கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/விக்கெட் வந்த வரலாறு

விக்கிமூலம் இலிருந்து
2. வளர்ச்சி வரலாறாகிறது!

கிரிக்கெட் ஆட்டத்தின் பொதுவான வளர்ச்சி பற்றியும், அவற்றிற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் பற்றியும் முதற்பாகத்தில் விரிவாக அறிந்து கொண்டோம்.

கிரிக்கெட் ஆட்டத்தின் ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு திறன் நுணுக்கமும் எவ்வெவ்வாறு, எந்தெந்த சூழ்நிலைகளில், எப்படி எப்படி எல்லாம் உருவாயின, வளாச்சி பெற்றன, விரிவடைந்தன, மேன்மை பெற்றன, மெருகேறின என்கின்ற குறிப்புகளையெல்லாம் இனிவரும் இரண்டாவது பகுதியில் உள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழும் நாம் காணலாம்.

1. கிரிக்கெட் வந்த வரலாறு

2. பந்தாடும் மட்டையின் பரிணாமம்.

3. பந்தும் பந்தெறி தவணையும்

4. காலுறையும் கையுறையும்

5. பந்தும் பந்தெறி முறையும்

6. எட்டாத பந்தெறி எப்படி வந்தது?

7. விக்கெட்டின் முன்னே கால்

8. பந்தாடும் தரையும் நிலையும்

9. ஆட்டமும் தொடக்கமும்

10. அடித்தாடும் எல்லைக்கோடு

11. ஓட்டத்தைக் குறித்த முறைகள்

1. விக்கெட் வந்த வரலாறு (WICKET)

நான்கைந்து நாட்களாக இருந்தாலும், வெயில், மழை பனி, குளிர் என்று இயற்கை சூழ்நிலை எவ்வாறு திரிந்தாலும், எல்லாவற்றையும் பொருட்படுத்தாது, எந்த நிலையிலும் உற்சாகம் குறையாது, பார்த்து ரசித்து மகிழும் லட்சோபலட்சம் பார்வையாளர்களைத் தன்னகத்தே கொண்டு புகழ்பெற்று விளங்குவது கிரிக்கெட் ஆட்டமாகும்.

குறிக்கம்பமாகத் தோன்றிய கிரிக்கெட் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதைத்தான் முதல் பக்கத்தில் உள்ள படம் விளக்குகிறது.

கிரிக்கெட் ஆட்டத்தில் கீள்த்தி மிக்கப் பொருளாக விளங்குவது விக்கெட் ஆகும். கிரிக்கெட் ஆட்டத்தின் நோக்கமே, எதிராட்டக்காரர் காத்து நின்று விளையாடுகின்ற விக்கெட்டை, எப்படியும் வீழ்த்தி, ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் (Out) செய்துவிட வேண்டும் என்பது தான்.

இத்தகைய குறிக்கோளுக்கு இலக்காக நிற்கும் விக்கெட் வளர்ந்த விதமே, வேடிக்கையாகத் தான் அமைந்திருக்கிறது. ஆரம்பக்காலத்தில், விக்கெட் என்பதே கிடையாது. ஆட்டக்காரர்கள், இரண்டு வட்டமான குழிகளைத் தோண்டிக் கொண்டு ஆடினார்கள். குழிக்கு முன்னால் 46 அங்குலத்தில் ஒரு எல்லைக்கோடு (Crease) இருக்கும். அடித்தாடுபவர் (Batter) அந்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் நிற்கும் போது பந்தை உருட்டிக் குழியில் விட்டுவிட்டால், ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார். அந்தக் குழிகள்தான் ஆரம்ப விக்கெட்டாகும். பந்தை அடிப்பதில், அதிக லாவகமும் குறியும் வந்து விட்டதாலே, பந்தும் அடிபட்டு அதிக தூரம் சென்றது. பந்தெடுக்க ஒடும் ஆட்டக்காரர்களுக்கு, தூரத்தில் இருந்து பார்த்த போது, குழிகள் கண்ணுக்கு தெரியாது போனதால் பந்தைக் குறிபார்த்து எறியமுடியவில்லை என்றதோர் குறை இருந்ததால், குழி தெரிவதற்காக அதிலே ஒரு குச்சியை ஊன்ற முதலில் முடிவு செய்தனர். இப்போது, அந்தக் கம்பினைக் குறிபார்த்து அடித்துவிட்டால், (அவர் எல்லைக்கு வெளியே இருந்தாலும்) அடித்தாடும் ஆட்டக்காரர் ஆட்டமிழந்து போய்விடுவார். காலம் இப்படியே இருக்கவில்லை. ஆட்டக்காரர்கள் மனமும் அமைதியடைந்து விடவில்லை. பந்தும் அடித்தாடுபவர்களால் அதிக தூரத்திற்குச் செலுத்தப்பட்டபோது, ஒரு கம்பு இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. குறிபார்த்து அடிக்க ஒற்றைக் கம்பு உதவவும் இல்லை. எனவே, இன்னொரு கம்பு அதனுடைய இணையாகத் தேவைப்பட்டது. 1700 ஆம் ஆண்டு, இரண்டாவது குறிக்கம்பு (Stump) ஊன்றப்பட்டது. அந்த இரண்டு கம்புகளுக்கும் இடைவெளி 2 அடியாக வைக்கப்பட்டது. கம்புகளின் உயரம் 1 அடி இருந்தது. அதன் தலைப்பாகத்தில் ஒரு குறுக்குக் குச்சியை வைத்து விட்டனர். அப்பொழுது அதன் அமைப்பு இப்படி 'n' இருந்தது. ஏறத்தாழ 75 ஆண்டுகள் இரண்டு கம்புகள் இருக்கும் விக்கெட்டே தொடர்ந்து இருந்து வந்தது. அந்நாட்களில் எந்தவிதமானப் பிரச்சினையும் எழவில்லை. 1775ம் ஆண்டு ஆர்ட்டிலரி மைதானத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில்தான் புதிய பிரச்சினை ஒன்று தோன்றியது. அதுவும் இங்கிலாந்தில்தான். ஸ்மால் (Small) என்பவர் பந்தடித்தாடும் ஆட்டக்காரர் (Batsman), லம்பி (Lumpy) என்பவர் அப்பொழுது பந்தெறியாளர் (Bowler). லம்பி எறிந்த பந்தானது ஸ்மால் தடுத்தாடும் மட்டையில் படாமல், ஊன்றியுள்ள விக்கெட் கம்புகளையும் தொடாமல் , இடையேயிருந்து இடைவெளிக்குள்ளே போய்க்கொண்டிருந்தது. போனது ஒரு முறையல்ல. பல முறை பந்தானது படாமல் போனதால் பிரச்சினை மிகுந்தது. இவ்வளவு தூரம் இடைவெளி இருப்பதால்தானே, பந்தால் கம்புகளைத் தொட்டு வீழ்த்த முடியவில்லை என்பதால், இரண்டுக்கும் இடையில் மூன்றாவது ஒரு கம்பை ஊன்றி விட்டால், இடைவெளியையும் மூடலாம். விக்கெட்டும் முழுமை பெறும் என்று முடிவு கட்டிவிட்டனர். மூன்றாவது கம்பு வருவதற்கு முன்னே, இந்த இலக்குக்கு விக்கெட் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதையும் சற்று காண்போம். 'விக்கெட்' (Wicket) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, கதவினுள் கதவு அதாவது சிறு கதவு என்பதாகும். அதாவது பெரிய கதவு இருக்கும்போது, அதை அடிக்கடி திறக்கக்கூடாது என்பதற்காக, கதவில் ஒரு சிறிய நுழைவாயில் ஒன்றை அமைத்து அதனை பயன்படுத்துவார்கள். அந்த சிறு கதவுக்கே 'விக்கெட்' என்பது பெயராகும். இந்த இரண்டு குறிக்கம்பு அமைப்பும் சிறு கதவு போலவே அமைத்து விட்டிருந்தால், விக்கெட் என்றே அக்கால ஆட்டக்காரர்களால் அழைக்கப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் இங்கிலாந்து முழுமையும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக விக்கெட்டை வைத்துக் கொண்டு ஆடவில்லை. வசதியுள்ளவர்கள், வசதி இல்லாதவர்கள் எல்லோரும், தங்களால் எந்த எந்தப் பொருட்களைக் கொண்டு உருவாக்க முடியுமோ அவற்றையே விக்கெட்டாக அமைத்துக் கொண்டு ஆடினார்கள். மூங்கில் குச்சிகளால் ஆன தட்டிகள் (Hurdle): கதவு (Gate): பின்புறம் சாய்ந்திட வசதியில்லாத ஆசன இருக்கை அதாவது முக்காலி (Stool): மரம் மற்றும் உயரமான கல் இவைகளே விக்கெட்டுகளாக அந்நாட்களில் ஆடுவோருக்குப் பயன்பட்டன. 1775ம் ஆண்டின் நிகழ்ச்சிக்குப் பிறகு, 3 குறிக் கம்புகள் ஊன்றப்பட்டு விக்கெட்டாக வடிவம் பெற்றது. மூன்று விக்கெட் கம்புகளையும் இணைக்க ஒரே ஒரு இணைப்பான் Bail மட்டுமே பயன்படுத்தப் பட்டது. மூன்று கம்புகளை இணைக்கும் மேல் உள்ள குச் சிக்கு Bail என்று பெயர் வந்ததும் ஒரு காரணத்தோடு தான். சரிமட்டமாக உள்ள பலகைச் சட்டமானத்தை (Horizontal Rail) ஆங்கிலத்தில் Bail என்று கூறுவார்கள். இந்த நீண்ட மரச்சட்டமானது, ஆட்டு மந்தைகளை உள்ளே அடைத்து வைத்திருக்கின்ற தொழுவத்தின் (Sheep Pens) சிறிய கதவுகளை, மேற்புறத்தில் இணைத்து வைத்து உதவுகின்ற தன்மையில் அமைந்தவையாகும். அதாவது, சிறிய கதவு அடிக்கடி திறந்து கொள்ளாமல், இறுக்கமாக மேற்புறத்தில் அடித்தாற்போல் சேர்த்து வைக்க உதவுகின்ற வகையில் அமைந்ததாகும். அதுபோலவே, தரையில் ஊன்றி வைக்கப்படும் இரண்டு அல்லது மூன்று குறிக்கம்புகள் ஒன்றாக விழாமல் இணைந்து நிற்கவும், சேர்ந்தாற்போல் ஒரு தோற்றத்தை அளிக்கவும் உதவிய அமைப்பினாலே, இது Bail என்ற பெயரையே பெற்றுவிட்டது. நாம் தமிழில் இதனை 'இணைப்பான்' என்று கூறுகிறோம். விக்கெட்டுக்குரிய மூன்று கம்புகளையும் இது இணைத்திருக்கும் தன்மையாலேயே இணைப்பான் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. ஆரம்ப நாட்களில் தரையில் ஊன்றிய இரு கம்புகளுக்கு மேலே ஒரு கம்பாக (Stick) வைக்கப்பட்டது. அதற்குப் பிறகே, அது குச்சியின் நீண்ட வடிவத்திலிருந்து குறுகிய வடிவம் பெற்றது. 1785ம் ஆண்டுக்கு முன்னர் மூன்றாம் குச்சியாக இணைக்கும் தன்மை பெற்றிருந்த இணைப்பான் (Bail) விக்கெட்டின் அமைப்பும் வடிவும் மாற, தானும் குறுகிய அளவில் மாறத் தொடங்கியது. விக்கெட் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்ளும்போது, இணைப்பானும் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதும் நமக்குத் தானாகவே தெரிந்து விடுகிறது. 1700ம் ஆண்டுவரை 2 கம்புகளே விக்கெட்டாக இருந்தன. 1776ம் ஆண்டு, மூன்று கம்புகளாக மாறின. அப்பொழுது ஒவ்வொரு குறிக்கம்பின் (Stump) உயரமும் 22 அங்குலமாக இருந்தது. மூன்று குறிக்கம்புகளும் 16 அங்குலத்திற்குள்ளே ஊன்றப்பட, அவற்றின் மேலே ஒரே ஒரு இணைப்பான் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. 1798ம் ஆண்டு 3 கம்புகள் ஊன்றப்பட்டிருந்தன. அதன் உயரம் 22 அங்குலத்திலிருந்து 24 அங்குலமாக உயர்ந்தது. விக்கெட்டின் அகலம் 6 அங்குலத்திலிருந்து 7 அங்குலமாக விரிந்தது. கம்புகளின் மேற்புறத்தில் 2 இணைப்பான்கள் இடம் பெற்றன.

