கிழவியின் தந்திரம்/மெய் சொல்வதனால் மதிப்பு உண்டாதல்

விக்கிமூலம் இலிருந்து

4. மெய் சொல்வதானால் மதிப்பு உண்டாதல்

ர் ஊரில் மாடசாமி என்ற வழிப்பறிக் கொள்ளைக்காரன் ஒருவன் இருந்தான் அவன் மறைந்திருந்து வழியில் போகிறவர்களுடைய பொருள்களை யெல்லாம் கவர்ந்து கொள்வான். ஒரு சாமியார் ஒரு நாள் அந்தப் பக்கமாக வந்தார். வழக்கம் போல் மாடசாமி அவரை வழி மறித்து அடிக்கப் போனான். அந்தச் சாமியார். “அடிக்காதே அப்பா, என்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடுகிறேன். நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லாதே! நீ அவ்வாறு இருந்தாயானல் உனக்கு மேலும் மேலும் நன்மை உண்டாகும்” என்று கூறினார்.

மாடசாமி அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டு, அப்படியே நடப்பதாகத் தீர்மானித்தான் பக்கத்து ஊராகிய தலை நகரில் அரசனுடைய அரண்மனை இருந்தது. அந்த அரண்மனைக்குச் சென்று திருட வேண்டுமென்று அவன் எண்ணங் கொண்டான். கறுப்பு உடைகளை அணிந்து கொண்டு அரண்மனைக்குச்சென்றான். எப்படியோ ஏறிக் குதித்து, சன்னல் வழியாக அரண்மனைக்குள் புகுந்தான். அங்கே சாவிகள் மாட்டப்பட்டிருந்தன.

எல்லோரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள் அவன் களஞ்சியத்தின் சாவியை எடுத்துக் கதவைத் திறந்து அதனுள் புகுந்தான். அங்குள்ள பெட்டியில் மூன்று இரத்தினங்கள் இருந்தன. மாடசாமி தன்னோடு வேறொருவனை அழைத்து வந்திருந்தான். அவனை வாசலில் காவலாக வைத்து விட்டுத்தான் அரண் மனைக்குள் நுழைந்தான். அந்தப் பெட்டியில் உள்ள மூன்று இரத்தினங்களையும் எடுத்துக் கொண்டால் இரண்டு பேர்க்கும் சமமாகப் பங்கிட முடியாது என்று எண்ணி மாடசாமி ஓர் இரத்தினத்தை அங்கேயே வைத்து விட்டு, இரண்டை மாத்திரம் எடுத்துக் கொண்டு போனான்.



அவன் வாசலுக்கு வந்த பொழுது வாயில் காப்போர்கள் விழித்துக் கொண்டு அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவனை அரசனிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். “அரண்மனையின் உள்ளே புகுந்து திருடினவன் இவன்” என்று காவல்காரர்கள் அரசனிடம் தெரிவித்தார்கள். அரசன் அவனைப் பார்த்துப், “நீ என்ன திருடினாய்?” என்று கேட்டான். பொய்க் சொல்லக் கூடாது என்ற விரதத்தை மேற்கொண்டதால் மாடசாமி நடந்தது நடந்தபடியே கூறினான். அரசன், “ஏன் ஒன்றை மாத்திரம் வைத்து விட்டாய்?” என்று கேட்டான். மாடசாமி, “எனக்கு ஒன்றும் என் நண்பனுக்கு ஒன்றுமாக இரண்டை மாத்திரம் எடுத்தேன். மீதி ஒன்றை வைத்து விட்டேன்” என்றான்.

அரசன் உள்ளே போய்ப் பார்த்து ஓர் இரத்தினம் அங்கே இருப்பதைக் கண்டான் திருடனாக இருந்தாலும் மாடசாமி பொய் சொல்லாமல் இருந்ததைக் கண்டு அரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆதலால், மாடசாமியைப் பார்த்து அரசன் “அப்பா, நீ இன்றோடு இந்தத் திருட்டுத் தொழிலை விட்டு விடு என்னுடைய அரண்மனையில் உனக்கு ஏதாவது வேலை தருகிறேன். கௌரவமாக நீ வாழலாம்” என்றான்.

மாடசாமிக்கு இது பெரிய வரமாக இருந்தது. சாமியார் செய்த உபதேசத்தின்படி பொய் சொல்லாமல் இருந்ததனால் தான் தனக்கு இந்த நிலை கிடைத்தது என்று அவரை, நனறியுடன் நினைத்தான். பொய் சொல்லாமையினுடைய பெருமையை அவன் நன்றாக அறிந்து கொண்டான்.