உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16/எங்கே போகிறோம்

விக்கிமூலம் இலிருந்து

5


எங்கே போகிறோம்!

1. சுதந்திர தின விழாச் சிந்தனைகள்


(15–8–94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

ங்கே போகிறோம்? சுதந்திர தினத்தன்று நம்முடைய மதுரை வானொலி நிலையம் இந்த வினாவை நம்மை நோக்கிக் கேட்கிறது. இல்லை! இல்லை! இந்த நாட்டு மக்களை நோக்கிக் கேட்கிறது. ஏன்?

எங்கே போகவேண்டும் என்று சொல்லாமல், வழிகாட்டாமல், எங்கே போகிறோம் என்று கேட்பதற்குக் காரணமென்ன?

குற்றங்கள் தெரிந்தால் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். குறைகள் தெரிந்தால் நிறைகளை வளர்த்துக் கொள்ள முடியும். எனவே, எங்கே போகிறோம்? வழி தவறி விட்டோமா? அல்லது வழித்தடத்தில் தான் செல்லுகிறோமா? இப்போது செல்லுகின்ற வழி அல்லது தடம், எங்கே செல்லவேண்டுமோ அங்கே அழைத்துச் சென்றுவிடுமா? இன்று நாம் போகவேண்டிய வழியில் போகிறோமா அல்லது நம்மை இந்த உலகத்தின் செய்திகள், சின்னஞ்சிறு கதைகள், நிகழ்ச்சிகள், இழுத்துக் கொண்டு செல்லுகின்றனவா? இன்று சுதந்திரமாகப் பயணம் செய்வோர் யார்?

கால்நடை மருத்துவமனை என்று அறிவிப்புப் பலகை போட்டிருக்கிறார்கள். எனக்கு ஒருநாள் ஐயம் வந்தது. இது என்ன கால்நடை என்றால் என்று பக்கத்திலுள்ளவரைக் கேட்டேன். 'கால்நடை' என்றே திருப்பிச் சொன்னார். திருப்பித் திருப்பிக் கேட்ட பிறகு "காலால் நடக்கின்ற மாடு, ஆடுகள்” என்று சொன்னார். அப்படியானால் மனிதனும் காலால் தானே நடக்கின்றான்? அவனுக்கும் இந்த மருத்துவமனை பயன்படுமா? என்று சிந்தித்தேன். காலால் நடப்பது மட்டுமே கால்நடைகளின் இயல்பு.

சிந்தனையாலும், கருத்தாலும், அறிவாலும், - நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், படைப்பாற்றலாலும், நடக்க வேண்டிய பொறுப்பு மனிதனுடையது. அவன், தான் நடக்க வேண்டிய தடத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். புவி அவனை நடத்தக்கூடாது. புவியை அவன் நடத்தவேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் "புவியை நடத்துக! பொதுவில் நடத்துக” என்று சொன்னான்.

சுதந்திர தினத்தன்று இதைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்! பாரதி, சுதந்திர தினத்தை மக்கள் தினமாக நினைத்துப் பாடுகின்றான். ஆடச் சொல்லுகின்றான், பள்ளுப் பாடச் சொல்லுகின்றான், "ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாடுகிறான். இன்றைக்கு எந்த மக்கள் ஆடுகிறார்கள்? எந்த மக்கள் பள்ளுப் பாடுகிறார்கள்? எந்த நாட்டு, நகர விதிகளில் சுதந்திர தினவிழா மக்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது? இன்னமும் தீபாவளிக்கு இருக்கிற செல்வாக்கு குறையவில்லை. பொங்கலுக்கு இருக்கிற, செல்வாக்கு குறையவில்லை. சுதந்திர தினவிழா அரசு பணிமனைகளில், கல்வி நிலையங்களில் கொடியேற்று விழாவாக முடிந்து விடுகிறது. பாரதியின் ஆசை அதுதானா? இல்லை. தினந்தோறும் மக்கள் ஆடவேண்டும். சுதந்திரப் பள்ளுப் பாடவேண்டும். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடவேண்டும். ஆம்! இன்றைக்கு மக்கள் அப்படிப் பாடாததற்குக் காரணம் என்ன? அவர்கள் அனுபவிப்பது ஆனந்த சுதந்திரமா? இல்லை. எத்தனையோ நெருக்கடிகள்! எத்தனையோ தொல்லைகள்! அடிமைத் தனங்கள்! பயந்தாங்கொள்ளித் தனங்கள்! பயமுறுத்தல்கள்! இவைகளுக்கிடையே இந்தச் சமுதாயம் மெள்ள ஊர்ந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது வானொலி நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது, இரண்டு மூன்று காட்சிகள்! ஓர் இடத்தில் போராட்ட உண்ணாவிரதம்! இன்னொரு புறத்தில் மகிழ்வுந்தில் கூக்குரலிட்டுக் கொண்டு, கோஷம் எழுப்பிக் கொண்டு இந்த நாட்டு மகளிர் செல்லுகிறார்கள். மகளிர் எழுப்பிய முழக்கொலி "பெண்களை விடுதலை செய்! பெண்களுக்குச் சுதந்திரம்" நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் கடந்த பிறகும் "பெண்களுக்கு விடுதலை இல்லை" என்று தெருவில் நின்று முழக்கொலி செய்கிறார்கள் என்றால் ஆனந்த சுதந்திரம் ஆக முடியுமா?

சுதந்திர தினவிழா என்பது கொடியேற்றுதல் மட்டுமல்ல. ஒரு கணக்காய்வு செய்யவேண்டும். நேற்று என்ன நடந்தது? இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாளை என்ன நடக்கும்? நாளை என்ன நடக்குமாறு செய்ய வேண்டும்? இந்தக் கணக்காய்வு செய்யாது போனால் சுதந்திர தினவிழாவுக்கு என்ன பொருள்? நேற்றிலிருந்து இன்று பிறக்கிறது. இன்றிலிருந்து நாளை பிறக்கிறது.

இன்றைக்கு நமது இளைய சமூகத்தைப் பற்றி, இளைய பாரதத்தைப் பற்றி, அடுத்து வருகின்ற தலைமுறையினரைப் பற்றி, நமக்குக் கவலை இருக்கிறதா? அதற்குரிய திட்டங்களைத் தீட்டுகிறோமா? அப்படியே தீட்டினாலும், அந்தத் திட்டத்தினுடைய பயன்கள் குழந்தைகளுக்குப் போய்ச் சேருகிறதா? இவையெல்லாம் சிந்திக்க வேண்டியன, எங்கே போகிறோம்! சிந்தனை செய்வோம்? எங்கே போக வேண்டும்? முடிவு செய்வோம்.

இந்தியா பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுப் பழமை உடையது, இந்த நாட்டினுடைய பழமைக்கு ஈடாக வேறு எதுவும் சொல்ல முடியாது. அந்தப் பழமையினுடைய வரலாற்றுப் பெட்டகங்கள் ஏராளம் உண்டு. இந்திய நாட்டு வரலாறு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ஏராளமான வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு, புதியன கண்டு, போர்க் குணத்தோடு போராடி வந்திருந்தால் இன்றைக்கு இந்த நாட்டினுடைய அமைவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆயினும் அவர்கள் படிப்பினைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்தியாவில் இருக்கின்ற இலக்கியங்களில் மிகப் பழமையானவை இதிகாசங்கள். இராமகாதை பாரதம், இந்த இரண்டு இதிகாசங்களும் மிகப் பழமையானவை என்பது மட்டுமல்ல. வாழ்க்கைக்குரிய நெறிகளை, முறைகளை நமக்கு ஏராளமாகப் புகட்டுகின்றன. இவைகளைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொண்டது ஓரளவுதான். ஆனாலும், எங்கு பார்த்தாலும் இராமனுக்குப் புகழ் பாடுபவர்கள் உணர்க. பாரதத்திற்குப் பறைசாற்றுபவர்கள் உண்டு. எனினும், இராம காதையினாலும், பாரதத்தினாலும், படித்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? இராம காதையிலிருந்த கோசலநாடு என்ன? இலங்கை நாடு என்ன? இன்றைக்கு இருக்கிற நம்முடைய நாடு என்ன? ஒப்பு நோக்கிப் பார்த்தோமா? புராணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏராளமான புராணங்கள்! அந்தப் புராணங்களும் கூட, தெரிந்தோ, தெரியாமலோ, சண்டைகளைப் பற்றியே நிறைய பேசிவிட்டன. கடவுளுக்கும், தேவர்களுக்கும் சண்டைகள்! தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டைகள்! மூன்று


கு.XVI.20

கு.XVI.20. தேவர்களுக்கிடையில் சண்டைகள் ! இப்படிச் சண்டைகளைப் பற்றியே இந்தியா ஏன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சண்டைகளை மறப்பது அவசியம்.

இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தால், இந்தியமொழி இலக்கியங்கள் ஒரு பூங்கா என்று சொல்லலாம். பெரிய கருவூலமாக இருக்கின்ற உபநிடத்திலிருந்து, நம்முடைய இராமானுசர் காலம் வரையில், ஏன், நம்முடைய பாரதி காலம் வரையில் இலக்கிய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வந்தால், ஏராளமான படிப்பினைகள்! பழைய உபநிஷத்து ஒன்று கூறுகிறது.

“ஒன்றாக உழையுங்கள்! ஒன்றாக உண்ணுங்கள்!
ஒன்றாக இருங்கள், ஒன்றாக வாழுங்கள்!”

என்று.

இது வேதங்களின் மணிமுடிச் சிகரமாக உள்ள உபநிடத்தின் வார்த்தைகள். இன்றைக்கு எங்கே அப்படி வாழுகிறோம்? ஒன்றாக உண்ணுவதிலேயே சாதி முறைகள் குறுக்கிடுகின்றன. இராமகாதையை எடுத்துக் கொண்டால், கம்பன் அற்புதமாக ஒரு நாட்டை எண்ணிப் பார்க்கிறான். அவனுடைய லட்சிய நாடு அது. அவனுடைய கோசல நாடு அப்படியிருந்ததா? தெரியாது. அவன் கண்ட இலங்கை நாடு அப்படியிருந்ததா? சொல்ல முடியாது. ஆனாலும் கம்பன் தன்னுடைய இலட்சிய நாடு ஒன்றை தன்னுடைய காதையில் நினைவூட்டுகிறான். "கள்வரும், காவல் செய்வாரும் இல்லாத நாடாக இருக்கவேண்டும்” என்று ஆசைப்படுகிறான். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெறவேண்டுமென்று ஆசைப்படுகின்றான். இன்று இந்த நாட்டினுடைய நிலைமை என்ன? எண்ணிப் பாருங்கள்.

புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், உலக சர்வ தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன். ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன்றிய கருத்து. ஆனால் கணியன் பூங்குன்றன் அன்பு தழுவிய நிலையில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடுகின்றான். "எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்" என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த மண்ணில் இன்றைக்கு ஜாதி, குலம் போன்ற வேற்றுமைகள் பிரிந்து வளர்ந்து வருகின்றன.

பழைய காலத்தில் சாதி வேற்றுமைகள் இருந்ததுண்டு. ஆனாலும் அந்த வேற்றுமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று அவை நெகிழ்ந்து கொடுக்காமல் இறுக்கமடைந்து வருகின்றன என்பதை அன்பு கூர்ந்து எண்ணிப் பாருங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்று சொன்னார். பிறப்பில் உயிர்களிடையே வேறுபாடு இல்லை. அனைவரும் சமம் என்று சொன்னார். அதையே வழி மொழிந்த அப்பரடிகள், "இந்த நாட்டில் சாதி இல்லை. சாதிகளைச் சொல்பவர்கள் சழக்கர்கள்” என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

எல்லோருக்கும் மேலாகப் புரட்சி பூத்த மண்ணாகிய பசும்பொன் மாவட்டத்துத் திருக்கோட்டியூர் மதில் மேல் ஏறி ஒரு பெருந்தகை உபதேசித்தார். மந்திரத்தை எல்லா மக்களுக்கும் வாரிக் கொடுத்தார். அவருடைய ஆச்சாரியன் "இந்த மந்திரத்தை நீ மற்றவர்களுக்குச் சொன்னால் நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொன்னார். "கோடானுகோடிப் பேர் வைகுந்தத்துக்குப் போகும்போது நான் நரகத்திற்குப் போனால் என்ன?” என்று இராமாநுசர் கேட்டார். அந்த இராமாநுசர் பிறந்த மண்ணில் இன்றைக்குச் சுயநலமே வளர்ந்து வருகிறது. பிறர் நலம் குறைந்து வருகிறது. நாட்டுக்கு உழைத்தல் தவம் என்று பாரதி சொன்னானே, அந்தத் தவம் மீண்டும் தோன்ற வேண்டும். அந்தத் தவத்தை வளர்க்க வேண்டும். அந்தப் பெருமக்கள் காலத்தை வென்றார்களா?

எத்தனை சிறந்த கவிஞர்கள், தத்துவ ஞானிகள், மேதைகள் இந்த நாட்டில் தோன்றினார்கள்? அவர்கள் காலம் கடந்து நம்மால் பாராட்டப்படுகிறார்கள். போற்றப்படுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் பின்பற்றுகிறோமா? அவர்களுடைய வழித் தடத்தில் நாம் நடக்கின்றோமா? அவர்களுடைய சிந்தனைகளுக்குச் செயல்களுக்கு நாம் வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்றால் இல்லை.

இன்று நம்முடைய நாடு ஜனநாயக நாடு. மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு. ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. நண்பர்களுக்கிடையில், கணவன் மனைவிக்கிடையில், குடும்பச் சூழ்நிலையில், கடைவீதியில், ஊரில், நாட்டில், சட்டசபையில், பாராளுமன்றத்தில், எங்கும் ஜனநாயக மரபுகள் செழித்து வளர வேண்டும். சொல்லுவது சிலவாக இருக்கவேண்டும். பிறர் வாய் கேட்பது அதிகமாக இருக்க வேண்டும். ஜனநாயக வடிவம் போதாது. ஜனநாயக உணர்வு தேவை. ஜனநாயக வாழ்க்கையின் மரபில் அலட்சியம் கூடாது.

ஒரு சாதாரண பாத்திரம் கூனி. அவளை அலட்சியப் படுத்தியதால் இராம காதையின் திசையே மாறிவிட்டது. சிறுவர்களை, சின்னஞ்சிறு மனிதர்களை அலட்சியப்படுத்துகிற மனப்போக்கு கூடாது. எல்லோருக்கும் மதிப்புத் தர வேண்டும். பாராட்ட வேண்டும். போற்ற வேண்டும். அரசியல் என்பது ஒரு ஞானம். அது ஒர் அறிவியல், அரசியல் அறிவு மக்களாட்சி முறையில் வாழுகின்ற நாட்டு மக்களுக்குத் தவிர்க்க முடியாது. அரசியல் அறிவு, அரசியல் போராட்டங்கள், அரசியல் கட்சிகளுக்கே சொந்தமானவை அல்ல. நம்முடைய நாட்டில் அரசியலை, அரசியல் கட்சிகளிடமே ஒப்படைத்து விடுகிறார்கள்.

படித்தவர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், இவர்கள்கூட அரசியலைப் பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்பயப்படுகிறார்கள். தப்பித் தவறி பேசிவிட்டால் கட்சிக்காரர்களுக்குக் கடுஞ்சினம் ஏற்படுகிறது. அன்பு கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள். அரசியல் சிந்தனை இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றைக்கே மக்களாட்சி முறை வளரும்.

கோசல நாட்டில் இராமனுக்கு முடிசூட்டப் போகிற செய்தியறிந்தபோதும் மக்கள் மகிழ்ந்தார்கள். இராமன் காட்டுக்குப் போகிறபோதும் அழுதார்கள். அது நாட்டு அரசோடு மக்கள் சேர்ந்து இயங்கிய, இயக்கத்தினுடைய விளைவு. இன்றைக்கு நம்முடைய நாட்டு அரசியலில், ஆட்சியில் அந்த இயக்கத்தோடு மக்கள் சேர்ந்து இயங்கு கிறார்களா? இல்லையில்லை. நாடு கடன் வாங்கினால் நம்முடைய நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்களா ? அழுகிறார்களா? நாட்டுக் கடனை தீர்ப்பதற்காக ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்களா? சாப்பாட்டைத் தியாகம் செய்ய வேண்டாம். ஒரு தேநீரைத் தியாகம் செய்வார்களா? அப்படிப்பட்ட புரட்சி எண்ணத்தை நாட்டு மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும்.

ஜனநாயகம் என்பது ஒரு முறை மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அது உணர்வு செறிந்தது. ஒழுங்கு செறிந்தது. ஒழுக்கம் செறிந்தது. இன்று எங்கு பார்த்தாலும் போட்டா போட்டிகள்! தலைமைக்கும் பெருமைக்கும் போராட்டங்கள்! இலட்சியத்தைப் பறிகொடுத்து விட்டுக் கூட பெருமை தேடுவார்கள் போலத் தெரிகிறது. இலட்சியம் பெரிது. இலட்சியம் துாய்மையானது. இலட்சிய வாழ்க்கை உயர்ந்தது. பதவிகளும், பெருமையும் வரலாம் - போகலாம். இலட்சியத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தயவு செய்து பதவிகளைத் தேடவேண்டாம். பெருமைகளைத் தேடவேண்டாம்.

இளைய பாரதமே! எழுந்திரு! புதிய பாரதமே! எழுந்து வா; உனக்குத் தேவையான கல்வி எது என்று நிர்ணயம் செய்! தற்சார்பான கல்வியைப் பெறு! வேலையைத் தேடாதே! வேலையை உருவாக்கு! கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று நம்பு! நோன்பு நோற்று உழைத்து வாழ்க! புதிய வரலாறு படைத்திடுக! வரலாற்றுப் போக்கோடு ஒடி விடலாம் என்று நினைக்காதே! நீ வரலாற்றை நிகழ்த்தி, நின்று போராடிப் புதிய வரலாற்றைப் படைத்து சாதனை செய்! உன்னுடைய காலம் இந்த நாட்டினுடைய வரலாற்றில் பொன்ணேடாக அமைய வேண்டும்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள். இன்று இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? எங்குப் பார்த்தாலும் வன்முறைகள்! மொழிச் சண்டைகள்! சாதிச் சண்டைகள்! மதச் சண்டைகள்! ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு அவல மனத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் திருப்தியில்லை. எங்கும் அதிருப்தி! இதற்கென்ன மாற்று? இதற்கென்ன வழி? இதற்கு யார் வழி சொல்ல முடியும்? வேறுயாறும் சொல்ல முடியாது.

இளைய பாரதம் ஒன்றுதான் சொல்ல முடியும். அவர்கள் எழுந்தால், எழுந்து நடந்தால், அவர்களால் இந்த நாட்டுக்கு வெற்றி வாய்ப்புக்களை, குவிக்க முடியும். புதிய வரலாற்றைப் படைக்க முடியும். புதிய பாரதம் பொலிவோடு விளங்கும். அதை நினைத்து, எண்ணிப் பார்த்து, முடிவு செய்வதற்காக எங்கே போகின்றோம் என்று சிந்தனை செய்யுங்கள்! எங்கே போக வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்! போக வேண்டிய இடத்திற்கு, போகவேண்டிய வழி, முறை, தொலைவு ஆகியவற்றையும் முடிவு செய்யுங்கள். தைரியமாக, துணிவாக, நடைபோடுங்கள்! வெற்றி பெறலாம்.

எங்கே போகின்றோம் என்ற கேள்விக்குப் பதிலாக நாம் எங்கே போக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கப் போகின்றோம். ஆம்: மனிதனை முதலில் உருவாக்க வேண்டும். படிப்பாளிகளை உருவாக்கி இருக்கிறோம். ஆனால் படைப்பாளிகளை உருவாக்குகின்ற கல்வி, படைப்பாளிகளை உருவாக்குகின்ற அறிவு, திசை நோக்கி நாம் இனி போகவேண்டும். உழைப்பு என்பது உயர்ந்தது. மதிப்பில் உயர்ந்தது. தவமனையது. அந்த உழைப்பை அலட்சியம் செய்யக் கூடாது. ஒரு நாட்டு மக்கள் கடுமையாக உழைத்தால் அந்த நாடு வளரும்! வாழும்!

எந்த ஒரு நாட்டிலும் எளிதாக மாற்றத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் என்பது வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதது. எங்கு வளர்ச்சி இருக்கிறதோ அங்கு மாற்றம் இருக்கும். மாற்றம் இருக்கின்ற இடத்தில் வளர்ச்சி இருக்கும். இவற்றை நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும்.

இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வேளாண்மையில் சிறந்து விளங்கிய நாடு. "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்பான் பாரதி. ஆனால் இந்த நாட்டில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. சாதாரணமாக கிராமப் புறங்களில் பெண் சிரித்தால், பலருக்கு, ஆண்களுக்குக் கோபம் வரும். பெண் சிரித்து விட்டாளே என்று கோபப்படுவார்கள். ஆனால் இந்த நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு பெண் சிரித்துக் கொண்டே இருக்கிறாள். அதிலும் பரிகாசமாக நம்மைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண் யார்? நிலமகளாகிய பூமி தேவி.

“இலம் என்றசை இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்”

என்றார் திருவள்ளுவர். இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம் நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்ககள்! அந்த திசைநோக்கி நடக்க வேண்டும்.

நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம் "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” என்று அன்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். இன்று குடம் நிறையக் கறக்கும் மாடுகளை நமது நாட்டில் பஞ்சாபில்தான் பார்க்க முடிகிறது. அடுத்து குஜராத்தில்தான் பார்க்க முடிகிறது. நாடு முழுதும் அத்தகைய கால்நடைகள் வளர வேண்டும்.

அறிவியல், நாட்டுக்கு இன்றி அமையாதது. அறிவியலும், ஆன்மிகமும் முரண்பட்டதல்ல. ஆன்மிகமும் ஒரு அறிவியல்தான். அறிவியல் என்பது வளரும் உலகத்தை, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகத்தை, நமக்குப் பயன்படுத்திக் கொள்வது, வளர்ப்பது, வாழ்வது, என்பதுதான். நம்முடைய பொருளாதாரம் செழிப்பாக இருக்கவேண்டும். கடன் வாங்கிய காசு கையில் புரளலாம். ஆனால் சொந்தமாகாது. நம்முடைய நாட்டினுடைய சொந்த மூலாதார வளங்கள் பெருகி ஆக வேண்டும். நம்முடைய மூலதனம் பெருக வேண்டும். பன்னாட்டு மூலதனங்களைவிட, சொந்த மூலதனம்தான் தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

எல்லோரும்தான் பிறக்கிறார்கள், எல்லோருக்கும் ஒரே ஒரு முறைதான் பிறப்பு. ஆதலால் மீண்டும் பிறக்கப் போவது நிச்சயமில்லை. ஆதலால், இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அந்த இலட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? நம்முடைய நாடு, நம்முடைய காலத்தில், நாடா வளத்தனவாக விளங்க வேண்டும். தாழ்விலாச் செல்வர் பலர் வாழவேண்டும், வளர வேண்டும். இந்த நாட்டை, இமயம் முதல் குமரி வரையில் ஒரு நாடாக ஆக்குவோம்! கூட்டுவாழ்க்கை வாழ்வோம்! கூடிவாழ்தல் என்பது ஒரு பண்பாடாக இருக்கவேண்டும்.

ஜனநாயக மரபுகளைக் கடைப்பிடிப்போம் என்பது எல்லாம், இந்த நாட்டு வாழ்க்கை நெறியில், முறையில் உயிர்பிக்க வேண்டும். அன்பு நெறி இந்த நாட்டு நெறி; உலகத்தின் மிகப்பெரிய சமயமான புத்த மதத்தைக் கொடுத்தது இந்தியா - மறந்து விடாதீர்கள். போர்க்களத்தை விட்டு விலகினான் அசோகன், உயர்ந்த அன்பு நெறியை இந்த நாடு ஒரு காலத்தில் போற்றியது. பாராட்டியது. இன்று இந்த நாட்டில் எங்குபார்த்தாலும் வன்முறைகள் ! கிளர்ச்சிகள்! தீவிரவாதங்கள்! இவைகளை எதிர்த்துப் போராடி, அன்பும், அமைதியும், சமாதானமும், தழுவிய ஒரு சமூக அமைப்பை நோக்கி நாம் நடைபோட வேண்டும்.

எங்கே போகிறோம்? தெளிவாக முடிவுசெய்யுங்கள். எங்கே போகவேண்டும்? தெளிவாக முடிவுசெய்யுங்கள். இதைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்க, தொடர்ந்து பேச, வானொலி அனுமதி வழங்கியிருக்கிறது. நீங்களும் கூடவே வாருங்கள்! கூடவே சிந்தனை செய்யுங்கள். என்னுடைய பேச்சில் ஐயங்கள் இருந்தால் எழுதுங்கள்! வினாக்கள் இருந்தால் தொடுங்கள்! விடைகள் வேண்டுமா? தரப்படும். ஆனாலும் ஒரு நாடு எதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறதோ, அந்தத் திசையில் அந்த நாடு நகரும் என்பதை மறந்து விடாதீர்கள்!

நாம் அனைவருமாக வானொலியின் மூலம் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்தைப் பற்றி, இந்த நாட்டினுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசவேண்டும்! சிந்திக்க வேண்டும்! செல்ல வேண்டும்! அப்போதுதான் நமது நாட்டை நல்லதிசைக்கு அழைத்துச் செல்லமுடியும். எங்கே போகவேண்டுமோ அங்கே போகமுடியும். அந்தத் தடம் அதோ தெரிகிறது! அந்தத் தடத்தைப் பிடிப்போம்! தடம் மாறாமல் நடந்துபோவோம்! வருக! வருக! -

2. கல்விச் சிந்தனைகள்
(20–3–94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

உயிர்த் தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு. என்று வளர்ந்து கடைசியாக ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான். மனிதன், மிருகமும் அல்லன்; முழு மனிதனுமல்லன். மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வாழ்ந்து அமர நிலை எய்த வேண்டும். இதுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சி. குறிக்கோள்! ஆனால் எல்லா மனிதருமே விலங்குத் தன்மையிலிருந்து அறவே விலகியதில்லை. முழு மனிதனாகவும் வாழ்ந்ததில்லை; தெய்வமாகத் திகழ்ந்தது மில்லை.

இம்மூன்றின் கலவையாகவே கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். கோடியில் ஒருவர் விலங்கியல் தன்மையைப் பூரணமாக வெற்றி கொண்டு, மனிதராக மாமனிதராக விளங்கி, இந்த மண்ணிலேயே அமரர் சிறப்பினைப் பெற்று வாழ்ந்துள்ளனர்.

இன்று நமது நிலை என்ன? நாம் விலங்கினத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் தடத்தில் செல்கிறோமா? மனிதத் தன்மையுடன் வாழ்கிறோமா? இங்கேயே அமரர் சிறப்புக் காணும் தடத்தில் செல்கிறோமா? சிந்தனை செய்யுங்கள்! இன்றைய மனிதன் உணர்ச்சி வசப்படுகிறான். அவன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விலங்குகளிலும் மோசமாகி விடுகிறான்; கலகம் செய்கிறான்; கொலை செய்கிறான்; சுயநலமே உருக்கொண்டது போல ஆகிவிடுகிறான். இன்றைய மனிதன் தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என்ற கடுகுப் புத்தியிலேயே நிற்கிறான்.

மனிதப் பிறவி அருமையானது என்று உணர்ந்து, அந்த அருமைப் பாட்டினை உலகு உணரும் தடத்தில் செல்வோர் எத்தனை பேர்? வாழ்வோர் எத்தனை பேர்?

"அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன், குருடு, செவிடு,
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது.
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!"

என்று அவ்வையார் மனிதப் பிறவியைச் சிறப்பிக்கின்றார்.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர்
பிறவி மதித்திடுமின்”

என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார். ஆம்! மானுடப் பிறவி ஒரே ஒரு பிறவிதான்! இப்பிறவியிலேயே அறியாமையை அகற்றி ஞானம் பெறுதல் வேண்டும். மாணிக்கவாசகரும், "என்னால் அறியாப் பதந் தந்தாய்” என்றார். ஆம்! மானிடப் பிறவி ஒரு பதந்தான்! மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிகருவிகளுடன், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தொடர்புச் சாதனங்களாகவும், நிறைவேற்றும் பொறிகளாகவும் விளங்குகின்றன.

அற்புதமான கருவிகள்! இந்த உடம்போடு கூடிய ஆன்மாவின் வாழ்க்கையை அறிந்து போற்றிப் பாதுகாத்து வாழ்பவன் மனிதன். திருமூலர் "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்றார். உடம்பை வளர்த்தல் என்றால், எடை கூடுதலாக வளர்த்தல் என்பதல்ல. உடம்பின் பயன்பாட்டு ஆற்றலை வளர்த்தல்!

இன்று உடல் நலத்திற்கு எதிரான செயற்பாடுகளே மிகுதி. சமையல் தோன்றிய பிறகு மனிதன் உடலுக்கு உகந்ததை உடல் நலத்திற்கு ஏற்றதை உண்ணாமல், சுவைக்காக உண்ணத் தலைப்பட்டு விட்டான்! போதும் போதாததற்குப் புகையிலையரக்கன் பலவகைப் புனைவுகளில் மனிதனை அழித்துக்கொண்டு வருகிறான்.

காற்று சுவாசிப்பதற்காக அமைந்த மூக்கினை வாணக் குழியில் வெடி மருந்து திணிப்பதுபோல மூக்குப் பொடியைத் திணிக்கிறான். அடுப்பில் புகை இருத்தல் போல இன்று பலருடைய வாயில் புகை! புகை பிடித்தல், சாராயம் குடித்தல் இன்னோரன்ன தீமைகள் நாளும் பலரின் உடல் நலத்தைக் கெடுத்து வருவதோடு அவர்களை மனிதப் பண்பிலிருந்து தடம் மாற்றி விலங்கியல் நிலைக்கு அழைத்துப் போகின்றன. இவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்!

மனிதன் வரலாற்றின் உறுப்பு. மனிதன் வரலாற்றின் கருப்பொருள். மனிதன் இந்த உலகைப் பயன்படுத்தும் வகையில் அமைப்பவன். மனிதன் படைப்பாளி! மனிதன் காலந்தோறும் இப்புவிக் கோளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவன். மனிதனை அளவு கோலாகக் கொண்டே இந்த உலகம் மதிப்பிடப்படுகிறது. மனிதப் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற, மனிதனுக்குக் கருவியாக அமைவது அறிவு!

"அறிவுடையார் எல்லாம் உடையார்”

என்பது திருக்குறள்.

மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டு, அறிவைத் தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. மனித குலத்தினர் அனைவரும் அறிவு பெற்று விளங்கவேண்டும் என்பது நியதி. இத்திசையில் மனிதகுலம் எடுத்த முயற்சிகள் பலப் பல. ஆயினும் அறிவு பெற்றோர் கோடியில் ஒருவரே!

இன்று நாம் அறிவுடைமை பற்றி, கொண்டிருக்கிற கருத்து, பிழையானது, தகவல்கள் நிறைய வைத்திருப்பவர்கள், நிறைய படித்தவர்கள், பட்டம் பெற்றிருப்பவர்கள், இவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்று பிழையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். இவர்களில் அறிஞர்கள் இருக்கலாம். தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் திருக்குறள் கூறும் அறிவுடைமை எது? மனிதனை - மனித குலத்தைத் துன்பத்திலிருந்து காப்பதே அறிவு. இன்று நமது வாழ்க்கையில், துறை தோறும் துன்பந்தானே சூழ்ந்திருக்கிறது. மனிதரை மனிதர் கொன்று அழிக்கும் ஆற்றல் மிக்க கொலைக் கருவிகளை மனிதன் படைத்திருக்கிறான். அப்படியானால் நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்?

இன்றைய உலகம் அறிவியல் உலகம் என்கிறார்கள். கூர்ந்து நோக்கின், உயர்தர அறிவியல் வளரவில்லை. அருவருக்கத்தக்க நிர்வாணமான சுயநலம் வளர்ந்து வருகிறது. வீட்டிலிருந்து, உலகத்தின் பெரு வீதிகள் வரை எங்கும் பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பு: ஆதிக்கப் போட்டிகள்! மற்றவர் துன்பம் பொருத பண்பே அறிவுடைமை என்று கூறுகின்றது திருக்குறள்.

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை”

என்பது திருக்குறள். இத்தகு அறிவைப் பெறும் கல்வி வழங்கப் பெறுகிறதா? இன்று நமது கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்வி உலகம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால், படைப்பாளிகளை உருவாக்குவதில் பெற்ற வெற்றி, மிக மிகக் குறைவு! கல்வியே அறிவுடைமையல்ல. கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்களும் அல்லர். கல்வியும், கேள்வியும் அறிவு பெறுதலுக்குரிய வாயில்களே ஆகும்!

இன்று நமது கல்வியுலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? மனிதனின் ஆன்மாவுக்கு உணவு கல்வி, ஆன்மாவை வளர்ப்பது கல்வி! இன்றைய கல்வி முறை மூளையில் தகவல்களைத் திணிப்பதாக அமைந்திருக்கிறதே ஒழிய ஆன்மாவைத் தொடவில்லையே! இன்றுள்ள கல்விப் பெருக்கத்திற்கு, இக்கல்வி உலகம், அளப்பரிய ஆற்றல் வாய்ந்த கல்வியாய் இருப்பின், இந்த உலகத்தையே மாற்றியிருக்கும்.

எங்கே மாற்றங்கள்? மனிதன் வர வரச் சூழ்நிலையின் கைதியாகிப் போகிறானே தவிர, சூழ்நிலையை அவன் மாற்ற முற்படவில்லையே! விலங்குகள் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஆனால், மனிதனோ சூழ்நிலைகளைத் தன்னுடைய வாழ்நிலைக்கும், இலட்சியத்துக்கும் ஏற்ப, மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றலுடையவனாக விளங்குமாறு செய்தல் கல்வியின் விழுமிய நோக்கம். இன்றைய கல்வி உலகு, கடமை உணர்வுகளை, காலம் போற்றும் உயர் பண்பினை, கட்டுப்பாடுகளைப் போற்றி வளர்த்துக் கொள்ளக் கற்றுத் தரவில்லை. வெற்றி வாய்ப்புகளுக்குரிய கட்டுப்பாடுகளை நெகிழ்த்தி விட்டது இன்றைய கல்வி உலகம். ஏன்?

இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆதலால், இன்றைய மனிதன் நாகரீகத்தை இழந்து காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும், சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள். கடந்த சில ஆண்டுகளில் காவல் நிலையங்களின் வளர்ச்சியே குற்றங்களின் வளர்ச்சிக்கு நிரூபணமாகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழவேண்டியது சமூக அமைப்பு.

இச்சமூகத்தில் இன்று கல்வித் துறையிலிருந்து காவல் துறை வரையில் ஆண், பெண், பிரிக்கப்படுகின்றனர். ஏன் இந்த அவலம்? இந்த அவலத்தை முதலில் செய்தது ஆண் ஆதிக்கச் சமுதாய அமைப்பு. திருக்கோயிலில் அம்மை அப்பனாக இருந்து வழிபடும் பொருளை அர்த்தநாரீசுவரனாக இருந்த பரம்பொருளை இருவேறாகப் பிரித்துத் தனித்தனியாக்கினார்கள்.

அதற்குப் பிறகுதான் புராணங்களில் கூட ஆண் சாமிக்கும், பெண் சாமிக்கும் சண்டைகள் தொடங்கின. இன்னும் அதே திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம். ஆண், பெண் சமத்துவத்தைக் கல்வியில்கூடக் காண முடியவில்லை. ஏன்? பண்பாட்டு வளர்ச்சிக்குரிய கல்வியை வழங்காததுதான் காரணம். வளரும் வரலாற்றுக்குரிய உயிர்ப்புள்ள கல்வியை மனிதனுக்குத் தரவேண்டும்.

கல்வி, தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமன்று. கல்வி, ஆன்மாவின் சக்தியைத் துாண்ட வேண்டும். நல்ல காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது! நல்ல காரியங்களைச் செய்யும் ஆர்வத்தைத் தரவேண்டும். ஓர் ஊர், ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதை அளந்தறியப் பயன்படுவது கல்வியேயாம். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களுடைய நாடு விளங்குமானால் "கெட்ட போர்” அங்கு இராது. ஆன்ற கல்வி கற்றோர் நல்லவராயிருப்பர். நாடும் நன்றாகவே இருக்கும்.

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்பது புறநானூறு.

கல்வி என்பது கல்லுதல் அல்லது தோண்டுதல் என்னும் சொல் அடியில் பிறந்தது. மனிதனிடத்தில் இயல்பாக உள்ள அறியாமையைத் தோண்டி எறிந்து விட்டு, அறிவூற்றைக் கண்டு, அந்த உயர்ந்த சக்தியை வளர்ப்பதே கல்வியாகும். இதுவே கல்வியின் நோக்கம் - பயன். கல்வித் துறை மக்கள் தொகுதிக்குரியதான பிறகு, இது நடைபெறவில்லை. ஆயினும், தக்க நாட்டுப்பற்றுள்ள சமூகச் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மனமிருந்தால், இன்னும் செய்ய இயலும்; செய்யவேண்டும்.

கல்வியின் தகுதி, கற்பிக்கும் ஆசிரியரையே மிகுதியும் சார்ந்திருக்கிறது. கற்பிக்கும் ஆசிரியரிடம் சிறந்த திறன் இல்லையானால் பள்ளியால் விளையும் நன்மையைவிட விபத்துக்களும் குழப்பங்களும்தான் ஏற்படும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்பொழுது, மாணவர் பகுதியுடன் ஒன்றியிருக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் என்ன நடக்கிறது? கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் தனக்கும் அந்நிலையில் உள்ள ஒன்றுதலில் உள்ள அமைவு அல்லது இடைவெளியைத் தெரிந்துகொண்டு கற்பிக்கும் ஆசிரியர்தான், கற்பிப்பதில் வெற்றி பெற இயலும்.

பாடம் என்பது கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய முயற்சி என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ள வேண்டும். கற்பிக்கும் தனது ஆசிரியத் தன்மையுடன், கற்கும் மாணவரையும் ஒன்றச் செய்வதன் மூலம் - கற்கும், கேட்கும், சிந்திக்கும் திறனைத் தூண்டித் தம்பால் ஈர்த்து, வினா - விடை மூலம் - மாணவன் கற்றுக் கொள்கிறான்; தெளிவாக இருக்கிறான் என்பதை ஆசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒரு செடி வளர்வதற்குப் பலவகை உணவுப் பொருட்கள், மருந்துகள் தேவைப்படும். அதுபோல், மனிதனும் வாழ்க்கையில் வளர, பண்பாட்டில் வளர கல்வி தேவை. கற்கவேண்டிய துறைகள், நூல்கள் மனிதர்களுக்கிடையில் வேறுபடும்! ஆன்மாவின் தேவைக்கு ஏற்பவும், ஆன்மாவின் வளர்ச்சிக்கேற்பவும் மாறுபடும்.

ஆதலால் கல்வியில் பொதுக் கல்வியும், சிறப்புக் கல்வியும் இடம்பெற வேண்டும். பொதுக் கல்வி என்பது பொது அறிவு, சமூக வாழ்க்கைக்கு - ஒரு பணி செய்யத் தேவைப்படும் அறிவு. சிறப்புக் கல்வி என்பது கற்போர் நிலைக்கேற்ப மாறும். அது அறிவியலாகவும் இருக்கலாம். அல்லது தத்துவத் துறையாகவும் இருக்கலாம். பிறவாகவும் இருக்கலாம். இங்ஙனம் கல்வி வழங்கப் பெற்றால்தான் மனிதர்களை, அறிஞர்களை, ஞானிகளை உருவாக்கலாம்.

நம்முடைய குழந்தைகளைச் சிந்திக்கிறவர்களாகப் பழக்கிவிடுதல் அவசியம். முதல் இரண்டு வகுப்பு வரை பாடப் புத்தகங்களே வேண்டியதில்லை என்பது நமது கருத்து. இந்த வகுப்புக்களில் கற்பது எப்படி? நினைவாற்றலைப் பெறுவது எப்படி? சிந்திப்பது எங்ஙனம்: ஆகிய கல்வி கற்றலின் அடிப்படைகளைச் செயல்வழிக் கற்பிக்க வேண்டும். கற்கும் குழந்தைகளின் சிந்திக்கும் திறமையே ஆசிரியரின் திறமைக்கு அளவுகோல் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு இயல்பாகவே அளவற்ற சக்தி இருக்கிறது. நாம் இங்கு குறிப்பிடுவது உடல்சக்தி, மூளை சக்தி இரண்டையுமே குறிப்பிடுகின்றோம். இந்த இருவகை சக்திகளையும் குழந்தைகள் உபயோகிக்கும்படி ஆசிரியர் பழக்கவேண்டும். நடக்கும்பொழுது கீழே விழுந்துவிடும் குழந்தை, தானே எழுந்துவிடும் திறமையுடையது; மனப்பாங்கு உடையது. நாம் தூக்கும் போதுதான் குழந்தையின் ஆற்றல் குறைகிறது. மற்றவர்களை எதிர்பார்ப்பது குழந்தைகளிடத்தில் வளர்ந்து விடுகிறது.

ஆசிரியர், கற்கும் மாணவர்களிடத்தில் வினா கேட்கலாம். ஆனால் ஆசிரியர் விடை கற்றுத்தரவே கூடாது.

கு. xv.21 மாணவர் சற்று விடை தரத் தாமதித்தால் அடுத்து - Next - சொல்லி விடுகிறார் ஆசிரியர். சில அவசரமுடைய ஆசிரியர்கள் விடையைத் தாமே சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். இது தவறு. வினாவுக்குரிய விடைகளை மாணவர்களே அவர்களின் அறிவுப்புலனால் தேட வேண்டும். தேவையானால் ஆசிரியர் துணை வினாக்களைத் தொடுத்து, மாணவர்களிடத்தில் விடை காணும் முயற்சியைத் தூண்டலாம். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியர் விடை கூறக்கூடாது.

ஆனால், இன்று நடப்பு, வினா-விடைகளை எழுதிப் போட்டு மனப்பாடம் செய்வதுதான்! இதனால், சிந்தனைத் திறனும், புதியன காணும் முனைப்பும் வளரவில்லை! கல்வி உலகு, தேர்வு மட்டுமே என்ற குறுகிய குறிக்கோளில் சென்று கொண்டிருக்கிறது. திசையை விரிவுபடுத்திக் கொண்டு, சிந்தனையாளர்களை, படைப்பாளர்களை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும். படிப்பாளிகளை உருவாக்கும் நிலையிலிருந்து படைப்பாளிகளை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும்.

