உள்ளடக்கத்துக்குச் செல்

குடும்ப விளக்கு/2

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாம் பகுதி


விருந்தோம்பல்


சிந்துக் கண்ணி
தலைவன் கடைக்குச் சென்றான்


அன்பு மணவாளன்
ஆன வுணவருந்திப்
பின்பு, மனைவிதந்த
பேச்சருந்தித்-தன்புதுச்

சட்டை யுடுத்துத்
தனிமூ விரற்கடையில்
பட்டை மடித்த
படியணிந்து-வட்டநிலைக்

கண்ணாடி பார்த்துக்
கலைந்த முடியதுக்கிக்
"கண்ணேசெல் கின்றேன்
கடைக்"கென்றான்-பெண்வாய்க்

கடைவிரித்துப் புன்னகைப்புக்
காட்டி "நன்" றென்றாள்;
குடைவிரித்துத் தோள்சாய்த்துக்
கொண்டே-நடை விரித்தான்.

தலைவி விருந்தினரை வரவேற்றாள்

தன்னருமை மக்கள்
தமிழ்க்கழகம் தாம்செல்லப்
பின்னரும் ஐயன்செல்லப்
பெண்ணரசி-முன்சுவரில்

மாட்டி யிருந்த
மணிப்பொறி "இரண்டென்று"
காட்டி யிருந்ததுவும்
கண்டவளாய்த்-தீட்டிச்

சுடுவெயிலில் காயவைத்த
சோளம் துழவி
உடல்நிமிர்ந்தாள் கண்கள்
உவந்தாள்-நடைவீட்டைத்

தாண்டி வரும்விருந்தைத்
தான்கண்டாள் கையேந்திப்
பூண்ட மகிழ்வால்
புகழேந்தி-வேண்டி

"வருக!அம் மாவருக!
ஐயா வருக!
வருக! பாப்பா தம்பி"
யென்று-பெருகன்பால்

பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள,முகம்
அன்றலர்ந்த செந்தா
மரையாக-நன்றே

வரவேற்றாள்; வந்தவரின்
பெட்டி படுக்கை
அருகில் அறைக்குள்
அமைத்தாள்-விரைவாக

அண்டாவின் மூடி
அகற்றிச்செம் பில்தண்ணீர்
மொண்டுபுறந் தூய்மை
முடிப்பிரென்று-விண்டபின்

சாய்ந்திருக்க நாற்காலி
தந்தும்வெண் தாழையினால்
வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்
மற்றதிலே-ஏய்ந்திருக்க

வெள்ளையுறை யிட்டிருக்கும்
மெத்தை தலையணைகள்
உள்ளறையில் ஓடி
யெடுத்துதவி-அள்ளியே

தேன்குழலும் உண்ணத்
தெவிட்டாத பண்ணியமும்
வான் குழலாள் கொண்டுவந்து
வைத்தேகி-ஆன்கறந்த

பாலும் பருகும்
படிவேண்டி, வெற்றிலைக்கு
நாலும் கலந்து
நறுக்கியகாய்-மேலுமிட்டுச்

செந்தாழை, பல்பூக்கள்
பச்சையடு சேர்கண்ணி
வந்தாள் குழல்சூட்டி
மற்றவர்க்கும்-தந்துபின்

நின்ற கண்ணாடி
நெடும்பேழை தான்திறந்(து)
இன்று மலர்ந்த
இலக்கியங்கள்-தொன்றுவந்த

நன்னூற்கள் செய்தித்தாள்
நல்கி,"இதோ வந்தேன்"
என்று சமைக்கும்
எதிர்அறைக்குள்-சென்றவளை

விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு


வந்தோர்கள் கண்டு
மலர்வாய் இதழ்நடுங்க,
"எந்தாயே எந்தாயே
யாமெல்லாம்-குந்தி

விலாப்புடைக்க வீட்டில்இந்த
வேளையுண வுண்டோம்
பலாப்பழம்போல் எம்வயிறு
பாரீர்-நிலாப் போலும்

இப்போதும் பண்ணியங்கள்
இட்டீர் அதையுமுண்டோம்
எப்போதுதான் அமைதி"
என்றுரைக்க-"அப்படியா!

சற்றேவிடை தருவீர்
தங்களருந் தோழர்தமைப்
பெற்றெடுத்த என்மாமன்
மாமியர்பால்-உற்ற செய்தி

சொல்லிவரு வேன்"என்று
தோகை பறந்தோடி
மெல்ல "மாமா மாமி
வில்லியனூர்ச்-செல்வர்திரு

மாவரச னாரும்
மலர்க்குழவி அம்மாவும்
நாவரசும் பெண்ணாள்
நகைமுத்தும்-யாவரும்

வந்துள்ளார்" என்றுரைத்தாள்
மாமனார் கேட்டவுடன்,


மாமன் மாமி மகிழ்ச்சி

"வந்தாரா? மிக்க
மகிழ்ச்சியம்மா!-வந்தவரைக்

காணவோ கண்டு
கலகலெனப் பேசவோ
வீணவா உற்றேன்
விளைவதென்ன! நாணல்

துரும்பென்றும் சொல்லவொண்ணா
என்றன் உடம்பை
இரும்பென்றா எண்ணுகின்றாய்
நீயும்-திரும்பிப் போய்க்

கேட்டுக்கொள் நான்அவரை
மன்னிப்புக் கேட்டதாய்
வீட்டுக்கு வந்த
விருந்தோம்பு;-நாட்டிலுறு

நற்றமிழர் சேர்த்தபுகழ்
ஞாலத்தில் என்னவெனில்,
உற்ற விருந்தை
உயிரென்று-பெற்றுவத்தல்;

மோந்தால் குழையும்அனிச்
சப்பூ முகமாற்றம்
வாய்ந்தால் குழையும்
வருவிருந்தென்(று)-ஆய்ந்ததிரு

வள்ளுவனார் சொன்னார்
அதனைநீ எப்போதும்
உள்ளத்து வைப்பாய்
ஒருபோதும்-தள்ளாதே!

ஆண்டு பலமுயன்றே
ஆக்குசுவை ஊண்எனினும்
ஈண்டு விருந்தினர்க்கும்
இட்டுவத்தல்-வேண்டுமன்றோ?

வந்தாரின் தேவை
வழக்கம் இவைஅறிக
நந்தா விளக்குன்றன்
நல்லறிவே!- செந்திருவே!

இட்டுப்பார் உண்டவர்கள்
இன்புற் றிருக்கையிலே
தொட்டுப்பார் உன்நெஞ்சைத்
தோன்றுமின்பம்-கட்டிக்

கரும்பென்பார் பெண்ணைக்
கவிஞரெலாம் தந்த
விருந்தோம்பும் மேன்மையினா
லன்றோ?-தெரிந்ததா?"

என்றுரைக்க, மாமி
இயம்பலுற்றாள் பின்னர்;

மாமி மருமகளுக்கு

"முன்வைத்த முத்துத்
தயிரிருக்கும்-பின்னறையில்

பண்ணியங்கள் மிக்கிருக்கும்
பழமை படாத
வெண்ணெய் விளங்காய்
அளவிருக்கும்-கண்ணே

மறக்கினும் அம்மாவென்(று)
ஓதி மடிப்பால்
கறக்கப் பசுக்காத்
திருக்கும்-சிறக்கவே

சேலத்தின் அங்காடிச்
சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில்
மிகக்கருத்தாய்-தோலில்

கலந்த சுளைபிசைந்து
காயவைத்து விற்கும்
இலந்தவடை வீட்டில்
இருக்கும்-மலிந்துநீர்

பாய்நாகர் கோவில்
பலாச்சுளையின் வற்றலினைப்
போய்நீபார் பானையிலே
பொன்போலே!-தேய்பிறைபோல்

கொத்தவரை வற்றல்முதல்
கொட்டிவைத்தேன்; கிள்ளியே
வைத்தவரை உண்டுபின்
வையாமைக்-குத்துன்பம்

உற்றிடச்செய்-ஊறுகாய்
ஒன்றல்ல கேட்பாய்நீ;
இற்றுத்தேன் சொட்டும்
எலுமிச்சை!-வற்றியவாய்

பேருரைத்தால் நீர்சுரக்கும்
பேர்பெற்ற நாரத்தை
மாரிபோல் நல்லெண்ணெய்
மாறாமல்-நேருறவே

வெந்தயம் மணக்கஅதன்
மேற்காயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின்
ஊறுகாய்-நைந்திருக்கும்

காடி மிளகாய்
கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல்
மூடிவைத்தேன்-தேடிப்பார்

இஞ்சி முறைப்பாகும்
எலுமிச்சை சர்பத்தும்
பிஞ்சுக் கடுக்காய்
பிசைதுவக்கும்-கொஞ்சமா?

