குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16/அடிகளார் உவமை நயம்
4
செடியும்–ஆன்மாவும்
தொட்டி எவ்வளவுதான் அழகுடையதா இருந்தாலும், அதில் நடப்பெறுகிற செடி சிறந்ததாக-உயிரோட்டமுடையதாக இருந்தால்தான் உற்ற பயன் கிடைக்கும். அதுபோல், உடல் எவ்வளவுதான் வலிவும் பொலிவும் உடையதாக இருந்தாலும், உள்ளிருக்கும் ஆன்மா சிறந்ததாக இருந்தால் தான் சிறப்பு. செடியைப் பற்றிக் கவலைப்படாமல் தொட்டியைப் பாதுகாப்பது போல் பலர் ஆன்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் உடம்பைப் பேணிப் பாதுகாக்கிறார்கள். பூஞ்செடி இல்லையானால் தொட்டிக்கு என்ன மதிப்பு? பூஞ்செடிக்காகத்தான் தொட்டி என்பதுபோல, ஆன்மாவுக்காகத்தானே உடல்? ஆன்மா இல்லாத உடம்பு பூஞ்செடி இல்லாத தொட்டியைப் போன்றதுதான்.
பல பெரிய மனிதர்கள் தங்கள் வீடுகளில் நவராத்திரிக் காலங்களில் கொலு வைப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு கொலு வைப்பதன் தத்துவம் என்ன? அந்தக் கொலு போன்றதுதான் மனித வாழ்க்கை கொலு கலைவது போல மனித வாழ்க்கையும் கலைந்துவிடும் என்பதை உணர்த்தத் தான் கொலு ஆரம்பிக்கப் பெற்றது. ஆனாலும், பலர் தங்கள் வீட்டில் கொலு வைக்கிறார்கள்; பின் கலைக்கிறார்கள். ஆனாலும், அந்தக் கொலு கலைவது போல் மனித வாழ்க்கையும் கலைந்துவிடும் என்பதை மட்டும் மறந்து போய் விடுகிறார்கள்.
கார் வைத்திருப்போர் அனைவரும் காரோட்டிகள் அல்லர்; பொறி வைத்திருப்போர் அத்தனை பேரும் பொறியியலாளர் அல்லர். காரை ஓட்டத் தெரிந்தவன் காரோட்டி, பொறியை இயக்கத் தெரிந்தவன் பொறியியலாளன். அதுபோல மனித உடலையும், மனிதனுக்குரிய பிற புற உறுப்புகளையும் பெற்றிருந்தாலும் இன்றியமையாத மனத்தைப் பெற்று, அந்த மனத்தையும் உரிய வழியில் இயக்கத் தெரிந்தவனே மனிதன்.
குப்பையைக் கூட்டித் தள்ளுகிற கூட்டு மாறிலேயே குப்பை இருந்தால் அது எப்படிக் குப்பையைக் கூட்டித் தள்ள முடியும்? அதுபோல, பொதுநலவாதிகளும், சேவையுணர்வுடையோரும் குறைபாடுடையவர்களாக இருந்தால் அவர்கள் எப்படிச் சமுதாயத்தின் குறைபாடுகளைக் களைந்தெறிய முடியும்? எனவே, பொதுநலவாதிகளும், சேவை யுணர்வுடையோரும் தம்மிடத்தே குறைபாடிலில்லாதவர்களாக இருந்தால் அவர்களுடைய முயற்சியில் வெற்றி பெறுவார்கள் - மக்களும் நற்பயன் அடைவார்கள்.
உறையில் ஒட்ட பசையுள்ள அஞ்சல்தலை தேவை. பசையற்ற அஞ்சல் தலை பயனற்றது; வெறும் பசை மட்டும் கூடப் போதாது-தண்ணீரும் தேவை. இரண்டில் எது இல்லையானாலும் பயனில்லை! அதுபோல, இன்றையச் சிறுவர்களாகிய எதிர்காலச் சமுதாயத்தினர் நாட்டுடன், மக்கட் சமுதாயத்துடன் ஒட்டி உறவாடி உயிர்வாழ வீட்டிலும் வெளியிலும் நல்ல சூழ்நிலை வேண்டும். நல்ல சூழ்நிலையே ஒருவனைப் பண்படுத்தும்-பக்குவப்படுத்தும்-பயனுடையவனாக்கும். வீட்டுச் சூழ்நிலை, வெளிச் சூழ்நிலை ஆகிய இரண்டில் ஒன்று குறைபடுமாயினும் அவன் முழுமையாகச் சிறப்புடைய வழியில்லை. அஞ்சலுறை நாடு-அஞ்சல் தலை சிறுவன்-பசை வீட்டுச் சூழ்நிலை. தண்ணீர் வெளிச் சூழ்நிலை.
ஆட்டைப் பலி கொடுப்பதானால்கூட, அதற்கு நல்ல உணவு கொடுத்து வளர்த்துக் கொழுக்க வைத்து அதன் பிறகுதான் பலி கொடுப்பார்கள். அதுபோல, எதிரியைத் தோற்கடித்து வெற்றிபெற வேண்டுமென்றாலும், எதிரியை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டாமா? ஆரோக்கியமான எதிரியிடம் வெற்றி பெற்றால்தான் அது நியாயமான-ஜனநாயக ரீதியான வெற்றியாகும். இல்லையானால், நொண்டியிடம் பெற்ற பெரு வெற்றியாகவே அது அமையும்.
புளியம் பிஞ்சுபோல இருப்பவர்கள் மனித விலங்குகள்; புளியங் காய்போல் இருப்பவர்கள் மனிதர்கள்; புளியம் பழம்போல் இருப்பவர்கள் ஞானிகள்.
புளியம் பிஞ்சு தோற்றமிருக்கும்; ஆனால் பயன்படக்கூடிய ஒன்றும் உள்ளே இருக்காது. அதுபோலப் பலரிடத்து, உருவமிருக்கும். ஆனால், மனித சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மனிதப் புண்பு இருக்காது. காயில் பசையிருக்கும்; புளிக்கும். அதுபோல, காய் போன்றோர் தன்னலப்பற்றுடையவர்களாக இருப்பர். மற்றவர்களுக்குப் புளித்த வாழ்க்கை நடத்துவார்கள்.
பழம் சுவையுடையதாக இருக்கும்; ஒடும் உட்பகுதியும் பற்றற்ற நிலையில் இருக்கும். பழம் போன்ற மனிதர்கள் மற்றவர்கட்கு இன்பந்தருவார்கள்-தன்னலப் பற்றின்றி வாழ்வார்கள்.
பாத்திரம் முக்கியமல்ல-பாத்திரத்தில் செய்யப் பெற்ற பொருள்தான் முக்கியம் என்பது போல, தேர் முக்கியமல்ல-தேரில் இருக்கும் தேவன்தான் முக்கியம் என்பது போல, திருக்கோயில் முக்கியமல்ல-அங்கு இருக்கிற திருவருள்தான் முக்கியம்.
வீட்டில் சிறுசிறு அறைகள் இருப்பது நமது வாழ்க்கை வசதிக்காக என்றிருப்பது போல, வாழ்க்கையில் சில சில வேறுபாடுகள் இருந்தால் அவை வாழ்க்கையின் நன்மைக்காகவே இருத்தல் வேண்டும்.
வேகாத அரிசி உப்புமாவைத் தின்றவர்கள் அஜீரணத்தை அனுபவிப்பது போல, தீங்கு செய்தவர்கள் அந்தத் தீவினையை அனுபவித்தாக வேண்டும்.
நமது கால்கள் தளர்ந்து போகிற போது உதவியாகக் கோல் வைத்துக் கொள்வது போல, நிருவாகத்தில் அதிகப் பொறுப்புக்கள் ஏற்படும் போது அவற்றைச் செவ்வனே ஏற்று நடத்த உதவியாக உதவியாளர்களை வைத்துக் கொள்ளுகிறோம்.
கண்வலிக்காரர்கள் வெளிச்சத்தைப் பார்க்கக் கூசுவது போல, சமுதாயத்தில் உள்ள பத்தாம் பசலிக் கொள்கையினர் புதிய கண்ணோட்டத்தைக் காணக் கூசுகிறார்கள்.
வேட்டிக் கட்டிக் கொள்வது தனி மனிதனின் மானத்தைக் காப்பதற்கு மட்டுமல்ல, சமுதாய ஒழுக்கத்திற்கும் பயன்படுகிறது. அதுபோல, கல்வி, தனி மனிதனின் நலத்திற்கு மட்டுமல்ல சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
அடித்தளத்தை வலுப்படுத்தாமல் மேல் மாடியை அழகுபடுத்துவதால் என்ன பயன்? அதுபோல, இளஞ் சிறுவர்களுக்கு அவர்களின் மனப்போக்கும், மனத் தத்துவமும் அறிந்த நல்லவர்களையும், வல்லவர்களையும், ஆசிரியர்களாக்கி, சின்னஞ்சிறு சிறுவர்களைக் கல்வித் துறையில்-நல்ல முறையில் வளர்க்காமல் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்களையும், மனவியல் வல்லுநர்களையும் ஆசிரியர்களாக நியமிப்பதால் என்ன பயன்?
உலையில் அரிசி வெந்து கொண்டிருக்கும் பொழுது கொதிவந்து பொங்கினால் கரண்டியைக் கொண்டு நன்றாகக் கிளறிவிட்டுப் பொங்கி வழியாமல் தடுத்து விடுகிறோம். அப்படிச் செய்வதால் அரிசியும் நன்றாக நின்று வேகிறது. உலை பொங்கி வழிந்து விட்டால், அரிசி நின்று வேகுவதற்கு வேண்டிய தண்ணீர் கீழே வழிந்து ஓடிவிடும். அரிசியும் சரிவர வேகாது. அது மட்டுமல்ல, அப்படிப் பொங்கி வழிவதால், சமையல் செய்வதற்காக உள்ள அடுப்பும், நெருப்பும் அவிந்து போய்விடும். அதுபோல, மனிதர்களும், ஆத்திரம் ஏற்பட்டால் உடனே அதைத் தடுத்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்; அப்படியில்லாமல், ஆத்திரப்பட்டுப் பொங்கினால், செயல் செய்வதற்குரிய ஆற்றல் கெட்டுப் போகும். காரிய சாதனைக்குரிய அடிப்படைச் சூழலும் பாதிக்கப் பட்டுவிடும்.
இரயிலும் காரும் சென்று கொண்டிருந்தால், காருக்காக இரயிலின் போக்கைத் தடுக்காமல் வழிக்கதவை (Railway Gate) அடைத்துக் காரை நிறுத்தி, இரயிலைப் போக விட்டுப் பின்னரே காருக்கு வழிவிடப் பெறும். ஏனெனில், இரயில் சமுதாயத்தின் சின்னம். கார் தனி மனிதனின் சின்னம். தனி மனித முன்னேற்றத்திற்காகச் சமுதாயத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தலாமா?
பொருளாதாரத்தை வரன்முறை செய்து சேமித்து வைக்காமல் வாழ்க்கை நடத்துவது, மழை பெய்யும் போது நீர் வேட்கைதீர அண்ணாந்து வாயைப் பிளப்பது போன்றது தான். வரன்முறை செய்யப் பெறாத பொருளாதாரம் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றாது-சேமித்து வைக்கப் பெறாத நீர், நீர் வேட்கையைத் தீர்க்காது.
கொடிக் கம்பத்தை நட்டதும் நிழல் விழுவது போல, நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்கியதும் அதனை எதிர்ப்பவர்களும், ஏளனம் செய்பவர்களும் தோன்றத்தான் செய்வார்கள். நிழலைக் கொடிக் கம்பம் பொருட்படுத்தாது போல, தொண்டு செய்கிறவர்களும் எதிர்ப்பையும் ஏளனத்தையும் பொருட்படுத்தக் கூடாது.
ஆரோக்கியம் ஏற்படும் என்றால் வலியையும் பொறுத்துக் கொண்டு நாம் ஊசி குத்திக் கொள்வது போல, இந்த நாட்டுக்கு நன்மை என்றால் நமக்குச் சிறு சிறு இழப்புக்கள் ஏற்பட்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
அகன்று விரிந்த தட்டில் உழக்குப் பாலைக் கொட்டினால், பாலின் அளவு குறைவாகவே தோன்றும். ஆனால் அதை உழக்கிலேயே ஊற்றி வைத்தால் நிறைய இருப்பது போல் தோன்றும். அதுபோல, சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாடு பொருளாதாரத் துறையிலும், வாழ்க்கைத் துறையிலும் விரைந்து முன்னேறியிருந்தாலும், நாற்பத்தாறு கோடி மக்கள் வாழுகிற பரந்த நாடாதலின், இங்கு ஏற்பட்டிருக்கிற
முன்னேற்றமெல்லாம் மிகக் குறைந்த முன்னேற்றம் போல் தோன்றுகிறது.
குடியிருப்பதற்காகத்தான் வீடு; தண்ணிர் வைப்பதற்காகத்தான் பானை. வீட்டிலுள்ள மனிதனைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டைப் பற்றிக் கவலைப் படுவதும், பானையிலுள்ள தண்ணிரைப் பற்றிக் கவலைப் படாமல் பானையைப் பற்றிக் கவலைப்படுவதும் புத்திசாலித் தனமாகுமா? அது போலவே, இங்கு வாழ்கின்ற மனித உயிர் களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களை வாழ்வாங்கு வாழ வைக்கத் தோன்றிய சமயத்தின் புறச் சடங்குகளைப் பற்றி மட்டும் கவலைப்படுவது புத்திசாலித்தனமாகாது; நியாயமுமாகாது.
வெப்பம் நிறைந்த அறையில் நாம் இருக்கும்போது காற்று இல்லாதது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. அப்பொழுது, விசிறிகொண்டு வீசி, காற்றை அசைத்து விட்டு, நாம் அதை அனுபவித்து மகிழ்கிறோம். காற்றை உணர்ந்து அனுபவிக்க விசிறி தேவை.
விண்ணில் ஒலி அலைகள் பரவிப் பாய்ந்து வருகின்றன. எனினும் வானொலிப் பெட்டியின் வாயிலாகவே அதை நாம் கேட்டு அனுபவிக்க முடிகிறது. ஒலி அலைகளைச் செவிப் புலனால் நுகர்ந்து அனுபவிக்க வானொலிப் பெட்டி தேவை. காற்றுப் போல ஒலி அலைகளைப் போல எங்கும் நிறைந்திருக்கிற இறையருளைக் கண்டு-கேட்டு-உண்டு-உயிர்த்து அனுபவிக்கத் திருவுருவங்கள் பயன்படுகின்றன.
உடல் வளத்திற்கேற்ப நகம் வளர்கிறது; விரலின் நீளத்தைக் கடந்தும் அது வளரும். அப்படி வளர்வது இயற்கை. எனினும், நகத்தை எல்லை மீறி வளர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததல்ல; அழகாகவும் இருக்காது. பிறருக்கு அருவருப்பாக மட்டுமல்ல அபாயத்தை விளைவிப்பதாகவும் இருக்கும். அதனாலேயே நகம் வளர்ந்தவுடன் அதை நாம் வெட்டிவிட்டுக் கொள்ளுகிறோம். அப்படி நகத்தை நாம் வெட்டும்பொழுது, நமக்குத் துன்பம் ஏற்படுவதில்லை; செங்குருதியும் சிந்துவதில்லை. அது போலத்தான் ஒரு தனி மனிதனிடத்தில் நியாயமான தேவைக்குமேல் குவியும் செல்வத் தேக்கமும். அத்தேக்கத்தைக் குறைப்பது, எல்லை கடந்து வளர்ந்துள்ள நகத்தை வெட்டி எடுப்பது போன்றதுதான்.
