குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16/மண்ணும் மனிதர்களும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3


மண்ணும் மனிதர்களும்
முகவுரை

'ஆனந்த விகடன்' என்றால் புகழ்மிக்க எஸ்.எஸ். வாசன் அவர்கள் நினைவுக்கு வருவார். பேரறிஞர் அண்ணா காலத்தில் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஊர்வலத்துக்குத் தமிழ்த் தேர்கள் செய்து தந்த பெருமை எஸ்.எஸ். வாசன் அவர்களுக்கு உண்டு.

இந்த நினைவு அலைகளுடன் 1992-ம் ஆண்டு சுதந்திர தினத்திலிருந்து நமக்கு ஒர் ஆனந்தம் வந்திருக்கிறது. எழுதுவதே ஒர் ஆனந்தம்! கடந்த காலச் சுவையான அனுபவங்கள், நிகழ்காலப் போக்குகள் இவற்றை நினைத்துச் சுவைத்து எழுத எண்ணம்.

வாழ்க்கையென்பது நிகழ்வுகளால் ஆன தொகுப்பு. நிகழ்வுகளே புவியை நடத்தும் உயிர்சக்திகள். எந்த ஒரு நிகழ்விலும் நிகழ்வு முக்கியமல்ல. அந்த நிகழ்வில் பொதிந்துள்ள எதிர்கால வளர்ச்சிக்குரிய வித்துதான் முக்கியம். நிகழ்வு விரிவாக எழுதப் பெற்றால் வரலாறு. வரலாற்றைக் கவிதைப் பாங்கில் உணர்ச்சி கொப்பளிக்க எழுதினால் காப்பியம். நிகழ்வுகளை-இல்லை, நிகழ்வுகளின் ஊடே இருக்கும் புத்துயிர்ப்பு வாயில்களை எதிர்கால வரலாற்றுக் குரிய வித்தை, உந்து சக்தியைக் கண்டு எழுதுதல் இலக்கியம்.

பெரும்பாலும் நிகழ்வுகள் மலடாவதில்லை. அதுபோலவே, பழமையும் உயிர்ப்புடன் உலா வந்தால் அது பழமையல்ல, அந்தப் பழமையே புதுமையாக பரிணமிக்கிறது. புதுமையாகப் பரிணமிக்காத பழமையாக இருப்பின் அந்தப் பழமை ஒன்றுக்கும் ஆகாது. நமக்கு உயிர்ப்பு வேண்டும். வாழ்ந்தாக வேண்டும். வையகத்தோடு இணைந்து வாழ வேண்டும். கடந்த காலம் மிகக்குறுகிய எல்லையுடையதே. ஆயினும் பலரைச் சந்தித்திருக்கின்றோம். கலந்து பேசியிருக் கின்றோம். அவர்களுக்கு நாம் பயன்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு. அவர்களை நாம் பயன்படுத்திக் கொண்ட நிகழ்ச்சி களும் உண்டு, இன்று மட்டும் என்ன? என்றுமே மறக்க முடியாது, நினைந்து அசைபோட முடியும்.

நமது வாழ்க்கையின் தொடக்க காலத்திலிருந்தே நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்துள்ளன. ஏன், விரைவாகக்கூட நடந்து வந்துள்ளன. பண்ணைக்காரராக வாழ விரும்பிய நமக்கு அது கொடுத்து வைக்கவில்லை! ஆனால், பெரிய பண்ணை கிடைத்திருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கைக் கூர்ந்து. பார்த்தால் முரண்பாடுகளுக்கிடையே செல்வதை உணர முடியும்! ஏன் இந்த முரண்பாடு?

இவையெல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதும் முயற்சி இது. மதிப்பீடு செய்யவேண்டியது வாசகர்களின், பொறுப்பும் கடமையுமாகும்!

இது சுயசரிதையும் அல்ல... சுயவிளம்பரமும் அல்ல, நமது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் வழி, எதிர்காலச் சமுதாயத்துக்குப் பயன் படக்கூடிய வித்துக்கள் இக்கட்டுரைகள் வாயிலாகக் கிடைக்கும் என்று நம்புகின்றோம்!

சுதந்திரத்துக்கும் ஆனந்தத்துக்கும் தொடர்பு உண்டு. அதனால்தான் பாரதி, 'ஆனந்த சுதந்திரம்' என்றான்.

ஆனால், இன்று நாம் அனுபவிப்பது ஆனந்த சுதந்திரம்தானா? சுதந்திரம் ஆனந்த சுதந்திரமாக நாம் என்ன செய்ய வேண்டும்? இவற்றையெல்லாம் உபதேசங்களாக எழுத எண்ணம் இல்லை; நிகழ்வுகளின் போக்கிலேயே விளக்கலாம் என்று எண்ணம். திருக்குறள் வழிகாட்டட்டும்.

எல்லாவற்றையும் 'ஆனந்த விகடன்' வாசகர்களுடன் கலந்து சிந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!

இன்ப அன்பு...
அடிகளார்


(92-ஆம் ஆண்டு 'ஆனந்த விகடன்' இதழில் அடிகளார் அவர்களின் 'மண்ணும் மனிதர்களும்' தொடர் ஆரம்பமாவதற்கு முதல் வாரம் எழுதப்பட்ட முத்தான முகவுரை இது.)
மண்ணும் மனிதர்களும்

னிதன் வளர சுதந்திரம் தேவை. மனிதன் சுதந்திரத்துடன் பிறக்கிறான். அளவற்ற சுதந்திரத்துடன் பிறக்கிறான். ஆயினும் காலப்போக்கில் அவன் அடிமை ஆகிறான். அடிமை ஆக்கப்படுகிறான். ஏன் இந்த அவலம்? உடலின் முதல் முக்கியத் தேவையாகிய மூச்சுக்காற்று இலவசமாகக் கிடைக்கிறது. அந்தக் காற்றை யாரும் சிறைப்படுத்தவில்லை. இது நமது இஷ்டம் என்றே கூறவேண்டும். எதிர்காலம் எப்படியோ? அதுபோலவே ஆன்மாவின் முதல் தேவை அறிவு! இந்த அறிவைத் தரக்கூடிய கல்வி, அறிவு எல்லோருக்கும் வேண்டும்; அவசியம் வேண்டும், பாரதியை அறம் எது என்று கேட்டால் அவன் 'அன்னசத்திரம் அமைப்பதிலில்லை. ஆலயங்கள் ஆயிரம் கட்டுவதிலில்லை. இவை எல்லாவற்றிலும் சிறந்த அறம் கல்வி வழங்கலே' என்றான். வாழும் மாந்தருக்குக் கல்வி அறிவு தரும் பொறுப்பைச் சமூகம் ஏற்க வேண்டும்; அரசு ஏற்க வேண்டும் என்ற நடைமுறை பிறந்தது. கல்விக்குச் செலவிடும் தொகை செலவல்ல; அது ஒரு முதலீடு என்ற எண்ணம். நமது சமூகத்தில் வளர வேண்டும். அரசின் தலையாய கடமை கல்வி தருதல், ஆனால், இன்று கல்வி விற்கப்படுகிறது. சராசரி விலையல்ல, பல லட்சங்கள்! இன்று கல்வி நிறுவனம் நடத்துதல் ஒரு தொழில் போலாகிவிட்டது. கல்விப் பணியில் ஆர்வம் இல்லை. சிரத்தை இல்லை! பணம் பண்ணுதலே குறிக்கோள் ஆகிவிட்டது!

மனிதனுக்குக் கல்வி வழங்கல் பணியில் பள்ளிகள், கல்லூரிகள் மட்டும் ஈடுபடவில்லை. நூலகங்கள், வாசக சாலைகள் அமைத்து எல்லோருக்கும் பழகும் வாய்ப்பளித் தலும் கல்விப் பணியே! தரமான செய்தித்தாள்கள், திங்களிதழ்கள் படித்தல் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

நாம் இளமைக்காலம் முதலே இதழ்கள் படிப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளோம். நாம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படிக்கும் இதழ்கள் உண்டு. பள்ளியில் பயிலும் காலத்தில் இதழ்கள் படிக்கும் ஆர்வத்தில் நாம் படித்த கடியா பட்டியில் இருந்த, 'ஜோதி கிளப்'புக்கு நாள்தோறும் செல்வது உண்டு. 'ஜோதி கிளப்' என்பது வசதி படைத்தவர்கள் பொழுது போக்குக்காக நிறுவியது. ஜோதி கிளப்புக்குச் சுதேசமித்திரன், ஹனுமான், ஹரிஜன், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் வரும், நாள்தோறும் சென்று இதழ்களைப் படிப்பது பழக்கம். என்ன காரணத்தினாலோ ஒரு நாள் திடீரென்று 'ஜோதி கிளப்பின் அங்கத்தினர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அனுமதி இல்லை' என்று அறிவிப்புத் தொங்கவிட்டிருந்தார்கள். பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அங்கத்தினர்களாகவும் சேர்க்க மறுத்துவிட்டனர்! என்ன காரணம்? வர்க்க உணர்ச்சியேயாம்!

உடன் சூடு பிறந்தது. நண்பர்களைத் திரட்டினோம். ஒன்றாகக் கூடினோம். செயல் பிறந்தது! ஆம்! அந்த ஆண்டு 1942-விடுதலைப் போராட்டம் சூடு பிடித்திருந்த காலம்! அண்ணல் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத் திட்டத்தை அறிவித்த ஆண்டு. புனிதர் வினோபாபாவே அவர்களை முதல் தனிநபர் சத்தியாக்கிரகியாகத் தேர்வு அறிவித்த செய்தி நம்மையும் நமது நண்பர்களையும் கடுமையாகப் பாதித்திருந்தது!

உடன் வினோபாபாவே பெயரில் வாசகசாலை தொடங்கினோம். இருபது அங்கத்தினர்கள் ஆளுக்கு ஓர் இதழ் ஆண்டுச் சந்தா கட்டி, இதழ் வாங்கித் தந்தனர். உடன் பயின்ற மாணாக்கர்கள் பலர், இன்று பழனியப்பா பிரதர்ஸ் என்ற பெயரில் புத்தக வியாபாரத்தில் தலைசிறந்து விளங்கும் எஸ்.எம். பழனியப்பன் ஒருவர். இவர் ராயவரத்தைச் சேர்ந்தவர். இவர் கல்கி, சுதேசமித்திரன் வாங்கித் தந்தார். அடுத்து வாசகசாலைக்கு அடிக்கடி வந்து ஊக்குவித்து இதழ்களும் புத்தகங்களும் வாங்கித் தந்தவர், தமிழ்நாட்டின் தலைசிறந்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, வாசகசாலை நடத்துவதற்கு மட்டுமல்ல.... வாசகசாலை உறுப்பினர்களைக் கவிதைகள் எழுதவும், மேடைகளில் பேசவும் பயிற்றுவித்தார் அழ வள்ளியப்பா. வாசகசாலையில் படித்தவர்களில் ஒருவர் எஸ்.சுந்தரேசன் என்ற அன்பர். இவர் நம்மோடு பயின்றவர். பின் பட்டதாரியாகி ரயில்வேயில் பணிக்குச் சேர்ந்து பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார். பொன்மலையில் தங்கியுள்ளார். இவருடன் இன்றும் தொடர்பு இருக்கிறது. நமக்குக் கணக்குப் பாடம் எமன்! சுந்தரேசன்தான் சொல்லிக் கொடுப்பார். திருவேங்கடம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் எப்போதும் திருமண் சாத்திய நெற்றியுடன் விளங்குவார். இவரும் ரயில்வேயில்தான் பணி செய்தார். எஸ்.பி. சேது என்பவர் மின் வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார். ஏன்? நாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் வி. கிருஷ்ணமூர்த்தி ஐயர் எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார். ராமகிருஷ்ணா மடத்தின் அப்போதைய ‘பிரபுத்தபாரதா' என்ற ஆங்கில இதழும் வாங்கிக் கொடுத்தார். ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி வாங்கிக் கொடுத்தார். இங்ஙன மெல்லாம் வாசகசாலைப் பணி நடந்தது. அன்றாடம் வாசக சாலையைத் திறப்பது, மூடுவது. சுத்தமாக வைத்திருப்பது ‘சுட்டி' என்று எங்களால் ஆசையுடன் அழைக்கப் பெற்ற திருமலை என்பவருடைய கடமை. நமது கல்வியில் ஆர்வம் காட்டி வீட்டிலும் படிக்கத் தூண்டியது ஒரு ஆசிரியர் குடும்பம்! பக்கத்து வீடு-மலையப்ப ஐயர். வீடு! இந்த வீட்டில் நமக்குப் பசி நேரத்தில் - உணவும் கிடைக்கும்; கல்வியும் கிடைக்கும். யக்ஞேஸ்வர ஐயர், இவர் ஓர் இடைநிலை ஆசிரியர், ஆயினும் ஆங்கிலம் நன்றாகக் கற்பிப்பார். யக்ஞேஸ்வர ஐயர் ஓய்வு பெற்று புதுக்கோட்டையில் தங்கியுள்ளார். யக்ஞேஸ்வர ஐயரின் தம்பி - அம்பி இவர் உடல்நல மில்லாதவர். அவர் பார்த்த பணி வாசகசாலைப் பணிதான். ஒவ்வொருவரும் 20 இதழ்கள் படித்து வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொள்ள முடிந்தது. நூலகத்துக்கு நிறைய இளைஞர்கள் வரவும் தலைப்பட்டனர்.

இந்த நூலகத்துக்கு நிறைய ஆதரவு கொடுத்தவர்களில் முக்கியமானவர் இன்று வடலூரில் வாழும் கைவல்யம் என்பவர். அவர்தம் அன்றையப் பெயர் சண்முகம் செட்டியார். அன்று நாங்கள் பலர் சுதந்திரமாக இலவசமாகக் கல்வி கற்க முடிந்தது! நாங்கள் படித்த உயர் நிலைப் பள்ளியில் இலவசக் கல்வி, தீ.சொ. நாகப்பச் செட்டியார் அறம். கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். சாதிகளுக்கு அப்பாற்பட்ட கல்வி வழங்க வேண்டும். கல்விதரமான கல்வி இலவசமாக எல்லோருக்கும் வழங்க வேண்டும். சுதந்திரமாகக் கல்வி கற்க வாய்ப்பில்லாத நாட்டில் சுதந்திரம் பரிணமிக்காது. அரசியல், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்காது. சுதந்திரத்தின் பயன் இலவசமாக, சுதந்திரமாகக் கல்வி வழங்கலிலேயே இருக்கிறது. நமது நாட்டுக்குக் கல்விச் சுதந்திரம் தேவை!

2

டி விளையாடும் பருவம், திருவேட்களத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நாலு, ஐந்து வகுப்புகள் பயின்ற காலம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள அண்ணாமலை நகருக்கு அருகிலுள்ள சிற்றூர் திருவேட்களம்! திருஞானசம்பந்த சுவாமிகளின் பாடல் பெற்ற திருத்தலம், திருஞானசம்பந்த சுவாமிகள் பல ஆண்டுகள் தங்கியிருந்த திருத்தலமும் ஆகும். இங்கு செட்டி நாட்டரசர் முயற்சியினால் பல்கலைக் கழகம் தோன்றி வளர்ந்தது. நாம் தொடக்கப் பள்ளியில் பயின்ற காலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் போற்றிப் பாராட்டுதலுக்குரிய தலை சிறந்த தமிழறிஞர்கள் இருந்தனர். அவர்களுள் 'நாட்டார்' என்று அழைக்கப் பெற்ற ந.மு. வேங்கடசாமி நாட்டார், சர்க்கரைப் புலவர், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சா. சோமசுந்தர பாரதியார், அருட்டிரு விபுலானந்த அடிகள் ஆகியோர் நினைவுகூரத்தக்க பேரறிஞர்கள்! இந்தப் பெரியவர்களுடன் எல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு, 'பால் ஊற்றும் பைய'னாக இருந்த நமக்குக் கிடைத்தது!

நமது வீட்டுக்கு அப்போது தொழில் பால் வியாபாரம். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் பால் ஊற்றச் சென்றகாலம். வாழ்க்கையின் அடிப்படைகள் அமைந்த காலம். இவர்களுள்ளும் 'சொல்லின் செல்வர்' ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழ் கற்கும் ஆர்வத்தைத் துரண்டி வளர்த் தார்கள். பிள்ளையவர்களுடைய வீட்டுக்குச் செல்லும்போது அவருடைய அறையின் ஜன்னல் அருகில் நின்று ஒரு குறள் சொல்ல வேண்டும். குறள் ஒப்பிக்கும் நமது குரல் கேட்டவுடன் பிள்ளையவர்கள் காலனா கொடுப்பார்கள்.

சாதாரணமாகப் பிள்ளையவர்கள் பிரியமாக நடத்தினார்கள். நாம் திருவேட்களம் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது சாரணர் குருளையர் அணியில் சேரும்படி ஆசிரியர் கூறினார். நாமும் ஒப்புக்கொண்டோம். ஆனால், வீட்டில் குருளையர்க்குரிய சட்டை தைத்துக் கொடுக்க மறுத்து விட்டார்கள். வசதிக்குறைவே காரணம். அன்று பாலூற்றச் சென்றபொழுது பிள்ளையவர்கள் முகப்பிலேயே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். நாம் பாலை, வீட்டுக்கு முன்வந்தவரின் பாத்திரத்தில் ஊற்றிவிட்டு பிள்ளையவர்கள் முன்வந்து நின்றோம். அன்றைய குறளை ஒப்பித்தோம். எந்தக் குறள் என்பது சரியாக நினைவில் இல்லை, ஆனால், ஈதல் அதிகாரத் தொடர்புடைய குறள் அது! ஏன் எனில், திருக்குறளைக் கேட்ட பிள்ளை அவர்கள் "என்ன வேண்டும்?" என்றார்கள். நமக்குக் குருளையர் சட்டை கேட்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால் பயம்! கேட்கத் தோன்றவில்லை! தயக்கமும் அழுகையும் வந்தது, உடனே பிள்ளையவர்கள் நம்மை அருகில் அழைத்து "ஏன் அழுகிறாய்.என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். நாம் "குருளையர் சட்டை வேண்டும்” என்று கேட்டுவிட்டோம். "ஏன் வீட்டில் வாங்கித் தரவில்லையா?” என்றார்கள். "வசதியில்லை என்று கூறிவிட்டார்கள்” என்றோம். "உன் வீட்டில் யார் இருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள். "அம்மா, அண்ணன் இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னோம். "அண்ணன் என்ன செய்கிறார்?" என்று கேட்டார்கள் பிள்ளையவர்கள். "பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கிறார். பெயர் கோபாலகிருஷ்ணன்' என்று பதில் கூறினோம். "அப்படியா? சரி” என்று சொல்லிவிட்டு ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள் பிள்ளையவர்கள். குருளையர் சட்டை தைத்துக் கொண்டோம். அதன்பிறகு பிள்ளை அவர்களுடன் உறவு நிறை நிலாப்போல வளர்ந்தது. பிள்ளையவர்கள் நமது அண்ணன் கோபாலகிருஷ்ணனை, பல்கலைக் கழக அறைக்கு அழைத்து விவரங்களைத் தெரிந்து கொண்டு, குடும்பத்தையே வளர்த்தார். வசதியில்லாத குடும்பத்துக்கு வசதி உண்டாக்கினார். ஏன்..இன்றும் நாம் உடல்நலத்துடன் இருப்பதற்குரிய காரணம் பிள்ளையவர்கள் வீட்டுத் தயிர்ச் சோறும் வடகமும் என்பதை நினைவு கூர்வதில் மகிழ்வு ஏற்படுகிறது.

நமது தந்தை பரம்பரையாக இருந்த ஐந்து வேலி நிலத்தை விளையாடித் தோற்றுவிட்டார். பிள்ளையவர்கள் வழக்கறிஞராயிற்றே! குடும்பச் சொத்தை மீட்க வழக்கு ஆலோசனைகளும் நிதியும் கொடுத்து உதவினார்கள். சொத்தும் கிடைத்தது. அந்த நன்றிக்கடனுக்கு நாம் குன்றக்குடி வந்த பிறகு 1953-ம் ஆண்டில் பிள்ளையவர்களைக் குன்றக்குடிக்கு அழைத்துப் பாராட்டி வைர மோதிரம் அணிவித்து மகிழ்ந்தோம். அடுத்து, அருட்டிரு விபுலானந்த அடிகளுக்குப் பணிவிடை செய்யும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. மாலை நேரத்தில் பெரும்பாலும் விபுலானந்த அடிகள் வீட்டிலே தான் இருப்போம். விபுலானந்த அடிகள் தொடர்பால்தான் தீண்டாமை விலக்கு உணர்வும் மனிதநேயமும் நமது வாழ்க்கையில் குறிக்கோள்களாக அமைந்தன. அருட்டிரு விபுலானந்த அடிகள் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 7 மணிக்குத் திருவேட்களத்தில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்புக்குச் சென்று அங்கு பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவார்கள். அந்தக் குடியிருப்பிலுள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். பொட்டுக்கடலையும் சர்க்கரையும் வழங்குவார்கள். அப்போதெல்லாம் நாம் அடிகளுடன் அரிக்கேன் விளக்கு எடுத்துக் கொண்டு செல்வோம்.

அருட்டிரு விபுலானந்த அடிகளுடன் அதிகநேரம் நமக்குக் கிடைக்கும். காரணம், அடிகளுக்குப் பணிவிடை செய்வதற்கு நாமே பொறுப்பு. அப்போது சுவாமி சகஜானந்தர் அவர்கள் சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிலையம் தொடங்கி நடத்தி வந்தார்கள். நந்தனார் விழாவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒரு தடவை விழாவுக்கு நாமும் அடிகளுடன் சென்றிருந்தோம். அடிகளை மேடைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். நம்மைப் பொடியன்களுடன் உட்கார வைத்துவிட்டார்கள். எல்லாம் புதுமுகம்.பயம்! அழுகை வந்துவிட்டது. நாம் அழுததைப் பார்த்ததும் அடிகள் நம்மை மேடைக்கு அழைத்துக் கொண்டார்கள். மேடையில் கொஞ்ச நேரம் போனதும் 'தூக்கம்' போட்டோம். அடிகளின் தொடர்பு இளமை யிலேயே ஆர்வத்தைத் துண்டியது. அடிகளைப் பிரியக் கூடாது என்ற உணர்வு மேலோங்கியது. இந்த நிலையில் அடிகள் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதாகத் திட்டம். இதைத் தெரிந்துகொண்ட நாமும் அடிகளுடன் இலங்கைக்கு வருவதாகக் கேட்டோம். அடிகள் நேரடியாக நம்மிடம் மறுக்கவில்லை. நம் அண்ணனிடம்... “சின்னப் பையன், அங்கு தனியே இருப்பது முடியாது. பின்னர் பார்க்கலாம்...” என்று கூறிவிட்டு, நாம் இரவில் தூங்கும்போது போய் விட்டார்கள். காலையில் எழுந்தால் அடிகளைக் காணவில்லை. ஒரே அழுகை....! பல ஆண்டுகள் கழித்து நாம் இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது அடிகளின் சமாதிக்குச் சென்று மலர் அஞ்சலி செய்து புத்துயிர்ப்புப் பெற்றோம்.

அன்று அருட்டிரு விபுலானந்த அடிகள் எடுத்துத் தந்த தீண்டாமை விலக்குக் கொள்கை இன்றளவும் நமது வாழ்க்கையின் குறிக்கோளாக விளங்குகின்றது. தீண்டாமை என்பது நமது சமூகத்தில் ஒரு பெரிய தீமை; என்புருக்கி நோய். இதனை நமது சமூகம் உணர்ந்தாக வேண்டும். அதேபோழ்து அண்மைக்காலமாக ஆதி திராவிடர்கள் மற்ற சமூகத்தினருடன் கலந்து மேவி மேலே வருவதற்குப் பதிலாகத் தனியே சாதிவழி அமைப்பாகவே இயங்க விரும்பு கிறார்கள். இது விரும்பத்தக்கதல்ல... மானிட சமுத்திரம் ஒப்பற்ற பாரத சமுதாயமாக-ஒரே சாதியாக விளங்க வேண்டும். இந்த லட்சியக் கனலை மூட்டி வளர்த்த அருட்டிரு விபுலானந்த அடிகளின் நாமம் வாழ்க!.


3
ஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் வைத்தீஸ்வரன் கோயில் திருப்பனந்தாள் சாலையில் உள்ளது நடுத்திட்டு என்ற சிற்றூர், இந்தச் சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிராமத்தையும் சாலையையும் இணைப்பது ஒரு வண்டிப் பாதை. ஊரின் நுழைவாயிலில் ஒரு குளம். அந்த ஊருக்கே ஒரே குளம்தான்! குளத்தங் கரையில் ஒரு பிள்ளையார் கோயில்; ஊர், ஒரே தெருதான்!

பத்துப் பன்னிரண்டு ஓட்டு வீடுகள்! மற்றவையெல்லாம் கூரை வீடுகள்! மச்சு வீடு மருந்துக்குக்கூட ஒன்று இல்லை! ஊரில் சாதிகள் உண்டு! ஆனாலும் குடியிருப்புகள் கலந்தே இருந்தன.

ஊரின் நுழைவாயிலில் உள்ள குளம் தான் அந்த ஊருக்கு. அதில்தான் மக்கள் குளிப்பர்! தங்களுடைய மாடுகளையும் குளிப்பாட்டுவர்! எருமை மாடுகள் ஆனந்தமாகத் தண்ணீருக்குள் படுத்துச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். அந்த எருமைகளின் முதுகில் கிராமத்துச் சிறுவர்கள் உட்கார்ந்து சவாரி செய்து கொண்டிருப்பர்! ஒரு நாள் எங்கள் வீட்டு நாய் ராஜபாளையத்துச் சாதி நாய்-நல்ல வளர்ப்புள்ள நாய், தெரு நாயுடன் சண்டை போட்டுக் கடித்துக் குதறிவிட்டது! நாங்கள் சிறுவர்கள் இதனை வேடிக்கைப் பார்த்தோம்! தடுக்கவும் செய்தோம்! ஆயினும் விலகுகிற மாதிரி இல்லை! நாய்ச் சண்டையல்லவா? ஒரு மாதிரியாக ஆத்திரம் தணிந்தவுடன் சண்டையிலிருந்து விலகின. கடிபட்ட தெரு நாய் 'தப்பித்தேன் பிழைத்தேன்' என்று ஓடிவிட்டது.

சில நாட்கள் உருண்டோடின. ஊர்க் குளத்தங் கரையில் துர்நாற்றம் வீசியது. தாங்கமுடியாத துர்நாற்றம்! குளத்துக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கை குறைந்தது. அவரவரும் அவரவர் வீட்டுக் கிணற்றிலேயே புழங்கத் தொடங்கிவிட்டனர். கிணறு இல்லாதவர்கள் அடுத்த வீட்டின் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றனர். கிணறு இல்லாதவர்கள் கிணறு உள்ளவர்கள் வீட்டுக்குத் தண்ணீர் எடுக்கச் சென்றால்...? ஏச்சுப் பேச்சு; கதவு சாத்தல் முதலியன வாடிக்கையாகிவிட்டன! எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிணறு உண்டு! ஆயினும் இறைப்பு இல்லை! உபயோகம் இல்லை! கிணறு இடிந்து கிடந்தது. தாயார் முதியவர்! அடுத்த வீட்டுக் கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்கச் செல்ல மனமில்லை! கௌரவம் ஒரு காரணம்!. தொலைவு பிறிதொரு காரணம்! நாம்தான் தண்ணீர் எடுத்து வருவது. ஒரு நாள் மாலை அந்திப் பொழுதில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது அந்த வீட்டுக்காரர், “விளக்கேற்றி வைத்த பிறகு. தண்ணீர் எடுக்க வரக்கூடாது" என்றார். அவர் சொன்னதில் தவறில்லை! ஆயினும் நமக்கு 'ரோஷம்' பொத்துக் கொண்டு வந்தது! மறுநாளே தோட்டத்துக் கேணியைப் பழுது பார்க்கும் பணி நடந்தது!

ஆனால், யாரும் குளத்தங்கரையில் எங்கிருந்து நாற்றம் 'வருகிறது! ஏன் நாறுகிறது! நாற்றத்தை அகற்றித் தூய்மை செய்ய முடியுமா? என்றெல்லாம் சிந்திக்க முன்வரவில்லை. அவ்வளவுகூட சமூகச் சிந்தனை அந்தக் கிராமத்தில் யாருக்கும் வரவில்லை! பொதுநலத்தில் சிரத்தையில்லாத காலம்!

நாங்கள் சிறுவர்கள்! நம் நண்பர்கள் கோவிந்தராஜன், ராமானுஜன் என்பவர்கள் கூடினோம். இவர்களில் நமது மூளைதான் வேலை செய்தது! ஆனால், சுத்தம் செய்யும் வேலைக்குப் பொறுப்பேற்று தைரியமாகச் செய்தவர் கோவிந்தராஜன்தான். இப்போது இவர் இல்லை, இப்போது நமது சென்னை அலுவலகத்தில் பணி செய்யும் வைத்திய நாதன் இவருடைய மகன்தான்!

குளத்தங்கரை நாற்றத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினோம். நாற்றம் எங்களைக் குளத்தங்கரையில் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்றது. அது தனியார் கோயில். ஆனாலும், பூஜை இல்லை. தர்மம் வளரும் நிலை இது. சொல்ல என்ன வெட்கம்? இது எங்கள் குடும்பத்தின் திருக்கோயில், இக்கோயிலுக்கு ஒரு வேலி நிலம் சொத்து உண்டு. குடும்பத்தில் மூத்த வாரிசு நிர்வாகம் செய்ய வேண்டும். எங்கள் பெரிய தந்தையார் நிர்வாகம்! பிள்ளையாரை அவர் கவனிக்க வில்லை! திருக்கோயிலை நெருங்கினோம். நெருங்க நெருங்க நாற்றத்தின் வீச்சு அதிகமானது; குமட்டல் வந்தது! வேறு வழியில்லை! மூக்கைப் பிடித்துக் கொண்டு முன்னேறினோம், அந்த மண்டபத்தில் ஒன்றும் இல்லை. கருவறையிலும் கண்ணுக்கு ஒன்றும் தென்படவில்லை. ஆயினும், நாற்றம் கருவறையிலிருந்துதான் வந்தது. 'ஐயோ! பாவம்! இந்தப் பிள்ளையார் அந்த நாற்றத்தை எப்படித்தான் சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாரோ' என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டோம்! விநாயகரை துர்நாற்றத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற முனைப்புக் கூடியது. சிறுவர்களாகிய நாங்கள் விநாயகரை நெருங்கி விட்டோம்! விநாயகருக்குப் பின்புறம் அழுகிப் பழுத்த நிலையில் நாய் கிடந்தது! அந்த நாய்க்கு என்ன விவேகம்! தெருக்கோடியில் கடிபட்ட நாய், பிள்ளையார் கோயிலைச் சரணடைந்திருக்கிறது! முத்தி என்ற ஒன்று உண்டானால் இந்த நாய்க்கு நிச்சயம் உண்டு, இதற்குள் முத்தியைப் பற்றிய சிந்தனை! வாழத் தெரியாமல்வாழ்வாங்கு வாழத் தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு ஏது முத்தி! இந்த ஊர் நாய் தேர்ந்தெடுத்துச் சரண் அடைந்த நிலை சிந்தனைக்குரியது!

