கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/வாயாடி டியோக்சிபஸ்
வாழ்க்கையில் மனிதன் உயர உயர, அவன் வாயடக்கமாகவும் நாணயமாகவும் நடந்துகொள்ளும் பொழுதுதான், அவன் பெறுகின்ற புகழும்பேறும் நிலைத்து நிற்கிறது. அவன் சிறிதளவு தன் நிலையிலிருந்து தாழ்ந்து விட்டாலும், அது அவன் புகழை இடித்துத் தூளாக்கும் வெடிகுண்டாகிவிடும். அதற்கு சான்றாகத் திகழ்கிறான் டியோக்சிபஸ்.
கி.மு.336ல் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கராசியம் எனும் போட்டியில் வெற்றி பெற்ற வீரன் டியோக்சிபஸ். எந்தப் போட்டியாளனும் இவனுடன் போட்டியிடப் பயந்து ஒதுங்கிக் கொண்டான் என்றால், இவனது வல்லமையின் மிகுதியை நினைத்துப் பாருங்கள் பெற்ற வெற்றியையும், பெருமை மிக பரிசையும் ஏந்திக் கொண்டு, டியோக்சிபஸ் தன் தாயகமான ஏதென்சுக்கு வருகிறான்.
வெற்றி வீரனுக்கு வீர வரவேற்பளிக்கிறது ஏதென்ஸ் நகரம், வலிமையின் தாயகமான ஏதென்ஸ் நகரமே திரண்டு வந்து, வானளாவிய வாழ்த்தொலியை எழுப்பி வரவேற்றது. உற்சாகம் பெற்ற மக்கள், வீரனை சாரட்டு வண்டியிலே உட்கார வைத்து ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் நடுவே ஒப்பற்ற உருவமாக அமர்ந்து, மமதையெனும் மகுடம் சூட்டிய பேருருவமாக அமர்ந்து வருகிறான். அவனது கண்கள் ஆச்சரியத்தால் தன்னைப் பார்க்கும் அனைவரின் மீதும் சுற்றி ஆலவட்டம் போட்டுக்கொண்டு வருகின்றன.
அந்தக்கும்பலிலே ஒருத்தி அழகுப் பெட்டகமாக நின்று கொண்டிருக்கிறாள். ஆண்மையின் உருவமாக அலங்காரத்துடன் வீற்றிருக்கும் டியோக்சிபசைப் பார்த்து, ஏதோ நையாண்டியாகப் பேசுகிறாள். பழுத்தமரத்தில் கல்லடி விழும். அதற்காக மரம் எதிர்த்து கல் வீசுவதில்லையே!டியோக்சிபஸ் தன்னை மறந்து விடுகிறான். ஒப்பற்ற ஒலிம்பிக் பந்தயத்தின் உன்னத வெற்றிவீரன் என்பதை மறந்துவிடுகிறான். பெண் பேசிய நையாண்டி வார்த்தைக்குத் தானும் பதிலடி தரவேண்டும் என்று விரும்புகிறான். வாயடக்கத்தை இழந்தவனின் வாய், வேறுவிதமாக வார்த்தைகளைப் பொழிந்தது.
ஏ பெண்ணை! இந்த வல்லமை வாய்ந்த மாவீரனின் கைகளில் ஏற்கனவே இருந்தவள் தானே நீ! இதோ உன் வல்லமை வாய்ந்த வீரனைப் பார்த்துக் கொள். அருகிலிருந்த அனைவரின் காதுகளிலும் தெளிவாகவே விழுந்தன அவன் கூறிய மொழிகள். அவளும் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள்.
வீரனின் வாய்வார்த்தைகள் வதந்தியாகப் பரவின. காட்டுத்தீயை விட வேகமும் கொடுமையும் மிக்கதாக அவ்வார்த்தைகள் பரவிச் சென்றன. அவன் வேடிக்கையாகக் கூறிய வார்த்தைகள், அவள் குடும்பத்தையே அதிரவைத்தன. அது அவள் தங்கையின் வாழ்க்கையையும் பாதித்தது. கேலி மொழி ஒரு குடும்பத்தையே பாழாக்கிவிட்டது!
நாடறிந்த ஒருவன் எதைப் பற்றிப் பேச வேண்டுமென்றாலும் யோசித்து, நாவடக்கத்துடன் பேச் வேண்டும் என்பது இதனால் புலனாகின்றதன்றோ!
டியோக்சிபஸ் மாவீரனாகத் திகழ்ந்ததால், அவனுக்கு அரண்மனையில் பணியாற்றும் பெரும்பேறு கிடைத்தது. அவன் மகா அலெக்சாந்தரின் மனங்கவர்ந்த வீரனாகி விட்டான். மன்னன் அருகில் இருந்திடும் வாய்ப்பும் கிட்டி விட்டதென்றால், மாபெரும் பொறுப்பும், வந்துவிட்டது என்பது தானே பொருள்!
