உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/வேதநாயக சாஸ்திரியார்

விக்கிமூலம் இலிருந்து

8. வேதநாயக சாஸ்திரியார்[1]


தொண்ணூறு ஆண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்து தொண்டு புரிந்தவர் வேதநாயக சாஸ்திரியார். அவர் திருநெல்வேலி நகரில் தேவசகாயத்தின் மைந்தனாய்த் தோன்றினார்.அவர் பிறந்த வருஷம் 1774 என்பர். இளமையிலே அவர் தாயார் இறந்துவிட்டமையால், பாட்டனார் அவரைத் தம் வீட்டிற் கொண்டுபோய் வளர்த்தார். தாயில்லாப் பிள்ளையென்று அங்கு, யாவரும் அவர்மீது பரிவு காட்டினர். அதனை அறிந்த வேதநாயகம் அவ்வூர்ச் சிறுவரோடு சேர்ந்து ஆடிப் பாடிக் காலம் கழித்தார்.

கல்வி கற்பதற்குரிய இளமைக் காலம் இவ்வாறு விளையாட்டிற் கழியக்கண்ட தேவ சகாயம் வருத்தமுற்றார்; பாட்டனார் வீட்டிலிருந்து தம் மகனை வருவித்துத் திருநெல்வேலித் திண்ணைப் பள்ளியிற் சேர்த்தார். ஆயினும் பள்ளிப் படிப்பில் வேதநாயகத்தின் உள்ளம் பற்றவில்லை. அது கண்ட தந்தையார் கவலைகொண்டார். செய்வதொன்றும் அறியாது கர்த்தரை நாள்தோறும் தொழுது நின்றார் ; மைந்தனது உள்ளத்தைக் கல்வியிலே கவியச் செய்யவேண்டும் என்று கண்ணீர் வடித்து வேண்டினார். இந்த நிலையில் வேதநாயகத்துக்குப் பல ஆண்டுகள் கழிந்தன.

பன்னிரண்டாம் வயதில் வேதநாயகம் பண்பு நெறியிலே தலைப்பட்டார். அவரை அந் நெறியில் உய்த்த பெருமை சுவார்த்தர் என்னும் கிருஸ்தவ சீலருக்கே உரியதாகும். தஞ்சைமா நகரில் அரசரும் அறிஞரும் போற்ற அருந்தொண்டு செய்தவர் சுவார்த்தர். அவர் ஒரு தேவ காரியத்தை முன்னிட்டுத் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள பாளையங் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். தேவசகாயம் தம் மைந்தனை அழைத்துக்கொண்டு அப் பெரியாரைக் காணச் சென்றார். இளங் கொழுந்தென விளங்கிய வேதநாயகம் சுவார்த்தரது கருத்தைக் கவர்ந்தார். இங்ஙனம் அப்பெரியாரது அருளைப் பெற்ற காலமே வேதநாயகரது வாழ்க்கையின் அடிப்படை கோலிய காலம்.

"விளையும் பயிர் முளையிலே தெரியும்“ என்னும் முதுமொழிக்கிணங்க வேத நாயகத்தின் எதிர்காலச் சிறப்பை யெல்லாம் அவரது இளமைக் கோலத்திலே கண்ட சுவார்த்தர் தம்மோடு அவரைத் தஞ்சைக்குக் கொண்டு செல்ல விரும்பினார் ; தந்தையின் அனுமதி பெற்றுத் தம்முடன் அழைத்துச் சென்றார். அன்று முதல் வேதநாயகத்துக்குத் தாயும் தந்தையும், தகை சான்ற சற்குருவும் அவரேயாயினர்.

தஞ்சையில் அரசாண்ட துளசி மன்னனின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் சுவார்த்தர். திருநெல்வேலியிலிருந்து அவர் திரும்பி வந்த போது இறக்கும் தருவாயில் இருந்த அம்மன்னன் மனக்கவலை நீத்துச் சாந்தியடைந்தான் ; பத்து வயதுப் பாலனாகிய இளவரசனை அவர் கையில் அடைக்கலமாக ஒப்புவித்து உயிர் துறந்தான், நெல்லையிலிருந்து அழைத்து வந்தவேதநாயகமும் தஞ்சையிலே தம்மைத் தஞ்சமாக வந்தடைந்த இளவரசனாகிய சரபோஜியும் சுவார்த்தரது அருட் காவலில் அமைந்தார்கள். கண்ணினைக் காக்கும் இமைபோல் அவ்விருவரையும் அவர் காத்து வந்தார்,

