உள்ளடக்கத்துக்குச் செல்

குடும்ப விளக்கு/4

விக்கிமூலம் இலிருந்து

நான்காம் பகுதி



மக்கட் பேறு

அறுசீர் விருத்தம்

"நகைமுத்து வேடப் பன்தாம்
நன்மக்கள் பெற்று வாழ்க!
நிகழுநாள் எல்லாம் இன்பம்
நிலைபெற! நிறைநாட் செல்வர்
புகழ்மிக்கு வாழ்க வாழ்க!"
எனத் தமிழ்ப் புலவர் வாழ்த்த
நகைமுத்து நல்வே டப்பன்
மணம்பெற்று வாழ்கின் றார்கள்.

  • மிகுசீர்த்தித் தமிழ வேந்தின்

அரசியல் அலுவற் கெல்லாம்
தகுசீர்த்தித் தலைவ னான
வள்ளுவன் அருளிச் செய்த
தொகுசீர்த்தி அறநூ லின்கண்
சொல்லிய தலைவி மற்றும்
தகுசீர்த்தித் தலைவன் போலே
மணம் பெற்றின்புற் றிருந்தார்!

  • "மிகுசீர்த்தி........வள்ளுவன்" என்றது
    எதற்கு எனில் வள்ளூவன் என்பது

அந் நாளில் அரசியல் அலுவலகத்தின்
தலைவனுக்குப் பெயர் என்பதைக்
குறிப்பதாகும்.

நாளெலாம் இன்ப நாளே!
நகைமுத்தைத் தழுவும் வேடன்
தோளெலாம் இன்பத் தோளே:
துணைவியும் துணைவன் தானும்
கேளெலாம் கிளைஞர் எல்லாம்
போற்றிட இல்ல றத்தின்
தாளெலாம் தளர்தல் இன்றி
நடத்துவர் தழையு மாறே!

பெற்றவர் தேடி வைத்த
பெருஞ்செல்வம் உண்டென் றாலும்,
மற்றும்தான் தேட வேண்டும்
மாந்தர்சீர் அதுவே அன்றோ?
கற்றவன் வேடப் பன்தான்
கடல்போலும் பலச ரக்கு
விற்றிடும் கடையும் வைத்தான்
வாழ்நாளை வீண்நாள் ஆக்கான்!

இனித்திட இனித்தி டத்தான்
எழில்நகை முத்தி னோடு
தனித்தறம் நடாத்து தற்குத்
தனியில்லம் கொண்டான்! அன்னோன்
நினைப்பெல்லாம் இருநி னைப்பாம்:
கடைநினைப் பொன்று; நல்ல
கனிப்பேச்சுக் கிள்ளை வாழும்
தன்வீட்டின் கருத்தொன் றாகும்.

மூன்றாந்தெ ருவில மைந்த
பழவீட்டில் அன்பு மிக்க
ஈன்றவர் வாழு கின்றார்.
இடையிடை அவர்பாற் சென்றே
தேன்தந்த மொழியாள் தானும்
செம்மலும் வணங்கி மீள்வார்;
ஈன்றவர் தாமும் வந்தே
இவர்திறம் கண்டு செல்வார்.

நல்லமா வரசும், ஓர்நாள்
நவில்மலர்க் குழலாள் தானும்
வில்லிய னூரி னின்று
மெல்லியல் நகைமுத் தைத்தம்
செல்வியை மகளைப் பார்க்கத்
திடும்என்று வந்து சேர்ந்தார்.
அல்லிப்பூ விழியாள் தங்கம்
வேடப்பன் அன்னை வந்தாள்.

இங்கிது கேள்விப் பட்டே
எதிர்வீட்டுப் பொன்னி வந்தாள்.
பொங்கிய மகிழ்ச்சி யாலே
நகைமுத்தாள் புதிதாய்ச் செய்த
செங்கதிர் கண்டு நாணும்
தேங்குழல், எதிரில் இட்டே
மங்காத சுவைநீர் காய்ச்ச
மடைப்பள்ளி நோக்கிச் சென்றாள்.

அனைவரும் அன்பால் உண்டார்.
மலர்க்குழல், பொன்னி தன்னைத்
தனியாக அழைத்துக் காதில்
சாற்றினாள் ஏதோ ஒன்றை!
நனைமலர்ப் பொன்னி ஓடி
நகைமுத்தைக் கலந்தாள்! வந்தாள்!
'கனிதானா? காயா?' என்று
மலர்க்குழல் அவளைக் கேட்டாள்.

முத்துப்பல் காட்டிப் பொன்னி
மூவிரல் காட்டி விட்டுப்
புத்தெழில் நகைமுத் தின்பால்
போய்விட்டாள்; இதனை எண்ணிப்
பொத்தென மகிழ்ச்சி என்னும்
பொய்கையில் வீழ்ந்தாள் அன்னை;
அத்தூய செய்தி கேட்ட
தங்கமும் அகம்பூ ரித்தாள்.

மலர்க்குழல் தன்ம ணாளன்
மாவர சிடத்தில் செய்தி
புலப்பட விரல்மூன் றாலே
புகன்றனள். அவனும் கேட்டு
மலைபோலும் மகிழ்ச்சி தாங்க
மாட்டாமல் ஆடல் உற்றான்!
இலாதவர் தமிழ்ச்சீர் பெற்றார்
எனஇருந் தார்எல் லோரும்.

'நகைமுத்து நலிவு றாமல்
நன்றுகாத் திடுங்கள்' என்று
மிகத்தாழ்ந்து கேட்டுக் கொண்டாள்
மலர்க்குழல்! 'மெய்யாய் என்றன்
அகத்தினில் வைத்துக் காப்பேன்
அஞ்சாதீர்' என்றாள் தங்கம்.
நகைமுத்துச் சுவைநீர் தந்தாள்.
நன்றெனப் பருகி னார்கள்.

மாலையாய் விட்ட தென்றும்
மாடுகன் றுகளைப் பார்க்க
வேலைஆள் இல்லை என்றும்
விளம்பியே வண்டி ஏற
மூலைவா ராமல் மாடு
முடுகிற்றே! அவர்கள் நெஞ்சோ
மேலோடல் இன்றிப் பெண்ணின்
வீட்டையே நோக்கிப் பாயும்.

"இன்றைக்கே நம்வீட் டுக்குத்
திரும்பிட ஏன்நி னைத்தாய்?"
என்றுமா வரசு கேட்டான்;
"எனக்கான பெண்டிர்க் கெல்லாம்
நன்றான இந்தச் செய்தி
நவிலத்தான் அத்தான்" என்றாள்.
"என்தோழ ரிடம்சொல் லத்தான்
யான்வந்தேன்" என்றான் அன்னோன்.

தங்கமோ மகனை விட்டுத்
தன்வீடு வந்து சேர்ந்தாள்;
அங்குநாற் காலி ஒன்றில்
அமர்ந்தனள்; உடன்எ ழுந்தாள்
எங்கந்தச் சாவி என்றாள்?
ஈந்தனர் இருந்த மக்கள்
செங்கையால் திறந்தாள் தோட்டச்
சிறியதோர் அறையை நாடி.

எழில்மண வழகன் வந்தான்
தங்கத்தின் எதிரில் நின்றான்.
"விழிபுகா இருட்ட றைக்குள்
என்னதான் வேலை? இந்தக்
கழிவடைக் குப்பைக் குள்ளே
கையிட்டுக் கொள்ளு வானேன்?
மொழியாயோ விடை எனக்கு?
மொய்குழால்" என்று கேட்டான்.

அறையினில் அடுக்கப் பட்ட
எருமூட்டை அகற்றி, அண்டை
நிறைந்திட்ட விறகைத் தள்ளி
நெடுங்கோணி மூட்டை தள்ளிக்
குறுகிய இடத்தி னின்று
குந்தாணி நீக்கி அந்தத்
துறையிலே கண்டாள் பிள்ளைத்
தொட்டிலை எடுக்க லானாள்.