கீரைதயிர் இரண்டும்
கேடுசெய்யும் இரவில்
மோரைப் பெருக்கிடு
முப்போதும்-நேரிழையே

சோற்றைஅள் ளுங்கால்
துவள்வாழைத் தண்டில்உறும்
சாற்றைப்போ லேவடியத்
தக்கவண்ணம்-ஊற்றுநெய்யை!

வாழை இலையின்அடி
உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக்
கறிவகைகள்-சூழவைத்துத்

தண்ணீர்வெந் நீரைத்
தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன்
மிகஇனிக்கும்-பண்ணியமும்

முக்கனியும் தேனில்
நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின்பால்
சோறிட்டுத்-தக்கபடி

கேட்டும் குறிப்பறிந்தும்
கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல்
ஒண்டொடியே!-கேட்டுப்போ;

எக்கறியில் நாட்டம்
இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும்
அள்ளிவை-விக்குவதை

நீமுன் நினைத்து
நினைப்பூட்டு நீர்அருந்த!
ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும்-தீமையம்மா

பாய்ச்சும் பசும்பயற்றுப்
பாகுக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு
நீருக்கும்-வாய்ப்பாகத்

தூய சருகிலுறு
தொன்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு தீர்ந்தே
அவர்எழுமுன்-தாயே


அவர்கைக்கு நீர்ஏந்தி
நெய்ப்பசை யகற்ற
உவர்கட்டி தன்னை
உதவு-துவைத்ததுகில்

ஈரம் துடைக்கஎன
ஈந்து,மலர்ச் சந்தனமும்
ஓரிடத்தே நல்கியே
ஒள்இலைகாய்-சேரவைத்து

மேல்விசிறி வீசுவிப்பாய்
மெல்லியலே!" என்றுரைத்தாள்.

தலைவி விருந்தினரிடம்

கால்வலியும் காணாக்
கனிமொழியாள்-வேல்விழியை

மிக்க மகிழ்ச்சி
தழுவ விடைபெற்றுத்
தக்க விருந்தினர்பால்
தான்சென்றே-"ஒக்கும்என்

அன்புள்ள அம்மாவே
ஐயாவே, அம்முதியோர்
என்பு மெலிந்தார்
எழுந்துவரும்-வன்மையிலார்.

திங்களை அல்லி
அரும்புவந்து தேடாதோ?
தங்கப் புதையல்எனில்
தங்குவனோ-இங்கேழை?

பெற்ற பொழுதன்பால்
பெற்றாள்தன் பிள்ளையினைப்
பற்றி அணைத்துமுகம்
பார்க்கஅவா-முற்றாளா?

தாய்வந்தாள் தந்தைவந்தான்
என்றுரைக்கத் தான்கேட்டால்
சேய்வந்து காணும்அவாத்
தீர்வானோ-வாயூறிப்

போனாரே தங்களது
பொன்வருகை கேட்டவுடன்
ஊன்உறுதி யில்லை
உமைக்கானக்-கூனி

வரஇயலா மைக்காக
மன்னிப்புத் தாங்கள்
தரஇயலு மாஎன்று
சாற்றி-வருந்தினார்"

என்றுரைத்தால் இல்லத்
தலைவி, இதுகேட்டு,

தலைவிக்கு விருந்தினர்

"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்
காணுகின்றோம்"-என்றுரைத்தார்.

அன்பு விருந்தினர்கள்
அங்கு வருவதனைத்
தன்மாமன் மாமியார்பால்
சாற்றியே-பின்னர்

அறையை மிகத்தூய்மை
ஆக்கி, அமர
நிறையநாற் காலி
நெடும்பாய்-உறஅமைத்துச்

"செல்லுக!நீர்" என்றுரைத்தாள்
செல்வி; விருந்தினர்கள்
செல்லலுற்றார் சென்றே
வணக்கமென்று-சொல்லலுற்றார்.

விருந்தினரைக் கண்ட முதியோர்

வந்த விருந்தினர்க்கு
வாழ்த்துரைத்துக் கையூன்றி
நொந்த படியெழுந்தார்
நோய்க்கிழவர்-அந்தோ!

விருந்தினர் முதியோர்க்கு

"படுத்திருங்கள் ஐயா!
படுத்திருங்கள் அம்மா!
அடுத்திருந்து பேசல்
அமையும்-கடற்கிணையாம்

ஆண்டு பலவும்
அறமே புணையாகத்
தாண்டி உழைத்தலுத்துத்
தள்ளாமை-ஈண்டடைந்தீர்!

சென்றநாள் என்னும்
செழுங்கடலில் மாப்புதுமை
ஒன்றன்பின் ஒன்றாய்
உருக்காட்டி-பின்மறையக்

கண்டிருந்த தங்கள்
அடிநிழலில் காத்திருந்து
பண்டிருந்த செய்தி
பருகோமோ-மொண்டு மொண்டு!

வில்லியனூர் விட்டு
விடியப் புறப்பட்டோம்
மெல்லநடக் கும்வெள்ளை
மாட்டினால்-தொல்லை!

கறுப்புக்குத் தக்கதாய்க்
காளையன்று வாங்கப்
பொறுப்புள்ள ஆளில்லை!
பூட்டை-அறுத்தோடி

மூலைக் குளத்தண்டை
முள்வேலந் தோப்பினிலே
காலைப் பரப்பியது
கண்டுபின்-கோல்ஒடித்துக்

காட்டிப் பிடித்துவந்து
வண்டியிலே கட்டிநான்
ஓட்டிவந்தேன்; இங்கே
உயர்வான நாட்டுப்

புடவைபல தேவை
அதனால் புதுவைக்
கடைகளிலே வாங்கக்
கருதி-உடன்வந்தேன்"

என்றுரைத்துப் பின்னும்
இயம்புகையில், அவ்விடத்தில்

தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்

நின்றிருந்த வீட்டின்
நெடுந்தலைவி-நன்றே

விருந்துவந்த பெண்பால்
விரும்பிய வண்ணம்
இருந்தொருபால் பேசி
இருந்தாள்-பொருந்தவே.

நாவரசும் நகைமுத்தும்

நாவரசும் முத்தாள்
நகைமுத்தும் வீதியிலே
பூவரச நீழலிலே
போய்அமர்ந்தார்-மாவரசர்

தம்சேதி கூறிப்பின்
தங்களுடல் முன்னைவிடக்
கொஞ்சம் இளைப்பென்று
கூறிடவே-"மிஞ்சாமல்

முதியவர்தம் பழைய நினைப்பு

இன்னும் இருக்குமோ
இளமைப் பருவந்தான்?"
என்று கிழவர்
இயம்பலுற்றார்-இன்றைக்கு

முன்புதைத்த சட்டைக்கு
மூன்றிலொன்று தான்உடம்பு
முன்புதைத்த மூங்கில்தான்
என்என்பு-மின்னுதளிர்

மாவிலைபோல் மேனி
வளவளத்துப் போயிற்றே
பாவில் ஐந்துபாடி
மகிழுதற்கும்-நாவிலையே

மாடிப் படியேறும்
வாய்ப்பில்லை பேரர்களை
ஓடி அணைக்க
உறுதியில்லை-தேடிவரும்

தங்களைப் போன்றோர்க்குத்
தக்கவர வேற்பளித்தே
அங்கிங் கழைத்தேக
ஆர்வமுண்டு-நுங்கின்

இளகல் உடலால்
இயலுமா? வில்லின்
வளைவுதனை நாணால்
வகுப்பர்-வளைவுடலை

நாளன்றோ ஆக்கிற்று
நாம்என்செய் வோம்அந்த
நாளில் இளமை
நலத்தைஇந்-நாளில்

நினைத்தால் நமது
நெடுந்தோளோ இவ்வாறு
அனைத்தும் புரிந்ததென
ஐயந்-தனைக்கொள்வேன்.