பாரசீகத்தின் மீது படையெடுத்து விட்டிருந்தான் மகா அலெக்சாந்தம். படைகள் செல்கின்ற போது, மன்னனுடன் டியோக்சிபஸும் கூடவே செல்ல வேண்டியதாயிற்று.செல்கின்ற வழியில் காரக்ஸ் எனும் மற்றொரு வீரனுடன் வாய்வார்த்தை முற்றி, அதுவே சவாலிடும் அளவுக்கு வளர்ந்து, கடைசியில் துவந்தயுத்தம் (Duel) பண்ணுகின்ற தன்மைக்கு முற்றிவிட்டது.
காரக்ஸ் என்பவன் கையிலேவேல், ஈட்டி, சுத்தி முதலிய பயங்கர ஆயுதங்களுடன், உடல் முழுவதும் இரும்புக் கவசம் பூட்டிக் கொண்டு வந்து நின்றான். டியோக்சிபசோ, பிறந்த மேனியனாக, தேகம் முழுவதும் ஆலிவ் எண்ணெயை தேய்த்துக் கொண்டு, கையில் ஒரு கதாயுதத்துடன் (Club) வந்து எதிர் நின்றான். துவந்த யுத்தம் கோபாவேசமாகத் தொடங்கியது.
முதலில் காரக்ஸ் எறிந்த வேலை, கதையால் தட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டான் டியோக்சிபஸ். பிறகு குறிபார்த்து எறிந்த ஈட்டியையும் தடுத்துத் தள்ளி விட்டான். முயற்சியில் தோல்வியடைந்ததால் கோபமடைந்த காரக்ஸ், கத்தியை உறையிலிருந்து உருவ முயன்றபோது. ஒரு கையைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவனைத் தடுமாறி விழுமாறு தள்ளிவிட்டான். ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கராசியப் போட்டியில் வெற்றிபெற்ற வீரனல்லவா இவன்!
மல்யுத்த தந்திர முறைகள் தெரிந்திருந்ததால், அந்த காரக்சைத் தரையில் தள்ளிவிட்டு, மல்லாந்து விழுந்துகிடந்த அவனது கழுத்தில் ஒரு காலை வைத்து மிதித்து, கோபமாக அழுத்திக் கொண்டிருந்தான்.
இவ்வாறு செய்த டியோக்சிபஸ்சின் செயல் அலெக்சாந்தரது படைவீரர்களுக்கு, ஆனந்தத்தை அளிக்கவே, அவர்கள் ஆனந்த ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், காரக்சு என்ற வீரனோ அலெக்சாந்தருக்குக் கிணையாக வந்த மெசிடோனியன் எனும் மன்னர் படையைச் சேர்ந்தவன்.
ஆகவே, அந்த மன்னனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் இது பெரிதும் வெறுப்பையே தந்தது. அவர்கள் ஒருவாறு சமாதானம் செய்து, இருவரையும் சண்டை போடாமல் விலக்கி விட்டார்கள்.
இந்த சண்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, டியோக்சிபஸ் முன்போல தனது மன்னனின் அன்புக்குரியவனாக இல்லாமல், சற்று ஒதுங்கியே இருந்து வந்தான். அலெக்சாந்தர் மன்னன் இவன் மேல் கோபமாக இருக்கிறான், முன்போல அன்பாக இல்லை என்பதை புரிந்து கொண்டு அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் இவன் எதிரிகள்.
எதிரிகள் கூடி, ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார்கள், அதன்படி, ஒரு தங்கக் கோப்பையைக் கொண்டு போய், அவன் இருந்த அறையில் ஒளித்து வைத்து விட்டு, டியோக்சிபஸ்ஸைத் திருடன் என்று குற்றம் சாட்டத் தொடங்கினார்கள். தான் திருடவில்லை என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தும், யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவனது அறையை சோதனையிட வேண்டும் என்று எதிரிகள் வற்புறுத்தினர்.
தங்கக் கோப்பையைத் தன் அறையில் கண்டதும், வீரனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. இனிமேல் வாழ்வது மரியாதை அல்ல என்று மனம் நொந்து, டியோக்சிபஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான். வஞ்சகத்தால் தீர்த்துக் கட்டினோம் என்று எதிரிகள் கைகொட்டி நகைத்து மகிழ்ந்தனர்.
வாழ்க்கையில் புகழ் அதிகமாக வரவர, புகழுக்குரியவன் பத்திரமாக இருக்க வேண்டும்; புத்திசாலித்தனமாகப் பேச வேண்டும் சாதகம் தேடி சதி செய்திடக் காத்திருக்கின்ற
எதிரிகளின் தந்திரத்துக்கு ஆளாகாமல், மிகவும் எச்சரிக்கையாகவும் வாழ வேண்டும் என்ற நீதியை உலகுக்கு உணர்த்துகின்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து காட்டியிருக்கிறான் டியோக்சிபஸ்.