நாங்களும் மூச்சை அடக்கிக் கொண்டு நாயின் சடலத்தை பொலபொலவென்று கிடந்த சடலத்தைத் தட்டுக் கூடையில் அள்ளி வெளியில் கொண்டுவந்து ஆழக் குழி தோண்டி அதில் போட்டு பாலூற்றிப் புதைத்தோம்! - கோயிலைக் கழுவிச் சுத்தம் செய்தோம்! கருவறையில் செத்த நாயைத் தொட்ட முகூர்த்தம் எங்களுக்கும். பக்தி கொஞ்சம் வந்தது. ஏன் இந்தக் கோயிலுக்கு நாம் பூஜை செய்யக்கூடாது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். அந்த முடிவு விநாயகருக்கு நாள்தோறும் பூஜை செய்வது என்பது.

இந்த முடிவு எடுத்த மாதம் மார்கழி மாதம்! அதுவும் அந்த மாதம் முதல் தேதி! நாங்கள் திருப்பள்ளியெழுச்சி, பஜனை என்றெல்லாம் திட்டமிட்டோம்! நமக்கு பூசாரி பொறுப்பு கொடுத்தார்கள்! கோவிந்தராஜனுக்குத் தண்ணீர், பூ கொண்டு வந்து தரும் பரிசாரக வேலை! ராமானுஜனுக்கு மணி அடிப்பது வேலை! பூஜைக்கு அரிசி, விளக்குக்கு எண்ணெய் வீடுகள் தோறும் முறை வைத்து வாங்கினோம்! முதலில் சில நாட்கள் பூஜைக்கு நாங்கள் மட்டும்தான் வந்து கொண்டிருந்தோம்! ஆனால் நாயை அகற்றிய மறுநாளே குளத்துக்கு ஊரார் வர ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் பஜனை கோஷ்டி வேறு நடத்தினோம்! அந்தக் காலத்தில் எங்களுக்கு அதிகமாகப் பாட்டுகள் தெரியாது “ராம்! ராம்!” இதுதான் பஜனை! பஜனைக் கோஷ்டியில் நமக்கு அனுமான் வேடம்! அனுமான் வேடத்தில் ராமபஜனை செய்த அந்த நாட்கள் நமக்கு இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. மெள்ள மெள்ள திருக்கோயிலுக்குக் கூட்டம் வரத் தொடங்கியது! அனுமான் உண்டியலில் கிடைத்த பணத்தில் திருக்கோயிலுக்கு மூங்கில் தட்டியில் கதவு அமைத்தோம். எங்களுடைய பூஜை, திருக்கோயில் தர்மகர்த்தா அவர்களுக்கு இரக்கச் சிந்தனையை உண்டாக்கிவிட்டது! திருப்பணி செய்து குடமுழுக்குச் செய்தார்! குடமுழுக்கு நடந்தவுடன் பிள்ளையாரைத் தொடும் உரிமையைப் பறித்து விட்டனர். ஒரு பூசகர் நியமிக்கப்பட்டார். எங்களுக்கெல்லாம் ஏமாற்றம்தான்.

இருப்பினும், இந்தச் சம்பவத்திலிருந்து மெள்ள மெள்ள நாங்கள் பக்தியில் வளர்ந்தோம்! பல ஆண்டுகள் முறையாக வெளியூரில் இருந்தாலும் பஜனை நடத்தி வந்தோம்! அந்தப் பூஜையும் பஜனையும்தான் நமது சமயம் சார்ந்த வாழ்க்கைக்கு வித்திட்டன. அன்று ஏற்பட்ட பொதுநல உணர்வு இன்னமும் அணையவில்லை!


4

"னக்குச் 'சூடு இருக்கிறதா....சுரணை இருக்கிறதா என்ன வாய்க்கொழுப்பு”

“எனக்குச் சூடு இருக்கிறதா ....சுரணை இருக்கிறதா என்றா கேட்கிறாய்?” இப்படி அடிக்கடி சண்டை போடுவதைப் பார்த்திருக் கிறோம். கேட்டிருக்கிறோம். ஆனால், இதுபோன்ற ஓர் உரையாடல் வித்தியாசமான இடத்தில், வித்தியாசமான மனிதர்களிடையில் நடந்தது என்பதுதான் கவனத்துக்குரியது.

திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு சமய மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள அருள்திரு பேரூர் அடிகள் (பேரூர் ஆதீனத் தலைவர்), அருள்திரு சுந்தர சுவாமிகள் (சிரவை ஆதீனத் தலைவர்), குன்னூர் அருள் திரு சற்குரு ராமலிங்க அடிகள் ஆகியோரும் நாமும் பயண மாளிகையில் தங்கியிருக்கிறோம். மாநாட்டு வரவேற்புக் குழுவினர், எல்லோருக்கும் அருந்துவதற்குப் பால் கொடுக்கிறார்கள், சற்குரு ராமலிங்க அடிகள் பால் குவளையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிலையில், நாம் “சூடு இருக் கிறதா” என்று கேட்டோம்.

குன்னூர் அடிகள், “சூடு இருக்கிறது; பரவாயில்லை ...” என்றார். மீண்டும் நாம் "சூடு இருக்கிறதா?" என்று கேட்டோம். பேரூர் அடிகள் புரிந்துகொண்டு விட்டார்! "நமக்குச் சூடு இருக்கிறதா என்று கேட்கிறார்கள்...” என்றார் சுந்தர சுவாமிகள், "கேட்பது புரியவில்லையா?” என்று கேட்டார்.

அன்றைய மாநாட்டில் முக்கியமாக உணர்வுகளைப் பற்றிய விவாதம் சூடாக அமைந்தது. புதிய நோக்கம் பிறந்தது. பாரத பூமி புண்ணிய பூமி; ரிஷிகளும், ஞானிகளும் அவதரித்த பூமி. ஏன்....கடவுளரே திரு அவதாரங்கள் செய்த நாடு. ஆயினும், ஏன் உலகிலேயே மிகவும் பின் தங்கிய நாடாக அல்லது வளரும் நாடாக இருந்து வருகிறது? ஏன் இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வறுமை வளர்ந்து வருகிறது?

நமது நாட்டின் முப்பது கோடி மக்களுக்குமேல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். எழுபத்து மூன்று விழுக்காட்டு மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்! ஏராளமான சாதிகள்; சாதிகளுக்கிடையே துவேஷங்களை வளர்ப்பதே இன்றைய தொழிலாக வளர்ந்திருக்கிறது. இவையெல்லாம் நமது பண்பாட்டுக்கு அறைகூவல்கள்! கடவுள் ஒருவர். அவர் உலகத்துக்குத் தந்தை, தாய் என்று கூறுகிறோம். 'அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்' என்று சாத்திரம் கூறுவது உண்மை! ஆனால், நமது நாட்டு வாழ்க்கையில் இது உண்மையாகி இருக்கிறதா? அல்லது உண்மையாக, வாழ்வாக, வரலாறாக ஆக்கும் முயற்சியாவது இருக்கிறதா என்பதே இன்றுள்ள கேள்வி.

கேள்விக்கு விடை கிடைத்தால் இந்த அவலங்கள் ஏன்? இது விளங்காத புதிர்! கடவுள் ஏன் இப்பொழுதெல்லாம் அவதாரம் செய்வதில்லை! நாம் திருந்த மாட்டோம் என்று கடவுள் முடிவு செய்து விட்டாரா என்றெல்லாம் எங்கள் விவாதம் வளர்ந்தது. விவாதத்தின் முடிவு என்ன? இந்த நாட்டில் ஏராளமான மதங்கள், ஆயிரக் கணக்கான வழிப்பாட்டு நிலையங்கள் இருந்தும் அவலம் தொடர்வது நியாயமா? அவலங்கள் தொடரின் மதங்கள் போதிக்கும் மனிதநேயம் என்ன, ஏட்டுச்சுரைக்காயா? சமூக நீதி வழங்காத மதங்களை மக்கள் பின்பற்றுவதன் அர்த்தம் என்ன? ஒரு அர்த்தமும் இல்லை என்றே விடை கிடைக்கும். நமது நாட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் அவலங்களை எதிர்த்துப் போராடுவது சமயங்களின் பொறுப்பு! சமயத் தலைவர்களின் கடமை!

அன்றைய மாநாட்டில் நாங்கள் அனைவரும் ஒரே சுருதியில் பேசினோம். அன்றைய உரைப்போக்கில் ஓர் உண்மை வெளிப்பட்டது கடமை வேறு; வேலை வேறு. வேலை என்பது அவரவர் வாழ்க்கையோடு (பிழைப்பு, ஜீவனோபாயம்) சம்பந்தமுடையது. கடமை என்பது நாட்டோடும், நாட்டு மக்கள் வாழ்க்கையோடும், நாட்டு வரலாற்றோடும் சம்பந்தம் உடையது. கடமை என்ற சொல், கடன் என்ற சொல்லின் வழிப் பிறந்த சொல். நாம் இந்த நாட்டிற்குக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்து, இந்த நாட்டை வளப்படுத்திய சென்ற கால வரலாற்றைச் சேர்ந்த ஆயிரம் ஆயிரம் பேருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இன்றுள்ள நஞ்செய்யும் ஒரு காலத்தில் காடு மேடு தான்! காடு வெட்டி நிலம் திருத்திக் கழனியாக்கியவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே இலக்கியங்களைக் கண்டு இலக்கணங் களைக் கண்டனர். நாளும் நமது ஆன்மாவைச் செழுமை . படுத்துபவை இந்த இலக்கியங்கள்; ஆன்மாவின் தரத்தை உயர்த்தும் படைப்புகள். ஏன், நமதுகாலத்தில், நமது தலைமுறையில், நம்முடைய வாழ்க்கைக்காக வாழ்க்கையின் உயர்வுக்காக உழைக்கும் உயிர்கள் ஒன்றா, இரண்டா? இல்லை பல நூறு ஜீவன்கள்-பல உயிர்கள் கடின உழைப்பின் மூலமே நமது வாழ்க்கையை நகர்த்துகின்றன. நாளும் நமது வாழ்க்கையை நகர்த்தும் அறிஞர் உலகத்துக்கு-உழைப்பாளர் உலகத்துக்கு நாம் என்ன திரும்ப அளிக்கிறோம்? ஒன்றும் இல்லை.

நமது முன்னோர்கள் நமக்கு அளித்தவை பிரமிப்பூட்டுவன. பத்தொன்பதாம் நூற்றாண்டினர்கூட நமது நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தனர். இன்று வாழும் . நாம், அடுத்த தலைமுறைக்கு என்ன தர இருக்கிறோம்? சிந்தனை செய்யுங்கள்; எளிமையின் பெயரால், புதுமையின் பெயரால் பழந்தமிழ் நூல்களைப் படித்துணரும் திறன் குறைந்து வருகிறது. ஏன், பதினைந்து முதல் முப்பது மதிப்பெண்கள் வாங்கினாலே போதும் - தேர்வில் வெற்றி! இது ஒரு பயங்கரமான அறிவுச் சேதாரம் இல்லையா?

சென்ற தலைமுறைகளில் இருந்ததை விட இந்தத் தலைமுறையின் பண்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது உண்மையா, இல்லையா? சென்ற காலத்தில் தலைமுறை தோறும் சாதிகளை எதிர்க்கும் உணர்வு இருந்தது. இந்தத் தலைமுறையிலோ, சாதிகளைக் காப்பாற்றும் உணர்வு நாளும் வளர்ந்து வருகிறது. ஏன்? அரசின் செயல்முறைகள் சாதி உணர்வுகளைக் கெட்டிப் படுத்துகின்றன. நமது நாட்டில் வறுமை-சென்ற காலத்திலும் இருந்திருக்கிறது. ஆயினும் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்து வந்துள்ள இந்தத் தலைமுறையிலும், நாமே நம்மை ஆளும் காலத்திலும் சென்ற தலைமுறையில் இருந்ததைவிட வறுமை வளர்ந்திருக்கிறது. ஏன்? தாயுமானாரின் சமய சமரசமும், வள்ளலாரின் சமரச சன்மார்க்கமும் உலாவிய நாட்டில் மதச் சண்டைகள், கலவரங்கள்!

நமது தலைமுறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு கடுமையானது. இந்தப் பின்னடைவை, ஈடுசெய்து முன்னோக்கிச் செல்லத் தவறினால் வரலாறு நம்மைப் பழி தூற்றும்! சிலர் முன்னோக்கிச் செல்வதாகவும் எழுது கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. தலைக்குள் வளர்ச்சி, மாற்றம் இல்லை. தலையின் மீது அணிந்து கொள்ளும் அணிகளிலே-குல்லாக்களிலே தான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால், எது முன்னேற்றம்? தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை! சரியான முன்னேற்றம் இல்லாவிடில், அடுத்து வரும் தலைமுறையினர் ஏசுவர்.

ஆதலால் விழித்துக்கொள்க! புவியை நடத்த முன் வருக! அறியாமையை எதிர்த்துப் போராடுக! வறுமைக் கோடு வேண்டாம்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். அதற்குரிய படைப்பாற்றலைப் பெற வேண்டும். உற்பத்திப் பொருளாதாரம் இன்றைய நாட்டுக்குத் தேவை. இன்று இந்த நாட்டின் போக்கைக் கூர்ந்து கண்ணுறின் சூடு பிறக்கும்! சுரணை பிறக்கும். நாட்டின் வரலாற்றை ஆக்கரீதியில் இயக்கிடும் முனைப்பு தோன்றும். சூடாகக் குடித்தால் போதாது. நமக்கும் சூடு தேவை! போர்க்குணம் தேவை!

நமக்கும் போர்க்குணம் மிகுதியும் உண்டு. அதனால்தானே நமது புராணங்களில் கூட-கடவுளர்கள் கூடப் போராடியதாக எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கச் சிந்தனையாளர் சாக்ரடீஸ், கடவுள்களுக்கிடையில் நடந்த போர்களை மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடாது என்று சொன்ன அறிவுரையை எண்ணுக! உலகின் எந்த இனத்தையும்விட நமக்குப் போர்க்குணம் எந்த வகையிலும் குறைவில்லை. ஆனால், ஒரே ஒரு குறை! நமது போர்க்குணம் மனிதர்களுடன் போராடுவதிலேயே கழிகின்றது. மனித குலத்தின் பொதுப் பகையாகிய சாதி வேற்றுமைகள், வறுமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபடுத்தப் படுவதில்லை.

எம்பெருமானார்-என்றும் உடையவர் என்றும் போற்றப்பெற்ற ராமானுஜரின் முயற்சி சாதி வேற்றுமைகளை அகற்றுவதில் வெற்றி பெறவில்லை. அதுபோலவே அப்பர் அடிகள் நடத்திய போராட்டமும் வெற்றி பெறவில்லை. நம்முடைய பழக்கம் எதையும் வாழ்த்துவோம்! வழிபடுவோம்! ஆனால், பின்பற்ற மாட்டோம்! வழிபடுதல் என்ற சொல் வழியிலிருந்து தான் வழிபாடு என்ற சொல் பிறந்தது! இந்தத் திசையில் மாநாட்டில் கலந்து கொண்ட துறவிகள், ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் பேசினார்கள். பார்வையாளர்களும், மாநாட்டின் பிரதிநிதிகளும் இந்தப் புதிய உத்வேகம் தரக்கூடிய உரையைக் கேட்டனர்! மாநாடு புதிய நோக்கத்தைத் தந்தது! இதுதான் இலக்கு என்று, சரியான இலக்கை இனங்காட்டியது. மாநாட்டின் பாதிப்பு வேண்டிய அளவு இல்லாது போனாலும் ஓரளவு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த மாநாட்டின் முடிவுகள் புதிய விவாதங்களையும் தோற்றுவித்தன என்பதை மறந்து விடுவதற்கில்லை நம் நாட்டில் ஒரு கதை சொல்வார்கள்.... நாய்க்கு வால் அளந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவேதான், ரேஷன் கார்டுகளில் கண்டுள்ளபடிதான் அவரவருக்கும் அரிசி கிடைக்கும். அதுபோலத்தான் அவரவருக்கும் பரம்பொருள் ஆணைப்படி- வினைப்பயனுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது என்று கதை அளப்பர். 'ரேஷன் கார்டு'களின் தரம் நாம் அனைவரும் அறிந்ததே! வினைசெயல் வழி பயன் உண்டு என்பது உண்மையே! ஆயினும் அறிவறிந்த ஆள்வினையின் மூலம் செயலை வளர்த்துச் செயலின் பயனையும் கூட்டலாம் என்பதே உண்மை. இதனை திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரத்தின் மூலம் உணரலாம்.

"அவ்வினைக் கிவ்வினையாம்
என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உந்தமக்கு ஊன மன்றே!
கைவினை செய்து எம் பிரான்
கழல் போற்றுதும் நாமடியோம்!
செய்வினை வந்து எமைத்
தீண்டாய் பெருதிரு நீலகண்டம்!”

என்பது தேவாரம். இந்த நம்பிக்கை நமது நாட்டு மக்களி டையில் வளர்க்கப் பெற்றால் மக்கள் வளர்வர்; மக்களின் செயல்திறம் வளரும். நாடு வளரும்.

இந்த உணர்வை நம்மிடையில் தூண்டி வளர்ப்பது, நம்மைச் சூழ்ந்திருக்கின்ற அவமானத்தை, இழிவை, வறுமையை எதிர்த்துப் போராடத் தேவை சுரணையே! சூடே! தனிமனிதனின் அறியாமையைச் சமூக ரீதியாக மாற்றியமைக்க விரும்பிய பாவேந்தர் பாரதிதாசன்,

'கல்வி நல்காக்

கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்' என்றார், தனிமனிதனின் வறுமையைச் சமூகத்தின் பொறுப்பாகக் கூறி, வறுமையை மாற்றாத ஜகத்தினை அழித்திடலாம் என்றான் பாரதி!

'தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.'

என்பது பாரதி வாக்கு! பலர் இறவாத இன்ப அன்பு நிலை அடைந்திட ஒருவர் நரகம் புகலாம் என்ற ராமானுஜரின் வழியைச் சிந்தனை செய்வோம்! அவர்களின் அடிச் சுவட்டில் நடப்போம்.


5

ருமபுர ஆதீனத்தில் நாம் சேர்ந்து தம்பிரானான பிறகு நமக்கு முதலில் திருக்கடவூரிலும், அடுத்து சீகாழி சட்டை நாதசுவாமி திருக்கோயிலிலும் கட்டளைத் தம்பிரான் பணி, சீகாழியில் பணியிலிருந்தாலும் தருமபுரத்தில் தங்கிப் படித்துக் கொண்டு வார விடுமுறைகளில் சீகாழிக்குப் போய்த் திருக்கோயில் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கட்டளைத் தம்பிரான் பதவி ஓர் அணியேயாம். பணிப்பொறுப்புகள் அதிகம் இராது: நாம் சீகாழியில் கட்டளைத் தம்பிரானாக இருந்தபோது (1948-49) மாவட்டக் கழகங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தேர்தலில் காங்கிரஸும் நீதிக்கட்சியும் போட்டியிட்டன. நமக்குக் காங்கிரஸ் மீது இளைமையிலிருந்தே ஆர்வம். சுபாஷ் சந்திரபோஸ், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகிய தலைவர்கள் மீது பக்தியென்றே சொல்ல வேண்டும். அப்போது பெருந்தலைவர் காமராஜர், மாவட்டக் கழகத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சீகாழி வரும் செய்தி கிடைத்தது. உடனே சீகாழிக்குச் சென்று பெருந்தலைவர் காமராஜருக்கு வரவேற்புக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தோம். உள்ளூர் காங்கிரஸ்காரர்களும் நம்முடனேயே சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்தனர்.

மாலை மூன்று மணிக்கு காமராஜர் வந்தார். திருக்கோயில் சார்பில் பிரசாதம் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பெற்றது. திருக்கோயில் வளாகத்திலேயே கூட்டம்! காமராஜரை வரவேற்று மஞ்சள் பெட்டிக்கு வாக்குக் கேட்டு நாம் பேசினோம்! ஆம்! அன்று தேர்தல் சின்னம் இல்லை! பெட்டிதான்! காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டி! "நாம் எல்லோரும் மாவட்டக் கழகத் தேர்தலில் காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டியிலேயே வாக்களிக்க வேண்டும்-ஏன்? நமது கண்ணுக்கு மஞ்சள் பெட்டியா தெரிகிறது! இல்லை! இல்லை! அந்த மஞ்சள் பெட்டியில் காணப்படும் ரத்தக் கறைகளைப் பாருங்கள்! இந்த மஞ்சள் பெட்டியின் வடிவத்தில் பகத்சிங் ஆவி வாக்குக் கேட்கிறது”! என்று அன்று நாம் பேசினோம் காமராஜருக்கு அளவற்ற மகிழ்ச்சி. வரவேற்பின்போது வழக்கமான மௌனத்தில் பார்த்தவர், பேச்சு முடிந்த பிறகு நன்றாகப் பழகினார்; பேசினார்!

அன்று தொடங்கிய காங்கிரஸ்-அரசியல் ஈடுபாடு இன்று வரை குறையவில்லை. தலைவர் காமராஜர் மூலமாக அரசியல் தேர்தல் ஈடுபாடு தொடங்கியது. அந்த ஈடுபாடு 1967-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தல்வரை நீடித்தது. தமிழ்நாடு முழுதும் தேர்தல் மேடைகளில் காங்கிரஸுக்காக காமராஜரின் தலைமைக்காக வாக்குகள். கேட்ட காலம் பசுமையாக நினைவில் இருக்கிறது. 1967 பொதுத் தேர்தலில் காமராஜர் தோற்ற பிறகு அரசியல் தேர்தல் உலகிலிருந்தே காலம் பயனுடையதாக இருந்தது.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1955-ல் தமிழ்நாட்டைப் பெரும்புயலும் மழையும் பாதித்திருந்தது. காமராஜர் மிகவும் கவலைக்குள்ளானார். ஊர்தோறும் விரைவாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். உதவிகளும் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலும் அவருடைய பயணம் அமைந்திருந்தது. ஒரு நாள் பகல் பதினொரு மணிக்கு ஒரு ஜீப் வருகிறது. அதில் முன் வீட்டில் தலைவர்-தமிழ்நாட்டின் முதல்வர் காமராஜர்! பின் ஒரு கார் வருகிறது! மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கிக் கொண்டிருக் கிறோம்! ஜீப் நின்றது. எதிர்பாராத விதமாகத் தலைவர் இறங்கி வருகிறார். வரிசையில் நின்ற மக்களிடம் பேசுகிறார். பின் நம்மைப் பார்த்து "நிவாரண வேலை செய்கிறீர்களா?” என்றார். வியப்பின் காரணமாக நம் தரப்பில் மௌனம். காமராஜர் “இன்று ஒரு நாள் தான்! ராமநாதபுர மாவட்டப் பயணத்தை முடிக்க வேண்டும் போய் வருகிறேன்'. கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் போய்விட்டார். என்ன எளிமை! இத்தகைய எளிமையை இனி என்று காண இயலும்? அவர் சென்று பல மணி நேரங்கழித்து ஒரு டாக்ஸியில் போலீசார் வந்தனர்--போயினர்!

காங்கிரஸ் கட்சி நல்ல அடிப்படையான கொள்கை உடையது! உண்மையிலேயே ஒரு தேசியக் கட்சி! ஆயினும் குழு மனப்பான்மை காங்கிரஸை உள்ளீடழித்துக் கொண் டிருக்கிறது. இந்தக் குழு மனப்பான்மையிலும் நமக்கு அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டது உண்டு. இன்று ராஜ்யசபை உறுப்பிரனராக இருக்கும் செ. மாதவன் நமது திருமடத்தின் வழக்கறிஞராகப் பணி செய்தவர். அவருடைய தகுதி, திறமை ஆகியவற்றில் நமக்கு ஈடுபாடு உண்டு, நல்ல உறவும் உண்டு. காங்கிரஸில் உள்ள நம்மைப் பிடிக்காதவர்கள் சிலர் நம்மைப் பற்றி "காங்கிரஸில் பற்றில்லாதவர் தி.மு.க. அனுதாபி" என்று கூறி வந்தனர். இந்த நிலையிலே தேனாட்சியம்மன் கோயில்புதூரில் ஒரு பள்ளிக் கூடத்தைக் காமராஜர் திறந்து வைத்து விட்டுப் பேசும்போது இதுபற்றிக் குறிப்பிட்டார். "அடிகளார் காங்கிரஸ்காரர் அல்ல தி.மு.க. அனுதாபி என்றெல்லாம் கூறுகிறார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியும். அடிகளார் நீண்ட நாட்களாக முரட்டுக் கதர் கட்டும் காங்கிரஸ்காரர், சில சமயங்களில் 'தமிழ்' 'தமிழன்' என்று பேசுவார். அவ்வளவு தான், அலட்டிக் கொள்ளாதீர்கள்” என்று பேசினார்.

ஒரு தடவை காமராஜரிடம் “காங்கிரஸ் உட்கட்சிச் சண்டை தலைவலியாக இருக்கிறது நமக்கு அரசியலில் ஈடு பாடில்லை, நாட்டுப் பற்றோடு ஏதாவது பணி செய்ய ஆசை! ஆதலால் காங்கிரஸ் கட்சியில் கிராமப் பணி புரிபவர் களுக்கென்று ஒரு பிரிவைத் தொடங்குங்கள். அந்தப் பிரிவில் நாம் வேலை செய்கிறோம்” என்று கூறினோம். தலைவர் காமராஜர் "நல்ல யோசனை! பார்க்கலாம்” என்று கூறி விட்டு, “ஆனால், போட்டிக்கு அங்கேயும் வரமாட்டார்களா, தொல்லை தரமாட்டார்களா, என்ன? ஆதலால் இருக்கிற இடத்திலேயே இருந்து கொண்டு கிராமப் பணிகளைச் செய்யுங்கள். ஆனால் ஒன்று... கட்சிக்காரர்களில் இவர் நல்லவர், அவர் நல்லவர் . என்று பிரித்துப் பேசாதீர்கள்! கண்ணன் கடவுள் தானே! அவனாலேயே துரியோதனனை விலக்க முடிந்ததா? துரியோதனன் - பாண்டவர்கள் இரண்டு அணியினரையும் சரிக்கட்டிக் கொண்டு சென்றான். துரியோதனனுக்குப் படைகளைக் கொடுத்தான்! பாண்டவர்களுக்காகத் தானே போராடினான். அப்படித்தானே பாரதம் சொல்கிறது. கண்ணனைவிட நாம் என்ன திறமைசாலிகளா? ஆதலால், எல்லாரையும் அணைத்துக்கொள்ளுங்கள்!” என்று ஆலோசனை கூறினார்.

ஒரு நாள் காலைச் செய்தித்தாளில் ‘தலைவர் காமராஜர் தி.மு.க. தலைவர் என்.வி. நடராசன் இல்லத் திருமணத்துக்குச் சென்றார். காரிலிருந்து இறங்கித் திருமண வீட்டுக்குள் செல்ல இயலவில்லை. அதனால் மணமக்கள், காருக்கே வந்து வாழ்த்துப் பெற்றார்கள்!' என்ற செய்தியைப் பார்க்க நேரிட்டது. செய்தி மிகவும் கவலையைத் தந்தது. உடனே காமராஜரைப் பார்க்கச் சென்னைக்குச் சென்றோம். சென்னையிலுள்ள தமது அலுவலகத்திலிருந்து காமராஜர் இல்லத்துக்குப் பார்க்க வருவதாக அறிவித்தோம். செய்தி யறிந்த, காமராஜர், “அழைத்துவர அனந்தனை அனுப்பு கிறோம். அப்போது வரலாம்?” என்று சொல்லிவிட்டார், காலை பத்து மணிக்கு குமரி அனந்தன், முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் ஆர். ராமநாதன் செட்டியார் இரண்டு பேரையும் அனுப்பியிருந்தார்; நம்மை அழைத்துவர! உடன் காமராஜர் இல்லத்துக்குச் சென்றோம். சோபாவில் படுத் திருந்தார். எழுந்திருக்க முயன்றார். இயலவில்லை. நாம் ஓடிச் சென்று “எழுந்திருக்க வேண்டாம்" என்று சொல்லி அவரைப் பிடித்துப் படுக்க வைத்தோம். பக்கத்தில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதில் நாம் உட்கார... பேச்சுத் தொடங்கியது.

எங்கள் பேச்சுத் தொடங்கியவுடனேயே குமரி அனந்தனும் ஆர். ராமநாதன் செட்டியாரும் அறைக்கு வெளியே போய் விட்டார்கள். ஒரு மணி வரையில் பேச்சு நீண்டது. அப்போது அவருக்கு அரசியலில் இருந்த உணர்வுகளைத் தெளிவாகப் புலப்படுத்தினார். இந்திரா காந்தியைப் பற்றிக் காமராஜர் அப்போது கூறிய கருத்து “நல்ல பொண்ணு; ஆனால், அரவணைத்துச் செல்லும் மனம் இல்லை. அவசரகால நெருக்கடி அவசியமில்லாதது. தூத்துக்குடியில் ஒரு வீட்டில் அதிகாரிகள் புகுந்து சோதனை செய்திருக்கிறார்கள். பெண்களிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை. நாம் சுதந்திரம் பெற்றது, அதிகாரிகளிடம் மக்கள் சுதந்திரத்தை ஒப்படைக்கவா?” என்று அவர் கேட்ட போது கோபம் கொப்பளிப்பது தெரிந்தது. "மக்களுக்காகச் சுதந்திரம்” என்றார். "பிழைத்து எழுந்தால் மக்களின் சுதந்திரத்துக்காக ஆதிக்க அரசை எதிர்த்துப் போராடுவேன்!” என்றார். நமக்கு நல்லகாலம் இல்லை. காமராஜர், அமரராகி விட்டார். இந்த மண்ணில் பிறந்தவர்களில் காமராஜர் ஒரு மகத்தான மனிதர்.
6

டுத்திட்டுக் கிராமத்தில் பண்ணை வாழ்க்கை அமைதியாக நகர்ந்துகொண்டு இருந்தது. அதிகாலையில் பண்ணை வேலை. பின் விநாயகர். பூஜை; படித்தல், மாலையில் நண்பர்களுடன்! வாழ்க்கைச் சக்கரம் ஒரு Monopoly விளையாட்டு! 'Monopoly' விளையாட்டு இங்கிலாந்திலிருந்து - வந்த விளையாட்டு! விளையாட்டின் பெயரிலிருந்தே விளங்க வில்லையா?

ஒருசேர ஆக்கிரமித்தல், ஆதிக்கம் செலுத்துதல் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக பிரிட்டனின் நோக்கம் என்பது இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே! மேற்கத்திய நாடுகளால் இராக், கியூபா போன்ற நாடுகள் அனுபவிக்கும் நெருக்கடி எவ்வளவு கொடுமையானது! இராக் நாட்டின் விமானம் அந்த நாட்டின் தெற்குப்பகுதியில் பறக்கக் கூடாதாம்! என்ன சட்டாம்பிள்ளைத்தனம்? வளரும் நாடுகளுக்கு அணிசேரா நாடுகளுக்கு மேற்கத்திய வல்லரசுகளின் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் துணிவு வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த 'Monopoly'-யை 'வாழ்க்கைச் சக்கரம்' என்று, தமிழாக்கம் செய்து விளையாடுவது எங்கள் குழுவின் பொழுதுபோக்கு!

