குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16/பின்னிணைப்பு - 1

விக்கிமூலம் இலிருந்து



பின்னிணைப்பு – I


அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள் (1955-1996)

1. சமய மறுமலர்ச்சி


1955-டிசம்பர்


முன்னுரை

பாரதநாடு உரிமை வாழ்வைப் பெற்றுவிட்டது. அந்த உரிமையைப் பெறுவதற்கு அதுபட்ட பாட்டைவிட, அதனைப் பேணி நலம்பெற இன்னும் மிகுதியாகப் பாடுபட வேண்டுமென்று தலைவர்களும் அறிஞர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேற்று நாட்டினர் நாகரிகமும் கல்வியும் பழக்கவழக்கங்களும் இந்நாட்டில் புகுந்திருக்கின்றன. நம் நாட்டுப் பண்பாட்டுக்கு நலிவு உண்டாகியிருக்கிறது. மேல்நாட்டுத் தொடர்பினால் பெற்ற நல்லனவற்றை மாத்திரம் மேற்கொண்டு இந்நாட்டுப் பண்பாட்டை வளர்க்க வேண்டிய பெரிய கடமை பாரத நாட்டினருக்கு முன்னே நிற்கிறது.

இந்தியப் பண்பாட்டின் அஸ்திவாரம் கடவுள் நெறி, அல்லது சமயவாழ்க்கையே ஆகும். இந்நாட்டு எல்லைகளாகிய இமயத்தின் உயர்வை அடிகளாலும் மைலாலும் கணக்கிடாமல் இறைவன் எழுந்தருளியுள்ள இடம் என்று மதிப்பது பாரதப் பண்பு. தென் குமரியைக் கடல்களின் இணைப்பென்றும் முனையென்றும் நினைப்பதை விட அம்மையின் இடம் என்று நினைப்பதே நமக்கு வழக்கமாகி விட்டது. ஆதலின் பாரதப் பண்பாட்டை எடுத்து நிறுத்தத் தலைப்படுபவர்கள் இந்நாட்டுச் சமயவாழ்வைச் செப்பஞ் செய்ய வேண்டும். சமயவாழ்வை மீட்டும் வளமாக அமைக்க வேண்டும். அதனைச் செய்யாமல் வேறு துறைகளில் தொண்டு புரிவது உயிரூட்டாமல் உடம்புக்கு அணிசெய்வதேயாகும்.

கடவுளும் அவன் அருளும் என்றும் மாறா இயல்போடு இருந்தாலும், சமய வாழ்வு காலத்துக்குக் காலம் புதிய புதிய நெறியில் இயங்கும். அடிப்படையில் மாறுதல் இராவிட்டாலும் இயங்கும் நெறியில், தொண்டு வகையில் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப வேறுபடும். ஆதலின் இன்று நமக்கு இன்றியமையாமல் உள்ளது சமயவாழ்வு; அவ்வாழ்வில் மறுமலர்ச்சி இன்றியமையாதது.

சமய வாழ்வில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு. இங்குள்ள திருக்கோயில்கள் இன்றும் வழிபாட்டிடங்களாக, மக்களின் மதிப்புக்குரியனவாக இருப்பதனால் இது விளங்கும். தமிழ் நாட்டு வாழ்வே திருக்கோயிலைச் சூழ்ந்து வளர்ந்தது என்று சொல்லிவிடலாம். அக்கோயில்கள் மாத்திரம் இருந்தால் போதுமா? மனிதனுடைய முயற்சிகள் அனைத்திலும் சமய உணர்ச்சி கலக்க வேண்டும். அப்போது தான் மனிதனுக்கு மனிதன் பகையும் பொறாமையும் கொள்ளாமல் வாழமுடியும்; யாவரும் இறைவனாகிய ஒரு தந்தையின் மக்கள் என்ற உணர்ச்சி தலைப்படும்.

இத்தகைய சமய மறுமலர்ச்சிக்காகத் தொண்டு புரியும் பெரியவர்களில் அருட்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் ஒரு தனிச் சிறப்பைப் பெற்றிருக்கிறார்கள். குடும்பத்தை நீத்துத் துறவுபூண்ட அவர்கள் தமிழ் நாடு முழுவதையுமே தம்முடைய குடும்பமாக எண்ணிச் சமய வாழ்வில் புதிய மறுமலர்சியை உண்டாக்கிவிட்டார்கள் மகாத்மா காந்தியடிகள் போராட்டத்தில் புதிய புரட்சியை உண்டாக்கினார். வினோபாபாவே பூதானத்தில் புதிய புரட்சியை உண்டாக்கினார். குன்றக்குடி அடிகள் சமயவாழ்வில் புதிய புரட்சியை உண்டாக்கிவிட்டார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கும் துறவிகளுக்குமே உரியதென்று இடைக் காலத்தில் தவறாக எண்ணப்பட்டுவந்த சமய அறிவை இளைஞர்களின் உள்ளத்தில் ஊட்டிவிட்டார்கள், சமயவெறியை ஊட்டாமல் சமயப்பற்றை இளைய உள்ளங்களில் ஏற்றினார்கள்.

அழகான பேச்சு, அறிவாழமுடைய பேச்சு, காரண காரியத் தொடர்புடைய பேச்சு, ஆணித்தரமான பேச்சு என்று அவர்களுடைய அற்புதமான சொற்பொழிவுகளை யாவரும் பாராட்டுகிறார்கள். "குடிசைக்கும் கோயிலுக்கும் உள்ள தூரத்தைக் குறைக்கவேண்டும்.” "அறிவு உப்பைப் போல் அளவாக இருக்க வேண்டும்; உணர்ச்சியை அது கெடுக்கக் கூடாது." "கலை தேசபக்தி ஆகிய தொண்டுகள் நாட்டையும் வீட்டையும் செப்பம் செய்யும். ஆனால் உள்ளத்தைத் திருத்துவதற்குச் சமயந்தான் துணைபுரிய வேண்டும். "தமிழும் தெய்வ நெறியும் வேறு வேறு அல்ல” என்பவற்றைப்போன்ற உண்மைகளைப் புதிய உருவத்தில் அவர்கள் வெளியிடும் பொழுது மக்கள் அவர்களுடைய அன்பையும் அறிவையும் ஆற்றலையும் உணர்ந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் அருள்நெறித் திருக்கூட்டத்தை நிறுவி, இளைஞர்களையும் ஏழைகளையும் ஈடுபடுத்திய பெருமை அவர்களுக்கு உரியது.

அடிகளார் எழுதிய பதினாறு கட்டுரைகளை இப்புத்தகத்தில் காணலாம். அவர்களுடைய சொற்பொழிவு வெள்ளம் போன்றது. அவற்றிற் காணும் துளிகள் இவை. ஆனாலும் வைரம் போன்ற கருத்துக்களை வெளியிடுபவை. எல்லாக் கட்டுரைகளிலும் சமய உணர்ச்சி இழையோடுகிறது.

சமய வாழ்க்கையின் உயர்வையும், பண்டைத் தமிழர்களின் வாழ்வில் சமயம் பெற்றிருந்த சிறப்பையும், வளவாழ்வுக்கு மூலகாரணம் தூய உள்ளம் என்பதையும், இவை போன்ற கருத்துக்களையும் இக்கட்டுரைகளில் காணலாம்.

தமிழ் நாட்டில் சமயத் துறையில் புதியதொரு பொலிவும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அடிகள் உவகை கொள்கிறார்கள். பாண்டிய அரசன் இறைவன் திருக்கோயிலில் குடையை மடக்கிப் பணிந்த பழஞ் செய்தியையும், தேர்வண் மலையன், உழுத நோன்பகடு வைக்கோலைத் தின்றது போலப் பிறர் நலம் பேணி வாழ்ந்ததையும் தெரிவிக்கிறார்கள். சிவபிரான் திருக்கோயிலில் நந்தி யெம்பெருமாள் நிற்பதற்கு ஒரு புதிய உரை, அரிய உரை காணுகிறார்கள், ஆண்டவன் சந்நிதியில் நந்தியைக் காணும் போது, “ஏ மனிதனே! நீ மனிதன் என்று மார்தட்டாதே. பகுத்தறிவாளன் என்று பறை சாற்றாதே, பெருமிதங் கொள்ளாதே! இந்த எருதினுடைய-பிறர் நலம் கருதுகின்ற, உழைக்கின்ற உள்ளத்தை முதலில் பெறுவாயாக! அந்த உள்ளம் உனக்கு வந்துவிட்டதானால் சமய வாழ்க்கையில் இறைவனோடு தொடர்பு கொள்ளும் இன்ப வாழ்க்கையில் நுழைகின்றாய்” என்று அது சாற்றுகின்றதாம். அரிய தத்துவம் இது.

பாரிக்கு உவமை கூற வந்த கபிலர் எருக்கம்பூவையும் ஏற்கும் பரமனைக் கூறுவதையும் அன்பும் அருளும் பெறாதவர் நரக வாழ்க்கை பெறுவதையும், அறமல்லாதவற்றை மக்கள் விரும்பி ஒழுகுவதனால் நாடு வளம் குன்றுவதையும், அதனால் மழை பொய்ப்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். காணப்பட்ட உலகத்தைக் கொண்டு காணப்படாத கடவுளை அறியும் நெறியைத் தெளிவாக்குகிறார்கள்.

நம்முடைய முடிந்த முடிவான லட்சியமே ஜனநாயக வாழ்வுதான் என்று மயங்கிக் கிடக்கும் இன்றை உலகுக்கு அதனினும் உயர்ந்த சமய வாழ்வின் நலத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறார்கள். மக்களை மக்களாக மதிக்கச் சொல்லிக் கொடுப்பது ஜனநாயகம். மக்களை கடவுளாக மதித்து அன்பு செய்யக் கற்றுக்கொடுப்பது சமயம். தன்னோடு ஒப்பாக நினைப்பதிலும் தன்னினும் உயர்ந்ததாக மதிப்பிடுதல் பெரிதும் நன்மை பயக்கும் என்பதற்கும் ஐயமுண்டோ?" என்னும் பகுதி பொன்னெழுத்திற் பொறிக்கப் பெறத்தக்கதாகும்.

இயல்வது கரவாமல் வாழும் வாழ்க்கையையும், தமிழிலக்கியம் காட்டும் நெறியையும், தமிழின் பலவகை மேன்மைகளையும் அடிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். 'இன்று தமிழ் நாட்டில் ஒரு புது நோய் பரவி வருகிறது. அதுதான் வசன கவிதை என்பது. யாப்பிலக்கணம் கைக்குள் அடங்காமற் போய் வசனத்தை ஆசிரியர்கள் கையாண்டால் அது கவிதையாகிவிட முடியாது' என்பதை மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பலமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வள்ளுவர் வாக்கும் வாதவூரர் மணிமொழியும் பல இடங்களில் சொல்லாலும் பொருளாலும் ஒத்து நடப்பதை ஒரு கட்டுரையில் தெளிவாக்குகிறார்கள். அடிகளுக்குத் திருவாசகத்தில் ஈடுபாடு மிகுதியென்பதைப் பலர் அறிவார்கள். அந்த ஈடுபாட்டை இந்தக் கட்டுரையிலும் காணலாம். தமிழிசையைப் பற்றிய கட்டுரையில் ஏழு நரம்புகள் சேர்ந்து அமைந்தவை பண்கள் என்னும் போது, "ஒளியில் ஏழு வகையான நிறங்கள் இருந்து இயங்குதல்போல, ஒலிகளும், ஏழு வகைகளாக இயங்கி வெளியிற் காரியங்களை நிறை வேற்றுகின்றன” என்று எழுதுகிறார்கள். இது புதிய கருத்து, பாராட்டத்தக்கது. தமிழக எல்லையைப் பற்றிய கட்டுரைக்கு ஓரளவு பயன் கிடைக்கவிருக்கிறது. அது முற்றும் நிறைவேற இறைவன் திருவருள் செய்ய வேண்டும்.

இறுதிக் கட்டுரை மணிவாசக நினைவிலே நம்மை ஆழ்த்துகிறது. புத்தகத்தை மூடும் போது அடிகளாரும் வாதவூரடிகளாரும் நம் உள்ளத்தை விட்டு அகல்வதில்லை.

அழகான முறையில் வெளிவந்துள்ள இந்த நூல் "இன்னும் பெரிய நூல்கள் வரவேண்டும்" என்ற பெரும் பசியை உண்டாக்கினால் அது வியப்பாகாது. அந்தப் பசியையும் தணிக்க அடிகளார் முன்வரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

கல்யாண நகர்-மயிலை
8-12-55.

கி. வா. ஜகந்நாதன்


2. ஈழத்துச் சொற்பொழிவுகள்

1968-சனவரி

அணிந்துரை

சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கத் தொண்டாற்றி வருபவர் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் தவத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள்.

"சமயம் என்பது பொழுது போக்குவதற்காகப் பேசுகின்ற வரட்டு வேதாந்தமல்ல. அது வாழ்க்கையை அறநெறியில் செம்மையுறச் செய்யும் சிறப்பு வாய்ந்தது” என உலகெலாம் உணர்த்தி வருபவர்கள் அடிகளார்.

தமிழ் நாட்டில் அடிகளார். பேசாத கழகமோ, சங்கமோ, மாநாடோ இல்லை எனலாம். மக்களுடன் ஒன்றிப் பழகித் துறவிக்கும் சமூகத்துக்குமிடையே இருந்துவரும் பெரு வெளியைச் சுருங்கச் செய்து வரும் பெருமை குன்றக்குடி அடிகளாருக்கே உரியது.

அருள் நெறித் திருக்கூட்டம் ஒன்றைத் தமிழகத்திலும் ஈழ நாட்டிலும் அமைத்து இளைஞர்களிடையே இறைபக்தியை ஊட்டி, சைவமும் தமிழும் உய்யக் காலத்துக்கேற்ற தொண்டுகளில் சைவ உலகை ஈடுபடச் செய்து வருபவரும் அடிகளார் அவர்களே.

"ஞானிகளது கடமை, உலகத்தைத் துறப்பது அல்ல; உலகை அறிவதே அவரது கடமை” வள்ளுவரும் இதை ஆணித்தரமாகக் கூறியுள்ளார். "உலகத்தை வெறுக்கும் தன்மையல்ல; சிறந்த உலகை உருவாக்குவதே ஞானிகளின் கடமையாக அமைய வேண்டும்” என்பது அடிகளாரின் ஆசை.

மக்களுக்காகச் சேவை செய்வதற்காக மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதையே நான் வேண்டுவேன்" என அடிகளார் மேடைகளில் கூறுவதுண்டு.

பழமையிற் காலூன்றிக் காலத்துக்கேற்ற முறையில் சைவத்தையும் தமிழையும் பேணி வளர்த்துவரும் அடிகளாரை 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் வரவேற்கும் பணியில் பேரன்பர்களுடன் அடியேனும் பங்கு கொண்டிருந்தேன். இதனை வாழ்க்கையில் ஒரு பெரும் பயன் எனக்கருதி அகமகிழ்கின்றேன்.

"இன்பத் தமிழையும் இறையருள் நெறியையும் நினைக்கின்ற பொழுதெல்லாம் இலங்கையை நினைக்காமலிருக்க முடியாது. சைவத் தமிழ்த் தொண்டனாக வாழவேண்டும் என்று விரும்பிய நம்மை இலங்கைத் தமிழ் அன்பர்கள் வண்ணப் பணித்து வருகவென்று வான் கருணை காட்டினார்கள். செந்தமிழும் சிவநெறியும் கண்ணெனப் போற்றி வளர்க்கின்ற அந்நாட்டு மக்கட்கு என்றும் ஓர் எளிய தொண்டன் என்பதை மிக மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கின்றோம்" என ஈழ நாட்டு மக்களுக்கு அன்று கூறினார்கள்.

இன்றும் அடிகளார் அவ்வாறே ஒரு தொண்டனாக விளங்கி வருகின்றார்கள். அகில இலங்கை காந்தி சேவா சங்கத்து அன்பர்களின் அழைப்பை அவ்வப்போது ஏற்று ஈழமணித்திருநாட்டுக்கு வருகை புரிந்து செந்தமிழையும், சிவ நெறியையும் வளமாக்கப் பேருதவி புரிந்து வருகின்றார்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பதையும் மக்களுக்கு அழகாக எடுத்துரைத்தும் வருகின்றார்கள்.

சமீபத்தில் அடிகளார் அவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் மின்வேகத்திற் சென்று இனிய பல சொற்பொழிவுகளை ஆற்றித் திருமுறையின் சிறப்புகளை எல்லாம் மக்களின் உள்ளங்களில் பதிய வைத்தார்கள்.

தவத்திரு அடிகளாரின் நாவிலிருந்து உதிர்ந்த கருத்துக் களை திரட்டி நூல் வடிவில் தந்துள்ளார் எங்கள் அன்பர் ஈழத்துச் சிவானந்தன். செந்தமிழ்ப் பற்றும் இறைபக்தியும் நிறைந்த இளைஞர் சிவானந்தனுக்குத் தமிழ் மக்களின் நன்றி உரியது.

ஈழத்துச் சிவானந்தன் தமிழ் கூறும் நல் உலகத்துச் சிவானந்தனாக விளங்க வேண்டுமென்பதே எமது பிரார்த்தனையாகும்.

தமிழ் வழ்க!

இராஜ. அரியரத்தினம்

'கலாநிதி'
சாவகச்சேரி
இலங்களை 3-4-83


3. குறட் செல்வம்

1989-ஏப்ரல்

மதிப்புரை

வள்ளுவன் குறளை வையகம் முழுதும் அறியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள விளக்கமும் அதிகம்.

கு.xvi.30 வாழ்க்கையின் அடிமுதல் நுனிவரை அளந்து காட்டக் கூடிய ஒரே நூல் திருக்குறள். மனித வாழ்க்கை மூன்று துறைகளில் போகிறது என்பதைத்தான், 'அறம் பொருள் இன்பம்' என்ற பகுப்பு நமக்குக் காட்டுகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு திருக்குறள் எதிரொலிக்கிறது.

தோண்டத் தோண்டச் சுரக்கும் ஊற்றுப்போல், படிக்கப் படிக்கப் புதிய பொருள்களைக் காட்டுகிறது திருக்குறள். வேறு எந்த மொழியிலும், இவ்வளவு தெளிவான ஒரு நீதி நூல் இருக்குமா என்பது சந்தேகமே.

பேராசிரியர்களின் வழியில் வள்ளுவரின் கண்ணோட்டத்தை ஆராய்கிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். நடையின் எளிமை, படிப்பதைச் சுலபமாக்குகிறது. அடிகளாரின் திறனாய்வு நடை, பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் அமைந்திருக்கிறது.

ஒரு குறளுக்கு ஒரு தலைப்பு என விளக்கம் தருவது புதிய முறை. பெரும்பாலும், ஓர் அதிகாரத்துக்கு ஒரு தலைப்பு என்ற முறையில்தான், மற்றவர்கள் எழுதி உள்ளனர். எல்லா குறள்களுமே பொருள் உள்ளவைதான் என்றாலும், சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒட்டிவரும் குறள்கள், தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டியவை.

ஆயிரத்து முந்நூற்று முப்பது அரும் குறள்களில் நாம் தேடி, சாறு திரட்டிக் கொண்டிருக்கும் வேலையை, சுலபமாக்க தாமே திரட்டித் தந்திருக்கிறார் அடிகளார்.

வாழ நினைப்பவர்களுக்கு வழி காட்டும் நூல் இது. பொருட் செறிவுள்ள நூல்களை வெளியிடும், 'கலைவாணி புத்தகாலயம்' உரிமையாளர் நண்பர் சீனி. திருவாவுக்கரசு அடக்கம் மிக்கவர். ஆழ்ந்த கருத்துகளில் பற்றுள்ளவர். ஒவ்வொரு வீட்டிலும் புத்தக நிலையத்திலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் இது.

சென்னை-17

அன்பன்,
கண்ணதாசன்.


அணிந்துரை

(குறட் செல்வம்)

குருமகா சந்நிதானம் சீலத்திரு

ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.


'குறட் செல்வம்' எனப் பெயருடைய தமிழுரைச் செய்யுள், திருவள்ளுவர் அருளிய பாச் செய்யுளை ஆராய்ந்தெழுதியதாகும். நாற்பத்தேழு தலைப்பில் குடிமை, ஊழ், மொழியுறவு, மக்கள். அறம், பொருள். இன்பம், வீடு முதலிய பல பொருள் குறித்த நுண்பொருட் பெருந் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாய் விளங்கிக் கற்போர் அறியாமையைக் களைந்து, மெய்ப் பேரறிவை வளர்ப்பதாக உள்ளது இச் செந்தமிழ்ப் பனுவல்.

இதன் ஆசிரியர் குன்றக்குடி அடிகளார் என வழங்க விளங்கும் திருவண்ணாமலை ஆதின குருமகா சந்நிதானம் சிலத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், மதி நுட்பம் நூலோடு உடையார்: நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்; சொற்பொழிவில் வல்ல பொருட்பொழிலாளர்; பற்பல பனுவல் எழுதிய ஆசிரியர், அவர்கள் சிலத்தை அறிந்து கொள்ள விழையும் அன்பர் அனைவரும் இதில் 34 ஆவது தலைப்பின் (பக்கம் 117) முடிவுரையை நோக்குதல் இன்றியமையாதது.

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாவது யாது! அதைத் தங்களது கடனாகக் கொண்டு உலகிற்கு ஆற்றும் நெறிவழுவாத அவர்களே இன்ன சீரிய நூல் ஆக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் நீடினிது வாழ்க, இன்ப அன்பாகிய சிவானுபூதியில் திளைக்க.

இவ்வாசிரியர் நூல்களை வழக்கமாக மிக்க சிறப்புடன் அழகாக வெளியிட்டு வரும் கலைவாணி புத்தகாலயத்து முதல்வர், நிறைநாட் செல்வர், சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இச்செல்வத்தையும் மற்ற எட்டுச் செல்வத்தையும் எய்தி நன்கு வாழ்க!

சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக
பரமாசாரிய சுவாமிகள்

மெய்கண்ட தேவர் ஆதீனம்
காஞ்சிபுரம்

4. வாழ்க்கை விளக்கு


1972-ஏப்ரல்

மு கண்ணப்பன்

தமிழ்நாடு அரசு

அறநிலைய அமைச்சர்

தலைமைச் செயலகம்

சென்னை-9

5-4-72.

சமயத் துறையிலும், சமுதாயத் துறையிலும் சீரிய பணியாற்றி வரும் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களை அறியாதார் இல்லை. அவர்கள் சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே கைவரப் பெற்ற சிறந்த சிந்தனையாளர். சமயத் துறையில் புதைந்து கிடக்கும் சீரிய கருத்துக்களை யெல்லாம் சிறந்த நூல்வடிவாகவும், சொற்பொழிவுகளாகவும் தமிழகத்திற்கு அளித்து, தமிழுக்கும் தமக்கும் பெருமை தேடிக்கொள்பவராவர்.

இன்றைய சமுதாயத்திற்குப் பெரிதும் இன்றியமையாக் கருத்துக்களைத்தான் "வாழ்க்கை விளக்கு" என்ற நூல் வடிவாக வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். வள்ளுவம் உலகெங்கணும் பரவி வாழ வேண்டும். அதனால் தமிழகம் பெருமை ஈட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக வள்ளுவருக்கு விழாக் கொண்டாடி மகிழ்வதோடு, உலகப் பொது நெறியாக மலருவதற்கு நாம் என்ன வழி வகைகளை மேற்கொண்டோம் என்று சாடுவதிலே உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கிக் காக்க, நிலம், சாதி, சமயம், இனம், மொழி ஆகியவைகளுக்கப்பால் நின்று நிலவி ஒளிரும் திருக்குறளைத் தேசிய இலக்கியமாக இனியாவது அறிவித்து வள்ளுவத்தைப் பரப்ப வேண்டும் என்று தம் வேட்கையை வெளியிடுகிறார்.

சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி சமய வளர்ச்சியின் தேவையை உணர்த்தும் அரிய கருத்துக்கள் பலவற்றையும் அவருக்கே உரிய ஆற்றொழுக்கு நடையில் அளித்திருக்கிறார்கள். தமிழில் திருமுறை வழிபாட்டு முறையை மேற்கொள்ளுமாறு தமிழகத்து இறையுணர்வு மிக்கோரை வலியுறுத்தும் பாங்கு பெரிதும் பாராட்டி மகிழ்வதற்குரியதாகும்.

அடிகளார் அவர்கள் எழுதியுள்ள 'வாழ்க்கை விளக்கு' என்னும் இந்நூல் படிக்க இன்பம் பயப்பதோடு மட்டுமின்றி புதிய சிந்தனைகளைப் படிப்போர் மனதிலும் கிளறிவிடும் ஆற்றல் பெற்றனவாய் மிளிருகின்றன.

அடிகளார் அவர்கள் எழுதியருளிய 'வாழ்க்கை விளக்கு' என்னும் இந்நூல் தமிழக மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.

அன்பன்,
மு. கண்ணப்பன்


அணிந்துரை
(வாழ்க்கை விளக்கு)


டாக்டர் ந. சஞ்சீவி, எம்.ஏ., எம்.லிட்., பிஎச்டி.,
டிப். மானிடவியல், டிப். அரசியல் - ஆட்சியியல்.
தமிழ்த்துறைத் தலைவர்
சென்னைப் பல்கலைக் கழகம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ்த் திரு நிறைந்த
பெரியார், நம்மிடையே இன்று வாழும் சைவத்தமிழ்
மடாலயத் தலைவர்களுள் சமரச-சமதர்ம-நோக்கும் போக்கும் சிறந்த செம்மல் தவத்திரு குன்றக்குடி அடிகளாரே. இக்காரணத்தாலேயே இன்றைய தமிழக அரசு அவரைத் தமிழ் நாடு மேலவை உறுப்பினராயும் மேவியுள்ளது. இதனால் அடிகளாரும் பெருமை பெற்றுள்ளார்; அரசும் பெருமை பெற்றுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ் பற்றியும் சமயம் பற்றியும் சாற்றிய புதிய சிந்தனைகள் பலவற்றின் கட்டுரைத் தொகுப்பே இந்நூல். செந்தமிழிலேயே பேசவும் பேசும் போக்கிலேயே எழுதவும் எழுதும் போக்கிலேயே பேசவும் வல்லவர் அடிகளார். அவர் சமுதாயத்தின் அடிமுடி கண்ட அண்ணல். எனவே அவர் எழுத்திலும் பேச்சிலும் அன்றாட வாழ்வின் அடிப்படைகள் ஆராயப்படுதல் இயற்கை. இவ் வுண்மைக்கு இந்நூலும் தக்க சான்று.

கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் தொண்டுள்ளமும் சமயத் தோய்வும் பகுத்தறிவும் பண்பாடும் நிறைந்த அடிகளார் கட்டுரைகள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினராலும் ஆழ்ந்து கற்றுப் பயன்பெற-பயன்தரத்தக்கன. இந்நூலுள் அடிகளாரின் மொழி நாட்டுப் பற்றுகளையும், அறிவருளாற்றல்களையும் காட்ட வல்லனவாய் என் உள்ளங் கவர்ந்த சில பகுதிகளையேனும் ஈண்டு எடுத்துக்காட்டுக்களாய்த் தொகுத்துத் தரச் சுவையும் பயனும் தருவதாகும்.

இவ்வாறு தொட்ட இடமெல்லாம் புதிய சிந்தனைகள் புகட்டும் இந்நூலை-ஒவ்வொரு-ஏன்-தமிழகத்தின் ஒவ்வொரு தனியகத்திலும் இருக்கத்தக்க இந்நூலை வெளியிட்டுள்ள கலைவாணி பதிப்பகத்தார்க்கு என் உளங்கனிந்த பாராட்டு.

ந. சஞ்சீவி

சென்னை
2-3–72

5. புனித நெறி


1973

மதிப்புரை


(கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்)

கலைவாணியின் அழகிய மலராக-புனித நெறியாக இந்நூல் வெளிவருகின்றது. தமிழ்த்திரு சீனி, நாவுக்கரசர் இந்நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கின்றார்.

குன்றக்குடி முருகன் திருத்தலம்; இங்கே வீரச் செம்மல்களான மருது சகோதரர் எத்தனையோ திருப்பணிகளைச் செய்தனர். இந்தக் "குன்றின் வளரும் அருவியில்லையே என்று அவ்வீரர் அந்தக் காலம் வருந்தினர்" "என்றும் பொழியும் தமிழின் அருவி" என்றொரு புலவர் பெரிய மருது மகிழப் பாடினார். இன்று குன்றக்குடியில் சைவத் திருக்களைத் தேவார திருவாசக உருக்களைக் கொண்ட தமிழருவி மகிழ்ச்சியால் விம்மித் ததும்பி அலைவீசிப் பாய்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்த அருவி முழக்கம் கோயில் வழிபாடுகளில் முழங்குகிறது; மேடைகளில் வீறிடுகிறது. தமிழகம், இலங்கை, மலேயா நாடுகளிலெல்லாம் "வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க முரசு கொட்டுகிறது: அரசியல் மன்றங்களில் ஆர்வக் குரலெடுத்து அருள் விழிப்பைத் தருகின்றது."

இத்தகு தமிழருவியே தவத்திரு குன்றக்குடி அடிகள் ஆவார். அவர் பேச்சில் தமிழின் இனிமையும் காலத்திற்கேற்ற புதிய சிந்தனையும் புரட்சிக் கருத்துக்களும், மேன்மை கொள் சைவ நீதியும் ஒப்பனையும், கற்பனையும் செம்மை கொண்டு களிநடம் புரிகின்றன. சொற்கள் உள்ளத்திலிருந்து வெள்ளமாகப் பொழிகின்றன.

கலைவாணி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "புனித நெறியை” வாங்கிப் படியுங்கள். உயர்ந்த கருத்து, திருக்குறளும், திருமந்திரமும் திருமுறைகளும் அளிக்கும் பொருத்தமான மேற்கோள்கள், சலசலத்தோடும் அருவி நடை, வரிக்கு வரி வாழ்வை உயர்த்தும் பண்பாடு-எல்லாம் ஒருங்கே அடிகளார் நூல்களிற் காணலாம்.

கடவுள் யாதினும் இனியன், யாவர்க்கும் நல்லான், நெஞ்சக் கோயிலான், ஓயா உழைப்பாளி, அன்பின் பித்தன், அடியார்க்கு எளியோன் என்று அடிகள் விளக்குகிறார். அவனருளே கண்ணாகக் காணும் பெற்றியைத் துலக்குகிறார். சைவ நெறியைத் தெளிவாக மனதிற் பதிய வைக்கிறார். சைவவுணவு, சரியை கிரியை யோக ஞான சாதனம் எல்லாம் எளிய நடையில் சிறுசிறு கட்டுரைகளாக இந்த நூலிற் காண்போம். துறவு எது? உண்மைத் தொண்டர், பத்திமை என்னும் வித்து, உய்யும் நெறி, பொய்யிலா அடிமை, அகப் பகையை வெல்க முதலிய கட்டுரைகளை ஊன்றிப் படியுங்கள். சைவ ஒளி உங்கள் மனதிற்புகும். புலன்-கதவுகள் திறக்கும், திருவருட் சோதி இறங்கி வாழ்வில் இன்பமே சூழும், எல்லோரும் இனிது வாழ்வீர்.

கலைவாணி புத்தகாலயம் வெளியிடும் ஆன்மக் கருவூலங்களை ஆர்வமுடன் வரவேற்கிறேன். கலைவாணி புத்தகாலயம் பொலிவெய்தி வாழ்க! மலைவாணியின் கருத்தருவி கலைவாணியின் யாழிற் பாய்ந்து முழங்குக.

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!

சுத்தானந்த பாரதி
20-10-73

யோக சமாஜம்
அடையாறு சென்னை-20

அணிந்துரை
(புனிதநெறி)


(டாக்டர் மெ. சுந்தரம், எம்.ஏ, எம்.லிட், பிஎச்டி)
தமிழ்துறைத் தலைவர், மாநிலக் கல்லூரி, சென்னை.

சமயம் என்பது போலிச் சடங்கு நெறியன்று; அன்பையும் அமைதியையும் நல்கி வாழ்வை உயர்த்தவல்ல நெறி. சமயம், பெயரால் பலவாக இருக்கலாம். ஆனால் எல்லாச் சமயங்களும் உலகுக்குணர்த்தும் மெய்ப்பொருள் ஒன்றேயாம். "வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே நின்விளையாட் டல்லால் மாறுபடும் கருத்தில்லை” என்பது தாயுமானார் கூற்று. இன்றைய உலகின் துன்பத்திற்கும் துயரத்திற்கும் அடிப்படைக் காரணம் அது சமய நெறியைப் போற்றாமையேயாம். இவ்வுண்மையை உணர்ந்து தமிழுலகிற்குப் புனித நெறி சமய நெறியே என்ற உண்மையை தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். அவர்தம் திருவாக்குகளின் தொகுப்பே "புனித நெறி" என்னும் இந்நூல்.

சமயத் துறையில் போலிகளின் செல்வாக்கு மிகுந்ததே அதன் வீழ்ச்சிக்குக் காரணம். கோயில்களும் மடங்களும் சமய நெறியை வளர்க்கத் தவறிவிட்டன. அடிகளார் கூறியது போல, “இன்றோ கண்ணப்பர்களை வளர்க்க நம்முடைய கோவில்கள் விரும்பவில்லை. சிவகோசரியர்களைப் பாதுகாக்கவே விரும்புகிறது" (பக்.42), இதனால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய சமய வீழ்ச்சி.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் உலகம் உய்ய வேண்டும் என்ற பேராசை உடையவர். துறவு பற்றி அடிகளார் குறிப்பிடும்போது "துறந்த பொருட்களைக் கொண்டு துறவியை நிர்ணயிக்க முடியாது. துறக்கக் கூடாததை அவன் துறக்காமல் இருக்கிறானா என்றுதான் காணவேண்டும் (பக்.58) என்று கூறுகிறார். அடிகளார் தமிழாசையைத் துறக்காதவர்; உலகு உய்ய வேண்டும் என்ற ஆசையைத் துறக்காதவர்; இறைவன் திருவடியில் வைக்கும் பற்றைத் துறக்காதவர். இன்றைய சமய உலகில் அடிகளார். ஒரு புரட்சித் துறவி. இத் துறவியாரின் அருள் கனிந்த பேருள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துச் சுரக்கும் நல்லெண்ணங்களை இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் காண முடிகிறது. அடிகளாரின் அருள்வாக்கில் தெய்வ ஒண்தீந் தமிழின் திருவருள் நலம் மணக்கிறது.

அடிகளாரின் திருவாய் மொழிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. சான்றாகச் சில காண்போம். "சொர்க்கத்தின் வாயிலைத் திறக்கும் சாவி கடமையேயாகும்” (பக்.94),

"சொற்கள் ஈரக் கசிவுடையனவாக இருக்க வேண்டும் என்பது பற்றியே போலும்-சொல்லை வழங்கும் நாவினைச் சுற்றி ஈரப்பசை எப்பொழுதும் இருக்க உமிழ்நீர்ச் சுரப்பிகளை இயற்கை அமைத்தது (பக்.39).

பொறிகளின் வலிமை புன்தொழிலை வளர்க்கும். புலன்களின் தூய்மை புண்ணியத்தைச் சேர்க்கும்" (பக்.7).

பண்டைநாட் சிவஞான முனிவரும், இராமலிங்க வள்ளலாரும், பாம்பன் சுவாமிகளும் இன்ன பிறரும் ஒருருக் கொண்டு திருவவதாரம் செய்தாற் போல இற்றை நாள் நம்மிடையே வாழ்ந்து வரும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை நாத்தழும்பேற வாழ்த்துவதேயன்றி பாராட்ட என்ன இருக்கிறது? வாழ்க அடிகளார்!

அடிகளாரின் திருவாக்குகளைத் தொகுத்தளிப்பதன் மூலம் தமிழுலகிற்கும், சமய உலகிற்கும் கலைவாணி புத்தகாலய அதிபர், நண்பர் சீனி. திருநாவுக்கரசு அவர்கள் அருந்தொண்டு புரிந்துள்ளார். அவரது அரும் பணிகள் நாளும் சிறந்திட வாழ்த்துகிறேன்.

மாநிலக் கல்லூரி
இன்னணம்,
சென்னை-600 005
மெ. சுந்தரம்
6. நமது நிலையில் சமயம்-சமுதாயம்


1975

மு. கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு
சென்னை.


சிறப்புரை

இருபதாம் நூற்றாண்டின் சமய-சமுதாய ஞானியாகப் பாராட்டப் பெறுகிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எதைச் சொன்னாலும் தெளிந்து சொல்வார்-தெளி வாகவும் சொல்வார். எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே' என்பதுபோல, தவத்திரு அடிகளார். அவர்களின் எழுத்தும் சொல்லும், சிந்தனையும் செயலும் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டே அமையும்.

"நாம் காணும் சமய நெறி, சமுதாயத் தொடர்புடைய நெறி, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக-சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறது. அது; மனித சமுதாயத்தின் சிக்கல்கள் தொல்லைகள் அனைத்தையும் மாற்றியமைக்கின்ற பொறுப்பும் கடமையும் சமய நெறிக்கு இருக்கிறது" என்று கூறிச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு பெரும் இணைப்புப் பாலத்தை உருவாக்கும் பணியை அவர் இயன்ற வகையெல்லாம் செய்து வருகின்றார். சமயவாதிகளிடையேயும் சமுதாயவாதிகளிடை யேயும் அவர் ஒரு புரட்சிச் சின்னமாகவே திகழ்கின்றார். அவர், சைவநெறி பரப்பும் திருமடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாலும் அவரிடத்துச் சமய வெறியையோ, பிறசமயக் காழ்ப்பினையோ காண இயலாது.

சமய - சமுதாய சமரச ஞானியாக விளங்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில், 1974-75ஆம் ஆண்டுக்குரிய சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தின் கீழ் 'நமது நிலையில் சமயம்-சமுதாயம் என்னும் தலைப்பில் சமயம் சமுதாயம், "சமய மறுமலர்ச்சி", 'சமய சமுதாய மறை' என்னும் முப்பெருந் தலைப்புகளின் கீழ் மூன்று நாட்களாக நிகழ்த்திய பேருரையைத் தொகுத்துப் பல்கலைக் கழகம் வெளியிட்டிருக் கிறது.

'நமது சமுதாயத்தில் சமய நிறுவனங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை-படாடோபமான திருவிழாக்கள் நடத்துகின்றன. அதுபோழ்து, நமது சமுதாயத்தை சேர்ந்த பல கோடி மக்கள் ஊமையராய்ச்-செவிடர்களாய்ப் பாழ்பட்டுப் புழுதியில் கிடப்பதைச் சமயத் தலைவர்கள் உணரத் தவறுகின்றனர். மக்களைத் தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக? என்ற வினாக்களை வரலாறு எழுப்பத்தான் செய்யும். இனி, வரலாறு எழுப்ப இருக்கும் வினாக்கள் சொற்களாகத் தோன்றா, அருளியல் வழிப்பட்ட புரட்சியாகத்தான் தோன்றும். அது சீரமைப்பைச் செய்தே தீரும்' (பக். 68) என்று அவர் சமய நிறுவனங்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பிடத்தக்கது. நூல் முழுவதும் இத்தகைய பல்வேறு புரட்சிகரமான சிந்தனைகளைக் காண்கிறோம்.

மொத்தத்தில், மனித இனத்துக்குச் சமயம் பெரிதும் பயன்படவேண்டும் என்னும் அருங்கருத்தை அழுத்தந் திருத்தமாக- ஆணித் தரமாக-வலியுறுத்தி யிருக்கும் அடிகளாரின் இந்தச் சொற்பொழிவு நூல்-அனைவரும் படித்தறிந்து கொள்ள வேண்டிய கருத்துப் பெட்டகம்; சிந்தனைக் களஞ்சியம்.

மு. கருணாநிதி
அணிந்துரை
(நமது நிலையில் சமயம் - சமுதாயம்)

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியராய் இருந்து, இருபத்தைந்து ஆண்டுகள் சிறந்த தமிழ்ப் பணியாற்றிய சொல்லின் செல்வர் டாக்டர் சேதுப்பிள்ளை அவர்கள் தமது அன்னையார் திருமதி சொர்ணம்மாள் பெயரால் நிறுவிய அறக்கட்டளைச் சொற்பொழிவினை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நிகழ்த்தினார்கள். சமயத் தொண்டராகவும், தமிழ்த் தொண்டராகவும் ஒருசேர விளங்கும் அவர்கள் "நமது நிலையில் சமயமும் சமுதாயமும்” என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, மூன்று நாட்கள் முறையே, சமயம் சமுதாயம்', 'சமய மறுமலர்ச்சி', "சமய சமுதாய மறை" என்ற உட்தலைப்புகளில் சொற்பொழிவுகளைத் திறம்பட நிகழ்த்தினார்கள். சமய உலகில் இருந்து கொண்டு சமுதாய நோக்கு நோக்குவதில் அடிகளார் தனித்திறம் வாய்ந்தவர். தந்தை பெரியார் அவர்களுடன் தனிப்பெரும் நட்புப் பூண்டு இவர் இருந்த நிலையே இதற்கு நல்ல விளக்கம் தரும். மாடதிபதியாக இருந்தாலும், மகேசுவரனைப் பற்றி எண்ணினாலும் இவருடைய சிந்தனைகள் மக்கட் சமுதாயத்தைச் சுற்றியே சுழல்வதனைக் காணலாம். இம்முறையில் இவர் ஒரு புதுமைத் துறவியாகப் - புரட்சித் துறவியாகக் காட்சியளிக்கின்றார்.

மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்தவும், இயல்பாய் குறையினின்று நீங்கி, நிறை நலம் பெறச் சமயம் துணை செய்கிறது என்றும், பல்வேறு சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறியே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குத் தகுந்த நெறி, அந்நெறியே தமிழர் சமய நெறி என்றும் கடவுள். தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை உடையோர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் சின்னங் களும், சடங்குகளும் மட்டுமே கடவுள் நெறிகள் ஆகா என்றும், மழைபொழிந்ததின் விளைவை மண் காட்டுவதைப் போல், சமயநெறி நின்று வாழ்வோரின் இயல்பினை வையகம் காட்ட வேண்டும் என்றும், விளைவுகள் காட்ட வேண்டும் என்றும், தமிழ்ச் சமயத்தில் தீண்டாமை இல்லையென்றும் "ஒன்றே குலம்" என்றும் திருமூலர் ஆணையின்படி ஒரு குலம் அமைக்க வேண்டுமென்றும், மனித உள்ளங்கள் அருள் நெறிவழி இணைக்கப் பெறும்பொழுது மண்ணகம் விண்ணகம் ஆகும் என்றும், தவத்திரு அடிகளார் . அவர்கள் தமது முதல் நாள் சொற்பொழிவில் எடுத்துக் காட்டியிருப்பது உணர்ந்து போற்றத்தக்கதாகும்.

"சமய மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் அருளுடைய அடிகளார் அவர்கள் நிகழ்த்தியிருக்கும் இரண்டாம் நாள் சொற்பொழிவு, புரட்சிக் கருத்துகள் பல பூத்துக் குலுங்குவதாகும். சான்றாக, பழங்காலத் திருக்கோயில்களில் எல்லோரும் சென்று வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது என்றும், ஒரு சிலர் ஆதாயம் கருதி இடையில் அந்த உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள் என்றும், திருக்கோயில் கருவறைக்குச் சென்று புனலும் பூவுமிட்டு வழிபடும் உரிமையைக் கண்ணப்பர் பெயரால் அடைந்தே தீர வேண்டும் என்றும், வழிபாட்டுக்குரிய மொழி தமிழே என்றும், இறைவனைத் தமிழால் பாடித் துதி செய்தல்-நூறு கோடி அர்ச்சனைக்கு ஒப்பானது என்றும், தமிழ் வழிபாட்டு இயக்கம் மொழி இயக்கமன்று, அதன் நோக்கம் பக்தியை வளர்ப்பதே ஆகுமென்றும், பழங்காலத் திருக்கோயில்கள் சமுதாயத்தைக் கண்ணின் இமைபோல் பாதுகாக்கும் நிறுவனங்களாக நிலவின என்றும், ஒவ்வொரு திருக்கோயில்களும் குடிகளைத் தழுவியதாக விளங்கவேண்டும் என்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவர்கள் கூறியிருக்கும் கருத்துகள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கனவாகும்.

மூன்றாம் நாள் சொற்பொழிவு "சமய சமுதாய மறை” என்ற தலைப்பில் அமைந்துள்ளது. திருக்குறளே சமய மறை நூல் என்றும் மறை நூலுக்குரிய இயல்புகளனைத்தும் திருக்குறளுக்குப் பொருந்தியிருக்கின்றனவென்றும், வாழ்வியல் நூலாகவும் திருக்குறள் அமைந்து மக்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல வழி செய்கிறது என்றும் அடிகளார் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றார். தனி மனிதன், சமய மனிதனாக, சமுதாய மனிதனாக, உலக மனிதனாக, ஒரு முழு மனிதனாக முழு வளர்ச்சியும், மலர்ச்சியும் பெறுவதற்குத் திருக்குறளே பெருந்துணை செய்யவல்லது என்றும் கன்பூஸியஸ், சாக்ரடீஸ், மார்க்ஸ், லெனின், வால்டர், ரூஸோ முதலிய உலகச் சிந்தனையாளர்கள் கருத்துகளோடு ஒப்பிட்டு நோக்கி வள்ளுவத்தின் மாண்பினை வகையுற எடுத்து மொழிகின்றார்.

சமயத்திலிருப்பவர்கள் சமுதாயத்தை மறந்து விடுகிறார்கள், சமுதாயப் புரட்சிவாதிகள் சமயத்தைக் கண் கொண்டு பார்க்கவும் விரும்புவதில்லை என்று பொதுவாக ஒரு குறை கூறப்படுவதுண்டு. ஆனால் நம் மதிப்பிற்குரிய திரு வண்ணாமலை குன்றக்குடி ஆதினத் தலைவராக விளங்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அருந்தமிழ் கற்ற அறிஞர். சைவமும் தமிழும் தழைத்தினிதோங்க வேண்டும் என்ற பழமொழியோடு, சமயமும் சமுதாயமும் தழைத்தினி தோங்கவேண்டும் என்ற புதுமொழியைப் படைத்து, மேன்மைகொள் சமய நீதி விளங்குக உலகமெல்லாம் என்று பாடுபட்டு வரும் அடிகளார் தமிழ்ப் பண்பாட்டுத்துறவியார் ஆவர். சமயத் தொண்டையும், சமுதாயத் தொண்டையும் தம் இரு கண்களாகப் போற்றி வளர்த்து வரும் அடிகளார் அவர்கள் ஆற்றிய அருமையான சொற்பொழிவுகளை நேரில் கேட்டு மகிழ வாய்ப்பற்ற பலரும் பயன் கொள்ளும் வண்ணம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இந் நூலாக சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வருகின்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு நம் நெஞ் சார்ந்த நன்றி.

சென்னை
நெ. து. சுந்தரவடிவேலு,
21-7-1975
துணைவேந்தர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,


பாராட்டுப் பாடல்
(நமது நிலையில் சமயம்-சமுதாயம் )
(வெண்பா)


சங்கத் தமிழ்மணமும் சைவத் திருநெறியும்
எங்கும் பரப்பும் இறையடியார்-எங்கள்
குருமுனிவர் குன்றக் குடியடிகள் ஞானத்
திருமொழிஎம் சிந்தனைக்குத் தேன்.


(விருத்தம்)


நமது நிலையில் சமுதாயம்
நாடும் சமய நெறியதனை
அமுத மொழியில் மழைபொழிந்தார்
அருளார் குன்றக் குடியடிகள்;
அமரர் சொல்லின் செல்வர்உளம்
அமைத்த நல்லறக் கட்டளையில்
தமிழர் நாட்டுத் தலைநகரில் -
தத்துவ நாதம் முழங்கியதே!


- புத்தனேரி ரா. சுப்பிரமணியம்.
7. வானொலியில்


1975 வைகாசி

இரா. நெடுஞ்செழியன்
கல்வி, சுற்றுலா அமைச்சர்.


அணிந்துரை


'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற குறிக்கோளை உள்ளத்தே கொண்டு துறவிக் கோலம் பூண்டு, தமிழ்த் தொண்டு ஆற்றிய சீரியோர் சிற்சிலர், பழங்காலந்தொட்டு செந்தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் காலத்தில், அத்தகைய தலைமுறையைச் சார்ந்தவர் என்று மதிப்பிடத் தக்க முறையில், அருந்தமிழ்த் தொண்டு ஆற்றி வருபவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள்.

'எதிலும் தமிழ் எங்கும் தமிழ்' என்ற கொள்கையில் உறுதி பூண்டு, தமிழ் எல்லா வகையிலும் மேம்பாடு எய்தவும், தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் சிறப்பு அடையவும், தமிழ் நாடு எல்லா நெறிமுறைகளிலும் முன்னோடியாக விளங்கவும் வேண்டும் என்பதற்காக, அடிகளார் அவர்கள், தமது நேரம், நினைப்பு, உழைப்பு, ஊக்கம், அறிவு, ஆற்றல், முனைப்பு, முயற்சி ஆகிய எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவர்கள் சிறந்த சிந்தனையாளர்; நல்ல தமிழ்ச் சொற்பொழிவாளர்; அழகு தமிழ் எழுத்தாளர்; பொதுத் தொண்டு புரியும் பெற்றியாளர்; பழகுவதற்கேற்ற பண்பாளர்.

அடிகளார் அவர்கள் அவ்வப்போது வானொலியின் வாயிலாக ஆற்றிய சீரிய உரைகளைத் தொகுத்து 'வானொலியில் அடிகளார்' என்ற பெயரில் இந்நூலினை வெளிக்கொண்டு வந்துள்ள "கலைவாணி புத்தகாலயத்தினரைப் பாராட்டுகிறேன்".

கு.xvi.31

பல்வேறு சீரிய தலைப்புக்களின் கீழ் உரைகள் அமைந் திருக்கின்றன. அடிகளார் எடுத்துக் கொண்ட பொருளைத் தமக்கேயுரிய சிறப்பான நடையில் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டுகிறார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் அழகு முறையை அடிகளார் பாராட்டும் தகைமையில் கையாண்டுள்ளார்கள்.

தமிழ்ப் பெருங்குடி மக்களின் சிந்தனையைத் துரண்ட இந்த நூல் நல்ல முறையில் பயன்படும் என்பது திண்ணம். நூலை வெளியிட முன்வந்த பதிப்பாசிரியர் திரு. சீனி திருநாவுக்கரசு அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

இரா. நெடுஞ்செழியன்

சென்னை
24-6-75

8. மனம் ஒரு மாளிகை
1978 வைகாசி அணிந்துரை
சிலம்பொலி, சு. செல்லப்பன், எம்.ஏ.பி.டி.,


'மனம் போல வாழ்வு' என்பர் ஆன்றோர். மனத்தின் அடிப்படையிலேயே ஒருவர்க்கு வாழ்வும் தாழ்வும் ஏற்படுகின்றன. மனநலம் நல்வாழ்வைத் தருகின்றது. மனக் கோட்டம் தன்னைக் கெடுப்பதோடு தன்னைச் சார்ந்தோரையும் கெடுக்கின்றது. இதற்கு வரலாறுகள் மிகுதியும் உண்டு. அப்படியானால் நல்வாழ்வு வாழ உதவும் மனநலத்தை எல்லோரும் கடைப்பிடித்தால் என்ன?

கரும்பிருக்க இரும்பு கடித்துச் சிலர் ஏன் கலக்கமுறு கின்றனர்? விளக்கிருக்க மின்மினியில் தீக்காய்ந்து சிலர் ஏன் வாடுகின்றனர்? நல்ல வாழ்வு நீக்கி அல்லலுற்ற வாழ்வு கொண்டு ஏன் அயருகின்றனர்? எல்லாவற்றிற்கும் காரணம் மனநலம்-மனவளம் இன்மையே. அம்மனநலம்-வளம் எளிதில் அமைந்து விடாது. அதற்கு மிகுந்த பயிற்சி தேவை; கட்டுப்பாடு தேவை; இன்னல்கட்கு தளரா இரும்புள்ளம் தேவை. எனினும் பிறரின்னல் கண்டு உருகும் கரும்புள்ளமும் தேவை.

இவ் வழிமுறைகளால் மனநலத்தை-வளத்தை அடைவது அடைய முயல்வதே நல்வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய உயர்வழியாம். நிலையில்லா மனத்தை நிலை நிறுத்தி நிலையான வாழ்வு வாழ்வதே அறிவுடைமை. இதைத்தான் 'மனமென்னுங் குரங்காட்டி திரியுமென்னை' ஆட்கொள்ள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார் வள்ளலார். 'மனம் எனும் தோணி' பற்றி நான் அலைக் கழியாது அருள வேண்டும் என்றார். அப்பர் பெருமான். "இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நின்பால் உள்ளம் விடலறியேன்”- ஆகத் திரியும் என்னை ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்றார் மணிவாசகர்.