கல்விக்கு இதயம் தேவை. சோவியத் கல்வியாளன் சுகோம்லின்ஸ்கி "குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்" என்று எழுதினான். கல்வி, மூளையோடு மட்டுமோ, கற்கும் நூல்களோடு மட்டுமோ சம்பந்தமுடையதன்று. இதயத்தோடும் சம்பந்தமுடையது. கல்வி கற்பிக்கவும், கல்வி கற்கவும், அதற்கென ஒரு சிறந்த பாங்கு தேவை.

கற்பிக்கும் ஆசிரியருக்குச் சிறந்த உணர்வு நிறைந்த இதயம் தேவை. கற்கும் மாணவருக்கும் ஆசிரியரைப் பூரணமாக - ஆசிரியரின் மனத்தைக் கூடப் புரிந்துகொள்ளும் உள்ளம் வேண்டும். அப்போதுதான் கற்பிக்கும் பணியும், கற்கும் பணியும் அர்த்தமுள்ளது ஆகும்.

இத்தகு கல்விச் சூழலுக்கு உரியமொழி தாய்மொழியே என்ற கருத்திற்கு இரண்டாவது கருத்து இருக்கமுடியாது. இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனைமொழி, உணரும்மொழி, ஒரு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முதற்சாதனம் அந்த நாட்டு மக்களைத் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதிக்காது இருப்பதே.

இன்று நம்முடைய நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியியக்கம் வெற்றிபெறவில்லை. தேசியமொழியைக் கற்றபாடில்லை. ஆங்கிலத்திலிருந்து தாய்மொழிக் கல்விக்கு மாற மறுப்பது பலவீனம். இந்த திசையில் செல்வது விரும்பத் தக்கதல்ல - தாய்மொழிக் கல்வியும், தேசீய மொழியறிவும் நாம் பெற வேண்டியவை. உலகத்தின் சாளரத்தை மூடவும் வேண்டாம். ஆங்கிலத்தையும் ஒரு மொழியாகக் கற்கலாம்.

தாய்மொழியை மதித்துப் போற்றும் கல்வி உலகமே நமக்குத் தேவை. தாய்மொழி வழி உள்ளத்தை உயர்வு செய்யும் கல்வி கற்போம்; அறிவை வளப்படுத்தும் கல்வி கற்போம். உலகக் கல்வியும் கற்று உலகமாந்தருடன் கைகோர்த்து நிற்போம்! சுய அறிவை வளர்ப்போம். அதற்குத் துணையாகக் கற்கும் கல்வியை ஆக்குவோம்!

பெரிய, பெரிய இலட்சியங்களை - இமயத்திலும் உயர்ந்த இலட்சியங்களைக் கொள்வோம்! அவற்றை அடைய உழைப்போம்! இதுவே இன்றைய கல்வி உலகு நம்மை அழைத்துச் செல்ல வேண்டிய இடம்.

நாளைய இந்தியா இன்றைய பள்ளியிலேயே தொடங்குகிறது என்பதை நமது அரசுகளும் சமூகமும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். எதிர்கால இந்தியா - ஏற்றமடைவது இன்றைய பள்ளியின் நடைமுறையையும், நமது குழந்தைகளுக்குத் தரப்பெறும் கல்வியையுமே பொறுத் திருக்கிறது.

நாம் இன்று சாதி, மத, இன எல்லைகளிலும், பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கைகளிலும் சிக்கிச் சீரழியும் போக்கினைத் தவிர்த்து, அடுத்த தலைமுறையினருக்குப் புதிய உலகைக் காட்டவேண்டும். நம்முடைய இளைஞர்கள் சிறந்த கல்வியையும், ஞானத்தையும் பெற்று, பொறுமை, உறுதி, முயற்சி, இவற்றோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்வதில் நம்பிக்கை வைக்கக்கூடிய கல்வியே இன்றையத் தேவை. இதுவே நாம் செல்லவேண்டிய திசை..!

கல்வி உலகம் இன்றைக்கு இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. மேலும் தெளிவாகச் சொல்லப் போனால் கல்வியில் இரண்டு ஜாதிமுறை தோன்றியிருப்பது போலத் தெரிகிறது. அதாவது கிராமப்புறக்கல்வி, நகர்ப்புறக்கல்வி என்று குறிப்பிடுகின்றோம். கிராமப்புறக் கல்விக்கும், நகர்ப் புறக் கல்விக்குமுள்ள இடைவெளி மிகவும் அதிகம் என்பதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

நகர்ப்புறத்து இளைஞர்கள், மாணவர்கள், தரமானக் கல்வி பெறமுடிகிறது. அவர்களது அறிவுப் புலன்களுக்கு நிறைய விருந்து கிடைக்கிறது. அதனால், தரமும் திறமையும் உடைய இளைஞர்கள், நகர்ப்புறத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் கிராமப்புறத்தில் அது இல்லை. கிராமப்புற பள்ளிக் கூடங்கள் எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லாத கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. சோதனைக் கருவிகள் கிடைப்பதில்லை. நல்ல நூலகம் அமைவது இல்லை. அவர்களுடைய செவிப்புலனுக்கு நிறைய விருந்துகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, கிராமப் புறக் கல்வியில், தரம் குறைந்திருக்கிறது என்பது இரண்டு கருத்துகளுக்கு இடமில்லாத ஒரு பொதுச் செய்தி. கிராமப்புறக் கல்வியை மேம்படுத்துவதில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு இப்படி ஒரு ஆலோசனைக் கூடச் சொல்ல முடிகிறது. கிராமப்புறத்தில் திருக்கோயில்கள் உண்டு. “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதை நாம் பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு கோயிலும், அந்தக் கிராமப்புறத்தினுடைய ஆரம்பப் பாடசாலையைத் தத்தெடுத்துக் கொண்டு, அந்த ஆரம்பப் பாடசாலையின் வளர்ச்சிக்கு, அங்கு பயிலுகின்ற சிறுவர்களுடைய வளர்ச்சிக்குரிய அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம்; அப்படிச் செய்தால்தான் கிராமப்புறக்கல்வி வளரும்.

அடுத்து, ஏடுகளின் வழியாக, புத்தகங்களின் வழியாக, கல்வி கற்றுத் தருவதை விட செயல் வழிக் கல்வி கற்பிப்பது நல்லது என்று கருதுகின்றோம். செயல் வழிக் கற்கும் கல்வி நீண்ட நெடு நாட்களுக்கு, நினைவில் இருக்கும். அதனால் அதற்குரிய சாதனங்களை ஒவ்வொரு பள்ளியும் பெற வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுதோறும் புதிய புதிய நூல்கள் வாங்கவேண்டும்.

நம்முடைய நாட்டில் தீபாவளி கொண்டாடப்படுவது போல, பொங்கல் கொண்டாடப்படுவதைப்போல, கலைமகள் விழா கொண்டாடும் காலம் விரைவில் வர வேண்டும். அப்பொழுதான் கல்வியுலகில் புத்துணர்வும், ஆர்வமும் தோன்றும். இன்று கலைமகள் விழா என்று ஒன்று இருக்கிறதாகவே பலருக்குத் தெரியவில்லை. நூல்களை வாங்குவதுமில்லை. நூல்களைப் புதுப்பிப்பதுமில்லை.

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் ஏதோ ஒரு மூடநம்பிக்கையில், அன்றைக்குப் படிக்கக் கூடாது என்றே, ஒரு கருத்து உலா வருகிறது. அன்றைக்கு, இருக்கும் புத்தகங்களையும் கட்டிவைத்துவிட்டு, பூப்போட்டு மூடிவிட்டு, படிக்கக் கூடாது என்று முடிவுசெய்து விடுகிறார்கள். இதையும் நாம் மறுத்துவிட வேண்டும்.

பள்ளிக் கூடங்கள் கலைமகள் விழாவன்று திறந்திருக்க வேண்டும். நூலகங்கள் திறந்திருக்க வேண்டும். அன்றைக்குக் கல்வி வேள்வி எங்கும் செய்யவேண்டும். கடைவீதியில் உள்ள புத்தகக்கடைகளில், நீண்ட, நெடிய வரிசையில் மக்கள் நின்று, தங்களுக்கும், தங்களுடைய குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய அருமை மகனுக்கு, அல்லது அருமை மகளுக்கு, ஒரு பெற்றோர் வாங்கிக் கொடுக்கக்கூடிய உயர்ந்த பரிசு புத்தகமாகவே இருக்க வேண்டும். அந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும், பெற்றோர்களும் பயில்விக்க வேண்டும்.

பணிப் பாதுகாப்பு என்பது இன்று வளர்ந்து வந்திருக்கக் கூடிய நாகரீகம். தவிர்க்க முடியாதது. வரவேற்கத் தக்கதும்கூட பணிப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே, அவனிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் தரமானவர்களாக, திறமானவர்களாக, அறிஞர்களாக உருவாவதில் ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்களுடைய பணி தரமானதாக, எல்லோருக்கும் ஏற்றம் தரத்தக்கதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் பணியினுடைய பாங்கு வளர்ச்சி அடைய முடியும். வெற்றி - பெற முடியும்; உயர்ந்த ஆசிரியர் பணி மேற்கொண்டிருக்கக் கூடியவர்கள், ஒரு நாட்டின் வரலாற்றைச் சீரமைக்க உதவி செய்கிறோம் என்ற எண்ணத்துடன் தம்முடைய பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்

வகுப்பறையில் உட்கார்ந்து படிக்கும் மாணாக்கன், நாளை நாட்டை ஆட்சி செய்பவனாக மாறமுடியும், மாற வேண்டும். அதற்குரிய வாயிலை பள்ளிக்கூடங்கள், சிறப்பாக, ஆசிரியர்கள் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே இன்றைய கல்வியுலகத்தினுடைய தடத்தில் நாம் செல்லுவது போதாது. அகன்ற, விரிவான, உயர்ந்த குறிக்கோளுடைய, லட்சியமுடைய சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன், நாம் செல்லும் திசையை அகலப்படுத்தி மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம். சிறந்த கல்வி உலகம், அறிஞர் உலகம் தோன்ற வேண்டும். அதுவே நாம் செல்ல வேண்டிய திசை

3. உழைப்புச் சிந்தனைகள்


(27-8-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

இன்றைய மனிதன் படிக்கிறான்; பட்டதாரியாகிறான்; அறிஞன் ஆகிறான். அறிவின் பயன், என்ன செய்யவேண்டும் என்று அறிந்து செய்தலேயாம். செயல், உழைப்பின் பாற்பட்டது. உழைப்பற்ற செயல்களும் உண்டு. ஆயினும் உண்ணல், உடுத்தல், காதல் செய்தல் ஆகிய நுகர்ச்சிகளுக்கும் உழைப்பு இன்றியமையாதது.

ஏன்? மனிதன் விலங்குகளின்றும் வேறுபட்ட நிலை, உணவைத் தேடும் நிலையில்தான் தொடங்கியது. பின்னாளில் அவன் வளர, வளர உணவைத் தேடாமல் படைத்தான். இந்தக் காலக்கட்டத்தில் உழைப்பு வளர்ந்தது; கருவிகளுடன் மனிதனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஆக, உழைப்பே வாழ்வு என்றாகிறது. உழைப்பிற்கே உரியது வாழ்வு.

வாழ்வு, உழைப்பினாலாயது. வாழ்வினால் உழைப்பு வளர்கிறது. உண்ணும் உணவைத் தனது கடின உழைப்பால் - நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துப் படைத்து உண்பவர்கள் நல்லவர்கள்; உத்தமர்கள்! “உழைத்தால்தான் உணவு” என்ற சட்டம் வேண்டும் என்றான் ஜான்ஸ்மித்.

இந்தச் சட்டத்தை உலக நாடுகள் இயற்ற வேண்டும். அதற்கு நாம் எல்லாரும் கீழ்ப்படிய வேண்டும். அண்ணல் காந்தியடிகள் “உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்” என்றார்.

வாழ்க்கையின் இயல்பே உழைப்புத்தான்! அறிகருவிகள், செயற் கருவிகளுடன் கூடிய உடல் சார்ந்த வாழ்க்கையை உழைக்காமல் நடத்துவது யாங்கனம்? மனிதனின் இன்றியமையாத் தேவை உணவு. அடுத்தது காதல்.

பழங்காலத்தில் உற்பத்தியுடன் கூடிய நாகரிகத் தொடக்கம் உழைப்பினாலேயே தொடங்கப் பெற்றது. காதல் வாழ்க்கையும் அப்படித்தான் ! சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிடப் பெருமுயற்சி, கடின உழைப்புடன் ஒருநாள் வாழ்ந்தால்கூடப் போதும்! உழைப்புடன் கூடிய வாழ்க்கை, சொர்க்கத்தின் கதவைக்கூடத் தட்ட உதவும்.

ஒவ்வொருவரும் எந்தவிதமான தூண்டுதலுமின்றி இயல்பாகவே உழைக்கும் உணர்வு பெறவேண்டும். என்று மனிதகுலத்துக்கு உழைப்பு ஜீவ சுபாவமாக அமைகிறதோ, அன்றே "சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற ஊதியம்" என்ற பொதுவுடைமைச் சமுதாயம் அமைய இயலும், முடியும்.

உழைப்பின் சின்னமாகிய காய்த்துப்போன கைகளும் கால்களும் பெறவேண்டும். அதுவே, உழைத்தலைக் காட்டும் சின்னம்: ஒருநாள் நபிகள் நாயகம், தம்மைக் காண வந்தவர்களுடன் கட்டித் தழுவியும், கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றியும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்படி வந்தவர்களுள் ஒருவரின் கையைப் பற்றிய அண்ணலார் நபிகள் நாயகம் நீண்ட நேரம் திரும்பத் திரும்ப அவர் கையைக் கண்களில் ஒற்றிக் கொண்டதோடன்றி, கண்களில் நீர்மல்க நின்றுகொண்டிருந்தார். மற்றவர்கள் காரணம் கேட்டபோது, “இவருடைய கைகளில் உழைத்துக் காய்த்துப் போன சுவடுகள் இருந்தன. அவை எனக்குப் பெருமகிழ்வைத் தந்தன” என்று நபிகள் நாயகம் அருளிச் செய்ததாக அவர் வரலாறு கூறுகிறது.

மனிதன் இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் மட்டுமே திளைத்து வாழ்தல் கூடாது. இன்ப நுகர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கொள்ளக்கூடாது. உழைப்பே வாழ்க்கையின் உயர் குறிக்கோளாக அமையவேண்டும். உழைப்பின் வழி, இன்ப நுகர்ச்சியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இது உறுதி.

உழைப்பு, உடலுக்கு உறுதி சேர்க்கும். அறிவு வளர்ச்சிக்கும் உதவும். இந்த உலகில் பலவற்றிற்கு எல்லை உண்டு. ஆனால், அறிவுக்கும் ஆளுமை நிறைந்த உழைக்கும் சக்திக்கும் எல்லையே கிடையாது. மூளை இயங்க, இயங்க அறிவு வளரும். உழைப்பு தொடர்ந்து இடையீடின்றி நிகழின் உழைக்கும் சக்தியும் வளரும்.

நம் ஒவ்வொருவருடனும் பிறப்பிலேயே கலந்திருப்பது உழைப்பாற்றல்; உழைக்கும் சக்தி, உழைப்பதே மனிதப் படைப்பின் நோக்கம். கால்களையும் கைகளையும் மற்றப் பொறிகளையும் முறையாக உழைப்பில் ஈடுபடுத்தினால் எல்லையே இல்லாத அளவுக்கு உழைத்துக்கொண்டே இருக்கலாம்.

அறிவு பூர்வமாகவும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் உழைத்தால் களைப்பு வாராது. மாறாகக் களிப் புணர்வே தோன்றும். ஓய்வு எடுக்கும் எண்ணமே தலை காட்டாது. உழைப்பாளிக்கு ஓய்வு, வேலையை மாற்றிக் கொள்வதுதான்.

நம்முடைய வாழ்நாளின் குறிக்கோள் இன்னதென நிர்ணயம் செய்துகொண்டு உறுதியுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்படி ஒரு குறிக்கோளுடன் ஒரு துறையில் வாழ்நாள் முழுதும் உழைத்தால்தான் அந்தக் குறிக்கோள் கைகூடும். நமது வாழ்க்கையும் உன்னத நிலையை அடையும். இங்ஙனம், துறைதோறும் நின்று உழைப்பவர்கள் எண்ணிக்கைக் கூடினால் நாடு வளரும். உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்,

உழைத்து வாழ்வது என்ற வாழ்க்கையின் கோட்பாடு அனைவருக்கும் பொருந்தும். உழைப்பு என்பது அனைவருக்கும்–மனித குலம் முழுவதுக்கும் உரிய பொறுப்பு. மனித குலத்தில் யாராவது சிலர் உழைக்காமல் வாழ்ந்தால் அவர்களுடைய உழைப்பின் பங்கை மற்றவர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இன்று இந்தப் போக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது. உழைக்காதவர்களும் அல்லது அரைகுறையாக உழைப்பவர்களும் அல்லது உழைப்பது போலப் பாவனை செய்பவர்களும் இன்று சமுதாயத்தில் பல்கிப் பெருகி வருகின்றனர். இஃது ஒரு சாபக்கேடு.

இந்தத் தவறான நடைமுறை பெரும்பாலும் படித்தவர்களிடையிலும் அதிகார வர்க்கத்தினரிடையிலும் பரவி வருகிறது. நம்முடைய நாட்டில் உணவுப் பற்றாக் குறை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குரிய கையிருப்பு இருக்கிறது என்று உணவு அமைச்சகம் கூறுகிறது.

ஆனால், பணப் பற்றாக்குறை இருக்கிறது. கடன் வாங்க வேண்டியிருக்கிறது. இது ஏன்? உழுவோர் உலகம் தமது உழைப்பை முறையாகச் செய்து நாட்டைப் பாதுகாத்து வருகிறது. மற்ற துறைகளில் போதிய உழைப்புக் கிடைக்கவில்லை என்பது, தானே உய்த்துணரக்கூடிய கருத்து.

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உழைப்பில் - எண்ணற்ற உயிர்த் தொகுதிகளின் உழைப்பில் வாழ்கிறோம். நாம் நமது ஒருநாள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்று கணக்கிட்டால் நாம் இந்த உலகத்தில் மற்றவர்கள் அல்லது மற்றவை உழைப்பிலிருந்து நமது வாழ்க்கைக்கும் நுகர்வுக்கும் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்காவது நாம் திருப்பித் தரும் வகையில் உழைக்கின்றோமா? பலர் வாழ்க்கையில் இல்லை என்பதே விடையாக இருக்கிறது.

அப்படியானால், உழைக்காது வாழ்பவர்கள் பிறர் பங்கைத் திருடுகிறார்கள். அல்லது பிறருக்குச் சுமையாக இருக்கிறார்கள். இவர்கள் நிலத்திற்கும் பாரம்! இவர்களை வையகம் சுமப்பதும் வம்பு. அதாவது பயனற்றவர்கள்.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிடத் தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன்தான் சமூகத்திற்குப் பயன்படுவான். சமூகத்தில் ஒரு நிலையான இடத்தை முன்னேறிப் பெறுவான். இதுவே வாழும் நியதி.

ஆழ்கடலின் மேலே புல் பூண்டுகள் மிதக்கும், செத்தைகள் மிதக்கும். ஆனால், முத்து ஆழத்தில்தான் கிடக்கும். முத்தை விரும்புவோர் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கித்தான் முத்தை எடுக்கவேண்டும். அதுபோல, வாழ்க்கையில் அரும் பயனையும் வெற்றியையும் விரும்புவோர் உழைத்தல் வேண்டும்.

உடம்பு, உழைப்பினாலாயது. உழைப்பதற்கே உரியது. இரும்பு, பயன்படுத்தப் பயன்படுத்த உறுதிப்படும். நீண்ட நாட்களுக்கும் பயன்படும். உழைப்பில் பயன்படுத்தப்படாத இரும்பு துருப்பிடித்து அழியும்; விலை மதிப்பையும் இழக்கும். இரும்பு துருப்பிடித்து அழிவதைவிட, உழைப்பில் பயன்படு வதன் மூலம் தேய்வதே மேல்.

மனிதராய்ப் பிறந்தோர் எல்லாரும் விரும்புவது மகிழ்ச்சி! மகிழ்ச்சியை எளிதாக அடைவதற்குரிய ஒரே வழி. மிகவும் இரகசியமான வழி கடுமையாக உழைத்தலேயாம். அந்த மகிழ்ச்சியும் ஓரொருகால் உழைத்தலினால் கிடைக்காது. இடையீடின்றித் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

மனித குலத்தை வறுமைத்தி சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தீயை அணைப்பதற்குரிய முயற்சியுடன் கடின உழைப்புத் தராவிடில் இந்தத் தீ அணையாது. இந்தியாவை, கடந்த பல நூறாண்டுகளாகப் பசித்தீ உள்ளீடழித்து வருகிறது.

பொதுவாக ஆண்கள் மத்தியில், அவர்களைப் பார்த்துப் பெண்கள் நகைப்பதைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். கோபம் வந்துவிடும். ஆனால் ஒரு பெண் பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பரிகாசம் செய்து நகைத்துக் கொண்டே இருக்கிறாள். சூடு சுரனை வந்ததாகத் தெரியவில்லை. இனிமேலும் வருமா? வராது போனால் இந்தியா வளமான நாடாகாது. 2001ல் புதிய நாட்டைக் காண்பதும் அரிது.

அந்தப் பெண் யார்? அவள்தான் நிலமென்னும் நல்லாள்! தன்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணிச் சோம்பலுடன் அயர்ந்து - செயலற்று இருப்பவர்களைப் பார்த்து நிலமென்னும் நல்லாள் நகைக்கின்றாள்! ஆம்! நமது நாட்டில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசு. பசுமைப் புரட்சிக்கு இலக்காகாத தரிசு. ஏன் இந்த அவலம்?

உழைப்பும் சுறுசுறுப்பும் இணையானவை. சுறு சுறுப்பு, உழைப்பைத் துண்டும். ஆனால், சிலர் சுறுசுறுப்பாக இருப்பர்; முறையாக உழைக்க மாட்டார்கள். இவர்களுடைய சுறுசுறுப்பினால் என்ன பயன்? யாதொரு பயனும் இல்லை. அதுமட்டுமல்ல. எதைச் செய்வதில், எதைச் சாதனையாக மாற்றுவதில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

“வேலை செய்வது கடினம், ஆனால், எந்த வேலையும் கடினமன்று” என்பது சைப்ரஸ் பழமொழி. வேலை செய்வது கடினமல்ல. வேலை செய்ய விருப்பம் இல்லாததால் வேலை கடினமாகத் தோன்றுகிறது.

ஆனால், ஆர்வத்துடன் அறிவறிந்த ஆள்வினையின் மூலம் எந்த வேலையையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும். ராபர்ட் புரூஸ் என்ற அரசன் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். பலமுறை போர்முனையில் தோற்றான். கடைசிப் போரில் தோற்று ஒரு குகையில் ஒளிந்திருந்தான்.

அந்தக் குகையில் ஒரு சிலந்தி, வலைபின்னிக் கொண்டிருந்தது. அடிக்கடி சிலந்தியின் பின்னலில் நூலிழை அறுந்து போயிற்று. ஆனால், சிலந்தி விடவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலை பின்னும் முயற்சியில் வெற்றி கண்டது.

இதனைக் கவனித்த அரசன் ராபர்ட் புரூஸ், எழுச்சி பெற்றான். போருக்கு ஆயத்தமானான்; போரிட்டான்; வெற்றியும் பெற்றான். அதுபோல் தொடர்ச்சியாக நடைபெறும் உழைப்பு, வெற்றியை ஈட்டித் தரும்.

இன்று வேலை செய்யும் நேரத்தைவிட, ஓய்வு, இளைப்பாறுதல் - இந்த வகையில்தான் அதிக நேரம் செலவழிக்கப் பெறுகிறது. ஒரு கடமையைச் செய்து முடிக்கும்வரை இளைப்பாறுதல் என்ன வேண்டியிருக்கிறது?

இன்று அலுவலக இடைநேரம், விடுப்பு தாராளமாக்கப்பட்டிருக்கும் நிலை, இவ்வளவும் உழைப்புக்குப் பகை. பணிகளுக்கிடையில் இளைப்பாறுவது மிகவும் தவறு.

உழைப்பு, உடம்பை வலிமையுடையதாக்கும். உழைக்கும்போது வரும் இடையூறுகள் மனத்துக்கு வலிமை சேர்க்கும். அதனால் இடறினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உழைப்பினைத் தொடர்ந்து செய்தலுக்குரிய உறுதி தோன்றும்.

உழைப்பாளிகள் இழப்புக்கள், துன்பங்கள் இவைகளைப் பற்றிக்கூடக் கலங்கமாட்டார்கள். "வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்?” என்பது அவர்களுடைய நெஞ்சுறுதியுடன் கூடிய பாங்கு. இத்தகு மனப் பாங்கினைப் பெற்றவர்களே உலகில் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.

சாதனை செய்தவர்களின் வரலாறுகள் உழைப்பின் அருமையை உணர்த்துகின்றன. "பெரிய மனிதர்கள் உச்ச நிலையை அடைந்தார்கள் என்றால், அவர்கள் திடீர் என்று தாவிக் குதிக்கவில்லை. மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் உழைத்து முன்னேறினார்கள்" என்று லாங்பெலோ கூறினார். நமது ஒளவையாரும்,

“மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்”

என்றார். குறிக்கோளிலேயே கவனம் செலுத்துபவர்கள் உயர்வு, தாழ்வு, மானம், அவமானம் பார்க்க மாட்டார்கள். எவர் தீமை செய்தாலும் அத்தீமையைக் கண்டு அஞ்சிப் பணியிலிருந்து - உழைப்பிலிருந்து விலகார். காரியம் முடியும் வரை தூங்க மாட்டார்கள். பசியைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நோக்கியே பயணம் செய்வார்கள்.

உழைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அறிவுழைப்பு. மற்றொன்று உடலுழைப்பு. இவ்விரண்டு உழைப்புக்களிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்பது கிடையாது. ஆனால் காலப்போக்கில் உடல் உழைப்பை இரண்டாம் நிலைக்குத் தள்ளியிருப்பதை இன்றைய சமூக அமைப்பு உணர்த்துகிறது.

அறிவுழைப்பாளிகள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். இது நெறிமுறையன்று. அறிவுழைப்பும் உடலுழைப்பும் இணைந்து செயல்பட்டால்தான் நாடு வளரும். இன்று உடலுழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதால் அரசுப் பணிமனைகளில் ஏவலர்களாகக் கூடப் பணி செய்ய முன் வருகின்றனர். ஆனால் தோட்டப் பண்ணை அமைக்க முன் வருவதில்லை.

வாழ்வையும் வேலையையும் மதிக்காமல் வெறுக்கிறார்கள். இவர்களுக்கு உறுதிப்பாடு இல்லை. அனுபவித்த வரை இன்பம் என்ற (ஹீடனிஸ்டிக்) அபிப்பிராயத்தில் நடலையாக வாழ்கின்றனர். இது மிகவும் ஆபத்தான தீமை.

இந்தத் திசையில் செல்லும் இளைய பாரதத்தை மடைமாற்றி இயற்கையான இயல்பூக்கம் நிறைந்த படைப்பாளிகளாக வாழும் நெறிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் எல்லாருமே அந்தத் திசையில்தான் செல்லவேண்டும்.

எல்லாம் வல்ல இறைவனே உழைப்புக்கு மதிப்புக் கொடுத்து, திருநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசு கொடுத்தான்! திருநாவுக்கரசர் செய்தது கைத் திருத்தொண்டு. பார்வாழத் திருவீதிப் பணி செய்தது - அதாவது தெருவைச் சுத்தம் செய்தது.

மதுரையில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல், வைகையாற்றங்கரையில் கொற்றாளாய்க் கூலிக்கு மண் சுமந்த வரலாறு, உழைப்பின் உயர்வை உணர்த்துவதாகும். இளைய பாரதமே எழு! விழித்தெழு! குறிக்கோளை அடையும் அளவும் நிற்காதே! உழைத்து வரலாறு படைப்பீர்களாக!

இன்றைய இளைஞர்கள் பலர் பத்தாவது படித்து விட்டாலே மண்வெட்டி தூக்க விரும்புவதில்லை. இது மிகவும் தவறு. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று வள்ளுவத்தை உணர்தல் வேண்டும். உடலுழைப்பு இகழப் படும் நாட்டில் தேக்கமும், அழிவும் உண்டாகி வளர்ச்சிப் பாதை கடினமாகி விடுகிறது. உழைப்பு இகழப்படும் சமுதாயத்தில் பண்டப் புழக்கம் குறையும்.

அதனால் வலுவான வாழ்வு இல்லை. கலை இல்லை; மகிழ்ச்சி இல்லை. உழைப்பு விரும்பிப் போற்றப்பட்டால் வாழ்வும் ஒளியும் வளர்ந்து உழைப்பே இன்சுவையாக மாறும் அளவற்ற மகிழ்ச்சியும் உழைப்பு வேள்வியும் நடை பெறும்.

ஆதலால், அறிவுழைப்பாளிகள் ஏழைகள் செய்யும் உடலுழைப்பைச் செய்ய முன்வர வேண்டும். உடல் உழைப்பாளிகள் அறிவாளிகளுடன், அறிவியல் மேதைகளுடன் கலந்து உறவாடித் தங்கள் உடலுழைப்பை அறிவியல் சார்ந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

அறிவுழைப்பாளிகளும் உடலுழைப்பாளிகளும் ஒன்று. சேர்ந்து உழைத்து உலகியலை நடத்தும் போதுதான் மனித குலம் ஒன்றுபடும்; அற்புதங்கள் நிகழும்.

நம்மிடத்தில், நம்முடைய சமுதாயத்தில், பல தீமைகளை அகற்ற உழைப்பு உதவி செய்யும். "சின்னச் சின்னக் கவலைகளால் அளிக்கப்படும் தொந்தரவு, குடித்தல், புகை பிடித்தல், காமாந்தகாரனாகத் திரிதல், வறுமையில் கிடந்து உழலுதல், அழுக்காறு வயப்பட்டுப் புழுங்குதல்;

“வறுமொழியாளருடன், வம்பப்பரத்தருடன் கூடித் திரிதல், கோள் சொல்லுதல், பயனில பேசுதல், சிறுசிறு கலகங்களைத் தூண்டி விடுதல் - செய்தல் முதலிய தீமைகள் உழைப்பால் விலகும்” என்பது வால்டேர் கருத்து. இன்றைய தீமைகளுக்கெல்லாம் அடிப்படை உழைப்பின்மையேயாம்.

மனித சமுதாயத்தின் பிணிகளையும், துயரங்களையும் போக்கக்கூடிய தனிச் சிறப்பான மருந்து உழைப்பேயாம். அந்த உழைப்பும் "உழைப்பு, உழைப்பு” என நேர்மையான உழைப்பாக இருக்க வேண்டும். உழைப்பதற்கு உரிய ஒவ்வொரு வினாடியும் விலை மதிப்புடையது.

அந்த நேரத்தில் அரட்டையடிப்பது, செய்தித்தாள்கள் படிப்பது, காரணமின்றி அங்குமிங்குமாகச் சுற்றுவது ஆகியன செய்யத் தகாதன. இந்த உலகத் தீமைகளுக்கு எல்லாம் மருந்து, கடின உழைப்பேயாம். இன்று "உழைப்பு நாள்கள்" பல. வீணாகின்றன. பொழுதெல்லாம் வீணாகின்றன.

முயற்சிக்கும் உழைப்புக்கும் சில தடைகள் வருவதும் உண்டு. முதலில் நிற்கும் பெரியதடை ஊழ். ஊழ் - விதி - வினை - தெய்வம் என்பன ஒரு பொருள் சொற்கள். நமது மக்களில் பலர் ஊழின்மீது அளவற்ற நம்பிக்கை வைத்து உழைக்காமலே வாழ்கின்றனர்.

உழைத்தாலும் ஊழின் துணை இல்லாது போனால் காரியம் கை கூடாது என்ற கருத்து நமக்கு இருக்கும்வரை ஊழை வெற்றி பெற இயலாது. "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளிலேயே ஆகும்” என்பது அவர்கள் கூறும் பழமொழி. ஆனால் இது உண்மையன்று.

ஒரு காரியம் நிறைவேற எவ்வளவு உழைப்புத் தேவைப்படும் என்று ஓர் அளவிருக்கும். அதையும் சூழ்நிலையையும் ஆராய்ந்தறிந்து கணக்கிட்டுக் கொண்டு முறையாக அறிவார்ந்த உழைப்பு செய்யப்பெறின், வெற்றி கிடைக்கும். ஊழ், தடையாக இருக்காது. ஊழினை மாற்றுவதற்கே பிறப்பு. ஊழினை வெற்றிபெறப் பழக்கங்களை, வழக்கங்களை, வெற்றிபெற வேண்டும். நாள்தோறும் புத்துயிர்ப்பு பெற வேண்டும்.

அடுத்து உழைப்புக்கு ஒரு பெரிய தடை கடவுள் நம்பிக்கை - கடவுள் வழிபாட்டின் அடிப்படையில் தோன்றிய தவறான நம்பிக்கை கடவுள் நம்பிக்கை தேவை கடவுள் வழிபாடும் தேவை. ஆயினும் கடவுளே எல்லாவற்றையும் தருவான் என்று விண்ணப்பித்தலில் என்ன பயன்?

கடவுள் பருப்பொருள் எதையும் தரமாட்டான். தன் நம்பிக்கை, சோர்விலா மனம், உழைப்புக்குரிய ஆற்றல், இவையே கடவுளால் ஆன்மாக்களுக்கு வழங்கப் பெறுபவை. ஆதலால், கடவுள் நம்பிக்கையோ, வழிபாடோ மட்டும் வெற்றியைத் தந்துவிடும் என்று வாளா இருத்தல் கூடாது. உழைப்பாளர்களின் முன்னேதான் கடவுள் வாய்ப்புக்களை அருளிச் செய்கிறான்.

ஆதலால் ஊழ், நல்ல நாள், கெட்ட நாள் என்ற எண்ணத்தில் உழைப்பை ஒத்திப்போடக் கூடாது. உழைப்பைத் தவிர்க்கக் கூடாது. கடின உழைப்பே கடவுள் பக்தியின் அடையாளம். உழைப்பின் பயனை, ஆக்கத்தை மற்றவர்க்கும் வழங்கி வாழ்விப்பது ஆக்கம். உழைப்பு நிறைந்த வாழ்க்கையே நோன்பு.

உழைக்கும் கால்களே தவம் செய்யும் தாள்கள் என்றது புறநானூறு உழைக்கும் எருதே நந்தி கடவுட்கொடியின் சின்னம். ஏறுதான் இறைவன் ஊர்தி, எருது உழைப்பின் சின்னம் “உழுத நோன்பகடு அழிதின்றாங்கு” என்பது புறநானூறு.

உழைப்புக்கு ஊக்கம் தேவை. ஊக்கமே உடைமை என்று கூறும் வள்ளுவம். "உள்ளம் உடைமை உடைமை” ஒருவன் செல்வந்தனாய் இருப்பதை விட உழைப்பாளியாக இருப்பது உயர்வு. செல்வம் அழியும். உழைப்புத் திறன் அழியாது. ஊக்கம் என்பது உள்ள எழுச்சி, பணிமேற் செல்வதற்குரிய பாங்கு, ஒளவைப் பாட்டியாரும் "ஊக்கமது கைவிடேல்" என்றார்.

உழைத்தால் முன்னேறலாம். இது பொதுவிதி. ஆனால் நம்முடைய நாட்டில், உழைத்தாலும் முன்னேற இயலவில்லை. ஏன்? பெரும்பாலோர் சொத்து இல்லாதவர்கள். சொத்துடமையாளரைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. பிழைப்புக்கு வழி கூலியுழைப்பே.

சுரண்டுகிற பொருளாதாரம் உள்ளவரையில் உழைப்பு பூரண ஆக்கத்தைத் தராது. செல்வம், செல்வமுடையோர் இடத்திலேயே சேருகிறது. ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்.

ஆனால் இது உழைப்பின் குறையன்று செல்வரிடம் சேரும் செல்வம் கூடப் பாட்டாளிகளின் உழைப்பின் விளைவே. பொருளாதார சுதந்திரமுடைய கூட்டுடமைச் சமுதாய அமைப்புத் தோன்றினால்தான், வளம்பெற முடியும். அதுவரையில் மனித உழைப்பு ஆதிக்க சக்திகளால் சுரண்டப் பெறுவது நடந்தே தீரும்.

ஆதலால், இன்றைய சூழ்நிலையில் கடுமையாக உழைப்பவர்கள் பூரண வாழ்வு வாழ இயலவில்லை. இது வினோதமான பைத்தியக்காரத்தனமான சமுதாய அமைப்பு. அரசாங்க இயந்திரத்தை, சந்தைகளை, ஆளுமை செய்யும் பொறுப்பும், அதிகாரமும் என்று உழைப்பாளிகள் கைக்கு வருகிறதோ அன்றுதான் உழைப்பாளிகள் சிறப்பாக வாழமுடியும்.

புவியை நடத்தும் அதிகாரம் உழைக்கும் மக்கள் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்த வையம் பொதுவில் நடத்தப் பெறும்.

உழைப்பின் அருமைப்பாட்டை உலகச் சிந்தனையாளர்கள் ஒரு குரலில் புகழ்கின்றனர். உன் கண் முன்னே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள மனித நாகரீகத்தைப் பார்! உன் முன்னே இருக்கும் மாடமாளிகை, கூட கோபுரங்களைப்பார். அவ்வளவும் ஆக்கம்! சென்ற காலத் தலைமுறையினுடைய படைப்பு!

இந்த மகத்தான சாதனையைப் பார்த்த புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பிரமித்து நிற்கிறான்! விண்ணில் உள்ள விண்மீன்கள் உழைப்பாளிகளின் உடலில் தோன்றியுள்ள கொப்புளங்கள், என்று பாடுகின்றான்.

"அறிவற்றவன் சிரத்தையுடன் கூடிய உழைப்பை இழந்தவன், கெடுப்பார் இல்லாமலே கெட்டுப்போகிறான்" என்றார் விவேகானந்தர்.

பல சமயங்களில் வேலை செய்வது கடினமாக இருக்கிறது. இது ஒரு மனோ நிலை. சோம்பலுக்கும் சுக வாழ்வுக்கும் அடிமைபட்ட மனோ நிலை. ஆனால் உண்மையில் நோக்கினால் எந்த ஒரு வேலையும் கடினமில்லை. "ஒரு முயற்சியில் உழைப்பில் வெற்றிபெற அவசரமும் காட்டக் கூடாது. அது போழ்து, பணி இடையில் இளைப்பாறுவதும் கூடாது. தொடர்நிலை உழைப்பே வெற்றியை தரும்” என்றான் கதே.

சிலர் அதிர்ஷ்டத்தை நம்பி உழைப்பில் சோர்கின்றனர். அல்லது உழைப்பைக் கை விடுகின்றனர். இது முற்றிலும் தவறு. அதிர்ஷ்டத்திற்கே உழைப்புத்தான் வாயில் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

நம்மைச் சூழ்ந்து வரும் கவலைகளிலிருந்து விடுதலை பெற, உழைப்பே சாதனம். கவலையற்றவராகவும், மகிழ்ச்சியுடையவராகவும், நல்லவராகவும் வாழ்வதற்கு உழைப்பே துணை; சாதனம்.

எழுக! விழித்தெழுக! கடின உழைப்பிற்கு ஆயத்த மாகுக! உழைப்பே வாழ்க்கையின் குறிக்கோள் எனத் தெளிக! நாளும் பயனுள்ள வகையில் உழைத்திடுவோம்! வாழ்க்கை பயனுறுதல் வேண்டும். உழைப்பு, படைப்புக்குப் பயன்படுதல் வேண்டும்.

இந்தியாவை நாடா வளத்ததாக உருவாக்கும் உழைப்பினை அனைவரும் மேற்கொள்வோம்! உழைப்பை உயர்வு செய்வோம்! உழைப்பாளிகளைப் போற்றுவோம்! உழைத்து வாழ்வதே வாழ்வு என்ற திசையில் செல்வோம்!

நாம் இப்போது செல்லும் பாதை - தடம் - உழைப்பின்றியே பணம் படைக்கும் முயற்சி! சுரண்டும் பொருளாதாரக் கொள்கைத் தடம்! இந்தத் திசை நலம் தராது! உழைப்பு - பூரண உழைப்பு என்ற தடத்தில் செல்வோம்! உழைப்போம்! உற்பத்தியைப் பெருக்குவோம்! உழைத்து வாழ்தல் பண்பாடு; நாகரீகம்!

4. வளர்ச்சி - மாற்றம்
(3-9-1994 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மனிதகுலத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்குரியது. மாற்றத்திற்குக் காரணம் வளர்ச்சி. வளர்ச்சிக்கு உந்துசக்தி - ஒன்று, காலத்தின் பரிணாம வளர்ச்சி. பிறிதொன்று மாற்றம். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண், எந்த ஒன்றும் தேங்கிவிட்டால் அழிந்து விடும், பயனற்றுப் போகும்.

நாள்தோறும் ஊற்றெடுக்கும் கிணறுகளின் தண்ணீரே பயன்படுகிறது. இடையீடில்லாது ஓடிக்கொண்டேயிருக்கிற ஆறே ஜீவநதி, மனிதகுலத்துக்குப் பயன்படுவது. புண்ணிய தீர்த்தங்களாகக்கூட இடையீடில்லாது ஓடிக் கொண்டேயிருக்கிற ஆறுகளே அங்கீகரிக்கப்படுகின்றன.

தேங்குவன எல்லாம் குட்டை குட்டையில் கிடக்கும் தண்ணிர் பயன்படாது. பயன்படாதது மட்டுமின்றி நோயும் தரும். ஆதலால், மனிதகுலம் வளர்ச்சியடைய வேண்டும். வளர்ச்சி, மாற்றத்தை உருவாக்கும்.

மனிதகுலம், மாற்றங்களை விரும்பினால் வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை அவாவுதல் வேண்டும். இந்த உலகம் எப்படி இருந்தது என்று எவரும் கூறலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணுகின்ற, சொல்லுகின்ற, அமைக்கின்ற திசையில் மக்கள் செல்லவேண்டும்.

