கரவாகப் பறவையினைப்போன்றதாக விளங்கும் தனபாரங்களும், அழுத்தமாகப் பொருந்தித் தாக்கிவிடச் சிங்கத்தைத் தாக்கியளிக்கும் சிம்புள் என்னும் வடிவை மேற்கொண்ட சிவபெருமானின் வலிய திருமேனியும் குழைந்து போயினதே! அதுதான் எப்படியோ? உலகத்தைப் படைத்து வளம்பெருக்கி அழகான அறச்சாலையிலே அனைவருக்கும் உணவும் அளித்து, உயிர்களைக் காக்கும் பொருட்டாக, ஒப்பற்ற மாமரத்தின் கீழே அமர்ந்து தவமிருக்கும், கருமை நிறமும், குயிலினும் இனிய குரலும் உடையவளான அம்மையே! அதனை எனக்குச் சொல்வாயாக.

அம்மையின் தழுவக் குழைந்த திருவிளையாடலை நினைத்தும், உலகிற்கு ஆதியாக விளங்கும் அவள் கருணைப் பெருக்கினை வியந்தும், காளமேகம் இப்படிப் பாடுகின்றார்.

எலி இழுத்துப் போகிறது!

காஞ்சிபுரத்திலே, விநாயகப் பெருமானுக்கு உற்சவம் நடந்து கொண்டிருந்தது. பெருமான் பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து செல்கிறார். "பாவம்! இப்படி இந்தப் பிள்ளையை எலி இழுத்துப் போகிறதே! சிவனுடைய மழு எங்கே? திருமாலின் சக்கரம் எங்கே? பிரமனின் தண்டம் எங்கே? இதனைத் தடுக்காமல்இருப்பதனால் அவர்களிடமிருந்து அவை யாவும் பறிபோய்விட்டனவோ?" என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.


மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ-மாப்பார்
வலமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தென். (110)

மா பார் வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை - பெரிய பருமையான வலிமிகுந்த மும்மதமும் பொருந்திய யானை முகக் கடவுளை, எலி இழுத்துப் போகின்றது என் - பேரெலியாகிய பெருச்சாளி இப்படித் தெருவூடே இழுத்துச் செல்லுகின்றதே, இது என்ன அநியாயம்?

மூப்பான் மழுவும் - ஆதி முதல்வனான சிவபிரானின் மழுவாயுதமும், முராரி திருச்சக்கரமும் - முரன் என்பானைக் கொன்று முராளி எனப் புகழ்பெற்ற திருமாலின் சிறந்த சக்கரப்படையும், பாப்பான் கதையும் - பிரமனின் கதாயுதமும், பறிபோச்சோ - அந்த எலியை அடித்துப் பிள்ளையைக் காப்பதற்கு வழியில்லாமல், அவர்களிடமிருந்து பறி போய்விட்டதோ?

'யானையை எலி இழுத்துப் போகிற அதிசயத்தைப் பார்த்தீர்களோ' என்று வியப்பதும் ஆம்.

ஆடாரோ அவர்!

திருவாரூரிலே தியாகராசப் பெருமானின் திருநடனத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தார் கவிஞர். எவ்வளவு அரிய நடனம்! பெருமான்; எவ்வாறு ஆடுகின்றார்! என்று போற்றினார் ஒருவர். அப்போது, 'ஏனய்யா அவர் ஆட மாட்டார்?' என்ற பாடிய நிந்தாஸ்துதி இது.


ஆடாரோ பின்னையவ ரன்பரெல்லாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்றுதான்-தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால். (111)

"கையிலே பணமிருந்த தென்றால் அவன் ஏனய்யா வீதியில் ஆட்டம் போடமாட்டான்?" என்று எக்காளமாகக் கேட்கிறார் கவிஞர்.

தோடு ஆரும் மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர் - காதுகளிலே பொருந்தியிருக்கும் தோடுகளும், உடலிடத்தே கமழ்கின்ற வாசனைப் பொருள்களின் மணமும் உடையவர் இத் தியாகேசர்; அவர் கைக்கே பணம் இருந்தக்கால் - கையிடத்தே பணம் இருந்ததென்றால் (பணம் - பாம்பும் ஆம்) அவர் அன்பரெல்லாம் பார்த்திருக்க - அவர் தம் அடியவர்கள் அனைவரும் கண்டு இன்புற்றிருக்க, ஆரூர் வீதியிலே நின்று ஆடாரோ - திருவாரூர்த் தெருவிலே நின்று இப்படி ஆடமாட்டாரோ?

'கையிலே பணமிருந்தால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவான்', என்ற உலகியற் கருத்தை வைத்து இப்படிக் கூறுகிறார். பணம் - பாம்புப் படமும், பணமும் ஆகும்.

ஆனின் கழல்

திருவாரூரிலே தியாகேசரின் ரிஷபவாகன உற்சவம் உள்ளத்தைக் கவரக் காளமேகம் மெய்ம்மறந்து நிற்கிறார். அப்போது பெருமானுடைய திருப்பாதங்களின் சிறப்பினை வியந்து இப்படிப் பாடுகிறார்.



பாரளக்குந் தூதுசெல்லும் பையரவின் மேனடிக்கும்
சீரகலி சாபத்தைத் தீர்க்குமே-ஊரருகில்
சண்டச் சகடுதைக்குந் தையலாய் கார்நீல
கண்டத்தா ரூரான் கழல். (112)

பெண்மணியே! கருநீல கண்டத்தையுடைய ஆரூரான் ஊர்ந்து செல்லுகின்ற ஆனேற்றின் பாதங்கள், மாவலி தந்த உலகை எல்லாம் அளக்கும்; பாண்டவர்க்காகத் தூது செல்லும்; படமுடைய பாம்பான காளிங்கனின் தலை மேலேயும் நடனமிடும்; அழகிய அகலிகையின் சாபத்தையும் போக்கும்; தன் ஊரின் அருகிலே பகைத்து வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொல்லும்; அத்தகைய சிறப்பினை உடையவை அவை.

'மாயனே எருதாகிப் பெருமானைத் தாங்கிச் செல்பவன்' என்பது புராண மரபு. அதனை உளங்கொண்டு மாயனின் திருவிளையாடலை யெல்லாம் இப்படிக் கூறுகின்றார். ஆனின் திருவடிகளே இப்படிச் சிறந்தவையானால், அதனை ஏறிச் செலுத்துவோனின் பாதங்களை பற்றிச் சொல்லுதலும் வேண்டுமா? என்பது உட்கருத்தாகும். அதனை அடைவதே உய்திக்கு வழி என்பதும் முடிவாகும்.

வாயிற்படி ஆனாரிலையே

திருவாரூர்த் தியாகேசப் பெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் பரவையாரிடத்தே தூது நடந்து சென்றனர். அந்தத் திருவருளைப் போற்ற நினைக்கிறார் கவிஞர். அடிமுடி தேடியும் காணாத மாலும் அயனும் அந்தப் பரவை வீட்டின் வாயிற்படிகளாக உருக்கொண்டு கிடந்திருந்தால், அவற்றைக் கண்டிருக்கலாம் அல்லவோ? என்று, அவர்களை நினைத்து இரங்குவது போலப் பாடுகிறார்.


ஆனா ரிலையே அயனும் திருமாலும்
கானா ரடிமுடிமுன் காண்பதற்கு- மேனாள்
இரவுதிரு வாரூரி லெந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயில் படி. (113)

"பிரமனும் திருமாலும், முன்னாளிலே காட்டிடத்தே தோன்றிய சிவபெருமானது அடியையும் முடியையும் காண்பதற்கு முடியாமற் போயினார்களே! திருவாரூரிலே, ஓர் இரவிலே, எம் தந்தையாகிய அச் சிவபெருமான் தூது நடந்து சென்ற பரவைநாச்சியாரின் வீட்டுவாயிற்படிகளாக அவர்கள் ஆனார்கள் இல்லையே? அங்ஙனம் ஆகியிருந்தால் அவர்கள் கண்டிருப்பார்கள் அல்லவோ?" என்பது குறிப்பு.

கிழக் கொல்லன்

திருவாரூர்த் தியாகேசரைச் சென்று பணிந்தபோது அவரை வியந்து மனமுருகிப் பாடியது இது.


தென்னொக்குஞ் சோலைக் கமலைப்
        பிரான்செஞ் சடாடவி தான்
என்னொக்கு மென்னி லெரியொக்கு
        மந்த வெரியி லிட்ட
பொன்னொக்கும் கொன்றை கரியொக்கும்
        வண்டுநற் பொற்பணி செய்
மின்னொக்குங் கங்கைகிழக் கொல்ல
        னொக்குமவ் வெண்பிறை யே. (114)

'அழகு குடியிருப்பது போன்ற வளமான சோலைகளையுடைய திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் செஞ்சடைக் காடுதான் எதனைப் போன்றதோ' என்று கேட்டால் அது எரியும் நெருப்பினைப் போன்றதாகும் எனலாம். அச் சடையின் மேல்விளங்கும் கொன்றை மலர்களோ என்றால், நெருப்பினில் இட்ட பொன்னைப் போன்றதாக விளங்கும்; அக் கொன்றை மலர்களிடத்தே விளங்கும் வண்டுகளோ கரித்துண்டுகளைப் போன்று விளங்கும். அங்கே விளங்கும் கங்கையோ வென்றால், நல்ல பொன்னின் நடுவே வயிரத் துண்டுகளை இணைத்துப் பணிசெய்தார் போன்றதாக மின்னொளி பரப்பி விளங்கும். அவ்விடத்தே விளங்கும் வெண் பிறையோ வென்றால், அந்தப் பொற்பணியினைச் செய்து கொண்டிருக்கிற ஒரு கிழட்டுப் பொற்கொல்லனைப் போலத் தோன்றும்.

சிவபெருமானின் சடைமுடியிலே, இப்படி ஒரு பொற்பணி செய்யும் தொழிற் காட்சியையே உருவாக்கி இன்புறுகின்றார் கவிஞர்.

சந்து போனால்

'பெருமான்; ஏனப்பா இப்படி ஆடுகின்றார்?' திருவாரூர்த் தியாகராசப் பெருமானைத் தொழுது நின்ற காளமேகத்தை ஒருவர் கேட்டு விடுகிறார். "ஒரு பெண்ணினிடத்தில் ஒரு முறை அல்லாமல் இருமுறையும் தூதுபோய் வந்தவாராயிற்றே? அந்தக் களைப்புதான் சரியாக நிற்க முடியாமல் கால் ஆட்டங் கண்டிருக்கிறது போலும்!" என்று, அவருக்கு சொல்லுகிறார் கவிஞர்.


திருந்தா டாவணியுந் தென்கமலை ஈசர்
இருந்தாடா தென்செய் திடுதார்-பொருந்த
ஒருகாலே யல்லவே யொண்டடிக் காவன்
றிருகாலும் சந்துபோ னால். (115)

ஒள்ளிய தொடியணிந்த பரவையாருக்காக, அவள் சுந்தரரோடு மனம் பொருந்துமாறு, ஒரு தடவையே அல்லாமல், அன்றிரவிலேயே இரு தடவையும் தூது நடந்து சென்றால், நன்றாகப் படமெடுத்து ஆடுகின்ற பாம்பினை அணியும் அழகிய திருவாரூர்ப் பெருமானின் காலோய்ந்து ஆடாமல் என்னதான் செய்வார்?

பெருமான், தொண்டனுக்குத் தூது சென்ற சிறப்பினை உரைத்துப் பெருமானின் திருநடனத்தைச் சிறப்பிக்கின்றார் கவிஞர். 'சந்து போனால்' என்பது, 'சந்து நகர்ந்து போனால்' எனவும் பொருள்படும். சந்து நகர்ந்தால் அசைவின்றி நிற்க முடியாமல் போய்க் கால்கள் தாமாகவே ஆட்டம் கொடுக்கும்; இப்படிக் கூறியதாகவும் நாம் கொள்ளலாம்.

ஒற்றி யாச்சே!

திருவாரூரிலே ஒரு சமயம் காளமேகப் புலவர் தியாகேசப் பெருமானைத் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய திரு நடனத்தைக் கண்ட அவருக்குப் பெருமானைத் துதித்துப் பாடவேண்டும் போலிருந்தது. அந்த ஆட்டத்தைக் கேலிசெய்வது போல வியந்து பாடுகின்றார்.


ஆடும் தியாகரே ஆட்டமேன் தானுமக்கு
வீடும் சமுசார மேலிட்டுக் கூடிச்
செருக்கி விளையாடச் சிறுவரிரண் டாச்சே
இருக்குமூ ரொற்றி யாச்சே? (116)

திரு நடனம் செய்யும் தியாகராயப் பெருமானே! உமக்கு ஏனய்யா இந்த வேண்டாத ஆட்டம் எல்லாம்? வீடும் சமுசார பந்தமும் அதிகமாகச் சேர்ந்து போய்விட்டதே! கர்வத்தோடு விளையாடிக் கொண்டிருக்க ஆண் மக்களும் இருவர் பிறந்து ஆய்விட்டதே! நீர் இருக்கின்ற ஊரும் ஒற்றியூராயிற்றே! (ஒத்திக்கு வைக்கப்பட்டிருப்பதாயிற்றே)

ஆட்டம்-ஆடம்பர வாழ்வு எனவும், ஒற்றி-கடனுக்கு ஈடாக போக்கியம் வைக்கப்படுவது எனவும் பொருள்பட்டு நிந்தையாக அமைவதும் காண்க. "வளமானவர் ஆட்டமிடுவதிலே பொருளிருக்கிறது; உமக்கு எதற்கு ஐயனே ஆட்டமெல்லாம்?" என்று உரிமையோடு கேட்கின்றார் கவிஞர்.

