கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கிரேக்க பந்தயங்களின் வீழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
16 கிரேக்க பந்தயங்களின் வீழ்ச்சி

உதயமாகி, ஒளிதந்து, உலகைக் காத்து, ஓப்பற்ற மகிழ்ச்சியில் மக்களை ஆழ்த்திய சூரியன், ஒளி குறைந்து உலகைவிட்டே மறைந்து போவதுபோல், கற்பனையில் காணுகின்ற இன்பங்கள் அனைத்தையும் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தி, காட்சியாக்கி, மாட்சிமை நிறைந்த மனிதகுலத்தின் சக்தியை மன்பதைக்கு, வெளிப்படுத்திக் களித்த கிரேக்க மக்களுக்குக் காலம் கடும் சோதனையைக் கொடுத்தது.

அருகே இருந்த ரோமானிய சாம்ராஜ்யம் புகழிலும், பெருமையிலும், வலிமையிலும், வாழ்க்கைத் தரத்திலும், நாகரிகத்திலும் மேம்பாடடையத் தொடங்கிய போது கிரேக்க நாடு பீடிழந்தது. பெருமையிழந்தது. ஆமாம். கிரேக்கர்களை வென்று, ரோமானியர்கள் ஆளத் தொடங்கினர். நாட்டின் சரித்திரப் பெருமை சிறப்பாற்றல் நலியத் தொடங்கவே, மக்களின் மனதிலே மாபெரும் பெருமையுடன் உங்கலப் பொருளாய் வீற்றிருந்த விளையாட்டுக்களின் மகிமையும் நலியத் தொடங்கியது.

விளையாட்டுக்களிலே மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிந்திருந்தாலும், இதோ இந்த சான்றினைப் படித்துப் பாருங்கள். விளையாட்டு வீரர்களின் திறமையைக் கேளுங்கள்.

எல்லா வீரர்களுமே, எல்லா போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றனர். போட்டியிடுகின்ற அத்தனை வீரர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிதான் வரும் என்பதே தெரியாது. வரையறையோ, விதிமுறையோ கிடையாது என்றாலும், அவர்கள் ஆர்வத்துடன் அயராது போட்டியிட்டனர். அந்த அளவுக்கு, அவர்களுக்கு உடலில் நெஞ்சுரமும், பேராற்றலும் நிறைந்திருந்தன.

முதலாவதாக, எல்லோரும் நீளத்தாண்டலில் பங்கு பெற்றனர். அதிலே குறிப்பிட்ட அளவு தாண்டியவர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே வேலெறியும் போட்டியில் (Javelin Throw) கலந்து கொள்ள அனுமதிக்கப் பெற்றனர். விரைவோட்டத்திற்குத் (Sprint) தேர்வு செய்யப் பெற்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முதலாவதாக வந்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள், விரைவோட்டம் ஓடியபிறகு, மூன்று பேரை மட்டுமே சிறந்தவர்கள் என்ற தெரிவு செய்தனர். இவ்வாறு முன்னால் ஓடிவந்த மூன்றுபேர் மட்டுமே நான்காவது நிகழ்ச்சியான தட்டெறியும் (Discus Throw) போட்டிக்கு அனுமதிக்கப் பெற்றனர். இந்நிகழ்ச்சியிலும் இறுதியாக அதிக தூரத்தை எறிந்த இருவரும் வெற்றி வீரர்களாகக் கருதப்பட்டனர்.

இந்த இருவரும் வெற்றி வீரன் (Champion) எனும் விருதைப்பெற மல்யுத்தம் செய்தனர் அதில் வெற்றி பெற்றவனே வீரன் என அழைக்கப் பெற்று பாராட்டப் பெற்றான், பரிசளிக்கப் பெற்றான்.

ஆக, ஒரு போட்டியிடும் உடலாளன் (Athlete) வெற்றி, வீரனாக வர, அவன் நீளத் தாண்டல், வேலெறிதல், விரைவோட்டம் ஓடுதல், தட்டெறிதல், மல்யுத்தம் செய்தல் என்ற ஐந்து நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெறவேண்டியிருந்தது.

இவ்வாறு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு வீரனுக்குப் பரிசு மட்டும் அல்ல. சிறப்புப் பரிசும் தந்து கெளரவித்தார்கள். அதுதான் அவனைப் போன்ற சிலை சமைத்துப் பெருமைப் படுத்தியது.