1819ம் ஆண்டு, விக்கெட் மீண்டும் ஒரு மாற்றத்தைப் பெற்றது. விக்கெட்டின் உயரம் 126 அங்குலமாகியது. ஆனால், அகலப்பகுதியில் எதுவும் மாற்றம் இல்லை.

1823ம் ஆண்டும், ஒரே ஒரு அங்குலம் விக்கெட் உயர்ந்தது. அதாவது 27 அங்குலம் உயரமாகியது. அத்துடன் விக்கெட்டின் அகலம் 7 அங்குலத்திலிருந்து 8 அங்குலமாக விரிவு அடைந்தது.

1931ம் ஆண்டு, விக்கெட்டின் உயரம் 28 அங்குலமாகவும், அகலம் 9 அங்குலமாகவும் வளர்ச்சியடைந்தது. இரண்டாக வந்த இணைப்பான்கள், இரண்டாகவே இருந்து விட்டன.

அதற்குப் பிறகு, விக்கெட்டின் உயரமும் அகலமும் மாறாமலே இருந்ததோடு, ஒவ்வொரு கம்பின் சுற்றளவும் 11/8 அங்குலம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாயிற்று.

விக்கெட்டின் தலைப்புறம் அமர்ந்திருக்கும் இணைப்பானும் 1786க்குப் பிறகு இரண்டு எண்ணிக்கையாக மாறிற்று. அதன் நீளம் 4 அங்குலம் என்றும், அவை கம்பின் மேலே 11/2 அங்குலத்திற்கு மேல் உயர்ந்திருக்காமல் இருக்கவேண்டும் என்ற நியதியுடன் உருவம் பெற்றுத் திகழ்ந்தன.

விக்கெட்டின் அகலம் 9 அங்குலம் இருக்க வேண்டும் என்பது 1947ம் ஆண்டுவரை அவரவர் விருப்பமாக இருந்தது. பிறகு, அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று.

இவ்வாறாக, விக்கெட்டானது மூன்று கம்புகளால் 9 அங்குல அகலமும், 28 அங்குல உயரமும் என்ற வடிவம் பெற்றிருக்கிறது.