அறிவு தேக்கமடைந்து போனால், உலக வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும். அறிவு வளரும் தன்மையது. நாள்தோறும் அறிவை வளர்த்துக் கொள்ளும் சமுதாயத்தில்தான் வளர்ச்சிக்கு வழி உண்டு; வாயில்கள் உண்டு. மாற்றங்களும் ஏற்படும்.

வளரும் சமுதாயத்தில் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவதே புதுமை. புதுமை செயற்கையன்று. இயல்பாக வாழ்க்கைப் போக்கில் - பரிணாம வளர்ச்சியில் தோன்றும் புதுமைகள். விவாதங்களைக் கடந்தவை. “முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்" என்றார் மாணிக்கவாசகர்.

பின்னைப் புதுமை, இனி எதிர்வரும் புதுமை. நம்முடைய சமுதாயத்தில் புதுமையை வரவேற்கும் இயல்பில்லாதவர்கள் பல ஆயிரம் பேர்கள் உண்டு. அவர்களையும் கடந்துதான் புதுமை வளர்ந்து வருகிறது; இனியும் வளரும். ஆனாலும் நாட்டில் வளர்ச்சியும் மாற்றங்களும் குறைவு.

நாம் நாளை வாழ்வோம் என்ற நம்பிக்கைகூடப் பெறாதவர்களால் நிலையாமைத் தத்துவம் பிழைபட உணர்த்தப்பட்டுள்ளது. உலகத்துக்கும் உனக்கும் உள்ள உறவு நிலையில்லாதது. ஆயினும், உலகமும் உன்னுடைய வழி வழி தலைமுறைகளும் வாழப்போவது உறுதி.

ஆதலால், நமக்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி, எதிர்கால நம்பிக்கை வேண்டும். வளர்ச்சியுடன் கூடிய மாறுதல் தேவை. சென்ற காலத்தைவிட எதிர்காலம் விழுமிய சிறப்புடையதாக இருக்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். "இனி எதிர்காலத்தின் சிறப்பும்" என்பார் சேக்கிழார். பாவேந்தன் பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான்.

ஆதலால், இப்போது நாம் சென்று கொண்டிருக்கிற - நிறைவான வளர்ச்சியும் மாற்றமும் இல்லாத திசையில் தொடர்ந்து செல்லக்கூடாது. புறத்தோற்றத்தில் மட்டுமே புதுமை காட்டும் போக்கும் அறவே கூடாது. மனிதனே மாற வேண்டும். மனிதகுலம் மாறவேண்டும். அன்றாடம், வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய திசையில் செல்ல வேண்டும்.

வளர்ச்சி-மாற்றம் என்றால் என்ன? மனிதனின் அறிவு வளரவேண்டும். வளர்ந்து வரும் உலகியலில், மானுடவியலில் எத்தனை எத்தனையோ அறைகூவல்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தாக்குப்பிடித்து நின்று போராடி முன்னேற வேண்டும்.

அறிவின் வளர்ச்சிக்குப் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். இலக்கியங்கள், புராணங்கள் மிகப் பழமை யானவைகளைக் கற்கவேண்டும். அப்படிக் கற்பது வாழ்நிலையின் அடித்தளத்தை வலுப்படுத்தும் . வேர்கள் மரத்தை வலுப்படுத்துவது போல!

அறிவியலில் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். அறிவியல், அனுபவம் வளர வளர வளரும் தன்மையுடையது. அறிவியல் முற்றாக உலகியலை, உடலியலைச் சார்ந்தது. இந்த அறிவியல் உலகந்தழிஇயது என்றுகூடக் கூறலாம்.

கலாச்சாரம், பண்பாடு முதலியன நாடுகள் தோறும் மாறும்! இவை தலைமுறை தலைமுறையாக வருவன. இப்படி வழி வழி கலாச்சாரம், பண்பாடு ஆகியன வளரும் புதிய சமுதாயத்திற்கு மாறுபடாது. சென்ற கால வரலாற்றில் மாறுபட்டதில்லை.

ஒரு பழமை, புதுமையை ஈன்றுதர மறுக்குமாயின் அந்தப் பழமையில் ஏதோ குறையிருப்பதாகத்தான் பொருள். ஒரே வழி பழமைவாதிகள் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ளப் புதிய சிந்தனையை, புதியவற்றை எதிர்ப்பார்கள்.

கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ், கலீலியோ, ஏசுபெருமான், அப்பரடிகள், வள்ளலார் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்றாகும். ஆனாலும் அவர்கள் கண்ட புதுமைதான் வென்றது.

அறிவு வளரும்போதே, ஆன்மாவும் ஒருங்கிணைந்து வளர வேண்டும். ஆன்மாரை வளர்த்துப் பேணிக்காக்கும் அறிவே, அறிவு. ஆன்மாவுக்குத் தொடர்பில்லாத அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்யாது; மாற்றங்களுக்கும் காரணமாக அமையாது.

சிந்தனையில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, அறிவியலில் வளர்ச்சி, வாழ் நிலையில் வளர்ச்சி, சமூகத்தில் வளர்ச்சி இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் நிகழுமாயின் மாற்றங்கள் ஏற்படும். வளர்ச்சியும் மாற்றங்களுமே மனிதகுல மேம்பாட்டுக்கு உந்துசக்திகள். மனிதன் பழக்கங்களுக்கும் வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.

நாளும் மனிதன், புத்துயிர்ப்புப் பெறவேண்டும்; புது மனிதனாகப் பிறப்பெடுக்க வேண்டும். மனிதன் உழுத சாலிலேயே உழுது கொண்டிருக்கும் வரை, நிலம் வளம் அடையாது.

அதுபோலவே படித்த சுலோகங்களையும் கோஷங் களையும் திரும்பத் திரும்பப் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி பாதிப் படைவதன் மூலம், மாற்றங்களும் ஏற்படாது.

அதனால், சாதி, சம்பிரதாய, மூடப் பழக்கங்களும் நிறைந்து வறுமையில் கிடந்துழலும் கூட்டமாக மக்கள் மாறுவர். இது நாட்டுக்கு ஏற்றதல்ல.

ஆதலால், ஒவ்வொரு நாளும் சென்ற காலத்திலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொண்டு, நாளையை நோக்கி நடைபோட வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல; பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதுவும் அல்ல. எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி, மாற்றம்!

இந்தியா பழமை வாய்ந்த ஒரு நாடு. இந்திய நாகரிகத்தின் தொடக்கம் சொல்லமுடியாத அளவுக்குப் பழமை உடையது. மிகத் தொன்மை வாய்ந்த காலத்திலேயே மொழி, இலக்கிய ஆக்கங்களைப் பெற்றுச் சிறந்து விளங்கிய நாடு.

குறிப்பாகத் தமிழ் நாகரிகத்தின் பழமை, சிந்துவெளி நாகரிகத்தில் தொடங்குகிறது. தமிழ் நாகரிகம் - மெள்ள வளர்ந்து வந்து, இந்திய வரலாற்றுக்குத் தனது பங்கைச் செலுத்திச் செழுமைப்படுத்தி உள்ளது. இலக்கியங்கள் தோன்றிப் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பர் மொழியியலார்.

இன்று தமிழில் உள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பது அறிஞர் கருத்து.

அப்படியானால், அக்காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கியங்கள் தோன்றித் தமிழரிடையில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; தமிழர் தம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், தமிழர் வாழ்வு உண்மையான வளர்ச்சியை அடைந்ததா? மாற்றங்களைப் பெற்றதா? என்றால், இல்லை.

ஏன்? முதல் தடை பழமையின் மீது பாசம். இரண்டாவது தடை, படையெடுத்து வந்த அயல் வழக்குகளை ஆய்வு செய்யாமல் அப்படியே ஏற்பது. குறிப்பாகச் சொல்லப் போனால், இன்று தமிழர்கள் சாமர்த்தியசாலிகளாக விளங்குகின்றனர்.

சாமர்த்தியம் என்ற சொல், தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் பெருவழக்காக வழங்குகின்றது. சாமர்த்தியம் என்ற சொல்லுக்கு நேரிடையான தமிழ்ச் சொல் இல்லை. சாமர்த்தியம் என்பது வேறு; திறமை என்பது வேறு. திறமை, நல்ல காரியங்களுக்குப் பயன்படுவது.

தமிழ் மொழிக்கும், பழங்காலத் தமிழர்களுக்கும் சாமர்த்தியம் இருந்ததில்லை. ஆனால், இன்றைய தமிழர்களுக்குச் சாமர்த்தியம் கை வந்த கலையாக இருக்கிறது. இன்று தமிழரில் பலர் சாமர்த்தியத்திலேயே வாழ வாழ்ந்து முடிக்க விரும்புகின்றனர்.

இன்று யாரும் சாதனைகளைப் பற்றி, மனித உறவுகளைப் பற்றி, சமூக மேம்பாடுகளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இன்று நம்மிடையில் சாமர்த்தியசாலிகள் பலர் உண்டு. திறமைசாலிகள் மிகவும் குறைவு.

சாதனைகள் செய்வதன் மூலம் புவியை நடத்துகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. குறைபாடுகளைக்களையும் நோக்கத்தைவிட குறைபாடுகளை நியாயப்படுத்தும் வகையில் சமாதானம் கூறிவிட்டு நழுவிவிடுபவர்களே இன்று மிகுதி.

இன்று எங்கும் கேட்கும் முழக்கொலி "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!", "ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” என்பவை. ஆனால் உண்மையில் நடப்பதோ, நாளும் சாதிச் சங்கங்களும் அவ்வழி கலகங்களும் தோன்றி வளர்ந்து வருகின்றன.

மத நிறுவனங்கள் அனுட்டானத்தைவிட, பிரச்சாரப் புயலில் சிக்கித் தவிக்கின்றன. நாடோ, ஊரோ, வீடோ இன்று ஒன்றாக - ஓருருவாகவில்லை. கிராமத்தின் எல்லையில் நம்மை வரவேற்பது பசுமையும், இலைகளும், பூக்களும் நிறைந்த மரங்கள் அல்ல. கட்சிக் கொடிகளே வரவேற்கின்றன.

உள் அமைப்பு ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் உத்தியாகக் கொள்ளாது தேக்கமடைந்ததால் ஏற்பட்ட கோப தாபங்களால் பிரசவிக்கப் பெற்றவைகளே இன்றுள்ள பெரும்பான்மையான கட்சிகள்.

மதவாதிகள் மட்டமா என்ன? தெருவுக்கு ஒரு கோயில்! சாதிக்கு ஒரு சாமி! இவை எல்லாமாக ஒன்று சேர்ந்து வாழ்க்கையில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; வளர்ச்சிக்குக் குந்தகம் செய்கின்றன; மாற்றங்களுக்குத் தடையாக உள்ளன.

அருமைப் பெரியோர்களே! இளைய பாரதத்தினரே! இந்தப் பாதையில்தான் நாம் தொடர்ந்து, செல்ல வேண்டுமா? வேண்டாம்! வேண்டாம்! வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய பாதையில் செல்ல அடியெடுத்து வைப்போம்! நடப்போம்! தொடர்ந்து நடப்போம்!

மனிதன் மாறாவிட்டால் இந்த உலகில் வளர்ச்சி இல்லை. மாற்றங்களும் நிகழா. பல நாடுகளில் இன்னமும் வளர்ச்சியடையாத மாந்தர்கள் உள்ளனர். அதற்குக் காரணம் மனிதர்களின் மாற்றத்திற்குரிய பணிகளில் ஈடுபடும் அறிஞர்கள் தோன்றவில்லை.

ஒருவகையில் இந்தியா புண்ணியம் செய்த பூமி! இங்கு,சிந்தனையாளர்கள் பலர் தோன்றித் திரும்பத் திரும்ப மக்களிடம் மாற்றத்தை உண்டாக்க அரும்பாடுபட்டனர்.

கபீர்தாசரிலிருந்து கவிஞர் கண்ணதாசன் வரையில், பசவேசர் முதல் பாரதிவரை, குருநானக் முதல் குணங்குடி மஸ்தான் வரை, கணியன் பூங்குன்றன் முதல் தாகூர்வரை, அப்பரடிகள் முதல் அரதத்த சிவாச்சாரியார் வரை, வேமண்ணா முதல் வள்ளலார் வரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆயினும், இவர்களுடைய முயற்சியில் தேக்கம் சற்று அகன்றதே தவிர, மாற்றங்கள் முழுமையாக ஏற்படவில்லை. அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் சமூக மாற்றத்திற்குக் கடுமையாக உழைத்தார்கள். தீண்டாமையை அகற்றவும் சமயங்களிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அண்ணல் காந்தியடிகள் தீவிரமாக முயன்றார்.

ஆயினும் சமய அடிப்படையில், இவற்றுக்கு எதிராகத் தூண்டப்படும் செயல்களைத் தவிர்க்க இயலவில்லை. அதுமட்டுமா? அண்ணல் காந்தியடிகளின் உயிரையே மதவெறி குடித்துவிட்டது. அண்ணல் காந்தியடிகள் காட்டிய திசையில் பாரதம் செல்ல மறுத்துவிட்டது. மறுத்ததோடன்றி அதற்கு எதிர்த் திசையில் சென்றது; சென்று கொண்டிருக்கிறது.

இன்று எங்குப் பார்த்தாலும் சாதிப் பிணக்குகள், மதச் சண்டைகள் நடைபெறுகின்றன. இதனால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கிறது. மாற்றங்கள் நிகழவில்லை! இன்றும் பலர் பழைய யுகத்திலேயே வாழ்கின்றனர். புதுயுகக் காற்றைச் சுவாசிக்க மறுக்கின்றனர்.

ஒரு காலத்தில் அரசியற் கட்சிகள் சாதி, மதங்களைச் சார்ந்து இருப்பதை விரும்பவில்லை, மறுத்தன. இன்று அரசியற் கட்சிகள் வெளிப்படையாகவே சாதிகளை, மதங்களை, அவற்றிற்கிடையே மோதல்கள் ஏற்படுவதை விரும்பி வரவேற்கின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சாதியை, மதத்தை அரசியல் காரணமாகப் பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். கலாச்சாரம் என்ற போர்வையில் சாதி, மத வெறுப்புணர்வுகள் தலையெடுத்தாலும் தடைசெய்ய வேண்டும். அனுமதிக்கக் கூடாது.

மனிதனின் சிந்தனைக்கு விலங்கு போடாமல் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்பட அனுமதித்தால் வளர்ச்சி தோன்றும்; மாறுதல்களும் ஏற்படும். மனிதன், பயத்திலிருந்து விடுதலை பெற்று, பகுத்தறிவுத் தடத்தில் என்று செல்லத் தலைப்படுகின்றானோ, அன்றே வளர்ச்சிக்குரிய வாயில் தோன்றும்; தென்படும்.

இருட்டறையிலிருந்து என்று வெளியுலகுக்கு மனிதன் வருகின்றானோ அன்றுதான் மனிதன் உண்மையிலேயே மாறுவான். வளர்ச்சியும் நிகழும்; மாற்றங்களும் ஏற்படும்.

மனிதன், வரலாற்றை உந்திச் செலுத்தும் ஆற்றல் வாய்ந்தவன், மனிதனே வரலாற்றின் உயிர்ப்பு. அவனுடைய மாற்றமே வரலாறு; இயக்கம்! மனிதன் இரண்டு எஜமான்களுக்குச் சேவை செய்ய இயலாது. சுயநலம் தவிர, மற்றொன்று அறியாத மனிதன், நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய இயலாது.

அதனால் வளர்ச்சியும் ஏற்படாது. மாற்றங்களும், வாழ்வதற்குரிய வாய்ப்புக்களும் அருகிப்போகும். நாம் மாறுவோம்! மனித குலத்தை மாற்றுவோம். வளர்ச்சிக்குரிய திசையில் செல்வோம்! மாற்றங்கள் உருவாகும்.

ஏ, என் அருமைத் திருநாடே! எழுந்திரு! விழித்துக் கொள்! வரலாற்றைப் புரட்டி வளர்ச்சியடைய காணும் திசையில் ஊக்கத்துடன் செயல்படுவாயாக! இதுவே நாம் செல்லவேண்டிய திசை! தடம்!

மனிதனுடைய வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் துணையாக இருக்கவேண்டிய சமூகம் இன்று, மனிதனுக்கு விரோத மாகச் செயல்படுகிறது. ஆதலால், சமூக மாறுதல் ஏற்பட்டாலொழிய வளர்ச்சி ஏற்படாது; மாற்றங்களும் நிகழா.

சமூக மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படப் பொது மக்களின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் தேவை. எந்த ஒரு மாற்றமும் தங்களுடைய முன்னேற்றத்திற்குப் பயன்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மனத்தில் உருவாக்கிவிட்டால் வளர்ச்சி இயல்பாக நடக்கும், மாற்றங்கள் நிகழும்.

வளர்ச்சியும் மாற்றமும் மக்கள் மத்தியில் தோன்றி இடம்பெற வேண்டுமாயின் இலாபத்தையும் உடைமையையும் சேர்க்கும் பழைய சமூகத்தின் நடைமுறை, மதிப்பீடுகள் இவைகளுக்குப் பதிலாகப் புதிய மதிப்பீடுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

எவ்வளவு முயன்றாலும் பூரண மாறுதல் ஏற்பட, கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். இங்ங்ன்ம் சொல்லுவ தால் மாறுதல் மிக மிக மெதுவாக நடக்க வேண்டும் என்று சொல்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது. மாறுதல் மெதுவாகவும் இருக்கக் கூடாது. சிறுகச் சிறுக ஏற்படும் மாறுதல்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடம் கொடுக்காது.

ஆதலால், சமூக மாற்றங்களை விரைந்து செய்து முடிப்பதே நல்லது. ஆனால், பழமையில் ஊறிய சமூகம் முழு மூச்சுடன் மாற்றங்கள் எந்த உருவில் வந்தாலும் எதிர்க்கும். சில சமூகங்கள், அறியாமையின் காரணமாகவும் ஏழ்மையின் காரணமாகவும் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளத் திறனற்றுப் போய்விட்டன.

இந்த மாதிரிச் சூழ்நிலைகளில் புதிய புதிய உத்திகளையும் திறன்களையும் மக்களிடையில் அறிமுகப்படுத்தி விழித்தெழச் செய்யவேண்டும். இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் வளர்ச்சி நிகழும், மாற்றமும் ஏற்படும்.

இங்ஙனம் சமுதாயத்தில் மாற்றங்களைச் செய்யும் பொழுது, இருக்கிற ஒன்றை - ஒரு தீமையை அகற்றினால் போதாது. அந்த இடத்தில் ஒரு நல்லதை வைக்கத் தவறிவிடக் கூடாது. தீமையை விலக்குவதற்குள்ள ஒரே வழி, நல்லதைக் காட்டுவதேயாம்.

இங்ஙனம் மாற்று வழி காட்டத் தவறிவிட்டால் மக்கள் மீண்டும் பழைய தடத்திலேயே செல்வர். சமூக மாற்றம் எளிதில் நிகழ முடியும். ஆனால், ப்ழைய சமூக அமைப்பில் ஓர் அந்தஸ்தைப் பெற்றவர்கள் - அனுபவித்தவர்கள் எதிர்ப்பார்கள். தொடக்கத்தில் அது கடுமையான எதிர்ப்பாகத் தோன்றினாலும் காலப்போக்கில் சமுதாய மாற்ற முயற்சிகள் வெற்றி பெறும்.

போதும், போதும் தேக்கம்! வேண்டாம், வேண்டாம் வளர்ச்சியே இல்லாத சமூக அமைப்பு! வளர்ச்சியும் மாற்றங்களும் நிகழக்கூடிய திசையில் நடப்போம்!

நாம், அடிக்கடி பின்னோக்கிப் போகின்றோம். வழி வழியாக நமக்குக் கிடைத்துள்ள கருத்துக்கள் கூட, நம்மைப் பின்னுக்கு இழுக்கின்றன. விஞ்ஞானம், தொழில் துட்பம் இல்லாமல் எப்படி வளர்ச்சியைக் காண முடியும்? மாற்றங் களைச் செய்ய முடியும்!

அதேபோழ்து கடந்தகாலப் பண்பாட்டினை மறந்தும்,முன்னேற்றமடைய முடியாது. அப்படியே முடிந்தாலும் அந்த முன்னேற்றம் பயனுள்ளதாக அமையாது.

மனிதகுலத்தின் வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்தது. இது தவிர்க்க முடியாதது. அணுவைப் பிளக்கும் இந்த யுகத்தில் நம்முன் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை நேற்றைய சம்பிரதாயங்களின் வழி தீர்வுகாண இயலாது. மதவிவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள், பிரச்சாரப் போரின்றி, சந்தடியின்றி முடிவுக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

எத்துறையேனும் சரி, அத்துறை, பிரசாரப் போரைத் தொடங்கிவிட்டால் பயமும் குரோதமும் வளரும். அதனால், மனிதகுலத்தின் வளர்ச்சியும், வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பும் கிடைப்பதற்குப் பதிலாக, அபாயங்களும் விபத்துக்களுமே அதிகரிக்கிறது.

ஆதலால், பழமைவாதம், பிரச்சாரப்போர் ஒருபோதும் வளர்ச்சிக்குத் துணை செய்யாது, என்பதை உணர்தல் வேண்டும். மனிதகுலத்தில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணத் திட்டமான இலக்குகள் வேண்டும். அந்தத் திட்ட இலக்குகளை அடைவதற்குரிய அறிவறிந்த ஆளுமையும் வேண்டும்.

மக்கட் சமுதாயத்தில் வர்க்கப் போராட்டங்கள் நிலவுகின்றன. வர்க்கப் போராட்டங்கள் மூலம்தான் வளர்ச்சியைக் காணமுடியும்; வளர்ச்சியை உறுதிப்படுத்தி உத்தரவாதம் தரமுடியும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் பெரு முயற்சி எடுத்துக் கொண்டால் வர்க்கப் போராட்டம் இல்லாமலே கூட அமைதி வழியில் வளர்ச்சியைக் காண முடியும்.

தமிழக வரலாற்றில் நடைபெறும் ஒரு பெரிய விவாதம் மரபு-புதுமை என்பது. மரபு, புதுமைகளுக்கிடையே மோதல் இயல்பாக நிகழாது, நிகழவும் கூடாது. இன்றைய புதுமை, வளர்ச்சிக்குரிய வித்துக்கள் உள்ளடங்கியதாக இருப்பின் சமூகத்தால் அங்கீகரிக்கப் பெற்று மரபாக ஏற்றுக்கொள்ளப்பெறும்.

மரபு, புதுமைக்குத் தாய்! புதிய செடி பழைய வித்திலிருந்தே உணவை எடுத்துக் கொண்டு வளர்கிறது. அது போலப் புதுமைகள் பழைய மரபுகளிலிருந்தே ஊட்டத்தைப் பெற்றுப் புதுமைகளாகிப் பின் மரபுகளாகி வரலாற்றுக்கு அணி செய்கின்றன.

மரபை மறுத்து வரும் புதுமை, எளிதில் மக்கள் சமுதாயத்தில் கால் கொள்வதில்லை. மார்க்சியம் பழமையைக் கண்மூடித்தனமாக மறுப்பதில்லை. ஆயினும், மாமுனிவர் கார்ல்மார்க்ஸ் கண்ட புதுமைச் சமுதாயம் மக்களிடத்தில் பூரணமாகக் கால்கொள்வதற்குரிய காலம் இன்னமும் கனியவில்லை.

ஆதலால், பழமையில் புதுமைக்கும், வளர்ச்சிக்கும். மாற்றங்களுக்கும் ஆக்கம் தரும் பகுதிகள் உண்டு என்பதை உணர்ந்து, அவற்றை எடுத்துக் கொண்டு சமுதாயத்தை நடத்துவது எளிதில் வளர்ச்சியை அடைவதற்குரிய வழி.

ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில், துறை தோறும் வளர்ச்சி ஏற்படவேண்டும். சமுதாயம், பொருளா தாரம், கல்வி, கலை முதலியன அனைத்துத் துறைகளிலும் காலத்தின் தேவைக்கேற்ப, மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சி அடையவேண்டும்.

சமுதாயத்தில் ஏற்படும் மாற்றமும் வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாத வளர்ச்சியினால் என்ன பயன்? இன்று நம் நாடு வளர்ந்துள்ளது. நமது நாட்டு சராசரி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே!

வாழ்க்கைத்தரம் உயரும்வரை வளர்ச்சிக்குரிய முயற்சிகள் இடையீடின்றி நடக்கவேண்டும். மக்கள். நலவளர்ச்சிப் பணிகளில் பழையப்போக்கில் உள்ளவர்களும், புத்தறிவு பெற்றவர்களும் ஒருமை எண்ணத்துடன் ஈடுபடுவார்கள் ஆயின் வெற்றி எளிது.

இன்று நாம் சென்று கொண்டிருக்கும் பாதையில் வளர்ச்சியின் வேகம் போதாது. மாற்றங்கள் அறவே ஏற்பட வில்லை. நாம் வாழும் காலம், பேராற்றல் வாய்ந்தது. கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கின்றோம். காலத்தின் பேராற்றலை முறையாகப் பயன்படுத்தினால் வளர்ச்சி உறுதியாக வாய்க்கும். காலவேகத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சிப்பணிகள் நிகழவேண்டும்.

சமுதாயம் தனது வேலைசெய்யும் பாங்கையும் விரைவுபடுத்திக் கொள்ள வேண்டும். கால வேகத்திற்கு ஏற்ப, சமுதாயம் தனது வேகத்தைக் கூட்டிக்கொள்ளத் தவறினால் சமுதாயம் பின்தங்கிவிடும். ஆதலால், விவேகத்துடன் வேகமாக நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்வோமாக!

நாம் கடுமையான விதிமுறைகளையும், கடின உழைப்பையும் மேற்கொள்ளாவிட்டால் 2001லும் இப்படித் தான் இருப்போம்! தலையின்மீது வறுமைக் கோடு! கடன்சுமை! நியாயவிலைக் கடைகளின் முன் நீண்ட வரிசை! இந்த அவலம் நமக்கு வேண்டுமா? வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

அறியாமையை அகற்றி, வறுமையை அறவே அகற்றி, உரியவளர்ச்சிப் பணிகளுக்கு முதலிடம் தருவோம்! நமது முன்னேற்றத்திற்கு வளர்ச்சியும் மாற்றமும் தேவை. நமது பழக்கங்களில் அணுகுமுறையில், வேலைசெய்யும் பாங்கில் மாற்றங்கள் ஏற்பட்டால்தான் வளர்ச்சி நிகழும்: வாழ்வு சிறக்கும்; பழைய பைத்தியம் படீர் என்று தெளிய வேண்டும்.

புதிய இந்தியாவை, வளம் நிறைந்த இந்தியாவை உருவாக்க உறுதிகொள்வோம். இன்றுள்ள தேக்கமும் பின்னடைவும் நீங்கி வள்ர்ச்சியும் முன்னேற்றமும்

கு.XVI.23. உறுதிப்படுத்தப் பெறும், புதியவழியில் செல்வோம்! மாற்றமும் வளர்ச்சியும் காண்போம்!

5. பொருளாதாரச் சிந்தனைகள்
(10-9-1994 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

இந்த வாரச் சிந்தனை-பொருளாதாரத்தில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது. நாம் போகும் திசை சரியானது தானா? அல்லது எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோமா? ஏனெனில் மானுட வாழ்க்கையின் அடிப்படையே பொருள்தான். வாழ்க்கைக்கு ஆதாரம் பொருள் அதனால்தான் பொருளாதாரம் என்று பெயர் வைத்தார்கள் போலும்.

மானுடத்தின் உடல் சார்ந்த வாழ்க்கைக்கு இன்றியமையாத் தேவை பொருள். பொருள் என்னும் சொல் விரிவான பொருளாக்கம் தரும் சொல்லாகும். உணவு, உடை, இருக்க இடம் முதலியன எல்லோருக்கும் வேண்டிய அடிப்படைத் தேவைகள். இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய நிலையில், மேலும் தேவைகள் வளரும்.

தேவைகளை உழைப்பின் மூலம் அடைவது முதல் நிலை. ஆரம்பநிலை. காலப்போக்கில், சொத்து உருவாக்கும் ஆர்வத்தால், சொத்து, நிலம் முதலியன சேர்த்து, நிலப்பிரபுக் களாகி, பின் மெள்ள மெள்ள சுரண்டும் பொருளாதார நடை முறைக்கு வந்துவிட்டான் மனிதன். இது வளரும் சமூகத்திற்கு நலம் பயக்காது.

ஒரு சமூகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்ற வேலைகள் நடைபெறவேண்டும். இது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல அப்போதுதான் முழுமையான வளர்ச்சியைக் காணமுடியும். மானுட சமுதாயம் பொருளாதாரம் கல்வி, கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பெறுதல் வேண்டும்.

இவையனைத்தும் - அதாவது, கல்வி, பொருளாதாரம், கலை ஆகியன ஒன்றையொன்று தழுவியன. ஒன்றின்றிப் பிறிதொன்று முறையாக வளராது; பூரண வளர்ச்சியும் நடைபெறாது. பொருளாதாரம் என்பதன் முழுப் பொருள் பணமுடையராதல் அல்ல சொத்துடையராதல் அல்ல; வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதாகும்; பொருளுக்காக வாழ்க்கையல்ல; வாழ்க்கைக்காகவே பொருள்.

பொருளாதாரம் உயர்ந்து வாழ்க்கைத்தரமும் உயர்ந்து விளங்கினால்தான் பாதுகாப்புக் கிடைக்கும்; சமாதானமும் அமைதியும் கிடைக்கும். உலகத்தில் பலகோடி மக்கள் வறுமையில் கிடந்து உழலும்வரை சமாதானமும், அமைதியும் பகற்கனவே.

மக்கட் சமுதாயத்தில் நிலவும் சமநிலையற்ற பொருளாதார அமைவை முதலில் சமநிலைப் படுத்த வேண்டும். இதுவே பொருளாதாரம். இந்திய சமூகப் பொருளாதாரத்தில் அசமப் பொருளாதார நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. வறுமைக்கோடு விழுந்துவிட்டது

நம்முடைய இந்திய சமுதாயத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் பொருளாதார அசமநிலை இருள் நிறைந்தது. இந்த அசமநிலையை மாற்றத் தொலைத்தூரம் சென்றிடல் வேண்டும். அத் தொலைதூரத்திற்குச் செல்ல முயற்சி செய்வோம்!

நமது ஏழ்மை நிலைக்குக் கிரகங்கள் காரணம் அல்ல. நாம் தான் காரணம். வறுமையையும், ஏழ்மையையும் தொடர்ந்து போராடி அகற்றாத நாம்தான் குற்றவாளிகள். திருந்துவோம்! திருத்தமுறத் திட்டமிடுவோம்! திட்டமிட்ட திசையில் செல்வோம்!

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண திறனுடைய முயற்சிகள் தேவை. இன்று இத்தகைய அருந்திறன் பெரும் பாலரிடம் இல்லை. வறுமொழியாளரும் வம்பப் பரத்தரும், விவாதங்களிலேயே காலத்தைக் கழிப்போரும் நிறைந்து விட்டனர். இன்று இந்தியாவின் 85 கோடி மக்களும் சாப்பிடுகின்றனர். ஆனால் உருப்படியான வளர்ச்சி பொருந்திய பொருளாதாரத்திற்கு உழைப்போர் எத்தனை பேர்?

பழங்காலத்தில் திண்ணைகள் இருந்தன. திண்ணைப் பேச்சு இருந்தது. இன்று திண்ணைகள் இல்லை. ஆதலால், இன்று முச்சந்திப் பேச்சு, கடைப் பேச்சு என்று உழைக்கும் காலமும், மனித ஆற்றலும் விரையமாகிறது. நுகர்வோர் எண்ணிக்கைக் கூடிவிட்டது. ஆனால் நுகர்வோருக்குத் தேவையான பொருள்கள் உற்பத்தி செய்யப்பெறவில்லை. ஒருபுறம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

நவீன மருத்துவ வசதிகள் முதலியன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதனால் பல நோய்கள் நமது நாட்டை விட்டே விடைபெற்றுப் போய்விட்டன. நோய் வெளியேறிய போதிலும், பசி என்ற நோய். வெளியேறவில்லை. பலர் உயிரோடிருந்தும், பசியினால் வாடுவதில் என்ன பயன்?

போதிய, தேவையான சத்துணவு கிடைக்காமையால் உடல் நலம் குன்றி, சமுதாயத்திற்கு எந்தவிதப் பயனும் இன்றி. வாழ்வோர் எண்ணிக்கை வளர்வது பொருளாதாரத்தைச் சீர்குலையச் செய்யும். கிராமப்புறங்களில் இன்று ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்து கூலி பெற்றால் கூடச் சீராக வாழ முடியாத நிலை.

கூலியாகப் பெறும் தொகை கூடுதலாக இருக்கலாம். ஆனால் வாங்கும் சக்தியில்லை. நமக்கு உண்மையான சம்பளம் வாங்குவதிலும் பெறுவதிலும் அக்கறை வேண்டும். உண்மையான சம்பளம் என்றால் அது பணத்தின் அளவு. அன்று; வாங்கும் சக்தியேயாகும். இதுவே இன்றைய நமது பொருளாதாரம் செல்லும் திசை

இன்றைய இந்தியனின், குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 64 டாலர். அதாவது ஆண்டுக்கு சுமார் 1920 ரூபாய். மாதம் 160 ரூபாய் சம்பாதிக்கிறான். இந்த சம்பாத்தியத்தையும் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது பொருளாதாரத்தின் சமச்சீரற்ற நிலை விளங்கும்.

பொருளாதாரத்தில் வளராத நாடுகளில், வளம் . வறுமை இவை இரண்டிற்கும் உள்ள இடைவெளி மிகவும் கூடுதல். இந்த இடைவெளியைத் தொழிற் புரட்சி செய்வதன் மூலமும், வழங்கப்பெறும் கூலியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதன் மூலமும்தான் குறைக்க இயலும்.

நமது குடியரசுத் தலைவர் "நம் நாடு இன்னும் பொருளாதார விடுதலை பெறவில்லை. அந்தப் பொருளாதார விடுதலையை என்று பெறுகின்றதோ அன்றுதான் இந்தியா பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்கும்” என்று கூறியுள்ளார்.

ஆம்! அரசியல் சுதந்திரம் வந்ததில் பயன் என்ன? மக்கள் நலம்பெற்று வாழத்தானே சுதந்திரம்? தேர்தலில் ஆளுக்கு ஒரு வாக்குச் சீட்டு என்பது சுதந்திரமாகுமா? கோடீசுவரனின் வாக்குச் சீட்டு சுதந்திரமாகப் பயன்படுத்தப் பெறும், கோடீசுவரனின் வாக்குச் சீட்டு விலை போகாது.

ஆதலால் ஆளுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்பது சுதந்திரம் அல்ல. குடிசையில் வாழும் குப்பனும் தனது வாக்கை என்று பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்துகின்றானோ அன்றுதான் சுதந்திரம் வந்ததாகப் பொருள். இன்று இந்தியாவைப் பற்றியுள்ள வறுமை, ஏழ்மை, சொல்லும் தரத்ததன்று. ஆனாலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

நமது நாட்டில் வறுமை, நகர்ப்புறங்களிலும் உண்டு. ஆயினும் கிராமப்புற வறுமை மிக மிகக் கொடியது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று - கிராமப்புற வறுமையை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நகர்ப்புற வறுமையாளர்கள் போராடும் இயல்பினர்.

கிராமப்புற மக்கள், வறுமையை இயற்கை என்று கருதி, அந்த வறுமையுடனேயே வாழ்வதில் பழகிப் போய் விட்டனர். ஆதலால் கிராமப்புற வறுமையாளர்களிடையில் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற பழமொழிக்கு நல்ல செல்வாக்கு உண்டு.

இந்த மனப்போக்கு, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்யாது. வறுமை என்பது வசதிகள் அற்ற வாழ்க்கை. ஏழ்மை என்பது உணவுக்குப் போராடும் நிலை. நமது நாட்டில் பலர் வறுமையில் வாழ்கின்றனர். ஏராளமான கிராமப்புற மக்கள் ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர்.

இதில் வருத்தம் என்னவெனில், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாகிய நுகர் பொருட்கள் உணவுப் பொருள்களை கிராம மக்களே உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவர்கள் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக ஏற்படும் விலை வீழ்ச்சியினாலும், பணத் தேவையினாலும் ஏழ்மைக்கு ஆளாகிறார்கள். நெல்லை உற்பத்தி செய்பவன் நியாய விலைக் கடைகள் முன், நீண்ட நெடிய வரிசையில் நிற்கிறான் அரிசி வாங்க! -

ஆம்! நமது நாட்டில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், விவசாயம் செய்யப் பெறாமல் தரிசாகக் கிடக்கிறது. தேசத்தின் செல்வ வளர்ச்சிக்குரிய ஆதாரங்களை, உற்பத்திச் சாதனங்களை, முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியைச் செய்து, தேசத்தின் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.

இன்று சில கடுமையான முயற்சிகளை, வழிமுறைகளை, மேற்கொள்ளாவிட்டால் 2001லும் நமது நிலை இப்படியே தான் இருக்கும். நமது அடுத்த தலைமுறைக்கும், நஞ்சினும் கொடிய வறுமையை, ஏழ்மையை வழிவழியாக விட்டுச் செல்லும் பாவத்தைச் செய்தவர்களாவோம்.

இன்னும் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் சரி, சமூக வாழ்க்கையிலும் சரி, அரசும் சரி, "ஏழ்மை பிரதேசமே இல்லை" என்று அறிவிக்கக்கூடிய அளவுக்கு, எல்லாப் பணிகளையும்விட வறுமை ஒழிப்புப் பணியை இதுவே முதற்பணி என்று கருதிச் செயல்பட வேண்டும்.

பொருளாதாரத்திற்குப் பல தடைகள் உண்டு. அவற்றில் தலையாயது பழைய நம்பிக்கைகள் - அதாவது ஊழ், விதி முதலியவற்றை நம்பி, பொருளாதார முயற்சி களைக் கைவிடுவது அல்லது சோர்ந்து போதல், மேலும் கடவுள், ஊழ் என்று வாளா இருப்பது.

கடவுள் உயர் ஆற்றல், உயர் பண்பே தவிர, கடவுள் பணம், செல்வம், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் லேவாதேவிக்காரரும் அல்ல-இரவலர்களை ஊக்குவிக்கும் வள்ளலும் அல்ல. போதிய முதலீடு வேண்டும்.

அடுத்து சிறந்த அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும். நமது நாட்டில் அறிவியல் மேதைகள் நிறைய உண்டு. அறிவியல் தொழில் நுட்பங்களும் உண்டு. முதலீட்டுக்குப் பஞ்சமே இல்லை. நிறைய முதலீடு செய் வதற்குரிய பணம் இருக்கிறது. ஆனால் பொருளாக்கத்திற்குத் துணை செய்யும் வழியில் முதலீடு செய்ய முன் வருவதில்லை.

மனித ஆற்றல் நம்மிடத்தில் நிறைய உண்டு என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆயினும் பொருளாதார வளர்ச்சி மனநிறைவு தரத்தக்க வகையில் இல்லை. நல்ல நிர்வாகமும், கடின உழைப்பும் தேவை.

அடுத்து ஒரு தொழிலில் லாபம் என்றால், ஆட்டு மந்தைகளைப் போல அந்தத் தொழிலிலே பலரும் முயன்று, அந்தத் தொழிலில் உற்பத்தியைப் பெருக்கி, விலையை இறங்கச் செய்து, ஆரோக்கியமில்லாத போட்டியால் தேசத்தின் பொருளாதரத்தை அழிக்கின்றனர். தாமும் கைம்முதல் இழந்து அல்லற்படுகின்றனர். பொருளாதார ஆக்க முயற்சிகளில் புதிய புதிய யுக்திகள் தேவை; வழிமுறைகள் தேவை. இதைத்தான் திருவள்ளுவரும்,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

என்று கூறுகின்றார். இயற்றல் என்பது பொருள் உற்பத்திக் குரிய புதிய புதிய வாயில்களைக் காணல், பொருள் தேடும் முயற்சிகளில் புதியன காண்போர் தோன்றாததற்குக் காரணம்-அல்லது அதில் கருத்து நாடாமைக்குக் காரணம் -அதில் வருவாய் வருமா என்ற ஐயம்! சோதனைகளை ஏற்கத் தயக்கம்!

ஒருவகைப் பொருள் முயற்சி வெற்றி பெற்றது நிரூபிக்கப்பட்டு விட்டால், அந்தத் தடத்திலேயே மக்கள் செல்ல விரும்புவர். இது நமது மரபு. எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தித் தொடர்பில்லாத வழிகளிலேயே, வட்டிக் கடை நடத்துதல், வியாபாரம் செய்தல், எவரிடமாவது எடுபிடி வேலைக்கு அமர்தல் போன்றவற்றிலேயே மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது.

ஆர்வமும், முயற்சியும் உடையோருக்குப் பொருளாதார முயற்சிகள் எளிதில் கைகூடும். இந்த வழியில் அல்லாது, பொதுத் தொழில்களில் சுரண்டல் முறை நிலவுமானால் அது கொள்ளை நோயைவிடக் கொடியது. இந்தப் போக்கு, காரணமின்றியே வறுமையை உருவாக்கும்; இத்தகைய வறுமையை எதிர்க்கவேண்டும்.

பணவயமான சமூகம் கெட்ட பழக்கங்களில் ஈடுபடும். அதனால் வறுமை உற்பத்தியாகும். இந்த வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும். எல்லோரும் ஓயாமல் போராட வேண்டும்.

இந்தப் போரினைச் சுயநலக்காரர்கள், தவறான - முறையற்ற நிலையில் ஒரு அந்தஸ்தைப் பெற்றிருப்பவர்களே எதிர்ப்பார்கள். இவர்களது எதிர்ப்புகளை அஞ்சாது எதிர்த்து வெற்றி கண்டால்தான் சீரான பொருளாதாரம் வளரும்; நிலை நிற்கும்.

நமது நாட்டின் வறுமை வினோதமானது. நாட்டின் தேசீய வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குத் தனி நபர் வருவாய் உயரவில்லை. ஏன்? இதுதான் இன்றுள்ள புரியாத புதிர். நாட்டின் வருவாய் வளர்ந்திருந்தாலும், நாட்டின் மைய அரசும் சரி - மாநில அரசும் சரி - நிதிப் பற்றாக்குறையுடைய நிதி நிலைத் திட்டத்தையே அளிப்பதற் குரிய சூழ்நிலையே நிலவுகிறது.