காட்டாறு காளைப்
பருவமன்றோ, கேளுங்கள்
நீட்டாய் நிகழ்ந்த
சிலவற்றை-நாட்டிலுறு

மற்றும் முதியவர்


காவிரியில் என்றன்
கணையாழி தேடுகையில்
பாவிரியப் பண்பாடிப்
பையன்ஓர்-ஆவினை

ஆற்றில் குளிப்பாட்டும்
போதில் அதன்கால்கள்
சேற்றிலே மாட்டித்
திகைத்தலைநான்-மாற்றுதற்குப்

போய்முழுகி னேன்என்
புறமுதுகில் காலூன்றி
மாய்வின்றி மாடு
கரையேறச்-சேய்நானும்

மாட்டின்வால் பற்றியதால்
சேற்றினிலே மாயவில்லை;

மேலும் முதியவர்

கேட்டீரா இன்னும்
கிளத்துகின்றேன்-மாட்டுவண்டி

முன்னிருந்த பிள்ளை
முடிய நெருங்கையில்நான்
பின்னிருந்த கையால்
பிடித்திழுத்தேன்-என்ன

வலிவாய் எருதிழுத்தும்
ஓடவில்லை வண்டி!
நலிவொன்றும் பிள்ளைக்கு
நண்ண-இலையன்றோ!

இன்னும் முதியவர்

நீட்டில்லை ஒன்று
நிகழ்த்துகின்றேன் நற்பழங்கள்
ஊட்டி வளர்த்தாலும்
உரிமையெண்ணிக்-கூட்டில்

இருக்கப் பிடிக்காத
கிள்ளைபோல் இல்லத்
தெருக்கதவை மெல்லத்
திறந்தே-இருட்டில்

அயலூரில் கூத்துப்பார்த்(து)
ஆலடியில் தூங்கி
வெயில்வருமுன் வீட்டில்
புகுந்து-துயில்வதுபோல்

காட்டிக் கலைக்கழகம்
சென்றேன் கதையில்வந்த
பாட்டை முணுமுணுத்துப்
பாடுகையில்-நீட்டுப்

பிரம்பால் கணக்காயர்
பின்ஒன்று வைத்தார்
'அரம்பைவந்தாள்' என்றந்தப்
பாட்டில்-வரும்வரியை

வாய்தவறிச் சொன்னேன்
கணக்காயர் வாய்ப்பறிந்து
பாய்தலுற்றார் தந்தைக்கும்
பாக்குவைத்தார்-போய்வீட்டில்

நான்பட்ட தாலையிலே
நற்பஞ்சு தான்படுமா?
ஏன்பட்டான் என்றுதான்
யார்கேட்டார்!-தேன்போலும்

முதியவரின் மற்றொரு கதை

பாப்புனைவார் ஓர்நாளில்
பாவைபல தந்து சென்னை
போய்ப்புலவர்க் கீயஎனைப்
போக்கினார்-மாப்பாவை

இட்டபெட்டி யைச்சென்னைச்
செட்டிகடை ஒன்றில்நான்
இட்டங்கு குந்தி
இருக்கையிலே-'விட்டேனோ

பாரடா!' என்றொருவன்
செட்டிமேல் பாய்கையிலே,
'ஆரடா நீ! யென்(று)
அதட்டிநான்-நீரோடைக்(கு)

உள்ளே விழவுதைத்தேன்
ஓர்கை முறிந்தவனும்
வெள்ளம்போல் தீயரையென்
மேல்விட்டான்-துள்ளிநான்

ஓட்டம் பிடிக்கையிலே
ஓர்செல்வாக் குள்ளவரும்
நீட்டும்என் கம்பி
நிறுத்திநிலை-கேட்கையிலே,

பொல்லாதார் கூட்டம்
புடைசூழக் கண்டஅவர்,
எல்லாரும் ஊர்ச்சா
வடிவருவீர்-நில்லாதீர்;

என்றுரைத்தார்! தீயவர்கள்
எல்லோரும் மறைந்தார்;
அன்றே வினைமுடித்தேன்
சென்னையி-னின்றகன்றேன்.

மற்றும் ஒரு நிகழ்ச்சி

ஆரும் அறியாமல்
அன்பான நண்பரைநான்
சாரும் கடல்தாண்டிச்
சைகோனில்-சேரும்வணம்

செய்யஒரு கட்டுமரம்
சென்றேறி னேன்கப்பல்
கையெட்டும் எல்லையைநான்
காணுகையில்-எய்தும்

உளவறிந்து தீயர்சிலர்
நீராவி ஓடம்
மளமளென ஓட்டி
வருதல்-தெளிவுபடக்

காணாத் தொலைவினிலே
கட்டுமரத் தைவிடென்றேன்.
ஊணோ உறக்கமோ
ஒன்றுமின்றிக்-கோணாமல்

நட்ட நடுக்கடலில்
ஒன்றரைநாள் நான்கழித்தே
எட்டு மணிஇரவில்
என் வீட்டைக்-கிட்டினேன்

மற்றும் ஒரு நற்செய்தி


நாடுதொழும் ஊழியரை
நான்காக்க ஓர்வீட்டு
மாடியில்நின் றேகுதித்து
மான்போலும்-ஓடினேன்

ஐயாயிர மக்கட்(கு)
ஆம்உரிமை காக்கநான்
பொய்யர் தமையெதிர்த்த
போதென்னைப்-பொய்வழக்கால்

சேர்த்த சிறைஎனக்கோர்
தென்றல்வரும் சோலையன்றோ!
சீர்த்தித் தமிழர்க்குத்
தீமைவரப்-பார்த்திரேன்!

மாயும்உயிர் என்றால்,
மருளாத காளைநான்!
ஆயினும் என்செய்கை
அனைத்தையுமே-தீயவழிச்

செல்லாது நாளும்
திருத்தமுறக் காத்த,பா
வல்லாரை நானும்
மறப்பதே-இல்லை!

இளமைப் பருவமோ
எச்செயலும் செய்யும்
இளமை அறிவோ(டு)
இயைந்தால்-விளைவதெலாம்

நாட்டுக்கு நன்றேயாம்
நாட்கள் விரைந்தோடும்
கேட்டுக்கா ளாகாமல்
கீழ்மையின்றி-நாட்டமொடும்

அன்பு மலிய
அனைத்துயிர்க்கும் தொண்டுசெய்தால்
இன்பம் மலியும்!
இதுவன்றோ-என்றும்

மறவாமல் மக்கள்
செயத்தக்க தென்றார்!
"துறவாமல் இன்பமுண்டோ
சொல்க-அறப்பெரியீர்"

என்றுரைத்தார் மாவரசர்,
இன்னும்உரைப் பார்கிழவர்:
"நன்றுரைத்தீர் அத்துறவை
நான்வேண்டேன்-என்றுமே,

இல்லறமே நல்லறம்

தானே தனித்தின்பம்
கொள்ளத் தகுமோ?நல்
தேனிதழாள் இன்றிஒரு
சேய்க்கின்பம்-ஆனதுண்டோ?

ஞாலத் தொடர்பினால்
நல்லின்பம் காணலன்றி
ஞாலத்துறவில் இன்பம்
நண்ணுவதும்-ஏலுமோ?

"உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கண்இனிக்கப்-பெற்றெடுத்த

தாய்தந்தை வேண்டேன்
தமிழ்வேண்டேன் தாய்நாட்டின்
ஓய்வு தவிர்க்கும்
உரன் வேண்டேன்-தேய்வுற்றே

கண்மூக்கு வாய்உடம்பு
காதென்னும் ஐந்து
ஒண்வாயில் சாத்தி
உளம்மாய்ந்து-வண்ணவுடல்

பேறிழத்தல் பேரின்பம்
அ·தோன்றே வேண்டு"மென்று
கூறிடுவார் கூறுவதே
அல்லாமல்-வேறுபயன்

கண்டாரோ அன்னவர்தாம்
'காட்டுவிரோ' என்றுரைத்தால்,
'கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்'

என்று மொழிந்தே
இலைச்சோற்றில் பூசனிக்காய்
நன்று மறைக்க
நனிமுயல்வர்-இன்றுபல

ஆச்சிரமம்

ஆச்சிரமப் பேரால்
அறவிடுதி கண்டுநல்ல
பேச்சியம்பிச் சொத்தைப்
பெருக்கியே-போய்ச்செல்வர்

கூட்டம் பெருக்கிக்
குடித்தனத்தை மேல்வளர்த்தார்
ஈட்டும் பொருளுக்(கு)
இருபதுபேர்-ஏட்டாளர்!