"நகைமுத்தாள்" என்று கூறி
நடுமூன்று விரலைக் காட்டித்
"துகள்போகத் துடைக்க வேண்டும்
தொட்டிலை" என்றாள் தங்கம்.
மகிழ்ந்தனன்! எனினும், 'பிள்ளை
மருமகள் பெறவோ இன்னும்
தொகைஏழு திங்கள் வேண்டும்
இதற்குள்ஏன் தொட்டில்?" என்றான்.

"பேரவா வளர்க்கும் என்பார்
பேதமை! அதுபோல் நீயும்
பேரனைக் காண லான
பேரவாக் கொண்ட தாலே,
சீருற மூன்று திங்கட்
கருக்கொண்ட செய்தி கேட்டுக்
காரிருள் தன்னில் இன்றே
தொட்டிலைக் கண்டெ டுத்தாய்".

எனமண வழகன் சொன்னான்
ஏந்திழை சிரித்து நாணி
இனிதான தொட்டி லைப்போய்
ஒருபுறம் எடுத்துச் சார்த்தித்
தனதன்பு மணாள னுக்குச்
சாப்பாடு போடச் சென்றாள்;
தனிமண வழகன் வந்து
தாழ்வாரத் தேஅ மர்ந்தான்.

உணவையும் மறந்து விட்டான்;
தெருப்பக்கத் தறையின் உள்ளே
பணப்பெட்டி தனிலே வெள்ளிப்
பாலடை தேடு தற்குத்
துணிந்தனன்; அறையில் சென்றான்.
பெட்டியைத் தூக்கி வந்து
கணகண வெனத்தி றந்தான்.
கைப்பெட்டி தனைஎ டுத்தான்.

அதனையும் திறந்தான் உள்ளே
ஐந்தாறு துணி பிரித்து
முதுமையாற் சிதைந்து போன
மூக்குப்பா லடையைக் கண்டான்.
எதிர்வந்து நின்றாள் தங்கம்.
"பார்த்தாயா இதனை!" என்றான்.
மதிநிகர் முகத்தாள் "யானும்
மணாளரும் ஒன்றே" என்றாள்.

நகைமுத்தாள் மூன்று திங்கள்
கருவுற்ற நல்ல செய்தி
வகைவகை யாகப் பேசி
மகிழ்ச்சியில் இரவைப் போக்கிப்
பகல்கண்டார். மாம னாரும்
நகைமுத்தைப் பார்த்து மீண்டார்.
அகல்வாளோ தங்கம்? அங்கே
நகைமுத்தோ டிருக்க லானாள்.

"சூடேறிற் றாவெந்நீர் தான்?
விளவிடு சுருக்காய்" என்று
வேடப்பன் சொன்னான், அன்று
விடிந்ததும் நகைமுத் தின்பால்!
கூடத்தில் இருந்த தங்கம்
"கூடாது கூடா தப்பா
வாடவே லைவாங் காதே
வஞ்சிமுன் போலே இல்லை".

எனக்கூறித் தானே சென்று
வெந்நீரை எடுத்து வந்தாள்;
மனமலர் சிறிது வாட
விழிமலர் அவன்மேல் ஓட
நனைமலர்க் குழலாள் ஆன
நகைமுத்தாள் தன்ம ணாளன்
இனிதாகக் குளிப்ப தற்கே
இயன்றவா றுதவச் சென்றாள்.

"நகைமுத்து முன்போல் இல்லை
நலியச்செய் யாதே" என்று
புகன்றனர் அன்னை யார். ஏன்
புகன்றனர்? எனத்த னக்குள்
புகன்றனன். எனினும் தன் கைப்
புறத்துள்ள நகைமுத் தாளைப்
புகல்என்றும் கேட்டா னில்லை
பொழுதோடக் கேட்போம் என்றே.

பொழுதோட, இரவு வந்து
பொலிந்தது மணிவி ளக்கால்!
எழுதோவி யத்தாள் அன்பால்
எதிர்பார்த்தாள்! கடையைக் கட்டி
முழுதாவ லோடு சாவி
முடிப்புடன் வேடன் வந்தான்;
தொழுதோடி 'வருக' என்ற
சொல்லோடு வரவேற் றாள்பெண்.

பிள்ளையின் வரவு கண்டு
சிலசில பேசித் தங்கம்
உள்ளதன் நகைமுத் தின்பால்
சொல்லென உரைத்துச் சென்றாள்;
"கிள்ளையே! நகைமுத் தாளே!
கிட்டவா; என்றன் தாயார்
துள்ளிப்போய் தாமே வெந்நீர்
தூக்கிவந் தார்கள் அன்றோ?

"நகைமுத்து முன்போல் இல்லை
நலிவுசெய் யாதே, என்று
புகன்றனர் அன்றோ?" என்றான்
" பொன்னே அ·தென்ன?" என்று
மிக ஆவலோடு கேட்டான்.
தன்மூன்று விரல்கள் காட்டி
முகநாணிக் கீழ்க்கண் ணாலே
முன்நின்றான் முகத்தைப் பார்த்தாள்.

'கருவுற்றுத் திங்கள் மூன்று
கண்டாயா?' எனவே டப்பன்
அருகோடித் தழுவிப் "பெண்ணே
அறிவிப்பாய்" என்றான்; "ஆம் ஆம்
இருநூறு தடவை கேட்பீர்!"
எனக்கூறி அடுக்க ளைக்குப்
பரிமாறச் சென்றாள்! காளை
மகிழ்ச்சியிற் பதைத்தி ருந்தான்.

நான்சிறு பையன் அல்லேன்
நான்தந்தை! என்ம னைவி
தான்மூன்று திங்க ளாகக்
கருவுற்றாள்! தாய்மை உற்றாள்!
வான்பெற்ற நிலவைப் போல
வந்தொரு குழந்தை என்னைத்
தேன்பெற்ற வாயால் அப்பா
எனத்தாவும் திங்கள் ஏழில்.

பெற்றதாய் மடியின் மீது
யாழ்கிடப் பதுபோல் பிள்ளை
உற்றிடும்; அம்மா என்னும்;
அவ்விசை, அமிழ்தின் ஊற்றாம்!
கற்றார்போல் அக்கு ழந்தை
கண்டுதாய் கைப்பு றத்தில்
நற்றமிழ்ப் பால் குடிக்க
நகர்த்தும்தன் சிவந்த வாயை.

அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை
அமிழ்தச்செம் பினையும், தன்பால்
இணைஇதழ் குவிய உண்ணும்
இளங்குழந் தையையும் சேர்த்தே
அணிமேலா டையினால் மூடி
அவள்இடை அசைப்பாள்! அன்பின்
பணிகாண்பேன் வையம் பெற்ற
பயனைக்கண் ணாரக் காண்பேன்.

எனப்பல வாறு வேடன்
எண்ணத்தின் கள்அ ருந்தி
மனைநல்லாள் அழைக்கத் தேறி
உணவுண்ண மகிழ்ந்து சென்றான்;
இனிதான உணவு நாவுக்
கினிதாகும்; கருக்கொண் டாளின்
புனைமேனி காணு கின்றான்.
புத்துயிர் காணு கின்றான்.

அகவல்

மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை
மாவரசு தானும் மலர்க்குழல் தானும்
வில்லிய னூரில் சொல்லா இடம்எது?
நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை
அறிந்தோர் அனைவரும் வந்து வந்து
தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து
சென்றார்; அவர்கள் திண்ணையில் தன்னுடன்
அதையே பேசி அமர்ந்திரா ததுதான்
மாவர சுக்கு வருத்தம் தந்தது!

தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக்
"கருவுற் றாள்என் கண்ணிகர் பெண்ணாள்;
காணச் சென்றேன் காலையில்; கண்டே
உடனே திரும்பினேன்; உடல்வலிக் கின்றதே
என்ன செய்யலாம்" என்பாள் மலர்க்குழல்;
வேலைக் காரிகள் வேறெது பேசினும்
பெண்கரு வுற்ற பெருமையே பேசுவாள்.
"இந்த வூட்டில் முந்திமுந் திஒரு
பேரன் பொறக்கப் போறான். ஆமாம்
இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல
எலுமிச் சம்பழம் பழுக்க இருக்குது.
நல்ல வூட்டில் எல்லாம் பொறக்கும்
குடுகுடு குடுகுடு குடுகு டுகுடும்"
என்று குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்!
வழக்கம் போல்அவன் வந்து சொன் னாலும்
மலர்க்குழ லுக்கும் மாவர சுக்கும்
ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்?
அழுக்குப் பழந்துணி அவன்கேட்டு நின்றான்.
புதுவேட்டி தந்து, 'போய்நா டோறும்
இதுபோல் சொல்லி இதுபோல் கொள்"என்று
மாவரசு சொன்னான்; மலர்க்குழல் சொன்னாள்;
எழில்வே டப்பனை ஈன்றோர் தாமும்
நகைமுத் தாளின் நற்றந்தை தாயாரும்
கருவுற் றாள்மேல் கண்ணும் கருத்துமாய்
நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனர்.
பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம்
மடியிற் சுமந்தபடி, "பத்தாம் திங்களின்"
முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள்.
வில்லிய னூரை விட்டுத் தன்னருஞ்
செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும்
உதவி உடலுக்குயிரே போன்றது!
மாவரசு நாடோறும் வந்து வந்து
நாவர சர்களின் நல்ல நூற்களும்
ஓவியத் திரட்டும், உயர்சிற் றுணவும்,
வாங்கித் தந்து, மகள்நிலை கண்டு
போவான், உள்ளத்தைப் புதுவையில் நிறுத்தி;
நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
தங்கம், தன்வீடு தன்மகன் வீடு
நாடுவாள் மீள்வாள் மணிக்குநாற் பதுமுறை.
அயலவர் நாடும் அன்னை நாடும்
இனிப்பில் இருநூறு வகைபடச் செய்த
அமிழ்தின் கட்டிகள், அரும்பொருட் பெட்டிகள்
வாங்கி வந்து மணவழ கன்தான்
"இந்தா குழந்தாய்" என்றுநகை முத்துக்கு
ஈந்து போவான், இன்னமும் வாங்கிட!

கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட
மருத்து வச்சி நாடொறும் வருவாள்.
நகைமுத் தாளின் உடல்நிலை நாடித்
தகுமுறை கூறித் தாழ்வா ரத்தில்
இருந்தபடி இருப்பது கூடா தென்றும்
உலாவுக என்றும் உரைத்துச் செல்கையில்,
வீட்டின் வெளிப்புறத்து நின்று வேடப்பன்,
"நகைமுத் துடம்பு நன்று தானே?
கருவுயிர்ப் பதில்ஒரு குறை யிராதே?
சொல்லுக அம்மா, சொல்லுக அம்மா!"
என்று கேட்பான்; துன்பமே இராதென
நாலைந் துமுறை நவின்று செல்வாள்.

அயலகத்து மயில்நிகர் அன்புத் தோழிமார்
குயில்மொழி நகைமுத்தைக் கூடி மகிழ்ந்து
கழங்கு, பல்லாங் குழிகள் ஆடியும்
எழும்புகழ்த் திருக்குறள் இன்பம் தோய்ந்தும்
கொல்லை முல்லை மல்லிகை பறித்தும்
பறித்தவை நாரிற் பாங்குறத் தொடுத்தும்
தொடுத்தவை திருத்திய குழலிற் சூடியும்
பாடியும் கதைகள் பகர்ந்தும் நாழிகை
ஓடிடச் செய்வார் ஒவ்வொரு நாளும்;
நன்மகளான நகைமுத் துக்குப்
பிறக்க இருப்பது பெண்ணா ஆணா
என்பதை அறிய எண்ணி மலர்க்குழல்
தன்னெதிர் உற்ற தக்கார் ஒருவர்பால்
என்ன குழந்தை பிறக்கும் என்று
வீட்டு நடையில் மெல்லக் கேட்டாள்;
பெரியவர் "பெண்ணே பிறந்து விட்டால்
எங்கே போடுவீர்?" என்று கேட்டார்.
"மண்ணில் பட்டால் மாசுபடும் என்றுஎன்
கண்ணில் வைத்தே காப்பேன் ஐயா"
என்று மலர்க்குழல் இயம்பி நின்றாள்.
"ஆணே பிறந்தால் அதைஎன் செய்வீர்?"
என்று கேட்டார் இன்சொற் பெரியவர்.
"ஆணையும் அப்படி ஐயா" என்று
மலர்க்குழல் மகிழ்ந்து கூறி நின்றாள்.
"பெண்ணே ஆயினும் ஆணே ஆயினும்
பிறத்தல் உறுதி" என்றார் பெரியவர்.
இதற்குள் உள்ளே இருந்தோர் வந்தே
குறிகேட்ட மலர்க்குழல் கொள்கை மறுத்துச்
சிரித்தனர்! வீட்டினுள் சென்றார்.
வருத்தியது இடுப்புவலி நகைமுத் தையே.

எண்சீர் விருத்தம்

பறந்ததுபார் பொறிவண்டி சிட்டுப் போலப்
பழக்கமுள மருத்துவச்சி தனைஅ ழைக்க!
உறவின்முறைப் பெண்டிர்பலர் அறைவீட் டுக்குள்
ஒண்டொடியாள் நகைமுத்தைச் சூழ்ந்தி ருந்தார்;
நிறைந்திருந்தார் ஆடவர்கள் தெருத்திண் ணைமேல்;
நிலவுபோல் உடைபுனைந்த மருத்து வச்சி
பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட் சென்றாள்;
புதியதோர் அமைதிகுடி கொண்ட தங்கே.

பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து
பெண்குழந்தை! பெண்குழந்தை!! என்ப தான
பேச்சொன்று கேட்கின்றார் ஆட வர்கள்;
பெய்என்ற உலகுக்குப் பெய்த வான்போல்
கீச்சென்று குழந்தையழும் ஒலியும் கேட்டார்;
கிளிமொழியாள் மலர்க்குழலும் வெளியில் வந்து
"மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை
முத்துப்போல் பிறந்ததுதாய் நலமே" என்றாள்.

அச்சமென்னும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர்
அகமகிழ்ச்சிக் கரைசேர்ந்தார்! கடையி னின்று
மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார்;
வெற்றிலையும் களிப்பாக்கும் சுமந்து வந்தார்;
மெச்சிடுவா ழைப்பழத்தின் குலைகொ ணர்ந்தார்;
மேன்மேலும் வந்தார்க்கும் வழங்கி னார்கள்;
பச்சிளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப்
பாடினார் மகளிரெல்லாம் தாழ்வா ரத்தில்.

அறுசீர் விருத்தம்

ஈரைந்து திங்க ளாக
அகட்டினில் இட்டுச் சேர்த்த
சீரேந்து செல்வந் தன்னை
அண்டையிற் சேர்த்துத் தாய்க்கு
நேரேமெல் லாடை போர்த்து
நிலாமுகம் வானை, நோக்க
ஓராங்கும் அசையா வண்ணம்
கிடத்தியே ஒருபாற் சென்றார்.

