உள்ளடக்கத்துக்குச் செல்

கிழவியின் தந்திரம்/கடலும் கிணறும்

விக்கிமூலம் இலிருந்து


10. கடலும் கிணறும்

ந்த ஊர் மிகச்சிறியது. ஆனாலும் பெரிய உள்ளங்களைப் பெற்ற உபகாரிகள் சிலர் அதில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய பெருமைகளை உலகுக்குத் தெரிவிப்பதற்காகவே., குறுகிய மனம் உடைய பலரும் அந்த ஊரில் இருந்தார்கள். தல்லவர்களுக்குள் ஒருவர் சில நிலங்களை வைத்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு அறம் செய்து வந்தார். வேறு பலரோ நாளுக்கு நாள் தங்களுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அந்தச் செல்வர்கள் வாழ்வதனால் அந்த ஊருக்குப் புகழ் உண்டாகவில்லை. சின்னக் குடித்தனக்காரராகிய வேளாளர் ஒருவர் இருந்ததனால் வேறு ஊர்களிலிருந்து அவரை நாடி ஏழைகள் வருவார்கள்; புலவர்களும் வருவார்கள். அந்தப் புலவர்கள் தாங்கள் போகும் இடங்களில் எல்லாம் இந்த வேளாளருடைய புகழைப் பரப்பிக் கொண்டே போவார்கள். இதனால் அந்த ஊரினுடைய புகழ் எங்கும் பரவியது.

அந்தப் பேருபகாரியான வேளாளருக்குத் தமிழ் மொழியில் ஆர்வம் அதிகமாக இருந்தது. புலவர்களிடம் பாடல்களைக் கேட்டு அவர் இன்பம் அடைவார். தமிழ் மொழியினிடம் அன்பும், தரும் சிந்தனையும் ஒன்றாகச் சேந்த அவரிடம் யாருக்குத் தான் அன்பு பிறக்காது?

ஔவையாருடைய காதில் அந்த நல்லவருடையை புகழ் விழுந்தது. நல்ல மனிதர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பார்த்துப் பாராட்டுவது அந்தப் பெருமாட்டிக்கு இயல்பு அந்த உபகாரியான வேளாளரைப் பார்க்க விரும்பி ஒரு நாள் அவருடைய ஊருக்குப்போனார். ஊருக்குள்ளே நடந்து போனபோத பல பெரிய மாளிகைகளை ஔவையார் கண்டார் இந்த மாளிகைகளில் ஒன்றில் தானே அந்தப் பெரியவர் வாழுகிறார்” என்று தம்மோடு வந்தவர்களை ஔவையார் கேட்டார்.

“இல்லை அவர் சிறிய வீட்டில் வாழ்கிறார். இந்த மாளிகையில் வாழ்கிறவர்கள், அவரைக் காட்டிலும் பெருஞ் செல்வர்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.

“இந்த ஊரில் இவ்வளவு பெரிய செல்வர்கள் இருக்கிறார்கள் என்று யாரும் என்னிடம் சொல்ல வில்லையே” என்றார் அந்தத் தமிழ் மூதாட்டியார். அதற்கு யாரும் விடை ஒன்றும் சொல்லவில்லை.



ஔவையார் அந்த வேளாளச் செல்வரது வீட்டிற்குச் சென்றார். ஔவையார் வருவதை அறிந்த அந்தச் செல்வர் அவரை எதிர் கொண்டு அழைத்து உபசாரம் செய்தார், ஔவையாரோடு வேறு சில புலவர்களும் வந்திருந்தார்கள் . இந்தத் தமிழ் மூதாட்டியாருடைய வாயிலிருந்து எந்தச் சமயத்தில் என்ன முத்து உதிருமோ? அதனை உடனே பொறுக்கிக் கொள்ள வேண்டும்? என்று மிகுத்த ஆவலோடு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் செல்வர் எல்லோருக்கும் ஆறு சுவைகளை உடைய விருந்துணவை அளித்தார். யாவரும் விருந்துணவை உண்டு விட்டு, தாம்பூலம் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர் ஔவையாரை நோக்கி, “தாங்கள் இந்த ஊருக்கு எழுந்தருளியது கலைமகளே எழுந்தருளியது போல் உள்ளது. தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்தச் சிறிய ஊருக்கு வருவதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை! நாங்கள் செய்த புண்ணியம் என்று சொல்வதற்கில்லை. இந்தப் புண்ணியவான் இந்த ஊரில் வாழ்வதனால்தான் தங்களைப் போன்றவர்கள் இந்த ஊரைத் தேடி வருகிறார்கள்” என்றார்.

இதற்குள் அந்த உபகாரி, “தாத்தா, வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள்” என்றார்.

கிழவர் . மேலும் ஒளவையாரைப் பார்த்து, “தாங்கள் தெய்வாம்சம் உடையவர்கள். தங்கள் திருவாக்கால் இந்தப் புண்ணியவானை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”

ஆனால், அந்த வேளாளரோ ஔவையாரைப் பார்த்து, “என்னிடமுள்ள அபிமானத்தால் அந்தப் பெரியவர் அவ்வாறு பேசுகிறார். இந்த ஊரில் பல பெரிய செல்வர்கள் வாழுகிறார்கள் அவர்களைக் காட்டிலும் நான் மிகவும் சிறியவன் இறைவன் அவர்களுக்கு அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். பொதுவாக அவர்களையும் வாழ்த்துவதுதான் முறை, அடியேனைத் தனியாக வாழ்த்துவதற்கு என்ன செய்து விட்டேன்?” என்றார்.

