உள்ளடக்கத்துக்குச் செல்

கீதாஞ்சலி

விக்கிமூலம் இலிருந்து

முழுக் கீதங்களின் தொகுப்பு

ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

மொழி பெயர்ப்பாளர் முன்னுரை

[தொகு]

காவியக் கவியோகி தாகூர் (1861-1941)

பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹூகோ [Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.

1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாரதியாரைப் போல் மாபெரும் தேசீயக் கவியான தாகூர், தேசப்பிதா காந்தியின் மீது மதிப்புக் கொண்டவர். காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் தாகூர் என்பது பலருக்குத் தெரியாது. நோபெல் பரிசு பெற்ற தாகூருக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 இல் நைட்கூட் (Knighthood) கௌரவம் அளித்தது. ஆனால் 1919 இல் ஜாலியன் வாலா பாக் தளத்தில் ஆயுதமற்றுப் போராட்டம் நடத்திய 400 மேற்பட்ட இந்திய சீக்கியரைப் பிரிட்டிஷ் படையினர் சுட்டுக் கொன்ற பிறகு தாகூர் அவர்கள் அளித்த கௌரவப் பட்டத்தைத் துறந்தார். எட்டு வயது முதலே தாகூர் தான் கவிதை புனையத் தொடங்கியதாய்த் தனது சுய சரிதையில் கூறுகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில் வெளியானது. தாகூரின் படைப்புகளில் பரம்பரை இந்தியக் கலாச்சாரமும் மேற்கத்திய முற்போக்குக் கருத்துக்களும் பின்னிக் கிடக்கின்றன. 1901 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரின் வெளிப்பகுதியில், “விசுவ பாரதி” என்னும் கலைப் பள்ளியை ஆரம்பித்தார். காலஞ் சென்ற பிரதமர் இந்திரா காந்தி விசுவ பாரதி கலைப் பள்ளியில் பயின்றவர்.

வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் முதலில் நல்ல வரவேற்பு அளிக்கவில்லை. பிறகு தாகூரே அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்திசை நாடுகள் கீதாஞ்சலியை பாராட்டிப் போற்றின. அதன் மகத்தான வரலாற்று விளைவுதான் கீதாஞ்சலிக்குக் கிடைத்த நோபெல் பரிசு. கீதாஞ்சலிப் பாக்களில் தாகூர் தன்னோடு உரையாடுகிறார். உன்னோடும், என்னோடும் உரையாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனுடன் உரையாடுகிறார். சில சமயம் அவர் பேசுவது கடவுளிடமா அல்லது காதலியுடனா என்று தெரிந்து கொள்வது சற்றுச் சிரமமாக உள்ளது.

கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் படிக்கும் போது, எனக்கு அத்தனை இனிமை உண்டாகவில்லை. ஆனால் அந்த வரிகளைத் தமிழில் எழுதி நான் வாசிக்கும் போது, தாகூரின் பளிங்கு உள்ளம் நளினமாக ஒளிர்வது எனக்குத் தெரிந்தது. தனது வங்க மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாமல் சில இடங்களில் தாகூரே தடுமாறுவது தெரிகிறது. சில இடங்களில் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமலும் போகிறது. எனக்கு வங்க மொழி தெரியாது. தாகூரின் ஆங்கில மொழிபெயர்ப்பே எனது மூல நூல். தாகூர் தமிழைக் கற்றுத் தமிழில் கீதாஞ்சலியை எழுதி இருந்தால் எப்படி இருக்கும் என்று மனதில் நிறுத்தி, அவரது உன்னத காவியத்தைத் தமிழாக்க முயன்றேன். அந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றேனா என்பதை வாசகர்தான் சொல்ல வேண்டும்.

“என் பயணம் முடிய வில்லை”, என்று கீதாஞ்சலியில் கூறும் தாகூர் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார். இராமாயணம், மகாபாரத இதிகாச நூல்கள் போல், தாகூரின் கீதாஞ்சலியும் பல்லாயிரம் ஆண்டுகள் பாரதத்தில் சீராய் நிலைக்கப் போகிறது என்பது என் ஆழ்ந்த எண்ணம். வாரம் ஒரு முறையாக ஈராண்டுகள் பொறுமையாகத் திண்ணையில் தொடர்ந்து பதிப்பித்த என் மதிப்புக்குரிய நண்பர்கள், திண்ணை அகிலவலை இதழ் அதிபர்கள், திரு. கோபால் ராஜாராம், அவர் சகோதரர் திரு. துக்காராம் ஆகிய இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள். தாகூரின் கீதாஞ்சலி முழுவதையும் தமிழ்கூறும் உலகுக்கு “அன்புடன் இலக்கிய வலைப்பூங்கா” மூலமாகவும் வழங்கிட எனக்கொரு வாய்ப்பளித்த என்னருமை நண்பர் கவிஞர் புகாரிக்கும் எனது உளங்கனிந்த நன்றி.

சி. ஜெயபாரதன்,

கிங்கார்டின், அண்டாரியோ,

கனடா

(ஜனவரி 21, 2007)

கீதாஞ்சலி நூல்

[தொகு]

கீதங்கள்: (1 – 103)

விழித்தெழுக என் தேசம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா




இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

***********

தங்கமான என் வங்காளம்

கவியோகி: இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

(பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த போது, 
கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் “தங்கமான என் வங்காளம்” 
என்று வருணனை செய்து உள்ளத்தைத் தொடும் உன்னதக் கவிதை இது!  
பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று 
இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையைப் பங்களா தேசத்தின் 
இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, 
பாராட்டுவதற்கு உரியது)

பொன்னான என் வங்காள நாடே!
நின்னை நான் நேசிக்கிறேன்.
வானளாவிய நின் தென்றல் காற்று என் நெஞ்சைப்
புல்லாங்குழல் ஆக்கி எப்போதும் இசைமீட்டும்!
வசந்த காலத்தில்
என்னரும் தாயகமே! நின்
நின் சதுப்புநிலத் தோப்பு மணம்
உல்லாசம் அளித்தென்னைத் தாலாட்டும்!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
இலையுதிர் காலத்தில்
என்னரும் தாயகமே!
முற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்
புன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்!
என்னரும் தாயகமே!
என்னே உந்தன் எழில்மயம்!
என்னே உந்தன் வண்ணமயம்!
என்னே உந்தன் அருமை!
என்னே உந்தன் மென்மை!
ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
என்னரும் தாயகமே!
உன்னிதழ்கள் உதிர்க்கும் மொழிகள்
தேனாய் இனிக்குமென் செவியினிலே!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
என்னரும் தாயகமே!
நின்முகத்தில் சோக நிழல் படியும் போது
என் கண்களில் பொங்கி எழும்
நீர்த்துளிகள
*****************

என்னிசைக் கீதம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

காற்றினிலே வருமென் கீதம், குழந்தாய்!
உனைத் தழுவி
ஆசைக் கரங்கள் போல்
அணைத்துக் கொள்ளும்!
உனது நெற்றி மீது முத்தமிட்டு
இதழால் ஆசி அளிக்கும்!
தனித்துள்ள போது உன்னருகில் அமர்ந்து
உனது செவியில்
முணுமுணுக்கும் என் கீதம்!
சந்தடி இரைச்சலில் நீ தவிக்கும் போது
அரண் அமைத் துனக்கு
ஏகாந்தம் அளிக்கும், என் கீதம்!
இரட்டைச் சிறகுகள் போல்
என் கீதம்
உன் கனவுகள் உயிர்த்தெழ
உந்துசக்தி தரும்!
கங்கு கரையற்ற காணாத காட்சிக்கு
உன் இதயத்தை
ஏந்திச் செல்லும் என் கீதம்!
நடக்கும் பாதையில்
காரிருள் சூழும் போது உனக்கு
நன்றியுடன்
வழிகாட்டும் என் கீதம்,
வானத்து விண்மீனாய்!
உன்னிரு கண்ணின் மணிக்குள்
அமர்ந்து கொண்டு
உன் நெஞ்சின் விழிகளுக்கு
ஒளியூட்டும், என் கீதம்!
மரணத்தில் எந்தன் குரல் மங்கி
மௌன மாகும் போது,
உயிருள்ள
உன்னித யத்தில் போய்
ஓசையிடும்
என் கீதம்!

************

கீதாஞ்சலி (1)
உடையும் பாண்டம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

அந்திமக் கால மின்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!
உந்தன் தெய்வீகக் கரங்கள்
என்மேல் படும்போது,
எந்தன் நெஞ்சம்
உவகையின்
எல்லை மீறிச் செல்லும்!
மேலும் அதில்
ஊகிக்க முடியா
உரைமொழிகள் உதிக்கும்!
அளவின்றி
அள்ளி அள்ளிப் பெய்த உந்தன்
கொடைப் பரிசுகள்
எனது இச்சிறு கைகளில் மட்டுமே
கிடைத்துள்ளன!
கடந்து
போயின யுகங்கள்!
ஆயினும்
இன்னும் நீ இப்பாண்டத்தில்
பொழிந்து பொழிந்து கொட்டுகிறாய்!
அங்கே
காலியிடம் உள்ளது இன்னும்,
மேலும் நீ நிரப்பிட!

**************
கீதாஞ்சலி (2)
இசைப் பாடகன்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இன்னிசைக் கீதத்தைப் பாடென்று
என்னை நீ
ஆணையிடும் போதென்
நெஞ்சம் திறந்து பெருமிதத்தில்
பூரிக்கிறது!
உன் முகத்தை நோக்கும்
என் விழிகள்
மடை திறந்து
வீழ்த்தும் நீர்த் துளிகள்!
வாழ்க்கை நெடுவே என்னை
துன்புறுத்தும்
இன்னல், வெறுப்பு, வேறுபாடு எல்லாம்
கனிந்துருகி
இனிய ஓர் சீரமைப்பில்
ஏகிச் சங்கமிக்கும்!
உன் மீது நான் கொண்டுள்ள
மதிப்பீடு
அகண்ட கடல் நெடுவே
பயணம் துவக்கும்
ஆனந்தப் பறவைபோல்
விரிக்கும் தனது
சிறகுகளை!

இன்னிசைக் கீதத்தை பாடும் போதுன்
செவிகள் சுவைத்து
இதயம் இன்புறும்
என்பதை நான் அறிவேன்!
உன்னரிய சன்னிதிக்கு முன்னால்
ஓரிசைப் பாடகனாய்
வருவதையே
விரும்புகிறேன் நான்!
வேட்கை மிகையாய் இருப்பினும்
என் கரங்கள் நீட்சிக்கு
எட்டாத
உன் பாதங்களை
வெகு தூரம் விரிந்து செல்லும் என்
கீதச் சிறகின் முனைதான்
தொட முடிகிறது!
இன்னிசைக்
கீதத்தை பாடிக் கொண்டுள்ள போதே
ஆனந்தப்
போதையில் மூழ்கி
மெய்மறந்து நான் உன்னை
நண்பா!
என்று அழைத்தேன்
என் அதிபனே!

*****************
கீதாஞ்சலி (3)
உன்னிசைக் கீதம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இன்னிசையில் கானத்தை,
எவ்விதம் நீ பாடுகிறாய்
என்பதை நான் அறிந்திலேன்
என்னரும் அதிபனே!
உன் கீதத்தைக் கேட்டு
காலங் காலமாய்
மௌனத்தில் மூழ்கி
உள்ளம் வியப்பில் ஆழ்ந்தது!
உலகெங்கும் பரவி விளக்கேற்றும்,
உன் கானத்தில் எழும்
ஒளிச்சுடர்!
உன் கானம் விடுகின்ற
உயிர் மூச்சு
அண்டவெளியில்
வான்விட்டு வான் தாவும்!
புனித நீரோடை போல
கரடு முரடான
கற்பாதைத் தடைகளைக்
கடந்து
முன்னோக்கி விரைந்தோடும்,
உன்னினிய கானம் !

பாடிவரும் உன் கானத்துடன்
ஒன்றாய்க் கலந்திட
நாடி ஏங்கும் என்னிதயம்!
வீணாய் அதற்கு
ஓரிசைக் குரலைத் தேடிப்
போராடும்,
என் மனது!
உரை நடையில் உன் கானத்தை
ஓதுவேன் ஆயினும்
இசை கலக்க முடியாமல்
குழம்பிக்
கூக்குர லிடுவேன்!
கால வரம்பில்லாத
உன்னரும் இன்னிசைக் கானத்தின்
பின்னலில்
என் இதயத்தைக் கட்டி
அந்தோ நீ!
வசப்படுத்தி வைத்துள்ளாய்
என் அதிபனே!

*****************
கீதாஞ்சலி (4)
என் வாழ்வில் கட்டுப்பாடு

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இது என் வாழ்வின்
வாழ்வைப் பற்றிய வரலாறு.
என் அங்கம் அனைத்தையும்
புத்துயிர் அளிக்கும்,
உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
என்னிதயம் உணர்வதால்
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க!
ஆதி மூலக் காரணியான
நித்திய ஒளியை எனது
நெஞ்சில் தூண்டி விடும்
சத்திய நெறியே
நீயென்று
முக்தி பெற்ற நான்
உண்மைக்குப் புறம்பட்ட அனைத்தையும்
எண்ணாமல் இருக்க
எந்நாளும் முயல்வேன்.

இதயக் கோயிலின்
உட்புறச் சன்னிதியில் நீ
திருப்பீடம் அமைத்து ஆசனத்தில்
இருப்பிடம் கொண்டுள்ளது
நினைவில் இருப்பதால்,
உள்ளத்தைக் களங்கப் படுத்தும்
தீவினை எல்லாம்
நெஞ்சத்தை நெருங்க விடாமல்
நீக்க முயல்வேன்,
பூக்கள் மேல் கொண்டுள்ள
என் மோகத்தைக்
குன்றாமல் வைத்துக் கொண்டு!
உனது பேராற்றல் இதுவரை
எனக்கு ஊட்டியுள்ள
மன உறுதியே
எப்போதும் என்னை இயக்கும் என்பது
தென்பட்டு வருவதால்,
நன்னெறி முறைகளைக்
கடைப்பிடித்துச்
சிரமப்பட்டு முயல்வேன்,
நடத்தையின் மூலம் என்னை
உனக்கு
எடுத்துக் காட்ட!

*****************
கீதாஞ்சலி (5)
கானத்தைப் பாடும் தருணம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

தனித்துவ உரிமையில் கண நேரம்
சன்னிதியில்
உன்னருகே உட்கார்ந்திட
என்னிதயம் ஏங்குகிறது.
கைவசம் உள்ள
எந்தன் படைப்பு வேலைகளைப்
பின்னர்
முடித்துக் கொள்ளலாம்.
கனிந்த நின் திருமுகக் காட்சியைக்
காணாத
மறைவுப் புறத்தில்
நடமிடும் போது படபடத்து,
என்னிதயம்
தன்னிலை மாறி
தவியாய்த் தவிக்கும்!
அப்போது என்
படைப்புகள் அனைத்தும்
எனக்குச் சுமக்க முடியாத பளுவாய்
கனத்துப் போய்விடும்,
கங்குகரை இல்லாத
கடற்பாரம் போன்ற
உடல் உழைப்பாய்!

வேனிற் கால வெயில்
இன்று என்
வீட்டுப் பலகணி வழியே
பெருமூச்சை விட்டுக் கொண்டு
புகுந்திருக்கிறது,
முணுமுணுப்புடனே!
மொட்டுகள் மலர்ந்து
பொங்கி விரியும் பூந்தோப்பில்
தேனீக்கள் தேன் குடிக்க
கான ரீங்காரமுடன்
பாடிக் கொண்டு
மும்முரமாய் ஈடுபட்டுள்ளன!
இச்சமயத்தில்
நின் கனிவுத் திருமுகத்தை
நேராக நோக்கிய வண்ணம்
அமர்ந்து
பூரண அமைதியில்
பூரித்துப் பொங்கும்
இந்த ஓய்வு வேளையில்
வந்து விட்டது,
எந்தன் வாழ்வை அர்ப்பணிக்கும்
கானத்தை
நான் பாடும் தருணம்!

*****************
கீதாஞ்சலி (6)
மாலையில் சேராத மலர்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

சிறிய இப்பூவைப்
பறித்து
மாலை தொடுக்க
எடுத்துக்கொள் தாமதப்
படுத்தாமல்!
இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய்
கீழே வீழ்ந்து
புழுதி மண்ணில் துவளும்,
என்று அஞ்சும்
என் மனம்!
இப்போது நீ பறிக்கா விட்டால்
கோர்க்கும் உன்
ஆரத்தில் அம்மலர்
ஓரிடம் பெறாமல் போய்விடலாம்!
சிறிது சிரமப்பட்டு
பொறுமையுடன் உந்தன் கையால்
பறித்திடு அம்மலரை
அதற்குரிய
மரியாதை அளித்து!

உனக்கு பூமாலை
சமர்ப்பித்து
வணங்கும் நேரம் தவறிப் போய்,
இன்றைய பொழுதும்
எனக்குத் தெரியாமல்
முடிந்து போய்விடும் என்று
நடுங்கும் என் நெஞ்சம்!
அழுத்தமான வண்ணம்
பளிச்செனத் தோன்றாமல்,
நறுமணமும் சிறிதளவே
நாசி நுகர்ந்து வந்தாலும்,
அம்மலரை
கரத்தால் பறித்து, உந்தன்
திருப்பணிக்கு அர்ப்பணித்திடு,
பொழுதின்று
கழிந்து போவதற்குள்!

*****************
கீதாஞ்சலி (7)
உன் ஆடம்பர ஒப்பனைகள்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எனது கவித்துவ
மனது
ஒருங்கே புறக்கணிக்கும்,
உனது
ஒய்யாரக் கவர்ச்சி
ஆபரணங்களை!
ஒப்பனை புரிவதும்
ஆடம்பர ஆடை அணிவதும்
பெருமை தரவில்லை
உனக்கு!
நமது
நட்பின் இணைப்பை
நாசம் செய்வது
நகை அலங்காரம்!

உனக்கும்
எனக்கும் உள்ள
உறவின்
குறுக்கே நுழைவது!
நெருங்கி உள்ள போது
உனது
அணிகள் உண்டாக்கும்
சலசலப்பு ஓசை
முணுமுணுக்கும்
உன் இனிய மொழிகள்
என் செவியில் விழாமலே
அமுக்கி விடும்!

மகாகவிப் பெருமானே!
உந்தன்
திருப்பாதங்களின்
அருகே
அமர்ந்துள்ளேன்! என்னுள்ளத்தை
அவமானப்படுத்தும்
கவிஞன் என்னும்
கர்வம்
மகத்தான நின் காட்சி முன்னே
மாய்ந்து போனது!
நேரான பாதையில்
சீராகச் சென்று
எளிய வாழ்வைப் பின்பற்ற
வழியை மட்டும்
நாடுவேன்,
புல்லிலைப் புல்லாங் குழல்
உன்மீது
மெல்லிசை பொழிந்து
மீட்டுவது போல!

*****************
கீதாஞ்சலி [8]
குழந்தைக்குப் போடும் கால்கட்டு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

சிறுவனை
இளவரசன் போல் ஆடையில்
சிங்காரித்து
தங்கச் சங்கிலி
கழுத்தில் அணிவித்து
வெளியில்
விளையாட விட்டால்
களிப்பு விளையாமல் போகும்!
ஒவ்வொரு படியில் ஏறும் போதும்
தடையாய் நிறுத்தும்,
சிறுவன்
உடையின் பகட்டு!
பயந்து
பட்டாடை கிழிந்திடும் என்று
தயங்கி நிற்பான்,
பையன்!
புழுதிக் கறை படிந்து
அழுக்காகும் என்று
உலகப் பழக்கத்தை ஒதுங்கி
விலகிச் செல்வான்,
குழந்தை!
வீட்டை விட்டு
வெளியே நகரவும் அஞ்சி
கூட்டில்
அடைபட்டுக் கிடப்பான்!

இது நெறியன்று!
உடல்நலம் அளிக்கும்
பூதள வெளியில் ஓடியாடும்
சிறுவன்
விளையாட்டைத் தடுப்பது,
முறையன்று!
தினமும் நடமிடும்
மாபெரும்
மனிதச் சந்தையில் இணைந்து
கூடிக் குலவி
ஆடிப் பழகும் உரிமையை
அபகரிப்பது,
செல்வனுக்கு
எப்பலனும் அளிக்காது!
அன்னையே! நீ
உன் குழந்தைக்குப் பூட்டியுள்ள
அடிமைத் தளை,
நிரந்தர
வளர்ச்சியைத் தடுக்கும்
கால்கட்டு விலங்கு!

*************
கீதாஞ்சலி (9)
அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அறிவு கெட்டவனே!
உன் தோளிலிலே சுமந்திடு,
உன் பாரத்தை!
பிறரிடம்
பிச்சை எடுப்பவனே!
முதலில் உன் வீட்டு வாசல்
முன்னின்று யாசித்திடு!
அனைத்தையும்
தாங்கிக் கொள்ளும்
இறைவன் மேல் சுமையை
இறக்கி விட்டு
நிம்மதியாய் இருக்கிறாய்
வருத்தப் படாது,
திரும்பிப் பாராது!

பேராசை பிடித்து நீ
வெளிவிடும்
பெருமூச்சு சட்டென
விளக்கின் ஒளியை அணைத்து
இருளாக்கி விடுகிறது!
களங்கம் பிடித்த
கரங்கள்
காணிக்கை அளிக்கும்
வெகுமதியைக்
கையேந்திப் பெற்றுக் கொள்ளாதே!
அழுக்கேறியது,
அந்த நன்கொடை!
புனித அன்புடன்
கனிந்த உள்ளம்
அளிப்பதை மட்டும்
கைநீட்டி ஏற்றுக்கொள்!

*****************
கீதாஞ்சலி (10)
ஏழைகளின் தோழன் நீ

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இங்கே இருப்பது நீ
பாதங்களை ஓய்வாக வைக்கும்
உந்தன்
பஞ்சணைப் பீடம்!
ஏழை, எளியவர்,
எல்லாம் இழந்தவர்,
கீழின மாந்தர் அனைவரும்
வாழும் குடித்தளம் அது!
குனிந்து
வணங்கி உன்னை நான்
கும்பிட வரும் போது,
எனது
பணிவுக் கரங்கள் பற்றித்
தொட முடியாத
பாதாளத்தில்,
ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,
கீழே தள்ளப்பட்டவர்
அனைவரும்
வாழும் அந்தப்
பாழும் பள்ளத்தில் நின்றன்
பாத மலர்கள்
இளைப்பாறு கின்றன!

செருக்குடன் எவனும் ஒருபோதும்
அருகில்
நெருங்க முடியாது,
ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,
தாழ்த்தப்பட்ட,
இனத்திடையே நீ,
எளிய ஆடை அணிந்து
உலவி வரும் தளங்களை!
என்னிதயம் என்றைக்கும்
பாதை காண முடியாத
ஒதுக்குப் புறங்களில்
ஒடுங்கிவரும்
துணையற்ற எளியோரிடம்,
கீழே அமுக்கப்பட்ட மக்களிடம்,
ஏழை மாந்தரிடம் என்றென்றும்
தோழமை
கொண்டுள்ளாய் நீ!