பகலெல்லாம் பாடுபடுகிற மனிதன், தனது உடற் சோர்வு நீங்கிப் புதிய தெம்பு பெற உறக்கம் பயன்படுகிறது; அதுபோல, வாழ்க்கையில் உழலும் உயிரின் ஆன்மாவின் சோர்வு நீங்கிப் புதிய ஆற்றல் பெறுவதற்கு வழிபாடு பயன்படுகிறது.
ஆரோக்கியமான உடம்பில் ஒரு புண் ஏற்பட்டால் அது விரைவில் மேவி ஆறிவிடும். ஆரோக்கியக் குறைவான உடம்பில் ஏற்பட்ட புண் அப்படி ஆறிவிடுவதில்லை. அது போல, ஆரோக்கியமான மனம் உடையவர்களிடத்தில் சில நேரங்களில் கோபதாபங்கள் ஏற்பட்டாலும் அது மிக விரைவில் மாறி, மீண்டும் பழைய பரிவும், பாசமும் ஏற்படும். ஆரோக்கியமில்லாத மனமுடையவர்களிடத்தில் ஏற்படுகிற கோபதாபங்கள் அப்படி மாறுவதில்லை.
குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அவர்கள் தம் போக்கில் வளர்வார்களானால், வெட்டி விடப் படாத 'குரோட்டன்ஸ்'களைப் போலக் கரடு முரடாகத்தான் இருப்பார்கள்.
நாம் பழச்சாறு அருந்துவதனால் மட்டும் உரிய பலனைப் பெற்றுவிட முடியாது. அந்தச் சாற்றைச் செறிக்க வைக்கிற ஆற்றல் நமது உடலுக்கு இருந்து, சாப்பிட்ட சாறு சீரணித்தால்தான் பயன் ஏற்படும். அதுபோல, நாம் வழிபாடு செய்வதால் மட்டுமே உரிய பயனைப் பெற்றுவிட முடியாது. வழிபாட்டின் வழியாகக் கிளர்ந்தெழுகிற உணர்வுகளைப் பாதுகாத்துக் கொண்டு அவற்றை அனுபவிக்கிற இயல்பும் நம் மனத்திற்கு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வழிபாட்டின் பயனை நாம் பெறமுடியும்.
நிலத்திலே தோண்டினால் நிலக்கரியும், இரும்பும் இன்ன பிற தாதுப் பொருள்களும் கிடைப்பது போல, நாம் ஆழ்ந்து சிந்தித்தால் நல்லறிவு பெறுவோம்.
பம்பரம் எவ்வளவு வேகமாகச் சுற்றினாலும், அது தொடர்பை விடாமலே சுற்றும். அதுபோல, நாம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சமாளிக்க வேண்டி வந்தாலும் கடவுள் உணர்வை விட்டு விலகாமல் வாழ வேண்டும்.
சிலர் எத்தகைய நோயும் இல்லாதவர்கள் போலத் தோன்றுவார்கள். அவர்களின் புறத்தோற்றம் அப்படி யிருந்தாலும், அவர்களினுள்ளே தோன்றி வளர்ந்து கொண்டு வந்துள்ள நோய் திடீரென்று உடலைத் தாக்கி வருத்தும். அதுபோல சிலர் உள்ளத்திலே தோன்றி வளரும் தன்னலம் என்ற பெருநோய் திடீரென ஒருநாள் சமுதாயத்தையே தாக்கி வருத்தும்.
புதிய காற்று சிலருக்கு உடல்நலக் குறைவை உண்டாக்குவது போல, புதிய தண்ணிர் சிலருக்கு ஜலதோஷத்தை உண்டாக்குவது போல சோஷலிசம் சிலரின் சுகபோக சுரண்டலுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
நெல் விளையும் கழனியிலே புல்லும் முளைப்பது போல, மனித சமுதாயத்தின் கருத்துக் குவியல்களில் நல்லனவும் தீயனவும் தலைகாட்டவே செய்யும், கழனியில் களை எடுப்பது போல, கருத்துக் கழனியிலே தீமைகளை நீக்கி நல்லனவற்றைப் பாதுகாத்துப் பயன்பெற வேண்டும்.
ஒரு பெரிய வண்டியை அதனுள் நுட்பமாக அமைந்திருக்கும் இயந்திரம் இயக்குவதுபோல, மனிதனை அவனுள்ளிருக்கும் ஆன்மாவே இயக்க வேண்டும்.
கவிதையைப் பாராட்டுவதன் மூலம் அதைப் பாடிய கவிஞனைத் திருப்திப்படுத்துவது போல, ஓவியத்தைப் பாராட்டுவதன் மூலம் அதை வரைந்த ஓவியனைத் திருப்தி
படுத்துவது போல, மனித உலகுக்குச் சேவை செய்வதன் மூலமே மனித உலகை இயக்கும் இறைவனைத் திருப்திப் படுத்த முடியும்.
மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கித் தண்ணிர் பாய்வது போல ஆத்திரப்படுவதும், கோபங் கொள்வதும், பகைமை காட்டுவதும் மனித இயல்பு. எனினும், இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்து மேட்டிற்குத் தண்ணிர் கொண்டு. செல்வது போல, மனித இயல்புக்கு மாறாக ஆத்திரப் படாமல், கோபங் கொள்ளாமல் பகைமை பாராட்டாமல் வாழ்வதுதான் வாழ்க்கைக்குச் சிறப்பு.
ஒன்றை ஓங்கிக் குத்தி வீழ்த்த வேறுபட்ட அளவைகளும், தோற்றங்களும் உடைய ஐந்து விரல்களையும் ஒருசேர மடக்கி இணைப்பது போல, மலிந்து கிடக்கும் வேற்றுமைகளைக் களைந்தெறிந்து ஒருமைப்பாடு காண வேறுபட்ட கருத்துக்களும் கட்சிகளும் கொண்ட எல்லாரும் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.
அரும்பு மலர்ந்து விட்டபிறகு எப்படி மணத்தைச் சிறைப்படுத்திவைக்க முடியாதோ அப்படித்தான் அன்பில்அறத்தில்-கொள்கை உறுதிப் பாட்டில் மலர்ந்து விட்டால் மனிதனையும் யாரும் சிறைப்படுத்தி வைக்க முடியாது.
பசுவைக் குளிப்பாட்டிப் பொட்டிட்டு இலட்சுமி என்று பாராட்டுவார்கள்-தீனி மட்டும் சரியாக வைக்க மாட்டார்கள். அதுபோல, தமிழர்கள் இலக்கியங்களைப் படிப்பார்கள்-பாராட்டுவார்கள்; வாழ்க்கையில் கடைப்பிடிக்க மட்டும் மாட்டார்கள்.
மழை பெய்து தண்ணிர் புரண்டோடி வருகிறது; அதனைக் கால்வாய்களின் வழிக் கொணர்ந்து-ஏரிகளில் தேக்கிக் கழனிக்குப் பாய்ச்சும் போதுதான் உரிய பயன் ஏற்படுகிறது. அதுபோல, மனிதனிடம் இயல்பாகத் தோன்றும் உணர்ச்சிகளை அறிவுக் கால்வாய்களின் வழியே செலுத்தி, அனுபவம் என்ற ஏரியில் தேக்கிச் செயல்முறை என்ற கழனியில் செலுத்தினால் உரிய பயன் ஏற்படும். சிந்தனையற்ற மனிதனின் உணர்ச்சிகள் பொட்டல்காட்டில் பெய்த மழை போல பயனற்றுப் போய்விடும்.
மனிதன், சொறி சிரங்கு பிடித்தவன் போல அரிப்பு ஏற்படும் போது சொறிந்து கொள்வான்; சொறியும் போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு எரிவெடுத்ததும் இனி சொறியக் கூடாது என்று தனக்குள் எண்ணிக் கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும் போது தன்னை மறந்து சொறிய ஆரம்பித்துவிடுவான். அது போல,
பலர் அன்பு அருள் என்று படிக்கும் போது அன்பும் அருளும் காக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்வார்கள். அடுத்த நேரமே அதை மறந்துவிடுவார்கள்.
இலட்சம் செங்கல் கொட்டிக் கிடந்தாலும் அது கட்டிடமாவதில்லை. அவற்றை அடுக்கிச் சந்து பதிந்துதான் சுவரை எழுப்பவேண்டும். உடைந்த செங்கல்லையும் முழு செங்கல்லையும் இணைத்து இடைவெளி ஏற்பட்ட இடத்தில் முழுச் செங்கல்லையும் உடைத்துப் போட்டுச் சந்து நிரப்புவது போல, மனிதனும் தனது சொந்த மதிப்பையும், சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயச் சுவரை எழுப்ப முற்படவேண்டும். உடைந்த செங்கல்லையும் முழுச் செங்கல்லையும் இணைத்துச் சுவரை எழுப்புபவர் கொத்த னார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவனையும், வலிமையற்றவனையும் இணைத்து ஒரு சேர அழைத்துச் செல்லுபவர் சமுதாயத் தலைவர்.
சமயவாதி என்றால் நல்ல மணமுள்ள மலர்போல இருக்க வேண்டும். மலரின் மணத்தினால் இன்ப அனுபவம் மனிதர்களுக்கேயன்றி மலருக்கல்ல. மலர் இருக்கும் செடி, அனுபவிப்பது பலருக்கு அருவருப்பூட்டும் உரத்தைத்தான். ரோஜா மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு விருந்தளிக்கிறது. அது போல மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பமளிக்க வேண்டும்.
கால்பந்து விளையாட்டு உங்களுக்குத் தெரியும். யாரையும் தரையில்விழச் செய்து வெற்றி பெற்றால் அது வெற்றியாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எதிரியையும்
ஆரோக்யமாக விளையாடச் செய்து, நம் திறமையால் பந்தை விளையாடித்தான் வெற்றி பெற வேண்டும். அந்த விளை யாட்டுப் போட்டியைப் போலவே நமது வாழ்க்கைப் போட்டிகளையும் திறந்த வெளியில் நடத்தி வெற்றி பெற வேண்டும்.
அடித்தளத்திற்கும் கூரைக்கும் ஏற்றபடி வீட்டிற்கு வாயிற்படி அமையும். ஒரு மனிதனின் உழைப்பு, அறிவு ஆகியவற்றிற்கேற்பவே அவனுக்குச் செல்வம், செல்வாக்கு அமையும். மனிதனுக்குக் கால்-கைகள் உழைப்பின் சின்னம்அடித்தளம். தலை அறிவின் சின்னம்-கூரை.
அறம், வேறு சமயம் வேறல்ல-கை, கால் எல்லாம் சேர்ந்ததுதானே உடம்பு. அவை இல்லாமல் உடம்பு உண்டா? மேலே கூறியன யாவும் உடலின் உறுப்புக்கள். அவற்றிற் சில குறைந்தாலும் மனிதன் வாழ்ந்து விடலாம். ஆனால், இதயம் இல்லாமல் வாழ முடியுமா? இதயம் வேறு நாம் வேறு அல்ல. நம் வாழ்வுக்கு இதயம் போலச் சமயத்திற்கு அறம் அவசியம். எனவே, அறம் வேறு சமயம் வேறு அல்ல. அறமே சமயம், சமயமே. அறம்.
படரும் கொடிக்குக் கொம்பு நட்டால் நன்றாகப் படர்ந்து வளரும் பூக்கும் காய்க்கும். அது போல, முன்னேற வேண்டும் என்ற எழுச்சியும் ஆர்வமும் உடையவனுக்கு ஒரு சிறு உதவி கிடைத்தாலும் அதைப் பற்றிக் கொண்டு அதனைப் பற்றுக் கோலாகக் கொண்டு வளர்வான்-முன்னேறுவான். முன்னேற்றத்திற்கு முயற்சியும், உதவியும் எவ்வளவு அவசியமோ அதைவிட ஆர்வம் அவசியம்.
மண்ணில் முளைக்கும் மரம் ஊட்டமாகச் செழித்து வளர்ந்து பயன் தர, மண்ணோடும் விண்ணோடும் அதற்குத் தொடர்பு வேண்டும். கதிரொளியையும் காற்றையும் அது விண்ணோடு தொடர்பு கொண்டு தானே பெறுகிறது? அதுபோல, உலகந்தழிஇய வாழ்க்கை வாழ வேண்டிய மனிதனுக்குத் தாய்மொழி அறிவு மட்டும் போதாது; பிற மொழிகளின் தொடர்பும் வேண்டும். மரத்திற்கு மண்ணோ டுள்ள உறவு போன்றது மனிதனுக்குத் தாய்மொழியோடு உள்ள தொடர்பு! விண்ணோடுள்ள உறவு போன்றது பிற மொழித் தொடர்பு.
பழுத்துக் கனிந்த நாவற்பழம் நல்ல சுவையுடையதாக இருக்கும். அவ்வாறு பழுத்துக் கனிந்த நாவற்பழம் கீழே உதிர்ந்தால் அதிலே மண் ஒட்டிக் கொள்ளும். அந்தப் பழத்தின் மீது நமக்கு விருப்பம் இருக்கிறது. ஆனாலும் அதில், ஒட்டிக் கொள்ளும் மண்ணை நாம் வெறுக்கிறோம். நாம் வெறுக்கிற அந்த மண் ஒட்டியதால், நாம் நாவற்பழத்தையே ஒதுக்கி விடுகிறோமா? இல்லையே! பழத்திற்குக் கேடு வராமல் மண்ணை ஊதித் தள்ளிவிட்டுப் பழத்தைப் பயன் படுத்தத்தானே செய்கிறோம். அதுபோல, நாம் விரும்புகிற சிலரிடத்தில் நமக்கு விருப்பமில்லாத-நாம் வெறுக்கத்தக்க சில குணங்கள் இருக்கலாம். ஆனாலும், நமக்குப் பிடிக்காதநாம் விரும்பாத அந்தக் குணங்களை, நாவற்பழத்தில் ஒட்டிய மண்ணை நாவற்பழத்திற்குக் கேடு வராமல் ஊதி ஒதுக்குவது போல, அவர்களுக்கு வருத்தமோ நோவோ ஏற்படாத வண்ணம் விலக்க முயற்சிப்பதுதான் நல்லது.
கு.XVI.17.
துன்பத்திலிருந்து இன்பமும், சோதனையிலிருந்து திறமையும் தோன்றுவது மரபு, அதனால்தான் துன்பத்தின் முடிவு இன்பம் என்று ஆன்றோர் கூறுகின்றனர்.
மகப்பேறு பெறும் தாய் ஒருத்தி, படுகிற துன்பம் மிக அதிகம். ஆனாலும் அந்தத் துன்பத்தைத் தொடர்ந்து இனிய மகிழ்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் தொடர்கிறது. அதுபோலவே, சமுதாயத்தில் ஒரு சீர்திருத்தம் செய்ய விரும்பி முயற்சிக்கின்ற போது, முதலில் நாம் அடைவது தோல்வியும் ஏமாற்றமும் இன்ன பிறவுமே ! ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் சமுதாயம் மாறி வளரத்தான் செய்யும். சில சமயங்களில்-மகப்பேற்றில் தாய் இறந்து விட்டாலும் குழந்தை வளர்ந்து சமுதாய வளர்ச்சி தொடர்வது போலச் சீர்த்திருத்தம் செய்ய முயற்சிக்கும் தலைவன் இறந்து போனாலும், அந்தத் தலைவனின் சீர்திருத்தக் குழந்தை வளர்ந்து, வாழ்ந்து சமுதாயத்திற்குப் பயன் தருவது உறுதி.