அன்று விளையாட்டில் சிறந்த ஆக்கிரமிப்பாளனாக ஆதிக்கக்காரனாக விளங்கியவன் ரெங்கநாதன்! இன்றோ அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கை சமவாய்ப்புச் சமநிலைச் சமுதாயக் கொள்கைதான்....மாலையில் தோட்டம்; மீண்டும் விநாயகர் கோயிலில் திருவிளக்கேற்றி பஜனை செய்தல். பஜனைக்கு ஊரவர் முறை வைத்துச் சுண்டல் வழங்கினர்.

அதிகாலையில் திருக்கோயில் திருமுன்பு தண்ணீர் தெளித்துக் கோலம் போடுதல், 'நாட் பூசனைக்கு வீசம்படி திருவிளக்கு எண்ணெய்; கால்படி அரிசி இவைதான் திருக்கோயில் நிர்வாகத்துக்குச் சிறந்த முறை! திருக்கோயிலுக்குச் சொத்துக்கள் இருப்பதைவிட, மனிதர்கள்-வழிபடுவோர்கள் தான் தேவை. மெள்ள மெள்ள எங்கள் பஜனைக் குழு வளர்ந்தது.

விநாயகர் கோயிலில் பஜனை நடந்தது. விநாயகர் கோயில்தான்; ஆயினும் வைணவச் சாயல் கூடுதலாகவே இருந்தது. பஜனைக் குழு வீதியில் பாடல்கள் பாடிக்கொண்டு போகும் போது வேடம், போட்டு ஆடுதலும் - நிகழ்ந்தது, ரெங்கநாதனுக்குக் கிடைத்த வேடம், அனுமான் வேடம்! அனுமான் வேடத்தில் உண்டியல் குலுக்கி வருவான்.

இங்ஙனம் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு பூகம்பம் வருவதற்குரிய சூழல் உருவா யிற்று. தந்தையும் தாயும் பேசத் தொடங்கினார்கள்.

"படித்துவிட்டு வேலைக்கு போகாமல் உட்கார்ந்திருக் கிறானே!”-இது தந்தையின் குமுறல்!

“எதற்காக வேலைக்கு போகணும்? மூத்த ரெண்டு பிள்ளைகளும் வேலைக்குப் போய்விட்டார்கள்! கடைசிப் பையன் வீட்டில் தான் இருக்கட்டுமே! வீடும் விளக்கமாக இருக்கட்டும்!”-இது. தாயின் எண்ணம். தந்தைக்கு உடன்பாடில்லை. தந்தையின் கட்சியில் மூத்த தமையனாரும் இருந்தார்.

ஒரு நாள் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய தலைஞாயிறு குஞ்சிதபாதம்பிள்ளை வந்தார். இவர் அரிசி ஆலை அதிபர். தந்தையாரும் இந்தக் குஞ்சிதபாதம் பிள்ளையும் பேசிய பேச்சின் சாரம் தருமபுரம் மடத்தில் ரெங்கநாதனை வேலைக்குச் சேர்த்துவிடுவதாகும்.

குஞ்சிதபாதம்பிள்ளை உறுதி கூறிவிட்டுச் சென்று விட்டார். தந்தையார் மெள்ளப் பேச்சைத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே ரெங்கநாதன் மறுத்துவிட்டான். தந்தைக்குக் கோபம்.

“மடத்தின் வேலை அரண்மனை வேலை போல! அரைக்காசு சம்பளமானாலும் பரவாயில்லை...உயர்ந்தது!"- மடத்தின் வேலையைப் புகழ்ந்தார். எல்லை கடந்த நிலையில் "வெட்டிச் சோறு” -என்பன போன்ற கடுஞ்சொற்கள் வெளிப்பட்டன.

ரெங்கநாதன் உணர்ச்சிவசப்பட்டான். தருமபுரம் மடத்துக்கு வேலைக்குப் போய் விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மறுநாள் காலை தருமபுரத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டான் தனியாக!

மகா சந்நிதானம் அவர்களின் பேட்டி எளிதாகக் கிடைத்து விட்டது! நல்லூழ் போலும்!

வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்ட உடனேயே வேலையும் கிடைத்து விட்டது! தபால் பதிவு எழுத்தர் வேலை! மாதம் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சம்பளம். இரண்டு வேளைச் சாப்பாடு. வேலை பார்த்துத்தான் முன்னேற வேண்டும். பிழைக்க வேண்டும் என்ற உணர்வு பிடரியைப் பிடித்து அழுத்தியதால், வேலையில் மிகவும் கவனம்.

ஆதீன அலுவலகத்தில் நிறைந்த அனுபவம் உள்ளவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்களிடம் வேலை செய்தது ஒரு தனி அனுபவம்! பத்திரிகைகள் படிப்பதைத் தவிர வேறு எந்தப் பொழுதுபோக்கையும் அப்போது விரும்பியதில்லை! வீட்டுக்குப் போகவும் விருப்பமில்லை. ஆதலால், விடுப்பு எடுப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட வேலை செய்வது வழக்கமாயிற்று. ஆதலால் வேலையை நன்றாகச் செய்ய முடிந்தது.

அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்த ஜெயபால் நாயனார் என்பவர் ரெங்கநாதன் வேலை கற்றுக் கொள்வதற்கு துணைசெய்தார். அது மட்டுமல்ல... மடத்தின் பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். காலப்போக்கில் ஜெயபால் நாயனார் நெருங்கிய தோழரானார். மடத்தில் வேலையில்லாத நேரத்தில் ஜெயபால் நாயனார் வீட்டில்தான் ரெங்கநாதன் இருப்பது. ஜெயபால் நாயனாரின் தாயார் மிகவும் நல்லவர்கள். நல்ல சாப்பாடு போடுபவர்கள். இன்றும் ஜெயபால் நாயனார் தருமபுரம் ஆதீனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் காலை எட்டு மணி...அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருக்கிறான் ரெங்கநாதன். அன்று தபால் அனுப்புகை எழுத்தர் பணியும் பொறுப்பில் இருக்கிறது. ஆதலால், "டெஸ்பாட்ச்' வேலை செய்து கொண்டிருக்கிறான். அன்று மயிலாடுதுறை சப்-கோர்ட்டுக்கு அவசரமாக அனுப்பவேண்டிய தபால் ஒன்றும் இருந்தது! அதனைக் கவருக்குள் வைத்து ஒட்டி முகவரி எழுதிக் கொண்டு அலுவலகச் சேவகரைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில், அலுவலகத்தின் முதல் நிலைக் கண்காணிப்பாளர் ரத்தினம் பிள்ளை வந்து சேர்ந்தார். இவர்தான் நிர்வாகத்துக்குத் தலைவர். இவர் வந்ததும் கையில் இருந்த கவரைக் கேட்டு வாங்கினார், முகவரியைப் படித்துச் சரிபார்த்துக் கொண்டார்.

"தபாலில் இணைப்பெல்லாம் சரியாக வைத்திருக்கிறாயா?” என்று கேட்டுக்கொண்டே கவரைப் பிரித்துத் தபாலை எடுத்தார். தபாலுடன் பிளேடு ஒன்றும் உடன் வந்தது. பிள்ளைக்கு வந்ததே கோபம்! “சின்னப்பசங்கள், பொறுப்பில்லை!" என்றெல்லாம் திட்டத் தொடங்கி விட்டார். ரெங்கநாதன் அழாக் குறையாகத் தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தான்.

நடந்தது என்ன? மடத்தில் சிக்கனக் கவர்தான் உபயோகப்படுத்துவது பழக்கம்: அதாவது மடத்துக்கு வந்த தபால் கவர்களையே சீர்செய்து திரும்பவும் உபயோகப் படுத்துவது, அப்போது டெஸ்பாட்ச் பணியில் இருந்தவர் டி.பி.ஏ. ராசமாணிக்கம். அவர் தயார் செய்து வைத்திருந்த கவர் அது. கவர் தயார் செய்யப் பயன்படுத்தி இருந்த பிளேடை அந்தக் கவருக்குள்ளேயே வைத்திருக்கிறார். அவர் ஒட்டிய கோந்தின் ஈரம் பிளேடின் இருபுறமும் படிந்து பிடித்துக் கொண்டிருக்கிறது! தபாலில் அது செருகி இருந்ததால் பிளேடு வெளியே வந்திருக்கிறது. இது வேண்டும் என்று செய்த தவறில்லை. தவறாக இல்லாமலும் போகலாம். ஆனால் குற்றம்தான். இதை ரெங்கநாதன் உணராமல் இல்லை. அழாமலும் இல்லை. ரத்தினம்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டுக் கும்பிட்டான், ஆயினும், அவரின் திட்டுதல் குறைந்தபாடில்லை.

பிள்ளையவர்களின் கோபத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ரெங்கநாதன் அலுவலகப் பெட்டிச் சாவியை அவர் முன் எடுத்து வைத்தான்! “மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.

இந்தச் சம்பவ நேரத்தில், மகாசந்நிதானம் அவர்கள் அந்த வழியாகப் பங்களாத் தோட்டத்துக்குச் செல்லும்போது நின்று கவனித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மகாசந்நிதானம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது! ரெங்கநாதன் சென்று வீழ்ந்து வணங்கி நின்றான்! கேவிக் கேவி அழுதான். மகாசந்நிதானம் அவர்கள் ஆறுதல் கூறினார்கள்! ரத்தினம் பிள்ளையும் வந்து சேர்ந்தார். வந்தது மட்டுமின்றிப் புகாரையும் சொன்னார். "வேலையை விட்டுப் போவதாகக் கூறுகிறான்.... போகட்டும்! இந்த மாதிரிப் பொறுப்பற்ற பசங்கள் தேவையில்லை" என்று பொரிந்து தள்ளினார். ஆனால் மகாசந்நிதானம் அவர்கள் மன்னித்தார்கள்! ரத்தினம்பிள்ளைக்குச் சமாதானம் கூறினார்கள். பணி தொடர்ந்தது.. ரெங்கநாதனின் நடை, உடை, பாவனைகள் மகாசந்நிதானம் அவர்களைக் கவர்ந்த நிலையில் ஆபத்தில்லா வாழ்க்கை நீடிக்கிறது.

சனிக்கிழமைதோறும் மகாசந்நிதானம் அவர்கள் மிளகுக் காப்புச் செய்து. கொள்வார்கள். அன்று மகாசந்நிதானம் அவர்கள் 'சித்திரக்கட்டு' என்னும் இடத்தில் இருப்பார்கள்! அந்த நாளில் ரெங்கநாதன் அலுவலகத்துக்குச் செல்லும் போது, இடையில் இருந்த மகாசந்நிதானம் அவர்களை வணங்கி வாழ்த்துப் பெற்றான். விசிறிக்கொண்டு நின்றான்.

மகாசந்நிதானம் அவர்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள், பலரையும் சிரிக்கச் செய்வார்கள். அவர்கள் சிரிக்க மாட்டார்கள். அன்று ஒரு வேடிக்கை! அப்போது 'பண்டாரக்கட்டு' என்னும் பகுதியில் சுப்பையா முதலியார் என்பவர் வேலை செய்தார். நல்லவர், மாடு போல உழைப்பார்! புத்தியை அதிகமாக உபயோகப் படுத்தமாட்டார்! சொன்னபடி செய்வார்.

மகாசந்நிதானம் அவர்கள் பண்டாரக்கட்டு சுப்பையாவை அழைத்து, "பரிகலம் (சமையற்கட்டு) அம்மியில் பல் குத்தப் பயன்படும் ஊசி குத்தி வைத்திருக்கிறது, எடுத்து வா!” என்றார்கள். சுப்பையா ஓடினார். அம்மியைத் தடவிப் பார்த்தார். ஊசி இல்லை. வந்து "ஊசி இல்லை!” என்றார்.

அம்மியில் ஊசி குத்தி வைக்க முடியுமா? இந்தப் பகுத்தறிவு அவருக்கு இல்லை என்று நினைக்காதீர்கள்! மடத்தில் பழக்கம் அல்லது பழக்கப்படுத்துவது. மகாசந்நிதானம் என்ன உத்தரவு செய்தாலும் அப்படியே கேட்டுக்கொள்ள வேண்டும்! செய்யவேண்டும்... இந்தப் பழக்கத்தால் வந்த விளைவு இது!

அப்போது எதிர்பாராத சூழ்நிலையில் மகாசந்நிதானம் ' அவர்கள் ரெங்கநாதனிடம் “பழுக்கலாமா?" என்று கேட்டார்கள்! ரெங்கநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.
7

யிலைக் குருமணி அவர்களின் கருணையால் ரெங்கநாதன் பழுத்துவிட்டான். அதாவது சந்நியாசியாகி - விட்டான். கந்தசாமிப் பரதேசி என்பது தீட்சாநாமம், ரெங்கநாதன் துறவு பூண்டது அவனுடைய பெற்றோருக்குத் தெரியாது. பெற்றோரின் அனுமதியைப் பெற முயற்சித்ததில் தாயாரின் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்காதது மட்டுமல்ல மடத்துக்கு வேலைக்குப் போகவே. வேண்டாம் என்பது தாயார் ஆணை. என்னென்னவோ சமாதானங்கள், உறுதிமொழிகளைத் தாயாரிடம் கூறிவிட்டு, மீண்டும் பணிக்கு வந்து சேர்ந்தான் ரெங்கநாதன்! கயிலைக் குருமணி அவர்களிடம் இசைந்தபடி யாத்திரைக் காஷாயம் வாங்கிக்கொண்டான்.

மடங்களின் மரபுப்படி முதலில் யாத்திரைக் காஷாயம் தான் தருவார்கள். இது-காவித்துணியைப் பூஜை மடத்தில் வைத்து எடுத்து உடுத்திக் கொள்ளச் சொல்வதாகும். உடன் அவர்கள் யாத்திரை செல்லவேண்டும். அவரவர் சத்திக்கு ஏற்பவும், மகாசந்நிதானம் அவர்களின் உத்தரவுக்கு ஏற்பவும் யாத்திரை செல்ல வேண்டும். பழைய காலத்தில் உண்மையாகவே பரதேசியாக யாத்திரை செல்ல வேண்டும். பிக்ஷை முதலியன பெற்று உயிர் வாழ்ந்துகொண்டு யாத்திரை செல்ல வேண்டும். பெரும்பாலும் நடை! காலப்போக்கில் நடுத்தர வசதியுடைய யாத்திரையாக இது மாற்றம் பெற்றது. .

யாத்திரை முடிந்து வந்தவுடன் பக்குவம் நோக்கி மந்திரக்காஷாயம் தந்தருளுவார்கள். மந்திரக் காஷாயத்துக்கு முன்பு சிவபூஜை எழுந்தருளச் செய்து தருவார்கள்! மந்திரக் காஷாயம் என்பது மகாசந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் பூசனை செய்யப் பெற்ற காவித்துணி தருவதாகும். மந்திரக் காஷாயம் பெற்ற நிலையில்தான் பரதேசியாக இருந்தவர். மடத்துத் தம்பிரான் ஆவார்.

ஒருவர் மடத்தில் தம்பிரான் நிலையிலிருக்கும் பொழுதுதான் திருமடத்தின் அங்கீகாரம் பெற்ற உறுப்பினராகிறார். அது முதல் திருமடத்தின் சொத்தாகவும் பிரிக்கப்பட முடியாதவராகவும் ஆகிறார். அவருக்குத் திருமடத்தில் உரிமைகள் உண்டு. திருமடங்களில் பழங்கால தம்பிரான்களுக்கு உரிமைகளும் கடமைகளும் இருந்தன. இன்று நடைமுறையில் இல்லை. எல்லா உரிமைகளும் பெற்ற இந்திய ஜனங்களின் உரிமைகள் போலவே இந்த உரிமைகள் ஆயிற்று! அதற்கும் மேலே பக்குவம் பெற்று, முறையே பெறுபவை-நிர்வாண தீட்சை, ஆசாரியாபிஷேகம் முதலியன.

ரெங்கநாதன் யாத்திரைக் காஷாயம் வாங்கிக் கொண்ட செய்தி மயிலாடுதுறைக்குப் போய்ச்சேர்ந்தது. அப்படியே நடுத்திட்டில் இருந்த பெற்றோருக்கும் செய்தி கிடைத்துவிட்டது. தாய்க்குத் தாங்கமுடியாத துயரம். உடனே தருமபுரத்துக்கு வந்து சேர்ந்தார்கள் தாய், தந்தை, தமையனார் ஆகியோர். அறைக் கதவு தட்டப்படுகிறது. நள்ளிரவு மணி பன்னிரண்டு. அவர்கள் வந்த நோக்கம் நம்மை மீட்டுக் கொண்டு போய்விடுவது என்பது. கந்தசாமிப் பரதேசி எடுத்துக் கூறிய சமாதானம் எடுபடவில்லை . அவர்களின் அழுகைச் சத்தம் கேட்டு அடுத்தடுத்த அறையினர் வேறு வந்துவிட்டனர். ஒருவாறாகச் சமாளித்துக் காலையில் மகாசந்நிதானம் அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்துவிடுவதாக உறுதி (உறுதியில்லாத உறுதி) கூறினோம். அவர்கள் போய்விட்டனர்!

மறுநாள் காலை ஏழு மணி, மகாசந்நிதானம் அவர்கள் நந்தவனத்தில் தனித்திருக்கும் நேரம். அந்த நேரத்தில் - அழைப்பு வந்தது. 'கந்தசாமிப் பரதேசி' சென்று கண்டு கொண்டார். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். மகாசந்நி. தானம் அவர்களிடம் நடந்தவற்றை இரவு காவற்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கந்தசாமிப் பரதேசியும் நடந்த வற்றைக் கூறினார்.

"என்ன முடிவு" மகாசந்நிதானம் அவர்களின் கேள்வி?

"எடுத்த முடிவு முடிவுதான்! இனி யோசிப்பதில் பயன்?

மகாசந்நிதானம் அவர்கள் உடனே உத்தரவு செய்தார்கள்.

"பழைய மரபுப்படி நீ யாத்திரை போய் வா! தெற்குப் பக்கம் போ! குமரி வரையில் சென்று தலங்களை வழிபட்டுவா! உனக்கும் நல்லது.... உன் பெற்றோருக்கும் பழகிப் போய்விடும்!” என்று பணித்தார்கள்.

அன்றே கந்தசாமிப் பரதேசியின் யாத்திரை தொடங்கியது. உடன் அலுவலகக் கண்காணிப்பாளர் அ. கல்யாண சுந்தரதேசிகரையும் அனுப்பி வைத்தார்கள். கல்யாண சுந்தர தேசிகர் நல்ல அறிஞர். சாதுரியமானவர். ஆனால், மகாசந்நிதானம் அவர்களைத் தவிர, வேறு எவர் சொல்லையும் கேட்க மாட்டார்கள். தன் பக்கத்தில் தராசு வைத்தே பேசுவார்... பழகுவார். குட்டித் தம்பிரானாக இருந்தால்கூட அவரிடம் இரண்டாம் இடம்தான்!

கந்தசாமிப் பரதேசி, யாத்திரையாக ரயில் வழி மதுரை வந்து சேர்ந்தார். மதுரையில் தருமை ஆதீனம் மடத்தில் தங்கல். மதுரை வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கேயே தங்கல். மறுநாள் திருப்புரங்குன்றம் சென்றார். திருப்பரங்குன்றத்துக்குத் தேசிகர் உடன் வரவில்லை.

கந்தசாமிப் பரதேசி மட்டும் பயணம். திருப்பரங்குன்றத்தில் சரவணப் பொய்கையில் தீர்த்தமாடிவிட்டுக் கரையில் துண்டு விரித்து உட்கார்ந்துகொண்டு ஜெபம் செய்தார். தொடக்கக் காலத்தில் பணி நேரங்களில் கூட ஜெபம் செய்வார். அதாவது, திருவைந்தெழுத்து எண்ணுதலாகும். கண்களை மூடி ஜெபம் செய்து கொண்டிருந்தார்.

மொட்டைத் தலை, காவி உடை, இந்தத் தோற்றத்துடன் கந்தசாமிப் பரதேசி ஜெபம் செய்து கொண்டிருக்க, அச்சமயம் திருப்பரங்குன்றத்துக்கு வந்த பக்தர்களுக்கு இலக்கு உடைய பரதேசியாக அவரைக் கருத இயலவில்லை! பிழைப்புத் தேடும் பிச்சைக்காரச் சாமியாராகவே எண்ணி, விரிந்திருந்த துண்டில் காசுகள் போட்டுச் சென்றனர். அன்று பத்து அணா வரை காசுகள் விழுந்திருந்தன. கந்தசாமிப் பரதேசியின் நிலை-மெல்லவும் முடியவில்லை-விழுங்கவும் முடியவில்லை. ஆனாலும், துக்கத்தை அனுபவிக்காமல் இல்லை. யாத்திரை திருநெல்வேலிக்குத் தொடர்ந்தது! மாதம்-ஆடி மாதம்! -திருநெல்வேலியில் தங்கல்- ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் சென்று புனித நீராட எண்ணம்! எண்ணம் செயலானது. நெல்லையிலிருந்து, நெல்லைப் பகுதியின் தருமை ஆதீன மேலாளர் கே.பி. மகாலிங்கம் பிள்ளை உடன் வந்தார்.

கே.பி. மகாலிங்கம் பிள்ளை கந்தசாமிப் பரதேசியிடம் பிரியமாக இருந்தார். பக்குவமாக வீட்டில் சமைத்துக் . கொண்டு வந்து சாப்பாடு கொடுத்தார். பாணதீர்த்தத்துக்குச் செல்ல இன்று இருப்பதுபோல அன்று வசதிகள் இல்லை.. சொரிமுத்தய்யன் கோயிலுக்கு நடந்துதான் போக வேண்டும். ஆடி அமாவாசைக்கு முதல் நாள் இரவே பாணதீர்த்தத்துக்குச் சென்று சேர்ந்தாயிற்று. நாணற்புற்களாலான சிறுசிறு குடிசைகள் 25 ரூபாய் வாடகை! மூன்று குடிசைகள் எடுத்துத் தங்கினோம்.

மறுநாள் காலை. பாணதீர்த்தத்தில் நீராடி வழிபாடு முதலியவை முடித்துக் கொண்டு பயணம். தேசிகரும் பிள்ளையும் மெதுவாக நடந்து வந்தார்கள். கந்தசாமிப் பரதேசியின் நடை எப்போதுமே வேகம்தான். இப்போதுதான் சொரிமுத்தய்யன் கோயிலருகில் கந்தசாமிப் பரதேசி தனியே நடந்து வந்து கொண்டிருந்தார். நல்ல இளமை! இருபத்தோரு வயது. பரதேசிக் கோலம்! நடுவில் சந்தித்தவர் ஒருவர் கந்தசாமிப் பரதேசியை மிரட்டிவிட்டார். அவர் வாயில் வந்த வார்த்தைகளெல்லாம் எழுதும் தரத்தில் அல்ல!

"ஏண்டா! உழைத்துச் சாப்பிடாமல் பிச்சை எடுக்கிறாய்?" என்பது அவருடைய வினா! முதலில் அதிர்ச்சியடைந்தாலும் அழுதாலும் பின் தேற்றிக் கொண்டு, அவருக்குத் தன்னிலை விளக்கம் அளித்து வெற்றி பெற்றார் கந்தசாமிப் பரதேசி! பின் அவரே சாலை வரையில் துணை வந்தார்.

நமது சமயத்தில் காவி உடை, திருநீறு, உத்திராக்கம் போன்ற புனிதச் சின்னங்கள் பிழைப்பின் சாதனங்களாக மாறிவிட்டன! பல்லாயிரக்கணக்கில் பிச்சைக்காரர்கள் இந்தக் கோலத்தில் வயிற்றுக்குக் கேட்டு அலைவது வெட்ககரமான செய்தியே!

கன்யாகுமரி வரையில் யாத்திரை தொடர்ந்தது! இளமையிலேயே கந்தசாமிப் பரதேசிக்கு விவேகானந்தரின் தாக்கமும் உண்டு! நடுத்திட்டுக்குப் பக்கத்தில் உள்ள மண்மேடு என்ற ஊரில் இருந்த மாவட்டக்கழகப் பள்ளியில் ரெங்கநாதன் ஆரம்பக் கல்வி பயின்றவன். இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்த சாரங்கபாணி நாயுடு என்பவர் இராமகிருஷ்ணமிஷனில் பிற்காலத்தில் சேர்ந்தார். அவருடைய செல்வாக்கின் பயன் இது!

விவேகானந்தர் கன்யாகுமரிக் கடலில் உள்ள குன்றின் மீது உட்கார்ந்து தவம் செய்தார் என்பது அனைவரும் அறிந்த செய்தி! கந்தசாமிப் பரதேசியும் அந்தக் குன்றுக்குச் சென்று சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்தார். ஒருவாறாக, 47 நாள் யாத்திரையை முடித்துக்கொண்டு தருமபுர ஆதீனத்துக்குத் திரும்பி வந்தார். பெற்றோரும் கைவிட்டு விட்டனர்.

அடுத்து வந்த கார்த்திகை மாதம் திங்கட்கிழமையன்று கந்தசாமிப் பரதேசிக்கு மந்திரக் காஷாயம் வழங்கினார்கள் மகாசந்நிதானம் அவர்கள், கந்தசாமிப் பரதேசி கந்தசாமித் தம்பிரான் ஆனார். எதையும் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்று உணர்த்தியது மந்திரக் காஷாயம்!


8
ருமபுரத்தில் நாம் குட்டித் தம்பிரானாகிப் படித்துக் கொண்டிருந்த காலம். குட்டித் தம்பிரான் என்றால் மடங்களில் சந்நியாசம் பெற்றுப் பயிற்சி பெறுபவர். அந்தக் காலத்தில்தான் தருமையில் கல்லூரி தொடங்கப்பெற்றது. அப்போது தருமபுரம் ஆதீனத்தில் பி. சுந்தரம் பிள்ளை என்றொரு தமிழறிஞர் இருந்தார். நல்ல தமிழறிஞர். தமிழ் இலக்கியங்கள் அவருக்கு மனப்பாடம். திருக்கோவையாரை அருமையாகச் சுவைத்துப் பாடுவார். அவர் சமயப்பாடம் நடத்தினார். அவர் நடத்தும் நடை பழங்காலப் பண்டிதர் நடை. நாங்களோ புதிய தலைமுறையினர். முறுக்கை ஊற வைத்துச் சாப்பிடும் இளைஞர்கள். சமயப்பாடம் புரிய வில்லை .
நம்முடன் காவிரிக்கு வந்தவர்களிடம், "படித்தால் நன்றாக விளங்கிப் படிக்க வேண்டும் இல்லையானால் படித்து என்ன பயன்?” என்று கூறி, "குட்டுப்பட்டால் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்” என்றும் கூறினோம். இந்தப் பழமொழி காவிரிக் கரையில் செடிகளின் மறைவில் இருந்த ஒருவர் காதில் விழுந்திருக்கிறது. இது பெருந் தீயாகப் பற்றி எரிந்தது.
இந்து சமயத்தில் துறவிகளிடத்தில் கூட இணக்கம், ஒற்றுமை காண்பதரிது. ஒரு துறவி போனவழியில் இன்னொரு துறவி போகமாட்டார். பழைய புராணங்களில் கூட விசுவாமித்திரர், வசிஷ்டரிடையே நல்ல உறவு நிலவியதாகத் தெரியவில்லை. நமக்கும் தரும புரத்தில் குட்டித் தம்பிரான்கள் ஓரிருவரிடம் உறவு நல்லவண்ணம் அமையவில்லை. ஏனோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

காவிரிக் கரையில் நாம் சொன்ன 'குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்' என்ற வார்த்தைகளுக்குக் கண், மூக்கு, காது வைத்து திருமடத்தின் மரபை மீறி பேசியதாக மகாசந்நிதானம் அவர்களிடம் 'கோள்' சொல்லிவிட்டார்கள்.

காலையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து, கடையிலிருந்து வந்த இட்லிப் பொட்டலத்தை அவிழ்த்துச் சாப்பிட உட்கார்ந்தோம்.

மகாசந்நிதானத்திடமிருந்து அழைப்பு வந்தது. உடன் விரைந்து சென்றோம், மகாசந்நிதானம் உள்ள அஷ்டலட்சுமி கட்டிற்குச் செல்லும்போதே, மகாசந்நிதானம் அவர்கள் திருவுள்ளத்தில் ஏதோ ஆதங்கம் ஏற்பட்டிருப்பதைச் செவிப் புலன் வழியாக உணர முடிந்தது.

அஷ்டலட்சுமி கட்டின் வாசற்படியில் ஆதீன உயர் அலுவலர் தேசிகர் நம்மை நிறுத்தினார். விசாரிக்கத் தொடங்கினார். மகாசந்நிதானம் அவர்களிடம் நேரில் விண்ணப்பித்துக் கொள்வதாக உயர் அலுவலரை ஒதுக்கி விட்டுச் சென்றோம். மகாசந்நிதானம் அவர்களின் திருவுள்ளம் சாதகமாக இல்லை என்பதை உணர முடிந்தது. நிலத்தில் வீழ்ந்து வணங்கி, "யானறிந்து எந்த ஒரு பிழையும் செய்யவில்லை... பிழை பொறுத்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பித்துவிட்டு, விடைக்குக் காத்திராமல் அறைக்கு வந்து விட்டோம், அன்று மதியம், அறை. மாற்றல் ஆணை கிடைத்தது. 'வாழைக்காயைக் கனிய வைக்கும்' அறை கிடைத்தது. பார்த்து வந்த பணிகளும் பணிவிடைப் பணிகள் உட்படப் பறிக்கப்பெற்றன. நம்முடன் யாரும் பேசக்கூடாது என்ற ஆணை வேறு. நம்மைப் பொறுத்தவரையில் "நன்றே செய்வாய். பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே!” என்ற திருவாசக வரிகளும் "கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ?” என்ற திருஞானசம்பந்தர் அருள்வாக்கும் சிந்தனைக்குப் பயன்பட்டன. உள்ளத்தில் உறுதிப்பாட்டைத் தந்தன. அப்போது உடன் பயின்ற கோ. குஞ்சிதபாதம் என்பவர், இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து பார்த்துப் பேசுவார். மயிலாடுதுறையிலிருந்து பொருட்கள் வாங்கி வந்து தருவார். இதே போல இப்போது நா. மகாலிங்கம் அவர்களிடம் இருக்கும் கோ. முருகையன் இராங்கியத்தில் தமிழாசிரியராகப் பணி செய்து ஒய்வு பெற்றுள்ள வை.க. தண்டபாணி ஆகியோரும் பிறரறியாமல் உதவி செய்தனர். -

நாட்கள் உருண்டோடின. பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் பூஜை மடம் வழிபாடு முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் அறையில் வந்து படித்துக்கொண்டிருந்தோம். அப்போது மகாசந்திதானம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரே பயம். ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்ற அச்சம்! ஆயினும், அழைப்பை ஏற்று மகாசந்நிதானம் அவர்களைக் கண்டுகொள்ளச் சென்று நிலத்தில் சென்னியுற வீழ்ந்து வணங்கி நிற்கும் பேறு கிடைத்தது.

மகாசந்நிதானம் அவர்கள் திருமுன் இருந்த மேஜையில் ஒரு தாம்பாளத்தில் லட்டுகள், பழங்கள், ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்கள் இருந்தன. வணங்கி எழுந்த நிலையில் திருவாளன் திருநீறு வழங்கி அருளினார்கள். .

"கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்" என்ற அப்பர் அடிகள் வாக்கினைப் போல மகாசந்நிதானம் அவர்கள். அவர்கள் திருமுன்பு எளிய மாணாக்கன். இருவரும் தவிர யாரும் இல்லை. மகாசந்நிதானம் அவர்கள் திருவுள்ளங்கனிந்து மொழிந்த சொற்கள் ஊனைத் தொட்டன. உயிரைத் தொட்டன; உணர்வைத் தொட்டன. உவப்பிலா ஆனந்தத்தை தந்தன். அந்தச் சொற்கள்தான் என்ன?

"நீ நல்லபிள்ளை... என்றும் நன்றாக இருப்பாய்" என்பனவே அந்தச் சொற்கள்! அருள் நிறைந்த வாழ்த்துக்களுடன் இனிய பண்டங்களும் செல்வமும் கிடைத்தன. அன்று இரவெல்லாம் மகிழ்ச்சிவெள்ளம்! இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டவர்களில் முதல் நிலையிலுள்ளவர்கள், இன்று தருமபுர ஆதீனத்தில் மகா சந்நிதானமாக எழுந்தருளியிருப்பவர்களாகிய திருவருள் திரு. சண்முகதேசிக ஞானசம்பந்தப் பரமாசாரிய சுவாமிகள் அவர்கள். மறுநாள் காலை விடியலில், பழகிய நண்பர்கள் எல்லோரும் வந்து பார்த்தனர். மகிழ்ந்தனர். அறை மாற்றப் பட்டது. தடைகள் நீங்கின. ஆயினும், இடையில் மகாசந்நிதானம் அவர்களுக்குரிய பணிவிடை, குட்டித் தப்பிரான்கள் செய்யவேண்டியதில்லை. ஊழியர்களே செய்யலாம் என்ற நடைமுறை வந்து விட்டது.

ஒரு நாள் வைத்தீசுவரன் கோயிலில் வைகாசி மாதத்தில் வரும் மண்டலாபிஷேகக் கிருத்திகை. மகாசந்திதானம் அவர்கள் விஜயம் செய்திருக்கிறார்கள். சித்தாமிர்த தீர்த்தத்தில் ஆசமனம் செய்துவிட்டுக் கரையேறினார்கள். பணிவிடை ஊழியன் நடராசனிடம் மகாசந்நிதானம் அவர்களின் திருவடியைத் துடைக்கப் பரிவட்டம் (துண்டு) வாங்க முயற்சி செய்தோம். அவன் துண்டைக் கொடுக்க மறுத்துவிட்டு, அவனே துடைத்தான். சுற்றிலும் ஏராளமான - பக்தர்கள். மக்கள்!

குருமணிக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அடக்கமுடியாத ஆதங்கம். வழிபாடெல்லாம் முடித்துக்கொண்டு கட்டளை மடத்துக்கு வந்தவுடன் பணிவிடை நடராசனை அழைத்து வரச் செய்து ஆத்திரம் தீரத்திட்டினோம்.

"குட்டித் தம்பிரான்கள் பணிவிடை செய்யக் கடமைப் பட்டவர்கள். குட்டித் தம்பிரான்களை அவர்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது எப்படி நியாயம்? குரு-சிஷ்ய உறவில் ஊதியம் வாங்கும் ஊழியர்கள் குறுக்கீடு செய்வது என்ன நியாயம்?” என்று சத்தம் போட்டோம்! "இனி நமது தொண்டு வாழ்க்கையில் குறுக்கே நின்றால் அப்புறம் நடப்பது பற்றிக் கவனமாக இருந்து கொள்!” என்று எச்சரித்து அனுப்பி வைத்தோம்.

பணிவிடை நடராசன் நடந்தவற்றை அப்படியே சென்று சொல்லியிருக்கிறான். நமது கருத்துப்படியே, மகாசந்நிதானம் அவர்களிடமிருந்து கந்தசாமிக் குட்டித் தம்பிரான் (இதுதான் தருமபுரத்தில் இருந்தபோது பெயர்) எண்ணம் போல் நடந்து ஒத்துழைக்கும்படி நடராசனுக்கு உத்தரவு கிடைத்தது. அது முதல் குன்றக்குடிக்குப் பயணம் புறப்படும் நேரம் வரையில் மகாசந்நிதானம் அவர்களுக்குப் பணிவிடை செய்ததில் ஓய்வு எடுத்ததில்லை. தவறியதில்லை.

இந்த உணர்வு எப்படி வந்தது? குமரகுருபரர் இயற்றிய பண்டார மும்மணிக் கோவை பாராயணம் தந்தருளிய பரிசு, பாராயணம் மட்டுமன்று. பண்டார மும்மணிக் கோவையின் ஞானாசிரியராகிய மாசிலாமணி தேசிகருடைய குரு மூர்த்தத்தில் நாமும் இன்றைய தருமபுரம் திருவருள் திரு. மகாசந்நிதானம் அவர்களும் வியாழக்கிழமைதோறும் பண்டார மும்மணிக் கோவை ஓதி, வழிபாடு செய்யும் பழக்கம் இருந்தது. அதன் காரணமாக குருபக்தி வளர்ந்தது.. இந்தக் குருபக்தியின் காரணமாக அடக்கம் அணி கலனாயிற்று. கல்வியும் ஞானமும் கிடைத்தன. தொண்டு நெறியில் ஆர்வம் எழுந்தது.

ஒரு நாள், இரவு ஏழு மணி! அறை வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து திருக்கடவூர் கைலாசம் பிள்ளை-திருக்கடவூர் பிச்சைக்கட்டளை விசாரணைதாரர் வேறு ஒருவருடன் வந்தார். திருக்கடவூரில் நாம் கட்டளைத் தம்பிரானாக இருந்தபோது பிள்ளை அவர்களுடன் நல்ல பழக்கம். அறைக்குள் வந்தவர்களுக்குப் பாய் எடுத்துப் போட்டு உட்காரும்படி கேட்டுக் கொண்டோம். உட்கார்ந்த பிள்ளையவர்கள் வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு. எதிர்பாராத விதமாக "பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு புறப்படுங்கள்... போகலாம்!” என்றார்.

நமக்கு ஒன்றும் புரியவில்லை. “எங்கே ?” என்று கேட்டோம்.

“புறப்படுங்கள்... அப்புறம் சொல்கிறேன்!” என்றார்.

"எங்கே போவது? மகாசந்நிதானம் அவர்களிடம் உத்தரவு பெறாமல் வெளியே எங்கும் செல்லக்கூடாதே?” என்று சொன்னோம்,

"இப்போது புறப்படுங்கள்! சொல்லிக்கொண்டு போகிற மாதிரி சூழ்நிலை இல்லை போய் காரியம் முடிந்த பிறகு வந்து சொல்லிக்கொள்ளலாம்” என்றார்.

நமக்கு ஒன்றும் புரியவில்லை. விவரங்கள் தெரிந்து கொள்ளாமல் புறப்பட இயலாமையைக் கண்டிப்புடன் கூறினோம்! அப்போது அவர், “குன்றக்குடி ஆதீனத்தில் தங்களுக்குப் பட்டம் கட்ட விரும்பி அழைக்கிறார்கள்! இங்கே தெரிந்தால் அனுப்பமாட்டார்கள்! ஒருவர் நல்லது அடைய இந்தக் காலத்தில் யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள்! ஆதலால் புறப்படுங்கள்.... போய்ப் பட்டத்தைக் கட்டிக்கொண்டு திரும்ப வந்து பார்க்கலாம்!” என்றார்.

நமக்கோ எரிச்சல், தாங்க முடியவில்லை, சோரம் போகும் பழக்கம். நமக்கு இல்லை.

கு.XVI.8. 'கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடி கெடினும் நள்ளேன் நினதடி யாரொடல்லால்,'

என்ற திருவாசகப் பாடல் நினைவுக்கு வந்தது.... சிந்தனைக்கு வாயிலாக இருந்தது.

"தயவு செய்து போய் வாருங்கள்! நமக்குப் பட்டமும் வேண்டாம்... ஒன்றும் வேண்டாம்!” என்று கடிந்து கூறி அனுப்பி வைத்தோம்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் நமது ஆன்மாவைப் பக்குவப்படுத்த உதவி செய்தன.

ஆதலால், 'உறுதியான அன்பு, பக்தி மனிதனை வளர்க்கும்' என்பது உண்மை!


9

ருமபுர ஆதீனத்தின் கந்தசாமித் தம்பிரானின் கல்வி பயிலும் வாழ்க்கை வளர்ந்தது. கல்லூரியில் முறையாகத் தமிழ் படிப்பு! அப்போது பெரும்பள்ளம் என்ற ஊரில் நாகலிங்கம் என்பவர் இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர். திருக்கடவூரில் கட்டளை தம்பிரானாக இருந்தபோது பழக்கமானவர். அவரிடம் ஆங்கிலப் படிப்பு, உலகம் தெரிந்து கொள்வதற்கு! செய்தித்தாள் வழக்கம்போல் படித்தலும் நிகழ்ந்தது.

1946-லிருந்து அறிஞர் அண்ணாவின் "திராவிட நாடு', பின் 'காஞ்சி' இதழ்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அறிஞர் அண்ணாவிடம் மதிப்பு உணர்வு வளர்ந்து வந்தது! அதற்குக் காரணம் தமிழேயாகும்! உடன்படா நிலைபாடுகளும் இருந்தன ஆயினும் அறிஞர் அண்ணாவுடன் கொண்ட தொடர்புகள் அனைத்தும் அவரிடம் மதிப்பு உணர்வை நாளும் வளர்த்தது. அவர் ஒரு சிறந்த மனிதர்... தவைவர்! அறிஞர் அண்ணாவின் நினைவு வரும்போதெல்லாம் கண்கள் குளமாகின்றன. ஏன்? அவர் இருந்த இடம் வெற்றிடமாக இருக்கிறது! யாராலும் நிரப்ப முடியவில்லை... முடியாது! அக்காலத்தில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் “பெரியபுராண ஆராய்ச்சி” என்ற ஆய்வுநூல் எழுதி வெளியிட்டிருந்தார். அறிஞர் அண்ணா இந்த நூலை எதிர்மறையாக விமரிசித்துத் ‘திராவிட நாடு' இதழில்’ அன்பரது ஆராய்ச்சியும் அறைகூவல்களும்' என்று எழுதியிருந்தார். கந்தசாமித் தம்பிரான் பெரிய புராணம் படிக்கத் தொடங்கி இருந்த காலம்...உடனே 'அறிஞரின் ஆராய்ச்சியும் விளக்கமும்' என்ற தலைப்பில் மறுப்பு எழுதினார் கந்தசாமித் தம்பிரான்.

அக்காலத்தில் ஜகந்நாதாச்சாரியார் என்ற பெரியவர் ‘தார்மீக இந்து’ என்ற பெயரில் ஒரு இதழ் நடத்தி வந்தார். இந்த இதழ் செத்துச் செத்துப் பிழைத்துவரும் நாத்திக இயக்கங்களுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் கடுமையான முறையில் மறுப்பு எழுதுவார் ஜகந்நாதாச்சாரியார். அப்போது விவாதத்தில் இருந்த இந்து அறநிலையச் சட்டத்தை எதிர்த்தார் அந்தப் பெரியவர். அவ்வப்போது திருமடங்களுக்கு வந்து 'தார்மீக இந்து' வளர்ச்சிக்கு நன்கொடை பெற்றுச் செல்வார். தருமபுர ஆதீனத்துக்கு வரும் அறிஞர்களிடமெல்லாம் கந்தசாமித் தம்பிரான் நன்றாகப் பழகி உறவு கொண்டு விடுவார். ஆம்! அறிஞர்கள் உறவு, பல ஆண்டுகள் படித்த பயனைத் தருமல்லவா? 'தார்மீக இந்து' ஜகந்நாதாச்சாரியாருடன் பழகி உறவு கொண்டாடி ‘தார்மீக இந்து’வில் சில பக்கங்கள் எழுதும் உரிமை பெற்றுவிட்டார் கந்தசாமித் தம்பிரான்!

அறிஞர் அண்ணாவின் பெரிய புராண ஆராய்ச்சி மறுப்புக்கு மறுப்பு இந்த இதழில் பிரசுரமாயிற்று. 'தார்மீக இந்து'வில் தொடர்ந்து எழுதி வந்தார் கந்தசாமித் தம்பிரான்! அறிஞர் அண்ணாவின் அடிப்படைக் கொள்கையாகிய சாதிவேற்றுமை ஒழிப்புக்கொள்கையில் கந்தசாமித் தம்பிரானுக்கும் உடன்பாடே! அதனால் அறிஞர் அண்ணாவின் கொள்கையை மறுக்கவில்லை ஆனால், சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் சாதிகளைக் காப்பாற்றும் நூல் என்ற கருத்தில் கந்தசாமித் தம்பிரானுக்கு உடன்பாடில்லை. "காலந்தோறும் கருத்து வளர்கிறது. இலக்கியங்கள் - புராணங்கள் உட்பட அந்தக்கால சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடியேயாம். சில படைப்புக்கள் எதிர்காலத்தையும் காட்டலாம்! 12-ம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியத்தில் 20-ம் நூற்றாண்டில் வாழும் மனிதனுடைய சிந்தனையைக் காண இயலுமா? சில நல்ல படைப்புக்கள் என்றும் பயன்படும். 'கரு' இருக்கலாம், சேக்கிழார் காலத்தில் சாதிகள் இருந்தன. அப்பரடிகள் காலத்தில் இருந்தன. ஏன்? சங்க காலத்திலேயே இருந்தன. 'கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே' என்று புறநானூறு பேசுகிறது. சேக்கிழார் இந்தச் சாதி வேற்றுமையிலிருந்து சாதிகள் இல்லாத சமுதாயத்தை நோக்கி நகர்த்துகிறார் என்பதைப் பெரிய புராணத்தால் உய்த்துணர முடிகிறது. திருநாளைப்போவார் ஆதிதிராவிடர், திருக்கோயில் வழிபாட்டுரிமை பெறாத சாதியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் திருக்கோயில் வழிபாட்டுரிமை கேட்டுப் போராடுகிறார். இது வரவேற்கத் தக்க வரலாற்று நிகழ்ச்சி.... மனித உரிமைப் போராட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து வளர்க்க வேண்டிய கருத்து. இந்தக் கடமையைச் சேக்கிழார் செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கலப்புத் திருமணங்கள் நடத்தி வைக்கிறார் சிவபெருமான், வேடர் கண்ணப்பருக்கும் வைதீக சிவகோசியாருக்கும் பூஜையில் ஏற்பட்ட மோதலை விவரித்து, கண்ணப்பர் பூஜையே உயர்ந்தது என்று தீர்ப்பு எழுதுகிறார். சேக்கிழார் காலத்தில் இவ்வளவுதான் செய்ய இயலும்! அன்றைய நிலையில் அதுவே ஒரு பெரிய சமுதாய மாற்றம்! அவர் வாழ்ந்த காலம், தலைவர் பெரியார் வாழ்ந்த காலமன்று-இதுதான் மறுப்புரையின் சாரம்!

விவாதங்கள், மறுப்புரைகள் ஒருபுறம், மதிப்பு உணர்வு கொள்ளல், பாராட்டல் ஒருபுறம். இன்றைய பொதுவாழ்வில், இலக்கிய உலகில் இந்தப் போக்கு இல்லாதது ஒரு பெரிய குறையே..... அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரையில் கந்தசாமித் தம்பிரான் நிலை இது. அறிஞர் அண்ணாவின் நிலையும் அதுவே.

இதுபோலவே, தருமபுர ஆதீனத்தில் இருக்கும் காலத்திலேயே பட்டிமன்றம் தொடங்கப்பெற்றுவிட்டது. ஆவணி மூலத்திருநாள்! 'தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாற்றில் குற்றம் செய்தவர் சிவபெருமானா? - நாக்கீரரா? என்பது தலைப்பு. நடுவர் ஆசிரியர் புலவர் மு. ஆறுமுக தேசிகர், நக்கீரர் கட்சியில் கந்தசாமித் தம்பிரான் வாதிட்டார். “நக்கீரர் குற்றவாளியல்ல, சிவபெருமானே குற்றவாளி!” என்பது கந்தசாமித் தம்பிரான் வழக்கு! "முதலில் 'பினாமி'க் கவிதை எழுதுவதே பெரிய தவறு. நக்கீரருடன் புலவனாக வந்து வழக்காடிக் கொண்டிருந்த சிவபெருமான், விவாதம் நல்ல உச்ச நிலையில் இருக்கும் போது சிவபெருமானாக மாறி நெற்றிக்கண் காட்டியதும் முறையல்ல.. புலமை, புலமையோடு மோதவேண்டுமே தவிர, நெற்றிக்கண்ணுக்குத் தமிழ்ச் சங்கத்தில் என்ன வேலை? வன்முறையில் தமது கருத்தை ஏற்கச்செய்தல் நல்ல மரபாகாது!” என்பது கந்தசாமித் தம்பிரானின் விவாதம். அறிவார்ந்த விவாதங்களுக்கு எப்போதும் வசையும் வன்முறையும் தலைகாட்டும்.

"ஆயினும் இந்தத் தவற்றை சிவபெருமான் செய்திருக்க மாட்டார்.... பத்திமையின் காரணமாக சிவபெருமானுக்குப் பெருமை சேர்க்கிறோம் என்று கருதிக்கொண்டு புராணம் இயற்றிய ஆசிரியர் செய்த தவறு இது” என்று மரபு பிறழாமல் கந்தசாமித் தம்பிரான் பேசினார்.

எப்படிப் பேசினால் என்ன? வழக்காடிய இந்த முறை, தருமபுரம் சூழலில் பலருக்குப் பிடிக்கவில்லை. கடுமையான தாக்குதல்கள்! முடிவு, தருமபுர ஆதீன விசேடங்களில் இனி பட்டிமன்றம் வைக்கக்கூடாது என்பதுதான்! ஆனாலும் பட்டிமன்றங்கள் தருமபுரம் சூழலில் நின்றுவிட்டனவா?

கந்தசாமித் தம்பிரான், புலவர் இடை நிலைத் தேர்வு எழுத திருச்சிக்கு வந்து திருச்சி மௌனமடத்தில் தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் அறிஞர் அண்ணா திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் பேசுவதாக விளம்பரம். கந்தசாமித் தம்பிரானுக்கு அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வம். காவி உடை! தருமபுர ஆதீனத்துத் தம்பிரான்! கூட்டம் நடப்பதோ டவுன்ஹால் மைதானத்தில்! அறச் சங்கடங்கள் நிறைந்த சூழ்நிலை! முரண்பட்ட இருவேறு நிலைகளுக்குள் கிடந்துழலும் ஆர்வம்! அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்கும் ஆர்வம், முறைகளைப் பின்தள்ளிவிட்டு வெற்றி பெற்றது. வெளுத்துப்போன காவி ஆடையை உடுத்துக் கொண்டார்... இராங்கியத்தில் தமிழாசிரியர் பணி செய்து இப்போது ஓய்வு பெற்றுள்ள வை.சு. தண்டபாணி துணை! டவுன்ஹால் மைதானத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.

டவுன்ஹால் மைதானத்தில் ஒரு கோடியில்-மக்கள் கூட்டம் குறைவான பகுதியில் நின்று அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டார். அண்ணாவின் உருவம் அவ்வளவாகத் தெரியவில்லை, கையை உயரத் தூக்கி அறைகூவல்களைக் கூறும்போது கை தெரிந்தது. பேச்சு நன்றாகக் கேட்டது. அன்று அண்ணா, திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலம். ஆதலால் திராவிட நாட்டைத் தமிழர் பெறுவர் ..--ஆள்வர் என்பது பேச்சு, சான்றுக்குச் சேரன் செங்குட்டுவனின் வடபுலத்து வெற்றியை எடுத்துக் காட்டினார். நல்ல தமிழில், எதுகை மோனை பொருந்தியதாக, கேட்பவர் ஆவேசம் கொள்ளத்தக்க நிலையில் பேச்சு அமைந்திருந்தது. அன்றைய அவருடைய பேச்சில் கந்தசாமித் தம்பிரானைக் கவர்ந்த பகுதி:

"வடபுலத்து மன்னர் தோளும் தலையும் நெரியக் கல் கொணர்ந்த சேரன் செங்குட்டுவன் என் பாட்டன் ஆதலால், இன்று தமிழகத்தை மீட்டது எளிமையானதே!" என்பது. இது கந்தசாமித் தம்பிரானுக்குப் பிடிக்காத கொள்கை ஆம்! இந்தியா ஒரு நாடு-இதில் கந்தசாமித் தம்பிரானுக்கு மாற்றுக் கருத்தில்லை! ஆயினும் அறிஞர் அண்ணா சொன்ன முறை பிடித்துவிட்டது. இதில் என்ன ஒரு வியப்பு என்றால், அந்தப் பயணத்திலேயே ஒரு இந்துப் புராணச் சொற்பொழிவையும் கேட்க கந்தசாமித் தம்பிரான் சென்றிருந்தார். 30 நிமிடங் களுக்குமேல் அந்தப் பேச்சை அவர் உட்கார்ந்து கேட்க இயலவில்லை! ஏன்? தனி மனித விளம்பர வாடை! புராணங்கள் தத்துவச் செறிவுடையன அவற்றை நடைமுறைகளுடன் இணைத்துக் கொச்சைப்படுத்திப் பேசியது கந்தசாமித் தம்பிரானுக்குப் பிடிக்கவில்லை. சொற்பொழிவில் அருமை இருக்க வேண்டும். வாழ்க்கைப் போக்கு இருக்க வேண்டும். சிரிக்கப் பேசுவதாக இருந்தாலும் கலைவாணரைப் போலச் சிரிக்க, சிந்திக்க வைக்க வேண்டும்.

இங்ங்னம் உணர்வுபூர்வமாக வளர்ந்த அறிஞர் அண்ணாவின் நட்பு, திருக்குறள் கூறியது போல நிறைநீர நீரவர் கேண்மையாக உணர்வு நிலையில் வளர்ந்து வந்தது.

கந்தசாமித் தம்பிரான் பூரீலயூரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் குன்றக்குடி மடாதிபதியாக இருக்கிறார். குன்றக்குடி ஆதீனகர்த்தர், அருள்நெறித் திருக்கூட்டம் கண்டு சமயப் பிரச்சாரம் செய்து வருகிறார். அன்று அவருடன் அருள் நெறித் திருக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் காரைக்குடி கம்பன் அடிப் பொடி சா. கணேசன், ஈரோடு இருமொழிச் சொற்கொண்டல் எஸ். மீனாட்சி சுந்தர முதலியார், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிசெய்த பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அப்போது மதுரையிலிருந்து 'தமிழ் நாடு' என்ற பெயரில் நாள் இதழ் ஒன்றினை கருமுத்து தியாகராசன் செட்டியார் நடத்தி வந்தார். இதன் ஆசிரியராக எம்.எஸ்.பி. சண்முகம் இருந்து வந்தார். தமிழ்நாடு நாளிதழ்தான் குன்றக்குடி ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சரிய சுவாமிகளை "குன்றக்குடி அடிகளார்” என்று தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. பின் குன்றக்குடி அடிகளார் என்ற பெயரே நிலைபெற்று விட்டது. அறிஞர் அண்ணா, 1967-ம் ஆண்டு காரைக்குடி திருக்குறள் கழக விழாவுக்கு வருகிறார்... அப்போது குன்றக்குடிக்கும் வரும்படி அறிஞர் அண்ணாவுக்கு எழுதினார் அடிகளார். அறிஞர் அண்ணாவும் காரைக்குடி திருக்குறள் விழாப் பேச்சை முடித்துக்கொண்டு குன்றக்குடிக்கு வந்தார். திருமடத்தின் மரபுப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டது! இரவு உணவு திருமடத்தில்! அன்று அறிஞர் அண்ணாவுடன் கூட வந்தவர்கள் கவியரசு கண்ணதாசன், பூவாளூர் பொன்னம்பலனார். உணவுக்குப் பின் தோட்டத்தில் நிலவொளியில் கலந்துரையாடல்! வழக்கம்போல் அறிஞர் அண்ணாவுக்கும் குன்றக்குடி அடிகளாருக்கும் இடையில் நட்புறவு கலந்த உரையாடல், பேச்சு மெள்ள அரசியல் பக்கம் திரும்பியது. குன்றக்குடி அடிகளார் காங்கிரஸ் கட்சிப் பற்றாளர்.... காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார். அறிஞர் அண்ணா காங்கிரஸுக்கு எதிர்ப்பாகக் கூட்டணி அமைத்துக் கொண்டு ராஜாஜி தலைமையில் போராடுகிறார்! காமராஜரை எதிர்ப்பதற்கும் ராஜாஜியை ஆதரிப்பதற்கும் நோக்கம் என்ன? இது அடிகளாரின் கேள்வி?
10

அறிஞர் அண்ணா அன்று தந்த பதில் "காலம் விடை சொல்லும்... காத்திருக்கலாமே!" என்பது. 1967 பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு அறிஞர் அண்ணா தலைவர் பெரியாரைக் கண்டதும் “இது பெரியார் அரசு" என்றதும், "இராஜாஜி தேனிலவு முடிந்து விட்டது" என்று கூறியதும் காலம் தந்த விடைகளாகும்.

அறிஞர் அண்ணாவிடம் சோர்விலாத இனப்பற்று இருந்தது. தலைவர், காமராஜரைப் 'பொற்காப்பு' என்று பாராட்டினார். கட்சி எல்லையைக் கடந்த இதயம் அறிஞர் அண்ணாவுக்கு இருந்தது. அதேபோழ்து இனப்பகை அற்றவர் என்பதை மூதறிஞர் இராஜாஜி, வழக்கறிஞர் வி.பி. இராமன் போன்றவர்களிடம் அவர் வைத்திருந்த மதிப்பினால் உணரலாம்.

சித்திரைத் திங்கள்! பூம்புகாரில் சிலம்பின் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. சோழப் பேரரசின் தலைநகரம் பூம்புகார், சோழ நாட்டில் பிறந்து அரசியலில் வளர்ந்த கலைஞர், சோழர்களின் புகழ் பாடுவதில் முன்னணியில் நிற்பவர். கலைஞர் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர்! கால்கோள் விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நமக்கும் மிகவும் விருப்பமான காப்பியம் சிலப்பதிகாரம். பூம்புகாரில் அப்போது நடைபெறவிருந்த கண்ணகி விழாவுக்கு நாம் இசைவு தந்திருந்தோம். கண்ணகி விழாவும் தமிழ்நாடு அரசு எடுக்க இருந்த கண்ணகி கோட்டம் கால்கோள் விழாவும் இந்திர விழாவும் அதேநாளில்! கண்ணகி விழாவில் நாம் கலந்து கொள்ளவிருக்கும் செய்தி, முதலமைச்சர் அறிஞர் அண்ணாவுக்கு எட்டியது. உடனே நமது அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு! ஆனால், அங்கு பதில் இல்லை. உடனே தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் ஆணை; "அடிகளாரைக் கண்டுபிடித்துக் கண்ணகி கோட்டம் கால்கோள் விழாவில் கலந்துகொள்ளும்படி முதலமைச்சர் சார்பாகக் கேட்டுக் கொள்ளுங்கள்!" என்பது, மாவட்ட ஆட்சித் தலைவரும் இசைவு பெற்றார். கட்சியைச் சேர்ந்தவர்கள், வேண்டியவர்கள் என்ற எல்லைகள் நீங்கினால்தான் நடுநிலையாளர்கள் மதிக்கப்படுவார்கள்... நாட்டுக்குத் தேவையான ஒருமைப்பாடு வளரும்.

கண்ணகி கோட்டக் கால்கோள் விழா மேடை! முதலமைச்சர் அறிஞர் அண்ணா, பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருடன் நாமும் மேடையில் இருந்தோம். அறிஞர் அண்ணா பேசும்போது, "அடிகளார் அவர்களே! தாங்கள் இந்த விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. முந்தைய அரசு உங்கள் மீது வழக்குப் போட்டது... சிறைக்குள் தள்ளத் துடித்தது. இந்த அரசு உங்கள் அரசு! உங்களுக்குத் தொல்லை தராது! வரவேற்கும் தங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கும்!” என்று பேசினார். 1967 பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து நாம் வேலை செய்ததை நினைவில் கொண்டிருந்தால் அவருக்கு இந்தப் பண்பு முகிழ்ந்திருக்காது. அதனால்தான் திருக்குறள் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்றது. அறிஞர் அண்ணாவின் “மறப்போம்... மன்னிப்போம்” என்னும் புகழ் பெற்ற மொழி இங்கே நினைவுகூரத்தக்கது. எவ்வளவு பெரிய உள்ளம்! பெருந்தன்மை!

பல சமயங்களில் 'அரசு விழாக்களுக்குக் கட்சிக்காரர்களை மட்டுமே அழைக்க வேண்டும்... வேண்டியவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்' என்ற கொள்கை நிலவியதுண்டு! நிலவுகிறது. ஏன்? காங்கிரஸ் அமைச்சரவை இருந்த போது ஒரு நிகழ்ச்சி! அந்த நிகழ்ச்சிக்கு நம்மை அழைக்கக் கூடாது என்று ஒரு அணி, அழைக்க வேண்டும் என்று ஒரு அணி, இந்த அணியில் கிராம மக்களும் இருந்து போராடினர்.

சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலை கிராமத்தில் பிரதம சுகாதார நிலையம் அமைய நாம் முயற்சி செய்தும் நிலம் வாங்கிக்கொடுத்தும் உதவி செய்தோம். ஏன்? தொடக்கத்தில் பிரான்மலையில் உள்ள குன்றக்குடி ஆதீன மடத்திலேயே சுகாதார நிலையம் இயங்கி வந்தது. குன்றக்குடி ஆதீனத் திருக்கோயில்களில் பிரான்மலையும் ஒன்று, ஒன்றல்ல.... தலையாயது! ஆதலால், பிரான்மலை கிராமத்துக்கும் ஆதீனத்துக்கும் உள்ள வழிவழி உறவு எளிதில் அலட்சியப்படுத்த முடியாதது. பிரதம சுகாதார நிலையம் கட்டப்பட்டுத் திறப்பு விழா! அமைச்சர் ஒருவர் திறப்பு விழாவுக்கு வந்தார். விழாவுக்கு ஒப்புக் கொண்ட நாம் இல்லாமல் விழா நடத்த உட்குழு முயன்றது. குழுவின் வயப்பட்ட அமைச்சர், நம்மை அழைக்காமல் விழா நடத்த எண்ணினார். அதிகாரிகளுக்கும் உத்தரவு அப்படியே! பிரான்மலை ஊரார், திருப்பத்தூர் பயணமாளிகையில் தங்கியிருந்த அமைச்சரை அணுகி நிலைமையை விளக்கி, நம்மை அழைக்கும்படி வற்புறுத்தினர். அமைச்சர் செவி கொடுக்கவில்லை. விழா நாளும் வந்தது! பிரான்மலை கிராமத்தார் விழாவில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்து விழாவைப் பகிஷ்காரம் செய்துவிட்டனர். நாலாயிரம் மக்கள் வாழும் அந்தக் கிராமத்தார், குழந்தைகள் உட்படக் கட்டுப்பாடாக விழாவைப் புறக்கணித்தனர், . இப்படியும் ஒரு வரலாறு உண்டு, இந்த நிகழ்ச்சிகளின் நினைவுதான், அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மையைப் பறைசாற்றியது.

