உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/அகராதி ஆசிரியர்

விக்கிமூலம் இலிருந்து

9. அகராதி ஆசிரியர்


முற்காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் இலக்கியங்களை அறிதற்குக் கருவியாயுள்ள நிகண்டு நூல்கள் இயற்றியவாறே பிற்காலத்தில் கிருஸ்தவத் தொண்டர்கள் அகராதி நூல்கள் தொகுத்து உதவினர். 'அகரம் முதல எழுத் தெல்லாம்' என்று திருவள்ளுவர் கூறிய முறையில் தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை அகரம் முதலாக வரிசைப் படுத்திப் பொருள் விளக்கும் நூலே அகராதி எனப்படும். இத்தகைய அகராதியை முதன் முதல் தமிழுலகத்திற்கு அளித்தவர் வீரமா முனிவரேயாவர். அவர் தொகுத்த அகராதி நான்கு பகுப்புடையதாய் விளங்கிற்று; ஆதலால் சதுர் அகராதி என்று பெயர் பெற்றது[1]

சதுர் அகராதி அளவிற் சிறிது ; ஆயினும் அருமை வாய்ந்தது. வீரமா முனிவரது அகராதி நெறியைக் கடைப்பிடித்து, . நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாப்ரீசியர் என்பார் விரிவான அகராதி யொன்று வெளியிட்டார்[2] அவர் ஜெர்மானிய லூதரன் மடத்தைச் சேர்ந்தவர். அவர் தொகுத்த அகராதியில் இலக்கியச் சொற்கள் மட்டுமேயன்றிப் பேச்சு வழக்கிலுள்ள பல சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழில் வந்து வழங்கும் வடமொழிச் சொற்கள் உடுக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன[3]. அன்றியும் ஒவ்வொரு சொல்லின் பொருளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கப்பட்டிருத்தலால் அவ்வகராதி தமிழ் நாட்டில் வர்த்தகம் செய்த ஆங்கில நாட்டார்க்கும், கிருஸ்து மத போதகம் செய்த அறிவாளர்க்கும் பெரும் பயன் விளைப்பதாயிற்று.

பாப்ரீசியரது அகராதியின் பயனறிந்த அறிஞர் சிலர் மேலும் அத்துறையில் ஊக்கமுற்று உழைப்பாராயினர். அன்னவருள் முன்னின்றவர் ராட்லர் என்னும் நல்லறிஞர். அவர் தமிழாசிரியர்களின் உதவி பெற்றுப் பல்லாண்டுகளாக உழைத்து முப்பத்தேழாயிரம் தமிழ்ச் சொற்களைத் தொகுத்தார்; அவற்றை நான்கு பாகங்களாக வகுத்து அச்சிடத் தொடங்கினார். இரண்டாம் பாகம் அச்சாகும் பொழுது அவர் வாழ்நாள் முடிவுற்றது. அவர் எடுத்த பணியைத் தொகுத்து முடிக்க முன்வந்தார் டெயிலர் என்னும் அறிஞர். ஆயிரத்து. நானூறு பக்கங்கொண்ட பேர் அகராதியாக அது வெளிப்பட்டது.

அதற்கு இருபதாண்டுகளுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க சங்கத்தார் இன்னும் விரிவான அகராதி யொன்று வெளியிடவிரும்பினர். அவர்கள் சார்பாகப் பெர்சிவல் முதலிய அறிஞர் பலர் பல் காலமாகத் திரட்டிய அகராதியைப் பதிப்பிக்கும் பொறுப்பும் உரிமையும் வின்சுலோ என்னும் வித்தகர்க்கு வாய்த்தது, எடுத்த பணியைத் திறமையாக நடத்தும் மனத்திண்மை வாய்ந்த அவ்வறிஞர், அறுபத்தேழாயிரம் சொற்கள் அடங்கிய, பேரகராதியை அச்சிட முற்பட்டார்[4] அதன் செலவு, அளவு கடந்து. சென்றது. அமெரிக்க சங்கத்தார் அதன் பொறுப்பை ஏற்று நடத்த இயலாது தளர்வுற்றார். முந்நூற்று அறுபது பக்கம் அச்சிட்டு முடிந்த அளவில், அகராதி வேலை முறிந்துவிடுமோ என்ற கவலை பிறந்தது. அந் நிலையில் ஆசிரியர். வின்சுலோ சென்னை அரசாங்கத்தாரது உதவியை நாடினார். அன்னார் அகராதி முற்றுப் பெற்றவுடன், நூறு, பிரதிகள் விலை கொடுத்து வாங்குதல் கூடும் என்று வாக்களித்தனரேயன்றி முன்பணம் கொடுத்து உதவ இசைந்தாரல்லர். எடுத்த வேலையை முடிக்கும் வகையறியாது பெருங் கவலைகொண்டார் வின்சுலோ ஐயர் ; அகராதி அச்சிட்டு முடிவதற்குப் பின்னும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் : என்று கணக்கிட்டார். அத் தொகையை எவரும் கொடுக்க முற்படாமையால் பங்கு சேர்த்துப் பணம் திரட்டலாமா என்று கருதினார். பங்கு ஒன்றுக்கு இருநூறு ரூபாயாக எழுபது பங்கு சேர்க்க முயன்றார். ஆயினும் அவர் கருதியவாறு பங்குகள் விலைப்படவில்லை. அந் நிலையில் வேறு வழியின்றித் தம் சொந்தப் பொறுப்பில் ஐயாயிரம் ரூபாய் கடன்பட்டு, அச்சு வேலையை முடித்து அகராதியை வெளிப்படுத்தினார்[5]. ”கடன் கொண்டும் செய்வன செய்தல் நன்று” என்ற உண்மையை மனத்திற்கொண்டு, தொண்டு செய்த வின்சுலோ ஐயர் போன்ற பெரியார் என்றும் தமிழ் நாட்டாரது நன்றிக்கு உரியராவர் அன்றோ ?