தோட்டங்கள் கொத்துதற்குத்
தொண்ணூறு பேர்,கறவை
மாட்டுக்கு நல்ல
மருத்துவநூல்-காட்டிவோர்

பத்துப்பேர், காதற்
பழங்கள் கடற்கரையில்
ஒத்துப்போய் நெஞ்சம்
உவந்தளித்த-தொத்துகிளிப்


பிள்ளைக்குப் பேர்வைக்க
நாலைந்து பேர்,அதனை
உள்ளுளவாய் விற்றுவர
ஒன்பதுபேர்-வெள்ளைநிற

மின்னை வணங்க
இருபதுபேர் மின்னையுயிர்க்(கு)
அன்னை எனச்சொல்ல
ஐம்பதுபேர்-தன்னைத்

திருமால் பிறப்பென்று
தீட்ட, நூல் விற்க
வருவாய் விழுக்காடு
வாங்க-ஒருநரியார்,

வீட்டிலுறும் அந்நரிக்கும்
பொய்புரட்டு வேலைக்கோ
ஆட்டுக்கண் ணன்சேய்
அவனொருவன்-நாட்டில்

துறவோன் அறவீ(டு)
இ·தொன்றுமற் றொன்று;

மலையடியில் துறவு

நிறத்தை நிலைநிறுத்த
வந்த-வெறியன்

ஒருவன் மலையடியில்
ஊரார் விழிக்குத்
தெரியும் இடந்தேடிச்
சென்று-பெரிதாக

வீடமைத்த தாலேதன்
வீட்டைத் துறந்தவனாய்க்
கூடிந்த மெய்யென்றும்
கூட்டில்புள்-ஓடுமுயிர்

பொன்றாத உண்மையிலை
போயழியும்! போயழியும்!!
என்றும், இளமை
புனற்குமிழி-பொன்னோ

புனல்திரை, யாக்கை
புனலெழுத்தே என்றும்
அனைத்துலகும் பொய்யென்றும்
ஆன்மா-எனும் ஒன்றே

மெய், அதனால் மெய்யுணர்தல்
வேண்டுமென்றும், அவ்வுணர்வை
ஐயம் திரிபின்றி
ஐயர் உண்ணச்-செய்கின்ற

என்றன் அறவிடுதி
ஏற்படுத்தி வைக்குமென்றும்,
என்றும் உதவா(து)
இருந்தபழம்-பொன்பொருளை

இங்கேகுவிப் பீர்என்றும்
என்தம்பி வாரிப்போய்
அங்கே குவிக்கட்டும்
அச்செயலால்-தங்கிடும்நும்

பற்றுக்கள் போம்என்றும்,
பற்றேபற் றுக்கோடாய்
உற்று வரும்பிறவி
ஓடுமென்றும்,- புற்கைக்குப்

போரடித்து மக்கள்
புழுவாய்த் துடிக்கையிலும்
ஊரடித்துத் தின்னும்
உளவுதனை-யாரரிவார்?

நாட்டுக்குத் தொண்டு

இந்த நெறிகள்எலாம்
யார்க்கு நலம்விளைக்கும்?
கந்தைக்கும், கண்ணுறங்கக்
கூரைக்கும்-அந்தோ

தொழில்வேண்டு வார்க்குத்
தொழிலில்லை; கல்வி
எழில்வேண்டு வார்கள்
எவர்க்கும்-கழகமுண்டோ?

கல்வித் துறைக்குத்தான்
காசிலையாம்! செந்தமிழ்நற்
செல்விக் குரிமைச்
செயலுண்டா?-'எல்லாரும்

ஒன்'றென்னும் எண்ணம்
உயரவில்லை! ஒற்றுமைதான்
நன்றென்னும் எண்ணம்
நடப்பதுவோ?-இன்று

பெருநிலத்தில் நற்றமிழர்
வாழ்வு பிறரால்
அருவருக்க லானதெனக்
கண்டும்-திருநாட்டில்

சாய்பாபா வாற்பொருளைத்
தட்டிப் பறிப்பதுவும்
மேய்பாபா ஏய்க்கின்ற
மெய்வழியின்-வாய்வலியும்

பன்னும் இவைபோல்
பலப்பலவும் அன்பரே!
உன்னுங்கால் அந்தோ!
உருகாதோ-கல்நெஞ்சம்?

எந்த நெறிபற்றி
யாம்ஒழுகல் வேண்டுமெனில்,
அந்த முறையை
அறைகின்றேன்-அந்தமுறை

எல்லார்க்கும் ஒத்துவரும்
ஏமாற்றம் ஒன்றுமில்லை
செல்வம் அதனால்
செழித்துவரும்-கல்வி

அனைவர்க்கும் உண்டாகும்
அல்லல் ஒழியும்
தனிநலம்போம்! இன்பமே
சாரும்-இனிதாக

இவ்வுலக நன்மைக்கே
யான்வாழ்கின் றேன்என்றே
ஒவ்வொருவ ரும்கருதி
உண்மையாய்-எவ்வெவர்க்கும்

கல்வியைக் கட்டாயத்
தால்நல்கி யாவர்க்கும்
நல்லுடலை ஓம்ப
நனியுழைத்தால்-அல்லலுண்டோ?

ஓம்புதல் வேண்டும்
ஒழுக்கம்; அழுக்காறு
நாம்பெறுதல் நாட்டை
இழித்தலே-ஆம்! பொய்யா?

மக்களிடைத் தாழ்வுயர்வு
மாட்டாமை வேண்டும்நீள்
பொய்க்கதையில் பொல்லா
மடமையிலே-புக்குப்

பிறர்க்கடிமை யுற்றும்
பெருவயிறு காத்தல்
அறக்கொடிதென் றாய்ந்தமைதல்
வேண்டும்-சிறக்கப்

படைப்பயிற்சி, நல்ல
பயனடையும் ஆற்றல்,
தடைப்பாடில் லாதெய்தில்
சாலும்!-நடைவலியாய்

வையம் அறிதல்
மறிகடலை வானத்தை
ஐயம் அகல
அளந்திடுதல்-உய்யும்வணம்

பல்கலையும் பெற்றே
இளமைப் பருவத்தின்
மல்குசீர் வாய்ப்புறுதல்
வேண்டும்பின்-நில்லாத

காதல் வாழ்க்கை


உள்ளம் கவர்ந்தாளின்
உள்ளத்தைத் தான்கவர்ந்து
வெள்ளத்தில் வெள்ளம்
கலந்ததென-விள்ளும்நிலை

கண்டு மணம்புரிதல்
வேண்டும் கடிமணமும்
பண்டை மணமென்றும்
பார்ப்பானைக்-கொண்ட

அடிமை மணமென்றும்
சொல்லும் அனைத்தும்
கடிந்து பதிவுமணம்
காணல்-கடனாகும்

அன்பால் அவளும்
அவனும் ஒருமித்தால்
து ன்பமவ ளுக்கென்னில்
துன்புறுவான்-துன்பம்

அவனுக்கெனில் அவளும்
அவ்வாறே; இந்தச்
சுவைமிக்க வாழ்வைத்தான்
தூயோர்-நவையற்ற

காதல்வாழ் வென்று
கழறினார்; அக்காதல்
சாதல் வரைக்கும்
தழைத்தோங்கும்-காதல்

உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு பட்டால்
மடவார் பிறனை
மணக்க-விடவேண்டும்

ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம்
கூடும்மண மக்கள்
கொளத்தக்க-நீடுநலம்

என்னவெனில், இல்லறத்தைச்
செய்தின்பம் எய்துவதாம்!