உண்மையான உயர்ந்த நல்வாழ்வுக்கு மனவளமே மூலகாரணம் என்பதனைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். காரண காரியத் தொடர்போடு நிலைநிறுத்தி, வழிமுறைகள் கூறி குறிக்கோள் கொண்ட உயர்வாழ்வு வாழ வழிவகுத்து உதவுவதே தவத்திரு அடிகளாரின் 'மனம் ஒரு மாளிகை' என்னும் இவ்வரிய நூல். மனத்தை மாளிகையாக்க வேண்டும் என்பதே இவர்தம் சிறந்த குறிக்கோள். அதற்குரிய பல முயற்சி களையும் தெளிவாய் விளக்கிச் சொல்கிறார் நம் அடிகளார்.

அன்புள்ளம் பெற்றுவிட்டால் பின் பெறவேண்டியது என்னே? எனவே, 'மனித உலகம்.அமைதியாகக் கூடிக் கலந்து சிரித்து மகிழ்ந்து வாழ அன்பே தேவை. அன்பு நெறியில் மனித உலகம் வாழும். அதனால் இந்த மண்ணகம் சொர்க்கம்' ஆகும் (பக் 11) என்று தெளிவுறுத்துகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்றெடுத்துரைத்து அறிவைப் பெறுதற்குரிய வாயில்களில் முதன்மையானது சிந்தனை(பக்.13) என்று அறிவுறுத்துகிறார்.

‘வாழ்க்கை என்ற மாளிகைக்கு ஒழுக்கம் ஒளியூட்டுகிறது' (பக்.17) என்று வாய்மையின் தேவையை வலியுறுத்துகிறார். 'வாழ்க்கை வளர, இன்பமுற வாழ அறிவறிந்த ஆள் வினை தேவை' (பக்.22) என்று முயற்சியின் பெருமையைக் காட்டுகிறார். 'கற்றல்-கேட்டலின்' மூலம் பெறும் அறிவு என்ன இருந்தாலும் கடன் வாங்கிய பிழைப்பே. நினைத்தலின் மூலம் பெறும் அறிவே உண்மை அறிவு. (பக்.30) என்று மனத்தின் செயலாகிய எண்ணிச் செய்தலை எடுத்துரைக்கிறார்.

இவைகள் எல்லாம் மனத்தை மாளிகையாக்கும் வழிக்குரிய படிகளாம். இப்படிகளை நாம் எங்ஙனம் பெறுவது? அதற்கும் ஆசிரியர் வழி கூறாமலில்லை. கல்விக்குரிய நூல்களும் கற்பதற்குரிய நூல்களும் அறிந்து கற்றல் வேண்டும் என்கிறார். சங்க இலக்கியங்களும், சிலம்பு முதலிய காப்பியங் களும், திருக்குறளும், தேவரார திருமுறைகளும், ஆழ்வார்களின் பிரபந்தங்களுமே அவை என்று சுட்டிக் காட்டுகிறார்.

'தன்னை அறிந்தால்' பிறிதொன்றால் ஆங்கு யாதொரு தீமையும் இல்லை. இதனால்தான் கணியன் பூங்குன்றனார் என்ற பெரும்புலவர் புறநானூற்றில் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்றார் (பக்.52) என்று எடுத்துக்காட்டி அதுவே பேரின்பம் என்று விளக்குகிறார். வள்ளுவம் ஏன் பிறந்தது என்ற வினாவை எழுப்பிக் கொண்டு “வள்ளுவம் பதவுரை பொழிப்புரைக்காகப் பிறக்கவில்லை, மண்செழிக்க மழை பொழிவது போல மனிதகுலம் செழிக்க-மனித குல உள்ளங்கள் செழிக்க - உலகு செழிக்க - உயர் கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது" (பக்.55) என்று ஆணித்தரமான விடையும் கூறுகிறார்.

ஒழுக்கமும், பத்திமை-அருளும் செவிச் செல்வமும் மனத்தைப் பயன்படுத்தும் என்று பறைசாற்றுகின்றார். கொள்கை குறிக்கோள் தாங்கி நடைபோடும் போது மேட்டுக் குடியினர் ஆதரவு கிடைக்காது. நம்முடைய கொள்கைகளை இதயத்தில் ஏந்தித் துணை நிற்க வேண்டியவர்கள். சாதாரணமானவர்கள். கிராமங்களில் வாழ்பவர்கள். அவர் களைத் தேடுங்கள் (பக்.87) என்று நம்மைத் துரண்டுகிறார்.

நாட்டுவெறி, மொழிவெறி, இனவெறி ஏற்படுத்தாத இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் என்று நிறுவுகிறார். ஆசிரியர் தமிழ் மொழியின்மேல் மிகுந்த பற்றுடையவர் என்பது நூல் முழுதும் காணக்கிடக்கின்றது. தமிழ் வளர்ந்தால் தமிழன் வாழ்வான் தமிழினம் நிலைத்து வாழும்' (பக்.10) என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார்.

இருபதாம் நூற்றாண்டே சமுதாய மறுமலர்ச்சி நூற்றாண்டு என்று சிலர் கூறுவதை மறுத்து அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே சமுதாய மறுமலர்ச்சியினைத் தோற்றுவித்துப் புரட்சி செய்தார் என்பதை 'ஏழில் இருபது' என்ற தலைப்பில் அழகுபட வரைந்துள்ளார். இறுதியில் நூலுக்கு முத்தாய்ப்பு வைத்தது போல மனம் ஒரு மாளிகை யாவதற்குக் குறியெதிர்ப்பில்லாத அறச் சிந்தனையே தேவை என்று நிறுவுகிறார். இத்தகைய அறச்சிந்தனை நம் மன மாளிகையில் நின்று நிலவுமானால் உலகில் ஒப்புரவு நெறி வளரும் (பக்.200) என்பது ஆசிரியரின் நம்பிக்கை.

இதுவரை ஆசிரியர் கூறிய கருத்துகள் மனம் ஒரு மாளிகையாய்க் காட்சிதந்து அருளுள்ளம் தழைப்பதற்குத் தேவையான நன்னெறிகளாய் அமைந்தன. இக்கருத்துக்கள் எல்லாம் தமிழிலக்கியம் பலவும் தரும் பிழிவுதானே என்று நாம் எண்ணலாம். அதுதான் உண்மை.

இவ்வரிய நூலைப் படிக்கும் போது பல தமிழிலக்கியங்களைப் படித்துப் பெறும் உயர்ந்த கருத்துப் பிழிவுகள் நமக்கு எளிமையாய்க் கிடைப்பதே இந்நூலால் நாம் பெறும் பயன் எனலாம். இந்நூலில் நாம் விரும்பி நுழைவதற்கு ஆசிரியர் 'ஏடுதேடு காதலர், உருவெளித் தோற்றம்' பொல்லாங்கு 'தற்போக்கு' முதலிய தனித்தமிழ் சொல்லாட்சிகளைக் கையாண்டு மறைமலை அடிகளை நினைவுறுத்திச் செல்வதும் காரணம் ஆகும்.

'எது அன்பு? எந்த உயிரிடத்தும் காரணம் இல்லா மலேயே பள்ளந்தாழ் உறுபுனல் போல் தோன்றி வளர்வது அன்பு (பக்.9) என்று வினா விடை முறையிலும், உவமை கூறி விளக்கும் முறையிலும் சொற்றொடர்களைக் கையாண்டு திரு.வி.க.வை நினைவூட்டிச் செல்வதும் காரணம் ஆகும். அது மட்டுமன்று; 'திருக்குறள் காட்டும் சமயம், காழ்ப்புகளைக் கடந்த கவினுறு நெறி; மேடு பள்ளங்களைக் கடந்த மேலான நெறி, ஒன்றே குலம் என்ற உத்தம நெறி' (பக். 185) போன்ற எதுகை மோனைமிக்க எழில்நடையைக் கையாண்டு ரா. பி. சேதுப்பிள்ளையை நினைவூட்டிச் செல்வதும் காரணமாகும். மேலும் அகர எழுத்து ஒரு பகுதி வளைந்து கிடந்தாலும் வளைந்த வட்டத்தைத் தாண்டி ஒரு நேர்க்கோட்டில் முடிகிறது. அப்பொழுதே 'அ' முதலாக அமைகிறது. அது போலவே மனிதன் சார்புகளின் காரணமாக வளைந்து கிடக்கும் வாழ்க்கையினை நேராக்கிக் கொள்ளுதலை அகரத்தை எடுத்துக் காட்டுதலின் மூலம் விளக்குகிறார் வள்ளுவர் (பக்.187) என்று ஆசிரியர் தரும் பொருள் நயமும் நூலுள் நம்மை இழுக்கிறது எனலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அடிகளாரிடம் காணப்படும் மற்றொரு சிறப்பே இந்நூல் சிறத்தற்குக் காரணமாகவும் அமைகிறது எனலாம். அஃதாவது அவரின் பேச்சு நடையும் எழுத்து நடையும் ஒன்றுபோலவே அமைவது சிறப்புடையதாம். இதனால் அவர்தம் நூலைப் படிக்கும் போதும் அவர் முன்னே அமர்ந்து அவராற்றும் சொற்பொழிவை நேரில் கேட்கும் உணர்வைப் பெற்று மகிழ்கிறோம்.

இத்திறன் அவர்க்கே வாய்த்த அரிய பேறு. இத்தரு சிறப்புகள் யாவும் ஒருங்கே அமைந்து இந்நூலை அணி செய்கின்றன. எனவே, மனப்போராட்டங்களால் மாளாத்துயர் கொள்ளும் இன்றைய சமுதாயத்தின் மனத்தை, ஒரு மாளிகையாக்கி உயர்வாழ்வு வாழ வழிசொல்லும் அழகுத் தமிழ் நூல் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அடிகளாரின் மனமாளிகைக்குள் நுழைய ஒரு நுழைவு வாயிலாக அழகிய முறையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ள நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு நம் நன்றி உரியதாகும். இந்நுலின் நோக்கம் இனிதே நிறைவேற தமிழ்த் தாய் வாழ்த்துவாளாக!

சிலம்பொலி, சு. செல்லப்பன், எம்.ஏ.பி.டி.


9. திருவள்ளுவர்


1981

டாக்டர் நா. பாலுசாமி,
எம்.ஏ., பி.எல்., எம்.லிட், பிஎச்.டி.
தமிழ்த்துறைத் தலைவர்
அண்ணாமலை நகர்,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
22—11—81


அணிந்துரை


ஆண்டுதோறும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பற்றிய மூன்று சொற்பொழிவுகளைத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1979ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளனர். வாழ்வியல், சமயவியல், அரசியல் ஆகிய முத்தலைப்புகளில் அவர்தம் சொற்பொழிவுகள் அமைந்துள்ளன.

தவத்திரு அடிகளார் தமிழுக்கும், சைவத்திற்கும் ஆற்றி வரும் தொண்டுகள் அளப்பரிய. தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் அவர் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். ஆழந்த சிந்தனை, பரந்த நூலறிவு, சித்தாந்தப் பின்னணி, சொல்வன்மை முதலியன அடிகளாரிடம் அமைந்துள்ள பாங்கு வியத்தற்கு உரியது. சமுதாயத்தின் மீது பாசமும், நேசமும் கொண்டு பல்லாற்றானும் பணியாற்றிவரும் அடிகளாரைச் சமுதாய முனிவர் என்றே கூறலாம்.

எழுத்திலும், பேச்சிலும், அடிகளார் தமக்கெனத் தனிநடை வகுத்துக் கொண்டவர். பொருள் ஆழமும், சொற் செம்மையும், ஆராய்ச்சி வளமும் அவர்தம் எழுத்துக்களில் மிளிரக் காணலாம்.

வாழ்வியல் என்ற முதற் சொற்பொழிவில் இல் வாழ்க்கை என்னும் அதிகாரத்துள் வரும் "துறந்தார்க்கும்” எனத் தொடங்கும் குறட்பாவில் அமைந்துள்ள "இறந்தார்க்கும்” என்ற சொற்கு, அவர்தரும் விளக்கம். ஆய்வுக்கு உரியது. தனக்கென வாழாது, பிறர்க்கென வாழ்ந்து, குறிக்கோள் ஒன்றை நோக்கிப் பயணம் செய்து, அதனை எய்தும் வகையால் இறந்து பட்டவர்தம் குறிக்கோளைத் தொடர்ந்து சென்று நிறைவு செய்தல், இறந்தார்க்கு இல்லறத்தார் ஆற்றும் துணையாகும் என்பது அடிகளார் கருத்து. அன்றியும், தம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும், உரியன செய்து வைக்காமல் சமுதாயப் பணி ஆற்றுங்கால் இறந்து பட்டவர்தம் குடும்பத்தினரை வளர்த்துப் பாதுகாத்தலும், இல்லறத்தார் கடமையாகும் என்பர் அவர். இவ்வாறு,துணிந்து சிந்தித்துப் பிறரையும் சிந்திக்கத்துாண்டும் ஆற்றல், அவரது தனிச் சிறப்பாகும்.

"சமயவியல்" என்ற இரண்டாம் சொற்பொழிவில் திருவள்ளுவர் கூறும் துறவுபற்றி அடிகளார் தரும் விளக்கம் அவரது சிந்தனைத் துணிவையும், புரட்சிப் போக்கையும் புலப்படுத்துவதாகும். "பெண், மண்ணும் பொன்னும் செய்யும் தீமையைச் செய்யமாட்டாள். இரக்க உணர்ச்சியைத் தூண்டி வளர்க்கும் ஆற்றல் பெண்ணுக்கு உண்டு. ஆனால் தமிழகத்துத் துறவு வாழ்க்கையில் மண்ணையும் பொன்னையும் துறக்காமல் பெண்ணை மட்டுமே துறக்கும் நெறி மேற்கொண்டதால், துறவிலும் முழுமையான வெற்றி பெறவில்லை” இக்கருத்து அடிகளாரின் திறந்த நெஞ்சப் பாங்கினைப் புலப்படுத்தும்.

"அரசியல்" என்ற மூன்றாம் சொற்பொழிவில் தனி உடைமை, பொது உடைமை பற்றிய அடிகளாரின் கருத்து ஆராய்தற்கு உரியது. "மனித குலத்திற்குத் தனி உடைமை உரிமையைத் திருக்குறள் வழங்கவில்லை. திருக்குறள் பொது உடைமையையே ஏற்றுப் போற்றியுள்ளது. அடிகளாரின் இத்துணிவுக்குரிய அகச்சான்றுகள் திருக்குறளில் உள்ளனவா என்பது விவாதத்திற்கு உரியதேனும், அது சிந்தனைக்கு விருந்தாகிறது.

சுருங்கக் கூறின், அடிகளாரின் மூன்று சொற்பொழிவு களும் திருவள்ளுவரின் உள்ளத்தை உள்ளவாறு உணர்தற்குப் பெரிதும் துணை புரிகின்றன என்பது ஒருதலை, தண்ணார் தமிழளிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று வெளிவரும் இவ்வரிய நூல், தமிழ் அன்னைக்குச் சூட்டப் படும் மற்றும் ஒரு மணம் மிக்க மாலையாகும்.

சொர்ணம்மாள் நினைவுப் பொழிவுகளை வெளிக் கொணர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் தருகின்ற அண்ணா மலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சை.வே. சிட்டிபாபு அவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை வேந்தர் தமிழிசைக் காவலர், செட்டிநாட்டரசர், டாக்டர் மு. அ. முத்தைய செட்டியார் அவர் களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். இந்நினைவு அறக்கட்டளையை நிறுவிய டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களைத் தமிழகம் என்றும் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளது. இதனைச் செவ்விதின் அச்சிட்டு உதவிய சிதம்பரம் முகுந்தன் அச்சகத்தார்க்கும் அச்சு ஆகுங்கால் அச்சுப் பிழைகளைத் திருத்திய கா. ம. வேங்கட ராமையாவுக்கும் நன்றி. -

நா. பாலுசாமி

தமிழ்த் துறைத் தலைவர்

இந்திய மொழிப் புல முதன்மையர்

அண்ணாமலை நகர்,
22-11-81

10. சமய இலக்கியங்கள்
1981 செப்டம்பர்


அணிந்துரை


ஞானத்தமிழாகரர், டாக்டர், புலவர்
வை. இரத்தினசபாபதி பி.ஓ.எல், எம்.ஏ, பிஎச்.டி.


தத்துவத்துறை
சென்னைப் பல்கலைக் கழகம்,


சென்னை. "சமய இலக்கியங்கள்" என்பது நூலின் தலைப்பு. "சமயம்" என்ற சொல்லின் நிலை இரண்டுங்கெட்டான் நிலை, "சமயம்" என்ற சொல்லொலியைக் கேட்டவுடன் எழும் எண்ணக் குவியல்கள் எல்லாவற்றையும் குப்பையென நீக்கவும் குறித்த பொருள் இது என உணர்த்தவும் நின்ற முதல் நூல் இது. சமயக் கணக்கர்தம் மதிவழி போகாது, உலகியல் கூறிப் பொருளிது என்ற பொய்யில் புலவரே இந்நூல் ஆசிரியர்.

ஆளுதல், ஆளப்பெறுதல் என்பன இருவேறு செயல்கள். வேறுபாடுகளை இணைக்கும் ஒருமைப்பாடு என்பது அந்நியமன்று; வேறுபாடுகளிலேயே உள்ளார்ந்து கிடப்பது. வேறுபாடுகளில் அந்நியத் தன்மை புக இடம் கொடுத்தால் பிரிவினைப்படுத்தப் பெற்ற ஒட்டாநிலைகள் ஆதிக்கம் பெற்றுவிடும். இது சுதந்திரம் தந்த வரலாற்றுப் பாடம். இந்திய விடுதலை முழக்கம் அடிகளின் இளமைக் காலத் திருப்புமுனையாதலின், நூலின் உள்நின்ற தலைப்பு நான்கனுள் (சேக்கிழார் காட்டும் சமுதாயம், சமய இலக்கியங்கள், சித்தாந்தச் செந்நெறி, சமய இலக்கியங்களில் அறநெறி) இரண்டாவது தலைப்பே-நான்கனுள் நன்றே ஆளும் நிலை பெறுகிறது. அந்நியமிலாமை என்பது ஒருமைப்பாட்டு நியதி. அந்நியமிலாமையின் அரன்கழல் செலும் என்பது சித்தாந்தச் செந்நெறி.

அன்றாலின் கீழிருந்து அறமுதல் நாற்பொருளை வல்லார்கள் நால்வர்க்கும் வழங்கிய பரம்பொருளே குன்றைக் குருமணியென மானிடச் சட்டை தாங்கி, நாற் பொருள் பயக்கும் ஒருநடைத் திருவளர் இந்நூலை உலகுய்ய அருளியது என இந்நூலை ஆராதிக்கலாம். ஏனெனில், ஆராதிக்கும் மரபுநெறியில் மாறாதவன் யான். ஆனால், அடிகளை ஆராதனைப் பொருளாக ஆக்குவதைவிட, விமரிசனப் பொருளாகவே கடந்த 27 ஆண்டுகளாக அமைத்துச் செயல்பட்டுவிட்டேன். தனிவழிச் சிந்தனைக் கோட்டையைத் தகர்த்தெறிந்து கடுமையான விமரிசனத்தையே வாழ்வுப் பாதையாக்கிக் களங்கண்டு, தனிநின்று களங்கொண்டு, பரணி கொண்ட தமிழ் மாமுனிவர், மக்களாய்ப் பிறந்தார் அனைவர்க்கும் சமயத் தலைவராய் இவர் ஒருவரைத்தான் வரலாறு படைத்துக் கொடுத்திருக்கிறது. எவ்வாறு?

புத்தகம் கைகளுக்கு அணிகலம்' என்பது ஒரு வாக்கியம். நாட்குறிப்பேடு இந்த இடத்தை இந்நாளிற் பெற்றது. நாட்குறிப்பேடுகள் பற்பல அமைப்புடையவை. நீதி மன்றக் கையேடு, ஆயுள் காப்பீட்டுக் கழகக் கையேடு அவ்வத் துறைச் செய்திகளைத் தொகுத்துத் தருவன. சமய இலக்கியங்கள் எனப்பெறும் சிவனடியார்களை அடிப்படையாகக் கொண்ட நாட்குறிப்பேடு அமைத்து, இன்று கண்ணப்ப நாயனார் என்ற சமய இலக்கிய நாள் என்று நினைவு கொள்வது மட்டுமன்றி, அவர் மேற்கொண்ட வாழ்வை, இந்நாளில் எத்தகைய தொண்டாக அமைத்துச் செயற்படுத்தலாம் எனச் செயல் திட்டமும் இயக்க வடிவும் அமைத்து வாழ்ந்து வரும் சமயத் தலைவர், என்னறிவு சென்றளவில் யானின்று அறிந்தபடி, வேறு எந்த உலக குருவோ, சமயத் தலைவரோ இல்லை. 63 நாயன்மார்களையும் தம்மைப் போலவே தம் கோயிலில் இருப்பிடமளித்த சிவன், தனித்தனி இடமே அளித்தான். 63 சமய இலக்கியங்களையும் நடைமுறைப் படுத்திய ஒரே ஒரு நாயனார்தான் உலகத்தில் உண்டு. அவரே சமய இலக்கியங்களாக நின்ற சிவனடியார்களைத் தம்முள்ளே இயக்கவழியில் செயல்படுத்திய தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதனாலேயே, சமயம் என்ற சொல்லுக்குச் சமுதாயநலம் என்பதே பொருளாயிற்று.

"சமயம்" என்ற சொல்லுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட வாழ்வியற் கோணங்களில் நின்று இயல்வரையறை செய்யப் பெற்றுள்ளது. சமயம் என்பது வாழ்க்கைமுறை. மனிதனின் சராசரித் தகுதியுடைமையை வரையறுக்கும் அளவுகோல்; மனித வாழ்க்கையை உயிர்ப்புள்ளதாக்கி, முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே மலர்ந்தது சமயம் என்பது அடிகள் அமைக்கும் விளக்கம்.

அடிகள் சிந்தனை ஓட்டத்தை விரைந்து பற்றுதல் எளி தன்று. உலகச் சிந்தனையாளர்கள் மூவகைப்படுவர். வரலாறு தழுவிய சிந்தனையாளர்கள், பரிணாம வளர்ச்சியைத் தழுவிய சிந்தனையாளர்கள். நிகழ்காலக் கணிப்பிலிருந்து வருங்காலக் கணிப்பைக் கற்பனையில் தழுவும் சிந்தனையாளர்கள். அடிகள் இம்மூன்றையும் அறிவர்; அவர்தம் சிந்தனை இம்மூன்றையும் தழுவிய சிந்தனைபோலவே தோற்றும். ஆயினும் அடிகள் சிந்தனை, இம்மூன்றனுள் அடங்காது. எவ்வளவு உயர்ந்த ஒன்றையும் சராசரி மனிதன் நிலையில் அமைத்துக் கொடுப்பதே அச்சிந்தனைச் சிறப்பு.

"ஒரு மனிதன், சராசரித் தகுதியுடையவனாக இருப்பதற்கு அவன் இறைவழிபாடு நிகழ்த்துபவனாக இருக்க வேண்டும்.”

"சராசரி மனிதன் தன் சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்கிறோம்.”

"சமய ஞானம் எக்காரணங்கொண்டும் சராசரி மனிதர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்காது.”

என்பவைகளைக் காண்க. இவ்வகையில் அடிகள் புதியதொரு சித்தாந்தச் செந்நெறியை வகுத்தருளியுள்ளார்கள்.

உடல் வாழ்வு தன்னலம் பற்றியது; உயிர் வாழ்வு பொதுநலம் பற்றியது. சராசரி மனித வாழ்க்கையை உயிர்ப் புள்ள தாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே தோன்றியது சமயம். இதனை நிறுவிய அடிகள், "பொதுவில் ஆடுபவன் நீழலில் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல், நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல், கிழடுதட்டிச் செயலிழந்து போன நமது சமய அமைப்புக்கள் குறையுடைய நடைமுறைகளே” என்று சாடுவதன் மூலம் நாம் வினா எழுப்பிச் சிந்திக்க வேண்டிய நிலையில்லாமலேயே முடிவை வெளிப்படுத்தியுள்ள நயம் சிந்தனையாளர்களால் நீள நினைதற்குரியது.

யாண்டும் வற்புறுத்தாத புதிய சிந்தனையை அடிகள் இந்நூலில் அமைத்துள்ளார்கள். தோய்ந்த சிந்தனை. ஆம், அருளில் தோய்ந்த சிந்தனை. அருளில் நின்று தன்னை இழந்த சிந்தனை. அருள்நளிை பழுத்த ஆள்வினையுடைமை. அஃறிணை எனத் தம்மை நிறுத்தும் தொண்டு இவை மூன்றும் சராசரி மனிதன் சமுதாயம் தழுவிய சமய அனுபவ முத்திர்ச்சியாளனாக நின்ற-உயர்குறிக்கோள் நிலைக்குரிய அடிப்படைகள்.

தருமகருத்தாக் கொள்கையை அடிகள் விளக்கும் போது அக்கொள்கையே புதிய வலிவுபெறும். இந்நூலில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்கள்.

"இப்பொழுது நம்மிடத்தில் பொருள் இல்லை. உடன் வந்துள்ள உதவியாளரிடம் பணம் இருக்கிறது. நாம் கேட்கும் பொழுது அவர் தருகிறார். அல்லது குறிப்பறிந்து தருகிறார். இங்கே தருதல் எந்த மனநிலையில் நிகழ்கிறதோ அதே மனநிலைதான் தேவை”.

சமய இலக்கியங்கள் சிவனடியார்களே. நடமாடுங் கோயில்களே எனக் கொண்டு, சமயம் என்பது வாழ்க்கை முறை என்பதைச் சரசாரி மனிதநிலையில் விளக்கிடும் உலகத் தத்துவச் சிந்தனையாளர்களையும் சமயச் சிந்தனையாளர் களையும் திட்டமிட்டுச் சந்தித்த சந்திப்பே இந்நூல். பிசிறு தட்டாத சிவானுபவ விளக்கமே சமயம்.

நான் கண்ட சேக்கிழார், நான் கண்ட காந்தியடிகள் எனக் கூறும் சிந்தனையை ஒதுக்கி, அருளில் தோய்ந்த சிந்தனையில், அருள் பழுத்த ஆள்வினையுடைமையுடன், 'பணிசெய்து கிடைப்பதே என முழங்கிய அஃறிணை உணர் வுடன் சமயத்தை-வாழ்க்கையை அமைத்துக் கொள்க என்று கூறி, சிவம் வாழ்த்துப் பொருள் அன்று; வாழ்வுப் பொருள் என்று உலக மக்கள் அனைவரையும் ஒருமைப் பாட்டுரிமையில் இணைந்து வாழ வேண்டும் என ஆணை யருளியுள்ளார்கள்.

