உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/அதிகாரிகளிடத்திலே அதிகாரம்

விக்கிமூலம் இலிருந்து



27. அதிகாரிகளிடத்திலே அதிகாரம்

இது வரை ஒன்பது கிரேக்க நாட்டுப் புகழ்மிக்க வீரர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். புகழேணியில் அவர்களை ஏற்றி வைத்த ஒலிம்பிக் பந்தயங்கள் எல்லாம். இசைவிழா நாடகவிழா போல, மக்கள் மாமன்றம் கூடிநடத்தும் மதத்தின் பெயரால் அமைந்த திருவிழா போலவே நடத்தப்பட்டிருக்கின்றன.

மத விழாக்களைப் போலவே, கோயிலும் ஆராதனையும் கொண்டாட்டமும் ஆக, பந்தயங்கள் கோலாகலமாக அந்தந்த மாநிலத்தில் நடத்தப்பட்டன.

விளையாட்டுக்களை நடத்துகின்ற அதிகாரிகளாக ஹலேநாடிகை (Helanodikai) எனும் குழு மற்ற மாநிலங்களில் பணியாற்றும் நீதிபதிகளைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் பயங்கர விதிகளுக்கு உட்பட்டு, பங்கு பெற்றது போலவே அதிகாரிகளும் பயந்துகொண்டு தான் தங்களது முடிவைக் கூறவேண்டியவர்களாக இருந்தார்கள். சில சமயங்களில் அபராதம் கட்டுகின்ற நிலைமைக்கும் ஆளானார்கள் என்றால் பாருங்களேன்.

கி.மு. 396ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இது. போலிமாஸ், லியான் என்று இரண்டு ஓட்டக்காரர்களிடையே ஏற்பட்ட முடிவின் பேதத்தால், முடிவு செய்த அதிகாரிகள் மாட்டிக் கொண்டார்கள்.

போலிமாஸ் என்பவன் தான் முதலில் வந்தான், வென்றான் என்று மூவரில் இருவர் தீர்ப்பளித்தனர். ஒருவரோ லியான்தான் வென்றான் என்று கூறினார். இதை அறிந்த லியான், அங்கிருந்த ஒலிம்பிக் கவுன்சிலிடம் சென்று முறைகேடு நடந்து விட்டது, நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டான்.

கவுன்சிலின் நிர்வாகக் குழு கலந்தாலோசித்து, அதிகாரிகள் தோற்றவனுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதே சமயத்தில் முதலில் வந்தவன் என்று தீர்மானிக்கப்பட்ட முடிவு மாற்றப் படவில்லை. அதிகாரிகள் நஷ்ட ஈடு கட்டுகின்ற நிலைமையில் நிறுத்தப்பட்டதால், நிம்மதியில்லாமலே அந்த நீதிபதி வேலையை செய்து கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகின்றது.

போட்டிகள் எல்லாம் முடிந்தவரை விடியற்காலையிலேயே நடத்தினார்கள். காரணம் என்னவென்றால், சூரிய வெப்பம் தாக்காத குளுமை வேளை நன்றாக ஓடத் தாண்ட என்ற அளவில், அதிக சுறுசுறுப்பை உண்டாக்கும் என்பதால் தான்.

ஒரு பந்தயம் நடந்து மறுபந்தயம் நடக்கின்ற இடைவெளிக்குள், பந்தயத்திடல் முழுவதும் புல் புதராக மண்டிவிடும். இந்தப்புல் அகற்றிப் பிடுங்கும் பணியை, போட்டியில் பங்கு பெறும் உடலாளர்கள்தான் செய்திருக்கின்றார்கள். அவர்கள் புல் பிடுங்கி தரையை செதுக்கி வேலை செய்வதைப் பார்த்து வேறு அடிமைகள் இல்லையா இதனைச் செய்ய, என்று மற்றவர்கள் கேட்கின்ற நிலையில், போட்டியிடுபவர்கள் பொறுமையாக வேலை செய்திருக்கின்றார்கள்.

விளையாட்டுப் போட்டிகளை எல்லாம், பெரும் பணக்காரர்கள் மனமுவந்து அளித்த பெருங்கொடையினால் தான் நடத்தப்பட்டிருக்கின்றன. போட்டியாளர்கள் தங்கள் மேனியில் தேய்த்துக் கொள்ள ஆலிவ் எண்ணெய் தருவதிலிருந்து மற்றும் அத்யாவசியமான பொருட்களை அளிப்பது வரை பணக்காரர்கள் கொடையே பரிணமிக்கச் செய்திருக்கின்றன. செல்வந்தர்களின் செம்மாந்த வள்ளல் தன்மை தான், நாட்டின் சிறப்பையே வானளாவ உயர்த்தியிருக்கின்றன.