ஒட்டகத்தின் முன் துரும்பெடுத்துப் போட்டு, சுமையை இறக்கிவிட்டதாகப் பாவனை செய்வது போல, மக்களுக்குச் சில சலுகைகளை அளிப்பதால் பயனில்லை. அதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. பணவீக்கத்தாலும் மறைமுக வரிகளாலும் விலைவாசிகள் ஏறிவிடுகின்றன.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிதி நெருக்கடி தோன்றி வளர்ந்து விடுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அரசின் நிதிநிலைத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை கோடிக் கணக்கில் உயர்ந்து விடுகிறது. செல்வர்களுக்கு நிறைய வரிச் சலுகைகளை அளித்தாலும் நாட்டில் முதலீடு பெருகவில்லை.

அதனால் கிடைத்த பணம், ஆடம்பரமான நுகர்வுப் பொருட்களை வாங்கவே செலவிடப்படுகிறது. நுகர்வுச் சந்தை - அதுவும் ஆடம்பர நுகர்வுச் சந்தை வளர்வதன் மூலம் பணச் சுழற்சி ஏற்படாது. அதனால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. புதிய செல்வங்களும் உருவாகா. வேலை வாய்ப்புக்களும் பெருகி வளராது.

ஆதலால் வாழ்க்கைக்கு இன்றியமையாததல்லாத ஆடம்பரச் செலவுகளில் செலவு செய்வதை தடுத்து முதலீடாக மாற்றுவதற்கு ஏற்றாற்போல செலவு வரி விதிப்பதைப் பற்றி, சிந்திக்க வேண்டும்,

தமிழ்நாட்டில் இரவும் பகலும் சினிமா தியேட்டர்களின் இயக்கம். சினிமா தியேட்டர்களுக்கு வரிவிலக்குச் சலுகைகள். சினிமாக் கொட்டகைக்காரர்கள் விருப்பம் போலக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். இவையெல்லாம் மனிதகுலத்தைப் பொருளாதார முயற்சிகளிலிருந்து விடுவிப்பவையாகும்.

உழைக்கும் நேரத்தில் திரைப்பட அரங்குகளில் இருந்தால், தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து இருந்தால் எப்படிப் பொருளாதாரம் வளரும்? நாட்டின் நிலையிலும் சரி - தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி - சேமிப்பு பெருகி வளர்ந்து அந்தச் சேமிப்புகள் முதலீடு ஆகும் வகையில் சமூகமும், அரசும் இயங்க வேண்டும்.

சேமித்து முதல் தருபவர்களுக்கு அரசு சலுகைகள் கூட வழங்கலாம். ஆனால் நமது நாட்டில் சேமிப்பு முதலாக மாறுவதில்லை. ஒன்று பணமாக இருக்கும். அல்லது அணிகலன்களாக இருக்கும். திட்ட முதலீட்டுச் செலவு கூடி வருதல் வேண்டும். திட்ட முதலீட்டுச் செலவு கூடினால்தான் பொருளாதாரம் வளரும். புதிய பொருளாதாரக் கொள்கை வளரும்.

விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கவில்லை. ஆயினும், வர்த்தகத் துறையிலும், தொழில் துறையிலும் சில விளைவுகள் ஏற்பட்டுள்ளது உண்மை. ஏற்று மதியில் சற்றேறக் குறைய 21 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. அன்னியச் செலவாணி கையிருப்புக் கூடி இருக்கிறது.

இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதெனினும், பயன் அடைந்தவர்கள் தொழிலதிபர்கள்; சாதாரணப் பொது மக்கள் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் பொருளாதார முயற்சிகளே நடைபெறவில்லை என்று கூறமுடியாது. நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்குரிய பணிகள் பரந்த அளவில் நடைபெறுவது உண்மை. இம் மாபெரும் புரட்சியானது ஏமாற்றத்தைத் தரக்கூடிய தாமதங்கள், தடங்கல்களால் பாதிக்கப்பட அனுமதித்துவிடக் கூடாது.

பொருளாதார வளர்ச்சி தொய்வின்றி நடைபெற நிர்வாக இயந்திரம் திறமையுடையதாக இருக்கவேண்டும். நிர்வாக இயந்திரம் பின்னோக்கிச் செல்கிறது. சிகப்பு நாடா முறை நமக்கு வழிவழி வந்த பிற்போக்குத் தன்மை, நமது பாரம்பரியத்தின் மிச்ச சொச்சம்.

பொருளாதார வளர்ச்சி சீராக அமையவேண்டு மானால் நிர்வாக இயந்திரம் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளத்தைப் பெருக்க வேண்டும் என்ற கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு, சேவை செய்யும் அலுவலர்கள் தேவை. ஊழியர்கள் தேவை.

பொருளாதர வளர்ச்சியில் இன்றியமையாத பகுதி வேலைவாய்ப்பு. இன்று வேலை வாய்ப்பில் உற்பத்தி சார்ந்த வேளாண்மை, கால்நடைத் துறைத் தொழில் வளர்ச்சியில் ஈடுபட இந்த நாட்டு இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் எங்காவது சிற்றெழுத்தர்களாக - கூரியர் சர்வீசு வேலை போன்றவைகளில் ஈடுபடத்தான் விரும்புகின்றனர்.

காரணம் அளவுக்கு விஞ்சிய பய உணர்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு உணர்வு. அவர்கள் வீட்டு வாயிலைத் தொழில்கள் தட்டினாலும், உற்பத்தி சார்ந்த தொழில்களில், கடின உழைப்பில் ஈடுபட அவர்கள் விரும்பவில்லை.

சேவைத் துறையில் வேலை வாய்ப்புப் பெறுவது தவறானதல்ல என்றாலும் சமுதாய நோக்கில் பார்த்தால் இது நமது வாழ்க்கையைப் பாதிக்கும். ஆதலால் தொழில்துறையில் ஈடுபடுதலே சிறந்த வேலைவாய்ப்பு; ஆக்கம் தரக்கூடியது.

நமது நாட்டில், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு சரி செய்யப்பட்டால்தான், வேலைவாய்ப்புக் களும், வருவாயும் பெருகும். இத்துறையில் நமது அரசுக்கும் சரி - இளைஞர்களுக்கும் சரி - சமூகத்திற்கும் சரி போதுமான ஆர்வம் இல்லாதது வருந்தத்தக்க செய்தி.

பல நூறு ஆலைகள் பூட்டப்பட்டுள்ளன. எண்ணற் றோர் வேலைகளை இழந்துள்ளனர். எதிர்பாராத நிலையில் நலிந்துபோன தொழில்களைப் புனரமைக்க அரசுகளும், வங்கிகளும், மூலதனத்துடன் முன்வர வேண்டும். நிர்வாகக் குறையின் காரணமாகத் தொழிற்சாலைகள் நலிவுறின் அந்தத் தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

இன்றுள்ள நடைமுறையில், நிர்வாகி வசதியாக இருக்கிறார். ஒரு பைசாக் கூடக் குறையாமல் ஊதியம் வாங்குகிறார். ஆனால் பாவம், தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். தொழிற் சங்கங்களும் கூட இந்த மாதிரி விஷயத்தில் பேச போதிய முயற்சிகள் எடுக்காதது ஒரு குறை. இந்த வகையில் நமக்கே சொந்த அனுபவம் உண்டு.

இன்று கூட்டுறவுத் துறை “அஞ்சூரான், புஞ்சை போல" என்பார்களே அதுபோல, நலிந்து வருகிறது. இந்தியாவின் சாதாரண மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு, கூட்டுறவே சரியான வழி. ஆனால் கூட்டுறவு இன்று செப்பமாக இல்லை.

எந்த ஒரு தனி மனிதனும் சரி - அல்லது சமூகமும் சரி - அறிந்து பாவம் செய்ய உடன்பட மாட்டார்கள். அது போலவே மக்கள் வேலையில்லாத திண்டாட்டத்தையும் விரும்பவில்லை. புதிய தொழில் ஆலை, வேளாண் பண்ணைகளைத் தொடங்கி, வேலை வாய்ப்புகளை வழங்கினால் உற்பத்தி பெருகும்.

நியாயமான வழியில் பூரண வேலை வாய்ப்பை உண்டாக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி! பூரண வேலைத் திட்டம் சமத்துவ சமுதாய அமைப்பிற்குரிய முதல் முயற்சி. பூரண வேலைத் திட்டம் என்பது சக்திக்கேற்ற வேலை - வேலைக்கேற்ற ஊதியம் என்பதாகும்.

இன்று வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, வேலைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை கடந்த காலங் களைவிட 20 மடங்காகப் பெருகியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்திருப்போரில் 10 சதம்தான் வேலை பெறுகிறார்கள். இதுபோக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியாமல் உள்ளவர்கள் வேறு கணிசமாக உள்ளனர்.

இனி, வருங்காலத்தில் நம்முடைய அரசுப் பணிகளிலும் சரி - வியாபாரத் துறையிலும் சரி - சேவைத் துறையிலும் சரி - வேலை வாய்ப்புக்கள் உருவாகுமா? இது ஐயப்பாடே! புதிய தொழில் ஆலைகளைத் தொடங்குவதன் மூலமே வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் வாய்ப்புகளும் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது என்ற வருந்தத்தக்க செய்தியை அரசும் சமூக நிறுவனங்களும் உணரவேண்டும். மேலும் ஒரு வருந்தத் தக்க செய்தி, படிப்புக்கேற்ற வேலையைக் கூட பெற முடியவில்லை.

நமது நாட்டில் குறைவான வேலை பார்த்து, பற்றாக்குறை ஊதியம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். மேலும், மனித ஆற்றலுக்கும் இழப்பு ஏற்படுகிறது. வறுமை அணியில் நிற்போர் வரிசையும் நீளுகிறது. உற்பத்தியும் பாதிக்கப் படுகிறது.

வேறு சிலர் தாம் செய்யும் வேலைக்குப் பன்மடங்கு அதிகமாக ஊதியம் பெறுகின்றனர். இவர்களுடைய மனித ஆற்றல் குறைகிறது. உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. ஆனால் நுகரும் சந்தை வளர்கிறது. இதனாலும் வறுமை வளர்கிறது. ஒருவருக்கு வேலை கிடைத்தால், அவர் முறையாக வேலை பார்த்தால் குறைந்தது மேலும் ஐவருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்க முடியும்.

தொழிற்கல்வி பயின்றவர்களிடையிலும் வேலை வாய்ப்பு பற்றிய நிலைமைகள் எதுவும் மாறவில்லை. தொழிற் கல்விகளைப் பொருத்தவரையில், டாக்டர்கள், பொறியாளர்கள் இவர்கள் தாமே கூடத் தொழில் செய்யலாம். ஆனால், இந்த வாய்ப்பையும் அரசுப் பணிகளில் வேலை பார்ப்போர் தட்டிப் பறித்து விடுகின்றனர்.

இதனால் நம்முடைய பொருளாதார வளர்ச்சி முயற்சிகளும் அதனைச் சார்ந்த வேலை வாய்ப்புக்களும் பின்னடைவிலேயே உள்ளன. இந்நிலையில் மாற்றம் ஏற்படா விட்டால், அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா இப்போது இருப்பது போலவே இருக்கும். இதை நீங்கள் விரும்புகின்றீர்களா?

திருவள்ளுவர், "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று கூறுகின்றார். இங்குப் பொருள் என்பது தங்கமும், பணமும் அல்ல. நுகரும் பொருட்கள், உணவு முதலியனவாம். தங்கத்திற்கும், பணத்திற்கும் கிடைத்துள்ள பாதுகாப்பு வசதிகள் உணவுப் பொருள்களுக்குக் கிடைக்கவில்லை.

ஆண்டுதோறும் லட்சணக்கான டன் தானியங்கள் போதிய பாதுகாப்பின்றி அழிந்து போகின்றன என்று அரசின் தகவலே கூறுகிறது. பொருள் என்றால் மனிதன் உயிர் வாழ்வதற்கான நுகரும் பொருள்களே என்பதுதான் தமிழ்வழிக் கருத்து.

"யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல” என்ற பரிபாடல் வரியும் இதனையே வற்புறுத்துகின்றது. மனிதர் உண்டு, உடுத்தி வாழ்தலுக்குரிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலே, தொழில்களில் எல்லாம் சிறந்தது.

அதனாலேயே, வள்ளுவம், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்றது. ஆனால் இதுவரையில் பல துறைகளில் சக்கரவர்த்திகள் உருவாகியிருப்பதைப் போல, உழுவோரில் சக்கரவர்த்திகள் உருவாகவில்லை.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற பாரதியின் பாடல் இன்னமும் பாடலாகவே இருக்கிறது. உழவர்களும், தொழிலாளர்களும் இன்னும் சமூகத்திலும் சரி ஆட்சியிலும் சரி - போதிய அந்தஸ்தைப் பெறவில்லை. உழவும், தொழிலும் சிறந்து விளங்கி, உழவர், தொழிலாளர் வாழ்க்கை, என்று சீர்மையுடன் அமைகின்றதோ, அன்றுதான் இந்தியப் பொருளாதாரம் சீரானதாக அமையும்.

உலகம் எப்பொழுதும் தன்னல உணர்ச்சியிலேயே செயல்படும். இஃது இயற்கை இந்தத் தன்னல உணர்ச்சியைத் தடை செய்யக்கூடாது. நல்லவர்களுடைய பிறர் நலம் நாடும் நோன்புடன் இணைத்து, கயவர்களிடத்தில் காணப்படும் தன்னலத்தின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். இது ஒரு சிறந்த பணி.

நமது பொருளாதார ஆக்கத்திற்குரிய முயற்சிகள், மூன்று காரணங்களிலிருந்து தோன்றி வளர்கின்றன. அவை தேவைகள், தேவைகளை அடையும் முயற்சிகள், திருப்தி (Wants, Efforts, Satisfaction) என்ற மூன்றாகும்.

எது காரணமாக இருப்பினும், பொருளாதார வளர்ச்சி, மனித மனங்களிலேயே தொடங்கப் பெறுதல் வேண்டும். நமது நாட்டில் சுகபோக வாழ்க்கையை எதிர்த்துப் போராடிய சந்நியாசிகள் அறிவுறுத்திய "ஆசை அறுமின்" என்ற கோஷத்திலிருந்து, வறுமையில் கிடந்துழலும்போது நம்மால் எழுந்திருக்க முடியவில்லை.

வாய்ப்பாட்டு, சுருதிக்கு இசைந்தவாறு இருக்க வேண்டும். அதுபோல, ஆசைகளும், சமுதாய நலன், பொது நலன் ஆகியவற்றுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும்.

நமது பொருளாதார ஆக்கத்திற்குரிய வழி, ஒவ்வொரு பொருளையும் எவ்விதத்தில் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி எவ்வளவு கூடுதல் உற்பத்தி செய்யலாம் என்ற அணுகு முறையிலேயே இருக்கிறது. பொருளாதார வளர்ச் சிக்கு மாமேதை லெனின் 10 கடமைகளை வரையறுத்து வலியுறுத்துகின்றார். அவற்றுள் சில:

1) உங்களுடைய சோம்பேறித்தனம், கவனமின்மை பின்தங்கிய தன்மையை உள்ளவாறு உணருங்கள். இவற்றை மூடி மறைத்துப் பயன் இல்லை.

2) கல்வி இன்மையை மாற்றுங்கள்.

3) சோர்ந்து இருப்பதை எதிர்த்துப் போராடுங்கள்.

4) உங்கள் வேலைகள் எல்லாவற்றையும் சரி பாருங்கள். சொற்கள் சொற்களாகவே இருந்து விடக் கூடாது.

5), பொருளாதார அமைப்பில் நடைமுறையில் வெற்றி அடைந்து இருக்கவேண்டும்.

என்பனவாகும். ஆம்! நமது நாட்டில் சோஷலிச பாணி, ஜனநாயக சோஷலிசம் என்று சொன்னவைகள் எல்லாம் வெற்றி பெறவில்லை. தீர்மானங்களாகவே இருந்துவிட்டன. நடைமுறைக்கு வரவில்லை.

நமது நாடு வளமான நாடு. ஆனால் மக்களில் பெரும்பாலோர் ஏழைகள்; திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியும், சமநிலை விநியோகமும், நமது நாட்டுக்கு இன்று உடனடியாகத் தேவை.

நமது சமுதாயம் தேனிக்களைப் போல, கூட்டுறவு முறையில் பணிப் பகிர்வு செய்து கொண்டு, அயர்விலாது, சுறுசுறுப்புடன், ஒரே குறிக்கோளுடன் உழைத்தால்தான் நமது நாடு வளமான நாடாக முடியும். எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ இயலும்,

தேனிக்களுக்கு வாய்த்தது இயல்பூக்கம். அதுபோல நமக்கும் பொருளாதார முயற்சிகளில், உற்பத்தி சார்ந்த பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டு உழைப்பது இயல்பானதாக, ஜீவ சுபாவமாக என்று மாறுகிறதோ அன்றுதான் நாம் பொன்வளம் நிறைந்த புவியைக் காணலாம். பொதுவுடைமையைக் காணலாம்.

இந்தத் திசையில் இன்று நாம் செல்லவில்லை. நாம் செல்லவேண்டிய திசை, புவியைப் பொதுவில் நடத்தும் திசையாக, உற்பத்தி சார்ந்த பொருளாதார ஆக்க வழியிலான திசையாக, பிறர் பங்கைத் திருடாத திசையாகப் பார்த்து நடைபோடுவோமாக!

வளர்க உற்பத்தி!
மலர்க பொதுமை!

6. வேளாண்மைச் சிந்தனைகள்

(17-9-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

இன்றைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? வேளாண்மைப் பொருளாதார வகையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? நாம் எங்கே போக

கு.xvi.24 வேண்டும்: நமது நாடு வேளாண்மை நாடு. வேளாண்மைக் குரிய நிலப்பரப்பு, நிலவளம், மனித சக்தி மிகுந்த நாடு. நமது இலக்கியங்களில், காப்பியங்களில் தவறாமல் வேளாண்மையைப் புகழ்ந்து பேசாத கவிஞர்கள் இல்லை.

ஆனால், இன்றைய தலைமுறையில் வேளாண்மைத் துறையில் போதிய ஆர்வம் இல்லை! அரசுப் பணிகளை விட, வியாபாரத்தைவிட, விவசாயம் இரண்டாந்தரத் தொழில் என்று கருதப்படுகிறது. இது முற்றிலும் தவறு.

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

என்றும்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்"

என்றும் திருக்குறள் கூறுகிறது.

உடலோடு கூடிய உயிர் வாழ்க்கைக்கு உணவுப் பொருள்கள் இன்றியமையாதன. உணவுப் பொருள்களை வழங்குவது விவசாயத் தொழிலே! அதனாலேயே "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன.

நடைமுறையில் பால் தரும் பசு, புண்ணியமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், தமிழர் வாழ்வியலில் எருதே முதன்மை பெற்றுள்ளது. நாம் வணங்கும் கடவுள் - சிவபெருமான், தனது ஊர்தியாகவும், உயர்த்திப் பிடிக்கும் கொடியாகவும் பயன்படுத்துவது எருதுதான் என்பதை உணர்க. திருக்கோயில் முகப்பில் வரவேற்பது உம் எருதே!

"உழுத நோன் பகடு அழிதின்றாங்கு"

என்ற புறநானூற்று வரி, என்றும் போற்றத்தக்க வரி உழுததின் பயனாகிய செந்நெல் லரிசியை, செங்கரும்பின் சாற்றை, மனித உலகத்துக்கு உண்ணக் கொடுத்துவிடும் பண்புடையவை எருதுகள். ஆதலால்தான், தமிழர் வாழ்வில் பொங்கல் விழா உழவர் திருநாளாக உருக் கொண்டது.

மனிதன் உண்டு உயிர் வாழ்தலுக்கு ஒரு நாளைக்குச் சராசரி எவ்வளவு உணவு - கூட்டுணவு தேவையோ அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் வலிமையிழந்து நிற்கின்றான். நமது நாட்டில் உணவுப் பொருள் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கும் திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அன்றாடத் தேவைக்குரிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதைக் கூடுதலாக்க வேண்டும்.

இலாப நோக்கில் பணப் பண்டங்களை உற்பத்தி செய்வதையும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்களையும் கண்மாய்களையும் பற்றிக் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும். ஊட்டி வளர்க்கும் தாய் போன்றது நிலம். உணவளிப்பவர்கள் விவசாயிகள்! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

நமது இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் கணிசமான பங்கைப் பெற்று வந்துள்ளது, பெற்று வருகிறது. நமது நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் வகிக்கும் பங்கு 39 விழுக்காடு. அது மட்டுமல்ல. விவசாயத் தொழில் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு 79 - விழுக்காடு என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமிழ் நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை பெற்றுள்ள பொருளாதார விகிதம் 28 விழுக்காடு. வேலை வாய்ப்பு 62 விழுக்காடு. இந்திய நாட்டுப் பொருளாதாரத்தை விவசாயத்தின் மூலம் மேலும் கூட்ட வாய்ப்புண்டு.

அதுபோலவே தமிழ்நாட்டிலும் கூட்ட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வாய்ப்புக்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தினால் பொருளாதாரத் துறையில் தற்சார்பு நிலையை அடைய முடியும். எல்லோரும் பசிதீர உண்பது மட்டுமன்றி, பசி, பட்டினியை அறவே ஒழித்து வெளியேற்ற இயலும். "வறுமையே வெளியேறு" என்ற கோஷத்திற்கு வெற்றி சேர்க்க முடியும்.

இன்று நமது பொது உணவுப் பொருள், உற்பத்தியில் 20 விழுக்காடு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. நமது உணவுத் தேவையில் 33 விழுக்காடு பற்றாக்குறை தான். ஆயினும் மகிழ்ச்சியான ஒரு செய்தி, மக்கள் தொகையை ஈடுகொடுத்து உணவுப் பொருள் உற்பத்தியாகி உள்ளது.

இந்திய மக்கள் தொகை, இந்திய நாட்டளவில் 2.3 தான் கூடியிருக்கிறது. ஆனால், விவசாயத்தில் வளர்ச்சி 42 தமிழ் நாட்டில் வளர்ச்சி 3.1 தேவையைவிட உற்பத்தி கூடுதலாகியுள்ளது.

இப்படி உற்பத்தி இருந்தும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் முதலியன பற்றாக் குறையேயாம். இவற்றை உற்பத்தி செய்யக்கூடிய நிலங்கள் நம்மிடத்தில் இல்லையென்று கூறமுடியாது. நாட்டளவில் நிலங்கள் உள்ளன. நமது பகுதிகளில் செம்மண் சரளை மணல் நிலம் நிறைய உள்ளது.

விவசாயத்தை ஒரு தொழிலாகக் கருதிச் செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் விவசாயம் போதிய பயனைத் தராது. இன்று விவசாயத் தொழிலில் அதிகமான பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் குறைந்த பட்சம் நான்கில் ஒரு பங்கினரையாவது வேறு தொழில்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் 42 பேர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களில் 3.3 மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் விவசாயிகளிடம் நிலம் நபருக்கு 48 ஹெக்டேராக இருந்தது. இப்போது நபருக்கு 15 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

பொதுவாக ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் பராமரிப்புக்குக் குறைந்தது ஐந்து ஏக்கர் தேவை. விளை நிலத்தின் அடிப்படையில் மக்கள் செறிவு 2.5 க்குள் இருத்தல் நல்லது. இப்போது விவசாயம் செய்யப் பெறும் நிலங்களை விட வரப்புகளே அதிகம்.

இதேபோல நெல் சாகுபடி செய்யும் நிலம் குறைந்து வருகிறது. முன்பு சாகுபடி செய்யும் நிலம் 27 இலட்சம் ஹெக்டேராக இருந்தது. இப்போது 21 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்து விட்டது. நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக பணப் பயிர்கள், கரும்பு முதலியன உற்பத்தி செய்வது, வீட்டு மனைகளாக மாற்றி விற்பது போன்ற மனப்போக்கு வளர்ந்து வருவதால் விவசாய நிலம் குறைந்து வருகிறது.

இந்தப் போக்கு நீடித்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வழி வகுத்ததாகி விடும். முன்பே நமக்கு, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் பற்றாக்குறை என்று கூறியதை நினைவில் கொள்க.

மண் என்பது ஓர் உயிரியல் பொருள் என்பதை நம்மில் பலரும் உணரவேண்டும். பொதுவாக மண்ணில் அங்ககச் சத்து (இயற்கை உரம் 5 சதம், மணிச்சத்து 45 சதம், காற்று 25 சதம், நீர் 25 சதம், தொழு உரச்சத்து 60 சதம்) இருத்தல் நல்ல விளை நிலத்திற்கு அடையாளம்.

நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மணலே, அதாவது நான்கு அங்குலம் மேற்பரப்பே வேளாண்மைக்கு ஏற்றது. இப்புவிக் கோளத்தில் கல் தோன்றிய பிறகே மண் தோன்றியது. இந்த மண் தோன்ற, குறைந்தது 10 இலட்சம் ஆண்டுகள் பிடித்தன என்று உணர்ந்தால், நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கண்டத்தின் அருமை நமக்குப் புரியும்.

தமிழகத்தின் நிலப்பரப்பில் - விளை நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் செம்மண் நிலமேயாகும். இந்தச் செம்மண் கண்டமும் ஆழமற்றது; இளகிய இயல்புடையது. கார நிலையுமின்றி அமில நிலையுமின்றி, சம நிலையில் இருக்கிறது.

மண் உயிரற்ற பொருள் அன்று. பல்வகை உயிரினங்களின் வாழிடம் அது. நுண்ணாடிக்கும் புலப்படாத வைரஸ் முதல் பாக்டீரியா, ஆக்டினோமை சீட்ஸ், பாசி, ஆம்பி, ப்ரோட்சோவர், மண்புழு, எறும்பு, இன்னும் பிற பூச்சிகள், பிராணி இனங்கள் அதில் வாழ்ந்து வருகின்றன.

ஒரு கைப்பிடி மண்ணில் கோடானு கோடி உயிர்கள் இருக்கின்றன. அவற்றில் சில, சூழ்நிலை செம்மையாக வாய்ந்திருப்பின் மிக மிக விரைவாகப் பெருக்கமடைகின்றன. குளிர் மண்ணில் உயிர்களுடைய செயல் குறைவுபடுகிறது. மண்ணில் ஈரம், வெப்பம், காற்று ஆகிய மூன்றும் செவ்வையாக அமைந்தால் அவ்வுயிர்களுக்குத் தகுந்த சூழ்நிலை ஏற்படுகிறது.

சுறுசுறுப்பாக மண் புழுக்கள் நிறைந்திருக்கும் மண், வளம் நிறைந்திருப்பதை உணர்த்தும். அதேபோல் பல்வகை உயிரினங்கள் கண்ணுக்குப் புலனாகாவிடினும் ஒரு வாரத்தில் எண்ணற்றனவாக கணக்கிலடங்காதனவாகப் பல்கிப் பெருகி வளர்கின்றன.

மண் வளம் என்பது அளவற்ற சொத்து மதிப்புடையது. வேளாண்மை பொருளாதாரத்தின் உயிர்நாடி, மண் வளத்தைப் பாதுகாத்தலேயாம். மண்வளத்தை இரசாயன உரங்கள் மூலம் பாதுகாக்க முடியாது. இரசாயன உரங்கள் உரம் என்று கூறப்படுவதே ஒரு உபசார முறைதான்.

நிலத்தின் வளத்தைக் காப்பது, இயற்கைத் தொழு உரமும், தழைச்சத்து உரமுமே என்பதை நம் விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும். இரசாயன உரங்கள் நிலத்தில் உள்ள உரத்தை விரைந்து பயிர்களுக்கு எடுத்துத் தரும் கிரியா ஊக்கிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

மண் வளத்திற்குப் பகை, மண்அரிப்பு. இந்த மண் அரிப்பு, விவசாயத் தொழிலைச் சீர்குலையச் செய்து, மனித குலத்துக்கே அழிவைத் தரும். ராஸ்டன் செப் என்ற விஞ்ஞானி மண் வளம் பற்றி ஆராய்ந்து புகழ்பெற்ற விஞ்ஞானி. ரோம் சாம்ராஜ்யத்தின் அழிவுக்குப் பயிர்த் தொழில் சீர்குலைந்ததும் ஒரு காரணம் என்று கூறி உள்ளார் அவர்.

மண்வளம் குறைதல் ஒரு நாட்டு மக்களின், வாழ்க்கை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகும். மனிதரின் உடல் நலிவுக்கு ஊட்டச்சத்து இன்மை காரணம். ஊட்டச்சத்து தரும் உணவின்மைக்குக் காரணம் விவசாயச் சீர்குலைவு.

விளையும் நன்செய் - புன்செய் புலங்களையோ, பழத்தோட்டங்களையோ கால்நடைகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாற்றுவதும் அல்லது தாமே ஆகும்படி விட்டு விடுவதும் கூடாது. கால்நடைகளைக் கண்டபடி கட்டுப் பாடில்லாத வகையில் - குறிப்பாக ஆடுகளை மேய்க்கும் முறைகேடுகளால் மண் அரிப்பு ஏற்பட்டு மண்வளம் கெடும்.

இன்று தமிழ்நாட்டில் மேய்ச்சல் தரை என்பதே இல்லை. சில இடங்களில் புல்லே இல்லாத மந்தை வெளிகளை மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்துகின்றனர். ஊர்கள் தோறும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மேய்ச்சல் தரையையும், கால்நடைத் தீவனத் தழைகளைத் தரும் மரங்களையும் வளர்த்தால்தான் நம்முடைய நிலத்தின் மண்வளத்தைக் காப்பாற்ற முடியும். வேளாண்மையிலான பொருளாதாரமும் செழிப்பாக இருக்க முடியும்.

காற்றினாலும் மண் அரிப்பு ஏற்படுவது உண்டு. அதாவது காற்றினால் மண் பறந்து போய்விடுதலாகும். இதனைத் தடுக்கப் புலங்களின் எல்லையில் - வேலிகளில் காற்றுத் தடுப்பு மரங்களை - உயர்ந்த மரங்களை - உதி, பூவரசு, பலா முதலியவைகளை நடுவது நன்மை பயக்கும். இதனால், காற்றால் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நமக்குத் தீங்கு செய்யும் மண் அரிப்பு, மனிதனால் - அவனுடைய அக்கறையின்மையால், அலட்சியத்தினால் ஏற்படுவதேயாகும். மண் அரிப்பு, மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் அடங்கியதே! தடைபடா மண் அரிப்பு, வறுமைக்குரிய வாயில், சமுதாயத்தின் வலிமைக்கும் பொருளாதாரச் செழிப்புக்கும் உலைவைக்கும்.

இன்று நம்முன் உள்ள தலையாய பிரச்சனைகளுள் ஒன்று, உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சனைகளுள் தலையாயது மண் அரிப்பேயாகும். மண் அரிப்பு, இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். ஆதலால்,

நிலத்தினை உழாமல் தரிசாகப் போடாதீர்!

நிலத்தினை மேடு பள்ளமாக அமைய விடாதீர்!

சமநிலைச் சமுதாயம் காண முதல் முயற்சி,
சமநிலை நில அமைப்பு!

பெய்யும் மழை நீர்,
நின்றும் நிற்காமலும்
மெல்ல நிலமகளைத் தழுவி ஓடச் செய்வீர்!

மனிதனுக்கு ஆடைபோல -
நிலத்திற்கு ஒரு பசுமை, போர்வை!

கண்டபடி ஆடு மாடுகளைக்
கட்டுப்பாடில்லாமல் மேயவிடாதீர்!

விரைவில் கொள்ளை லாபம் தரும் எதுவும்
அழிவையே தரும்.

காடுகளை அழிக்கும் வெள்ளாடுகளைத் தவிர்ப்பீர்!

நிலத்தை ஊட்டி வளர்க்கும்
செம்மறியாடுகளைச் சேர்த்திடுவீர்!

காற்றுத் தடுப்பு மரங்களை
வேலிகள் தோறும் நடுவீர்!

காலத்தால் அமைந்த மண்வளத்தை இழக்காதீர்!

மண்வள இழப்பு,
மனிதகுலத்திற்கு அழிவு என்று உணர்வீர்!


நம்முடைய விவாயப் பாதிப்புக்கும் வேளாண்மை அடிப்படையிலான பொருளாதாரப் பாதிப்புக்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, வறட்சி.

நமது நாட்டில் பெய்யும் மழை 76 சென்டி மீட்டருக்கும் குறைவு. இந்தியாவில் பெய்யும் மழையைத் தென்மேற்கிலிருந்து வீசும் காற்று இந்துமாக் கடலில் படிந்து நீர் சுமந்துகொண்டு வந்து தருகிறது. இதுவே, தென்மேற்குப் பருவக் காற்று மழை, தென்மேற்குப் பருவ மழையே பெய்யும் மழையில் பெரும் பகுதி தோராயமாக 75 விழுக்காடு.

அடுத்துப் பெய்வது வடகிழக்குப் பருவ மழை. ஒரு ஆண்டில் 76 சென்டி மீட்டருக்கும் குறைவாக மழை பெய்தால் அந்தப் பகுதி வறட்சியால் பாதிக்கும்.

நம் தமிழ்நாடு இவ்வகையில் பாதிப்புக்குள்ளாவது. இங்ஙனம் வறட்சியால் பாதிப்பதைத் தவிர்க்கவும் மழையைக் கூடுதலாகப் பெறவும் காடுகளின் அளவைக் கூடுதலாக்க வேண்டும். வேளாண்மை முறைப்படி மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடு இருக்க வேண்டும். இப்போது அவ்வளவு இல்லை.

பெய்யும், குறைந்த மழைத் தண்ணீரை, முறையாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கோடை மழை - தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் நிலத்தை உழுதுவிட வேண்டும். இதனால் நிலம், பெய்த மழைத் தண்ணீரைத் தன்பால் ஈர்த்து வைத்திருக்கும்.

அடுத்து வரும் வடமேற்குப் பருவ மழைக் காலத்தில் நடவு செய்யத்தக்க வகையில் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு நாற்றுப் பாவி வைத்துக் கொள்ள வேண்டும்.

வடமேற்குப் பருவ மழை பெய்தவுடன் உழுத நிலத்தை ஒன்று அல்லது இரண்டு உழவில் சேறு கலக்கி நட்டு விட்டால் தண்ணீர்ப் பாசனம் இல்லாமலே மழை நீரிலேயே பயிரை வளர்த்து மகசூல் கண்டுவிடலாம்.

நாளுக்கு நாள் பருவ காலம் மாறி வருகிறது. மழையின் அளவும் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு விவசாயிகள் நடந்து கொண்டால்தான் வேளாண்மை அடிப்படையிலான பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.

ஆற்றில் தண்ணீர் வரட்டும், கண்மாயில் நீர் நிறையட்டும் என்பது இன்றைய சூழ்நிலைக்கு ஒத்து வராதது. அதோடு பெய்யும் மழைத் தண்ணீரைச் சொட்டு நீர்கூட வீணாகாமல் சேகரிக்கும் மனப்பான்மை தேவை.

நிலத்தில் புல், பூண்டு முளைத்து வளர்ந்து மூடியுள்ள இடங்கள் மழை நீரை மிக மந்த கதியில் தத்திச் செல்லும். காடு அடர்ந்த நிலத்து மண், தன்மேல் விழும் நீரைக் கடற் பஞ்சுபோல் உறிஞ்சித் தேக்கி நிறுத்திக் கொள்ளும்.

ஆதலால், நீர்ச் சேர்க்கை நிலப்பகுதி, நீர்ப் புரளி நிலப்பரப்பு, கண்மாய்கள், வாய்க்கால்கள், கண்மாய்க் கரைகள் முதலியவைகளில் மரங்களை வளர்ப்பது நல்லது. இந்த மரங்கள் தண்ணிரைக் குடித்துவிடும் என்ற அச்சம் தவறானது. 10 விழுக்காட்டுத் தண்ணீரைக் கூட மரம் குடிப்ப தில்லை.

அவை, பெய்யும் மழை நீரை நிலத்துக்குள் செலுத்தி நிலத்தடியில் நீரைத் தேக்கி வைத்து, கிணறுகளில் நீர்வளத்தைப் பாதுகாத்துத் தரும். புவியீர்ப்பு ஆற்றல் நீர்த் திவலைகளை நிலத்துக்கள் இழுத்து வைத்துச் சேமிக்கிறது.

இங்ஙனம் மரம், புல், முதலியவைகளால் மழை நீரை முறைப்படுத்திய மிதமான நீரோட்டமாக அமையவிடாமல், ஓடையாக விரிவடைந்து ஓட அனுமதித்தல் கூடாது. உடன் தடுத்துச் சீர்செய்ய வேண்டும். இல்லையேல் அவை மாபெரும் ஓடைகளாகி நிலம், பண்ணை, ஊர் முழுதும் கூட அழித்துவிடும்.

வேளாண்மை பொருளாதாரத்தில் நிலமும் நிலத்தின் வளமும் பெரும்பங்கு வகிப்பதால் மண்வளம் பற்றியும் மண் அரிப்பைப் பற்றியும் அதிகம் சொல்ல நேரிட்டது.

வேளாண்மைக்கு அடிப்படையான மண்வளத்தைப் பற்றி அறிந்துகொண்டோம். நமது தமிழ் நாட்டின் நிலப்பரப்பு, பெய்யும் மழை, இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உள்ள தொழில், பழமரம் வளர்ப்பு. செம்மண் சரளை கலந்ததாக இருப்பதால் மாவும், பலாவும் நன்றாக வளரும்.

மாவிற்கு, வைத்த முதலாண்டிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். பின் வரும் ஆண்டுகளில் மழைநீர் மரத்தைச் சுற்றித் தங்குவதற்கு ஏற்றவாறு மண்ணைக் கட்டினாலும், நிலத்தை உழுதாலும் போதும். தண்ணிர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிக முதலீடும் தேவையில்லை. ரூ. 5000 இருந்தால் போதும். பின் ஆண்டுதோறும் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் ரூ. 2000 வரை செலவாகும்.

மா, பயிர் செய்யும் நிலத்தில் முதல் ஆறு வருடங்கள் வரையில் ஊடு பயிர் பயறுவகைகள், கடலை முதலியன சாகுபடி செய்யலாம். இதில் பராமரிப்புச் செலவுக்குரிய தொகை கிடைத்து விடும்.

மாம்பழ வகையில் நீலம், பெங்களூர் நமது பகுதிக்கு ஏற்றது. இது பணப்பயிரும் ஆகும். இந்தப் பழ மரங்கள் ஆண்டுதோறும் தவறாமல் காய்க்கும். மரம் முழுவதும் காய்க்கும். ஐந்து வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். 10 வருடத்திலிருந்து நன்றாகக் காய்க்கும்.

சராசரி மரம் ஒன்றுக்கு 50 கிலோ காய்க்கும். ஒரு கிலோ விலை 10 ரூபாய். 40 மரங்களுக்கு 2000 கிலோ. இதன் மதிப்பு 20000 ரூபாய். இவ்வளவு வருமானம் வேறு எந்தச் சாகுபடியிலும் கிடைப்பதில்லை. மாவின் வயது 35 வருடம் முதல் 40 வருடம் வரையாகும்.

அடுத்து, பலாமரம். பயிரிடும் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவை மாவைப் போலவேதான் இதற்கும் ஆகும். ஆனால், ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் நடலாம். பலாவும் 5 வருடம் முதல் பலன்கொடுக்க ஆரம்பித்து 10 வருடத்திலிருந்து முழு மகசூல் தரும். அதாவது பலாமரம் ஒன்றுக்கு 10 பழம் 70 மரங்களுக்கு 700 பழம். ஒரு பழத்தின் விலை ரூ. 80 பலா சாகுபடியின் மூலம் ஆண்டு ஒன்றுக்குச் சராசரி ரூ. 50,000 வருவாய் கிடைக்கும்.

ஆதலால், நம் நாட்டுப் பொருளாதாரத்தில் குறிப்பாக அந்நிய நாட்டுச் செலாவணியில் பழத்தின் பங்கு அதிகம். நம்முடைய நாட்டின் ஏற்றுமதியில் 25 விழுக்காட்டுக்கும் மேலாகப் பழங்களும் பழப்பக்குவப் பொருள்களும் பங்கு வகிக்கின்றன.

பழத்தோட்டம் அமைக்கும் தொழிலை அறிய பழக்கன்றுகளை வாங்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்திலுள்ள நேமம், அரசு பழப் பண்ணையை நாடலாம்.

நமது நாட்டில் பல பகுதிகளில் தென்னை நன்றாக வளரும். தென்னை, நல்ல பணப் பயிர்; நல்ல வருமானம் தரக் கூடியது. தென்னை ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 வரை நடலாம்.

சில உயர் ரகங்கள் அல்லது கவனிப்பு அடிப்படையில் ஐந்து வருடத்திலேயே காய்ப்புக்கு வந்து விடும் காலதாமத மாயின் ஏழு வருடங்களில் காய்க்கத் தொடங்கிவிடும். நல்ல முறையில் உரம் வைத்து மாதம் 2 தண்ணீர் பாய்ச்சினால் ஒரு மரம் சராசரி 200 காய் காய்க்கும். குறைந்தாலும் 100 காய்க்குக் குறையாது.

ஆனால், நாட்டில் இப்போது சராசரி மரம் ஒன்றுக்கு 60 காய்தான் காய்க்கிறது. 200-க்கும் 60-க்கும் உள்ள வித்தியாசம் - இழப்பு இது நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கும். சராசரி ஒரு தென்னை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 800 கொடுப்பதற்குப் பதில் ரூ.240 தான் தருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் தேங்காயின் பங்கு கணிசமானது. ஆதலால், தென்னையை நன்றாகப் பராமரித்து உரிய பயனை அடைவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயப் பொருள்களின் விலைக் கொள்கை, விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லை. விவசாயப் பொருளாதாரத்தில் ஏற்படும் இலாபத்தைப் பெரும்பாலும் இடைத் தரகர்களே அடைகின்றனர்.

பழம், காய்கறிகளை அழுகாமல் பாதுகாக்கும் வசதிகள் உற்பத்தியாகும் தலங்களில் இல்லை. நெல்லும் கூடப் போதிய பாதுகாப்புச் செய்யப் பெறாமல் பல லட்சம் டன்கள் வீணாகின்றன.

