கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/ரேனியஸ் ஐயர்

விக்கிமூலம் இலிருந்து

5. ரேனியஸ் ஐயர்


தமிழ் மொழிக்குப் பேச்சாலும் எழுத்தாலும் பெருந் தொண்டு புரிந்தவருள் ஒருவர் ரேனியஸ் ஐயர். அவர் பிரஷ்யா தேசத்திலே பிறந்தவர். அவர் தந்தை அந்நாட்டுப் பட்டாளத்தில் ஒரு பதவி பெற்ற வீரர். இளமையிலேயே தந்தையை இழந்த ரேனியஸின் உள்ளம் கிருஸ்தவ வேத நெறியிற் கவிந்தது. இருபத்திரண்டாம் வயதில் அவர் அவ்வூர்க் கிருஸ்தவ சங்கத்தைச் சேர்ந்தார்.

அடுத்த ஆண்டில் ஆங்கில நாட்டுச் சர்ச்சு முறைச் சங்கம்[1] அவரைப் பணி செய்ய அழைத்தது. அதற்கிணங்கி ஆங்கில நாட்டிற் போந்து அவர் சில காலம் தொண்டு புரிந்தார் ; பின்பு அச்சங்கத்தின் சார்பாகச் சென்னையில் வந்து சேர்ந்தார்.

தமிழ் நாட்டில் சிறப்பாகக் கிருஸ்தவப் பணி செய்யக் கருதிய ரேனியஸ் ஐயர் தமிழ்மொழியை விரைந்து கற்றார். ஐந்தாண்டு சென்னையில் தொண்டு செய்த பின்பு சங்கத்தார் அவரைப் பாளையங்கோட்டைக்கு மாற்றினர். அங்கு அவர் தமிழறிவு வளம் பெற்றது ; தமிழ்ப் புலமைவாய்ந்த திருப்பாற்கடல்நாதன் கவிராயரை அடுத்துப் பதினாகு ஆண்டு நன்னூல் முதலாய இலக்கணங்களை முறையாகக் கற்றுணர்ந்தார். இனிமையாகப் பேசுந் திறம் அவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தது. பிற மதத்தினரும் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டார்கள். திருநெல்வேலி நகரத்தில் வாரந்தோறும் அவர் சொற்பொழிவு நிகழ்ந்தது. அதைக் கேட்ட இந்துக்களிற் பலர் நற்கலைப் பயிற்சியில் நாட்ட முற்றார்கள். [2]

தமிழ் நாட்டில் ஆண்களப் போலவே பெண்களும் கல்வி கற்றல் வேண்டும் என்பது ரேனியஸ் ஐயரின் கொள்கை. பெண்களுக்குக் கல்வி பயிற்றுவதற்காகப் பாளையங்கோட்டையில் அவர் ஒரு பாடசாலை நிறுவினர். முப்பத்தாறு மாணவிகளோடு தொடங்கிய கல்லூரி இன்று மிகச் சிறப்பாக அவ்வூரிலே நடைபெற்று வருகின்றது.

அக்காலத்தில் தமிழ்க் கிருஸ்தவர்கள் ஓதி வந்த வேத நூலைத் திருத்திப் பதிப்பிக்கக் கருதினார் சென்னை பைபிள் சங்கத்தார் ; அதற்குத் தக்க தமிழ்ப் புலமை வாய்ந்தவர் ரேனியஸ் ஐயரே எனக் கருதி அவரை வேண்டிக்கொண்டார்கள். ஐயர் அப்பணியிலே புகுந்து ஆராய்ந்த பொழுது, முந்திய தமிழ் வேத நூலைத் திருத்துவதைவிடப் புதிதாகப் பைபிளை மொழி பெயர்த்தலே பொருத்தமுடையதாகத் தோன்றிற்று. பதம் பதமாக எடுத்துப் பைபிளை மொழி பெயர்க்கும் முறை சிறந்த தன்று என்றும், வேதப் பொருளைத் தெளிவாகத் தெரிவிக்கும் முறையில் அமைந்த மொழிபெயர்ப்பே ஏற்றமுடைய தென்றும் அவர் கருதினார். அவ்வண்ணமே பன்னீராண்டு முயன்று ஆதி நூல்களுக்கு இணங்கப் 'புதிய ஏற்பாடு' முழுவதும் மொழி பெயர்த்து முடித்தார். அவர் மொழி பெயர்த்த நூலைப் பரிசீலனை செய்தது. சென்னை பைபிள் சங்கம். வேத வாக்கை ஒல்லும் வகையில் அடுக்குப் பிறழாமல் அப்படியே மொழி பெயர்த்தல் வேண்டும் என்பது சங்கத்தார் கொள்கை. ஆதலால் ரேனியஸ் ஐயரின் மொழி பெயர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் இலக்கணம் பயிலும் மாணவர்களுக்கு அந்நாளில் நன்னூல் ஒன்றே சிறந்த சாதனமாக இருந்தது. நல்லாசிரியர் ஒருவரை யடுத்து அந்நூலைப் பாடங் கேட்டல் அக்காலத்து வழக்கம். ஆனால் அது எல்லோர்க்கும் இயலவில்லை. கிருஸ்தவ சமயத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்ட அன்பர்கள் எளிதாகத் தமிழிலக்கணத்தைக் கற்றுப் பிழையறப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று ரேனியஸ் ஆசைப்பட்டார் ; அதற்கு ஏற்ற வகையில் ஓர் இலக்கணம் எழுதினார். அது வீரமாமுனிவர் இயற்றிய கொடுந் தமிழ் இலக்கணத்தைத் தழுவி எழுந்ததாகும். எழுத்தியில், சொல்லியல், தொடரியல் என்னும் மூன்று பகுதிகளையுடைய இவ்விலக்கணத்தில் தொடரியல் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. எழுவாய், பயனிலை முதலிய வாக்கிய உறுப்புக்கள் உரைநடையில் அமையும் பான்மையை ஆசிரியர் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ் நாட்டில் போப்பையரது இலக்கணம் தோன்றுவதற்கு முன்னே ரேனியஸ் ஐயர் இலக்கணமே நன்னூலுக்கு அடுத்த வரிசையில் சிறந்து விளங்கிற்று.