*****************

கீதாஞ்சலி (11)
இறைவன் எங்கிருக்கிறான் ?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
கூடவே குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிமேல் கீழிறங்கி
உழவரைப் போல்
உன் பாதங்களைப் பதித்திடு!

குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே காணப் போகிறாய்
அந்த விடுவிப்பை?
படைக்கும் போதே
நமை ஆளும் அதிபன்,
பந்த பாசப் பிணைப்புகளைச்
சொந்தமாய் மேற்கொண்டு
களிப்புடன்
அளித்து வந்திருக்கிறான்,
உயிர்களுக்கு!
நிரந்தரமாய் நம் எல்லோரையும்
தன்னுடன்
இரண்டறப் பிணைத்துள்ளான்
இறைவன்!
தியானத்தை நிறுத்தி விட்டு
வெளியே வா!
தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,
அகர் பத்திகளின்
நறுமணப் புகை அனைத்தையும்
புறக்கணித்து விடு!
உன் ஆடைகள்
கறைபட்டுக் கந்தலானால் என்ன?
தீங்கென்ன நேரும் உனக்கு?
மெய்வருந்திப் பணிசெய்யும்
உழைப்பாளியை
சந்தித்து
நில் அவனருகே நீ,
நெற்றி வேர்வை நிலத்தில்
சிந்தி!

*****************
கீதாஞ்சலி (12)
உன்னைத் தேடும் போது …

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நெடுங்காலம் எடுக்கிறது,
என் பயணம்!
நீண்ட தூரம் போகிறது,
என் பாதை!
எண்ணிலா
விண்கோள்கள், விண்மீன்களில்
என் தடம் பதித்து
வெளிவந்த முதல் ஒளி வீச்சில்
தேரிலிருந்து
கீழிறங்கிப் பயணம்
தொடர்ந்தேன்,
நாடுகளின்
காடுகள், புதர்கள் வழியே!
பக்கத்தில் தெரியும்
பயணப் பாதை
உன்னை
நெடுந்தூரம் இழுத்துச் செல்வது!
எளிய முறையில் இசையை மீட்ட
செய்ய வேண்டி யுள்ளது,
சிரமப் பயிற்சி!

தன் சொந்த வீடு வந்தடைய
ஒவ்வோர்
அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி
தட்ட வேண்டி யுள்ளது!
புனித கோயிலின் உள்ளே
உன்னரிய
சன்னதியை வந்தடைய
ஒருவன்
வெளி உலக மெல்லாம் சுற்றிவர
வேண்டி யுள்ளது!
இங்கும் அங்கும் உன்னைத்
தேடிப் போன என் கண்கள்,
மூடிப் போகும் முன்பு
மொழிந்தன,
“இதோ! இங்கு இருக்கிறாய்”
என்று!
கண்ணீர் அருவிகள் ஆறுகளாய்ப்
பொங்கி
“எங்கே? எங்கே?” என்று
கேள்வியும் கூக்குரலும்
கேட்ட போது,
உலகை வெள்ளம் மூழ்கி யடித்து,
“இங்கே நான்” என்னும்
சங்க நாதம்,
எங்கும் உனை
உறுதிப் படுத்தும்!

*****************
கீதாஞ்சலி (13)
நெஞ்சில் மின்னிய கீதம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாட
நினைத்த கீதம்
இன்றுவரை
வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது!
எனது இசைக் கருவியின்
நாண் கம்பிகளை
நான் முறுக்கியும், தளர்த்தியும்
நாட்கள்தான் கழிந்தன!
அந்த கீதம்
வெளிவரும் வேளை
மெய்யாக
வரவில்லை இன்னும்!
சொற்களைச்
கோர்க்க முடியவில்லை
செம்மையாக!
வேட்கை மீறிக் கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரண மாகக் கீதம்
பூத்து விரிய வில்லைச்
சீராக இன்னும்!
அருகில்
பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்!

அவனது முகத்தை நான்
பார்த்திலேன்!
அவனது குரலை நான்
கேட்டிலேன்!
என்வாசல்
முன்னுள்ள முற்றப் பாதையில்
மெதுவாகப் படும்
அவனது
பாத  ஓசைகள் மட்டும் எனது
காதில் பட்டுள்ளன !
தரைமீது அமர்ந்திட அவனுக்கு
ஆசனம் விரிப்பதற்கே
நாள் முழுதும் கழிந்து
இருட்டி விட்டது
இப்போது!
விளக்கேற்ற வில்லை
இன்னும்!
வாராய் வீட்டின் உள்ளே என
வரவேற்க முடியாத
அவதியில் உள்ளேன்!
ஒருநாள் அவனைச்
சந்திப்போம் என்னும்
நம்பிக்கையில் வாழ்கிறேன்!
ஆனால்
சந்திப்பு ஏற்பட வில்லை
இதுவரை!

******************
கீதாஞ்சலி (14)
பேராசைலிருந்து விடுவிப்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என் ஆசைகள் மிகையானவை!
அவற்றுக்கு ஏங்கித்
தவிக்கும் என் கூக்குரல்
இரங்கத் தக்கது!
என்னாசையைத் தணிக்கத்
தர மறுக்கும்
உன் தீவிர எதிர்ப்புகள்
என்னைப் பாதுகாப்பன,
எப்போதும்!
அக்கறையுடன் என்மீது
அவ்விதம் நீ கொள்ளும்
ஆழ்ந்த பரிவு
வாழ்க்கையில் போகப் போகச்
சூழ்வது தெரிகிறது!
பேராசைப் பேரிடர்கள் எவையும்
நேராமல் காத்து,
இவ்வகண்ட
வான்வெளி, பரிதி ஒளி,
உடல், உயிர், உணர்வு போன்ற
நான் கேளாத
அரும்பெரும் எளிய கொடைகளை
எனக்களித்து
நாளுக்கு நாள்
அருகதை உள்ளவனாய்
ஆக்குபவன் நீ!

களைத்துப் போய் நான் வெகுநேரம்
காலோய்ந்து கிடக்கும்
காலமும் உண்டு!
விழித்துக் கொண்டென்
குறிக்கோளைத் தேடி நான்,
விரைந் தோடுவதும் உண்டு!
ஆனால் நீ
இரக்கமற்ற முறையில்
என்கண் முன்பு தோன்றாமல்
ஒளிந்து கொள்கிறாய்!
முழுமனம் விரும்பாத,
உறுதி யில்லாத என்னாசைப்
பிடிகளுக்கு
உடனே நீ செய்யும்
மறுப்பு
விடுவிப் பளித்து அனுதினமும்
ஏற்றுக் கொள்ள
என்னை
அருகதை உள்ளவனாய்
ஆக்குபவன் நீ!

*****************
கீதாஞ்சலி (15)
என் பணி இந்த உலகுக்கு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நானிங்கு வாழ்ந்து வருவது,
உன்மீது
கானம் பொழியத்தான் !
உன் சன்னதி
மாளிகையில் இருக்கும் மூலை
ஆசனம் ஒன்றில்
அமர்ந் திருக்கிறேன்!
வேலை செய்ய
எனக்கு
எதுவும் இல்லை நீ
வீற்றிருக்கும் சொர்க்க உலகில்!
எவ்விதக் குறிக்கோளும் இன்றி,
பயனற்றுப் போகும்
என் வாழ்க்கை
உன் உலகில்,
சிதைந்து போய்விடும்
சீரற்ற கீதமாய்!

உனது சன்னதியின்
காரிருளில்
நள்ளிராப் பொழுதில்
கடிகார
மணி அடிக்கும் போது,
உன்னை
மௌனமாய்த் துதித்துக்
கானம் இசைத்திட,
உன் முன் நிற்கும்
எனக்கு
கட்டளை இடு,
என் வேந்தர் பெருமானே!
குளிர்ந்த காலைத் தென்றல்
வீசும் வேளையில்
பொன் மயமான
வீணை நாண்களில் நாதம் எழுப்பி
கானம் பொழியும் போது,
கௌரவம் அளித்திடு
என் முன்னே தோன்றி,
எனக்கு நீ!

*****************
கீதாஞ்சலி (16)
நிரந்தரமாய்க் கண்மூடும் நேரம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உலக
மனிதர் தோன்றிய
கலகலப்பான அந்த திருவிழாவுக்கு
எனக்கு அழைப்பிதழ்
அனுப்பி நீ
வரவேற்பு அளித்திருந்தாய்!
உன் ஆசீர்வதிப்பால்
என் பிறவி தோன்றி
இவ்வுலகில் நானும் அவதரித்தேன்!
கண்களில் யாவையும்
காண முடிகிறது!
காதுகளால் எதனையும் கேட்க
ஏதுவாகிறது!

திருவிழா விருந்தில்
இன்னிசைக்
கருவியை மீட்டு
கான மிசைக்க வேண்டியது
என் பொறுப்பாய் அமைந்தது!
அப்பணியில் முற்பட்டு
என்னால்
இயன்ற வற்றை எல்லாம்
முயன்று முடித்தேன்!
இப்போ துன்னைக் கேட்கிறேன் நான்:
இறுதி வேளை வந்து
என்னுடல்
மண்ணுக்குள் முடங்கி
உன்முகம் பார்த்து நான்
ஊமை மொழியில்
உன்னைத் தியானிக்கும்
தருணம்
அருகி விட்டதா?

*****************
கீதாஞ்சலி (17)
முடிவை எதிர்நோக்கி!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

முதுமையின் விளிம்பில் விடுவித்து கொண்டு
இறுதியில்
என்னை அவன் கைவசம்
ஒப்படைக்கப்
பொறுத்தி ருக்கிறேன்,
அவனது
அன்பு வரவேற்புக்கு!
தாமத மாவதின்
காரணம் அதுவே!
என்னைக் கவனிக்காத
உன் புறக்கணிப்பு, குற்ற
உணர்வை எழுப்பும் எனக்குள்!
விரைவில் தங்கள் சட்ட
விதி வலைகளில் என்னைக்
பிடித்துப் போட
குடிமக்கள்
ஓடி வருகிறார்கள்!
அவரது பிடிகளி லிருந்து
தப்பி யோட முனைகிறேன்,
எப்போதும்!
ஏனெனில் இறுதியில்
என்னை அவன் கைவசம்
ஒப்படைக்கப்
பொறுத்தி ருக்கிறேன்,
அவனது
அன்பு வரவேற்புக்கு!

மக்கள் குற்றம் சாட்டி என்னைப்
பழிக்கிறார்!
அக்கறை இல்லாதவன் என்றெனைப்
விளிக்கிறார்!
அவ்விதம் என்மேல் பழி விழுவதை
இல்லை என்று
மறுக்க வில்லை நான்!
சுறுசுறுப் பாளிகளின்
அன்றைய வர்த்தக நாள்
அத்த மித்தது!
ஆரவாரக் காரர் வேலைகள் யாவும்
முடிக்கப் பட்டு விட்டன!
விதி வலைகளுடன்,
வீணாய் என்னைத் தேடிக்
காண வந்தவர்
அனைவரும்
திரும்பிச் சென்றனர்
சினத்துடன்!
ஆயினும் நானோ
இறுதியாய்
என்னை அவன் கைவசம்
ஒப்படைக்கப்
பொறுத்தி ருக்கிறேன்,
அவனது
அன்பு வரவேற்புக்கு!

*****************
கீதாஞ்சலி (18]
உனக்காகக் காத்திருக்கிறேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பகலில் காரிருள்
மிகுந்து கொண்டே போகிறது,
முகில் மேல் முகில் அப்பி
மோதிய வண்ணம்!
என் அன்பே!
வாடும்படி என்னைத் தனியே
தவிக்க விட்டு
வாசற் கதவின் வெளியே
வெகுநேரம் காக்க
வைப்பது ஏனோ?
சுறு சுறுப்பான பகற் பொழுதில்
வேலை செய்யும் சமயம்
ஆரவாரக் கூட்டத்தில் நான்
ஓரமாய் ஓதுங்கி உள்ளேன்! ஆயினும்
ஏகாந்தமாய்
இருண்டு போன இன்றைய நாளில்,
நம்பிக் கொண்டி ருக்கிறேன்,
நின்முகம்
காண்பேன் என்று!

நின் திருமுகத்தை
நீ காட்டாது போனால்,
நிரந்தரமாய் ஒதுக்கி என்னை,
நீ ஒருங்கே
புறக்கணித்து விட்டால்,
எவ்விதம் வாழ்வ தென்று,
தவிக்கிறேன்,
குளிரும் மழை வேளைகளில்!
அங்கு மிங்கும்
அலையும் காற்றைப் போல்
நிலைமாறிக் கலங்குது என்
நெஞ்சு!
எப்போது முகம் காட்டுவாய் நீ
என் அன்பே?
கண்ணிமை கொட்டாது,
கவலையில் சோர்ந்து போய்
விண்வெளிக்கு அப்பால் நோக்கிய வண்ணம்
நிற்கிறேன்,
விழித்துக் கொண்டு!

*****************
கீதாஞ்சலி (19)
காலையிலே எழும் கீதம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னுடன் நீ
உரையாடாமல் இருந்தால்,
உன்னுடைய மௌனத்தைச் சேர்த்து
நிரப்பிக் கொள்வேன்,
எனது
நெஞ்சில் இட்டு!
எப்படியும் அதைத் தாங்கி
இனிமேல்
பொறுத்துக் கொள்வேன்!
ஆயினும்
விண்மீன்கள் கண் விழிப்புடன்
இரவைக்
கண்காணித்து வருவது போல்
சிரம் தாழ்ந்து
காத்திருப்பேன் கவலையுடன்!
காரிருள் மறைந்து நிச்சயம்,
சூரியன் உதிக்கும்
காலையில்.

அப்போது
வானை இடித்துக் கொண்டு
கீழே
பொன்னொளிக் கதிர்களில்
உன்குரல் பொழிந்து பெய்யும்!
என் பறவைகளின்
ஒவ்வொரு கூட்டி லிருந்தும்
உன்னிதழ்கள் உதிர்க்கும் வாசகங்கள்
சிறகுகளை ஏந்திப்
பறந்து வரும்,
இன்னிசைக் கீதங்களாய்!
என்னுடைய
வனாந்திரத் தோப்புகளில் எல்லாம்
மலர்ந்த
பிஞ்சுப் பூக்களில்
ஒலித்து வரும்,
நெஞ்சை உலுக்கும்
உன்னினிய
மெல்லிசைகள்!

*****************
கீதாஞ்சலி (20)
நெஞ்சில் மலரும் நறுமணம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அல்லி மலர்கள் விரிந்து பொங்கிய
அன்றைய நாளில்,
அந்தோ!
எந்தன் மனம் ஏனோ
அலைமோதிக் கொண்டி ருந்தது
எனக்குப் புரியாத
நிலையில்!
முற்றிலும் காலியாய் இருந்தது
எனது பூக்கூடை!
நறுமண மலர்கள் கிடந்தன
பறிப்பா ரின்றி!
அன்றைய தினமும்
அடுத்த நாளும் சோகம் என்னை
கவ்விக் கொண்டது!
கனவுக் காட்சியை ஆரம்பிக்க
மனத்திரை திறந்தது
எனக்கு!
தென்திசை அடிக்கும் காற்றில்
விசித்திரமான
இனிய துளிகளாய் எங்கிருந்தோ
மணம் கமகமவென எழுவதை
உணர்ந்தேன்!

எதிரில் நுகர முடியும்
புதிரான அந்த
இனிய மணம் எனது இதயத்தில்
உண்டாக்கும்
ஏக்க வலி!
அரிய மணத்தை ஆர்வமாய்ப்
பரப்பி விடும்,
வேனிற் பருவம் தேடி எனது
நெஞ்சை
நிரப்புவது தெரிந்தது!
அருகிலே
உருவான மணம்
என்னைச் சார்ந்த தென
தெரியாமல் போனது
அந்த நேரம்!
பூரண இனிமைக் கிளர்ச்சி
தெரியாமல் இருந்தது,
நேராக எனக்கு,
இதய ஆழத்தின்
மலர்ச்சியில்
உதயம் ஆனதென்று!

*****************
கீதாஞ்சலி (21)
படகோட்டியின் தயக்கம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

கடலில் எனது படகை
மிதக்க விட்டு
துவக்க வேண்டும் எனது
பயணத்தை!
அந்தோ! ஏன் இப்போது எனக்கு
இந்த தயக்கம்?
களைத்த எனது முதுமைக்
கால மணி நேரங்கள்
கடந்து போயின வீணாய்
கடற் கரையில்!
வசந்த காலமும்
பூத்துக் குவிக்கும் பணியை முடித்து
கடந்த கால மானது!
பயனற்றுப் போய் இப்போது,
வாடி வதங்கிய
பூக்களைப்
பாரமாய்ச் சுமந்து கொண்டு
பதுங்கி நிற்கிறேன்
ஒதுங்கியபடி!

பேரி ரைச்சலை எழுப்பு கின்றன,
நீரலைகள்!
கடற்கரை மேல் காய்ந்து
பழுத்துப் போன
மஞ்சள் நிற இலைகள் தள்ளாடி
விழுகின்றன,
நிழல் படிந்த சந்து பொந்தில்!
உற்று நோக்கி
வெற்று வானை நீ
வெறித்துப் பார்ப்ப தென்னே?
அப்போது
அக்கரைக் கப்பால்
வெகு தொலைவில் வெளியாகி
காற்றிலே நீந்தி வரும்,
தாளமுள்ள
கானம் உன்னைத்
தழுவிச் செல்லும் போது,
புல்லரிக்க வில்லையா,
உனக்கு
மேனி சிலிர்த்து?

*****************
கீதாஞ்சலி (22)
கதவு திறந்திருக்கிறது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

கோடை மழை பெய்யும்
ஆடி மாதக் காலம்,
கருமை நீளும் நிழல்களில்
இரவைப் போல மௌனத்தில்
இரகசியமாய்
தடம் வைத்து வருகிறாய்,
எவரும் காணாமல்!
காரிருள் சூழ்ந்து விட்டது,
இன்றையக்
காலைப் பொழுதும் தனது
கண்களை மூடி!
கிழக்கு நோக்கி,
அழுத்தமாக
பேரிரைச்ச லோடு அழைக்கும்
பெருங் காற்றைத்
தெருவில்
காண்பார் யாரு மில்லை!
என்றென்றும்
நீல நிறத்தில் காட்சி தரும்
விண்ணின் மீது
காரிருள் போர்த்தியது,
திண்ணிய முகில்
திரையை!

காட்டு மரங்கள்
கூட்ட மாகக் கானம் பாடி
ஓய்ந்து போயின!
ஒவ்வொரு வீட்டின் கதவுகளும்
இறுக்கச்
சாற்றப் பட்டு விட்டன! அப்போது
தடமிட்டுத் தன்னந்
தனியாக
மனித சந்தடி யற்ற
தெருக்களில் வருபவன் நீ
ஒருவனே!
என்னரும் ஒரே ஒரு நண்பனே!
என்னுயிர் அன்பனே!
தாழிடப் படாமல்
என் வீட்டு
வாயிற் கதவுகள்
திறந்தி ருக்கின்றன உன்னை
வரவேற்பதற்கு !
வீட்டில்
தடமிடாமல்
கடந்து போய் விடாதே,
கனவைப் போல்!

*****************
கீதாஞ்சலி (23)
எங்கே உன் பாதை?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

புயல் வீசிக் கொந்தளிக்கும்
கடலில்
பயங்கர இரவு நேரத்தில்,
படகில் ஏறி விட்டாயா,
காதல்
யாத்திரைக்கு,
என்னரும் நண்பா?
நம்பிக்கை யற்று வான மண்டலம்
வெம்பிப் புலம்புகிறது,
இடி முழக்கி!
இன்றைய
இரவுப் பொழுதில்
உறக்கம் வாரா தெனக்கு!
கதவைப் பன்முறைத் திறந்து
காரிருளில்
தேடிப் பார்க்கிறேன்
மீண்டும் மீண்டும்,
என்னரும் நண்பா!

என் கண்களின் முன்பாக
எதுவும்
தென்பட வில்லை!
எங்கே
இருக்கிறது உன் பாதை என்று
தெரியாமல்
விந்தை யுறும் என் நெஞ்சம்!
காரிருள் நீர் ஆறாய் ஓடும்
மங்கிய கரையின்
அருகிலா உன் பாதை?
அன்றி
அதற்கும் அப்பால்
ஆரவாரம் புரியும் கானகத்தின்
ஓரத்திலா உன் பாதை?
மர்மமான இருள் படர்ந்த ழத்தின்
ஊடேயா உன் பாதை?
எந்த வழியைத் தொடர்ந்து
உந்தன்
பயண நூற் கண்டின் கயிறு
முனை திரிக்கப்பட்டு
எனைக் காண
வருகிறாய்?

*****************
வழிப்போக்கன் (24)

மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

அத்தமன மாகி
இன்றைய பொழுது சாய்ந்து விட்டால்,
கானம் பாடாது
நிரந்தரமாய்,
பறவையினம் மௌன மாகி விட்டால்,
கால்கள் ஓய்வாகி
காற்று
களைத்துக் கொடி காட்டி விட்டால்,
காரிருள் முகத் துகிலைத் திரையிட்டு
என்மீது
கனமாகப் போர்த்திவிடு! …..
அண்ட கோளத்தை நீ
மெத்தையில்
மேவி
நித்திரையில்
ஆழ்த்தி விடுவது போல! …..
அந்தி
சாயும் வேளையில்
தலைசாயும்
செந்தாமரையின் செவ்விதழ்கள்
மென்மையாக
மூடுவது போல! ……

யாத்திரை முடிவதற்கு முன்பே
சாக்குப் பையில்
பயணியின்
சரக்குப் பண்டங்கள்
முழுதும் தீர்ந்து போயின!
வழிப்போக்கனின்
புழுதிகள் அப்பிய
உடைத் துணிகள் கந்தலாய்ப் போயின!
நடைப்பயணி
வலுவற்று
சோர்வடைந் துள்ளான்!
வறுமையை நீக்கி
வழிப்போக்கனின்
மானத்தைக் காத்திடு!
மீண்டும்,
வாழ்வளித்திடு வழிப்பயணிக்கு!
உந்தன்
கனிவு மிகும்
இரவின்
காரிருள் வெளிக்குள்ளே,
வேர்விடும்
பூவைப் போல்!

**************
கீதாஞ்சலி (25)
புதுப்பித்திடு காலை ஒளியை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

களைத்து மயங்கும் இரவில்
சளைத்து,
உன்னை நம்பி
பொறுப்பை எல்லோம் உன்மேல்
போட்டு விட்டு,
நித்திரையில் என்னைத் தள்ளி
புரண்டு போரா டாமல்
பொத்தெனச்
சாய வேண்டும் நான்!
பட்டொளி வீசிப் பறக்கும்
எந்தன்
ஆன்மீக உணர்ச்சியை
தூண்டி விட்டு
புகுத்தக் கூடாது,
தகுந்த பயிற்சி முறை யில்லாமல்
உன்னைத் தொழுதிடத்
துவங்கும் போது!

தேயும் இன்றைய நாள்
சாயும் வேளையில்
கண்களைக்
கிரங்க வைத்து
இரவின் முகத் திரையை
இழுத்து மூடுவோன் நீ
ஒருவனே!
புதிய மகிழ்ச்சி பூத்துப்
புலரும்
காலைப் பொழுதின்,
விழிக்கும் கண்களுக்கு
ஒளியை ஊட்டிப்
புதுப்பித்து
அடுத்த நாளை
மீண்டும்
உதிக்க வைப்பவன் நீ
ஒருவனே!