என்றைக்கும் எந்தம் வாழ்பொரு ளாய
குன்றைக் குருமணி வாழ்க வாழ்க!

சென்னை-5
இங்ஙன்,
27-8–1981
வை. இரத்தினசபாபதி
11. சிந்தனைச் செல்வம்
1983-ஏப்ரல்

முன்னுரை


டாக்டர். வா.செ. குழந்தைசாமி, துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600 025.


தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆழ்ந்த சிந்தனை யாளர். அடிகளார் சமயத் துறையின் தலைமை மாளிகை களில் புதிய சாளரங்களைத் திறந்தவர். வெயிலும், ஒளியும், புயலும், காற்றும் சமுதாயச் சூழலில் மட்டுமன்று; சமயச் சூழலிலும் இயல்பானவையே; ஏற்கத் தக்கவையே என்ற மனம் கொண்டவர்.

அறிவுலகத்தின் ஆய்விற்கும், வளரும் சமுதாயத்தின் மாற்றங்கட்கும், சமயங்கள் புறம்பானவையல்ல. இவற்றின் தாக்கங்கட்கு ஈடு கொடுத்து, சமய மரபுகள் நிற்க வேண்டுமேயன்றி, இவற்றினின்றும் பாதுகாக்கப்பட வேண்டுவன அல்ல எனும் துணிந்த உள்ளத்தினர். எனவே பகுத்தறிவு மேடையோ பொது உடமை வாதமோ, அவர் புறக்கணிக்கும் ஒன்றாக இருந்ததில்லை.

புதிய விஞ்ஞான உலகிலும், புதிய அரசியல் கோட் பாட்டுச் சூழலிலும் புரட்சிகரமான சமுதாயத் தத்துவங் களிடையேயும், நம்பிக்கையோடும் நட்போடும், அடிப்படைச் சம்ய நடைமுறைகட்கு ஞாயம் கற்பித்து, உயர்ந்து நிற்பவர்.

புரட்சிகரமான கருத்துக்கள் தமிழர்தம் சமய உலகிற்குப் புறம்பானவையல்ல; அனைத்து அதிகாரமும் அரசன் கையில் இருந்த காலத்தில் "நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடிய அப்பரும், மண்ணிற் பிறப்பதே பாவங்களின் விளைவு என்ற மனப்பான்மை பரவி நின்ற சூழலில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த வையகத்தே' என்று பாடிய திருநாவுக்கரசரும், "கண்மூடிப் பழக்கமெலாம் மண் மூடிப் போக” என்று குரலெழுப்பிய இராமலிங்கரும் புரட்சியாளர்களேயாவர். எனவே அடிகளார் தம் புதுமை உணர்வுகள், வழி வழி வரும் தமிழ்ச் சமய உலக மரபின் தொடர்ச்சியே யாகும்.

இந்நூல் 28 தலைப்புகளில் அடிகளாரின் சிந்தனை களைத் தொகுத்து அளிக்கிறது. இன்றைய சமுதாயத்தை எதிர் நோக்கும் பல பிரச்சினைகளைப் பற்றி தமது கருத்துக்களை வெளியிடுகிறார். அவருக்கே இயல்பான அணுகுமுறை ஆங்காங்கு ஒளிவிடுகிறது.

"இன்று துறவிற்கும் உழைப்பிற்கும் தொடர்பில்லை என்று சிலர் கருதுகின்றனர்.ஞான வாழ்க்கைக்கும் தளராத உழைப்புத்தான் தேவை" என்ற அவரது கருத்து ஆராயப்பட வேண்டிய ஒன்று. மனித வாழ்வின் வளர்ச்சிக்கும், நிறை விற்கும் துணை நிற்பன, "அறிவும், அன்பும்." இவற்றைப் பற்றி அடிகளார் அழகாகப் பின்வருமாறு கூறுகிறார்:

"அறிவின் சீலம் அன்பு, அன்பின் செயற்பாடு இரக்கம்" எந்தச் சூழ்நிலையிலும் போர் தீமையான ஒன்றே என்ற அணுகு முறையினை அடிகளார் ஏற்கவில்லை.

"தீயவற்றோடு பகை கொண்டு எதிர்த்துப் போராடுதல் வாழ்வின் நோக்கமாக அமைதல் வேண்டும்..மனிதத் தீமையை எதிர்த்துப் போராடியவர்கள் தீர்க்கதரிசிகள் ஞானிகள்; கொடிய ஆதிக்க வெறிபிடித்த குடிநலம் போன்ற அரசர்களை எதிர்த்துப் போராடியவர்களும் அரசியல் ஞானிகள் என்றே பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிறார். ஒவ்வொரு தலைப்பிலும் அடிகளாரின் தனிச் சிந்தனையும் ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடும் ஒளிவிடுகின்றன. படிப்பவர் மிகுதியும் பயன் பெறுவர். தமிழகம் படித்துப் பயன்பெற வேண்டும் என விழைகிறேன்; பயன் பெறும் என நம்புகிறேன்.

நண்பர் சீனி. திருநாவுக்கரசு தமிழ் நலமும், தமிழின நலமும் எண்ணி, நூற்பதிப்புப் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர். கருத்து வளமும், சிந்தனைத் தெளிவும் கொண்ட தலைப்புகளையே வெளியிட்டு வரும் கொள்கையாளர். அந்த வரிசையில் இவ்வரிய நூலும் இடம் பெறுகிறது. அவரது உயர்ந்த பணியையும் உறுதி சேர்ந்த முயற்சியையும் தமிழக மக்கள் பாராட்டி, ஊக்குவிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். ஊக்குவிப்பார்கள் என்பது என் நம்பிக்கை, கலைவாணி புத்தகாலயத்தின் தமிழ்ப்பணி வாழ்க! வளர்க!

டாக்டர். வா.செ. குழந்தைசாமி

துணைவேந்தர்

அண்ணா பல்கலைக் கழகம்.

சென்னை-600 025
18-4-1983


12. தமிழும் சமயமும் சமுதாயமும்
1983 நவம்பர்

வாழ்த்துரை.


நம் அமுதத் தமிழ் மொழி வழி தோன்றியதே சைவ நன்னெறியாகும். அருந்தமிழையும், அற்புதச் சைவ நன்னெறி யினையும் வேறுபிரித்தல் இயலாது. உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலெழுத்துக்கள் முப்பத்தாறு தத்துவங்களின் வெளிப்பாடேயாகும்.

அந்தத் தத்துவங்களை உணர்த்தும் சைவ நன்னெறி பற்றி ஒழுகுதல் தனி மனித மேம்பாட்டுக்கு மட்டும் உரிய தன்று, சைவ நன்னெறி ஒழுக்கம் சமுதாய மேம்பாட்டுக்கும் ஆகும்.

பொருளியல் அருளியல் இரண்டையும் சமுதாயம் நிறைவுறப் பெற்றுச் சமத்துவ ஒருமையுடன் உலகியல் நடத்தி உய்யச் செய்விக்கும் நன்னெறி ஒழுக்கமே சைவம் ஆகும்.

அருந்தமிழை ஒதியுணர்ந்த வித்தகத் திறமையோடு சைவ நன்னெறிபற்றி ஒழுகும் சீலத் திருவாளர் நம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். தனக்கென வாழாத் தகுதியாளர் ஆவர். அவர் வாழ்வு சமுதாய வாழ்வு, இறை வாழ்வு. இறைவனையும், சமுதாயத்தையும் பிரிக்க முடியாது. இறைவனே சமுதாயம் - சமுதாயமே இறைவன்.

சமுதாயம் என்பது மக்கள் தொகுதியை மட்டும் குறிப்பதன்று. ஏனைய உயிர்த் தொகுதிகளையும் உலகங் களையும் அது குறிக்கும். நம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களே சமுதாயம் ஆவார்கள். உலகம் ஆவார்கள்.

இத்தகு தத்துவ வித்தக ஞானியாராகிய அவர்கள் மக்கள் பொருள் உணர்ந்து அருள் பெற்று உய்வான் வேண்டி ஆற்றிய அருட்பேருரைகள் 'தமிழும் சமயமும் சமுதாயமும்' என்ற நூலாக வெளியிடுவதற்கு மகிழ்வுறுகிறேன்.

இந்நூலினைக் கற்று மக்கள் பயன் பெறுவார்களாக

நம் மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சைவமும் தமிழும் தழைக்க, தமிழ் மக்களும், உலக மக்களும் உய்ய இன்னும் பல நன்னூல்களைத் தந்தருளி, நீடு இனிது நிலவி வாழ எல்லாம் வல்ல இக்குன்றுரை குமரன் எந்தை இளவழகனை இறைஞ்சி வாழ்த்தும்,

பாலமுருகனடிமை

அருள்திரு பாலமுருகன் திருக்கோயில்
இரத்தினகிரி,
கீழ்மின்னல்-632517
வட ஆர்க்காடு மாவட்டம்,

தமிழ்நாடு.
13. திருவருட் சிந்தனை


1985-டிசம்பர்

மதிப்புரை


'பல்கலை வித்தகர்'

டாக்டர் வை. இரத்தினசபாபதி தத்துவப் பேராசிரியர்,

சென்னைப் பல்கலைக் கழகம்.


திருவருட் சிந்தனை என்ற தலைப்பில் முந்நூற்று அறுபத்தாறு தனிநிலை எண்ணங்களின் ஒரு துறைக் கோவையை கலைவாணி புத்தகாலயத்தின் மூலம் மக்கள் மன்றத்தில் மணம் பரப்ப விட்டிருக்கிறார். பாநயப்பாமணி திருக்குறள் நெறித் தோன்றல் கவிஞர் கலைவாணி சீனி. திருநாவுக்கரசு அவர்கள்.

திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் ஒரு புரட்சியாளர். பழைய செய்திகளைப் புதிய தலைப்பில் தரும் இக்கால வழக்கை மாற்றி, பழைய தலைப்பில் புதிய செய்தியை மக்கள் மன்றத்துக்கு வழங்கியிருக்கிறார்.

அது மட்டுமா? மரபு நெறியில் எது பிழையோ அதைச் செய்திருக்கிறார். செய்யவும் வைக்கிறார். பிறருக்கு எழுதப் பெற்ற முடங்கலையோ, நாட்குறிப்பையோ படித்தல் பிழை. அதிலும் திருமடத்தில் அருள் தலைமையேற்று அருளாட்சி புரியும் குரு மகாசந்நிதானத்தின் வாழ்நாட் குறிப்பைப் படித்தார்.

அத்துடன் நின்றாரா? அதனை வெளியிட்டுப் படிக்கவும் வைத்திருக்கிறார் என்றால், அவரது செயல் வியத்தகு புரட்சியே. கிடைத்தது அருமை. அதை அனைவருக்கும் கிடைக்க வைத்திருப்பது அருமையிலும் அருமை. காதலனுக்கு எழுதப்பெற்ற முடங்கலைக் காதலனின் தந்தைக்குரிய காணிக்கை முடங்கலாக அமையுமாறு எழுதிய கைவண்ணம் இளங்கோவடிகளுடையது என்றால் கடைக் கணித்து மந்தனமாகப் படிக்கப் பெற வேண்டிய நாட் குறிப்பை மந்திரமாக அமைத்து மக்கள் வாழ்வைப் பண் படுத்தும் வகையில் வாழ்வியல் ஒவியங்களாகத் தீட்டியருளிய திருவருட் கொடை வழக்கமே தவத்திரு குன்றைக் குருமனியின் திருவருட் சிந்தனை.

வாழ்வியல் சிக்கல் ஒன்று வாழ் முதலாகிய பொருள் எனப்பெறும் பரம்பொருளிடம் அடியவன் கேட்டுப் பெறுதல் முறையா?

கேட்டவர்களுக்கெல்லாம் அரிய பொருளாக அகன்று விட்டது அப்பரம்பொருள் சரி, கேளாமலேயே விட்டு விடுவோம் எனில், அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்ற உலகப் பழமொழி அவ்வப்போது நினைவுக்கு வருகிறது.

கேட்கலாம் என்றாலோ எதைக் கேட்பது? இச் சிக்கலைத் தீர்க்கும் மணிவாசகம் ஒன்று:

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே"

என்ற மணிவாசகத்தின் "வேண்ட முழுதும் தருவோய் நீ!" என்ற திரு வார்த்தையின் விளக்கமாக அமைத்து அருளியதே முந்நூற்று அறுபத்தாறும். குன்றக்குடி அடிகளார் என, அன்புளோர் நெஞ்சங்களாலும், தமிழ் மாமுனிவர் எனத் தமிழக மக்களின் தழை தமிழ் உணர்ச்சிகளாலும், அடிகளார் என அனைத்து நாட்டு ஆற்றல்சால் கொள்கைப் பேராளர்களாலும் பொதுச் சமய புனித நெறிச் சான்றோர் என அருள் நெறித் திருக்கூட்ட அகவுணர்களாலும், திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதினம் ஐந்து கோவில் ரீலயூரீ தெய்வ சிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் என மரபு பேணும் மாண்புரைகளாலும், நீள நினைந்தும் நித்தமும் கை தொழுதும் போற்றப் பெறுபவர் அடிகளார்.

வள்ளுவரே இவர், சேக்கிழாரே இவர், அப்பரடிகளே இவர் என்றெல்லாம் நினைக்கப் பெறும் அடிகளார், உண்மையிலேயே இவர் யார் என்ற வினாவிற்குத் திருவருட் சிந்தனை அடிகளாரை இவர் இன்னார் இல்லை, இனியார்! இவரைப் போல இனி யார்? என்ற வகையில் நம்மிடம் அகப்பட வைத்து விடுகிறது.

திருவாசகப் பெரும் பேரின்பத்தைத் துய்த்துத் துய்த்துத் தேக்கித் தேக்கித் திகழும் அருள் நிறை நெஞ்சம் 'போற்றிப் புணர்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்' என்ற மணிவாசகத்தின் அருளனுபவத் திரு நிகழ் நெஞ்சம் உலக மக்களுக்கு வழங்கும் வாழ்வியல் வழிகாட்டியே இந்நூல்.

இறையருட் சிந்தனைக் களஞ்சியமாகிய திருவருட் சிந்தனை மக்கள் வாழ்வில் எந்நாளும் நின்று, பணி செய்வ தாகுக.

அதனை அவ்வாறே பணி கொண்டும், மக்களைப் பணிகொள்ள வைத்தும் புரட்சி செய்யும் திருக்குறள் நெறித் தோன்றல் பாநயப் பாமணி கலைவாணி திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களின் தொண்டு வாழ்ந்து வளம் சிறப்ப தாகும்.

சென்னை

வை. இரத்தினசபாபதி

அணிந்துரை
(திருவருட் சிந்தனை)


இராம. வீரப்பன்
அறநிலையத் துறை முன்னாள் அமைச்சர்

அண்ணல் காந்தியடிகள், பிரார்த்தனையின் சிறப்பைப் பற்றிக் கருத்து தெரிவித்த பொழுது, "உண்ணாமலும், நீர் பருகாமலும் கூட என்னால் இருந்து விட முடியும். ஆனால் இறைவனைப் பிரார்த்தனை செய்யாமல், ஒரு நொடி கூட என்னால் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்கள்.

அண்ணலின் வழியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் ஆண்டு முழுவதும் மாந்தர்கள் எத்தகைய பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வாழ வேண்டும் என்பதைச் சிந்தித்து "திருவருட் சிந்தனை" என்ற அருமையான நூலை.... பிரார்த்னை நூலாய்ப் படைத்துள்ளார்கள்.

பக்தி இலக்கியத்தில் உள்ள ஒரு தொடர் “சிந்தனை 'உனக்குத் தந்தேன். திருவருள் எனக்குத் தந்தாய்” என்பதாகும்.

தவத்திரு அடிகளார் நற்சிந்தனையை இறைவனுக்குக் காணிக்கையாக்கி திருவருளை இறைவனிடமிருந்து பெற்று "திருவருட் சிந்தனைகளை” நமக்கெல்லாம் வழங்கியிருக் கின்றார்கள்.

இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக அடியார்கள் எண்ணுவதுண்டு.

“இறைவா இறைவா” என்று ஒவ்வொரு நாளையும் பிரார்த்தனையோடு தொடங்கி, பிரார்த்தனையுடனே மனிதர்கள் முடிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் அடியார்களின் நிலையில் தம்மை வைத்து, அடியார்களுக் காகப் பல்வேறு பிரார்த்தனைகளை அடிகளார் படைத் திருப்பது போற்றுதற்கு உரியதாகும்.

எப்படி "தான்” ஆகவேண்டும் என்று மனிதன் சிந்திக் இறானோ-பிரார்த்திக்கிறானோ அப்படியே அவன் ஆகிறான் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள்.

"ஐம்புலன்களை வெல்ல வேண்டும்; அறிவினையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்; மானிடச் சமுதாயத்தின் மேன்மைக்காகப் பாடுபட வேண்டும்; பிறரை உண்பித்து உண்ண வேண்டும்; மகிழ்வித்து மகிழ வேண்டும்; வாழ்வித்து வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்க்கை நெறியில் நாம் வாழ்ந்திட அருள் புரிய வேண்டும் என்று நாளும் இறைவனைப் பிரார்த்திப்பதற்கு "திருவருட் சிந்தனை” என்கிற இந்த நன்னூல் வழி காட்டும்.

ஒவ்வொரு நாட் காலையிலும், எத்தகைய உறுதி மொழியை, ஒவ்வொருவரும், எடுத்துக் கொண்டாக வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. முதல் பிரார்த்தனையே இந்த ஆண்டினை உழைப்பு ஆண்டாக்கி செலவிட உறுதி எடுத்துக் கொள்ள, அருள்செய் என்பதாக இறைவனை வேண்டுவதாக அமைந்துளது.

எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டும், கடந்த காலத்திற்காகக் கண்ணிர் சிந்திக் கொண்டும், நிகழ் காலத்தை வீணடித்துக் கொண்டும் காலம் கழிக்கும் காலத்தின் அருமை தெரியாதவர்களுக்காக மேலும் பல பிரார்த்தனைகளும் இந்நூலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இறைவனையும் "ஐந்தொழில் நிகழ்த்தும் முதல் உழைப்பாளி" என்று அழைத்துச் சிறப்பிக்கும் அடிகளார் இடையீடு இல்லாது, ஒய்வே இல்லாது, தற்செயல் விடுப்புகூட இல்லாது, இறைவன் உழைக்கும் உழைப்பின் திறத்தை எடுத்துக்காட்டி பலரையும் உணர வைக்கிறார்.

உண்டு, நடமாடும் நடைப் பிணங்களாக, வாழும் பல மாந்தர்கள் தாமே திருந்த எத்தகைய பிரார்த்தனைகளைப் பிரார்த்திக்க வேண்டும் என்பதாகவும் அடிகளார் சிந்தித்திருக்கிறார்.

வயிறு புடைக்க உண்டபிறகு, உண்டது போதுமா? என்று கேட்டு, மனம் திருப்தி காணுகிற வரை உண்ண விழைகிற அவர்கள், உழைப்பிலே மட்டும் அத்தகைய திருப்தியைக் காண முற்படாமல், தொழில் செய்வதாக, வெறும் பாவனை மட்டுமே புரிவது ஏன்? எனக் கேட்கிறார் அடிகளார்.

உழைக்காதவர்கள், தம் பாவம்தீர, ஆண்டவனைப் பிரார்த்திக்க வேண்டிய பிரார்த்தனைகளையும் இந்நூலில் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கோயிலைப் பற்றிய திருவருட் சிந்தனைகள் பலவும் இந்நூலில் வெளியிடப் பட்டிருக்கின்றன. "திருக் கோயில்க்ள் உயிரனுபவத்திற்குரிய பண்ணைகள்” என்பதாகப் போற்றியுள்ள அடிகளார், திருக்கோயிலின் துய்மைப் பராமரிப்பைப் பல பிரார்த்தனைகளில் வற்புறுத்தியுள்ளார்.

"இறைவா! மன்னித்துவிடு! இனிமேல் நீ எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றேன்" என்று அன்பர்கள், பிரார்த்திப்பதாக சிந்தனை செய்து அவர்கள் அப்பர் பெருமான் திருநாவுக்கரசரைப் போல் உழவாரப் பணி புரியவும், கைத் திருத் தொண்டு செய் கடப்பாட்டில் நிற்கவும், உறுதி கொள்வதாகப் பிணைத்துள்ளார்.

உழவாரப் பணியை! சிறிய பணி என்று சிலர் ஏளனம் செய்யக்கூடும் என்று எண்ணி அடிகளார். அது சீரிய பணி ஆவதையும்! "தெருக்களைக் கூட்டித் துப்பரவு செய்யும் தொழிலும் கூட! அதன் தன்மையில், மிக மிக உயர்ந்த தொழில்” என்று விளக்குகிறார்.

துப்பரவு பணி கோடானு கோடி மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் தொழில். அதனால் அன்றோ அப்பரடிகள் "பார்வாழத் திருவீதிப் பணி செய்தார்" என எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார்.

ஆலயங்களின் தூய்மையைப் பராமரிக்க வேண்டியதன் இன்றியமையாமையைத் தெரிவித்து, அண்மையில் அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில் தூய்மைப் பராமரிப்புப் பணி, மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொடங்கி வைக்கப் பெற்றது.

பதினைந்து சமூக அமைப்பைச் சார்ந்த அன்பர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தூய்மை பராமரிப்புக்கும், பொறுப்பேற்றுக் கொண்டு, செயல்படத் துவங்கியுள்ளார்கள்.

அனைத்து ஆலயங்களிலும் சமூக நல அமைப்புகளைக் கொண்டு ஆலயங்களின் தூய்மையைப் பராமரிக்க, அறநிலையத் துறை எண்ணி வருகிறது.

அரசின் முயற்சிகளுக்கு, ஆக்கமும் ஊக்கமும் தருவதைப் போல அடிகளார், ஆலயத்தூய்மைப் பராமரிப்பு யாரோ சிலரின் கடமையல்ல ஆலயத் தூய்மைப் பணிகள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கடமையென்பதை இந்நூலில் தெளிவு படுத்தியிருப்பதைப் பாராட்டுகிறேன்.

தமிழ் அருச்சனையின் ஏற்றம் பற்றியும் பல பிரார்த்தனைகள் விளக்குகின்றன. இறைவன் படிக்காசு கொடுத்து பைந்தமிழைக் கேட்டான்; பண் சுமந்த பாடல்களைப் பெறு வதற்காக வைகை ஆற்றங்கரையில் மண்சுமந்தான், சுந்தரரின் செந்தமிழுக்காக திருவாரூர்த் தெருக்களில் நடந்தான்.

ஆகவே இறைவன் தமிழையே விரும்புகின்றான். இல்லை, இல்லை, இறைவன் தமிழாகவே இலங்குகின்றான் எனக்கூறி, "இறைவா! எங்கள் தவறை மன்னித்து அருள், நாங்கள் நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம்!” என்று பிரார்த்திப்பதாக அடிகளார் அமைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

இவை போன்ற பாராட்டுக்குரிய எத்தனையோ சிறந்த கருத்துக்கள் பிரார்த்தனைகளாக, இந்நூலில் திகழ்கின்றன. "வாழையைப் போலச் சமுதாயத்திற்கு முழுதும் பயன்பட்டு வாழ வேண்டும்; தென்னையைப் போல் நன்றியை இளநீராகக் கொடுக்க வேண்டும். எருதினைப் போல் உடல் நோவினைப் பாராது உழைக்க வேண்டும். நிலத்தைப் போல் கொத்தினாலும் வெட்டினாலும் நன்மையே செய்ய வேண்டும்” என்பதாக வரும் பல பிரார்த்தனைகள் நல்ல பண்புகளை ஊட்ட வல்லனவாய் அமைந்துள்ளன.

அடிகளார் ஓரிடத்தில் பசுவைப் பற்றிச் சொல்லும் போது பசு தன் வாழ்நாளில் 24,690 பேருக்கு ஒரு வேளைக்குத் தேவையான பாலைப் பொழிந்து தருவதைக் கணக்கிட்டுக் காட்டுகின்றார்.

கணக்கு, தமக்குப் பிடிக்காத பாடம்தான் என்று கூறும் அடிகளார், கணக்கின் முறைகளை உவமைப்படுத்தி வாழ்க்கையையும் ஒரு கணக்காகக் காட்டுவதும், "வாழ்க்கை யாகிய கணக்கில் அறிவைக் கூட்ட வேண்டும்; கெட்டவைகளைக் கழிக்க வேண்டும்; ஆற்றல், செல்வம், அன்பு போன்ற நல்லவற்றைப் பெருக்க வேண்டும்; வையம் உண்ண வகுத்துக் கொடுத்து வாழ வேண்டும்" என்றெல்லாம் கூறி, வாழ வழிகாட்டும் பகுதிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. தனக்காக மட்டும் வாழ்வது விலங்கின் தன்மை. பிறர்க்காக வாழ்வதே மனித தருமம் என்பதைத் "திருவருட் சிந்தனை” மூலமாக எடுத்துக் காட்டும் அடிகளார், "மனம் திருந்தி விட்டால் மண்ணில் சொர்க்கம்” “பூசைகள் நேராகின் அனைத்தும் நேராகும்” என விளக்குகிறார்.

இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு விளங்கும் இந்நூலைக் கற்பவர், அடிகளார் அறிவிப்பதைப் போல, அடுத்த தலைமுறைக்கு வெறும் "குரு பூசை" "திதிப் பொருளாக" மட்டும் போய் விடாமல், மரணத்தை வென்று மரணமிலாப் புகழ் வாழ்க்கையில வாழ்வார்கள் என்பது உறுதி.

தவத்திரு அடிகளார் அவர்களின் தமிழ்ப்பற்றும், சமயப் பற்றும் நாடறிந்த ஒன்று. அவர் இதுவரை எண்ணற்ற அரிய நூல்களைப் படைத்துத் தமிழன்னைக்கும் காணிக்கை ஆக்கியுள்ளார்.

இருநூறு பக்கங்களைக் கொண்ட இந்நூல் அளவால் மட்டுமல்ல, எடுத்துக் கொண்ட பொருளாலும்! பெரிய நூல். படிக்கும் அன்பர்களுக்குப் பயன் நல்குவதில் சிறந்த நூல், பிரார்த்தனை, கட்டுரை வடிவில் அமைக்கப் பெற்ற சீரிய நூல்.

ஒரே மூச்சில் படித்து முடிக்கும் விதத்தில் நயமும் நடை அழகும் அமைந்திருக்கும் நல்ல நூல்; வாழ்க்கை முழுவதிற்கும் பயன்படும் ஆழமான நூல்.

நம் அனைவருக்கும் தேவையான நூல்! என்பதைத் தெரிவித்து அடிகளாரின் அருட்பணியினைப் பெரிதும் வாழ்த்துகிறேன்.வணங்குகிறேன்.

