கிழவியின் தந்திரம்/சும்மா இருக்கிற சாமியார்

விக்கிமூலம் இலிருந்து


12. சும்மா இருக்கிற சாமியார்

ரு கோவிலில் ஒரு புதிய தர்மகர்த்தா வந்து சேர்ந்தார். பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு அவர் வேலையை ஒப்புக் கொண்டார். பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார். கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம் செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை எடுத்துக் கவனித்துப் பார்த்தார். கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை நின்று விட்டது. “இது என்ன அக்கிரமம்!” என்று அவர் வாய் முணுமுணுத்தது, “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று அங்கே இருந்தது. “வேலைபுசெய்கிறவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம், சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது பைத்தியக்காரத்தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு அடித்தார். “சும்மா இருக்கிற சாமியாரகுக்குச் சோறு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம் ஒருவருக்கும் வரவில்லை. “சாமியார் மிகவும் பெரிய மகான். மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால் பாவம்” என்று எல்லோரும் கிசுகிசுஎன்று


பேசிக்கொண்டார்கள். ஆன்ரல் ஒருவரும் தர்மகர்த்தாவை அணுகிச் சொல்லவில்லை. கடைசியில் யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில், “சும்மா இருப்பது என்பது நீங் கள் நினைப்பது போல இழிவான காரியம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சும்மா இருந்து பாருங்கள், அப்போது அதன் அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச் செய்தார்.

அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும், உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார். ‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா? எங்கே, நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறு நாள் சும்மா இருக்கும் விரதத்தை மேற்கொண்டார்.

பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர் வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது. அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை என்ன என்னவோ பேச வந்தாள். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம் செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில் ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது. “ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியத.: குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும் என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர் தாம் பேசக்கூடாதே!

இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள் வந்தன. காலையில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள் அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார். தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் காயம் உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்மகர்த்தா அதைக் கண்டு கொந்தளித்து. “அட பாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார். அவர் மௌன விரதம் குலைந்தது.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார். தாம் செய்த பிழையை உணர்ந்து, “சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டை சாதம்” என்று நிறுத்தி எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.

பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது என்பதற்கு இந்தக் கதை உதாரணம். “மோன மென்பது ஞான வரம்பு” என்று ஒளவை பாட்டி. இதைத்தான் கூறுகிறார்.