கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/வலிமையும் திறமையும்

விக்கிமூலம் இலிருந்து

15.வலிமையும் திறமையும்

ஒலிம்பிக் பந்தயம் மத சம்பந்தமான நிகழ்ச்சி என்று முன்னரே குறிப்பிட்டோம். அதே நேரத்தில், உடல் வலிமைக்கும் உன்னத இடத்தை அளித்து, உயர்ந்த நோக்கத்தோடு இயங்குகின்ற ஒப்பற்ற பந்தயம் என்றும் கூறினோம். அவ்வாறு உடல் வலிமை பெற்று வாழ்ந்த வீரர்கள் ஒரு சிலரைப்பற்றி வரலாறுகள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

போலிடோமஸ் என்ற வீரன் ஒருவன், வெறுங்கையாலேயே ஒரு சிங்கத்தை அடித்துக் கொன்றான் என்றும், காலாலேயே ஒரு காளை மாட்டை மிதித்துக் கொன்றான் என்றும், வெகுவேகமாக ஓடிய தேரை பின்னிருந்து இழுத்து நிறுத்தினான் என்றும் வரலாறு கூறுகின்றது. அது உண்மையோ பொய்யோ, எப்படி இருந்தாலும் உடல் வலிமைக்கு அவர்கள் மிகவும் முக்கியத்துவம் அளித்தனர் என்பது மட்டும் நமக்கு நன்கு புலனாகின்றது.

உடல் வலிமையால் மட்டுமல்ல, உணவு உண்ணுவதிலும்கூட அவர்கள் பெரிய அசகாய சூரர்களாகத்தான் திகழ்ந்திருக்கின்றனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில். மிலோ என்ற ஓர் மல்யுத்த வீரன் 6 முறை ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். அவன் ஒருவனே, ஒரு காளை மாடு முழுவதையும் ஒரே சமயத்தில் தின்றான் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு வலிமைக்கு முதலிடம் கொடுத்துப் போட்டியை வைத்துக் கிரேக்கர்கள், மிருகங்கள் போல சில சமயங்களில் வெறித்தன்மையோடு, விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஒரு சமயம், ஒன்பது மைல் தூரம் உள்ள தேர்ப் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட நாற்பது பேர்களில், பந்தயத்தின் கடைசிக் கோட்டைக் கடந்தவன் அதாவது உயிரோடிருந்தவன் அர்சிலஸ் என்ற ஒரே ஒரு வீரன்தான். மீதி முப்பத்தொன்பது வீரர்களும், வரும் வழியிலேயே தேர்ச்சக்கரங்களினால் இடிபட்டும், கீழே வீழ்ந்தும் தேரிலிருந்து வீழ்ந்து மிதிபட்டும், இறந்து ஒழிந்தனர். இவ்வாறு நசுங்கிச் சாகும் முரட்டுத்தனமான பந்தயங்களிலும் கூட அவர்கள் அதிக ஈடுபாடு காட்டியுள்ளனர்.

இவ்வாறு நாட்டின் தற்காப்புக்காகவும், நாட்டு மக்களின் நல்லெழில் நிறைந்த உடலழகுக்காகவும், உறுதிக்காகவும், மதத்தோடு இயைந்த பக்தி வாழ்க்கை வாழ்வதற்காகவும் ஒலிம்பிக் பந்தயங்கள் உண்டாயின. தோன்றியதன் பணியை, பந்தயங்களும் பாரபட்சமற்ற முறையில் நாட்டினருக்கும் செய்தன. கிரேக்க நாடு கீர்த்தியுடனும், செழிப்புடனும் செம்மாந்த நிலையில் வாழ்ந்த வரைக்கும், ஒலிம்பிக் பந்தயங்கள் பீடும் பெருமையும் பெற்றுத்தான் விளங்கின. ஆனால், காலம் தன் கோலத்தை செய்யத் தொடங்கியது. அதன் விளைவு....?

ஒலிம்பியாவில் நடந்தது வெறும் விளையாட்டுப் பந்தயங்கள் மட்டுமல்ல. வேடிக்கையாகப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல; அவை ஆண் மக்களின் திறமைக்கும், வலிமைக்கும் உரைகல்லாக இருந்தன. நாட்டு மக்களின் நலத்தைக் காக்கும் நிறைகளமாக விளங்கின.

அந்தப் பந்தயங்களிலே மாபெரும் மன்னர்கள் மட்டுமல்ல; வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழ்ந்த குடிமக்கள் வரை சமமாகப் பங்கு பெற்று போட்டியிட்டனர், வெற்றி பெற்றனர். விரும்பிய புகழ் பெற்றனர்.