சில தென்னை மரங்களைப் பார்த்திருப்பீர்கள்; மற்ற தென்னை மரங்களைப் போலவே அதுவும் வளர்ந்து, பாளை விட்டுக் காய்க்கும். காய், மற்ற தென்னை மரங்களில் காய்க்கும் காய்போலவே தோற்றமளிக்கும். ஆனால், அந்தக் காயை எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளிடு இருக்காது. அதற்கு, 'வெறும்பாடை' என்று பெயர். அந்த மரமும் உரிய காலம்வரை வளர்ந்துதான் இருக்கும். தேங்காயின் தோற்றமும் மற்ற தேங்காயைப் போலவே இருக்கும். ஆனாலும் உடைத்துப் பார்க்கும் போது உள்ளீடு இருப்பதில்லை. அது வெறும் பாடையாக இருக்கிறது. இதைப் போலவே மனிதர்களிலும் பலர் உள்ளனர்.அவர்கள் பருவுடல் தோற்றத்தால்
மற்ற மனிதர்களைப் போலவே தோன்றுவார்கள். ஆனாலும் அவர்களிடம் ஆன்மநலம் இருக்காது-குறிக்கோள் இருக்காது.
மானிட வாழ்க்கை அனைவர்க்கும் பொது. அந்த மானிட யாக்கையை இறைவன் தகுதியும் தரமும் பார்த்துப் பிரித்துக் கொடுக்கவில்லை. மிழற்றுகின்றவனின் திறமைக்கு ஏற்ப வீணையின் நாதம் எழுவதுபோல, உள்ளத்தைக் கட்டுப்படுத்தி அதனை இயக்குகின்றவனின் திறமைக்கேற்பக் குறிக்கோள் நிறைவு பெறுகிறது-வாழ்க்கை அமைகிறது.
நிலத்திலே நீருற்று இருப்பது போல மனிதனிடத்திலே நினைப்பூற்று இருக்கிறது. நினைப்பு நல்லதாக இருந்தால் மனிதன் நல்லவனாவான். பொதுவாக, பகல் 12 மணிக்கு நாம் ஒரு நல்ல விருந்து படைக்க வேண்டும் என்று விரும்பினால், காலை 8 மணிக்கே சமையற்கட்டுக்கு நல்ல சரக்குகளைக் கொடுக்க வேண்டும். சமையற்கட்டுக்கு நாற்றம் பிடித்த அரிசியையும், பூச்சி வைத்துக் கெட்டுப்போன கத்திரிக்காயையும் கொடுத்துவிட்டு, 12 மணிக்கு நல்ல சாப்பாடு வேண்டுமென்றால் ஒருபொழுதும் வராது. சமையற்கட்டுக்குக் கொடுக்கப்பெற்ற சரக்குகளுக்கு ஏற்பவே பந்தியிலே விருந்து அமையும். அதுபோல, நமது இதயம் என்ற சமையற்கட்டிலே ஏற்றப் பெற்ற எண்ணம் என்ற சரக்குகளுக்கு ஏற்பத்தான் சமுதாய வாழ்க்கை அமையும்.
ஒரு பாத்திரத்தில் எதையாவது ஒன்றை வைத்துக் கொண்டு இன்னொன்றை அதன் மேல் ஊற்ற முடியாது. அதில் இருப்பதை அப்புறப்படுத்தி விட்டுத்தான் இன்னொன்றை ஊற்றவேண்டும். மனித உள்ளத்தில்
வஞ்சஆறு இயல்பிலே ஊற்றெடுக்கிறது. அதனை நாம் துார்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி விட்டால் பக்தி ஆறு பெருக் கெடுக்கும். மனத்திலே வஞ்சம், பொய், களவு, சூது என்ற வஞ்ச ஆறுகள் வற்றினால்தான் பக்தி ஆறு பெருக்கெடுக்கும்.
பசித்தபோது சுவையுணவு சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடிந்ததும் கைகளைக் கழுவிவிடுகிறோமல்லவா? அது போல, உலகியலில் மிக்குயர்ந்த இலட்சியத்தை நோக்கிச் செல்லும் போது அதற்குச் சாதனமாகக் கொண்ட பொருளியல் பற்று முதலியவற்றை நாம் அந்த இலட்சியத்தை அடைந்ததும் அகற்றிவிட வேண்டும்.
மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. ஆனாலும், அது தானே அள்ளிச் சாப்பிடுவதில்லை. பிற உறுப்புக்கள் முயன்று உழைத்து மூளையைக் காப்பாற்றுகின்றன.
வேதம் ஓதுகிறவர்களும் சமயக் கணக்கர்களும் சமுதாயத்திற்கு மூளை போன்றவர்கள்; அவர்கள் தமது வாழ்க்கைப் பிரச்னைகளில் ஈடுபடாமல் தத்தம் கடமைகளைச் செய்தால், பிற உறுப்புக்கள் முயன்று உழைத்து மூளையைக் காப்பதுபோல, சமுதாயத்தின் மூளைபோல விளங்கும் அவர்களைச் சமுதாயம் முயன்று உழைத்துக் காக்கும்.
சிந்தனையால் பெறும் அறிவு ஊற்று நீர் போல. படிப்பால் பெறும் அறிவு மழை நீர் போல. ஊற்று நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். மழைநீரால் நிலம் நனையும். எனினும் ஈரம் எப்போதும் இருந்து கொண்டே
இருக்காது. எனவே சமுதாய வளர்ச்சிக்கு சிந்தனையறிவு தேவை.
மருத்துவர்களிடமிருக்கும் மருந்து மற்றவர்களின் உடல் நோய் தீர்க்கப் பயன்படுவது போல, செல்வந்தர்களிடம் குவிந்து கிடக்கும் பணம் மற்றவர்களின் வறுமை நோய் நீக்கப் பயன்பட வேண்டும்.
வரத்து வாய்க்கால்கள் மூலமே ஏரிக்குத் தண்ணிர் வரும்; அந்த வரத்து வாய்க்கால்களைக் கோடை காலத்தில் சரிவர மராமத்துச் செய்து வைத்திராவிட்டால் ஏரிக்குத் தண்ணிர் எப்படி வரும்? அதுபோல, உழைப்பு மூலமே செல்வந்தர்களுக்குப் பணம் சேர்கிறது. செல்வந்தர்களுக்குப் பணம் வருகின்ற வாய்க்கால்களான உழைப்பாளிகளைச் சரிவரப் பேணிக் காக்கத் தவறி விட்டால் செல்வந்தர்களுக்கு எப்படிச் செல்வம் சேரும்.
தனி மரம் ஒன்று நின்றால் அந்த மரத்தினடியிலும் நிழல் இருக்கும். ஆனாலும் அந்த மரத்தைச் சுற்றி வெப்பம் இருக்குமானால், அந்த மரத்தின் நிழல் நாம் அனுபவிக்கத் தக்க குளிர்ச்சியுடையதாக இருப்பதில்லை. மரங்கள் அடர்ந்த சோலையாக இருக்குமானால் அதில் உள்ள நிழல் பெரிதும் அனுபவிக்கத்தக்க தண்மையும் இன்பமும் உடையதாக இருக்கும். செழிப்பற்ற சமுதாயத்தில் ஒரு தனி மனிதனும், செழிப்புள்ள சமுதாயத்தில் ஒரு தனி மனிதனும் இருக்கிறார்கள்.
செழிப்பற்ற சமுதாயத்தில் உள்ள ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இன்பம் போலத் தோன்றித் துன்பம் செய்யும்.
செழிப்புள்ள சமுதாயத்தோடு கலந்து வாழும் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இன்பமே தரும்.
வீட்டுத் திண்ணையின் முன்னே தாழ்வாரம் இருந்தால் வெளியே இருக்கிற வெப்பமும் தட்பமும் தாக்காத வண்ணம் வசிக்கலாம். தாழ்வாரம் இல்லையானால், வெப்பமும் தட்பமும் வீட்டில் வசிப்பவர்களைத் தாக்கவே செய்யும், அதுபோல, சமுதாயம் என்ற தாழ்வாரம் இருந்தால் அதனுள்ளடங்கிய தனி மனிதன் வாழ்க்கை இன்பம் தழுவியதாக இருக்கும்.
ஒரு கட்டிட அமைப்பில் சுவர்கள் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பொருந்தினாலேயே கட்டிடம் வலிமை யுடையதாக அமையும். அதுபோல, மனிதர்களுக்குள் அன்பும் அறிவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தாலேயே சமுதாய அமைப்பு வலிமையும் வளமும் உடையதாக இருக்கும்!
கார்கள் ஓடும்பொழுது சில நாய்கள் குரைத்துக் கொண்டு விரட்டும். கொஞ்ச துரம் போன பிறகு தொடர முடியாமல் எய்த்துப் போய் நிற்கும். அது போல, சமுதாய நலத் தொண்டு புரிபவர்களைச் சில சுய நலமிகளும், தீய சக்தியுடையவர்களும் தூற்றத் தலைப்படுவார்கள்-இறுதியில் தோல்வியுற்று அடங்கி விடுவார்கள்.
உயிரினங்கள் இறைவனால் அங்கீகரிக்கப் பெற்ற அஞ்சற் பெட்டிகள்; சாதாரணமாக யாருக்கு அஞ்சல்
சென்று சேர வேண்டுமோ அவர் முகவரியை எழுதி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பெற்ற எந்த அஞ்சற் பெட்டியில் போட்டாலும், அஃது உரியவருக்குச் சென்று கிடைப்பது போல, இறைவனுக்குச் செய்யும் நோக்கத்தோடு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மக்கட் சமுதாயத்திற்குச் செய்யும் சேவை இறைவனையே சென்று சேரும். இவ்வாறு செய்வதால் மக்கட்கும் இறைவனுக்கும் சேவை செய்த இருவகைப் புண்ணியங்கள் கிடைக்கும்.
ஆடுகளை மேய்ப்பவன் அவற்றை நாய் நரிகள் தின்ன விட்டு விட்டு ஆட்டிடையன் மட்டும் பத்திரமாகத் திரும்பி வந்தால் அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? அது போல, மக்கட் சமுதாயத்தின் அருள் வேட்கையைத் துண்டி அவர்களது ஆன்மாவை வளர்க்க வேண்டிய ஆதீன கர்த்தர்கள் சமுதாயத்தைப் பிற சமய நெறிகளுக்கும் வறுமைக்கும் ஆளாகும்படி விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வாழ்ந்தால் அதை என்ன என்று கூறுவது?
கோயிலுக்குச் செல்லும் வழியில், நடைபாதையில் பளுவான-பெரிய பட்டியல் கற்கள் பதிக்கப் பெற்றிருந்தன. அவற்றில் ஒரே ஒரு கல் மட்டும் தன் நிலையிலிருந்து மேலே எழும்பி, நடப்போரின் கால்களைப் பதம் பார்த்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் தவத்திரு அடிகளார் அவர்கள் அந்தக் கல்லைக் காண நேர்ந்தது. உடனே அந்தக் கல்லைப் பெயர்த்தெடுத்து மீண்டும் பதிக்கும்படி கட்டளையிட்டார்கள். ஆறேழு வேலைக்காரர்கள் கனத்த கடப்பாறைகளின் துணை கொண்டு அந்தக் கல்லை மிகவும் சிரமப்பட்டுப் பெயர்த் தெடுத்தார்கள்! என்ன வியப்பு உள்ளே சுமார் ஒன்றரை முழம் நீளமுள்ள-கடப்பாறை போன்ற பருமனுள்ள ஒரு
பசிய வேர்-பசு மரத்தின் வேர் ஓடிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வேரை வெட்டி எடுத்து விட்டு மீண்டும் அந்த ஆறேழு வேலைக்கார்களும் சேர்ந்து முழு முயற்சியோடு அந்தக் கல்லைப் பதித்தார்கள். இந்தக் காட்சி தவத்திரு அடிகளார் அவர்களின் மனத்தில் மின்னல் போலப் பளிச்சிட்டு, ஓர் அழகான உவமையாக வெளிவந்தது. "பல டன் எடையுள்ள-பலர் சேர்ந்து முழு முயற்சியுடன் பெயர்க்கக் கூடிய இந்தப் பெரிய கல்லை ஒன்றரையடி நீளமுள்ள இந்த வேர் நெம்பித்துக்கிவிட்டது; இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? கல் பல டன் எடையுள்ளது. ஆனாலும் அதற்கு உயிரோட்டமில்லை. வேரோ சுமார் ஒன்றரை முழ நீளமிருந்தாலும் அதற்கு உயிர்ப்பு இருக்கிறது-உயிரோட்ட மிருக்கிறது. அது பசுமரத்தின் வேர். உயிரோட்டமில்லாத பட்ட மரத்தின் வேர் ஒன்றை இந்தக் கல்லுக்கு அடியில் போட்டால் வேர் நசுங்கிப் போகும். மனிதனும் இப்படித் தான்! அவன் நாளும் சிந்தனையால் செயலால் வளரும் சக்தி படைத்தவனாக-உயிரோட்டமுள்ளவனாக இருந்தால் அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெற்று விடலாம். மனிதனுக்கு உயிரோட்டமிருக்கிறது என்பதன் அடையாளமே அவன் நாள்தோறும் சிந்தனையால் செயலால் வளர்வதுதான்!” என்று கூறி முடித்தார்கள். பக்கத்தில் இருந்த அனைவரும் அடிகளார் அவர்களின் உவமையின்பத்தில் மூழ்கித் திளைத்தார்கள்! எவ்வளவு அழகான உவமை!
அடிக்கடி வண்ணம் மாறுகிற சென்னைத் துணி (Bleeding Madras) போல மனித மனம் அடிக்கடி மாறுகிற தன்மையுடையதாக இருக்கின்றது.
காவிரி கடலோடு கலப்பது உண்மை; ஆனாலும் கடல்நீர் முழுவதும் காவிரிக்கு வந்துவிட்டால் காவிரி நீரின் சுவை கெட்டுவிடும். இரண்டுக்கும் உறவில்லையென்றாலோ, காவிரியின் ஊற்றுவளம் குன்றும். எனவே, காவிரியும் வேண்டும்-கடலும் வேண்டும். காவிரிக்கும் கடலுக்கும் உறவு இருப்பது போல, உலக மொழிகளோடும், இந்திய மொழி களோடும் தமிழுக்கு உறவிருக்க வேண்டும். ஆனாலும், அவற்றோடு கலந்து விடாமல், தமிழ் தன்னுடைய தன்மையை தகுதிப்பாட்டை இழந்துவிடாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். நம்முடைய தமிழினத்தினுடைய தமிழ் உணர்வும் ஆற்றலும் முயற்சியும் இதற்குப் பயன்பட வேண்டும்.
செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குவது மக்களுக்கு மகிழ்ச்சி தருவதற்கு என்பதுபோல, நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரத்தக்கதாக அமையவேண்டும்.
வண்டிக்கு பிரேக் அவசியமாக இருத்தல் போல, மனிதர்களுக்கு அவர்களின் இயல்பான உணர்ச்சிப் போக்குக்குத் தடை போட்டு ஆற்றுப் படுத்தும் நண்பர்கள் தேவை.
கொடியும் கொம்பும் ஒன்றாகி விடுவதில்லை. ஆனாலும் அவை இரண்டுக்கும் உறவிருக்கும். இவ்வாறு கொடிக்கும் கொம்புக்கும் உள்ள உறவு போல உலகின் எல்லா மொழிகளோடும் தமிழுக்கு உறவு இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் தழைக்கும்.
அரைக்கீரை கிள்ளக் கிள்ளத் துளிர்த்து வளர்வது போல ஆற்றல் நிறைந்த மனிதன் துன்பத்தால் தாக்கப் பெறத் தாக்கப் பெற அவன் ஊக்கமும் உற்சாகமும் பெறுகின்றான். கோழைகள் பகைவரால் அழிக்கப்படுகிறார்கள்.