சென்றஅம் மகளிர் தம்மில்
தங்கம்போய்த் தன்ம கன்பால்
"உன்மகள் தன்னைக் காண
வா" என அழைக்க லானாள்;
ஒன்றும்சொல் லாம லேஅவ்
வேடப்பன் உள்ளே சென்றான்;
தன்துணை கிடக்கை கண்டான்;
தாய்மையின் சிறப்புக் கண்டான்.

இளகிய பொன்உ ருக்கின்
சிற்றுடல், இருநீ லக்கண்,
ஒளிபடும் பவழச் செவ்வாய்
ஒருபிடிக் கரும்பின் கைகால்
அளிதமிழ் உயிர்பெற் றங்கே
அழகொடும் அசையும் பச்சைக்
கிளியினைக் காணப் பெற்றான்
கிடைப்பருஞ் செல்வம் பெற்றான்.

"நகைமுத்து நலமா" என்றான்
"நலம்அத்தான்" என்று சொன்னாள்.
"துகளிலா அன்பே! மிக்க
துன்பமுற் றாயோ!" என்றான்.
"மிகுதுன்பம் இன்பத் திற்கு
வேர்" என்றாள். களைப்பில் ஆழ்ந்தாள்.
"தகாதினிப் பேசல், சற்றே
தனிமைகொள்" என்றான்; சென்றான்.

சிற்சில நாட்கள் செல்ல
நகைமுத்து நலிவு தீர்ந்தாள்;
வெற்பினில் எயில்சேர்ந் தாற்போல்
மேனியில் ஒளியும் பெற்றாள்.
கற்பாரின் நிலையே யன்றிக்
கற்பிப்பார் நிலையும் உற்றாள்!
அற்றைநாள் மகளும் ஆகி
அன்னையும் ஆனாள் இந்நாள்.

பெயர்சூட்டு விழாந டத்த
அறிவினிற் பெரியோர் மற்றும்,
அயலவர் உறவி னோர்கள்
அனைவர்க்கும் அழைப்புத் தந்தார்.
வெயில்முகன் வேடப் பன்தன்
வீடெலாம் ஆட வர்கள்
கயல்விழி மடவார் கூட்டம்
கண்கொள்ளாக் காட்சி யேஆம்.

ஓவியப் பாயின் மீதில்
உட்கார்ந்தோர் மின்இ யக்கத்
தூவிசி றிக்காற் றோடு
சூழ்பன்னீர் மணமும் பெற்றார்.
மூவேந்தர் காத்த இன்ப
முத்தமிழ் இசையுங் கேட்டார்.
மேவும்அவ் வவையை நோக்கி
வேடப்பன் வேண்டு கின்றான்.

"தோழியீர் தோழன் மாரே,
வணக்கம்!நற் றூய்த மிழ்தான்
வாழிய! அழைப்பை எண்ணி
வந்தனிர்; உங்கள் அன்பு
வாழிய! இந்த நன்றி
என்றும்யாம் மறப்போம் அல்லோம்.
ஏழையோம் பெற்ற பெண்ணுக்கு
இடுபெயர் விழாநன் றாக!

இவ்விழாத் தலைமை தாங்க
இங்குள்ள அறிவின் மூத்தோர்
செவ்விதின் ஒப்பி எங்கள்
செல்விக்குப் பெயர் கொடுக்க!
எவ்வெவர் வாழ்த்தும் நல்க!
இறைஞ்சினோம்" என்ற மர்ந்தான்.
"அவ்வாறே ஆக" என்றே
நகைமுத்தும் உரைத் தமர்ந்தாள்.

அங்குள்ள அறிவின் மூத்தோர்
அவையிடைத் தலைமை பெற்றே,
"இங்குநம் நகைமுத் தம்மை
வேடப்பர் இளம்பெண் ணுக்கே
உங்களின் சார்பில் நான்தான்
ஒருபெயர் குறிப்பேன்" என்றார்.
"அங்ஙனே ஆக" என்றார்
அவையிடை இருந்தோர் யாரும்.

அப்போது நகைமுத் தம்மை
அணிமணி ஆடை பூண்டு
முப்பாங்கு மக்கள் காண
முத்துத்தேர் வந்த தென்னக்
கைப்புறம் குழந்தை என்னும்
கவின்தங்கப் படிவம் தாங்கி
ஒப்புறு தோழி மார்கள்
உடன்வர அவைக்கண் வந்தாள்.

கரும்பட்டு மென்மயிர் போய்க்
காற்றொடும் ஆடக் கண்டோர்.
விரும்பட்டும் என்று சின்ன
மின்நெற்றிக் கீழ்இ ரண்டு
சுரும்பிட்ட கருங்கண் காட்டி
எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம் காட்டி
அழகுகாட் டும்கு ழந்தை!

எள்ளிளஞ் சிறிய பூவை
எடுத்துவைத் திட்ட மூக்கும்
வள்ளச்செந் தாம ரைப்பூ
இதழ்கவிந் திருந்த வாய்ப்பின்
அள் இரண் டும்சி வப்பு
மாதுளை சிதறச் சிந்தும்
ஒள்ளிய மணிச்சி ரிப்பும்
உவப்பூட்டும் பெண்கு ழந்தை.

அன்னையி னிடத்தி னின்று
வேடப்பன், அருமைச் செல்வி
தன்னைத்தன் கையால் வாங்கித்
தமிழ்ப்பெரி யார்பால் தந்தான்.
"என்அன்பே இளம்பி ராட்டி"
எனவாங்கி அணைத்து, மற்றும்
முன்னுள்ளார் தமக்கும் காட்டி,
முறைப்பட மொழிய லுற்றார்;

"வானின்று மண்ணில் வந்து
மக்களைக் காக்கும்; அ·து
தேன்அன்று; கரும்பும் அன்று;
செந்நெல்லின் சோறும் அன்று;
ஆன்அருள் பாலும் இன்றே;
அதன்பெயர் அமிழ்தாம்! தொன்மை
ஆனபே ருலகைக் காக்க
அமிழ்வதால் மழைய· தேயாம்.

தமிழரின் தமிழ்க்கு ழந்தை
தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும்.
அமையுறும் மழைபோல் நன்மை
ஆக்கும்இக் குழந்தைக் கிந்நாள்
அமிழ்தென்று பெயர் அமைப்போம்
அமிழ்தம்மை நாளும் வாழ்க!
தமிழ்வாழ்க! தமிழர் வாழ்க!"
என்றனர் அறிவில் மூத்தார்.

"அமிழ்தம்மை வாழ்க!" என்றே
அனைவரும் வாழ்த்தி னார்கள்.
அமிழ்தம்மைப் பெயர்ப்பு னைந்த
அன்புறு குழந்தை தன்னை
எமதன்பே எனவே டப்பன்
இருகையால் வாங்கி யேதன்
கமழ்குழல் நகைமுத் தின்பால்
காட்டினான் கையால் அள்ளி.

அமிழ்தம்மா எனஅ ணைத்தே
அழகிக்கு முத்தம் தந்தாள்!
தமிழர்க்கு நன்றி கூறி
வெற்றிலை பாக்குத் தந்து
தமிழ்பாடி இசைந டத்தி
வேடப்பன் தன்கை கூப்ப
"அமிழ்தம்மை நாளும் வாழ்க",
எனச்சென்றார் அனைவர் தாமும்.

இருகாலைச் சப்ப ளித்தே
இடதுகைப் புறத்தில், அன்பு
பெருகிடத் தலையை ஏந்திப்
பின்உடல் மடியில் தாங்கி
மருவியே தன்பாற் செப்பு
வாய்சேர்த்து மகள்மு கத்தில்
ஒருமுத்து நகைமுத் தீந்தாள்.
உடம்பெல்லாம் மகிழ்முத் தானாள்.

