கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/பந்தாடும் மட்டையின் பரிணாமம்

விக்கிமூலம் இலிருந்து

2. பந்தாடும் மட்டையின் பரிணாமம் (BAT)

கிரிக்கெட் ஆட்டம் திடீரென்று தோன்றிவிட்டதோர் ஆட்டமல்ல. கொஞ்சங் கொஞ்சமாக மலர்ந்து மக்களிடையே வளர்ந்து, மாறியே இந்த நிலையை அடைந்திருக்கிறது.

பந்தெறியாளரின் (Bowler) நோக்கமெல்லாம் பந்தெறிந்து விக்கெட்டினை வீழ்த்திடவேண்டும் என்பதுதான். பந்தடித்தாடுபவரின் (Batsman) முழுநோக்கமெல்லாம் பந்தெறியாளரின் நோக்கத்தை வீழ்த்தி, பந்தை அடித்து விரட்டி, "ஓட்டங்கள்" (Runs) எவ்வளவு முடியுமோ, அத்தனையையும் எடுத்துவிட வேண்டும் என்பது தான். அவ்வாறு எறிபவரை எதிர்த்து செயல்படும் என்பது தான். அவ்வாறு எறிபவரை எதிர்த்து செயல்படும் பந்தாடுபவர்களுக்கு உதவிடும் உற்ற சாதனமாக விளங்குவதுதான் இந்தப் பந்தாடும் மட்டையாகும்.

கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப காலத்தில் பந்தாடும் மட்டைக்கென்று எந்தவித வடிவமும் இல்லை. எந்தவித உருவமும் இல்லை. இப்படி அமைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை.ஆட விரும்பியவர்கள் தாங்கள் விரும்பியதற்கேற்றவாறு உருவாக்கிய மட்டைகளுடன் 'பிரசன்னமாகி' விளையாடிவிட்டுப் போய்விடுவார்கள் அவ்வளவுதான. ஏனென்று கேட்பாரில்லை.

தொடக்க நாட்களில், வளைகோல் பந்தாட்டத்தில் (Hockey) பயன்படுத்தப்படும் ஆடுகோலைப் (Stick) போலவே, கிரிக்கெட் மட்டையும் தலைப்புறத்தில் வளைந்து நீண்ட கைப்பிடி உள்ளதாக அமைந்திருந்தது.

பிறகு, மரத்தாலான கனத்த மட்டைகள் ஆட்டக்காரர்களின் தேவைக்கேற்ப செய்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டன. உயரத்திற்கும் அந்த கதிதான் இருந்தது, இந்த தான்தோன்றித்தனமான நிலைமையை தூக்கியெறியத்தக்கதான சூழ்நிலை ஒன்று 1771ம் ஆண்டு தோன்றியது. இங்கிலாந்தில், கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப நாட்களில், பந்தயம் கட்டிக்கொண்டு போட்டி நடத்தப் பெறுவது மிகவும் சகஜமான ஒன்றாகும். அதுபோல் 1771 ம் ஆண்டு, ஹேம்பிள்டன் என்ற குழுவிற்கும் சொட்சி என்ற குழுவிற்கும், ஒரு போட்டிப் பந்தயம் நடைபெற்றது. அதற்காக 1000 ரூபாய்க்கு மேல் பந்தயப் பணம் கட்டப்பட்டிருந்தது. செர்ட்சி குழுவைச் சேர்ந்தவர்கள் பந்தடித்தாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். அக்குழுவில் உள்ள தாமஸ் ஒய்ட் என்பவர் பந்தடித்தாடச் சென்றார். அவள் கொண்டு வந்திருந்த பந்தாடும் மட்டையோ, விக்கெட்டின் அகலம் எவ்வளவோ, அவ்வளவு அகலமானதாக அமைந்திருந்தது. விக்கெட்டின் முன்னால் அவர் பந்தாடும் மட்டையை வைத்துக் கொண்டு நின்று கொண்டாரேயானால், அந்த மட்டையைக் கடந்து, எறிகின்ற பந்து போகவே போகாது. தந்திரசாலியான தாமஸ் ஒய்ட் தயார் செய்து கொண்டு வந்த மட்டையைக் கண்டதும், ஹேம்பிள்டன் குழுவினர் கூச்சல் போடத் தொடங்கிவிட்டனர். கூச்சல் குழப்பமாகி, குழுவினரிடையே கொந்தளிப்பை உண்டு பண்ணியே விட்டது.