வேளாண்மைப் பொருளாதாரத்தில் சீரான நிலை, நிலவ வேண்டுமானால் மற்றப் பொருள்களுக்குப் போல, உற்பத்தி செய்பவர்களே, விலை நிர்ணயிப்பவர்களாக இருக்க வேண்டும்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இடைத்தரகர் இல்லாமல் இருப்பது நல்லது. தவிர்க்க இயலாது எனில், தரகர்களின் எண்ணிக்கையையாவது குறைக்க வேண்டும். அப்போதுதான் விலை குறையும்; விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்.

நமது நாடு, காய்கறி உற்பத்தியிலும் பற்றாக்குறையுடையதேயாகும். அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதும் கூடக் காய்கறியே என்பதை மறந்து விடக் கூடாது. ஒரு ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்ய ரூ. 100 செலவாகும்; ஆனால் வரவு ரூ. 4750 ஆகும். தண்ணிர்த் தேவையும் குறைவே. பராமரிப்பில் மட்டுமே அக்கறை தேவை.

அடுத்து நமது நாட்டுப் பொருளாதாரத்தில் நெல் கணிசமான பங்கு வகிக்கிறது. நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பது மகிழத்தக்கது.

ஆயினும், நமது நாட்டில் நெல் உற்பத்தி ஹெக்டேர் ஒன்றுக்கு 3% டன்னுக்குப் பதில் 1% டன்னாகத்தான் இருக்கிறது. நெல் உற்பத்தியை மேலும் கூட்டினால் வேளாண்மைப் பொருளாதாரம் சிறக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மைப் பொருளாதாரம் முதல் இடத்தை வகிக்க வேண்டும். தரிசு நிலங்கள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் மேம்பாடு அடைய வேண்டும்.

விவசாயத்தைப் பன்முகமாகச் செய்தால்தான் நெல், பழமரங்கள், தென்னை, காய்கறிகள் என்று நிலத்தைப் பிரித்துச் சாகுபடி செய்தால்தான் ஆண்டு முழுவதும் வருமானம் வரும்.

கூடுதலான நிலப்பரப்பில் வியாபார ரீதியான பழங்கள், தென்னை போன்றவைகளை உற்பத்தி செய்தால் தான் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் அந்நியச் செலவாணியை அதிகமாக அடைய முடியும்.

வேளாண்மைத் தொழில் எல்லாத் தொழிலையும் விடச் சிறந்தது; சுதந்திரமானது; நிலையானது. விவசாயப் பொருள்களின் விலை நிர்ணயம், உற்பத்தி செய்த பொருள்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு உரிய ஏற்பாடுகள் தேவை.

வேலை தேடிப் போக வேண்டாம்!
வேளாண்மையில் ஈடுபடுவோம்!


7. கால்நடை பொருளாதாரச் சிந்தனைகள்

(24-9-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மனித வாழ்க்கையில் கால்நடைகள் வகிக்கும் பங்கு மிகவும் பெரியது ஆகும். மனிதனுக்கு உற்ற தோழமையாக வளர்ந்து, வாழ்ந்து அவனுக்கு ஊட்டம் தருவனவாகவும், ஆக்கம் தருவனவாகவும் விளங்கும் பெருமை கால்நடைகளுக்கே உண்டு.

மனிதனின் இன்றியமையாத் தேவைகளாகிய உணவு, உடை, களிப்பு, மகிழ்ச்சி, காவல் என துறைதோறும் கால் நடைகள் முக்கியமான இடத்தைப் பெற்று வந்து உள்ளன; பெற்று வருகின்றன. விவசாயத் தொழிலுக்கும் கால்நடைகள் தேவை. நிலத்திற்கு வளம் காக்கும் தொழு உர உற்பத்திக்குக் கால்நடைகள் மிகவும் தேவை மட்டுமல்ல, இன்றியமையாதவையுமாகும்.

கால்நடைகள் இல்லையேல் விவசாயம் இல்லை; உணவு இல்லை; ஏன் மனிதகுல வாழ்க்கையின் ஆதாரமே கால்நடைகள் என்றால் மிகையாகாது. அதனாலேயே செல்வத்திற்கு "மாடு” என்று பெயர் சூட்டியது வள்ளுவம்.

தமிழர் தம் அகத்திணை வாழ்விலும் கூட ஏறு தழுவுதல் என்ற துறை அமைந்துள்ளது. தொன்மையான சிவநெறியில் எருது சிறப்பான இடத்தை, சிவபெருமானுக்கு ஊர்தியாகவும், உயர்த்திப் பிடிக்கும் கொடியாகவும் சிறப்பிக்கப் பெறுகிறது. தைத் திங்களில் பொங்கலின் போது, மாட்டுப் பொங்கலும் உண்டு.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு சுமார் 9 விழுக்காடு இருந்து வருகிறது. இந்தியாவில் வேளாண்மைத்துறை மூலம் கிடைக்கும் வருவாயில் 30 விழுக்காடு கால்நடைகள் மூலம் கிடைக்கிறது. இது தவிர, தோல் மற்றும் தோல் அடிப்படையில் ஆன பொருள்களின் உற்பத்தி 2600 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைப் பொருளாதாரத்தின் பங்கு கணிசமாக இருக்கிறது. நமது நாடு, அந்நியச் செலாவணியாக 50 கோடி ரூபாய் வரையில் கால்நடைகளின் தோல், தோல் அடிப்படையிலான பொருள்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டுகிறது. ஆதலால், தரமான கால்நடைகளை - மாடுகளை வளர்ப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைக் கூடுதலாக ஈட்டமுடியும்.

நிலங்களில் பணப்பயிர்கள் சாகுபடி செய்து அடையும் இலாபத்தை விட கால்நடைகளுக்குள்ள தீவனப்புல் வளர்த்து, கால்நடைகளையும் வளர்த்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

மூன்று கலப்பின ஜெர்சி கறவை மாடுகள், 54-1 அளவுள்ள தலைச்சேரி இன வெள்ளாடுகள் கொண்ட ஒரு யூனிட் வைத்து வளர்த்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 22,800 கிடைக்கும். சாதாரணமாகச் செய்யும் சாகுபடியில் ரூ. 8,450 தான் கிடைக்கும். இந்த மாதிரி பண்ணைகளுக்கு "ஒருங்கிணைந்த பண்ணை" என்று பெயர்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் வேலை நாட்களும் குறைவு. பால் உற்பத்தியை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையில் பால் மூலம் கிடைக்கும் ரொக்கப் பணம் மொத்த வருமானத்தைக் கூடுதலாகத் தரும். அதுமட்டுமன்றி ஆண்டு முழுவதும் வருமானம் தரும்.

நாட்டினை வளப்படுத்தும் பாதையில் பலதரப்பட்ட தொழில்கள் இருந்தாலும் விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும்தான் இன்னும் முன்னணியில் உள்ளன

கால்நடை வளர்ப்புக்கு அனுசரணையான வேளாண்மைக் காடுகளிலும் அதைச் சார்ந்த தொழில்களிலும் நாட்டின் 60 விழுக்காடு மக்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டு மக்கள் தொகையில் 60 விழுக்காடு மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது கால்நடைகள் வளர்ப்பும், கால்நடை சார்ந்த தொழில்களுமேயாம்.

தமது நாட்டு மக்களுக்கு - விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு அறிவியல் சார்ந்த தொழில் என்பதை உணர்த்த வேண்டும். கால்நடைகளை அறிவியல் சார்ந்த வகையில் வளர்க்காவிடில் போதிய பயன் தாரா வருவாயும் தாரா.

பழங்காலத்தில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையின் துணைத் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று, கால்நடை வளர்ப்பு, வியாபார நோக்கத்துடன் கூடிய ஒரு தொழில் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டது.

கால்நடைகளில் கலப்பினம், கால்நடை வளர்ப்பில் புதிய நெறிமுறைகள் - உத்திகள், நோய்த் தடுப்பு முறை, கால்நடை அடிப்படையிலான புதிய புதிய தொழில்கள் ஆகியன நாளும் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வளரும்.

இத்தகு அறிவியல் சார்ந்த பேணலால் - பராமரிப்பால், 1970-1971-ல் 93,400 டன்னாக இருந்த பால் உற்பத்தி, 3,37,500 கு xvi 25 டன்னாக உயர்ந்துள்ளது. இது தவிரக் கோழிப்பண்ணை வளர்ப்புத் தொழிலால் 1961-ல் 650 கோடி ரூபாய் மதிப்பி லிருந்து, 1989-ல் ரூ. 34,540 மில்லியன் ரூபாய் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றையும்விட இந்தியாவில் கால் நடைகள் அதிகம். உலகத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையில் சற்றேறக் குறைய 21 விழுக்காடு நமது நாட்டில் உள்ள கால்நடைகள்.

கால்நடைகளில் முதன்மையானது பசு. நமது சமுதாய மரபுப்படி பசு, பூசனைக்குரியது. ஆயினும் பசுக்கள் வளமாக வளர்க்கப்படுவதில்லை.

நமது நாட்டில் 17.6 கோடி பசுமாடுகள் உள்ளன. எருமைகள் 5.3 கோடி உள்ளன. ஆக 22.9 கோடி மாடுகள். இவற்றில் காளை கிடா ஆகியவற்றைக் கழித்துக் கணக்கிட்டதில் 8 கோடி பால் மாடுகள் உள்ளன.

இந்த 8 கோடி பால் மாடுகளில் 24 இலட்சம் பால் மாடுகள்தான் தினசரி 2 லிட்டருக்கு மேல் பால் கொடுக்கின்றன. பாக்கி 56 இலட்சம் பால் மாடுகள் தினசரி 2 லிட்டருக்கும் குறைவாகவே பால் கறக்கின்றன.

நம் நாட்டுப் பசுக்கள் வருடம் சராசரி 175 கிலோ கிராம்தான் பால் கறக்கின்றன. எருமைகள் வருடம் சராசரி 440 கிலோ கிராம் பாலே கறக்கின்றன. இந்த அளவு, அறிவியல் சார்ந்த முயற்சியால் 5431 லிட்டராக உயர்த்தப் பெற்றுள்ளது.

நமது தமிழ்நாட்டில் 107.75 இலட்சம் பசுக்களும் 2879 இலட்சம் பால் கறக்கும் எருமைகளும் உள்ளன. தமிழ் நாட்டில் ஒரு பசுமாடு ஓர் ஆண்டுக்குக் கொடுக்கும் பாலின் சராசரி அளவு 200 லிட்டர்; ஓர் எருமை 283 லிட்டர். ஓர் ஆடு 20 லிட்டர். ஆயினும் நம்முடைய தேவையை நோக்க, பற்றாக்குறையே!

ஒரு மனிதனுக்குச் சராசரி ஒரு நாளைக்கு 280 கிராம் பால் தேவை. தமிழ்நாட்டில் கிடைப்பதோ சராசரி 61 கிராம்தான். இந்தப் பற்றாக்குறையைப் போக்க, தரமான கால்நடைகளை வளர்க்க வேண்டும்.

நவீன அறிவியல் சார்ந்த பராமரிப்பு முறைகளைக் கையாண்டு பால் உற்பத்தியைக் கூட்ட முயலவேண்டும். அப்போதுதான் நமது பொருளாதாரம் மேம்பாடுறும்.

நமது தேவையில் 37.5 விழுக்காடு பாலே இப்போது உற்பத்தியாகிறது. பால் உற்பத்தி மும்மடங்கு உயர்ந்தால்தான் சுயதேவை பூர்த்தியாகும். மக்களுக்கு நலம் சார்ந்த வாழ்க்கை கிடைக்கும்.

பண்ணைகளில் வளர்க்க, பசுக்கள் சிறந்தவையா? எருமைகள் சிறந்தவையா? கணக்கின்படி பார்த்தால் பசுவை விட, எருமை அதிகப் பால் கறக்கிறது. பசுவின் பாலில் உள்ளதைவிட எருமைப் பாலில் இரண்டு மடங்கு வெண்ணெய் அதிகமாக இருக்கிறது. பண வருவாயை நோக்கின் பசுவைவிட எருமைதான் நல்லது.

ஆனால், பசு தூய்மையாக இருக்கும். எருமை அசுத்தமானது. எருமைகள் வளர்ப்பதால் நோய் பரவுவதற்குரிய வாயில்கள் மிகுதி. மக்களின் நீண்ட நெடிய நல்வாழ்வு நோக்கில் பசுமாடுகள் வளர்ப்பே நல்லது.

மாடுகளின் வளர்ச்சி 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் முடிந்துவிடும். அதன் பிறகு அவை வளர்ச்சி அடைவதில்லை. பசுமாட்டின் சராசரி வயது 20 முதல் 23 ஆண்டுகளாகும். எருமை மாட்டின் சராசரி வயது 23 முதல் 25 ஆண்டுகளாகும்.

ஆகவே, மாடுகளின் வளர்ச்சிப் பருவமாகிய கன்றுகளாக இருக்கும் பருவ காலத்தில் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொடுத்து நன்றாக வளர்க்கவேண்டும். கன்றுகளுக்குப் புரதச் சத்துள்ள உணவு அதிகம் தேவை.

ஒரு பால்மாடு சராசரி தினசரி 10 முதல் 15 லிட்டர் வரை பால் கொடுக்காது போனால் பால்மாடு வளர்த்தல் தொழில் ரீதியாக அமையாது. பண வருவாய் குறையும்; செலவு கூடும். சராசரி 8 லிட்டராவது கறக்கவேண்டும். 2 லிட்டருக்கும் பால் குறைந்தால் அந்தப் பால்மாடு வளர்ப்பவர்க்குச் சுமையேயாகும்.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் 60 லிட்டர் வரை ஒரு மாடு கறக்கிறது. நமது நாட்டிலும் பழைய காலத்தில் குடத்தில் பால் கறந்ததாக ஆண்டாள் நாச்சியார் கூறுகின்றார். இப்போது பால் கறப்பது செம்புகளிலும், உழக்குகளிலும்தான்!

பால்மாட்டு வளர்ப்பு மிகவும் பொருளாதார அம்சம் உடையது. ஒரு பசுவின் கறவை மறவைக் காலம் அதாவது ஒரு கன்று ஈனுவதற்கும் அடுத்த கன்று ஈனுவதற்கும் உள்ள கால இடைவெளி குறையவேண்டும். சராசரி, ஓர் ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுதல் வேண்டும்.

ஆனால், நமது நாட்டில் 12 மாதம் முதல் 18 மாதம் வரை கூட, சினைபிடிக்கக் காலதாமதமாகிறது. கறவை மறவைக் காலத்தைக் குறைத்தால்தான் கால்நடை வளர்ப்பில் இழப்பைத் தவிர்க்க இயலும்.

இரு கன்றுகளுக்கிடையில் 60 நாள்கள் பால் வற்றியிருந்தால் போதுமானது. இப்போது நடைமுறையில் 60 முதல் 150 நாள்கள் வரையில் கறவை மறவை நீடிக்கிறது. பல இடங்களில் கூடுதலாகவும் இருக்கிறது.

நாட்டுப் பசுக்களைவிட, கலப்பினப் பசுக்கள் இளம் வயதிலேயே பருவம் அடைந்துவிடும். கலப்பினப் பசுக்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கன்று ஈனும். ஆதலால், நாட்டுப் பசுக்களைவிட, கலப்பினப் பசுக்கள் அதிகப்படியான கன்றுகளை ஈனுகின்றன.

கலப்பினப் பசுக்கள் கன்று ஈன்ற மூன்றாவது மாதத்திலேயே சினைப்பட்டு விடுவதால் சராசரி ஆண்டு ஒன்றுக்கு ஒரு கன்று ஈனுகின்றன. அதிகமான கன்றுகளை ஈனுவதோடு மட்டுமின்றி அதிகமான பாலையும் கறந்து தருகின்றன.

ஆதலால், வளர்ப்புக்கு - பொருளாதார ரீதியில் கலப்பினக் கால்நடைகளே நல்லது. கலப்பின மாடுகளைப் பராமரிக்க அதிகக் கவனமும், அக்கறையும், முயற்சியும் தேவை. பயனை நோக்கும்போது இது பெரிதல்ல.

கால்நடை வளர்ப்பில் முக்கியமானது பசுந் தீவனமாகும். தமிழ்நாட்டிலுள்ள கால்நடைகளுக்குத் தற்சமயம் பசுந்தீவனப் பற்றாக்குறை 50 விழுக்காட்டுக்கும் கூடுதல் ஆகும். இந்த விவரம் புள்ளியியல்படியாகும். உண்மையில் இந்த அளவைவிட, பசுந்தீவனப் பற்றாக்குறை கூடுதலாகவே இருக்கும்.

பொதுவாக நமது நாட்டு விவசாயிகள், தங்களுடைய நிலத்தின் ஒரு பகுதியில் கால்நடைகளுக்குப் பயன்படக் கூடிய பசுந்தீவனங்களைப் பயிரிடுவதில்லை, பயிரிட விரும்புவதும் இல்லை.

பொதுவாகக் கால்நடைகளுக்கு, வேளாண்மைக் கழிவுப் பொருட்களையே தீவினமாகத் தருகின்றனர். இவற்றில் பிரதான இடத்தில் இருப்பது வைக்கோல்.

வைக்கோல், கால்நடைகளுக்கு மிகவும் தேவையான நார்ச்சத்து மிக்க உணவு. ஆனால், வைக்கோலின் மூலம் மாடுகளுக்குக் கிடைக்கும் ஊட்டம் மிகவும் குறைவேயாம். வைக்கோலின் பயன், மலக்குடல் இயக்கத்திற்கு அமுக்கத்திற்கு உதவியாக இருந்து சாணத்தை வெளித்தள்ளுதலேயாகும.

ஆதலால், பால் மாடுகளுக்கு இன்றியமையாதனவாக உள்ள பசுந்தீவனப் பயிர்களை வளர்ப்பதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும். நமது நாட்டு விவசாயிகளில் 80 விழுக்காடு விவசாயிகள் 2% ஏக்கர் நிலமும் அதற்குக் குறைவான நிலமும் வைத்திருப்பவர்களேயாம். இந்தச் சிறு விவசாயி களின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிகுதியும் பயன்தரக் கூடியதும், பண வருவாய் உடையதுமான உபதொழில் பால்மாடு வளர்த்தல், ஏன்?

வருவாய்க்கு உத்தரவாதம் உடைய தொழிலாகவும் அமையும். சிறு விவசாயிகள் தங்களது நிலத்தில் 0.80 ஹெக்டேர் நிலத்தை விவசாயத்திற்கும் 0.20 ஹெக்டேர் நிலத்தை கால்நடைத் தீவனம் பயிர் செய்வதற்கும் என்று ஒதுக்கி, அப்பகுதியில் சோளம், மக்காச் சோளம், கோ 1, கினியாகோ 2, போன்றவைகளை வளர்த்தால் பசுந்தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்.

மேலும் பயறு வகைகளை வளர்த்தால் மனிதருக்கும் உணவாகும். பயறு வகைத் தழைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படும். நிலத்திற்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.

பசுந்தீவனத்தில் புரதச் சத்துள்ள சுபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, துவரை, வேலிமசால் போன்றவற்றை வளர்க்கலாம். இவற்றில் சுபா தழை மட்டும் சில விதிமுறைகளுடன் மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். 10 பங்கு சுபா தழையும் 2 பங்கு இதர பசுந்தழைகளுமாகக் கொடுக்க வேண்டும். தனி சுபா புல் மட்டும் தருவது நல்லதல்ல. தனி சுபா புல் மட்டும் கொடுத்தால் மாடுகள் கழியும்.

கால்நடை வளர்ப்பில் - பொதுவாகப் பால்மாடுகள் வளர்ப்பில் பசும்புல் முக்கிய இடத்தை வகிக்கிறது. எல்லா வகையான பசும் புற்களிலும், பயிர்களிலும் புரதம், வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன.

சினியாப் புல், எருமைப் புல், யானைப் புல், கொழுக் கட்டைப் புல், அருகம்புல், மக்காச்சோளப் புல், சோளப் பயிர் ஆகியவைகள் பயன்படும். மேலும், புரதச் சத்து அதிகமாக உள்ள குதிரை மசால், பில்லி பெசரா, பர்கி ஆகியவைகளும் பசுந்தீவனமாகப் பயன்படும்.

கால்நடைகளுக்குக் கலப்புத் தீவனம், பசும்புல், வைக்கோல் ஆகியவைகள் தினசரி தீவனத்தில் இடம் பெற வேண்டும். மாட்டின் எடையில் ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் ஒரு கிலோ காய்ந்த புல்லும் மூன்று கிலோ பசும்புல்லும் கொடுப்பது நடைமுறை. இத்துடன் 15 கலப்புத் தீவனமும் தரவேண்டும்.

பால் தரும் மாடுகளுக்குத் தீவனம் தரும்பொழுது அவற்றின் எடை, கொடுக்கும் பால் அளவு, பாலின் கொழுப்புச் சத்து போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தீவனங்கள் தரவேண்டும்! பசுக்களுக்குப் புரதம், எரிசத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்து மற்றும் தாதுக்கள் ஆகியவை நாள்தோறும் தேவைப்படும்.

ஆயினும், புரதம், எரிசத்து, தாதுச்சத்துக்கள், சுண்ணாம்பு மணிச் சத்துக்களுக்கு மட்டுமே முதன்மையான இடமளிக்கப் பெறுகிறது. தாதுக்களும், உப்பும் மாடுகளுக்குத் தேவை. உப்புச் சத்து குறைந்துபோனால், மாடுகள் சுவர்களில் உரசும். சிறுநீரை விரும்பிக் குடிக்கும்.

இதைத் தவிர்க்க மாடுகளுக்கு உப்பைத் தீவனத்தில் சேர்க்க வேண்டும். இந்த உப்பை மாடுகளுக்குத் தர, நமது நாட்டு தேசிய ஆராய்ச்சி நிறுவனம். "உப்புக் கட்டி" (Cattle lick) ஒன்றைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உப்புக் கட்டியைப் பால் மாடுகளுக்கு எதிரே கட்டித் தொங்க விட்டு விட்டால் பால்மாடுகள் அதை நக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உப்புக்கட்டி குன்றக்குடி பால் உற்பத்தி சங்கத்தில் வியாபார ரீதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு பால் மாட்டுக்கு நாள்தோறும் சராசரி 13 முதல் 15 கிலோ பசும்புல், 9 முதல் 10 கிலோ இலை, 2 கிலோ வைக்கோல் உணவாக வழங்கவேண்டும்.

பசும்புல் பயிர் செய்ய இயலாத காலத்தில் பயன்படுத்துவதற்காகப் பசும்புல்லை Selaje முறையில் பாது காத்துப் பயன்படுத்தலாம்.

செலேஜ் முறையாவது அரை அடி இடைவெளிகள் விட்டு குழிகளை வெட்டி அதன் அடிப்பகுதியில் வைக்கோற் படுக்கை அல்லது பாலிதீன் பேப்பரை விரித்து, குழியின் பக்கங்களிலும் பாலிதீன் பேப்பர்களைத் தடுப்பாக வைத்து, புற்களை ஒருமுழ நீளத் துண்டுகளாக வெட்டி, பரப்பி வைத்து, அதன்மேல் ஆலைக் கழிவுக் கரும்புச் சக்கைகளை உப்புடன் சேர்த்துப் பரப்பவேண்டும்.

இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்றாகத் தேவையான அடுக்குகளை வைத்தபின், மேல்பாகத்தில் பாலிதீன் பேப்பரால் மூடி, காற்றுப் புகாதபடி மண்ணைப் பரப்பிக் குழியை நிரப்பிவிட வேண்டும். மூன்று மாதத்திற்குப் பிறகு, குழியில் வைக்கப்பட்ட புற்களை எடுத்துக் கால்நடைகளுக்கு வழங்க வேண்டும்.

பசும்புல்லை விரும்பி உண்பதைப் போல, மர இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. அதனால், தொடக்க காலத்தில் பசும் புற்களுடன் தழைகளைச் சேர்த்து அளித்துக் கால்நடைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.

மர இலைகளை 12 மணி நேரம் நிழலில் உலர்த்திக் கொடுத்தாலும் கால்நடைகள் விரும்பி உண்ணும். மர இலைகள் மேல் உப்புக் கரைசலைத் தெளித்து அல்லது வெல்லம் கலந்த தண்ணீரைத் தெளித்துத் தந்தாலும் மாடுகள் விருப்பத்துடன் தின்னும்.

கால்நடைகளின் வளர்ப்பில் வேளாண்மைக் காடுகளின் பங்கு மகத்தானது. எவ்வளவு புல் தீவனம் போட்டாலும் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலில் ஏற்படும் திருப்தி வராது. ஆதலால், ஊர்தோறும் மேய்ச்சல் தரைகள் அமைக்க வேண்டும். ஒரு மாடு, சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மேய 1 முதல் 1% ஏக்கர் நிலம் தேவைப்படும்.

கால்நடைப் பொருளாதாரத்தில் செம்மறி ஆடுகள் உரிய இடத்தைப் பெற்று விளங்குகின்றன. ஆழ்கூள முறையில் வெள்ளாடுகள் - தலைச்சேரி ஆடுகளை வளர்ப்பது நல்ல இலாபகரமான தொழில். வெள்ளாடுகளை ஆழ்கூள முறையில் வளர்க்க வேண்டும். இதனை கொட்டில் வளர்ப்பு என்றும் கூறுவர். இதனால் வெள்ளாடுகளால் ஏற்படக் கூடிய காடுகள் பாதிப்பைத் தவிர்த்திடலாம்.

அடுத்து, கால்நடைப் பொருளாதாரத்தில் நமது கவனத்தை ஈர்ப்பது கோழி வளர்ப்பு. கோழிகளைக் கடுமையாகப் பாதித்த "கம்போரா” நோய்க்கு எதிராக நவீன தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 310 முட்டைகள் என்ற நிலைமை மாறி, தற்போது கூடுதல் முட்டையிடும் புதிய கோழியினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகக் கோழி முட்டைகள் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை கூடியதன் வழி முட்டை உற்பத்தி 682 மில்லியனிலிருந்து 1821 மில்லியனாக உயர்ந்துள்ளது. கோழி வளர்ப்பிலும் ஆழ்கூள முறை அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது.

கால்நடை பொருளாதாரத்தில் மீன் வளமும் அடங்கும், நீண்ட கடற்கரைகளையுடைய நமது நாட்டுச் செல்வத்தில் மீன் வளத்திற்குரிய பங்கு மிகப் பெரிது, கடல் மட்டுமல்ல. உள்நாட்டு நீர் நிலைகளிலும் மீன் வளர்ப்புப் பண்ணைகள் உண்டு.

ஒருங்கிணைந்த பண்ணைகளில் குட்டை இருந்து மீன் வளர்த்தல் நல்ல வருவாய் கிடைக்கும். மீன்கள் அடிப்படையிலான புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன.

நமது நாட்டில் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் அதிகமாகப் பிடிபடும் மீன் வகைகளில் லோமியோ வகையும் ஒன்று. இந்த மீனிலிருந்து ஊறுகாய் தயாரிக்கும் முறை தொழில் நுட்பம் வந்துள்ளது. இங்ஙனம் தயாரிக்கப்பெற்ற ஊறுகாய் 240 நாள்கள் வரையில் கெடாது. ஏற்றுமதிக்கும் உரியது.

அண்மையில் பரவலாகப் பேசப்படுவது இறால் மீன். இறால் மீனின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. செல்வவள நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியைத் திரட்டப் பயன்படுவது இறால் மீன் பண்ணைகள். இறால் மீனுக்குரிய பொருளியல் மதிப்பின் காரணமாக இறால் "பழுப்புத் தங்கம்” என்றழைக்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைகள் வகிக்கும் பங்கு அளப்பரியது. கால்நடைப் பொருளாதாரம் பன்முனைப் பகுப்புடையது. கால்நடைகள், அறிவியல் தொழில் நுட்பத்துடன் வளர்க்கப் பெற்றால் நல்ல இலாபம் தரக்கூடிய தொழில்.

குறைந்த முதலீட்டில் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கக் கூடியது. அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துத் தரக்கூடியது. உள்நாட்டில் மக்களின் உணவுப் பொருள்களாகப் பயன்பட்டு, நீண்ட நெடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவி செய்யக்கூடிய சிறந்த தொழில்.

பால் மாடுகள், எருதுகள் விவசாயிகளுக்கு முழுமையாகப் பயன்படுகின்றன. மாடுகளின் தோல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவி செய்கிறது.

ஆடுகளும் கம்பளி உற்பத்திக்கும், வெறிநாய் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கும் பயன்படுகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் (Citgut) தயாரிக்க உதவுகிறது. பன்றிகளின் இறைச்சி இருதய வால்வுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இங்ஙனம் குடும்பப் பொருளாதாரத்திலும் நாட்டுப் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பதும், மனித குலத்துக்கு எண்ணரிய நன்மைகளைச் செய்து வருவதுமாகிய கால்நடைகளைப் போற்றுவோம்! வீடுகள்தோறும் பசுமாடு களை வளர்த்து வளமுடன் வாழும் திசையில் செல்வோம்!


8. பொருளாதார வளர்ச்சியில்
கூட்டுறவின் பங்கு

(1-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மனித சமுதாயத்தில் மதிப்பீட்டுக் கொள்கை காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அரச பதவிகள் மதிக்கப் பெற்றன. ஆட்சித் திறனும் செங்கோன்மையுமே மதிக்கப் பெற்றன, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அரசர்கள் எல்லோரையும் மனித குலம் மதிக்கவில்லை. புலமைக்கு, திறமைக்கு, தவத்திற்கு மதிப்பு என்றெல்லாம் இருந்து வந்துள்ளன.

இன்றைய சமுதாயத்தில் பணத்திற்கே மதிப்பு. இதனால் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு உடமை சேர்க்கும் சமூகத்தின் பழைய போக்குகள் - மதிப்புக்கள் இன்னமும் மாறவில்லை. இந்த மதிப்புக்குப் பதிலாகப் புதிய மதிப்புக்கள் தோன்ற வேண்டும். அதாவது மனித மதிப் பீட்டுக் கொள்கைகள் உருவாக வேண்டும்.

நமது நாட்டில் ஏழைகளின் தொகுதி மிகுதி. இந்த ஏழைகளுக்கு வாழ்க்கையில் ஆக்கமும், பாதுகாப்பும் தரக் கூடியதும், மனித மதிப்பீட்டுக்குச் சமுதாயம் உருவாகத் துணை செய்வதும் கூட்டுறவு ஒன்றேயாம்.

ஜனநாயக முறையில் பொருளாதா முன்னேற்றம் காண்பதில் பகை வராது. வன்முறைக்கு அதில் வழியில்லை. அமைதியான சகோதர அன்பின் அடிப்படையில் எளிதாகப் பொருளாதார முன்னேற்றம் காணக் கூட்டுறவு துணை செய்யும்.

ஆதிக்கம், இலாபம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் சிரத்தை உள்ளூர முரண்பாடுடையது. இலாபம், ஆதிக்கம் இவற்றில் நாட்டமுடையோர் இலாபத்திற்குத் தரும் முதன்மையை எப்போதும் அன்புக்கும், உறவுக்கும் தரமாட்டார்கள். எவரையும் எப்படியும் தன்னுடைய இலாபத்திற்காகச் சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக் கொள்வர்.

ஆனால், அவர்கள் மற்றவர்களுக்கு உபயோகப்பட மாட்டார்கள். உள்ளூர முரண்பாடான சிந்தனைகளைக் கொண்டிராத மனிதர்கள் அடங்கிய அமைப்புக்களில் தான், கூட்டுறவு வளரமுடியும்; நிலைபெற முடியும்.

பொருளியல் இயற்றுவதில் தனியார் துறை, அரசுத் துறை அதாவது பொதுத்துறை, கலப்புப் பொருளாதார அமைப்பு, கூட்டுறவுத் துறை என அமையும். மனிதகுலத்தில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய சமுதாய அமைப்பே நமது இலட்சியம்.

சோஷலிச சமுதாய அமைப்பை - சர்வோதய சமுதாய அமைப்பை அமைக்க விரும்பினால், அதை நிறைவேற்றத் தனியார் துறை இடமளிக்காது. பொதுத்துறை இடமளிக்கும் என்ற நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது. இப்போது இந்த நம்பிக்கை குறைந்து வருகிறது.

கலப்புப் பொருளாதாரத்திற்கும் இதே கதிதான். சோஷலிச இலட்சியத்தை அடைய - சர்வோதய சமுதாயத்தை அமைக்கக் கூட்டுறவுத் துறையே துணை செய்யும். இது உறுதி.

நமது நாட்டில் உள்ள இன்றைய கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் இதனைச் சாதிக்க இயலாது. இன்றைய கூட்டுறவு இயக்கம் அரசாங்க இயந்திரத்தின் இரும்புப் பிடியில் சிக்கியிருக்கிறது.

இழப்புக்கும், ஈட்டத்திற்கும், பொறுப்பேற்காதவர்கள் மேலாண்மைப் பொறுப்பை ஏற்கிறார்கள். கூட்டுறவில் அமைந்துள்ள உள்ளீடான ஜனநாயக மரபுகள் அழிக்கப்படுகின்றன.

இன்றைய இந்தியாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் கூட்டுறவு வடிவமைப்பைக் கொண்டுள்ளனவே தவிர, உணர்வால் கூட்டுறவு நிறுவனங்களாக விளங்கவில்லை. இந்தக் குறைபாட்டிலிருந்து ஓரிரு கூட்டுறவு நிறுவனங்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு, நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அரசு அலுவலர்களின் சமூகச் சிந்தனையும், ஆர்வமுமே காரணம்.

கூட்டுறவு இயக்கங்களை மக்களே கண்டு, தொடக்கத் திலிருந்து நடத்தி, நேரிடையாக என்று பங்குகொள்கிறார்களோ, பயனடைகிறார்களோ, அன்றுதான் கூட்டுறவு இயக்கம் வெற்றி பெறும்.

நமது நாடு விடுதலை பெற்ற நாள் முதல் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருவது "நமது இலட்சியம் கூட்டுறவுப் பொதுநலச் சமுதாயம்” என்பது. ஆனால், இந்தத் திசையில் இன்று நாம் செல்லவில்லை. வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ சமுதாய அமைப்பை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது. வறுமைக் கோடு என்று ஒன்று நீளுகிறது. அல்லது உயர்கிறது. இந்தப் போக்கு மாற "கூட்டுறவுப் பொதுநலச் சமுதாயம்” காண்பதே வழி; வேறு வழி இல்லை.

மக்கள் எந்தச் சூழ்நிலையிலும், பொருளாதார அடிப்படையில், ஒருவரைச் சார்ந்தில்லாமல், தாமே வாழ முடியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த, கூட்டுறவுப் பொருளாதாரச் சமுதாயத்தினால் மட்டுமே இயலும்.

மேலும் பிற பொருளாதார அமைவுகளில் பொருள் கிடைத்தாலும் ஆன்மா வளர்வதில்லை; ஆட்சித்திறன் வளர்வதில்லை. சமூகம் ஒருங்கிணைந்து வாழ்வதற்குரிய பண்பு நலன்கள் வளர்வதில்லை. கூட்டுறவுத் துறையில் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சி உண்டு. ஒரு நல்ல கூட்டுறவாளன் வறியோரை - நலிந்தோரை அவமதிக்கமாட்டான்.

பொருளாதார முயற்சிகளில் கூட்டுறவுக்கு என்று தனியே எதுவும் இல்லை. எத்துறையிலும் கூட்டுறவு அடிப்படையில் பொருளாதார முயற்சிகளைத் தொடங்கலாம். குறிப்பாக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சிறுதொழில் முதலியன கூட்டுறவு முறையில் தொடங்கலாம்.

நமது நாட்டில் வேளாண்மைத் தொழில் கூட்டுறவு முறையில் அமைவது நல்லது. நமது நாட்டில் மிகச் சிறு விவசாயிகளும், சிறு விவசாயிகளுமே எண்ணிக்கையில் மிகுதி. இந்த விவசாயிகள் தங்களின் சிறு சிறு துண்டு நிலங்களில் நவீன சாதனங்களைப் பயன்படுத்த முடியாது. வேலை நாட்களும் அதிகம் பிடிக்கும்.

இதைத் தவிர்க்க 1000 ஏக்கர் நிலப் பரப்பளவில் ஒரு கூட்டுறவு விவசாயப் பண்ணை என்று அமைத்துக் கொண்டால் நவீன விவசாயக் கருவிகளை எளிதில் வாங்கிப் பயன்படுத்த முடியும். ஒரு விவசாய விஞ்ஞானியைக் கூட முழுநேரப் பணியாளராக அமைத்துக் கொள்ள இயலும். விவசாய வேலையில் நாள்களும் குறையும்.

தரமான கூடுதல் விளைச்சலைத் தரக்கூடிய அளவுக்கு விவசாயத்தைப் புதிய தொழில் நுட்பத்துடன் செய்ய இயலும். இன்று இந்த வாய்ப்பு இல்லை. "கூட்டுறவுப் பண்ணைகளை ஆரம்பிக்காவிடில் நாம் விவசாயப் பலன்கள் எதையும் பெறமுடியாது” என்று காந்தியடிகள் கூறியதை நினைவு கூர்க.

கூட்டுறவுப் பண்ணையில் இரண்டுமுறை இருக்கிறது. உரிமைக்குப் பாதகமில்லாமல், நிலத்தையே கூட்டுறவுப் பண்ணையில் ஒப்படைத்து விடுவது ஒருமுறை. இன்று நமது நாட்டு நிலப்பரப்புகளில் வரப்புக்கள் அதிகம்.

நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு குறைந்தது ஒரு ஏக்கர் - உச்ச பட்சம் பத்து ஏக்கர் என்ற அளவில் நன்செய்க் கழனிகளாகப் பிரித்து, சாகுபடி செய்யப்பெறும். மகசூல் தொகுக்கப் பெற்று, ஏக்கர் அடிப்படையில் பங்கிட்டுத் தரப்பெறும். இது முற்றாகக் கூட்டுப் பண்ணை. இந்த முறையில் பயன் மிகுதி.

பிறிதொரு முறை விவசாயிகள் கூட்டுப்பண்ணை. 1000 ஏக்கர் நிலத்தைக் குறியீட்டு எல்லையாகக் கொண்டு ஒரு விவசாயக் கூட்டுறவுப் பண்ணை அமைப்பது. இங்கு நிலம் பண்ணையில் சேரவில்லை. விவசாயிகள் மட்டுமே சேர்கிறார்கள். இந்தப் பண்ணை அமைப்பிலும் புதிய விவசாயக் கருவிகள் முதலியன கிடைக்கும். ஆனால், பங்குத் தொகைக்கு ஏற்பவே கிடைக்கும்.

விவசாயப் பொறுப்பு, விவசாயினுடையதே. விவசாயிக்கு வேலை நாள் கிடைக்கும். பல தனி முயற்சிகள் தேவைப்படும். நல்லமுறை தான். ஆனாலும் பயன் குறைவு. பல தனி முயற்சிகள், ஒரு மாபெரும் கூட்டு முயற்சிக்கு ஈடாகாது என்பதை நாம் உணரும் பொழுதே கூட்டுறவின் இன்றியமையாத் தேவையை உணர்வோம்.

நமது நாட்டின் விவசாயிகளில் 60 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் வாழ்கின்றனர். அவர்களிடம் உள்ள நிலம் மிகச் சிறிய அளவே. இந்த நிலத்தைக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கையை நடத்த இயலாது. ஆதலால், விவசாயிகள் ஆண்டுதோறும் கடன்படுகிறார்கள்.

இன்று விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் நான்கில் ஒரு பங்கினரை வேறு வேலைக்கு மடைமாற்றம் செய்வது விவசாயப் பொருளாதாரத்திற்கு ஆக்கம் தரும். இங்ஙனம் வேறு தொழிலுக்கு மாறும்பொழுது கூட்டுப் பண்ணை முறையிருப்பின் அந்தப் பண்ணை அவருடைய நிலத்தை விவசாயம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.

ஆதலால், கூட்டுப் பண்ணை முறை மிகவும் ஏற்றது, குறைந்த அளவில் பயன்தரக்கூடிய விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தையாவது அமைத்து நமது வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு ஆக்கம் தந்து நமது நாட்டைத் தற்சார்புடையதாக்க வேண்டும்.

அடுத்து, நமது வாழ்க்கையில் இடம்பெறுவது உற்பத்தி செய்த பொருள்களை விற்பது. நமக்குத் தேவையான நுகர் பொருள்களை வாங்குவது. இவ்விரண்டும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவை.

உற்பத்திப் பொருளுக்கு நியாய விலை கிடைக்க வேண்டும். இன்று அது கிடைப்பதில்லை. உற்பத்தியாகும் பண்டங்களை, பொருள்களைப் பாதுகாத்து சீரான விலைக்கு விற்கும் பணியையும், நுகர்வுப் பொருள்களை நியாயமான விலைக்குக் கிடைக்கச் செய்யும் பணியையும் செய்வது கூட்டுறவுப் பண்டக சாலை.

இது இன்று நாள்தோறும் நஞ்சென ஏறிவரும் விலை ஏற்றத்தைத் தடுக்கக் கூடியது. கூட்டுறவுப் பண்டகசாலை உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இலாப நோக்கில்லாது இயங்கித் தொண்டு செய்யக்கூடியது. அது மட்டுமல்ல, கலப்படமில்லாத சுத்தமான பொருள்களுக்கும் உத்தரவாதம் தரும்.

ஊர்தோறும் கூட்டுறவுப் பண்டக சாலையைக் காண்போம்! உற்பத்திப் பொருள்களுக்கு நியாய விலை பெறுவோம்! கலப்படமில்லாத நுகர் பொருள்களைப் பெறுவோம்! நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களையும், மருந்துகளையும், உடுத்தும் ஆடைகளையும் பெறுவோம்!

கூட்டுறவு இயக்கம் முதன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கியது. இங்கிலாந்தில் கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல் என்ற நெறிமுறையில் வாழ்வோர் சிலர் தோன்றினர். இவர்களில் முதன்மையானவர் ஓவன். ஓவன் அவர்களைக் "கூட்டுறவுத் தந்தை” என்று பாராட்டுவர். கூட்டுறவு இயக்கம் கி.பி, 1844-ல் தோன்றியது.

நமது நாட்டில் 1924-ல் தொடங்கியது. இலட்சிய நோக்குடைய சிலர் கூடி, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக அமைக்கப்படுவது கூட்டுறவு. அச்சிலர் காலப்போக்கில் பலராகவும் அமையலாம்.