அமிழ்துண்ணும் குழந்தை வாயின்
அழகிதழ் குவிந்தி ருக்கும்
கமழ்செந்தா மரைய ரும்பு
கதிர்காண அவிழ்மு னைபோல்!
தமிழ்நலம் மனத்தால் உண்பார்
விழிஒன்றிற் சார்வ தில்லை;
அமிழ்துண்ணும் குழந்தை கண்ணும்
அயல்நோக்கல் சிறிதும் இல்லை.

உண்பது பிறகா கட்டும்
உலகைப்பார்க் கின்றேன் என்று
துண்ணென முகம்தி ருப்பித்
தூயதாய் முகமே காணும்;
கண்மகிழ் திடும்செவ் வாயின்
கடைமகிழ்ந் திடும்;இவ் வையம்
உண்மையாய்த் தன்தாய் என்றே
உணர்வதால் உளம்பூ ரிக்கும்.

விரிவாழைப் பூவின் கொப்பூழ்
வெள்விழி யின்மேல் ஓடும்
கருவண்டு விழியால் சொல்லும்
கதைஎன்ன என்றாள் அன்னை;
சிரித்தொரு பாட்டுச் சொல்லித்
திரும்பவும் மார்ப ணைந்து
பொருட்சிறப் பையும்வி ளக்கும்
பொன்னான கைக்கு ழந்தை.



"மண்ணாண்ட மூவேந் தர்தம்
மரபினார் என்ம ணாளர்
பெண்ணாளுக் களித்த இன்பப்
பயனாய்இப் பெருவை யத்தார்
உள்நாண அழகு மிக்க
ஒருமகள் பெற்றேன்" என்றே,
எண்ணியே அன்னை தன்'பால்'
உண்பாளின் முகத்தைப் பார்த்தாள்.

மணிவிழி இமையால் மூடி
உறக்கத்தில் நகைம றைத்துத்
தணிவுறும் தமிழர் யாழ்போல்
தன்மடி மேல்அ மைந்த
அணியுடல் குழந்தை கண்டாள்
அன்புடன் இருகை ஏந்திப்
பணியாளர் செய்த தொட்டிற்
பஞ்சணை வளர்த்த லானாள்.

ப·றொடை வெண்பா


தன்மகளின் பெண்ணைத் தனிப்பெருமைப் பேர்த்திதனை
இன்ப அமிழ்தை இணையற்ற ஓவியத்தைத்
தங்கம் எடுத்துத் தலையுச்சி தான்மோந்து
மங்கா மகிழ்ச்சியினால் மார்போ டணைத்திருந்தாள்!

அங்கந்த வேளையிலே அன்பு மகள்பெற்ற
திங்கட் பிறையைச் செழுமணியைப் பேர்த்திதனைக்
காண மலர்க்குழலும் வந்தாள் கடிதினிலே!
பாட்டிமார் வந்தார் பழம்பாட்டுப் பாடிடுவார்

கேட்டு மகிழலாம் என்று கிளிப்பேச்சுத்
தோழிமார் தாழ்வாரத் தொட்டிலண்டை வந்தமர்ந்தார்.
உள்ளவர்கள் எல்லாரும் தங்கத்தின் கைப்புறத்தில்
உள்ள குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத்

தங்கம் அறிந்தாள் தனதிடத்தில் உள்ள ஒரு
பொங்கும் அமிழ்தைப் பொன்னான தொட்டிலிலே
இட்டாள் நகைமுத்தை இன்னிசையால் தாலாட்ட
விட்டாள் விளைந்த தொருபாட்டு.

தாயின் தாலாட்டு

பொன்னே மணியே புதுமலரே செந்தேனே
மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு!


தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே
அன்னைநான்; உன்விழியில் ஐயம் ததும்புவதேன்?

என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள்
உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்!

என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ?
கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு!

சின்னமலர்க் காலசையச் செங்கை மலர்அசைய
உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு!

தோழிமார் தாலாட்டு

தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே
நகைமுத்தின் பெண்ணான நன்முத்தே மானே!

தகையாளர் வையத்தில் தந்த திருவே
தொகைபோட்டு வாங்க ஒண்ணாத் தூய்அமிழ்தே கண்வளராய்!

கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும்
சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே

இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால்
பொன்"உறக்க நாடு" புலம்பாதே கண்மணியே!

தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப்
பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால்

திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச
அங்"குறக்க நாட்டார்" அவாமறுத்த தாகாதோ?

செங்காந்த ளின்அரும்போ சின்னவிரல்? அவ்விரலை
அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய்!

கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால்
தெங்கின்பா ளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய்!

பஞ்சுமெத்தைப் பட்டு பரந்த ஒரு மேல்விரிப்பில்
மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல்

பிஞ்சுமா விண்விழியைப் பெண்ணே இமைக்கதவால்
அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய்!

தங்கத்துப் பாட்டி தாலாட்டு

ஆட்டனத்தி யான அருமை மணாளனையே
ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப்

போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ?

செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செந்தமிழான
கல்விக் கரசி கலைச்செல்வி ஔவை

இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க
நினைத்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே?

நாட்டு மறவர்குல நங்கையரைச் செந்தமிழின்
பாட்டாலே அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கைப்


பாடினியார் நச்செள்ளை பார்புகழும் மூதாட்டி
கூடி உருவெடுத்தார் என்றுரைத்தால் நீதானோ?

அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த
எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ?

தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள்
நக்கண்ணை என்பவளும் நீதானோ நல்லவளே!

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே!

சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப்
பொற்கொடியே என்னருமைப் பொன்னேநீ கண்ணுறங்காய்!

மலர்குழல் பாட்டி தாலாட்டு

உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும் கற்கண்டும்
பச்சைஏ லப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி

இச்இச்சென உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சை முத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே!

தஞ்சைத் தமிழன் தரும்ஓ வியம்கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்சறிவேன்

அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய வையப் படிவமன்றோ

முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும்
துகள்தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும்

முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால்
மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ?

தமிழர் தனிச்சிறப்பு யாழின் இசையும்
குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும்

தமிழின் இசையும் சரியாமோ, என்றன்
அமிழ்தே, மலர்வாய்நீ அங்காப்பின் ஓசைக்கே;

இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு
தென்பாண் டியர்மரபின் செல்வமே கண்ணுறங்காய்!

பிள்ளையைத் தூக்கும் முறை

அகவல்


நடுப்பகல் உணவுக்கு நல்வே டப்பன்
இல்லில் நுழைந்தான் "என்கண் மணியே
என்றன் அமிழ்தே" என்று கூவியபடி!
மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக்
கைப்புறத் தில்தன் கட்டழகு சுமந்து
வந்துதாழ் வாரத்தில் மணவாளனிடம்
காட்டி நின்றாள்! கண்டவே டப்பன்
அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை
எடுக்க விரைந்தான். "அதுதான் இயலாது!
கொள்அன்று; கொத்த மல்லி அன்று;
பிள்ளை அத்தான்" என்றாள் பெற்றவள்.
"பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
கொள்ளவே சொல்லிக் கொடு"வெனக் கேட்டான்.
வேடப்ப னுக்கு விளக்குவாள் துணைவி:
"ஆழியில் உருவமான அழகுமட் கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்;
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை
உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும்.
இன்னும் சொல்வேன் நன்று கேட்க:
குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை!
அம்மலர்த் தண்டே அழகிய 'மெல்லுடல்'
தண்டுடல் மலர்த்தலை தாங்குமோ அத்தான்?
தலைஉடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி
உலைஅமிழ்தை வறியவள் ஒருத்திதூக் கல்போல்
தவறாது தூக்குவது தலையா கியகடன்
தெரிந்ததா அத்தான்" என்றாள் தெரிவை;
"கற்றேன் கணக்கா யரேகற் றபடி
நிற்கும் படியும் நிகழ்த்துக" என்றான்.
தூக்கிக் காட்டினாள் தோகை
தூக்கினான். "சரி" எனச் சொன்னாள் துணைவியே.