ஒளவையார் இதுவரையில் பேசாமல் இருந்தவர் இப்போது தம்முடைய திருவாயைத் திறந்தார். முன்னால் பேசிய கிழவரைப் பார்த்து, “இந்த ஊரில் வேறு செல்வர்களும் இருக்கிறார்கள் என்றார்களே. அவர்கள் இவரைவிடப் பணக்காரர் களா?” என்று கேட்டார்.

“ஆமாம் அவர்கள் தங்களுடைய பணத்தைச் செலவழிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால் இவருக்கோ பணத்தைச் செலவழிக்கத் தெரியுமே ஒழியச் சேர்க்கத் தெரியாது. அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்வேன்” எனறார்.

“அப்படியா! ஏதாவது ஒன்று சொல்லுங்கள் கேட்கிறேன்” என்று ஔவையார் சொன்னார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பக்கங்களில் பஞ்சம் வந்தது போதிய தண்ணீர் இல்லாமல் நெற் பயிர்கள் சரியாக விளையவில்லை. முன்பே இருக்கிறதைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு செட்டாக வாழ வேண்டி இருந்தது. அப்போது மற்றப் பணக்காரர்கள் தங்கள் வீட்டுவாசல்களை அடைத்துக் கொண்டிருந்தார்கள் இந்தப் புண்ணியவானோ எப்போதும் போல் வருபவர்களை வரவேற்றார். இவர் சாப்பிட்டாரோ, இவர் மனைவி சாப்பிட்டாளோ, நான் அறியேன். ஊரெல்லாம் திண்டாடும் அந்தச் சமயத்திலும் தம்மை நாடிவரும் புலவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போட்டு அனுப்பிக் கொண்டி ருந்தார். அப்போது இவரை நாங்கள் தெய்வப் பிறவி என்றே நினைத்தோம்” என்றார் அவர்.

ஔவையார், “இவரைப் பாட வேண்டும் என்று சொல்கிறீர்களா” என்று கேட்டார்.

“ஆமாம்” என்றார் அவர்.

அந்த உபகாரியோ, “இந்த ஊர் வாழ்ந்தால் தான் நான் வாழ்வேன். ஆகையால் இந்த ஊரில் வாழும் எல்லோரையுமே வாழ்த்துங்கள்” என்றார்.

“உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்றார் ஔவைப் பிராட்டி.

“அவர்கள் பெரிய செல்வர்கள் என்று சொன்னீர்கள். உங்களுக்கு அத்தனை செல்வம் இல்லை அல்லவா” என்று ஆர அமர அந்த மூதாட்டியார் கேட்டார். “ஆமாம்” என்றார் உபகாரி.

“அவர்கள் செல்வம் பெரிய கடலைப் போன்ற தானால் உங்கள் செல்வத்தைச் சிறிய கிணறாகச் சொல்லலாம் அல்லவா?” என்று கேட்டார்.

“தங்கள் திருவுள்ளம் எதுவோ அவ்வாறே சொல்லலாம்” என்றார் அவர்.

“அவர்களுக்கு மேலும் மேலும் செல்வம் சேரட்டும் என்று பாடப் போகிறேன்” என்றார் தமிழ் மூதாட்டியார்.

இப்போது யாரும் பேசவில்லை.

ஔவையார் பாடலைச் சொல்லத் தொடங்கினார். அந்தப் பாட்டின் கருத்து வருமாறு.

பிறரைக் கடல் என்றும் அவரைக் கிணற்று நீர் என்றும் பாடினார் ஔவையார் வெறும் அளவை எண்ணி அவர் அவ்வாறு சொல்லவில்லை. கடல் அளவில் பெரியதுதான் ஆனாலும் அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீரையாவது தாகத்துக்குக் குடிக்க முடியுமா? அதற்கு அருகிலேயே தோண்டி ஒரு கிணற்றில் சிறிய ஊற்றிலிருந்து வரும். நீரே? தாகத்தைப் போக்கும். சிறிய ஊற்றாக இருந்தால் என்ன? கையில் அள்ளிக் குடிக்கப் போதாதா வற்றாமல் தண்ணீர் வந்து கொண்டே இருக்குமே!

கடலில் உள்ள நீரை மேகங்கள் உறிஞ்சிவற்றச் செய்து எங்கோ கொண்டு போய் மழையாகப் பொழிகின்றன. அதைப் போல அந்தச் செல்வர்களுடைய செல்வத்தை வேறு யாராவது துன்புறுத்தி அடித்துக் கொண்டு போய்ச் செலவழிப்பார்கள். ஆனால் இவரிடம் எந்தத் திருடனும் வர நினைக்க மாட்டான். இவர் நிடூழி காலம் வாழ்ந்தால் எப்படியாவது தருமலத்தைப் புரிந்து கொண்டே இருப்பார். பணக்காரர்கள் தங்களிடம் பணம் சேர்வதனால் வரும் துன்பங்களைத் தருமம்செய்து போக்கி கொள்ளலாம். அவ்வளவு செய்யாதவர் களுக்குத் பணம்சேர சேரத் துன்பமும் உடனே வந்து சேரும்” என்றார் ஔவையார். அதனால் அவர்களுக்குத் துன்பம் உண்டாகட்டும் என்று சபிக்கவில்லை. இன்னும் பணம் சேரட்டும் என்று சொன்னார்.