தமிழில் அவர் எழுதிய வசன நூல்கள் பலவாகும். உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறம் அவரிடம் அமைந்திருந்தது. அவர் இயற்றிய வசன நூல்களில் அழகுண்டு ; இனிமையுண்டு : நிரந்துரைக்கும் நீர்மையுண்டு ; வகுத்தும் தொகுத்தும் கூறும் வனப்பும் உண்டு. 'சமயசாரம்' முதலிய நூல்களில் இப்பண்புகளைக் காணலாம்.

இத்தகைய தமிழ்த் தொண்டராகிய ரேனியஸ் ஐயரின் ஆர்வத்திற்குச் சான்றாக நெல்லை நாட்டில் இன்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. பாளையங்கோட்டையின் முகப்பிலே அமைந்து அணி செய்கின்ற[3] கிருஸ்தவக் கோயில் ரேனியஸ் ஐயரின் முயற்சியாலேயே கட்டப்பட்டது. இந்துக்களும் இஸ்லாமியரும் அதற்குப் பொருளுதவி செய்தார்கள். பாளையங்கோட்டையில் வாழ்ந்த வெங்கு முதலியார் என்ற பெருஞ் செல்வர் சிறந்த நன்கொடை வழங்கினர்.

இன்னும், இக்காலத்தில் நெல்லை நாட்டில் சிறப்புற்று விளங்கும் டோனாவூர் என்னும் ஊரை உண்டாக்கியவர் ரேனியஸ் ஐயரே. புலியூர்க்குறிச்சி என்பது அதன் பழம் பெயர். ரேனியஸ் ஐயர் அவ்வூரிலுள்ள காலியிடங்களை விலைக்கு வாங்கி அங்கே கிருஸ்தவர்களைக் குடியேற்றினார். பிரஷ்யா தேசத்தைச் சேர்ந்த பிரபு ஒருவர் கிரையத் தொகையை நன்கொடையாக அளித்தார். டோனா என்பது அவர் பெயர். அவர் வழங்கிய நன்கொடையின் சிறப்பு என்றும் விளங்கும் வண்ணம் அவ்வூருக்கு [4]டோனாவூர் என்று ரேனியஸ் பெயரிட்டார்.

ரேனியஸ் ஐயர் பிடித்த கொள்கையைச் சாதிக்கும் பெற்றி வாய்ந்தவர் ; தாம் மெய்யாகக் கண்டவற்றை வற்புறுத்தும் முறையில் இறையளவும் தளர்பவர் அல்லர். அவர் மனத்தை மாற்ற எவராலும் இயலாது. சமயக்கொள்கையில் அவருக்கும் சர்ச்சு முறைச் சங்கத்தார்க்கும் கருத்து வேற்றுமை உண்டாயிற்று. நாளடைவில் அது வேரூன்றி வலுத்தது. சங்கத்தார் பலவாறாக முயன்றும் அவரைச் சரிப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி அவரை வேலையினின்றும் விலக்கினர். அதைக் குறித்து ரேனியஸ் சிறிதும் கவலைப்படவில்லை; தனிப்பட்ட நிலையில் தம் தொண்டுகளைத் தடையின்றிச் செய்துகொண்டிருந்தார். பலர் பொருளுதவி செய்து அவரை ஆதரித்தார்கள். திருநெல்வேலிக் கிருஸ்தவ


குறிப்புகள்

  1. சர்ச்சு முறைச் சங்கம்-C. M. S. Mission.
  2. * “He is bold, impressive, vivid, cheerful in his whole appearance, happy in his illustrations, and a master not only of their language (Tamil) but of their feelings and views.”
    –The C. M. S. în Tinnevelly, p. 42.
  3. The Trinity Church was built by public subscription through the exertions of C. E. Rhenius in 1826. The expenses of lighting the Church are still met from the proceeds of land which Vengu Mudalivar presented to the Mission.
    —Tinnevelly Gazetteer P. 482.
  4. In 1827 Rhenius purchased a sité formerly known as Pooliyurkurichy with money subscribed by a devout Prussian gentleman Count Dohna of Schledin, and called it after him Dohnavur.
    —The C. M. S. in Tinnevelly P. 46.