திருக்கோயிலுக்குள் நாம் நுழையும் போது காற் செருப்பை வெளியே கழற்றி வைத்து விட்டுப் போவது போல, பஞ்சாயத்துக்குள் நுழைபவர்கள் தனி மனித உணர்வு, சாதிய உணர்வு ஆகியவற்றையெல்லாம் வெளியிலேயே விட்டு விட்டுப் போக வேண்டும்.
உத்திரத்திலோ சுவரிலோ புகை படிவது போலவே மனித மனத்தில் தீமைகள் படிகின்றன. புகை கொஞ்சம் கொஞ்சமாகவே படியும். தீமையும் அப்படித்தான்!
இன்றையச் சமுதாய வாழ்க்கை கலைந்த வீடுபோல் காட்சியளிக்கிறது. கலைந்த வீட்டில் குடியிருப்பது என்பது எப்படி முடியாதோ அதுபோலவே, அன்பிலும் உறவிலும் வாழவேண்டிய சமுதாயம் தம்முள் கலைந்து விடுமாயின் மனித சமுதாயம் வாழமுடியாது!
மழைபெய்து புரண்டுவரும் தண்ணிரைக் கால்வாய்களின் வழிக்கொணர்ந்து ஏரிகளில் தேக்கிக் கழனிகளுக்குப் பாய்ச்சும் போதுதான் உரிய பயன் ஏற்படுகிறது. அதுபோல, மனிதனிடம் தோன்றும் இயல்பான உணர்ச்சிகளை அறிவுக் கால்வாய்கள் வழிச்செலுத்தி அனுபவம் என்ற ஏரியில்
தேக்கிச் செயல்முறை என்ற கழனியில் செலுத்தினால்தான் உரிய பயன் விளையும். சிந்திக்காத மனிதனின் உணர்ச்சிகள் பொட்டல் காட்டில் பெய்த மழையைப் போலப் பயன் படாமல் போய்விடும்.
சாம்பாரில் கடுகு அதிகமாகிப் போனால் சாம்பார் கசக்கும். பருப்பு அதிகரித்தால் சுவைக்கும். தன்னலம் பெருகுவது கடுகு அதிகரிப்பது போல, பொது நலம் பெருகுவது பருப்பு அதிகரிப்பது போல.
சந்தைக்குச் சென்று கீரைக்கட்டு வாங்கும் போது பூச்சிக்கீரைகளை ஒதுக்கி நல்ல கீரைதானா என்று பார்த்து வாங்குகிறோம். ஆனால், தரமான இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதில் கீரைக்கட்டு வாங்குவதில் காட்டும் அளவு அக்கறைகூடக் காட்டுவதில்லையே!
நான்குபுறமும் சாளரம் உள்ள வீட்டில்தான் நல்ல ஆரோக்கியமான காற்றோட்டம் இருக்கும்; அதுபோல நாம் பல மொழிகளையும் பயில்வதன் மூலமே நமது தாய்மொழி செழுமையுறும்.
கற்ற கல்வியை மறந்துவிடுவது என்பது சம்பாதித்த பணத்தைத் தெருவிலே போட்டுவிட்டு வருவது போன்றது. கற்ற கல்வியை மறந்து விட்டால் அது உற்ற நேரத்தில் கைகொடுத்து உதவாது.
நாம் பல்வேறு வகையான உணவுகளையும் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் ஊறுகாயைச் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவனைத்தும் செரித்து ஊறுகாயின் மணம் மட்டும் மேலெழுந்து நிற்பது போல, மதமும், கடவுள் நம்பிக்கையும் நம்மிடமுள்ள வஞ்சம், பொய், களவு, சூது, சினம் ஆகியவற்றைச் சீரணிக்கச் செய்து அன்பையும் சகோதரத்து வத்தையும் மேலெழுந்து நிற்கச் செய்யும்.
ரோஜா மலர் மணத்தால் வண்ணத்தால் பலருக்கும் விருந்தளிக்கிறது. அதுபோல, மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பமளிக்க வேண்டும்; அது மனிதனின் கடமை.
ஒலிப்பதிவு நாடாவில் (Tape Recorder) நாம் ஒலிப்பதிவு செய்வதையே மீண்டும் கேட்கிறோம். புதிதாகக் கேட்க முடிவதில்லை. அப்படிப் புதியது கேட்க விரும்புவோமானால் அழித்துவிட்டுப் புதுப்பதிவு செய்ய வேண்டும். அதுபோல, நம் உயிரின் ஒலிப்பெட்டியில் நாம் எண்ணி யனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன. அவையே நம்மை நிழல் போலத் தொடர்கின்றன.
இரும்பை நெருப்பில் போட்டுச் சூடுண்டாக்கிச் சம்மட்டியால் அடித்தால்தான். அது வில்லாக வளையும் என்பதுபோல, மனிதனை நோன்பால் வருத்திப் பக்குவப் படுத்தினால்தான் அவன் பயன்படும் மனிதனாவான்.
சமையற்காரர்களின் திறமையைப் பொறுத்துச் சமையலின் சுவை அமைவதுபோல, ஆசிரியர்களின் திறமையைப் பொறுத்தே மாணவர்களின் எதிர்காலம் அமையும்.
ஒன்றை நிறுத்துக் காட்டுகின்ற தராசின் முள் மட்டும் தனித்துக் கிடக்குமானால் அதற்குக் கடமையுமில்லை, சிறப்பு மில்லை. அதே முள் தராசில் இணைக்கப் பெறுமானால் கடமையுண்டு-சிறப்பும் உண்டு. அப்பொழுது அம்முள் குறையையும், நிறையையும் காட்ட வேண்டும். அதுபோல, மனிதர்கள் பொறுப்புள்ள பதவிகளைப் பெறுவார்களானால், அப்பதவிகளுக்கு ஏற்பக் கடமைகளுண்டு. குறை-நிறை காட்டும் கடமை புரியாத தராசு-ஓட்டைத் தராசு, கடமையைச் செய்யாமல் பதவியில் வீற்றிருப்பவர்கள் உபயோகமற்றவர்கள்; உதவாக்கரைகள்.
மரம் செழித்து வளர வேண்டுமானால் அந்த மரம் தங்கி முளைக்கும் மண்ணைச் செழிப்பாக்க வேண்டும். மதம் செழித்து வளர வேண்டுமானால் அம்மதத்தைத் தழுவுகிற அம்மதத்தில் வாழுகிற மனிதர்களின் வாழ்க்கையைச் செழிப்பாக்க வேண்டும்.
கேணிச்சுவர் வெள்ளியால் கட்டப் பெற்றிருந்தாலும் வாளி தங்கத்தால் செய்யப் பெற்றிருந்தாலும், கயிறு வெள்ளியினால் செய்யப் பெற்றிருந்தாலும் அந்த கேணியில் இறைக்கும் நீர் குப்பென்று நாற்றமடித்தால் என்ன பயன்? அது போல, மனிதன் மாடமாளிகையில் வாழ்ந்தாலும்
கூடகோபுரத்தில் குடியிருந்தாலும், எல்லா இன்பங்களையும் அனுபவித்தாலும் அவனிடத்தே அன்பும், ஆன்மீக உணர்வும், மனிதப் பண்பும் இல்லையானால் என்ன பயன்?
சாப்பிடுகிற மனிதனுக்குப் பசி நீங்க வேண்டும்; குளிக்கிற மனிதனுக்கு உடல் அழுக்கு நீங்கி வெப்பம் தணிய வேண்டும் என்பனபோல, வழிபாடு செய்கிற மனிதனுக்கு உள்ளத்தில் உள்ள வெப்ப நோய் நீங்க வேண்டும்; இல்லை யானால் வழிபாட்டால் என்ன பயன்?
தண்ணிருக்கும் தாமரைக்கும் இருக்கிற உறவு போல, மண்ணுக்கும் மரத்திற்கும் இருக்கிற உறவு போலத் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய உறவு இருக்க வேண்டும்.
விண்ணோக்கிச் செல்லும் பொருளை மண்ணோக்கி இழுக்கும் ஈர்ப்புச் சக்தி மண்ணுக்கு இருப்பதுபோல, மேல் நோக்கிப் பறக்கிற மனிதனைக் கீழ்நோக்கி இழுக்கின்ற ஆற்றல் வஞ்சனை பொய் களவு சூது சினம் ஆகியவற்றிற்கு உண்டு. அவற்றின் ஆற்றலை அடக்கி மனிதனை மாமனிதனாக ஆக்கும் சக்தி மதத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் உண்டு.
ஆறுகளுக்குத் துறை பலவாக இருக்கலாம்; ஆனாலும் நாம் ஒரு நேரத்தில் இறங்கிக் குளிக்க ஒரு துறையே பயன்படும். அதுபோல, இறைவனுக்குப் பெயர்கள் பலவாக இருக்கலாம். எனினும் நாம் அனுபவித்து மகிழ-பயன் பெற
ஒவ்வொருவரும் ஒரு நாமத்தையே உறுதியாகக் கொள்ள வேண்டும்.
தேனிலோ உப்பிலோ ஊறிய பொருள் அவற்றின் சுவையைப் பெறுவது போல, இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகி விடுவார்கள்.
சமூகம் என்பது ஒரு சீன வெடிக்கட்டுப் போன்றது; சீன வெடிக்கட்டில் ஓரிடத்தில் தீ வைத்தாலும் கட்டு முழுவதும் வெடிப்பது போல, சமூகத்தில் எங்கேனும் ஒரு மூலையில் தீமை பற்றினால் அது சமூகம் முழுவதையுமே பற்றத்தான் செய்யும்.
நிலத்தை உழுதல் வளப்படுத்துதல் பயிர் செய்தல் பயிர்களைப் பாதுகாத்தல் முதலான அனைத்துமே விவசாயத் தொழில்கள்தாம் என்பது போல, மனித குலத்திற்கு நல்லறிவு தருதல், நலத்தைப் பாதுகாத்தல், வறுமை, பிணி, பகை முதலியவற்றிலிருந்து பாதுகாத்தல் ஆகிய அனைத்துமே சமயத் தொண்டுகள்தாம்.
கழனிகள் இல்லையேல் விளை பொருள்கள் இல்லாமற்போவது போல, மக்கள் மன்றம் இல்லையேல் சமயம் இல்லாமற் போகும்.
நமக்கு இருக்கிற நிலபுலன்களையும், சொத்துக் களையும் நாம் நமது வாரிசுகளுக்குப் பத்திரம் செய்து
கொடுப்பதுபோல, நமது அருளாளர்களும், ஞானியர்களும் நமக்களித்திருக்கிற அருட்பாடல்களையும் அறவுரைகளையும் நமது பரம்பரைக்கு நாம் பத்திரம் செய்து கொடுத்துப் படிக்கச் செய்து சொந்தமாக்கிக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
கரித்துண்டை என்னதான் பாலூற்றிக் கழுவினாலும் கரித்துண்டு பாலின் நிறத்தைப் பெறாதது போல, எட்டிக் காயை என்னதான் தேனில் ஊறப்போட்டாலும் எட்டிக்காய் தேனின் இன்சுவையைப் பெறாதது போல, கீழ்மைக் குணம் படைத்த கயவர்களை எவ்வளவுதான் திருத்த முயற்சித் தாலும் அவர்கள் திருந்தி நல்லவர்களாக மாட்டார்கள். மாறாகக் கரித்துண்டு பாலைத் தன் நிறத்திற்கு மாற்றி விடுவது போல, கீழ்மைக் குணம் படைத்த கயவர்கள் நல்லவர்களையும் கெடுத்து விடுவார்கள்.
உரிமையைக் கடமையாகச் செய்தால்தான் உரிமை சிறக்கும். உரிமை மட்டும் இருந்து கடமை சிறக்கவில்லை யானால் அந்த உரிமையும் சிறப்பிழக்கும். பயிரைப் பாதுகாக்க வேலி இருப்பது போல உரிமையைப் பாதுகாக்க கடமை இருக்கிறது.
நாள்தோறும் உடலில் சேரும் அழுக்கைக் குளிப்ப்தன் மூலம், தூய்மைப் படுத்திக் கொள்வது போல, நாள்தோறும் உடையில் சேரும் அழுக்கை துவைப்பதன் மூலம் தூய்மைப் படுத்திக் கொள்வது போல, நாள்தோறும் உள்ளத்தே எழும் துன்பங்களையும் இறைவனை நோக்கி அழுவதன் மூலம் போக்கித் துய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அழுகை இதயத்திலிருந்து பொங்கி வர வேண்டும். அதுதான்
பிழையைத் திருத்தும் - பிழையிலிருந்து நம்மை விடுவிக்கும், பிறப்பைத் தடுக்கும், பேரின்பத்தை அளிக்கும்.
படிப்பவர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே பத்திரிகைக்குப் பெருமை என்பது போல கும்பிடுகிறவர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே நெறிக்கும் கடவுளுக்கும் பெருமை ஏற்படும்.
பாலிலே தண்ணிர் கலப்பதும், அரிசியிலே கல்லைக் கலப்பதும் எவ்வளவு பெரிய குற்றமோ அதைவிட மாபெரும் குற்றம் சிந்தனையிலே நஞ்சு கலந்து மக்கள் மத்தியிலே உலவ விடுவது.
வீடில்லாதவர் வாழ்க்கையில் வெய்யில் வருத்துவது போல, சமூகம் இல்லாதவர் வாழ்க்கையில் பகை வருத்தும், வீடில்லாதவர் வாழ்க்கையில் குளிர் வருத்துவது போல சமூகம் இல்லாதவர் வாழ்க்கையில் அழுக்காறு வருத்தும். சமூக வாழ்க்கை மிக மிக முக்கியமானது. அதுதான் கடவுள் பக்தி என்று நான் கருதுகிறேன்.
உள்ளத்தில் உள்ள சக்திதான் பக்தி-அதைப் பயன்படுத்திச் செயலாக்குவதுதான் தொண்டு. பக்தியும் தொண்டும் உடலும் உயிரும் போல; மலரும் மணமும் போல.
வானம் மழை பொழிந்தால் மண்ணில் மரம் செடி கொடிகள் தழைக்கும் என்பது போல, மனித மனத்தில் அன்பு மழை பொழிந்தால் மனித சமுதாயம் செழிக்கும்!
கு.xvi.18
குழந்தைகளின் மனம் சுறுசுறுப்பாக இயங்கும் ஆற்றல் மிக்கதோர் இயந்திரம் போல. அது, எதையும் படம் பிடித்துக் கொள்ள சக்தி வாய்ந்த ஒரு காமிரா. எனவே, குழந்தை களிடத்தில் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பழக வேண்டும். அவர்களுக்கு நல்ல காட்சிகளையும் நல்ல சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
மக்களுக்கு மணமும் தேனும் தந்துதவுகிற மலர்களை இறைவன் விரும்புவது போல, மக்களுக்கு அன்போடும் பண்போடும் உதவி செய்கின்றவர்களையும் இறைவன் விரும்புவான்.
பக்தியும் தொண்டும் ஒரு நாணயத்தின் இருபுறங்களைப் போல, கண்களை மூடிக்கொண்டு பஜனை செய்கின்ற அளவிலேயே நிற்பது பக்தி-மனிதன் அசைய ஆரம்பித்ததும் தொண்டு மலர்கிறது. பானைக்குள் இருக்கும் தண்ணிரைத் தூய்மையாக வைத்துக் காப்பது பக்தி, அதனை அள்ளிக் குடிக்கும்படி செய்வது தொண்டு.
கட்டுச்சோறு மறுநாள் பயணத்திற்குப் பயன்படுவது போல, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் கல்வி அவர்களின் எதிர்காலத்திற்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
பெய்கின்ற தண்ணிரைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொள்ளாத செடிகொடிகள் செழித்து வளராதது போலக் கற்கின்ற கல்வியை-அந்தக் கல்வியின் மூலம் கிடைக்கக்கூடிய சிந்தனையை உணவாக ஏற்றுக் கொள்ளாத குழந்தைகள் சிறந்து வாழமுடியாது.
