கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/வேதநாயகம் பிள்ளை

விக்கிமூலம் இலிருந்து

6. வேதநாயகம் பிள்ளை


தமிழ் நாட்டிலே தோன்றிய நல்லியற் கவிஞருள் ஒருவர் வேதநாயகர். அவர் நகைச்சுவை நிரம்பிய நூல்களால் தமிழ் மொழியை அழகு செய்தவர். இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனங்களால் நாட்டியவர். தமிழில் நாவல் என்னும் நவீனக் கதை இயற்றுவார்க்கு நல்வழி காட்டியவர்.

இத்தகைய வித்தகர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள குளத்தூரிலே பிறந்தார். அவர் பிறந்த குலமும், பெற்ற நலமும் ஒரு சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். [1]"கொங்குராய கோத்திரம் அதனில், வந்தவதரித்த செந்தமிழ்க் குரிசில்“ என்று அவரைப் பாராட்டினர் மகா வித்வான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை.

இளமையிலேயே வேதநாயகரிடம் விளங்கிய ஆங்கிலப் பயிற்சியையும், ஆன்ற பண்பினையும் அறிந்த அரசியலாளர் அவரை ஜில்லாக் கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளராக அமைத்தனர். அப்பணியில் அவர் காட்டிய திறமை துரைத்தனத்தாரது கருத்தைக் கவர்ந்தது; அதன் பயனகத் தரங்கம்பாடியில் முனிசீயாக அவர் நியமிக்கப்பெற்றர். அப் பணியை ஏற்று நீதி பரிபாலனம் செய்யுங்கால் உற்றார் என்றும் மற்றார் என்றும் அவர் உணர்ந்ததில்லை; கீழோர் என்றும், மேலோர் என்றும் கருதியதில்லை இச்சகம் பேசும் கொச்சை மாக்களுக்கு இடங் கொடுத்ததில்லை. வழக்கின் தன்மையை உள்ளவாறுணர்ந்து தீர்ப்புச் செய்வதே அவர் வழக்கம். இத்தன்மை வாய்ந்த வேதநாயகரை நீதிமான் என்று எல்லோரும் புகழ்வாராயினர்.

தரங்கம்பாடியிலிருந்து வேதநாயகர் சீர்காழிக்கு முனிசிபாக மாற்றப்பட்டார். அப்போது நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம்சேர்ந்தாற்போல் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அங்குப் போந்து சில காலம் தங்கியிருந்தார். உணர்ச்சி யொத்த அறிஞர் இருவரும் சிலநாளில் சிறந்த நண்பர் ஆயினர். அவ்வூர்ப் பெரியோர் விரும்பிய வண்ணம் மகா வித்வான் சீகாழிக் கோவை என்னும் பிரபந்தம் இயற்றினார். அக் கோவை சீர்காழிச் சிவன் கோயிலில் உள்ள வலம்புரி மண்டபத்தில் வாசித்து அரங்கேற்றப்பட்டது. வேதநாயகர் நாள்தோறும் வந்து கேட்டு இன்புற்று அக்கோவையின் நயங்களையும், பிள்ளையவர்களின் புலமைத் திறத்தையும் பாராட்டிப் பல கவிகள் பாடினர்.

நன்னெறியில் நாட்டம் உடைய வேத்நாயகர் அவ்வப்போது தம் மனத்தில் அரும்பிய கருத்துக்களைப் பாட்டாகப் பாடி வைத்திருந்தார் : அப் பாடல்களை மகா வித்வானிடம் படித்துக் காட்டி அவர் அளித்த சிறப்புப் பாயிரத்தோடு நீதிநூல் என்னும் பெயரால் வெளியிட்டார். அந் நூலில் வேதநாயகர் பரோபகாரம் முதலிய அறங்களைப் பாராட்டுகின்றார் ; பஞ்சமா பாதகங்களைக் கடிந்துரைக்கின்றார் ; பரிதானம் பெறுவோரையும், பற்றுள்ளம் உடையோரையும் பரிகசிக்கின்றார். நல்லரசின் நீர்மையையும் வல்லரசின் தன்மையையும் அவர் நீதிநூலில் விளக்கிக் காட்டும் பான்மை நன்கு அறியத் தக்கதாகும். நன்னெறி வழுவாத மன்னர்க்கு நாடெல்லாம் அரண்மனை ; மன்னுயிர் எல்லாம் அவர் நற்படை : அன்னார் மனமெல்லாம் அவர் வீற்றிருக்கும் அரியாசனம். ஆனால் கொடுங்கோல் மன்னர்க்குக் குடிகளே பகைவர் ; அவர் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி ; மாளிகையே மயானம் என்னும் பொருள்பட வேதநாயகர் பாடியுள்ளார்.