இந்நூலைச் சீரிய முறையில் வெளியிடும் கலைவாணி புத்தகாலய உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
இராம வீரப்பன்

தி. நகர்
சென்னை-17


பாராட்டுரை
(திருவருட் சிந்தனை)


முனைவர், தருமையாதீனப் புலவர்

கு. சுந்தரமூர்த்தி, எம்.ஏ., பி.எச்டி,

முதல்வர், செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள்.

காலம் என்பது அருவப் பொருள். அது உலகியல் நிகழ்வதற்கு ஏதுவாகக் கதிரவன் முதலிய அளவைகளால் கூறுபட்டு நாள், திங்கள், ஆண்டு எனக் கணக்கிடப்பட்டு காட்சி அளிக்கின்றது. அக்காட்சி கண்ணுக்கு இனிமை தரினும், கருத்திற்கு இனிமை தருவதில்லை. காரணம் அவ்வாறு கழியும் நாள், திங்கள், ஆண்டுகளெல்லாம் உயிரினங்களின் வாழ்நாளை அறுக்கும் வாளாக அமைந்து விடுகின்றன.

ஆதலால்தான், அறிஞர்களும் அருளாளர்களும் இளமையாக்கை, செல்வம், பொருள் அனைத்தும் நிலையாமையுடையவை என அறிவுறுத்தினர்.

நிலையாமையை உணர்வதன் வாயிலாக நிலையுடையனவற்றை நாடவேண்டும் என்றும் வற்புறுத்தினர். அவ்வாறு வற்புறுத்திய அறிவுப் பெட்டகமே நமக்குக் கிடைத்திருக்கும் நீதி நூல்களும் அருள் நூல்களுமாகும்.

இவ்வாறு அவ்வப் போதெல்லாம் சான்றோர்கள் அறி வறுத்திருப்பினும் மனித இனம் அவற்றை மறந்தும் துறந்துமே பெரிதும் வாழ்கின்றது.

ஆதலால்தான் மெய்யுணர்வு உடைய சான்றோர்கள், அருளாளர்கள் மேன் மேலும் அரிய சிந்தனைகளை ஊட்ட வேண்டியவர்களாயினர்.

இவ்வாறாய அரிய சிந்தனைத் தேக்கமே, இந்நூலாக மலர்ந்துள்ளது. ஒர் ஆண்டிற்குரிய 366 நாட்களிலும் நாளும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுமாறு கொள்ளத் தக்க சிந்தனை களைத் தந்தருள வேண்டுமென இறைவனை நோக்கி விண்ணப்பிக்கப் பெற்றுள்ளது.

இவ்வரிய சிந்தனை மணிகள் திருக்குறள், திருமறைகள் முதலிய அரிய கருத்துரைகளால் கோர்க்கப் பெற்று ஒளி பெற்றுள்ளன. இவை மனித இனம் நாளும் நினைந்து நன்றாக வாழவும் உயரவும் வழிகாட்டித் தருவன.

இவ்வரிய சிந்தனைத் தேக்கத்தை வழங்கி அருளிய வர்கள் தவத்திரு அடிகளார் அவர்கள் ஆவர். அவர்கள் நாளும் ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கும் உயர் தவச்சீலர் ஆவர்.

கற்றோர் அறியா அறிவும் கற்றோர்க்குத் தாம் வரம் பாகிய தலைமையும் பெற்றவர்கள். திருவண்ணாமலை ஆதீனத்தின் அருட்குரவராக விளங்கும் அரிய பேறு, உடைவர்கள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் அருளுரையைத் தம் வாழ்வின் உயிர்ப்பாகக் கொண்டு இலங்கும் உயர் பேரருளாளர் ஆவர்.

திருவருள் உள்நின்று உணர்த்த எழுந்த சிந்தனைகள் ஆதலின் இந்நூல் 'திருவருட்சிந்தனை' என்னும் பெயருடன், வெளிவருகின்றது. நாளும் இச்சிந்தனைகளை உளம் கொள்ளவும் அதற்குத்தக நிற்கவும் திருவருள் முன்னின்று அருளுமாக,

இச்சீரிய நூலை வெளியிடும் அன்பர் பாராட்டுக்குரிய கவிஞர் திரு.சீனி.திருநாவுக்கரசு அவர்கள் ஆவர்.

அடக்கம் மிகுந்த நல்ல எண்ணத்தோடு இத்தகைய பணியை மேற்கொண்டு செய்து உதவும் அருமை அன்பர் கவிஞர் சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு தமிழுலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.

மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.

திருப்பனந்தாள். கு. சுந்தரமூர்த்தி


14. தமிழமுது


1988 டிசம்பர்

மதிப்புரை


டி. வி. வெங்கட்டராமன், I.A.S.

தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. தமிழ் மொழியின் சிறப்பை அளவிட்டுக் கூற இயலாது. மிக நுண்ணிய எண்ணங்களுக்குச் சொல்லுருவும், பேச்சுருவும் தரும் ஆற்றல் படைத்த மொழியாகும். சங்கப் புலவர்கள் ' அகத்தையும் புறத்தையும் படமிட்டுக் காட்டிய பெருமை தமிழ் மொழிக்கேச் சாரும். தமிழை அவர்கள் மொழியாகக் கையாண்டதாலேயே இந்தச் சாதனையைப் புரிய முடிந்தது. அவர்களுக்குப் பின்னால் வந்த நால்வர்களைப் போன்ற ஒப்பற்ற இறையுணர்வாளர்கள் தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் வளர்த்த பாங்கினை உலகு அறியும். ஆழ்வார்களும் தங்களுடைய திருப்பாசுரங்களால் தமிழ் மொழியின் தேனினும் மிக்க இன்பத்தை உலகிற்குப் பகிர்ந்து கொடுத்தார்கள், திருக்குறளை அருளிச் செய்த திருவள்ளுவரால் தமிழ் மொழி உயர்ந்தது. தமிழ் மக்கள் உயர்ந்தனர், கம்பன் தமிழ் மொழியைக் கொண்டே பாமர மக்களும் கவிதை நயம், இறையுணர்வு, ஆன்மீகப்பற்று ஆகியவற்றின் உச்சிக்கிளையை அடையச் செய்தான். தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம், முடிவில்லை.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சற்றேறக்குறைய நூற்று ஐம்பதே பக்கங்களில் தமிழ் மொழியின் பெருமையைத் தெளிவாக்கியுள்ளார். அதை அவராலேயேதான் சாதிக்க இயலும். அவர் கையாண்ட முறைகள் போற்றத்தக்கவை. தமிழ் மொழி தமிழர் வாழ்வுடன் ஒன்றிச் செல்வதைச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். தமிழனுக்கு என்று இருந்த பண்பாடும், நாகரிகமும், நெறியும் இன்று தமிழ் இலக்கியக் குவியலில் நிரம்பிக் கிடக்கின்றன, ஒரு காலத்தில் அந்தப் பண்பாடும், நாகரிகமும், நெறியும் தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வில் பின்னிக் கிடந்தன, இன்று அவை களுக்கு ஏட்டளவிலே, பேச்சளவிலே, மட்டும் போற்றுதல் நடந்து வருகின்றது. இதை நமக்கு எடுத்துக் காட்டி தமிழ் மக்களின் பெருமை தமிழ் மொழியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று தெரிவித்து தவத்திரு அடிகளார் தமிழ் இலக்கியத்தில் உள்ள சிலவற்றை மட்டுமே நம் கண்கள் முன் ஓவியங்களாக நிறுத்தி நம்மையெல்லாம் மகிழ்விக்கச் செய்துள்ளார், தவத்திரு அடிகளாருடைய தமிழ் அறிவு மிக ஆழமானது. தமிழ் மக்களுடைய பண்பாட்டில் அவருடைய ஈடுபாடு மிகச் சிறந்தது. தமிழ் இலக்கியம் நமக்குத் தரும் ஆன்மீக நெறியில் அவருக்கு உள்ள பற்று யாவரையும் ஈர்க்கத்தக்கத் திறமைவாய்ந்தது. அவருடைய எழுத்தின் நடை சிந்தனைத் தெளிவைக் காட்டுகின்றது. இத்தனையும் மனதில் வைத்து தமிழ் அமுதினைப் படிக்கும் பெரியோர் நல்ல பயன் பெறுவர். ஐயமில்லை.

இந்த நூலின் பதிப்பாசிரியர் "அன்புக்கொண்டல்” திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் பல ஆண்டுகளாக அவருடைய சொந்த நிறுவனமான கலைவாணி புத்தகாலயத்தின் மூலம் தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும், எளிமையுடனும், நேர்மையுடனும் திறம்பட பணியாற்றி வருகின்றார்கள். அவருடைய அன்புணர்வினையும், மொழிப்பற்றினையும், இறைநெறி மீது உள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும் பல நண்பர்கள் நன்கு அறிவார்கள். சுயநலம் பாராது, லாப நோக்கின்றித் தமிழ் இலக்கியம் எங்கும் பரந்து நிற்க வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையுடன் தரமுள்ள நூல்களை, பல இன்னல்களுக்கிடையே பிரசுரித்து வருகின்ற முயற்சி எல்லோராலும் பாராட்டத்தக்கது. எளிமையே உருவான அவருடைய குடும்பத்தில் இருக்கும் எல்லோருமே இந்தத் தூய்மையான பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றார்கள். அவருடைய தொண்டு உணர்வினைத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டி வரவேற்பது கடமையாகும் என்று கருதுகிறேன்.

டி.வி. வெங்கட்டராமன், I.A.S
அணிந்துரை
(தமிழமுது)

அமுதம் உண்டாரை உடல் அளவில் வாழ்விப்பது என்பர், தமிழ் அமுதோ, பருகினோரை உள்ளத்தால் வாழ வைப்பது, உள்ளத்தால் மட்டுமா? உணர்வாலும் அறிவாலும் வாழவைப்பதும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தமிழ் அமுது என்னும் நூலும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது.

எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை சமுதாய நோக்கில் காண்பது அடிகளாரின் தனி இயல்பு. அதை இந்நூலில் பரக்கக் காண்கிறோம், தாம் எடுத்துக் கொண்ட தலைப்புகளில் எல்லாம் சமுதாய நலனையே தலையாகக் கொண்டு கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள். “எந்த ஒன்றும் வாழ்வுக்குரிய - சாதனமேயாம். சாதனங்களையே சாத்தியங்கள் என்று நம்புவதும் அதற்காகவே வாழ்வதும் அறிவுடைமையாகாது”- 'வாழ்க்கை' என்பது கடமை என்ற செயற்பாட்டுக்காகவே (பக்.32) தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் 'தவம்' என்று கருதுகின்றார் (பக்.34). இத்தகைய அடிகளாருடைய கருத்துக்கள், சமுதாய நலனில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டிற்கும் அருள் நோக்கிற்கும் சான்றுகளாகும்.

"வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட நடை முறைச் சாத்திய மற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை . வாழ் வாங்கு வாழ்தல் என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது” என்று கூறுவதன் மூலம் திருக்குறள் ஓர் வாழ்வியல் நூல் என்பதை நிலை நிறுத்துகிறார்.

அறியாமையும் கொடிய வறுமையும் இருக்கும் நாட்டில் சமத்துவமும், ஒருமைப்பாடும் நிலவா; மனித மாண்புகள் மலரா. மனிதே வாழ்வே சிறக்காது. ஆகவே, ஒரு நாட்டில் வறுமையையும், அறியாமையையும் ஒழிக்கும் வரையில், அங்கே உள்ள மக்கள் அனைவரும் சமம் என்பது வெளிப்பூச்சு; வெற்று ஆரவாரம். இக்கருத்துக்களைத் தமக்கே உரிய பாணியில் அடிகளார் கூறுவதை “பாரதியின் சமுதாயம்", "பாரதியின் சக்தி வழிபாடு" என்ற தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளில் காண்கிறோம். "பொருளாதார சமத்துவம் இல்லாத நாட்டில் அறம் வளராது; அன்பு வளராது. பாரதியின் 'எல்லாரும் ஓர் விலை' என்ற இலட்சியம் நிறைவேறினால்தான் இந்திய விடுதலை முழுமை பெறும்,” என்று அடிகளார் கூறுவது, அரசியல்வாதிகளுக்கு அவர்கள் செய்யும் எச்சரிக்கையாகும். "பாரதியின் கவிதைப் பயணம் நாட்டு வரலாற்றில் நடக்க வேண்டிய பயணம்; நடந்து விட்ட பயணம் அல்ல" என்று அடிகளார் கூறுவது சமுதாயத்தில் நாம் செயலாற்ற வேண்டிய தேவையையும் திக்கையும் காட்டுகிறது.

வெறும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு, அறிவை அடகு வைத்து தனிமனித வழிபாட்டு எல்லை மீறி விரும்பித் தாழ்ந்து கிடக்கும் தமிழர்களுக்கு இத்தகைய அறிவுபூர்வமான கருத்துக்கள், ஆக்கத்தை அளித்து அவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்யும்.

இத்தகைய சிறந்த கருத்துக்கள் அடங்கிய தவத்திரு குன்றக்குடி அடிகளாருடைய நூலின் பதிப்பாளர் கலை வாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி, திருநாவுக்சுரசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனிய, பண்புகளும், எளிய வாழ்க்கையும் அன்பும் அறதோக்கும் கொண்ட திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இத்தகைய முற்போக்குக் கருத்துகள் கொண்ட மேலும் பல நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளிப்பாராக.

U-1, இலாயிட்சு குடியிருப்பு,
வி. செ. கந்தசாமி,
இலாயிட்சு சாலை,
தலைவர்,
சென்னை -14.
சென்னை மாவட்டத்
திருக்குறள் பேரவை.
15. அப்பர் விருந்து


1990 சூன் முன்னுரை
டாக்டர் வை. இரத்தினசபாபதி,

பேராசிரியர் மற்றும் தலைவர், சைவ சித்தாந்தத் துறை,

சென்னைப் பல்கலைக் கழகம்.


அப்பர் விருந்து என்னும், அரிய பெயரில் முகிழ்க்கும் இந்நூல் தவத்திரு குன்றக்குடி அடிகள் பெருந்தகையின் அறுபதாண்டுகளாக வளர்ந்து வரும் செயல்நிலைச் சிந்தனையின் அரியதொரு களஞ்சியமாகும்.

'ஏழில் இருபது' என்பது அடிகள் சமுதாயத்தொண்டில் அடியெடுத்து வைத்த நாள்தொட்டு இன்று வரை அதாவது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் மூலை முடுக்குக்களெல்லாம் முழங்கி வந்த சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனையின் முதல் நின்ற திருவருள் முழக்கமாகும். சிந்தனைக் கருவூலமாக இருந்த அது செயல்நிலை மறுமலர்ச்சித் திட்டமாக மாறி நிற்பதை இக்கட்டுரையிற் காண முடிகிறது.

தவத்திரு அடிகளுக்கு இரு பக்கங்கள் உண்டு. அடிகள் தம் சிந்தனை வளத்தை அறியவேண்டும்; செயல் வளத்தை அனுபவிக்க வேண்டும்; அடிகள் தம் செயல்முறைப் புரட்சியை சமுதாய மறுமலர்ச்சித் திட்டச் செயற்பாட்டை உலகம் வியக்கிறது. ஆனால் சிந்தனைப் புரட்சியை இன்று ஒருவரும் முழுமையாக அறிந்து மகிழவில்லை.

சிந்தனையையும் செயல்முறைத் திட்டத்தையும் ஒருமுகப்படுத்தி வெற்றி கண்ட தனிப்பெருமை அடிகள் பெருந்தகைக்கு உண்டு.

ஏழில் இருபதைக் கண்டது சிந்தனைக் கருவூலம் தந்த புரட்சி. ஆனால் இருபதில் ஏழைச் செயல்முறைப்படுத்தி சமுதாயச் செயல்முறைப் புரட்சியைக் கண்டது அடிகள் பெருந்தகையின் அற்புத வெளிப்பாடு.

சமயப் புரட்சியில் தலைசிறந்து நின்றது குன்றக்குடி என்பது அன்றைய வரலாறு. சமுதாயப் புரட்சியில் 'குன்றக் குடித் திட்டம்' என்ற ஒன்றை உருவாக்கி, உலகம் வியக்கக் கூடிய வகையில் செயல்முறைப்படுத்திக் காட்டியது அடிகள் பெருந்தகை உருவாக்கிய இன்றைய வரலாறு.

"குன்றைக் குருமணி’ என நாம் நாளும் நினைந்து வணங்கும் தெய்வம், திருவருளும் குருவருளும் இணைந்து நின்ற திருவுரு என நின்ற வழிபடு தெய்வமாம். அடிகள் பெருந்தகை இந்நூலுள் அருளிய பல்வேறு செய்திகளை எடுத்து எழுதினால், விமரிசித்தால் அது ஒர் ஆய்வு நூலாகும். சுருக்கமாக இரண்டொன்றைத் தருதல் வேண்டும்.

"நடலையல்லோம்” என்ற அப்பரடிகள் திருவாக்குக்கு அடிகள் பெருந்தகை அருளிய அனுபவ உரை பக்கம் 22, "மக்களுக்காகக் கோயில் கட்டுவதை விட, மக்களாகவே கோயில் கட்டியிருந்தால்” என்ற எழுத்துக்கு உரிய கருவூலச் சிந்தனையை அறிவால் அறிவதை விட அனுபவத்தால் உணரும் போது கண்ணிர்த் துளி சிந்தாமல் இருக்க முடியாது. அடிகள் பெருந்தகை உருவாக்கிய குன்றக்குடித் திட்டத்தின் சமயச் சமுதாயச் செயற்பாட்டு விரிவாக்கத் திட்டத்தின் ஒருவகைக் கையேடு (GUIDE BOOK) என விளங்குவதே 'அப்பர் விருந்து' என்ற நூல் என்பதைக் குன்றக்குடித் திட்டத்தைச் சென்று கண்டவர் உணர்வர். அத்தகைய செயற்பாட்டுத் திட்டக் கருவூலமாக விளங்கும் 'அப்பர் விருந்து' மக்கள் பயன்படுத்த வேண்டிய அருள் நூல்.

அடிகள் பெருந்தகையின் சமுதாய மறுமலர்ச்சித் திட்டக் கருவூலத்தை நூல் வடிவமாக வெளிக்கொணர்ந்த "திருக்குறள் நெறித் தோன்றல்" "பாநயப் பாமணி" சீனி. திருநாவுக்கரசு அவர்கள் அடிகள் பெருந்தகையின் நூல்கள் பலவற்றைக் கலையழகு மிளிர வெளியிட்டு வருபவர். அவர்தம் தூயதொண்டு வாழ்ந்து வளம் சிறப்பதாகும்.

வை. இரத்தினசபாபதி


அணிந்துரை
(அப்பர் விருந்து)


கவிஞர் வீ.செ. கந்தசாமி, I.R.S.,
தலைவர், சென்னை மாவட்டத் திருக்குறள் பேரவை.

'மக்களுக்கே எல்லாம்' என்பதே போல், 'சமுதாயத்திற்கே நாம்' என்ற சீரிய கொள்கையின் அடிப்படையில் நற்பணிகளாற்றி வரும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அப்பர் விருந்து நம் சிந்தனையைத் துரண்டும் மற்றுமோர் படைப்பாகும்.

சமுதாய சீர்திருத்தத்திற்குத் தகுதியுடைய பெரியார் அப்பரடிகள் (பக். 10) என்பதைப் பல்வேறு காரணங்களைக் காட்டி இந்நூலில் நிறுவியிருக்கிறார்கள். "அப்பரடிகள் புரட்சிக்காரர்; புதிய புரட்சியை உண்டாக்கினார்" (பக். 12) என்று கூறும் அடிகளார். சமுதாய அரசியல் சீர்திருத்தங் களுக்கு அப்பரடிகள் வகுத்த வழிகளும், கடைப்பிடித்த முறை களும் இன்றும், ஏன், என்றும் எப்படிப் பொருத்தமுடையன என்ற விளக்கத்தை அளிக்கிறார்கள். அந்த நோக்கில், யுகசந்திப்புகளும் இந்நூலில் நிகழ்கின்றன. அப்பர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டையும், புதுமை நிறைந்த, அறிவு பெருகிய மறுமலர்ச்சியும் சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டாகக் கருதப்படும் இருபதாம் நூற்றாண்டையும் தம் நூலில் அடிகளார் சந்திக்க வைக்கிறார்கள். இது அடிகளார் அவர்களுக்கே அமைந்த தனித் திறமை; அரிய கலை.

மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி இம் மண்ணுலகிலிருந்து அழியாது என்ற, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஆபிரகாம் லிங்கனின் கருத்துக்கள் ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் வாக்கில் "எமக்காக ஆட்சியேயன்றி, ஆட்சிக்காக நாமல்ல” என்ற விடுதலை முழக்கத்தை படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது.

சமுதாயத்திற்கே எல்லாம் சொந்தம் என்ற கொள்கையில் உறுதியுடைய அடிகளார் அவர்கள், கோயில்களும் சமுதாய உடைமையாக வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். எப்படி? கோயில்களை மக்கள் கட்ட வேண்டும் இருக்கும், “ஆட்சியில், சமுதாயச் சீரமைப்பு பணிகளில் மக்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொதுமைச் சமுதாயத்திற்கு வழிகோல இதுவே அடிப்படை. இவை எல்லாவற்றிற்கும் மணிமுடியாக, “மனிதனைச் சமுதாய மனிதனாக்க வேண்டும்” (பக். 34) என்பது அடிகளார் அவர்களின் பெரு விருப்பம். 'என்னுடையது' 'நம்முடையது' ஆனபிறகே வாழ்க்கை புகழுடையதாக, சிறப்புடையதாக அமைகிறது. (பக். 115) என்ற கருத்திலும் பொதுமை நலம் இழையோடக் காண்கிறோம்.

உலகத்தின் முதல் பொதுவுடைமைத் தலைவன் இறைவனே (பக், 108), அந்த இறைவனில் மனிதன் ஒன்ற வேண்டும் (பக். 110), அறிவியல் சார்ந்த வழிபாட்டினால் இது இயலும் என்று விளக்கிக் கூறும் இந்நூல் இன்றைய சமுதாயத்திற்கு மிக மிகத் தேவை. இந்நூல் காலத்தை வென்று நிற்கும். தமிழ்நாட்டின், சிந்தனைச் சுரங்கமாக விளங்கும் தவத்திரு அடிகளாருக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஆன்றமைந்த சான்றோராகிய தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூல்களை வெளியிடுவதில் பெருமை கொள்ளும் . இனிய பண்புகளும் எளிய வாழ்க்கையும், அறநோக்கும் கொண்ட "திருக்குறள் நெறித்தோன்றல்" திருமிகு சீனி திருநாவுக்கரசு அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி பாராட்டுகிறது.

வீ. செ. கந்தசாமி, I.R.S.
நானென் சொல்வேன்?

(அப்பர் விருந்து)


"அமுதமழை பொழிகின்ற முகிலோ? தென்றல்
அழகுநடை பயிலவரும் பொதிகை ஊற்றோ?
கமழுமண மலரறியா நறையோ? இன்பக்
காவிரியோ? கவிமுழக்கப் பறையோ? நெஞ்சக்
குமுதமலர் திறக்குமொளி நிலவோ?’ என்று
குளிர்தமிழின் உரைகேட்போர் வியக்கப் பேசும்
நமது தவத் திருஅடிகள் உரையின் மாண்பை
நவிலுதற்கு வல்லவரார்? நானென் சொல்வேன்?

புலவர் புலமைப்பித்தன்


16. சைவ சித்தாந்தமும்

சமுதாய மேம்பாடும்


1990 செப்டம்பர்

அணிந்துரை

டி. வி. வெங்கட்டராமன், I.A.S.


தவத்திரு குன்றக்குடி அடிகளாரைத் தமிழகத்தில் தெரிந்து கொள்ளாதவர்கள் இருக்க முடியாது. நீண்ட கால மாகத் தமிழுக்கும், சைவத்திற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், ஏழைமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், அடிகள் ஆற்றி வரும் தொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. சமயப் பணிகளில் மட்டும் தனது பங்கினை நிறுத்திக் கொள்ளாது, நலிவுற்ற சமுதாயம் வாழ்க்கையில் வளம் பெற்று, முன்னேற்ற நீரோட்டத்தில் முழுமையாகச் சேர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற சீரிய நோக்கம் கொண்டவர் அடிகளாவார். சிறந்த சொற்பொழிவாளர். பல ஆழ்ந்த கருத்துக்களை மிகத் தெளிவான வகையில் விளக்கி மக்கள் மனத்தைக் கவரக் கூடிய ஆற்றல் படைத்தவர். சிறந்த அறிஞர், சமயக் கோட் பாடுகளை நன்கு உணர்ந்து கொள்வதோடு மட்டும் நிற்காமல் அவற்றைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டு சிறந்த பண்புகளைப் பெற்றவராகிக் காண்போரையும், கேட்போரையும் அந்தப் பண்புகளால் ஈர்க்கும் வல்லமை பெற்றவர்கள்.

அத்தகைய பெரியார் பல ஆண்டுகளாகச் சைவத்தின் பால் ஆற்றிய சொற்பொழிவுகள், எனது அருமை நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுடைய சீரிய முயற்சியால் அழகான நூலாக வெளிவருகின்றன.

சைவத்திற்கப்பால், சமயம் வேறொன்றில்லை, சைவ சமயமே சமயம் என்று ஆங்காங்குச் சான்றோர்கள் ஒலியை எழுப்பி வந்தாலும், மக்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்குச் சைவ சமயத்தின் கருத்துகள் நூல்கள் மூலமாகப் பரப்பப்படவில்லை என்பதே அடியேனுடைய கருத்தாகும். சைவத்தின் சிறந்த உண்மைகளை ஆழ்ந்து உணர்ந்த பெரியோர்கள் நம்மிடையே பலர் இருக் கின்றார்கள். நாள்தோறும் பல இடங்களில் சைவ சமயச் சொற்பொழிவுகள் நடந்து கொண்டுதான் வருகின்றன, எனினும், இத்தகைய நிகழ்ச்சிகளில் சிலரே பங்கேற்கின்றனர், குறிப்பாக, இளைய சமுதாயத்தினரை இந்த நிகழ்ச்சிகளில் காண்பது அரிதாகிவிட்டது. இதற்குக் காரணம், நுட்பமான கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்துப் படித்தவர்கள் அவற்றின்பால் நாட்டம் செலுத்தும் வகையில் நம்மிடையே நூல்கள் தேவையான அளவிற்கு வெளி வரவில்லை.