ஆயினும், சமூகச் சிந்தனை இலட்சியப் போக்கு, கருத்தொற்றுமை உடையோர்களே கூட்டுறவில் உறுப்பினராகச் சேரவேண்டும். இங்ஙனம் அமையாவிடில் வண்டியின் நுகத்தடி தெற்கு நோக்கியும், வண்டி வடக்கு நோக்கியும் போகவேண்டும் என்று எண்ணுவதைப் போல் முடியும்.

கூடி வாழ்தல் என்பது எளிதன்று. சுயநலமும், தன் முனைப்பும் மனிதனைக் கூடிவாழ, கூடித் தொழில் செய்ய அனுமதிக்காது. ஒருமையுளராகி உறவுகளைப் பேணி வளர்க்கத் தெரியாதார் குற்றங்களை முயன்று காண்பர், இயல்பாகக் குற்றங்கள் இல்லையெனினும் படைப்பர்; சிறுமை தூற்றுவர். இத்தகு மனப்போக்குடையோர் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஒத்துவர மாட்டார்கள்.

நோயும், மரணமும் துரத்தினாலும், எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மருத்துவர்களை நாடுகின்றோம்; மந்திரங்களை நாடுகின்றோம்; சாமிகளைக் கும்பிடுகின்றோம். அதுபோலத்தானே மனித உறவிலும்

கு.xvi 26 பிரிவுகள் தோன்றுவது! இந்தப் பிரிவுகள் உடனுக்குடன் மருத்துவம் செய்யப் பெற்றுச் சீர்செய்யப் பெறாவிடில் கூட்டுறவு வளராது.

கோடிக்கணக்கான செற்கற்களைக் கொண்டுதான் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றில் அடுக்கப் பெறும் கற்கள் ஒன்றையொன்று தழுவித் தாங்கிக் கொள்வதன் மூலமே சுவர்கள் எழும்புகின்றன. அதுபோல, நாம் ஒவ்வொருவரும் பிறிதொரு நபரைத் தழுவித் தாங்கி அழைத்துக்கொண்டு போனால் கூட்டுறவு தோன்றும்; சமூகமும் தோன்றும்.

அதுமட்டுமா? கொத்தனார் சுவர் கட்டும்பொழுது இடைவெளியைச் சரிசெய்ய சல்லிக் கற்களைப் போடுவார். சல்லிக் கற்கள் கிடைக்காது போனால் முழுக்கல்லை உடைத்துச் சல்லியாக்கிப் போடுவார். ஆனால், சுவரில் சல்லி இருப்பது தெரியாது. சுவரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமே தெரியும். சுவர் தன்னுள் அடங்கியிருக்கும் சல்லிகளைக் காட்டாது. முழுத் தோற்றத்தை மட்டும்தான் காட்டும்.

அதுபோல, மனிதருள்ளும் குணக் கேடர்கள் சிலர் இருக்கத்தான் செய்வர். பலவீனர்கள் இருப்பர். நலிந்தோர் இருப்பர். மனித சமூகத்தின் இந்தக் குறைகள் வெளியே தெரியாமல் நடந்துகொள்வதுதான் கூட்டுறவின் நோக்கம். வல்லவர்களும், வல்லமையற்றவர்களும், ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், ஒருங்கு சேர்ந்து நடத்தும் இயக்கமே கூட்டுறவு.

கூட்டுறவில் அங்கத்தினர்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ, முதலீடு செய்யலாம். ஆனால் முதலீட்டின் அளவால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. எல்லாருக்கும் ஒரே வாக்குத்தான்! கூட்டுறவு சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுவு நிலையைப் பேணுதல் வேண்டும். அது மட்டுமல்ல. கூட்டுறவில் செய்யப்பெறும் முதலீட்டுக்குச் சந்தை வட்டிசுடக் கிடைக்காது. குறைந்த வட்டிதான் கிடைக்கும்.

ஆதிபத்திய நஞ்சுக்கு மாற்று கூட்டுறவேயாம். கூட்டுறவு பயன் அளிப்பது, அதன் இயக்கத்தைப் பொருத்தது. கூட்டுறவு அமைப்பிலுள்ள அங்கத்தினர்கள் அதன் செயற்பாட்டிற்கேற்ப, பயன் அடைவர்.

கூட்டுறவு ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுவது, கூட்டுறவு வெற்றி பெற அதன் அங்கத்தினர்கள் தொடர்ந்து இயங்கவேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்கும் கூட்டுறவே சிறந்தது. கூட்டுறவு மூலம்தான் கடை கோடி மனிதனையும் கடைத்தேற்ற இயலும்.

கூட்டுறவாளர், குறிப்பாகச் சுயநலமற்றவராக இருக்க வேண்டும். இந்தப் பண்பினைப் பெறுதல் எளிதன்று. குறைந்த பட்சம் நிர்வாணத் தன்மையுடைய சுயநலத்தையாவது தவிர்க்க வேண்டும். பொது நன்மைக்கு விரோதமான சுயநலம் உடையவர்கள் கூட்டுறவில் அங்கத்தினராகச் சேர்வதில் அர்த்தமில்லை.

கூட்டுறவில் அங்கத்தினராகச் சேர்வதன் நோக்கம் பலரின் துணை கொண்டு சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல், அதுபோலவே பலருக்கு இவரும் உதவ வேண்டும். பரஸ்பர உதவியின் மறுபெயரே கூட்டுறவு.

கூட்டுறவாளனின் விருப்பமும், விழைவும், பிறர் நலம் சார்ந்ததாகவே இருக்கும். கூட்டுறவாளன் பிறருக்குச் செய்யும் உதவியைக் கடமையாகவே கருதுவான். அந்த உதவிக்குக் கைம்மாறாகப் பிறிதொரு உதவியையோ, நன்றியையோ, பாராட்டுக்களையோ எதிர்பார்க்கக் கூடாது.

கூட்டுறவாளன் எப்போதும் சொல்ல முந்தமாட்டான்; கேட்பதிலேயே ஆர்வம் காட்டுவான்; அவசியம் ஏற்படும் பொழுது சில சொல்லுவான்; பலர் வாயிலாகவும் கேட்கவே விரும்புவான். கூட்டுறவாளனின் உரிமைகள் பின் தள்ளப்பெறும்! எந்தச் சூழ்நிலையிலும், கடமைகளே முன் நிற்கும்! எல்லோருடனும் ஒத்துப் போவதே கூட்டுறவாளனின் கடமை.

செல்வத்தைச் சம்பாதிப்பதால் மட்டும் செல்வராகி விடமுடியாது, அப்படிச் செல்வரான வரலாறும் இல்லை. வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை, செலவு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்தான் செல்வராக முடியும்.

வரவு - உத்தரவாதமில்லாதது. கையில் வந்த அல்லது வரப்போகிற உத்தரவாதம் செய்யப்பெற்ற வரவுக்கேற்ப செலவு செய்ய வேண்டும்; சிக்கனப்படுத்த வேண்டும். அதே போழ்து நலமுடைய வாழ்க்கையும் நடத்த வேண்டும்.

அதனால்தான் கூட்டுறவில், முதலில் பண்டக சாலைகள் தோன்றின. நியாயவிலையில் கலப்படமில்லாத நுகர் பொருள்கள் கிடைக்கக் கூட்டுறவுப் பண்டக சாலைகள் உத்தரவாதமளித்தன. தேவைக்குரிய பொருள்களும் எளிதில் கிடைத்தன.

பொருளாதாரத்தில் மிகப் பெரிய அம்சம் சிக்கனம் தான். "வாழ்க்கைச் செலவுக்கே போதவில்லை. எப்படிச் சிக்கனப்படுத்துவது?" - இது இன்று பலர் கேட்கும் கேள்வி! உண்மையைச் சொல்லப் போனால் ஒருவர் செய்யும் செலவுகளில் முதற் செலவாகச் சேமிப்பே அமையவேண்டும். இங்ஙனம் சேமித்த பொருள் எய்ப்பினுள் வைப்பாக உதவி செய்யும்.

அடுத்து, கூட்டுறவில் பொருள் உற்பத்தி. வேளாண்மைப் பொருளாதாரத்தில் கூட்டுறவின் பங்கு பற்றி முன்பே கூறினோம். அடுத்து, கூட்டுறவு முறையில் சிறு தொழில்களைத் தொடங்கி இயக்குதல். சிறுதொழில் கூட்டுறவு சங்கங்கள் நமது நாட்டில் வேலை வாய்ப்புக்களை வழங்க உதவி செய்யும்.

இன்று நமது நாட்டின் முதல் பிரச்சனை வேலையின்மையே. வேலையைத் தேடி அலையும் இளைஞர்கள் பல இலட்சங்கள் கைம்மாறி ஒரு சிறு பணி வாங்குவதற்குப் பதிலாக கூட்டு முயற்சியில் சிறுதொழில்களைத் தொடங்கினால் அவர்களுக்கும் வேலை கிடைக்கும்; வேறு சிலருக்கும் வேலை வாய்ப்பளிக்கலாம். சிறுதொழில் கூட்டுறவுகளுக்கு மைய மாநில அரசுகள் நிறைய ஊக்கமளிக்கின்றன.

பிரதமர் நேரு யோஜனா சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் நபருக்கு ஒரு இலட்ச ரூபாய் 40 விழுக்காடு மானியத்துடன் தருகிறார்கள். இந்தத் திட்டத்தில் பத்து இளைஞர்கள் ஒருங்கிணைந்து உதவியைப் பெற்றுச் சிறுதொழில் தொடங்கலாம்.

மேலும் முதலீட்டுக்கு - கூட்டுறவு அமைப்பினுடைய பங்கு மூலதனத்துக்கு, 10 பங்கு வங்கிகள் தரும். சிறப்பாகத் தொழிற் கூட்டுறவு வங்கி தரும். ஆதலால், இன்று வாழும் முயற்சியிருப்பின் பணத்திற்குப் பஞ்சமேயில்லை.

இந்தச் சலுகைகளைக் கருவியாகக் கொண்டு கடன் வாங்குவோர் பலர். ஆனால் சிலர்தான் முழுமையாகப் பயன்படுத்துகின்றனர். கூட்டுறவைக் கடன் வாங்குவதற்குரிய சாதனமாகக் கருதாமல், பொருளாதார முன்னேற்றத்திற்குரிய சாதனமாகப் பயன்படுத்தினால் நிச்சயமாக வாழ்க்கையில் வளம் பெருகும்.

ஆர்வம் நிறைந்த அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய கூட்டுறவு முயற்சிகள் தோன்றின், பொருளாதாரம் வளரும். குறைந்த முதலீட்டில் வியக்கத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண முடியும். அதுமட்டுமல்ல. முதலாளி - தொழிலாளி என்ற சமூக அமைப்பு முறை மறையும். எல்லோரும் ஓர் நிலையே என்ற கொள்கை மேவும்.

மக்கள் புவியை நடத்தவேண்டும் எனில், பொதுவில் நடத்தவேண்டும் எனில், அதற்குரிய ஒரே ஒரு சாதனம் கூட்டுறவுதான்! அதனால், சோவியத்தில் புரட்சிக்குப் பின் புனர்நிர்மாணத்தில் ஈடுபட்ட மாமேதை லெனின், கூட்டுறவு இயக்கத்தில் தனிக் கவனம் செலுத்தினார். கூட்டுறவின் வளர்ச்சியே சோஷலிசத்தின் வளர்ச்சிக்கு ஒப்பாகும் என்றார். பொருளாதாரச் சீரமைவுடைய சமுதாய அமைப்பு காலூன்றக் கூட்டுறவே சாதனம் என்றார்.

மக்களின் சிந்தனைப் போக்கையும் செயல்களையும் மாற்றிச் சமுதாயத்திற்குப் பயன்படுபவர்களாக மாற்றுவதில் தான் கூட்டுறவின் வெற்றி இரகசியம் இருக்கிறது. சமூக மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், உறுதுணையாகவும் கூட்டுறவு வெற்றி பெற்றால்தான் கூட்டுறவு இயக்கத்திற்கு அர்த்தமுண்டு.

கூட்டுறவு வெற்றி பெற்றால்தான் நமது நாட்டின் பொருளாதாரம் பலமான அஸ்திவாரத்தில் அமையும். நாட்டின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு ஏற்படும்.

இன்று நமது நாட்டில் கூட்டுறவு இயக்கம் வலிமையாக இல்லை. ஏன் பொதுவாகச் சிற்றூரிலிருந்து டில்லி வரை ஆட்சியிலும், பொருளாதார முயற்சிகளும் ஜனநாயக மரபுகள் வழி நடக்கவேண்டும் என்பதே அரசியல் சட்டத்தின் நோக்கம். ஊராட்சி, கூட்டுறவு அமைப்புகளில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.

இன்று நம்முடைய நாட்டில் ஊராட்சி மன்றங்களிலும், கூட்டுறவு அமைப்புகளிலும் மக்கள் பங்கேற்க முடியாமல் அரசு, அதிகார வர்க்கத்தின் கையில் ஒப்படைத்து விடுகின்றது. காடு பாதி, நாடு பாதி என்பது போலத்தான் கூட்டுறவு இயக்கம். தங்களுடைய உரிமை பறிக்கப்பட்டமை குறித்து மக்களிடத்தில் கோபம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அந்த அமைப்புக்கள் இயங்கியபோது, அங்கத்தினர்கள் அந்த அமைப்புக்களில் ஆவேசிக்கப் பெற்றுப் பங்கு பெற்றிருந்தால் கோபம் வந்திருக்கும். பல கூட்டுறவு அமைப்புகளில் தூங்கும் அமைப்புகளே மிகுதி. மகாசபைக் கூட்டத்திற்கு அங்கத்தினர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கும். "கோரத்தை வைத்தே தப்பித்துக் கொள்வார்கள் நிர்வாகிகள்.”

இன்று நமது நாட்டுக் கூட்டுறவு நிர்வாகத்தில் அரசின் தலையீடுகள் அதிகம். கூட்டுறவு நிர்வாகத்தில் அரசின் தலையீடுகள் குறையவேண்டும். கூட்டுறவு நிறுவனங்களிலே கூட இரண்டு சாதி முறையிருக்கிறது. அரசின் அலுவலராகப் பணி செய்பவர்களுக்குக் கை நிறைய ஊதியம். கூட்டுறவு சங்கத்தின் சிப்பந்திகளுக்குச் சம்பள விகிதம் மிகவும் குறைவு.

மேலும் கூட்டுறவுத் துறையில் வேலை பார்க்கும் சில அரசு அலுவலர்களுக்குக் கூட அரசுத் துறையைப் போல ஊதியம் இல்லை என்பது ஒரு குறை. ஆதலால் இன்று நமது கூட்டுறவுத் துறை பலமாக இல்லை. கூட்டுறவுத் துறையைச் சீரமைக்க உடனடியாக மக்கள் முன்வர வேண்டும்.

மைய அரசு கூட்டுறவுத் துறை குறித்து, கொண்டு வர இருக்கும் நாடு தழுவிய கூட்டுறவுச் சட்டம் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போமாக! கூட்டுறவு அமைப்பில் இன்று சரியான அடித்தளம் இல்லை. ஆனால் மேல்மட்ட அமைப்பு பலமாக இருக்கிறது, இதைத் தவிர்த்து அடிமட்ட அமைப்புகள் பலமானவையாக அமையும்படி செய்யவேண்டும்.

நமது நாட்டுப்புற மக்களின் முன்னேற்றத்திற்குக் கூட்டுறவுத் துறையைத் தவிர வேறு வழியில்லை என்பதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும். சிறியவர்களையும், பலவீனமானவர்களையும் பாதுகாத்துப் பயன்படுத்துவதே குறிக்கோள். நமக்குக் கதி கூட்டுறவேயாம். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமூகம் முழுவதும் வளம்பெற்று வாழ்வதற்குரிய முயற்சிகளுக்குத் துணையாக அமையக் கூடியது கூட்டுறவு தான்! உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவு அடிப்படையில்தான் என்பது வரலாறு. இந்த நினைப்பு - சிந்தனை, நமக்குக் கூட்டுறவின்பால்; ஈடுபடத் துரண்டும்.

சில இடங்களில் கூட்டுறவு தோல்வி அடையலாம். இந்தத் தோல்விக்குக் காரணம் உள்ளார்ந்த கூட்டுறவு உணர்வு இல்லாமையே. தோல்விகளைக் கண்டு துவள வேண்டிய அவசியம் இல்லை. உயிர்ப்பும், உறவும், கூட்டுறவுப் பண்பும் உடையவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெற்று விடுவார்கள். இது உறுதி.

ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வோம்!

ஒன்று சேர்ந்து உண்போம்!

ஒன்று சேர்ந்து வீரியம் பெறுவோம்!

ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்!

எவரையும் வெறுக்காமல் இருப்போம்!


கூட்டுறவின் வழி வளம் காண்போம்! வாழ்விப்போம்! வாழ்வோம்! இதுவே நாம் செல்லவேண்டிய வழி - தடம்!

9. இலட்சிய சமுதாயம்

(8-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மானுட வாழ்க்கை தற்செயலாக ஏற்பட்டதும் அல்ல. அஃதொரு விபத்தும் அல்ல. இயற்கை நியதி. திட்டமிட்டுப் பரிணாம வளர்ச்சியில் வாய்த்தது இந்த வாழ்க்கை. அற்புதமான ஆற்றல்மிக்க புலன்களுடனும் பொறிகளுடனும் அமைந்தது இந்த வாழ்க்கை.

இப்படி அமைந்ததொரு வாழ்க்கை பயனுடையதாக, புகழ்மிக்கதாக அமைய வேண்டாமா? அமைவுகள் மிகுதியுமுடைய இந்த வாழ்க்கை எதற்காக அறிவு அறியும் கருவிகள், செயல் செய்யும் பொறிகள் அனைத்தும் அமைந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன? பயன் தான் என்ன? அறிந்துகொள்ள வேண்டாமா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?

உடம்பொடு உயிர் பொருந்திய நிலையில் வாழ்வுக்கு உயிர்ப்பாக இருப்பது மூச்சுக் காற்று! மூச்சுக் காற்று அடங்கினால் உயிர்ப்பு நின்றால் மரணம். அதனால், உடலில் உயிர்ப்பு நிலை இருக்கும்பொழுதே தகாதனவற்றை யெல்லாம் புறத்தே தள்ளி, நல்லன கொள்ள வேண்டாமா? எண்ணுங்கள்! சிந்தனை செய்யுங்கள்!

தேடி, சோறு நித்தம் தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசி, வேடிக்கைமனிதராய் மாண்டு போகக் கூடாது. புகழ்மிக்க வாழ்க்கை வாழ்தல் வேண்டும். அதனாலன்றோ, திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியலின் முடிவில் 'புகழ்' என்று ஒர் அதிகாரம் வைத்தது. புகழ் பெறுதல் என்பது எளிதன்று; இமயத்தின் உச்சியில் ஏறுவதினும் கடினமானது. பேச்சால், எழுத்தால் பாராட்டு வரலாம். அது புகழன்று. பதவிகளால் சுற்றி நின்று பயனடைவோர் வானளாவப் புகழலாம். அதுவும் போலியேயாம்! விளம்பரம் தான் ! புகழன்று!

செயல்வழிச் சாதனைகள் செய்வதுதான் புகழ் பெறுவதற்குரிய வழி! அந்தச் சாதனைகளும் கூட நாட்டின் வரலாற்றை நகர்த்துவதாக அமைய வேண்டும்; மானுடத்தை அரித்துத் தின்று அழிக்கும் சாதிப்பிரிவினைகள், கொடிய நோய்கள், வறுமை ஆகியவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியே புகழ்மிக்க பணி! அதுவே வாழ்க்கையின் குறிக்கோள்! இலட்சியம்!

சென்ற காலத்தில் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த சாதித்த சாதனைகளாலேயே இன்று நம்முடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் குறிக்கோள் தேவை! இலட்சியம் தேவை! இன்று, இலட்சியம் உடைய மனிதர்களைத் தேடினும் காணக் கிடைப்பதில்லை. ஒரு சிலர், சின்னஞ்சிறு செயல்களையே இலட்சியம் என்று கருதிக் கொண்டுள்ளனர். வேறு சிலர் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

கற்றவர்களும் அறிஞர்களும் வீரர்களும் பணம் சம்பாதிப்பதை ஒருநாளும் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளமாட்டார்கள். சின்னஞ்சிறு செயல்கள் செய்வது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாம் இலட்சியங்கள் ஆகா. வாழ்க்கையின் படிக்கற்கள் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

"குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று பாடுகின்றார் அப்பரடிகள். உடலுக்கு ஆன்மா மரத்திற்கு வேர் மனிதனுக்கு இலட்சியம்; வாழ்க்கையில் மனிதன் அடிமையாக இருக்கக் கூடாது!

ஒரு வேலையை ஊதியத்தையே குறிக்கோளாகக் கொண்டு செய்வது அல்லது பயந்து கொண்டு செய்வது என்ற குணமிருந்தாலும் அடிமைத் தனமேயாம்;

ஒரு வேலையை - ஒரு பணியை அந்த வேலைக்காகவே தாமே ஆர்வத்துடன் பயன்பாடு கிடைக்கும் வகையில் செய்வது சுதந்திரமான வாழ்க்கையாகும். தாம் எடுத்துக் கொண்ட பணியை முறையாகச் செய்வதே இலட்சியம், சுதந்திரம்; இன்பம்!

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியம் எது என்று சிந்தனை செய்து முடிவு செய்ய வேண்டும். ஒரு சிலருக்குத் தன் வாழ்க்கைக்கு என்று இலட்சியம் நிர்ணயம் செய்துகொள்ளும் சூழல் அமையாது போகலாம். அப்போது நீரும் நிழலும் போலத் தன்னுடைய தோழமையாகப் பழகும் சில நண்பர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு ஒரு கூட்டு இலட்சியமாக எடுத்துக் கொள்ளலாம். பலர் வாழ்வில் இதுவே நடைமுறையில் சாத்தியம்; அப்படி எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்தல் வேண்டும்; போராட வேண்டும்.

இலட்சியம் என்பது பெரும்பாலும் நாட்டையும் மக்கட்சமுதாயத்தையும் மையமாகக் கொண்டுதான் அமையும். மற்ற உயிர்க்குலத்தை மையமாகக் கொண்டு இலட்சியம் தோன்றலாம். மொழி, சமய அடிப்படையிலும் கூட இலட்சியம் தோன்றலாம். எடுத்துக்கொண்ட இலட்சி யத்தை அடைவதற்கேற்றவாறு தன்னுடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இலட்சியம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. கடந்த காலத் தோல்விகளையும் துன்பங்களையும் மறத்தல், தன் முன்னே நிற்பனவற்றை நாடுதல், நிகழ்காலத்தை மதித்தல், எதிர்காலத்தை நோக்கி விரைந்து பணி செய்தல் முதலிய குணங்கள் வேண்டும்.

பழக்கம், குணத்திற்கு அடிப்படை, குணம், இலட்சியத்தை இனம் காட்டும். எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்குரிய பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்க! எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காகப் போராடு! உயிரைக் கொடுத்துப் போராடு!

வெறும் சோற்றுப் பிண்டமாக நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட இலட்சியத்துடன் சில ஆண்டுகள் வாழ்ந்தாலே போதும். வரலாற்றில் செய்திகளில் இடம் பெறுவது இலட்சியம் அல்ல, நீயே நாட்டின் வரலாற்றை உருவாக்க வேண்டும். அதுவே, இலட்சியம் நிறைந்த வாழ்க்கை! தெளிவான இலட்சியத்தைத் தேர்வு செய்து கொள்க! அந்த இலட்சியத்திற்காகப் போராடுக ! இடையூறின்றிப் போராடுக! இலட்சியமே வாழ்வென வாழ்க!

வாழ்க்கை, முன்னர்க் கூறியபடி அறிவு சார்ந்தது; அறிவியல் சார்ந்தது. புலன்கள் அனைத்தும் அறிவை அறியவும், அறிந்த அறிவை உணர்த்தவும் கூடியன. பொறிகள் நுகர்வுச் சாதனங்கள் மட்டுமல்ல. அறிவு அடிப்படையில் செயற்படும் தொழிற் கருவிகளுமாகும். இலட்சியத்தையும், இலட்சியத்தின் அடிப்படையிலான செயலையும் ஆய்வு செய்து இலட்சியத்தைத் தேர்வு செய்துகொள்வதே அறிவியல் பாங்கு.

அன்பாக இருப்பது என்பது ஒரு குணம் - பண்பு. இந்த அன்பு கூட, சுயநலத்தின் காரணமாக அமையலாம். அத்தகைய அன்புக்குக் கூட இடைமுறிவுகள் உண்டு. ஆனால், அன்பே இலட்சிய அடிப்படையிலிருப்பின் அந்த அன்பு வளரும். பிறை நிலாப் போல வளரும்; எல்லா இடர்ப்பாடுகளையும் கடந்து வளரும். பிரிவதற்குரிய காரணங்கள் தோன்றினாலும் அக்காரணங்கள் புறக்கணிக்கப்படும்.

மானம்கூட கூடப்பிறந்ததுதான். அதுவே இலட்சிய அன்பு. இத்தகைய அன்புடையோர் சில பொழுது மரணத்திலும் கூட ஒன்றாகிவிடுவர். இந்த அன்பு, இலட்சிய அன்பு. இங்ஙனம் அன்பு, இலட்சிய அன்பாக மாற வேண்டு மானால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இயல்பு தேவை. அறிவறிந்த நட்பும் உறவுமே இலட்சிய அன்பாக, உறவாக முடியும், வளர முடியும்.

எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் நிலையாக நின்று உழைத்திட, தளர்ச்சியில்லாமல் அந்தத் திசையில் செல்ல அறிவு வேண்டும். இலட்சியத்தின் வழியில் நடைபெறும் பணிகளை, செய்யும் காரியங்களை அறிவியல் பார்வையால் ஆய்வு செய்து, குறைகளை நீக்கச் செய்துகொண்டே போக வேண்டும்.

இலட்சிய வாழ்க்கையை விரும்புபவர்கள் தங்களுடைய சூழ்நிலைகளின் காரணமாகப் பலவீனம் அடைந்து விடக்கூடாது. சூழ்நிலைகளையும் சரிப்படுத்திக் கொண்டு அவற்றைக் கருவிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

அறிவியல் என்பது எதையும் ஆராய்ந்து தெளிந்து முடிவுகளை எடுப்பது, விருப்பங்களின் படியும் ஆசைகளின் அடிப்படையிலும் உணர்ச்சிகளின் நிலையிலும் முடிவு எடுத்தல் கூடாது.

வாழ்வதற்கும், பலர் கூடிவாழ்வதற்கும். இம்மாநிலம் பயனுறத்தக்க வகையில் இலட்சியத்தைத் தேர்வு செய்யவும். தேர்வு செய்த இலட்சியத்தை அடையும், முயற்சிகளுக்கும் அறிவு தேவை. அறிவியல் பார்வை தேவை. அறிவியல் சார்ந்த முடிவுகளும் செயல்களுமே வெற்றியைத் தரும். இலட்சியத்தைத் தேர்வு செய்க, அறிவியல் முறையில் ஆய்வு செய்து இலட்சியத்தைத் தேர்வு செய்க; அந்த இலட்சியத்தை அடையும் முயற்சியுடன் வாழ்க!

மனிதன் தனியே வாழ்ந்துவிட முடியாது. அவன் பலருடன் கூடி வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால், கூடிவாழ்கிறான். அதனால், அப்படிக் கூடி வாழ்வது அன்பின் அடிப்படையில், உறவுகளின் அடிப்படையில் இல்லை. நாடகம் நடத்துகிறான்; சுயநலத்திற்காகவும், பயத்திற்காகவும் கூடிவாழ்வதைப் போல நடித்து வாழ்கின்றான்.

அவன் அன்புடன் கூடிய உறவு வாழ்க்கையை கூடி வாழ்தலைப் பெரும் பேறாகக் கருதுவதில்லை. இத்தகைய மனிதக் கூட்டத்தில் அன்பு, கடைச் சரக்கேயாம்.

நம்முடைய நாட்டில் இன்னமும் சமுதாயம் உருவாக வில்லை. "ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்" என்ற சமுதாய நியதி, ஒழுங்கு, ஒழுக்கம் வெற்றி பெற்றால்தான் சமுதாயம் உருவாகும். இன்று மனிதகுலத்தை வருத்தும் தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டுமாயின், முதலில் சமுதாய அமைப்பு உருவாக வேண்டும். அங்ங்னம் ஒரு சமுதாயம் திடீரென்று உருவாகி விடாது. ஒரு இலட்சியம் தோன்றினால்தான் சமுதாயம் உருவாகும்.

இன்று, நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிறைந்த ஓர் இலட்சிய நோக்கமுடைய சமுதாயத்தைக் காண்பதற்கு, தடைகள் பலப்பல உள்ளன. அவற்றுள் தலையாயது பணம்!

அடுத்த தடைகள் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீயபண்புகள்! இத்தீய பண்புகளின் படைக்கலன்களாக உள்ளவை பூட்டுக்கள், களவு - காவல், சுவர்கள், வேலிகள் பட்டங்கள், பதவிகள் முதலியன. இவையெல்லாம் ஒருங்கிணைந்துகொண்டு சமுதாயம் அமைத்தற்குரிய அடிப்படைகளைத் தகர்க்கின்றன; மனிதனைப் பிரித்துவிடுகின்றன.

இன்று ஊர், அரசுக் கணக்கின்படிதான் உள்ளது. ஊர் என்று இலக்கணப்படி "ஒருவருக்காக எல்லாரும், எல்லாருக்காகவும் ஒருவர்" என்ற இலட்சியம் மக்களிடத்தில் இல்லை. ஆரோக்கியமில்லாத போட்டிகள், இலாப வேட்டைகள், தலைமைத்தனத்திற்கு ஆசை முதலியன ஊரை நாள்தோறும் அழித்து வருகின்றன. இவற்றை நாளும் எதிர்த்துப் போராடிச் சமுதாயத்தை விரிவாக்க வேண்டும்; இலட்சியத்தை உருவாக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மனிதகுலத்தில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை அகற்றி, மனிதகுலத்தைச் சமுதாயமாக உருவாக்கலும், ஊர் கூடிவாழ அமைத்தலும் கூட ஒரு நல்ல இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை இந்தத் தலைமுறையில் அடைந்தால் இந்தியா வளரும்; வாழும்!

"பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்பது வள்ளுவம்! "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு! சமூகத்தை இயக்கும் சக்தி பொருளுக்கே உண்டு! நமது நாடு, வளமான நாடு! பொருள் உற்பத்திக்கு ஏற்ப, இயற்கை வளமும் மனித சக்தியும் உள்ள நாடு. ஆயினும், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.

ஏன்? உடைமை உடையவர்களிடத்தில் உழைப்பைக் காண்பது அரிது! உழைப்பவர்களிடத்தில் உடைமையைக் காண்பது இயலாது. இது நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பு.

நமது நாட்டில் சோஷலிசம் அல்லது சர்வோதயம் அல்லது பொதுவுடைமைச் சமுதாயம் காண இயலாது. "உடைமைக்கு ஊழே காரணம்” என்ற சித்தாந்தம் மக்களின் மூளையில் இடம்பெற்றுள்ளவரை, மக்கள் தங்களிடம் பொருளின்மை அல்லது உடைமையின்மை குறித்து வருந்த மாட்டார்கள்!

நமது நாட்டில் ஏழ்மை, வறுமை இன்று நேற்றுத் தோன்றியதல்ல, பன்னூறாண்டுகளுக்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக வறுமையும், ஏழ்மையும் தொடர்ந்து வருகின்றன. இதற்கு என்ன மாற்று? முதல் மாற்று கூட்டுடைமைச் சமுதாய அமைப்பு அல்லது கூட்டுறவுப் பொதுநலச் சமுதாய அமைப்பு.

கம்பன், "எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாம்” என்று ஒரு இலட்சியப் பொருளாதார சமுதாயத்தைக் காண்கிறான். "உடைமையைப் பொதுமை செய்!” என்றான் பாவேந்தன் பாரதிதாசன். நமது பொருளாதாரம் கடன் பொருளாதாரமாக அமையக் கூடாது; உற்பத்திப் பொருளாதாரமாகே இருக்க வேண்டும்.

தனியார் துறை கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும். பொதுத் துறையையும், கூட்டுச் சமுதாய அமைப்புப் பொருளாதாரத்தையும் பேணி வளர்க்க வேண்டும். துறைதோறும் தன்னிறைவு காணவேண்டும். மக்களுக்கு இலவசம், இனாம் தருவது கூடாது. தூறலால் பயிர் விளைந்துவிடாது. அதுபோலச் சலுகைகளால் மக்கள் வளர்ந்துவிட மாட்டார்கள்.

ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவுள்ள குடும்பமாக அமையவேண்டும்; வளரவேண்டும். நாடு, நாடா வளத்ததாக அமையவேண்டும். ஒவ்வொர் இளைஞனும் சுயமுயற்சியில் பொருள் ஈட்டி, அப்பொருளால் தானே முயன்று கட்டிய வீட்டில் குடியிருக்க வேண்டும். தான் ஈட்டிய பொருளில் பலரோடு கூடி உண்ணவேண்டும்.

“தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்” என்றார் திருவள்ளுவர். இலட்சிய சமுதாயத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்பு உண்டு. காடுகளைத் திருத்திக் கழனிகளாக்குவோம்! ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் அமைப்போம்! உழைப்பவர் உலகை மதிப்போம்! பொருளினைச் செய்வோம்!

வாழ்க்கை உணவினால் மட்டும் ஆனதல்ல. வாழ்க்கைக்குக் களிப்பும், மகிழ்ச்சியும் தேவை. களிப்பும் மகிழ்ச்சியும் நாடகம், திரைப்படம் ஆகியவைகளினால் கிடைக்கும். திரைப்பட உலகம் தோன்றிய பிறகு, நாடக உலகம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்று எங்கும் திரைப்பட மயக்கம். அந்தத் திரைப்படங்களாவது மனிதர்களை அவர்கள் நிலையிலிருந்து உயர்த்துகின்றனவா என்றால் அதுவும் இல்லை.

இன்றைய திரைப்படங்களில் காமக்களியாட்டம், வன்முறை நிகழ்ச்சிகளே அதிக இடம்பெறுகின்றன. திரைப்படம் ஒரு நல்ல கலையே. திரைப்படத்தில் நல்ல இசை மற்றும் கலையம்சங்களும் உண்டு. இசையை அனுபவிக்கும் வாழ்வு தேவை. இலங்கையை வருணித்த கம்பன் “களிக்கின்றார் அலால் கவல்கின்றார், இவர்” என்றான். கலையும் இலக்கியமும் ஆன்மாவைப் பக்குவப்படுத்தும் தன்மையன.

தமிழ், முத்தமிழாகவே பிறந்தது; வளர்ந்தது. தமிழிசை வளர்ந்த இசை, கிராமங்கள் தோறும் இசைக் கலைப் பயிற்சி மையங்கள் தோன்ற வேண்டும். பழைய காலம் போல் கிராமங்களில் திருக்கோயில்களில், தமிழ் நாட்டின் தனித்துவம் பெற்ற நாதசுர இசை முழங்க வேண்டும். மக்கள் கலை, இசை ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலேயே குடும்ப வாழ்க்கை வெற்றி பெறும்.

கிராமங்கள் தோறும் இளைஞர்கள் நாடக மன்றம் அமைத்து, நல்ல நாடகங்களை எழுதி நடித்துப் பயில வேண்டும். நிறை நிலா நாளின்போது தவறாமல் இசை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடக்கவேண்டும். மக்கள் வாழ்க்கையைச் சுமையாகக் கருதாமல் நடத்துவதற்குக் கலை, துணைசெய்யும், இசைக் கலையில் பழகிப் பக்குவப்படுபவர்கள் மனிதர்களாக இருப்பர்.

நமது சமுதாய அமைப்பில் நாடகக் கலைக்கும் பல வகையான இசைக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தாலாட்டில் தொடங்கும் நமது இசைக் கலை வாழ்க்கை முழுதும் தொடரவேண்டும். ஓவியமும் சிற்பமும் தமிழகத்திற்கே உரிய கலைகள். இந்தக் கலைகளை மேலும் மேலும் நம்முடைய சமுதாயம் வளர்க்க வேண்டும்.

ஏழிசையை, பண்ணொடு பொருந்திய பாடலை, மக்கள் மாலைப்பொழுதில் மன்றங்கள் தோறும் அனுபவிக்க வேண்டும். பண்ணும் பரதமும் கலந்த கலையை அனுபவிக்க வேண்டும். இந்த மண்ணை விண்ணகமாக்கும் கண்ணன் குழலோசையும் ஆடல் வல்லானின் ஆடற்கலையும் நமது நாட்டின் வழி வழி வந்த கலைகள்! மேலும் சந்தத் தமிழும், சாம கானமும் நமது உரிமைக் கலைகள்! பயிலுவோமாக! வளர்ப்போமாக!

நமது நாடு அரசியலில், ஆட்சியியலில் வளர்ந்த நாடு. மனிதர்களுக்குள் உறவுகளை நிர்ணயம் செய்யும் நோக்கில்

கு.xvi.27 அரசியல் தோன்றியது; காலப்போக்கில் ஆட்சி முறை வந்தது! நமது நாட்டை ஆண்ட அரசர்கள் மக்கள் நலம் நாடியவர்கள். அதனால்தான் பிரான்சு, சோவியத் போன்ற நாடுகளில் தோன்றிய புரட்சிகளைப் போல நமது நாட்டில் புரட்சி தோன்றவில்லை. என்றும் நமது நாட்டின் ஆட்சி, நீதியைச் சார்ந்திருந்தது. அந்த நீதி சார்ந்த ஆட்சிமுறையை நாம் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.

"ஒரு குலத்துக்கு ஒரு நீதி" என்ற கொள்கையை மறுத்து வளரும் நாம் "ஆட்சிக்கு ஒரு நீதி” என்ற முறையை மேற்கொள்ளக் கூடாது. மிக உயர்ந்த தரமான மக்களாட்சி முறையை நாம் நடத்தவேண்டும். தேர்தலில் மட்டும் ஜன நாயகமல்ல "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பெரு நெறி நமது நாட்டு அரசியலில் ஆட்சியில் இடம்பெற வேண்டும்.

பொற்கைப் பாண்டியன் வரலாறு கண்ட நாடு நமது நாடு. இந்த நாட்டில் காவல்துறைக்கு மகத்தான பொறுப்புள்ளது. காவல்துறை அதன் ஒழுகலாறுகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் போலீசு ஆட்சி வருவதை, போலீசுக்காரர்களும் விரும்ப மாட்டார்கள். இது நம்முடைய நம்பிக்கை. ஏன்? கோபுரத்திற்குக் கலசம் போல, நாட்டிற்குக் காவல்துறை அமையவேண்டும்.

மக்கள், நாட்டின் வளர்ச்சியில் தனிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் பங்கேற்க வேண்டும். நம்முடைய நாடு சட்டத்தால் ஆளப்படுவது. ஆதலால், சட்டத்திற்கு மக்கள் மதிப்பளித்து ஒழுகவேண்டும்; நடந்து கொள்ள வேண்டும். சட்டங்களும் விதிமுறைகளும் மதிக்கப்படும் நாட்டில்தான் மக்களாட்சி முறை பயன்தரும். சட்டத்தை முடமாக்குவது அராஜகத்திற்கு வழி வகுக்கும்.

நம்முடைய நாட்டில் தேசியக் குடிமைப் பண்புகளைப் போற்றி வளர்ப்போம்! அரசின் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்போம்! அரசு தீட்டும் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உடன் நிற்போம்! அரசின் அந்நியக் கடன்களைக் குறைக்க, சிறுசேமிப்பில் முதலீடு செய்வோம்! எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை நடத்துவோம்! வளர்ப்போம்!

நமது நாடு ஆன்மிகத்தில் - சமய நெறிகளில் செழித்து வளர்ந்த நாடு. வேதங்களும், உபநிடதங்களும், சாத்திரங்களும், திருமுறைகளும், திவ்வியப்பிரபந்தமும் பெற்று விளங்கும் நாடு. இன்றும் இந்தியா உலகிற்கு அளிக்கக் கூடியது ஞானம்! ஆன்மிகம் என்பது கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; வழிபாடு மட்டுமல்ல; சமயநெறி சார்ந்த சடங்குகளும் அல்ல.

ஆன்மிகம் என்பது ஆன்மாவின் - உயிரின் தரத்தை, தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் கொள்கை வாழ்க்கை முறை நாத்திகர்களுக்கும் கூட ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. அன்பு, பொறுத்தாற்றும் பண்பு, மனிதர்கள் மீது விருப்பு - வெறுப்பற்ற உளப்பாங்குடன் பழகுதல், பிறிதின் நோய், தந்நோய் போல் போற்றுதல் ஆகிய உயர் பண்புகளைப் பெறும் முயற்சி முதலியன ஆன்மிகம்.

இந்த முயற்சியுடைய வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை இவைகளைத் தனியே பெறமுடியாத நிலையில் பெறுதலுக்குரிய சாதனம் கடவுள் வழிபாடு! கடவுளை "எண் குணத்தான்" "குறைவிலா நிறைவு" "கோதிலா அமுது" "என்னுடைய அன்பு" என்றெல்லாம் போற்றுவர்.

கடவுளை வழிபடுதல் என்பது கடவுள் வழி நிற்றல் - வாழ்தல் என்பதாகும். கடவுளை முன்னிட்டு வழிபாடு நிகழினும் அந்த வழிபாடு கடவுளுக்கல்ல; ஆன்மாக்களுக்கே! அன்பில் பழுத்த மனம் பெறுதல் ஆன்மிகம். பிறருக்கென முயலும் வாழ்க்கை நெறி, ஆன்மிக நெறி. தியாகங்கள் செய்வது. ஆன்மிக வாழ்க்கையின் அடையாளம். "தியாகமில்லாத வழிபாடு பயனற்றது” என்றார் அண்ணல் காந்தியடிகள்!

நாம் அனைவரும் ஆன்மாவில் சிறந்து விளங்குவதே இலட்சியம்! ஆன்மாவை உசுப்பிக்கொள்ள, விழிப்புறச் செய்யத் தேவையான அளவு சடங்குகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், சடங்குகளே ஆன்மிகம் அல்ல; சமயமும் அல்ல!

