குடும்பப் பழமொழிகள்/பெண்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பெண்கள்

பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழிலுடையவள்.
-யூதர்

இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள், அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அழுவார்கள்.

-ஃபிரான்ஸ்
பெண் என்றால் பேயும் இரங்கும்.
- தமிழ்நாடு
ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மகன்.
-ரஷ்யா

பெண்ணே, உன்னிடம் மூன்று நல்ல குணங்களும், நாலு லட்சம் தீய குணங்களும் இருக்கின்றன. நல்லகுணங்கள்: இசை பாடுதல், (இறந்த கணவனுடன்) சதியாக எரிதல், பிள்ளைகள் பெறுதல்.

-இந்தியா
மனிதனுக்குப் போர் எப்படியோ , அப்படிப் பெண்ணுக்குப் பிரசவம்.
-( ,, )
பெண்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சயித்தான் கூடப் பிரார்த்தனை செய்கிறான்.
-( ,, )
அத்திப்பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம், ஒரு பெண்ணின் மனத்திலுள்ளதைப் பார்க்கவே முடியாது.
-( ,, )
பெண்ணின் பேச்சிலே தேன் இருக்கிறது, உள்ளத்திலே நஞ்சைத் தவிர வேறில்லை.
-( ,, )
ஆடவர்களே இல்லாவிட்டால், பெண்கள் அனைவரும் கற்புடையவர்களே.
- இந்தியா
ஏணியில்லாமலே தூக்கில் ஏற வேண்டுமானால், ஒரு பெண்ணின் உதவியால் முடியும்.
- இலங்கை
கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது.
- ஜப்பான்
நாவுதான் பெண்ணுக்கு வாள், அது துருப்பிடிப்பதேயில்லை.
-( ,, )
பெண் மனிதனின் குழப்பம்.
-லத்தீன்
பெண்புத்தி பின்புத்தி.
- தமிழ் நாடு
வயதுவந்த பெண் (தீர்வை கட்டாமல்) கடத்தி வந்த உப்பைப் போன்றவள்.
-சீனா

(விரைவிலே வெளியேற்ற வேண்டும்.)

பெண்ணின் உரோமத்தால் பெரிய யானையையும் கட்டிப் பிடிக்கலாம்.
-( ,, )
இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும்.
-( ,, )
ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள்.
-அரேபியா
பெண்பிள்ளை பயணம் போகிறாள் என்றால், ஓர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பது தான் காரணம்.
-( ,, )
ஒரு நல்ல பெண் ஏழு பிள்ளைகளுக்கு மேல்.
- ஆர்மீனியா
உனக்கு ஓர் இரகசியம் தெரியவேண்டுமா? ஒரு குழந்தை, பயித்தியக்காரன், குடிகாரன், அல்லது ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார்.
-( ,, )
ஆணைவிடப் பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு அதிகம்.
-பர்மா
பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்க வேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணீர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிறான்.
-யூதர்
கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம்.
-யூதர்
பெண்ணுக்குக் கூந்தல் தான் நீளம், மூளை கட்டை.
- கால்மிக்

பெண் முற்றிலும் ஆணின் உடைமையாகாள்.