இந்தக் குறையை ஒரு வகையில் அடிகளாருடைய இந்த நூல் நிறைவு செய்கின்றது என்று சொல்லலாம். சைவ சித்தாந்த வரலாறு மிக விரிவாகவும், தெளிவாகவும் உள்ளத்தில் பதியும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த கருத்துகள் உண்மையில் தெரிந்து கொள்வதற்கு , கடினமானவையல்ல, அன்றாட வாழ்க்கையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் சைவம் கூறும் பல மார்க்கங்களில், தெரிந்தும் தெரியாமலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிவ வழிபாட்டினைச் செய்து வருகின்றார்கள். சைவ தத்துவ விளக்கம் அவர்களுக்கு இயல்பாகவே கிடைக்கக்கூடிய ஒன்று. அடிகளார் சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கியிருப்பது அறிஞர்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடுசெய்யும்.

சைவம் ஏட்டில் எழுதி வைக்கப்பட்ட சமயமன்று. பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் உணர்வில் கலந்த ஒன்றாகும். பல உயர்ந்த கோட்பாடுகளும் பண்பாடுகளும் தமிழ் மக்களிடையே பரவித் தமிழ் மக்களின் ஆன்மீகத்திற்கு அடிப்படையாக இருந்து வருவதும் சைவ சமயமே. உண்மைச் சைவர்கள் தங்கள் எளிமையான வாழ்க்கையாலும் உயர்ந்த பண்பாடுகளாலும் மக்கள் மையத்தில் எடுத்துக்காட்டாக இன்றும் விளங்கி வருவதைப் பார்க்கின்றோம். சமுதாய மேம் பாட்டிற்குச் சைவம் இதுகாறும் எத்துணை தொண்டாற்றியுள்ளது என்பதை இங்குக் கூறத்தேவையில்லை.

இவற்றையெல்லாம் எளிதில் விளங்கும் வகையில் இங்குத் தரப்பட்டுள்ள அடிகளாரின் கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. இவற்றைப் படிக்கும் பொழுது தமிழனாகவும், சைவத்தைச் சார்ந்தவனாகவும் ஒருவன் இருப்பது எத்தகைய பேறு பெற்ற ஒன்று என்கின்ற உணர்வினைப் பெறலாம்.

இத்தகைய அரியதொரு நூலை வெளிக்கொணர முயற்சிகளை எடுத்துக் கொண்ட திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. வணிக நோக்கில் நூல்களை அவர் வெளியிடுபவரல்லர். தமிழிலும், சைவத்திலும் அவருக்குள்ள ஆழ்ந்த பற்றின் காரணமாக இத்தகைய பணிகளை அவர் ஆற்றி வருகின்றார். அவருடைய அன்பு உள்ளமே இவற்றுக்கெல்லாம் ஒரு பெரிய தூண்டு கோலாக அமைந்து அவரை இயக்கி வருகின்றது.

அவருடைய முயற்சிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல சிவபெருமானை நான் வேண்டிக் கொள்கிறேன்.

டி. வி. வெங்கட்டராமன்

சென்னை
23-8-90

மதிப்புரை
(சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்)
சி. அருணைவடிவேல் முதலியார்
"சைவத்தின் மேல், சமயம் வேறிலை;
அதில் சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்”
-சைவ எல்லப்ப நாவலர்.

என்பதும்

"சைவ சமயமே சமயம்;
சமயா தீதப் பரம் பொருளைக்
கைவந் திடவே மன்றுள் வெளி
காட்டும்; இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந் துழலும் சமயநெறி
புகுத வேண்டா"
-தாயுமானவர்

என்பதும் சைவப் பெரியோர் வாக்குகள். இவற்றை இக்காலத்தில் நடுவு நின்று ஆராயும் ஆராய்ச்சியாளரும் 'உண்மையென' உடன்படுகின்றனர். இந்திய நாட்டு வரலாறு கூறுவோரும், இந்நாட்டின் பண்டைச் சமயம் சைவமே என் கின்றனர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த இச்சமயத்தின் தத்துவமே 'சைவ சித்தாந்தம்'-என்பது பலரும் அறிந்தது.

தமிழ்நாட்டின் தொன்மைச் சமய தத்துவமாகிய சைவ சித்தாந்தம், சென்ற 7 அல்லது 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிச் சைவ சந்தனாசாரியர்களால் அளவியல் முறையில் மிக நுண்ணிதாக வகுத்தும், விரித்தும் தமிழ் மொழியிலே யாவரும் உணரும் வண்ணம் விளக்கப்பட்டது. 'அங்ஙனம் விளக்கப்பட்ட நூல்கள் இவை'-என்பதையும், அவை வழியாக இத்தத்துவ ஞானத்தை உலகிற்கு அளித்து வரும் ஆதினத் திருமடங்கள் இவை என்பதையும் இந்நூலுள் அறியலாம்.

சைவ சித்தாந்தத்தை எளிய முறையில் விளக்க இக் காலத்தில் சில நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எதைக் குறித்த போதிலும் அதனால் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்று நோக்கும் நோக்கத்துடனே பார்க்கும் காலம் இக்காலம், அம்முறையில், 'சமய தத்துவங்களில் சைவ சித்தாந்தமே சமுதாயத்தின் உண்மையான மேம்பாட்டினைத் தருவது'-என்னும் உண்மையினைப் பல வகையில் உணர்த்துவது, "சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்" என்னும் இவ்வுரை நடை நூல்.

இதனை இந்நாட்டிற்கு அளித்தருளுபவர்கள் மேற் குறித்த சைவ ஆதீனங்களுள் ஒன்றாய்ப் பாண்டி நாட்டில் விளங்கும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் இது பொழுது அருளாட்சி செலுத்திவரும் திருப்பெருந்திரு தெய்வ சிகாமணி தேசிக பரமாசார்ய சுவாமிகளவர்கள் ஆவார்கள். ''தவத்திரு குன்றக்குடி அடிகளார்' எனத் தமிழகம் இவர்களை அழைத்து மகிழும்.

இவர்கள், 'இயல்பிலே சமுதாய நலத்தையே சிறப்பாக நோக்கும் நோக்குடையவர்கள்' என்பது நாடறிந்த ஒன்று. எனவே, இவர்கள் இத்தகையதொரு நூலைச் சமுதாயத்திற்கு ஆக்கி வழங்கியருளல் இயல்பே.

‘சமுதாய மேம்பாட்டிற்கு நற்றுணையாவது சைவ சித்தாந்தமே' என்பதை அறிவியல் முறையில் இவர்கள் நிறுவியிருப்பதைத்தான் யாவரும் ஒர்ந்து உணர்தல் வேண்டும்.

நூலின் கருப்பொருளை இவர்கள் இதன் முடி நிலையாக வைத்து, அதற்கு முன்னே அதுபற்றிய வரலாற்றையும், அதன் விளக்கத்தையும் தந்திருப்பது நல்லதொரு முறையாகும். நூலில் சில புதியனவான கருத்துக்களையும் அளித்துள்ளார்கள்.

இன்ன பல சிறப்புக்களை அறிஞர்கட்கு நல்கியருளும் அடிகளாரது அருட்செயலுக்குத் தமிழுலகமும், சிறப்பாகச் சைவ உலகமும் நன்றி செலுத்திப் பயன்கொள்ளும் கடப்பாடுடையன. தமிழ்ப் பண்பாட்டிற்குப் புகழ் சேர்க்கும் பயனுள்ள நூல்களை மட்டுமே வெளியிடும் பதிப்பாசிரியர் கவிஞர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களின் தொண்டு உள்ளத்தை பாராட்டுகிறேன். வேண்டும் திருவருள்.

இன்னணம்,
சி. அருணைவடிவேல் முதலியார்

தத்துவ மையம்
காஞ்சிபுரம்-3
27-8–1990


17. Tirukkural A world literature
1991 December

Dr. K. VENKATASUBRAMANIAN

Mylapore

M.A.,B.L., B.T., Ph.D.,

Madras-4

Former Vice-Chancellor
Central University, Pondicherry

FOREWORD

My friend Thiru Seeni Thirunaavukkarasu of the reputed Kalaivaani Puthakalayam has done yeoman service to Tamil literature by publishing the great treatise of that noble Tamil savant the learned Head of the Kundrakkudi mutt.

Thavathiru Adigalar has been propagating for a long time the greatness of the inimitable Thirukkural and I had the privilege of associating myself with this noted sage of starting a campaign to make Tirukkural the National Book of India.

But in this present publication Thavathiru Kundrakudi Maha Sannidhanarn, has gone one step further by declaring the immortal kural as an unparalleled literary marvel of the World.

Adigalar rightly emphasizes the role of Tirukkural as a call for social reform. The greatest maladies affecting the world today are illiteracy and poverty. Two thousand years ago the great Tamil bard Tiruvalluvar turns the spot light on these and his emphasis on removal of illiteracy and poverty marks this greatest of Tamilians as an ancient modern.

In an article on the Religious philosophy of the father of the nation the author brings out clearly the universality of mahatmas religion.

The Kundrakudi rural development project launched by Thavathiru Adigalar had attained All India reputation and even the Union Planning Commission, New Delhi brought out a booklet on this wonderful experiment.

In the article "social aspects of rural development" the author significantly emphasizes the need for proper motivation and his prescription for the ills of rural society is worth a fair trial.

The articles on "preserving the solidarity of India', 'International peace and harmony make the author as a strong Integrationist and one who wants to usher in the International social order.

The essay on "Thirukkural's message to mankind' again brings out in bold relief the fact that Tirukkural is a world literature, which was the first essay in this valuable collection of essays.

This small book outlines the great mind of the author Thavathiru Kundrakudi Adigalar who has been toiling hard for decades now for social change. As one who had the privelege of closely associating myself in his literacy ventures.

I would like to offer my prayerful congratulations to the author and my thanks to the publisher for bringing out such a timely Publication.

Dr. K. VENKATSUBRAMANIAN

Madras-4
21-12–91


18. சமுதாய மறுமலர்ச்சி
1992 சூன்

அணிந்துரை


டாக்டர். த. பெரியாண்டவன், எம்.ஏ.,பி.எச்.டி.,
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
குறளகம், சென்னை-600 108.


நல்வரவாகுக

காலந்தோறும் சமுதாயம் பல மாற்றங்களை ஏற்றும்,தள்ளியும் ஏற்றம் பெற்று வருகிறது. மாற்றங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மறுமலர்ச்சி என்றும், புரட்சி என்றும் பெயரிட்டழைக்கிறோம். மாற்றம் இயற்கையாக நிகழும் ஒன்று. இந்த இயற்கை நிகழ்வைத் தடைப்படுத்தும் வல்லாண்மைகளை ஒடுக்கப் பிறப்பவர்கள் எழுதுகோல் வேந்தர்கள். உலகின் மறுமலர்ச்சிகள் பலவற்றில் எழுது கோல்களே உந்து சக்தியாய் உரம் பெற்றுள்ளன.

இத்தகு சீரிய நோக்கில், தமிழ் மாமுனிவர், தவத்திரு அடிகளார். அவர்களின் வானொலிச் சொற்பொழிவுகளை அன்பு நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் சமுதாயத்திற்குப் பயனளிக்கும் வகையில் சமுதாய மறுமலர்ச்சி' எனும் அழகான நூலாகப் பதிப்பித்துள்ளார். சென்னை, திருச்சி, மதுரை வானொலிகளில் ஆற்றிய பொழிவுகளின் தொகுப்பே இந்நூல், அளவிற் சிறிதெனினும் ஆற்றலில் பெரியதாய், ஆன்றவிந்தடங்கிய கொள்கை விளக்கமாய்த் துலங்குகிறது இந்நூல்.

சமுதாய மறுமலர்ச்சியில் இலக்கியங்கள், நாட்டுப் பற்று, ஒற்றுமை, உழைப்பு, மதம் சொல்லும் மந்திரங்கள், மோதியின் சிந்தனைகள், சட்டத்தின் ஆட்சி, சடங்குகளைத் தவிர்ப்போம், மனித அன்பு, கிராமங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி, புத்தாண்டுச் சிந்தனைகள், மகாவீரர் பிறந்த நாள் சிந்தனைகள், 'மே' தினச் சிந்தனைகள், எனப் பனிரெண்டு சொற்பொழிவுகள். ஒவ்வொன்றும் நம் சிந்தைக்கு விருந்தாய்; சீரிய கருத்துப் புதையலாய் கை கோர்த்து நிற்கின்றன. காலத்தால் நல்வரவு கூற வேண்டிய கவினார்ந்த முயற்சியை நூல் முழுதும் காணலாம்.

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எனச் சங்க இலக்கியம் தொடங்கி,

மாணச் சிறந்ததொரு வாழ்க்கைச் சமுதாயம்
படைக்கத் துணிந்தேன் நான் பாதையிலே காணும்
தடைக் கற்கள் யாவும் தகர்க்கும் வலிவுடையேன்

என அண்மைக்கால எழுத்ததாளர்கள் வரை கவிதை, புதினம் எனப் பல துறைகளில் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தூன்றப்பட்ட வகைகளைச் சுவையான பாடல்களால் விளக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. 'மதம் சொல்லும் மந்திரங்கள்' என்னும் பொழிவு, நமக்கு விழிப்புணர்வூட்டி வழிகாட்ட வல்லது.

சீனச் சிந்தனையாளர்களில் கன்பியூசியசை அறிந்திருக்கும் நமக்கெல்லாம், சடங்குகளை எதிர்த்த சீன நாட்டு 'மோதி' என்னும் பேரறிஞரையும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களையும், இன்று நம்முடன் வாழும் அறிவியல் அறிஞர்களையும் வாழ்வியற் கவிஞர்களையும் இந்நூல் அறிமுகப்படுத்தும் பாங்கும் பாராட்டுக்குரியது. பிறநாட்டு நல்லறிஞர் ஒருவரின் பண்புநலன் பற்றி அறிய வைத்தும் உலக சமுதாய மறுமலர்ச்சிக்கான கவினுறு கருத்துப் புதையலை அளித்ததருளி செயலாற்றும் நூலாசிரியர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் மக்கள் சமுதாயத்தின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.

நூல் முழுதும் கருத்துமணிக் கோவையாய் கவிதை நடையாய் காலக் கண்ணாடியாய் மிளிர்கிறது.

நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். மேலும் பல நூல்களைப் பதிப்பித்தும் படைத்தும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

த. பெரியாண்டவன்

சென்னை
19-8-92

19. வாழ்க்கை நலம்
1992 டிசம்பர்

அணிந்துரை

சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம்


தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தி யோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள். தமிழ்ப் பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கை யுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்.

அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்கு களில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் மெய்யறிவு நிலையில் மட்டுமல்லாமல், விஞ்ஞான அறிவிலும் தமிழ் தலைசிறந்து விளங்க வேண்டுமென விரும்புகிறார். அதனை பல்வேறு கோணங்களில் நின்று வெளியிட்டு தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்.

அறிவியற்.கலைகளைப் பயிற்றுவிக்கும் கோயில்களான பல்கலைக் கழகங்களிலே இன்னமும் தமிழுக்கு இடமில்லை, அதாவது, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே அனைத்துப் பாடங்களிலும் தமிழில் போதிக்குங்கால், தமிழில் அறிவியல் நூல்கள் பெருகும். இந்தக் கொள்கையிலே நாங்கள் ஒன்றுபட்டவர்கள். இதனைச் சாதிக்க அரசின் துணை தேவைப்படுகிறது.

அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றுபட இறையருள் கூட்டுவிக்குமாக!

நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக!

கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.

அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி, பதிப்பகத் தாருக்கு என் பாராட்டு.

ம. பொ. சிவஞானம்

சென்னை-18
28-12-92


20. சிந்தனைச் சோலை


1992-டிசம்பர்

கலைமாமணி-தமிழ் மறைக் காவலர்
திருக்குறளார், வீ. முனிசாமி


பாராட்டுரை

ஆன்மிகம், சமுதாயம், இலக்கியம், அரசியல் இன்ன பிற துறைகளிலெல்லாம் புரட்சிகரமான நல்ல அறிவியல் கருத்துக்களைத் தமிழகத்தில் பரப்பி வருகின்ற தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்களை எல்லாம் ஒன்று திரட்டி "சிந்தனைச் சேர்லை" என்ற பெயரில் நமது நண்பர் சீனி. திருநாவுக்கரசு அவர்கள் கொண்டு வந்திருப்பது மிக மிக அரிய பணியாகும்.

அன்றும், இன்றும், என்றும் எங்களுடைய போற்றுதலுக்கும் வழிபாட்டிற்கும் உரிய தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் அரிய படைப்புக் களையும், பாரத ஒருமைப்பாட்டிற்கும், தமிழகப் பண் பாட்டிற்கும் புகழ் சேர்க்கும் படைப்புகளையும் மட்டுமே வெளிக்கொணருகின்ற கலைவாணி புத்தகாலயத்தின் பதிப்பாசிரியர், நண்பர் சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நம்முடைய பாராட்டுதலுக்கு உரியவராவார்கள்.

திருவள்ளுவர், அப்பர், திருஞானசம்பந்தர், குமர குருபரர் முதலிய மறை நூல் ஆசிரியர்களின் நுணுக்கமான சிந்தனைகளை அடிகளார் அவர்கள் புரட்சிப் புதுமையில் விளக்கம் செய்வதோடு, டாக்டர் அம்பேத்கார், ஜே.சி. குமரப்பா போன்ற மாமேதைகளின் அறிவுச் சுரங்கத்தில் இருந்து புதையல் எடுத்து புதிய புரட்சிகரமான ஒருமைப் பாட்டுச் செய்திகளை எல்லாம் தவத்திரு அடிகளார் அவர்கள் மிகச் சிறந்த தமிழ் நடையில் தந்துள்ளார்கள்.

எல்லோரும் தவத்திரு அடிகளார் அவர்களின் உயர்ந்த கருத்துக்களைச் சிந்திக்க வேண்டுகிறேன்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இலக்கணமாகத் திகழும் தவத்திரு அடிகளார். அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

சென்னை-35 திருக்குறளார்
9-12-92


21. சிலம்புநெறி


1993 டிசம்பர்

அணிந்துரை


நதி அரசர் பி. வேனுகோபால்


தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு அறிமுகமானவர். சிறந்த தமிழ் பற்றாளர். தமிழ் உணர்வு படைத்தவர்கள். அவர்கள் கூறும் கருத்துக்களில் என்றும் புதுமை இருக்கும். சிந்தனையைத் தூண்டும். மக்களை நல்வழிப்படுத்த நெறிப்படுத்த, முறைப்படுத்த தேவையான கருத்துக்கள் இருக்கும்.

பகுத்தறிவு வாதிகளும் ஏற்றுக் கொள்ளும் ஆன்மிகவாதி. அது அவர்களுடைய தனிச்சிறப்பு. அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவருடைய கருத்துக்கள் எல்லா அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படும். போற்றப்படும்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் வலிறுத்தும் மூன்று நெறிகள் எவை என்பதை தவத்திரு அடிகளார் இந்நூலில் அற்புதமாக விளக்கி இருக்கிறார். முதல் நெறி அரசியலில் உள்ளவர்களுக்கு அறநெறி பற்றிக் கூறுவது.

சிந்தனையால், செயலால், மக்களிடத்தில் அன்பு காட்டி மக்கள் இனம் வாழ்வதற்கு உரியவற்றை செய்வது தான் அறம். தொண்டு மனப்பான்மையுடன் சுயநலமில்லாத செயல்கள். மனதுக்கு துய்மை தரும். அது தான் அறம். அதுதான் அரசியலில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய அறநெறி. இதுவே சிலம்பு நெறி என்று அற்புதமாக விளக்குகிறார், தவத்திரு அடிகளார். அவர்கள்.

சிலப்பதிகாரம் வலியுறுத்தும் இரண்டாவது நெறி "உரைசால் பத்தினியை" உயர்ந்தோர் போற்ற வேண்டும், நாடு சிறப்புற நல்ல அரசு தேவை. வீடு சிறப்புற நல்ல மனைவி தேவை. நாட்டிற்கு வலிமை சேர்ப்பதே நல்ல மனைவிதானே. நாட்டிற்கும் வீட்டிற்கும் விழுப்பம் சேர்க்கும் கற்புடைய மனைவியை, பத்தினி பெண்டிரை உயர்ந்தோர் போற்ற வேண்டும். இது இரண்டாவது சிலம்பு நெறி.

தூய அன்பு, கணவனுக்குத் தியாகம் செய்தல். வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் கணவனுக்குத் தோழமையாதல், துணை நிற்றல் இவை அனைத்தும் சேர்ந்த ஒழுக்க நெறியே கற்பு என்று அருமையாக விளக்கம் தருகிறார்.

அடிகளார் காவி உடை அணிந்த துறவிதான். மனித இயல்புகளைப் புரிந்து கொண்டு கற்புக்கு என்ன அற்புதமான இலக்கணம் வகுக்கிறார் என்பதைக் காண தமிழ் உள்ளங்கள் பூரிக்கும். மகிழ்ச்சி அடையும்.

சிலப்பதிகாரம் வலியுறுத்தும் மூன்றாவது நெறி "ஊழ் வினை உருத்து ஊட்டும்” ஊழ் வலிமை அதன் பயனைத் தந்தே தீரும். ஊழ் என்றால் என்ன? தவத்திரு அடிகளாரின் கருத்துக்களின் நுட்பம், பொலிவு, புதுமை இவை அனைத்தும் இங்கே பார்க்கலாம்.

புலன்கள், பொறிகளின் வாயிலாகச் செயற்பாட்டுக்கும் பயனுக்கும் வருவது ஊழ். இது தவிர்க்க முடியாத இயற்கை விதி, நியதி, அறத்தின் செயற்பாடு.

நேற்றையை வாழ்வின் காரணமாக இன்றைய வாழ்க்கைக்கு நமக்கு ஏற்படும் விளைவுகள். இதுதான் ஊழ். நாம் செய்த வினைகளால் ஏற்படும் விழைவுகளை நாம் அனுபவிக்கத்தானே வேண்டும். இதுதான் ஊழ் என்று விளக்கும் அடிகளார், இதனை மனிதன் எதிர்த்து போராடலாம். வெற்றியும் அடையலாம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

கோவலன் பிணத்தைக் கொலையுண்ட இடத்தில் கண்ட கண்ணகி நீதி கேட்க பாண்டியனின் அவைக்களத்தை நோக்கி நடக்கிறாள். அப்பொழுது கண்ணகி "பெண்டிரும் உண்டு கொல்" "சான்றோரும் உண்டு கொல்" "தெய்வமும் உண்டு கொல்" என்று கூறி நீதி கேட்கிறாள். "தெய்வமும் உண்டு கொல்” என்ற கண்ணகியின் கூற்றுக்குத் தவத்திரு அடிகளாரின் விளக்கம், எங்களைப் போன்றவர்களின் மனதைத் தொடும் பகுதி.

"தெய்வம் உண்டுகொல்” என்ற கண்ணகியின் கூற்றில் "தெய்வம்” என்பதற்கு என்ன பொருள் என்பதை மிக நுட்பமாக விளக்குகிறார் அடிகளார், தெய்வம் என்பது நியதிகளின் மறுபெயர். நீதியின் வடிவம் தெய்வம்.

எங்கு நீதி போற்றப்படுகிறதோ அந்த நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப்பெறும், இயற்கை நியதிகள் பாராட்டப் பெறும். வல்லாண்மை வாழும். தெய்வத்தை "நீதி’ என்று திருவாசகம் போற்றுகிறது என்று அடிகளார் முடிக்கிறார். இந்த நூலில் என் உள்ளத்தையும் உணர்வுகளையும் தீண்டிய பகுதி இதுதான்.

பலமுறை படித்து மகிழ்ந்தேன். வாசகர்கள் இந்நூலின் எல்லாபகுதிகளையும் படித்து மகிழ்ந்து இன்புற வேண்டும். இதுவே என் அவாவும் வேண்டுகோளும் ஆகும்.

தவத்திரு அடிகளார் அவர்களின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் திரு.சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இதனையும் சிறப்பாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.


சென்னை தங்கள்
25-9-93 பி.வேணுகோபால்


22. சமுதாய மறுமலர்ச்சி


1993 டிசம்பர்

அணிந்துரை


கலைமாமணி, தமிழ்மறைக் காவலர்,
திருக்குறளார், வீ. முனிசாமி.


தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் வானொலியில் ஆற்றிய இலக்கியப் பேருரைகளே "சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்" என்னும் அழகான நூலாக கலைவாணி வெளியிட்டுள்ளது.

சமுதாய மறுமலர்ச்சி என்றால் என்ன என்பதைத் தவத்திரு அடிகளார் அவர்கள் சங்கப் பாடல்களையும், திருக் குறளையும் எடுத்துக்காட்டி விளக்கும் திறன் மிகவும் அருமையானது.

திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும் (பக்.12). அடிகளார் அவர்களின் எண்ணவோட்டம் பாராட்டத்தக்கது. சமுதாய மறு மலர்ச்சிக்குப் பாடுபட்ட, கவிஞர்கள், புதின ஆசிரியர்கள் சிலரை நினைவு கூர்ந்து விளக்கும் திறன் பரந்து விரிந்த நூலறிவாற்றலைத் தெற்றெனக் காட்டுகிறது.

ஆன்மிகம், சமுதாயம், இலக்கியம், அரசியல் இன்ன பிற துறைகளிலெல்லாம் புரட்சிகரமான அறிவியல் கருத்துக்கள் பயன் தரும் வகையில் செயலாற்றி அருளும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவர்களுக்கு மக்கட் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

பாரத ஒருமைப்பாட்டிற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் புகழ் சேர்க்கும் படைப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் நமது நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இலக்கணமாகத் திகழும் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

திருக்குறளார்

சென்னை
28-12-93

25. எங்கே போகிறோம்


1994 டிசம்பர்

முனைவர். த. பெரியாண்டவன், எம்.ஏ., பிஎச்டி, தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநர், சென்னை.


அணிந்துரை

நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர். சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதைப் பறைசாற்றி வரும் பண்பாளர்.

ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார். அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுாற்று நான்காம் ஆண்டு பல்வேறு நாட்களில் சுதந்திர தினவிழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள், உழைப்புச் சிந்தனைகள், வளர்ச்சி மாற்றம், பொருளாதாரச் சிந்தனைகள், வேளாண்மைச் சிந்தனைகள், கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் உட்பட பனிரெண்டு வெவ்வேறு பொருண்மைகளில் எங்கே போகிறோம் என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு விடை கண்டு மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தின் மீது அறிவுக் கதிர் ஒளி பாய்ச்சி எழுப்ப முயன்றிருக்கும் சொற்பொழிவுகளே எங்கே போகிறோம்? என்னும் மலர்த் தோப்பாக வெளிவருகிறது. "தன் மாணாக்கன் அணிந்துரை வழங்கலாம்” என்னும் மரபுப்படி தவத்திரு அடிகளார் அவர்களின் மாணாக்கன் நிலையிலுள்ள நான் இதற்கு அணிந்துரை வழங்குவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

காலால் நடக்கும் மனிதன் பிற கால்நடைகளிலிருந்து சிந்தனையாலும், கருத்தாலும், அறிவாலும், நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், படைப்பாற்றலாலும் நடந்து வேறுபடு கிறான் என விளக்கும் பாங்கு போற்றி பாராட்டிற்குரியது (பக்கம் 10).