*****************
கீதாஞ்சலி (26)
கனவில் உன்னிசைக் கானம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஆழ்ந்த உறக்கத்தில்
மூழ்கியுள்ள போது
பக்கத்தில் அவன் அமர்ந்தாலும்,
நித்திரை யிலிருந்து
ஏனோ நான்
விழித்தெழ வில்லை!
என்னே
எந்தன் சாபக் கேடானத் தூக்கம்?
அந்தோ
நொந்து போகும் என் நெஞ்சு!
நெருங்கி வந்த
தருணம்,
நள்ளிரவு அப்பிய நேரம்!
கரங்களில்
யாழினை ஏந்திய வண்ணம் அவனது,
விரல்கள் மீட்டிய
இன்னிசைக் கானங்களில்
ஒன்றிப்போய்
பின்னிக் கிடந்தன
என் கனவுகள்!

எனது இரவுப் பொழுதுகள் எல்லாம்
ஏன் இவ்விதம்
கனவுப் பொழுதுகளாய்
ஏமாற்றம் அளித்து
வீணாய்க்
கழிந்து போகின்றன?
ஆழ்ந்து உறங்கும் வேளையில்
என்னைச்
சூழ்ந்து வரும் அவனது
இன்னிசை மூச்சு,
என் கனவைத்
தொட்ட போதும் இருப்பை
உணராமல்,
கனவிலே அவனைக் கண்டும்
காணாமல்,
இப்படி எப்போதும்
வாய்ப்பை
இழப்பதுவும் அதற்காக
நானேங்கி வருந்துவதும்
ஏனோ?

*****************
கீதாஞ்சலி (27)
ஏற்று அன்புச்சுடர் விளக்கை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஒளி!
எங்கே உள்ளது ஒளி?
ஏற்று அந்த ஒளி விளக்கை,
ஆசைச் சுடர்விட்டு எரிந்திட!
விளக்கு மட்டும் அங்கே
உள்ளது தீப்பொறி
துள்ளாமல்!
அதேபோல்
ஒளியில்லா விளக்காய்
நெஞ்சே நீயும் இருக்கிறாய்!
மரணமே,
உனக்குச் சால உகந்தது!
உன் வீட்டுக் கதவை
அவலம் தட்டுகிறது! அது கூறும்
தகவல் இது:
கண்காணிப்புடன்
உன்னை நோக்கி வருபவன்
உன் அதிபன்!
இருண்டு செல்லும் இரவின் போக்கில்
என்னை அழைக்கிறான்
அன்புச் சந்திப் புக்கு!

கருமேகங்கள் கூடி
மப்பு மந்தாராமாய்
வான மண்டலம் இருண்டு,
மழை பெய்து
ஓய்வதாய்த் தெரிய வில்லை!
நெஞ்சைக் கலக்குவது
என்ன வென்று அறியேன்!
உட்பொருளும்
எட்ட வில்லை எனக்கு!
கண்ணிமைப் பொழுதில்
மின்னல் வெட்டி
கண்ணொளி பறித்து
துக்க மூட்டி
மிக்க இடர் விளைவிக்கும்!
எழுந்திடும் இரவின் இன்னிசை
எப்பாதை நோக்கி
என்னை அழைக்கிற தென்று
ஐயமுற்றுத் திணரும்
என் இதயம்!

ஒளி!
எங்கே உள்ளது ஒளி?
ஏற்று அந்த ஒளி விளக்கை,
ஆசைச் சுடர்விட்டு எரிந்திட!
வெளியே பேரிடி
முழங்குகிறது!
வெற்றிடம் நோக்கிக் காற்று
வேகமாய்ப் பாயுது,
அலறிய வண்ணம்!
கருங்கல் குன்று போல்
சுருண்டு போனது இரவுப் பொழுது!
காரிருளின் கைப் பிடியில்
வீணாய்க்
காலம் கடத்த வேண்டாம்!
உன்னரிய
வாழ்வு மூலம் தூண்டி
ஏற்றி விடு,
அன்பெனும்
சுடர் விளக்கை!

*****************
கீதாஞ்சலி [28]
விடுதலை வேண்டும்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மூர்க்கத்தன மானவை
எனக்கு
நேர்ந்த இடையூறுகள்! ஆயினும்
நெஞ்சு வலிக்கிறது,
தடைகளை
உடைக்க முயலும் போது!
வேண்டுவ தெல்லாம் எனக்கு
விடுதலை!
வருமென அதை எதிர்பார்த்து
நம்பி யிருப்பது
பெரும் வெட்கக் கேடு!
திண்ணமாய்ச் சொல்வேன்,
விலை மதிப்பில்லாச்
செல்வம்,
உன்னிடத்தில் உள்ளது!
நம்புதற் குரிய எனது
உன்னத
நண்பன் நீதான்.
ஆயினும்
என் வீடெங்கும் நிரம்பி
மின்னும் தோரணங்களை
நீக்க மனமில்லை
எனக்கு!

மண்தூசியும் மரணமும் மேவி
என்னைப் போர்த்தி யுள்ள
அழியும் தோலை
அறவே வெறுத்தாலும்,
தழுவிக் கொள்கிறேன்
வாஞ்சையோடு!
பெருகிப் போயின எனது
கடன்கள்!
பேரளவில் நேர்ந்தன எனக்குத்
தோல்விகள்!
கனத்துப் போனவை
நாணப்படும்
எனது இரகசி யகங்கள்! ஆயினும்
உன்னிடம்
நன்னெறி வேண்டி வரும் போது
நடுங்கிடும் என் நெஞ்சு,
வேண்டுவதை நீ அளித்து
விடுவாய் என்று!

*****************
கீதாஞ்சலி (29)
என்னைச் சுற்றி ஓர் மதில்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எந்தன் பெயருக்குள் புகுந்து கொண்ட
அந்த மனிதன்
பாதாளக் கிடங்கில்
அழுது கொண்டி ருக்கிறான்! அந்த
குழியைச் சுற்றிலும்
மதிலை எழுப்பி
அரண் கட்டுவதில்
பரபரப்பாய் உள்ளேன் நான்
எப்போதும்!
நாளுக்கு நாள் வானோங்கி
மேலெழும்
அரண் ஆக்கத்தால்
இருண்ட மறைவின் நிழலில்
உண்மையான
தன்னுணர்வை இழந்து போகிறேன்,
கண்ணொளி குன்றி!

மாபெரும் கோட்டை எழுப்பி
மறைந்து கொண்டதில்
பெருமிதம் எனக்கு!
மண்ணாலும் மணலாலும் கட்டி
மதிலில்
துளைகளை மறைத்திட
சுண்ணம் பூசி விடுகிறேன்!
அல்லாவிட்டால் அந்தப் பெயரில்
சிறு ஓட்டை விழுந்து விடும்!
பெயரைக்
காத்துக் கொள்ள
கவனமாக நானெடுக்கும்
ஒளிமறைவு முயற்சி
வழி திறக்கிறது,
என் சுயமதிப் புணர்வை
இழந்து போக!

*****************
கீதாஞ்சலி (30)
என்னைப் பின்தொடரும் நிழல்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

தன்னந் தனியான என் பாதையில்
வந்து நிற்கிறேன்,
எந்தன் காதலியைச்
சந்தித்த பின்பு!
யாரிவன், மௌனக்
காரிருள் மேவிய நேரத்தில்
என் பின்னே
என்னைத் தொடர்ந்து வருவது?
ஒதுங்கி
இருக்கையைத் தவிர்க்கப்
பதுங்கிக் கொண்டாலும்
எந்தப் பலனு மில்லை!
என்னதான்
முயன்றாலும் என்னால்
தப்பிப் புறக்கணிக்க
இயல வில்லை அவன்
இருக்கை விட்டு!

பெருமித நடை நடந்து
புழுதி கிளப்பித்
தூசியைப்
புவித் தளத்தி லிருந்து
சூழ்வெளி நோக்கி
அனுப்புகிறாய்!
வாய் உதிர்க்கும் ஒவ்வொரு
வார்த்தை யோடும்
இரண்டறக் கலக்கிறது,
அவன் போடும்
ஆரவாரக் கூக்குரல்!
என் சிற்றுருவச் சுய உணர்வின்
முழுத் தோற்றத்தில்
காண முடிவது
அவன் திருவடிவம்!
நாணமற்றுப் போனவன்
ஆயினும்,
மாய நிழல் பின்தொடர நான்
முன் வந்து
உன் சன்னிதி வாயிலில்
நின்றிட
வெட்க மடைகிறேன்,
என் அதிபனே!

*****************

கீதாஞ்சலி (31)
சிறைக் கைதி!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“சிறைக் கைதியே!
என்னிடம் சொல்லிடு,
உன்னைத் தண்டித்து
சிறையில் தள்ளியவன் யார்?”
“எனது மேலதிகாரி”
என்று பதிலுரைத்தான் கைதி.
“பணம் திரட்டி ளும் திறத்திலும்
உலகை மிஞ்சி
மேலோங்கி
அனைவரையும் அமுக்கலாம் என்று
நினைத்தேன்!
மன்னவன் துணையால்
ஏராளமாய்
செல்வக் குவியலைத்
திரட்டி என்
புதையல் களஞ்சியத்தை
நிரப்பினேன்!
மரணம் கொண்டு போனபின் எனது
பிரபுவின்
படுக்கையில் கிடந்தேன்!
விழித்ததும் கண்டது என்ன
வென்றால் நான் கட்டிய
புதையல் களஞ்சிய மாளிகை
என்னும்
சிறைச் சாலையிலே கைதியாய்
நானே
சிக்கிக் கொண்டதை!”

“சிறைக் கைதியே!
என்னிடம் சொல்லிடு,
உன் கைவிலங்கின் உடைக்க முடியாத
இந்த இரும்புச் சங்கிலியை
மெய்வருந்தி
உருவாக்கியவன் யார்?”
“மிகக் கவனமாய்
இரும்பு விலங்கை
உருக்கக் காய்ச்சி
பட்டறையில்
வார்த் தடித்தவன் நானேதான்!
சேர்த்த செல்வாக்கும்
தோற்காத என் திக்கமும்
தரணியை
எனக்குக் கீழாக்கி
தங்கு தடையின்றி தனியாக
என்னை
விடுதலை மனிதனாய் விட்டுவிடும் என்று
பெருமிதம் கொண்டேன்!
கடும் சூட்டுக் கனலில்
இரவு பகலாய்
காய்ச்சி
இரும்புச் சங்கிலியை
கடியதாய் ஓங்கி அடித்து
வடித்தேன்!
இறுதியில்
என் வேலை முடிந்து,
முறியாத கைவிலங்கு முழுதாய் னதும்,
நான் கண்டதென்ன,
சங்கிலி
பற்றிக் கொண்டது
கெட்டியாய்
முற்றிலும் என்னை!

*****************
கீதாஞ்சலி (32)
இதயத்தில் உனக்கோர் இடம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இந்த உலகில்
அன்புடன் அரவணைத்து என்னை
ஆதரிப்பவர்
எல்லா வித வழிகளையும் மேற்கொண்டு
பாதுகாப்பாக
எனைத் தம் குழுவில் பிடித்துப் போட
முனைந்து வருகிறார்!
ஆயினும்
என் மீது ஆழ்ந்த
அன்பு கொண்டுள்ள நீ
அவர்களின்
பாசத்தை விட
மேலாக இருப்பதால்,
எனக்கு நீ எப்போதும்
கொடுத்தி ருக்கிறாய்
விடுதலை!

ஏகாந்தத்
தனிமையில் இருக்கும் போது,
துணிந்து வந்து
தொல்லை கொடுப்பர்,
விடுதலையுடன்
நடமாடும் எனக்கு!
ஒருபோதும்
மறக்க வில்லை நானதை!
ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்துக்
கடந்து போகிறது! ஆயினும்
உன்னைக்
காண முடிய வில்லை நான்!
உள்ளம் துதிக்கும் போது,
உன்னை நான் விளிக்கா விடினும்,
இதயத்தில் உனக்கோர்
இருக்கை நான் அளிக்கா விடினும்,
உன் பரிவு
இன்னும் காத்திருக்கும்,
என் அன்பை
வேண்டி!

*****************
கீதாஞ்சலி (33)
புனித பீடத்தில் களவு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பகற் பொழுதில்
அவர்கள் யாவரும் ஒருங்கே
என் இல்லத்திற்குள்
புகுந்து விட்டுத் தணிவாய்க் கூறினர்.
“உங்கள் வீட்டில் சிறிய
ஓர் அறையே
எமக்குப் போது மானது!
உமக்கு நாங்கள்
உதவ விரும்புகிறோம் இன்று,
கடவுளை நீங்கள்,
வழிபடும் வேளையில்!
எமக்கு இறைவன் அளிக்கும் அருள்
பகுதி ஆயினும்
அந்த
வெகுமதி போது மானது!
ஏற்றுக் கொள்வோம்,
பணிவோடு.”

அவ்விதம் கூறி அனைவரும்
பரிவுடன்,
பவ்வியமாய் வீட்டு மூலையில்
அமைதி யாக
அமர்ந்து கொண்டனர்.
பிறகு நள்ளிரவுக் காரிருளில்,
திடீரென எழுந்து,
பேராசை கொண்டு
ஆரவார மோடு
வன்முறை வலுவினைக் காட்டி
என்கண் முன்பாக
எனது
புனித பீடத்தின்
பூட்டை உடைத் துள்ளே
புகுந்து
வேட்டை யாடிச் சென்றார்கள்,
சன்னிதியில் ஆராதனை
சமர்ப்புகளைக்
களவாடிக் கொண்டு!

*****************
கீதாஞ்சலி (34)
என்னிடம் மிஞ்சிப் போனது.

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னிடம் மிஞ்சிப் போன
சின்னஞ் சிறிய
ஏதோ ஒன்று,
உன் பெயரில் நிலைக்கட்டும்,
என் முழு உடமை நீ
என்பதில்!
என்னிடம் மிஞ்சிப் போன
சின்னஞ் சிறிய
ஏதோ ஒன்று
எனது உறுதிப்பாட்டில்
உணர்த்திக் காட்டட்டும்,
உன் இருக்கையை
ஒவ்வொரு திக்கிலும்!
உன்னை நெருங்கி ஏகட்டும்
ஒவ்வொரு தேவைக்கும்!
அர்ப்பணம் செய்யட்டும்
உனக்கு
ஒவ்வொரு கணமும்
எந்தன் நேசத்தை!

என்னிடம் மிஞ்சிப் போன
சின்னஞ் சிறிய
ஏதோ ஒன்று
எடுத்துச் சொல்லட்டும்,
உன்னிட மிருந்து நானோடி
எப்போதும்
ஒளிந்து கொள்ள முடியா தென்று!
உரைக்கட்டும்,
கால் விலங்குக் கட்டுகளுடன்,
உன் உறுதிப் பிடியில்
என்னிதயம்
பின்னிக் கொண்டிருப்பதை!
எடுத்துச் சொல்லட்டும்,
என்னை நீ
படைத்து விட்டதின் பலனை
நான் வாழ்வில்
நடத்திக் காட்டி விட்டதை!
பலரும் அறியட்டும்,
உன் பரிவுப் பிணைப்பே
என் கால்களில்
விலங்காய்க் கட்டப் பட்டு
இருப்பதை!

*****************
கீதாஞ்சலி (35)
விழித்தெழுக என் தேசம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ,
அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

*****************
கீதாஞ்சலி (36)
என் பிரார்த்தனை

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இதுவே நான் செய்யும்
பிரார்த்தனை இறைவா!
நெஞ்சில் முளைக்கும் தாழ்ச்சி
எண்ணத்தின்
வேரை நோக்கி அடி!
ஓங்கி அடி!
இன்ப துன்பத்தை எளிதில் தாங்கிட
எனக்குப் பொறுமை அளித்திடு!
நற்பலன்கள் விளையும் பணிகளை
நான் பாசமுடன் புரிய
நல்கிடு உறுதி!
வறியோரை என்றும் மறவா திருக்கவும்,
நெறியிலா மூர்க்கர் முன்பாக
முழங்கால் மடக்கி
என்றும்
வணங்கா திருக்கவும், எனக்கு
வைராக்கியம் கொடுத்திடு!
தினச் சச்சரவி லிருந்து விடுபட்டு
மனம் அப்பால் சென்று,
எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
மனத் தெளிவைத் தந்திடு!
அத்துடன்
எனது ஆற்றல் முழுவதையும்
ஒப்படைத்து
உன் ஆசைப் பணிக்கு
பாசமோடு உழைத்திட
எனக்குச்
சக்தியை அளித்திடு!

*****************
கீதாஞ்சலி (37)
முடியவில்லை என் பயணம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

முதுமையில் ஆற்றல் குன்றி
இறுதியில்
வலிமையின் விளிம்பு தொட்டு
எனது பயணம்
முடிந்துதான் போனதுவோ?
இதுவரை
எதிரில் நடந்த பாதை
எனக்கு மூடத்தான் பட்டதுவோ?
கைவச மிருந்த சரக்கெல்லாம்
காலியாய்ப் போயினவோ?
கண்காணா நிசப்த மூலையில்
ஓய்வாகக்
காலம் தள்ளும்
வேளைதான் வந்ததுவோ?
என்றென் மனம்
நொந்து போனது.

ஆயினும்
அறிந்து கொண்டேன்,
எனது பயணம் முடிந்து போவது
உனக்கு
விருப்பம் இல்லை
என்பதை!
நான் படைத்த முந்தைய
பாக்கள்
நாக்கில் வரண்டு போனதும்,
புதிய கீதங்கள்
பொங்கி எழுந்தன
இதயத்தில்!
பண்டைய
தடங்கள் மறைந்து போன
இடத்தில்
புதிய பூமி உதயமானது,
அதிசயமாய்!

*****************
கீதாஞ்சலி [38]
என்னிதயம் நாடுவது உன்னை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சம் நாடுவது உன்னை என்றும்,
நின்னை மட்டுமே என்றும்
நில்லாமல்
வேண்டிக் கொண்டிருக்கும்,
முடிவின்றி
மீண்டும், மீண்டும்!
இராப் பகலாய்,
என் மனதைத் திசைமாற்றும்
உலக இச்சைகள் எல்லாம்
உட்கருவில்
முற்றும் கூடாய்ப் போன,
வெற்று மாயைகளே!

இதயம் சோர்வடைந்து,
இரவானது தன்னிருள் குழிக்குள்ளே
பரிதியின் வெளிச்சம் வேண்டி
பதுக்கி வைத்திருக்கும்
பத்திரமாக! அதுபோல்
ஆழ்ந்து மெய்மறந்த நிலையில்
ஆலய மணியாய்
ஓலமிடும் எந்தன் கூக்குரல்:
உன்னை நான் நாடுவதை!
உன்னை மட்டும்
தேடுவதை!

சூறாவளிக் காற்று,
சீரான அமைதியைச் சீரழித்து
தீவிரமாய் அடித்த பின்
ஓய்ந்து போகும்!
ஆயினும்,
பேய்ப்புயல் இறுதியில்
திரும்பவும்
தேடிச் செல்லும் அமைதியை!
அதுபோல்,
உன் கனிவு அன்பினை எதிர்த்து
இன்னமும்
போரிடும் என் வெறிக்குணம்
ஆரவார அழுகுரல்
எழுப்பும்:
என்னுளம் நாடுவது உன்னை என்றும்
எனக்கு மட்டுமே
நீ என்றும்!

*****************
கீதாஞ்சலி (40)
கனிவு மழை பொழியட்டும்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நாட்கள் நாட்களாய்க் கடந்து
என் காய்ந்த இதயத்தில்
மழை பெய்யாமலே,
பின்தங்கிப் போனது,
என்னரும் இறைவனே!
குளிர்ச்சியாய் மழை பெய்யும்
தூரத்து அடையாளம்
துளியேனும் தெரியாமல்,
கருமேக மென்துகில் தவழ்ந்து
சிறிதேனும் பரவாமல்,
தொடுவானும் நிர்வாணமாய்த் தோன்றும்
கொடூர மாக!
இப்புற அடிவான் முதல்
அப்புறத் தொடுவான் வரை
திடுக்கிடக்
கொட்ட டித்து, மின்னலை
வெட்டி விளாசி,
நினது விருப்பம் அதுவாயின்
சினத்துடன் அனுப்பு,
காரிருள் சூழும் உனது
மாரகப் புயலை!

ஆயினும்
அழைத்துக் கொள் மீண்டும்,
அருமைப் பிரபு!
மனம் உடைந்து
நெஞ்சினை எரித்து,
கொடூரமாய் நிலைத்திடும்,
வெப்ப மயம்
மௌனமாய் நிலவி,
அப்பி யுள்ளதை
அழைத்துக் கொள் மீண்டும்!
நளின மேகம் தாழ்வாய்
நெளிந்து,
பகல் வேளை வெப்ப மென்னும்
தகப்பன் சீற்றத்தை
தாங்க முடியாது
ஏங்கிக் கண்ணீர் சொரியும்
தாயின் பார்வை போல்
தேயட்டும் மழைப் பொழிவு
மேலிருந்து கீழே!

*****************

கீதாஞ்சலி (41)
ஒளிந்திருக்கும் காதலன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எங்கே நிற்கிறாய்,
எல்லோருக்கும் பின்னே?
நிழலில்
ஒளிந்திருக்கும் காதலனே!
உன்னைத் தள்ளிக் கொண்டு
துச்சமாய் எண்ணி,
தூசி நிரம்பிய வீதியில்
காணாது போகிறார்,
அநேகர்!
ஆராதனைப் படையல் சமர்ப்பித்து,
நேரமாய்க்
காத்திருக்கிறேன்
களைத்துப் போயிங்கு!
பூக்கூடையும் காலியாய்ப் போனது,
போவோர், வருவோர்
பூக்களைத்
தூக்கிச் செல்வதால்!
காலைப் பொழுதும் விடை பெற்றது,
பகலிடம் விட்டு!
மாலை வேளையின் மந்தார
மயக்கத்தில்
தூங்கி விழும் எனது
விழி இமைகள்!
வழியில் போவோர்
என் வெட்க நிலை நோக்கி,
சிரித்துச் செல்கிறார்
ஏளனமாய்!

பிச்சை எடுக்கும் பேதைபோல்
குந்தி
முந்தானையில்
மூடி உள்ளேன்
முகத்தை!
என்ன வேண்டுமென
கேட்போர்க்கு
எதுவும் கூறாது கிடக்கிறேன்,
தலை சாய்ந்து!
வருவதாய் நீயோ
வாக்களித்தாய் எனினும்,
உனக்கு நான் காத்துக் கிடப்பதை
உறுதியாய் எப்படி
உரைப்பேன் அவரிடம்?
வெட்கக் கேடிது வெளியே சொல்ல!
வறுமையை வைத்துளேன்,
உனக்கு
வரதட்சணை வழங்க!
இரகசியமா யிருக்கும்
இந்த அவமதிப்பு இதயத்தில்!
தங்க ஒளி தகதகவென மின்னி
பொற்கொடி பறக்கும் உன்
வாகனத்தில்
என் கண்முன்னே நீ
வருகின்ற கனவுக்
காட்சியைக் காண
மண்வெளிப் புல்லில் அமர்ந்து
நோக்கு கின்றேன்,
விண்வெளியை!