இத்தகைய பெருமை மிக்க விளையாட்டுக்களை நடத்திய கிரேக்க நாடு, ரோமானியர்கள் கையிலே பிடிபட்டுப் போனவுடன் புகழிலே மட்டும் கீழ் நிலையடையவில்லை. தூய கலப்பற்ற கிரேக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். என்று காக்கப்பட்டு வந்த கடுமையான விதி, தூள் தூளாகப் பொடிபட்டுப் போக தூக்கி எறியப்படுவதையும், மணியான மரபு மண்ணாகிப் போவதையும் கண்டு சகித்துக்கொண்டு மாற்றார்களையும் போட்டிக் களத்திற்குள் புகவிட்டு இழிநிலைக்கு ஆளாயினர். கிரேக்கர்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்த பந்தயம், மெசபடோமியா, ரோம் போன்ற வேற்று நாட்டு வீரர்களுக்கும் பொதுவாகிப் போனது.

அடிப்படை விதியே ஆட்டம் காணத் தொடங்கியபோது, அங்குள்ள மக்களும் ஆர்வமிழக்கத் தொடங்கினர் விளையாட்டுக்களில் முன்பிருந்த ஆர்வம் மட்டுமல்ல. மத சம்பந்தமான மரபும் புனிதத் தன்மையும் வீழத் தொடங்கின. நாடும் வலிமையை இழக்கத் தொடங்கியது. உள் நாட்டு பாசி படியலாயிற்று. பந்தயங்களில் கலந்து கொள்ளக் கூடிய விதிமுறைகளைப் பற்றியே, போட்டியாளர்கள் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினர். அதாவது மாறுபட்ட முறையில்!

போட்டியில் பங்கு பெற பத்து மாதங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்பது அந்த விதி! அவ்வாறு பத்து மாதங்கள் பயிற்சி செய்யவேண்டும் என்றால், அவனால் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. அதற்குத் தேவையான பொருளாதார வசதியும் வேண்டும், பயிற்சிக்குப்பிறகு தேவைப்படுகின்ற ஓய்வைப் பெறுகின்ற நலமார்ந்த குடும்பச் சூழ்நிலையும் துணைதர வேண்டும். இத்தனையும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆர்வத்துடன் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற விரும்பும் ஒரு போட்டியாளனுக்கு ஆகின்ற செலவு முழுவதையும் அவனோ அல்லது அவனது குடும்பமோதான் ஏற்றுக்கொள் வேண்டியிருந்தது.

பயிற்சிக்கு மட்டுமல்ல, அவன் ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் போய் வருகின்ற செலவைக் கூட அந்தத் தனி மனிதனேதான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு, பயிற்சிக்கும் பந்தயம் நடக்கும் ஒலிம்பியாவுக்கும் போய்வர செலவழித்து, போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால், அந்த வெற்றியை ஆர்ப்பாட்டமாக, ஆனந்தத்துடன் கொண்டாட வேண்டுமென்றால், அந்தக் கொண்டாட்டத்திற்காகும் செலவைக்கூட, அவனே தான் ஏற்க வேண்டிய நிலையில் அந்நாளில் அவன் இருந்தான். இந்தச் செலவை, கஷ்டத்தை மட்டுமா போட்டியாளர்கள் நினைத்தார்கள்? இன்னும் என்னென்னமோ நினைத்தார்கள்?

தேர் ஓட்டப் பந்தயங்களில் பங்குபெறும் தேரோட்டியே தான், குதிரைகளையும் தேரையும் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்பந்தயக் குதிரைகளைப் பராமரிக்கும் செலவு எவ்வளவு ஆகும் என்பதை அனுபவிக்கும் போது தான் நமக்குப் புரியும். உயிரை வெறுத்து, தேரோட்டப் போட்டியில் பங்குபெற்று ஒருவன் வெற்றி பெற்றால், பரிசு கிடைப்பது தேரோட்டியான வீரனுக்கு அல்ல; அவனுக்குக்குதிரைகளைத் தந்த குதிரைக்குச் சொந்தக்காரனே பரிசுக்கு உரியவனாக இருந்தான். ஆகவே, இந் நிகழ்ச்சியின் கொடுமையையும் எண்ணிப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் வீரர்கள்.

இவ்வளவு செலவையும் ஏற்றுக்கொண்டு, சிரமத்துடன் பயிற்சி செய்து, உயிரை துரும்பாக நினைத்துப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்கள்? ஆலிவ் மலர் வளையம்தானே! இறைவன் கோயில் அருகே வளர்ந்த ஒரே காரணத்தால் ஆலிவ் மரங்கள் புனிதம் மிகுந்தவை என்பதை பக்திப் பெருக்கில் வாழ்ந்த முற்கால மக்கள் ஒத்துக்கொண்டனர். உண்மையுடன் வழிபட்டனர். பெருமையுடன் ஏற்றுக் கொண்டனர். ஆனால், பாதை மாறிப்போன பிற்கால மக்களுக்கு, அந்நியர் ஆட்சியில் அடங்கிக் கிடந்த மக்களுக்கு எவ்வாறு புரியும்?