சுதந்திர தின விழாப்பற்றி விளக்கும் போது, சுதந்திர தின விழா என்பது கொடியேற்றுதல் மட்டுமன்று. நேற்று என்ன நடந்தது, இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாளை என்ன நடக்கும், நாளை என்ன நடக்குமாறு செய்ய வேண்டும் இந்தக் கணக்காய்வு செய்யாமல் போனால் சுதந்திர தின விழாவிற்கு என்ன பொருள் என வினவுவதை விடுதலை நாளில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விளக்க உரையாகும்.

தாம் நரகத்திற்குப் போனாலும் கோடான கோடி பேர் வைகுண்டத்திற்குப் போகவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட இராமானுஜர் பிறந்த மண்ணில் சுயநலம் வளர்ந்து வருகிறதே என அடிகளார் சோர்வு கொள்கிறார். இளைஞர் களின் உணர்வுகளைப் புறக்கணிக்காது வளர்க்க வேண்டு மெனவும் மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும் எனவும் இவர் கூறும் அறிவுரைகள் பொன்னேட்டில் வைரங்களால் பதிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள்.

கல்விச் சிந்தனைகள் என்னும் பொருளில் படிப்பு வேறு, அறிவு வேறு என தெளிவுபடுத்தி தகவல்கள் நிறைய வைத்திருப்பவர்கள், நிறைய படித்தவர்கள், பட்டம் பெற்றிருப்பவர்கள் இவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்று பிழையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அறிஞர்கள் இருக்கலாம். தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கல்வியே அறிவுடைமையல்ல, கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்களும் அல்லர், கல்வியும், கேள்வியும் அறிவு பெறுவதற்குரிய வாயில்களே ஆகும் எனவும் கூறி கல்விக்கு இலக்கணம் கூறுகிறார்.

இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனை மொழி, உணரும் மொழி என தாய்மொழி வழிக் கல்விக்கு வித்திடும் பாங்கு புகழத்தக்க வகையில் அமைந்துள்ளது. உழைப்புச் சிந்தனைகள் என்னும் பொருளில் சோம்பலுடனும், சோர்வுடனும், நூற்றாண்டுகள் வாழ்வதைவிட பெருமுயற்சி, கடின உழைப்புடன் ஒருநாள் வாழ்ந்தால் கூடப்போதும் என்னும் பொன்மொழி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

உழைப்பு; அறிவு உழைப்பு, உடல் உழைப்பு என இரண்டாக பகுத்து அறிவு உழைப்பு எவ்வகையிலும் உடல் உழைப்பைத் தாழ்த்தக்கூடாது என வரலாற்றுச் சிறப்புகளுடன் நிறுவும் பாங்கு நிலை பேருடையது. வளர்ச்சி மாற்றம் என்னும் பொருளில், வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல. பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதும் அல்ல. எதிர்காலத்தை நோக்கி நடை போடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி, மாற்றம் என விளக்கும் பாங்கு சிறந்தது.

பொருளாதாரச் சிந்தனைகள் என்னும் பகுதியில் உண்மையான சம்பளம் என்றால் அது பணத்தின் அளவு அன்று, வாங்கும் சக்தியே ஆகும் எனக் கூறும் வரையரை, வறுமை என்பது வசதிகள் அற்ற வாழ்க்கை எனவும், ஏழ்மை என்பது உணவுக்குப் போராடும் நிலை எனவும் இவர் வகுக்கும் இலக்கணம் வானுயர நிற்பதாகும். வேளாண்மைச் சிந்தனைகள் என்னும் பொருளில் வரப்புகளே அதிகம் என நம்முடைய ஒருமைப்பாட்டின்மையை உணர்த்துகிறார்.

கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் என்னும் பகுதியில் கால்நடைகள் இல்லையேல் விவசாயம் இல்லை, உணவு இல்லை, ஏன் மனிதகுல வாழ்க்கையில் கால்நடைகள் என்றால் மிகையாகாது. அதனாலேயே செல்வத்திற்கு மாடு என்று பெயர் சூட்டியது வள்ளுவம், எனக் கூறும் பகுதி சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு வாரம் என்பது ஏழு நாள்களைக் கொண்டது. இறைவன் ஏழிசையாய் உள்ளான் என சைவ சமயம் கூறுகின்றது. செயற்கரிய செய்து வரும் பெரியார் ஆகிய தவத்திரு அடிகளார் அவர்கள் தமிழ்ச் சமுதாயம், இந்திய சமுதாயம் கை கொள்ள வேண்டிய அரிய பொருள்களை அள்ளித் தந்துள்ள பாங்கு சால்புடையது.

அடிகளார் அவர்கள் வானொலி வழி நிகழ்த்திய உரை காற்றோடு காற்றாய் கறைந்து போகாமல் நிலையாக மக்கள் உள்ளங்களில் உறைந்து போகின்ற வகையில் வரி வடிவில் அச்சேற்றி பதிப்பித்துத் தந்துள்ள பதிப்பாசிரியர் சீனி. திருநாவுக்கரசு அவர்களையும், சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ள கலைவாணி புத்தகாலயத்தையும் மிகவும் பாராட்டுகிறேன். தவத்திரு அடிகளார். அவர்கள் தமிழுலகம் விழிப்புற காலம் தம் கருத்துக்களை ஓயாது ஒலிக்கவும் தமிழன்னை போல் தரணியில் நிலைத்த புகழுடன் வாழவும் அன்னை ஆதிபராசக்தியை இறைஞ்சுகிறேன்.

சென்னை த. பெரியாண்டவன்
25-12-94


24. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்


1996 - மே

அணிந்துரை

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்


அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் சமயக் குரவர்கள் மூவரைப் பற்றியும் இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகளாக வாழ்ந்த நம் குருமகாசந்நிதானம் வரைந்த எழுத்தோவியம் நூலாக முகிழ்த்திருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டின் ஞானக் கதிரவனாக உலாவந்த அருள்ஞானச் சுடர் அப்பர் அடிகள், மண்மேல் சொற்றமிழ் பாடிய சுந்தரர் பெருமான், கல்லும் கரைந்துருகும் தேனார் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய சமயக் குரவர்கள் சைவ சமய உலகத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள்!

"நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்!” என்று முடியாட்சிக்கு எதிராய் முதற்குரல் எழுப்பியவர் அப்பரடிகள். சாதிச் சகதிக்குள் மூழ்கிக் கிடந்த சைவ சமயத்தைப் புனருத்தாரணம் செய்தவர் அப்பரடிகள்!

சமயகுரவர் அப்பரடிகள் எங்கே துன்பம் இருந்ததோ எங்கே அவலம் இருந்ததோ அங்கெல்லாம் பயணம் செய்தவர்! பார்வாழத் திருவீதிப் பணி, திருக்கோயில் உழவாரம் என இப்படித் தொண்டே வாழ்வாய், வாழ்வே தொண்டாய் வாழ்ந்து காட்டியவர் அப்பரடிகள்!

சமுதாயத்தின் மேடுபள்ளங்களைச் சரிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் முடியாமல் அன்று தொட்டு இன்று வரை, பொருளியல் தத்துவங்களும், ஆட்சி அமைப்பும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை மாறிடத் தர்மகர்த்தா முறையினை முதன் முதலில் உலகுக்குச் சொன்னவர் அப்பரடிகள்.

அந்த அப்பரடிகளாகவே வாழ்ந்து காட்டிய, நமது குருமாக சந்நிதானம், அப்பரடிகளின் அருமை கோட்பாட்டை, புதிய பார்வையில் பரிமாணத்தில் பார்க்கும் விதம் போற்றுதற்குரியதாகும்.

நற்றமிழ்ச் சுந்தரரின் வாழ்வு, தோழமை வாழ்வுக்கு இலக்கணம் : வாழ்த்துப் பொருளாகவும் வழிபடு பொருளாகவும் இருந்த பரம்பொருள் சுந்தரர் வரலாற்றில் வாழ்வுப் பொருளாக, மண்ணில் சராசரி மனித உணர்வுடன் நடமாடிய பாங்கு எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியதாகும்; வியப்பதற்குரியதாகும். மண்ணகம் மணக்கும் நட்பு இறைவன்- ஆரூரர் நட்பு!

நட்பு தகுதி கடந்தது. உணர்வு கடந்தது. இது ஆற்றுதற்குரிய பணிதானா? என்ற வரம்பெல்லாம் கடந்து தோழமைக்குத் துணை நிற்றல், தோழனின் பெருமை குன்றாது காத்தல், தோழனின் தவற்றுக்காகத் திருத்தும் பொருட்டு ஒறுத்தும் திருத்துதல்-இவையெல்லாம் மண்ணில் நடமாடிக் காட்டிய மாதேவனின் செயல்கள்.

உறவுகளைத் துறக்கலாம்! குருதி கலந்த பந்தபாசங்களைத் தவிர்க்கலாம்! தோழமை உணர்வுகளைத் தவிர்க்க முடியாது. துறவிகளும் துறக்கமுடியாத உறவு தோழமை உணர்வு! பாசப்பற்று அறுத்தான் அறுக்க முடியாத பற்றாக தோழமை உணர்வை மண்ணிற்குக் காட்டியவிதம் எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

அடுத்து, கல்லும் கரைந்துருகும் மணிவாசகமாம் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான்! நாடாளும் நல்லமைச்சர்! படை ஆள-பரிவாங்க வேண்டியவர் பார் போற்றும் திருக்கோயில் எழுப்புகின்றார்! ஆட்சிக்கு அவசியம் குதிரைகள் அல்ல; மக்கள் நலம் என்று பறைசாற்றுகின்றார்.

கல் எல்லாம் பேசும் பொற்சிலைகளாக மாற, மண் எல்லாம் விண்முட்டும் கோபுரங்களாக உருப்பெற, வண்ணம் எல்லாம் உயிர்ப்புடைய ஓவியங்களாக மாற வரலாற்றுப் பொக்கிஷமாய்த் திருக்கோயில் எழுப்புகின்றார். இச் செய்தியறிந்த அரசனால் மணிவாசகப் பெருமான் தண்டிக்கப் பெற்றவுடன் அண்டர் நாயகனே எழுந்து வருகின்றான்! அடியார்க்கு அடியவனாய் எளியார்க்கு எளியனாய் எழுந்து வருகின்றான்! மண்ணில் நடமிட்டன. அவன் பொற்பாதங்கள்! பண் சுமந்த தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாக்களுக்காக மண் சுமந்தான். அவன் பொன்மேனி புண் சுமந்தது! உலகைக் காக்கும் பரம்பொருள், தானே அடிபெற்றது எதனால்? எல்லோரும் உழைக்க வேண்டும்! அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் உழைக்க வேண்டும். பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினைத் தர யார் மறுத்தாலும் தண்டிக்கப்படுவர்; ஆண்டவனாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர், இந்தத் திருநிகழ்வு அற்புத நீதியை விளக்குகிறது என்று நம் குருமகாசந்நிதானம் புதிய விளக்கம் சொல்கிறார்கள்.

இறைவன் திருக்கோயில்களில் இன் தமிழ் மறைகள் மீண்டும் முழங்க வேண்டும்! தமிழ் கூறும் நல்லுலகத்தின் வேதமாக விளங்கும் திருமறைகள் திக்கெட்டும் முழங்குவது சமய குரவர்களுக்கு ஆற்றுகின்ற கடப்பாடு ஆகும். இந்த நூலில் சமய உலகத்திற்கு பண்ணோடு கலந்த பைந்தமிழ் உலகத்திற்கு நம் சமயக் குரவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை நம் குருமகாசந்நிதானம் புதிய கோணத்தில் எடுத்து மொழிந்துள்ளார்கள்.

தமிழ் மந்திரங்கள் மீண்டும் திக்கெட்டும் முழங்க வேண்டும்! அவையே சமய குரவர்களுக்குச் செய்கின்ற உண்மையான கடப்பாடு, நன்றி ஆகும். குருமகா சந்நிதானத்தின் புதிய பார்வையில் மலர்ந்த இந்த நூலைப் பதிப்பித்து, பணியாற்றும் கலைவாணி சீனி. திருநாவுக்கரசு அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி, பாராட்டுக்கள்.

குருமகாசந்நிதானத்தின் நினைவுகள் மலர இந்த அரியநூலை அவர்களின் பொன்னார் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.


குன்றக்குடி
பொன்னம்பல அடிகளார்

டாக்டர். கி. வேங்கடசுப்பிரமணியன்
முன்னை துணைவேந்தர்
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

மதிப்புரை
(அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)


அருமை நண்பர் தமிழன்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு தலைமையேற்றுள்ள கலைவாணி புத்தகாலயம் ஒரு குன்றக்குடி சுரங்கம். தமிழகம் கண்ட தலையாய இலக்கிய முனிவர் அமரர் தவத்திரு குன்றக்குடி மகாசந்நிதானம் அவர்கள். தவத்திரு அடிகளார் ஒரு அற்புதத் துறவி மட்டுமல்ல தெய்வத் தமிழைப் பரப்பிய நால்வருடன் கூடச் சேர்த்து ஐந்தாமவராக வைத்து எண்ணப்படக்கூடிய பேரறிஞர் ஆவார்கள். அவரது நாற்பதுக்கும் மேற்பட்ட நூல் களை வெளியிட்டதின் பயனாகக் கலைவாணி புத்தகாலயம், பெரும் தமிழ்ப் பணி செய்துள்ளது.

இப்போது வெளி வரும் அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர் என்னும் இந்நன்னூல் அடிகளாரின் சிவநெறிப் பற்றுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அடிகளாரின், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முத்துகணேசனார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளைத் தாங்கியுள்ள நூல் இது.

பன்னிரு திருமுறைகளில் 4,5,6-ம் திருமுறைகளை அருளிச் செய்த அப்பர் பெருமான் பெருமைகளைக் குன்றக்குடி மகாசந்நிதானம் எழுதும்போது அப்பொன் னெழுத்துக்கள் நம் மனத்தைத் தொடுகின்றன.

நம்பியாரூரர் வரலாற்றை எழுதும் அடிகளாரின் தமிழ் நடை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. வன் றொண்டர் புராணம் இது.

"அன்று வந்தெனை அகலிடத்தவர் முன்
ஆளதாக என்று ஆவணங்காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர் மிசைஒளித்த
நித்திலத் திரள் தொத்தினை"

என்று சுந்தரர் பாடுவதை நம் கண்முன் நிறுத்தும் அடிகளார், இறைவன் ஒரு தொண்டனுக்கு எப்படி நண்பனாக இயங்கித் "தம்பிரான் தோழ”ரான அரிய அற்புதத்தை நமக்கு விளக்கும் பாணி நம் உள்ளத்தை உருக்குகின்றது.

இறைவனையே ஏசும் உரிமை பெற்ற கதை நம்முன் விரியும் போது இறைக் கருணைக்கு எல்லை ஏது என்னும் தத்துவத்தையும் நம் முன் கொணர்கிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

"God is my Friend" story 20ம் நூற்றாண்டின் ஆப்பிரிக்க பிஷப் டூடு சொன்னதை அன்றே வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினார் ஒப்பற்ற சுந்தரர் பெருமான்.

திருவாதவூரர் வரலாறு என்றென்றும் தித்திக்கும் வரலாறு. அவர்தம் வாழ்க்கை ஒரு மாபெரும் தவ வாழ்க்கை அவரது வாழ்நாள் முழுவதுமே ஒரு வேள்வி, ஞானவேட்கை கொண்ட மணிவாசகப் பெருமானைப் புகழ்ந்து, அவரது தவ ஒளியினைத் தம் அரிய ஆற்றலால் நம்முன் குன்றக்குடி அடிகளார் நிறுத்தும் போது நாம் அப்படியே தடுத்தாட் கொள்ளப்படுகிறோம்.

நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்கள் நாமறிந்ததே, ஆயினும் குன்றக்குடி மகா சந்நிதானத்தின் மூலம் இவ்வரலாற்றை நாம் கேட்கும் போது நம் கண் முன்னே "கவனமாக்களின்" அதிசய ஊர்வலம், அவை எப்படி இரவோடிரவாக சாதாரண நரிகளான அற்புதம் இவை நிகழ்கின்றன. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் ஈசனை நீ நினைத்தால் அவன் உன்முன் கைகட்டி நிற்பான் என்னும் இந்து மதத்தின் பேருண்மையை வெளிக்கொணர்கிறது.

தவயோகி அடிகளாரின் அருள்வாக்கு நால்வரில் மூவரின் சிறப்பு இவற்றை அருமை சீனி.திருநாவுக்கரசு அவர்கள் நூலாக்கியதற்குத் தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

அன்புடன் கி. வேங்கடசுப்பிரமணியன்


25. மண்ணும் மனிதர்களும்


1996 மே

பேராசிரியர்
க. அன்பழசன் சென்னை
கல்வி அமைச்சர் 16-5-96


தமிழ் நாட்டு மக்களின் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரியவராக விளங்கிய தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தொண்டு பல திறப்பட்டதாகும்.

இளமைப் பருவத்தில் வறுமையிலும் கல்வியில் ஆர்வம்; தாய்மொழியில் பற்று, சைவத்தில் ஈடுபாடு; பின்னர் தரும் ஆதீனத்தில் தொண்டு, அதன் விளைவாகத் துறவு தம்பிரான் நிலை, பின்னர் குன்றக்குடி சைவ மடத்தின் ஆதீனமாகப் பொறுப்பேற்றல் என்னும் வகையில் தகுதியால் உயர்ந்த அடிகளார் மக்கள் நலன் நாடும் மனவளம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

நாடு விடுதலை பெற்றுப் பல பத்தாண்டுகள் கடந்தும் வறுமையும், எழுத்தறிவின்மையும் ஒழிக்கப்படாமையையும்; பிறவி வழிப்பட்ட சாதி வேற்றுமை நாளும் உரம் பெற்று வருவதையும் எண்ணிக்கவலை கொண்டார். சம்பிரதாயம்' காத்துச் சமயப்பணி ஆற்றும் பொறுப்பு மிக்கவராயினும், மக்கள் பணி ஆற்றுவதிலே ஆர்வம் கொண்டவரானார்.

சமுதாயத்தில் நிலவும் வளமும்-வறுமையும் மக்களைப் பிரிப்பதைப் போன்றே-திருமடங்களினிடையேயும் நிலவும் வளநிலை வேறுபாடு ஏதுவாக வளமற்ற திருமடத்தைத் தாழ்வாக மதிக்கும் மனப்போக்கு இடம் பெற்றிருப்பதைக் கண்டார்.

திருமடங்களுக்குள்ளேயும் துறவிகளுக்கிடையேயும் வளத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் எண்ணப்படுகின்றன. அவ்வெண்ணத்தின் வழி மதிப்பீடு குறைகின்றது. இது ஏற்க முடியாத ஒன்று. “நயத்தக்க நாகரிகம் எப்போது மலரும்?” என்னும் வினாவை அவர் எழுப்பியுள்ளார்.

இதனால் சமுதாய வாழ்வில் நிலைபெற்ற வள வேற்றுமையால் உருவாகும் மனப்பான்மை, துறவிகளையும் அவர் தம் மடத்தையும் கூட விடவில்லை என்பது துறவு பூண்டாரின் உயர்ந்த பற்றற்ற மனநிலைக்கே இழுக்காவதை அவர் உணர்ந்தார்.

மடாதிபதிகள் புறத்தோற்றத்தால் உருவாக்கும் நம்பிக்கைக்கு உரியவர்களாக அகத்தோற்றத்தில் இருக்கவில்லை என்பது இதனால் தெளிவாகும். திருக்கோயில்களில் எழுந்தருளும் இறைவர்களுள்ளும் செல்வச் செழிப்புடைய கோயில் உடையாருக்கே எல்லாப் புகழும் பெருமையும் உளதாவது நாம் நாளும் காண்பதுதானே!

சாதி வேற்றுமையைப்பற்றி அடிகளார் குறிப்பிடுகையில், “எம்பெருமானார் என்றும் உடையவர் என்றும் - போற்றப்பட்ட ராமானுசரின் முயற்சி சாதிவேற்றுமைகளை அகற்றுவதில் வெற்றி பெறவில்லை . நம்முடைய பழக்கம் - எதையும் வாழ்த்துவோம்! வழிபடுவோம்! ஆனால் (வாழ்க்கையில் பின்பற்ற மாட்டோம்”-என்று தம் வருத்தத்தை வெளியிடுகிறார். இப்படிப்பட்ட உறுதியற்ற மனப்போக்கு வளர்ந்ததால், நம்முடைய போராட்ட உணர்வு தவருள பாதையில் செலவிடப்படுவதையும் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்.

"நமக்குப் போர்க்குணம் மிகுதியும் உண்டு. ஆனால் ஒரே ஒரு குறை. நமது போர்க்குணம் மனிதர்களுடன் போராடுவதிலேயே கழிகின்றது. மனித குலத்தின் பொதுப்பகையாகிய-சாதி வேற்றுமைகள், வறுமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபடுத்தப்படுவதில்லை” எனவே அடிகளார்-சமயத் தொண்டு பொருளுடையதாக வேண்டுமானால்-சமுதாய வாழ்வில் படிந்துள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவரானார்.

தீண்டாமை முற்றும் ஒழிக்கப்பட வேண்டும். சாதி வேற்றுமை உணர்வு அழிக்கப்பட வேண்டும் வறுமையை விரட்டிய வாழ்வு - மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். சைவ சமயத்தாரிடையிலும், சாதியால் சைவர் என்பார்-பிறருடன் ஒன்றாக அமர்ந்து உண்ணாமை போன்ற முறைகேடு மாற்றப்பட வேண்டும்.

இறை வழிபாட்டில்-மக்கள் உணர்வு சிறக்க ஏதுவாக அவர்கட்கு விளங்கும் தமிழிலேயே வழிபாடு (அருச்சனை) நடைபெற வேண்டும்.

இந்தி முதலான வேற்றுமொழி ஆதிக்கம் உருவாக இடந்தரக்கூடாது. வறுமையை விரட்டும் பணியே தலையான பணி. அதற்கு ஏற்ப மக்களைத் திறமான முயற்சியும், தொழிலும் - வாய்ந்தவராகச் - செய்ய வேண்டும் என்பன போன்றப் பல சீரிய எண்ணங்களைக் கொண்டவராகவும், அதனை மக்களிடம் பரப்பும் தொண்டில் ஈடுபட்டவராகவும் விளங்கினார்.

இளமையிலேயே அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் ஈர்க்கப்பட்டவரானார். அண்ணா அவர்களின் கொள்கையில் உடன்பாடு கொள்ள முடியாத அளவு அவரது சைவப் பற்று இயல்பான தடையாக அமையினும், மாற்றார் கருத்தையும் மதிக்கும் அண்ணாவின் உளப்பாங்கையும், மற்றவர்களின் கருத்தைப் பாராட்டி வரவேற்கும் அவரது தனிச்சிறப்பையும் கண்டு அவரிடம் பெருமதிப்புடையவரானார்.

அது போன்றே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு இயக்கம் மக்களிடையே மலிந்துள்ள மூட நம்பிக்கைகளை மாற்றுவதின் மூலமே அவர்களிடத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்னும் இலட்சியத்துடன் நடைபோடுவதையும், பெரியார் அவர்களையே நேரில் கண்டு உரையாடித் தெளிந்தார்.

தந்தை பெரியாரும் தவத்திரு அடிகளாரும் 'கடவுள்' கொள்கையில் முரண்பட்டவர்களாயினும், மக்களின் மனிதத் தன்மையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெரியாரின் தொண்டினை அடிகளார் மதித்திடலானார்.

தந்தை பெரியாருடனும், அறிஞர் அண்ணாவுடனும், முதல்வராக விளங்கிய கலைஞருடனும், என்னுடனும் அடிகளார் ஒரே மேடையில் பேசுவது என்பது. அந்தக் காலத்தில் தமிழ் மக்களால் ஒரு வியப்புடன் நோக்கப்பட்டது எனினும் மக்களிடையே மாறுபாட்டைக் குறைத்து, ஒரு பொது நோக்கை வளர்க்க ஏதுவாகியது. சமயத்தலைவராகிய அடிகளார் பெரியாரின் நன் மதிப்பையும் அண்ணாவின் அன்பையும் பெற்றவராகத் திகழ்ந்தார்.

'சமயம் அமைந்தது சமுதாய நலன் காக்கவே' என்னும் நோக்கம் அடிகளாரிடம் மேலோங்கிய போது, சமயவாதிகள் குறிப்பாக ஆதீனங்கள், அடிகளார் சமய மரபைக் காக்கவில்லை என்று கூடக் குறை பேசலானார்கள், ஆனால் அடிகளார் அவற்றைப் பொருட்படுத்தாமல் - தமது பாதையில் தொடர்ந்து தடைபோடலானார். சைவ சமயப் பணியினை விட அவர் தமிழுக்கும்-திருக்குறள் நெறி பரப்புதற்கும் ஆற்றிய தொண்டினை நாடறியும்.

இறைப்பற்று உணர்வில் மேம்பட்ட நிலையிலும் சமுதாயக் கேடுகளையும் குறைகளையும் கண்டனம் செய்ய முற்பட்ட வடலூர் வள்ளலாரின் வழியில் சிந்தனை கொண்டவராகி, சைவமும் தமிழும் இருகண்ணெனக் கொண்டு நாடெங்கும் முழங்கிய ஞானியார் அடிகளின் வழியில் செயற்படுபவராகி, பொது நல நாட்டத்தில் அருள் உணர்வு வேட்ட தமிழ்த் தென்றல் திரு.வி.க. வளர்த்த நெறி யினைப் பரப்புபவராய், பெரியார், அண்ணா ஆகியோரிடம் மதிப்பு மிக்கவராய்த் தொண்டு ஆற்றிய தனிச்சிறப்புடையவர் அடிகளார்.

அடிகளார் தமது வாழ்வில் கண்டும் கேட்டும் உற்ற பட்டறிவின் பயனை மற்றவர்களும் பெற்றிட ஏதுவாக 'ஆனந்த விகடன்' ஏட்டில் தீட்டிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே 'மண்ணும் மனிதர்களும்' என்னும் இந்த நூலாக வெளிவந்துள்ளது.