கூச்சல் குழப்பமாகி, குழுவினரிடையே கொந்தளிப்பும் ஏற்பட்டதால் பல பிரச்சனைகள் எழுந்தன. பிறகு, ஆங்கே சமாதானத்திற்கிடையே ஒரு புதிய விதி பிறந்தது. அதாவது பந்தாடும் மட்டையின் அகலமானது 4 1/4 அங்குலம் இருக்க வேண்டும். அதற்குமேல் இருக்கவே கூடாது. என்பதற்காக புதிய விதி பிறந்து, பந்தாடும் மட்டைக்கு புது வடிவம் கொடுத்தது இவ்வாறு 1771 ம் ஆண்டு 41/4 அங்குலமாக ஆக்கப்பட்ட மட்டையின் அளவே, இன்று வரை நீடித்து நிலவி வருகிறது. ஆனால், பந்தாடும் மட்டையின் உயரம் பற்றி யாருமே கவலைப்படவில்லை. 1835ம் ஆண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வார்விக் ஆர்ம்ஸ்ட்டார்ங் எனும் ஆட்டக்காரர் 38 அங்குல உயரமுள்ள ஒரு மட்டையுடன் விளையாட வந்தார். அவரது எடை 22 ஸ்டோன் ஆகும். அதாவது 308 பவுண்டாகும். அவர் கையில் உள்ள சிறிய பந்தாடும் மட்டையைப் பார்த்த எட்மண்ட் பிளன்டன் (Edmund Blunden) என்பவர் கேலியாகக் குறிப்பிட்டார்.

'ஆர்ம்ஸ்ட்ராங் கொண்டுவந்த பந்தாடும் மட்டையோ (தேநீர் கலக்கும்) 'டீஸ்பூன்' போல் இருக்கிறது. அவர் பந்தெறியும் விதமோ (டிகாஷன் இல்லாத) சாதா டீ போல இருக்கிறது என்பது தான். இது நடந்த ஆண்டு 1835 மட்டையின் அளவான 38 அங்குல உயரமே அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே மாறாமல் அமைந்து விட்டது. பந்தாடும் மட்டையின் உயரமும் அகலமும் மாறிவிட்டது. அதன் எடை பற்றிய எந்தவித முடிவுக்கும் யாரும் வரவில்லை. ஆட்டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு தான் வந்தது. 19ம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரராக விளங்கிய 'வில்லியம் வார்டு' என்பவர், ஆஸ்திரேலியா சிறந்த ஆட்டக்காரரான டான் பிராட்மென் என்பவரைப் போல வல்லவர். அவர் உபயோகித்த மட்டையின் எடை 4 பவுண்டு 2 அவுன்சுகளாகும். அதற்குப் பிறகு, மட்டை செய்யப் பயன்படுகின்ற மரமாக வில்லோ (Willow) என்பது தான் பலவிதப் பரிசோதனைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மட்டையின் அகலப்பகுதி வில்லோ மரத்தால் ஆனாலும், அதன் கைப்பிடி வேறு ஒரு பொருளால்தான் செய்யப்பட்டு வந்தது. 1853-ஆம் ஆண்டு நிக்சன் என்பவள் முதன் முதலாக பிரம்பினால் (Cane) முதல் முறையாக கைப்பிடியைத் தயார் செய்து தந்தார். அதுவே முதன் முதலாகவும் ஆடப்பட்டது. 1880-ம் ஆண்டு, அந்தக் கைப்பிடிக்கு ரப்பர் கவசம் (Rubber Handle) போடப்பட்டும் தயாரிக்கப்பட்டது.

இருநூறு ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து பல மாற்றங்களைப் பெற்று இன்று விளங்கும் பந்தாடும் மட்டையின் வளர்ச்சியை, கீழே காணும் படத்தில் நீங்கள் காணலாம்.

1. ஆரம்பகாலத்தில் பயன்பட்டது. (1750).

2. 18-ம் நூற்றாண்டில் பயன்பட்ட வளைந்த மட்டை.

3. 1793-ம் ஆண்டில் பயன்பட்டது.

4. E. பேகட் என்பவர் பெயர் பொறிக்கப்பட்டது.

5. ராபர்ட் ராபிசன் என்பவருடையது.

6. W.G. கிரேஸ் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. (1900)

7. டென்னிஸ் கிராம்ப்டன் உபயோகப்படுத்தியது.(1947)