சீர்காழியில் வாழ்ந்த காலத்தில் வேதநாயகர் இசைப் பாட்டிலே விருப்பம் உற்றார். தென்னாட்டு இசைத் தமிழின் வரலாற்றில் சிறந்ததோர் இடம் பெற்று விளங்குவது சீர்காழிப் பதியாகும். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்“ பிறந்த ஊர் சீர்காழியே. கம்பர் அருளிய இராமாயணத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடி அழியாப் புகழ்பெற்ற அருணசலக் கவிராயர் வாழ்ந்ததும் அப்பதியே. தில்லை மன்றத்தில் திருநடம் புரியும் இறைவனத் தெள்ளிய தமிழ்ப் பாட்டாற் போற்றிய முத்துத் தாண்டவரை ஈன்றதும் அவ்வூரே. இத்தகைய சீர்காழியின் மருங்கே யமைந்த ஊர்களும் இசை மணம் வாய்ந்தனவாகும். "பண்ணோடு இசை பாடும் அடியார்க்கு இம்மை யின்பமும் மறுமை இன்பமும் தரும் மணிகண்டன் மருவும் இடம்“ என்று திருஞானசம்பந்தர் போற்றிப் புகழ்ந்த [2]புள்ளிருக்குவேளூர் சீர்காழிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இன்னும், நற்றமிழ்ப் பாடல்களை ஒற்றறுத்துப் பாடும் வண்ணம் ஞானசம்பந்தருக்கு ஈசன் பொற்றாளம் ஈந்தருளிய கோலக்காவும் சீர்காழியை அடுத்துள்ள சிவப்பதியாகும்.

இத்தகைய சீர்காழியிலிருந்து மாயூரத்திற்கு முனிசீபாக மாற்றப்பட்டார் வேதநாயகர். பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இசைப் பாட்டில் ஆசையுற்றிருந்த வேதநாயகர்க்கு மாயூரத்தில் சிறந்த இசைவாணர் பழக்கம் ஏற்பட்டது. 'நந்தனர் கீர்த்தனம்' பாடிப் புகழ்பெற்ற கோபால கிருஷ்ண பாரதியார் அப்போது அவ்வூரில் இருந்தார். அவர் பாடிய கீர்த்தனம் வேதநாயகர் உள்ளத்தைக் கவர்ந்தது. இசைப் பாட்டில் ஈடுபட்ட இருவரும் நாளடைவில் நண்பராயினர்.

மாயூரத்தில் வேதநாயகர் நீதிபதியாக இருந்த போது வல் வழக்குகள் நீதி மன்றத்திலே வரக்கண்டு மனம் வருந்தினார். அவ் வழக்குகளின் தன்மைக்கு அவரே ஒரு சான்று காட்டியுள்ளார். "கரமிலான் ஒருவன் வாதியைப் பிடித்தான் ; காலிலான் அவனை உதைத்தான்; வாயிலான் அவனைக் கடித்தான் ; இப்படிப் பிடித்து, உதைத்து, கடித்தவர்கள் மீது வாதி வழக்குத் தொடுத்தான். அவனுக்காக விறு விறுப்புடன் வாதாடி வம்பு செய்தார்கள் வக்கீல்கள். இவ்வாறு,

'தொண்டை கிழித்துக் கொண்டு
சண்டை செய்யும் வக்கீல்கள்
அண்டையில் இருந்து நம்
மண்டையை உடைத்தால் -
ஆண்டவனை நினைப்ப தெப்போது நெஞ்சே
ஐயன் பதத்தை நினைப்பதெப்போது நெஞ்சே”

என்று அவர் பாடுகின்றார்.

தெய்வ சாட்சியாக நீதிபரிபாலனம் செய்து வேதநாயகர் அடைந்த பெரும் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சிறியோர் சிலர் மேலதிகாரிகளிடம் கோளும் பொய்யும் சொல்லிக் குழப்பம் விளைவித்தார்கள். அன்னார் சிறுமையை ஒரு பாட்டாகப் பாடி ஆண்டவனிடம் முறையிட்டார் வேதநாயகர். "நல்லவர்களெல்லாம் நாட்டை விட்டு அகன்றார் ; ஞான சூனியரெல்லாம் நமக்கு அதிபதி என்றார். ஆகாத காலம் இது; அசடர் தலையெடுத்தார். பூவிற்ற கடையிலே புல் விற்கத் தொடங்கி விட்டார். என்ன வந்தாலும் மனமே-ஐயன் இருக்கையில் என்ன விசனமே என்னும் கீர்த்தனம் பாடிக் கவலையற்றிருந்தார். இறுதியில் அறம் வென்றது; அழுக்காறு வேரற்று வீழ்ந்தது[3].