மக்கட் பேறு

நன்மக்கட் பேறுபற்றி
நானுரைப்ப-தொன்றுண்டாம்

ஈண்டுக் குழந்தைகள்தாம்
எண்மிகுத்துப் போகாமல்
வேண்டும் அளவே
விளைத்து,மேல்-வேண்டாக்கால்

சேர்க்கை ஒழித்துக்
கருத்தடை யேனும்செய்க
போக்கருநோய் கொண்டால்
இருவரும்-யாக்கை

ஒருமித்தால் ஐயகோ!
உண்டாகும் பிள்ளை
இருநிலத்துக் கென்னநலம்
செய்யும்-அருமைத்

பிறர் நலம்


தலைவன் தலைவியர்கள்
தங்கள் குடும்ப
அலைநீங் கியபின்
அயலார்-நிலைதன்னை

நாடலாம் என்னாமல்
நானிலத்தின் நன்மைக்குப்
பாடு படவேண்டும்
எப்போதும்-நாடோ

ஒருதீமை கண்டால்
ஒதுங்கி நிற்றல்தீமை;
எருதுமேல்ஈ மொய்த்த
போது-பெருவால்

சுழற்றுவதால் துன்பம்
தொலையுமா?-ஈக்கள்
புழுக்குமிடம் தூய்தாகிப்
போகுமா?-இழுக்கொன்று

காணில் நமக்கென்ன
என்னாமல் கண்டஅதன்
ஆணிவேர் கல்லி
அழகுலகைப்-பேணுவதில்

நேருற்ற துன்பமெலாம்
இன்பம்! கவலையின்றிச்
சேருவான் இன்பமெலாம்
துன்பமென்க!-நேரில்

வறியார்க்கொன் றீந்தால்தன்
நெஞ்சில்வரு மின்பம்
அறியா திரான்எவனும்
அன்றோ?-வெறிகொள்

வலியாரால் வாடும்
எளியாரின் சார்பில்
புலியாகிப் போர்தொடுக்கும்
போதில்-வலியோர்கள்

எய்யும்கோற் புண்ணும்
இனிதாகும் அவ்வெளியார்
உய்ய உழைத்ததனைத்
தானினைத்தால்-வையத்தே

தன்னலத்தை நீத்தும்
பிறர்நலமே தான்நினைத்தும்
என்றும் உழைப்பார்க்(கு)
இடரிழைப்போன்!-அன்றோ

நடப்பார் அடியில்
நசுங்கும் புழுப்போல்
துடிப்பானே தொல்லுலகி
னோரால்-இடமகன்ற

வையத்து நன்மைக்கே
வாழ்வென் றுணர்ந்தவனே
செய்யும் தொழிலில்
திறம்காண்பான்-ஐயம்

அகலும்; அறிவில்
உயர்ந்திடுவான் அன்னோன்
புகலும்அனைத் துள்ளும்
புதுமை-திகழுமன்றோ?

சாதலின் இன்னாத
தில்லையென்று சாற்றிடினும்
ஏதும்அவன் சாகுங்கால்
இன்பமே!-சாதல்

வருங்கால் சிரிப்பான்
பொதுவுக்கே வாழ்வான்
பொதுமக்கள் வாழ்த்தும்
பெறுவான்-ஒருநிலவு

வானின் உடுக்களிடை
வாழ்தல்போல்-அன்னோரின்
ஊனுடம்பு தீர்ந்தாலும்
உற்றபுகழ்-மேனி,

விழிதோறும் மேலாரின்
நெஞ்சுதொறும் என்றும்
அழியாதன் றோமேலும்
ஐயா-மொழிவேன்

'அறத்தால் வருவதே
இன்பம்'என் றான்றோர்
குறித்தார்; குறிப்பறிக;
மேலும்-திறத்தால்

'தவம்செய்வார் தம்கருமம்
செய்வார்' எனவே
அவரே உரைத்தார்
அறிக!-எவரும்

தமைக்காக்க! தம்குடும்பம்
காக்க! உலகைத்
தமர்என்று தாமுழைக்க
வேண்டும்-அமைவான

இன்பம் அதுதான்
'இறப்புக்கும் அப்பாலே
ஒன்றுமில்லை' என்ப
துணர்ந்திடுக-அன்றுமுதல்

இன்றுவரைக்கும் பெரியோர்
செத்தவர்கள் எய்துவதாய்ச்
சொன்னவற்றுள் ஒன்றையன்று
தூற்றுவன-அன்றியும்

சாக்காடு நெடுந்தூக்கம்

சாக்காடு பேரின்பம்
என்றுநான் சாற்றிடுவேன்
தூக்கம் கெடலைத்
துயர்என்பீர்-வாய்க்கும்நல்

தூக்கத்தை இன்பமென்றீர்
அன்றோ? நெடுந்தூக்கம்
சாக்காடு இன்பம்" என்றார்.

அறுசீர் விருத்தம்

தலைவி கூடத்துப் பேச்சு


மாவர சோடிவ் வாறு
வயதானார் பேசும் போது
கூவர சான இல்லக்
குயிலினாள் கூடந் தன்னில்
பாவர சான தன்வாய்ப்
பைந்தமிழ் படைத்தி ருந்தாள்
ஆ!அரி தென்று காதால்
மலர்க்குழல் அதைஉண் கின்றாள்.

"பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!

கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்; அந் நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி; அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்?

வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத ளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவ டைந்து
போனதால் பெண்க ளுக்கு
விடுதலை போன தன்றோ!

இந்நாளில் பெண்கட் கெல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக! கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
மின்னாள் என்றே உரைப்பேன்.

சமைப்பதும் வீட்டு வேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கேஆம் என்று கூறல்
சரியில்லை; ஆட வர்கள்
நமக்கும்அப் பணிகள் ஏற்கும்
என்றெண்ணும் நன்னாள் காண்போம்!
சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்!

உணவினை ஆக்கல் மக்கட்(கு)
உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று; வில்வாட்
படையினால் காண்ப தன்று;
தணலினை அடுப்பில் இட்டுத்
தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
அன்பிட்ட உணவால் வாழ்வோம்.

சமைப்பது பெண்க ளுக்குத்
தவிர்க்கொணாக் கடமை என்றும்,
சமைத்திடும் தொழிலோ, நல்ல
தாய்மார்க்கே தக்க தென்றும்,
தமிழ்த்திரு நாடு தன்னில்
இருக்குமோர் சட்டந் தன்னை
இமைப்போதில் நீக்க வேண்டில்
பெண்கல்வி வேண்டும் யாண்டும்.

சமையலில் புதுமை

சமையலில் புதுமை வேண்டும்
சமையல்நூல் வளர்ச்சி வேண்டும்
சமையற்குக் "கல்வி இல்லம்"
அமைந்திட வேண்டும் யாண்டும்;
அமைவிலாக் குடும்பத் துள்ளும்
அகத்தினில் மகிழ்ச்சி வேண்டில்
சமையலில் திறமை வேண்டும்
சாக்காடும் தலைகாட் டாதே!

கெட்டுடல் வருந்து வோர்கள்
சமைக்கும்நற் கேள்வி பெற்றால்
கட்டுடல் பெற்று வாழ்வார்!
கல்விக்கும், ஒழுக்கத் திற்கும்
பட்டுள பாட்டி னின்று
விடுதலை படுவ தற்கும்
கட்டாயம் சமைக்கும் ஆற்றல்
காணுதல் வேண்டும் நாமே.

வறுமையும் தெரிவ துண்டோ
சமையலில் வல்லார் இல்லில்?
நறுநெய்யும் பாலும் தேனும்
நனியுள்ள இல்லத் துள்ளும்
கறிசமைத் திடக்கல் லாதார்
வறியராய்க் கலங்கு வார்கள்!
குறுகிய செலவில் இன்பம்
குவிப்பார்கள் சமையல் வல்லார்!

வீறாப்பு வாழ்வு தன்னை
மேற்கொண்டார் என்றால் அன்னார்
சோறாக்கி கறிகள் ஆக்கிச்
சுவைஆக்கக் கற்றதால்ஆம்!
சேறாக்கிக் குடித்த னத்தைத்
தீர்த்தார்கள் என்றால் தாறு
மாறாக்கிக் கறியை எல்லாம்
மண்ணாக்கும் மடமை யால்ஆம்.

இலையினில் திறத்தால் இட்ட
சுவையுள்ள கறியும் சோறும்
கலையினில் உயர்த்தும் நாட்டைக்
கட்டுக்கள் போக்கும்! வைய
நிலையினை உயர்த்தும் இந்த
நினைவுதான் உண்டா நம்பால்?
தொலையாதா அயர்வு? நல்ல
சுவையுணர் வெந்நாள் தோன்றும்?"

விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்

என்றனள் தலைவி! அந்த
எழில்மலர்க் குழலி சொல்வாள்;
"நன்றாகச் சொன்னீர் அம்மா
நம்வீட்டின் செய்தி கேட்பீர்;
'இன்றென்ன கறிதான் செய்ய?'
என்றுநான் அவரைக் கேட்பேன்;
நின்றவர் எனையே நோக்கி
'நேற்றென்ன கறிகள்?' என்பார்!

'பருப்பும் வாழைக்காய் தானும்
குழம்பிட்டேன் உருளைப் பற்றைப்
பொரித்திட்டேன்' என்றால், அன்னார்
புகலுவார் வெறுப்பி னோடு
'பருப்பும்நீள் முருங்கைக் காயும்
குழம்பிட்டுக் கருணைப் பற்றைப்
பொரிப்பாய்நீ' என்று கூறிப்
போய்விடு வார்வே லைக்கே.

கீரைத் தண்டுக் குழம்பு
மேற்படி கீரை நையல்
மோருந்தான் உண்டு நாளும்
மிளகுநீர் முடுக உண்டு;
யாரைத்தான் கேட்க வேண்டும்
இவைகளே ஏறி ஆடும்
ஊருள்ள இராட்டி னம்போல்
சுற்றிடும் ஒவ்வோர் நாளும்!

முறையிலோர் புதுமை இல்லை;
முற்றிலும் பழைய பாதை!
குறைவான உணவே உண்டு
குறைவான வாழ்நாள் உற்று
நிறைவான வாழ்க்கை தன்னை
நடத்துவ தாய்நினைத்து
மறைவதே நம்ம னோரின்
வழக்கமா யிற்றம் மாவே!

சமையல்முன் னேற்ற மின்றித்
தாழ்தற்கு நமது நாட்டில்
சமயமும் சாதி என்ற
சழக்கும்கா ரணம்என் பேன்நான்;
அமைவுறும் செட்டி வீட்டில்
அயலவன் உண்பதில்லை;
தமைஉயர் வென்பான் நாய்க்கன்;
முதலிநீ தாழ்ந்தோன் என்பான்.

ஒருவீட்டின் உணவை மற்றும்
ஒருவீட்டார் அறியார் அன்றோ?
பெருநாட்டில் சமையற் பாங்கில்
முன்னேற்றம் பெறுதல் யாங்ஙன்?
தெரிந்தஓர் மிளகு நீரில்
செய்முறை பன்னூ றாகும்!
இருவீட்டில் ஒரே துவட்டல்
எரிவொன்று புகைச்சல் ஒன்று!

ஆக்கிடும் கறிகட் குள்ள
பெயர்களும், அவர வர்கள்
போக்கைப்போல் மாறு கொள்ளும்
புளிக்கறி குழம்பு சாம்பார்,
தேக்காணம் என்பார் ஒன்றே!
அப்பளம் அதனைச் சில்லோர்
பாழ்க்கப் பப்படம் என்பார்கள்
பார்ப்பான் அப்பளாம் என்கின்றான்.

கல்வி

அம்மையீர் சொன்ன வண்ணம்
அனைத்துக்கும் கல்வி வேண்டும்!
செம்மையிற் பொருள்ஒவ் வொன்றின்
பண்புகள் தெரிதல் வேண்டும்!
இம்மக்கள் தமக்குள் மேலோர்
இழிந்தவர் என்னும் தீமை
எம்மட்டில் போமோ, நன்மை
அம்மட்டில் இங்குண் டாகும்".

என்றனள் விருந்து வந்த
மலர்க்குழல் என்பாள்! அங்கு
நன்றுபூ வரச நீழல்
நடுவினில் நகைமுத் தோடு
நின்றுநா வரசன் என்னும்
இளையவன் நிகழ்த்து கின்றான்;
சென்றுநாம் அதையும் கேட்போம்
தமிழ்த்தேனும் தெவிட்டல் உண்டோ?

நாவரசன் நகைமுத்து உரையாடல்

அகவல்


ஆளிழுக் கின்ற அழகிய வண்டி
இந்த வூரில் இருப்பதும், நமது
வில்லிய னூரில் இல்லா திருப்பதும்
ஏன்அக் காஎன இளையோன் கேட்டான்.

நகைமுத்து

நகைமுத் தென்பவள் நகைத்துக் கூறுவாள்:
"கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும்
தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும்
ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்;
இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்!
இருவரும் ஒருநிலை எய்தும் நாளில்
ஆளைஆள் இழுத்தல் அகலும்; அந்நாளில்
தன்னி லோடிகள் தகுவிலங் கிழுப்பவை
என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்."

இழுப்பு வண்டி

"அழகிய வண்டி அழகிய வண்டி
நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை;
வேண்டாப் போது விடுவர் பின்புறம்!
காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்!
இதுநம் மூரில் எப்போ துவரும்?
அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோம்?"
என்று பிள்ளை இயம்பி நின்றான்.

"நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்?
பொதுமக் கள்தம் போக்கு வரவுகள்
இங்கு மிகுதி; ஏதுநம் மூரில்?
ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம்
பெருகிடில் நம்மூர்த் தெருவிலும் நுழையும்!"
என்றாள் அன்றலர் கின்றபூ முகத்தாள்.

பகட்டு

"பகட்டா ளர்கள் பலபேர் எப்போ(து)
ஏற்படு வார்கள்" என்றான் இளையோன்.

"செல்வம் இல்லார் செல்வர் போலவும்
அழகே இல்லார் அழகியர் போலவும்
காட்டிக் கொள்ளக் கருதும் நிலைமை
ஏற்படும் நாளில் ஏற்படு வார்கள்."
என்று கூறினாள் இளநகை முகத்தினாள்.
"அந்நிலை எப்போ ததையுரை" என்றான்.
"வஞ்சமும் பொய்யும் வளர்ந்தால்" என்றாள்.
அழகிய வஞ்சமும் வேண்டாம்
பழையஊர் நன்றெனப் பகர்ந்தான் பிள்ளையே.

தலைவி பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளை எதிர்பார்த்தாள்

ப·றொடை வெண்பா


செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள்
பொங்கு மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக

வீட்டுக் குறட்டில்நின்ற நற்றலைவி வேல்விழிகள்
பாட்டையிலே பாய்ச்சிப் பழம்நிகர்த்த தன்மக்கள்
ஏனின்னும் வாரா திருக்கின்றார் என்றெண்ணித்
தேனிதழும் சிற்றிடையும் ஆடா தசையாது

அன்னை மகிழ்ச்சி

நின்றாள்; சிரித்தாள்; நிலை பெயர்ந்தாள்; கானத்து
மன்றாடும் மாமயிலாள் "வாரீர்" என அழைத்தாள்.

உள்ளம் பூரித்தாள் உயிரோ வியங்கள்நிகர்
பிள்ளைகள் வந்தார்கள் பேச்சோடும் பாட்டோடும்!

வீட்டாரும் விருந்தினரும்

வீடு மலர்க்காடு; விருந்தினரும் வீட்டாரும்
பாடுகளி வண்டுகள்தாம்; பார்க்கத் தகும்காட்சி!

எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம்
வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல்போல்

சிற்றுணவுண் கின்றார்கள் தித்திக்கும் நீர்பருகி
முற்றத்தில் கையலம்பி முன்விரித்த பாய்நிறையச்

சென்றமர்ந்தார்! மூத்தார் அடைகாய் சிவக்கவே
மென்றிருந்தார்! நல்லிளைஞர் மேலோரின் வாய்பார்த்து

மொய்த்திருந்தார்! வீட்டில் விருந்துவந்த மூத்தவரோ
"வைத்துள்ளீ ரேஅந்த மாணிக்கப் பொட்டணத்தைக்

கொட்டிக் குவித்திடவும் மாட்டீரோ இப்போது!
கட்டாணி முத்தங்கள் காட்சிதர மாட்டாவோ!

பாட்டொன்று தின்னப் பழமொன்று தாரீரோ!
கேட்கின்றேன் கண்களல்ல! பச்சைக் கிளிகளல்ல!

வீட்டின் தலைப்பிள்ளாய் வேடப்பா பாடப்பா
வாட்டுளத்தில் இன்பத்தை வாரப்பா" என்றுரைக்க

மெத்த மகிழ்ச்சியுடன் வேடப்பன் பாடுவதாய்
ஒத்துத் துவங்கினான் ஒன்று:

வேடப்பன்


திரவிடம் நமது நாடு-நல்ல
திரவிடம் நமது பேச்சு!

