குண்டான உடம்பை குறைப்பது எப்படி/அளவான எடை எவ்வளவு?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3. அளவான எடை எவ்வளவு


சராசரி ஒரு ஆணுக்கு, அவரது உடல் மொத்த எடையில் 10 முதல் 20 சதவிகிதம் வரை கொழுப்பின் எடை இருக்க வேண்டும். மொத்த எடையில் 25 சதவிகிதம் வரை, கொழுப்பின் எடை இருக்கவேண்டும்.

அதற்கு மேலாக கொழுப்பு சேர்ந்திருக்கும் பொழுது தான், ‘கொழு கொழு’ அழகும். ‘மொழு மொழு’ சிறப்பும் முனை முறிந்து போய், அலங்கோலத்திற்கும், அவலட்சண தோற்றத்திற்கும் ஆட்படுத்தி விடுகிறது.

இப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்திருக்குமே! எனக்கு எவ்வளவு எடை இருந்தால் சீராக இருக்கும்? ஜோராக இருக்கும்?

நியாயம்தான் பொறி பறக்கும் உங்களின் ஆவலும் ஏற்புடையதுதான்.

உடலின் உயரம், வயது, பால், பணி இவற்றைப் பொருத்தே உங்கள் உடல் எடை அமையும் என்றாலும், உடற்கூறு வல்லுநர்கள், உடலை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கின்றனர்.

1. சிறிய உடலமைப்பு (Small Frame-Endomorph)

2. நடுத்தர உடலமைப்பு (Medium Frame-Meessomotph)

3. பெரிய உடலமைப்பு (Large Frame-Ectomorph)

ஒரு ஆண் 5 அடி 6 அங்குலம் உயரம் இருந்தால் (167 செ.மி) அவரது எடை, சிறிய உடலமைப்புக்கு 132 பவுண்டும், நடுத்தர உடலமைப்புக்கு 140 பவுண்டும், பெரிய உடலமைப்புக்கு 151 பவுண்டும் இருக்கலாம்.

இப்படி உடற்கூறு வல்லுநர்கள் மட்டுமா கணக்குப்போட்டு வைத்திருக்கின்றார்கள்? இல்லை. இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகாரர்களும். மிகவும் அக்கறையுடன் அலசிப்பார்த்து. குறித்து வைத்திருக்கின்றார்கள்.

ஏன்? அதிக எடையுள்ள மனிதர்களுக்கு அகாலமரணம் ஏற்பட்டுவிடும் என்று தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் இன்ஸ்யூரன்ஸ் செய்பவர்களைவிட, இவர்களுக்குத்தான் ஆர்வமும். அங்கலாய்ப்பும் அதிகம்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, அவர்கள் போட்டு வைத்திருக்கும் பட்டியலைப் பாருங்கள். பிறகு உங்களையும் பாருங்கள். உடல் எடையும் அளவும் புரியும். முதலில் உங்கள் உயரம் எவ்வளவு என்று அளந்து கொள்ளுங்கள். அதாவது செருப்பு, ஷு எதுவும் அணியாமல் உயரத்தை அளக்க வேண்டும்.

உங்கள் எடை பார்க்க, எடை இயந்திரத்தில் ஏறுகிறபொழுது, மேல்நாட்டுபாணியில், உடையில்லாமல் (Naked) இருக்க வேண்டும் என்கிறார்கள். நம்நாட்டு பணி என்கிற போது, மிகவும் இலேசான அல்லது குறைவான உடை அணிந்திருக்க வேண்டும். அது சரியான கணக்குக்காகத் தான்.