வயிரம் இருப்பதா!

செருக்கு மிகுந்த செல்வர் ஒருவர், திருவாரூர்த் தியாகேசருக்கு ஒரு வைர மாலையினை அணிவித்துத் தம்மைக் குறித்துப் பெருமை பேசிக்கொண்டிருந்தார். அப்போது, காளமேகம் பாடியது இது. தியாகராயரைப் புலவர் தரிசித்துக் கொண்டிருந்தபோது, அவ்விடமிருந்து ஒருவர், சுவாமிக்குச் சார்த்தியிருந்த வயிரப்பதக்கம் அறவும் பொருந்தவும் பாடுமாறு கேட்டனராம். அப்போது அறப்பாடியது இது என்பர் சிலர். இது பொருந்துமாறு இல்லை. பக்தர்கள் இப்படி ஒருபோதும் கேட்கவே மாட்டார்கள்.


அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரான் நெஞ்சத்தில்
இன்னம் வயிரம் இருப்பதா-முன்னமொரு
தொண்டன்மக னைக்கொன்றுஞ் சோழன்மக னைக்கொன்றும்
சண்டன்மக னைக்கொன்றும் தான்? (117)

அன்னங்கள் விளங்குகின்ற வயல்களைச் சுற்றவும் கொண்டதாய் அமைந்திருக்கின்ற திருவாரூர்ப் பெருமாளின் திருமார்பிடத்தே இன்னமும் வயிரம் இருப்பதோ? (வயிரம் - வயிரமாலை; சினம்) முதற்காலத்தே ஒப்பற்ற தொண்டனான சிறுத்தொண்டனின் மகனைக் கொன்றானே! மனுச்சோழனின் மகனையும் கொன்றானே! சண்டேசுரனின் தந்தையையும் கொன்றானே! இனியும் எதற்குத் தான் இந்த வயிரமோ? (சினமோ?) 'வயிரம் இருப்பதா?' என்று புலவர் இருபொருள்படப் பாடவும், அந்த வயிரமாலை தானே அற்று விழுந்த தெனவும் கூறுவர், அதனால் செல்வரின் செருக்கும் அழிந்தது என்று கொள்ளுக.

அம்பலத்தே போம்!

திருவாரூர்த் தியாகேசப் பெருமானைத் தரிசித்த காளமேகம் இவ்வாறு பாடிப் பெருமானைப் போற்றுகின்றார்.


பாரூ ரறியப் பலிக்குழன்
        றீர் பற்றிப் பார்க்குமிடத்
தோரூரு மில்லை யிருக்கவென்
        றாலுமுள் ளுருமொற்றி
பேரூ ரறியத் தியாகரென்
        றே பெரும் பேரும் பெற்றீர்
ஆரூரி லேயிருப் பீரினிப்
        போய்விடும் அம்பலத்தே. (118)

உலகத்திலுள்ள ஊரவர் எல்லோருமே அறியும்படியாகப் பிச்சைக்கு அலைந்தீர், உம்மை நெருங்கி உம் நிலையை ஆராய்ந்து பார்க்குமிடத்தே, உமக்கென ஒர் ஊரும் இருப்பதாகத் தோன்றவில்லை. அது தானில்லை; நீர் இருக்க வென்றாலும் இந்தவூர் ஆகுமோ எனநினைத்தால், உள்ள இதுவும் ஒற்றியாக இருக்கிறது. பேரூர்கள் எல்லாம் அறியும்படியாகப் பெரியதொரு தியாகவான் என்று புகழும் பெற்று விட்டீர்! இனி எவருக்குரிய ஊரிலேதான் நீர் தங்கி யீருப்பீரோ? எதுவும் உமக்கென இல்லாததாலே, அம்பலத்திற்குச் சென்று விடுவீராக! அதுவே உமக்குப் பொருந்தும்!

திருவொற்றியூர், திருவாரூர் என்றது ஊர்ப் பெயர்களை, ஒற்றி - ஒற்றிவைத்தல் எனவும், எவர் ஊரில் இருப்பீர் எனவும் நயமாக அமைத்தனர். இருக்கும் ஊர் ஒற்றியூர்; திருவாரூரிலும் இருப்பவர் நீரே; இனி அம்பலத்தே போய் நடனமாடுபவரும் நீரே! என்று போற்றுகின்றார் கவிஞர்.

ஏன் நஞ்சு தின்றார்?

மனிதர்கள் வறுமையிலே வாடும்போது மனம் வெறுத்து நஞ்சைத் தின்று சாவதற்குக் கருதுவார்கள். வாழ்வில் வெறுப்பு ஏற்படுவதும் சில சமயங்களில் தற்கொலைக்குக் காரணமாகலாம். ஒருவர், சிவபெருமான் நஞ்சினை உட்கொண்ட சிறப்பினை வியந்து கூறிக்கொண்டிருந்தார். மயிலாடுதுறை என்னும் தலத்திலே நிகழ்ந்த நிகழ்ச்சி இது. அதனைக் கேட்டுக் கொண்டிருந்த காளமேகம். இப்படி ஒரு பாடலைச் சொல்லி அவரைத் திகைக்க வைக்கின்றார்.


வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத்-தெள்ளுமையாள்
அஞ்சலஞ்ச லென்றுதின மண்டையிலே தானிருக்க
நஞ்சுதனை யேனருந்தி னார்? (119)

வள்ளல் எனும் பெரிய மாயூரநாதருக்கு - வள்ளன்மை உடையவர் என்று புகழ்பெற்றவரான மாயூரநாதருக்கு, வெள்ளி மலையாகிய கைலாயமும் பொன்மலையாகிய மகா மேருவுமே சொந்தாயிருக்கும் பொழுதும், தெள் உமையாள் தினம் அஞ்சலஞ்சலென்று அண்டையிலே தானிருக்க-தெளிந்த அறிவுடையவளான உமையம்மையானவள், நாள்தோறும், அஞ்ச வேண்டாம் அஞ்ச வேண்டாம் என்று சொல்லியவளாக அவரின் அருகிலேயே இருக்கும்பொழுதும், நஞ்சுதனை ஏன் அருந்தினார் - விரக்தியுற்றுப் பெருமான் ஏனய்யா நஞ்சினை உட்கொண்டார்? (மாயூரம் - மயிலாடுதுறை - இப்பொழுது மாயவரமாகிச் சிதைந்து வழங்கும் பழைய ஊர்)

புற்று மண்

வைத்தீச்சுரன் கோயிலில் புற்றுமண் சிறப்பாகும். அதனை குறித்துக் காளமேகம் பாடுகிறார். தம்மை மதியாத சம்பந்தாண்டான்மீது காளமேகம் வசைபாட, அதனால் இவருக்கு நோய் வந்தடைந்தததாம். அந் நோயினின்றும் வைத்தீசர் கோயிற் புற்றுமண்ணை உண்டு இவர் விடுபட்டாராம். அப்போது அதனைச் சிறப்பித்துப் பாடியது இது என்பது வரலாறு.



மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ-தொண்டர்
விருந்தைப்பார்த் துண்டருளும் வேளூரென் னாதர்
மருந்தைப்பார்த் தாற்சுத்த மண். (120)

இந்த உலகிலே எந்நாளும் மருத்துவராகவே தாம் வீற்றிருந்த போதிலும், தம் கழுத்திலே அமைந்த கறையாகிய நோயினை அவர் தீர்த்துக்கொள்வதனை எவரேனும் கண்டிருக்கிறீர்களோ? கண்டது கிடையாதே! தொண்டர்கள் படைக்கின்ற விருந்துகளை எதிர்பார்த்து, அவற்றை உண்டு அருளுகின்ற, வேளூரிலிருக்கும் என்னுடைய தலைவரின் மருந்தைக் கவனித்துப் பார்த்தால், அது வெறும் மண் என்பதையாவது யாரும் அறிவீர்களோ?

பெருமானை இகழ்வது போலப் புகழ்கிறார் 'கண்டவினை தீர்க்கின்றார்' என்பதனை, "ஆன்மாவுக்கு நோயாக கண்ட இருவினையையும் போக்குகின்றார்" எனவும், தொண்டரின் காணிக்கையினை ஏற்று உதவுபவர் எனவும், புற்று மண்ணே சிறந்த மருந்தாகுமெனவும் கொள்ளுக.

நெருப்பை அணைத்தவள்

'புள்ளிருக்கும் வேளுர்' எனப் புகழ்பெற்று விளங்குகிற வைத்தீசுரன் கோயிலுக்குச் சென்றிருந்தார் காளமேகம். அங்கே, பெருமானைத் தரிசிப்பவர், அம்மையின் பாகமாயமைந்த நிலையிலே நெஞ்சினைப் பறிகொடுத்தார். அப்போது பாடியது இது.


தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானு முன்றன் சிரிப்பிலே-தீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கும் வேளூரா உன்னையிந்தத்
தையலா ளெப்படிச் சேர்ந்தாள்? (121)

புள்ளிருக்கும் வேளூரிலே கோயில் கொண்டிருக்கின்ற பெருமானே! நின் நெற்றிக்கண்ணில் விளங்குவதும் நெருப்புத்தான், நின் திருக்கரத்திலே இருப்பதும் நெருப்புத்தான். நின் திரிபுரம் எரித்த சிரிப்பிலே எழுந்ததும் நெருப்புத்தான். நின் திருமேனி முழுவதுமே நெருப்பு மயமானது தான். இப்படி இருக்கவும், இந்தப் பெண்மணியான உமையம்மை நின்னை எப்படி விரும்பிவந்து அணைந்தாளோ? அதுதான் எனக்கும் வியப்பாயிருக்கிறது பெருமானே!

புள்ளிருக்கும் வேளுர் - சடாயு பூசித்த திருத்தலம். அம்மை தண்மையுடையவள். "அவள் எப்படி நெருப்பு மயமான உடலுடைய அப்பனுடன் சேர்ந்துள்ளாள்?" இப்படிக் கற்பித்து வியக்கிறார் கவிஞர்.

எந்த வினை தீர்ப்பார்?

வேளூர் வைத்தியநாதரைத் தரிசித்தபின், காளமேகம் அவரைப்பற்றிப் பாடுகின்றார். "இவருடைய சொந்தக்காரர்களின் துன்பங்களையே இவரால் தீர்க்க முடியவில்லையே?" இவர் எங்ஙனம் ஐயா பிறருடைய வினைகளைத் தீர்ப்பார்?" என்று கேலி பேசுகிறார்.


வாதக்கா லந்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
பேதப் பெருவயிறாம் பிள்ளைதனைக் - கோதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்தவினை தீர்ப்பார் இவர்?(122)

சொல்லுவதைக் கேட்பாயாக, வேளூரரான சிவ பெருமானுக்குத் தமக்கே வாதக்காலாம்; அவர் மைத்துனர்க்கு நீரிழிவாம்; அவர் பிள்ளைக்கு விகாரமான பெருவயிறாம்! இவ்வாறு, தமக்கும் தம்மவர்கட்கும் வந்த நோய்களைத் தீர்க்கவே வகை அறியாதவராயிருக்கும் இவர், வேறு எந்த வினையைத்தான் தீர்க்கப் போகிறார்?

கால் வாதம் - காற்றே திருவடியான நடனநிலை நீர் இழிவு - நீரான கடலிடையே துயில்வது. பேதப் பெரு வயிறு - மாறுபாடான பருத்த தொந்தி; மகோதரம்.

தம் வீட்டு நோய்நொடிகளையே தீர்க்கமுடியாது தத்தளிக்கும் அவர், எப்படி நம் வினைகளைத் தீர்க்கப் போகிறார் என்று நிந்திப்பது போலவும் தோன்றும்.

குறமகளை மணந்தான்

முருகப் பெருமான் குறக்குலக் கொடியான வள்ளியை மணந்தான் அல்லவா. அதனால், பலரும் வருத்தம் அடைந்தார்கள் என்று சொல்வதுபோலக் கடவுளரின் தன்மைகளை அமைத்துப் பாடிய செய்யுள் இது.


மருகிருக்கும் வேளூரின் வயித்திமகன்
        குறமகளை மணந்தா னென்றே
உருகியர னஞ்சுண்டா னுமையவளுந்
        தவம்புரிந்தா ளுயர்மான் மேனி
கருகிமிக மண்டின்றான் கமலன்முக
        நாலானான் கடவு ளோர்கள்
இருவிழியு மிமையாம லிரவுபக
        லுறங்காம லிருக்கின் றாரே. (123)

வாசனைச் செடிகள்; (மருக்கொழுந்தும் ஆம்) விளங்குகின்ற புள்ளிருக்கும் வேளூரிடத்தே கோயில் கொண்டிருக்கிற வைத்தீசுரரின் திருமகன், குறவனின் மகளைச் சென்று மணந்து கொண்டான். அதனை அறிந்ததும், அவன் தகப்பனான வைத்திய நாதன் நஞ்சைக் குடித்துவிட்டான். தாயாகிய உமையோ தவம் செய்யலானாள். உயர்ந்த மாமனான திருமாலோ தன்மேனி கருநிறம் பெற வருந்திப் பெரிதும் மண்ணைத் தின்னத் தொடங்கினான். பிரமனோ முகத்தைத் தொங்கவிட்டவனானான். மற்றைய கடவுளர்களோ கண்கள் இமையாதவராகி இரவுபகல் கவலையுற்றவர்களாக உறங்காமல் இருக்கின்றார்கள்.