-குர்திஸ்தானம்
மன்னன், மாது, குதிரை-மூன்றையும் நம்பவேண்டாம்.
-பாரசீகம்
பெண்ணால் துயரமே வரும், ஆயினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது.
-( , , )
இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும் - அது ஒரு சந்தையாகிவிடும்.
-( , , )
பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும்: அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம்.
-( , , )
குடியானவனுக்கு வேண்டியது நிலம், பிரபுவுக்குக் கௌரவங்கள், சிப்பாய்க்கு யுத்தம், வியாபாரிக்குப் பணம், விவசாயிக்கு அமைதி, தொழிலாளிக்கு வேலை, சித்திரக்காரனுக்கு அழகு, பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை.
-( , , )
பாடும் பெண்ணுக்கு அகமுடையான் தேவை.
-அல்பேனியா
அழகான பெண்ணும், நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.
- இங்கிலாந்து
விகாரமான ஸ்திரீ வயிற்றுவலி, அழகுள்ளவள் தலைவலி.
-( , , )
பத்து வயதில் பெண் தேவகன்னியா யிருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போலிருப்பாள், நாற்பதில் சயித்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்.
- இங்கிலாந்து
பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
-( , , )
பெண்களுக்கும், குருமார்களுக்கும், கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது.
-இங்கிலாந்து
பெண்பிள்ளை சயித்தானை வென்று விடுவாள்.
-அயர்லந்து
உயிருள்ளவரை பெண்களுக்கு வர்ணங்களில் ஆசையிருக்கும்.
-( ,, )
சணலை நெருப்பிலிருந்து காப்பது கஷ்டம்.
- ஸ்காட்லந்து
வாயாடியின் வாய் சயித்தானின் அஞ்சல் பை.
-வேல்ஸ்
பெண்கள் சயித்தானின் சாட்டைகள்.
-( ,, )
பெண் உள்ளம் தாமரை இலைமேல் உருளும் நீர்த்துளிபோல் நிலையற்றது.
-சயாம்
உறுதியான செருப்பு வேண்டுமானால், ஒரு பெண்ணின் நாவை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும் அது ஒரு போதும் தேயாது.
-ஃபிரான்ஸ்
மூன்று விலங்குகளே தம்மைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தைக் கழிப்பவை- அவை பூனைகள், ஈக்கள், பெண்கள்.
-( ,, )
மனிதனின் பணப் பைக்காகவே பெண் படைக்கப் பெற்றிருக்கிறாள்.
-( ,, )
ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும்.
-ஜெர்மனி
கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் சிறைவாசம்.
-ஜெர்மனி
கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு.
-( ,, )
ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது.
-( ,, )
ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும், ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள்.
-( ,, )
துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள்.
-( ,, )
நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம்.
- போலந்து
கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லு; நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு.
-போலந்து
கன்னிப் பெண்ணிடம் உன் விருப்பம் போல் நடக்கலாம். விதவையிடம் அவள் விருப்பம் போலவே நீ நடக்க வேண்டும்.
-( ,, )
பெண்ணின் யோசனையால் பயனில்லை யென்றாலும், அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்.
- வேல்ஸ்
நீண்ட தலைக்காரிக்கு ஆழமில்லாத உள்ளம்.
- பல்கேரியா
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.
-( ,, )

[மேலை நாடுகளில் கம்பள நூல் நூற்றல் கன்னியர் செய்யவேண்டிய தொழில்.]

பெண்கள் சீட்டியடித்தால், சயித்தானுக்குச் சிரிப்பு அடங்காது.
-ஜெர்ஸீ
அத்தையிடம் ஒரு விஷயம் சொன்னாற் போதும், அகிலமெல்லாம் பரவிவிடும்.
-ஸெக்
பன்னிரண்டு வயது வரை உன் மகளுக்குத் தலை வாரிவிடு;. பதினாறு வயதுவரை பாதுகாத்து வை; பின்னர் எவ்ன் மணந்து கொள்ள வந்தாலும், அவளைக் கொடுத்து, நன்றியும் சொல்லு.
-( ,, )
நாய்க்கு மேலாக நாம் குரைக்க முடியாது, காகத்திற்கு மேலாகக் கரைய முடியாது, ஒரு பெண்ணுக்கு மேலாகச் சண்டைபோட முடியாது.
-( ,, )
ஒரு பெண் சீட்டியடித்தால், ஏழு ஆலயங்கள் அதிரும்.
-( ,, )

பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை, ஆனால் அவள் அதை அணிவது அபூர்வம்.

-டென்மார்க்
வயிரம் போன்ற மகள் மனைவியாகும் போது கண்ணாடியாக மாறுகிறாள்.
- ஹாலந்து
பெண்களைப் பெற்றவன் எப்பொழுதுமே மேய்க்க வேண்டிய ஆயன்.
-( ,, )
புதர்களெல்லாம் பெண் இனம்.
- எஸ்டோனியா

[பெருகக் கூடியவை.]

ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள்.
-( ,, )
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.
-( ,, )

மனிதன் வேலை காரணமாக வெளியே போகிறான், பெண் தன்னைப் பிறர் பார்ப்பதற்காகப் போகிறாள்.