இந்தக் கட்டுரைகளைப் படிப்பவர்கள், அவரது எண்ணப் போக்கையும் உளப்பாங்கையும் உணரலாகும். அடிகளாரின் சீரிய சிந்தனைகளை எல்லோரும் தெளிந்திட ஏதுவாக இதனை புத்தக வடிவில் வெளியிட முன்வந்த கயல் தினகரன் அவர்கட்கு எனது பாராட்டும் வாழ்த்தும் உரியவாம்.

க. அன்பழகன்

திருவருள் திரு திருவண்ணாமலை
தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக ஆதீனம்
பரமாசாரிய சுவாமிகள் குன்றக்குடி 630 206
(ஆதீனகர்த்தர்) தமிழ்நாடு


தொடர் பயணம்!

(மண்ணும் மனிதர்களும்)

ஒரு வரலாறு, தம் வரலாற்றை எழுதியுள்ளது. ஒரு காப்பியம் தாமே தம்மைப் பற்றி அடிமுதல் முடிவரை அளந்து பார்த்திருக் கின்றது. இஃது ஒரு சுய விளம்பரம் அல்ல, தற்பெருமை அளக்கின்ற தம் முகவரியும் அல்ல; எதிர் காலம் எந்தச் சார்புக்குள்ளாவது சிக்கி மிதமிஞ்சிய அன்புணர்வில் மிகைப்படுத்தி எழுதிவிடக்கூடாது என்ற கவன உணர்வு காரணமாக இருக்கலாம்.

இந்த வரலாறு இருளில் திசை தெரியாமல் தட்டு தடுமாறுகின்ற கலங்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காய் வாழ்ந்து காட்டிய அருள்நெறித் தந்தை அவர்களின் வரலாறு, எப்பொழுதும் துயரப்படுகின்ற முகவரி தெரியாப் பயணி களுக்கு நன்னம்பிக்கை முனை; வாழத் தெரியாத வர்களுக்கு வாழும் இலக்கணம் கற்றுத் தரும் ஆத்திசூடி, "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்!” என்று வாழ்கின்ற தற்சார்புக் காட்சிக்காரர்களுக்குத் தத்துவ போதனை; உலகம் வாழ வாழ்வதுதான் துறவுநெறி என்ற புதிய நெறி கண்ட புது வேதம், பொது நன்மைக்காக வளைந்து கொடுக்க மறுக்கின்ற, மரபுகளை உடைத்தெறிந்த-மடாலயங்களின் வரலாற்றில் புதிய் துணைவிதித் திருத்தம்; அசுத்தம் நிறைந்த உடலைத் தீர்த்தமாடி ஆலயப் பிரவேசம் செய்வதுபோல் ஏழ்மையை விரட்டிவிட்டு ஆண்டவனைத் தேடச் சொன்ன அக்கினிப பிரவேசம், சாதிகளுக்கு மகுடம் சூட்டிப் பட்டுப் பாவாடை விரித்துக் கொண்டிருந்த சனாதனிகளின் சிம்ம சொப்பணம்; இல்லாமையாலும் கல்லாமையாலும் ஏங்கிக் கொண்டிருந்த மக்களின் கனவுகளை நனவாக்கிய நற்றமிழ் முனிவரின் வரலாறு இது.

கருவிலேயே அமைந்த திரு என்பதைப் போல மனித நேயம் அவர்களின் இளமைக் குருதியில் கலந்த ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அரங்கநாதனாக அவர்கள் அவதரித்த காலத்திலேயே சமூகத் தொண்டும் இறைத் தொண்டும் பிரிக்க முடியாதவாறு ஆவியில் கலந்து இருந்திருக்கின்றது. துர்நாற்றம் பிடித்த குளத்தைத் துய்மைப்படுத்த எடுத்த முயற்சி, வழிபாடு இல்லாத ஆலயத்தில் ஊர் போற்றப் பூஜை ஏற்படுத்தியது ஆகியவை சமய சமூக உணர்வு குருதியில் கலந்தது என்பதற்கு உரிய சான்றுகள்.

அரங்கநாதனாகத் திருமடத்துப் பணியில் சேர்ந்தது அகிலத்தில் ஒரு மாபெரும் வரலாறு படைக்க நிகழ்ந்திட்ட திருப்புமுனையாகும். திருமடத்துப் பணியில் இணைவது பொன்னுக்காக பொருளுக்காக அல்ல! இலட்சயத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு இயக்கங்களில் பணியாற்று கின்ற இலட்சிய வீரர்களின் பணியைப் போன்றது! எல்லாருக்கும் இந்த நற்பேறு வாய்த்திடுவதில்லை! நம் வாழ் விலும் கல்லூரிப் படிக்கட்டை விட்டு இறங்கியதும் ஏற்றுச் செய்த பணி திருமடத்தின் பணிதான்! அதுவே நம்மை ஆயுட்காலம் முழுவதும் அன்பர் பணி செய்ய ஆட்படுத்தி யிருக்கிறது!

தருமபுரம் திருமடத்தில் அரங்கநாதனாக அலுவலகப் பணியில் ஈடுபட்டவர்கள் கந்தசாமித் தம்பிரான் எனும் திரு நாமம் பூண்டு துறவியானதுதான் திருவருள் காட்டிய பெரும் பேறு. சகல உறவுகளையும் சுற்றத்தையும் துறந்து துறவுப் பாதைக்கு அடியெடுத்து வைப்பதுதான் மிகப் பெரிய சாதனையாகும்! வைராக்கியத்தில் பலவகை சொல்வர். ஆனால் துறவு வாழ்க்கையில் வைராக்கியம் இமைப் பொழுதும் சோராது இருக்க வேண்டும்.

குன்றக்குடித் திருமடத்தில் அருள்நெறித் தந்தையவர்கள்-இளைய சந்நிதானமாய்ப் பொறுப்பு ஏற்ற பின் சந்தித்த இடையூறுகள், மகாசந்நிதானம் கருத்து மாறுபாடு கொண்டிருந்த பொழுது காட்டிய பொறுமை, சிந்திக்கத் தக்கது. கோவலனைப் பிரிந்த கண்ணகி, தன் கொழுநனைப் பிரிந்த துயரைக் கடவுளிடம் கூடச் சொல்லக் கூடாது என்ற திண்மை கற்பு வாழ்க்கையின் சிறப்பாகும். அதுபோல், துறவு வாழ்க்கையிலும் ஏற்படுகின்ற சோதனைகளைக் கண்டு தளர்வது கூடாது! எனவே, ஏற்ற வாழ்வின் இடர்களை இனிமையாக ஏற்பது துறவு வாழ்வுக்கும் பொருந்தும் என்று வாழ்ந்து காட்டினார்கள்!

தமிழ் அருச்சனைப் போராட்டம்! தமிழகத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பெற்ற நிகழ்வு! எந்தத் தீந்தமிழ்ப் பாக்கள் இறைவனை இன்ப அன்பில் நனையச் செய்தனவோ, எந்த பண் சுமந்த தீந்தமிழ்ப் பாக்களுக்காக மண் சுமந்து இறைவன் பொன்மேனி புண் சுமந்ததோ, எந்தத் தமிழ் கேட்கும் இச்சையால் நாளும் படிக்காசு நித்தம் நல்கினானோ “மண்மேல் நம்மைச் சொற்றமிழ். பாடு” என்று நற்றமிழ்ச் சுந்தரருக்கு எதற்காக ஆணையிட்டானோ. திருமறைக்காட்டின் திருக்கதவுகள் திறந்ததும் அடைத்ததும் எந்தத் தீந்தமிழாலோ அந்தத் தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாக்கள் அவன் திருச்செவியில் ஓதத் தடையிருந்த காலம்! அந்தத் தமிழ் அருச்சனைக்கு நடத்திய போராட்டம்; மிகப் பெரிய எழுச்சியினைத் தந்தது - நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறிய ஆலவாயண்ணல் அகம் மலரத் தமிழ் அருச்சனைப் போராட்டம் வெற்றி பெற்றது.

1962-இல் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தமிழருச்சனை அன்றைய அமைச்சர் எம். பக்தவத்சலம் , அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றது. அதுதான், “நாமார்க்கும் குடியல்லோம்!” என்று ஓங்கி முழங்கிய இருபதாம் நூற்றாண்டின் அப்பர் அடிகளாக அவனிக்கு நம் அருள்நெறித் தந்தையை அறியச் செய்தது!

"சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேன்"

என்பார் மாணிக்கவாசகப் பெருமான்.

"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?"

என்பார் அப்பரடிகள். சாதீய உணர்வுகளுக்கு இடம் அளிக்காத தமிழர் சமயம் எப்பொழுது தடம் மாறியது? நாத்திகம் நஞ்சு; அதே பொழுது கடவுள் நம்பிக்கை மனிதநேயத்திற்கு மாறாக இருப்பின் அது நாத்திகத்திலும் கொடிது! கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திய மதப் புரோகிதர் சுரண்டும் கூட்டத்தோடு சேர்ந்தபின் செல்வச் செழிப்பு கடவுள் கருணை-புண்ணியத்தின் பயன் என்று கூறியவுடன் சுரண்டப்பட்ட வாழ்விழந்த மக்களிடையே கடவுள் மறுப்புக் கொள்கை தோன்றிற்று, சாதீய உணர்வுகளுக்கு விடை கொடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திருமடத்தின் கதவுகளை திறந்துவிட்டு வாழ்விழந்த மக்களோடு உண்டும் கலந்தும் வாழ்ந்தும் திருமடங்களின் வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்த முதற் புரட்சித் துறவி நம் அருள்நெறித் தந்தை அவர்கள்தான் என்பதை இந்த வரலாறு கூறுகின்றது.

சரித்திரம் இரத்தக்கறை படிந்த அந்த நாட்களை நினைவுப்படுத்துகின்றது. 1982 மார்ச் மாதம்! மண்டைக்காடு மிகப்பெரிய மதக் கலவரத்தைச் சந்திக்கின்றது! அரசால் கூடத் தடுக்க முடியாத-அணைக்க முடியாத அந்தப் பெருந்தி, அகோரமாய் எரிந்து கன்னியாகுமரி மாவட்டத்தையே கலக்கியது, மதம் பிடித்த மனிதர்கள் விலங்குகளாய் மோதிக் கொண்டிருந்தார்கள்! உயிரைப் பணயம் வைத்து அருள்நெறித் தந்தையவர்கள் மேற்கொண்ட தியாகப் பயணம் பல உயிர்ப் பலியைத் தடுத்து நிறுத்தியது. ஆதவனைக் கண்ட பணிபோல் இருந்த இடம் தெரியாமல் வன்முறை தடுக்கப் பட்டது! மதவெறித் தீயை அணைத்த புனித நீர் மனிதநேய மாமுனிவரின் விழி நீர்! பூமிப்பந்தை உள்ளங்கையில் உருட்டி விளையாட ஆசைப்பட்ட மதவெறி சக்திகளுக்குச் சம்மட்டி அடி.

இஃது ஒரு நீண்ட பயணம்! சமயத்தையும் சமுதாயத் தையும் இணைத்து அழைத்துச் சென்ற இலட்சியப் பயணம்!

"கவலை துறந்திங்கு வாழ்வதே வீடு" என்று பாரதி பகர்ந்ததைப் போல, இந்தப் பூவுலகத்தைப் பொன்னுலகமாக, தேவருலகமாக ஆக்க நினைத்த தேவகுமாரரின் இலட்சியப் பயணம்!

உலகம் யாரால் இருக்கின்றது என்று நமக்கு ஓர் ஐயப்பாடு! கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியின் புறப்பாடல் இதற்கு விடை கூறுகிறது. "உலகம் நோன்பு நோற்கின்றவர்களால் இருக்கின்றது” என்பதுதான் அந்த விடை, அவர்கள் எப்படி நோன்பு நோற்பவர்கள்? உண்ணாமல், உறங்காமல் நோன்பு நோற்பவர்கள் அல்ல! தமக்கு என்று முயலாமல் பிறர்க்கு என முயலுபவர்கள் யாரோ அவர்கள் தான் நோன்பு நோற்பவர்கள்! அப்படிப்பட்ட நோன்பை மேற்கொண்ட புனிதத் துறவியின் இலட்சியப் பயணம்! கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராய், ஓடும் செம் பொன்னும் ஒக்கவே நோக்கிய வித்தகத் துறவியின் விரிந்த பயணம்.

"மண்ணும் மனிதர்களும்" என்று பெருமையுடன் அழைக்கப்பெறும் இந்த வரலாற்றுப் பயணம் பல சான்றோர்களைச் சந்தித்திருக்கின்றது. எத்தனை உறவுகள்! அப்பப்பா! மனித உறவுகளுக்காக சகலத்தையும் துறந்தவர்கள் நமது மகாசந்நிதானம் அவர்கள். ஒருமுறை வினோபாபாவே நம் திருமடத்திற்கு வந்திருக்கிறார்கள். வினோபாபாவேயின் கொள்கை மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாகத் திருமடத்தின் தலைமைப் பொறுப்பைக் கூடத் துறக்கத் துணிந்தார்கள் மகாசந்நிதானம் அவர்கள். பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் இப்படிப் பல தலைவர்கள் அந்த வரிசையில் வருகின்றனர். தந்தை பெரியாருக்கும் நமது மகாசந்நிதானம் அவர்களுக்கும் இருந்த உறவு இலட்சிய உறவு! தமிழ் மக்களின் நன்மை என்ற இலட்சிய அடிப்படையில் கொள்கை வேறுபட்ட இரண்டு இலட்சியத் துருவங்கள் இணைந்து செயல்பட்டன. அறியாமை யுடையவர்கள் அந்த நட்பின் ஆழத்தை அறியாமல் ஐயுற்றனர். மகாசந்நிதானம் அவர்களின் பயணம் "மண்ணும் மனிதர்களும்" என்று உருவாகியுள்ளது. மனித நேயத்திற் காகவே வாழ்ந்த அந்த மகாமுனிவர் மனிதர்களை எப்படி நேசித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கும் விளக்குகிறது.

இதனை நூலாக்கும் கடும் முயற்சியில் தம்மைத் தாரை வார்த்துக் கொண்டவர் அருமைக்குரிய 'கயல் தினகரன்.' அவர் குருமகாசந்நிதானத்தின் நீண்ட நெடுங்கால நண்பர். இந்த முயற்சிக்குத் தம்மைத் தந்த கயல் தினகரன் அவர்களுக்கு என்றும் நன்றிக் கடப்பாடு உடையோம்! ‘மண்ணும் மனிதர்களும்' என்ற இந்த நூல் 'ஆனந்த விகடன்' வார இதழில் தொடராக வெளிவந்தது. இந்தத் தொடரை ஆனந்தவிகடனில் வெளியிடச் செய்த ஆனந்த விகடன் 'எஸ். எஸ். வாசன் குடும்பத்தாருக்கும்' வாரந்தோறும் கட்டுரைகள் தவறாது வெளியிட அர்ப்பணித்துப் பணியாற்றிய நமது ஆதீனம் 'மரு. பரமகுரு' அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.

இமயத்தின் உச்சியில் ஏற்றப்பட்ட இலட்சிய தீபம் ஒளியை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றது. அறியாமை, வறுமை நீங்கிடப் புறப்பட்ட இலட்சியப் பயணம்-தொடர் பயணம்! புரட்சிச் சுடர்பிடித்துத் தடம் மாறாத, இலட்சியப் பயணம் என்றும் தொடரும்.

வாழ்க மனிதநேயம்
(மண்ணும் மனிதர்களும்)


கவியரசர் முடியரசனார்
தொழத்தகு சுந்தரன் தோழமைக் குரியன்
பழுத்த பாவலன் பாரோர் போற்றும்
வலிய தொண்டன் வஞ்சமில் நெஞ்சும்
மெலிபிறை சூடிய மேன்மைக் கொடைஞன்
கண்ணுதற் பெருமான் கருத்தும் பிணைந்தது
பண்ணுறத் தோய்ந்த பைந்தமிழ் ஒன்றால்;
அதுபோல்,
குன்றக் குடியிற் குடியமர்ந் ததுமுதல்
என்றன் செந்தமிழ்ப் பாட்டால் இணைந்தவர்
ஈடுபட் டென்னைக் 'கவியர' சென்றனர்,
பீடுடை அடிகள் பெயருக் கேற்றவர்
நாடுயர் வழிகள் நல்கிய பெருமகன்,
மண்ணிற் புழுவென மடியாது மாந்தர்
மண்ணில் நிமிர்ந்து வாழச் சொன்னவர்,
எளியோர்க் கிரங்கும் இளகிய நெஞ்சர்.
எளிமையும் வறுமையும் இருப்பதை நாடார்,
உழைப்போன் வயிற்றில் உறுபசி வந்து
வளைத்து வாட்டி வருவது தாளார்,
ஆலயம்பதி னாயிரம் எழுப் புவதின்
மேலாம் கல்விச் சாலை எழுப்புதல்
எனப்பறை சாற்றும் இயல்பினர், தொழில்கள்
வனப்புறக் கண்டவர் வளர்த்தும் வந்தவர்,
பண்டித நேருடன் பழகிய பண்பினர்,
பண்டைய கொள்கை பகுத்துணர்
பெரியார் தொடர்பும் பொதுமையும் மலரும் தோட்டம்.
அடரும் பகைமை அண்டாக் கோட்டை,
ஏற்றத் தாழ்வுகள் இல்லாப் புதுமை,
சாற்றத் துடிக்கும் சமநிலைப் பாசறை,
கலகமில் உலகம் காணத் துடிக்கும்
உலக அமைதிக் குழைக்கும் வெண்புறா.
இனைய நலன்கள் விளையும் நோக்குடன்
புனையும் துறவு பூண்டவர், அடிகள்
"மண்ணும் மனிதர்களும்” என்னுந் தலைப்பில் ::எண்ணியெழுதினர் விகடன் இதழில்;
நம் கயல் தினகரன் நாடித் தொகுத்து
என்மனம் களிக்க ஈந்தனர் நூலென;
வாழ்க வாழ்க மனித நேயம்
வாழ்க தமிழகம் வாழிய உலகே!
போற்றி உரை
(மண்ணும் மனிதர்களும்)


முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்

பல்லக்குப் 'பவனி', பக்தர்களுக்குத் 'தரிசனம்' அடியவர்களுக்கு ஆசி வழங்குதல் ஆகியனவே ஆதீனத் தலைவர்களின் பணி என்றிருந்த நிலையில், இரவு பகலெனப் பாராது, மக்களோடு ஒன்றிக் கலந்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்குகொண்டு, சமுதாயம் முன்னேறத் தொண்டாற்றுவதே உண்மையான சமயத் தொண்டு என்றெண்ணி மக்களிடையே உலா வந்து கொண்டிருந்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவருடைய 'உலா' இன்றில்லை; என்றாலும் அந்த உலாவின் நோக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருட்டிரு தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் என்ற பெயருடன் பட்டம் பெற்ற போதிலும் 'அடிகளார்' என்றே அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டு வந்தார். 'அடிகளார்' என்று சொன்னாலே அது குன்றக்குடி அடிகளாரைத்தான் குறிக்கும் என்னும் நிலை மலர்ந்தது.

பொருளாதாரத்தில் 'மார்க்சியமும்', சமுதாயச் சீர் திருத்தத்தில் 'பெரியாரியமும்', மனித நேயத்தில் 'காந்தியமும்' என இம்மூன்றும் ஒன்றாகி இணைந்த தனி இயமாக 'அடிகளாரியம்' இருந்து வந்தது.

அடிகளார் இன்று நம்மிடம் இல்லையென்றாலும் அவருடைய சிந்தனைகள் இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டன.

பொதுவாக, துறவியர், துறவு பெற்றதற்கு முன் நிகழ்ந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதில்லை; நம் அடிகளாரோ தம் இளம் வயது நிகழ்ச்சிகள் எதிர்காலச் சந்ததியினர்க்குப் பாடமாகக் கூடியவை என்ற உணர்வோடு ஒரு சிலவற்றைக் கூறியுள்ளார்.

வர்க்க உணர்ச்சியை எதிர்க்க வேண்டுமென்பது அவருடைய குருதியிலேயே கலந்து நின்ற ஓர் உணர்ச்சியாகத் திகழ்கிறது. ஊரில் இருந்த ஓர் மன்றத்தில் செய்தித் தாட்களை அனைவரும் படிக்க வாய்ப்பில்லை என்ற நிலை நேர்ந்தபோது அடிகளார் உடனடியாகச் சில இளைஞர்களை ஒன்று திரட்டி 'வினோபாபாவே வாசகசாலை' என்ற ஒன்றைத் தொடங்கி அதனைப் பொது இலவச வாசகசாலை யாகச் செய்திருக்கிறார்.

பொதுத் தொண்டிலேயேயும் அவருக்கு இளம் பருவத்திலேயே நாட்டம் இருத்திருக்கிறது. ஊர்க் குளத்தருகே துர்நாற்றம் வீசியபோது மக்கள் அங்கு செல்வதைத் தவிர்த்தனரே தவிர, துர்நாற்றத்திற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய முன்வரவில்லை. இளமைப் பருவ அடிகளார் தம் நண்பர்களுடன் அங்கு சென்று, அருகிருந்த பிள்ளையார் கோயிலின் உள்ளே செத்துக் கிடந்த நாயின் நாற்றமே அது என்பதை உணர்ந்து, புழுத்துப் போன சதைத் துணுக்குகளை அப்புறப்படுத்தித் தூய்மையாக்கியிருக்கிறார்.

பழமையை ஒரு சிறகாகவும் புதுமையை ஒரு சிறகாகவும் கொண்டு வாழ்க்கை வானில் மக்கட் சமுதாயம் பறக்க வேண்டுமென்பது அடிகளாரின் விருப்பம். பழமை என்பதற்காகவே எதையும் அழித்தொழிக்க வேண்டியதில்லை: புதுமை என்பதற்காவே எதையும் கண்மூடி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுமில்லை. "பழமையே புதுமையாக மாறிக் கொண்டிருக்க வேண்டும்; புதுமையாகப் பரிணமிக்காத பழமையாக இருப்பின் அந்தப் பழமை ஒன்றுக்கும் ஆகாது” என்பது அடிகளார் வாக்கு.

கருத்து வேறுபாடுடையவர்களிடம் பகை பாராட்டுதல் தவறு. அவர்களோடு பேசி இருவருக்கும் இயைந்த ஒரு சரியான முடிவுக்கு வரவேண்டும் என்பதில் அடிகளார் மிகுதியும் அக்கறை கொண்டவர். தந்தை பெரியாரை முதலில் அடிகளார் ஏற்கவில்லை; ஆனால் பெரியார் அவர்களைக் கண்டு உரையாடியதன் பின்னர் பெரியார் கூறும் கருத்துகளிலுள்ள உயிர்த் தன்மையை உணர்ந்தார்- மூடநம்பிக்கை ஒழிப்பில் பெரியாரோடு முற்றிலுமாக ஒன்றுபட்டு உழைத்தார்.

சாதி, சமயக் கொடுமைகளைச் சுட்டிக்காட்டினார் பெரியார், “இவற்றைக் கடவுள் செய்யவில்லை” என்றார் அடிகளார். "அப்படியானால் இந்த அநியாயத்தைக் கடவுள் ஏன் தட்டிக் கேட்கவில்லை” என்றார் பெரியார். பெரியார் கூறுவது நியாயந்தான் என்பதை அடிகளார் உணர்ந்தார். சாதிக் கொடுமை, மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழிப்பதில் பெரியாரோடு ஒன்றிணைந்து செயலாற்றினார்.

பலருடன் கூடி வாழ வேண்டுமானால் முரண்பாடுகளை - மாறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் - விரிவு படுத்தாமல் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அடிகளாரின் ஆழ் மன எண்ணம்.

சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை அவர்களுடைய தொடர்பு அடிகளாரிடம் தமிழ்ப் பற்றை ஊட்டியது, அருட்டிரு விபுலானந்த அடிகளாரிடம் பணி விடை செய்ததால் தீண்டாமை விலக்கு உணர்வும் மனித நேயமும் அடிகளார்க்கு வாழ்க்கைக் குறிக்கோள்கள் ஆயின.

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட பிணைப்பால் மூடப் பழக்க வழக்கங்களை முறியடிக்க வேண்டுமெனும் உணர்வு மீதுTரப் பெற்றது. பேரறிஞர் அண்ணாவின் தொடர்பு. "மறப்போம்; மன்னிப்போம்” என்ற தத்துவத்தைத் தந்தது. இவ்வாறு ஒவ்வொருவரிடமும் பழகிய போது அடிகளார்க்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது போல, அடிகளாருடைய வாழ்வும் தொண்டும் நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன அது?

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்
அறிவு விரிவு செய் அகண்ட மாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானெனக் கூவு
பிரிவிலை எங்கும் பேதமில்லை;
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன், 'உடைமை மக்களுக்குப் பொது'
புவியை நடத்து பொதுவில் நடத்து; எனும் பாவேந்தரின் இப்பாடலடிகளின் கருத்தே அடிக ளாரின் வாழ்வு நமக்குத் தரும் பாடம்.

"வாழும்போது புகழப்படுதல் புகழ் அன்று. அது முகமனே ஆகும். அல்லது எதிர்பார்ப்புக்குரிய கையூட்டே யாகும். ஒருவர் இறந்தபின், இறந்தவரின் சமுதாய நடப்பிய லுக்கு அவருடைய தேவையை, இருப்பை எண்ணிப் பேசும் புகழே புகழ்-புகழுக்கு அடிகளார் தந்துள்ள விளக்கம்.

நாட்டின் இன்றைய அவலங்களை எண்ணும் போது அவற்றை களைய அடிகளார் இல்லையே என்று நாம் எண்ணும்படியான புகழ் வாழ்வு வாழ்ந்திருக்கிறார் அடிகளார்.

பக்கத்திற்குப் பக்கம் அடிகளாரின் திருவுருவை திகட்டா வண்ணம் எடுப்பாக வெளியிட்டு 'ஆனந்த விகடன்' வார இதழில் வெளியான தொடர் கட்டுரையைத் தொகுத்து அழகுற நூலாக்கியிருக்கிறார் அருமை நண்பர் கயல் தினகரன்.

அடிகளார் அவர்களிடம் நீண்ட காலம் அணுக்க மாகப் பழகியதோடு, அடிகளாரின் மனித நேயம் பற்றியும், அவர் திருத்தொண்டுகள் குறித்தும் ஏராளமான செய்திகளை இதயத்தில் வைத்திருக்கிறார் கயல் தினகரன். அவைகளை எழுதி வடித்து எதிர்காலச் சமுதாயம் ஏற்றம் பெற நூலாக்கித்தர வேண்டும் என்பதே நம் அவா.

அடிகளாரின் புகழ் போற்றி, அவர் வழி நின்று நாம் கடமையாற்ற உறுதி பூணுவோமாக!