குலமுறை தவறியதனால், இப்படி உறவினர் தம் உயிரை மாய்த்துக் கொள்ளக் கருதினார்கள் என்பது போலக் கூறுகிறார். இவை அவர்களின் சிறப்புக்களா தலையும் உய்த்து அறிக.

எப்படி வந்தது?

காளமேகம், அண்ணமலையின் அருணாசலப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது சிறுத்தொண்டர் கதை அவர் நினைவிலே எழுந்தது. சிறுத்தொண்டர் தம் மகனையே அறுத்துச் சமைத்துப் பரிமாறிநின்றபோது, பெருமான் 'சீராளா' என்று அழைக்க, அவன் ஓடிவந்து நின்றதையும் நினைத்துக் கொண்டார். 'எப்படி வரமுடியும்' என்று கேட்பதுபோல, அந்தத் திருவிளையாடலைப் போற்றுகின்றார்.


சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டகலத் திற்பாதி இட்டிருக்கத் - திட்டமுடன்
ஆடிவந்த சோணேசர் அன்றழைத்த போதுபிள்ளை
ஓடிவந்த தெவ்வா றுரை? (124)

சிவனடியாராக வந்த இச் சிவபிரானுக்குச் சிறுத்தொண்டர் படைத்த பிள்ளைக்கறியானது. சட்டியிலே பாதி - சட்டியிற் பாதியாயும், அந்தச் சட்டுவத்திலே பாதி - அந்தச் சட்டியிலிருக்கும் சட்டுவத்திலே ஒரு பாதியாகவும், இட்டகலத்தில் பாதியிட்டிருக்க - படைத்த உண்கலத்திலே இன்னொரு பாதியாகவும் இட்டிருக்கவும், திட்டமுடன் ஆடிவந்த சோணேசர் - உறுதியுடன் திருவிளையாடல் நிகழ்த்தவே வந்திருந்த அந்த சோணேசரான சிவ பெருமான்; அன்று அழைத்தபோது பிள்ளை ஓடி வந்தது எவ்வாறு உரை - அன்று அறுக்கப்பட்ட பிள்ளையை 'வருக' என்ற அழைத்தபோது, அந்தப் பிள்ளையும் ஓடி வந்தது எவ்வாறு? அதனை எமக்கும் சொல்வாயாக!

ஊதும் குரங்கு!

கங்கைகொண்ட சோழேச்சுவரம் என்றொரு திருத்தலம் இருக்கிறது. அதன்கண் கோயில் கொண்டிருக்கும் ஈசரைச் சிறப்பித்துப் பாடுகிறார் புலவர். பாடுபவர், சோழனின் இலங்கை வெற்றியையும் சேர்த்தே பாடுகிறார்.



காவலன் எங்கள் கனவைப்பாஞ் சோழேசன்
மாவலி கங்கை மணிவாரி-ஆவனலென்
றப்புளங்கை தோய்க்க வதில்வா ரியமுத்தைக்
கொப்புளமென் றுதுங் குரங்கு. (125)

எங்களைக் காக்கும் பெருமானும், எங்களுடைய சிறந்த சேமநிதி போன்றோனுமான சோழமன்னவன், மிக்க ஆற்றலுடையவனாகச் சென்று வெற்றிகொண்டு, மாவலி கங்கைக் கரையிடத்தே கிடைத்த இரத்தினங்களைத் தன் கையிலே வாரி, 'ஆ! நெருப்புக் கங்குகள்!' என்று சொல்லியவனாகத் தண்ணிரினுள் தன் அழகிய கைகளைத் தோய்த்தான். கையினை மேலே அவன் எடுக்கும் போது வாரிக் கொணர்ந்த முத்துக்களைக் குரங்கானது அந்நெருப்புச் சுட்ட கொப்புளங்கள் என்று கருதி ஊதுவதாயிற்று.

இது கற்பனைதான், என்றாலும் இதனிடத்தே காணப்படுகின்ற நயத்தினைக் கண்டு இன்புறுக. செம்மணிகள் நெருப்புக் கங்குகளாகவும், அடுத்து வாரிய முத்துக்கள் நெருப்புச் சுட்ட கொப்புளங்களாகவும் கூறப்பட்டமை காண்க. 'மாவலி கங்கை' இலங்கையிலுள்ள பேராறு.

ஆலங்குடியான்

'ஆலங்குடி' ஒரு சிவத்தலம். இந்தத் தலத்துப் பெருமானை 'ஆலங்குடியான்' என்பார்கள். அது, நஞ்சை உண்ணாதவன் என்றும் பொருள் தரும் அல்லவா! இதனை வைத்துப் பாடுகிறார் கவிஞர்.


ஆலங் குடியானை யாலால முண்டானை
ஆலங் குடியானென் றார் சொன்னார் - ஆலங்
குடியானே யாயிற் குவலயத்தோ ரெல்லாம்
மடியாரோ மண்மீதி லே. (126)

திருவாலங்குடியிலே திருக்கோயில் கொண்டிருக்கிற எம்பெருமானை, ஆலகால நஞ்சினை உண்ட அருளாளனை, நஞ்சினைக் குடியாதவன் என்று சொன்னவர்கள் யார்? அவன் அன்று அந்த ஆலகால விஷத்தை குடியாதிருந்தான் என்றால், உலகத்தாரெல்லாம் மண்மேல் மடிந்து வீழ்ந்திருக்க மாட்டார்களோ?

'ஆலங்குடி' என்ற சொல் முதலில் ஆலங்குடி என்ற ஊரினையும், 'ஆலங்குடியான்' என அடுத்து நஞ்சினை உண்ணாதவன் என்பதனையும், 'ஆலங்குடியானேயாயின்' என நஞ்சினை உண்ணா திருந்தானேயாயின் என அவன் உலகுக்கு அருளிய கருணைச் சிறப்பையும் காட்டுதல் காண்க.

ஊர் காணார்

அந்த நாளிலே, சிவபெருமான் பாற்கடலிலே எழுந்த நஞ்சினை உண்டு உலகினைக் காத்தனர். அவர் நஞ்சினை உண்ணாமலிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? இதற்கு விடை கூறுகிறார் கவிஞர்.


கடுக்கை முடியானே காலைமுடித் தான்போற்
கடுக்கைமுடி யானாகிற் காணார்-கடுக்கை
உரலடிமீ துற்றானும் உம்பர்களும் மற்றும்
உரலடிமீ துற்றானும் ஊர். (127)

கொன்றையைத் திருமுடியிலே அணிந்துள்ள சிவபெருமானே முன் காலனை உதைத்து அழித்தான். அது போலவே, அவனே நஞ்சினையும் குடித்தான். அப்படி அவன் குடியானாகில், வேதனும், துதிக்கையுடைய வெள்ளை யானையின் மீது அமர்வோனான இந்திரனும், தேவர்களும், மற்றும் உரலிலே கட்டுண்டு மத்தினாலே அடிபட்ட திருமாலும் ஆகிய இவர்கள் யாவருமே தங்கள் தங்கள் ஊரைச் சென்று காணமுடியாதவராகி அழிந்திருப்பார்களே!

தன் அன்பனைக் காத்தாற் பொருட்டாக எமனை உதைத்த பெருமானே, மீளவும் தேவரைக் காக்கும் பொருட்டாக நஞ்சினையும் உண்டானவன் என்க. இதனால் அவனே முத்தேவரிற் சிறந்தவன் என்பதும் கூறினர்.

ஏன் எரித்தீர்?

திருவிடை மருதூர்ச் சிவபெருமானைக் குறித்துப் பாடியது இது. பெருமான் மன்மதனை எரித்த செயலைக் குறித்து நிந்திப்பது போல அமைந்தது.


கண்ண னிடுங்கரியும் காட்டுசிறுத் தொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ-தண்ணோடு
மட்டியையுஞ் சோலை மருதீச ரேபன்றிக்
குட்டியையேன் தீய்த்தீர் குறித்து? (128)

தண்மையுடனே தேனும் பொருந்தியிருக்கும் சோலையினை யுடைய மருதூரிற் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! காட்டிடத்தே கண்ணப்ப நாயனார் படைத்த ஊன்கறியும், சிறுத் தொண்டர் அன்பினாலே செய்தளித்த சிறுவனுடைய கறியும் நுமக்குப் போதாதோ? நீர் பன்றிக் குட்டியையும் ஏனய்யனே சுட்டீர்?

'பன்றிக்குட்டிக் கறிக்கு ஆசைப்பட்டு நீர் ஏனய்யா சுடுகிறீர்?' என்று கேட்பது போலப் பெருமானைக் கேட்கிறார் கவிஞர். 'பன்றி' என்றது பன்றியவதாரம் எடுத்த திருமாலையும், 'பன்றிக் குட்டி' என்றது மால் மகனான மன்மதனையும், 'தீய்த்தீர்' என்றது மன்மதனை எரித்ததையும் குறிப்பதாம்.

பொய்யிலா மெய்யர்

திருத்துருத்திப் பெருமானைத் தரிசிக்கச் சென்ற கவிஞர் பெருமானின் ஆபரணமாகிய பாம்பினைக் குறிப்பிட்டு இவ்வாறு பாடுகிறார்.


காலையிலும் வேலை கடையக் கயிறாகும்
மாலையிலும் பூமுடித்து வாழுமே-சோலைசெறி
செய்யிலா ரம்பயிலும் செந்துருத்தி மாநகர்வாழ்
பொய்யில்லா மெய்யரிடும் பூண். (129)

சோலைகள்செறிந்துள்ள வயல்களிடத்தே முத்துக்கள் விளைகின்ற 'செந்துருத்தி' என்னும் இப்பெரிய திருநகரிடத்தே கோயில் கொண்டிருக்கும் பொய்யிலா மெய்யராகிய பெருமான் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணமும் ஓர் ஆபரணமாமோ? அது காற்றையே உண்ணும். பாற்கடலைக் கடைவதற்கு மத்துக் கயிறாகவும் விளங்கும். திருமால் உண்ணுகின்ற உலகத்தினை முடிமேற் சுமந்தும் அது வாழ்ந்திருக்கின்றதாகுமோ?

கால் + அயில் = காலையிலும் = காற்றை உண்ணும். வேலை - கடல். மால் + அயிலும் = மாலையிலும் பூ + முடித்து =பூ முடித்து =பூ - பூமி; முடித்து - முடி மேலாகக் கொண்டது, பொய்யிலா மெய்யர் - நித்தியமான மெய்த் திருமேனியினை உடையவர்; சிவபிரான்.

ஏறும் விடை திருவீழிமிழலைச் சிவபிரானைத் தொழுது நின்ற கவிஞர் பெருமானின் இடபமாக இருக்கும் திருமாலைச் சிறப்பித்துப் பாடுகிறார்.


காலாற் படியளக்குங் கண்ணிடந்து பூசிக்கும்
சேலாங் கமடமாஞ் சிங்கமாம்-பாலாகும்
ஆழியப்பி லேதுயிலு மைவர்க்குத் தூதாகும்
விழியப்ப ரேறும் விடை. (130)

திருவீழியப்பரான பெருமான் ஏறிச்செலுத்தும் விடையான திருமால், தன் திருவடிகளால் நில உலகத்தையே அளப்பர்; கண்ணைத் தோண்டி இட்டும் பூசிப்பர்; பாற்கடலான நீரிலேயும் நித்திரை செய்வர்; ஐவர்க்கு தூதாக நடக்கவும் செய்வர். மேலும் அவரே மச்சாவதாரனாகவும் கூர்மாவதாரனாகவும், நரசிங்காவதாரனாகவும் விளங்குபவருமாவர்.

படி - பூமி, இடத்து - தோண்டி. ஆழி + அப்பு = ஆழியப்பு - கடல்நீர். கண்ணிடந்து பூசித்தல் - திருமால் சிவனைக் கண்மலர் தூவி வழிபட்டது.

ஒரு மணி

திருவரங்கநாதரை ஒரு மணியாக உவமித்துப் பாடிய சிலேடைச் செய்யுள் இது.


பாங்கு பெருந்திரு வைந்நூற்றிரட்டிப் பணிவிடையில்
தூங்கு மதிலொரு மாவேற்றமுண்டு சுரர்முனிவர்
ஆங்கவர் செப்பிற் கடங்காதுலக மனைத்தும்பெறும்
ஓங்கு மரங்கத் திருப்பெட்டகத்து ளொருமணியே. (131)

மணி: புகழ்பெற்ற திருவரங்கத்துத் திருப்பெட்டகத்து வீற்றிருக்கின்றது ஒரு ஒப்பற்ற இரத்தினம். தன்பால் மிகவும் அழகு வாய்ந்தது அது. ஆயிரம் பணவிடை நிறையளவிலே நிறுக்கப்படும் அத்துணை பெரிதும் அது. அதற்கு மேலும் ஒரு மா அளவு மிகுந்திருப்பது எனவும் கூறலாம். தேவர் முனிவர் முதலிய பெரியோர்கள் அதனைப் புகழின் அதற்குள் அடங்காத சிறப்பும் உடையது. உலகமெல்லாம் அதற்கு ஈடாகக் கொடுப்பினும் அது அந்தத் தகுதியினை உடையதேயாகும்.