இவ்வாறு வளர்ந்து வந்த தமிழகராதியில் பின்னும் பல சொற்கள் பல திசைகளினின்றும் வந்து சேர்ந்தன, தமிழ் நூல்களில் இடம் பெறாத பல்லாயிரம் சொற்கள் பேச்சுத் தமிழிலே வழங்கி வந்தன. மகமதியரது ஆட்சிக் காலத்தில் வந்த அரேபியச் சொற்களும் பாரசீகச் சொற்களும் பலவாகும். இன்று நீதிமன்றம், நிலவரி மன்றம் முதலிய அரசியல் நிலையங்களில் வழங்கும் சொற்கள் இதற்குச் சான்று பகரும். வக்கீல் என்பது அரேபியச் சொல். குமாஸ்தா என்பது பாரசீகச் சொல். அயன் என்பதும், இனாம் என்பதும் அரேபியப்பதங்கள். அரசியல் துறையில் சர்க்கார், தர்பார் முதலிய சொற்கள் பாரசீகம். ஜில்லா, கஸ்பா முதலியன அரேபியம். இன்னும் ஐரோப்பியர் வர்த்தக முறையிலும், துரைத்தன வகையிலும் இந்நாட்டிற் கலந்த பொழுது அவர் மொழிச் சொற்கள் தமிழ் மொழியிலே சேர்ந்தன. அவ்விதம் சேர்ந்த சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலவே வழங்கி வருகின்றன. ஜன்னல் என்னும் சொல் வீடுதோறும் வழங்குகின்றது. ஆயினும் அது தமிழ்ச்சொல் லன்று. காலதர் என்ற சொல் முற்காலத்தில் வழங்கிற்று[6]. காற்று வரும் வழி என்பது அச்சொல்லின் பொருள், அது இக் காலத்தில் வழங்குவதில்லை. பலகணி என்பது மற்றொரு சொல். சாளரம் என்பது இன்னொரு சொல். இவையெல்லாம் இப்பொழுது பெரும்பாலும் மறைந்து விட்டன. ஜன்னல் என்ற போர்ச்சுகீசியச் சொல் நிலைத்து விட்டது.

ஜன்னல் போலவே சாவியும். வீடுதோறும் வழங்கும் சொல். பூட்டைத் திறப்பதற்குப் பயன் படும் கருவி சாவி யெனப்படும். முற்காலத்தில் திறவுகோல் என்பது அதன் பெயராக வழங்கிற்று. சேர நாட்டார் தாழ்க்கோல் என்று அதனை அழைத்தனர். தாழ் என்பது பூட்டு. எனவே தாழ்க்கோல் பூட்டைத் திறக்கும் கருவிக்குப் பெயராயிற்று. இப்போது அச்சொற்கள் பெரும்பாலும் பேச்சுத் தமிழினின்றும் போய்விட்டன. சாவி வந்துவிட்டது. சாவி என்பது தமிழன்று; போர்ச்சுகீசியம். இவ்வாறு பரங்கியரோடும் ஆங்கிலேயரோடும் கலந்து தமிழ் நாட்டார் ஏற்றுக் கொண்ட பதங்கள் நூற்றுக் கணக்கானவை [7]