நமது மக்களாட்சி முறையில் கட்சிகள் ஆட்சி அமைக்கின்றன. ஆனால், கட்சிக்கே அரசு சொந்தமல்ல, கட்சிக்கும் கட்சிக்காரர்களுக்கும் மட்டுமே அமைச்சரவை அல்ல. நாட்டை ஆளும் அரசில் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுள்ளது. அமைச்சர்கள் மக்கள் அனைவருக்கும் அமைச்சர்களேயாம். இந்த உணர்வு செழித்தால்தான் ஜனநாயகம் வளரும். மூதறிஞர் இராஜாஜி, “கட்சி உணர்வுகளை வெளியே வைத்து விட்டுத்தான் கோட்டைக்குள் வரவேண்டும்” என்றார். கட்சி முறை ஆட்சி, அரசை உரிமை கொண்டாடுவதற்கல்ல. தமது கட்சியின் கொள்கைகளை, சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் திறமையைக்காட்ட ஒரு வாய்ப்பு! அவ்வளவுதான்!

கேளாமலே நமக்கு, அறிஞர் அண்ணா செய்த உதவி ஒன்று உண்டு. 1965-ல் நாடு தழுவிய நிலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம்! நாம் மும்மொழித் திட்டத்தை வரவேற்றோம். வரவேற்றாலும் இந்தி ஆதிக்க மொழியாவதை நாம் விரும்பியதில்லை. அமரர் நேருவும் இந்தியை இணைப்பு மொழி என்றே கூறினார். நடுவண் அரசு 1965 குடியரசு நாளன்று இந்தியை நடுவண் அரசின் அலுவல் மொழியாக ஏற்று நடைமுறைப்படுத்துவது; ஆங்கிலத்தை அகற்றுவது என்று முடிவெடுத்தது. இந்த முடிவு அவசரப்பட்ட முடிவு. முதலில் இந்தி-இந்திய மக்கள் அனைவராலும் படிக்கும் மொழியாக - இடம் பெறவேண்டும். அனைத்து மாநிலங் களிலும் மக்களால் இந்தி அங்கீகரிக்கப் பெற்றுப் படிக்கும் முயற்சி நடந்து இந்தி மொழியைப் படிக்கவும் எழுதவும் பெருவாரியான மக்கள் வந்தபிறகே-அலுவல் மொழியாக ஆக்கவேண்டும். உண்மையில் - நடைமுறையில் இந்தி இந்திய மக்களின் இணைப்பு மொழியாக வளர்ந்து இடம் பெற்ற பிறகு அலுவல் மொழியாதல் முறை எளிதும்கூட! தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உணர்வு ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் நடுவண் அரசு எடுத்த முடிவு, இந்தி பேசாத மாநில மக்களிடையே எதிர்ப்பு உணர்வைத் தூண்டியது... மொழிப்போராட்டம் வெடித்தது.


11

மொழிப்போராட்டம் 1965-ல் உச்ச நிலையில் இருந்த போது குன்றக்குடியில் அமைதிகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பெற்றது. அரசையும் மக்களையும் குறிப்பாக மாணவர்களையும் கருத்திற்கொண்டு மொழிச்சிக்கலுக்குத் தீர்வுகாணும் கருத்தரங்குகள் நிகழ்ந்தன. நெல்லை பேராசிரியர் நா. வானமாமலையை அழைத்து, இந்தி மொழிச் சிக்கல், மும்மொழித் திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியன பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப் பெற்றது. மாணவர்கள் ஓரளவு தெளிவுபெற்றனர். அமைதியான சூழ்நிலை-ஆயினும் நிலையான அமைதியல்ல. இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சர்கள் சி. சுப்பிர மணியம், ஓ.வி. அளகேசன் இருவரும் இந்தித் திணிப்பை எதிர்த்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள் என்ற செய்தியை வானொலி அறிவித்தது; இந்த ராஜினாமாச் செய்தி மாணவர்களிடையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மறுநாள் காலையில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர். மீண்டும் மாணவர்களைக் கூட்டிப் பேச முயற்சி செய்யப் பெற்றது. மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவுக்குப் பின் நம்மாலும் ஒன்றும் சொல்ல இயலவில்லை, பல மொழிகளும் கற்பது நல்லது. அதே நேரத்தில் மொழியைக் கற்கும் வாயில்களைக் காணாமல் இந்தி அலுவல் மொழியாக அரங்கேறுதல் தவறான அணுகுமுறை.

குன்றக்குடியில் வன்முறைச் செயல்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற கவலை, செயலாக உருப்பெற்றது. இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்த அனுமதித்துக் கூட்டம் கூடிக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவும் அனுமதி வழங்கப் பெற்று, கறுப்புத் துணியும் தரப்பெற்றது. ஊர்வலம் அமைதியாக நடந்தேற வேண்டும். வருந்தத்தக்க செயல்கள் யாதொன்றும் நடந்துவிடக்கூடாது என்ற கவலை பிடரியைப் பிடித்துத் தள்ள நாம் ஊர்வலத்தின் முன்வரிசையில் சென்றோம். ஊர்வலம் கட்டுப்பாட்டு..ன். அமைதியாகச் சென்றது, "தமிழ் வாழ்க!” என்பது மட்டுமே முழக்கொலி! ‘வீழ்க... ஒழிக' என்ற கோஷங்கள் இல்லை. ஊர்வலம் குன்றக்குடித் திருக்கோயில் முகப்பில் உள்ள தகரக்கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. நம் தலைமையில் கூட்டம்! "இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய தேசிய மொழிகள் அனைத்தையும் ஆக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறை வேற்றப் பெற்றது. நாம் “எல்லோரும் அமைதியாக வீடுகளுக்குச் சென்று படிக்க வேண்டும்” என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டோம். அதுபோலவே நடந்தது.

இந்தச் செய்தி, எல்லா அரசு அலுவலர்களுக்கும் தெரிந்தது! அவர்கள் அன்றிருந்த சூழ்நிலையில் குன்றக்குடியில் நடந்த இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்குமாறு இல்லையென்று கைவிட்டு விட்டனர். மேலும் மகிழ்ந்தனர்! ஆயினும் காங்கிரஸுக்குள் இருந்த நம் மீதான எதிர்ப்பு அணி, இந்த நிகழ்ச்சியை அரசியலாக்கப் பார்த்தது. இந்த அணி முதல்வர் எம். பக்தவத்சலத்துக்கு எடுத்துக்கூறியது. முதல்வரும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தம் மீது வழக்குத் தொடருமாறு ஆணை பிறப்பித்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் எம்.எம். இராஜேந்திரன், இ.ஆ.பெ... இப்போது இவர் புதுடெல்லியில் நாடாளுமன்றத் துறைச் செயலாளராகப் பணி செய்து வருகிறார். கோட்டாட்சித் தலைவராக இருந்தவர், செந்தில்நாயகம் பிள்ளை, காவல் துறை அதிகாரி அலிசுல்தான். இவர் இயலாது என்று கூறிய துடன் நடுவணரசின் பணிக்குச் சென்றுவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர், முதல்வரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் பிடிவாதமாக வழக்குத் தொடர்வதிலேயே நின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எம். இராஜேந்திரன் வழக்குத் தொடர இயலாது என்று மீண்டும் கண்டிப்பாக மறுத்து விட்டார். காவல்துறையும் அப்படியே! அன்று நமது நாட்டு அரசு அலுவலர்கள் இருந்த நிலை! நமது நாட்டு ஆட்சிமுறை மூன்று படிநிலைகளை உடையது. ஒன்று-நாடாளுமன்றம் சட்டமன்றங்கள், அமைச்சரவைகள், இரண்டாவது-அரசு அதிகாரிகளைக் கொண்ட ஆட்சி அலுவலகங்கள், மூன்றாவது-நீதிமன்றங்கள். அதிகாரவர்க்கம் படிப்படியாகச் செயலிழந்து வருவதை யார்தான் அறியாமல் இல்லை.

உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றப்பட்டார். அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். நம்மீது வழக்குத் தொடரும் நிலைக்குரிய அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டனர். வழக்குத் தொடர்வது என்று மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்தது. நம்மைக் கைது செய்யவும் ஆணை பிறப்பித்தாயிற்று மறுநாள் காலை நம்மைக் கைதுசெய்யத் திட்டம்! இரவோடு இரவாகச் செய்தி நமக்குக் கிடைத்து விட்டது! செய்தி கிடைத்த நேரம் இரவு பத்து மணி கைது செய்யும் விவரம் ரகசியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு எட்டு மணிக்கு அதிகாரிகளுக்கு உத்தரவு தரப்பெறுகிறது. அப்படியிருந்தும் இரண்டு மணி நேரத்தில் நமக்குச் செய்தி கிடைத்துவிட்டது! உடனே நாமும், நம்மிடம் நெருங்கிய நட்புரிமைகொண்டு பழகிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினராகிய மேலமாகாணம் எஸ். நாராயணன், விடுதலைப் போராட்ட வீரர் தேவகோட்டை கே.எம். சுப்பையா ஆகியோரும் ஆதீன வழக்கறிஞர் வி.ஆர்.எஸ். மெய்யப்பனும் தேவகோட்டை சருகணிச்சாலை ஓரத்தில் ஆலோசனை செய்தோம். ஆலோசனையின் முடிவு "மறுநாள் காலையில் நாம் திருப்புத்தூர் குற்றயியல் முறை மன்றத் துக்குச் சென்று ஆஜராகி விடுவது. உடனே பிணையில் அழைத்துவர வழக்கறிஞர் வி.ஆர்.எஸ். மெய்யப்பன் ஆஜராகவேண்டியது” என்பது.

அன்றிரவு நாம் வட்டாணம் பயணமாளிகையில் தங்கி மறுநாள் காலை திருப்புத்துார் குற்றயியல் முறை மன்றத்தில் ஆஜராகினோம்! வி.ஆர்.எஸ். மெய்யப்பன் பிணையில் எடுத்தார்! இந்தச் செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது. சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் இந்தி எதிர்ப்புப் போராடத்தைப் பற்றிப் பேசும்போது, "மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ்காரராகிய அடிகளார். இந்தியை எதிர்த்து ஊர்வலம் நடத்தியுள்ளார்” என்று பேசினார். அப்போது முதல்வர் பக்தவச்சலம், "அடிகளார் எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. அடிகளார் காங்கிரஸ் வேறு" என்று பதில் கூறினார்.

வழக்கு நடந்தது! இடையில் ஆர்.வி. சாமிநாதன் முதலமைச்சருக்கும் நமக்கும் சந்திப்பை உண்டாக்கி, சமாதானம் செய்யும் முயற்சி எடுத்தார். இராமநாதபுரம் மாவட்ட அரசியலில் ஆர்.வி. சாமிநாதன் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார். இன்னும் அவருடைய மகள் டாக்டர் இந்திரா இராமநாதன், பேரர் டாக்டர் நற்குணம் ஆகியோர் அரசியலில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஆனால் தீவிரமில்லை. இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் பாகனேரியின் பங்கு குறைந்துவிட்டது. ஆர்.வி. சாமிநாதனிடம் நமக்கு மதிப்பு உணர்வு இருந்தது. ஆர்.வி. சாமிநாதனின் முயற்சியால், முதல்வர் பக்தவத்சலத்துடன் நமது சந்திப்பு நிகழ்ந்தது. நடந்தவற்றை விளக்கினோம். முதல்வர் பக்தவத்சலம் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். பெரியவர் பக்தவத்சலத்துக்கு உண்மைகள் புலனாயின, மிகவும் வருந்தினார். அதேபோழ்து அவருடைய பங்கு மிகமிகக் குறைவு என்று அறிந்துணர முடிந்தது. வழக்குத் தொடுக்கக் காரணமாக இருந்தவர் பிரான் மலையில் பாடம் பெற்ற அமைச்சர்தான் என்று உய்த்துணர முடிந்தது.

ஒருவாறு இந்தி எதிர்ப்பு வழக்கு முடிந்தது. வழக்கை அரசு மிகவும் கண்டிப்புடன் பெரிய வழக்கறிஞரை வைத்து நடத்தியது. வழக்கின் முடிவு ஆள்வோர் எண்ணப்படி நமக்குப் பிரதிகூலம்! 350 ரூபாய் அபராதம் விதிக்கப்பெற்றது. நாம் உடனடியாக அபராதத்தைக் கட்டி விட்டு விடுதலை யானோம். நிர்வாகச் சூழலும் பணிப்பொறுப்புக்களும் இந்த நிலையை உருவாக்கின.

அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வழக்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற ஆணை பிறப்பித்தார். அதுமட்டுமா? அரசு பெற்ற அபராதத் தொகையையும் திரும்பக் கொடுக்கும்படி ஆணை பிறப்பித்தார்! வழக்கு நடவடிக்கையைத் திரும்பப்பெற்ற அரசாணை கிடைத்தது. பணமும் கிடைத்தது. அந்தத் தொகையை அண்ணாவின் நினைவாகத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் நிலையான இட்டு வைப்பாக வைக்க நாம் எண்ணினோம். அப்போது நடக்கவில்லை. இப்போது செய்ய வேண்டும். உணர்ச்சி நட்பாங்கிழமை தரும் என்ற திருக்குறள் நினைவுக்கு வரவில்லையா?

1968-ல் உலகத் தமிழ் மாநாட்டு முயற்சி நடந்தது! மாநாடு தொடர்பாக முதல்வர் அறிஞர் அண்ணாவை நாம் சந்தித்தோம்.


12

றிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 1968 ஜனவரியில் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடை பெற்றது. உலகத்தமிழ் மாநாட்டின் போது தமிழறிஞர்களின் சிலைகளை மெரீனா கடற்கரையில் திறப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த நேரத்தில் நாம் நிறுவியுள்ள திருப்புத்துார் தமிழச் சங்கக் கூட்டம் நடந்தது.

திருப்புத்துார் தமிழ்ச் சங்கம் 63 சைவத் தமிழறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. கழகப் புலவர் பா. இராம நாதபிள்ளை, இளவழகனார், பேராசிரியர் அ. சங்கர நாராயணன், பெரும்புலவர் ஒளவை துரைசாமிப்பிள்ளை, பெரும்புலவர் சு. வெள்ளைவாரணனார், திருக்குறள் அறிஞர்

கு.XVI.9. மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் முதலியோர் சங்க உறுப்பினர்களாக அப்போது இருந்தனர். தலைசிறந்த தமிழறிஞர்களைக் கொண்ட இந்தத் திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம் டிசம்பரில் கூடியது. இந்தக் கூட்டத்தில், 'உலகத் தமிழ் மாநாட்டில் தமிழறிஞர்களின் சிலைகளைத் திறக்கும் போது அப்பர் அடிகள் சிலையையும் திறக்கும்படி தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வது' என்று தீர்மானம் நிறைவேறியது.

முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து இந்தத் தீர்மானத்தைத் தந்து எடுத்துக் கூறி இசைவுபெறும் பணியைத் திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம் நம்மிடம் ஒப்படைத்தது. இதற்காக நாம் சென்னைக்குச் சென்றோம். மயிலையில் உள்ள குன்றக்குடி ஆதீன மடத்தில் தங்கினோம். முதலமைச்சர் அறிஞர் அண்ணா அலுவலகத்துக்குத் தொலைபேசி வழிச் சந்திப்புக்கு வாய்ப்புக் கேட்கப்பட்டது. சரியாக ஒரு மணி நேரத்தில் அழைப்பு வந்தது. அறிஞர் அண்ணா, அவர்தம் இல்லத்தில் பொங்கிவழியும் புன்முறுவலுடன் நம்மை வரவேற்றார். உடன் கலைஞரும் இருந்தார். நலம் விசாரித்தல் முதலியன முறையாக நடந்தன.

திருப்புத்துார் தமிழ்ச் சங்கத் தீர்மானம் பற்றி நாம் எடுத்துக் கூறி அப்பர் அடிகள் சிலையை மெரீனாக் கடற்கரையில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அறிஞர் அண்ணா, உடனடியாக முறுவலித்துக்கொண்டு-

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யல்லோம்;
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன் நற் சங்க வெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சே வடியிணையே குறுகி னோமே”

என்ற அப்பர் அடிகளின் திருப்பாடலைக் கூறினார்.

அப்பர் அடிகள் பற்றிய கலந்துரையாடல் நீண்டது. கலைஞர், “அப்பர் அடிகள் சாதிகளையும் எதிர்த்தவர்” என்று சுருதி கூட்டினார். கலந்துரையாடலின் முடிவில் அறிஞர் அண்ணாவிடம் ஒரு தயக்கம் வெளிப்பட்டது. "அப்பர் அடிகள் காட்டிய நெறி தமிழ் மக்களால் குறிப்பாக, சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப் பெற வில்லையே!” என்ற ஆதங்கம் வெளிப்பட்டது! ஏன், வெளிப் படையாகவே, "சைவ மடங்கள், ஆதீனங்கள் கூட அப்பர். அடிகள் நெறியை ஏற்கவில்லையே!” என்று கூறி வருத்தப்பட்டார்.

“நாமார்க்கும் குடியல்லோம்... என்ற அருமையான எழுச்சி நிறைந்த பாடலைத் தந்த அப்பர் அடிகள் சிலை வைப்பதில் எனக்கு எந்தவிதத் தடையும் இல்லை! ஆனால் சிலை வைப்பதை விரும்புகிறீர்களா? திருவுருவம் வைப்பதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். தமிழ்நாட்டில் அப்பர் அடிகள் திருவுருவம் திருக்கோயில்களில் வழிபடும் திருவுருவமாக இடம்பெற்றுள்ளது. பலர் வழிபடும் ஒருவருக்கு மெரீனா கடற்கரையில் சிலை வைப்பது மரபாகாது!. வேண்டாம்! மாநாடு முடிந்தவுடன் சென்னையில் அப்பர் அடிகளுக்குத் தனியே ஒரு மணிமண்டபம் கட்டலாம்; அதில் அப்பர் அடிகள் திருவுருவத்தை அமைக்கலாம். அவருடைய அற்புதமான பாடல்களையும் கல்வெட்டாக அமைக்கலாம். நானே செய்து தருகிறேன்” என்று கூறினார், வாழ்வியல்கள் மாறினாலும், முரண்பாடுகள் அமைந்தாலும் மதிப்பீடுகள் மாறக்கூடாது, தாழக்கூடாது என்ற உண்மையை உணர முடிந்தது. இன்று இந்தப் போக்கு நிலைகுலைந்து வருவது வருந்துதலுக்குரியது.

அப்பர் அடிகள்பால் அறிஞர் அண்ணாவுக்கு இருந்த மதிப்பீடு எவ்வளவு என்பதை உணரமுடிந்தது! அந்த எண்ணம் நிறைவேறாமல் காலம் சதி செய்துவிட்டது.

இன்று நாட்டில் பரவலாகக் காணப்பெறுவது கருத்துத் திருடு! கொள்கைத் திருடு! அதாவது, ஒரு கருத்தை ஒருவர் சிந்தித்துத் தெரிவிப்பார். அதே கருத்தை வேறொருவர் தமது கருத்துப் போலச் சொல்லிப் பாராட்டுப் பெறுவார். இப்படி ஒரு வகையினர். பிறிதொரு வகையினர், மற்றவர் சொன்ன கருத்தை மதித்து ஏற்பதில்லை. அவர்களின் கருத்து மட்டுமே அவர்களுக்கு உரியதெனக் கொள்வர். ஆனால், அறிஞர் அண்ணா யாருடைய கருத்தையும் விரும்பி ஏற்பவர்; பாராட்டுபவர். தமிழ்நாட்டில் பாராட்டும் போக்கு மேவியதற்கே காரணம் அறிஞர் அண்ணாதான்! “வளரும் பயிருக்கு மழை போல, வளரும் மனிதனுக்குப் பாராட்டும்" என்பது அறிஞர் அண்ணாவின் கொள்கை! எந்தக் கருத்தை எடுத்துச் சொன்னாலும் எழுதினாலும் அந்தக் கருத்தைச் சொன்ன வரை, எழுதியவரை அறிமுகப்படுத்தாமல் அவர் விடுவதில்லை. அன்றைய சந்திப்பில் அறிஞர் அண்ணாவிடம் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு மையம் அமைக்கும்படி கேட்டுக்கொண்டோம் நாம். அதாவது, 'பிரெஞ்சு அகாதமி' போல! இந்தத் தமிழ் மையத்தின் மூலம் தமிழைப் பழமைக்குச் சீர்குலைவில்லாமல் காலத்துக்கு ஏற்ப, புதுமைப்படுத்தி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் நாம். இந்த ஆலோசனையை அறிஞர் அண்ணா மகிழ்ச்சியுடன் வரவேற்றார், செய்வதாக உறுதி கூறினார். பின் 'கலைமகள்' இதழுக்கு முதலமைச்சர் அறிஞர் அண்ணா ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் 'தமிழ் மையம்' பற்றி விவரித்து, "இந்த ஆலோசனை குன்றக்குடி அடிகளாருடையது. தமிழ்நாடு அரசு செய்யும்” என்று கூறியிருந்தார். இதுவும் கைகூடவில்லை!

ஆனால் முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கினார். வரவேற்று மகிழத்தக்க பணி இது! ஆனால், தமிழ்ப் பல்கலைக்கழகம்-தமிழின் வளர்ச்சிக் குரியனவாகச் செய்வது மிகவும் குறைவே. இன்று தமிழ்ப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பாதுகாப்புப் பணிதான் அதிகமாகச் செய்து வருகிறது; தமிழ் வளர்ச்சிப் பணி ஓரளவுதான் செய்கிறது. ஆக்கம் தந்தால் செய்யும். அறிவியல் புலம் அமைந்துள்ளது. அறிவியல் சொற்களுக்குத் தமிழாக்கம் செய்துள்ளது. பொறியியலைத் தமிழில் கற்பிக்கப் பாடநூல் தயாரித்துள்ளது. ஆயினும், தமிழ்நாட்டின் தேவை மிகுதி.

தமிழ் நூல்களின் கருத்துக்களை, குறைந்தது ஐந்து மொழிகளிலாவது இலக்கிய ஏடுகளாக வெளியிட வேண்டும். முத்திங்கள் இதழாகக்கூட வெளியிடலாம். இந்தி, ஆங்கிலம், உருது, ருஷ்யன், சீனம் ஆகிய மொழிகளில் வெளியிட வேண்டும். உடனடியாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும். அதுபோல பிற மொழி இலக்கியங்கள் பற்றித் தமிழில் இதழ் நடத்த வேண்டும். இன்றைய வாழ்வு, அறிவியல் சார்ந்த வாழ்வு; தொழில்நுட்பம் சார்ந்த வாழ்வு! தமிழ், அறிவியல் மொழியாக வளர வேண்டும் இந்தப் பணியைச் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ்ப் பல்கலைக்கழகத்தினுடையது, பாவேந்தர் பாரதிதாசன் கூறியதைப் போல், துறைதோறும் தமிழை' வளர்க்க வேண்டும். அறிவியல் துறைதோறும் தமிழில் நூல்கள் வெளியிட வேண்டும். இந்தப் பணிகளை இன்று செய்தால்தான் தமிழன் வளர்வான்! தமிழ் வளரும்! வாழும்! இது எப்போது நடக்கும்?

தமிழ் மக்களேகூட அரசியல் சார்பின்றி இத்தகைய ஒரு பெரிய தமிழ் வளர்ச்சி மையத்தைத் தோற்றுவிக்கலாம். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே ஒரு பல்கலைக்கழகத்தை கண்ட செட்டிநாட்டரசர் குடும்பம் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். செட்டிநாட்டரசர் மு.அ.மு. இராமசாமியால் செய்ய முடியும், செய்வார் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது.

இங்ஙனம் தமிழுணர்வு வளர்ந்து வரும் வேளையில், ஒரு நாள் எதிர்பாராத நிலையில் தலைவர் பெரியார், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி!” என்று கூறினார். தமிழ் விழாக்கொண்டாடும் தைத் திங்கள்-பொங்கல் நாளில் சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டித் தொழிற்சாலிைல் பொங்கல் விழா! தமிழர் திருநாள்! நாமும் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள். அப்போது நாம், "தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று பெரியார் கூறியிருப்பதை முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். உடனே அறிஞர் அண்ணா பரபரப்பு உணர்வுடன் "பெரியாரின் கருத்தை மறுத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். நாம், "இல்லை! அண்ணாவின் கருத்தறிந்து செய்ய எண்ணியதால் உடனே மறுக்கவில்லை" என்றோம். அண்ணா அமைதியாக "மறுக்காதீர்கள்! மறுத்தால் திரும்பத் திரும்பச் சொல்வார்! மறுக்காமல் விட்டுவிட்டால் சும்மா இருப்பார். இது பெரியாரின் பழக்கம்!” என்றார். மேலும், "வீட்டிலே பெரிய வர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ள மாட்டோமா? அது போலத் தமிழகத்தில் பெரியார்! மறுக்க வேண்டாம்!” என்றார். எவ்வளவு இதமான பழக்கங்கள், வழக்கங்கள் அண்ணாவிடம் இருந்தன. ஆம். உண்மைதானே! பலரும் கூடி வாழ வேண்டுமாயின் முரண்பாடுகளை-மாறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல்-விரிவு படுத்தாமல் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மீதுள்ள மதிப்பீட்டைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. மன முறிவுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வாழ்வியல் உண்மையே சமுதாய உருவாக்கத்துக்குத் துணை செய்யும்.
13

திருக்கடவூர் கைலாசம் பிள்ளை மூலம் குன்றக் குடியிலிருந்து வந்த அழைப்பை மறுத்த பிறகு, அடுத்த வந்த 1948 ஆவணித் திங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் குன்றக்குடி ஆதீனம் மகாகுருபூஜை விழா வந்தது. ஆதீனங்களில் நடை பெறும் குருபூஜை அந்தந்த ஆதீனங்களின் ஸ்தாபகர்கள் பரிபூரணம் எய்திய நாளில் நடைபெறும். இப்படி ஆதீனங்களில் நடைபெறும் குருபூஜைக்கு மற்ற ஆதீனங் களிலிருந்து தம்பிரான்கள் பிரதிநிதிகளாகச் செல்வது வழக்கம். இது ஒரு சம்பிரதாயமான நடைமுறையே! இதனால் விளையும் பயன் என்ன? கேள்விக்குறியே! ஆயினும் நடைமுறையில் ஓர் உறவு பேணப்பட்டு வருவது மதித்தற்குரிய செய்தி!

குன்றக்குடி ஆதீன குருபூஜைக்குச் செல்ல கந்தசாமித் தம்பிரானுக்கு (குன்றக்குடி அடிகளார்) திருவுள்ளச் சீட்டு விழுந்தது. செய்தி, கந்தசாமித் தம்பிரானுக்கு அதிர்ச்சியைத் தந்தது. கைலாசம் பிள்ளையின் முயற்சியை நினைவு கூர்ந்தார்! குன்றக்குடியில் நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது? குரு பூஜைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் இயலாது!

"கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ ?” என்னும் திருஞானசம்பந்தர் அருளிய அடிகள் நினைவுக்கு வந்தன. எருது விருப்பத்தின்படியா சுமை ஏற்றப் படுகிறது! இல்லையே! அதுபோல மற்றவர் விருப்பத்தை; வசதியைக் கேட்பார் யார்? வேறு வழியில்லை. அப்போது தருமபுர ஆதீனத்தில் சம்பந்த ஓதுவார் என்ற ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். மருத்துக்குக்கூட வினயம் இல்லாதவர். கந்தசாமித் தம்பிரானுடைய உயிர்ப்புள்ள விளையாட்டுப் பொருளில் இவரும் ஒருவர். இவர்தான் பெரும்பாலும் தம்பிரான்களுடன் மற்ற ஆதீன குருபூஜைக்குச் செல்வார். கந்தசாமித் தம்பிரானின் நம்பிக்கைக்கும் உரியவர். சம்பந்த ஓதுவாரைக் கலந்தார். அவர் "சமாளித்துக் கொள்ளலாம்” என்றார்.

குன்றக்குடி ஆதீன குருபூஜை விழாவுக்கு கந்தசாமித் தம்பிரான் பயணமானார். முதல் நாள் காரைக்குடி வந்து சோமசுந்தரம் பிள்ளை மரக்கடையில் தங்கல். அந்தக் காலத்தில் சோமசுந்தரம் பிள்ளை மரக்கடை செல்வாக்காக இருந்தது. இவருடைய கூட்டாளி செல்லையா பிள்ளை. இவர்கள் இருவரும் குன்றக்குடி ஆதீனத்துக்கு மிகவும் வேண்டியவர்கள். காலத்தால் பல நல்ல உதவிகள் செய்த வர்கள். சோமசுந்தரம் பிள்ளை சுத்த சைவர். பஞ்சகச்சம் கட்டுவார். கழுத்தில் நவரத்தினம் வைத்துக் கட்டிய உருட்தி ராட்சமாலை. உச்சிக்குடுமி நீறு நிறைந்த நெற்றியுடன் விளங்குவார். நாளும் பூஜை தவறாமல் செய்வார். இவருடைய கடையின் மாடி தங்குவதற்கு உரிய வசதிகளுடையது. அங்கு தங்கல்; நல்ல உபசரணை! பழகும் உறவுக்கு சோமசுந்தரம் பிள்ளை ஓர் எடுத்துக்காட்டாவார்.

கந்தசாமித் தம்பிரான் குன்றக்குடிக்கு வந்து சேர்ந்ததும், கைலாசம் பிள்ளையும் அவர் புதல்வர் கனகசபை பிள்ளையும் வந்திருந்ததைக் கண்டார். ஆனால், கந்தசாமித் தம்பிரானுடன் கைலாசம் பிள்ளை பேசவில்லை. ஒதுங்கிப் போனார். கனகசபை பிள்ளை மட்டும் பேசினார். மகேஸ்வர பூஜைக்குப் பிறகு குன்றக்குடி ஆதீனத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு, அதற்குப் பெயர் 'தர்பார்', மற்ற ஆதீனங்களில் தர்பார் இல்லை. மாலை மூன்று மணிக்குத் தர்பார். ஆரம்பமானது. அதுபோது பல்வேறு தரப்பினர் குன்றக்குடி ஆதீனம் மகாசந்நிதானம் அவர்களைக் கண்டு கொண்டனர். அப்போது எதிர்பாராமல் கந்தசாமித் தம்பிரான் சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் பெற்றார். திறமைகள் வெளிப்பட வேண்டாத இடம் என்று கந்தசாமி தம்பிரான் உணர்ந்தார்; பேசினார். சிறப்பாகப் பேசக்கூடாது என்ற நினைப்பில் தொடங்கிப் பேசினார். பத்து நிமிடங்களில் முடித்துவிட்டார் ஆயினும் அந்த அவையினர் பேச்சைப் பாராட்டினர்.

குன்றக்குடி ஆதீனம் மகாசந்நிதானம் அவர்கள் "நன்றாக இருந்தது?” என்று ஆசி கூறி ஒரு ஆரஞ்சுப் பழமும் பத்து ரூபாய் திருக்கைவழக்கமும் தந்தருளினார்கள்.