அரங்கநாதர்: புகழாற் சிறப்புற்ற திருவரங்கத்துத் திருக்கோயிலுள்ளே விளங்குகின்றனர், ஒப்பற்ற நீலமணி போல விளங்கும் மேனியனாகிய அரங்கப் பெருமான். அவர் தன் மார்பாகிய பகுதியிடத்தே திருமகளைக் கொண்டிருப்பர். ஆயிரம் படத்தினையுடைய பாம்பணையின்மீது பள்ளி கொள்பவர். அப்படிப் பள்ளிகொள்வதிலும் ஒரு பெரிய உயர்வு உள்ளதாகும். தேவரும் முனிவரும் போற்றினாலும் அவர்களுடைய போற்றுதலையும் கடந்து நிற்பவர் அவர். உலகனைத்தையும் தன் உதரத்தே வைத்துக்காக்கின்ற ஆதிமூலமும் அவரேயாவர்.

இவ்வாறு, இரு பொருள்படச் சிலேடையாக அமைந்தது இச் செய்யுள்.

மயிலும் பாம்பும்

திருவரங்கநாதர் பாம்பணையிலே பள்ளிகொண்டிருப்பவர். முருகப்பெருமான் மயில்வாகனத்திலே ஊர்ந்து வருபவன். அவன் திருமாலிற்கு மருமகன் முறையினனும் ஆவான். அவன் தன் மாமனைப் பார்க்கச் செல்லுகிறான். அப்போது நிகழ்வதாகக் கற்பித்துப் பாடியது இது.



திரண்டிமை யோர் தொழும்
        தென்னரங் கேசர்முன் செங்கைகளா
றிரண்டுடை யோனும்
        எதிர்சென்ற தாலெதிர்ந் தார்தமைக்கண்
டருண்டெழு மைவார்க்குத்
        தேரூர் பவன்கொள் அணைவெருண்டு
புரண்டொரு புற்றைக்
        கடந்தொரு புற்றிற் புகுந்ததுவே. (132)

கூட்டங் கூட்டமாகத் தேவர்கள் திரண்டு சென்று போற்றுகின்ற சிறப்புடையவர் அழகிய திருவரங்கப் பெருமான். அவருடைய திருமுன்பாகச் செங்கைகள் பன்னிரண்டு உடையோனாகிய முருகப்பெருமானும் எதிரிட்டுச் சென்றன. அங்ஙனம் குமரப்பெருமான் சென்றதனாலே பகைவரைக் கண்டு அஞ்சி எழுந்த பஞ்சபாண்டவர்க்குத் தேரூர்ந்தவனாகிய திருமால் பள்ளிகொள்ளுகின்ற பாயலாகிய பாம்பு, எதிர்ப்பட்டமுருகனைக் கண்டு, அவன் வாகனமாகிய மயிலுக்குப் பயந்து, இருந்த இடத்தை விட்டுப் புரண்டு, ஒரு புற்றைக் கடந்து, மற்றொரு புற்றினிற் சென்று புகுந்து ஒளிந்துகொண்டதே!

குறிப்பு - மாயவனை விட்டுவிட்டுத் தனக்குப் பாதுகாவலான இடத்தைத் தேடியதாகச் சிவபெருமானின் திருச் சடையினிற் சென்று அடைந்தது என்பது கருத்து.

சங்கநாதம்

அழகர்கோயில் மதுரைக்கு அருகே இருப்பது. அங்கே கோயில் கொண்டிருக்கும் திருமாலைக் குறித்துப் பாடிய செய்யுள் இது. பெருமான் பாரதப் போர்க்களத்திலே பாஞ்சசன்னியத்தை முழக்கியதனை வியந்ததும் இது.


சதுரங்கர் சங்கத் தழதர் செங்கைச் சங்கை
அதரமிசை வைத்திலரே யாயின்-முதலை
வருங்களத்தின் முண்டகக்கை வைப்பரன் றேயன்று
பொருங்களத்தில் நூற்றுவர்முன் போய். (133)

சதுரப்பாட்டினை உடையதான திருவரங்கத்தே இருப்பவரும், சங்கினைக் கைக்கொண்டோருமான அழகராகிய பெருமான், தன் செங்கையிலே இருந்ததான சங்கினை எடுத்து உதட்டிடத்தே வைத்து முழக்காதிருந்தனர் என்றால், அன்று போரிடற்காகக் கூடிய குருசேத்திரமாகிய களத்திலே, நூற்றுவர்களான துரியோதனாதியருக்கு முன்பாக ஓடிப் போய், முதல்வரான ஐவர்களும் களத்திலேயே தலையில் தம்முடைய கைகளைக் குவித்து வைத்தவாறு பணிந்து நிற்பார்கள் அல்லவோ? அவர்கள் தோல்வியுற்றிருப்பார்கள் என்பது கருத்து.

இதனை திருவரங்கநாதரைக் குறித்ததாகவும் கொள்வர், போரிற் கலந்து படையெடேன் என்ற பெருமானே வெற்றிக்கு காரணனாயின் என்று நிந்தித்ததுபோல அவனைக் புகழ்ந்தவாறு காண்க.

வரதரின் யானை வாகனம்

காஞ்சியிலே, வரதராசப் பெருமான் யானை வாகனத்தே திருவீதி உலா வருகிறார். அந்தக் காட்சியை இப்படி வருணிக்கிறார் காளமேகம்.

ஒருமா என்பது ஒன்றில் இருபதிலொரு பங்கு. அதனை அமைத்து அழகாகச் செய்யுள் இயலுகின்றது.


எட்டொருமா எண்காணி மீதே இருந்தகலைப்
பட்டொருமா நான்மாவிற் பாய்ந்ததே-சிட்டர்தொழும்
தேவாதி தேவன் திருவத்தி யூர்வரதன்
மாவேறி வீதிவரக் கண்டு. (134)

அவன் மாவேறி வீதியிலே வந்தான். அதைக் கண்டு ஒருமா நான்மாவிற் பாய்ந்தது என்று சொல்லுகிறார். இதன் பொருள்.

எட்டு ஒருமா எண் காணி மீதே இருந்த - (எட்டு ஒருமா+இரண்டுமா (எண் காணி) = பத்துமா - அரை) ஒரு நங்கையின் அரையின் மீது இருந்த, கவலைப்பட்டு - ஆடையாகிய பட்டானது, சிட்டர் தொழும் தேவாதிதேவன் திரு அத்தியூர் வரதன் - தூய்மையான ஒழுக்கமுடைய பெரியார்கள் தொழுது போற்றும் தேவர்களுக்குள் ஆதிதேவனும் திரு அத்திகிரி என்னுமிடத்தே வீற்றிருப்போனுமான வரதராசப் பெருமான் மாவேறி வீதி வரக்கண்டு யானையாகிய விலங்கின் மேலாக அமர்ந்து திருவீதியிலே உலாவரக் கண்டு, ஒருமா, நான்மாவிற் பாய்ந்ததே (ஒருமா - நான்மா = ஐந்துமா - காலில்) அரையி னின்றும் நழுவிக் காலில் வீழ்ந்ததே! பெருமான் திருவீதி உலாவரக் கண்டு அவன் அழகிலே மயங்கிய ஒரு நங்கை தன் இடையிற் பட்டுத் தளர்ந்து சோரக் காதல் மயக்கத்தினளாகி நின்றாள் என்பது கருத்து.

மண்ணை உண்டார்

கண்ணபுரப் பெருமானைத் தரிசிக்கச் சென்றிருந்தார் காளமேகப் புலவர். அப்போது மாயனார் மண்ணை உண்ட செய்தியைக் குறித்து இப்படிப் பாடுகின்றார்.


கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார்
மண்ணையுண்டார் வெண்ணையுண்ட மாயனார் - எண்ணும்
சிரக்கப் பரையேந்திச் செங்காட்டி லீசர்
இரக்கப் புறப்பட்டா ரென்று. (135)

'திருச்செங்கோட்டிலே கோயில் கொண்டிருக்கும் ஈசனாகிய சிவபெருமான், மதிக்கத்தக்க தலையோடாகிய பிட்சாபாத்திரத்தை ஏந்தியவராகப் பிச்சை ஏற்று உண்பதற்குப் புறப்பட்டுவிட்டார்' என்று அறிந்த கண்ணபுரத்துக் கோயிலார்கள், திருமாலும் சிவனைத் தொடர்ந்து போய்விடக் கூடாதே என்று பயந்து, திருக்கோயிற் கதவை அடைத்துத் தாழும் இட்டுவிட்டார்கள். அதனாலே, வெண்ணையுண்ட மாயனார், அது கிடையாமல் மண்ணைத் தின்பவரானார்!

தாம் தரிசிக்கச் சென்றபோது திருக்கோயிற் கதவினைக் கோயிலார் அடைத்துத் தாழிடக் கண்டவர், இப்படிப் பாடி அவர்கள் செயலைப் பழித்தனர் என்பர். மண - பூமியும் ஆம்; அது பெருமான் தம் திருவுதரத்தே உலகினை அடக்கிக் காப்பதனைக் குறித்தாம். சிவன் உணவேதும் கிடையாமல், பிச்சை எடுக்கப் போய்விட்டான் எனப் பிட்சாடன் மூர்த்தத்தையும், வெண்ணையுண்ட மாயன் மண்ணையுண்டான் எனத் திருமாலின் சிறப்பையும் பாடிய நயத்தினை அறிந்து இன்புறுக.

பெருமாள் பிறந்த கதை

திருக்கண்ணபுரம் ஒரு வைணவத் தலம். அங்கே கோயில் கொண்டிருக்கும் மூர்த்தியின் பெயர் சவுரி நாராயணன். அவர் திருநட்சத்திரம் அத்தம் என்பர். அதனைக் குறித்துப் பாடியது இது.


உத்திரத்துக் கோர்நா ளுரோகணிக்குப் பத்தாநாள்
சித்திரைக்கு நேரே சிறந்தநாள் - எத்திசையும்
காராரும் பூஞ்சோலைக் கண்ணபுரம் வாழ்சவுரி
நாரா யணன் பிறந்த நாள். (136)

எத்திசையிலும் மேகங்கள் படிகின்ற பூஞ்சோலைகளையுடைய திருக்கண்ணபுரத்திலே கோயில்கொண்டிருக்கும் சவுரி நாராயணரின் பிறந்த நாள் -

உத்திரத்துக்கு அடுத்ததான நட்சத்திரமும் உரோகணிக்குப் பத்தாவது நட்சத்திரமும், சித்திரைக்கு நேரே முற்பட்ட நட்சத்திரமும் ஆகிய சிறப்புடைய அத்த நட்சத்திரம் என்று அறிக.

உன்னிலும் அதிகம்

காளமேகம் திருக் கண்ணபுரத்தில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது தெருவில் செல்லும்போது மழை பெய்யத் தொடங்கிற்று. அருகிலிருந்த பெருமாள் கோயிலில் சற்று ஒதுங்கிக் கொள்ள விரைகிறார் காளமேகம். அந்தக் கோயில் நம்பியாரோ இவரை உள்ளேவிட விரும்பவில்லை. கதவை அடைத்துத் தாளிடுகிறார். அப்போது, 'பெருமாளே! உன்னிலுமோ நான் அதிகம்' என்று சொல்வது போலப் பாடியது இது.


கண்ணபுர மாலே கடவுளிலும் நீயதிகம்
உன்னிலுமோ யானதிக மொன்றுகேள் - முன்னமே
உன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப்பெண் ணத்தொலையா தே. (137)

"கண்ணபுரப் பெருமானே! கடவுளாகிய சிவபெருமானைக் காட்டினும் நீ பெரியவன் தான், உன்னைக் காட்டிலுமோ யானே பெரியவன். ஒரு செய்தி மட்டும் கேட்பாயாக: உன்னுடைய பிறப்போ முன்னாளிலே பத்து மட்டுமே யாகும். உயர்வுடைய சிவனுக்குப் பிறப்பு ஒன்றுமே கிடையாது. ஆனால் என் பிறப்பு எவ்வளவு தெரியுமா? எண்ணத் தொலையாத அளவினது! இதையாவது அறிந்து கொள்க."

'காளமேகம் நுழைந்தால் பெருமாள் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று கருதிக் கதவடைத்த நம்பியாரை வெட்கமுறச் செய்வதற்குக் கவிஞர் இப்படிப் பாடினார் என்று கொள்ள வேண்டும்.

புறப்பட்ட வேடிக்கை

சிவபெருமானின் நகர்வலத்தைக் கண்ட காளமேகம் அதனை நிந்திப்பதுபோல இப்படிப் போற்றுகின்றார்.


வாணியன் பாட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றக் கடற்பள்ளி முன்றொழத் தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்தக் கருமான் றுகிறனைக் கொண்டணிந்த
வேணிய னானவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! (138)

"பிரமன் மறை முழக்கம் செய்து வரவும், வெண்ணிற எருதான நந்தி சுமந்துவரவும், வயிரவனும் முருகனும் இந்திரனும் போற்றி வரவும், திருப்பாற் கடலில் பள்ளி கொள்வோனான திருமால் தொழவும், இனிய கரும்பினையே வில்லாக வளைத்துக் கொள்வோனான மன்மதன் வாழ்த்து உரைக்கவும், யானைத் தோலை உரித்துக் கைக்கொண்டு அணிந்த சடாமுடியினை உடையவனும், எவருக்கும் காட்சிக்குத் தட்டுப்படாதவனுமான சிவபிரான் வெளியே உலாவரப் புறப்பட்டது ஒரு வேடிக்கையே."

பாட்டை நேராகவே 'வாணியன் பாட' என்றாற் போலப் பொருள்கொண்டால் நிந்தையா யிருப்பதும், நுட்பமாகக் கருதினால் பொருள் புலனாவதும் காண்க.