ஆற்றங்கரைகளிலும் - குளத்தங்கரைகளிலும் கொக்கு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கும். பரபரப்பின்றி - தவம் செய்வது போல உட்கார்ந்து கொண்டிருக்கும். ஏன்? இரையை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. கொக்குக்கு இரை மீன்! அம்மீன்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கரையில்தான் அது உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. ஏன் ஓடுகிற மீன் குஞ்சுகளை-மீன்களைப் பிடிக்கக் கூடாதா? பிடிக்கலாம்; தடையில்லை. ஆனால், வயிற்றுக்குப் போதுமானதாக-திரும்பத் திரும்பப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாதபடி ஒரே முயற்சியில் பிடித்து உண்ணும் அளவிற்குப் பெரிய மீன் வரும் வரைக் காத்திருக்கின்றது. இந்தக் காட்சியும் கொக்கின் வாழ்க்கை முறையும் கவராத கவிஞர்கள் கிடையா? மாணிக்கவாசகரும் இந்தக் காட்சியில்-வாழ்க்கையில் கவர்ச்சிக்கப்பட்டுள்ளார். தாமும் இரைதேர் கொக்கு போல வாழ்ந்ததாகக் கூறுகிறார்.
உயிருக்கு இரை இறைவனின் திருவருளேயாம். உடற் பசிக்கு எடுக்கும் இரை-மீண்டும் மீண்டும் பசியைத் தோற்றுவிக்கும். ஆதலால், உயிர் மீண்டும் பசிக்காதஅனுபவிப்பதால் மேலும் மேலும் இன்பப் பெருக்கினைத் தருகின்ற இறைவனின் திருவருளையே உணவாக ஏற்று உண்டு தேக்கெறிந்து வாழ்தல் வேண்டும். இந்த வேட்கை மாணிக்கவாசகரின் பெரு விருப்பம். மாணிக்கவாசகப் பெருமான் உடல் தாங்கி உலவினாலும், உடம்பு நீங்கி விடுதலை பெறுதலையே விரும்பினார். அவரது விருப்பம் கை கூடுவதற்குரிய காலத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இடைவெளியில் அமைச்சு அதிகாரம் பரிகள் வாங்குதல் ஆகிய பல்வேறு கவர்ச்சிகளுக்குரிய பேறுகள் கிடைத்தும் மாணிக்கவாசகர் அவற்றில் நின்று நிலைத்து அனுபவிக்கவில்லை. சமய வாழ்க்கையின் சிறந்த நோக்கம் இம்மையும் மறுமையும் ஒருங்கே நலம் பெறுதலேயாகும். மாணிக்கவாசகர் இம்மை நலன்களை, தம்மைத் தேடி வந்தவற்றைத் துச்சமென உதறித் தள்ளினார். "பொன் வேண்டேன்; புகழ் வேண்டேன்; பொருள் வேண்டேன்" என்று பாடுகின்றார்.
கொக்கின் நிறம்போல மாணிக்கவாசகர் அகத்தாலும் புறத்தாலும் தூயவர்-கொக்கு உட்கார்ந்திருக்கும் ஆற்றில் புனலும், போகத்துக்குரிய மீன்களும் ஓடுதல்போல, மாணிக்கவாசகர் அமர்ந்திருந்த அரசவை வாழ்க்கையில் பொருள்களும் போகமும் புரண்டன. கொக்கு, ஓடிய எல்லா மீன்களையும் பிடிக்காதது போல அவர், தமக்கு கைக்கு எட்டியனவாக இருந்த எந்தப் பொருள்களையும் போகங்களையும் விரும்பினாரில்லை. கொக்கிற்குத் தனக்குத் தேவையானதும் போதுமானதுமான மீன் எது என்று தேர்ந்தெடுக்கும் அறிவு இருப்பதால் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடிக் காத்திருக்கிறது. மாணிக்கவாசகரும் ஞானம் கைவரப் பெற்றவரானமையால் நிலையில்லாத வற்றைத் தெளிவுற உணர்ந்து நிலையான திருவருட் பேற்றை விரும்பி நிற்கிறார். நாம் விரும்புவதொன்று, விரும்பியவுடன் கிடைத்துவிடுவதில்லை. அதற்காகப் பலகாலும் காத்திருக்க வேண்டிவரும். அதுமட்டுமின்றி, கொக்கு ஆற்றங்கரையில் பெரிய மீனுக்காகக் காத்திருக்கிறது. பெரிய மீன் கிடைக்குமளவு இரவுபகல் என்று பாராமல் காத்திருக்கின்றது. காற்று, வெயில், மழை, இன்னபிற இயற்கைத் துன்பங்களை ஏற்றுப் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அது மட்டுமா? அந்தக் கொக்கையே கொல்லும் பகை மனிதனும் நடமாடுகிறான். அவனுடைய குறியிலிருந்தும் அது தப்பி, இடம் மாறித் தற்காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அது போலவே, இறைவனுடைய திருவருளைப் பெற்று ஆரத் துய்க்க வேண்டும் என்று விரும்புகிற ஆன்மா இரவு பகல்
என்று பாராமல், முயற்சிக்க வேண்டும். மாணிக்கவாசகர் கங்குல் பகற்பொழுது எல்லாம் கரைந்து அழுது திருவருளைப் பெற முயற்சித்தார். திருவருள் பெறும் முயற்சியில் உலகும், உலகியலும் தீராத் தொல்லைகள் தரும். அத்துன்பங்களையும் இன்பமாகக் கருதி ஏற்றுக் கொள்ளாவிடில் திருவருட்பேறு சித்திப்பதில்லை. மேலும், எப்படி கொக்கையே சுடும் மனிதன், நடமாடுகிறானோ அப்படியே நம்மையே தன்னுணர்வளித்து நெறியல்லா நெறிதன்னில் பயின்று மூர்க்கராகி முதலிழந்து அழியச் செய்யும் பொறிகளும் புலன்களும் பகை காட்டுகின்றன. மாணிக்கவாசகர் தாம் இப்படி அலைக்கப்பட்டதாகத் தம் மீது ஏற்றிக் கூறுகின்றார். ஒன்றைப் பெறாமையினால், துன்பம் உண்டாக வேண்டும். அத்துன்பத்தினால் நாம் வாடுதலும் வேண்டும். அப்பொழுதுதான் பெறாமைக்குரிய காரணங்களை நீக்கி, பெறுதற்குரிய முயற்சிகளைக் கவலையுடனும் அக்கரையுடனும் மேற்கொள்ள முடியும். ஆதலால், இறைவனுடைய திருவருளைப் பெறாது அல்லற் படுபவர்கள் அதற்காகத் துக்கப்பட வேண்டும்; வாடுதல் வேண்டும். மாணிக்கவாசகர் இப்படித் துக்கித்தார்வாடினார் என்பதை அவருடைய நூலாகிய திருவாசகமே நமக்குணர்த்தும். இரைதேர் கொக்கொத்து இரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் என்பது மாணிக்கவாசகரின் மணிமொழி. முழுப்பாடலையும் அனுபவிப்போம்:
அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலில் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ?
சிவானந்த அனுபவத்தில் திளைத்த மாணிக்க வாசகருக்கு உலகியல் சான்றுகள் எளிதில் கிடைக்கின்றன; அவர் மிகச் சிறந்த உண்மைகளை விளக்க எடுத்தாளும் உவமைகள் எளியனவாக இருக்கின்றன- நடைமுறையை ஒட்டியனவாகவும் இருக்கின்றன என்பது உணர்ந்தின்புறத் தக்கது.
உலகியலில் அறியா மக்கள் தாம் முயன்று பெற்றவற்றையேகூட அருமை கருதித் தொடர்ந்து போற்றிக் காப்பாற்றுவதில்லை. மிக மோசமான இயல்புடைய மக்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் எதையும் அதனுடைய தகுதியறிந்து போற்றுவதில்லை. பன்றியின் முன்னே முத்தை வாரியிறைத்தது போலவும், கழுதையின் மீது குங்குமப் பூவைச் சுமத்தியது போலவும் ஆகிவிடும், அறியா மாக்களுக்குச் சான்றோர் செய்யும் உதவிகள். பலகால் கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பு பொதுவாக மக்களிடத்து இருப்பதில்லை. அருமையை உணர்ந்து பாராட்டுவதற்குப் பதிலாக அந்த உதவியைச் செய்யும் இயல்புக்கும் ஏதாவதொரு உள்நோக்கம் கற்பித்துக் களங்கப்படுத்தவும் செய்கின்றனர். இவ்வாறு கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பினை, மாணிக்கவாசகர் தம்முடைய அனுபவத்தின் மீதேற்றி விளக்குகிறார்.
ஒரு செல்வந்தரின் வீடு-தங்கம் தாராளமாகப் புழங்கும் வீடு-ஒரு நாள், வீட்டுத்தலைவி சாமான்களை எண்ணிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் அருகில் இருந்த அவளுடைய அருமைக் குழந்தை அங்கிருந்த பொருள்களில் ஒன்றாகிய தங்கக் கிண்ணத்தை விரும்பிக் கேட்டது. தாயும் கொடுத்தாள். குழந்தை தங்கத்தின் மதிப்பறிந்து கேட்க வில்லை. ஏதோ ஒரு பொருள். மற்றவர்கள்
வைத்திருக்கிறார்கள்; அது தனக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறது; குழந்தை அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கியதும் விளையாட்டுப் போக்கில் வீதிப்பக்கம் வருகிறது. அப்போது அது, தனக்கு மிக உவப்பானபிடித்தமான கற்கண்டு கட்டிகளையோ, வைத்து விளையாடுதற்குரிய விளையாட்டுப் பொருள்களையோ யாராவது தந்து தங்கக் கிண்ணத்தைக் கேட்டால் கொடுத்து விடும். அதற்குத் தங்கக் கிண்ணத்தின் மதிப்புத் தெரியாது. பொம்மைகளைப் போட்டு உடைத்து விளையாடுவது போலத் தங்கக் கிண்ணத்தைப் போட்டு விளையாடவும் செய்யலாம். காரணம், அது அறியாக் குழந்தை.
அது போல,
இறைவன் உயிர்களுக்குக் கருணையினால் மாறிலாக் கருணையை வழங்குகின்றான். எனினும் பல உயிர்கள் அதைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்வதில்லை. இறைவன் கருணை நிறைந்தவன் என்பதை யுணர்த்தும் வண்ணம், அவன் அம்மையப்பனாகவே விளங்குகின்றான். அவன் உயிர்கள் இருக்கும் இடம்தேடி, இல்லங்கள்தோறும் எழுந்தருளித் திருவடித் தாமரைகளைக் காட்டி ஆட்கொள்ளுகின்றான். மாணிக்கவாசகப் பெருமானையும், பெருந்துறையில் பிச்சதியற்றி ஆட்கொண்டதாகவும், தான் அதன் அருமையை உணராததாகவும் மேற்கண்ட உவமையின் வாயிலாக விளக்குகின்றார். இக்கருத்தமைந்த அழகிய பாடல் இதோ:
"மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணிற்று மேனியாய்
மெய்மை யன்பருள் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டு நீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே!”
தங்கத்தின் மதிப்பறியாக் குழந்தை போல தன்னைக் கற்பனை செய்து கொள்ளுகின்றார் மாணிக்கவாசகர். தங்கக் கிண்ணம் போன்றது இறைவன் வழங்கிய தண்ணருள்.
அடுத்து, குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது கெடுத்தாலும் குழந்தையின் மீது யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். ஆதலால், குழந்தையின் கையில் கொடுக்கப் பெற்ற தங்கக் கிண்ணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அத்தாய்க்கு இருக்கிறது. அதையுணர்ந்த தாய் குழந்தையைத் தொடர்ந்து சென்று அந்தப் பொற் கிண்ணத்தைக் காப்பாற்றுவது போல தன்னையும் காப்பாற்ற வேண்டும் என்று மாணிக்கவாசகர் விண்ணப்பிக்கின்றார். காரணம், இறைவன் வெண்ணிற்று மேனியன். அவ்வாறு வெண்ணிற்று மேனியனாக இருக்கின்றான் என்று குறிப்பதன் பொருள் ஆன்மாக்கள் வினை நீக்கம் பெற வேண்டும் என்பதற்காகவே அவன் வெண்ணிறணிகின்றான் என்று ணர்த்தலேயாகும். ஆதலால் குழந்தையின் அறியாமைக்குத் தாய் பொறுப்பேற்று ஈடுசெய்தல் போலத் தன்னுடைய அறியாமைக்கும் இறைவனே பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். அறியாக் குழந்தையின் தவறைத் தாய் திருத்திப் பாதுகாப்பது போலப் பொய்யிலங்குகின்ற தன்னை இறைவன்தான் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார். ஒரு தாய் குழந்தைக்கு உவப்பான பொருள் களைக் குழந்தைகளிடத்துக் கொடுத்தும், அனுபவிக்கச் செய்தும், அழிவு வராமல், அனுபவம் இடையறாமல் பாதுகாத்து அனுபவிக்கச் செய்வது போலத் தனக்கு இறைவன் வழங்கிய திருவருளின்பத்தை இடையறாமல் அனுபவிக்கும்படி செய்து பாதுகாக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கின்றார். எவ்வளவு அழகான உவமை!
ஒரு சிலருக்குப் பிறப்பின் சார்பினாலே பெருந்தன்மை பெருங்குணம் முதலியன இயல்பிலேயே அமைந்து கிடக் கின்றன. ஒரு சிலர் மேற்கூறிய நல்லியல்புகளைப் போராடிப் பெறுவார்கள். இன்னும் ஒரு சிலர் அற்பத்தனத்திலேயே பிறந்து அற்பத்தனத்திலேயே வாழ்ந்து வாழ்ந்து, அற்பத் தனத்திலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளுவார்கள். அவர்கள் சிறியவர்கள்-அற்பர்கள். அவர்களுக்கு- இக்கடை இனத்தார்க்கு நலன் தெரியாது; அவர்கள் நலன் நினைக்க மாட்டார்கள்; நலன் செய்யமாட்டார்கள். சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிக் காட்சி தருவார்கள். செயலற்று அற்பமாக ஏமாற்றியும் புறம் சொல்லியும் வாழ் வார்கள். ஆக்கத்தில் வாழத்தெரியாமல் அழிவில் ஆதாயம் எடுப்பார்கள். எரிகின்ற பிணத்தை நரி பிடுங்குவது போல, இத்தகையோர் பரிதாபத்திற்குரியவர்கள். இந்த வரிசையைச் சார்ந்த மக்களை மாணிக்கவாசகர் ஒரு சிறந்த உவமையால் விளக்குகின்றார்.
கடலில் தண்ணிர் நிறையக் கிடக்கின்றது-நாய் நிற்பதோ கடற்கரை நாய்க்கு மிகுதியான நீர்வேட்கை நாவறண்டு தொங்க அது நீரைத் தேடிக் கடற்கரைக்கு வந்தது. நிறையக் குடிக்க வேண்டும் என்ற ஆசை. தேவையும் கூட. கடலிலும் தண்ணிர் நிறைந்து கிடக்கின்றது. எனினும் அது நக்கியே குடிக்கின்றது. அது போலவே சிலர் நல்ல இடத்தில் இருப்பார்கள்-அவர்களுக்குத் தேவையும் ஆசையும்கூட நிறைய இருக்கும். எனினும், அற்பத்தனமாகவே பிழைப்பு நடத்துவார்கள்.