தந்தையின் தவறு

அறுசீர் விருத்தம்


வேடப்பன் உணவ ருந்தி
மகளோடு விளையா டற்குக்
கூடத்தில் வந்து பார்த்தான்
தூங்கிடும் குழந்தை கண்டான்!
தேடக்கி டைத்தல் இல்லாச்
செல்வமே என்றெ டுத்தான்
வாடப் புரிந்த தாலே
மகள்வீறிட் டழுதல் கண்டான்.

நகைமுத்து விரைந்து வந்தாள்
"குழந்தையின் நலிவு நீங்கத்
தகும்படி தொட்டில் தன்னில்
தாலாட்டித் தூங்கச் செய்தேன்;
அகத்தினில் அன்பு கொண்டீர்
ஆயினும் குழந்தை தன்னை
மிகத்துன்பம் அடையச் செய்தீர்;
விலக்கஇச் செய்கை" என்றாள்.

"குழந்தைதான் தூங்கும் போது
எழுப்பினால் குற்ற மென்ன?
அழுதிடும் குழந்தைக் கான
ஆறுதல் தூக்கந் தானோ?
ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்
உனக்குத்தான் தெரியும் போலும்!
முழங்காதே பேச்சை வாயை
மூடென்றான்" வேடப் பன்தான்.

அன்புள்ள துணைவன் ஆங்கே
இதுசொல்லிக் கடைக்குச் சென்றான்;
துன்புற்றாள் நகைமுத் தாளும்
துணைவரின் சினமே எண்ணி;
என்பெற்ற குழந்தைக் காகத்
துணைவரின் வெறுப்பை ஏற்றேன்;
அன்பரைத் திருத்து தற்கும்
அன்புதான் தூண்டிற் றென்னை.


இப்படி நினைத்தா ளாகி
இல்லத்துப் பணிமு டித்தும்
கைப்புறக் குழந்தை தன்னைத்
தோளிலே போட்டுக் காத்தும்
அப்புறம் பகலைத் தள்ளி
இரவினில் அன்ப னுக்கே
ஒப்புறத் துணைபு ரிந்தும்
இரவினில் உறங்கச் சென்றாள்.

படுக்கையின் விரிப்பு மாற்றிப்
பக்கத்தில் குழந்தைக் கான
துடைக்கின்ற துணிகள் தேடித்
தூயபல் விரிப்பும் தேடி
விடிவி ளக்கும் திருத்தி
விலாப்புறத் திற்கு ழந்தை
குடித்தபால் எடுத்தல் கண்டு
குட்டையால் தூய்மை செய்தே;

உடலினை ஒருக்க ணித்தே
குழந்தையை மார்போ டொட்டித்
தடமலர் வலக்கை தன்னைத்
தலைக்கணை மீது வைத்தும்
இடதுகை குழந்தை மேலே
வில்லைப்போல் வளைய இட்டும்
கடுகள வசைதல் இன்றிக்
கண்வளர் கின்றாள் அன்னை!

தாய்மையின் ஆற்றல்

அன்றுநள் ளிரவில் வேடன்
விழித்தனன்; அருகில் உள்ள
தன்மனை தன்கு ழந்தை
நிலைமையை நோக்க லானான்;
"என்மனை ஒருக்க ணித்தே
இடக்கையைக் குழந்தை மீதில்
சின்னக் கூடார மாக்கிச்
சேல்விழி துயில்கின் றாளே.

ஒருநூலே புரண்டா ளேனும்,
தெருவினை ஒக்கச் செய்யும்
உருளையின் கீழ்ம லர்போல்
ஒழியுமே பெற்ற பிள்ளை!
தெரியவே இல்லை இ·து
தெரிவைக்கே" எனவே டப்பன்
அருகிலே அமர்ந்தி ருந்தான்
அகன்றிட மனம்வ ராமல்!

மங்கையை எழுப்பு தற்கு
வழியன்று கண்ட றிந்தான்:
அங்கவள் களைந்தெ றிந்த
மலர்கண்ணி யைஅன் னாளின்
திங்களின் முகத்தில் போட்டான்!
சேயிழை விழித்தா ளில்லை.
இங்கினிக் குழந்தை தன்னை
எழுப்புவேன் என நினைந்தே;

மலர்கண்ணி தனில்அ விழ்ந்த
மலரிதழ் ஒன்றைத் தூக்கம்
கலைத்திடக் குழந்தை மீது
போட்டனன்! தாயின் கைதான்
மலரிதழ் தனைத் துடைத்து
மற்றும்தன் இடம்போ யிற்றே!
தலைவனோ இதனைக் கண்டான்;
தாய்மையின் ஆற்றல் கண்டான்.

தலைவிக்கு மதிப்புச் செய்தான்;
தாய்மைக்கு வணக்கம் செய்தான்.
இலைஎன்பால் குழந்தை காக்கும்
ஆற்றல்எட் டுணையும் என்றான்;
தலைமட்டும் இரண்டென் றாலும்
குழந்தையும் தாயும் ஒற்றைக்
குலையேயாம்; உயிரும் ஒன்றே!
உள்ளத்தின் கூறும் ஒன்றே!

எனக்கென்ன தெரியும் தாய்க்கும்
இளங்குழந் தைக்கு முள்ள
மனத்திடத் தொடர்பு? மற்றும்
வாயினாற் பேசார்; தாயும்
தனதரும் குழந்தை தானும்
கண்ணாலும் மனத்தி னாலும்
தனித்துப்பே சிக்கொள் கின்றார்
என்றுபோய் தான்து யின்றான்.

ஓராண்டு

வான்பார்த்துக் கிடந்த மேனி
மண்பார்த்துக் கவிழ்ந்தும், பின்னர்
தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச்
செம்மையாய்த் தவழ்ந்தும் நின்றும்
தான்பார்க்க அங்கும் இங்கும்
தள்ளாடி நடந்தும், கெண்டை
மீன்பார்த்த கண்ணாள் பெண்ணாள்
ஓராண்டு மேவல் உற்றாள்.

பட்டுப்பா வாடை கட்டிப்
பச்சைப்பூச் சட்டை இட்டுக்
கட்டிய முல்லைக் கண்ணி
கரும்பாம்பின் பின்னல் தன்னில்
நெட்டுறச் சூட்டி, நெற்றி
நேர்உறச் சுட்டி வைத்து,
விட்டனள் அமிழ்தை ஆடத்
தாழ்வார மீதில் அன்னை!