திரவிடர் நாம் என்று களித்தோம்!
திரவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்!
உரையிலும் எழுத்திலும் செயலிலும் பிறரின்
உருவினை முழுமையும் ஒழித்தோம்!

செத்தபின் தன்புகழ் ஒன்றே
சிறந்திட வேண்டுதல் கருதி
ஒத்தவர் அனைவரும் எனச்செயல் செய்யும்
உயர்திர விடரின் குருதி!

மாவரசர்


வேடன் தமிழ்க்கண்ணி வீசி நமதுளமாம்
மாடப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு
நன்றி எனவுரைத்தார் மாவரசர். நற்றலைவி
ஒன்றுபா டென்றாள் உவந்து:

நகைமுத்து


கலையினிற் பெண்ணே இலகு-பல்
கலையினிற் பெண்ணே இலகு!
நிலையினில் உயர வேண்டும் பெண்ணுலகு!
மலைவிளக் காகுதல் வேண்டும்! நீ
மலைவிளக் காகுதல் வேண்டும்!£
புலமைகொள் கீழ்நிலை தனையுலகு தாண்டும்!

என்று நகைமுத்தாள் பாடினாள்! என்ன இன்பம்
என்று மகிழ்ந்தாள் எழிற்றலைவி! மற்ற
இளையார் தலைக்கொன் றியம்பிடுவார், யாரும்
களையாது காதுகொடுத் தார்

தென்னை
அறுசீர் விருத்தம்

நாவரசு

தலைவிரித்தாய் உடல்இளைத்தாய் ஒற்றைக்கா லால்நின்றாய் தமிழ்நாட் டார்க்குக்

குலைவிரித்துத் தேங்காயும் குளிரிளநீ ரும்கூரைப் பொருளும் தந்தாய்

கலைவிரித்த நல்லார்கள் தாம்பசித்தும், பிறர்பசியைத் தவிர்ப்ப தற்கே

இலைவிரித்துச் சோறிடுவார் என்பதற்கோர் எடுத்துக்காட் டானாய் தெங்கே!


பனை


வீட்டுப்பிள்ளை(க)


ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப்
பருவத்தில் இட்ட கொட்டை
நீரேதும் காப்பேதும் கேளாமல்
நீண்டுயர்ந்து பல்லாண் டின்பின்
வாராய்என் றெனைஓலை விசிறியினால்
வரவேற்று நுங்கும் சாறும்
சீராகத் தந்ததெனில், பனைபோலும்
நட்புமுறை தெரிந்தா ருண்டோ?

மா


வீட்டுப்பிள்ளை(உ)

காணிக்குப் புறத்தேஓர் பதிவிட்ட
மாநட்டுக் கண்கா ணித்துக்
கேணித்தண் ணீர்விடுத்தேன் பின்நாளில்
அதன்நிழலின் கீழ்இ ருந்தேன்
மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின்
இலைக்காம்பில் ஊஞ்ச லாடச்
சேண்எட்டுக் கோலெடுத்தேன் கைப்பிடித்தேன்
வாய்வைத்தேன் தேன்தேன் தேனே.

பலா


நாவரசு

பால்மணக்கக் கிள்ளுகின்ற பச்சையிலை
தங்கக்காம் படர்மி லார்கள்
வான்மணக்க உயர்ந்தகிளை அடர்ந்தபலா
மரத்திற்சிற் றானைக் குட்டி
போல்மணக்கும் பலாப்பழங்கள் அண்ணாந்த
பொழுதினிலே புதுமை கொள்ள
மேல்மணக்கும் கிளையினிலே, நடுமணக்கும்
வேர்க்குள்ளும் மணக்கும் நன்றே.

மாதுளை


வீட்டுப்பிள்ளை(க)


குவிப்புடைய விற்கோல்போல் புதல்எடுத்த
கோடெல்லாம் பூவும் பிஞ்சும்
உவப்படையச் செய்கின்ற மாதுளையின்
உதவியினை என்ன சொல்வேன்?
சிவப்புடைய மணிபொறுக்கிச் செவ்வானின்
வண்ணத்துச் செம்பில் இட்டுச்
சுவைப்பார்கள் எடுத்துண்டால் சுறுக்கென்று
தித்திக்கச் செய்த தன்றோ!

வாழை


வீட்டுப்பிள்ளை(உ)


தாயடியில் கன்றெடுத்துத் தரையூன்றி
நீர்பாய்ச்சத் தளிர்த்த வாழைச்
சேயடியில் காத்திருந்தால் தெருத்திண்ணை
போற்பெரிய இலைகள் ஈயும்;
காயடியில் பெரும்பூவும் கறிக்கீயும்;
கடைந்தெடுத்த வெண்ணெ யோடும்
ஈயடித்தேன் கலந்துருட்டிப் பழத்தின்நற்
குலையீயும் இந்தா என்றே.

களாச் செடி


நாவரசு


முட்கலப்பும் சிற்றிலையும் கோணலுறு
சிறுதூறும் முடங்கி மண்ணின்
உட்புகுபூ நாகங்கள் மொய்த்திருத்தல்
ஒத்துபுதற் களாவே நீ,ஏன்
வெட்கமுற்று வெண்மலர்ப்பல் வெளித்தோன்ற
நிற்கின்றாய் எளிய நண்டின்
கட்சிறிய கனியெனினும் சுவைபெரிது
சுவைபெரிது கண்டோ மன்றோ!

கொய்யாப் பழம்


வீட்டுப்பிள்ளை(க)


காட்டுமுயற் காதிலையும், களியானைத்
துதிக்கைஅடி மரமும் வானில்
நீட்டுகிளைக் கொய்யாதன் நிரல்தங்கத்
திரள்பழத்தை நம்கண் ணுக்குக்
காட்டுகின்ற போதுகொய் யும்பழம்என்
போம்கையில் கொய்து வாயில்
போட்டுமென்ற போதேகொய் யாப்பழமென்
போம்பொருளின் புதுமை கண்டீர்!

அறுசீர் விருத்தம்


விருந்தினர் மக்கள் தாமும்
வீட்டினர் மக்கள் தாமும்
பொருந்திடு கனிப்பாட் டுக்கள்
புகல,மா வரசர் தாமும்
மருந்துநேர் மொழிகொள் நல்ல
மலர்க்குழல் அம்மை யாரும்
திருந்திய தலைவி தானும்
தேனாற்றில் உளம்கு ளித்தார்.

மாவரசர்


தலைக்கொன்று பாட எண்ணித்
தொடங்கினீர் உளம்த ழைத்தே
கலைக்கொன்றும் கணக்குக் கொன்றும்
கழறிட நேர்ந்த தன்றோ!
இலைக்கொன்றும் வைத்த மற்ற
இன்சுவைக் கறிப டைக்க
மலைக்கின்ற போதும் அன்போ
வழங்குக என்று கூறும்.

'மலர்க்குழ லாளும் நானும்
கடைக்குப்போய் வருதல் வேண்டும்
விலைக்குள பொருள்கள் வாங்கி
விரைவினில் மீள்வோம்; வீட்டுத்
தலைவரை, என்றன் அன்பைக்
காணவோ தணியா ஆவல்
அலைத்தது நெஞ்சே' என்றார்
மாவர சான நல்லார்.

நன்றென்று தலைவி சொன்னாள்;
நாவர சென்னும் பிள்ளை
இன்றென்னை உடன ழைத்துச்
செல்வீர்கள் அப்பா என்றான்;
என்றென்றும் உன்வ ழக்கம்
இப்படி யென்று கூறிச்
சென்றனர் பெரியார்; பையன்
சென்றனன்; தாயும் சென்றாள்.

வேடப்பன் தனிய றைக்குள்
இலக்கியம் விரும்பிச் சென்றான்;
கூடத்தில் தம்பி தங்கை
கதைபேசிக் கொண்டி ருந்தார்;
மாடத்தை நடையை மற்றும்
வாய்ப்புள்ள இடங்கள் தம்மைச்
சோடித்து மணிவி ளக்கால்
சோறாக்கத் தலைவி சென்றாள்.