இறைவனுடைய திருவருளால் இந்த உலகம் இயங்கு கின்றது. அவனுடைய திருவருள் வைப்பின் காரணமாக எத்தனையோ கோடி இன்பங்கள் இந்த உலக அரங்கில் நிரம்பிக் கிடக்கின்றன. எனினும், மனிதர்கள் உழைத்து
இன்பத்தைப் பெற முயற்சிப்பதில்லை. அற்பமாகவே நடந்து கொள்ளுகிறார்கள். இறைவனையும் எண்ணிப் பார்ப்ப தில்லை. நாய் கடல் நீரை நக்கிக் குடிப்பது போலவே, மனிதர் களில் பலரும் திருவருளின்பம் மலிந்து கிடக்கும் இந்த உலகியலில் நக்கி வாழும் சிறுமையைச் செய்கிறார்கள் என்று கூறுகின்றார் மாணிக்கவாசகர்.
கடலில் நாய் நக்கிக் குடித்தல் இயற்கை அது மாற்ற முடியாத ஒன்று. ஆனால், மனிதனின் இயற்கை பெருந் தன்மைக்குரியது. மனிதனின் வாழ்க்கையில் சிறுமை இருப்பது இயற்கைக்கு முரண்பட்டது. செயற்கையும்கூட என்ற குறிப்பையும் அவர் உணர்த்துகின்றார்.
நாய்க்கோ நீர் வேட்கை-வேட்கையைத் தணித்துக் கொள்ள அது கடற்கரையினருகிலுள்ள சிறிய தெண்ணி ரூற்றுக்களுக்குப் போகாமல் ஆசை மிகுதியால் நிறை நீர்ப்பரப்புள்ள கடலையே நோக்கி வந்திருக்கிறது. கடல் நீரோ உப்பு நீர், நக்கித்தான் பார்க்க முடிந்ததே தவிர குடிக்க முடியவில்லை. வேட்கையைத் தணித்துக் கொள்ள முடிய வில்லை. அது போல மனிதர்கள் பேராசையின் காரணமாகஅற்பத்தனங்களின் சின்னமாக தீமைக் கடல்களையே நாடு கின்றார்கள். எனினும் அவர்களால் முடிவதில்லை என்ற கருத்தையும் மாணிக்கவாசகர் உணர்த்துகின்றார்.
“ஒன்று பரம்பொருள்-நாமதன் மக்கள்-உலகின்பக் கேணி" என்ற பெருவட்ட நோக்கோடு ஒருவரோடொருவர் ஒத்தும், ஒத்துழைத்தும் வாழ்ந்தால் நினைத்தவை கைகூடும்இன்பமாக வாழலாம்-இறையருளைப் பெறலாம் என்பது மாணிக்கவவாசகரின் கருத்து. இதோ பாடலைப் பாருங்கள்:
கடலினுள் நாய்நக்கி யாங்குன்
கருணைக் கடலினுள்ளம்
விடலரி யேனை விடுதிகண்
டாய்விட வில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேயமு
தேயென் மதுவெள்ளமே!
உலகியலில் எந்த ஒன்றும் தனித்து இருப்பதில்லை. தனித்திருப்பது வளர்ச்சிக்கு இடையூறு-முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. இதே தத்துவம் சமய இயலுக்கும் பொருந்தும். உயிர் தனித்திருப்பதில்லை. உயிருக்குச் சார்பின்றித் தனித்திருக்கும் இயல்பும் ஆற்றலும் இல்லை. ஒன்று, உலகப் பொருள்களைச் சார்ந்து அவற்றை அனுப விக்க வேண்டும்; அல்லது, இறைவனுடைய திருவருளைச் சார்ந்து திருவருளின்பத்தை அனுபவிக்க வேண்டும். இஃது உயிரின் இயற்கை உயிர் திருவருளைச் சார்ந்திருப்பது திருத்தத்திற்கும் உய்திக்கும் வழிவகுக்கிறது. அப்படியின்றி உலகியலை மட்டும் சார்ந்திருப்பது துன்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. உலகியல் வசப்பட்ட உயிர் எரியுள் அகப்பட்ட கட்டை போல அழிக்கப்படுகிறது. திருவருட் சார்பினைத் தழுவிய உயிர், விளையும் நிலத்திலே இட்ட வித்துப் போல விளைகின்றது-பயன் தருகின்றது. முன்னைய வாழ்க்கையை நினைந்து நொந்து மாணிக்க வாசகர் பாடும் இடங்கள் பற்பல!
"தனியனேன் பெரும்பிறவிப்
பெளவத் தெய்வத்
தடந்திரையால் எற்றுண்டு
பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார்
என்னுங் காலால்
கலக்குண்டு காமவான்
சுரவின் வாய்ப்பட்டு
இனியென்னே உய்யுமாறு
என்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக்
கிடக்கின் றேனை
முனைவனே முதலந்தம்
இல்லா மல்லற்
கரை காட்டி யாட்கொண்டாய்
மூர்க்க னேற்கே!”
என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டு, 'தனியனேன்' என்று குறிப்பிடுவது திருவருட் சார்பின்றி உயிர் தனித்திருக்கும் நிலையினையேயாம். உயிர் எந்த ஒன்றையாவது சார்ந்துதானே இருக்கும். அப்படியிருக்கத் தனியனேன் என்று கூறுவானேன்? உயிர் திருவருட் சார்பின்றி உலகியல் சார்பில் வாழ்வது உண்மைதான், ஆயினும், பயன்தாரத சார்பைச் சார்பென்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அந்தத் துணை இருந்தும் இல்லாதது போலவே! ஆதலால், தனியனேன் என்று குறிப்பிடுகின்றார். அதுவும் மயக்க உணர்வில் துணை என எடுத்துக் கொண்ட ஒன்று தன்னையே திரும்ப அழிக்க முற்படும்பொழுது அந்த உயிருக்குத் துணை நிற்பார் யாரு மில்லை. அந்தக் கால கட்டத்தில் உயிர் தனித்தே நிற்க வேண்டியிருக்கிறது. இந்த அழகான தத்துவத்தை ஒரு சீரிய உவமையின் மூலம் மாணிக்கவாசகர் எடுத்துக்காட்டி விளக்குகின்றார். .
கொடிகள் படர கொம்புகள் தேவை! கொம்பில் ஏறிப்படரும் கொடியே வளமாக இருக்கும். பூக்கும்; மணக்கும். அங்ங்ணம் படர்தற்கு கொம்பு கிடைக்காத கொடி தரையில் படரும். கொம்பில் படர்வதைப் போலத் தரையில் பிண்ணப் பிணைந்து அடர்ந்து படராது. நரைத்து நலிந்து காட்சியளிக்கும். பூக்கவும் செய்யாது, மணக்கவும் செய்யாது. ஆதலால், கொடி வளர, மலர, மணம்வீச, காய்கனிகளாகிய
பயனைத் தர கொம்பு தேவை. அங்ங்ணம் கொம்பின்றி வாடிய முல்லைக் கொடியின் இயல்பறிந்துதானே பாரி முல்லைக்கொடி படரத் தேரை நிறுத்தினான்? பற்றிப் படரக் கொம்பு கிடைக்காத கொடி படராமல் கிடந்து அழியும். உயிர்க் கொடி-உயிருக்குப் பற்றுக்கோடாக இருக்கிற இறைவ னுடைய திருவருள் கொம்பு இறைவனின் திருவருளைச் சார்பாகக் கொண்டு தழுவி வாழும் உயிர் சிவஞானம் மணக்கும். திருவருட்சார்பு கிடைக்காமல் ஏமாற்றமடையும் உயிர் அலமந்து அழியும். இதனை, கொம்பரிலாக் கொடி போல அலமந்து என்று குறிப்பிடுகின்றார். இதனை,
கொம்பரில் லாக்கொடி போல்அல
மந்தனன் கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண்
டாய்விண்ணர் நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
அம்பர மேநில னேயனல்
காலொடப் பானவனே.
இப்பாடலின் மூலம் நாம் உணர்வது கொடிக்குக் கொம்பு இன்றியமையாதது போல, உயிருக்குத் திருவருட் சார்பு பற்றுக்கோடு, கொடி என்றமையால், கொம்பில் ஏறிப் படர் வதற்கு உரிய தகுதிப்பாட்டை அடைந்த ஒன்றினைத்தான் கொடி என்று அழைப்பது மரபு. படரும் தகுதி பெறாமல் குழியளவிலேயே இருப்பதையோ அல்லது முளைக்காமல் மக்கி மண்ணில் மறைந்து கிடக்கும் ஒன்றினையோ கொடி என்று குறிப்பிடுவதில்லை. இங்கு கொடிபோல் அலமந்தனன் என்று உயிரைக் கொடி போல என்று குறிப்பிடுவதால் உயிர் மல நீக்கம் பெற்று திருவருட் சக்தியின் பதிவு பெற்று (சத்தினி பாதம்) இறைவனுடைய திருவருளைச் சார்ந்து நின்று ஒழுகுதற்குரிய தகுதிப்பாட்டை அடைந்திருக்கிறது என்பது பெறப்படுகிறது. கொம்பரில்லாக் கொடி என்ற உவமை அழகிய உவமை! சிறந்த தத்துவ விளக்கத்தைத் தரும் உவமை! நாமும், கொழு கொம்பில்லாக் கொடியாக அலமந்தழியாமல் இறைவனுடைய திருவருட் சார்பெனும் கொம்பினைப் பற்றிப் படர்ந்து உய்தி பெறவேண்டும். கொம்பில் படரும் கொடிகள் தமது மெல்லிய உறுப்புக்களால் கொம்பை இறுகச் சுற்றிக் கொண்டு கொம்போடு இணைந்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல, நாமும், நம்முடைய உயிரைஆன்மாவை "கன்றாப் பூர் நடு தரி” என்று அப்பரடிகளால் குறிக்கப் பெறும் கொம்பினைத் தழுவிச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளவேண்டும். கொம்பினைத் தழுவிய கொடிபோல, இம்மை மறுமை இன்பங்களைப் பெற்றுத் தழைத்து விளங்க முயற்சிப்போமாக!
சிவஞானத்திற் சிறந்த-அறிவாற் சிவனே ஆய மாணிக்கவாசகப் பெருமான் மிக்குயர்ந்த தத்துவங்களை மிக எளிய உவமைகளால் விளக்குகின்றார். உயர்ந்த அறிவு கடுமையாக இருக்கும். ஆனால், உயர்ந்த அறிவோடு அனுபவமும் இருக்குமானால் நிச்சயமாக அந்த அறிவு எளிய வடிவம் பெறும் மாணிக்கவாசகர் சிறந்த அனுபவம் உடையவர்
நாங்கூழ், உழுத நிலங்களிடையே ஊர்ந்து திரியும் புழு -எலும்பில்லாதது. மெல்லிய தசைகளிலேயே ஆயது. ஆயினும், உழவியல் தொழில் வேளாண்மை செய்யும் குடிமக்களுக்குப் பெருந்துணை செய்வது மண்ணைக் கிண்டி வளமுறச் செய்வது; அதன் எச்சில் பட்ட மண் நல் உரமுடையது பல்வளங்கொழிப்பது என்று உழவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். 'உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து' என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பேசுகின்றார்.
நாங்கூழ் புழுவோடு உயிரை உவமிக்கின்றார், நாங்கூழ் பூச்சியைப் போல அன்பினால் தகுதிப்பாடடையாத உயிர்கள் எலும்பில்லாப் புழுக்களைப் போன்றனவேயாம் மனித உயிர்கள், பயனுடையன; மனித உயிர்களின் அறிவும் ஆற்றலும் உலகத்திற்கும் பயனுடையன. இறைமைத் தன்மைக்கும் பயனுடையன. கழனிகளுக்குப் பயன்தரக்கூடிய நாங்கூழ் எறும்புகளிடையே அகப்பட்டுக் கொண்டது; எறும்புகள் நாங்கூழ் புழுவை அரித்துத் தின்னுகின்றன. இக்கருத்தினை உயிரியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அன்பு என்ற எலும்புரம் பெறாத உயிர் தன்னல வேட்கையின் நிலைக்களனாக இருக்கும். எலும்பில்லாத உடம்பையுடைய நாங்கூழ் புழுவை எறும்புகள் சுலபமாக அரித்துத் தின்பது போல, அன்பில்லாத உயிர்களைப் புலன்கள் அரித்துத் தொல்லைப்படுத்தும். நாங்கூழ் புழுவை எறும்பு அரித்தல் மூலம் அதன் வடிவைச் சிதைக்கிறது-பயன்படு தன்மையை அழிக்கிறது. அது போல, புலன்களால் அரிக்கப்பெறும் உயிர்கள் உயிர்களின் இயற்கைத் தன்மைத்தாய வளர்தல், பயன் பெறுதல், நிறைவு பெறுதல் ஆகிய தன்மைகளினின்றும் அழிகின்றன.
எறும்பிடை நாங்கூழ் பட்டு அரிக்கப்படுதலினும் உயிர் புலன்களால் அரிக்கப்பெறுதல் வேதனைக்குரியது என்று மாணிக்கவாசகர் கண்டார். எறும்பு இடை நாங்கூழ் என்று குறிப்பிட்டதால், நாங்கூழ் எறும்புகளால் சூழப்பெற்று விட்டன-நாங்கூழால் தப்ப முடியவில்லை என்று பொருள் பெறப்படுகிறது. உயிர்கள் புலன்களால் சூழப்படுவதில்லை. சூழ முடியாது; புலன்களினும் ஆற்றல்மிக்க-புழுவுக்கில்லாத அறிவு மனித உயிர்களுக்கு இருக்கிறது. இருந்தும், பயன் படுத்தாமையால் எலும் பற்ற புழு எறும்புகளிடையே சிக்கியது போல, உயிர் புலன்களிடையே சிக்கிக் கொள்ளுகிறது என்ற குறிப்பை உணர்த்துகின்றார்.
நிலத்தை உழுது பயன்காணும் உழவன் நாங்க.ழ் புழு தன் நிலத்தில் நெளிவதை விரும்புவான். அதற்குப் பகையாகிய எறும்பை விலக்குவான். அதுபோல மனித உயிர் களைப் பாதுகாத்துப் பயன்பெறுதல், ஞான உழவு செய்கின்ற ஞான ஏருழவனாக இருக்கின்ற இறைவன் உயிர்களைப் பாதுகாத்துப் பயன்கொள்ளக் கடமைப்பட்டவன். மனித உயிர்களுக்குப் பகையாகிய புலன் அரிப்பைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டியவன் அவன். புலன் வாழ்க்கை வேறு; புலன் அரிப்பு வேறு. சமய வாழ்க்கை புலன் வாழ்க்கையை மறுக்கவில்லை; புலன் அரிப்பையே மறுக்கிறது. அதனாலேயே அரித்தல்' என்ற சொல் வழக்கைக் கையாளுகிறார் மாணிக்கவாசகர்.
நாங்கூழ் புழு எறும்புகளிடையே அகப்பட்டால் அரித்துத் தின்னப்பெறும்; பயன்படும் புழுவாயினும் அழிக்கப்பெறும். மனித உயிர் அன்பு, அறிவு என்ற எலும்புகளைப் பெறாவிடின் புலன்களால் அரிக்கப் பெறும் எறும்புகளின் அரிப்பிலிருந்து நாங்கூழ் புழுவை விவசாயிகள் காப்பாற்றிப் பயன் அடைவது போல, இறைவன் உயிர்களைப் புலன்களின் அரிப்பிலிருந்து பாதுகாத்து பயன் கொள்ளுதல் வேண்டுமென்ற கருத்தை மாணிக்கவாசகர் வலியுறுத்துகிறார். அந்த அழகிய பாடல் இதோ:
"எறும்பிடை நாங்க ழெனப்புல
னாலரிப் புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண்
டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேயுணர்
வுற்றவர் உம்பரும்பர்;
பெறும்பத மேயடி யார்பெய
ராத பெருமையனே!”