கந்தைத் துணி உடுத்தி,
அகந்தை யுடன்
பந்தல் கொடிபோல் தென்றலில்
நடுங்கு மிந்த
பிச்சைப் பெண்மணியைப்
பக்கத்தில் வைத்துக் கொள்கிறாய்,
ஆசனத்தை விட்டுக் கீழிறங்கி
தூசி மண்ணி லிருந்து
தூக்கி!
நேரம் போகிறது,
ஆயினும் உன்
தேரோடும் சக்கரங்களின்
ஆரவாரம் கேட்டிலேன்!
கும்மாளம் போடும் கூட்டமும்
கோலாகல மோடு
சும்மா போகிறது!
நிழலில் மௌனியாய்
எல்லாருக்கும் பின்னிற்பவன்
நீதானா?
காத்துக் கிடந்து களைத்துப் போய்,
இதயம் துண்டாகி
வீணாக
வேதனையில் அழுதிடும்
பேதை
நான்தானா?

*****************
கீதாஞ்சலி (42)
படகில் நீயும் நானும்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

கீழ்வானம் வெளுக்கும் முன்னே,
வாயில் முணுமுணுத்தேன்:
நீயும் நானும் மட்டும்
நீண்ட பயணம் துவங்க வேண்டும்,
படகு ஒன்றிலே!
அவனியில் நம் பயணத்தை
அறியக் கூடாது எந்த ஆத்மாவும்!
எந்த தேசம் நோக்கி
ஏகுவோம் என்பதும்,
முடிவில்லாப் பயணத்தை
தொடருவோம் என்பதும்
தெரிய வேண்டாம்!
கங்கு கரையற்ற அந்த பரந்த
கடல் வெளியில்
உந்தன் மௌனப் புன்னகை
எந்தன் செவிகளில் பட்டால்,
இன்னிசையில் உருக்கிடும்
கான வெள்ளம்
பொங்கி எழும் எனக்கு,
கட்டுப் படாத அலைகள் போல,
பந்த பாசப் பிணைப் பெல்லாம்
விட்டு விலகி!

அந்த வேளை நமக்கின்னும்
வந்திட வில்லையா?
நின் பணிகள் யாவும் முடியாமல்
நீடித்துச் செல்பவையா?
அந்தோ!
மாலை மங்கிய வெளியில்
கடற்கரை முழுதும்
மப்பு மந்தாரம்
அப்பி விட்டது!
கூடுகளை நோக்கிக் கூட்டமாய்
நாடி வருகின்றன,
கடற் பறவைகள்!
அந்தி மயங்கும் சமயம்,
நங்கூரச் சங்கிலி நீங்கியதும்,
நகரத் துவங்கும்
படகில் நாம்
கடல் அடிவானில் அத்தமிக்கும்,
சூரியனின்
கடைசி மினுப்புக் காட்சி போல்
காரிருளில்
மறைந்து போவோ மென
யார் அறிவார்?

*****************

கீதாஞ்சலி (43)
முடிவில்லா முக்தி!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னில்லத்தில்
உன்னை வரவேற்க நான் தயாராக
இல்லாத தருணம்,
அன்றைய தினத்தில்
பொதுவழிப் போக்கன் போல்
அழைப்பில்லாமல் என்னிதயத்தில்
நுழைந்தாய் நீ,
எனக்குத் தெரியாமல்!
எத்தனையோ கோடி இன்பத்தில் நான்
திளைத்த
என் வாழ்க்கையின்
முடிவில்லா
முக்தி நிலைக்கு ஒப்புதல்
தந்து அழுத்தமாய்
முத்திரை
குத்தி யிருக்கிறாய்
எந்தன் வேந்தே!

இன்றைய நாளில்
எதிர்பாராது,
இன்புற்ற என் நிகழ்ச்சிகளில்
உன் முத்திரை மேவி
பேரொளி
ஊட்டும் போது அவை யாவும்
துண்டாய்ச் சிதறி
மண் புழுதியில் கலந்து
மக்கிய துணுக்காய்ப் படிந்து,
எனது இன்ப துன்ப
நினைவுகளில்
முனைந்து போன அந்த நாட்கள்,
மறந்து போயின!
அண்ட வெளியில் விண்மீன்கள்
ஒன்றுக்கு எதிராய் ஒன்று
ஒலி எழுப்பி
எதிர்ப்படுவது போல்,
உன் காலடிச் சப்தம் கேட்கும்
என் விளையாட்டு
அறையில்,
சிறு பிள்ளைத் தனமாக
திருவிளை யாடல் புரிந்து
புழுதி மண்ணில்
புரண்ட தெல்லாம் நீ
வெறுப்புடன் என்னைப்
புறக்கணிக்க வில்லை
அல்லவா?

*****************
கீதாஞ்சலி (44)
எனக்குப் பூரிப்பளிப்பது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இதுதான் எனக்கு
பூரிப்பளிப்பது!
நிழல் எங்கே
ஒளியை விரட்டுகிறதோ,
வேனிற் காலம் விழி திறந்ததும்,
மழை எங்கே
பொழிகின்றதோ, அந்த
சாலைப் புறத்துக்
கோலத்தைக் காத்திருந்து
கண்டு களிப்பதோர் இன்பம்!
அண்ட வெளியில்
கண் காணாது எங்கிருந்தோ
தூதர்கள் செய்தி ஏந்தி
வீதியில் கடந்து,
விரைவாய்ச் செல்வர்,
என்னைப் பாராட்டி! அந்நேரம்
உள்ளத்தின் உள்ளே உவகையில்
துள்ளிக் குதிக்கும்,
என்னிதயம்!
அகண்ட வெளியில் மெதுவாய்ப் பரவி
உலவிடும் தென்றலில்
நிலவிடும்
இன்ப மயம்!

கீழ்வானம் வெளுப்பது முதல்
அந்தி வானம் இருட்டும் வரையில்,
எந்தன் இல்லத்தின் முன்னே
கதவு வாசலில் அமர்ந்து
காத்தி ருக்கிறேன்,
சட்டெனத் தோன்றப் போகும்
மட்டிலாக் களிப்பு வேளை வருமென்று,
கட்டாயம் கண்குளிர அதைக்
காண்பே னென்று!
தருணம்
வரும் வரையில் நான் மட்டும்
தன்னந் தனியாக
ஏகாந்த நிலையிலே
இன்புறுவேன்
புன்னகையுடன்,
இன்னிசைக் கீதங்களைப்
பாடிக் கொண்டு!
அந்த நேரம் வீசும் தென்றலில்
பொங்கி நிரம்பும் நறுமணம்,
இங்கு நீ வருவது
திண்ணம்
என்பதைப் பரப்பி!

*****************
கீதாஞ்சலி (45)
எப்போதும் வருகிறானே!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அமைதியாக அவன் வைக்கும்
காலடிகளின்
அரவத்தை உன்
காதுகள் கேட்க வில்லையா?
வருகிறான், வருகிறான்,
எப்போதும் வருகிறானே!
வருகிறான்
ஒவ்வொரு யுகமும்!
வருகிறான்
ஒவ்வொரு கணமும்!
வருகிறான்
ஒவ்வொரு நாளும்!
வருகிறான்
ஒவ்வோர் இரவும்!
வருகிறான், வருகிறான், எப்போதும்
வருகிறானே!
வெவ்வேறான என் மனோநிலைப்
பின்னலில்
எண்ணற்ற கீதங்களை
இசைத்துப்
பாடி இருக்கிறேன்!
வருகிறான், வருகிறான் அவன்
எப்போதும் வருகிறான்,
என்பதை
என் கீத இசையெல்லாம்
முழக்கிடும் எக்காலம்!

வேனற் காலச் சித்திரை மாதம்
கானகப் பாதையின் மீது
நறுமணம் பரவிடும்,
நாட்களில்
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறானே!
ஆடி மாதக்
கோடை மழை
கொட்டி முழக்கும் போது
இருண்ட வானில்
இரவு வேளைகளில்
கருமுகில் இடிக்கும்
வான இரதத்தில்,
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறானே!
இடர்மேல் இடராய் அமுக்கி,
அவனது கால் மிதிப்புகள்
தடமிட்டு எனது
நெஞ்சத்தில் பளுவாய் அழுத்தும்!
ஆயினும்
அவனது பாதங்களின்
பொன்மயமான தொடுகை
ஊட்டும்
பேரொளி, எந்தன்
பூரிப்பில்!

*****************
கீதாஞ்சலி (46)
மங்கித் தேயும் மணம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எனக்குக் தெரியவில்லை!
கடந்து போன
எந்தக் காலம் தொட்டு என்னைச்
சந்திக்க
நெருங்கி நீ அருகே,
வருகிறாய் என்று?
பரிதியும், விண்மீன்களும்
ஒருபோதும்,
மறைக்க முடியாது,
என்னிட மிருந்து
உன்னை!
ஒவ்வொரு நாளும்
காலை, மாலை இருவேளையும்
உனது
காலடித் தடம் வைப்பு
அரவங்கள்,
காதில் விழும்! உந்தன்
தூதன், என்னை
இரகசியமாய் விளித்தான்,
என் இதயத்தின் உள்ளே
புகுந்து!

எனக்குத் தெரியவில்லை இன்று,
என் வாழ்க்கை
முழுவதிலும்
ஏன் கொந்தளிப்பு நேர்கிற தென்று?
எங்கிருந்து வந்தததோ
தெரிய வில்லை,
நெஞ்சினைக் கடந்து செல்லும்
எந்தன்
பூரிப்பு நடுக்கம்?
வேலை எல்லாம்
இடையில் நிறுத்தி விட்டு
மூட்டை கட்டிக் காடேகும்
தருணம்
நெருங்கி விட்டது போல்
தெரிகிற தெனக்கு!
காற்று வெளியில் எழும் எனது
வேற்றுணர்வுக்
காட்சி இது:
கண்களில் மங்கலாகி
வருகிறது,
நறுமண முள்ள உன்னினிய
இருப்பிடம்!

*****************
கீதாஞ்சலி (47)
ஆத்மாவின் விழிப்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காத்திருந்து
வீணாக இராப் பொழுதும் அவனைக்
காணாமல் கழிந்து போனது!
களைத்து போய்
தூங்கி விழுந்த பின்பு
திடுமென
விடியும் வேளையில்
வெளியே நிற்பான் கதவருகில் என
அஞ்சும் என் நெஞ்சு!
நண்பர்களே!
நடந்து வரும் பாதையில் நிற்காமல்,
வருகை புரிய அவனுக்கு
வரவேற் பளிப்பீர்!
நடந்துவரும் அவன்
தட அரவத்தில் நான்
எழும்பா விட்டால் எனை விட்டுக்
கடந்து செல்வீர்!
எழுப்பாமல்
விட்டுச் செல்ல உம்மை
வேண்டிக் கொள்வேன்
பணிவாக!

பறவைக் கூட்டம் ஒருங்கே கூடி
உறக்கம்
கலைக்க வேண்டாம்,
அரவம் எழுப்பி!
வானம் வெளுத்து
பளிச்சிடும் விளக்கொளி விழாவில்
கலக்கிடும் காற்று
எழுப்பிட வேண்டாம் என்னை!
திடுமென
வாசல் அருகே என் கோமான்
வந்து நின்றாலும்,
கலையக் கூடாதென்
தூக்கம்!
அவன் கரம் தொட்டதும்
ஆழ்ந்த தூக்கம்,
என்னரும் தூக்கம்
கலைந்திடு மென்றுதான்,
கண்மூடி யுள்ளேன்!
உன் புன்னகை மின்னொளி
பட்டால் மட்டும்
திறக்குமென்
உறக்க விழிகள்,
காரிருள் தூக்கத்தில்
கண்முன் தோன்றும் கனவுக்
காட்சி போல்!

கண் விழித்ததும் முதற் காட்சியாய்க்
காண வேண்டும்,
என் கோமானை!
அனைத்துக்கும் முன்னுதித்த
ஆதி ஒளிச்சக்தி போல்,
அனைத்து வடிவங் கட்கும்
மூலமான உருவில்
முதலாகக் காண வேண்டும் அவனை!
விழித்தி ருக்குமென்
ஆத்மா வுக்கு
அவன் ஓரக்கண் பார்வை
அள்ளிக் கொடுத்திடும்,
மெய் சிலிர்த்த
பூரிப்பை!
என்னை நான் அறிந்திடும்
தன்னுணர்வு,
என்னை விட்டு நீங்கி
மீண்டும் அவனைச்
சேர்ந்து கொள்ளட்டும்,
சீக்கிரம்!

*****************
கீதாஞ்சலி [48]
உனை நாடிச் செல்வது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பொழுது புலர்ந்தது!
புள்ளினம் ஒருங்கே பாடின!
காலைக் கடல் மௌனம்
கலைத்துப்
பறவையின் கானங்கள்
அலை யலையாய்ப்
பரவி எழுந்தன!
பூவினம் யாவும் பாதை அருகில்
புன்னகை பூத்தன!
பொன்மயக் களஞ்சியம்
மேகக் கூட்டத்தின் ஊடே
சிதறிக் கிடந்தது!
நடந்து போனோம் கவலை யற்று,
கடற்கரை வழியே!
பூரிப்புடன் பாடலை முணங்காது
ஊர்ப்புறம் சென்றோம்!
வார்த்தை வரவில்லை வாயில்!
யாரும் சிரிக்க வில்லை!
நேரம் செல்லச் செல்ல
வேகமாய்ப் போனோம்,
வெளியில் நிற்காது!
வான மையத்தே பரிதி எரித்தது!
புறாக்கள் கூக்கூவென,
மரக்கிளை நிழலில் பதுங்கின!
நரைத்து உதிரும் இலைகள்,
நடனமாடி
வீசப் பட்டன

ஆலமரத்தடி நிழலில் ஆட்டிடையன்,
கண்ணயர்ந்து கிடந்தான்
கனவுலகில்!
கரையோரம் தலைவைத்து
மெல்லச் சாய்ந்து,
புல்வெளியில் கால்நீட்டிக்
கீழே படுத்தேன்!
தோழர் யாவரும் என்னைக்
கேலி செய்தார்!
எங்குமே தங்காது,
சிரம் நிமிர்த்தி அனைவரும்,
விரைந்தேகி மறைந்து போனார்,
திரும்பிப் பாராது!
குன்றையும் வயலையும் தாண்டி,
அன்னிய தேசம் நோக்கி
அநேகர் புலம் பெயர்ந்தார்!
மதிப்பளிப்பேன் உனக்கு, என்னரும்
அதிபதியே!
ஏளனமும், இகழ்ச்சியும்
என்னை எழுப்பிட விட்டன
எனினும்,
பின்னும் சும்மா விருந்தேன்!
அவமதிப்பாகித் தாழ்ச்சியின்
வீழ்ச்சியில்
அறிவு வந்த தெனக்கு!

பரிதி ஒளிக்கரை அச்சடிக்கும்
பச்சையத்தின் துயர்
மெல்ல மெல்ல
உள்ளத்தில் படர்ந்தது!
பயணம் துவங்கிய காரணம்
ஏனோ
மறந்து போன தெனக்கு!
தொல்லை யின்றி உள்ளத்தை
முழுதாய்க்
கானத்தில் மூழ்க்கி
அர்ப்பணம் செய்தேன் என்னை,
குழம்பிய நிலையில்!
கடைசியில் உறக்கம் தெளிந்து
கண்களைத் திறந்தேன்!
என்னெதிரே நின்றாய் நீ,
புன்னகை முகத்துடன்
கண்வெட்டும் பேரொளியாய்!
இன்னிசைக் கானம் பாடி,
உன்னைத் தேடிக் கொண்டு
போராடிச் செல்லும்,
தூரக் கடும் பாதையில்
வேர்த்துப் போனேன்!
நெருங்கி உன்னிடம் போவது,
எத்தகையக்
கடினப் போராட்ட மென
நடுங்கினேன்
தெரியுமா!

*****************
கீதாஞ்சலி (49)
வாசல் முன் நீ வந்தாய்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன் ஆசனத் திலிருந்து
கீழிறங்கி
என் குடிசை நோக்கி
வந்தாய்!
வாசற் கதவோரம்
நின்றாய்!
ஏகாந்தமாய் மூலை ஒன்றில்
நானிருந்தேன்,
கானம் பாடிய வண்ணம்!
கீதத்தின் இன்னிசை
உந்தன்
காதில் விழுந்து
கவர்ந்த துன்னை!
கீழிறங்கி வந்து
குடிசை
வாயிற் கதவோரம் நீ
வந்து நின்றாய்!

உன்னிசை மண்டபத்தில் எண்ணிலா
இன்னிசை
ஞானிகள் அநேகர்
எந்நேரமும்
கானம் பாடி வருகிறார்!
யினும்
ஆரம்பப் பாடக னான
எனது எளிய
கீதங்கள் மோதிக்
காதலிக்கும் உன்னை!
ஊனுருகி நானிசைக்கும்
மோன கீதம்
உலகத்தின்
உன்னத இன்னிசையுடன்
பின்னிக் கொண்டது! நீ
கீழிறங்கி வந்து
குடிசை
வாயிற் கதவோரம்
நின்றாய்,
வெகுமதியாகக் கையிலோர்
பூ வேந்தி!

*****************
கீதாஞ்சலி (50)
மனமில்லாத யாசகன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

யாசகம் வாங்கச் சென்றேன்,
வாசல் வாசலாக,
ஊர்ப்புறச் சந்துகள் வழியே!
தூரத்தில் தெரிந்தது,
தகதகவென உனது தங்க ரதம்,
பகட்டும்,
கனவுக் காட்சி போல்!
வேந்தருக் கெல்லாம் வேந்தனாய்
விஜயம் செய்பவன்,
யாரென விந்தையுடன்
ஆராய்ந்து பார்த்தேன்!
காட்சியில் மூழ்கி,
துயர்ப்பட்ட
நாட்கள் எல்லாம் கழிந்தன
வென்று
நம்பிக்கை பெருகிய தெனக்கு!
கேளாமலே
பிச்சை உண்டி கிடைக்கு மென
இச்சையுடன் காத்து
நின்றேன்!
எப்புறம் நோக்கினும் தெரு மண்ணில்
அற்புதக் களஞ்சியம்
சிதறிக் கிடக்கு மென்று
சிந்திக்கும் இதயம்!

உன் தேர் வந்து நின்றது,
நான் நிற்கு மிடத்தில்!
எந்தன் மேல் விழுந்தது,
உந்தன்
பரிவுக் கண்பார்வை!
புன்னகை மலர நீ
என்னை நோக்கி வந்தாய்!
அதிர்ஷ்ட தேவதை இறுதியில்
என்னை
அணைத்து விட்டதாய்ப்
பூரித்துப் போனேன்!
ஆயினும் நீயோ சட்டென,
அருகில் வந்து
வலது கையை நீட்டி,
“வாரி வழங்கிட நீ எனக்கென்ன
வைத்திருக்கிறாய்?”
என்று
வாய் திறந்து கேட்டாய்!
குழம்பி விட்ட தென் மனம்!
திகைத்து நின்றேன்!

அந்தோ! வேந்த னாகிய நீ,
விந்தையுடன் வெறுங்கை நீட்டிப்
பிச்சைக் காரனிடம்,
யாசகம் கேட்கும்
நகைப்புத் தனத்தை என்ன வென்பேன்!
கையை விட்டு மெதுவாய்
பையில்
நொய்ந்து கிடக்கும்
சோளப் பொரியில் சிறியதாய்க்
கொஞ்சம்
கொடுத்தேன் உனக்கு!
பொழுது சாய்ந்து போனதும்,
பையைக்
குப்புறக் கொட்டும் போது,
திக்கென அடித்தது நெஞ்சில்!
குவியலில் என்
குன்றிமணிப் பொன் துணுக்கு
ஒன்று மின்னியது
பளிச்சென!
அழுகை வந்த தெனக்கு!
அந்தோ!
முழுமையாய் உனக்கு
கைவசப் பொருள் அனைத்தும்
களிப்போ டளிக்கும்,
மனமின்றிப் போனதே
யாசகன் எனக்கு!

*****************

கீதாஞ்சலி (51)
ஏழையின் வரவேற்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காரிருள் சூழ்ந்தது இரவு
நேரத்தில்,
காரியம் யாவும் முடிந்தன!
கடைசி விருந்தினர் நுழைந்த பின்
வீட்டுக் கதவுகள் மூடப் பட்டன!
வேந்தன் வரக் கூடும் என்று
நினைவு படுத்தினர் சிலர்!
வெடித்துச் சிரித்தோம்,
நொடியில் வர மாட்டான் என்று!
ஆயினும்
கதவைத் தட்டும் அரவம் கேட்டு,
“தூதன் வந்துள்ளான்,” என்று
காதினில் உரைத்தனர்.
காற்றா யிருக்கு மென்று
வாளா விருந்தோம்!
விளக்கை அணைத்து விட்டு
விழுந்தோம் படுக்கையில்!

நள்ளிராப் பொழுதில் கேட்டது
திடுக்கிடும் சத்தம்!
தூரத்தில் முழக்கும் இடியெனக் கருதி
தூக்க மயக்கத்தில்
வெளியே
நோக்கா திருந்தோம்!
புவித்தளம் அதிர்ந்தது!
மதில்கள் ஆடின!
தூக்கம் கலைந்து
போனது!
தேர்ச் சக்கரத்தின்
ஆரவார மென்று கூறினர் சிலர்!
இல்லை யென மறுத்தோம்!
முழக்குவது இடிதான் என்று
முணுமுணுத்தோம்
உறக்கத்தை விடாமல்!

காரிருளில் மூழ்கிக் கிடக்கு மிரவு,
போர்முரசும் அடிக்கும் போது!
குரல் கிளம்பியது அக்கணம்:
“அதோ! பார் வேந்தரின் கொடியை!
எழுந்திரு! தாமதம் வேண்டாம்!” என்று.
நெஞ்சம் துடித்தது! கை பதறி
அஞ்சி நின்றோம்!
தாமதி யோமினி! காத்திருப் போமினி!
மாமன்னர் வருகிறார்!
அந்தோ!
வீட்டில் விளக் கெங்கே?
பூமாலை எங்கே சூடுவதற்கு?
ஆசனம் எங்கே அமர்வதற்கு?
தோரணத்தில் அலங்கரித்த
மாளிகை எங்கே?
வெகுண்டனர் சிலர்;
வெட்கக் கேடாய்ப் போச்சு!
வேளை தவறி விட்டது!
வெறுங் கையுடனே வரவேற்போம்!
வீட்டு அறைக்குள்
கூட்டி வாரீர்
வேந்தர் பெருமானை!

கதவைத் திறந்து வைப்பீர்!
ஆலய மணியின் ஓசை எழட்டும்!
நம் காரிருள் மன்னன்
நள்ளிராப் பொழுதில்
நமது பாழான வீட்டின்
வாசலில் நுழைகிறார்!
வானில் அப்போது இடி முழக்கும்!
பட்டென இருட்டில்
மின்னல் வெட்டும்!
முனையில் கிழிந்து தொங்கும்
உனது துண்டுப் பாயை
உதறி
முற்றத்தில் விரித்து வை!
புயலைப் போர்த்தி,
திடுமென நமது வேந்தன்
இச்சையுடன் வருகிறான்,
அச்சமுள்ள இரவில்!