முதன் முதலாக நடந்த ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றிபெற்ற வீரனின் பெயர் எல்லிஸ் நகரத்தைச் சேர்ந்த கரோபஸ் என்பதாகும். அவன் செய்த தொழில் சமையல், சமையல்காரனாக வாழ்ந்த கரோபஸ், உணவை மட்டும் சமைக்க கற்றுக் கொண்டிருக்கவில்லை. உடலையும் சீரும் சிறப்புமாக அமைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். வெற்றி பெற்றான். சாதாரண குடிமகன் அவன் மட்டுமா வெற்றி பெற்றான்?

பேரறிஞர் என்று புகழப்பட்ட பிளேட்டோ கூட தன் இளமை வாழ்வில் ஒரு முறை மல்யுத்தப் போட்டி ஒன்றில் வெற்றி வீரராக வந்து பரிசு பெற்றிருக்கின்றார்.

சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காத்த, நம்மால் மகா அலெக்சாந்தர் என்று வருணிக்கப்பட்ட அலெக்சாந்தர்கூட போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். யார் தோற்றார் யார் வென்றார் என்பது அங்கு பிரச்சினை இல்லை. திறமைதான் அங்கு ஆட்சி செய்தது.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியிலே, பெரிய சரித்திர ஆசிரியரான கிரடோடசும் தத்துவ மேதையான சாக்ரட்டீஸீம் பெருங்கவியான பிண்டாரும், சீயஸ் என்ற கடவுளின் சிலையை செதுக்கிய ஓவிய மேதையான பிடிலசும் உலவிய இடத்திலே. மாமன்னன் அலெக்சாந்தரும் மகாகர்வம் நிறைந்த நீரோ மன்னனும் பங்கு பெற்ற பந்தயக் களத்திலே, தனி மனிதனின் திறமையே கொடிகட்டிப் பறந்தது. திறமையை மட்டுமே வாழ்த்தினர். வரவேற்றனர், சிலையாக்கினர், சிறப்புமிக்கப் பாடல்களில் புகழ்ந்தனர்.

சிறந்த உடல் உள்ளவர்களால்தான் சிறந்த கலைகளையும், சிறப்பான இலக்கியங்களையும் உருவாக்க முடியும் என்று தமிழினம் காட்டிய வரலாற்றுக்கு, இன்னும் ஒரு சான்று கிரேக்க இனந்தான். வளமான உடலில்தான் வளமான மனம் வாழும், வளரும், உண்மைதானே!

ஒன்றுக்கொன்று பகை நாடாக இருந்தாலும் கூட ஒலிம்பிக்பந்தயத்திலே ஒற்றுமையும் அமைதியுமே ஓங்கி இருந்தது. பங்கு பெற்றவர்கள் பயமில்லாமல் வாழ்ந்தனர், பகையில்லாமல் பழகினர். போட்டி நிகழ்ச்சிகளிலே பொருதினர்.

பந்தயங்களிலே படபடப்பு இருந்தது பரபரப்பு இருந்தது. உணர்ச்சி மயம் நிறைந்து இருந்தது உற்சாகம் பொங்கி வழிந்தது. வெற்றி பெற்றவர்கள். சிரித்தார்கள். ஆனந்த வெறியிலே விழுந்து புரண்டார்கள் தோற்றவர்கள் துடித்தார்கள். துவண்டார்கள். அழுதார்கள். கூனிக்குறுகிப் போனார்கள். போட்டியாளர்கள் மட்டுமல்ல - பார்வையாளர்கள் கூட தோற்றவர்களுக்காக அழுதார்கள். வெற்றி பெற்றவர்களுக்காக கைதட்டி மகிழ்ந்தார்கள், விண்ணளாவக் கத்தி வாழ்த்தினார்கள்.

இவ்வாறு, ஒலிம்பிக் பந்தயம் முழுவதும் உணர்ச்சி மிக்கக் கலை வண்ணமாகவே திகழ்ந்தது. எத்தனையோ பகுதிகளிலிருந்தும், பட்டி தொட்டிகளில் இருந்து மூலை முடுக்குகளில் இருந்தும் வீரர்கள் போட்டியிட வந்தார்கள். அவர்கள் வந்த பகுதியை, வாழ்ந்த இடத்தை மறந்து, ஒலிம்பியா பந்தயக் களத்திற்குள் நுழைந்தவுடன் தன்னையே மறந்து, தான் ஒரு ஒலிம்பிக் வீரன் என்ற ஒரே நினைவுடன் ஒரே இனத்தவராக மாறிவிட்டனர். இறைவனது திருப்பெயரைக் கூறி, தன் திறமையை வெளிப்படுத்த முனைந்தனர் என்ற அளவிலேதான் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து வந்தன. இன்பங்களை அள்ளித் தந்தன.