சாலை ஓரத்தில் வழிச் செல்வோர் நலனுக்காக நிழல் தரு மரங்கள் வைத்து வளர்க்கப் பெற்றுள்ளன. அம்மரங்களிற் சிலவற்றில் கவனக் குறைவின் காரணமாகவும், வலிமையான உள்ளிடின்மையின் காரணமாகவும் பொந்துக்ள் விழுவதுண்டு. வழிப்போக்கர்களில் பொறுப்புணராத மனிதர்கள், நாம் புகைத்ததுபோக எஞ்சிய துண்டுப் பீடியை அந்தப் பொந்தில் போட்டுச் சுற்றிலும் கிடக்கும் சருகுகளையும் அள்ளிப் போடுவார்கள். மற்றவர்கள் கட்புலனுக்கு வராத இடத்தில் துண்டு பீடியில் இருந்த தீ, உள்ளூரப் புகைந்து எரிந்து அம்மரம் அழியக் கூடியது-அல்லது முறிந்து விழக்கூடிய நிலையில்தான் தீ வெளிப்படும். அந்த நிலையில் அந்த மரத்தை என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது. இது அன்றாடம் சாதாரணமாக நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்த எளிய காட்சி அரிய பொருளை விளக்கும் உவமையாகத் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது.
உயிர், இறவாத இன்ப அன்பில் திளைத்து இன்புற வேண்டும்-நலமுற வேண்டும் என்ற திருவருள் நோக்கத்தினாலேயே உயிருக்குப் பொறி புலன்களோடு கூடிய வாழ்க்கை கிடைத்தது. ஆனாலும், கவனக்குறைவின் காரணமாகவும் கருத்து இன்மையாலும் உயிர் இன்புறு தலுக்குப் பதிலாக ஆராத் துயரில் ஆழ்கிறது. இதற்குக் காரணம் பொறிபுலன்களோடு கூடிய வாழ்வியல் நடத்தும் உயிரிடத்தில் ஆசையென்ற பொந்து விழுந்து விடுகிறது "ஆசை மோசம்” என்பது அனுபவ மொழி
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்”
என்கிறது திருமந்திரம். தமிழ்மறை தந்த திருவள்ளுவரும் "மேன்மேலும் துன்பச் சார்புடைய பிறப்பை விளைக்கும் வித்து ஆசையே” என்கின்றார். மாணிக்கவாசகரும் "அவா வெள்ளக் கள்வனேனை” என்று குறிப்பிடுகின்றார். ஆதலால், உயிரியல் நல்வாழ்க்கையைக் கெடுக்கும் பொந்து ஆசை யேயாகும். இங்கு ஆசை என்று குறிப்பிடும்பொழுது,
கு.XVI.19 இறைவனாலேயே வழங்கியருளப் பெறுகின்ற பொன், பொருள், போகத்தை விரும்புவதா கூடாதா என்ற வினா எழும். தேவையை விரும்புதல் ஆசையென்று சொல்லப் பெறுவதில்லை. மாணிக்கவாசகரும், "வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ" என்று குறிப் பிடுவது சிந்தித்து உணரத்தக்கது. தகுதியில்லாத ஒன்றினை விரும்புதல் ஆசை. அதுமட்டுமல்ல, சாதனத்தையே சாத்திய மாகக் கருதிக் காமுறுதலும் ஆசையே. உதாரணமாகப் பொருள்களைப் பெற்றுத் துய்த்து வாழப் பொன் தேவை. அந்த அளவிற்குப் பொன்னை விரும்புதல் பிழையன்று. அளவிற்கு மேலாகத் துய்க்கவும், அத்தோடு தானும் துய்க்காமல் பிறரையும் துய்க்கச் செய்யாமல் பொன் காக்கும் பூதமாக வாழ்தலும் ஆசையின் பாற்பட்ட வாழ்க்கை. கடுங்கோடை-மண் சுடுகிறது-அந்த நேரத்தில் காலில் அணிந்து கொள்ளும் செருப்பைப் பெற்ற ஒருவன், செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு சுடுமணலில் நடந்து துயர்ப்படுவானானால் அது இரங்கத்தக்கதல்லவா?. அவனுடைய உணர்வில் செருப்பின் பயனைவிட செருப்பு அதிகப்படியான இடத்தைப் பெற்றுவிடுகிறது. இத்தகு வாழ்க்கை ஆசைக்கோர் எடுத்துக்காட்டு,
இத்தகைய ஆசையென்ற பொந்தில் துய்த்தல் என்ற நெருப்பை யாராவது இட்டுவிட்டால் அந்தத் தீ உள்ளுக் குள்ளேயே புகைந்து எரிகிறது. புலன்கள், வேட்கை என்ற வெப்பத்தால் புகைந்து எரிந்து வெதும்புகின்றன. இந்த நிலையில் திருவருளே உயிரைக் காப்பாற்ற வேண்டும்! அதுவும் உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். வருந்தும் போது காப்பாற்றுதலே முடியும். அழிந்து போன பிறகு காப்பாற்றுதல் என்பது இயலாத ஒன்று. ஆதலால், ஆசை என்ற பொந்து ஏற்பட்டு அதில் துய்த்தல் என்ற தீ பற்றி எரிவதன் மூலம் தான் அழிந்துபடாமல் காப்பாற்று என்று விண்ணப்பிக்கின்றார் மாணிக்கவாசகர். இத்தகைய கருத்தை விளக்கும் பாடல் இதோ:
"பொதும்புறு தீப்போற்
புகைதெரி யாப்புலன் தீக்கதுவ
வெதும்புறு வேனை
விடுதிகண் டாய்விரை யார்நறவந்
ததும்புமந் தாரத்திற்
றாரம் பயிற்றுமத் தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன்
அவிர்சடை வானத் தடலரைசே”
-திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம்-36
மாணிக்கவாசகர் நாடுமுழுவதும் சுற்றிப் பார்த்து நாட்டு மக்களின் நாடி பிடித்து, நன்மை தீமைகளை இனம் காட்டுகிறார்-பிறர்மீது வைத்துக் காட்டவில்லை-தன்மீதே வைத்துக் காட்டுகிறார். இஃது ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோரின் இயல்பு. அடியவர்கள் தம்மை யுடைய தலைவனை-சிவபெருமான்ை நினைந்து உருகிக் காதல்மீக் கூர்ந்து அவனடியை நாடுகிறார்கள். ஆனாலும் அறிவிலாத மனிதனோ, தன்னையுடைய தலைவனை உண ராமையின் காரணமாக அன்பு காட்டுவதில்லை. தலைவனை நாடிச் செல்வதில்லை. இறைக்கும் கிணறு ஊறுவதுபோல அன்பு காட்டுதலே அன்பைப் பெற்றுத் தரும்.
இங்ஙனம், தன்னுடைய தலைவனை ஏத்தி வாழ்த்தி வாழத்தெரியாத மனிதனை ஊர்நாய் என்றும் ஏன்? ஊர் நாயினும் மோசமானவன் என்றும் திருவாசகம் கூறுகிறது.
நாய்ப் பிறப்பு இழிவான பிறப்பு. எனினும் தனிப்பட்ட வர்களுடைய வளர்ப்பால்-அரவணைப்பால் அது நலமாக வாழும். இன்பமாக இருக்கும். பாற்சோறும் பஞ்சணையும் பெறும். வளர்ப்பவரின் விருந்தினர்கள் தட்டிக் கொடுத்துத் தகுதியுண்டாக்குவார்கள். அவர் தம் வீட்டுக் குழந்தைகள் கொஞ்சிக் குலாவுவர். இத்தனை அரிய வாய்ப்புக்களையும் இழக்கும், வளர்ப்பார் ஒருவர் இன்றித் தானே வளர்ந்து வாழும் ஊர் நாய். ஊர் நாய் நற்சோறு உண்ண முடியாது. காரணம், போடுவார் இல்லை. அதனால் இழிந்த கழிவுப் பொருட்களை உண்டு வாழும் ஈனநிலை ஏற்படுகிறது. ஆன்மாவும் தக்க அறிவு தந்து நல்லாற்றுப் படுத்தும் தலைவன் இன்மையின் காரணத்தால் மும்மலத்திற்கிடந்து உழலும், மும்மல வழிப்பட்ட உணர்வுகளைப் புசிக்கும்.
தக்க ஒருவரின் பாதுகாப்பின்மையால்தான் ஊர் நாயை எல்லோரும் அடிப்பர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க நாதியில்லை. சட்டப்படிகூட கேட்க முடியாது. அது போல உற்றுழி உதவி உறுதுணையாக நின்று வாழ்வளிக்கும் இறைவனுடைய பாதுகாப்பில் அமர்ந்தால் அவர்களை யாரும் தாக்க முடியாது; தாக்கினால் தலைவன்-இறைவன் பாதுகாப்பான். "நமன் தமரும் இவன் தமர்” என்று தீண்ட அஞ்சி ஒடுவர். மார்க்கண்டேயர் வரலாறு இதற்குத் தக்க சான்று.
ஊர் நாய் ஊர் சுற்றித் திரிதலின் காரணமாக நிலையான உணர்வும், நினைப்பும், வாழ்க்கையும் அதற்கு இருக்காது. அதுபோல, இறைவனின் திருவடிச் சிந்தனையில் நிலையான நினைப்பில்லாதவர்கள் உலகியலில் நினைப்பு மாறி, நிலை மாறி சுற்றித் திரிகுவர்.
ஊர் நாய்க்கு முறையாகச் சோறிடுவோர் இல்லாமையின் காரணத்தாலும், சில பொழுது உண்டும் பல பொழுது உண்ணாமலும் வாழ்வதாலும் இளைத்துக் கிடக்கும். குளிப்பாட்டிச் சீராட்டுவார் இல்லாத காரணத்தாலும் கண்ட கண்ட இடத்தில் படுத்துப் புரள்வதின் காரணத்தாலும் வங்கு பிடித்துக் கிடக்கும். அது போலவே, இறைவனின் திருவருள் நினைவு இல்லார் அந்நினைவு இன்மையின் காரணத்தால் உணர்வால் இளைத்து ஒழுக்கத்தால் இளைத்துக் கயமை நிலையடைவர்.
வங்கு பிடித்த ஊர் நாய் அரிப்பு மிகுதியால் தன்னைத் தானே கடித்துக் கொள்ளும். அதுபோல, திருவருட் சிந்தனை யற்ற மனிதன் பேராசைகளால் அரிக்கப் பெற்று அவ்வழிப் பட்ட குற்றங்கள் பல செய்து அதற்குரிய துன்பங்களைத் தானே பெற்று அநுபவிப்பான்.
நாய் இழிவான பிறப்பு எனினும் நன்றி காட்டும் பண்பு அதனிடத்தில் சிறப்பாக உண்டு. நன்றி காட்டும் இந்தச் சிறப்பில்பும்கூட ஒரு தலைவனிடத்தில் வளர்ந்தாலன்றோ விளங்க முடியும்? ஊர் நாயாக இருப்பதால் நன்றி காட்ட வேண்டிய அவசியமில்லாமற் போகிறது. மனிதனும், அந்த ஊர் நாய் போல் வாழ முடிவதில்லை. எந்த மட்டத்திலும் எந்தக் கட்டத்திலும் அவன் பலரின் உதவிகளைப் பெற்றே வாழுகிறான் - வாழவேண்டியவன். அதனால் அவன் நன்றி காட்ட வேண்டியவனாக இருக்கிறான். ஆனால் அவன் நன்றி காட்டுவதில்லை. காரணம், அவன் ஊர் நாயினும் தரங் கெட்டவனாகத் தரணியில் உலவிக் கொண்டிருக்கிறான்.
ஊர் நாய் ஊரைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்கும். பயன் என்ன? நாலு எச்சில் இலையை நக்கிப் பார்க்கும். தன் இனத்தைச் சார்ந்த வேறு நாய்களோடு தேவையின்றிக் குரைத்துக் கடித்தும் கடிப்பட்டுவரும். அதுபோலவே, சிவச் சிந்தனை இல்லாத மனிதர்கள் ஒன்றிய சிந்தனையில் திளைக்காமல்-உறுதியான தொண்டுகளில் ஈடுபடாமல் ஊரைச் சுற்றுவர்-உடம்பாலும் சுற்றுவர். உள்ளத்தாலும் சுற்றுவர். பயன் என்ன? வம்பளத்தல், திமொழி பேசல்-கலகம் விளைவித்தல்-கேவலமான முறையில் வயிற்றைக் கழுவிக் கொள்ள நான்கு காசு கிடைக்காதா என்று ஏங்கி நிற்றல் ஆகியனவேயாகும்.
வளர்ப்பு நாய் அருமையாகக் குரைக்கும். காரணத்தோடு குரைக்கும்-கள்வரைக் காட்டிக் கொடுக்கும். ஆனால் ஊர் நாயோ எப்பொழுதும் குரைக்கும். அச்சத்தாற் குரைத்துக் கொண்டே இருக்கும். அது போல் திருவருட் சிந்தனையில்லாதவர்கள்-உறவில்லாதவர்கள் நிறையப் பேசுவர்-பயனற்ற சொற்களையே பேசுவர். பகைகாட்டும் சொற்களையே பேசுவர்-அச்சத்தினால் பேசித் திரிகுவர். ஆனால் ஒரு பயனும் காணார்.
நாய் இயல்பாக அறிவில்லாதது. அறிவிடைச் செயல்கள் செய்யும் ஆற்றல் இயல்பில் இல்லை. ஆனாலும் அது ஒரு வளர்ப்பு நாயாக இருந்தால் - வளர்ப்பவர்கள் முறையாக வளர்த்தால் சொன்னதைக் கேட்கும், செய்யும்! அறிவோடு தொடர்புடைய காரியங்களை கூடச் செய்யும். இயல்பாக இல்லாத ஒன்றை வளர்ப்பின் மூலம் பெற்றுவிடுகிறது. ஊர் நாய் இந்த வாய்ப்பை இழந்து வருகிறது. அதுபோலவே மனிதனும் தக்கவர்களைச் சார்ந்து வளர்வதன் மூலம் தன்னிடத்தில் இயல்பில் இல்லாத அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளைப் பெற்றுச் சிறக்க முடியும். தக்கோரைச் சார்ந்து வாழாதவன் அத்தகு அறிவு ஆற்றல் பண்புகளைப் பெறமாட்டான்.
வளர்ப்பு நாய்க்குத் தன்னுடைய வளர்ப்புத் தலைவனுக்கு நன்றி காட்ட வேண்டும்-அவனையும் அவனுடைய உடைமையையும் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வு இருக்கும். ஊர் நாய்க்கோ ஒருவர் ஏது? அதுதான் வீதி முழுதும் சுற்றுமே, ஆதலால் கடமையுணர்வு அரும்பித் தோன்ற வழியில்லை. அதுபோல, கடவுள் நினைவும், உறுதியான மனித இயல்பும் உடையோர் ஒரு தலைவனை-நண்பனை நாடி வாழ்வர். அவனுக்குரிய கடமைகளைச் செய்வர். அங்ஙனம் அல்லாதவர்கள் ஒரு எச்சில் இலையை முடித்து, அடுத்த எச்சில் இலைக்கும் ஓடும் ஊர் நாய் போல் அடிக்கடி ஆளை மாற்றுவார்கள். ஆதலால் அவர்களுக்குக் கடமையுமில்லை, உரிமையுமில்லை. எனவே, திருவருட் சிந்தனையோடு நல்லியல்புகள் பெற்று வாழ்க்கை வாழ்தலே சிறப்புமிக்கது. இதனை மாணிக்கவாசகர் கூறுகிறார், பாருங்கள்:
உடையா னேநி ன்றனையுள்கி
உள்ள முருக்கும் பெருங்காதல்
உடையா ருடையாய் நின்பாதம்
சேரக் கண்டிங்(கு) ஊர்நாயின்
கடையா னேனெஞ்(சு) உருகாதேன்
கல்லா மனத்தேன் கசியா தேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்(கு)
இருப்ப தாகவடித்தா யே!