*****************
கீதாஞ்சலி (52)
காதல் பரிசென்ன?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னைக் கேட்க வேண்டுமென
முன்பு நினைத்தாலும்,
வற்புறுத்திக் கேட்க
வலுவில்லை எனக்கு!
ரோஜா மாலை அணிந்திருந்தாய் நீ,
ஜோராகக் கழுத்தில்!
காத்துக் கிடந்தேன்,
பொழுது புலரட்டும் என்று!
விழித்து நீ பிரிந்து போனபின்,
யாசிப்பவன் போல்
ஆசையுடன் தேடினேன்,
எனக்கெனப்
பூவிதழ் உதிர்ந்து
தூவிக் கிடக்குமென! ஆயினும்
படுக்கையில்
கிடந்தவை ஓரிரண்டு பூவிதழ்தான்!
அந்தோ!
கண்கள் கண்ட தென்ன?
காதலின் அடையாள மென்று
எதை விட்டுப் போயிருக்கிறாய்?
பூவில்லை எனக்கு!
குங்கும மில்லை எனக்கு!
குப்பியில் நறுமணப்
பன்னீ ரில்லை எனக்கு!
பல்சுவைத்
தின்பண்ட மில்லை எனக்கு!
விண்ணில் வெடிக்கும் பேரிடி போல்
கண்ணில் தெரிந்தது,
ஒளிக்கனல் பளிச்சிடும் உனது
உடைவாள் ஒன்றுதான்!

காலை யிளம் பரிதி ஒளி
பலகணி ஊடே நுழைந்து,
படர்ந்தது
படுக்கை மீது!
கீச்சுக் கீச்செனப் புள்ளினம் கத்தி,
கேட்டன என்னை:
“ஈகை செய்திட உன்வசம்
என்ன உள்ளது பெண்ணே?” என்று.
ஒன்று மில்லை கொடுப்பதற்கு!
பூவில்லை என்னிடம்!
குங்கும மில்லை என்னிடம்!
குப்பியில் நறுமணப்
பன்னீ ரில்லை என்னிடம்!
பல்சுவைத்
தின்பண்ட மில்லை என்னிடம்!
என்னுடன் உள்ளது,
பயங்கர உடைவாள் ஒன்றுதான்!
ஈதொரு பரிசா வென வியந்தென் மனம்
வேதனை அடையும்!
உடைவாளை ஒளித்து வைக்க ஓர்
இடமில்லை யிங்கே!
நடுங்கிடும் என் நெஞ்சு
இடுப்பில் தொங்கவிட அஞ்சும்!
வெட்கமாய்ப் போச்சு!
வாளை மார்போ டணைத்தால்,
வலிக்கும் என் நெஞ்சம்!
கொடையாய் விட்டுச் சென்ற
உடைவாளை
உரியதாய் ஆக்கி
துயரைத்
தாங்கிக் கொள்கிறேன்!

வெற்றிகரமாய்
என் முயற்சிகள் அனைத்திலும்
வீற்றிருப்பாய் நீ! எனது
துணைவனின் இறப்புக்கு நீ
காரண மானாய்!
என்னுயிரை ஈந்து
அவனுக் குயிர் கொடுப்பேன்!
பந்த பாசக் கயிறுகள்
துண்டிக்க
உந்தன் உடைவாள் உதவும்!
இந்த உலகில்
எதற்கும் அச்சப் போவ தில்லை!
சின்னஞ்சிறு ஒப்பனை எதுவும்
பண்ணப் போவ தில்லை!
உள்ளம் கவர் வேந்தே,
உனக்கினி காத்து நில்லேன்!
மூலையில் குந்தி உனக்காய்
ஓலமிட மாட்டேன்!
ஒதுங்கி வெட்கப்படேன்!
மகிழ்ச்சியாக
நடக்கத் தேவை யில்லை!
உடைவாளை தந்துள்ளாய்
ஒப்பனைக்கு!
எனக்கினித்
தேவை யில்லை
பொம்மைத் தோரணம்!

*****************
கீதாஞ்சலி (53)
எழிலான வளைகாப்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

வனப்பு மிக்கது உன்கை
வளைகாப்பு!
கண்சிமிட்டும், விண்மீன்கள்
எண்ணற்ற
வண்ண மய வேலைப் பாடுடன்,
பன்னிறப் பளிங்குக் கற்கள்
பதித்து!
அனைத்தையும் மிஞ்சி
எனக்கு
எழிலாய்த் தெரிவது,
அந்தி மயங்கிச்
செந்நிறம் பூசிய வேளையில்,
பூரணச் சமநிலை எய்திக்
கோரமாய்ச்
சுழன்று சுழன்று பளிச்சென
வளைந்த டிக்கும்
வாள்வீச்சு மின்னலே!
மகா விஷ்ணுவின் தெய்வப்
பறவை
இறக்கைகள் போலப்
படபடக்கும்!

மரணத்தின் இறுதித் துடிப்பில்
துன்பமயக்
களிவெறி ஆட்டத்தில்
உயிர்ப் பிடிப்பின்
கடைசித்
துண்டிப்பு போல
நடுக்கம்
உண்டாக்கும், உந்தன் மின்னல்!
வெள்ளி வீச்சு போன்ற
வெட்டில்,
தூய தீக்கனல்
பாய்ந்து
ஒளிவீசிச் செல்லும்,
பூமியின் ஆசா பாசங்களைப்
பொசுக்கி!

வனப்பு மிக்கது உன்கை
வளைகாப்பு!
கண்சிமிட்டும், விண்மீன்கள்
பன்னிறக்
கற்கள் பதித்து!
ஆயினும்
பாயும் இடி வேந்தே!
சுந்தர வடிவான
உந்தன் வாள்வீச்சு மின்னல்
உன்னத
நுட்ப எழில் வேலைப் பாடுடன்
உருவாக்கப் படுகிறது,
ஒருவரும்
எண்ண முடியாத வாறு,
கண்ணால் பார்க்க
அச்ச மூட்டித்
திகைப் பூட்டுமாறு!

***********
கீதாஞ்சலி (54)

தாகமுள்ள பயணி!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னிடம் எதையும் வேண்டி
மன்றாட வில்லை நான்!
என் பெயரை
உச்சரிக்கப் போவதில்லை,
உன் செவியில்!
ஊமையாய் நின்றேன் நீ எனைவிட்டு
வேகமாய் நீங்கிய போது!
மண் குடத்தை நிரப்பி
பெண்டிர்கள் வீட்டுக்கு
மீளும் வேளையில்,
கிணற்றருகே
தனித்து நின்றேன்,
மரத்தடிச் சாய்வு நிழலில்!
“காலைப் பொழுது வியர்த்துப் போய்
சுடப் போகும் நடுப்பகலில்,
நடப்பீர் எம்முடன்,” என்றெனை
உடன் வர விளித்தனர்!
ஆழ்ந்து விடுக்காத அழைப்பில்
மூழ்கி
முடிவெடுக்காமல்
ஒளித்துக் கிடந்தேன்
குழம்பிப் போய்!

நீ என்னை நெருங்கும் வேளை
நின் தடங்களின்
நடைச் சத்தம் கேட்டிலேன்!
உன் விழிகள்
என்னை நோக்கிய போது,
துன்புற்றன சோகமாய்!
மேனி களைத்து
மென்மையான குரலில் நீ
முணு முணுத்தாய்:
‘அந்தோ! நானோர் தாக முள்ள
பயணி என்று!’
பகற் கனவில் விடுபட்டு,
உடனே உன்னிரு கைகளில்
மடமட வென ஊற்றினேன்,
செம்பி லிருந்த நீரை!
தலைமேல் சலசலத்தன காய்ந்த
இலைச் சருகுகள்!
கண்காணா
காரிருள் கிளைகளுக்கு ஊடே
கூக்கூவென
பாக்க ளிசைக்கும்
பூங்குயில்!
பாதை வளைவில் பாப்ளா மலர்களில்(*)
பொங்கி எழுந்தது,
பூவின் நறுமணம்!

வெட்க முற்று வாயடைத்து
நின்றேன்,
என் பெயரை
நீ கேட்டு வினாவியதும்!
நானென்ன செய்தேன் உனக்கு,
நீயென்னை
நினைவில் வைக்க?
பொழுது புலர்ந்திட இன்னும்
வெகு நேரம் உள்ளது!
களைத்து ஓய்ந்திடும் ஓசையில்,
கானம் பாடுகின்றன,
பறவைக் கூட்டம்!
வேப்பிலைச் சருகுகள் உராய்ந்து
வேகமாய்ச் செல்லும்,
தலையின் மீது!
தாகம் தீர்க்க நானுனக்கு
நீரளிக்க முடியும் எனும் நினைப்பு
பூரிப்பளித்து,
நெஞ்சில் அப்பிக் கொண்டது!
குந்திய வண்ணம்
சிந்திக்கும் மனம்,
மீண்டும்
சிந்திக்கும்!

(*) Babla Flowers
*****************
கீதாஞ்சலி (55)

வலியூட்டும் இன்னிசை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சு தளர்ந்து போய்
துஞ்சிய வண்ணம் உள்ளன,
உன் விழிகள்!
மிஞ்சிய பகட்டில்
உன்னத ஒப்பனையில் ஓங்கி
முள்ளின் ஊடேயும்,
துள்ளி ஆட்சி செய்கின்றன,
பூவிதழ்கள் என்று
நாவில் வரும் வார்த்தையைக்
கேள்விப்பட் டாயா?
என்றும் விழித்திருப் பவனே,
எழுந்து வா!
கடந்திட வேண்டாம்,
காலம் வீணாக!
பூரண ஏகாந்தத் தேசத்தில்
தனியாக
வீற்றிருக்கிறான்,
என்னரும் துணைவன்!
ஏமாற்றி விடாதே,
ஏகாந்த நண்பனை!

என்றும் விழித்திருப்பவனே
எழுந்து வா!
நட்ட நடுப்பகலில்
சுட்டிடும் வெப்பத் தகைப்பில்
பெருமூச்சு விட்டு,
வான மண்டலம் நடுங்கிப் போய்
மோனம் தளர்ந்தால் என்ன?
எரி மணல் தூசி கிளப்பி
வேட்கைத் திரைதனை
விரித்தால் என்ன?
இதயத்தின் அடித்தள ஆழத்தில்
உவகை பூத்து,
உதய மாக வில்லையா?
பாதை மீது நீ
அடியெடுத்து வைக்கும் வேளை,
ஒவ்வோர் எட்டு நடையிலும்
உன்னரும் பாதம்
இசைக் கருவியாய் எழுப்பும்
இன்னிசைக் கானம்
வலியுடன்
ஒலிக்க வில்லையா
உனக்கு?

*****************

கீதாஞ்சலி (56)
உனது கூட்டாளி

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இப்படித்தான் உந்தன் பூரிப்பு
முழுமை யாக உள்ளது
என்மேல்!
இப்படித்தான் கீழிறங்கி வந்தாய்
ஒப்பி
உடன்பட்டு
என்னை நோக்கி!
மேலுலகை எல்லாம் ளும்
தேவனே!
நானில்லா திருந்தால்
வேறு எவனை நீ
நாடி யிருப்பாய்
உன் அன்பைப் பரிமாற ?
இந்த சொத்துக்கள் அனைத்துக்கும்
உந்தன் கூட்டாளியாய்
என்னைப்
பந்தப் படுத்திக் கொண்டாய்!
எந்தன் இதயத்தில்
என்றென்றும்
முடிவில்லா நிலையில்
நடமாடி வருகிறது
உந்தன் பூரிப்பு!

என் வாழ்க்கை மீதுள்ள
உன் உறுதிப் பற்று
வடிவம் பெற்று எழுகிறது,
எப்போதும்!
வேந்தர்களின் வேந்தனே!
எனது
நெஞ்சில் நடனமிட
மிஞ்சிய பொலிவுடன்
உன்னை
ஒப்பனை செய்து கொண்டு
என்னை மயக்கினாய்!
கவர்ச்சியில் வெல்ல
நின் காதலியின்
காதலில்
நின் காதலை இழந்தாய்!
யினும்
நீ தென்பட்டாய்
காதலன், காதலி யாகப்
பூரணப் பிணைப்புடன்
ஈருருவில்!

*****************
கீதாஞ்சலி (57)
ஒளியின் நர்த்தனம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மின்னொளியே!
என்னரும் ஒளியே!
உள்ளத்துக் கினிய ஒளியே!
விழிகள் முத்தமிடும் ஒளியே!
உலகை மூழ்கடிக்கும் ஒளியே!
நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்,
என் கண்மணியே!
வாழ்வின்
வாலிபக் காலத்தில்!
மோதி மீட்டும் ஒளிச் சிதறல்,
காதல் வீணையின்
நாண்களை!
மின்னலிடி திறக்கும் விண்ணை!
மீறிக் கொண்டு
ஏறி அடிக்கும் காற்று,
என் கண்மணியே!
வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு
ஞாலத்துக்கும் அப்பால்
தாவிச் செல்லும்!
தமது
பாய்மரத்தை விரித்துப்
பட்டுப் பூச்சிகள்
படகாய் மிதந்தேகும் ஒளிக்
கடல் மீது!

அல்லி மலர்களும்,
மல்லிகைப் பூக்களும்
ஒளியலைகளின்
சிகரத்தில்
ஊர்திபோல் எழுகின்றன!
ஒவ்வொரு முகிலின்மேல்
முட்டிச் சிதறி
ஒளிக் கதிர்கள்
பொன்னிறம் பூசுகின்றன,
என் கண்மணியே!
விலை மதிப்பில்லா
பளிங்குக் கற்களை மென்மேலும்
பண்ணிற ஒளிச் சிதறல்
பண்ணும் மேகம்!
பூவிதழ் விட்டுப் பூவிதழ் மேவி
தாவிப் பரவும் எனது
பூரிப்பு!
அளக்க வழி யில்லை உள்ளக்
களிப்பை!
விரைவாக மழை பெய்து
கரைகள்
மூழ்கி விட்டன,
ஆகாயக் கங்கையால்!
வெள்ளமாய்ப் பெருகி,
வெளியேறி விட்டது,
எந்தன் உள்ளக்
களிப்பு!

*****************
கீதாஞ்சலி [58]
எனது இறுதிக் கானம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எப்படிப் படைக்கலாம்
எனது இறுதிக் கானத்தை ?
மெய்வருந்திப் பெற்ற
மனதின்
மகிழ்ச்சிகள் அனைத்தும்
எனது கானத்தில்
பின்னிக் கொள்ளட்டும்!
புல்லினம் காடாய் அடர்ந்து
புதர்கள் பெருகிப்
புவித்தளம் நீட்சி யாகும்
மகத்துவம் எடுத்துச் சொல்லட்டும்!
அகண்ட உலக னைத்தும்
ஆனந்த நடனமிடும்,
பிறப்பு இறப்பு எனப்படும்
இரட்டைச் சகோதரர் உறவை
பிறவிப் பிணைப்பைக்
கூறட்டும்!

மொட்டிதழ் விரிந்த செந்தாமரை போல்
மட்டிலாத் துயர்கள்
நிலைத்துக்
கண்ணீர் குவிய வைக்கும்
சூறாவளி அடிப்புகள்,
கோர தாண்டவம் டி
ரவார மூட்டிப்
பெருகும்
வேதனை சிரிப்பு
எனது
கீதத்தில் மலரட்டும்!
தம்மிட முள்ள
பொருள் அனைத்தையும்
தெருப் புழுதியில் வாரி யிறைத்து,
ஒரு வார்த்தை
உதிராத
உவகைப் பண்பு
என்னிறுதிப் பாடலில்
ஒலிக்கட்டும்!

*****************
கீதாஞ்சலி (59)
உன் காதல் என் மீது

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உள்ளத்தைக் கவர்ந்த காதலனே!
உன்னை நானறிவேன்,
காதலைத் தவிர,
யாதொன்று மில்லை,
என்மீது நீ
கொண்டிருப்பது!
பரிதியின்
பொன்னொளி துள்ளி
நாட்டிய மிடும்,
மரத்தின் இலைகள் சலசலத்து!
படகுபோல்
மிதந்து செல்லும்,
வான மண்டலத்தின் குறுக்கே,
மோன முகிற் கூட்டம்!
தவழ்ந்திடும்
தென்றலின் சிலுசிலுப்பு,
தனது குளிர்ச்சியைத்
தடவிப் போகும் நெற்றியின்
நடுவே!

பொழுது புலர்ந்ததும்
பொற்சுடர் ஒளிமயம்
கண்ணிமை களுக்குத் திரையிடும்,
வெண்ணிற வெள்ளத்தால்!
என் நெஞ்சுக்கு உணர்த்திடும்,
உன் அறிவுரை
அதுவே!
மேலிருந்து வளைகிறது,
கீழ் நோக்கி
உன்முகம்!
விண்ணிலிருந்து கீழ் நோக்கிப்
பார்க்கின்றன,
என்னிரு விழிகளை,
உன் விழிகள்!
என்னிதயம் தொடுகின்றது,
நின் திருப்
பாதங்களைப்
பணிந்து சென்று!

*****************
கீதாஞ்சலி (60)
கடற்கரையில் கூடும் பாலகர்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அகில நாடுகளின் நீண்ட
முடிவில்லாக் கடற்கரையில்
விளையாடக் கூடுவது,
குழந்தைகள்!
கண்காண வியலாத, வரம்போர மில்லாத
விண்வெளிக் கூரை நிற்கிறது
அசையாமல்!
திசை மோதி இரைச்சலிடும்,
திரைகடல் வெள்ளம்!
நீண்டு நெளியும் கடற்கரையில்
கூடிக் குலாவிக்
கும்மாளம் போடுவது,
சிறுவர் பட்டாளம்!
வீடு கட்டிக் கடல் மணலில்,
வெற்றுச் சிப்பிகள் சேர்த்துக் கொண்டு
விளையாடு கிறார்!
காய்ந்த இலைச் சருகுகளைப்
படகுகளாய் மடித்துக்
கடலில் மிதக்க விடுகிறார்!
உலக நாட்டுக் கடற் கரையில்
குலவிப் பழகி
ஓலமிட்டு விளையாடு பவர்,
பாலகர்கள்!

சின்னஞ் சிறுவர்க்கு
நீந்தத் தெரியாது நீரிலே!
கைகளில் கோர்த்து
வலை பின்னத் தெரியாது,
விளையாடும் சிறுவருக்குக்
கயிறிலே!
திடுமென முத்துக்குளிக்கக் கடலில்
குதிக்கும்
மீனவர் கூட்டம்!
பயணம் துவங்கிக் கப்பலில்
அயல்நாடு நோக்கித்
துணிந்து செல்கின்றன,
வணிகர் படைகள்!
கூழாங் கற்கள் சேர்த்து
மணலில் பரப்புகின்றன அப்போது,
குழந்தைகள்!
மறைந்து கிடக்கும்,
புதைப் பொருள் தேடிச் செல்ல
விருப்பில்லை அவர்க்கு!
வலை பின்னத் தெரியாத
விளையாட்டுச் சிறுவர் அவர்!

கோரமாய்க் கொக்கரித்துக் கொண்டு
ஆரவாரம் செய்யும்,
மூர்க்க அலைகள் திரண்டெழுந்து!
வெளுத்து வெளிறிப் போய்
இளிக்கும்
கடற்கரையின் மணற் கற்கள்!
மரண வேகத்தில்
புரண்டுவரும் சுருள் அலைகள்,
புரியாத பாடல் பாடும்,
தொட்டிலில் போட்டுப்
பாலர்க்கு
தாலாட்டுப் பாடும்
தாயைப் போல்!
சிறுவருடன்
களித்து விளையாடக்
கைகொட்டி வருகிறது,
கடலாடி!

பாலர்கள் பலர் கூடி
ஞாலத்தின்
எல்லையற்ற கடற்கரையில்
துள்ளி விளையாட வந்துள்ளார்!
பாதைகள் இல்லாத
வான்வெளியில்,
பாய்ந்தடிக்க வகையின்றி
மாயமாய்த் திரிகிறது,
புயல் காற்று!
தடங்கள் எதுவும் தெரியாத,
கடல் நடுவே
புயல் கவிழ்த்தி விட்ட,
கப்பல்கள்
முறிந்து கிடக்கின்றன
மரண நிழலாடி!
அறியாத பாலர் ஆங்கே
விளையாடி வருகிறார்!
ஆயினும் சிறுவர் எல்லாம்
கூடிக் குலவி,
கும்மாளம் போடும் பூதளங்கள்
கங்குகரை யற்ற
மணற்கல் குவியும்
மாபெரும் கடலோரத்
தளங்களே!

*******************

கீதாஞ்சலி (61)
எங்கிருந்து வந்ததோ?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

குழந்தையின் மலர் விழிகள் மீது
தழுவிப் படியும் தூக்கம்
எங்கிருந்து வந்ததோ?
எவராவது அறிவரோ?
எங்கே அந்த தூக்கம்
தங்கி யிருக்கு மென்றொரு
வதந்தி உள்ளது!
மின்மினிப் பூச்சிகள்
கண்சிமிட்டித்
தேவ கன்னிகள் உலா வரும்
மங்கு நிழல் கானகத்தின்
ஒளியி லிருந்து வருகிறதாம்!
உள்ளத்தைக்
கொள்ளை கொள்ளும்
இரட்டை மலர் மொட்டுகள்
கொத்துக் கொத்தாய்த் தொங்கும்
வனாந்திர வெளியி லிருந்து
வருகிறதாம்,
மதலை விழிகளுக்கு
முத்தம்!

குழந்தையின் இதழ்களில்
மலர்ந்திடும் முறுவல்
எங்கிருந்து வருவ தென்று
எவரேனும் அறிவரோ?
இலையுதிர் காலத்தில்
மறை முகில் ஓரத்தில்
உலவும்
பிறை நிலவின் மங்கிய
ஒளித்திர ளிருந்து
வெளிவரும் என்றொரு வதந்தி
நிலவுகிறது!
பனிநீர்த் துளிகள்
கழுவிப்
பொழுது புலரும் போது
காணும்
கனவி லிருந்து முதலில்
எழுகிறது,
உறங்கும் குழந்தை
வாயிதழ்களில் மின்னும்
முறுவல்!

தித்திக்கும் மென்மையில்
மதலையின்
பிஞ்சு உறுப்புகளில்
மலர்ந்தி ருக்கும்
புதுமை மலர்ச்சி மணம்,
வெகு நேரம் ஒளிந்துள்ளது
எப்படி யென்று
எவரேனும் அறிவரோ?
சின்னஞ் சிறு சேய்
மங்கையாக மலரும் போது,
ஈன்றெடுத்த
அன்னையின் கனிவிலும்,
நெஞ்சில் ஊறிய
மர்மமான மௌன அன்பிலும்,
பின்னிப் பிறந்தன
பேபியின்
பிஞ்சு உறுப்புகள்!