குன்றக்குடி ஆதீனத்தில் நாராயணசாமி ஐயர் என்பவர் ஏஜெண்டாக இருந்தார். அவரும் கனகசபை பிள்ளையும் காரைக்குடி சோமசுந்தரம் பிள்ளையும் மகா சந்நிதானம் அவர்களும் ஏதோ பேசுகிறார்கள் என்பது தெரிகிறது. வழக்கமாகத் தம்பிரான்களுக்கு நடைபெறும் உடசாரத்தைவிட உபசாரம் கூடுதலாக இருந்தது. 'கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும்' செய்தி நினைவுக்கு வருகிறது. கடைசியாக ஒரு செய்தி! குன்றக்குடி ஆதீன மகாசந்நிதானம் அவர்களிடமிருந்து "இரண்டு நாட்கள் தங்கி ஆதீனத் திருக்கோயில்களாகிய திருப்புத்தூர், பிரான்மலைத் திருக்கோயில்கள் வழிபாடு செய்து விட்டுப் போகலாம்” என்று உத்தரவு ஆனது. என்ன செய்வது? திகைப்புத்தான் வந்தது. ஒருவாறு இசைந்து மறுநாள் காலை திருப்புத்தூர் திருக்கோயில் வழிபாடு நடந்தது. ஏஜெண்ட் நாராயணசாமி ஐயர் கூடவே வருகிறார். மாலையில் பிரான்மலை! பிரான் மலையில் அப்போது கோபாலன் என்று ஒரு நாயனக்காரர் இருந்தார். முன்பே பழகினவர்போல மேவிபழகினார். மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். இரவு பிரான்மலையில் தங்கல்! பிரான்மலையில் பாண்டிய நாட்டுக் குருக்கள் மடம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மடம் அருவியூர் நகரத்தார்க்கு குருமடம். அருவியூர் நகரத்தார் பூம்புகாரிலிருந்து வந்து குடியேறியவர்கள். கோவலன் மரபினர் என்பது வரலாறு. நல்ல மரபினர். பொருளீட்டி வாழ்வாங்கு வாழ்ந்து . பழகியவர்கள். இவர்கள் சமூகம் கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக வளர்ந்து வருகிறது. அப்போது இந்த மடத்தின் குருவாக இருந்தவர் பூ சுப்பிரமணியஈசான தேசிகர் என்பவர். இந்த மடத்தில் தயாரித்து உணவு வந்தது. உணவுடன் பாண்டிய நாட்டுக் குருக்கள் ஐயா, ஏஜெண்ட் நாராயணசாமி ஐயர் ஆகியோர் வந்தனர். அருகிலிருந்து உபசரித்தனர். நல்ல சுவையான உணவு, உணவு மட்டுமல்ல பாண்டிய நாட்டுக் குருக்கள் சாதுரியமாக ஆலோசனை கூறும்போது அவர்களின் துய அன்பினை அனுபவிக்கவும் முடிந்தது. ஆனால் அந்த அன்பு கந்தசாமித் தம்பிரானுக்குச் செரிமானம் ஆகவில்லை.

உணவுக்குப் பின் உரையாடல் தொடங்குகிறது! உரையாடலில் முக்கியமாக இடம்பெற்றவை குன்றக்குடி ஆதீன வரலாறு. குன்றக்குடி ஆதீனத்துக்கு இருக்கும் சொத்துக்கள் பற்றிய தகவல்கள், தகவல்களினூடே கந்தசாமித் தம்பிரானுடைய திறமையும் புகழப்படுகிறது. எல்லாவற்றையும் புரிந்துகொண்ட கந்தசாமித் தம்பிரான் "உறக்கம் வருகிறது” என்றார்.

வாழும்போது புகழப்படுதல் புகழல்ல அது முகமனேயாம் அல்லது எதிர்பார்ப்புக்குரிய கையூட்டேயாம். ஒருவர் இறந்தபின், இறந்தவரின் சமுதாய நடப்பியலுக்கு அவருடைய தேவையை, இருப்பை எண்ணிப் பேசும் புகழே புகழ். இன்றைய இந்தியாவின் நிலையில் பல நேரங்களில் இந்திய மக்கள் 'அண்ணல் காந்தியடிகள் இல்லையே, அமரர் நேருஜி இல்லையே' என்று ஏங்குகின்றனர்.

கந்தசாமித் தம்பிரான் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு நாயனக்காரர் கோபாலன் துணையுடன் புதுக் கோட்டைக்குச் செல்லும் பேருந்தைப் பிடித்து, பிரான் மலையிலிருந்து தருமபுரத்துக்குப் பயணம் செய்துவிட்டார். திரும்பக் குன்றக்குடிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டார்.

தருமபுரத்துக்கு வந்தவுடன் தருமபுர ஆதீனம் மகா சந்நிதானம் அவர்களைக் கண்டுக்கொண்டு குன்றக்குடி குரு பூஜையில் நடந்தவையெல்லாம் விண்ணப்பிக்கப் பெற்றன, "ஏன் தாமதம்?”-இது மகாசந்நிதானம் அவர்களின் வினா. சம்பந்த ஓதுவார் பதில் சொன்னார்; “பாண்டிப்பதி பதினான்கில் திருப்புத்தூர், பிரான்மலை வழிபாடு செய்து கொண்டு வந்ததால் தாமதம்” என்றார். குன்றக்குடி ஆதீனத்தைப் பற்றியும் பேச்சு வந்தது. அப்போது குன்றக்குடி மடம் செல்வ ஆதாரத்தில் வளமாக இல்லை. குன்றக்குடி ஆதீனத்தில் தகர வாளிகள் தகர குவளைகள் புழக்கம். இது குறித்து தருமபுர ஆதீன அலுவலர்கள் 'தகர குவளை மடம்' என்றார்கள். இந்த வார்த்தை கந்தசாமித் தம்பிரான் நெஞ்சில் 'சுருக்'கென்று தைத்தது!

திருமடங்களுக்குள்ளேயும் துறவிகளுக்கிடையேயும் வளத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் எண்ணப்படுகின்றன. அவ்வெண்ணத்தின் வழி மதிப்பீடு குறைகிறது. இது ஏற்க முடியாத ஒன்று. நயத்தக்க நாகரிகம் எப்போது மலரும்? எங்கு மலரும்? திருக்கோயில்கள்-திருமடங்கள் கூட இன்று பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பின் காரணமாக வெகுவாக அவற்றின் அகநிலை அறநெறிகள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த நிலை ஆழ்ந்த கவலைக்குரியது.

கந்தசாமி தம்பிரானுக்கு சீகாழி சட்டநாதசுவாமி திருக்கோயில் கட்டளையும் சேர்த்துப் பார்க்கும்படி உத்திரவாகியது. புலவர் இரண்டாம் ஆண்டுப் படிப்பு வேறு. திருக்கடவூர் கட்டளை, சீகாழி கட்டளைகளும் சேர்ந்தன, சமயப்பணிகள் அதாவது, குருமூர்த்தங்கள் வழிபாடு, திருக்கோயில் வழிபாடு ஆகியனவும் வந்துவிடும்.

இந்தக் காலங்களில் பெரும்பாலும் மாலை நேரத்தில் காவிரிக் கரையில் அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான் (இன்றைய தருமபுர ஆதீனம் மகாசந்நிதானமாக எழுந்தருளி யிருப்பவர்கள்) அவர்களுடன் இலக்கிய விவாதங்கள், பொது சர்ச்சைகள் நிகழும். எல்லா விவாதங்களிலும் சர்ச்சை களிலும் அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான் அவர்கள் நிதானம்! நமது நிலை தீவிரவாதமே. மாலை ஆறு மணிக்குள் காவிரியில் மாலை அனுட்டானம் முடித்துக்கொண்டு வருவார்கள். கந்தசாமித் தம்பிரான் தனது அறைக்குச் சென்று படிப்பார். அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான் அவர்கள் அருள்திரு ஞானபுரீசர் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்வார். ஒரு. நாள்கூட ஞானபுரீசர் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்லத் தவற மாட்டார். இன்றும் தருமபுரம் மகாசந்நிதானம் இந்த வழிபாட்டில் நள்ளிரவிலும் தவறுவதில்லை. அது அவர்கள் செய்த புண்ணியம் போலும்.

கந்தசாமித் தம்பிரானைப் பொறுத்த வரையில் வியாழக்கிழமைகளில் கோயில் வழிபாட்டுக்குப் போவார். மற்றபடி கோபுர தரிசனம்தான், படிப்புக் காலத்தில் கந்தசாமித் தம்பிரானுக்கு மற்றவர்களைவிட நன்றாகப் படிக்க வேண்டும், வகுப்பில் முதல் நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம். ஆதலால், அந்தக் காலத்தில் விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து படிப்பார். அன்று தொடங்கிய அந்தப் பழக்கம் இன்றளவும் மாறவில்லை . காலை மூன்று மணிக்கு எழுந்து படிக்கும் கந்தசாமித் தம்பிரான் விடியல் ஐந்து அல்லது ஐந்தரை. மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்து விடுவார். ஒரு நாள் காலை உடன் பயில்வோராகிற அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான், கோ. முருகையா ஆகியோருடன் பேசும்போது "படிக்கவே இல்லை. தூங்கிவிட்டேன்” என்று கந்தசாமித் தம்பிரான் கூறினார்.

கோ. முருகையா கந்தசாமித் தம்பிரானுடன் தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். நன்றாகப் பாடுவார். இவர் இப்போது அருட்செல்வர் நா. மகாலிங்கம் அரவணைப்பில் திருமுறைப் பணி செய்து வருகிறார். இவர் ஒரு நாள் காலை கந்தசாமித் தம்பிரான் அறையில் விளக்கெரிவதைப் பார்த்து விட்டார். அன்று காலை வழக்கம்போல் கந்தசாமித் தம்பிரான் படிக்கவில்லை என்கிறார் “காலையில் விளக் கெரிந்ததே...?" என்று முருகையா கேட்கிறார். கந்தசாமித் தம்பிரான் சதுரப்பாட்டுடன் “எறும்பு கடித்தது. விளக்கு போட்டுப் பார்த்தேன்" என்று கூறுகிறார். அருள்திரு சோமசுந்தரம் தம்பிரானும் சரி, முருகையாவும் சரி, நம்ப வில்லை, பொய் சொன்னதாகவே அன்றும் சொன்னார்கள்.... இப்போதும் சொல்வார்கள். இப்படியெல்லாம் கல்வியில் ஆர்வம் காட்டியதால் அந்தப் பொய் 'பொய்ம்மையும் வாய்மை யிடத்த' என்னும் குறள் நெறிப்படி அமைந்தது என்பது அமைதி.

சீகாழியில் கட்டளைத் தம்பிரான் ஆன பிறகு, வாரத்தில் ஒரு நாள் சீகாழிக்குச் செல்வது வழக்கம். கல்லூரி விடுமுறைக் காலங்களில் சீகாழியில் தங்கும் கடப் பாட்டினையும் கந்தசாமித் தம்பிரான் ஏற்றுக்கொண்டார். தருமபுர ஆதீனத்தின் வில்வண்டியில் சீகாழிக்குச் செல்வது வழக்கம். ஒன்றே முக்கால் மணி நேரத்தில் வண்டி போய்ச் சேரும்.

கட்டளைத் தம்பிரான்களுக்குச் சில மரியாதைகள் உண்டு, கட்டளைச் சேவகர் உண்டு. அப்போது கட்டளைச் சேவகராக வேலை பார்த்தவர் கோவிந்தராசன் என்பவர். இவர் இப்போது சீகாழித் திருக்கோயிலில் பணி செய்கிறார். சீகாழி சைவத் தமிழுலகின் புண்ணியத் திருத்தலம். திருஞானசம்பந்தர். திருஅவதாரம் செய்த திருத்தலம், அது மட்டுமா? 'அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, திருஞானசம்பந்தர் அழுது உமாதேவியே ஞானப்பால் தரக் குடித்தார், இந்தத் திருத்தலத்தில், சைவ சமயத்தில் எத்தகைய மனிதநேயம்!

ஒரு குழந்தை அழுகிறது. அந்த அழுகையைக்கூடத் தாங்கமுடியாத நிலையில் அம்மையப்பனே எழுந்தருளி ஞானப் பால் தரும் நிகழ்ச்சியினால் வெளிப்படும் மனித நேயம் உணரத்தக்கது. இந்த மனித நேயம் சமய நெறியினரின் ஒழுகலாறாக என்று அமையும்? இத்திருத்தலத்தில் கட்டளைத்தம்பிரானாகத் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பை முன்செய்த தவத்தின் பயன் என்று எண்ணி மகிழ்ந்தார் கந்தசாமித் தம்பிரான். ஆதலால், சீகாழித் திருத்தலக் கட்டளை விசாரணைகளில் ஆர்வம் மிகுதியும் காட்டினார். ஆனாலும் நடைமுறைகள் எளிதில் துணை செய்யவில்லை. திருக்கோயிலுக்கும் கட்டளை மடத்துக்கும் நெடுந்தூரம்! நாள்தோறும் மாலையில் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்வார். முன்னே கை விளக்கு, பின்னே சேவகர் என்ற நிலை! வழித்தடம் மாற இயலாது; மாறுவதில்லை.


14

ருடம் 1948... சீகாழித் திருத்தலத்தில் சித்திரைத் திருவிழா! சீகாழியில் தங்கித் திருவிழாவை நடத்த தருமை யாதீனம் மகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்றுக்கொண்டு கந்தசாமித் தம்பிரான் சீகாழிக்குச் சென்றிருந்தார். அதுபோது ஒரு நாள் மாலை 4 மணிக்குச் சீகாழித் திருக்கோயிலுக்கு ஆய்வுக்காகச் சென்றார். பொதுவாகக் கட்டளைத் தம்பிரான் களுக்கு இப்படி ஆய்வு செய்யும் பணி இல்லை! அப்படி ஆர்வம் தலையெடுத்தாலும் அங்குள்ள நிர்வாகத்தின் அனுசரணை போதிய அளவு இருக்காது; இவையெல்லாம் கந்தசாமித் தம்பிரானுக்குத் தெரியும். ஆயினும் கந்தசாமித் தம்பிரான் யாரோடும் இணங்கிப் போய்விடுவார்.

அப்போது சீகாழித் திருக்கோயிலின் கார்ப்பாராக (தலைமை நிர்வாகியாக)இருந்தவர் சிவசிதம்பரம்பிள்ளை என்பவர். இவர் நல்ல நிர்வாகி. இவருடைய பணிகள் விவசாயிகள் நிர்வாகம், வசூல், வழக்கு நிர்வாகம் முதலியன. ஷராப்பாக (காசாளராக) இருந்தவர் சீனிவாச ஐயங்கார் என்பவர்! இவரும் நல்ல நிர்வாகி. சமய ஆசாரங்களை விடாது கடைப்பிடித்து ஒழுகுபவர். இவர் நெற்றியில் திருமண் சார்த்திய பொலிவு எப்போதும் இருக்கும். இவர்கள் இருவருமே கந்தசாமித் தம்பிரானைப் பொறுத்தவரையில் நல்ல உறவு. ஏன்? இவர்களை மதித்தும் பாராட்டியும் அடிக்கடி ஆலோசனை கேட்டும் கந்தசாமித் தம்பிரான் பழகியதே காரணம்.

அன்று மாலை திருக்கோயிலுக்கு வருவது பற்றிக்கூட ஐயங்காருடன் ஆலோசனை செய்யப்பெற்றது. கந்தசாமித் தம்பிரான் மேற்குக் கோபுரவாசல் வழியாகத் திருக் கோயிலுக்குள் நுழைந்து மேற்கு வெளிப் பிராகாரம் போய்ச் சேருகிறார். இங்கு காலியிடங்களில் தோட்டம் முதலியன உண்டு. பின், வடக்குப் பிரகாரம் செல்லத் திரும்பும்போது ஒரு திருக்கோயில் விமானம் தெரிந்தது. கட்டளைச் சேவகரிடம் கந்தசாமித் தம்பிரான், "இது என்ன கோயில்?” என்று கேட்டார்! கட்டளைச் சேவகர், “சம்பந்தர் கோயில்" என்றார். "இதுவரையில் காட்டவில்லையே! வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லையே! எங்கே சாவி?" என்றார் கந்தசாமித் தம்பிரான்.

கட்டளைச் சேவகர் ஓடிப்போய் சாவி வாங்கிவர, திருஞானசம்பந்தர் திருக்கோயிலின் கதவு திறக்கப்பட்டது. திருக்கோயில் இருந்த நிலை வருந்தத்தக்கது.

சைவசித்தாந்தத்தில் ஆன்மாக்களுக்குப் 'பசு' என்று பெயர். இந்தப் 'பசு'க்களைக் காத்தருள திருஅவதாரம் செய்த திருஞானசம்பந்தர், நான்கு கால் பசுக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பால் குடிக்கும் ஆர்வம் திருஞானசம்பந்தருக்குப் போகவில்லையோ என்று கேட்காதீர்கள்! திருஞானசம்பந்தர் குடித்தது மீண்டும் பசி வராத ஞானப்பால்!

ஆன்மாக்களின் அறியாமைக்கு 'ஆணவமலம்' என்று பெயர். திருஞானசம்பந்தரின் திருக்கோயிலில் நான்கு கால் பசுக்களின் மலமாகிய சாணம் கதிரொளியில் பக்குவப் பட்டுக் கொண்டு கிடந்தது. திருஞானசம்பந்தர் திரு அவதாரம் மனிதர்களின் மேம்பாட்டுக்கு அல்லவா!

திருஞானசம்பந்தர் கோயிலில் வைக்கோல் போர்! தட்டுமுட்டுச் சாமான்கள்! திருக்கோயிலில் செடிகள் முளைத் திருந்தன! தூய்மையில்லை! கந்தசாமித் தம்பிரானுக்குத் தாங்கொணாத் துயரம்! நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் திருக்கோயில் அல்லவா இது!

உடனே ஐயங்கார் அழைக்கப்பட்டார்! ஆட்கள் அழைக்கப்பட்டனர்! தூய்மை செய்யும் பணி தொடங்கப் பட்டன. மாடுகள் கட்டுவதற்குத் தனியே பசுமடம் அமைக்க வேண்டும். வைக்கோல்போரும் குப்பைக் குழியும் பசு மடத்திலேயே அமைக்க வேண்டும். திருஞானசம்பந்தர் திருக் கோயில் எப்போதும் தூய்மைப் பொலிவுடன் அமைய வேண்டும். திருக்கோயில் 'குடவரை'க் காவல் நியமனம் செய்து எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்பது திட்டம், இந்தத் திட்டத்துடன் மகாசந்நிதானத்துக்கு விண்ணப்பங்கள் தயாரித்து சீனிவாச ஐயங்கார் அன்று இரவு பத்து மணிக்குக் கொடுத்தார். இவற்றை வாங்கிக்கொண்டு உடனே கந்தசாமித் தம்பிரான் தருமபுரத்துக்குப் பயணமானார்.

மறுநாள் காலை தருமபுரம் பூஜை மடத்தில் வழிபாடு செய்துகொண்டு மகாசந்நிதானத்தை வணங்கி, திருஞான சம்பந்தர் கோயில் பற்றி விண்ணப்பித்துக் கொண்டார்; உடனே சீர் செய்தலுக்குரிய திட்டங்களுடன் கூடிய விண்ணப்பங்களைத் திருக்கண் பார்வைக்கு வைத்தார் கந்தசாமித் தம்பிரான்! மகாசந்நிதானம் விண்ணப்பங்களைக் கண்ணுறும் போதே, மகாசந்நிதானத்துக்கு வருத்தம் கலந்த நிலையில் திருப்பணியில் ஆர்வம் பொங்கியெழுவதை கந்தசாமித் தம்பிரான் உணர்ந்தார். விண்ணப்பங்களையும் திட்டங்களையும் படித்த பிறகு மகாசந்நிதானம் திருக் கண்களிலிருந்து இரண்டொரு சொட்டு நீர் விண்ணப்பத் தாள்களில் வீழ்ந்தன. நாத்தழுதழுத்தார்கள். அனைத்து விண்ணப்பங்களும் உடன் அங்கீகரிக்கப் பெற்றன. 'திருவிழாவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும்' என உத்தரவாகியது.

மிக்க மகிழ்ச்சியுடன் சீகாழிக்கு வந்து ஐயங்காரை முடுக்கிவிட்டுப் பணிகளைச் செய்து முடிக்க ஏற்பாடு செய்யப்பெற்றது. திருக்கோயில் விமானம், மதிற்சுவர்களில் முளைத்துள்ள செடிகளை வெட்ட வேண்டும். உடனே கந்தசாமித் தம்பிரான் சில இளைஞர்களையும் மாணவர் களையும் தேர்ந்தெடுத்தார்.

அவர்களுள் கவனத்துக்குரியவர் திருமுறைச் செல்வர் புலவர் மு. கணபதி! இன்று பட்டிமண்டபங்களில் முழக்கம் செய்து வருகிறாரே அந்த கணபதிதான், இவர். மு. கணபதி, சிதம்பரத்தில் பிறந்தவர். திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருப்பனந்தாளில் தமிழ் பயின்று கொண்டிருந்த காலத்தில் மகாவித்வான் சா. தண்டபாணி தேசிகருடனும் தனியாகவும் அடிக்கடி தருமபுர ஆதீனத்துக்கு வருவார். அவர் தமிழில் மட்டும் புலவர் அல்லர். நல்ல ஓவியருமாவார். தருமபுர ஆதீனம் 'ஞானசம்பந்தம்' இதழுக்கு ஓவியங்கள் தீட்டிக்கொடுப்பார். வழக்கம் போல மு, கணபதியிடம் கந்தசாமித் தம்பிரான் நட்புறவு கொண்டார். பணி கருதி இவர் அவசரத் தந்தி மூலம் வரவழைக்கப்பெற்றார்.

தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் பயின்ற புலவர் வை. சு. தண்டபாணி, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் ஓதுவார் மிராசு, புலவர் தா. குருசாமி ஆகியோரை கந்தசாமித் தம்பிரான் சீகாழிக்கு வரும்போதே பணிக்கு அழைத்து வந்து விட்டார்!

கு.XVI.10. புலவர் மு. கணபதி உழவாரப் பணியில் ஆர்வத்துடன் மடிதற்றுக்கொண்டு செய்தார். அதோடு திருமுறை விழாவுக்கு விளம்பரத் தட்டிகள் எழுதி உதவினார். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் எல்லா அறிஞர்களையும் வரவேற்று உபசரித்தார். இப்படிப் பல நாட்கள் சீகாழியில் தங்கிப் பணி செய்தார். பணி முடிந்து ஊருக்குச் செல்லும் போது செலவுக்குப் பணம் கொடுக்கப்பெற்றது. செலவுக்கு உரிய தொகையை மட்டும் பெற்றுக்கொண்டார். வற்புறுத்தியும் கூடுதலாக ஒரு காசுகூட வாங்கவில்லை.

புலவர் தா. குருசாமிக்கு இப்போதுபோல் அப்போதும் துரும்பு உடம்புதான். கடின உழைப்பு அவரால் இயலாது. ஆனாலும் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தார். உணவு முதலியன வழங்கும் பணியை வை. சு. தண்டபாணி கவனித்தார். திருஞானசம்பந்தர் திருக்கோயில் திருப்பணியில் கந்தசாமித் தம்பிரானுக்கு உடனிருந்து உதவியவர்கள் பலர். சீகாழி என்றால் முதலியார் குடும்பம் நினைவுக்கு வரும். தொண்டை மண்டல முதலியார் குடும்பம், பெரிய குடும்பம்; சைவத்தில் மிக்கப் பற்றுள்ள குடும்பம். சீகாழித் திருக்கோயிலுடனும் தருமபுர ஆதீனத்துடனும் நெருக்கமான தொடர்புள்ள குடும்பம். இக்குடும்பத்தில் இந்தத் திருப்பணிக்கு உடனிருந்து உதவியவர்களில் வக்கீல் சீனவாச முதலியார், பெரியவர் சுப்பராய முதலியார், கிருஷ்ணமூர்த்தி முதலியார், சதாசிவ முதலியார், ராமநாத முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்! இளைஞர்கள், மாணவர்கள் பத்துப்பேர், மெய்க்காட்டு ஆட்கள் ஐந்து பேர் பணி செய்தனர். இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பாலும் திருஞானசம்பந்தர் திருக்கோயில் உழவாரப் பணி நடந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் கந்தசாமித் தம்பிரானுக்கு உழவாரத் தொண்டு அறிமுகமாகியது. இன்றுவரை இந்த உழவாரத்தொண்டில் ஆர்வம் குறையவில்லை. இன்றும் திருத்தலங்களுக்குச் சென்றால் வழிபாட்டில் காட்டும் ஆர்வத்தைவிட உழவாரத் தொண்டில் காட்டும் ஆர்வமே மிகுதி.

ஆம்! ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகளால் தொடங்கி வைக்கப்பெற்ற உழவாரத் தொண்டு இன்றும் தேவைப்படுகிறது. -

திருஞானசம்பந்தருக்குப் படையல் செய்த திருவமுது, உழவாரத் தொண்டர்களுக்கு மதிய உணவாயிற்று. உழவாரத் தொண்டு தொடர்ந்து நடைபெற்றது. மாலை நான்கு மணி இருக்கும். திருக்கோயில் அலுவலகச் சேவகர் ஓடிவந்து, "மகாசந்நிதானம் வந்திருக்கிறார்கள். திருஞானசம்பந்தர் கோயிலுக்கு நேரே வந்து கொண்டிருக்கிறார்கள். என்ற செய்தியைச் சொன்னார். சிந்தைக்கினிய செவிக்கினிய செய்தியல்லவா?

திருஞானசம்பந்தர் திருக்கோயிலுக்கு மகாசந்நிதானம் எழுந்தருளி நேரே திருஞானசம்பந்தர் சந்நிதிக்குச் சென்று வழிபாடு செய்துகொண்டார்கள். திருக்கோயில் முழுதும் பார்த்துவிட்டு, கந்தசாமித் தம்பிரான் எதிர்பார்க்காத நிலையில் பல திருப்பணிகளுக்கு நிதியாணைகள் வழங்கி னார்கள். "எல்லாம் வாயுவேகத்தில் நடைபெற வேண்டும். திருவிழாவின்போது திருஞானசம்பந்தருக்கு நூறாயிரம் போற்றி (லட்சார்ச்சனை) செய்யவேண்டும். திருமுறைப் பாராயணம் அகண்ட வேள்வி நடத்தவேண்டும்” என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்தார்கள். எல்லோருக்கும் மகிழ்ச்சி! தொடர்ந்து வேலை நடந்தது இனிதே நிறைவெய்தியது.

திருஞானசம்பந்தருக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. கந்தசாமித் தம்பிரான் திருமுறை வகுப்பு தொடங்க எண்ணினார். அப்போது திருக்கோயிலில் சட்டநாத தேசிகர் என்பவர் ஒதுவாராகப் பணி செய்தார். கந்தசாமித்

தம்பிரான் அவரை அழைத்துக் கலந்து பேசினார். "வகுப்புக் கென்று இப்போது தனி ஊதியம் தர இயலாது. தாங்கள் தொண்டாகத்தான் கருதிச் செய்யவேண்டும். பின்னே மகாசந்நிதானத்திடம் விண்ணப்பித்து ஊதியம் வழங்க முயல் கிறேன்” என்று கந்தசாமித் தம்பிரான் கூறினார். சட்டநாத தேசிகர் கடமையுணர்வுடன் ஒப்புக்கொண்டார். மாலை நேரத்தில் திருமுறை வகுப்பு நடத்துவதென்று திட்டமிடப் பெற்றது. இருபது முதல் ஐம்பது வரை திருமுறை வகுப்புக்கு மாணவ மாணவியர் சேர்ப்பதென்பது திட்டம். மாணவ மாணவியரை எப்படிச் சேர்ப்பது? தாமே ஆர்வத்துடன் படிக்க முன்வருவார்களா? அப்படியே வந்தாலும் சராசரித் தகுதியுடைய குடும்பத்து மாணவ மாணவியர் பங்கேற்பார்களா என்னும் கேள்விகள் எழுந்தன.

அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் இலவசக் கல்வி இல்லை! கட்டணம் இருந்தது. திருமுறை வகுப்பில் சேரும் மாணவ மாணவியருக்குப் பள்ளிக் கட்டணம் திருக்கோயில் செலுத்தும், சீருடை வழங்கும், புத்தகங்கள் வாங்கித் தரும் என்று திட்டம் தீட்டப்பெற்று மகாசந்நிதானத்திடம் ஆணை பெறப்பட்டது. நல்ல வரவேற்பு! போட்டி! 200-க்கு மேல் விண்ணப்பங்கள் வந்தன. விண்ணப்பம் அனுப்பியவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். பள்ளிக் கட்டணம் போக சீருடை, புத்தகங்கள் வகைக்கு நன்கொடை வசூலிக்கப் பெற்றது. நன்கொடை கொடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் வைத்தீஸ்வரன் கோயில் நெல் வியாபாரி சீனிவாச ரெட்டி யார். இவர் மிகவும் நல்லவர்; எப்போதும் மலர்ந்த முகத் தினர். இவர் ரூ 1000/-ம் கொடுத்ததுடன் 25 சீருடைகளும் தைத்துக் கொடுத்தார். மற்றொருவர் சீகாழியில் இருந்த குத்தகைதாரர் உருத்திராபதி படையாச்சி. இவர் எதிலும் தாராளமனப்பான்மையுடையவர். இவர் மீதிச் சீருடைகள் வாங்கிக் கொடுத்ததுடன் வகுப்பு நடைபெறும் நாளன்று விநியோகப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

திருஞானசம்பந்தர் லட்சார்ச்சனை பூர்த்திவிழா, திருமுறை விழா, திருமுறை வகுப்புத் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. சீகாழி வட்டாரத்தில் எண்ணத்தக்க பெருமையுடைய மனிதர்கள் அனைவரும் வந்திருந்தனர். மக்கள் கூட்டமும் அதிகம். மாலைச் சிற்றுண்டி அளிக்கும் பணியில் திணற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஊழியர்கள் போதவில்லை! ஒரு கட்டத்தில் ஷராப் சீனிவாச ஐயங்கார், மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுத்து இடத்தைச் சுத்தம் செய்தார். இந்தக் காட்சி கந்தசாமித் தம்பிரானின் நெஞ்சைத் தொட்டது! இப்பிறப்பில் மட்டும் அல்ல, எப்பிறப்பிலும் சீனிவாச ஐயங்கார் பணி நினைவி லிருக்கும்! வழிகாட்டும்!

மகாசந்நிதானம் எழுந்தருளி அருமையான வாழ்த்துரை வழங்கினார்கள். அந்த நாள்முதல் திருஞான சம்பந்தர் திருக்கோயில் மேலும் மேலும் அழகுபெற்று வருகிறது. இப்போது திருஞானசம்பந்தர் திருக்கோயிலில் நல்ல நூலகம் ஒன்று அமைந்துள்ளது. இவை மட்டுமா? இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீகாழியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருமுலைப்பால் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அருளாட்சி செய்யும் தருமபுர ஆதீனம் மகாசந்நிதானம், திருமுலைப்பால் திருவிழாவை மிகவும் சிறப்பாக பக்தி சிரத்தையுடன் நடத்திவருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் விளைவாக கந்தசாமித் தம்பிரா னுக்குத் திருமுறைத் தமிழின்பால் ஆர்வம் மிக்குயர்ந்து வளர்ந்தது.

15

குன்றக்குடி ஆதீனகர்த்தர் கந்தசாமித் தம்பிரானை விட்டபாடில்லை! மீண்டும் அணுகினார்கள். இப்போது திருக்கடவூர் கனகசபை பிள்ளை, ஆற்றங்கரை முத்தையா

முதலியார், காரைக்குடி மரக்கடை சோமசுந்தரம் பிள்ளை மூவரும் வந்து கந்தசாமித் தம்பிரானைச் சந்தித்தனர். வழக்கம் போல் மறுத்தார் கந்தசாமித் தம்பிரான். ஆனால், அவர்கள் விடவில்லை. அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள "மகாசந்நிதானத்தை அணுகுங்கள். உத்தரவு கொடுத்தால் வருகிறேன்!” என்றார் கந்தசாமித் தம்பிரான். அவர்கள் மகாசந்நிதானத்தைச் சந்தித்துக் கேட்கிறார்கள். மகாசந்நிதானம், கந்தசாமித் தம்பிரான் கருத்தறியாமலேயே மறுத்துவிட்டார்கள்.