தஞ்சைமா நகரில் துளசி மன்னனிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற நிலத்தில் சுவார்த்தர் ஒரு திருக்கோயிலும், தமக்கு ஒரு வீடும் கட்டியிருந்தார். அந்தப் பகுதிக்கு மகர் நோன்புச் சாவடி என்பது பெயர், அங்குள்ள சுவார்த்தர் திருமனையில் வேதநாயகம் அவர் பிள்ளைபோல் வளர்ந்தார் ; அல்லும் பகலும் அவரருகே யிருந்து பணிவிடை செய்தார்.

அக் காலத்தில் தரங்கம்பாடியில் நல்ல கல்லூரி யொன்று இருந்தது. அதன் தலைமையாசிரியராகிய ஜான் என்பவர் பல கலைகளில் வல்லவராயிருந்தார். அவருடைய பள்ளியில் வேதநாயகம் சிலகாலம் படித்தல் வேண்டும் என்பது சுவார்த்தரின் விருப்பம்; அப்படியே ஆசிரியரிடம் தெரிவித்துத் தரங்கம்பாடிக் கல்லூரியில் அவரை மாணவராகச் சேர்த்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் வேத நூல், வான நூல் முதலிய அறிவு நூல்களைக் கற்றார் வேதநாயகம். அப்போது தரங்கம்பாடியில் இருந்து தமிழ்ப்பணி செய்து வந்த டாக்டர் ராட்லர்[2] என்னும் பெரியாருடைய பழக்கமும் அவருக்கு வாய்த்தது. தமிழ் மொழியில் இயற்கையாகவே கவிந்திருந்த அவருள்ளம் இத்தகைய சேர்க்கையால் இன்னும் அதிகமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதாயிற்று.

தரங்கம்பாடிப் படிப்பு முடிந்தவுடன் தஞ்சைக்குத் திரும்பி வந்தார் வேதநாயகம். அவரது கல்விப் பயிற்சியையும் ஒழுக்கத்தையும் கண்டு களிப்புற்ற சுவார்த்தர் தஞ்சையில் ஒரு வேதக் கல்லூரி[3] நிறுவி, அதற்கு வேதநாயகத்தைத் தலைமையாசிரியராக நியமித்தார். அவரிடம் அரும்பியிருந்த கவித்திறம் அந்நிலையில் விரிந்து மணங்கமழத் தொடங்கிற்று. வேதாகமம் பயிலும் மாணவர்க்கு உணர்ச்சியும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாதல் வேண்டும் என்னும் ஆசையால் பல சிறு பாடல்களை இயற்றினார் வேதநாயகம். பராபரன்மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம் முதலிய நூல்கள் அத்தன்மை வாய்ந்தனவாகும்.

பராபரன் மாலை என்பது ஓர் இனிய தமிழ்ப் பாமாலையாக இலங்குகின்றது. பரம்பொருளாகிய இறைவனது - கருணையையும் பெருமையையும் உருக்கமாக எடுத்துரைப்பது அந் நூல். "ஆண்டவனே! உன்னை அடைவதற்கு வேத நெறி யுண்டு; நேசிக்க நெஞ்சுண்டு ; நினைக்க மனமுண்டு; மாசெல்லாம் தீர்ப்பதற்கு ஏசுநாதர் அருளுண்டு; தாயிருக்கச் சேய் தவிப்பதுண்டோ“ என்ற கருத்தடங்கிய பாட்டில் இரக்கமும் உருக்கமும் நிரம்பி நிற்கின்றன.[4]

இத்தகைய பராபரன் உலகத்தை யெல்லாம் படைத்த பான்மையை வியந்து வேதநாயகம் பாடிய பாடல் 'ஞானத் தச்சன் நாடகம்' என்னும் பெயரால் வழங்குகின்றது. ஞானத் தச்சனாகிய இறைவன் ஆதி மனிதனைப் படைத்த மேன்மையும், நோவாவின் பேழையைப் பற்றிய கப்பற் பாட்டும், பிறவும் அந் நாடகத்தில் உள்ளன.

"ஞாலத்திலே அதி காலத்திலே-மிகு
ஞானத்திலே நன்னி தானத்திலே கொண்டு சாலத்தமக்குத் தேவாலய மாகவே
தம்முடைச் சாயலாய்த் தம்முடை ரூபமாய்-
வீடு கட்டினானே ஞானத் தச்சன்
வீடு கட்டினானே'.

