உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டான உடம்பை குறைப்பது எப்படி/குண்டான உடம்டைக் குறைப்பது எப்படி?

விக்கிமூலம் இலிருந்து
குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

1. ஒரு சிறு விளக்கம்

எனக்கு அன்பானவர்களே!

ஆர்வமுடன், இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்திருக்கும் எழுச்சிமிக்க ஆர்வலர்களே! அருமையானவர்களே!

உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது!

'குண்டான' என்ற ஒரு சொல்லை இங்கே போட்டிருக்கிறேன். அது கேலி செய்வது போல் இருக்கிறது என்று. என்னை நேருக்கு நேர் கேட்டு விட்ட நியாயவாதிகள் பலரின் சார்பாக, இந்த வார்த்தையை ஏன் தலைப்பில் கொடுத்தேன் என்பதற்கான விளக்கம் தருவது என் கடமையாக அமைத்திருக்கிறது.

நல்லது சொல்வதும், நல்லது செய்வதும், நல்லதை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொள்ளுமாறு மற்றவர்களை வற்புறுத்துவதும் என் இலட்சியப்பணி. அந்த இலட்சியத்தின் ஒரு துளிதான் இந்த நூல். இனிய தீம்பாலாகத் திகழும் இந்த வழிகாட்டி நூல்.

நிமிர்ந்து நிற்க வேண்டியது மனித உடல், நிலைத்து வாழ வேண்டிய மனித இனம், நெஞ் சுரத்துடன் கிஞ்சித்தும் சோர்வு கொள்ளாமல் வளர வேண்டியது மனித குணம்.

இதற்கு உறுதுணையாக இருப்பது அளவான உடல். அளவான உடல் என்பது அழகான உடல், அழகான உடல் என்பது வலிவான உடல், வலிவான உடல் என்பது பொலிவான உடல்.

அளவும், அழகும், வலிவும், பொலிவும், போதிய தன்மையில் அமைந்து விடாமல், மேலும் கொஞ்சம் கூடுதலாக, உருண்டு, திரண்டு விட்டால், அதற்குப் பெயர்தான் குண்டு என்பதாகும்.

குண்டு என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமோ? உருண்டு, திரண்ட, திரண்ட வடிவமுள்ள திரளான என்று அர்த்தம்.

குண்டான உடம்பு என்றால், கூடுதலாக வடிவம் பெற்ற உடலமைப்பு என்று அர்த்தம். இப்போது உங்கள் கோபம் சிறிதாவது தணிந்திருக்குமே! அணைந்திருக்குமே!

குண்டு என்று கூறாமல் சிலர் ஊளைச் சதை என்று கதைப்பார்கள். கனைப்பார்கள். களிப்பார்கள். முகம் சுளிப்பார்கள்.

ஊளைச் சதை என்பதற்கு ஊழல் சதை என்பது பொருள்.

அப்படி என்றால், சதையிலுமா ஊழல் புகுந்து விட்டது! ஊழல் என்பதற்கு என்ன அர்த்தம் சதை என்பதற்கும் தசை என்பதற்கும் என்ன வித்தியாசம்?

ஊழல் என்றால் ஆகாதது, ஊத்தையானது, கெட்டது, பழுதானது, நரகமானது, நாற்றம் மிக்கது என்று அர்த்தம்.

திசை என்றால் இறுகிய, வடிவும் வளப்பும் மிக்க, வலிவும் பொலிவும் மிகுந்த ஊண் என்று அர்த்தம்.

சதை என்றால் தண்ணீர் நிறைந்த, தொள தொளத் தன்மையுள்ள, தொங்கி விழுகின்ற அமைப்புடையது என்று அர்த்தம்.

இப்போது புரிந்திருக்குமே!

ஊளைச் சதை என்பது உடலுக்குத் தேவை இல்லாதது. உடல் தோற்றப் பொலிவுக்கு ஆகாதது. உடல் வலிவுக்கு ஊத்தையானது, சத்தில்லாமல் சுரம் குறைந்த பழுதானது என்பது தானே மற்றவர்கள் பேசுகிற பேச்சு!

இந்தக் குண்டு என்பதை உண்டு இல்லை என்று ஆக்கி விட வேண்டும் என்ற ஆவேசம். உங்களுக்கு வர வேண்டும். உணர்வுக்குள் எழ வேண்டும். செயலுக்குள் சேர வேண்டும். ஊளைச் சதையை சிதைத்தே தீர வேண்டும் என்று நீங்கள் இப்பொழுதே, இந்த நொடியில் இருந்தே உறுதி பூண வேண்டும். உரிய வழிகளைக் காண வேண்டும்.

ஆகவே, என்மேல் அன்பு கொண்டு, என்னுடன் வாருங்கள். எழிலான உடல் பெறுவோம் என்று என் வழியில் சேருங்கள். நான் கூற விருக்கிற உபாயங்களைச் செய்து பாருங்கள். பிறகு கூறுங்கள் உங்கள் கருத்துக்களை, பேசுங்கள் உங்கள் பெருமைகளை.

உணர்ச்சி பூர்வமாக அமர்ந்திருக்கும் இந்த நாள், உங்கள் அழகான உடலுக்கு ஆரத்தி எடுக்கின்ற நாளாக அமையட்டும்.

வீரநடை தொடரட்டும். கைவீசி நடந்து கவர்ச்சியாக உடையணிந்து, காண்பவர்கள் மத்தியில் கௌரவமான ‘உயர்ந்த’ நிலையை அளிக்கட்டும்!

இந்த ஆறுதலான தேறுதலுடன், நமது பயணம் தொடர்கிறது. கவனமாகக் கருத்துகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்! காரியத்தில் இறங்குங்கள்!