பின், குன்றக்குடி ஆதீனத்தார் திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து தம்பிரான் ஒருவரை அழைத்து வந்து வைத்திருந்தார்கள். மூன்று மாத கால அளவில் குன்றக்குடி ஆதீனம் மகா சந்நிதானத்துக்குப் பிடிக்காமல் அவர் திரும்ப அனுப்பப் பட்டார். மறுபடியும் குன்றக்குடி ஆதீனத்தார் தருமபுர ஆதீனத்துக்குப் படையெடுத்தனர். இந்தத் தட்வை என்ன காரணம் பற்றியோ திருமடத்து மரபுப்படி பரிவட்டங் களுடன் தம்பிரான், ஒதுவார் ஆகியோரும் வந்திருந்தனர். இரவு ஏழு மணிக்கு மகா சந்நிதானத்தைக் கண்டு கொள்கின்றனர். குன்றக்குடி ஆதீனத்தில் கும்பகோணம் மடத்திலிருந்த கைலாசத் தம்பிரான் என்பவர் வந்திருந்தார். இவர் வயதானவர். நன்றாக வாதம் பண்ணுவார். குன்றக்குடி ஆதீனத்தின் வழக்குகளைக் கவனமுடன் நடத்தியவர்.

இவர் மகாசந்நிதானத்தைக் கண்டு கொண்டபோது நிலமிசை வீழ்ந்து வணங்கியவர் எழுந்திருக்கவே இல்லை. அழுகிறார்! “குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தைக் காப்பாற்ற வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அழுகிறார். "மகாசந்நிதானம் சரி என்று சொன்னால்தான் எழுந்திருப்பேன்" என்கிறார்.

மகாசந்நிதானத்துக்கு அறச் சங்கடம்! கந்தசாமித் தம்பிரானை அழைத்து விருப்பம் கேட்கிறார்கள், கந்தசாமித்

தம்பிரான் மறுக்கிறார். ஆயினும் தருமபுரம் மகாசந்நிதானம் மனம் நெகிழ்ந்துவிட்டது. அதுவும் ஒரு ஆதீனம், வயதான ஒரு தம்பிரான் அழுகிறார்! குன்றக்குடி ஆதீனத்துக்கு உதவி செய்யத் திருவுள்ளம்! அதேபோழ்து கந்தசாமித் தம்பிரானை இழக்க முடியாத திருவுள்ளம்! இந்த நிலையில் தருமபுரம் மகாசந்நிதானம் ஒரு முடிவுக்கு வந்தார்கள். மறுநாள் காலையில் பூஜை மடத்தில் திருமுறையில் கயிறு சார்த்திப் பார்ப்பது என்பதுதான் அந்த முடிவு. திருமுறை வாயிலாகச் சொக்கநாதப் பெருமாள் உத்தரவு எப்படி அருளிப்பாடு ஆகிறதோ அப்படி நடந்துகொள்வது என்பது முடிவு.

திருமுறையில் கயிறு சார்த்திப் பார்ப்பது பழைய மரபு. ஒன்றைச் செய்யத் துணிவதற்கு முன் திருவருளின் திருவுளப் பாங்கை அறிய இருந்த அணுகுமுறை. மூவர் தேவாரம் அடங்கன் முறையில் இறைவன் சந்நிதியில் மஞ்சட் கயிறு சார்த்துவது. .

மறுநாள் காலை பூஜை மடத்தில் சிறப்பு வழிபாடு. குன்றக்குடி ஆதீனத்தின் உபயம். பூஜை மடத்தில் தேவார அடங்கன் முறை மஞ்சட்கயிறுடன் இருக்கிறது. எல்லோரிடமும் பரபரப்பு கலந்த சூழல்! பூஜை மடம் வழிபாடு முடிந்தது. மகாசந்நிதானம் எல்லோருக்கும் திருநீறு அளித்த பின், குன்றக்குடி ஆதீனத்தார், கந்தசாமித் தம்பிரான் மற்றும் திருக்கூட்டத்தார் முன்னிலையில் அடங்கன் முறையில் கயிறு சார்த்தினார்கள். முடிவு? திருக்கடவூர் மயானம் திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய வரிய மறையார். என்று தொடங்கும் பதிகம் அருள் பாலித்தது.

இப்பதிகத்தின் முதல் திருப்பாடல்,

          'வரிய மறையார் பிறையார்
          மலையோர் சிலையா வணங்கி
          எரிய மதில்கள் எய்தார் எறியும்
          முசலம் உடையார்

          கரிய மிடறு முடையார் கடவூர்
          மயானம் அமர்ந்தார்
          பெரிய விடைமேல் வருவார் அவர்
          எம் பெருமா னடிகளே!

என்பது. பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே என்பது இத்திருப்பாடலின் நான்காம் அடிக ளாகும். பெரிய விடைமேல் வருவார் என்பது எதிர் காலத்தில் பெரிய பொறுப்புகளுடனும் ஊர்திகளுடனும் வருவார் என்றும் அவர் அடிகள் என்றும் திருவருள் உணர்த்துவதாக மகாசந்நிதானம் பொருள் கொண்டார்கள்.

மேலும் இத்திருப்பதிகத்தின் ஏழாம் திருப்பாட்டு,

    பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்
    ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
    காசை மலர்போல் மிடற்றார்
    கடவூர்மயான மமர்ந்தார்
    பேச வருவார் ஒருவர் அவரெம்
    பெருமா னடிகளே!

என்பதாகும். இதில் பேச வருவார் ஒருவர். அவர் எம் பெருமான் அடிகளே! என்று வருவது கந்தசாமித் தம்பிரானின் பேசும் ஆர்வத்தை உறுதி செய்கிறது. மேலும், சிறப்பாகப் பேசி வருவார் என்றும் திருவருள் உணர்த்துகிறது. அது மட்டுமல்ல அடிகள் என்ற பெயர் பெற்று விளக்கமுற வாழ்வார் என்றும் சொக்கநாதர் அருள்பாலித்துள்ளார். இனி, குன்றக்குடிக்குப் போவதுதான் ஒரே வழி, சொக்கநாதர் ஆணை! என்று அருளித் திருநீறு வழங்கி வாழ்த்தினார்கள் மகாசந்நிதானம். -

குன்றக்குடி ஆதீனத்தாருக்கு மிக்க மகிழ்ச்சி. உடனே அவசர உணர்வுடன் தருமபுர ஆதீனத்தின் அலுவலர்கள்,

கந்தசாமித் தம்பிரானைக் குன்றக்குடிக்கு எப்படி அனுப்புவது? என்ன மாதிரி ஆவணம் பெறுவது? உயிலா? செட்டில் மெண்டா என்றெல்லாம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தனர். செட்டில்மெண்ட் எழுதி வாங்குவது என்று முடிவு செய்தனர். இங்ங்ணம், முறையாகப் பொறுப்புக்கு அனுப்பவும் சிறப்பாக வழியனுப்பவும் விரும்பிச் செயல்பட்டனர். குன்றக்குடி ஆதீனத்தாரிடம் ‘கந்தசாமித் தம்பிரான் ஆவணி மூல நாள் வழிபாடு செய்துகொண்டு 5-9-49-ல் வருவார். மற்ற ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றும், ஆவணி மூலத்தன்று (1-9-49) செட்டில்மெண்ட் எழுதிக் கொண்டு வரும்படியும் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

குன்றக்குடிக்குச் செல்வது முடிவானவுடன் கந்தசாமித் தம்பிரானுக்கு ஒரு கடமை உணர்வு தோன்றியது. அந்தக் கடமை பற்றித் தீவிரமாகச் சிந்தித்தார்; செயல்படவும் துணிந்தார். கந்தசாமித் தம்பிரான் தம் பெற்றோரைப் பற்றி எண்ணினார்.

குடும்பத்துக்குச் சொத்துகள் உண்டு. ஆனால், அவை பெற்றோர் பெயரில் இல்லை. கந்தசாமித் தம்பிரானின் (அரங்கநாதனின்) தந்தை, பரம்பரைச் சொத்துக்களை விற்று முதலாக்கி இல்லை முதலாக்கவில்லை! செலவழித்து விட்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை இயல்பாகத் தாராள மனம் படைத்தவர். எல்லோ ருக்கும் உதவி செய்வார். அதுவும் கார்காத்த சைவ வேளாளர் மரபினர் என்றால் பிள்ளையவர்களின் உதவி நிச்சயம் கிடைக்கும். பால் ஊற்றும் பையனாக இருந்த அந்தக் காலத்தில் அரங்கநாதன் மூலம் பிள்ளைக்கு அரங்கநாதன் குடும்பம் அறிமுகமாயிற்று. அதன் பிறகு அரங்கநாதன் (கந்தசாமித் தம்பிரான்) குடும்பத்தின் சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தீர்ந்து வந்தன. பிள்ளை வழக்கறிஞர் பட்டம்

பெற்றவர்கள். தமிழ்த் துறை அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட துறை. அரங்கநாதன் குடும்பம் சொத்து இழந்து நிற்கும் நிலையில் பரம்பரைச் சொத்தை விற்க உரிமை இல்லை என்ற அடிப்படையில் சீகாழி முன்சிப்கோர்ட்டில் வழக்கினைத் தொடுத்துச் சொத்தை மீட்டுத் தந்தார்கள் பிள்ளை.

வழக்கில் அரங்கநாதன், அவருடைய மூத்த அண்ணன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாதிகள். நேர் மூத்த அண்ணன் பாண்டுரங்கன், அரங்கநாதனின் பெரிய தந்தைக்குப் பிள்ளை போனதால் அவரைச் சேர்க்கவில்லை. ஆனால், பாண்டுரங்கன் பிள்ளை போன இடத்தில் சொத்து மீட்பு முயற்சியில் முழு ஒத்துழைப்பு தராததால் தோல்வி அவருக்கு ஒன்றும் இல்லை. அரங்கநாதன் பேரிலும் கோபாலகிருஷ்ணன் பேரிலும் சொத்து கந்தசாமித் தம்பிரான் (அரங்கநாதன்) தன் பங்குச் சொத்தைப் பிரித்துப் பெற்றோருக்குத் தர எண்ணினார். குன்றக்குடிக்குப் போன பிறகு அவர்கள் நிம்மதியாக வாழ! அதேபோல் பாண்டு ரங்கனுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் எண்ணம், அரங்கநாதனின் மூத்த அண்ணன் அழைப்புகளுக்குச் செவி கொடுக்க வில்லை; வரவில்லை. ஆனால் வந்த செய்தி கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் உதவியை நாடிவிட்டார் என்பது. வழக்கறிஞர்கள் "இந்துச் சட்டப்படி சந்நியாசியாகப் போனவர்களுக்குக் குடும்பச் சொத்தில் உரிமையில்லை" என்றனர்.

கந்தசாமித் தம்பிரான் அதிர்ச்சியடைந்தார். ஆனால், மனித இயல்களை, உறவுகளை இழந்துவரும் சொத்தினால் பயன் என்ன? இந்த நிலையில் கந்தசாமித் தம்பிரான் தொடர்ந்து முயற்சி செய்து நீண்ட விவாதத்துக்குப் பிறகு குடும்பச் சொத்து நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இரண்டு பாகம் மூத்த அண்ணன் கோபாலகிருஷ்ணனுக்கு, ஒரு பாகம் பிறப்புரிமை, மற்றொரு பாகம் அதுவரையில் உழைத்துக் குடும்பத்தைப் பாதுகாத்ததற்காக!,

அரங்கநாதனுக்கு ஒரு பாகம், பாண்டுரங்கனுக்கு ஒரு பாகம் என்று பிரித்துப் பத்திரம் எழுதப் பெற்றது! அரங்கநாதனுடைய பங்கு பெற்றோர் பெயருக்குப் பத்திரம் எழுதிப் பதிவு செய்யப்பட்டது. பெற்றோருக்குப் பிறகு அவர்கள் விருப்பம் போல செய்து கொள்ளலாம் என்பது பத்திரத்தில் கண்ட விதிகள். இந்தப் பணிகள் முடிந்தது.

இந்தப் பொறுப்பை நிறைவேற்றியதன் மூலம் பெற்றோர் குன்றக்குடிக்கு வருவது தவிர்க்கப்படும் என்பது கந்தசாமித் தம்பிரானின் கருத்து. மனிதனுக்கு இயல்பாய் அமைந்த முதல் சுற்றம் ஈன்றெடுத்த தாய்வழி அமைவது. ஆனால், மனிதன் வளர்ந்து அன்பினால் மற்றவர்களையும் சுற்றமாக்கிக்கொண்டு வாழ்தல் வேண்டும். அன்பினால் அமைந்த சுற்றம் அறநிலையங்களைச் சார்ந்து அமைதல் முறை. ஈன்றவழிச் சுற்றத்துக்கு தடையில்லை எனினும், ஆக்கம் வழங்குதல் இல்லையென்பது ஆன்றோர் கண்ட மரபு.

பெற்றோர் மூத்த பிள்ளையிடத்திலேயே இருந்தனர். அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் தங்கள் பங்கை எழுதிக்கொடுத்துவிட்டார்கள். இப்போது பெற்றோர் இல்லை. மூத்த சகோதரரும் இல்லை. அந்தக் குடும்பத்தை எடுத்து நிறுத்தும் முயற்சியில் அரங்கநாதனின் ஊக்கம் வரவேற்கப்படவும் இல்லை. இன்று அந்த குடும்பத்துக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஏதும் இல்லாது போனது ஒரு குறையே! அந்தக் குடும்பத்தில் உருவாக்கப்பட்ட அறக் கட்டளைப் பணிகள் அரங்கநாதன் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தபோது இருந்த நிலையே இன்றும்! தர்ம கர்த்தாக்கள் மாறுகிறார்கள். ஆனால், தர்மம் நடப்பதில்லை!

16

{{gap}குன்றக்குடியில் 5-9-1949 அன்று காலை பத்து மணியளவில் கந்தசாமித் தம்பியாரன், ரீமத் தெய்வ

சிகாமணி அருணாசலத் தேசிகர் என்ற தீட்சாநாமத்துடன் சின்னப்பட்டமானார். ஆதீன மடங்களின் மரபுப்படி, ஆதீனக் குருமுதல்வர் பெயர் முதற்பெயராகவும், தமது ஆசிரியர் வைக்கும் தீட்சாநாமம் இரண்டாவது பெயராகவும் நின்று விளங்கும்.

குன்றக்குடி ஆதீனம் திருவண்ணாமலையில் நிறுவப் பெற்றது திருவண்ணாமலை ஆதீனக் குருமுதல்வர், திருவண்ணாமலைத் திருக்கோயிலின் முதன்மைச் சிவாச் சாரியாராக இருந்த தெய்வசிகாமணி அவர்கள். இல்லறவாசி. ஆகமஞானம் கைவரப்பெற்றவர். காலப் போக்கில் இந்த ஆதீனம் சைவவேளாளர் கைக்கு மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் சாதி உணர்வுகள் நெகிழ்ந்து கொடுப்பனவாகவும் மாற்றத்துக்குரியனவாகவும் இருந்துள்ளன என்பது ஒரு சிறந்த உண்மை. காலம் செல்லச் செல்ல இந்தச் சமய நிறுவனங்கள் சாதிமுறையில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து விட்டன என்ற வருந்தத்தக்க உண்மையைச் சொல்ல, ஏற்க வெட்கப்பட வேண்டிய நிலை. மிகவும் பிற்காலத்தில்தான் குன்றக்குடி ஆதீனம் துறவு நெறிக்கு மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். குன்றக்குடி ஆதீனகர்த்தர் பூணுரல் அணிய வேண்டும். நாள்தோறும் நித்யாக்கினி வளர்க்க வேண்டும். இந்த நடைமுறை இன்றும் இருக்கிறது.

திருவண்ணாமலைத் திருக்கோயில் சுவரில் குரு முதல்வர் திருமேனி, அண்ணாமலையாரை வணங்கிய நிலையில் இருக்கிறது. ஆதிகுருமுதல்வர் சகலாகமப் பண்டிதராக விளங்கிய அருணந்தி சிவாச்சாரியாரின் மாணாக்கர். வல்லாள மகாராஜாவுக்கும் ஆதிகுரு முதல்வருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.

குன்றக்குடி ஆதீனத்தின் கிளை மடங்கள் தமிழ்நாடு முழுதும் பரவியுள்ளன. திருவண்ணாமலை ஆதீனச் சொத்துக்கள் செங்கற்பட்டு, சென்னை மாவட்டங்களில் அக்காலத்தில் விழுதுவிட்டுத் தழைத்திருந்தன. ஆதீனகுரு முதல்வரின் ஜீவசமாதி திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையில் திருக்கோயிலாகக் கற்றளியாக அமைந்துள்ளது. ரமண மகரிஷி இந்த ஆதிகுருமுதல்வர் சந்நிதியில் பல ஆண்டுகள் தவம் செய்திருக்கின்றார். இன்றும் கண்கண்ட தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

கி.பி. 1680-1700 பட்டத்தில் இருத்தவர் நாகலிங்கத் தேசிகர். இவர் ராமேசுவரம் யாத்திரை வந்த இடத்தில் அப்போது ராமநாதபுரம் மன்னர் ரகுநாதசேதுபதி, குரு மூர்த்தியை இந்தப் பகுதியிலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டார். குருமூர்த்தி முற்றாக இசையவில்லை. ஆயினும், சேதுபதி மன்னர் வழங்கும் அறப்பணிக்காகத் தக்காரை வைத்து நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டார். அப்போதுதான் பிரான்மலை வகைத் திருக்கோயில்கள் ஐந்து பிரான்மலை (சதுர்வேதமங்கலம்), திருப்புத்துரர், குன்றக்குடி, திருக்கோளக்குடி, தேனாட்சியம்மன்கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. தலைமையகம் பிரான்மலையில் அமைந்தது. தம்பிரான்களை வைத்துத் திருக்கோயில் நிர்வாகம் நடந்தது. பின், கி.பி. 1790-1800 ஆண்டுகளில் ஆதீனத் தலைமையகம் படிப்படியாகக் குன்றக்குடிக்கு மாறியது.

தமிழ்நாட்டின் திருக்கயிலாயப் பரம்பரை ஆதீனத் திருமடங்களில் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனமும் ஒன்று. செந்தமிழுக்கும் சிவாகம நெறிக்கும் தொண்டு செய்த ஆதீனம் இது. நல்ல நிர்வாகிகள் பலர் இருந்து ஆதீனத்தை வளர்த்து வந்துள்ளனர். ஆயினும், கி.பி. 1905-1928 ஆண்டளவில் வேண்டாத வம்புகளை விலைக்கு வாங்கியதாலும், தியாகம்-தொண்டு என்பதற்குப் பதிலாக மடாதிபதி என்பது ஒரு பதவி என்ற மனப்போக்கு வளர்ந்ததாலும் ஆதீனம் அல்லல்பட்டதை எண்ணி வருந்தாமலிருக்க முடியாது. இந்தச் சூழ்நிலையிலும் நல்ல நிர்வாகத் திறனும், சமூக மனப்பான்மையும், புலமையும் உடைய ஆதினகர்த்தர்களும் தம்பிரான்களும் இருந்தனர் என்பது நினைத்து மகிழ வேண்டிய ஒன்று.

மருது சகோதரர் (கி.பி. 1780-1801) காலம், குன்றக்குடி, ஆதீனத்தில் சங்கரலிங்க முனிவர் என்ற தம்பிரான் இருந்தார், சங்கரலிங்க முனிவருக்கு மருது பாண்டியர் பாத காணிக்கையாக வைத்த-செம்பொற்காசுகளை ஏற்க மறுத்து, அதை வெள்ளையரோடு போராடப் பயன்படுத்திக் கொள்ளும்படி திருப்பித் தந்த பெருந்தகை அவர். ஆனால், மருது பாண்டியர் அந்தப் பொற்காசுகளைக் கொடுத்து ஒரு கிராமத்தை வாங்கி செம்பொன்மாறி என்ற பெயர் வைத்து அறக்கட்டளை ஒலை எழுதி, குன்றக்குடி ஆதீனத்தின் குருமுதல்வராய் வருவோர் நலனுக்குரிய கட்டளைச் சொத்தாக அதை உரிமைப்படுத்தினர். சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புகொண்டு அதை ஊக்குவித்த பெருமை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கும் உண்டு.

38-வது ஆதீனகர்த்தர் ஆறுமுகத் தேசிகர். இவர் காலத்தில் ஆதீனத்தில் சபாபதித் தம்பிரான் இருந்தார். இந்தத் தம்பிரானிடம் நிர்வாகப் பொறுப்பை விட்டிருந்தார் ஆதீனக்கர்த்தர். ஆதீனகர்த்தருக்கும் சபாபதித் தம்பிரானுக்கும் நிர்வாகத் துறையில் கருத்து மாறுபாடுகள் வந்ததுண்டு. ஆயினும், அவை புகையாமலும் எரியாமலும் ஆதீன நலனுக்காக இருவரும் காத்துக்கொண்டவர்கள். ஆதீன - கர்த்தர் நல்ல தமிழறிஞர். பூஜை, வழிபாடுகளில் தம்பிரான் நல்ல உழைப்பாளி! ஆதீனத்தின் பொருளாதாரச் செழிப்புக்கு வழிகண்டவர். குன்றக்குடி ஆதீனத்தைப் பொறுத்தவரையில் சபாபதித் தம்பிரான் செய்த பணி மகத்தானது. - -

43-வது பட்டம் பொன்னம்பலத் தேசிகர். இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக வந்ததே ஒரு போராட்டத்தின்

வழிதான்! அவர் வாழ்க்கையில் தொடர்ந்து போராட்டம்! வாகீசம்பிள்ளை என்பவர் பொன்னம்பலத் தேசிகர் என்ற திருநாமத்துடன் பட்டத்துக்கு வந்தார். மடத்தில் ஒதுவாராகவும், நிர்வாகப் பணிப் பொறுப்பு முகவராகவும் இருந்தவர், இவர் நன்றாகத் திருமுறை பாடுவார். வீணை வாசிப்பார். இவருக்கு முந்திய மகாசந்நிதானம் அண்ணாமலைத் தேசிகர் பட்டத்தில் இருந்த காலத்தில் வட்டிக்கடைக்காரர்களிடம் சிக்கிக் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தார். வட்டிக்குக் கடன் வாங்கினாலே வாழ்ந்தாற்போலத்தான்! அதனால் தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பதவிக் காலத்தில் வட்டிக்கடைகளை அகற்றச் சட்டமியற்றினார்.

அந்தக் காலத்தில் சில பேரங்களை இழப்புக் கருதி வாகீசம் பிள்ளை மறுத்து வந்துள்ளார். இதனால் வட்டிக் கடை முதலாளிக்கும் வாகீசம் பிள்ளைக்கும் பகை மூண்டது. பகை வன்முறை அளவுக்குக்கூட வளர்ந்தது. அதனால் வாகீசம் பிள்ளை ஆத்தங்குடியில் ராம. கா. அரு. வள்ளியப்பச் செட்டியார் வீட்டில் சில நாட்கள் மறைவாக இருந்தார். இந்த வள்ளிப்பச் செட்டியார் பேரர் ஏ.ஆர். லட்சுமணன், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியில் இப்போது 'டீன்' ஆகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், அண்ணாமலைத் தேசிகர் தமக்கு அடுத்த வாரிசு நியமிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாயிற்று. வட்டிக்கடை முதலாளி, சண்முகத் தம்பிரான் என்பவரை மடாதிபதி ஆக்க முயற்சி செய்தார். அதற்குரிய கைக்கூலிகளும் கிடைத்தனர். தனக்கு அனுசரணையாகக் குன்றக்குடி மகாசந்நிதானம் எண்ணம் கொள்ளத்தக்கவாறு அமைத்துக்கொள்ள, குன்றக்குடி மகாசந்நிதானத்தை யாரும் சந்திக்க முடியாதபடி தடை செய்து காவல் போட்டு விட்டார். திருமடத்துக்குள் யாரும் பிரவேசிக்க இயலவில்லை. முறை மன்ற ஆணை வேறு பெற்றுவிட்டார். எனவே, மடம்-போலீஸ் காவலில் இருந்தது.

குன்றக்குடி மகாசந்நிதானம், சண்முகத் தம்பிரானுக்குப் பட்டம் கட்ட விரும்பவில்லை. வாகீசம் பிள்ளைக்குக் காவி கொடுத்து, அவரையே தனது வாரிசாகமடாதிபதியாக்க விரும்பினார். இந்தக் கருத்து உருவாக்கத்தில் பங்குபெற்றிருந்தவர்-குன்றக்குடித் திருக்கோயில் ஸ்தானிகம் து.அ. அண்ணாசாமி குருக்கள். இவர் துடிப்பு மிக்க இளைஞராக இருந்தபோது வாகீசம் பிள்ளையோடு பழக்கம்; நல்ல தோற்றமுடையவர்; புத்திசாலி. து.அ. அண்ணாசாமி குருக்கள், வாராப்பூர் சின்னக்கண்ணு சேர்வை, சிதம்பரம் பிள்ளை, அம்மாளம்மாள், பழனியாண்டி சேர்வை ஆகியோர் அடங்கிய குழு, வட்டிக்கடை முதலாளியின் கைக்கூலிகளை எதிர்த்து வாகீசம் பிள்ளையை மடாதிபதியாக்க முயற்சி செய்தது. இத்தனை பேரும் வெளிப்படையாக வட்டிக்கடை முதலாளியை எதிர்க்க வில்லை. சின்னக்கண்ணு சேர்வை மடத்துக் காவற்காரர். ஒரு காலகட்டத்தில், முதலாளியின் ஆட்கள் மடத்துக்குள் துழைய முயன்ற போது அடித்து விரட்டிக் காயம்பட்டவர். பழனியாண்டி சேர்வை வாகீசம் பிள்ளையின் நண்பர். வாகீசம் பிள்ளையுடன் ஆத்தங்குடியில் இருந்தவர். அம்மாளம்மாள் காவல் துறையை "அசந்து" நிற்கும்படி செய்தவர்.

திட்டம் விரிவாயிற்று. குன்றக்குடி மடத்தின் கொல்லைப் புறத்தில் மடத்தையும், அண்ணாசாமி குருக்கள் வீட்டையும் பிரிப்பது ஒரு சுவர். அந்தச் சுவர் வழியாக இரவு நேரத்தில் வாகீசம் பிள்ளையை மடத்துக்குள் இறக்கிவிடுவது; நாவிதரையும் இறக்கிவிடுவது. யாருக்கும் தெரிவிக்காமல் வாகீசம் பிள்ளைக்கு இரவோடிரவாகப் பட்டம் கட்டி விடுவது என்பது முடிவு. திட்டமிட்டபடி எல்லாம் நிறைவேறின.

இப்படிப் பல போராட்டங்களுக்கிடையில் வந்த (வாகீசம்பிள்ளை) பொன்னம்பலத் தேசிகர், மடத்து நிர்வாகத்தை நன்றாக நடத்தினார். வட்டிக்கடை முதலாளியிடம் ஈன ஒத்தியாக இருந்த சொத்துக்களை மீட்க வழக்குத் தொடுத்தார். வாகீசம் பிள்ளை என்ற பெயரில் இவர் நிர்வாகியாக இருந்த போது வைத்த ஒத்தி! அதனால், வட்டிக் கடைக்காரர் பிரமாணம் கேட்க மகாசந்நிதானத்தை நீதி மன்றத்துக்கு அழைத்தார், மடாதிபதி நீதிமன்றத்துக்கு வர மாட்டார் என்று கருதி! ஆனால், மடத்தின் நலம் கருதி நீதிமன்றத்துக்கும் போக பொன்னம்பலத் தேசிகர் ஒப்புக் கொண்டார். அப்போதுதான் மடாதிபதியின் பயண வசதி கருதி, முதன்முதலாக மடத்துக்கு ஒரு கார் வாங்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு மடாதிபதி வரப் போகிறார் என்பதை அறிந்தவுடன் வட்டிக்கடை முதலாளி சமாதானத்துக்கு முயன்றார். சமாதானம் கைகூடியது. 'பாதி சொத்துக்களை உடனடியாக ஆதீனம் வசம் ஒப்படைக்க வேண்டும். மீதியை இருபத்தைந்து ஆண்டுகளில் ஆதீனத்தில் ஒப்படைக்க வேண்டும்' என்று முடிவானது. இந்தச் சொத்துக்களை நாம் வந்துதான் மீட்டோம்.

பொன்னம்பலத் தேசிகருக்குப் பின் ஆறுமுகத் தேசிகர் பட்டத்துக்கு வந்தார். இவர் காலத்தில், இருந்த சொத்துக்கள் ஒழுங்காகவும் சிறப்பாகவும் பராமரிக்கப் பெற்றன. படு சிக்கனம்! இவர்கள்தான் நம்முடைய ஞானாசிரியர்; குரு மூர்த்தி.

17

நாம் சின்னப்பட்டம் ஆனதும் திருமடத்தின் மாடியில் இருப்பு. யாதொரு பணியும் இல்லை. ஆதலால், நிறையப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. குன்றக்குடி துச. துரைசாமி குருக்கள் சாத்திர்ம், ஆகமங்களில் போதிய பயிற்சியுடையவர். இவரிடம் நாம் வடமொழி படித்துக்கொண்டோம்.

திருக்குறள் வகுப்புத் தொடங்கினோம். வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் மடத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தினோம். இந்த வகுப்பில் பத்து மாணவர்கள் படித்தனர். மாணவர்கள் என்று கூறுவது தவறு. நல்ல தகுதி வாய்ந்த பத்துப் பேர் படித்தனர். அவர்களுள் ஆத்தன்குடி கா.அரு.கா. காடப்ப செட்டியார் ஒருவர். இவர் நல்ல இலக்கியப் பிரியர்; இலக்கியத்தை அனுபவிப்பவர்; அழகுப் பிரியர் எதையும் நன்றாகச் செய்பவர். இவர் அன்று முதல் இன்று வரை நமக்கு மிகவும் நெருங்கிய உழுவலன்பராக விளங்கி வருகிறார். அவர்தம் பிள்ளைகளும் அப்படியே! அடுத்து பலவான்குடி கும. சுப்பிரமணியன் செட்டியார் ஒருவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ. படித்துத் தேறியவர். இவர் தகப்பனார் குமரப்ப செட்டியார் நமது உழுவலன்பர். இவரும் இவருடைய குடும்பத்தினரும் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அடுத்து, குன்றக்குடியில் இருந்த கு.மு. வீராசாமி என்பவர். இவர் நல்ல மனிதர். நாவிதர் ரா. சுப்புராமன், இன்னும் பலர்.

திருக்குறள் வகுப்பைத் தொடர்ந்து திருமுறை வகுப்பு தொடங்கப் பெற்றது. புலவர் தா. குருசாமி, புலவர் வை.சு. தண்டபாணி ஆகியோர் ஆசிரியர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் பத்துப் பத்துப் பேர் பயின்றனர்.

இடையிடையே சதுரப் பாட்டின் வழி அணுகி மகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்று வெளியில் சொற்பொழிவுகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்தோம்.