எங்கும் சோலைகளை வளர்ப்போம்! இயற்கையோடு இயைந்து வாழ்வோம்! நெஞ்சத்தை தண்ணளி உடையது ஆக்குவோம்! அன்பில் வளர்வோம்! அன்பில் வாழ்வோம்! வாழ்வித்து வாழ்வோம்! உயிர்க்கு ஊதியம் சேர்க்கும் தொண்டு செய்வோம்! வன்முறை தவிர்ப்போம்! எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் கொலையை பழிதூற்றும் சிறுமையைத் தவிர்ப்போம்! யாரிடமிருந்தும் எவரிட மிருந்தும் அந்நியமாக மாட்டோம்! ஒருமையுணர்வுடன் எவ்வுயிரிடத்தும் பேதமுறாது பேணிக் காப்போம்!

மானிட சமுத்திரம் நம்முடன் பிறந்து வளர்ந்தது: உடன் வருவது. அந்த மானிட சமுத்திரத்திற்குள் சங்கமம் ஆவதே ஆன்மிக வாழ்வு! "இவர் தேவர், அவர் தேவர் என்று இரண்டாட்டாது சமயக் கலகம் செய்ய வேண்டாம்! என்றார் அப்பரடிகள் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” இதுவே ஆன்மிக வாழ்க்கையின் தாரகமந்திரம்.


"ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி"


என்ற சிந்தனை நமது வாழ்வாக மலரவேண்டும்.

அன்பர்க்ளே! நமது வாழ்க்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறது? உண்டியை, உடையை உகந்து மகிழும் வெற்று வாழ்க்கையாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை மடைமாற்றம் செய்வோம்! வாழ்வாங்கு வாழும் திசையில் நடைபோடுவோம்! அறிவறிந்த ஆள்வினை மேற்கொள்வோம்! பொருள் செய்து குவியுங்கள்! உலகம் உண்ண உண்ணுங்கள்! உலகம் உடுத்த உடுத்துங்கள்! சிறந்த ஆன்மிக வாழ்க்கை வாழ்வோம்! அன்பையே உயிர் எனக் கொள்வோம்! வளமுடன் வாழ்வோம்! இலட்சிய சமுதாயம் அமைப்போம்!


10. சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு


(15-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

சமுதாயம் மேம்பாடு அடைய, சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்! அதாவது, மனிதர்கள் நிர்வாணமாகப் பிறப்பதைப் போலவே நிர்மலமான மூளையுடனும், புலன்களுடனும் பிறக்கிறார்கள். பின் கற்றல், கேட்டல், சிந்தித்தல், செயற்படுதல் மூலம் - குறிப்பாக வாழ்தல் மூலம் - புத்திக் கொள்முதல் செய்கிறார்கள்! அறிவு பெறுகிறார்கள்.

மனிதன் அறிந்து அவனுடைய பிறப்பு நிகழ்வது இல்லை. இறக்கும்பொழுது துன்பப்படுகிறான். ஆனால், வாழ மறந்து விடுகிறான். மனிதன் வாழ்ந்தால் இறப்பில் அவன் வருந்தான். மற்றவர்கள் வருந்துவார்கள். இந்தப் பேறு கோடியில் ஒருவருக்குத்தான் கிடைக்கிறது. மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் துயரத்தைக் குறைத்துக் கொண்டு, அன்பு, பரஸ்பர உதவி ஆகியவைகளை மேற்கொண்டு ஒழுகினால் துன்பச் சுமை குறையும்; துயரங்கள் தவிர்க்கப் பெறும்.

வாழ்க்கை என்பது தனக்காக மட்டுமல்ல. உடல் அமைப்பை உற்று நோக்குங்கள்! கண்களின் அமைப்பு, நம்மைப் பார்த்துக் கொள்வதைவிட மற்றவர்களைப் பார்க்கக் கூடிய நிலையில்தான் அமைந்துள்ளது. செவிகளும் அப்படித்தான் அமைந்துள்ளன! வாயும் மற்றவர்களுடன் பேசத்தான்! தானே பேசிக்கொண்டால் என்ன பொருள்!

வாழ்க்கை, கடமைகளுக்காக வழங்கப் பெற்றது. வாழ்க்கை என்பது கடமைகளினால் ஆயது. சமுதாயத்திற்கு நம்மைப் பயனுள்ளவாறு ஆக்கிக் கொண்டு வாழ, நம்மை நாமே அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்ஙனம் நம்மை வளர்த்துக் கொள்ள நல்ல இலக்கியங்கள் துணை செய்யும்! இந்த உலகில் பயனுள்ளவாறு பேசிப் பழக, நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிது. அதனால், வளர்ந்த மனிதர்களை வரவழைத்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கம்பன், வள்ளுவன், இளங்கோ, மில்டன், டென்னிசன், அப்பர் போன்றவர்களின் படைப்பிலக்கியங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்; அந்த இலக்கியங்களைப் படிக்கவேண்டும். அந்த உத்தம இலக்கிய கர்த்தாக்களுடன் பழகவேண்டும்.

இலக்கியங்களைத் தொடர்ந்து கற்பது, சிந்தனையை வளர்க்கும்; அறிவை வளர்க்கும். நம் ஒவ்வொருவரையும் அனைத்துலக மனிதனாக்கும். இலக்கியங்களின் செழுமையான கருத்துக்களைப் பொறுக்கி நமக்கு வழங்குகிறவர்கள், நம்மைச் செல்வராக்குபவர்கள். மனத்திற்கு வடிவமும் இயக்கமும் தருவதில் இலக்கியம் முக்கிய பங்கை வகிக்கிறது. இலக்கியப் பயிற்சி இன்பம் அளிக்கும். நம்முடைய வாழ்க்கையை நிலைபேறுடையதாக்கி உறுதிப்படுத்துவது இலக்கியம்.

இலக்கியம் வாழ்க்கையை உருவாக்குகிறது! வாழ்க்கையிலிருந்து இலக்கியம் உருவாகிறது. சமுதாயத்தின் வாழ்க்கையை காட்டும் கண்ணாடி போன்றது இலக்கியம்! ஒரு இனத்தின் - மனிதனின் வளத்தை வரிவடிவில் காட்டுவது இலக்கியம். அதே போழ்து சமுதாயத்தை நெடிய நோக்குடன் வளரத் துண்டுவதும் இலக்கியங்கள் தாம். புறத்தூய்மை தண்ணிரால் அமையும். அகத்தூய்மை வாய்மையால் தெரியும். வாய்மைக்கு ஊற்று இலக்கியம். வாழ்க்கை முழுவதையுமே உருவாக்குவது இலக்கியம்.

"இலக்கியங்களைப் படிப்பதைவிட, படிக்கத்தக்க இலக்கியங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்” என்பான் ஏடு தேடு காதலன் ரஸ்கின். திருவள்ளுவரும் "கற்பவை கற்க” என்றார். இலக்கியங்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயத்தின் எண்ணத்தை, சிந்தனைப் போக்கை, விருப்பங்களை, ஆர்வங்களை, குறிக்கோளைக் காட்டுவன. இலக்கு + இயம் = இலக்கியம்.

இலக்கியங்கள் ஒரு குறிக்கோளை நோக்கி மனித சமுதாயத்தை உந்திச் செலுத்துவன. இலக்கியப் பயிற்சி ஓர் உயரிய குறிக்கோளை மனிதனுக்குத் தந்து ஆவேசப்படுத்தவில்லையென்றால் அவன் அந்த இலக்கியத்தைப் படித்தான்! அவ்வளவுதான்! அவன் அந்த இலக்கியத்தைக் கற்கவில்லை; உணரவில்லை; அனுபவிக்கவில்லை!

"தேர்ந்தெடுத்த சில இலக்கியங்கள் திரும்பத் திரும்பக் கற்க தக்கன; அனுபவிக்கத் தக்கன” என்று பிரான்சிஸ் பேக்கன் கூறினான். தமிழ், இலக்கியவளம் படைத்த மொழி, தமிழிலயக்கியங்கள் வரலாற்றுப் பழைமையுடையன. தமிழிலக்கியங்கள் தமிழர் தம் அன்றாட வாழ்க்கையின் படிப்பினைகளாகத் தோன்றியவை.

தமிழிலக்கியங்களில் கற்பனைகளும் புனைவுகளும் அறவே இல்லையென்று கூறலாம். சங்க இலக்கியங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆற்றலுடையன. காப்பியங்கள் குடும்ப, சமூக, அறிவியல் வாழ்க்கைகளை வளர்க்கும் தகையன. திருமுறைகள் அன்பில் நனைப்பன. பாரதி, சுதந்திர தாகத்தைத் தருவான், பாரதிதாசன் புதியதோர் உலகம் செய்யத் தூண்டுவான். இங்ஙனம் இலக்கியங்கள் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உதவி செய்வன.

இலக்கியப் பயிற்சி வளர, வளர மனிதன் வளர்வான்; மனித சமுதாயம் வளரும். இளைஞர்கள் இலக்கியம் பயின்றால் இலட்சிய வீரர்கள் ஆவார்கள். இலக்கியம் கற்போம்; இலட்சியத்துடன் வாழ்வோம்!

சங்ககால இலக்கியங்கள் செல்வத்தைத் தேடும் முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தன. "பொருளே, காதலர் காதல்!” என்று கூறும் அளவுக்கும் பொருள் வேட்கை இருந்திருக்கிறது, ஒவ்வோர் இளைஞனும் திருமணத்திற்கு முன், பொருள் தேடச் செல்லும் பழக்கம் இருந்தது.

ஆடவர் என்றால் அவருக்கு வினையே உயிர் என்று குறுந்தொகை கூறும். "கடவுள் பக்திக்கு அடுத்தபடி முக்கியமான கடமை, அறவழியில் செல்வம் ஈட்டுவதேயாம்” என்று முகமது நபிகள் அருளிச் செய்துள்ளார். வாழ்க்கையின் கருவி, செல்வம். வினை என்ற சொல்லுக்குத் தொழில் என்பது தான் பொருள். சமய உலகம் வேறு பொருளைக் கற்பிக்கிறது. அதனை மறந்து விடுக! ஆடவர், உயிருடன் வாழ்வதற்கு அடையாளம் அவர் செய்யும் தொழிலே, நியாயமான முறையில் பொருளிட்டும் தொழிலில் எதுவும் தாழ்ந்ததல்ல.

செய்யும் தொழிலைச் சிரத்தையுடன் செய்யவேண்டும். சாவதற்கு அஞ்சி உயிர்காத்துக் கொள்வது போலத் தொழிலைச் செய்யவேண்டும். "ஒழுக்கம் உயிர்” - என்று வள்ளுவம் கூறியதைப் போல், குறுந்தொகை "வினையே ஆடவர்க்கு உயிரே" என்கிறது, ஆம்! தொழில் செய்து பொருளிட்டி வாழ்தலே ஒழுக்கம்; இந்த ஒப்புமை சரியானதே!

நாடு, மாநிலம், மாவட்டம் பின்தங்கியது என்று அடிக்கடி பலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. எந்த நாட்டில் மாநிலத்தில் மாவட்டத்தில் அல்லது ஓர் ஊரில் மனிதசக்தியை முற்றாக உழைப்பில் பயன்படுத்தாதவர்களும் அல்லது மிகக் குறைவாகப் பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்களோ அந்தப் பகுதி பின்தங்கியதாகத்தான் இருக்கும்!

அதுபோலவே, பொருள் உற்பத்திக்குப் பயன்படக் கூடிய நிலம், நீர், மற்றும் இயற்கை வளங்கள், தாதுப் பொருள்கள் எங்கு முற்றாகப் பயன்படுத்தப்படவில்லையோ அந்தப் பகுதியும் பின்தங்கியதாகவே இருக்கும். இதனை ஒளவையார்,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!"

என்று பாடினார், அதாவது, நிலத்திற்கு என்று தனியியல்பு ஒன்று இல்லை, எங்கு நல்லவர் வாழ்கின்றாரோ அங்கு நிலமும் வளமாகவே அமையும். "நல்லவர்” என்பதற்கு இன்றைய உலக வழக்கில் உள்ள "அப்பாவி" "செயலற்றவர்" என்ற பொருள் அன்று இல்லை!

அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைக்கும் பண்பு அனைத்தும் பெற்றவர்களையே பண்டைக்காலத்தில் நல்லவர் என்றனர். ஆதலால், மனிதர்கள் முறையாகப் பயன்படும் இடங்களில் எல்லாம் பொருள்வளம் இருக்கும்; பொருள் வளம் செழித்த நிலையில் சமுதாய மேம்பாடு விளங்கும்.

இலக்கியங்கள், செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்த செல்வம் வேளாண்மை வழிச் செல்வமே என்று போற்றுகின்றன. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஒளவையார், "பகடுதரு செந்நெல் போரொடு நல்கி" என்று பாடுகின்றார். கல்லாடனாரும் "பகடு தரும் பெருவளம்” என்று போற்றுகின்றார். அதாவது, எருதுகள் உழுது உண்டாக்கிய செந்நெல் வளமும், பல்வகை நுகர்வுப் பண்டங்களும் பெருவளம் எனப்பட்டன. பொருநராற்றுப்படை,

"சாலி நெல்வின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவேரி புரக்கும் நாடு”

என்று காவேரி நாட்டின் சிறப்பினைக் கூறும் ஒரு வேலி நிலம் 62/3 ஏக்கர். ஒரு ஏக்கருக்கு விளைவு 150 கலம் நெல் அதனால் வளம் கொழித்திருந்தது. பசித்தவர்க்கு இல்லை யெனாது உணவு கிடைத்தது. நாலடியாரும் “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க" என்றது. தமிழ் இலக்கிய உலகம் சமுதாய மேம்பாட்டுக்குரிய பொருள் ஆக்கம் வேளாண்மை மூலமே எனக் கூறியது. திருவள்ளுவரும்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்"

என்றார். புரட்சிக் கவி பாரதி,

"உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்!”

என்றான். செந்தமிழ்ப் புலவர்களிலேயே சங்கப்பாடல்கள் இயற்றிய புலவர்களில் ஒருவர் பெயர் ஓரேருழவர் என்பது. இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. செல்வ மேம்பாட்டில், பொருளாதார ஆக்கத்தில் பறம்புமலை சிறந்திருந்தது. பறம்புமலையை வேள்பாரி ஆண்டான். பாரி இயற்கையை - தாவர இனங்களை மிகவும் கவனமாகப் போற்றியதன் விளைவே முல்லைக் கொடிக்குத் தேரீந்தது. அதனாலேயே அவனுடைய பறம்புமலை உழவர் உழாதன நான்கு பயன் உடையதாக விளங்கியது. அந்நான்காவன; வள்ளிக்கிழங்கு, மூங்கில் அரிசி, பலாப்பழம், தேன்.

ஆதலால், ஒரு நாடு பொருளாதாரத்தில் மேம்பாடுற்று விளங்கவேண்டுமாயின் வேளாண்மைப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். நம்முடைய நாடு, இன்னமும் உணவுப் பொருள்களில் தற்சார்புடையதாக இல்லை! நாம் அங்காடிப் பொருளாதாரத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம். இது தவறு. உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இயற்கைப் பொருளாதாரத்திற்கு - அதுவும் குறிப்பாக வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு நீர்வளம் தேவை. "நீரின்றமையாது உலகம்” என்றது திருக்குறள். தண்ணீருக்கு மூலம் மழை. மழைநீரைச் சேகரித்தல் வேண்டும். கழனிக்குத் தண்ணீரைக் கொண்டுவந்து சேர்ப்பது வாய்க்கால், "நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றம்” என்று மாங்குடிமருதனார் பாடியமை அறிக.

நீர்வளம் சேர்ப்பவை வரத்துக்கால்கள். மழைதரும் தண்ணீர் வளத்தைச் சேமித்துக் காக்கும் பழக்கம் தேவை. தண்ணீரைச் செல்வம் என்றே அப்பரடிகள் கூறுகின்றார். "ஏரிநிறைந்தனைய செல்வன்” என்பது அப்பரடிகள் வாக்கு.

பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியபொழுது "உடலுக்கு உணவு, உணவு என்று சிறப்பித்துக் கூறப்படுவது நிலத்தொடு கூடிய நீர் நிலத்தையும் நீரையும் கூட்டிப் பயன் காண்பவர்கள் இவ்வுலகில் உடம்பையும் உயிரையும் ஒரு சேரப்படைத்தவராவர். ஒரு நாட்டில் நிலப்பரப்பளவு எவ்வளவு மிகுதியாய் இருப்பினும் நீர்வளம் இல்லையேல் அந்நிலம் பயன்படாது. ஆதலால், நிலம் பள்ளமாய் இருக்கும் இடத்தில் கரையைக் கட்டித் தண்ணிரைத் தேக்கு!" என்று அறிவுறுத்துகிறார்.

இங்ஙனம் நீரைத் தேக்குவதைத்தான் இன்று கசிவுநீர்க் குட்டை என்று கூறுகின்றோம். இங்ங்ணம் தண்ணீரைத் தேக்கிப் பயன்கொள்பவர்கள் இந்த உலகத்தின் செல்வத்துடன் இணைக்கப் பெறுவர். தண்ணீருக்குக் கரைபோட்டுத் தளையமைக்காதார் இவ்வுலகத்தில் வாழ்ந்தும் வாழாதாரே!

இனிய அன்புடையீர்! மழைவளம் வர, வரக் குறைந்து வருகிறது! மழை, தேவை! மழைவளம் சிறக்கக் காடுகளை வளர்க்கவும்; அடர்த்தியான காடுகளை வளர்க்கவும். அகன்ற இலைகளையுடைய மரங்கள் அதிகமான மழையை வரவழைக்கும். பெய்யும் மழைத்தண்ணீரை, சொட்டு நீர்கூட வீணாகாமல் தேக்கிவைத்து, குறைவான தண்ணீரைப் பயன்படுத்திப் பயிர்களை வளர்த்துப் பயன்பெற வேண்டும்.

தண்ணீரைப் பாதுகாத்தல் என்பது சமுதாய மேம்பாட்டில் - பொருளாதார மேம்பாட்டில் முக்கியமான பணி.

இந்தப் பணியை, கடமையை நம்மில் பலர் இன்று உணரவில்லை. பல கண்மாய்கள், வரத்துக் கால்கள் தூர்ந்து கிடக்கின்றன. தூர்ந்து கிடப்பதோடன்றி அவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கண்மாய்களை, ஏரிகளை ஏரிகளின் நீர்ப்பரப்புப் பகுதிகளை, தண்ணீர் வரத்துக் கால்களை ஆக்கிரமிப்பது குற்றம், சமூகக் குற்றம்; பாபம்! இதற்கோர் முற்றுப்புள்ளி வைக்காகமல் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்!

திருக்குளங்களைக் கவனிக்காமல் திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் செய்து கொண்டிருக்கிறோம்! நாம் மழைவளம் பெறுவோம்! பெய்யும் மழை வளத்தைப் பாதுகாப்போம்!

"நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண் தட்டட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!”

என்ற கவிஞனின் பாடல் வரிகளுக்கு வாழ்க்கையில் பொருள் காண்போமாக!

இயற்கை வளம் இந்நிலவுலகத்திற்கு ஒரு கொடை இயற்கையென்பது என்ன என்று வரையறை செய்ய இயலாது. நம்மைச் சுற்றியுள்ள உலகமனைத்தும் இயற்கையே! மலைவளம், காடுவளம், நிலவளம், வளி வழங்கும் ஞாலம், வெப்பம் தந்து வாழ்வளிக்கும் ஞாலம் திரிதரு கதிரவன் தண்ணென நிலவு பொழியும் சந்திரன், விலங்கினங்கள்; பறவையினங்கள் எல்லாமே மானுட வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை; வாழ்க்கைக்குத் தேவையானவை.

அதனால்தான் கடவுளைக் காணும் களம், இயற்கை என்றனர். அப்பரடிகள் "மூரி முழங்கொலநீர் ஆனான் கண்டாய்!” என்றும் "வாசமலரெலாம் ஆனாய் நீயே!” என்றும் பாடினார். "பழத்திடைச் சுவை ஒப்பாய்!” என்று சுந்தரர் அருளியுள்ளமை அறிக.

தாயுமானார் மலர் கொய்து இறைவனுக்குப் பூசனை செய்ய மனம் ஒருப்படா நிலையில் "பார்க்கின்ற மலரூடும் நீயிருத்தி! பனிமலர் எடுக்கவும் நண்ணுகிலேன்” என்றார். இளங்கோவடிகள் தமது காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு, கடவுள் வாழ்த்தே பாடவில்லை, இயற்கையை வாழ்த்தினார்!

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி
குளிர்வெண்குடை போன்று, இவ்
அங்கண் உலகளித்த லான்."

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்."

"மாமழை போற்றதும் மாமழை போற்றதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேல்நின்று தான் சுரத்த லான்”

என்று இயற்கையை வாழ்த்தியே காப்பியத்தைத் தொடங்குகின்றார். இயற்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது இயற்கையின் குறையல்ல. நாம் இயற்கையை - இயற்கையினாலாய சுற்றுப்புறச் சூழலை முறையாகப் பாதுகாக்காமையே காரணமாகும்.

"மாரி பொய்ப்பினும் வாரி வளங்குன்றினும் இயற்கையிலான செயற்கையில் தோன்றினும் அதற்கு மக்களே பொறுப்பு நாட்டை ஆளும் அரசுகளே பொறுப்பு என்பது சங்ககாலக் கவிஞர் வெள்ளைக்குடி நாகனாரின் கருத்து. இதனை உணர்ந்து இயற்கையைப் பாதுகாப்போம்! இயற்கை, பேரழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்ப்போம்! இயற்கை வளர்க்கும் வழித்தடத்தில் செல்வோம்!

சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய இலக்கணங்கள் ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் அகத்திணை வாழ்க்கையை கற்பு வாழ்க்கையை வலியுறுத்தின. இலக்கியங்களிலும் அகத்திணை என்றே ஒரு துறை உண்டு. திருக்குறளில் ‘காமத்துப்பால்’ உள்ளமையை ஓர்க! சங்க காலத்தில் "காமம்" என்ற சொல் நல்ல பொருள் நலம் தந்த சொல்லாகவே விளங்கியது. பிற்காலத்தில்தான் காமம் என்ற சொல் கொச்சைப்படுத்தப்பட்டது.

ஆண்டுகள் பலவாயினும் நரையின்றி, மூப்பின்றி, முதுமையின்றி வாழலாம். காயகல்பம் - தங்கபஸ்பம் சாப்பிட்டா? இல்லை, இல்லை! பிசிராந்தையார் மூப்பின்றி என்றும் இளமையாக வாழ வழி சொல்லுகின்றார். "வீட்டில், மாட்சிமைக்குரிய குணங்கள் அனைத்தும் பொருந்திய மனைவி! வாய்த்த புதல்வர்களும் அறிவு நிரம்பியவர்கள்! ஏவல் செய்வோரோ நான் கருதியதே கருதிச் செய்வர்! அதனால் நரையில்லை, மூப்பில்லை, முதுமையில்லை" என்று கூறுகின்றார்!

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்காகியர் என வினவுதி ராயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர் என் இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை

ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!”
(புறம் - 191)

என்பது பிசிராந்தையார் பாடல்.

வீட்டில் பொருளாதார மேலாண்மை குடும்பத் தலைவியிடம் இருந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் பரிசில் பெற்றுவந்தார். வந்தபின் தமது மனைவியிடம் சொல்லுகின்றார், "வாழ்க்கைத் துணை நலமே! இதோ, குமணன் தந்த பரிசுப் பொருள்கள்! உனக்கு வேண்டியவர்களுக்குக் கொடு! உன்னால் விரும்பப்படுகிறவர்களுக்கும் கொடு ! உனது சுற்றத்தாருக்கும் கொடு ! நமது சுற்றத்தாருக்கும் கொடு! வேண்டியவர்கள் - வேண்டாதவர்கள் என்று பாராட்டாது அனைவருக்கும் கொடு! என்னைக் கேட்காமலும் கொடு! கலந்து ஆலோசனை செய்யாமலும் கொடு.! உன் விருப்பம் போலக் கொடு!" என்கிறார்.

ஆதலால், குடும்பத் தலைவிக்குக் குடும்பத்தில் பொருளாட்சி இருந்தது தெரிய வருகிறது. இன்றைய நிலை என்ன? ஒருசில குடும்பங்களில்தான் உள்ளன. வேலை பார்த்துச் சம்பாதிக்கும் மனைவிகடத் தான் ஈட்டிய பொருளை அல்லது அதில் ஒரு பகுதியைக் கூடத் தான் வைத்துக் கொள்ள முடியாத நிலை! இதுதான் நமது நாட்டுக் குடும்ப வாழ்க்கை நிலை. சங்க இலக்கியங்கள் மனைவியைக் குடும்பத் தலைவி என்றே கூறகின்றன. திருக்குறள் "வாழ்க்கைத் துணைநலம்” என்று சிறப்பிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பெண் அடிமைத்தனம் இல்லை. இன்று நாம் எங்கே போகிறோம்? பெண் சிசு கொலை, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி, வரதட்சணைக் கொடுமை என்று பெண்களுக்குக் கொடுமை செய்யும் வழியில் போகின்றோம்! இந்த நிலை மாறி மகளிர் போற்றும் தடத்தில் செல்ல வேண்டும்!

சங்க காலத்தில் சமூக அமைப்பு இருந்தது. எல்லாக் குடும்பங்களிலும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பதே தமிழ் நெறியின் குறிக்கோள். "எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த வேண்டும்" - இது தமிழின் குறிக்கோள்! தமிழனின் குறிக்கோள்! தமிழ் இலக்கியம் காட்டும் பொருள் நெறி.

பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர் "எல்லாருக்கும் இன்பம்” என்ற கொள்கையை வலியுறுத்துகின்றார். ஒரு வீட்டில் சாப்பறை கொட்டப்படுகிறது. ஒரு வீட்டில் மனமுரசு கேட்கிறது. ஏன் இந்த அவலம்! அருகில் நிற்போர் கடவுளின் படைப்பு என்கின்றனர்.

புலவர் இன்பதுன்பங்களுக்குக் கடவுளின் படைப்பு காரணம் என்பதை மறுக்கிறார். மறுப்பதோடன்றி, அப்படிக் கடவுள் படைத்திருந்தால் அக்கடவுள் பண்பில்லாதவன் என்று கூறுகிறார். அது மட்டுமா? இந்த உலகம் இன்னாததாகத்தான் இருக்கும். இன்மையை - இன்னாமையைத் தாங்கிக் கொள்ளாதே! இன்னாதனவாக உள்ள உலக அமைப்பை எதிர்த்துப் போராடு! இனியன காணும் வரையில் போராடு! என்றார்.

"ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்
இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!”

(புறம் - 194)

என்ற பாடலை, பாடற்பொருளை இலட்சியமாகக் கொண்டு நடப்போமாக!

இன்று தகவல் தொடர்புகள் வளர்ந்ததன் பயனாக இந்தப் பஞ்சபூத உலகம் நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால், மனிதன் அந்நியப் பட்டுக்கொண்டே போகிறான்! ஆனால், சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றன் என்ற கவிஞன்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடினான்! உலகம் நெருங்கிவந்தால் மட்டும் போதாது! உலக மாந்தர் ஒரு குலமாக வேண்டும். இதுவே கணியன் பூங்குன்றனின் இலட்சியம்! இந்தக் கருத்தையே வள்ளலார், ஆன்மநேய ஒருமைப்பாடு என்றார்.

நல்ல சமுதாய அமைப்பு கால்கொண்ட நிலையில் பெரியோரை யாரும் வியந்து பாராட்டமாட்டார்கள். சிறியோரை யாரும் இகழ மாட்டார்கள். ஏன்? பெரியோர் பெரியோரானது அவர்களின் முயற்சியால் மட்டுமல்ல. அவர்களுக்கு இந்த உலகம் வழங்கிய வாய்ப்புக்களே காரணம். அதனால்தான் தம் புகழ் கேட்கப் பெரியோர் நாணினர் என்று இலக்கியம் கூறுகிறது.

சிறியோர் சிறியோராக இருப்பது பிறப்பினாலும் அல்ல; விதியினாலும் அல்ல. வாய்ப்புக்கள் வழங்கப் படாமையே காரணம். அது அவர்கள் குற்றமல்ல. அதனால், சிறியோரை இகழ்வது இல்லை. ஒவ்வோர் ஊரிலும் கற்று அனுபவித்து அடங்கிய சான்றோர் பலர் வாழ்தல் வேண்டும் என்பது சங்க இலக்கியக் கொள்கை. அப்படி சான்றோர் பலர் வாழும் ஊரில் பொய் இருக்காது; களவு இருக்காது; கலகம் இருக்காது; நம்பிக்கை நிலவும், நல்லெண்ணெத்துடன் கூடிய உறவு கலந்த சமுதாயம் அமையும்; அமைதி நிலவும்.

"ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே!”

என்றது தமிழிலக்கியம்.

கு.xvi.28

தமிழிலக்கியங்கள் முடியாட்சிக் காலத்திலேயே தோன்றின. ஆயினும் முடியாட்சியைத் தழுவியே பாடினார்கள் அல்லர். அரசனின் கடமைகளை வலியுறுத்திப் பாடியவர்கள் பலர். மக்களை ஒழுங்குடன் - ஒழுக்கமுடன் வாழச் செய்ய வேண்டியது அரசின் கடமை. மக்களிடத்தில் ஒழுக்கக் கேடுகள் இருந்தால் அதற்குரிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.

"நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே"

என்று பாடினார் பொன்முடியார்.

தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையில் தோன்றி மலர்ந்தவை. வாழ்க்கையை வளர்த்தவை. வையத்துள் வாழ்வாங்கு வாழ, தமிழிலக்கியங்கள் வழிகாட்டுகின்றன! பழந்தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள்! நச்சு இலக்கியங்களைப் படிக்காதீர்! நச்சு இலக்கியங்கள் காட்டும் திசையில் போகாதீர்! பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் பண்பாட்டு நெறியில் செல்வோமாக!

11. சமுதாய மேம்பாட்டில்
ஆன்மிகத்தின் பங்கு

(22-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

பலர்கூடி வாழ்வது சமுதாயம். பலர் கூடி வாழ்தல் வேண்டும். அப்போதுதான் சமுதாயம் தோன்றும். வாழ்க்கை வரையறுத்த கால எல்லையையுடையது. அந்த எல்லைக்குள் மற்றவர்கள் நலனுக்குரியன செய்து, அவ்வழி ஆன்மாவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; முன்னேற வேண்டும். நமது வாழ்க்கை கண்ணாடி வளையல்கள்போல உடைந்து போகக் கூடியது. வாழ்க்கை நிலையில்லாதது. நிலையில்லாதனவற்றைக் கொண்டு, நிலையானவற்றை அடைதலே வாழ்க்கையின் குறிக்கோள்.

நன்றாக வாழவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு விதி தனியாக இல்லை. எதைச் செய்தாலும், அழகாகச் செய்தலும், பயனுறச் செய்தலுமே நல்வாழ்க்கை. குறித்த ஒரு நோக்கத்துக்காகத்தான் வாழ்க்கையை நடத்தவேண்டும். குறிக்கோளுடைய வாழ்க்கையை நடத்துவதுதான் அதிர்ஷ்டம். வாழ்க்கை முழுவதும் விரும்பக் கூடியது ஊழியம் புரியும் சக்தியேயாம். அதுவும் சுயநலமற்ற நிலையில் ஊழியம் புரியும் சக்தியாக அமைய வேண்டும்.

வாழ்க்கையை முறையாக வாழ்ந்தால், உழைப்போடு கூடிய வாழ்க்கை நடத்தினால், அவ்வாழ்க்கையே ஒரு தொழில்தான். வாழ்க்கை இன்பமானது அன்று; இன்பமாக அமையவும் அமையாது. தைரியத்தோடும், துணிச்சலோடும் வாழ்க்கையை நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொள்வதிலும், அல்லது கொலை செய்வதிலும் தைரியம் என்பது இல்லை. வாழ்வதில்தான் தைரியம் இருக்கிறது.

உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி, இவற்றை விருப்பும், வெறுப்பும் இன்றி அனுபவிக்கத் தெரிந்துகொண்டால் மனிதனாகலாம். வாழ்க்கையின் உந்து சக்தி நம்பிக்கை. நோக்கம், கடமை, பரிவு ஆகியன வாழ்க்கைக்கு ஒளியூட்டுவன. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும்; யாராவது ஒரிவரிடமாவது அன்பு காட்ட வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றிகளை நம்பிக்கையுடன் எதிர் பார்க்க வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக் கொண்டால் அது வாழ்க்கையாகி விடும். ஏன்? இத்தகு வாழ்க்கையே வாழ்வாங்கு வாழ்தல். ஒரே ஒருமுறைதான் பிறக்கின்றோம். என்றாவது ஒருநாள் மூச்சுவிட மறந்து போவோம்; அல்லது உயிர்ப்பு அடங்கும். இந்த இடைவெளிக் காலத்திற்குள் நாம் வாழ்ந்துவிட வேண்டும். நாம் வாழப் பிறந்தோம். "வாய்த்தது நந்தமக்கோர் ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்றார் அப்பரடிகள், சாவது எளிது.

பிறவி என்பது என்ன? ஆன்மா என்பது என்ன? நான் யார்? என் உள்ளம் யார்? என்ற ஆராய்ச்சி இல்லாமல், தெளிவான அறிவு இல்லாமல், எப்படி வாழ முடியும்? இந்த "ஆன்மா" விஷயத்தில், தத்துவச் சிந்தனையாளர்களிடையிலும், மதஸ்தாபகர்களிடையிலும் நிலவுவது மாறுபட்ட சிந்தனை போக்குத்தான். ஆன்மா, பிறப்பு, இறப்பு குறித்து தமிழ் மரபு வழிச் சிந்தனையே அறிவியல் அடிப்படையில் சரியானது என்று துணிய முடிகிறது.

"உள்ளது போகாது. இல்லது வாராது” என்பது ஒரு தர்க்க அடிப்படை. இந்தத் தர்க்க நியாயத்தின்படி ஆன்மா உண்டென்பதும், அது நிலையானது என்பதும் பெறப்படும் உண்மைகள். கடவுள் ஆன்மாக்களைப் படைத்தான் என்ற கொள்கை ஏற்புடையதன்று. கடவுள் குறைவிலா நிறைவு. நிறைவிலிருந்து குறை தோன்ற முடியாது. ஆதலால், கடவுள் ஆன்மாக்களை, உயிர்களைப் படைத்திருக்க முடியாது. "எனது” என்றும், "நான்” என்றும் உரிமை கொண்டாடும் ஒன்று உளது. அதுவே ஆன்மா.

ஆன்மா என்பது சமஸ்கிருதச் சொல். உயிர் என்பது தமிழ்ச் சொல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையில் உடன்பாடு மிகுதியும் உடையது தமிழ் மரபு. உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், உயிர்கள் ஓரறிவுயிர் தொடங்கி, பரிபக்குவ நிலையினுக்கு ஏற்ப மாறி மாறிப் பிறந்து, கடைசியாக ஆறறிவு உடைய மனிதனாகப் பிறக்கிறது என்பது தமிழ்ச் சிந்தனை!

அறிவு சார்ந்த பரிணாம வளர்ச்சியில், பாம்பு சட்டையை உரித்துப் போட்டுவிட்டுப் புதுச் சட்டையுடன் உலாவருதலைப் போல், உயிர் உடலை மாற்றிக் கொண்டே வந்து, மானுடப் பிறப்பை எய்தியது. அதனால்தான் சாதலையும், பிறத்தலையும், திருவள்ளுவர்

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்றார்.

ஆன்மிகம் என்பது முற்றிலும் ஆன்மாவைச் சார்ந்தது. அதாவது, ஆன்மாவின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் வாழ்க்கை முறை. இந்த உடல், உடலின் பொறிகள் வழி குணங்கள் இல்லை. குணங்களும், திறன்களும், பண்புகளும், ஆன்மாவைச் சார்ந்தவையே என்பது வெளிப்படை.

எல்லோருக்கும் உறுப்புக்கள் ஒத்து உள்ளன. ஆனால் பண்புகள் ஒத்து இல்லை. இதற்கு ஆன்மாக்களிடையே உள்ள தராதரமே காரணம். அறிவு, ஆன்மாவைச் சார்ந்தது. ஆன்மாவை அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளுதலே வாழ்க்கையின் முதற்படி.

காணாதனவற்றைக் காண, கண்ணிற்கு ஒளியாக, அறிவொளியாக இருந்து துணை செய்வது ஆன்மா. கேளாதனவற்றைக் கேட்க, காதுகளுக்குப் புலனாக அமைந்து துணை செய்வது ஆன்மா. ஆன்மா உருவமற்றது. ஆன்மாக்கள் எண்ணிக்கையில் பல. அதன் வளர்ச்சிக்காக எடுத்துக் கொண்டது உடல்.

ஆன்மாவை, ஆன்மாவின் வளர்ச்சியை, மறந்துவிட்டு உடலால் மட்டும் வாழும் மனித மிருகங்களும் உண்டு. இவர்களே துஷ்டர்கள்; கொலைக்காரர்கள்; சமூகத்திற்குரியன செய்யாதவர்கள். ஆதலால்தான் சான்றோர் ஆன்மாவில் வாழ்தலை, ஆன்மாவைச் சார்ந்து வாழ்தலை வாழ்நிலை என்றனர்.

நெருப்பு தனக்குள் வரும் பொருள்களை எரித்து, அவற்றின் பலத்தைக் கொண்டு, மேலும் உயரமாகக் கிளம்பி எரிகிறது. அதுபோல, ஆன்ம சக்தி உடையவர்கள், தங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாய் உள்ளவைகளையே தன் வளர்ச்சிக்குச் சாதனங்களாக்கிக் கொண்டு வளர்வார்கள். ஆன்ம சக்தி உள்ளவர்கள், அடிபடும் பந்து மேலெழுவதைப் போல், துன்பங்கள் சூழச் சூழ மேலெழுவார்கள்.

ஆன்ம சக்தி வளரக் கல்வி தேவை; ஆற்றல் தேவை; கலைஞானம் தேவை; அறிவு தேவை; பண்பு தேவை; சான்றாண்மை தேவை; ஒப்புரவுப் பண்பு தேவை. இவை யெல்லாவற்றையும் ஒருங்கே பெற்ற ஆன்மா ஆனந்தமாக வளரும்; வாழும்; வாழ வைக்கும். அதனால்தான் தம்மை உணர்ந்த நிலையிலேயே தலைவனாகிய கடவுளை உணரமுடியும் என்றனர் ஞானிகள்!

ஆன்மிகம் என்பது முற்றாகச் சமயமும் அல்ல; சமயம் சாராததும் அல்ல. ஆனால், ஆயிரத்தில் ஓரிருவர் கடவுள் பக்தியில்லாமலும், அறிவியல் மேதைகளாக, நல்லவர்களாக, சான்றோர்களாக, வையகத்தை வாழ்வித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோரின் ஆன்ம வளர்ச் சிக்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் ஒரு சாதனமாகும்.

கடவுள் வழிபாடு, பக்தி உடையவர்களில் பலர் ஆன்ம சக்தியே இல்லாதவர்களாக, கொடியவர்களாகக் கூட இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடவுள் பக்தி மனிதர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல. மீனுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல, மனிதனுக்குக் கடவுள் பக்தி அமைய வேண்டும்.

ஆன்மாவின் தூய்மையே மனத் தூய்மை, மனத்தால் புலன்களும் அழுக்கற்றதாகும், புலன்களில் தூய்மை, பொறிகளில் துய்மை, இதுவே சீரான வளர்ச்சி. பொறிகளின் தூய்மையால், ஆன்மா தூய்மையடைதலும் உண்டு. ஆனால் இது கடினம். பல சமயங்களில் வழுக்கல் ஏற்பட்டுத் தோற்றுப் போதலும் உண்டு. ஆன்மிக வாழ்க்கைக்கு இல்லறமா? துறவறமா? என்ற விவாதம் கிடையாது. இரண்டிலும் ஆன்மிக வளர்ச்சி சாத்தியமே. வாழ்பவர்களைப் பொறுத்ததே ஆன்மிக வளர்ச்சி.

ஆன்மிகம் என்பது துறவு நெறியைச் சார்ந்ததென்று பலர் கருதுகின்றனர். இது தவறு. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல; உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம். அப்பரடிகள் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை.

"அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
          அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
          ஒரு குலமும் சுற்றமும் ஒருரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
         துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ
இப்பொன் நீ இம் மணிநீ இம்முத்துநீ
        இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!”


என்று அருளியுள்ளமையை அறிக. எவன் ஒருவன் தன்னையும், தன்னுடைய பொறி புலன்களையும், தன்னைச் சுற்றி உள்ள உலகத்தையும், தன்வசப்படுத்திப் பயன் கொள்கின்றானோ, அவன் ஆன்மிகத்தில் வளர்ந்தவன்; உயர்ந்தவன். ஆன்மாவிற்குள் ஆசை வெள்ளம், பொறிகள் வாயிலாக வந்து புகுந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மா அமைதியாக விளங்கும்; தேர்வு செய்யும்; ஏற்பன ஏற்கும். இதுவே ஆன்மிக வாழ்க்கையின் இயல்பு.

ஆன்மிகத்தில் வளர்ந்தவர்கள் மானுட சமூகத்தை இறைவன் ஒரு குடும்பமாக அமைத்தே வழி நடத்துகின்றான்; வாழ்விக்கின்றான்; என்று நம்புவார்கள். ஆன்மிகத்தின் கொள்கை ஒருமைப்பாடே! ஆன்மா சுருங்கிப் போவதல்ல. ஆன்ம மதிப்பீடு இல்லாத உடல் வாழ்வு மட்டுமே வாழ்பவர்கள் பிரிவினை வாதிகள்.

கடவுள் ஒருவரே. கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதுபோல முத்தியும் ஒன்றே. "கடவுள் ஒன்றல்ல; இரண்டு” என்று சொன்னால், அந்த நம்பிக்கை ஆன்மிகத்தின் - ஆன்மிக வாழ்க்கையின் குறிக்கோளை முறியடித்துவிடும். இத்தகைய பிரிவினைவாதிகள் மக்களை மதிக்க மாட்டார்கள். கெட்ட போரிடும் உலகத்தை உருவாக்குவர். இத்தகைய வெற்று மனிதர்கள் ஆன்மிக வேடங்கொண்டிருந்தாலும், ஆன்மிகவாதிகள் அல்ல.