மாலைநேரம். மேயச் சென்றிருந்த பசுக்கள் வயிறார மேய்ந்துவிட்டு வீடுகளை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. துரத்தில் தன்னுடைய கன்றுகளைப் பார்த்தவுடன் கனைக் கின்றன. இப்பசுக்களுடன் வந்த ஒரு குருட்டுப் பசுவும் கனைத்தது. மற்ற பசுக்கள் கன்றைப் பார்த்து உறவு மேலிட்ட உணர்ச்சியால் கத்தின. குருட்டுப் பசுவோ, கன்றைப் பார்க்காமல் உறவு உணர்வு இல்லாமல் மற்றவை கத்துவதனால் கத்தியது என்ற இந்த எடுத்துக்காட்டை மாணிக்கவாசகர் பொய்யடியார் வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டுகிறார். இறைவன்மீது தணியாத காதல் கொண்டு ஒன்றாகி, உடனாகி இருந்து உள்உள்கி நினைந்து அனுபவிப்பவர்கள் மெய்யடியார்கள். அதன் காரணமாக, அவர்கள் இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெறுகிறார்கள். பொய்யடியார்களோ இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்து அழுவதில்லை; அழ நினைப்பதுமில்லை. ஆனாலும் மெய்யடியார்கள் பெற்றனுபவிக்கும் இன்பத்தைப் பெற விரும்புகிறார்கள். விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முழுதும் முயற்சி செய்வதில்லை. அடியார்கள் இறைவ னுடைய நாமத்தைச் சொல்லுவதைப் பார்த்து இவர்களும் சொல்லுகிறார்கள். ஆனாலும், மெய்யடியார்கள் நினைந்து நினைந்து நெக்கு நெக்குருகி உளங்கலந்து ஒதுதல் போல், இவர்கள் ஒதவில்லை. உதற்றால் ஒதுகிறார்கள். ஒலிக்குறிப்புத் தோன்றுகிறதே தவிர உள்ளுணர்வு தோன்றவில்லை. இறைவனுடைய திருவருளின்பம் உள்ளத்தால் அனுபவிக்கக் கூடிய ஒன்று. அஃது எப்படி வெறும் போலித்தனமான பொறிகளின் இயக்கத்திற்குக் கிடைக்கும்? பொறிகள், ஒன்றின் குறையினை இன்னொன்று நிரப்பமுடியும். ஆனால் உள்ளம் அப்படியல்ல-இதே கருத்தினை.
‘கோவுடனே கூடியதோர் குருட்டாவும் ஊர்புகுதும்’ என்று உமாபதி சிவமும் குறிப்பிடுகின்றார்.
மேலும், கண்ணுள்ள பசுக்கள் நன்றாக மேய்ந்து வந்திருப்பதால் அதனிடத்தே பால் வளம் இருக்கும். அது, கன்றை நோக்கிக் கனிந்தழைத்து ஊட்ட முடியும். குருட்டுப் பசுவோ, வழக்கத்தினால் மேய்ச்சல் தரைக்குப் போயிற்று. எனினும் கண் குருடானமையினால் நல்ல வண்ணம் மேய்ந் திருக்க முடியாது-பால்வளம் இருக்காது. அது எப்படி கன்றுக்கு அன்பு காட்டமுடியும்? அதுபோல மெய்யடி யார்கள் ஞானப் பசியுடையராயிருத்தலால் ஞான நூல் களைக் கற்றும் கேட்டும் தனக்குவமை இல்லாத தலைவன் மீது முருகிய அன்பை வளர்க்கிறார்கள். இறைவனைக் கண்ணப்பர் முழுக்காட்டியது போல அன்பினால் முழுக் காட்டிப் பரவசப்படுத்த முடியும். பொய்யடியார்க்கு ஞானப் பசி இல்லை. இறைவன் மீது தணியாத காதலும் இல்லை ஞான நூல்களைக் கற்கவும் கேட்கவும் வாய்ப்பில்லை. பழக்கத்தினாலேயே பெயர் சொல்லுவார்கள். எனினும் மெய்யுணர்வில்லை. அவர்கள் எங்ங்னம் இறைவனை மகிழ்வித்துத் திருவருளைப் பெற முடியும்?
ஆதலால் நாடகத்தால் அடியார் போல் நடிப்பவர்கள் உண்மையான திருவருள் இன்பத்தைப் பெறமுடியாது. உண்மைத் திருவருள் இன்பத்தைப் பெற வேண்டுமென்றால், இறைவனிடத்தில் உண்மையான அன்பு கொள்ள வேண்டும். அத்தகு அன்பினை உள்ளத்தில் தோற்றுவித்து அருள் வழங்கி ஆட்கொள்ளும் வண்ணம் மாணிக்கவாசகர் பிரார்த்திக் கிறார். பாடலைப் பாருங்கள்:
தாராயுடையா யடியேற்கு
உன்தாள் இணையன்பு
போரா வுலகம் புக்காரடியார்
புறமே போந்தேன் யான்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங்கு
உன்தாள் இணையன்புக்
காராயடியேன் அயலே
மயல்கொண் டெழுகேனே!
-திருவாசகம்
சிவநெறி சிந்தைக்கினியது - உயிர்களுக்கு உய்வு தரும் நெறி, மயக்கங்களினின்றும் விடுபெற்ற ஒரு நெறி. சிவநெறி, தத்துவம் விளக்கும் சாத்திரங்களும் அருளார்ந்த அனுபவத்தைத் தந்து உயிர்களை விளக்கமுறச் செய்யும் திருமுறைகளும், பெற்றுத் திகழும் பெருநெறி.
சைவத் திருமுறைகளுள் மிகச் சிறந்தது திருவாசகம். திருவாசகம் ஒரு அனுபவப் பொதிவு-ஞானப் புலம்பல். அது, உணர்த்தும் நூலன்று-உணரச் செய்யும் நூல். அனுபவத்தைச் சொல்லும் நூலன்று, இன்ப அனுபவத்தை விளைவிக்கும் நூல். இத்தகு திருவாசகம் ஒதுவோரை உயர்த்தும் ! திருவாசகம், சைவம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் மூன்று பொருள்களை (இறை, உயிர், தளை)யும் தக்க உவமைகளுடன் காட்டி விளக்குவதில் சிறந்தது. ஆன்மாவை, உயிர் நெறியைப் பற்றித் திருவாசகம் காட்டும் உவமை இருகையானையை ஒத்திருந்தும் என் உள்ளக் கருவைக் கண்டிலேன் என்பது, மாணிக்கவாசகர் வாக்கு உவமை மிகமிக அழகானது.
யானை மிகப் பெரிய உடலையுடையது. ஆனாலும் இத்தகு பேருடலுக்குள் இருக்கும் உயிர் நிலையையோ உயிருக்கு உயிராக விளங்கும் இறைநிலையையோ தெரிந்து தெளியும் ஆற்றல் அதற்கில்லை. அது போலவே மனிதர்கள் அறிவாலும், வேறு பிறவற்றாலும், சிறந்த மனித உடம்பைப் பெற்றிருந்தும் தன்னைப் பற்றியே அறியாமல்-அறிந்து கொள்ள முயற்சிக்காமல் இருந்துவிடுகிறார்கள். சீரிய சமய வாழ்வின் தொடக்கம் தன்னை அறிதலிலும் உணர்தலிலுமே தொடங்குகிறது. அமைகிறது. இதனை மெய்கண்ட நூல் தம்மையுணர்ந்து தலைவனையுணர்ந்து என்றருளுமாற்றால் உணரலாம்.
அடுத்து, யானை நீண்ட கையையுடையது. தொலைவி லிருந்தும் உணவெடுக்கும். தும்பிக்கையாலும் உணவெடுக்கும் -வாயினாலும் வாங்கும். நிறையத் தின்னும். எனினும் பருத்த தன்னுடலையே பார்க்க முடியாத குறையுண்டு. அதேபோல மனிதன் உண்டுடுத்து வாழ்ந்தாலும் தன்னைப்பற்றியே அறிந்து கொள்ள முடியாத “அறியாமை நிலை” எண்ணி யிரங்கத் தக்கது.
யானை இவ்வளவு பருத்த உடலுடையதாக இருந்தும், மிக நீண்ட கையையுடையதாக இருந்தும் தன்னுடைய முதுகில் உட்கார்ந்து தன்னை இயக்கும் மாவுத்தனை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது போலவே, மனிதன் கூர்த்த அறிவுடையவனாக இருந்தும், தன்னுள் இருந்து தன்னை இயக்கும் இறைவனை உணர முடியாத நிலையில் இருக் கின்றான்.
யானை மதம் பிடித்தபோது, பிற உயிர்களுக்குத் துன்பமும் தொல்லையும் விளைவித்து தன் போக்கில் திரிகிறது. அதுபோலவே, மனிதன் ஆணவம் பிடித்தாட்டும் பொழுது தன்னைச் சார்ந்தவர்கட்குத் துன்பங்களும் தொல்லைகளும் விளைவிக்கின்றான். தன்னிச்சையாகத் திரிகின்றான். தன்னுடைய தலைவனாகிய இறைவனையே மறுக்கின்றான்.
யானை சில பொழுது தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்ளும். அது போலவே மனிதனும் தன்னை வினைச் சேற்றில் அழுத்துக் கொள்ளுகிறான். யானை, தன்னைக் கட்டுதற்குரிய சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுப்பது போல மனிதனும் வினைவழித் தொடர்புடைய பிறப்புக்களுக்குத் தன்னையே ஆட்படுத்திக் கொள்கின்றான். வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும் உயிர்களின் சொந்தச் செயலே தவிர, இன்னொருவர் தந்தவையல்ல. நமக்குரிய ஒன்றை ஊழியர் கொண்டுவந்து தருவதுபோல, நம்முடைய சொந்த பலா பலன்களை காலத்தால் தோன்றும் நியதித் தத்துவங்களும் தலைவர் வழி நம்மிடம் கொணர்ந்து சேர்க்கின்றன. கொணர்பவர்மீது காய்தலும் உவத்தலும் தேவையில்லை. அவர்கள் அஞ்சற்காரர்போல அலுவல்களைச் செய்ப வர்கள்-நாமே நம்முடைய நிலைமையையுணர்ந்து சிந்தையால் சிவனை நினைந்து உரிய தொண்டுகளைச் செய்து உயர்வும், உய்தியும் பெற முயற்சிக்க வேண்டும். பாடலைப் பாருங்கள்;
“இருகை யானையை ஒத்திருந் தென் உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெய்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே”
திருவாதவூரடிகள் சிறந்த உலகியல் அனுபவம் உடையவர்; அந்த உலகியல் அனுபவம் அருளியலை நோக்கி, வளர்ந்தமையால் பயனடையதாக அமைந்தது! அனுபவ முதிர்ச்சியினின்று பாடுவதால் கருத்துக்களை இனிதாக -எளிதாக விளக்குகிற உவமைகள் திருவாசகத்தில் மலிந்து காணப்பெறுகின்றன.
வழிபடும் தெய்வத்திற்கு இறைவன் என்ற அருமையான பொருள் பொதிந்த தத்துவப் பெயரை அனுபூதிமான்கள் சூட்டினார்கள். தென்னாடுடைய சிவனே என்று அகங்குளிர வாழ்த்தும் மணிவாசகர், "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று ஏற்றிப் போற்றுகிறார். எந்நாட்டவர்க்கும் என்னும் சொல், நாடு, மொழி, இனம், சமய வேறுபாடுகளைக் கடந்த பொருளைக் காட்ட எடுத்தாண்ட வலிவுபெற்ற ஒரு சொல். இறைவன் எங்கணும் தங்கியிருக் கிறான். எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருக்கின்றான். எப்போதும் இருக்கிறான். இந்த அருமையான இறைவன் கலந்துறையும் காட்சியைக் காண்பவர் சிலரே. காணப் பெறாதவர் பலர். ஏன்? பலர் காணமுயற்சிப்பது கூட இல்லை. அங்ங்ணம் காண முயற்சிக்காதவர்களில் சமய நெறியைச் சார்ந்தோரும் உண்டு-சாராதவர்களும் உண்டு. சமயநெறியைச் சார்ந்தோரினும் பலர் இந்த உண்மையை மறந்துவிட்டு வெறும் ஆரவாரத் தன்மையுடைய-சமயம் போல் தோற்றமளிக்கக் கூடிய சடங்கு நிகழ்ச்சிகளிலேயே ஆர்வமும் அக்கறையும் காட்டுகின்றனர். எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீங்கா துறைகின்றான் எனக்கருதி அன்பு காட்டும் இயல்பை மறந்து விடுகின்றனர்-மாறாக தீமையும் புரிந்தொழுகுகின்றனர். கள்ளுள்ள மலர்களி லெல்லாம் நிச்சயமாக வண்டுகள் வந்து தங்கும். அதுபோல அன்புடைய மனிதர்களிடத்திலெல்லாம் இறைவன் வந்து தங்குவான் என்ற குறிப்பையுணர்த்த "கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்” என்று குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர். மது நிறைந்த மலரும் வண்டும் பிரிக்கப்படாதன. அது போல அன்பு சார்ந்த மனிதனும் கடவுளும் பிரிக்கப்படாதவர்கள். மேலும், இறைவன் எந்த இடம் என்று வரையறுத்துக் கூற இயலா வண்ணம் நடு, கீழ், மேல் ஆகிய எல்லா இடங்களிலும் கலந்து உறைகின்றார். அது மட்டுமல்ல-யாவுள்ளுந் தங்கியிருக்கிறான் என்றும் குறிப்பிடுகின்றார். யாவுளும் என்பதனால் உயிரின வேறுபாடின்றி, இழிவு உயர்வு வேறுபாடின்றி கலந்து உறைகின்றான் என்பது பெறப்படுகிறது. இந்தக் கருத்தை விளக்க எள்ளும் எண்ணெயும் போல என்ற உவமையை எடுத்தாளுகின்றார். எள்ளுக்கு எண்ணெய் இடவேறுபாடின்றி, ஒன்றித்து இருக்கிறது. உள் உலகம் உலகப் பொருள்கள். எண்ணெய்இறைவன் எள்ளினுள் எண்ணெய் கலந்திருந்தாலும் வெளிப்படையாகத் தெரியா வண்ணம் மறைந்தே இருக்கிறது. அதுபோல இறைவன் உயிர்களுக்குள் உறைதலை எளிதற் காணமுடியாதவாறு மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக் கின்றன. வலிய முயற்சிகளால் தோலையும் சக்கையையும் நீக்கிக் கடையும்பொழுது தோலும் சக்கையும் ஒதுங்கி எண்ணெய் வெளிப்படுகிறது. அது போல, உயிர்களும் தவத்தால், நோன்பால்-அகம் நிறைந்த பக்தியால் முருக வாங்கிக் கடையும் பொழுது இறைவனும் வெளிப்படுகிறான்.
எண்ணெய் உடல் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்போல், இறைவன் திருவருள் உயிர்வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. இங்ங்ணம் இறைவனுடைய இருப்பையும், அவனை அடையும் முறையையும் அவனால் அடையத்தக்க பயனையும் ஒரே உவமையில் திருவாசகம் தெளிவாக உணர்த்துகிறது. பாடலைப் பாருங்கள்:
கொள்ளுங் கில்லெனையன் பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுலா மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே!