கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/இரு நாடுகளுக்கிடையே பெரும் போட்டிகள்

விக்கிமூலம் இலிருந்து

11. இரு நாடுகளுக்கிடையே பெரும் போட்டிகள் (Test Matches)

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் தான் கிரிக்கெட் ஆட்டம் அதிகமாக ஆடப்பெற்று வருகிறது. ஏறத்தாழ எட்டு நாடுகள்தான் இந்த ஆட்டத்தின் புகழ் பெற்ற நாடுகளாக விளங்குகின்றன.

இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா.

ஒவ்வொரு நாடும் தனது குழுவை, வேறொரு நாட்டிற்கு அனுப்பி, பல போட்டி ஆட்டங்களை ஆடச்செய்கின்ற முறையைத்தான் Test Match என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு நாடும் தனது ஆட்டக்காரர்களின் ஆடும் திறனை சோதித்துப் பார்த்து, எந்த நாட்டினர் சிறந்த அணியினர் என்று பார்த்து, பேசி பெருமைப் படுத்தவே இப்படி ஆடுகின்றனர் போலும்.

போட்டி மட்டும் முக்கியமல்ல, நாடுகளுக்கிடையே நடைபெறுகின்ற போட்டியானது, நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்கிறது என்பதே அடிப்படை நோக்கமாகும்.

இந்தியாவும் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் ஆடும் நாடாகத் திகழ்கின்றது. பெரும் சோதனைப் போட்டியில் பல நாடுகளுக்கிடையே போட்டியிட்டு பலமுறை வென்றும் இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டி ஆட்டமானது முதன் முதலாக இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் 1877ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்தப் போட்டி அந்த ஆண்டு மார்ச்சு மாதம் 15-17ந் தேதி வரை, அதாவது மூன்று நாட்கள் நடைபெற்றன. இதுவே முதல் டெஸ்ட் போட்டியாகும்.

டெஸ்ட் போட்டி ஆட்டம் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தப் பழக்கம் 1930ம் ஆண்டு வரை நீடித்தது. பிறகு போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றன. இது 1947ம் ஆண்டுவரை நீடித்தது. பின்னர் 1948ம் ஆண்டில், டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை ஆடலாம் என்று நாட்களை அதிகப்படுத்தினர். அதுவே இன்று வரை நின்று நிலவி வருகிறது.

இந்தியா முதன் முதலாக இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியை 1932ம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒவல் மைதானத்தில் ஆடியது.

இலங்கையுடன் முதல் போட்டியை டெல்லி நகரில் 1932-33ம் ஆண்டில் தொடங்கியது.

ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா 1947-48ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆடியது.

இந்தியா மேற்கிந்தியத் தீவினருடன் டெஸ்ட் போட்டியை, 1948-49ம் ஆண்டு இந்தியாவில் ஆடினர்.

இந்தியாவும் நியூசிலாந்தும் 1955-56ம் ஆண்டு தங்களது முதல் டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் ஆடினர்.

டெஸ்ட் போட்டியை முதன் முதலாக டெலிவிஷனில் காட்டி, இங்கிலாந்து நாடு பெரும் புகழை ஈட்டிக்கொண்டது.

இவ்வாறாக, இன்றைய நாளில் கிரிக்கெட் ஆட்டம், உலகப்புகழ்பெற்ற ஆட்டமாக, கோடிக்கணக்கான ரசிகப் பெருமக்களைத் தன்னகத்தே கொண்டு, கோலாகலமான குழ்நிலையில் வளர்ந்து வருகிறது. மக்களை மகிழ்வித்து வருகிறது.

இன்றைய 'வளர்ச்சியைப் பார்த்தால்', கிரிக்கெட் ஆட்டத்தின் தோற்றத்திற்குரிய ஓர் எண்ணம், கடவுளின் 'என்ணமே' என்று ஒரு ரசிகள் சொல்கிறார் என்றால்' அது உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது.