கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/பந்தும் பந்தெறி தவணையும்
3. பந்தும், பந்தெறி தவணையும் (Ball & Over)
கிரிக்கெட் ஆட்டமானது ஆரம்ப நாட்களில் கிராமப்புற மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு ஆட்டமாகத்தான் விளங்கி வந்தது. அப்பொழுது, இந்த ஆட்டத்திற்கென்று பந்து எதுவும் உருவாக்கப்படவில்லை.
உருண்டையான பொருள் அல்லது கோழி முட்டை வடிவமாக இருப்பதுபோல் உள்ள பொருள் எதுவாக இருந்தாலும், அதுவே ஆட்டத்திற்குரிய பந்தாக பயன்பட்டது என்று ஆரம்பகால வரலாறு கூறுகின்றது.
அதற்குப் பிறகு, சணல் அல்லது மயிர் நிறைக்கப் பெற்று தோலினால் தைக்கப்பட்டு செய்யப்பட்ட பந்துகள் தொடர்ந்து அந்நாட்களில் உதவி வந்தன.
கிரிக்கெட் பந்து உருவான நாட்களில், வெள்ளை நிறப் பந்தாகத்தான் அமைந்திருந்தது. அதுவுமின்றி, நீல நிறப் பந்துகளும் ஆட்டத்தில் பயன்பட்டு வந்தன. இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தைச் சேர்ந்த பென்ஷர் எனும் பகுதியைச் சேர்ந்த பிரபுக் குடும்பத்தினர், கிரிக்கெட் பந்து செய்தனர். ஏறத்தாழ அது 1561-ம் ஆண்டு என்று வரலாற்றுக் குறிப்பொன்று சுட்டிக் காட்டிச் செல்கின்றது.
நீல வண்ணப் பந்துகள் பெண்கள் ஆடும் கிரிக்கெட் ஆட்டத்திலும், வெள்ளை நிறப் பந்துகள் கிரிக்கெட் சங்கத்தினர் ஆடிய கிரிக்கெட் போட்டிகளிலும் இடம் பெற்று வந்தன. கிரிக்கெட் பந்தினை சிவப்பு வண்ணத்தில் தோய்த்துத் தயாரிக்கும் முறை முதன்முதலாக 1843-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
1744ம் ஆண்டில் அமைந்த கிரிக்கெட் ஆட்ட விதியின்படி, பந்தின் கனமானது 5லிருந்து 6 அவுன்சுக்குள்ளாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த 1774ம் ஆண்டின் விதிப்படி, பந்தின் கனம் சற்று எடை குறைக்கப்பட்டதாக மாற்றம் கொண்டது. அதாவது பந்தின் கனம் 5 1/2 லிருந்து 5 3/4 அவுன்சுக்குள்ளானதாகத்தான் அமைக்கப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த எடையே, தற்போதைய கிரிக்கெட் பந்தின் எடையாகவும் அமைந்துவிட்டிருக்கிறது. 1838ம் ஆண்டுக்கு முன்னதாக, அவரவர் விருப்பம்போல பந்தின் சுற்றளவு அமைக்கப்பட்டு வந்தது. அதற்கும் ஒரு அளவினை அமைத்து, பந்தின் சுற்றளவு 9 லிருந்து 9 1/2 அங்குலத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்தனர். அந்த அமைப்பு மாறி, தற்போதுள்ள 8 13/16 லிருந்து 9 அங்குலத்திற்குட்பட்டதாக சுற்றளவு மாற்றப்பட்டு விட்டது. தற்போதைய பந்தானது கார்க்காலும் முறுக்கு நூலாலும் அழுத்தமுடன் கட்டப்பட்டு, தோலினால் மூடப்பட்டு, இறுக்கமான முறையிலே தைக்கப்பெற்று, மின்னுகின்ற செவ்வண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. பந்தின் அமைப்பும் வண்ணமும் வடிவமும் மாறி வந்தது போலவே, பந்தெறி முறையும் தவணையும் (Over) மாறிமாறியே வந்திருக்கிறது. இது, ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள் கொண்டிருந்த ஆர்வத்தையும், ஆட்டத்தின் வளர்ச்சியையுமே குறிக்கிறது.
ஆங்கிலத்திலே Over எனும் சொல்லுக்கு ஆங்கில அகராதியில், மேலே, மேலும், அதிகமாய், மிஞ்ச, தாண்டி, மீது என்று பல பொருளில் அர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டத்தில் வரும் Over எனும் சொல்லுக்கு இப்பொருள்களில் எதுவும் ஏற்புடைத்தாக இல்லாமல் இருப்பதால், ஆட்ட முறைக்கேற்ப புதிய சொல் ஒன்றை உருவாக்க வேண்டி யிருந்தது. அதனால் இதற்கு 'பந்தெறி தவணை' என்று பெயர் தரப்பட்டிருக்கிறது. ஆட்டம் முழுவதும் (கொஞ்சங் கொஞ்சமாக) எண்ணிக்கை அளவில், பந்தெறியப்படுவதாலும் தவணை முறை என்பது வாழ்க்கை நடைமுறையில் இருப்பதாலும், 'தவணை' என்ற சொல்லையே இங்கு பயன்படுத்தி இருக்கிறேன்.
பந்தெறி தவணை (Over) கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றில் 1744ம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. கிரிக்கெட் ஆட்டத்திற்கான ஒரு புதிய மறுமலர்ச்சி மிகுந்த வடிவம் கொடுக்கத்தக்க வழிகள் அமைக்கப்பட்ட ஆண்டாக இது இருப்பதே காரணம். 1744ம் ஆண்டு விதியின்படி ஒரு பந்தெறி தவணைக்கு 4 முறை பந்தெறிவதற்கே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப காலத்தில் இவ்வாறு தொடங்கிய முறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இங்கிலாந்து நாட்டின் கிராமப்புற கிரிக்கெட் ஆட்டங்களில் ஒரு தவணையில் 6 முறை பந்தெறியும் பழக்கம் இருந்து வந்ததாகவும் அறியப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்காலப் பகுதியில், ஒரு பந்தெறி தவணைக்கு 5 பந்தெறிகள் அல்லது 6 பந்தெறிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. என்றாலும் எலலா ஆட்டக்காரர்களும் இதையே ஏற்று ஆடிக்கொண்டிருந்தனர். இந்த 5 அல்லது 6 பந்தெறி வாய்ப்பு முறை 1884-85ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதல் தர போட்டி ஆட்டங்களின் 6 முறை பந்தெறியும் ஆட்டமுறை இருந்து வந்தது என்றாலும், ஆஸ்திரேலியா 1918ம் ஆண்டு 8 முறை பந்தெறியும் வாய்ப்பினை அறிமுகப்படுத்திவிடத் தொடங்கி விட்டது. ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி இங்கிலாந்து ஆட முயற்சி செய்தது. ஆனால், இரண்டாம் உலகப் போர் வந்து அவர்கள் அதனைத் தொடரவிடாமல் செய்து விட்டது. காரணம் இங்கிலாந்து போரில் ஈடுபட்டிருக்கும்போது ஆட்டத்தின் நிலை எப்படி முன்னேறும்?
இதனால், இங்கிலாந்து மீண்டும் 6 முறை பந்தெறி வாய்ப்புமுறைக்கே சென்றுவிட்டது. 1920ம் ஆண்டிலிருந்தே 6 முறை பந்தெறியும் வாய்ப்புள்ள தவணை முறை ஆட்டமும் பின் பற்றப்பட்டு வந்தது என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது.
இருந்தாலும், ஆஸ்திரேலியாவும், நியுசிலாந்தும் 8 முறை பந்தெறியும் ஆட்டமுறையையே ஏற்றுக்கொண்டு விட்டன. இதை ஒட்டி 1947ம் ஆண்டு ஒரு புதிய விதி தோன்றியது. ஆடுகின்ற இரண்டு குழுக்களின் தலைவர்களும் கூடிப்பேசி, பந்தெறி தவணையில் உள்ள பந்தெறிகளின் எண்ணிக்கையை முடிவு செய்து கொள்ளலாம் என்பது தான் புதிய விதியாகும்.
1744ம் விதியின்படி, ஒரு பந்தெறியாளர் (Bowler) ஒரு முறை ஆட்டத்தில் (Inning) ஒரு முறைக்கு மேல் பக்கம் மாற்றிக் கொள்ளக்கூடாது. ஆனால், 1870ம் ஆண்டு, இரண்டு முறை மாற்றிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. பக்கம் மாற்றிக்கொள்ளும் முறையையே 1889-ம் ஆண்டிலிருந்து நீக்கியும் தொடர்ந்தாற்போல் இருபுறமிருந்தும் பந்தெறியும் உரிமையையும் அவ்விதி நீக்கிவிட்டது.
1838-ம் ஆண்டுவரை, ஒரு பந்தெறியாளர் இரண்டு முறை சோதனையாக எறிந்து பார்த்துக்கொள்ளலாம் (Trial or Practice Balls) என்று அமைக்கப்பட்டிருந்தது நீக்கப்பட்டது.
இவ்வாறு, பந்திலும் பந்தெறி தவணையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு தற்பொழுது ஆட்டம் சிறந்த மறுமலர்ச்சியைப் பெற்றிருக்கிறது.