இலையாலான மலர் வளையப் பரிசு எங்களுக்குத் தேவையில்லை என்ற அளவுக்கு கிரேக்க நாட்டு வீரர்கள் கேவலமாகப் பேசத் தொடங்கினர். வெறும் புகழ் ஆரவாரம், வெற்றுக் கூச்சல், வீணான பேச்சு வார்த்தை அலங்காரம் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று வாதாடவும் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு பேசியவர்கள் இறுதியாக, வெற்றிக்குப் பரிசாகப் பணமும், விலையுயர்ந்த பரிசுப் பொருள்களுமே வேண்டும் என்று விரும்பினர், வற்புறுத்தினர் வேறு வழியில்லை... அவர்கள் வளர்ந்த வளர்ப்பு அவ்வாறு? பெற்றப் பண்பாடு அப்படி.

நாட்டுப் பற்றோடும், நல்லிறைவன் திருப்பெயரோடும், நனிசான்ற உடல் ஆற்றலோடும் இணைந்த மத விழாவாகவும், மாண்புமிகு விளையாட்டு விழாவாகவும், கிரேக்க நாட்டிலே கொண்டாடப் பெற்ற ஒலிம்பிக் பந்தயங்கள், நாளா வட்டத்திலே தமக்குரிய மகத்துவத்தை, மேம்பாட்டை இழக்கத் தொடங்கின.

புனித விழாவாகப் புவியிலே பிறப்பெடுத்த பந்தயத்திடல், மேலும் மேலும் வியாபாரத் தலமாக, வம்பர்கள் கூடி வாயாடி மகிழும் மடமாக, வேடிக்கைக் காட்டும் சர்க்கஸ் கூடாரமாக, பொழுது போகாதவர்கள் ஏனோதானோவென்று வேடிக்கைப் பார்த்துப் பொழுதைக் கழிக்கும் இழிநிலை அரங்கமாக மாறத் தொடங்கியது.

இத்தனைக்கும் மேலாக, இன்னொரு நிகழ்ச்சி நடந்தது, மண்ணாளும் மன்னன் நீரோ செய்த அக்கிரமங்கள் தான் ஒலிம்பிக் பந்தயங்கள் ஒழிந்து போவதற்கே காரணமாக அமைந்தன. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது தன்னிகரில்லாமல் தரணியிலே வாழ்ந்த தமிழர்களின் கொள்கை, தாயே தன் குழந்தைக்கு நஞ்சு ஊட்டினால் தடுப்பார் யார்? என்பது போல, ஆண்டவன் திருத்தலத்தோடு தொடர்புள்ள அரங்கத்தில், அருமையான விதிகளையுடைய பந்தயங்களை அரசனே மாற்றினான் என்றால், மக்கள் எப்படி மதிப்பார்கள்? ரோம் எரியும்போது பிடில் வாசித்தான் நீரோ என்பார்களே, அதே நீரோதான், கிரேக்கர்கள் கட்டிக் காத்த, கண்ணான கோட்டையை மண்மேடாக்கினான். அவ்வாறு அவன் என்ன செய்தான்?

நீரோ என்ற அந்த மன்னன், பந்தயத்தில் போட்டியாளனாகப் பங்கேற்று, பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றான்! எப்படி? அங்கேதான் மன்னனின் மாபாதகச் செயலும் அடாவடித்தனமும் அடங்கிக் கிடக்கிறது. சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீரோ மன்னன், தன்னுடைய ஆட்சியின்கீழ் அடங்கிய கிரேக்க மண்ணிலே ஒலிம்பிக் பந்தயம் நடக்கும்பொழுது, தானும் பங்கு பெறுவான்.

தனக்குள்ள 5000 மெய்க்காப்பாளர்களோடு அவன் போட்டியிடுவான். போட்டியிடும் அத்தனை பேரும் மன்னனுக்கு வேண்டியவர்கள். அவர்கள் போட்டியிடுவது போல பாவனை செய்வார்கள். கடைசியாக, போட்டியில், வெல்பவன் நீரோவாகத்தான் இருப்பான். இப்படியாக எல்லாப் போட்டிகளிலும், தான் கலந்துகொண்டு அத்தனைப் போட்டி நிகழ்ச்சிகளிலும் அவனே முதலாவதாக வந்தான். தன்னைத் தவிர, வெற்றி வீரன் வேறு யாரும் இல்லை. வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற ஓர் இழிந்த சூழ்நிலையை உண்டுபண்ணி விட்டான். அது மட்டுமல்ல; ஒலிம்பிக் போட்டிகளிலே இல்லாத புதிய புதிய போட்டி நிகழ்ச்சிகளை, அவ்வப்போது, தனக்கேற்ற வகையில், தனக்கேற்ற முறைகளில் உண்டாக்கியும், மாற்றி அமைத்தும் வெற்றி பெற்றான். சிறந்த வீரனாகக்கூட வெற்றி பெற்றான். அவன் தேர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றான். எப்படி? வெற்றி பெற்ற லட்சணம் இப்படித்தான்.

தேர் ஓட்டப் பந்தயத்தில் மன்னன் நீரோவும், அவனைச் சேர்ந்த மற்ற (உடலாளர்களும்) வீரர்களும் போட்டியிட்டனர். வேகமாகத் தேரோட்டி வந்த மன்னன் பாதி வழியிலே திடீரென்று தேரிலிருந்து விழுந்துவிட்டான். மற்றவர்களுக்கு என்ன? தேரை ஓட்டிக்கொண்டு முதலாவதாகச் சென்று வெற்றி பெறவேண்டியதுதானே முறை? போட்டியில் பங்குகொண்ட அத்தனைபேரும், கீழே விழுந்த மன்னன் எழுந்து, தேரில் ஏறிக்கொண்டு, மீண்டும் தேரை ஓட்டும் வரை அதே இடத்தில் காத்துக்கொண்டு நின்றனர்.

மன்னன் பிறகு தேரில் ஏறி ஓட்டிச் சென்று முதலாவது இடத்தை அடையும் வரை, அவர்கள் அவன் பின்னால்தான் ஒட்டிச் சென்றிருக்கிறார்கள். மன்னனுக்குப் பயந்து கொண்டு மற்றவர்கள் போட்டிகளில் பின்வாங்க, மன்னன் நீரோ, தானே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டியிட்டு அத்தனைப் போட்டிகளிலும் தானே முதலாவது இடத்தைப் பிடித்து வெற்றி வீரனாக வந்திருக்கிறான். புகழ் மிக்க, பேராற்றல் மிக்கதோர் ஒலிம்பிக் பந்தயத்தைப் புழுதியிலும் கேவலமாக, பொய் நிறைந்த களமாக மாற்றிவிட்டான்.

அத்துடன் விட்டானா! அந்த நாட்டை ஆள்கின்ற அரசன் என்ற ஆணவத்தாலோ என்னவோ, தானே தலையாய வீரன் என்று எண்ணிக்கொண்ட கர்வத்தாலோ என்னவோ, ஆண்டவனே வந்து அளந்து கட்டிமுடித்து ஆரம்பித்த விளையாட்டுப் பந்தய மைதானம் என்று மக்கள் நம்பி வழிபட்ட மைதானத்திற்குள்ளே, ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டான். கடவுள் குடியேறியிருந்த இடம் என்று மக்கள் வணங்கிய திடலில் மனிதன் குடியேறி, அந்த புனிதத் தன்மையையும் மாறா மரபையும் மதிப்பையும், மண்ணோடு மண்ணாக்கி விட்டான். இந்த நிலையில்தான் இறப்பா பிழைப்பா என்ற இழுபறி நிலையில் ஒலிம்பிக்பந்தயங்கள் இருந்தன.

நீரோவினால் மக்கள் நெஞ்சங்கள் புண்ணாயின. மன்னனின் மாபாதகச் செயலாலும், மக்களுக்கு மதத்தின் மேல் இருந்துவந்த பிடிப்பும் துடிப்பும் நழுவிப் போனதாலும், ஒலிம்பிக் பந்தயங்கள் சரிவர நடைபெறவில்லை. கிரேக்கன் ஒருவன் வெற்றி வீரனாக வரக் கூடிய வாய்ப்பை ரோம் நாட்டினர் அளிக்கவும் இல்லை. அனுமதிக்கவும் இல்லை.

ஆட்சியாளருக்கு முன்னால், ஆற்றலும் திறமையும் போட்டியிட முடியவில்லை, இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலையை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது. நீரோவுக்குப் பின் வந்த ரோம் நகரை ஆண்ட மன்னனான முதலாம் தியோடசிஸ் என்பவன், மத எரிச்சலின் காரணமாக, கி.மு. 394 ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தைத் தடை செய்தான்.