*****************
கீதாஞ்சலி (62)
நான் பாட குழந்தை ஆடும்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னரும் குழந்தாய்!
பன்னிற விளையாட்டுப் பொம்மைகளை
நானுனக்குக்
கொண்டு வரும் போது
மேகத்தில்
வண்ணக் கோலங்கள்
நடன மிடுவதும் ஏனோ?
நீரின் மேல் நிறங்கள்
நெளிந் தாடுவதும் ஏனோ?
மலர்களில்
வண்ணப் பட்டைகள்
வரையப் படுவதும் ஏனோ?
எல்லாம் புரிகிற தெனக்கு
என் கண்மணி!
வண்ணப் பொம்மைகள் நான் உனக்கு
வழங்க வரும் போது!

நானுன்னை
ஆட வைக்க வேண்டுமெனப்
பாடும் போது ஏன்
சலசலத்து இன்னிசை மீட்டும்
இலைகள் என
அறிவேன் கண்ணே!
கடல் அலைகள் ஒருங்கே
உடன் முழக்கும்
கான ஓசைகள்
வையத்தின் நெஞ்சில் ஏன்
மெய்யாக ஒலிக்கு மென
அறிவேன் கண்ணே,
நானுன்னை
ஆட வைக்கப்
பாட வரும் போது!

சுவைத் தின்பண்டங்கள்
கனிவோடு உன்
ஆசைக் கரங்களில்
நானுக்கு அளிக்கவரும் போது,
பூவின் கும்பாவில்
தேனூறுவது
ஏனெத் தெரிகிறது என் கண்மணி!
இனித்திடும் கனிரசம்
பழங்களின் மடுவில்
யாரும் அறியாது,
ஊறி நிரம்புவதை ஏனென்று
கூறுவேன் என் கண்மணி,
இனிக்கும் தின்பண்டம்,
ஆசைக் கரங்களில் நான்
அளிக்க வரும் போது!

உன்னெழில் முகத்தில்
புன்னகை மலர்ந்திட,
கன்னத்தில் கனிவுடன் நான்
முத்தமிடும் போது,
ஆகாயக் கங்கை
பொங்கிப்
பொழுது புலரும்
பொன்னொளிச் சுடரில் ஏனது
தாரணி நோக்கிப்
பாயுதெனக்
காரணம் அறிவேன் என் கண்மணி!
தழுவிச் செல்லும்,
வேனிற் தென்றல் வீசும் போதென்
மேனியின் சிலிர்ப்பு
எப்படி யெனச் சொல்வேன்,
உன்முகப்
புன்னகை மலரக் கன்னத்தில் நான்
முத்தமிடும் போது!

*****************
கீதாஞ்சலி (63)
வழிகாட்டித் துணைவன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நானறியாத புதிய தோழர்களைத்
தானாக அறிமுகம்
பண்ணி வைத்தாய் எனக்கு!
என்னை வரவேற்று உபசரிக்க
அன்னியர் இல்லத்தே
ஆசனங்கள் அளித்தாய் நீ!
தூரத்து மனிதரை அழைத்து எனது
ஓரத்தில் அமர வைத்தாய்!
தெரியாத வழிப்போக்கனை
உரிமையாய் எனக்குத்
தமையனாய் ஆக்கினாய்!
பிறந்தகம் விட்டுப்
பிரிய நேர்ந்திடும் போது,
கரிந்து போனதென் உள்ளம்!
புதிய தளத்தில் என் பூர்வத் தடம்
பதிந்திருந்தது,
மறந்து விட்ட தெனக்கு!
நிறைந் தங்கே நீ
இருப்பதுவும்,
தெரியாமல் போன தெனக்கு!

பிறப்பு, இறப்பு மூலமாகச்
மானிடர் தோன்றும் இவ்வுலகிலும்,
அடுத்துப் புகும் உலகிலும்,
முடிவில்லாமல் சுற்றி வரும்,
வாழ்க்கை நியதிக்கு
வழி காட்டித்
துணைவன் நீ ஒருவனே!
முன்பின் தெரியா தவரோடு
என்னைப் பந்தபாச மென்னும்
உன்னதப் பிணைப்பில்,
பின்னி யிருக்கிறாய் நீ!
உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு
அன்னியர் ஆகார்!
என்னை அவர் அண்டி வந்தால்,
கதவுகள் சாத்தப் படா!
வாழ்க்கை மேடையில்
திருவிளை யாடுவோன்
உருவினைத் தொட்டு,
உவப்புடன் வணங்கி
அவனை
ஒருபோதும்
மறவா திருக்கும் மனத்தை
அருள்வாய் எனக்கு!

*****************
கீதாஞ்சலி (64)
வீணாகும் தீபங்கள்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“எங்கே போகிறாய் பணிப்பெண்ணே!
அங்கிக்குள் உனது
தீபத்தை மறைத்துக் கொண்டு?
இருண்டுபோய் உள்ளது என்னில்லம்,
தீபத்தைக் கொடுப்பாயா
வீட்டில் விளக்கேற்ற?
தனிமையாய்ப் போனது என்வீடு!” என்று
பணிவாய்க் கேட்டேன்.
புருவத்தை
ஒருகணம் நெளித்துக் கொண்டு
என்முகம் உற்று நோக்கி,
“ஆற்றங் கரை நெடுவே,
அந்தி மயங்கும் வேளையிலே,
வந்திருப்பது நான்,
நீரோட்ட மதில்,
தீபத்தை மிதக்க விட!” என்று
பதில் அளித்தாள் மாது!
விழித்து நின்றேன் நான்,
புல் புதர் நடுவே வியப்போடு!
பலனின்றி
அலைக்கப் பட்டு
ஆற்றில்
வீணாக நழுவிச் செல்லும்
விளக்கைப் பார்த்து!

மௌனமாய்ப் போன நள்ளிரவில்
மறுபடியும் கேட்டேன்.
“ஒளியோ டுள்ளன உனது
விளக்குகள் அனைத்தும்!
ஆயினும்,
அவற்தை எடுத்துப் போவது
எங்கெனச் சொல்லிடு,
மங்கையே?” என்றேன்.
காரிருள் கப்பிடும் வேளையில்,
தனிமையாய் உள்ளது என்னில்லம்,
உனது ஒளிவிளக் கொன்றை
எனக் களிப்பாயா?”
என்று கெஞ்சிக் கேட்டேன்!
முகஞ் சுழித்தாள் பணிப்பெண்,
அகத்தில் ஐயமுற்று!
“தீப சமர்ப்பணம் செய்து
வான மண்டலத்தில் ஒளியூட்ட,
வந்துளேன் நான்!” என்றாள்.
வாடிப் போய் நின்றேன்
வேடிக்கை பார்த்து,
வெட்டவெளி அரங்கில்
விளக்கொளி
வீணாகிப் போவதை!

நள்ளிரவில் நிலவின்றி
உள்ள போது மீண்டும் கேட்டேன்:
“சேடிப் பெண்ணே!
தீபத்தை
நெஞ்சிக் கருகில் மறைத்து
தேடிச் செல்வதை எதனை?”
என்று கேட்டேன்.
“இருள் மண்டிக் கிடக்கும்
என்னில்லம்!
தனிமையாய் உள்ளது,
என் வீடு!
விளக்கொளி வேண்டும்,
அளிப்பாயா?” என்று மன்றாடினேன்.
நின்றாள் ஒரு விநாடி!
காரிருளில்
என்முகம் உற்று நோக்கிச்,
சொன்னாள்:
“எனது விளக்கை
ஏந்திவரும் காரண மிதுதான்:
தீபத் திருநாள் கொண்டாடும்
வெளிச்ச விழாவுக்கு,
ஒளியூட்ட வந்துளேன்!” என்று
அளித்தாள் பதில்!
வியப்புடன்,
வேடிக்கை பார்த்து நின்றேன்,
ஆரங்களாய்த் தொங்கும்
தோரணத் தீபங்க ளிடையே
வீணாகக்
கண்சிமிட்டிக்
காணாமல் போகும் மாதின்
கை விளக்கை!

*****************
கீதாஞ்சலி (65)
என்விழி மூலம் உன் படைப்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னரும் இறைவனே!
எந்த தெய்வீக அமுதத்தை நீ,
என்னுள்ளே புதைத்து வைத்துளாய்
பூரித்துப் பொங்கிடுமென்
வாழ்வுக் கிண்ணத்தி லிருந்து
வாரி எடுக்க?
என்னரும் கவியரசே!
என்விழிக் காட்சிகள் மூலம்,
உனது
படைப்பைக் கண்டு நீ
பரவசம் அடைவதற்கோ?
மௌனமாய்
என்செவி வாசலில்
நின்று கொண்டு
முடிவில்லா
உந்தன்
சொந்த சீரிசைப்பினை
முந்தி நீ கேட்பதற்கோ?

உன்னால் படைக்க பட்ட உலகம்
என்வாய் மொழிகளாய்
பின்னி
நெய்யப் பட்டுள்ளது,
என் உள்ளத்திலே!
உனது பூரிப்பு பொங்கி எழுந்து
என் கவிதை களுக்கு
உன்னத இசைத்துவம்
அளித்துக் கொண்டுள்ளது!
அன்பைப் பொழிந்து
முழுமை யாக உன்னை
அர்ப்பணித் துள்ளாய்
எனக்கு!
மேலும்
உன் ஆக்கச் சுவை அனைத்தும்,
என் பிறவி மூலம்,
ஒருங்கே
உணர்கிறாய் நீ!

*****************
கீதாஞ்சலி (66)
எனது கடைசிக் காணிக்கை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னுள்ளத்தின் ஆழத்தில்
அப்பெண்மணி
எப்போதும் தங்கி யிருப்பாள்!
மங்கிடும்
அந்தி நேரத்திலும்
கணப் பொழுது மின்மினியாய்
காட்சி அளிப்பாள்!
காலை யிளம் ஒளியில்
மூடிய
முகத்திரை என்றும்
அகற்றாத பெண்ணவள்!
அப்பெண் மணியை
கடைசிக் கொடையாக
என்னிறுதிக் கானத்தில்
பின்னி எழுதி
உன்னிடம் கொடுப்பேன்
காணிக்கையாக,
என்னரும் இறைவா!

கன்னி அவளைக்
காளையர் காந்த மொழிகளும்
கவர முடியாமல் தோற்று
விட்டன!
கட்டாயப் படுத்தி ஆசைக்
கரங்கள் நீட்டி
எவரும் தொட முடியாத
எட்டா நிலையில்
கிட்டாம லிருந்தாள் அப்பெண்!
நாடு விட்டு நாடாக
ஓடித் திரிந்த போதெல்லாம்,
என் நெஞ்சத்தில்
கூடவே குடியிருந்தவள்!
வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில்
வளமை, வறுமைத் தேய்வுகளில்,
உழன்று பிழைத்த
பெண்ணவள்!
எண்ணத்திலும் எல்லாப் பணிகளிலும்
எனக்கு
உடனா யிருந்த
மடந்தை யவள்
என்னரும் இறைவா!

தூக்கத்திலும்
நீளும் கனவிலும் என்னை
ஆளும் பெண்ணவள்
ஆயினும்,
தனியாய் எவருடன் ஒட்டாமல்
வாழும்
வனிதை அவள்!
மனிதர் விரும்பி ஆசையுடன்
வீட்டுக் கதவைத் தட்டினும்,
வெறுப்புடன் வேண்டாது
மறுத்து விட்ட மங்கையவள்!
அப்பெண்ணை எப்போதும்,
நேருக்கு நேராக
நோக்கியவர்
யாருமில்லை உலகில்!
சோர்வுடன்
காத்துக் கிடந்தாள் அங்கே,
உன் கவனம் பெற்றிடவே,
ஏகாந்த நிலையிலே,
என்னரும் இறைவா!

*****************
கீதாஞ்சலி (67)
வானும் நீ! வசிக்கும் கூடும் நீ!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

வனப்பு மிக்கவனே!
வானம் நீ! வசிக்கும் கூடும் நீ!
வாழும் கூடுகள் எங்கணும்,
நிரம்பிப் பொங்கிடும்
நினது நேசப்பாடு! அது
மனித
ஆத்மாவைப் போர்த்தும்
வண்ண மயத்தைக் காட்டும்!
நறுமணம் பூக்கும்
நுகர்ச்சியை உணர்த்தும்!
கீதங்கள் எழுப்பும்
நாத ஒலித் தாளங்களில்
ஓதும்!
பொழுது புலர்ந்ததும்
பொன் கூடையில்
பூக்களை ஏந்திக் கொண்டு
பூமிக்கு
மகுடம் சூட
மௌனமாய்
எழுந்திடும் பரிதி!

அந்தி மயங்கும் வேளை,
ஆட்டு மந்தை
கடந்து சென்ற பசுமைத் தளங்கள்
தடம் தெரியாமல் போகும்!
நெஞ்சம் குளிர்ந்து
மென்மையாய்த் தென்றல்
தழுவிடும் பொழுது,
தங்கச் செங்கதிர் மேற்கில்
மங்கி மறைந்திடும்,
மாலைப் பொழுதின் போது!
விளிம்பில்லா விண்வெளியில்
ஆத்மா
சிறகுகளை விரித்துக்
கறை படாத
வெண்ணிற ஒளிக்கதிர்ச் சுடர்கள்
நிரந்தர ஆட்சி செய்யும்,
நிற்காப் பயணம் செய்து!
அற்புத அந்த அண்ட வெளியில்
இரவில்லை! பகலில்லை!
வடிவில்லை!
வண்ண மய மில்லை!
வாய்ச் சொல் வெளியே
வருவ தில்லை
ஒருபோதும்!

*****************
கீதாஞ்சலி [68]
பன்னிற வடிவப் படைப்புகள் !

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பாய்கின்றன எனது பூமிமேல்,
பரிதியின் ஒளிக் கதிர்கள்!
விரியும் சுடர்க் கரங்களை
வெளிப்புறம்
நீட்டிக் கொண்டு நிற்கிறது,
வீட்டு வாசல் முன்!
என் கண்ணீர்த் துளிகளை,
என் பெருமூச்சுகளை,
என் கீதங்களை,
மேக மந்தையாக
நின் பாதத்தில் சமர்ப்பிக்க
ஏந்தி வருகிறது!
கண்ணிய பூரிப்புடன் அவை யாவும்
விண்மீன்கள் மினுமினுக்கும்
நினது மார்பைப்
பனித் தூபமாய்ச்
சுற்றிக் கொள்ளும்!

எண்ணற்ற அண்டங்கள் ஆக்கி
வண்ண மயமாக்கி
பன்முறையில் உருமாற்றி
பற்பல விதமான
வடிவத்தில் படைத்துள்ளாய்!
மென்மை யானவை சில,
மெலிந்தவை சில,
மெதுவாய்ச் செல்பவை சில,
நீர்மை யானவை சில,
இருண்டவை சில.
ஆதலால் நீ ஒவ்வொன் றையும்
காதலிக் கின்றாய்!
அவற்றின்
சொந்த நிழல்களால்
உந்தன் வெண்ணிறக் கதிரொளி
மறைக்கப் படுகிறது,
புனிதமான
கனிவு அதிபனே!

*****************
கீதாஞ்சலி (69)
வாழ்க்கை நதியின் பெருமை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அதுவே என் வாழ்க்கை நதி,
பகலிர வெல்லாம்
குருதி யோட்டக்
குழல்களின்
வழியோடிச் சுற்றி வந்து
தாரணியில்
நர்த்தனம் புரியும்,
சீரிசைத் தாளத்துக் கேற்ப!
அதே அந்த வாழ்க்கை தான்
பூரிப்புடன்
ஆரவாரம் செய்யும்,
அளவற்ற அலைகள் போல்!
பூக்களும்,
புல்லின் கத்தி யிலைகளும்
பொங்கிடும் வாழ்வினில்
பூமித் தூசியாய்!

அதே அந்த வாழ்க்கை தான்
பிறப்பு, இறப் பெனப்படும்
கடல்மடித் தொட்டிலில்
தொடர்ந் தெழுகின்ற
அலைகளின் மட்டம்
ஏறி யிறங்கி,
ஓட்டத்தில்
ஆட்டப் படுகிறது!
உலக வாழ்க்கை என்னைத்
தழுவித் தொடுவதால்,
உடல் உறுப்புகள் அனைத்தும்
உன்னதம் பெற்றன,
பொன்னொளி புலர்ந்து!
யுகங்களில் பன்முறை
மீளும்
வாழ்க்கைப் பிறப்பின்
பெருமை எனது,
குருதியில் நெளிந்து
கூத்தாடும் இம்மையில்!

*****************
கீதாஞ்சலி (70)
ஆனந்தத் தாண்டவம்…!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பூரித்துப் போனதுவோ,
உனையும் மீறி
னந்தக் கூத்தின்
தாள இசை?
அந்தப் பயங்கர எக்களிப்பில்,
உந்தன் தாண்டவம்
கலக்கி விடுகிறது,
உலகினை ட்டி வைத்தும்,
ஒளிந்து தெரியாமல்,
துண்டாக்கி விட்டும்!
அண்டங்கள் அனைத்தும்
ஒருகணமும் நிற்காது
முன்னோக்கிக்
கதி வேகத்தில் செல்லும்!
பின்னே திரும்பாது!
எந்தப் பேராற்றல் சக்தியும்
முந்தி
நிறுத்திட முடியாது!
அவை எல்லாம்
ஓடிக் கொண்டே உள்ளன
ஓயாமல்!

ஓய்வற் றியங்கும்
விரைவான
இசைக்கேற்ப எட்டெடுத்து
வைத்து மாறிவரும்
காலங்களின்
தாளத்துக்கு ஒத்தபடி,
நடன மாடிக் கொண்டு
பல்வேறு
வண்ணங்கள் மாற்றும்!
பண்ணிசையில் ஆரவாரித்து,
எண்ணற்ற வகையில்,
நறுமணத்தை அலை அலையாய்ப்
பரப்பிக் கொண்டு
வரையறை யில்லாத
மகிழ்ச்சி பொங்கி
கடிது செல்லும்!
சிதறியும், சிதைந்து விடாமலும்
மடிகின்றது,
ஒவ்வொரு கணமும்!

*****************

கீதாஞ்சலி (71)
உன்னோடு என் கலப்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பாடுபட்டுப் பணி புரிவதற்கு
ஈடுபடுத்த வேண்டும் முழுமையாக,
என்னை நான்
எப்புறத் திசைகளிலும்!
அப்பணிகள்தான்
உந்தன் ஒளிக்கதிர்கள் சிதறி
ஒப்பிலா மாயையாக
உருவாக்கும்
பன்னிற நிழல்கள்!
உன்னிருப்பைச்
சுற்றிலும் வேலி அரணை நீயே
கட்டிக் கொள்கிறாய்!
உன் மனமுறிவைப் பற்றி
எண்ணற்ற பாக்களில் எழுதி
விளித்திடுவாய் பிறகு!
நின்னுடல் பிரிவு
என்னுடல் சேர்க்கையில்
ஒன்றாகி விட்டது!
விண்வெளி எங்கணும்
வண்ணமய வேறுபாடுகளில்
கண்ணீர் துளிகள் பொழிந்து,
புன்னகை சிந்தி,
முன்னறிவிப்பு செய்து,
நம்பிக்கை ஊட்டி,
வெம்பிடும் கீதங்கள்
விண்வெளியில் எதிரொலிக்கும்!
பொங்கி எழும் அலைகள்!
மங்கி விழும் மீண்டும்!

எனது கனவுகள் சிதையும்,
ஒருவேளை
நனவாய்ப் பலிக்கும்!
உன் சுயத் தோல்வியை அங்ஙனம்
என் மூலம் காட்டுவாய்!
இரவு பகல் என்னும் தூரிகையால்
எண்ணற்ற உருவ ஓவியங்கள்
தீட்டப் படுகின்றன, நீ
தொங்க விட்ட
திரைச் சீலையில்!
பின்புறத்தில் திரையுடன்
பிணைந்துள்ளது
உன் ஆசனம்,
மர்ம நெளிவு களோடு,
மலட்டுத்தன நேர் பாதைகள்
விலக்கப் பட்டு!
உன் மகத்துவ நடையழகு
என்னுடன் சேர்ந்து
விரிந்து பரவுகிறது,
விண்வெளி விளிம்பைத் தாண்டி!
உன்னிசையுடன்
என்னிசை கலக்கும் போது,
வாயு மண்டலமே
ஆடி அதிர்கிறது!
உன்னையும், என்னையும்
ஒளித்தும்,
தேடிக் கண்டும்
நகர்ந்து செல்கின்றன,
யுகங்கள் எல்லாம்!

*****************
கீதாஞ்சலி (72)
ஆத்மாவின் கருவில் உறைபவன்.

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அது அவனேதான்!
ஆத்மாவின்
உட்கருவுக் குள்ளே உறைபவன்!
கரத்தால் என்னை ஆழத்தில்
தொட்டெழுப்பி
விழிக்க வைப்பவன்,
அனுதினமும்.
அது அவனேதான்!
எந்தன் இரண்டு விழிகளுக்கும்
மந்திர சக்தி யூட்டுபவன்!
பல்வேறு வழிகளில்
போகம், சோகம் பின்னிய
கீதங்களில்
இதய வீணையின் நரம்புக் கம்பிகளை
உவகையுடன் மீட்பவன்,
அது அவனேதான்!
துள்ளி விட்டு மறையும்
வெள்ளி,
பொன்னிற மயத்தில்
பச்சை, நீல வண்ணத்தில்
மாய வலைதனை நெய்பவன்!
மடிப்புகள் ஊடே எட்டிப் பார்க்கும் அவன்
பாதங்களின்
பஞ்சுத் தொடுகையில்,
நெஞ்சம் மறந்திடும் என்னிலை!
நாட்கள் நகரும், யுகங்கள் கடக்கும்
எனினும் எப்போதும்
என்னிதயத்தை இயக்குபவன்,
அது அவனேதான்,
பலப்பல பெயர்களில்,
பலப்பல வேடங்களில்,
உன்னத மகிமையில் உவப்பூட்டும்
பலப்பல இன்ப துன்ப
உணர்வுகளில்!

*****************
கீதாஞ்சலி (73)
ஐம்புலங்களுக்கு விடுவிப்பா ?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

முற்றும் துறந்த
பற்றற்ற நிலை மீது எனக்குச்
சற்றும் பிடிப்பில்லை!
மானிடத்தின்
ஆயிரக் கணக்கான
ஆனந்தப் பிணைப்பில் காண்கிறேன்,
விடுதலை உணர்வு
பின்னித்
தொடுத்துள்ளதை!
கண்கவர்
வண்ணங் களையும்,
பொங்கும் நறுமணங் களையும்,
புதிதாய் ஆக்கிய
மதுவாய்ப்
பொழிந்து வார்க்கிறாய்
எனக்காக!
உன் தீக்கனலில்
நூற்றுக் கணக்கில்
என்னுலகு
ஏற்றி வைக்கும்,
வெவ்வேறு விளக்குகளை!
உன் ஆலயத்தின்
உள்ளே
ஒளிவீசும்படி அவை அனைத்தும்
வைக்கப் பட்டுள்ளன,
மையப் பீடத்தில்!