அப்பொழுது தஞ்சை நாட்டில் கடும் பஞ்சம் வந்துற்றது. அதன் கொடுமையைக் கண்ட வேத நாயகர்! நெஞ்சுருகிப் பாடினார். "ஐயோ! மண்ணில் அநேகர் என் கண்முன்னே மாய்ந்தார்; எண்ணிறந்தவர் சருகுபோல் காய்ந்தார் : கண்ணிருண்டு களைத்து உடல் ஓய்ந்தார்; ஆண்டவனே உன்னையன்றி யாரே துணையாவார்“ என்று முறையிட்டார். ஒல்லும் வகையால் பசியின் கொடுமையைத் தணிப்பதற்குத் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் செலவிட்டு மாயூர நகரின் பல பாகங்களில் கஞ்சிச் சாலைகள் அமைத்தார். அங்கு வார்த்த கஞ்சியைப் பருகி மனங்குளிர்ந்து அவரை வாயார வாழ்த்திய ஏழை மாந்தர் பல்லாயிரவர். அவ்வறப் பணியைக் கண் குளிரக் கண்ட கோபாலகிருஷ்ண பாரதியார் வேத நாயகரை வியந்து 'நீயே புருஷ மேரு' எனத் தொடங்கும் கீர்த்தனம் பாடினர். பாரதியார் இயற்றிய கீர்த்தனங்களுள் இதுவொன்றே நரஸ்துதி[4] என்றால் வேதநாயகர் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?

அக்காலத்தில் மாயூரத்துக்கு அண்மையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் சீலர் தலைவராக விளங்கினார். கற்றவரும், பொருளற்றவரும் அவர் ஆதரவை நிரம்பப் பெற்றனர். கலையின் கோயிலாகவும், கருணையின் நிலையமாகவும் திகழ்ந்த தேசிக மூர்த்தியிடம் வேதநாயகர் மிகவும் ஈடுபட்டார்.

"ஏனென்று கேட்பவர் இல்லாத் தமிழை இனிதளிக்க
நானென்று கங்கணம் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே“

என்று அப்பெரியாரைப் பாராட்டினார்.

பஞ்சக் காலத்தில் அத்தேசிக மூர்த்தி பசித்தோர் முகம் பார்த்துப் பரிவுடன் உணவளித்தார். இவ்வாறு வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே' என்னும் வாசகத்தை மெய்ப்பித்த பெரியாரை வேதநாயகர் மனமாரப் போற்றினார்[5].

கிருஸ்தவ மதத்தில் வேதநாயகர் சிறந்த பற்றுடையவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளுதல் தவறு என்பது அவர் கொள்கை. பாரத நாட்டிலுள்ள பல சமயவாதிகளும் சமரச உணர்ச்சியோடு பணி செய்தல் வேண்டும் என்பது அவர் ஆசை. இக் கருத்துக் கொண்டு அவர் பாடிய கீர்த்தனங்கள் பலவாகும்; அவற்றைத் தொகுத்துச் 'சர்வசமய சமரச கீர்த்தனம்' என்னும் பெயரால் வெளியிட்டார்.

பிறசமயத்தாருடன் வேதநாயகர் வேற்றுமையின்றிப் பழகினர். சைவ சமயத்தைப் போற்றி வளர்ப்பதற்காகத் தோன்றிய திருவாவடுதுறை மடத்திற்கு வேதநாயகர் அடிக்கடி சென்று வந்தார். இன்னும், சைவ சமயத்தில் சிறந்த ஆர்வமுடையவரும், திருவாவடுதுறை ஆதீன மகா வித்வானும் ஆகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகரின் ஆருயிர் நண்பர். வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்து அம் மகா வித்வான் ஒரு [6]கோவை பாடினார். குளத்தூர் வேதநாயகர் மீது பாடப்பட்ட கோவையாதலால் அது குளத்தூர்க் கோவை என்று வழங்குகின்றது. அக் கோவையில் தன்னேரிலாத தமிழ்வேத நாயகன் என்றும், நூல் ஆய நோற்ற மதிவேத நாயகன் என்றும் அவர் பெருமையை மகா வித்வான் பாடியுள்ளார்.

தமிழ் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர் வேதநாயகர். நல்ல எண்ணங்கள் இளமையிலே நங்கையர் மனத்திற் பதிதல் வேண்டும் என்பது அவர் கொள்கை. அக் கருத்துக்கொண்டு எழுந்தது 'பெண்மதிமாலை' என்னும் நூல். வேதநாயகர் தம் பெண் குழந்தைகள் படிப்பதற்காக அதனை எழுதினார் என்று தெரிகின்றது. பிறந்த மனையிலும், புகுந்த மனையிலும் பெண்கள் சோம்பலின்றி வேலை செய்தல் வேண்டும் என்றும், வாழ்க்கைப்பட்ட பெண் இல்லாள் என்று சொல்லப்படுவதால் அவளே வீட்டுக்கு அதிபதி என்றும், இல்லறம் நடத்தும் பெண்கள் நாள்தோறும் அறஞ்செய்தல் வேண்டுமென்றும், மாதா பிதா குரு தெய்வம்-இவர்களிடம் அன்பும் பணிவும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்றும் [7]பெண்மதி மாலை கூறுகின்றது.

பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்பதைப் பல கட்டுரைகளாலும் எடுத்துரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண்மானம் முதலிய கட்டுரைகள் பெண்மதி மாலையிற் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதற்குள்ள நியாயங்களைப் பெண் மானம் என்னும் வியாசம் விளக்குகின்றது.

வேதநாயகர் கதை நூல்களும் சில இயற்றினார். அவற்றுள் தலை சிறந்தது பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் கற்பனைக் கதையே யாகும். அதுவே தமிழில் எழுந்த முதல் நவீனக் கதை (நாவல்) என்று சொல்லப்படுகின்றது. பிரதாபன் கதை நகைச் சுவை நிரம்பியது; படிப்போர் மனத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் பண்புடையது ; மூடப்பழக்க வழக்கங்களே ஒழிப்பது; நல்ல பழக்கங்கள் பரவ வழிகாட்டுவது; கதாநாயகனாகிய பிரதாபனது கள்ளங் கபடமற்ற உள்ளம் நம் கருத்தை அள்ளுகின்றது. அவன் தாயாகிய சுந்தரமும், மனையாளாகிய ஞானாம்பாளும் மதிநலம் வாய்ந்த மங்கையர் குலத்திற்கு அணிகலன்களாக விளங்குகின்றார்கள். சுருங்கச் சொல்லின் அந் நவீனம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் கதையாகும். அக் கதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது[8].

பதினைந்து ஆண்டுகள் வேதநாயகர் முனிசீபாக வேலை பார்த்தார் ; அவ்வேலையின் கடுமையால் உடல் தளர்ந்தார்; அரசியலார் அனுமதி பெற்று வேலையினின்று விலகினார் ; பின்பு தமிழ்க் கலைகளிலே பொழுது போக்கினார். மாயூரம் நகர சபைத் தலைவராக அமர்ந்து நற்பணிகள் பல செய்தார்; ஞானசுந்தரி என்னும் நாவலும் இயற்றி வெளியிட்டார்; கடைசியாக "சத்திய வேத கீர்த்தனை“ என்னும் இசைப் பாட்டியற்றி அறுபத்தைந்தாம் வயதில் ஆண்டவன் அருளிலே கலந்தார்.


குறிப்புகள்

  1. நீதி நூலின் சிறப்புப்பாயிரம் - மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியது.
  2. புள்ளிருக்குவேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும்.
  3. As District Munsif, he (Vedanayagam Pillai, was very popular and discharged his duties with great credit and ability, at a time when Munsifs of the present type were rare. He was distinguished also for his independence; he once declined to put up with the treatment accorded to him by a Judge, who was then well-known for his idiosyncrasies and who is now practising in the Madras Bar.
    -The Hindu 24th July 1889.
  4. கோபாலகிருஷ்ண பாரதியர்-டாக்டர், சாமிநாதய்யர் எழுதியது. பக். 81.
  5. நேரொன்று மில்சுப் பிரமணி யாதிப நின்னைப்பல்லோர்
    காரென்று சொல்வர் அக் காரும் வஞ்சித்த இக் காலத்திலே
    ஊரென்றும் வாழ அறுசுவை யுண்டி உதவி உன்தன்
    பேரென்றும் நிற்கச் செய்தாய் உனக் காரெனல் பேதைமையே

    என்பது அவர் பாட்டு.

  6. இக்கோவை நானுற்று முப்பத்தெட்டுச் செய்யுட்களை உடையது.
  7. மதியிது மதியிது பெண்ணே-புண்ய
    வதியல்ல வோநல்ல மகராஜி கண்ணே

    வேலைக்கு நீ சிணுங்காதே-ஒரு
    மூலக்குள் புகுந்து நீ-முணுமுணுக்காதே —மதி
    வீட்டுக் கதிபதி நீயே-வெளி
    நாட்டுக் கதிபதியுன்-நாயகன் சேயே — மதி

    புண்ணியம் செய்யலாம் நாளை என
    எண்ணி யிராதே—இது நல்ல வேளை —மதி

  8. I wish he could have lived to have seen Pratapa Mudaliar in English (the first hundred pages of which are now printed) Mr. G. Mackenzie Cobban's letter dated 26th July 1889 to Vedanayagam's son— Pratapa Mudaliar Charitram, Īrth edition, Ap.p. 5.