கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பிறந்தமேனியும் பெருமையும்

விக்கிமூலம் இலிருந்து



28. பிறந்தமேனியும் பெருமையும்

விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்ற போட்டியாளர்கள், பிறந்த மேனியுடனே பங்கு பெற்றார்கள். அதற்கும் ஒரு சில காரணங்களைக் காட்டுகின்றார்கள் வரலாற்றாசிரியர்கள்.

கி.மு. 720ம் ஆண்டு, மெகாரா எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவீரன். அவன் பெயர் ஒரிசிப்பஸ். அவன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டான். ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும்பொழுது பாதிவழியில், அவன் அணிந்திருந்த கால்சட்டை கழன்று விழுந்து விடுகிறது. என்றாலும் அவன் வெற்றி பெற்று விடுகிறான். ஆகவே ஒன்றுமில்லாமல் ஓடுகின்ற முறையே பின்பற்றப்பட்டது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

ஏதென்ஸ் நகரத்தார் புதுமை செய்ய வேண்டும் என்று விழைந்தார்களாம். ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ஓட்டக்காரர் கால்சட்டை நழுவி விழுந்து, தடுமாறி அவரும் கீழே விழுந்துவிட ஏதுவாக இருப்பதால், எப்பொழுதும் பிறந்த மேனியுடனேயே ஓட வேண்டும் என்ற விதியை அமைத்து விட்டார்களாம்.

கிரேக்க நாட்டவர்கள், உடலை மிகவும் செம்மையுடனும் சிறப்புடனும், கட்டுடலாகவும் வைத்துக் கொண்டிருந்ததால், பிறர் பார்த்து மகிழவும், அவர்கள் மகிழ்ச்சியில் தாங்கள் மகிழ்ந்துபோகவும் கூடிய சூழ்நிலை அமைந்ததால், பிறந்த மேனி விதியை பெரிதும் ஆதரித்தனர் என்றும் ஒரு கருத்து கூறப்பட்டிருக்கிறது.

அதற்கு சான்றாக ஒரு கருத்தைக் கூறுகின்றார்கள். கிரேக்கர்கள் எப்பொழுதும் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் பொழுது கூட திறந்த மேனியராக இருக்க விரும்பினார்கள் என்பதாகும்.

அவ்வளவு அடக்கு முறையைக் கையாண்ட கிரேக்கர் காலத்திலேயே, ஆண்களுக்குப் பெண்கள் சிறிதும் சளைத்தவர்கள் அல்லர் என்பதாக, ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார்கள்.

பெண்களுக்காக நடந்த ஓட்டப்பந்தயத்தை ஹிப்போடோமியா எனும் அரசி, தன் திருமணமானது பிலாப்ஸ் என்பவனுடன் நடந்ததைக் கொண்டாடும் முகத்தான் ஆரம்பித்தாள் என்று ஒரு வரலாறு கூறுகின்றது.

பெண்களுக்கான ஓட்டப் பந்தயமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. அதுவும் ஹீரா எனும் பெண் தெய்வத்தை வணங்கி நடத்தப்பட்டது. ஆண்கள் நடத்திய பந்தயங்கள் சீயஸ் எனும் கடவுள் சிலை முன்னிலையில் நடத்தப்பட்டது போல.

16 பெண்கள் அடங்கிய குழு ஒன்று நெய்த அழகிய (மேலாடை) அங்கி (Robe) ஒன்றை ஹீரா தெய்வச்சிலைக்கு அணிவித்து, விளையாட்டு விழாவைக் கொண்டாடினார்கள். திருமணம் ஆகாத கன்னியர்களே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவிழ்ந்த முடி, இடுப்பிலிருந்து முழங்கால் வரை தொங்குகின்ற இடைக்கச்சை (Tunic), இடுப்புக்கு மேலே திறந்த மேனியராகவே அவர்கள் ஓடினார்கள். ஆனால், அவர்களுக்கென்று தனியாக விளையாட்டு மைதானம் அமைந்திருந்தது.

வெற்றிபெற்ற வீராங்கனைக்கு ஆலிவ் மலர் வளையம் உண்டு. ஆண்களுக்குரிய பரிசு போல்தான். ஆனால், அதற்கடுத்து, அற்புதமான விருந்தும் உண்டு. அதாவது, ஹீரா தெய்வத்திற்குப் பலியிட்ட காளை மாட்டின் கறித்துண்டும் கிடைக்கும். வெற்றி பெற்றவர்கள், தங்களைப் புகழ்கின்ற சிறப்புக் குறிப்புக்களுடன் சிலை எழுப்பிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

இத்தகைய சிறப்புடன் ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டில் நடத்தப்பெற்றன. வலிமையான தேகத்தைப் பெற்று, வாழ்வாங்கு வாழ்ந்த அவர்கள், வரலாற்றில் வானளாவிய புகழுடன் வாழ்கின்றனர்.

தங்கள் தேகத்தில் திறமும் திறனும் நிறைந்திருந்த நாட்களின் தேனினுமினிமையாக, அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அவர்களிடையே திறம் குறைய ஆரம்பித்ததும், வாழ்க்கைத் தரமும் குறையத் தொடங்கியது. ரோமானியர்களிடம் தோற்றனர். அவர்கள் கட்டிக் காத்த ஒலிம்பிக் பந்தயம் காற்றிலடிபட்ட பட்டமாகத் துடித்தது. கடைசியில் நூலறுந்த பட்டமாகியது. இறுதியில் தேய்ந்தே அழிந்தது. அதைத்தான் கிப்னிஸ் என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

அநேக நாடுகள் எவ்விதச்சுவடும் இல்லாமல் அழிந்தே போயின. காலமெல்லாம் வரலாறு வடித்துக் காட்டுகின்ற உண்மையாகவே நம்மிடையே உலவுகின்றன. அவ்வாறு நாடுகள் எல்லாம் அழிந்து போனதற்குரிய காரணம் என்ன வென்றால் - அது மிகவும் சாதாரண காரணம் தான். அவர்களும், அந்த நாடும் அழியக் காரணம் மக்கள் தங்கள் உடல் திறனை (Physical Fitness) இழந்ததினால்தான் வீழ்ந்தார்கள் என்பதே.

வீறுபெற்று விளங்கிய வீரர்களை உருவாக்கிய கிரேக்கம் வீழ்ந்தது. மக்கள் தங்கள் உடல் திறனின் சக்தியை உணர்ந்து கொள்ளாமல் இருந்ததால்தான், என்ற உண்மையை அறியும்போது, ஒரு நாடு உயர வேண்டுமானால், உடல்திறன் நிறைந்த மக்களையே வளர்க்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா!

உடல் திறனை வளர்ப்போம். உயர்ந்த வாழ்வு வாழ்வோம் வீர பரம்பரையைத் தோற்றுவிப்போம். வேண்டிய எல்லாம் வேண்டியாங்கு பெறுவோம் என்ற இலட்சியத்தை நாம் அடைய இன்றே முயல்வோம்.

நலமுடன் வாழும் நாளே நனிசிறந்த நன்னாள் என்போம். இவ் வீரக்கதைகள் கூறும் விளக்கம் இதுவே. வாருங்கள்! சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து செல்லும் உயர்வாழ்வு வாழ்வோம்.