நறுமலர்க் குழலாள் இன்ப
நகைமுத்தாள் ஒருபு றத்தில்
சிறுவர்பால் எழுது கோலும்
சிறுதாளும் கேட்டுப் பெற்று
நிறைமகிழ் நெஞ்சு கொள்ள
நினைவோஓர் உருவைக் கொள்ள
உறுகலை அனைத்தின் மேலாம்
ஓவியம் வரைந்தி ருந்தாள்.

எண்சீர் விருத்தம்


வேடப்பன்


திறந்திருந்த சுவடியிலே வேடப் பன்தன்
திறந்தவிழி செல்லவில்லை; இதுவ ரைக்கும்
இறந்திருக்கும் மங்கையரி லேனும் மற்றும்
இனிப்பிறக்கும் மங்கையரி லேனும் அந்த
நிறைந்திருக்கும் அழகுநகை முத்தாள் போன்றாள்
இல்லையென நினைக்கின்றேன்! பேசும் பேச்சால்
சிறந்திருக்கும் செந்தமிழ்க்கும் சிறப்பைச் செய்தாள்
சிற்பத்திற் பெரும்புரட்சி செயப் பிறந்தாள்.

காணுதற்குக் கருவியோ கயற்கண் இன்பக்
காட்சிதரும் பொருளன்றோ! வீழ்ந்தார் வாழ்வைப்
பூணுதற்கே இதழோரப் புன்ன கைதான்!
பூவாத புதுக்காதல் பூக்க நோக்கி
ஆணினத்தைக் கவர்கின்றாள்! நிலாமு கத்தாள்;
தனியழகை அணிமுரசம் ஆர்க்கின் றாளே!
பேணுதற்குத் திருவுளங்கொள் வாளோ! என்றன்
பெற்றோர்பால் இல்லைஎனைப் பேணும் பெற்றி!

அவள்மேற் காதல்


அடுக்கிதழில் நகைதோன்றும் போதில் எல்லாம்
அறங்காக்கும் அவள்நெஞ்சம் வெளியில் தோன்றும்;
மடுப்புனலைப் புன்செய்உழ வன்பார்த் தல்போல்
மங்கைஎனை நோக்குகின்றாள் எனினும், வாழ்வில்
அடுத்திருக்கும் கருத்துண்டோ! யாதோ! ஐயோ!
அவள்எனக்குக் கிடைப்பாளோ! துயர்கொள் வேனோ!
எடுத்தடிவைப் பாள்இடையோ அசையும் வஞ்சி
இன்பக் களஞ்சியம்நல் லழகின் வெற்றி.

பொழிகதிரை மறைந்தொளிகொள் முகிலைப் போலப்
புனைஆடை பொன்னொளியைப் பெற்ற தென்றால்
அழகுடையாள் திருமேனி என்னே! என்னே!
அடைவுசெயும் அன்னம்போல் நடையாள்! யாழும்
குழலும்போய்த் தொழுகின்ற குரலால் பாடிக்
கொஞ்சினாள்! கருங்குயிலாள் திரும்புந் தோறும்
மழைமுகிலின் கூந்தலிலே பலம லர்கள்
மந்தார வானத்து மின்னலாகும்!

புதுநூலின் முதல்ஏட்டில் கயிறு சேர்த்தும்
பொன்னான தன்காதல் இலக்கி யத்தில்
இதுவரைக்கும் உளஞ்செலுத்தி இருந்தான்; தந்தை
இல்லத்தில் புகுந்ததையும் உணரான்; மற்றும்
அதிர்நடையார் மாவரசும், மனைவி தானும்
அங்குற்றார் என்பதையும் உணரான்; அன்னை
எதிர்வந்தாள் "வேடப்பா" என்றாள், "அம்மா"
என்றெழுந்தான் உணவுபடைத் திருத்தல் கண்டான்.

நகைமுத்தாள் பசியில்லை யென்று சொன்னாள்;
நன்றென்று மலர்க்குழலி சொல்லிப் போனாள்:
தொகைமுத்துக் குவித்தாலும் ஒன்றில் நெஞ்சைத்
தோய்த்தாரை மாற்றுவதே அருமை அன்றோ?
அகத்தினரும் விருந்தினரும் அமர்ந்தி ருக்க,
அன்புள்ள இல்லத்தின் தலைவி பூத்த
முகத்தினளாய் உணவுபடைக் கின்றாள்! இங்கே
முன்னறையில் நகைமுத்தாள் சென்றுட் கார்ந்தாள்!

நகைமுத்து


முதலேட்டில் சிலவரிகள் படித்துத் தீர்க்க
மூன்றுமணி நேரமா வேடப் பர்க்கே
எதில்நினைவு செலுத்தினார்? எனவி யந்தே
எழில்நகைமுத் தாள் புனைந்த ஓவி யத்தை
அதேசுவடி மேல்வைத்தாள், உற்றுப் பார்த்தாள்;
அவன்சிரித்தான்; அவள் சிரித்தாள் 'அன்ப ரேநீர்
இதுவரைக்கும் யாரைநினைத் திருந்தீர்?' என்றாள்;
'உனை'யென்றான்; 'யான்பெற்றேன் பெரும்பே'றென்றாள்.

ஏதேதோ கேட்டிருந்தாள் வேடப் பன்பால்!
என்னென்ன வோசொன்னான் அவன்அ வட்கே!
காதோடு 'நும்பெற்றோ ரிடத்தில் இந்தக்
கடிமணத்தின் முடிவுதனைக் கேட்பீர்' என்றாள்.
ஓதிவிட்டார் முடிவென்றான் வேடப் பன்தான்.
உளம்பூத்தாள்! வாய்பதறி விருந்த ருந்தித்
தீதின்றிக் கையலம்பு வோர்கள் கேட்கத்
திருமணம்எந் நாளென்றாள்! பிழைக்கு நைந்தாள்!

கைகழுவும் நினைப்பில்லை! சோற்றி லேனும்
கடுகளவு புசித்தானா இல்லை. காதற்
பொய்கையிலே வீழ்ந்திட்டான்! கரைகா ணாமல்
புலன்துடித்தான்! நகைமுத்தாள் புறம்போய் ஓர்பால்
வைகைநறும் புனலாடிக் கோடை வெப்பம்
மாற்றுவது எந்நாளென் றெண்ணி யெண்ணிச்
செய்கைஇழந் தமர்ந்திட்டாள். "நாங்கள் ஊர்க்குச்
சென்றுவரு கின்றோம்"என் றுரைத்தார் தந்தை!

தந்தைமொழி அதிர்வேட்டால் மங்கை நொந்தாள்;
தவித்திட்டான் வேடப்பன்! வீட்டுக் காரர்
'இந்தஇருள் நேரத்தில் செல்வ தென்ன?
இருந்துநா ளைப்பபோக லாம்'என் றார்கள்.
வந்தவர்கள் மன்னிப்பு வேண்டி னார்கள்.
வண்டிவந்து வீட்டெதிரில் நிற்கக் கண்டார்.
வெந்தனவாம் இரண்டுள்ளம். நன்றி கூறி
வெளிச்சென்றார்! வீட்டினரும் உடன்தொ டர்ந்தார்!

பிரிந்தாள்


நூறுமுறை அவள் பார்த்தாள் அவனை! ஆளன்
நூறுமுறை நோக்கினான், இனிது பெற்ற
பேறுதனை இழப்பாள்போல் குறட்டி னின்று
பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்கு முன்னர்
ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்!
அவள்வண்டிப் படிமிதித்தாள், திரும்பிப் பார்த்தாள்!
ஏறிவிட்டாள்! ஏறிவிட்டார் விருந்தி னர்கள்!
இனிதாக வாழ்த்துரைகள் மாற்றிக் கொண்டார்.

வண்டிநகர்ந் தது; மாடு விரைந்த தங்கே!
மங்கையவள் தலைசாய்த்து வேடப் பன்மேல்
கெண்டைவிழி யைச்செலுத்தி மறைந்தாள்! நெஞ்சைக்
கிளிபறித்துப் போனதனால் மரம்போல் அங்கே
தண்டமிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித்
தனிப்பார்போல் தனித்திருந்தான்; அவன்தாய் ஆன
ஒண்டொடியாள் உட்சென்றாள், நகைமுத் தாளின்
ஓவியத்தில் தன்மகனின் உருவைக் கண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=குடும்ப_விளக்கு/2&oldid=505307" இலிருந்து மீள்விக்கப்பட்டது