இத்தகைய சொற்களை யெல்லாம் சேர்த்து வின்சுலோவின் அகராதியைப் பெருக்கியும் புதுக்கியும் வெளியிடல் வேண்டும் என்ற கருத்து அறிவாளர் உள்ளத்தில் அரும்பிற்று. பல்லாண்டு தமிழ் நாட்டில் உழைத்துப் பழுத்த முதுமையுற்று, ஆங்கில நாட்டிற் போந்து தமிழ்ப்பணி செய்து கொண்டிருந்த போப்பையர் மனத்திலும் இவ்வார்வம் பிறந்தது. தமிழறிந்தவர் ஒருவரை உதவிக்கு அனுப்பினால் தாமே வின்சுலோவின் அகராதியைப் புதுக்கித் தருவதாக அவர் சென்னை அரசாங்கத்தாருக்கு அறிவித்தார். ஆயினும் அக் கருத்து நிறைவேறு முன்னமே போப்பையர் வாழ்வு முடிந்துவிட்டது. அவர் தொகுத்து வைத்திருத்த சொற்களையும் குறிப்புக்களையும் சென்னைக் கையெழுத்து நூல் நிலையத்திற்கு அவர் மைந்தர் அன்புகூர்ந்து அனுப்பினார்.

அப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்த சாந்தலர்[8] என்னும் ஆங்கில அறிஞர் அப் பேரகராதியை வெளியிடுவதற்கு ஒரு திட்டம் வகுத்துச் சென்னை அரசாங்கத்தார்க்கு அனுப்பினார். அன்னார் அதனை ஆதரித்தார்கள். இந்திய நாட்டு அமைச்சர் அப்பணியின் அவசியத்தை உணர்ந்து நூறாயிரம் ரூபாய் செலவிட அனுமதியளித்தார்.[9] பேரகராதியின் பதிப்பாசிரியராகச் சாந்தலரே நியமிக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகள் அவர் வேலை பார்த்தார் ; எழுபதாம் வயதில் இளைப்பாறக் கருதி விடுதி பெற்றார்.

அரசாங்கத்தார் குறித்தவாறு ஐந்து ஆண்டுகளில் அகராதி முற்றுப் பெறவில்லை; அதன் செலவு நூறாயிரம் ரூபாய் அளவில் நிற்கவும் இல்லை. அந்நிலையில் அரசியலாளர் கருத்துக்கிணங்கி அகராதியின் பொறுப்பையும் உரிமையையும் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது[10]. ஏறக்குறைய இருபத்தைந்து. ஆண்டுகளில் முற்றுப்பெற்ற பேரகராதி ஏழு பெருந்தொகுதியாகத் 'தமிழ் லெக்சிக்கன்' என்னும் பெயரோடு விளங்குகின்றது. நூறாயிரம் சொற்கள் அவ்வகராதியிற் காணப்படும். அப் பேரகராதியைச் சுருக்கிச் சிற்றகராதியொன்று வெளியிடும் முயற்சி இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே நிகண்டுக் காலம் கழிந்து அகராதிக் காலம் வந்த பின்னர் தமிழ் மொழியின் சொல் வளம் பெருகி வருவது நன்கு விளங்கும். அச் சொற்களைத் தொகுக்கும் பெரும்பணியில் ஈடுபட்டு உழைத்த வீரமாமுனிவர், பாப்ரீசியர், ராட்லர், டெய்லர், வின்சுலோ, சாந்தலர் ஆகிய அறிஞர் அறுவரையும், அவருக்குத் துணைபுரிந்த புலவர் பல்லோரையும் தமிழ்நாடு என்றும் போற்றும் கடப்பாடு உடையதாகும்.


குறிப்புகள்

  1. பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு வகுப்புகள் அவ்வகராதியில் உள்ளன.
  2. இது கி.பி. 1779ம் ஆண்டில் சென்னை வேப்பேரியில் பதிப்பிக்கப்பட்டது.
  3. "Asterisks are used as the sign of Grandam words -- become usual in-the Malabar {Tamil) language“

    -Preface to the Dictionary

  4. This Comprehensive Tamil and English Dictionary embraces both the common and poetic dialects of the Tamil language, including its principal astronomical, astrological, mythological, botanical, scientific and official terms, as also the names of many authors: poets, heroes and gods”.

    -Preface to Winslow's Dictionary,

  5. கி. பி. 1882ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  6. "மான் கண் காலதர் மாளிகை” என்பது சிலப்பதிகாரம் கால் - காற்று ; அதர் - வழி.
  7. இவற்றின் தன்மையை Tamil-Literary and Cal-loanial'" என்ற என் கட்டுரையிற் காண்க. (Annals of the Oriental Research Institute, University of Madras, Vo. III. part 2)
  8. Rev. R. S. Chandler.
  9. The Secretary of State stated:– “the estimated cost of Rs. 1,00,000 is heavy but in view of the evident need for such a work I have decided to sanction the expenditure.”

    —Despatch dated 30th August 1912.

  10. The total cost of preparation and publication of the Lexicon, since its commencement: in January, 1913 has come, to .about Rs. 4,00,000.. The excess over the Government grant of Rs. 1,00,000 has been met by the University.

    -Preface to the Tamil Lexico