[5]

என்னும் பாடலைப் போன்ற நூற்றுக் கணக்கான கீர்த்தனங்கள் அந்நூலில் உண்டு.

அக்காலத்தில் சரபோஜி மன்னன் தஞ்சையில் அரசுபுரிந்தான். அவன் அருங்கலை விநோதன்; அரசாளும் பொறுப்பை ஆங்கிலக் கம்பெனியாரிடம் ஒப்புவித்து விட்டுக் கலைவாணர் கலையினொடும் கவியினொடும். பொழுது போக்கினான். தஞ்சாவூரில் இன்றும் அறிஞர் போற்றும் சரஸ்வதி மஹால் என்ற அருமையான நூல் நிலையத்தை நிறுவியவன் அவனே. இத்தகைய சரபோஜி மன்னனுடன் நெருங்கிப் பழகும் நீர்மை வேதநாயகத்துக்கு இளமையிலேயே வாய்த்தது. இருவரும் சுவார்த்தையரை ஞானத் தந்தையாகக் கொண்டமையால் சகோதர முறையில் பழகி வந்தனர்.

சரபோஜியின் கொடைத் திறத்தையும் கலை நலத்தையும் பல தமிழ்ப் புலவர்கள் பாட்டிலமைத்துப் பாராட்டுவாராயினர். அவ்விதம் அம்மன்னன் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் ஒன்று சரபேந்திர பூபால. குறவஞ்சி நாடகம். குறவஞ்சி நாடகங்களுள் சிறந்த குற்றாலக் குறவஞ்சியையும், தஞ்சையில் அரசர் ஆதரவு பெற்று விளங்கிய சரபேந்திர குறவஞ்சியையும் பலமுறை கற்று இன்புற்றார் வேதநாயகம்; அவற்றைப் பின்பற்றித் தாமும் குறவஞ்சி நாடகம் ஒன்று இயற்ற ஆசைப்பட்டார். கர்த்தராகிய ஏசுநாதரையே பாட்டுடைத் தலைவராக வைத்துப் 'பெத்தலேம் குறவஞ்சி' யென்னும் பெயரால் ஒரு நாடகம் இயற்றினார். “சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம் - ஆதி - திரியேக நாதனுக்குச் சுப மங்களம்” என்பது அக்குறவஞ்சியில் உள்ள மங்கல வாழ்த்து. ஏசுநாதர் பெருமையைக் குறவஞ்சியின் வாயிலாக வெளிப்படுத்தும் தமிழ் நூல் இது ஒன்றேயாகும்.

இந்நூல் சென்னைமா நகரில் வேப்பேரிப் பாக்கத்துக் கிருஸ்தவ சபையில் அரங்கேற்றப்பட்டது. தமிழ்ச் சுவை தெரிந்த சென்னைக் கிருஸ்தவ சபையார் அதனைத் தலைக்கொண்டு போற்றினர் ; வேதநாயகத்தைப் பல வகையாகப் பாராட்டினர் ; தேவாலயத்தின் முகப்பில் பெருஞ் சபையொன்று கூட்டி ஞானதீபக் கவிராயர் என்ற பட்டத்தை அவருக்கு - வழங்கினர் ; அறுபது வராகன் பெறும் அழகிய சிவிகையைப் பரிசாக அளித்தனர் ; வேதநாயகத்தைச் சால்வையாலும் - பட்டாலும் அலங்கரித்து, சிவிகையில் ஏற்றி வேப்பேரியை வலம் வந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு சென்னை நகரத்தார் செய்த சீர்மையெல்லாம் கண்டு களிகூர்ந்த வேதநாயகம் 'சென்னபட்டணப் பிரவேசம்' என்று ஒரு நொண்டி நாடகம் எழுதினார். சென்னையில் அன்பர்கள் அளித்த விருந்துகளும், செய்த சிறப்புக்களும் அந்நாடகத்தில் - இனிமையாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும் குறவஞ்சி நாடகம் அரங்கேறுவதற்கு முன்னின்று உதவி செய்த முத்துசாமியா பிள்ளை என்ற கிருஸ்தவரை அந்நூலில் புகழ்ந்து பாடியிருப்பது நரஸ்துதியென்று பலர் கருதுகின்றனர். 'பராபரனைப் பாடுகிறவனே பாக்கியவான்' என்று கூறும் வேத வசனத்திற்கு இந் நாடகம் மாறுபட்ட தென்பது அன்னார் கொள்கை[6].