-ஃபின்லந்து
பெண்ணை அவள் இறந்த பிறகும் நம்பவேண்டாம்.
- கிரீஸ்
கடல், தீ, பெண்கள்: மூன்றும் தீமைகள்.
-( ,, )

பெண்ணின் ஆயுதங்கள் கண்ணீர்த் துளிகள்.

-ஜியார்ஜியா
அதிக வயதாகியும் கன்னியா யிருப்பவள் அஞ்சலில் சேராத கடிதம் போன்றவள்.
-ஹங்கேரி
கோபம் வந்த பெண் கரையில்லாத கடல்.
-லத்தீன்
கன்னியின் இதயம் இருண்ட கானகம்.
-ரஷ்யா
இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை.
-( ,, )
சிரிக்கிற பெண்ணையும் அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம்.
-( ,, )
எந்தப் பெண்களைப் பற்றி அதிகமாய்ப் பேச்சில்லையோ அவர்கள் மிகவும் நல்லவர்கள்.
-சைலீஷியா
அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
-ஸ்பெயின்
மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள்.
-( ,, )
கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல்.
-( ,, )
கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை.
-( ,, )
தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள்.
-( ,, )
கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம்.
-ஸ்பெயின்
கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள்.
-( ,, )
பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்.
-( ,, )
கெட்ட பெண்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்படி ஆண்டவனை வேண்டு; நல்ல பெண்களிடமிருந்து நீயே உன்னைக் காத்துக்கொள்.
-யூதர்
நாயைப் போன்றவள் பெண்; எலும்பைக் காட்டினால் நாய் ஏமாந்து பின்னால் வரும்.
-ஆப்பிரிகா
மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது.
-அரேபியா
தந்தைக்கு அடங்கி நடத்தல், கணவனுக்கு அடங்கி நடத்தல், மகனுக்கு அடங்கி நடத்தல்- இம்மூன்றுமே ஒரு பெண்ணுக்குரிய மூன்று பண்புகள்.
-சீனா
அன்பான சில வார்த்தைகளே பெண்ணுக்கு அணிகலன்.
-டென்மார்க்
பெண்கள் மூடர்களாயிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை: மனிதர்களுக்குப் பொருத்தமா யிருப்பதற்காகவே சர்வவல்லமையுள்ள கடவுள் அப்படிப் படைத்திருக்கிறார்.
-ஜியார்ஜ் எலியட்
பெண்களும் யானைகளும் மறப்பதேயில்லை.
-பார்க்கர்
பெண்கள் அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளைத் தவிர வேறில்லை.
- செஸ்டர்ஃபீல்டு
ஆடவர்களால்தான் பெண்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வெறுக்கின்றனர்.
-ஃபிரான்ஸ்
எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகியில்லை யென்று சொல்லியதில்லை.
-( ,, )
அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான்.
-ஜெர்மனி
கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
-ஜெர்மனி
நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.
- கதே

மௌனம் பெண்ணுக்குப் பெருந்தன்மை யளிக்கிறது.

-ஸாபாகிளிஸ்
மனிதனுக்கு உயர்ந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணாலேயே கிடைக்கின்றன.
- கிரீஸ்
ஒரு பெண்ணுக்குப் பின்னால் செல்வதைவிட, ஒரு மனிதன் சிங்கத்தின் பின்னால் செல்வது மேல்.
-யூதர்
பெண், விருப்போ வெறுப்போ அடையும் பொழுது, எதையும் செய்யத் துணிகிறாள்.
-லத்தீன்
செல்வமுள்ள ஸ்திரீயைப்போல் சகிக்க முடியாதது வேறில்லை.
-( ,, )
தீய யோசனை சொல்வதில் பெண்கள் ஆடவர்களை வென்றுவிடுவார்கள்.
-( ,, )
தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.
-ஸ்பெயின்
ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான்.
-( ,, )
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும்.
-( ,, )
நல்ல திராட்சை மதுவைப்போல், பெண்ணும் இனிமையானவிஷம்.
- துருக்கி
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.
-எஸ்டோனியா

(தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்.)

ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கினும் ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்.
- செர்பியா
கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு; நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம்.
-( ,, )