ஓடி வா

சிந்து கண்ணி

அமிழ்தே அமிழ்தே ஓடிவா-என்
அன்பின் விளைவே ஓடிவா
தமிழின் சுவையே ஓடிவா-என்
தங்கப் பாப்பா ஓடிவா
கமழும் பூவே ஓடிவா-என்
கண்ணின் மணியே ஓடிவா
குமியும் புகழே ஓடிவா-என்
குத்து விளக்கே ஓடிவா

பச்சைக் கிளியே ஓடிவா-என்
பாடும் தும்பி ஓடிவா
அச்சுப் பெண்ணே ஓடிவா-என்
ஆடும் கொடியே ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவா-என்
விரியும் சுடரே ஓடிவா
தச்சுத் திறமை ஓடிவா-என்
தங்கப் புதையே ஓடிவா


வள்ளத் தேனே ஓடிவா-என்
வானம் பாடி ஓடிவா
வெள்ளப் பாலே ஓடிவா-என்
வீட்டு விளக்கே ஓடிவா
துள்ளும் கன்றே ஓடிவா-என்
தோகை மயிலே ஓடிவா
அள்ளும் சுளையே ஓடிவா-என்
அன்பின் கனியே ஓடிவா

முத்து நிலாவே ஓடிவா-என்
மும்மைத் தமிழே ஓடிவா
கத்தும் கடலே ஓடிவா-என்
கட்டிக் கரும்பே ஓடிவா
தொத்தும் கிளியே ஓடிவா-என்
தூண்டா விளக்கே ஓடிவா
கொத்துப் பூவே ஓடிவா-என்
குழந்தை அமிழ்தே ஓடிவா


செல்வப் பொருளே ஓடிவா-என்
செந்தா மரையே ஓடிவா
கல்விப் பொருளே ஓடிவா-என்
காவிரி ஆறே ஓடிவா
முல்லைக் கொடியே ஓடிவா-என்
மூசைத் தங்கம் ஓடிவா
அல்லிப் பூவே ஓடிவா-என்
அன்பின் அமிழ்தே ஓடிவா

தென்றற் காற்றே ஓடிவா-என்
செவ்விள நீரே ஓடிவா
குன்றாச் சுவையே ஓடிவா-என்
கொள்ளா அழகே ஓடிவா
ஒன்றா உணர்வே ஓடிவா-என்
ஓவியக் கனவே ஓடிவா
மன்றின் மணியே ஓடிவா-என்
மல்லிகை மலரே ஓடிவா

பாடும் சிட்டே ஓடிவா-என்
பருகும் சாறே ஓடிவா
நாடும் திருவே ஓடிவா-என்
நடைஓ வியமே ஓடிவா
சூடும் தாரே ஓடிவா-என்
சோலை நிழலே ஓடிவா
வாடா மலரே ஓடிவா-என்
வஞ்சிக் கொடியே ஓடிவா


தண்டை குலுங்க ஓடிவா-என்
சங்கத் தமிழே ஓடிவா
கெண்டை விழியே ஓடிவா-என்
கிள்ளை மொழியே ஓடிவா
பெண்டிர்க் கரசி ஓடிவா-என்
பேறே உயிரே ஓடிவா
ஒண்டொடியாளே ஓடிவா-என்
ஓடைப் புனலே ஓடிவா

அறுசீர் விருத்தம்

வேடப்பன் வந்தான் அங்கே
விளையாடும் குழந்தை கண்டான்;
ஓடச்செய் கின்றாய் காலும்
ஓயாதோ குழந்தைக் கென்றான்;
கோடைக்குக் குளிரே 'நான் ஓர்
குதிரை, நீஅரசி' என்றான்;
கூடத்தில் மண்டி போட்டான்
குழந்தையை முதுகில் கொண்டான்.

அப்பாக் குதிரை

சிந்துக் கண்ணி

அப்பாக் குதிரை ஆட்டக் குதிரை
அஞ்சாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தப்பாக் குதிரை தாவும் குதிரை
தளராக் குதிரை ஏய் ஏய் ஏய்
சப்பைக் குதிரை இல்லை இல்லை
தமிழக் குதிரை ஏய் ஏய் ஏய்
ஒப்பும் குதிரை ஓயாக் குதிரை
ஒற்றைக் குதிரை ஏய் ஏய் ஏய்!

பேசும் குதிரை பெருத்த குதிரை
பிழையாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தோசைக் குதிரை சோற்றுக் குதிரை
சோராக் குதிரை ஏய் ஏய் ஏய்
மீசைக் குதிரை வெற்றிக் குதிரை
வேட்டைக் குதிரை ஏய் ஏய் ஏய்
தேசுக் குதிரை தெற்குக் குதிரை
சேரன் குதிரை ஏய் ஏய் ஏய்!

சோறூட்டல்

அகவல்

உருக்கிய நெய்யும் பருப்பும் இட்ட
சோற்றுடன் மிளகுநீர் துளியள வூற்றிச்
சிறிய வள்ளத்தில் சேர்த்தெ டுத்துக்
குழந்தைக்குக் காக்கை காட்டி
விழுங்க வைப்பாள் மென்னகை முத்தே.

சிந்து கண்ணி

காக்கா காக்கா கண்ணாட்டி
கைப்பிள் ளைக்குச் சோறூட்டி
பாக்கியை நீஅள் ளிக்கொண்டே
பறந்து போஎன் கற்கண்டே.
ஆக்கிய சோறென் சிட்டுக்கே
அதுவா வேண்டும் எட்டிப்போ
தூக்கிக் கொண்டா போய்விடுவாய்?
சுருக்காய் வாங்கும் இன்னொருவாய்.

உன்வாய் பெரிய ஒளிவாயாம்
ஒண்டொடி வாய்தான் கிளிவாயாம்
தன்னால்உண்ணும் என்தங்கம்
தண்ணீர் குடிக்க வா அஞ்சும்?
சொன்னால் கேட்கும் என்பட்டும்
சோற்றை உண்ணும் இம் மட்டும்
இன்னும் காக்கா நெருங்கிவா
இதையும் உண்டு பறந்துபோ.

நிலாக் காட்டல்

அறுசீர் விருத்தம்


மேற்றிசை ஒளிவெள் ளத்தில்
வீழ்ந்தது செங்க திர்போய்த்
தூற்றிய முத்துக் கொல்லை
முழுநிலாத் தோற்றம் கண்டார்
காற்றிலோர் குளிரும் கண்டார்
மாடியில், நிலாமுற் றத்தில்
ஏற்றினார் அமிழ்தைப் பெற்றார்
எழில்நிலாக் காட்டு கின்றார்.

சிந்துக் கண்ணி

நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வா வா
உலா வினாய் விண்ணில்-நீ
ஒளிபு ரிந்தாய் கண்ணில்
குலா வலாம் நாட்டில்-இனிக்
கொஞ்ச லாம்என் வீட்டில்
பலா மரம் உண்டு-நற்
பழமெ லாம்கற் கண்டு
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

அழகெ லாம்எ னக்கே-என்
அன்பெ லாம்உ னக்கே
முழுநி லாஎன் பூவே-உன்
முத்த மொன்று தேவை
பழக லாம்இ றங்கு-நற்
பைந்த மிழுண் டிங்கு
விழியி லேஒ ளிர்ந்தாய்-என்
மெய்யி லேகு ளிர்ந்தாய்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

வானம் நீலத் தோப்பு-நீ
மங்கா தமத் தாப்பு
கூனி மீன்கள் மின்னும்-ஒளிக்
குட்டை நீஎன் றெண்ணும்
சீனத் துப்பால் கோப்பை-நீ
சிரிப்பு முகத்தையும் சாய்ப்பை
கானல் வெளியும் குளிரும்-கண்
காண மனமும் ஒளிரும்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

விண்ணக் கடலில் தெப்பம்-நீ
விரித்த இலையில் அப்பம்
உண்ணக் குவித்த தளியல்-நீ
உரித்த கிழங்கின் அளியல்
பண்ணும் வெள்ளித் தட்டு-நீ
பச்ச ரிசியின் பிட்டு
வெண்பட் டான குடையே-நீ
விழுங்கி டும்பா லடையே
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

பேச்சு

அகவல்

மரப்பா வைகள் வைத்துவிளை யாடும்
அமிழ்தொடு நகைமுத் தமர்ந்தி ருந்தாள்;
மாவரசும் வந்தான்; மகள்வர வேற்றாள்
அமிழ்தை நோக்கி"நான் யாரம்மா?" என்றான்.