வாணியன் - கலை வாணியை உடையவன்; பிரமன் வண்ணான் - வண்ணமுள்ள ஆன்; நந்தி; வடுகன் - வயிரவன் செட்டி - முருகன்; கடற் பள்ளி - கடலிற்பள்ளி கொள்ளுகிற திருமால், கருமான் - யானை; தட்டான் - காட்சிக்குத் தட்டுப் படாதவன்.

கனலேறி வந்தது

சிவபிரான் இடபாரூடராகப் பவனி வந்து கொண்டிருக்கின்றார். அந்தக் காட்சியிலே தம் உள்ளம் களிகொள்ளக் கவிஞர் இப்படிப் போற்றுகின்றனர்.


கரியொன்று பொன்மிகும் பையேறக்
        கற்றவர் சூழ்ந்து தொழ
எரியொன்று செல்வன் றுலாத்தினில்
        ஏற விருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினி
        லேறித் தொடர்ந்து வர
நரியொன்று சொந்தக் கனலேறி
        வந்தது நங்களத் தே. (139)

'யானைமுகனாகிய பெருமான் பெருச்சாளி வாகனத்தே ஏறியவனாக உடன் வந்து கொண்டிருக்கவும், கற்றவரான சான்றோர் சூழ்ந்து தொழுதுகொண்டே வரவும், தீ நிறமான செந்நிறத்தைக் கொண்ட செல்வனாகிய முருகப் பெருமானானவன் துலாமுழுக்குக் கட்டமாகிய மாயூரம் என்னும் மயிலின் மேலாக ஏறிவந்து கொண்டிருக்கவும், கருமையான மழை மேகங்கள் மழை சொரிகின்ற இமயத்தின் திருமகளான உமையம்மை அன்ன வாகனத்திலே ஏறிப் பின் தொடர்ந்து வரவும், சம்புவாகிய ஒரு தனிக்கடவுள் தமக்குச் சொந்தமான நந்தியின் மேலே ஏறியவராக நம்முடைய இடத்திலேயே வந்தருளுகின்றனரே! என்னே இதன் கண்கொள்ளாக் காட்சி!

மிகும்பை பெருச்சாளி. நாகம் - மலை, இமயம், சோறு - அன்னம் சொந்தக் கனல் - நம்+தீ+நந்தீ என்று கொள்ள வேண்டும்.

கொன்ற பழி போமோ?

திருச்செங்கோடு ஒரு சிவத்தலம் அங்குச் சென்று சிவபெருமானைத் தொழுகிறார் காளமேகம், "நாட்டிலிருந்து ஓடிவந்து, இப்படி நீர் காட்டிலே தங்கியிருந்தாலும். நீர் முன்னர் செய்த கொலைப் பாவங்கள் உம்மை விட்டுப் போய்விடுமோ?" என்று கேட்கிறார். காலனை உதைத்தது; காமனை எரித்தது; சிறுத்தொண்டனிட்ட அமுதினை உண்டது ஆகிய திருவிளையாடல்களை எடுத்துக்காட்டித் துதிக்கிறார்.


காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர்திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால். (140)

"சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே - ஒழுக்க முடையவர்போல நாட்டினிடத்தே பல தலங்களிலும் கோயில் கொண்டிருந்த தலைவரே! நீர் திருச்செங்காட்டிலே வீற்றிருந்தக் கால் - நீர் திருசெங்காட்டிலே வந்து தங்கியிருந்தவிடத்தும், காலனையும் எமனையும், காமனையும் - மன்மதனையும், காட்டு சிறுத்தொண்டர் தரு பாலனையும் - பக்திக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த சிறுத்தொண்டர் பெற்றெடுத்த சீராளன் என்ற சிறுவனையும், கொன்ற பழி போமோ - கொலை செய்ததனால் ஏற்பட்ட பழிச் சொற்கள் மறைந்து போய்விடுமோ?

இத் தலத்திலே வீற்றிருக்கும் சுவாமியின் பெயர் உத்திராபதி ஈசுவரர்.

எங்கே இருந்தான் சிவன்?

பூரீரங்கத்தார்கள் சிவனைக் குறித்துக் கேலி பேச நினைத்தனர். புதிதாகச் சிவமதத்தைச் சார்ந்தவரான காளமேகத்தை நோக்கி, 'திருமால் உலகத்தைக் கவளமாக உண்டபோது, உங்கள் சிவன் எங்கே இருந்தார்?' எனக் கேட்டனர். அப்போது காளமேகம் சொன்னது இது.


அருந்தினா ணண்டமெலா மன்றுமா லீசன்
இருந்தபடி யேதென் றியம்பிற்-பொருந்தி
பருவங்களம் யானைகொளப் பாகனதன் மீதே
இருந்தபடி ஈசனிருந் தான். (141)

"திருமால் அந்நாளிலே உலகம் முழுவதையுமே விழுங்கினான். அப்பொழுது ஈசன் இருந்தபடி எவ்வாறு?" என்று சொல்வதானால், யானையானது பெரிதான கவளத்தை எடுத்து உட்கொள்ளுகிறபோது, அதனை இயக்கும் பாகன் அதன் மீதிலே இருந்த நிலையைப் போலச் சிவபெருமானும் திருமாலின் மேலாகவே வீற்றிருந்தனன் என்று அறிக.

அண்டம் - உலகம்; உலகத்து வடிவைக் குறித்தது. ஈசன் - சிவபெருமான். பொருந்தி - மனம் விரும்பி, கவளம் - சோற்றுத் திரளை. திருமாலை யானையாகவும், சிவபிரானை அவனைச் செலுத்தும் பாகனாகவும் கூறினார்.

கருவைப் பிரான்

திருக்கருவை நல்லூரிலே, களாமரத்தினடியிலே கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் போற்றுகிறார் கவிஞர். களாமரம் என்பது களவு என்றும் சொல்லப்படுவதாகும் இது, களவாடுதல் என்ற பொருளையும் தரும். இப்படி அமைந்த இருபொருளமைதியை வைத்துப் பாடுகிறார் கவிஞர்.



வெண்ணெய் திருடியுண்ட வேணியர னாரிருக்கக்
கண்ணன்மேல் வைத்த களவேது-பெண்ணைத்
தலையிற் சுமந்தான்மால் சர்ப்பத்தி லேறி
அலையிற் றுயினறா னரன். (142)

வெண்ணெயைத் திருடித்தின்ற கண்ணபெருமான் இருக்கவும், சண்டயணிந்த சிவபெருமானின்மேல் வைத்த களவு எதன் பொருட்டாகவோ? அரன் கங்கையாகிய ஒரு பெண்ணைத்தான் தன் தலையிற் சுமந்தானே அல்லாமல் களவினைச் சுமக்கவில்லையே? ஆனால், திருமாலோ களவின் விளைவுக்கு அஞ்சிப் பாம்பின்மேல் ஏறிக்கொண்டு கடலிடத்தே சென்றல்லவோ உறங்கலாயினான்?

'மொழி மாற்று' என்னும் பாவகை இது. சிவனுக்குச் சொல்வதை மாலுக்கும், மாலுக்குச் சொல்வதைச் சிவனுக்குமாக மாற்றியமைத்துப் பொருள்கொள்ளல் வேண்டும்.

ஆண்டானும் தாதனும்

ஸ்ரீரங்கத்து வைணவரும், திருவானைக்காக் கோயிற் சைவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். சிவனடியார்களை 'ஆண்டான்', அதாவது பெருமானால் ஆட்கொள்ளப் பட்டவன் என்றும், திருமாலடியார்களைத் 'தாதர்கள்' எனவும் சொல்வார்கள். தாதன் - அடியவன். இந்தச் சொற்கள் ஆண்டான் அடிமை எனவும் வேற்றுப் பொருள் தருவன. அதனைக் குறித்து 'ஆண்டான் அடியவன் என்றால் அடிக்கடி சண்டை நிகழாதிருக்குமோ!' எனக் கேட்பது போலச் சீரங்கத்தாரைத் தாதர்கள் எனப் பழிக்கிறார் கவிஞர்.


சீரங்கத் தாரும் திருவானைக் காவாரும்
போரங்க மாகப் பொருவதேன் - ஓரங்கள்
வேண்டா மிதென்ன விபரந் தெரியாதோ
ஆண்டானும் தாதனுமா னால். (143)

"சீரங்கத்து வைணவரும் திருவானைக்காச் சைவர்களும் போர்க்களத்தே போல வாதிட்டுத் தொடர்ந்து தமக்குள் சண்டை செய்வது ஏனோ? இவ்வாறு கேட்டபின் பட்சபாதமான எதுவும் சொல்லுதல் வேண்டாம். இது என்ன ஓர் அதிசயமோ? இதன் விபரமும் நமக்குத் தெரியாதோ? ஆண்டானும் தாதனும் என்ற நிலையினர் அவர்களானால் அவர்கள் சண்டையிட மாட்டார்களோ?

ஆண்டான் - இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற சிவனடியான்! தாதன் - திருமால் அடியவன், இதனால் சிவனடியார்க்குத் தாதர்கள் அடியவர்கள் என்பதும் கூறினர்.

பிறவாத ஆம்பல்

'திருவலஞ்சுழி' என்னும் திருவூரிலேயுள்ள விநாயகப் பெருமானைக் குறித்துக் கவிராயர் சொல்லிய சுவையான செய்யுள் இது.


பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்க மிந்துநுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடுசுனையில்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே! (144)

தும்பி, கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்பனவெல்லாம் வெவ்வேற பொருளைக் குறிப்பனவேனும், அவை யானையின், பெயருமாகும், அதனால் அவற்றைக் குறிப்பிடுவது போல யானை முகனைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றனர்.

பறத்தலைச் செய்யாத தும்பி (வண்டு), கருகிப் போதலைச் செய்யாத வெம்மையான கரி (அடுப்புக்கரி), பண்முறை பிறழ்ந்து கட்டமையாத தந்தி (வீணையின்) தந்தி). அனலிடத்தே உருகாத மாதங்கம் (பெரிதான தங்கக் கட்டி), பிறையனைய நெற்றியிடத்தே நிறங்காட்டாத சிந்துரம் (பொட்டு), பூசுதற்குப் பயன்படாத களபம் (களபம் - சாந்து), நெடிய சுனைநீரினிடத்தே தோன்றாத ஆம்பல் (ஆம்பற்பூ) ஆகிய விநாயகப் பெருமான் திருவலஞ் சுழியினிடத்தே வந்து அருள் செய்தலைப் பெற்றேன் யான்.

ஆறுமுகன் பெருமை

ஒரு முருகன் தலத்திலே, பெருமான் பவனி வருகின்றான். அந்த ஆடம்பரத்தைக் கண்டார் காளமேகம். அப்பன் பிச்சை எடுத்துச் சீவிக்கிறவன்; ஆத்தாள் மலை நீலி! மாமன் உரியிலே வெண்ணை திருடி உண்டவன்; அண்ணன் சப்பைக் காலன்; பெருவயிறன், குடும்ப நிலைமை இப்படிப்பட்ட அருமையுடன் இருக்கிறது இவனுக்கு" என்று நிந்திப்பது போலப் போற்றுகிறார் கவிஞர். 'முருகன் பெருமையைப் பாடுக' என்று கேட்கப் பாடியதாகவும் கொள்க.


அப்ப னிரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை இவை. (145)

ஆறுமுகத்தானுக்கு இங்கு எண்ணும் பெருமை ஆறுமுகத்தினனான முருகனுக்கு இவ்விடத்தே நாம் கருதக் கூடிய பெருமைகள் யாவை எனில்-

அப்பன் இரந்து உண்ணி - பெற்ற தகப்பனான சிவபெருமானோ பிச்சை ஏற்று உண்ணும் இயல்பினன்; ஆத்தாள் மலை நீலி - பெற்ற தாயோ மலையிடத்துப் பிறந்த கொடுமைக்காரி (நீலவண்ணம் உடையவள்.) - ஒப்பரிய மாமன் உறி திருடி; ஒப்பிடுவதற்கும் அரியவனான தாய் மாமனோ உறியிலே வெண்ணெய் திருடுபவன்; சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் சப்பைக் காலனான இவன் அண்ணனோ (மகோதரம் என்னும் பெரியவயிறாகத் தோன்றும் நோயினை உடையவன்) பெரிய வயிற்றினை உடையவன், இவை - எனும் இவைதாம்.

காணிக்கு வந்திருந்தான்

ஸ்ரீரங்கத்துக் கோயிலார் சிவகுமாரனான பிள்ளையாருக்குத் திருநாமத்தை இட்டுவிட்டனர். அத்துடன் விஷ்ணுவே பரமன் எனவும் கூறிக்கொண்டனர். அப்போது கவிஞர் பாடியது இது.


தந்தை பிறந்திறவாத் தன்மையினால் தன்மாமன்
வந்து பிறந்திறக்கும் வன்மையினால் - முந்நொருநாள்
வீணிக்கு வேளை எரித்தான் மகன் மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண். (146)

"முன் ஒரு காலத்தே வீணான கருவங்கொண்டு சென்ற மன்மதனை எரித்த சிவபெருமானது மகனான விநாயகன். தன் தந்தை இறப்பும் பிறப்பும் அற்றவரான தன்மையுடைமையால், தன் மாமனாகிய திருமால் பிறந்து இறக்கும் வள்ளன்பை உடையவராயிருத்ததலினால், மாமனார் சொத்துக்கு வாரீசாக வந்து இருந்தனன்" என்று அறிவீராக.