தமிழ் நாட்டில் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாமர மக்கள் பாட்டுப் பாடிக் கொண்டே பணி செய்தல் வழக்கம். நிலத்தில் ஏரைப் பிடித்து உழும் பொழுதும், நாற்று நடும் பொழுதும், களை பறிக்கும் பொழுதும், பாட்டாளிகள் பாட்டுப் பாடுவார்கள். தோட்டப் பயிர் செய்பவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து நிலத்திலே பாய்ச்சும்போது பாடுவார்கள். அப்பாட்டுக்கு 'ஏற்றப் பாட்டு' என்பது பெயர். அதன் இனிமை யறிந்தோர் ”ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை” என்பர். "மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே, தூங்கும் பனிநீரை, வாங்கும் கதிரோனே” என்ற ஏற்றப் பாட்டு நாடறிந்த தாகும். ஏழை மக்களே பெரும்பாலும் ஏற்றமிறைத்துப் பணி செய்பவர் என்பதை யறிந்த வேதநாயகம் அவர்களுக்கு ஏற்றப்பாட்டின் வாயிலாக ஞானத்தை ஊட்டக் கருதினார். அவ்வகையில் நூறு செய்யுள் இயற்றியுள்ளார்.

ஒரு பொருளே தெய்வம்- நீ
உகந்து தொழு நெஞ்சே
உடைந்து மனம் நெஞ்சே-அந்த
ஒரு பரனுக் கஞ்சே

என்பது முதற் பாட்டு, அந்நூல் ஞான ஏற்றப் பாட்டு என்று பெயர் பெற்றுள்ளது.[7]

இவ்வாறு ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றிய வேதநாயகம் கிருஸ்தவ வேதாகமங்களின் சாரத்தைப் பாடினமையால் 'சாஸ்திரியார்' என்று பாராட்டப் பெற்றார். ஆயினும் அவர் கவிதை இன்னும் தமிழ் நாட்டில் போதிய விளக்கம் பெறவில்லை. திருமணக் காலங்களில் அவர் பாடிய மங்கல வாழ்த்துப் பாடல்கள் ஆங்காங்கு பாடப்படுகின்றன. கற்றார்க்கும். கல்லார்க்கும் களிப்பருளும் வேதநாயகம் போன்ற நல்லியற் கவிஞர்களைப் போற்றி அவர் கவிதையைப் பாராட்டும் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாளாகும்.


குறிப்புகள்


  1. வேதநாயகம் பிள்ளையை வேதநாயகர் என்றும் வேதநாயக சாஸ்திரியாரை வேதநாயகம் என்றும் வழங்கினால் மயக்கம் ஏற்படாது.
  2. இவர் தமிழ்ப் பேரகராதி தொகுத்துதவிய அறிஞர்.
  3. வேதக்கல்லூரி--Theological Seminary.
  4. "நீயிருக்க வேத நெறியிருக்க நெஞ்சமுற
    வாயிருக்க நின்பதத்தில் வந்திருக்க என்மனமும் போயிருக்க நின்புதல்வன் புண்ணியனார் அன்பிருக்கத் தாயிருக்கச் சேய்க்குத் தவிப்பேன் பராபரனே”

  5. “ஞானத்திலே பர மோனத்திலே-உயர்
    மானத்திலே அன்ன தானத்திலே
    கானத்திலே அமுதாக நிறைந்த
    கவிதையிலே உயர் நாடு-இந்தப்
    பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
    பாரத நாடு".

    என்னும் பாரதியார் பாட்டை இதனோடு ஒப்பு நோக்குக.

  6. நரஸ்துதி செய்தமையால் “மூன்று வருஷத்துக்குள்ளே பல்லக்கு நாற்பது வராகனுக்கு விற்கப்பட்டழிந்து போனதுமன்றி அதைக் கொடுத்த சினேகிதர்களுடைய பட்சமும் வெகுதூரம் குளிர்ந்து போயிற்று” என்று அத் நொண்டி நாடகத்தின் முகவுரை எழுதியவர் கூறுகின்றார்.
  7. இரண்டு மரஞ் செய்தான்-அதில்
    ஒன்றருந்தத் தீது
    பண்டுவில காது-பவம்
    கொண்டு வந்தாள் மாது”

    என்பது மற்றொரு பாட்டு.