அமிழ்தம் "ஐயா" என்றாள். அதனால்
குன்றி யதுமுகம் கொதித்தது நெஞ்சம்
மாவர சுக்கு! மகளை நோக்கி
'யான் அயலானா? ஏன்என்னைத் தாத்தா
என்று சொல்ல வில்லை' என்றான்.
அதுகேட்டுத் "தாத்தா" என்றாள் அமிழ்து.
முகமும் மலர்ந்தது! மாவரசுக்(கு)
அகமும் மலர்ந்தது! நகைமுத்தும் அங்ஙனே!

தேவை

அகவல்

காலை உணவுண்டு கடைக்குப் புறப்படும்
வேடன் "என்ன வேண்டும்" என்றான்;
அமிழ்துதன் தேவையை அறிவிக் கின்றாள்;
"கோழி" "நாயிக் குட்டி" "அம்மா"
இதுகேட்டு நகைமுத் தியம்பு கின்றாள்;
"அத்தான் குழந்தை, 'அம்மா' என்றால்
என்போல் இன்னுமோர் அம்மா
அன்று கேட்டது! பொம்மை அம்மாவே."


குறளில் கோயில் இல்லை

அகவல்

நாடி முத்து வேடப் பனிடம்
"இன்றி யமையா ஒன்றுக் காகக்
கடன்பத்து ரூபாய் கொடு"வென்று கேட்டான்;
வேடன் கொடுப்பதாய் விளம்பினான்.அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
"கோவிலு காட்டுப்பா" என்று கூறினாள்.
"குறளில் கோயிலே இல்லை யம்மா"
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடி முத்து நவிலு கின்றான்:
"தில்லைக் கோயிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம்உன்னைக் கேட்டேன்.
கோயில் இல்லையா குறளில்?
ஆயில்என் பணத்துக் கில்லை அழிவே!"

சேறும் சோறும் தேன்

அகவல்


அறையில் தூங்கி யிருந்த அமிழ்து,
சிறகுவிரித் துதறிச் செங்கா லன்னம்
நடைதொடங் கியதென நடந்து, தாழ்வாரத்(து)
இடையி லிருந்த மைக்கூட்டை எடுத்து
கொல்லையில் முல்லைக் கொடியின் அடியில்
சாய்த்து நீலம் சார்ந்த சேற்றால்
சிற்றில் ஒன்று செய்து முடித்தபின்
தந்தை உண்ணும் தயிரின் சோற்றை
அங்கையால் அள்ளி ஆஆ என்றாள்!
அப்பனும் வாய்திறந் ததைவாங்கி உண்டான்;
தொடர்ந்து நடந்த திந்தத் தொண்டு,
சின்னவள் அன்னை யான திறத்தை
நகைமுத்துக் கண்டு மிகமகிழ்ந் திருந்தாள்.
சேறும் சோறும் தந்தைக்குத் தேனே!
நீலத் தயிரும் நிலாநிறத் தயிரே!
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"எனச் செப்பிய
வள்ளுவர் வாய்ச்சொல் பொய்என
விள்ளுவர் உளரோ விரிநீர் உலகிலே!

அன்பு பெருகுக

அகவல்

அன்னை தங்கம் அமிழ்தொடு பேசித்
தலைக்கடை அறையில் நிலைக்கண் ணாடியின்
முன்னின்று தன்எழில் முகம்பார்த் திருந்தாள்.
தனித்துவே டப்பன் தாழ்வாரத் திருந்தான்.
இனிக்க அமிழ்தும் எதிர்வந்து நின்றாள்!
சுவரி லேதன் உருப்படம் தொங்கியது
கண்ட அமிழ்து கனிவாய் திறந்து
"இதில்நான் சின்னவள். இப்போது பெரியவள்"
என்றாள், "ஆம் ஆம்" என்றான் தந்தை!
"எப்படிப் பெரியவள் ஆனேன்" என்றாள்.
"உருப்படம் எடுக்கையில் ஓராண் டுனக்கே.
இப்போது மூன்றாண் டாயின" என்றான்.
"ஆண்டுகள் எப்படித் தாண்டும்" என்றாள்.
"நேரம் போகப் போக நேரே
ஆண்டும் போகும் அல்லவா" என்றான்.
"நேரம் போவதை நேரில் பார்க்கக்
கூடுமோ" என்று கூறினாள் அமிழ்து;
"பார்இதோ மணிப்பொறி நேரம்ஓ டுவதை
இருமுள் ஓடிக் காட்டும்" என்றான்.
"முள்ஓட வில்லையே" என்று மொழிந்தாள்.
"ஓடுவது தெரியாது ஓடுகின் றதுநாள்,
வளர்வது தெரியாது வளர்கின் றாய்நீ"
என்றுவே டப்பன் இயம்பு கின்றான்.
தங்கமும் தனது தலைமுடி நோக்குவாள்,
"நரைப்பது தெரியாது நரைக்கின் றதுமுடி"
என்று தனக்குள் இயம்புகின்றாள்.
"பழுப்பது தெரியாது பழுக்கின் றதுபழம்"
என்று கொல்லையில் இருந்து நகைமுத்தும்
பத்துத் திங்கள் நிறைந்த பலாப்பழம்*
தாங்கி நடந்து, தன்இடை நோவதாய்
ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள்.
"பெருகுவது தெரியாது பெருகுகின் றதுஉயிர்"
என்பதும் உண்மை போலும்!
அன்பு பெருகுக வைய அமைதிக்கே!

(*பலாப்பழம் - கருநிறைந்த வயிறு)


நடந்து வந்த கரும்பு


அகவல்


நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது.
மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள்;
மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர்.
வேடப் பன்ஓர்பால் வீற்றிருக் கின்றான்.

எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப்
பூவிழிச் செவ்விதழ்ப் புதுஇள மைந்தனை
"இளஞ் சேரன்"வாஎன இருகையில் ஏந்தி
ஒருபுறம் மயிலென உலவு கின்றாள்.

புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார்
முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார்
யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்!
அமிழ்தம் எங்கே அனைவரும் எழுந்தார்.
அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை.
கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும்
சின்னஞ் சிறிய செங்கதிர் போல
மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும்
குலுங்கு நீலாம்பரக் குள்ளச் செடியும்,
முத்துச் சிரிப்பு முழுப்பொன் னாடை
கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும்
அங்கே கூடி அழகுசெய் திருப்பதைக்
கண்டனர்; கண்ணே என்றுகை யேந்தினர்;
நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது!
முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும்
அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும்,
கைதூக்கி 'அப்பா' என்று கனிதமிழ்க்
கட்டிக் கரும்பு மட்டும் கலகலத்
தண்டை பாடத் தாவி வந்தாள்.
புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும்
முற்றத்தில் உட்கார வேண்டினார்
உற்று நோக்கினார் உருக்கவர் பெட்டியே!*

(*உருக்கவர் பெட்டி - காமிரா)

புகைப்படம்

அகவல்

நடுநாற் காலியில் நகைமுத்துக் கைப்புறம்
அன்பிளஞ் சேரன் அண்டையில் அமிழ்து
வேடன் முதலியோர் பீடுற அமைந்தார்.
பொருந்திய வண்ணம் புறத்தின் அழகைப்
புகைப்படம் எடுத்தே; அகத்தின்
மகிழ்ச்சியை வான்படம் எடுக்க விட்டே.

திராவிட மக்கள் வாழிய

அகவல்

அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்;
தமிழ்தரும் தனித்தமிழ்ப் பள்ளி சென்றே
அதோவரு கின்றாள் அங்கைச் சுவடியோடு;
வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில்
இளஞ்சே ரனைநீ யார்என்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த் திருந்தார். அவனோ
தன்மார்பு காட்டி 'நான் தம்பி' என்றான்.
"தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்.
வாழிய தமிழ மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=குடும்ப_விளக்கு/4&oldid=505311" இலிருந்து மீள்விக்கப்பட்டது