எடை எந்திரத்தில் ஏறிய பிறகு, நேராக நிமிர்ந்து நிற்கவும். யாராவது ஒருவர் எடையை பார்ப்பது நல்லது. நீங்களே குனிந்து பார்க்கக் கூடாது.
1. ஆண்களுக்கான உயரமும் எடை அளவும்
எண். உயரம் (அடி அங்குலம்) எடை(பவுண்டு)
1. 5’ 115 பவுண்டு முதல் 125 பவுண்டு வரை
2. 5’ 2’’ 118 ’’ ’’ 130 ’’
3. 5’ 3’’ 120 ’’ ’’ 135 ’’
4. 5’ 4’’ 122 ’’ ’’ 140 ’’
5. 5’ 5’’ 124 ’’ ’’ 145 ’’
6. 5’ 6’’ 126 ’’ ’’ 150 ’’
7. 5’ 7’’ 128 ’’ ’’ 158 ’’
8. 5’ 8’’ 130 ’’ ’’ 162 ’’
9. 5’ 9’’ 132 ’’ ’’ 165 ’’
10. 5’ 10’’ 135 ’’ ’’ 168 ’’
11. 5’ 11’’ 138 ’’ ’’ 172 ’’
12. 6’ 140 ’’ ’’ 175 ’’
13. 6’ 1’’ 150 ’’ ’’ 178 ’’
14. 6’ 2’’ 152 ’’ ’’ 180 ’’
15. 6’ 3’’ 158 ’’ ’’ 183 ’’
16. 6’ 4’’ 170 ’’ ’’ 190 ’’

இந்த எடை அளவும் உயரமும், நாம் முன்னே குறிப்பிட்டுள்ள 3 வகை உடலமைப் புள்ளவர்களுக்கும் சேர்த்துத்தான். சிறிய உடலமைப்பு, உள்ளவர் 5 அடி உயரத்திற்கு சுமாராக 115 பவுண்டு இருக்க வேண்டும் என்றால், நடுத்தர உடலமைப்பு மற்றும் பெரிய உடலமைப்பு உள்ளவர்கள் 125 பவுண்டுக்குள்ளாக இருக்கவேண்டும் என்பதும், ஒரு குறிப்பிட்ட உயரம் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட இரண்டு எடைக்குள்ளாக இருந்தால் சரியாகவும் சீராகவும் இருக்கும் என்பதுதான் கணக்கு.

2. பெண்களுக்கான எடையும் உயர அளவும்

உங்கள் உயரத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், உயரம் அளக்கும் கம்பத்தில் நின்றால், போதும்.

உங்கள் உடல் எடையை அறிந்து கொள்ளவேண்டும் என்றால், எடைபார்க்கும் இயந்திரம் துல்லியமாக உதவும்.

நீங்கள் குண்டாக இருக்கின்றீர்களா என்ற கேள்விக்கு விடை எங்கே கிடைக்கும் யாரிடம் போனால் கிடைக்கும்?

இதை அறிந்து கொண்டால்தானே, அடுத்த படிக்குப் போகமுடியும் உயரமும் எடை அளவும் போதாது. உங்களை நீங்களே அளந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமாகச் சொன்னால், கொஞ்சம் தடித்து உடம்பு என்பார்கள். அனுதாபத்துடன் சொன்னால், கொஞ்சம் கொழுப்பு அதிகமான கொழுத்த உடம்பு என்பார்கள். குறும்பாகச் சொல்பவர்கள் தான் குண்டு உடம்பு என்பார்கள்.

குண்டு உடம்பு என்று எதனால் கூறுகின்றார்கள் என்றால், பார்ப்பவர்களின் கண்களுக்கு, பட்டவர்த்தனமாகத் தெரிவதால் தான். அப்படி காட்சி தருகின்ற காட்சியும் உண்மைதான்.

உடல் உயரம், வயது, உடல் அமைப்பு, ஆண் பெண் பாகுபாடு, இவற்றை வைத்துப் பார்க்கிறபோது, இருக்க வேண்டிய எடை அளவை விட, ஒரு 20 சதவிகிதம் அதிகமாகிற போதுதான், உடலின் அளவும், அழகும் மாறிப் போகிறது.

பெண்களுக்கான உயரமும் எடை அளவும்

எண். உயரம் (அடி அங்குலம்) எடை(பவுண்டு)
1. 4’ 8’’ 75 பவுண்டு முதல் 100 பவுண்டு வரை
2. 4’ 9’’ 80 ’’ ’’ 105 ’’
3. 4’ 10’’ 84 ’’ ’’ 108 ’’
4. 4’ 11’’ 88 ’’ ’’ 112 ’’
5. 5’ 92 ’’ ’’ 114 ’’
6. 5’ 1’’ 96 ’’ ’’ 115 ’’
7. 5’ 2’’ 101 ’’ ’’ 120 ’’
8. 5’ 3’’ 104 ’’ ’’ 124 ’’
9. 5’ 4’’ 108 ’’ ’’ 129 ’’
10. 5’ 5’’ 112 ’’ ’’ 135 ’’
11. 5’ 6’’ 116 ’’ ’’ 140 ’’
12. 5’ 7’’ 118 ’’ ’’ 145 ’’
13. 5’ 8’’ 120 ’’ ’’ 150 ’’
14. 5’ 9’’ 125 ’’ ’’ 152 ’’
15. 5’ 10’’ 130 ’’ ’’ 154 ’’
16. 5’ 11’’ 135 ’’ ’’ 157 ’’
17. 6’ 140 ’’ ’’ 160 ’’

1. உங்களுக்கு வசதியிருந்தால், பாதுகாப்பான இடவசதியும் இருந்தால், முழு நீள கண்ணாடியின் முன்னே, உங்கள் முழு உருவமும் தெரிவது போல நில்லுங்கள். தனி அறை என்று சொல்லாமல், வசதி என்று சொன்னது எதற்காக என்றால், முழு உருவத்தையும் முழுதுமாக குளியல் உடுப்பில் (Naked) பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.

உடம்பில் ஆங்காங்கே திரண்டிருக்கும் தசைத் திரள்கள் மிகுதியாகத் தென்பட்டால், நீங்கள் கொஞ்சம் தடித்திருக்கின்றீர்கள் (Fat) என்று அர்த்தம்.

2. உங்கள் கட்டைவிரலையும், ஆட்காட்டி விரலையும் பயன்படுத்தி, சோதித்துக் கண்டறிவது. இரண்டாவது முறை.

உங்கள் முழங்கைக்கு மேலே, தோள்பகுதிக்குக் கீழே இடைப்பட்ட முத்தலைத் தசையை (Triceps), கட்டைவிரல், ஆட்காட்டி விரல் கொண்டு பிடித்துப் பாருங்கள். இதை Pinch என்பார்கள். அதாவது கிள்ளுவதுபோல, உங்கள் தசைப் பகுதியைப் பிடித்துப் பாருங்கள். உங்கள் கிள்ளும் பிடிக்குள் வருகிற தசையானது. ஒரு அங்குலத்திற்கும் மேலே தடிமனாக இருந்தால் (One inch thickness), நிச்சயம் நீங்கள் தடிமனாக இருக்கின்றீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிவிடும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்தக் கிள்ளிப் பிடிக்கும் முறை ஒன்று தான். பெண்களுக்கு ஒரு அங்குல கனம் இருந்தாலே தெரியும். ஆண்களுக்கு 2 அங்குலம் கனம் இருந்தால், அவர்களும், கனமுள்ள கனவான்கள்தான்.

உடலுக்கு அதிகமான எடையாக இருக்கிறது!கிள்ளிப் பார்த்த கைத் தசையின் அளவு, ஓர் அங்குலத்திற்கு மேலே தடிப்பாகத் தெரிகிறது என்று தெரிந்து கொண்டபிறகு, தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

சரியென்று ஏற்றுக் கொள்வது, மனித மனத்தின் மாண்புக்கு ஒத்துவருமா? ஒத்துக் கொள்வதும் மனிதப் பண்புக்கு ஏற்றதாகுமா?

எதுவாக இருந்தாலும் எதிர்த்துப் பேசவேண்டும் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும். ஏட்டிக்கும் போட்டியாக பதிலுரைக்க வேண்டும். இருந்தால் என்ன? இருந்து விட்டுப் போகட்டும் என்று சதிராடிட வேண்டும்.

அப்படிப் பட்டவர்கள், ஆக்ரோஷத்தோடு கேட்கிற கேள்வி இப்படித் தான் படுகிறது? வந்துவிட்ட தேகத்தின் எடையை விரட்டி விடவா முடியும்? இப்படியே இருந்தால் என்ன ஆகிவிடும்? குடி முழுகியா போகும்? தலையை வாங்கி விடுமா? இப்படியெல்லாம் பேசுவார்கள்.

இது எதார்த்தமான விவாதம் அல்ல. ஏட்டிக்குப் போட்டியாக எதிர்க்கும் பிடிவாதம். விதண்டாவாதம்.

அவர்களுக்கும் புரிவதுபோல, வந்த தசையைக் குறைக்க முயலும் உண்மையான மனிதர்களுக்கும் தெளிவது போல, தடித்த உடம்புக்குரிய ஐயப்பாடுகளை, இங்கு கொஞ்சம் விளக்கமாகவே விவரித்துப் பார்ப்போம்.