சிவபிரான் இறவாத பெருமான். அவர்க்குப் பின் அவருடைய சொத்துக்களுக்கு வாரிசாக வரச்சந்தர்ப்பமே கிடையாது. மாமன் மகனான மதனனும் சிவனால் எரிக்கப்பட்டு விட்டான். அதனால், மாமன் இறந்ததும் அந்தச் சொத்துக்கு வாரிசாகப் பிள்ளையார் வந்திருக்கிறார், இப்படி ஏளனம் செய்கிறார் கவிஞர் காணி - நிலங் கரைகள். இச்செய்யுள்.


தந்தை பிறந்திறவாத் தன்மையாற் றன்மாம
னந்தம் பிறந்திருக்கும் ஆதலாற்-முந்துமளி
நாணிக்கு வில்வேளூ மாய்தலால் நன்மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண்'. (146)

எனவும் வழங்கும் (தநா, சரிதை203) 'தன் தந்தையோ பிறந்து இறவாது நிலையிருக்கும் தன்மையன். தன் மாமனான திருமாலோ பன்முறையும் பிறந்து இறக்கும் தன்மையன். அவன் மகனான, வண்டை நாணாகவுடைய கரும்பு வில்லேந்தியான மன்மதனும் செத்துவிட்டான். ஆதலால், விநாயகப் பெருமான், தன் தாய்மாமனின் காணிக்கு உரிமை கொண்டாட வந்திருக்கிறார். இதனைக் காண்பீராக என்பது பொருள்.

நஞ்சு உண்ணி

நஞ்சு உண்டவன் சிவபிரான். அதனைக் குறித்து 'நஞ்சுணி' என இடக்கராகக் குறிப்பிட்டுப் பாடுமாறு சிலர் கேட்கக் காளமேகம் பாடுகிறார்.


சிரித்துப் புரமெரித்தான் சிந்துரத்தைப் பற்றி
உரித்துதிரம் பாய வுடுத்தான்-வருத்தமுடன்
வாடுமடி யாருடனே வானவரும் தானவரும்
ஓடுபயந் தீர்த்தநஞ் சுணி. (147)

உயிரே அழிந்து போமோ என்ற வேதனையுடையவராக வாட்டமுறும் அடியார்களுடனே தேவர்களும் அசுரர்களும் அச்சமுற்று ஓடிக்கொண்டிருந்தபோது, அந்த அச்சத்தைத் தீர்த்து நஞ்சை உண்டவன் சிவபெருமான். மேலும், அவன் தன் சிரிப்பினாலே திரிபுரக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவனும், தாருக வனந்து முனிவர்கள் ஏவிய யானையைப் பற்றி அதன் தோலை உரித்து, உதிரம்கொட்டிக் கொண்டிருக்க இடையிலே உடுத்துக் கொண்டவனும் ஆவான்.

நஞ்சை உண்டது ஒன்றுமட்டுமன்று; சிரித்துப் புரமெரித்ததும், சிந்துரத்தை உரித்ததும் அவனே என்று போற்றுகின்றார் அவர்.

நெய்யிலே கையிட்டான்

தில்லை பொன்னம்பலத்திலே சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் தம் கையிலே மழுவாயுதத்தை ஏந்துபவர். தில்லைக் கோவிந்தராயர் வெண்ணெய் திருடியுண்ட மாயன்; அவன் ஆயனும் ஆகியவன். இவற்றை வைத்துச் சுவையாகப் பாடுகின்றார் கவிஞர்.


தில்லைக்கா வுக்குட் சிதம்பரனா ராட்டையெடுத்
தில்லைக்கா ணென்றுமழு வேந்தினார்-சொல்லக்கேள்
மெய்யிலே கண்டேன்யான் மீண்டுங்கே ளாயனுமே
நெய்யிலே கையிட்டா னே. (148)

"தில்லைமரக் காட்டிலுள்ள - சிதம்பரத்தே கோயில் கொண்டிருக்கும் பெருமான், ஆட்டை எடுத்தனர் (திருநடனம் செய்தனர்) யான் எடுக்கவில்லை பாரென்று தன் செயலையும் மறைத்துக்கொண்டு மழுவேந்திப் போரிடவும் அவர் தயாராயிருந்தனர். சொல்வதனை இன்னமுங் கேள்; அவருடைய உடலிலேயே அவர் ஆடெடுத்திருந்ததன் தன்மையினை யானே நேரிற் கண்டேன் மீளவும் கேள்; ஆயனும் நெய்யிலே கையிட்டுச் சத்தியமும் செய்துள்ளனன்."

பெருமானின் நடனத்தை ஆடு திருடியதாகவும், அதனைப்பற்றிக் கேட்கப் போக ஆடுதிருடியதும் அல்லாமல் மழுவேந்திச் சண்டைக்கு வந்ததாகவும் குற்றஞ்சுமத்துகிறார். ஆடெடுத்த மெய்ப்பாட்டினைத் தாமே அவன் திருமேனியிற் கண்டதாகவும், மேலும் ஆடு மேய்ப்போனாகிய ஆயன் நெய்யிலே கையிட்டுச் சத்தியம் செய்ததாகவும் சொல்லுகிறார். இப்படி நிந்திப்பது போலக் கூத்தனின் நடனத்தை வியந்து போற்றவும் செய்கிறார் கவிஞர் காளமேகம்.

மாடு எடுத்துப் போவதேன்?

ஆடு திருடிய கள்வன் அவன், அவனை ஒரு மாடு எடுத்துக் கொண்டு போகிறதே? இது என்ன மாயமோ? சிதம்பரத்துத் தில்லை மூவாயிரவரின் கண் முன்னேயே இப்படியும் நடக்குமோ? இது அநியாயம் அல்லவோ?" கவிஞர் இப்படிக் கவலையோடு கேட்கின்றார்.


ஆடெடுத்த தில்லை அனவரவத் தாண்டவனை
மாடெடுத்துப் போவதென்ன மாயமோ-நீடுமுயர்
வானத்தார் போற்றுகின்ற வண்மைச் சிதம்பரத்துத்
தானதார் பார்த்திருக்கத் தான். (149)

'ஆட்டினை எடுத்த அந்தத் தில்லைநகரத்து அன வரதத் தாண்டவன் என்பவனை ஒரு மாடு எடுத்துப் போவதுதான் என்ன மாயமோ? மிகவுயர்ந்த வானத்தவரும் போற்றுகின்ற வண்மையினை உடைய சிதம்பரத்துத் தானத்தார்கள் பார்த்திருக்கவும் இப்படி நடக்கிறதே?'

பெருமான் ரிஷபாரூடராகப் பவனி வருவதை இப்படிப் போற்றுகின்றார் கவிஞர். அனவரதத் தாண்டவன் - நாள் தவறாது நடனம் செய்பவன். மாடு - நந்தீசர்.

வேணிப் பிரான்!

பெருமான் மன்மதனையும் முப்புரத்தையும் எரித்தான். எனினும், அவன் உடலில் ஒருபாதி உமையாளுடையதல்லவா? அவன் செய்ததெல்லாம் தன்பத்தினியின் துணையினைக் கொண்டேதான் அல்லவோ? என்கிறார் கவிஞர். சிவன் செயலில் சக்திக்கும் சரிபாதி பங்கு உண்டென்பது உண்மைதானே!


சித்தசனை முப்புரத்தைச் செந்தழலாய் வீழவொரு
பத்தினியைக் கொண்டெரியப் பண்ணினான்-நித்தம்
மறையோத வீற்றிருக்கும் மண்டலமென் றில்லைப்
பிறைசூடும் வேணிப் பிரான். (150)

"தில்லை நகரத்திலே வீற்றிருப்பவனும், இளம்பிறை சூடியவனும், செஞ்சடையினை உடையவனுமாகிய பெருமான் மன்மதனையும் திரிபுரத்தையும் அவை செந்தழலால் எரிந்து விடும்படியாக ஒப்பற்ற தன் பத்தினியைத் துணைக்கொண்டே செய்தனன். அப்படிப்பட்டவனுக்கு நாளும் மறையோத வீற்றிருக்கின்ற சிறப்புத்தான் எதற்காகவோ? அது வேண்டாததே என்றதாம்."

அவளின் துணையைக் கொண்டே அவன் அந்தச் செயல்களைச் செய்திருக்க, அவளை போற்றாமல் அவனை மட்டுமே போற்றுவது முறையன்று; ஆதலின் போற்றுதல் அவனுக்கு மட்டும் எதற்காகவோ? துணைநின்ற அவளையே போற்றுவோம் நாம் என்கிறார் கவிஞர்.

இதுவோ படைத்திறன்?

சிவபிரான், திரிபுரக் கோட்டைகளைச் சிரித்தே எரித்த சிறப்பினை உடையவன். அதனை நிந்திப்பது போலக் கவிஞர் இப்படிப் போற்றுகிறார்.


தில்லைக்குள் வாழும் சிதம்பர
        ரேயும்மைச் செப்ப வென்றால்
அல்லற் பிழைப்பே பிழைத்திருந்
        தீர்முப்பு ராதிகளை
வில்லைத் தொடுத்தெய்ய மாட்டாம
        லேயந்த வேளைதனில்
பல்லைத் திறந்துவிட் டீரிது
        வோநும் படைத் திறமே? (151)

"தில்லை நகரத்தினுள்ளே வாழுகின்ற சிதம்பரரே? உம்மைப் பற்றிச் சொல்வதென்றால் நீர் துயரமானப் பிழைப்பினையே கொண்டிருக்கின்றவர் ஆகின்றீர்! முப்புராதிகளான பகைவர்களை வில்லைத் தொடுத்து எய்து வீரனைப் போல வெற்றிக் கொள்வதற்கு முடியாமல், அந்தப் போரிடும் வேளையிலே பல்லைத் திறந்து காட்டினீரே? இதுவோ நும்முடைய படையாண்மை?"

அல்லற் பிழைப்பு - கேவலமான பிழைப்பு. போர் முனையிலே பல்லைக் காட்டுதல் மிகவும் கோழைத்தனமாகும்; அதனைச் செய்தவர் தாமே நீர்? என்கின்றனர். சிரித்தே எரித்த வெற்றிச் செயலைக் குறித்து இவ்வாறு நிந்தாஸ்துதியாகப் பாடுகின்றனர் என்று கொள்க.

என் செய்வீர்?

சிவபெருமான் பிச்சை எடுக்கின்றான். எதனால்? வேடிக்கையான ஒரு விளக்கத்தை அதற்குத் தருகிறார் காளமேகம்.



மாடு கிடப்பாதம் மனையா ளுடற்பாதி
தேடுதற்கும் பிள்ளை தினைக்கடம்பன்-சாடில்
அரவா பரணம்பூ ணம்பலத்தீர் பிச்சை
இரவாம னிரென்செய் வர்? (152)

மாடோ கிடப்பாத மாகிவிட்டது! மனையாளோ உடல் பாதியாகிப் போய்விட்டாள்! பொருள் தேடி வருவதற்கு உரிய பிள்ளையோ தினைக் கொல்லைகளிலும் கடப்பமரச் சோலைகளிலுமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறான். பாம்பா பரணத்தினை அணிகின்றவரே! அம்பலத்திலே யுள்ளவரே! நீர் பிச்சை எடுக்காமல் வேறு என்னதான் செய்வீர்?"

'இரவாமல் என்ன செய்வீர்?' என்று கேட்பதன்மூலம். பெருமானின் பிட்சாடன அருட்கோலத்தைப் போற்றுகின்றார் காளமேகம்.

மாடு என்றது நந்தி பெருமானை. கிடப்பாதம் - ஒரு மாட்டு நோய், மனையாள் - உமை, உடற்பாதி - உடலிற்பாதி; உடல் பாதியாகி நலிவுற்றவள். கடம்பன்-முருகன். மாடும் கிடையாயிற்று: மனைவியும் உடல்பாதியானாள்; மகனும் ஊர் சுற்றுபவனானான்; இந் நிலையிலே பிச்சை எடுக்காமல் உம்மால் எப்படி உயிர் வாழ முடியும்? என்று பாடுகிறார்.

சொக்கலிங்க சுகம்

மதுரைச் சொக்கலிங்கப் பெருமானைத் தரிசித்த கவிஞர் அந்த இன்பத்தை வியந்து பாடுகிறார்.


காண்டரிய மேனியுமொண் கந்தரமுஞ் சுந்தரனாய்
ஆண்டதுவு மேனிக் கமைந்ததுவும் - நீண்டமுகின்
மைக்கலிங்க மாகமணி மாடமணி மாமதுரைச்
சொக்கலிங்க மென்னுஞ் சுகம். (153)

"காணுதற்கும் அரியவான திருமேனியும், ஒளியுடைய செஞ்சடையும், சுந்தரனாக வந்து ஆட்கொண்டதும், மேனியிடத்தேயே அமைந்ததுவும், எல்லாம் - நீண்ட மேகங்களே கருத்து ஆடையாக மேலே விளங்கும் அழகிய மாடங்களையுடைய சிறந்த மதுரைச் சொக்கலிங்கம் என்னும் பேரின்பப் பொருளுக்கே உரியனவாகும்" சுந்தரம் - மேகம்.

திருநாமம் எது?

காஞ்சி வரதராசப் பெருமானைப் போற்றி வருபவர் ஒருவர், காளமேகத்திடத்தே வந்து சிவபெருமானைக் குறை கூறியும் ஒருநாள் பேசிவிடுகிறார். அதனால், சினங்கொண்ட கவிஞர் வரதராசப் பெருமானைக் குறிப்பிட்டு இப்படிப் பாடுகிறார்.



எருதாய்ச் சுமந்துபோ யேத்திக்கண சாத்திப்
பொருதாழி வாங்கினதும் பொய்யோ?-பெருமாள்
திருநாம மென்று நெற்றி தீட்டியதும் கச்சி
ஒருமா விலக்கமல்ல வோ? (154)

"திரிபுர தகன காலத்திலே எருதாக உரிக்கொண்டு பெருமானைச் சுமந்து போனான்; சிவபெருமானைப் போற்றித்தன் கண்மலரையே திருவடிக்குக் காணிக்கைப் பொருளாக்கி அருச்சித்துப் போரிடுதற்குரிய சக்கரப்படையினையும் அந்நாளிலே வாங்கினான்; அத்திருமாலின் இச்செயல் எல்லாம் பொய்யோ? மேலும், உங்கள் பெருமாள் திருநாமம் என்று தன் நெற்றியிலே சாத்திக்கொண்டிருப்பது தான் என்ன? காஞ்சிபுரத்திலே ஒப்பற்ற மாவின் அடியிலே இருக்கும் சிவபெருமானைக் குறிக்கொண்டு விளங்கும், அவனுடைய திருப்பாதங்களே அல்லவோ?

'திருமால் ஒப்பற்ற சிவபக்தன்! என்று கூறுவதன் மூலம் சிவனுடைய சிறப்பைக் காட்டுகின்றனர் காளமேகம்.

கொங்கை வடு

சிவபெருமான் அருள் திருமேனியினை உடையவன் என்றாலும், அம்மையின் கொங்கைவடுக்கள் மட்டும் அவன் திருமேனியிலே ஒரு போதும் மறையாமலேயே விளங்கும் என்கிறார் காளமேகம். அரிய கற்பனைச் சுவை விளங்கும் சிறந்த பாடல் இது.


ஆறா தொருக்காலு மையாமே கம்பருக்கு
மாறா வடுவாய் மறையாதே-பேறாகச்
செங்கையினா லேயழுத்திச் செய்யகச்சிக் காமாட்சி
கொங்கையி னாலிட்ட குறி. (155)

"ஐயா! தான் பெற்ற பெரும்பேறாகக் கருதிச் செவ்விய தன்மையுடைய காஞ்சிக் காமாட்சியம்மையானவள், தன் செங்கையினாலே இறுக அழுத்தித் தழுவித் தன் கொங்கைகளினாலே இட்ட அடையாளமாகிய வடுவானது, ஒரு போதுமே நின் திருமேனியை விட்டு மறையவே மாட்டாது. என்றும் மாறாத வடுவாக அது நின்பால் விளங்கிக்கொண்டிருக்கும்.

சிவனே அனைத்துக்கும் முதலாகிய பெருமான் எனினும் அவன் அன்பர்க்கு அருளுகின்ற பெருங்கருணையும் உடையவன். அந்தக் கருணை வெள்ளத்தினாலேயே அம்மையின் கொங்கை வடுக்களை அவன் தன் திருமேனியிற் கொண்டிருக்கிறான் என்று அறிதல் வேண்டும். இதனால், பெருமானின் அருளும், அம்மையின் காதற்பெருக்கமும் கூறியதாயிற்று.

ஞான குரு!

அடியவர்கட்குத் தானே ஞானகுருவாக வந்து மெய்ப் பொருளை உபதேசித்துக் கடைத்தேற்றும் பெருமான் கச்சி ஏகாம்பரநாதனே! அவனுக்கு அந்த ஞானத்தை எவர் போதித்தனர்? அதனைப் பற்றிக் கூறும் செய்யுள் இது.


எவர்தமக்கும் ஞானகுரு வேகாம்ப ரேசர்
அவர்தமக்கு ஞானகுரு வாரோ-உவரியனை
கட்டினான் பார்த்திருக்கக் காதலவன் றன்றலையிற்
குட்டினான் தானே குரு. (156)

"எத்தகையோருக்கும் ஞானகுருவாக உபதேசித்து அருள் செய்கின்ற பெருமான் கச்சி ஏகாம்பரநாதனே. அந்தப் பெருமானுக்கு ஞானகுருவாக இருந்து அதனை உபதேசித்தவர் யார்? கடலுக்கு அணை கட்டியவனான திருமால் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரத்திலேயே, அவனுடைய மகனான பிரமனின் தலையிலே குட்டினானே அந்தச் சிவகுமரன்தான் அவனுக்கு ஞானகுருவாக இருந்து உபதேசித்த பெருமான்.

பிரணவப் பொருளை அறியாத பிரமனைத் தலையிலே குட்டிக் கந்தமாதனக் குகையிலே அடைத்து வைத்தவன் குமரப் பெருமான். பின்னர் தேவரும் மூவரும் வேண்ட அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை விடுவித்த பெருமான், தன் தந்தையின் வேண்டுதலின்படி அவருக்குப் பிரணவப் பொருளை உரைத்தனன். அந்தக் குமரகுருபரனின் செயலையே காளமேகம் இப்படிக் கூறுகின்றனர். இதனாற் சிவபெருமானின் கருணை வெள்ளத்து மிகுதியையும் உரைத்தனர்.

புன்னீர் கேளா!

திருவண்ணாமலைத் திருக்கோயிலிலே சுவாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார் காளமேகம். அவருடைய கவனம் சந்நிதிக்கு முன்னால் விளங்கும் நந்திப் பெருமானின் மேற்சென்றது. 'புல்லும் தண்ணிரும் கேளாதே கல்லுருவாக விளங்கும் நந்தீசர்' என்று பாடுகிறார் கவிஞர்.


நடக்கவறி யாதுகா னாலு முடக்கிக்
கிடக்கவறி யும்புன்னீர் கேளா-விடக்கை
யரைப் பணியார் சோகிரி யத்தனா ரோட்டில்
இரப்புணியா ரேறும் எருது. (157)

"நஞ்சினைக் கையிலே எடுத்து அந்நாளிலே உண்ட சிவபெருமான், பாம்பாரபணத்தையும் அணிந்த பரமன், சோணசைலத்தே அனைவருக்கும் அப்பனாகவும் விளங்கும் இறைவன், அவன் தலையோட்டிலே பிச்சையேற்று உண்கின்றவனும் ஆவான். அதனாற்போலும் அவன் ஊர்கின்ற எருதானது, நடக்க அறியாததாகி, நான்கு கால்களையும் முடக்கிக்கொண்டு கிடப்பதற்கு மட்டுமே அறிந்ததாயிருக்கின்றது! அஃதன்றிப் புல்லும் தண்ணீரும் கேட்பதற்கும் அஃது அறியாது கிடக்கின்றது."

'அவனே ஓட்டில் இரந்து உண்கிறவன்; அவன் ஏறும் எருதுக்கு, எங்கே புல்லும் தண்ணிரும் தரப்போகிறான். அதனால், அதுவும் அவற்றைக் கேட்பதற்கும் அறியாததாகிக் கிடக்கிறது போலும்' என்கின்றனர்.

கும்பகோணத்தான்

சிவபிரான் ஒளிப்பிழம்பாக நின்ற காலத்துத் திருமால் அடிதேடிச் சென்று காணாது அயர்வுடனே திரும்பினான். அந்த நிகழ்ச்சியை நினைவிற்கொண்டு, கும்பகோணத்து இறைவனை இப்படி போற்றுகின்றார் கவிஞர்.


அம்பாகி னான் பாத மன்றுபிடித் தாயவற்குன்
செம்பாதங் காட்டாத் திறமென்னோ - உம்பர்தொழும்
நம்பகோ ணத்தானே நாகச் சிலைவளைந்த
கும்பகோ ணத்தானே கூறு. (158)

"திரிபுர தகன காலத்திலே மகா விஷ்ணுவே நினக்கு அம்பாகினான். அப்படி அம்பாகியவனின் பாதத்தை அன்று கையாற் பிடித்து எய்தவன் நீயே யாவாய்! அப்படி நின்னால் அன்று பாதம் பிடிக்கப்பட்ட அவனுக்குப் பின்னர் நீ நின்னுடைய சிவந்த பாதமலர்களைக் காட்டியருளாத நின் தன்மைதான் என்னவோ? தேவர்களும் தொழுது போற்றுகின்ற முடிவான பொருளாக விளங்கும் பெருமானே! மேருமலையாகிய வில்லினை அன்று வளைத்த, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமானே! நின், அந்தத் தன்மையினை எனக்கு விளங்கக் கூறுவாயாக."

அன்று திருமாலின் காலைப் பிடித்த நீ, அவன் நின் காலைப் பிடிக்கத் தேடியும், அவனுக்குக் காட்டா திருந்தனையோ? இதுதான் நியாயமோ? என்கிறார் கவிஞர்.

ஏனோ தலையிறைஞ்சினீர்!

திருவிரிஞ்சி நகருக்கு இறைவனான சிவபெருமானைப் போற்றியது இது. பெருமான் தலைகவிழ்ந்தவராயிருப்பது பற்றிக் கவிஞர் அவரை இவ்வாறு வினவுகிறார். தலை கவிழ்வது அவமானத்தினாலேதான் என்பவர். 'அது எனதால் வந்துற்றது?' எனவும் கேட்கிறார்.


வேண்டிய சைவனார் விட்டதூ துக்கோமுன்
பாண்டியனார் கையிலடி பட்டதற்கோ-ஆண்டவரே

வானோர் புகழ்விரிஞ்சை மார்க்க சகாயரே
ஏனோ தலையிறைஞ்சி னீர்.

(159)

"எனை ஆண்டுகொண்ட பெருமானே! தேவர்களும் வந்து போற்றும் திருவிரிஞ்சை நகரிலே கோயில் கொண்டிருக்கும் மார்க்க சகாயனே! உமக்கு வேண்டிய சைவரான சுந்தரர் அனுப்பிவைத்த தூதுக்காகவோ? அன்றி முன்காலத்திலே பாண்டியனின் கைப்பிரம்பினால் அடிப்பட்டதற்காகவோ? அன்றி வேறு எதனாலோ, நீர் இப்படித் தலை கவிழ்ந்து இருக்கின்றீர்!"

யாரோ இவர்?

திருவீரட்டானத்திலே கோயில்கொண்டிருக்கிற சிவ பெருமானைப் பணிந்து போற்றி நிற்கும் காளமேகப் புலவருக்கு, பெருமானின் ஆற்றல்கள் அனைத்தும் நினைவில் எழுகின்றன, அவற்றை இவ்வாறு பாடுகின்றனர்.


இவரோவீ ரட்ட ரெனுநாம முள்ளோர்
இவரோ வழுவூரி லிசர்-இவரோ
கடத்தடக்க தத்துறப்பி டித்திழுத்து
தழுத்தி அடித்தறுத்து ரித்துடுத்த வர். (160)

வீரட்டானர் என்ற திருப்பெயரினை உடையவரும் இவர்தானோ? இவர் தானோ திருவழுவூரிலே கோயில் கொண்டிருக்கும் ஈசரும்? மும்மதங்களை உடையதும், மிக்க சினமுடையதுமான யானையினைப் பற்றிப் பிடித்து இழுத்து அழுத்தி, அடித்துக்கொன்று, அதனை அறுத்து, அதன் தோலையுரித்து உடுத்த ஆற்றலுடையவரும் இவர் தானோ?"

நஞ்சு தின்றதென்?

தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடிப் பாற்கடலைக் கடைந்தனர். அந்த நாளிலே எளுந்த நஞ்சினைச் சிவ பெருமான் உண்டு அவர்களைக் காத்தனர். அதனைக் குறிப்பிட்டு, 'அவர் தன் உயிரை விட்டுவிடுவதற்குக் கருதிப் போலும் அங்ஙணம் நஞ்சினை அருந்தினர்?' என்று பாடுகின்றார் கவிஞர் காளமேகம்.


கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லா லடித்ததற்கோ வெட்கினீர்-சொல்வீரால்
மஞ்சுதனைச் சூடுமுயர் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றறென்முன் னாள். (161)

"சாக்கியன் உம்மைக் கல்லால் அடித்தானே அதற்காகவோ? கண்ணப்பன் உம்மைக் காலால் உதைத்தானே அதற்காகவோ? அருச்சுனன் உம்மை வில்லால் அடித்தானே அதற்காகவோ? எதற்காகவோ நீர் வெட்கமுற்றீர்? மேகங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க விளங்கும் உயரமான திருமதிலினை உடைய திருவானைக்காவிலே சிவபெருமானே! நீர் முன் காலத்திலே நஞ்சுதனைத் தின்றீரே அது எதனால் என்பதனை எனக்குச் சொல்வீராக."

உலக வாழ்விலே வெறுப்பு ஏற்படும்போது, ஒருவர் நஞ்சினை உண்டு உயிரை விட்டுவிட முயல்வது இயல்பு, அதனை மனத்துட்கொண்டு, பெருமான் நஞ்சுண்ட செயலுக்கும் இப்படிக் காரணங்களைக் கற்பிக்கிறார் கவிஞர்.

மழபாடியார்!

திருமழபாடி என்னும் திருநகரிலே கோயில் கொண்டிருக்கிற சிவபெருமானைத் தரிசிக்கச்சென்றபோது, கவிஞர் பாடியது இது. 'பெயர்தான் அவருக்கு வயித்தியநாதர்! அவருடைய நோய்களையே அவரால் தீர்க்கமுடியவில்லை? அவரெங்கே பிறருடைய நோய்களைத் தீர்க்கப்போகிறார்? என்று அவரை நிந்திப்பதாக அமைந்தது இச்செய்யுள்.


வலியமழ பாடி வயித்தியநா தர்க்குத்
தலைவலியாம் நீரேற்றந் தானாம்-குலைவலியாம்
கையோடு சூலையாம் கால்வாத மாங்கண்மேல்
ஐயோ வெழுஞாயி றாம். (162)

"மழபாடியிலே கோயில் கொண்டிருக்கிறார் வல்லமையுடைய வயித்தியநாதர். அவருக்குத் தலைவலியாம்; நீரேற்றமாம்; குலைவலியாம்; கால்வாதமாம்; கண்மேல் எழுஞாயிறாம்; இத்தகைய அவரெங்கே பிறரைக் குணப்படுத்தப் போகிறார்.

"தலை" வலிமைகொண்ட சடைக்கற்றையாம்; தலை மேல் கங்கையாகிய நீர் உயர்வு பெற்றிருக்கிறதாம், அனைத்தையும் அழியச் செய்யும் ஆற்றல் உடையவரும் அவராம்; கையிலே அவருக்குத் திருவோடாம்; சூலம் ஏந்தியவரும் அவராம்; அவரது கண்களோ எழுகின்ற ஞாயிற்றைப்போல நெருப்புப் பிழம்புகளாக விளங்குகின்றனவாம். இப்படிப் பெருமானைப் போற்றுவதாகவும் உரைகொள்க.

அழகரென்றார் யார்?

"அழகர் கோயிலிலே விளங்கும் பிரானுக்குச் 'சோலை மலை அழகர்' என்றும் ஒரு பெயருண்டு. 'அவரை அழகரென்று எவ்வாறு சொல்ல முடியும்? அவருக்கு அப்படிப் பேரிட்ட அறியாமை உடையவர் யார்?" இப்படிக் கேட்கிறார் கவிஞர்.


மீனமுக மாமைமுக மேதினியெ லாமிடந்த
ஏனமுகஞ் சிங்கமுகம் என்னாமல்-ஞானப்
பழகரென்றுஞ் சோலைமலைப் பண்பரென்று மும்மை
அழகரென்றும் பேரிட்டார் யார்? (163)

"மீனமுகம், ஆமைமுகம், உவகமெல்லாம் தோண்டிப் பறித்த பன்றிமுகம், சிங்கமுகம், என்றிப்படி எல்லாம் சொல்லாமல், அறிவின் கனிவைக் கொண்டவரென்றும், சோலைமலையிடத்து வாழும் பண்பாளரென்றும், அழகிய திருமேனியினை உடையவரென்றும் உம்மைப்பேரிட்டு அழைத்தவர்தாம் யாவரோ?"

திருமாலின் மச்சாவதாரம் வராகவதாரம், கூர்மாவதாரம், நரசிம்மாவதாரம் ஆகியவற்றைக் குறித்து, அவரை அப்படி அழையாமல், ஏணிப்படி அழகர் என்றனர்? என்று வினவுகிறார் கவிஞர்.

வீதி வரக் கண்டு!

இராமபிரான் மிகவும் அழகன், பூமியிடத்தே இருந்து தோன்றியவளான சீதையின் கணவன்; அவன் திருவீதியிலே பவனி வருகின்றான்! அவன் அழகிலே மயங்கினாள் ஒரு பெண். தன் அரையிடத்து ஆடையும் நெகிழ்ந்து காலில் விழ, அவள் தன்னை மறந்து. அவனையே காமுற்று நிற்கிறாள். இப்படிக் கற்பித்துப் பாடுகிறார் காளமேகம்.


ஓரொருமா வொன்றுமா வொன்பதுமா வின்கலையை
ஈரொருமா மும்மாவுக் கீந்ததே-பாரறியப்
பொன்மானின் பின்போன பூமங்கை யாள்வாரைக்
கன்மாவின் வீதிவரக் கண்டு. (164)

'உலகமெல்லாம் அறியும்படியாகப் பொன்மானின் பின்னே சென்றவர் பூமங்கையான சீதையை ஆட்கொண்டவரான இராமபிரான், தன் புண்ணிய வசத்தினாலே அவர் திருவீதியிலே உலா வருதலைக் கண்டனள் ஒப்பற்ற ஒரு பெண்ணணங்கு. அவர்மேல் அவள் மையலும் கொண்டனள். அந்தக் காட்சி அவளுடைய காலுக்கு அளித்து விட்டதே? என்ன கொடுமை இது.

ஓரொருமா ஒப்பற்ற ஒரு திருமகள் போல்வாள். ஒன்றுமா ஒன்பதுமா-பத்துமா, அரை. ஈரொருமா-மும்மா-ஐந்துமா-கால். பொன் மான் - மாயமான், சீதையின் விருப்பத்தை நிறைவேற்ற இராமபிரான் துரத்திச்சென்றது.

என்ன பலன்?

ஒன்றைச் செய்தால், செய்தவர்க்கு ஏதாவது அதனாற் பலன் இருக்க வேண்டும் பலனில்லாமல் ஒரு செயலைச் செய்பவர்களை உலகம் என்றும் மதியாது. இந்த உலக உண்மையைச் சிவபெருமான் மீதும் ஏற்றித் திருவிருத்திநாதரைப் போற்றுகின்றார் காளமேகம்.



திருவிருத்தி நாதர் திருவளியா தென்னைக்
கருவிருத்தி யென்னபலன் கண்டார்-எருதுபோய்க்
கோட்டிபத்தி லேறினரோ கோவணம்போய்ப்
பட்டாச்சோ
ஓட்டிலிரந் துண்டதும்போச் சோ? (165)

"திருவிருத்திநாதர் தம்முடைய திருவடிப்பேறாகிய செல்வத்தினைத் தந்தருளாமல், என்னைக் கருக்குழியிலே இருத்தியதனாலே என்ன பலனைக் கண்டுவிட்டார்? தம்முடைய எருதைக் கைவிட்டுக் கொம்புகளையுடைய யானையின் மேலே அவர் ஏறிவிட்டாரோ அல்லது, அவருடைய கோவணம் - போய் உடுத்துவதும் பட்டாக அவருக்கு உயர்ந்ததோ? அல்லது, ஓட்டிலே இரந்து உண்ணுகின்ற தன்மையாவது அவருக்கு இல்லாமற் போயிற்றோ? எதுவும் இல்லையே! இருந்தும் என்னைக் கருவிருத்தி அவர் கண்ட பலன்தான் என்னவோ?

தம்மைக் கருக்குழியில் தள்ளியதற்கு வருந்தி, இப்படிப் பாடுகின்றார் கவிஞர். இதனால் தம் பிறவியினை அறுத்தருளப் பெருமானை வேண்டினரும் ஆம்.

பெண்கள் பெருமை

கடவுளரும் பெண் மாயையினை விட்டவர்களில்லை. அவர்கள் தம்முடனேயே, தம் உடலுடனேயே தத்தம் நாயகியரைக் கொண்டு சுமக்கின்றனர். இப்படிக் கடைமொழி மாற்றாகச் செய்த செய்யுள் இது. 'உலகு உண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன்' என்பதை முதலிற் கொண்டு பொருத்திப் பொருள் காண வேண்டும்.


இந்திரையை மார்பில் வைத்தான் ஈசன் உமையையிடத்
தந்தி பகலழைத்தான் அம்புயத்தோன்-கந்தமிகு
வெண்டா மரைமயிலை வேண்டிவைத்தா னாவிலுல
குண்டுமிழ்ந்த தாமரைக்கண் ணோன். (166)

"உலகினை எடுத்து விழுங்கி மீளவும் உமிழ்ந்த செந்தாமரைக் கண்ணனான திருமால், இந்திரையாகிய திருமகளைத் தன் மார்பிடத்தே வைத்துக் கொண்டான். ஈசனான சிவபிரானோ, உமையைத் தன் இடப்பாகத்திலேயே இரவு பகலாகக் கொண்டிருக்கின்றான். தாமரை வாசனாகிய பிரம தேவனோ, வெண்டாமரையிலே வீற்றிருப்பவளாகிய கலைவாணியைத் தன் நாவிலேயே கொண்டிருக்கிறான்."

"முத் தேவர்களின் நிலையே இப்படியானால், மனிதர்கள் பெண்களைப் போற்றுவதும், அவரைத் தாம் அடையுமாறு காமுற்றுத் திரிவதும் தவறாகுமோ?" இவ்வாறு, ஆண்களின் காமநோய்க்கு ஒரு சமாதானமும் கூறுகிறார் கவிஞர்.

வாகனங்கள்

பிரமதேவன், திருமால், சங்கரர், இந்திரன், குபேரன் ஆகியோரின் வாகனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியச் செய்யுள் இது. கடைமொழி மாற்று என்னும் வகையைச் சார்ந்தது. 'விதிக்காம்' என்பதனை முதலிற் கொண்டு பொருத்தி உரை காணவேண்டும்.


அன்னம் திருமாலுக் காங்கருடன் சங்கரற்காம்
பன்னிடப மிந்திரற்காம் பார்க்குங்கால்-துன்னு
மதவா ரணமளகை மன்னனுக்காம் பஞ்ச
கதிசேர் புரவிவிதிக் காம். (167)

"பிரமனுக்கு அன்னம் வாகனமாகும்; திருமாலுக்குக் கருடன் வாகனமாகும்; சங்கரற்குப் புகழ்மிக்க எருது வாகனமாகும்; சொல்லுமிடத்து, இந்திரனுக்கு மதம் நிறைந்த வெள்ளையானை வாகனமாகும் அளகாபுரி மன்னனாகிய குபேரனுக்குப் பஞ்சகதியும் பொருந்திய குதிரை வாகனமாகும்"

விதி - பிரமன், அளகை மன்னன் - குபேரன்; இவன் வாகனங்களுள் ஒன்று குதிரை. பஞ்சகதி சேர் புரவி' என்றதனால், ஐந்து புலன்களின் ஒட்டத்தையுடைய புருஷவாகனத்தைக் குறித்ததாகவும் கொள்வர்.

ஆயிரம் வேணும்

சிதம்பரத்துப் பொன்னம்பலத்திலே நடனஞ் செய்கின்ற கூத்தப்பிரானைக் கண்டு போற்றுகிறார் காளமேகப் புலவர். பெருமானின் கழல் விளங்கும் திருப்பாதங்களிலே தம்மை மறக்கின்றார் அவர்! பெருமானை இவ்வண்ணமாக யாசிக்கவும் செய்கின்றார்.


காணத் தொழப்புகழக் கண்ணுங்கை யும்வாயும்
சேணிந் திரவாணன் சேடன்போல்-வேணும்
பனகசய னத்துறைவோன் பாரிடந்துங் காணாக்
கனகசபை யிற்றண்டைக் கால். (168)

"பாம்பணையிலே பள்ளிகொள்வோனாகிய திருமால், பூமியைத் தோண்டிக் கூர்மமாகிச் சென்றும் அந்நாளிற் காணவியலாததாக விளங்கியதும், பொன்னம்பலத்திலேயான் இன்று காணப் பேறுபெற்றமாகிய கழல் விளங்கும் நின் திருவடிகளைக் காணவும் தொழவும் போற்றவும், கண்ணும் கையும் நாவும், இந்திரனைப் போலவும் வருணனைப் போலவும் ஆதிசேடனைப் போலவும், ஆயிரமாயிரங்களாக எனக்குத் தந்து அருளவேண்டும், பெருமானே!

பாண்டித் தலங்கள்

பாண்டியநாட்டுச் சிவத்தலங்கள் எவையெனக் கூறுகின்ற செய்யுள் இது.


கூடல் புனவாயில் குற்றால மாப்பனூர்
ஏடகநெல் வேலி யிராமேசம்-ஆடானை
தென்பரங்குன் றஞ்சுழியல் தென்றிருப்புத் தூர்காசி
வன்கொடுங்குன் றம்பூ வணம். (169)

கூடல் - மதுரை; புனவாயில் - திருப்புன வாயில்; குற்றாலம் - திருக்குற்றாலம்; ஆப்பனூர்-திருவாப்பனூர்; ஏடகம்-திருவேடகம்; நெல்வேலி - திருநெல்வேலி; இராமேசம் - திருஇராமேச்சுரம்; ஆடானை - திரு ஆடானை, தென்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம், சுழியல்; திருச்சுழியல்; திருப்புத்தூர் - திருப்புத்தூர், தென்காசி - தென்காசி, வன்கொடுங்குன்றம் - திருக்கொடுங் குன்றம்; பூவணம் - திருப்பூவணம்; இவை யாவும் பாண்டிநாட்டுத் தலங்கள் ஆகும்.

சொல்லாட்சி மிகுந்தவர் செய்யும் கவிதைகள் எவ்வாறு சந்தச் செறிவும் பொருட்செறிவும் தம்முள் ஒருங்கே இணைந்து, செவிக்கும் உளத்துக்கும் இனிமை தருவனவாக அமைகின்றன என்பதற்கு இச்செய்யுள்கள் சான்றுகளாகும்.

கவியேறான காளமேகப் புலவரின் செய்யுள்கள் இவ்வகையிலே ஒப்பில்லாத செழுமை கொண்டவை. நினைந்து நினைந்து கவியின்பத் தேறலை நுகர்வாருக்கு நித்தமும் இனிமையும் அறிவு நலமும் தருபவை.

தெய்விகக் கவிதைகள் என்றதும் இதன் இத்தகைய சிறப்பினாலேதான். காலவெள்ளத்தைக் கடந்து என்றும் புதுப்பொருள் நயம் காட்டிக் காட்டிக் கற்பனைக் காட்சிகளைக் கவினுறப் படைக்கும் சொல்லோவியங்கள் இவை.