ஆன்மிக வாழ்க்கையில் வளர்ந்தவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். எளிதில் மகிழ்வர்; அன்பு செய்வர்; பிறருக்கு மகிழ்வூட்டுவர். ஆன்மா, அஹிம்சை, அஞ்சாமை, தியாகம், தயை, கள்ளாமை, நன்னடத்தை ஆகியவற்றைத் தனது அணிகலன்களாகக் கொண்டு பலருடன் கூடி வாழ்ந்தால் சமுதாயம் மேம்பாடுறும்.

இன்று பெரும்பாலும் ஆன்மிகம் கடவுளைச் சார்ந்து கூட இல்லை. மதங்களைச் சார்ந்திருக்கிறது. மதங்களைக் கூட அல்ல - மத நிறுவன அமைப்புக்களைச் சார்ந்திருப்பதையே இன்று ஆன்மிகம் என்று தவறாகப் பலர் கருதுகின்றனர். மதங்கள் தம்முள் முரண்பட்டே விளங்குகின்றன.

ஒரோ வழி மதங்கள் அன்பை, சமாதானத்தை, சகோதரத்துவத்தைப் போதிப்பது உண்மையானாலும், இந்தப் புனிதக் கொள்கைகளை விட, மதம் என்ற அமைப்பு - நிறுவனம் இவற்றின் ஆதிபத்திய அக்கறை மதங்களுக்கு மிகுந்து விட்டது. ஆதலால் மதங்களின் பெயரால், சண்டைகள், கலகங்கள், கொலைகள் தோன்றுகின்றன. கல்லாடம் சமயப் பிணக்கை மறுக்கிறது.

வள்ளற் பெருமான் சமயப் பிணக்குகளையும், பேதங்களையும் பார்த்து வெறுத்துப் போய் "மதமென்னும் பேய்" என்றார். இந்த உலகில் மதங்களின் பெயரால் நடந்த ஆதிபத்திய சண்டைகளே மிகுதி. ஆதலால், கடவுள் நம்பிக்கையையும் பிரார்த்தனையையும், கடவுள் வழிபாட்டையும், மதத்தோடு இணைத்துப் பார்க்கக் கூடாது. ஆன்மிக உலகம் வேறு மத உலகம் வேறு.

ஒரு செடியிலிருந்து மணமுள்ள மலர், ஆரவாரமின்றி, முகிழ்த்து வெளி வந்து, எல்லோரும் மணத்தை அனுபவிக்கும்படி, மணத்தைப் பரப்புவதைப் போல, ஆன்மாவில் அன்பாக, அருளாக, தியாகமாக, சந்தடியின்றி, ஆரவாரமின்றி முகிழ்த்து, வாழ்வித்து வாழ்வது ஆன்மிகம்.

ஆன்மிகம் மற்றவர்களுக்கு உதவுவதில் முந்தும்; ஆறுதல் தரும். ஆன்மிகம் பயத்திற்கு அப்பாற்பட்டது; ஆளுமை உடையது. விசாலமான இதயம் உடையது. உறுதியும், உண்மையும் உள்ள உள்ளம், விருப்பத்துடன் வேலை செய்யும் பண்பு இவையே ஆன்மிகத்தின் அடையாளங்கள். இறைவன் கற்கோயிலில் எழுந்தருளுவதைவிட, மனக்கோவிலில் எழுந்தருளுவதையே விரும்புகின்றான். இறைவனை, "உடலிடங் கொண்டாய்", "மனத்தகத்தான்” என்றெல்லாம் திருமுறைகள் போற்றும். கற்கோயிலை விட மனக்கோயிலிலேயே இறைவன் எழுந்தருளுகின்றான் என்பதற்குப் பூசலார் நாயனார் வரலாறே சான்று.

எந்த மனிதனிடம், சாந்தம், சத்தியம், புலனடக்கம், துணிவு, சமபுத்தி உள்ளனவோ, அந்த மனிதனே ஆன்மிகத்தில் சிறந்தவன். இத்தகைய மனிதரால், இவ்வுலகில் கோடிக்கணக்கான குலங்கள் வளரும்; வாழும். அவர்களின் உடலிலேயே இறைவன் குடிகொண்டு, அவர்களின் மூலம் தன் விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றிக் கொள்ளுகின்றான். அதனால், எல்லாவற்றையும், உன்னைப் போலவே உன் ஆன்மாவைப் போலவே காண்க.

ஆன்மிகம் விலை மதிப்பிட முடியாத ஒரு செல்வம், ஆன்மிகத்தில் செழித்தவர்கள் முகத்தில் ஒரு பொலிவு புன்முறுவல் தோன்றும்; பரிவு வெளிப்படும்; பண்பாடு இருக்கும். ஒருவன் ஆன்ம சக்தி உடையவன் என்பதை அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் காணலாம். எடுப்பான தோற்றம் ஆன்மிகம் வழங்கும் கொடை ஆன்மிக நலம் பொருந்தியவன் வழங்கும் சொற்கள், அவனுடைய ஆன்மா அன்பில் நனைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஆன்ம சக்தியால் வளர முடியும். வாழ முடியும். சொற்கள், செயல்கள் இவை யெல்லாம் உயர்ந்த ஆன்மாவை இனம் காட்டும் அடையாளங்கள். நமது ஆன்ம சக்தியை மற்றவர்களுக்கு உணர்த்தும் சாளரங்களே கண்கள். சொற்களே தூதர்கள். முகத்தால் அமர்ந்தினிது நோக்கி, இன்சொல் கூறி, ஈத்துவந்து மகிழ்தலையே திருவள்ளுவம் பாராட்டும்.

மருந்து மரம் தன் நன்மை நோக்காது, தனக்கு வரும் வெட்டுக்களையும் ஏற்றுக் கொண்டு, மற்றவர்கள் நோய்க்கு மருந்து வழங்கும். இதுவே ஆன்மிகத்தின் பண்பு.

ஆன்மிகம் எப்போதும் அறிவைத் தேடும்; அன்பை வழங்கும்; வாழ்விக்கும். ஆன்மிகம் அருள் பழுத்த வாழ்வு; சின்னங்களும், அடையாளங்களும் மட்டும் ஆன்மிகம் அல்ல. அவை ஆன்மிக வளர்ச்சிக்குத் துணை செய்யும் சாதனங்களாக அமையக் கூடும். அப்படி அமைந்தால் வரவேற்கத் தக்கதே. இன்று பெரு வழக்காக மதத்தின் பெயரில் நடைபெறும் சடங்குகள் ஆன்மாவைத் தொடுவது கூட இல்லை.

ஆன்மிகம் மனிதத்தின் விழுமிய பயன். ஆன்மிகத்தின் மறு பெயர்தான் மனித நேயம், ஆன்மிகம் ஆன்மநேய ஒருமைப்பாடுடையது. ஆன்மிகம் சன்மார்க்க நெறி; பொது நெறி. ஆன்மிகம் பகுத்தறிவுக்குப் புறம்பானதல்ல; ஆன்மிகம் ஞானம்; ஆன்மிகம் உலகந்தழிஇயது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே”

என்றார் தாயுமானார். இதுவே ஆன்மிகத்தின் குரல். இந்த குரல் இன்று இந்தியாவிலேயே ஒலிக்கவில்லை. தமிழகத்திலேயே ஒலிக்கவில்லை. நாளும் திருக் கோயில்கள் பெருகி வளர்கின்றன; திருவிழாக்கள் நடக்கின்றன; குட முழுக்கு விழாக்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மனிதநேயம், தாழ்வெனும் தன்மை நோக்கிச் சமயம் சாரும் இயல்பைத் தந்தனவா? வறுமை, சிறுமைகளிலிருந்து தப்ப வழி வகை கற்றுக் கொடுத்ததா?

மானுடப்பதம் தந்து வாழ்வளித்த வள்ளற்பெருமானாகிய இறைவனிடமே இரவலனாகத்தானே மனிதன் செல்கின்றான்? திருக்கோயிலிலும் போட்டா போட்டிகள்! மரியாதைகள்! சாதிப்புன்மைகள்! பணத்தின் திருவிளையாடல்கள்!

எங்கே பழங்காலத் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஆன்மிகம்? நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மிகம் எங்கே? சரா சரங்கள் எல்லாம் சிவம் பெருக்கிய சீலம் எங்கே? "எந்நாட்டவர்க்கும் இறைவா" என்ற உலகப் பொதுமை தழுவிய மாணிக்கவாசகரின் ஆன்மிகம் எங்கே? “தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை" என்றவாறு தொண்டு நெறியில் வளர்ந்த ஆன்மிகம் எங்கே?

"பலர் வைகுந்தத்திற்குப் போக நான் நரகத்திற்குப் போகச் சித்தமாயுள்ளேன்” என்று மதில் மேல் ஏறி, இறைவன் நாமத்தை எடுத்து ஓதிய இராமனுசரின் ஆன்மிகம் எங்கே? "சேர வாரும் செகத்திரே" என்று, வேறுபாடின்றி அனை வரையும் அழைத்த ஆன்மிகம் எங்கு போயிற்று? தேடுங்கள்!

ஆன்மாவின் வழி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்? எவ்வுயிரும் தம்முயிர் போல் போற்றும் பெருநெறி கடைப்பிடித்து ஒழுகுங்கள் ! வல்லார்க்கும், வல்லமை இல்லாதாருக்கும், ஒரு சேர வாழ்வளியுங்கள்! உயிர்க்குலம். திருக்குலம் வாழ, வளரத் தொண்டு செய்யுங்கள்! இந்த மண்ணுலகத்திலேயே விண்ணுலகத்தைக் காணுங்கள்!

ஆன்மிகம் சமுதாயத்தைக் கூட்டுவிக்கும். ஆன்மிகம் சமுதாய மேம்பாட்டுக்குத் துணை செய்யும்! கடவுளை நம்பு! பிரார்த்தனை செய்! கடவுளிடம் சர்வ வல்லமையைத் தந்தருளும்படி கேட்டுக்கொள்! ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள் சமாதானத்தின் காவலர்கள். ஆன்மிகவாதிகள் சமநிலை காண்பவர்கள், எல்லோரையும் வாழவைக்கும் ஆன்மிகம் வளர்க! வாழ்க! ஆன்மிகத்தில் வளர்ந்து சமுதாய மேம்பாட்டைக் காண்போமாக!

உடலுக்கு வலிமை; ஆன்மாவுக்குத் துணிவு. உடலில் நோயின்மை; ஆன்மாவில் குற்றமின்மை. உடலுக்கு ஒழுங்குகள்; ஆன்மாவுக்கு ஒழுக்கம். உடலுக்குத் திறமை; ஆன்மாவுக்கு அறிவு. உடலுக்கு உணவு, ஆன்மாவுக்கு பக்தி, உடல் உழைப்பு மக்களுக்கு; ஆன்மாவின் உழைப்பு கடவுளுக்கு. உடலுக்குத் தனிமை, ஆன்மாவுக்கு மக்கள் திரளுடன் கூடுதல். உடலுக்குச் சுயநலம், ஆன்மாவுக்குப் பிறர் நலம் - என்பன இயற்கையில் அமைந்த நியதிகள். இவற்றில் பல உடன்பட்டவை.

வலிமை-துணிவு, நலம்-குற்றமின்மை, ஒழுங்கு-ஒழுக்கம்; திறமை-அறிவு; மக்களுக்கு-கடவுளுக்கு இவை உடன்பாடுடையன. ஆனால் உடல் பெரும்பாலும் சுயநலத்தையே நாடும். நல்ல ஆன்மா பிறர் நலத்தையே போற்றும். உடல் பெரும்பாலும் ஆன்மாவை ஆட்டிப் படைத்துத் தனது ஆதிக்கத்திற்குள் வைத்துக்கொள்ள ஆசைப்படும். ஆன்மாவுக்கு அடங்கி நடக்கும் உடலே நல்லது. ஆன்மாவின் வழி வாழ்தலே வாழ்க்கை.

ஆன்மாவினாலேயே சமுதாயத்தைக் காண இயலும்; பேண இயலும், குறைவிலா நிறைவாக, அன்பில் பழுத்து உலகம் தழீஇ வாழ்தலே ஆன்மிகம். இந்த வழியில் இனிமேலாவது நடப்போமாக!

இந்த ஆன்மிக வழியில் நடவாமல் இப்போது அசுர வழியில் போய்க் கொண்டிருக்கிறோம். அதன் விளைவு பாதுகாப்பும், உத்திரவாதமும் இன்மை! வறுமைக்கோடு! துன்பங்கள்! துயரங்கள்! இனிமேலாவது நாளும் நமது ஆன்மாவின் தரத்தை, நலத்தை வளர்த்துக் கொள்வோம்! இம்மாநிலம் பயனுறும் வழியில் வாழ்வோமாக! ஒருவன் உலகத்தையே பெற்றாலும், தனது ஆன்மாவை இழந்து விடுவானாயின் என்ன பயன்?

இன்று ஆன்மாவை இழந்து, பொக்குகளாக, வெற்றர்களாக, வாழ்வோர் பலர். இவர்களை "இந்த வையகம் சுமப்பதுவும் வம்பு" என்றார் ஆண்டாள் நாச்சியார். சமுதாயம் தழீஇய ஆன்மிக வாழ்க்கையே வாழ்க்கை. சமுதாயத்தைப் பற்றியுள்ள துன்பங்கள் அனைத்தும் அகலத் தன்னந்தனியாகவும், கூட்டமாகவும், ஆன்ம வாழ்க்கை வாழ்வோம்! வளர்க ஆன்மிகம்! வளர்க சமுதாயம்!

கடவுளே கூட வான் பழித்து, இம்மண்ணிற்கு வந்தது மனிதனோடு கூடிவாழத்தான்! அதில் ஒரு தனி இன்பம். அந்த இன்பம் நிறைந்த வாழ்க்கைக்குத்தான் ஆன்மிகம் என்று பெயர்.


12. எங்கே போகவேண்டும்?

(29-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மதுரை வானொலி நேயர்களே! இனிய நல் வாழ்த்துக்கள்! கடந்த பதினொரு வாரமாக "எங்கே போகிறோம்?" என்ற தலைப்பில் கருத்துரைத் தொடர் வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. நீங்களும் கேட்டீர்கள். இந்தக் கருத்துரைத் தொடரின் மூலம் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி எவ்வளவு? எத்தகையது? என்று கணக்கிட முடியவில்லை

மதுரை அன்பர் ஏ.எஸ்.கே. ஒவ்வொரு பேச்சுக்கும் வினாக்களை எழிப்பியிருந்தார். அர்த்தமுள்ள வினாக்களாக எழிப்பியிருந்தார். அவருக்கு நன்றி! அதுபோல திருப்புன வாசல் இளைஞர்கள் கூடியிருந்து கேட்டுள்ளனர். வினாக்களும் எழுதியுள்ளனர். அந்த இளைஞர்களுக்கு நமது வாழ்த்துக்கள். வானொலி நிலையத்தாருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும் நன்றியை வார்த்தைகளால் கூறாமல், வானொலி நிலையத்தினர் நமக்குப் பல விதங்களில் சிந்திக்கும் வாய்ப்பு அளித்து வருவதை நினைந்து, திருக்குறள் வழியில் அவர்களுக்கு நன்றியறிதலுடன் வாழ்தல் நமது கடைமை.

எங்கே போகின்றோம்? வாழ்க்கை ஒரு பயணம்; நெடிய பயணம் போலத் தோற்றமளித்து குறுகிய காலத்தில் முடியும் பயணம்.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு"

என்று திருக்குறள் கூறும். வாழ்க்கையில் இளமையில் பிழைகள் நேர்ந்தால் வாழ்க்கையின் நடுவில் போராட்டங்கள் அமையும்; வாழ்க்கையின் முடிவில் கழிவிரக்க நிலை தோன்றும். இந்த அவலத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டாமா? எங்கே போகிறோம்?

எது நமது வாழ்க்கையின் குறிக்கோள்? "மானுடம்" அற்புதமான பிறவி! நான்கு சுவர்களுக்குள் அடங்கிய குடும்பத்திற்காக மட்டுமா இவ்வளவு பெரிய மானுடப் பிறவியை இறைவன் வழங்கியிருப்பான்? தான் உண்டு, தான் வாழ்தல் அவசியம்; திருமணம் நிகழ வேண்டும்; வாழ்தல் வேண்டும்; அடுத்த தலைமுறைகள் தோன்ற வேண்டும்; எல்லாம் நடக்க வேண்டும்; நன்றாகவே நடக்க வேண்டும்.

ஆயினும் வீட்டிற்கு வெளியே உள்ள உலகம் வெளிச்சத்தில் இருந்தால்தான் வீட்டிற்குள் வெளிச்சம் இருக்கும். சூரியன் எரிகிறது. உலகம் முழுவதற்கும் ஒளி தருகிறது; வாழ்வளிக்கிறது; சிமினியும் எரிகிறது. ஆனால் வெளிச்சம் குறைவு. தன்னைக் காட்டுகிறது; சுற்றிலும் இடக்கும் சில பொருள்களைக் காட்டுகிறது. இன்று பலர் சிம்னி விளக்குப் போல வாழ்கின்றனர். பலரால் அவ்வளவு தான் முடியும்.

ஒரு சிலராவது வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்க்கக் கூடாதா? ஊருக்குப் பத்து பேர், ஊராரைப் பார்க்க, ஊரை வளர்க்க நேமில்லாமலா போய்விட்டது? அல்லது ஆற்றல் இல்லாமல் போய்விட்டதா? அதெல்லாம் ஒன்றும் இல்லை. சுயநலம் ஒரு காரணம். மற்றவர் வாழ வேண்டும் என்ற கவலையே பலருக்கு இல்லை. இன்னும் பலருக்கு அச்சம்! பயம்! ஊருக்கு நல்லது சொன்னால் எவ்வளவு பேர் கேட்பார்கள்? பலர் கேட்க மாட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்குகின்றனர்.

இந்த உலகத்தின் போக்கு வினோதமானது. இந்த உலகத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பவர்கள் எதையும் செய்ய இயலாது. அதனால்தான் இன்று புகழ் என்பது விளம்பரமாக, தம்முடைய கையாட்களை வைத்துச் செய்து கொள்வதாயிற்று. அண்ணல் ஏசு முதல் அண்ணல் காந்தியடிகள் வரையில் அப்பரடிகள் முதல் அருட்பிரகாச வள்ளலார் வரையில், உலகம் அங்கீகரிக்கவில்லை மாறாகத் துன்புறுத்தியது.

ஆதலால் நீ வாழ ஆசைப்பட்டால் வாழ முற்படு! வாழ்க்கையின் குறிக்கோளை நிர்ணயம் செய்து கொள்! குறிக்கோளை அடையத் தளர்ச்சியின்றி முயற்சி செய்; நாளும் உழைப்பை, முயற்சியை, வளர்த்துக்கொள்! வாழ்வாய் மற்றவர்களையும் வாழ வைப்பாய்!

இப்பிறவி நமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. வாய்ப்பு எப்போதும் வராது. தொடர்ந்தும் வராது. அது நமக்காகக் காத்துக் கொண்டும் நிற்காது. வாய்ப்பு இருக்கும் திசையை நாடுங்கள்! எது வாய்ப்பு - நல்வாய்ப்பு என்று இனங்கண்டு கொள்ளும் திறமை வேண்டும்.

வாய்ப்புகளைத் தேர்வு செய்து ஏற்பதில்தான் வெற்றி இருக்கிறது. வாய்ப்புக்களைக் கவனிக்காமல் அதனைத் தாண்டி நாம் போய்விடக் கூடாது. அதுபோலவே நம்மைத் தாண்டி வாய்ப்பு போக அனுமதிக்கக் கூடாது. "வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி, மதித்திடுமின்!” உளதாகும் சாக்காட்டை விரும்புங்கள்! வளருங்கள்! வாழுங்கள்!

ஒரு நாடு நல்ல குடிமக்களைப் பெற்றிருந்தால்தான் அந்நாடு வளரும்! புகழ்பெறும்! இன்று நமது நாட்டில் குடிமக்கள் தகுதி பெற்றவர்கள் மிக மிகச் சிலரே. 10 விழுக்காடு கூட இருக்க மாட்டார்கள். நாட்டுப் பற்றும், எல்லோரும் இந்தியர் என்ற உணர்வும் இன்று அருகி வருகிறது. நாட்டுக்காக அரசியல் என்பது போய், தனது ஆதாயத்துக்காக அரசியல் என்பதாகி விட்டது.

அன்று அன்னியர்கள் சுரண்டினார்கள். இன்று இந்தியர்களே இந்தியாவைச் சுரண்டுகிறார்கள். இந்த அவலம் எளிதில் அகலாது. பொது மக்கள் கருத்துத் திரண்டால், பொதுமக்கள் இதுபற்றி பேசினாலே கூட அகலும். பொது மக்களிடத்தில் அரசியல், சமூக விழிப்புணர்வுகளை உண்டாக்குங்கள் ! போர்க் குணத்தை உருவாக்குங்கள்!

சுதந்திர தினப் பொன்விழா வரப்போகிறது. இன்னமுமா வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வது? நமது நாட்டு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தவித்தும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட அமையாத வாழ்க்கையில் ஒரு புழுவென நெளிந்தும் எத்தனை ஆண்டுகள் வாழ்வது? நெடுந்துயிலிலிருந்து விழித்துக் கொள்! பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்கு! தன்னை நாடிக் கேட்பவர்களுக்கும், ஏதாவது தருபவர்களுக்கும், விளம்பர மன்னர்களுக்கும், வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்ளச் செய்க!

அடக்கமாக இந்த நாட்டை நேசிப்பவர்களை இந்த நாட்டு மக்களை நேசிப்பவர்களைத் தேடிப் பிடித்து வேட்பாளர் ஆக்குங்கள்! அவர்களுக்கே வாக்களியுங்கள்! இந்த நாட்டில் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றித் தெரியாதா? யாருக்கு வாக்களித்தால் நல்லது என்று இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடாதா?

மனிதகுல வரலாற்றை உருவாக்குவதில் மத்தியதர வர்க்கத்திற்கு ஓர் இடம் உண்டு! சமுதாய மாற்றத்தை மத்தியதர வர்க்கமே உருவாக்க இயலும். இன்று நமது நாட்டு மத்தியதர வர்க்கம் நுகர்பொருள் சந்தையில் மூழ்கிவிட்டது. மூளைச் சோம்பலுக்கு இரையாகி விட்டது. ஏழைகள் நிலையான தீர்வுகாண விரும்பவில்லை. இனாம், இலவசம், இவற்றையே நம்பி வாழ்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் என்று பொழுது விடியும் என்று எதிர்பார்த்துக் கிடக்கின்றனர். பொழுது விடியாது! நாமாகத்தான் விடியவைக்க வேண்டும்.

ஜனநாயக மரபுகளைப் பயிற்றுங்கள்! கூடிச் சிந்தனை செய்யுங்கள்! கூடிவாழக் கற்றுக்கொள்ளுங்கள்! ஒருவர் எல்லாருக்காகவும், எல்லோரும் ஒருவருக்காகவும் என்று வாழக் கற்றுக்கொள்ளுங்கள்! மக்களுக்கு நன்னடை நல்கும், அரசைப் போற்றுவோம்!

நிலத்தில் நாம் பிறக்கின்றோம். நிலத்திலேயே வாழ்கின்றோம். நிலமே நமக்கு உணவுப் பொருள்களைத் தந்து வாழ்வளிக்கிறது. இறுதியிலும் நிலத்தின் மடியையே சரண் அடைகின்றோம். நிலத்தை நம்மிடமிருந்து பிரிக்க முடியாது. இந்நிலத்தைப் பேணுங்கள் ! நிலத்தின் தரத்தைக் காப்பாற்றுங்கள்! நிலத்தில் மரங்களை நடுங்கள்! பயிர்களைச் சாகுபடி செய்யுங்கள். எங்கும் பசுமை போர்த்திய நிலத்தையே காண்க!

கு.xvi. 29

விலங்குகள், பறவைகள் துணையின்றி மனிதன் வாழ்தல் இயலாது. கால்நடைகள் செல்வம். கால்நடை வளர்த்தல் பன்முகப் பயன்தரும் தொழில். பால் மாடுகள் நமக்குப் பூரண சத்துணவாக விளங்கும் பாலைத் தருகின்றன. நிலத்திற்கு உரமளிக்கின்றன. ஆதலால் வீடுகள் தோறும் பால்மாடுகள் வளர்த்து பாலும், மோரும் உண்டு வளமாக, வலிமையாக வாழ்வோமாக!

மானுட வாழ்க்கையின் அடிப்படை, மானுட வாழ்க்கையின் இயக்கம் எல்லாம் பொருளாதார அடிப்படைதான். அல்லது பொருளாதாரமேதான். ஒரு சிலர், கருத்தே உலகை இயக்குகிறது என்பர். கருத்து இந்த உலகத்தை இயக்குவதாயின் ஆன்மிக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். உலகத்தில் மனிதன் சிந்திக்கத் தொடங்கி பல நூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

உலகத்தில் எந்த நிலையில் தோன்றிய எந்த கருத்தும் உலகத்தை வென்று விளங்கவில்லை. ஆனால் பொருளாதாரம் இயக்கி வந்திருக்கிறது. பண மதிப்பீட்டுச் சமுதாயம் விருப்பத்தக்கதல்ல என்று எவ்வளவு எடுத்துக் கூறினும் இன்னும் எடுபடவில்லை. நாட்டிற்கு நலம் செய்யும் வாய்ப்புக்களை நல்லூழால் பெற்றவர்கள் முதல் துறவியர் வரை பணமே இயக்குகிறது. ஏன்? திருக்கோயிலில் கடவுள் எழுந்தருளச் செய்யும் பொழுதுகூட பொற்காசுகள் போடு கின்றோம். அதனால்தான் மாமுனிவர் காரல்மார்க்ஸ் இந்தச் சமுதாய இயக்கத்திற்குப் பொருளே முதல் என்றார்.

நமது திருவள்ளுவரும் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றார். "செய்க பொருளை" என்றார். ஆனால் பொருள் செய்யாமல், பொருள் செய்யும் முயற்சியில் முழு அக்கறையுடன் ஈடுபடாமல், அதிர்ஷ்டத்தை நம்புகின்றோம். லாட்டரிச்சீட்டை நம்புகின்றோம். இது தவறு. போகும் வழியும் அல்ல.

நமது நாட்டு மக்களின் வறுமைக்கு வயது குறைந்தது இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் மூப்பு அடையாமல், சாகாமல், வறுமை வளர்ந்து வருகிறது. இன்று வறுமை "வறுமைக் கோடு" என்று வெளிப்படத் தோன்றி, அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டது. இந்த வறுமையை இந்தத் தலைமுறையில் அகற்றியே ஆகவேண்டும் என்று உறுதி பூணுங்கள்.

நடுத்தர மக்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், ஏழைகளுடைய பொருளாதார ஆக்கத்திற்கும் நம் நாட்டில் தடைகள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கறுப்புப் பணத்துடன் கொழுத்து வளரும் தனியுடைமை, பன்னாட்டு மூலதனம் முதலியன. மேலும் நம்முடைய பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிய தடை நிலையாமைத் தத்துவம் - விதித்தத்துவம். இவற்றை எல்லாம் எதிர்த்துப் போர்க்குணத்துடன் போராடுவோம்! வறுமையிலிருந்தும், சிறுமையிலிருந்தும் விடுதலை பெறுவோம்!

மானுடம் அறிவுப் பிறவி! - அறிவு ஜீவன்! ஆனால் அறிவைத்தான் நம்மால் பெறமுடியவில்லை. கல்வி, கேள்வி முதலிய சாதனங்கள் பல்கிப் பெருகியும் அறிவு வளரவில்லை. ஏன்? இன்று அறிவு வேட்கை உடையோர் யார்? அறியாமையையே அறிவு என்று நினைத்துக் கொண்டு, தலையால் நடப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர்.

எங்கு நோக்கினும் பட்டதாரிகள்! ஆனால் படைப்பாளிகளைக் காணோம்! ஏன் இந்த அவலம்? கற்க! தொடர்ந்து கற்க! கற்ற, கேட்ட கருத்துக்களைச் சிந்தனை செய்க! அச்சிந்தனைக்கு உருவம் தருக! உருவம் தரும் முயற்சியில் அறிவு முகிழ்க்கும்! அறிவு துன்பத்திலிருந்து பாதுகாக்கும்! அறிவைத் தேடுவோம்! நாளும் தேடுவோம்!

அறிவு நுட்பமானது அறிவு பயனுடைய வகையில் இயங்க உழைப்புத் தேவை. இந்த உடல், உழைப்பால் ஆயது, உழைப்புக்காகவே உருவானது. உழைப்பும், அறிவறிந்த ஆள்வினையும் இந்த உலகை சென்ற காலத்தில் உருவாக்கி வந்துள்ளது. நம்முன் மதுரைப் பெருங்கோயில், வைகை நீர்த்தேக்கம், இவையெல்லாம் உழைப்பின் சிறப்பையே போதிக்கின்றன! உழைப்பு வாழ்வதற்கு இன்றியமையாதது.

உழைக்காது, அல்லது முற்றாக உழைக்காது உண்பவர்கள் சோம்பேறிகள்; கொள்ளைக்காரர்கள் உழைத்து உண்பதே உயர்வு. அறிவறிந்த ஆள்வினை சார்ந்த வாழ்க்கையை நடத்துவோமாக! உழைப்பில் இன்பம், இடையீடு இல்லாத உழைப்பில் இன்பம், பிறருக்கென உழைப்பதில் இன்பம் காண்போமாக!

மனிதனின் வரலாற்றுக்கு வளர்ச்சி தேவை! மாற்றங்கள் தேவை! ஓடிக்கொண்டே உள்ள ஆறுகள் பயன்படும் தீர்த்தம் எனப்படும். தேங்கிக் கிடக்கும் குட்டை நீர் பயன்படாது - நோய்களைத்தான் தரும். அதுபோல, வளர்ச்சியையும், மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளாத மனிதர்கள், மனிதகுலம் முன்னேற முடியாது; மேம்பாடு அடைய முடியாது.

பழக்கங்கள், வழக்கங்கள் என்ற சால் வழியே செல்லாது. பழக்கங்கள் தவிரப் பழகுமின்! மனிதனுக்கு வாய்க்கும் எந்த ஒரு துன்பமும் இயற்கையுமன்று நியதியுமன்று. இவையனைத்தும் மனிதனின், மனித குலத்தின் பிழைகளால் நேர்பவையே! பிழைகளைத் தவிர்த்துப் பழகுமின்!

"யாரொடும் பகை வேண்டாம்” என்றான் கம்பன், சொல் மூன்று. பொருள் பெரிது. "யாரொடும்" - உடன் பாடிலாதவரிடம் கூடப் பகை கொள்ளவேண்டாம். பகை இல்லையேல் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது. நாமும் பகையின்றி, பண்பு பாராட்டி, உறவு கொண்டு வாழ்வோம்! யாரோடும் உறவு! எவரோடும் ஒப்புரவு! இவை நமது வாழ்க்கை நெறிகளாகட்டும்! பழமையின் சாரம் ஏற்போம்! பழமை வித்து!

பழமை இன்றையத் தலைமுறைக்கு உணவாக இயலாது. ஆனால் உட்டமேற்றும் உரமாகும். புதுமை படைப்போம்! புதியதோர் உலகைச் செய்வோம்! சாதிகளை அகற்றுவோம்! குலம், கோத்திரங்களை மறப்போம்! ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்போம்! புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! மனிதகுல சமநிலை காண்போம்! மார்க்சியம் கற்போம்! வள்ளுவம் கற்போம்! இவ்விரண்டு தத்துவங்களும் இணைந்த சமுதாயம் காண்போம்!

எல்லோருக்கும் எல்லாப் பெருஞ் செல்வமும் அடையும்படி செய்வோம்! வல்லாருக்கும் மாட்டாருக்கும் ஒருங்கே வாழ்வளிப்போம்; ஒத்தாரும், உயர்ந்தாரும் தாழ்ந்தாரும், எவரும் ஒருங்கிணைந்து உலகியல் நடத்துவோம்! கணியன் பூங்குன்றன் வழி, பெரியோரை வியத்தல் செய்வோம்! சிறியோரை இகழ்தல் அதனினும் இலம்! நாளும் புதியன கற்போம்! புதியன படைப்போம்! இன்றைய பணிகளை, இன்றைய கருவிகளைக் கொண்டே செய்வோம்! இல்லாதவர் இல்லை என்று செய்வோம்!

அப்பரடிகள் கூறியவாறு, "இன்பமே எந்நாளும் - துன்பமில்லை” என்று வாழ்வோம்! இந்த மண்ணில் விண்ணரசு காண்போம்!

‘சுதந்திரம் விலைமதிக்க முடியாதது. உலகம் முழுவதும், பல நூறு ஆண்டு காலம் மக்கள் போராடிச் சுதந்திரத்தைக் கண்டனர். 18-ம் நூற்றாண்டில், பிரஞ்சு தேசத்தில் நடந்த புரட்சி, மனித குலத்திற்கு மூன்று மந்திரங்களை வழங்கின. அவையாவன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன. இவையே இன்றைய மனித உலகத்தின் தாரக மந்திரங்கள். இதன் பின் உலகம், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது.

இன்று நமது நாடு சுதந்திர நாடு! நாமே, நமக்கென்று நம்மை ஆள்வதற்கென்று ஆட்சி அமைக்கின்றோம். இன்று நமது நாட்டில் சுதந்திரத்தின் அருமை பலருக்குத் தெரியவில்லை ஏன் - சுதந்திரத் திருநாளைக் கூட வீட்டு விழாவாக, பொது விழாவாக மக்கள் கொண்டாடுவதில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகும் பழைய தீபாவளிதான் பெரிய விசேஷமாக இருக்கிறது. ஏன் - அரசு கூட துணி விலைச் சலுகைகளைச் சுதந்திர தினத்திற்குத் தரவில்லை. சுதந்திர தின விழாவை வீடுகளிலும், நாட்டு மக்கள் விரிவாகக் கொண்டாடுதல் வேண்டும்.

'நாமிருக்கும் நாடு நமது' என்ற உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியதும், ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்காளர்கள் தவறாமல், எந்தவிதமான தூண்டுதலும் இன்றி, கையூட்டும் இன்றி, வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். தவறாமல் எல்லோரும் வாக்களிப்பது என்ற கடமை மேற்கொண்டொழுகினால், கள்ளத்தனமாக ஒருவர் பெயரில் மற்றவர் வாக்களிக்க இயலுமா? அல்லது செத்தவர்தான் எழுந்து வந்து வாக்களிப்பாரா? அடையாள அட்டை அவசியப்படுமா? நம்முடைய தவறுகள்தானே அடையாள அட்டை கேட்கும்படியாகச் செய்துவிட்டது?

சுதந்திர ஜனநாயக ஆட்சியில் எல்லோரும் வாக்களிப்பது கடமை. இதில் தவறக்கூடாது. சுதந்திர நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபட உரிமை உண்டு. ஈடுபடவும் வேண்டும். அவரவர் நிலைக்கு ஏற்பத் தாம் வாழும் ஊரின் நலனுக்கும், மேம்பாட்டுக்குமுரிய பணிகளிலாவது ஈடுபட வேண்டும். அதுவும் இயலாது போனால் குறைந்த பட்சம் ஊரின், சமூகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்காமலாவது வாழ்தல் வேண்டும்.

சமூக ஒற்றுமைக்கு விரோதமாக, கோள் சொல்லுதல், சிண்டு முடிந்துவிடுதல் போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் வேண்டும். ஊரைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீதிகளில் குப்பைகளைப் போடுதல், கழிவுநீர்களை விடுதல் தவறு. பசுமையான மரங்களை வெட்டக் கூடாது. இங்ஙனம் நல்லன அல்லாதவற்றைச் செய்வதைத் தவிர்த்தாலும் ஊர் வளரும்! வாழும்!

ஒரு சுதந்திர நாட்டின் குடிமக்களுக்கு சமூக, பொருளாதார அறிவு தேவை. இவற்றைக் கற்றுக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்! அரசியல், சமூக, பொருளாதார அறிவினை மக்கள் மன்றத்தில் வளர்க்க, இளைஞர்கள் வகுப்புக்கள் மூலம் அரசியல் அறிவை, பொருளாதாரச் சிந்தனையை வளர்க்க வேண்டும்.

ஜனநாயக வாழ்க்கை என்பது தேர்தலுக்கு மட்டுமல்ல. ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. ஜனநாயக வாழ்க்கை முறை தனிமனிதனின் சுய விமர்சனத்தாலும், கூட்டாகப் பலர் செய்யும் விமர்சனத்தாலும் வளரும். ஆனால் மற்றவர்கள் செய்யும் விமர்சனம் உள்நோக்கம் கொண்டதாக இல்லாமல், உண்மையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டதாக அமையவேண்டும். "செவி கைப்பச் சொற் பொறுக்கும்” பண்பு, ஜனநாயக வாழ்க்கைக்கு, கூட்டு வாழ்க்கைக்கு, இன்றியமையாததாகும்.

ஜனநாயக வாழ்க்கை முறையின் ஆணிவேர் கட்சிகள். தவிர்க்க இயலாத தேவைகள். இந்த அமைவுகள் அதிகார வேட்கை உடையனவாகவும், ஆதிபத்திய ஆசை உடையனவாகவும், பொருளாசை உடையனவாகவவும் இருத்தல் கூடாது. நாட்டுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட கொள்கை அணிகளாக அமையவேண்டும். அக்குறிக்கோளை அடையும் நெறிமுறைகளிலேயே கருத்து வேறுபாடுகள்!

ஆதலால், உள்நோக்கமும், பகையுணர்வும், ஆட்சி அதிகாரத்தில் பிடிப்பும் உடைய அமைப்புக்களால், கட்சிகளால், நாட்டுக்குப் பயன் விளையாது. சட்டசபை, பாராளுமன்ற விவாதங்களில் சூடு இருக்கலாம். நாட்டில் சூடு இருத்தல் அறவே கூடாது. நல்ல ஜனநாயகப் பண்பு, பிறர் வாய்க் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டும். யாரோடும் பகை கொள்ளாத பண்பாடே வெற்றி தரும்.

வாழ்க்கை குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது என்பது வாய்த்திருக்கும் கருவிகளைப் பொருத்தே உணரப்படும் உண்மை. மானுடம் ஒரு பிறவி, மானுடம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பொருந்திய வாழ்க்கைக்குக் குறிக்கோள் தேவை. குறிக்கோள் இமயம் போல உயர்ந்ததாக இருக்க வேண்டும். யானையைக் குறி வை! அடிபடுவது கொசுவாக இருந்தாலும் பரவாயில்லை. குறிக்கோள் உயர்வாக அமைய வேண்டும்.

பல நூறு ஆண்டுகளாக நம்முடைய சமுதாயத்தை வருத்தி வரும் தீண்டாமை, சாதிப் பிரச்சனைகள், மதப் பிரிவினைகள், அறியாமை, வறுமை முதலியன. சுதந்திரம் வந்த பிறகும் அகன்ற பாடில்லை. இந்தப் புன்மைகளை யெல்லாம் அகற்றி, ஒரு புதிய உலகத்தைப் படைப்பதை இலட்சியமாகக் கொள்வோம்!

புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! கூடி வாழ்தல் ஒரு பண்பு; நாகரீகம்; கூட்டுறவு உழைப்பை ஊக்குவிக்கும்; கோடி நன்மை தரும்; கூட்டுடமைச் சமுதாயமே எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற வழி செய்யும் வகை செய்யும்; கூட்டுடமைச் சமுதாயமே பொதுநலம் காண வழி!

காலம் வாழுங் காலம் மிக மிகக் குறைவு. வாழ்க்கையின் தொடக்கத்தில் பல ஆண்டுகள் குழந்தைப் பருவத்தில் கழிந்து போகின்றன. வாழ்க்கையின் பிற்காலத்தில் பல ஆண்டுகள் ஓய்வில், முதுமையில், கழிந்து போகின்றன. இடையில் 40 ஆண்டுகள் தாம் வாழும் காலம். காலத்தை விலை மதிப்புள்ளதாக ஆக்கவேண்டும்.

இளமையில் படித்தது வாழ்க்கை முழுவதையும் நடத்தப் போதாது. நாள்தோறும் புத்தறிவு தேவை. நாள்தோறும் பழைய இலக்கியங்களைப் படிக்கவேண்டும். நாள்தோறும் புதிய அறிவியல் நூல்களைத் தேர்வு செய்து படிக்கவேண்டும். கற்றல் ஒரு தொடர் பணி! நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டே போனால் நன்றாக வாழலாம். உடலுக்கு வலிவு; ஆன்மாவிற்கு கருத்து!

நல்ல நூல்களைக் கற்றல், சிந்தித்தல், தெளிதல், செயற்படுதல், ஆன்மிக வாழ்க்கைக்குத் துணை செய்யும். ஆன்மிக வாழ்க்கை என்பது ஆன்மாவின் தரத்தை உயர்த்துதல், வளர்த்தல் என்பதாகும். ஆன்மிக வாழ்க்கை மத சம்பந்தமுடையது மட்டுமன்று. கற்றல், கேட்டல், அன்பு செய்தல், ஒப்புரவு அறிந்து ஒழுகுதல் ஆகியன எல்லாம் ஆன்மிக ஒழுக்க நெறிகள்; ஆன்மிகப் பண்புகள்.

இவர் தேவர் என்றும் அவர் தேவர் என்றும், என் மதம் - உன் மதம் என்றும் கலகம் செய்பவர்கள் மதவாதிகள்; மத வெறியர்கள்; இது ஆன்மிகம் ஆகாது. விநாயகரின் வயிறு . பெறு வயிறு, அது உலகத்தின் சின்னம், உலகந்தழீஇய வாழ்க்கைதான் ஆன்மிக வாழ்க்கை. ஒத்தது அறிந்து ஒழுகுதல்தான் ஆன்மிக வாழ்க்கை.

கடவுள், ஆன்மா, நிலம், வான், வாயு, நீர், மானுட உயிர்கள் அனைத்தும் கற்பிப்பது பொதுமை! கடவுள், ஊர், பேர் மதம், இவைகளைக் கடந்து வாழ்வோம்! கடவுள் வழிபாடு என்பது பொதுமை போற்றலேயாம்! ஆற்றல்மிக்க அன்பால், அமைதி வழியில் மானுட சமுதாயத்தை அழைத்துச் செல்லுதலே ஆன்மிக வாழ்க்கை.

கடவுள் வழிபாட்டினால் ஆற்றலைப் பெறுவோம்! நாம் வளர்வோம்! நாடும் வளரும்! எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான திசை நோக்கி நடப்போம்! புதியதோர் உலகம் செய்வோம்!