ஐம்புலங்களின்
வாயிற் கதவை என்றும்
தாழிட மாட்டேன் நான்!
கண்கள் காண்கின்ற களிப்புக்
காட்சிகள்,
காதுகள் கேட்கும் இன்னிசைக்
கீதங்கள்,
மேனி தழுவி உணர்த்தும்
ஆனந்தம்,
ஆகிய அனைத்தும்
உந்தன் மகிழ்ச்சியை நிலைநாட்டும்
எந்தன் பிறவிக்கு!
என் மாயப்
போலி எண்ணங்கள் எல்லாம்
பொசுங்கிப் போகும், உன்
பூரிப்பொளியில்!
அன்பெனும்
அமுதக் கனிகளாய்ப்
பழுத்திடும் என் ஆசைகள்
அனைத்தும்!

*****************
கீதாஞ்சலி (74)
மீளாப் பயணம் ..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பொழுது ஓய்ந்து போய்
பூமிமேல் சாய்கிறது இருட்டுநிழல்!
சிற்றாறை நோக்கிச் செல்லும்,
நேரம் வந்து விட்டது,
குவளையில் குடிநீரை
நிரப்பிக் கொள்ள!
வரட்சியாகி மாலைத் தென்றல்
நீரோட்டத்தின்
சோக இசை கேட்கத்
தாகமாய் உள்ளது!
அந்தி மயங்கும் வேளையில் சிற்றாறு
அழைக்கிறது என்னை!
சந்தடி யற்றுத் தனித்துப் போன
சந்தின் வழியே
கடந்து செல்வோர் யாருமில்லை!
காற்று எழுந்து விட்டது!
அலைச் சுழிகள் மோதுகின்றன,
ஆற்றின் நீராட்டத்தில்!
மீண்டும் வீடு நோக்கி நான்
திரும்பு வேனா என்று
தெரியாது எனக்கு!
மீளாத எனது பயணத்தில்
எந்த எந்த
ஆளை யெல்லாம்
சந்திப்பேன் என்றும் அறியேன்!
ஆழமில்லா நீரில்
சின்னஞ் சிறு படகினிலே,
அறியாத
அன்னியன் ஒருவன்,
இன்னிசைக் கானத்தைப்
பொழிகிறான்
புல்லாங் குழல் ஊதி!

*****************
கீதாஞ்சலி (75)
நீ எமக்களித்த கொடைகள்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எமது எல்லாத் தேவைகளையும்
நிறைவேற்றி வைக்கும்,
நீ எமக்களித்த
மனிதக் கொடைகள்!
எனினும்
ஓடி வருவோம் நாங்கள்
உன்னிடம் மீண்டும்,
கொடைகள் வற்றாத போதும்!
வயல் புறம், ஊர்ப் புறம்
வழியாகக் கடந்து வரும்
ஆறோட்டம்
தவறாமல் புரியும்,
அனுதினப் பணிகள்!
ஆயினும் தொடர்ந் தோடும்
நீரோட்டம்
நெளிந்தோடி நின்
பாதங்களைக் கழுவப்
பாய்ந்து செல்லும்!
நறுமணம் பரப்பிக்
காற்றை இனிதாக்கி மணக்க வைக்கும்
பூக்களின் வாசம்!

எனினும் மலர்களுக்குப்
பணி முடிவு,
உனக்கு அர்ப்பண மாவது!
வணங்கி உனைத் துதிப்பதால்,
ஒருபோதும்
வறுமை ஆவதில்லை,
சிறு உலகம்!
கவிஞர் படைக்கும் பாக்களில்
உவப்ப ளிக்கும்
திருவாய் மொழிகளை
உனது
கருவாய் எடுத்துக் கொள்!
ஆயினும்
அப்பாடல்கள் முடிவாகக் கூறும்
உட்பொருள்
சுட்டிக் காட்டுவது
ஒப்பில்லா
உன்னைத்தான்!

*****************

கீதாஞ்சலி (76)
நேருக்கு நேராக நானா?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என் வாழ்வுக்கு அதிபதியே!
நின்றன் நேருக்கு நேராக,
இன்றும் அடுத்த நாளும்
நின் முன்னே நான்
நிற்க லாமா?
கைகட்டி மெய்யாக
நின் முன்னே நான்,
நேருக்கு நேராக,
நிற்க லாமா?
அண்ட கோளங் களுக்கு அதிபதியே!
விண்டுரைக்க முடியாத பேரளவு
வான்வெளிக் கடியில்
நான் ஏகாந்த மௌனத்தில்,
நெஞ்சப் பணிவுடன்
நிந்தன் நேருக்கு நேராக,
நிற்க லாமா?
கடின உடல் உழைப்பில்,
ஆரவாரக் கொந்தளிப்பில்,
போராட்டம் கலந்து,
நெற்றி வேர்வை சிந்த நேரிடும்
நின்னுலகில்,
ஓயாமல் விரைந்தோடும்
யந்திர மாந்த ரிடையே
நான் மட்டும்
நிந்தன் நேருக்கு நேராக,
நிற்க லாமா?
இந்தப் பூவுலகில்
என் வேலைகள் யாவும் முடித்தபின்
தனியாக,
மனம் திறந்து பேசா
மனிதனாக
நிந்தன் நேருக்கு நேராக
நிற்க லாமா?
வேந்தருக் கெல்லாம்
வேந்தே!

*****************
கீதாஞ்சலி (77)
என் சொத்தனைத்தும் உனக்கு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நீயே என்னிறைவன் என்பதை
அறிவேன் நான்!
நெருங்காமல் நான் உனக்குச்
சற்று தள்ளியே
நிற்கிறேன்!
என்னுடை யவனா நீ
என்பதைக் கூட அறியாமல்
உன்னை அண்டுகிறேன்!
என் தந்தையைப் போல்பவன் நீ,
நினது பாதங்களைப்
பணிந்து வணங்குவேன்!
எனது துணைவன் கைகள் போல்
உனது கரங்களை
என்னால் பற்ற முடிய வில்லை!
உனக்குரிய வனாக நீ என்னைப்
பேணு மிடத்துக்கு,
கீழிறங்கி வரும் போது,
என்னிதயத்தில்
தோழனாக்கிக் கொள்வேன்
உன்னை!

நீயொரு சகோதரன் எனக்கு,
என் சகோதரர் அணியில்!
ஆயினும் என் சகோதரரை
அறவே ஒதுக்குபவன் நான்!
அவருக்குப் பங்கு அளிப்பதில்லை,
என் ஊதியச் சேமிப்பில்!
ஆகவேதான்
உனக்கு அர்ப்பணிக்க முடிகிறது,
எனது சொத்துக்கள்
அனைத்தையும்!
மனிதரின் இன்ப துன்பங்களில்
ஈடுபட்டு,
உதவி புரிவ தில்லை நான்!
அதனால் தான்
அருகில் உன்னுடன் நிற்கத்
தருணம் கிடைக்கிறது எனக்கு!
உலக வாழ்வினைத்
துறக்க
தயக்க மில்லை எனக்கு!
அதனால் நான் பாய்ந்து
மூழ்க வேண்டாம்,
வாழ்வெனும்
மாபெரும் சாகரத்தில்!

*****************
கீதாஞ்சலி [78]
பூரணப் படைப்பில் குறைபாடு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அகிலவெளித் தோற்றம்
புதிதாக
உதித்த போது, முதலில்
மகத்துவப் பேரொளியுடன் மின்னின
அனைத்து விண்மீன்களும்!
தெய்வங்கள் வான்மீன்களைச் சீராக
நெய்து கானம் பாடின,
இப்படி:
“பூரணச் சித்திரம் அக்காட்சி! அந்தப்
பூரிப்பில் ஏது கலப்பாட்சி?”
அப்போது ஒரு குரல் அலறித்
திடீரென எழுந்தது :
“ஒளித்தொடரில் எங்கோ ஓரிடத்தில்
பிளவு தெரிகிறது!
வானில் இடைவெளி தோன்றும்,
விண்மீன் ஒன்று
காணாமல் போய்!”
விண்மீன்கள் பதித்த பொன்வளையம்
முறிந்து போய்
அறுந்தது வீணையின் நாதம்!
நம்பிக்கை யிழந்து
வீறிட்டு
விம்மின மற்ற விண்மீன்கள்:
“அனைத்திலும் உயர்ந்தது
இழந்த விண்மீன்!
சொர்க்க உலகுக்கோர்
அற்புதம் அது.”
விண்மீனைத் தேடும்
முற்பாடு ஓயாமல் தொடர்ந்தது
அன்றைய நாள் முதல்!
ஒன்றிழந் ததால் சோக
விண்மீன் கூட்டம்
குறையெனக் கூக்குர லிட்டுப்
பூரிப்பிழந்தன புண்பட்டு!
காரிருள் சூழ்ந்த வானில்
புன்னகை பூண்ட விண்மீன்கள்
தமக்குள்ளே
மென்மையாய்ப் பேசிக் கொண்டன:
“வீணான தேடலிது,
காணாமல் போன வான்மீனைக்
கண்டு பிடிப்பது!
முற்றுப் பெறட்டும்,
அற்றுவிடா முழுத் தோற்றம்
தேடும் படலம்!”

*****************
கீதாஞ்சலி (79)
மனவலியைத் தாங்குவேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இந்தப் பிறப்பில் நேராக நின்னைச்
சந்திக்கும் கட்டம்
எனக்கில்லை என்றாகி விட்டால்,
உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன்
என்பதை
உணர வேண்டும் நான்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
வணிக உலகிலே
மணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,
தினமும் செல்வம் சேர்த்து
எனது பை நிரம்பி வழிந்தாலும்,
எதுவும் முடிவில்
சம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னிடம்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

பெரு மூச்சுடன் களைத்துப் போய்,
தெரு ஓரத்து மண்தூசியில்
தணிந்த கட்டிலின் மீது நான்
குந்தும் போது, எனது
நீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென
நானுணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
என்னறையில் தோரணங்கள் கட்டிப்
புல்லாங்குழல் இசை பொழிந்து,
சிரிப்பு வெடிகளில்
ஆரவாரம் செய்யும் போது,
வரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்
அழைக்க வில்லை யென
உணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

*****************
கீதாஞ்சலி (80)
கடும் புயலில் பயணம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இலையுதிர் காலத்து வானில்
பயனின்றி
அலையும் மேகத்தில்,
முறிந்து போன துண்டு போல்
திரிபவன் நான்!
என் ஆதவன் எப்போதும்
பொன்னொளி வீசுவான் உன்னதமாய்!
உன் ஒளிமயத்தில் என்னை
ஒன்றாக்கி,
உன் வெப்பத் தொடுகையால்
என் மழை மேகம்
இன்னும் உருகிப் பொழிய வில்லை!
ஆதலால் எண்ணி வருகிறேன்,
உன்னைப் பிரிந்த மாதங்களையும்
ஆண்டுகளையும்!
உன் விருப்ப அதுவானால்,
உன்திரு விளையாட்டும் அதுவானால்,
வேகமாய்ப் போகும்
எந்தன் வெற்றிடப் படகை
ஓவியத்தில் தீட்டு பன்னிறத்தில்
உந்தன் தூரிகையால்
பொன்முலாம் பூசி!
கடலில் கடும் புயலடிக்கும் போதென்
படகை மிதக்க விட்டு,
பயணம் பண்ண வை,
பல்வேறு விந்தைகளில் பங்கெடுத்து!
உறங்கும் வேளையில்
மறுபடியும்
எந்தன் வாழ்வெனும் நாடகத்தை
அந்தமாக்குவது
உந்தன் விருப்ப மானால்,
அந்தி யிருளில் ஊனுருகி நான்
மாய்ந்து விடுவேன்!
அல்லாவிடில்,
குளிரும் அதிகாலையில்
பளிச்சென வெளுத்துப் புலர்ந்ததும்,
முறுவலோடு
தூய மனத்துடன் மறைவேன்
மாயமாக!

*****************

கீதாஞ்சலி (81)
கடந்ததின் மீது கவலை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

சோம்பிக் கிடந்து
முடங்கிய நாட்களில் நானிழந்த
கடந்த காலத்தை எண்ணிக்
கவலை யுற்றுக்
கண்ணீர் விட்டேனா?
ஆனாலும்,
என்னரும் அதிபதியே!
நானதை ஒருபோதும் மெய்யாய்
இழந்து விட வில்லை,
ஏனெனில் என் வாழ்க்கையின்
ஒவ்வொரு கணத்தையும் நீ
உன் கரத்தில்
ஏந்திக் கொண்டுள்ளதால்!
பொருட்களின்
கருவில் புதைத்து வைத்து,
விதைகளைக் கண்காணித்து
மொட்டுகளை வளர்க்கிறாய்!

பூக்கள் மொட்டி லிருந்து புலரும்!
மூப்பெய்திய பூக்கள் பயன்தரும்
பூப்பெய்திக்
காய் கனிகள் ஆகின!
களைத்துச் சோம்பிய நிலையில்
தூங்கி விழும் போது,
என் பணிகள் எல்லாம்
நிறுத்த மாகி விட்டதென
நினைத்தேன்!
பொழுது புலர்ந்ததும்
விழித் தெழுந்து நான்
பளிச்செனக் கண்ட அற்புதக் காட்சி
எனது
முழுத் தோட்டத்திலும்,
மயக்கும்படி பூத்துக் குலுங்கின,
வியக்கும் பூக்கள்!

*****************
கீதாஞ்சலி (82)
ஆதி அந்தமில்லா காலம்..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஆதியில்லாக் காலத்திற்கு
அந்த மில்லை,
உந்தன் கைக்குள் நகர்வதால்,
எந்தன் அதிபதியே!
காலச் சக்கரத்தின்
சுழற்சி நிமிடங்களை
எண்ணிக் கணிப்பவர்
எவரு மில்லை!
கடக்கிறது காலம்,
பகலு மிரவும் மாறி மாறி வந்து!
யுகங்கள் மலர்ந்து
முதிர்ந்த பூக்கள் போலக் கருகி
உதிர்ந்து போகின்றன!
பொறுத்திருப்பது எவ்விதமென
அறிந்தி ருப்பவன் நீ!
சின்னஞ் சிறிய காட்டுப் பூ
ஒன்றினைப்
பூரணப் படுத்திட
படிப்படியாய்ப் பன்னூறாண் டுகளாகச்
சீராக்கியன் நீ!

நேரமில்லை நமக்கு!
தவழ்ந்து போயாகிலும் நாம்
அவசியம்
வாய்ப்பினைப் பற்ற வேண்டும்!
தாமதப் படுத்த
நாமொன்று மில்லாதவரா?
காலம் தவறிப் புகார் செய்யும்,
கால மில்லா நபருக்குச்
சாலப் பணி புரிவதில்,
காலம் கழியும் எனக்கு!
அச்சமயம்
உன் சமர்ப்பணப் பீடம்,
என் அர்ப்பணப் பண்டம் யாவும்
இறுதியில் பறிபோய்,
வெறுமையாய்க் கிடக்கிறது!
அந்திப் பொழுது சாய்ந்ததும்,
உந்தன் கதவு மூடப்பட்டு விடுமென,
முந்திக் கொண்டு விரைகிறேன்
அஞ்சிய வண்ணம்!
ஆனாலும்
காலநேர மின்னும்
அதற்குள்ள தென
முதற்கண் தெரிகிறது எனக்கு!

*****************
கீதாஞ்சலி (83)
என் கண்ணீர் முத்தாரம்..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அன்னையே! சோகத்தில்
சிந்துமென்
கண்ணீர்த் துளிகளை எல்லாம்
ஓர் முத்தார மாய்க்
கோர்த்துச் சூட்டுவேன்,
உன்னெழில் கழுத்தினில்!
விண்மீன் பரல்கள்
நடமிடும்
ஒளிச் சலங்கைகள்
ஒப்பனை செய்கின்றன உன்
திருப்பதங்களை!
ஆயினும்
கழுத்தில் தொங்குமென் முத்தாரமே,
ஊஞ்சல் ஆடுது
உன் மார்பின் மீது!

செல்வமும், புகழும்
தேடி வருகின்றன, நினது
திருவருளால்!
அவற்றை அளிப்பவனும் நீ!
பெற முடியாமல்,
நிறுத்தி விடுபவனும் நீ!
ஆயினும்
என்னைச் சார்ந்தவை,
என் துயர்கள் அனைத்தும்
முழுமையாய்!
என் துன்பங்களை
உன்னிடம் சமர்ப்பிக்கும் போது,
வெகுமதி
அளிக்கிறாய் எனக்கு
நளினமாக!

*****************
கீதாஞ்சலி (84)
பிரிவுத் துயர்..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மரணத் துயர் போல ஏனையப்
பிரிவுத் துன்பந்தான்
பரவி வருகிற திப்போது,
தரணி எங்கணும்!
வரம்பு வேலியற்ற வான்வெளியில்
வடிவங்கள்
எண்ணற்ற முறையில் வேறுபட்டு
துன்பப் பிரிவுகள்
கண்திறந்து வெளிவரும்!
இம்மாதிரித்
துக்கப் பிரிவால்தான்,
இரவு முழுவதும்
விண்மீண்கள் தம்மை,
உற்று நோக்கு கின்றன,
ஊமைத் தனமாய்
ஒன்றை ஒன்று!
சலசலக்கும்
இலைகளின் வழியே,
இப்பிரிவுத் துயர்தான்
ஒப்பிலாச் சோகக் கீதமாய்,
வேனிற் காலக் கருவானில்
ஆடி மாதம்
மழைத்துளி களிடையே,
பாடி நுழைகிறது!
அடங்காமல் அத்துமீறிக் கொண்டு
தொடரு மிந்த
துயர்ப் பிரிவுகள்தான்,
காதலாகவும், வேட்கையாகவும்,
பாதாளத்தில் ஊற்றாகிறது,
வேதனை மிஞ்சி!
துக்கங்கள், பூரிப்புச் சம்ப வங்களாய்
மக்களின்
இல்லங்களில் நிகழும்!
அதுவே தான்
என் கவித்துவ நெஞ்சில்
பாகாய் உருகி ஓடும்
பாடல்களாய்!

*****************
கீதாஞ்சலி (85)
தீவிரப் படைகளின் மீட்சி ..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

குருநாதரின் மாளிகையி லிருந்து,
முதன்முதல்
வெளியேறிய போது,
தீவிரப் படையாளர் தமது
போர்க் கவசத்தையும், ஆயுதங் களையும்,
ஒளித்து வைத்தது எங்கோ?
மூர்க்கப் பராக்கிர மத்தை
பதுக்கி வைத்தது எங்கோ?
பார்த்தால் பாவம் அவர்
வறியவராய், அனாதையராய்
உதவுவா ரற்றுத்
தெரிகிறார்!
அம்புகளை எய்தார்கள் வெகுண்டு
அவர்கள் மீது,
குருநாதர் மாளிகையி லிருந்து
வெளியேறிய நாளன்று!

திரும்பவும்,
தீவிரப் போர்வீரர்
குருநாதர் பெருமனைக்கு ஒருநாள்
விரைந்த வேளை தமது
பராக்கிர மத்தை
மறைத்து வைத்தது எங்கோ?
தரையின் மீது
வாளையும், வில்லையும்
கீழே போட்டார்!
நிலவுக அமைதி என
நெற்றியில் எழுதிப் பறை சாற்றினார்,
வெளிப் படையாக!
வாழ்க்கையில்
உற்றதையும், பெற்றதையும்
சுற்றத்தையும் விட்டு விட்டு,
ஒருநாள் சரண் அடைந்தார்,
மறுபடியும்
குருநாதர் மாளிகைக்கு,
விரைந்து!

*****************
கீதாஞ்சலி (86)
மரண தேவனுக்கு வரவேற்பு .. !

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அதோ! மரண தேவன்
எதிரில் நிற்கிறான்,
எனது வாசற் கதவருகிலே,
உனது வேலையாள் அவன்!
எவருக்கும் தெரியாத தூரக்
கடல் கடந் தெனது
வீட்டிற்கே,
வந்து விட்டான்
உந்தன் கட்டளை நிறைவேற்ற!
காரிருள் கப்பி விட்ட திரவில்!
குடிகொண்ட தச்சம்
நெஞ்சில்! ஆயினும்
தீபத்தை கையில் கொண்டு
திறக்கிறேன்,
முன்வழிக் கதவை!
வரவேற் கிறேன் நான்,
சிரம் தாழ்த்தி
மரண தேவனை!
உந்தன் தூதுவன்தான்
வந்து நிற்கிறான்,
வாசலில்!

கரங்களைக் குவித்து,
மரண தேவனை வணங்குவேன்,
கண்ணீர் சொரிய!
திருப் பதங்களைத்
துதிப்பேன்,
இதயச் செல்வத்தை
அர்ப்பணம் செய்து!
திரும்பிச் செல்வான், மரண தேவன்
ஒருநாள்
கட்டளை நிறைவேற்றி,
எந்தன்
காலைப் பொழுதை
வெறும்
கருநிழ லாக்கி!
வெறுமையான என் வீட்டில்
புறக்கணித்த
தனி ஆன்மா மட்டும்
எஞ்சி நிற்கும்,
எனதிறுதிக் கொடையாக
உனக்கு!

*****************
கீதாஞ்சலி (87)
அவளைத் தேடிச் செல்கிறேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நம்பிக்கை யிழந்த நிலையில்,
தேடிப் போகிறேன்,
நானவளை!
வீடெங்கும் மூலை முடுக்கெல்லாம்
தேடுகிறேன்!
காண வில்லை நானவளை!
சிறியது என்னில்லம்,
மறுபடியும்
பெறுவ தில்லை ஒருபோதும்,
மறைந்தவை அங்கே!
என் அதிபனே!
வரம்பற்ற மாளிகை உன்னுடையது!
ஆயினும்
வந்திருக்கிறேன்,
உந்தன் மாளிகை வாசலுக்கு
அவளைத் தேடிய வண்ணம்!
உன் அந்தி வானின்
பொன் விதானக் குடையின் கீழ்
நின்ற வண்ணம், ஆர்வமாய்
உன்முகம் நோக்கின
என் விழிகள்!

விண்வெளியின்
முடிவில்லா விளிம்புக்கு நான்
வந்திருக் கிறேன்.
காணாமல் போகாது எதுவும் அங்கே!
கண்ணீர் வழியாகத் தெரியும்,
களிப்பில்லாத, உறுதியற்ற
ஒளிக்கண் ணில்லாத,
முகமில்லை அங்கே!
அவளின்றி வெறுமையாய்ப் போன
என் வாழ்வை,
மூழ்கடி கடலுக் குள்ளே,
முழுமையாய்
ஆழமான படு பாதாளத்தில்!
பிரபஞ்சத்தின் பூரணத்தில்
கரங்கள் தொடும்
இனிய வாய்ப்பினை இழந்து போனதாய்
உணர வேண்டும் நான்,
ஒருமுறை யாவது!

*****************
கீதாஞ்சலி [88]
பாழடைந்த ஆலயம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பாழடைந்து போன
ஆலயத்தில் உள்ள தெய்வம்!
அறுந்து போன வீணையின் நாண்கள்
ஊமையாய் தொங்கின,
உன் புகழ் பாடாமல்!
பொழுது சாயும் வேளையில்
தொழுதிடும் நேரத்தை
நினைவூட்டும்
ஆலயமணியும் அடிக்க வில்லை!
ஆடாமல், அசையாமல்
காற்று
அமைதியாய் நின்றது,
உன்னிருப்பை உணர்த்தாது!
வாழும் உந்தன்
பாழடைந்த கோயில்முன் கால் வைக்கும்,
வசந்த காலத் தென்றல்,
ஏந்தி வருகிறது,
பூக்களின் கூக்குரல்!
அர்ப்பணம் ஆவதில்லை நினது
ஆராதனைக்கு
அந்தப் பூக்கள்!