காலங் காலமாக, கிரேக்கர்களால் 292 முறை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த ஒலிம்பிக் பந்தயங்கள், மன்னன் இட்ட சட்டத்தால் மறைக்கப்பட்டன. புனிதமான விழாவும் ஆழப் பெருங்குழியில் இட்டுப் புதைக்கப்பட்டது. பந்தயம் மட்டும் நிறுத்தப்படவில்லை. பந்தய மைதானத்திலே புனிதத்தின் திருவுருவாக வைத்துக் காக்கப்பட்ட சீயஸ் சிலை, பந்தயம் நிறுத்தப்பட்ட மறு ஆண்டே (கி.மு. 339) உடைக்கப்பட்டது.

விழா நிறுத்தப் பெற்ற பிறகு, நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், இப்படி ஒரு அதிசயமான பந்தயம் அவனியிலே இருந்ததா என்று எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்குமளவுக்கு, மறையத் தொடங்கின. கோதர்கள் (Coths) அடிக்கடி படையெடுத்து வந்து கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள்.

இவ்வாறு அந்நியப் படையெடுப்பால், ஒலிம்பியா அவதிப்பட்டபொழுது, ரோமை ஆண்ட மன்னன் இரண்டாம் தியோடசிஸ் இட்ட ஆணையால், எல்லாக் கோயில்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. கண்ணுக்குத் தோன்றக்கூடிய சான்றுகள் எல்லாம் காவலர்களால் அழிக்கப்பட்டன.

கோயில்கள் மட்டும் இடிபடவில்லை கோயிலின் முன்னே அமைந்திருந்த சுற்றுச் சுவர்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்குமாறு மன்னன் கொடுத்த கட்டளை சிறப்பாக நடந்தேறியது. 45000, 50000 மக்களுக்கு மேல் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் அளவுக்குச் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட ஒலிம்பிக் பந்தய மைதானமும், அதனைச் சார்ந்த மதில்சுவர்களும் மண்மேடாயின.

இந்தக் கொடுமையைக் கண்ட இயற்கைக்கே பொறுக்கவில்லை போலும், தானும் தன் கை வரிசையைக் காட்டத் தொடங்கியது, சீயஸ் கோயிலை நெருப்பு எரித்துப் பொசுக்கியது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அங்கே எழுந்த பூகம்பத்தால், எஞ்சியிருந்த இடங்களும், மறைந்தொழிந்து மண்ணுள் அடங்கின. சுவடே இல்லை. சான்றுகள் எங்கே இருக்கப்போகின்றன! வரலாற்றுக் கருவூலங்களை பூகம்பம் மட்டும் புதைக்கவில்லை.... புனிதமான ஆலிவ் மரங்களை வளர்த்த புனிதமான ஆல்பியஸ் ஆறும் பொங்கியெழுந்து பெரு வெள்ளத்தைக் கொண்டு வந்து மீதியிருந்த மண்மேட்டையும் கரைத்து, சாதாரணத் தரையாக மாற்றி அழித்து ஆறுதல் அடைந்தது.

அழகான பள்ளத்தாக்கிலே, ஒப்புயர்வற்ற ஒலிம்பியா பகுதியிலே அதற்குப் பிறகு கோயிலும் இல்லை. குடியிருப்பும் இல்லை இறைவனை வணங்கவும் அதைப்பற்றி நினைக்கவும் யாரும் இல்லை காலம் மனிதனைக் கொண்டு வளர்த்தது காலமே மனிதனைக் கொண்டு அழிக்க வைத்தது.

ஒலிம்பிக் பந்தயத்தின் பீடும் பெருமையும், சீரும் சிறப்பும் எல்லாம் காலத்தால், மனிதனின் ஆங்காரக் கோலத்தால் அழிந்தன. அடுத்தடுத்து ரோமை ஆண்ட அரசர்கள், பந்தயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படக்கூட இல்லை.

பதினைந்து நூற்றாண்டுகள் பறந்தோடின. ஒலிம்பிக் பந்தயம் என்று ஒன்று இருந்ததாகவும், அது கிரேக்க நாட்டிலே நடந்ததாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். ஒரு சில குறிப்புக்கள் அவர்களுக்கு உதவின. பழைய ஒலிம்பிக் மறைந்தாலும், அது கிரேக்க நாட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்து அழிந்தாலும், இன்று அகில உலகமெங்கும் அவனி போற்றும் ஆண்மையாளன் திரு. பியரி கூபர்டின் பிரபு அவர்களால் புதிய ஒலிம்பிக் பந்தயம் தோற்றுவிக்கப்பட்டு உலக வரலாற்றில் தனித்துவ மிக்க நிகழ்ச்சியாக மக்களிடையே பேரெழுச்சியை, கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது என்பது வரலாறு காட்டும் உண்மை.