வயதான உன் பக்தனுக்கு நீ
வழங்க மறுத்தாய்,
வாஞ்சையாக விரும்பும் ஒன்றை!
கொளுத்தும் மாலை வெயில்,
நிழல் கலந்த
தூசி மூட்டத்தில்
வயோதிகன் உள்ளப் பசியோடு,
வாடிப் போய் மீண்டும் அணுகுவான்
பாழடைந்த ஆலயத்தை!
ஆரவார மின்றி வந்து போகும்,
தெய்வம் உனக்கு
அநேகக்
கொண்டாட்ட விழாக்கள்!
தொழுதிடும் பல இரவுகள்
கோயில் தீபம் ஏற்றப் படாமல்
நழுவிச் செல்கின்றன!
சூதான கலைத்துவக் குருநாதர்
புதுப்புதுச் சிற்பங்கள்
செதுக்கினார்!
அவற்றின் நேரம் வரும் போது
மறதி வெள்ளம் அடித்துச் செல்லும்!
பாழடைந்த
ஆலயத் தெய்வம் மட்டும்
ஆராதிக்கப் படாமல்,
மாளாத புறக்கணிப்பில்
மீளாமல் நிற்கும்!

*****************
கீதாஞ்சலி (89)
திடீர் அழைப்பு எனக்கு

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

வெடிப்புடன் வெளிவரும்
ஆரவாரச் சொற்கள் என் வாயில்
வாரா இனிமேல்!
என் அதிபதியின் விருப்பமும் அதுவே!
அதனால் முணுமுணுப்பில்
பேசுவேன் நானினி.
இதயத்தில் எழும் என் குரல் நாதம்
மெல்லோசைக் கீதமாய்
முணுமுணுக்கும் இனிமேல்!
வேந்தனின் வணிகச் சந்தைக்கு
விரைந்து செல்கிறார் மாந்தர்.
விற்போர், வாங்குவோர் மும்முரமாய்
முற்பட்டுள்ளார்
வியாபாரத்தில் ஆங்கே!
வேலைப் பளுவின் மத்தியில்
வெளியேற நேர்ந்தது எனக்கு,
கால நேரம் தவறி!

பூக்கள் மலரட்டும் என்னரும்
பூங்காவிலே,
பூக்கும் பருவ மில்லை யாயினும்!
ரீங்கார இசைபாடிச்
சோம்பலுடன் வரட்டும்,
தேனீக்கள்,
பட்டப் பகலிலே!
நல்லதும், பொல்லதுமான தீர்ப்புகளில்
நானீடு பட்டேன்,
நாளும், பொழுதும் முழு வேளை!
ஏதுமில்லா நாட்களில்,
என் விளையாட்டுத் துணைவன்
பேருவகை அடைகிறான்,
என் இதயம்
அவன் மீது திரும்பும் போது!
பயனற்ற அற்பப்
பலாபலனை நோக்கித்
திடீரென்று
ஏனவன் அழைத் தானென்று
தெரிய வில்லை,
எனக்கு!

+++++++++++++++
கீதாஞ்சலி (90)
மரணம் கதவைத் தட்டும் போது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்ன வழங்கப் போகிறாய் நீ,
மரண தேவன் வந்து,
உன்னில்லக் கதவைத் தட்டும்
அந்நாள்?
விருந்தாளிக்கு வாழ்க்கை
உருவாக்கிய என் முழுச் சடலத்தைத்
தருவதாக முன் வைப்பேன்!
ஒருபோதும் மரண தேவனை,
வெறுங்கையுடன்
திருப்பி அனுப்ப
விரும்ப வில்லை நான்!

இலையுதிர் காலப் பொழுதிலும்,
வேனிற் கால இரவுகளிலும்,
நானினிதாய்ச் சுவைத்த
நாட்களை எல்லாம்,
நானளிப்பேன்
அவன் முன்பாக! என்
ஊதியங்கள் அனைத்தையும்,
உடன் அளிப்பேன்!
சுறுசுறுப்பாய் உழைத்தென் வாழ்வில்
பெருக்கிய வற்றையும்,
தருவேன் அவனுக்கு,
என் ஆயுள்
தருணம் முடியும் தறுவாயில்,
மரண தேவன்
வருகை தந்தென்,
வாசற் கதவைத் தட்டும் போது!

*****************
கீதாஞ்சலி (91)
மரண தேவனுக்கு மணமாலை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மரணமே! என்னருமை மரணமே!
திரைமூடி பூர்த்தி ஆக்குவாய்,
வாழ்வின் முடிவினை!
வருக! வருக, வந்தென் செவியில்
ஓதுக மெதுவாய்!
ஒவ்வொரு நாளும் நீ,
வருவாயென
வழிமேல் விழிவைத் துள்ளேன்!
வாழ்வின் இன்ப துன்பங்களைத்
தாங்கிக் கொண்டதும்
உனக்காக!
உள்ளத்தின் ஆழத்தி லிருந்து,
ஒருவரும் அறியாது,
உன்மீது ஓடிச் செல்கிறது,
என் நேசம்!
இறுதி முறையாக
ஒருமுறை
என்மேல் விழட்டும், உன்
கடைக்கண் பார்வை!
உனக்கென்றும் சொந்தமாகும்,
என்னுயிர்!
மலர்களைப் பின்னிக் கோர்த்து
மாலை தயாராய் உள்ளது,
மணமகனுக்கு!
திருமணம் முடிந்த பிறகு,
மணப்பெண்,
பிறந்தகம் விட்டுத்
தனியாகத் தன்
பிரபுவைச் சந்திக்க செல்வாள்,
ஏகாந்தமான
இரவை நோக்கி!

*****************
கீதாஞ்சலி (92)
வாழ்வுக்கு மூடு விழா!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அந்த நாள் வரப்போகு தென்று
அறிவேன் நான்,
கண் பார்வை யிழந்து
மண் பூமி தெரியாத போது!
விழித்திரை யிட்டு
விடுவித்துக் கொள்ளும் என்னுயிர்
நிசப்த நிலையில்!
இரவு வானில்
ஆயினும்
என்னைக் கண்காணிக்கும்
விண்மீன்கள்!
விடியும் காலைப் பொழுது
கடந்த நாளைப் போல!
கடல் அலைபோல் இன்ப துன்பங்களில்
மாந்தரை உலுக்கும்,
காலத்தின்
மணிக் கணங்கள்!

ஆயுளின் அந்தி வேளையில்
மனத்தின்
அரண் மதில்கள் உடைந்து,
பரிவிலாக் களஞ்சியம்
நிரம்பிய
உன் உலகைக் காண்கிறேன்,
மரண வெளிச்சத்தில்!
தாழ்வான ஆசனம் என்பதில்லை!
கீழான வாழ்வென ஒன்றில்லை!
வீணாக ஆசை
ஊட்டிய பொருட்களும், வாழ்நாளில்
ஈட்டிய சொத்துக்களும்,
நீங்கி விட்டென்னை
விலகட்டும்!
எறிந்து விட்ட துரும்புகளும்,
நினைவில்
புலப்படா அற்பப் பொருட்களும்,
நிலைக்கட்டும் எனக்குத்
துணயாக!

*****************
கீதாஞ்சலி (93)
உத்தரவு பிறந்து விட்டது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பூரண ஓய்வெடுக்க
நேரம் நெருங்கி விட்ட தெனக்கு!
அனுப்பி வைப்பீர் விடையளித்து
எனதருமைச் சோதரரே!
புறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி
அனைவருக்கும்!
ஈதோ!
என் வீட்டுச் சாவி,
எடுத்துக் கொள்வீர்!
விட்டுச் செல்கிறேன்,
என் வீட்டுச் சொத்துக்கள்
எல்லாம்!

கடைசியாய் வழியனுப்பும்
உமது
கனிவு மொழிகளை
வேண்டி நிற்கிறேன்!
நீண்ட காலமாக
அண்டை வீட்டு அயலவராய்
ஒன்றா யிருந்தோம்!
என் வாழ்வில் பிறர்க்கு நான்
கொடுத்ததை விட,
எனக்குக்
கிடைத்தவை மிகையே!
பொழுது புலர்ந்தது இன்று.
வெளிச்சம் தந்த விளக்கு,
அணைந்தது,
வீட்டு மூலை யிருட்டில்!
உத்தரவு
எனக்கு வந்து விட்டது!
தயாராகி விட்டேன்,
இறுதிப்
பயணம் துவங்க!

*****************
கீதாஞ்சலி (94)
நான் பிரியும் வேளை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நல்விடை கூறி என்னை,
அனுப்பி வைப்பீர்
நண்பர்களே,
நானும்மைப் பிரியும் வேளை!
வானம் பளிச்சென வெளுத்து விட்டது!
வனப்பு பொங்கு தென் பாதையில்!
எடுத்துக் கொண்டு செல்வது
என்ன வென்று கேளாதீர் என்னை.
வெறுங் கையாய்ப் பயணத்தில்,
புறப்பட்டேன்,
பிறர் அளிப்பதை எதிர்பார்த்து!
அப்போது நான்
திருமண மாலை கழுத்தில்
அணிந்து கொள்வேன்!

பயணிகள் உடுத்திக் கொள்ளும்
பழுப்பு நிற ஆடை
ஏகும் எனக்கு ஏற்ப தில்லை!
போகும் பாதையில்
அபாயம் நிரம்ப உள்ளன!
ஆயினும் நெஞ்சில்
அச்ச மில்லை எனக்கு!
வானத்தில்
முளைத்தெழும் வெள்ளி,
என் பயணம்
முடியும் தருவாயில்!
எந்தன் அதிபதி வீட்டு முற்றத்தில்
அந்தி மங்கிய
துன்ப மயக் கீதங்கள்
அடித்துக் கொண்டு எழுந்திடும்,
அவ்வேளை!

*****************
கீதாஞ்சலி (95)
ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இம்மைப் பிறப்பின் தலை வாசலை
எப்போது தாண்டினேன்
என்பதை அறிய வில்லை
நான் முதலில்!
நடுக் காட்டினில்,
நள்ளிரவு வேளையில்
மொட்டு விரிந்தாற் போல,
மாய வாழ்வில் என்னை,
மலர வைத்த மகாசக்தி எது?
பொழுது விடிந்ததும்,
ஒளிமயம் கண்களில் பட்ட போது,
ஒருகணம் உணர்ந்தேன்,
இந்த உலகுக்கு,
நானோர் அன்னியன் அல்லன்
என்பதை!

பெயரும் வடிவமு மில்லாத
மாயச் சிற்பி, என்
தாயுருவின் அன்புக் கரங்களில்
தாலாட்டப் படும்
சேயாக உண்டாக்கி
ஆட்கொண்டான் என்னை!
அது போலவே
மரணத்திலும் புலனுக்குத்
தெரியாத ஒன்று
நிகழப் போவதை நானறிவேன்!
வாழப் பிறந்ததை நேசிக்கும் நான்
வாழ்க்கை முடிவில்
வரப்போகும்
மரணத்தையும்
வரவேற்பேன் வாஞ்சை யாக!
வலது முலையி லிருந்து தாய்
விலக்கும் போது,
வீறிட்டழும் குழந்தை!
அடுத்த கணத்தில் இடது முலைக்கு
அன்னை மாற்றும் போது,
அமைதியுறும் சேய்!

*****************
கீதாஞ்சலி (96)
எனது பிரிவுரை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இவ்வுலகை விட்டு நீங்கும் போது,
கூறப் போகும்,
எனது பிரிவுரை
இதுவாக இருக்கும்:
பூமியில் நான் கண்டது உன்னத மானது!
தாமரைப் பூவில் மறைந்துள்ள
தேமதுவைச் சுவைத்தேன்!
விரிந்து அது ஒளிக் கடலாய்ப்
பரவியது எனக்கோர் வெகுமதி!
பிரிவுரை யாகட்டும் அதுவே!
முடிவில்லாத
வடிவங்கள் கொண்ட,
பந்தய அரங்கில்
முடிந்தது என் விளையாட்டு!

வடிவ மற்ற ஆதிமூலனின்
மகத்தான தோற்றத்தைக்
கண்டேன்!
எவருக்கும் எட்டாத அவனது
தொடுகையால்
என் உடல் பூராவும்,
எனது உறுப்புகள் எல்லாமும்,
பூரித்துப்
பொன்னூஞ்சல் ஆடின!
அதுவே என் பிரிவுரை ஆகுக!
ஆயுள் முடியட்டும்,
நீங்கும் வேளை
எனக்கு
நெருங்கி விட்டால்!

*****************

கீதாஞ்சலி (97)
கண்கொள்ளாக் காட்சி!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னுடன் விளையாடும் போது,
ஒருபோதும்
உன்னை யாரென்று கேள்வி
கேட்ட தில்லை நான்!
உன்னிடம்
கூச்ச மில்லை எனக்கு! உன்னிடம்
அச்ச மில்லை எனக்கு!
கொந்தளிப்பில்
ஆடியது என் வாழ்க்கை!
தூங்கிக் கொண்டிருந்த என்னைத்
தோழனைப் போல்
அழைத்தாய்
அதிகாலைப் பொழுதில்!
அடுத்து அடுத்து வரும்
வெளித் திடலில் கானகத்தே
வழி நடத்திச் சென்றாய் என்னை!

வாழ்ந்த அந்நாட்களில்
எனக்காக நீ பாடிய
உன் கீதங்களின்
உட்பொருளை அறிய முயன்றிலேன்!
ஆயினும்
என்குரல் ஈர்த்துக் கொண்டதுன்,
பண்ணிசை நயத்தை!
துள்ளி ஆடியது என் நெஞ்சம்,
தக்க தாளத்திற் கியைந்து!
இக்கணத்தில்
விளையாட்டு வேளை முடிந்த போது
என்மீது திடீரெனப்
பொழிந்தது
என்ன கண்கொளாக் காட்சி?
உன் திருப்பாதம் தூக்கிய
உலக மானது
ஒளிமிக்க விழிகள் பெற்றுப்
பிரமித்து நிற்கும்,
அனைத்து விண்மீன்களின்
மௌனத்தில்!

*****************
கீதாஞ்சலி [98]
வானக்கண் நோக்கும் என்னை!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எனக்குக் கிட்டிய வெற்றிப் பதக்கம்
தோல்வி ஆரங்களைச் சூட்டி உன்னை
ஒப்பனை செய்வேன்!
தப்பி நழுவ எப்போதும்
தைரிய மில்லை
தோற்றுப் போன எனக்கு!
எனது தன்னலப் பெருமை
மதில் மேல் முட்டும்
என்பதை அறிவேன் உறுதியாய்!
பந்தபாசப் பிணைப்புகளை என் வாழ்க்கை
வெடித்துப் பிளக்கும், உச்ச
வேதனை தாங்கி!
சூனியமாய்ப் போன என்னிதயம்
தேனிசையில்
போலியாய்ப் பொங்கும்,
காலியான
புல்லிலையைப் போன்று!

கல்லும் உருகிக் கண்ணீர் விடும்!
மொட்டுக்குள் எப்போதும்
மூடியே கிடக்குமா,
கட்டுக் கட்டான
பொற்றாமரைச் செவ்விதழ்கள்?
ஒளிந்துள்ள தேன்துளிகள்
வெளியில் சிந்திடும் அல்லவா?
நீலவானி லிருந்து எனை நோக்கி,
விழியொன்று
அழைக்கிறது மௌனமாய்!
எதுவும் எனக்காக
எப்போதும்
விட்டு வைக்கப் படுவதில்லை,
மரணத்தை உன் பாதக்
கமலத்தில்
சமர்ப்பிக்கும் வரை!

*****************
கீதாஞ்சலி (99)
காற்றில் அணையும் விளக்கு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

துடுப்பைக் கைவிட்ட பின் நீ
எடுத்தோட்டும் தருணம்
தொடங்கி யதாய்த் தோன்றும் எனக்கு!
முடிய வேண்டிய பணிகள் யாவும்
உடனே நிறைவேறும்!
எதிர்த்துப் போராடுவது வீணே!
தோல்வியை மௌனமாய்
ஏற்றுக் கொண்டு,
துடுப்பி லிருந்து கரங்களை
விடுவித்துக் கொள்வாய்
என்னிதயமே!
முழு நிம்மதியில்
பிறந்த தளத்திலே வாழ்வது
பெரும் அதிர்ஷ்ட மெனக்
கருதிடுவாய்!

ஒவ்வொரு தரமும்
குப்பென வீசி அடிக்கும்,
மெல்லிய காற்றில் கூட
டுப்பென அணையும்,
எனது விளக்குகள் எல்லாம்!
மீண்டும் மீண்டும் அவற்றை ஏற்றிட
முனையும் போது,
மறந்துபோய் விடுகிறேன்
மற்ற வேலைகளை!
சற்று அறிவோடு
கவனமா யிம்முறைக்
காத்திருப்பேன் காரிருளில்,
தரைமேல் பாய் விரித்து!
உனக்கு விருப்பமான சமயத்தில்
ஓசையின்றி வந்திங்கு
அமர்ந்திடு
என் அதிபனே!

*****************
கீதாஞ்சலி (100)
மௌனமான என் புல்லாங்குழல்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

வடிவுள்ள பாதாளக் ÌÆ¢களில் நிரம்பிய
ஆழ் கடலில் குதித்து,
மூழ்கினேன்,
வடிவில்லாப் பூரண முத்தைத்
தேடிக் கைக்கொள்ளும்
நம்பிக்கை யோடு!
பருவக் காலத்தால்
துருப்பிடித்த எனது படகில்
துறைமுகம் ஒவ்வொன்றாய்ப்
பயணம் போக
முயல மாட்டேன் நான்!
அலைகள் கொந்தளிக்கும் வேளையில்
அம்மாதிரி
நீர்விளை யாட்டு புரிய
நெடு நேர மாகிறது!
ஆயினும் நான்
துணிவு செய்து விட்டேன்,
மரணமிலா நிலைக்கு என்னுயிரை
மாய்த்துக் கொள்ள!

வேட்பாளர் அமர்ந்துள்ள,
கான அரங்கத்தின் அடித்தளம்
காணாத பாதாளத்தில்,
நாதத்தின் தொனி யில்லா
நாண்களில்
கீதம் பொங்கிடும்
போதென்
வாழ்க்கைப் புல்லாங் குழலில்
வாசிக்கப் போகிறேன்!
கீதங்களுக் கேற்ப எப்போதும்
நாத நரம்புகளைச் சீராய்
மீட்டுவேன்!
கடைசிக் கானம்
பொங்கித் தணிந்து முடியும் போது,
மௌனமாய்ப் போன எந்தன்
புல்லாங்குழலை அர்ப்பணம் செய்வேன்,
மௌனியின்
பொற் பாதங்கள் மீது!

*****************
கீதாஞ்சலி (101)
பாடம் புகட்டும் கீதங்கள்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னிசைக் கீதங்கள் மூலமாகவே
நின்னைத் தேடி வருகிறேன்,
எப்போதும்
என் வாழ்க்கையில்!
வீடு வீடாய்ச் சென்று வினாவித்
தேட வைத்தவை எனது
பாடல்கள் தான்!
என்னை நானே உணர்ந்து கொள்ளவும்,
என்னுலகின் மீது நடமாடித்
தேடி அறியவும்,
நானிசைத்த கீதங்கள் தான்
நடத்திச் சென்றன!

எப்போதும் நான்,
கற்றுக் கொண்ட பாடங்கள் எனது
கானத்தின் மூல மாகவே!
அந்தரங்க வழிகளைக் காட்டின,
எந்தன் கீதங்கள்!
என்னிதய அடிவானில்
எண்ணற்ற விண்மீன் காட்சியைக்
கண்முன் நிறுத்தின!
இன்ப துன்பங்களின்
அன்றாட உலக மர்மங்களை
ஒன்றாகப் புரிந்து கொள்ள,
என்றும் வழி காட்டின!
இறுதியாக
அந்திப் பொழுதிலே
எந்தன் பயணத்தின் முடிவிலே
என் கீதாஞ்சலி,
என்னைத் தூக்கிக் கொண்டு
வந்திருப்பது
எந்த அரண்மனையின்
வாயிலுக்கோ?

*****************
கீதாஞ்சலி (102)
உன் மர்மங்களை அறியேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னை எனக்குத் தெரியும் என்று
மாந்தரிடையே
பீத்திக் கொண்டேன் நான்!
என் படைப்புகள் அனைத்திலும் உள்ள
உன் படத்தை
உற்று நோக்குவர் மற்றவர்.
என்னருகில் வந்து உடனே
“யார் அவன் படத்தில்?”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
உண்மையாய்
என்னால் கூற இயலாதென
எடுத்துரைப்பேன்!
துடுக்காய்த் திட்டி வெளியேறுவர்
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!

நின்னரிய கதைகளை
என்னினிய கீதாஞ்சலியாய்
எழுதி நீடிக்க வைப்பேன்!
உன்னுடைய மர்மங்கள்
என்னிதயத்தைக் கீறிக் கொண்டு
பொங்கி எழும்!
அருகில் வந்து மற்றவர்
“அவை கூறும் அர்த்தம் என்ன”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
“அந்தோ எவருக்குத் தெரியும்
அவை கூறும் அர்த்தங்கள்?” என்று
தவிர்த்து நிற்பேன்!
வெளியேறுவர் கேலி செய்து,
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!

*****************
கீதாஞ்சலி (103)
உனக்கு வந்தனம் புரிகையில்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உந்தன் பாதத்துக்கு ஒருமுறை நான்
வந்தனம் செலுத்தும் போது,
எழும் எனÐ உணர்ச்சிகள்
இந்த உலகம்
முழுவதும் பரவித்
தழுவட்டும் என் இறைவனே!
தணிவாய்க் கனம் தாங்காது,
வேனிற்கால கருமுகில் பெய்யாது,
வானில் தொங்குவது போல்,
பணிந்திடும் என்னிதயம்
உன் வாசற் கதவில்,
ஒருமுறை உனக்கு நான் வந்தனை
புரியும் போது!

எனதினிய கீதங்கள்
மனத்தின் பல்வேறு முறிவைத் திரட்டி,
மௌனக் கடல் நோக்கி
ஓடிச் செல்லட்டும்,
ஒற்றை நீரோட்டமாய்,
ஒருமுறை உனக்கு நான் வந்தனை
புரியும் போது!
இரவு பகலாய்ப் பறந்து
குன்றிலுள்ள தம் கூட்டுக்கு மீளும்
கொக்கு மந்தை போல்,
என் வாழ்க்கைப் பயணமும்
நேரே செல்லட்டும், அதன்
நிரந்தர இல்லம் நோக்கி,
ஒருமுறை உனக்கு நான் வந்தனை
புரியும் போது!

*****************

(கீதாஞ்சலி 1-103 முற்றியது)

Gitanjali By: Rabindranath Tagore
Library of Gongress Cataloging-in-Publications
United States of America (1997)

"https://ta.wikisource.org/w/index.php?title=கீதாஞ்சலி&oldid=28264" இலிருந்து மீள்விக்கப்பட்டது