அந்தச் சொற்பொழிவுகளில் கவனத்துக்குரியன ஐந்து, முதலாவது மதுரை தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு. தலைப்பு: 'தண்பாண்டி நாட்டில் தமிழ்' என்பது. அப்போது தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சீனிவாச ஐயங்கார் நல்ல வண்ணம் பேச்சு அமைந்ததாக அறிஞர்கள் பாராட்டி மகிழ்வித்தனர். இரண்டாவது திருப்புத்தூரில் வழக்கறிஞராகவும் கூட்டுறவாளராகவும் சமையத்தொண்டராகவும் பணி செய்து சிறப்புற்று விளங்கிய அ. ராமச்சந்திரன் பிள்ளை, ராம நாதபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராகப் பணி செய்ததற்காக நடந்த பாராட்டு விழா! இந்த மேடை மடத்தின் பகுதியில் அமைந்தது. கிராமங்களில் அறிமுக மாகத் துணை செய்தது. மூன்றாவது, காரைக்குடி கம்பன் விழா-நாட்டரசன் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 'புதரிடை மலர்' என்ற தலைப்பில் திரிசடையைப் பற்றிய பேச்சு, நான்காவது ராமநாதபுரத்தில் நடந்த சைவசித்தாந்த சமாஜ மாநாட்டில் இளைஞர் மாநாட்டுக்குத் தலைமையேற்று நிகழ்த்திய உரை.

ஐந்தாவது, கூத்தளூர் கிறித்துவ தேவாலயத்தில் நடந்த 'கடவுள் தின' விழாப் பேச்சு. இந்த விழாவை அப்போதைய கூத்தளூர் பங்குத் தந்தை அருள்மிகு பால்ராஜ் ஏற்பாடு செய்தார். இந்த விழாவில் திருச்சி ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். நாம் தலைமை. நமது தலைமையுரையில் ரோமன் ரோலண்டு, அண்ணல் காந்தியடிகளைப் பாராட்டிய மொழிகளை-அதாவது 'நான் இயேசுவை நினைக்கும்போது காந்தியடிகளை நினைக்கிறேன்' என்று சொன்ன வாசகத்தை எடுத்துக் காட்டிப் பேசினோம். இயேசுவை, காந்தியடிகளுடன் ஒப்பிட்டது பேராசிரியர் சீனி வாசனுக்குப் பிடிக்கவில்லை. மறுத்துப் பேசினார். மறுத்துப் பேசியதுடன் இந்து சமயக் கோட்பாடுகளைக் குறைத்தும் பேசினார். நமது நிலை இடர்பாட்டுக்குரியதாயிற்று. நாம் முடிவுரையில் வன்மையாக மறுத்துப் பேசினோம். இளமைக் காலம். ஆதலால் ஆவேசமான பேச்சு! அதோடு சைவத்தின் மேல் உள்ள ஈடுபாட்டினால் அழுதுவிட்டோம்! அவையில் இருந்த இந்து மக்களிடம் நமது பேச்சுக்கு நல்ல வரவேற்பு! நிகழ்ச்சி முடிந்ததும் பயணமானோம்! விழா அமைப் பாளர்கள் மாலையிலும் இருக்கும்படி கேட்டுக்கொண் டார்கள். முதலில் இருந்த திட்டமும் அதுதான்! நாம் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்ததோம்! இந்து மக்கள் சாரை சாரையாக வந்து பாராட்டியும் வணங்கியும் திருநீறு பெற்றும் சென்றனர். இது ஒரு நல்ல அறிமுகமாயிற்று. மாலை 3.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவேண்டும். மதியம் 2 மணிக்கு எதிர்பாராமல் பெரும் மழை பெய்யத் தொடங்கியது. மாலை நிகழ்ச்சி நடத்த இயலவில்லை. மக்கள் மத்தியில் "அடிகளார் மனத்தைத் துன்புறுத்திவிட்டனர். பாவம். அழுதார்! அதனால் கூட்டம் நடத்த திருவருள் அனுமதிக்கவில்லை" என்று பரவலாகப் பேசிக்கொண்டனர். ஆனால், இது உண்மையல்ல, விழாவை நடத்திய பங்குத் தந்தை மற்றும் கிறித்துவப் பெரியார்கள் பேராசிரியர் சீனிவாசனின் பேச்சை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, நம்மிடம் தங்களுடைய நல்லெண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர். சொல்லப்போனால் அன்றுதான் கிறித்துவத்தைப் பற்றிய மதிப்பீடு நம் வாழ்க்கையில் தொடங்கியது. சமய சமரச உணர்வுகளுக்குக் கால்கோள் செய்ததே கூத்தளுர் விழாதான்.

'ஒர் ஆட்சிக்கு பின்வரும் ஆட்சிக்கும் உள்ள இடைவெளி அவ்வளவு சிறப்பாக அமையாது' என்று இலக்கியங்கள் கூறும். ஆதீனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் பெரிய பட்டம் சின்னப் பட்டம் என்ற அமைப்பின் ஆயுள் நீடிப்பது நல்லதல்ல நாம் 33 மாதம் சின்னப் பட்டமாக இருந்தோம். முதல் ஆறு மாதங்கள் சிக்கலின்றி ஓடியது. மெள்ள மெள்ள வாடகைதாரர்கள். குத்தகைதாரர்கள் நம்மைப் பார்க்கத் தலைப்பட்டனர். இது ஆதீனம், திருக்கோயில் அலுவலகங்களில் வேலை பார்த்தவர்களுக்குப் பிடிக்க வில்லை; ஏன்? எதனால் உய்த்துணர்க!.

நமது நாட்டில் கையூட்டு (லஞ்சம்) தோன்றிப் பலநூறு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அது சிரஞ்சீவித்தன்மை வரமும் பெற்றிருக்கும் போலும்! இந்தத் தலைமுறையில் நாம் செய்திருப்பதெல்லாம் கையூட்டை (லஞ்சத்தை) தேசிய மயமாக்கி இருப்பதுதான்! மாமூல் பாதிக்கும் என்று அஞ்சியவர்கள் கோள் சொல்ல ஆரம்பித்தார்கள். 1950-தைப் பூசம்! திருவண்ணாமலை சமயச் சொற்பொழிவுக்கு நாம் சென்றிருந்தோம்! புகை வண்டிப் பயணம். பேசிமுடித்து விட்டு அன்று இரவே பயணமாகி காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். ஆதீன மடத்துக் கார் வரவில்லை, அலுவலகத்தைச் சேர்ந்த எழுத்தர் சா. சொக்கலிங்கம் என்பவர் மட்டும் வந்திருந்தார். இவரும் ஆதீனச் சார்பிலோ மகாசந்நி தானத்தின் உத்தரவுப்படியோ வரவில்லை. இவர் நம்மால் பணியில் சேர்க்கப் பெற்றவர். அந்த நன்றி உணர்வில் வந்திருந்தார். இவர் நம்பால் நல்லன்பு கொண்டவர். இவர் இப்போது ஆதீன அலுவலகத்தில் வருவாய்த் துறைப் பொறுப்பாளராகப் பணி செய்கிறார். பணி செய்வதில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையவர். -

ஒரு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு இருவரும் குன்றக்குடி வந்தோம். காரில் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. மெளனமே! குன்றக்குடி வந்தவுடன் பூஜை மடத்தில் வழிபாடு நிகழவில்லை என்பதை அறிந்து, வழக்கம் போல் நாம் வழிபாட்டுக்குச் சென்றோம். வழிபாடு முடிந்தவுடன் சொக்கலிங்கத்தை தனிமையில் அழைத்து, "என்ன நடந்தது?" என்று கேட்டோம்! சா. சொக்கலிங்கம், "மகா சந்நிதானத்துக்குக் கோபம் வந்திருக்கிறது. செட்டில் மெண்ட்டை ரத்து செய்ய மதுரை சென்றிருக்கிறார்கள்" என்று சொன்னார். இந்தச் செய்தி நம்மைப் பாதிக்கவில்லை. இந்த உலகத்தில் இன்பம் மட்டுமா உண்டு; துன்பமும் உண்டு! இனிமையும் உண்டு! கசப்பும் உண்டு! இனிமையையும் கசப்பையும் சேர்த்து விழுங்குவதுதான் ஒழுக்கம். முதல் நாள் இரவு கண்விழிப்பு. ஆதலால் தூங்கச் சென்றுவிட்டோம். நிம்மதியாகத் துங்கினோம்! மாலைப் பொழுதாகி விட்டது. மகாசந்நிதானம் மதுரையிலிருந்து வரவில்லை. இரவு எட்டு மணிக்குத்தான் வந்தார்கள். ஆதீனமடம் வழக்கம்போல் இருந்தது. நாம் தங்கியிருந்த அறைக் கதவை இரவு பத்து மணிக்கு ஆதீனத்தின் உயர் அலுவலர் வி. கிருஷ்ணன் தட்டினார்.

18

இரவு பத்து மணிக்கு நம்மை நாடி வந்த ஆதீனத்தின் உயர் அலுவலர் வி. கிருஷ்ணன் ஏதோ சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமல் தவித்தார். நாம் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கொடுத்துக் கேட்டோம்!

மகாசந்நிதானத்திடம் சில அலுவலர்கள், சின்னப் பட்டமாக இருக்கும்போதே அதிகாரத்தைப் பெற நாம் முயற்சி செய்வதாகவும் மகாசந்நிதானத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகச் சொன்ன தாகவும் அதை நம்பி மகாசந்நிதானம் கோபத்தில் செட்டில் மெண்டை ரத்துசெய்ய மதுரை வழக்கறிஞர் சீனிவாச ஐயங்காரிடம் சென்றதாகவும், ஆனால், சீனிவாச ஐயங்கார் நிறைய எடுத்துக்கூறி செட்டில்மெண்டை ரத்து செய்யும் ஆலோசனையைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார் வி.கிருஷ்ணன்.

அதன்பின் திருப்புத்துாருக்கு வந்து வழக்கறிஞர் ராமசந்திரன் பிள்ளையிடமும் ஆலோசனை கேட்டார்” என்றார். ராமச்சந்திரன் பிள்ளை நல்ல வழக்கறிஞர். திருப்புத்தூரில் வாரவழிபாடு நடத்தியவர். ஆதி திராவிடர்களுக்கு ராஜாஜி பெயரில் ஒரு விடுதியும் நடத்தியவர். இப்போது இவர் அமர நிலை. இவரது அருமை மகன் ரத்தினசாமி, மாவட்ட உரிமையியல் மன்ற நடுவராகப் பணி செய்து வருகிறார். “வழக்கறிஞர் ராமச்சந்திரன் பிள்ளையும் செட்டில்மெண்டை ரத்துசெய்யும் யோசனையை வரவேற் காமல் நிறைய எடுத்துக்கூறி அனுப்பி விட்டார்” என்ற செய்தியையும் வி. கிருஷ்ணன் கூறினார்.

"சரி... போங்கள்!” என்று கூறி வி. கிருஷ்ணனை அனுப்பிவிட்டு மீண்டும் தூங்கினோம். நமது மனதில் எந்தச் சலனமும் இல்லை.

மறுநாள் காலை வழக்கம்போல் பூஜைமடத்தில் வழிபாடு செய்துவிட்டு, மகாசந்நிதானத்திடம் திருநீறு பிரசாதம் கொடுக்கச் சென்றோம்! தந்தோம்! மகாசந்நிதானம் வாங்கிக்கொண்டார்கள். நமக்குத் திருநீறும் தந்தார். ஆனால், முகத்தோடு முகம் பார்க்க இயலவில்லை. சிரித்து நோக்கும் பார்வை கிடைக்கவில்லை. இப்படிச் சில நாட்கள் ஓடின. இடையில் சா. சொக்கலிங்கம் ஒரு தவறு செய்து விட்டார். அதாவது, இந்தப் பிணக்குச் செய்தியை தருமபுரம் ஆதீனத்துக்கு எழுதி விட்டார். அங்கிருந்து ஒரு அலுவலர் வந்தார். நம்மை விசாரித்தார். நாம் "ஒன்றும் இல்லை. எல்லாம் நன்றாக நடக்கிறது” என்று கூறி அனுப்பி விட்டோம்.

குன்றக்குடிக்கு வந்து தொழும்பா இருப்பதாக முடிவு செய்தபிறகு தருமபுர ஆதீனத்துக்குச் சொல்வதும் பரிகாரம் தேடுவதும் மரபன்று, கண்ணகி சொன்ன பீடன்று என்பது இல்வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. துறவறத்துக்கும் பொருந்தும் அல்லவா!

சில நாட்கள் ஓடின. வழக்கம்போல் நாம் மகாசந்நிதானத்துக்கு மாலை நேரத்தில் விசிறிக்கொண்டிருந் தோம். செவ்வி பார்த்து, செய்த பிழை யாதென அறிய மகாசந்நிதானத்திடம் விண்ணப்பித்துக் கொண்டோம். உடனே மகாசந்நிதானம் தக்கன் வேள்வித் தீயென, "நீங்கள் தான் அதிகாரத்தைப் பறிக்கச் சூழ்ச்சி செய்கிறீர்களே! நான் மரணமடைய மந்திரம் செய்கிறீர்களாமே?” என்றார், உடனே நாம் விசிறியைக் கீழே வைத்துவிட்டு மகாசந்நிதானத்தின் முன்வந்து நிலத்தின் மிசை வீழ்ந்து வணங்கி "இப்பிறப்பில் ஏதும் பிழை செய்யவில்லை. வலிந்து அழைத்தும் பட்டமேற்க மறுத்த எனக்கு அதிகார ஆசையா? ஒருபொழுதும் இருந்த தில்லை. இனிமேலும் வராது. மகாசந்நிதானம் உண்மை தெரியவேண்டும்!” என்று கூறி வேண்டிக்கொண்டு திரும்பத் திரும்ப வீழ்ந்து வணங்கினோம்.

அருகில் நின்ற ஏவலர் சின்னச்சாமி பிள்ளையிடம் சில அலுவலர்களை அழைத்து வரும்படி உத்தரவு செய்தார். அவர்களும் வந்தனர். ஒவ்வொருவரும் 'அவர் சொன்னார்! இவர் சொன்னார்!’ என்றார்களே தவிர, நிரூபணம் செய்ய வில்லை. மகாசந்நிதானம் மிகவும் வருத்தப்பட்டார். நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டார். கோள் சொல்லிய இருவரை உடனே பணியிலிருந்து நிறுத்தினார். நாம் பரிந்துரை செய்து. திரும்ப அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

மகாசந்நிதானத்துக்கு உண்மை அறியப்போதிய வாய்ப்பில்லை, முதுமை, அதோடு பணம் கிடைத்தால் சரி. பல பொருட்கள் பயனற்றவை விற்பனையாயின. ஒருநாள் "குன்றக்குடிக் கீழ்க்கோயிலில் பாத்திரங்கள் விற்க எடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சிலர் என்ற செய்தி கிடைத்தது. உடனே நாம் மடத்து முகுப்பு வழியாகப் புறப்பட்டுப் பக்கத்திலுள்ள சரவணப்பொய்கைச் சந்து வழியாகக் கீழ்க்கோயிலுக்கு ஒட்டமும் நடையுமாகச் சென்றோம். பாத்திரங்களை எடை போட்டுக் கொண்டிருந்தனர். எல்லாம் புதுப் பாத்திரங்கள்! நாம் கடுமையாகப் பேசிவிட்டு. பாத்திரங்களை அறைக்குள் அள்ளிப் போட்டுப் பூட்டினோம். இதுபற்றி அன்றுமாலை மகாசந்நிதானத்திடம் விண்ணப்பித்துக் கொண்டோம்! பாத்திரங்கள் மகாசந்நிதானத்தின் முன்கொண்டுவந்து பரப்பப்பட்டன.

19

காசந்நிதானம், வந்து பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தார்கள். எல்லாம் புதியனவாக அல்லவா உள்ளன! பழையவை ஒன்றுக்கும் ஆகாதவை என்றல்லவா கூறினார்கள் என்று வருத்தப்பட்டார்கள். இதற்குக் காரணமாக இருந்த அலுவலரைக் கடிந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் 1951 ஜூன், ஜூலைகளில் மகாசந்நிதானத்தின் திருமேனி நலம் குன்றியது. மருத்துவ மனையில் வைத்து மருத்துவம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. திருப்புத்துாரில் உள்ள ஸ்வீடிஷ் மருத்துவமனை புகழ்பெற்ற மருத்துவமனை. இந்த மருத்துவமனை அமைந்து இன்றைக்கு ஏறத்தாழ 80 ஆண்டுகளாகச் சிறந்த முறையில் மருத்துவப் பணியாற்றி வருகிறது. இந்த மருத்துவமனை தோன்றிய காலந்தொட்டு குன்றக்குடி ஆதீனத்துடன் தொடர்புடையதாக இருந்து வந்திருக்கிறது. இந்த மருத்துவ மனையிலேயே மருத்துவம் பெற்றுக்கொள்ள மகாசந்நிதானம் விரும்பினார்கள்.

மருத்துவமனையில் வைத்துப் பார்ப்பது என்ற கருத்து உருவானவுடன் ஆதீன உயர் அலுவலர்களின் ஆலோசனை நடந்தது! எதற்காக...? மகாசந்நிதானத்தை மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள யார் யாரை அனுப்பலாம் என்பதற்காக! இதற்கு அலுவலர் ஒருவரும் பணிவிடைத் தொண்டர் (Care Taker) ஒருவரும் தேவை. அலுவலராக வி. கிருஷ்ணன் என்பவரை அனுப்புவதென்று முடிவாயிற்று. பணிவிடைத் தொண்டுக்கு யாரை அனுப்புவதென்று கேள்வி பிறந்தது! அப்போதைய தலைமை எழுத்தர் ராமசாமி ஐயர் என்பவர், "சித. பேச்சிமுத்தனை அனுப்பலாம் என்றார். சித. பேச்சி முத்தன் நமக்கு அறிமுகமாகாதவர். குன்றக்குடித் திருக் கோயில் வழிவழி மரபு வயிராவி நிர்வாகம் பார்த்து வரும் தலைமுறையைச் சேர்ந்தவர்; திருவாபரணங்கள் பொறுப்பாளர்; நல்ல தோற்றமுள்ளவர். தூய்மைப்பொலிவு, அடக்கம், பணிவு என்றெல்லாம் எடுப்பிலேயே புலப்படுத்தினார். நாம் சித. பேச்சிமுத்தனிடம் மகாசந்நிதானத்தைக் கவனமாக பார்த்துக் கொள்வாயா?" என்று கேட்டோம். "உத்தரவு” என்று கூறி நம்முன் வீழ்ந்து வணங்கினார்.

மருத்துவமனையில் மகாசந்நிதானம் சேர்ந்து விட்டார்கள். ஆதீன நிர்வாகம் மருத்துவமனையிலேயே நடக்கிறது. நாம், மகாசந்நிதானத்தின் அழைப்பின் பேரிலும், தன் விருப்ப அடிப்படையிலும் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று பார்த்து வந்தோம். பலநாட்கள் உருண்டோடிவிட்டன. -

ஒரு நாள் இரவு எட்டு மணியளவில் மகாசந்நிதானத்துக்கு மயக்கம் வந்திருக்கிறது. "இது ஆபத்தான அறிகுறி. ஆயினும் முயற்சி செய்கிறோம்” என்று தலைமை மருத்துவர் ஆள்மூலம் குன்றக்குடியில் இருந்த நமக்குச் சொல்லியனுப்பு கிறார். அப்போது தொலைபேசி வசதி ஆதீனத்தில் இல்லை. உடன் மகாசந்நிதானத்தைக் காண விரும்பினோம். ஆதீனத்து கார் திருப்புத்துார் மருத்துவ மனையிலேயே நிற்கிறது. அதைக் கேட்டுப் பெற அச்சம்! அதுமட்டுமல்ல, இனிமேல் கார் வருவித்தும் போவதில் காலதாமதமும் ஆகும். வாடகைக்கு கார் எடுக்கவும் இயலாத நிலை. அதாவது நம் கையில் பணமில்லை. இந்நிலையில் அலுவலக ஏவலர் நடேசன் என்பவரின் உதவி கிடைத்தது.

நடேசன் நல்ல விசுவாசமான உறுதியான ஏவலர், அவர் மகன் ந. பழனிச்சாமி. பழனிச்சாமி மகன் பாண்டித் துரை. இவர்கள் இருவரும் இப்போது நம்மிடம் பணிசெய்து வருகின்றனர். பழனிச்சாமி படுகோபி. ஆயினும் நிறுவனப் பற்றுடையவர். பாண்டித்துரை அவர் தாத்தா போல வெகுளி யல்ல; தந்தை போல படுகோபியும் அல்ல. நல்ல பிள்ளை. வளர்ந்து வருகிறார். குன்றக்குடி சண்முகநாதன் அச்சகம் இவர் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. அறிக அறிவியல் இதழை அச்சிட்டு வருபவரும் இவரே.

நடேசனும் நாமும் ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டு திருப்புத்தூர் மருத்துவமனைக்குக் குன்றக்குடியி லிருந்து பயணமானோம் !. நாங்களிருவரும் மருத்துவ மனைக்குச் சென்றடையும் நேரத்தில் மகாசந்நிதானம் மயக்கம் தெளிந்து உணர்வுடன் இருந்தார்கள் நலம் விசாரித்தறிந்த பிறகு மகாசந்நிதானம் "எப்படி வந்தீர்கள்?" என்று கேட்டார்கள். "சைக்கிளில்” என்றார் ஏவலர் நடேசன். மகா சந்நிதானம் மிகவும் வருந்தினார்கள்; சலுகைக் கோபத்தையும் காட்டினார்கள். காரை எடுத்துக் கொண்டு போகும்படியும், கார் குன்றக்குடியிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு போட்டார்கள். அதோடு 'காரை அநாவசியமாக எடுக்க வேண்டாம்; பிரசங்கத்துக்கெல்லாம் போக வேண்டாம்” என்றும் சொன்னார்கள். அந்த உத்தரவைப் பின்பற்றினோம்.

மகாசந்நிதானத்துக்குக் குணமாகவில்லை. எனவே, மடத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். குன்றக்குடிக்கு வந்தவுடன் மகாசந்நிதானம் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பெற்றது. தருமபுர ஆதீனம் கச்சேரியில் நாம் அரங்கநாதனாக வேலை பார்த்த காலத்தில் தருமபுர ஆதீனம் 24-வது மகாசந்நிதானம், திருமேனி நலம் குன்றியிருந்தார்கள். அதுபோது இவ்வாறான சுழற்சி முறைதான் அனுசரிக்கப் பெற்றது. அந்தச் சுழற்சி முறைப்பணியில் அரங்கநாதனைச் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். ஆனாலும் அன்று அரங்க நாதன் போராடி அந்த உரிமையைக் கேட்டு வாங்கினான். ஆனால், இங்கு ஆர்வத்தோடு சிலர்தான் வந்தனர். ஆயினும் வழங்கிய பணியை எல்லோரும் ஏற்றுக்கொண்டு செய்தனர். நாட்கள் மாதங்களாகி உருண்டோடிக்கொண்டிருந்தன.

இந்த நிலையில் சேலம் குகையில் உள்ள திருக்குறட் கழகப் பொன்விழா நிகழ்ச்சிக்கு நாம் அழைக்கப் பெற்றிருந் தோம்! திருக்குறள் ஆர்வம், பொன்விழாவில் பங்குகொள்ள விருப்பம். ஆனால், மகாசந்நிதானத்தின் திருமேனி நிலை. இந்த இரண்டையும் எண்ணி அறச்சங்கட நிலையில் தவித்தோம்! நோய்வாய்ப்பட்டுப் பல திங்கள் படுத்தாலே சுற்றிலும் இருப்பவர்களுக்கு உள்ள சிரத்தை குறையும். பொன்விழாவில் கலந்துகொள்ளும் ஆர்வமே நமக்குத் தலைதுாக்கியது! ஆயினும் மகாசந்நிதானத்தின் உத்தரவு

பெறத் துணிவில்லை! மனச்சங்கடம். ஆதலால், உத்தரவு பெறாமலே சேலம் பயணம். காரை மடத்தை விட்டுச் சிறிது தூரம் தள்ளிக் கொண்டு போய்த்தான் ஒடச் செய்தோம்!

தார்மீகப் பொறுப்பைவிட மேடை விருப்பம் வெற்றி பெற்றுவிட்டது. இது தவறுதான்! ஆயினும் ஒரே நிலை நீடித்ததால் வந்த எதிர் விளைவு! ஆயினும், தார்மீகப் பொறுப்பு வெற்றி பெறுவது தள்ளப்படவில்லை.

சேலம் குகையில் திருக்குறட் கழகப் பொன்விழா. முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அன்று நமது தலைமை. மூன்று மணி நேரத்துக்கு மேல் பேசினோம்! பேச்சுக்கு வரவேற்பு இருந்தது! நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு முடிந்தது. உடனே நெஞ்சத்தில் ஒர் ஐயுறவு, துணுக்கம்! இசைவு கொடுத்தபடி மூன்று நாள் தங்க மனம் ஒருப் படவில்லை! அறச்சங்கடம் நிறைந்த சூழ்நிலையில் இரவு பதினோரு மணிக்குக் குன்றக்குடிக்குப் பயணம். அப்போது, பிச்சைராவ் என்பவர் டிரைவராக இருந்தார். நன்றாகக் கார் ஒட்டுவார். பல ஆண்டுகள் நம்மிடம் பணி செய்தார். நம்மிடம் மட்டுமே பணி செய்தார். அவருக்கு ஒரே மகன். பெயர் ஆறுகமுகம். இவர் திருமணத்துக்குப் பிறகு தந்தை வீட்டிலேயே தங்கி விட்டார். இன்று குன்றக்குடி நேருஜி பாலிதீன் கூட்டுறவுத் தொழிற்சாலையின் முன்னோடித் தொழிலாளியாகவும் நிர்வாகக்குழுத் தலைவராகவும் ஆறுமுகம் பணி செய்து வருகிறார். இவருக்கு நிர்வாக அறிவில் வளர்ச்சி இருக்கிறது. ஆறுமுகத்தின் மகன்- பிச்சை ராவ் பேரன் கி. சிங்காரவடிவேல் வளரும் இளைஞன். இவர் நம்மிடத்தில் பணி செய்கிறார்; கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர். இவரிடம் நாமும் குன்றக்குடியும் எதிர்பார்ப்பது நிறைய என்பதை அவர் அறிதல் வேண்டும்.

விடியற்காலை நாலரை மணி, மகாசந்நிதானத்தைக் காணச் சென்றோம். நல்ல நித்திரை, சித. பேச்சிமுத்தன் அருகில் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைத்

தனியே அழைத்து, "விசாரித்தார்களா?” என்று கேட்டோம்! அவர் கூறிய "இல்லை" என்ற பதில் மூச்சுவிடத் துணை செய்தது.

நீண்ட நெடுநாட்களாகக் காலை மூன்று மணி முதல் பணி தொடங்கிச் செய்வது நமது வழக்கம். எனவே, மடத்தின் தளத்துக்கு வ்ந்து ஒய்வு நாற்காலியில் சற்று நேரம் ஒய்வு எடுத்தோம். பின்பு நீராடிவிட்டுப் பூஜை மடத்தில் பூஜை முடித்து வந்தோம். அப்போது மகாசந்நிதானம் அழைப்பதாக சித. பேச்சிமுத்தன் வந்து அழைத்தார். உடனே விரைந்து சென்று அணுகியபோது சரியான சூழல் இல்லை! பருகுவதற்கு ஹார்லிக்ஸ் கொடுத்தோம். உணர்வு திரும்பியது. அருகில் இருக்கச் சொன்னார்கள். கையைத் தூக்கி வாழ்த்தினார்கள். "நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நமது மடம் கஷ்டப்பட்டது; சிக்கனமாக இருக்கவேண்டும்!” என்றார்கள்! பரிபூரணம் அடைந்துவிட்டார்கள்!

மகாசந்நிதானம் அழைத்த நேரத்தில் இருந்தது. திரு வருட்செயல்! அடிமனத்தின் ஆழத்தில் இருந்த தார்மீகப் பொறுப்பு உணர்வின் வெற்றி! உழுவலன்பு தந்த பயன்!

20

நாம் சின்னப் பட்டமாக இருக்கும் போது குன்றக்குடியில் தமிழ் விழா ஒன்று மகாசந்நிதானத்தின் இசைவு பெற்றே நடந்தது. தமிழ் விழா என்றால் சாதாரண விழா அல்ல. அது ஒரு பெரிய விழா. செட்டிநாட்டரசர் மு.அ. முத்தையா செட்டியார் அவர்கள் விழாவுக்குத் தலைமை. செட்டிநாட்டு அரசரின் - அந்தக் குடும்பத்தினரின் வண்மை நிறைந்த அரண் ஆதீனத்துக்கு என்றும் தேவை என்ற அடிப்படையில் செட்டிநாட்டரசர் விழாவுக்கு அழைக்கப்பட்டார். செட்டிநாட்டரசர் மு.அ. முத்தையா செட்டியார் நம் மீதும் நமது ஆதீனத்தின் மீதும் தனிக் கவனம் செலுத்தி வந்தார். இன்றும் அவர் அருமைப் புதல்வர் டாக்டர் மு.அ. ராமசாமி, தன் தந்தையார் போலவே இருந்துவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

செட்டிநாட்டரசர் தலைமையில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாருக்குப் பாராட்டு விழா. பண்டிதமணி வடமொழியிலும் தென் தமிழிலும் சிறந்த அறிஞர். சுக்கிர நீதியை மொழி பெயர்த்துத் தந்தவர், திருவாசகத்துக்கு 'கதிர்மணி விளக்கம் என்ற பேருரை எழுதியவர். அடுத்து ரசிகமணி டி. கே. சி. க்குப் பாராட்டு விழா. டி. கே. சி.யைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கம்பன் பாடல்களையும் காரைக்கால் அம்மயைார் பாடல்களையும் அனுபவித்துப் பாடுவார். அடுத்து-தேவகோட்டை உ. ராம மெ. சுப. சேவு. மெ. மெய்யப்ப செட்டியாருக்கும் பாராட்டு விழா. மெய்யப்ப செட்டியார் நம்மோடு உடனிருந்த ஒரு புரவலர் என்றே கூறலாம்; அவ்வளவு பரிவு, கனிந்த அன்பு.

தமிழ் விழா மிகச் சிறப்பாக நடந்தது. அதற்குப் பிறகு ஆண்டுதோறும் நடந்து வந்தது. இத்தமிழ் விழா பறம்பு மலையில் பாரி விழாவாகச் சங்க இலக்கியங்களுக்கும், திருப்புத்துாரில் திருமுறை விழாவாகத் திருமுறைத் தமிழுக்கும் இப்போது நடந்து வருகிறது.

நமது மேடைகளில் அதிகமாகத் தமிழ் அர்ச்சனை செய்தி பேசப் பெற்றது. ஒரு ஆடிக் கிருத்திகையன்று குன்றக்குடியில் தமிழ் அர்ச்சனை தொடங்கியது. அடுத்து 1953-ல் கோவை மாவட்டம் பயணம் மிகவும் பயனுடைய பயணம். கொங்கு நாட்டுத் தங்கங்கள் என்று புகழ்ந்து பாராட்டத் தக்கப் பெரியோர்கள் எல்லாம் வரவேற்று, நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்கள். ஆர். கே. சண்முகம் செட்டியார், வி.சி. சுப்பய்யா கவுண்டர், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆர். கே. சண்முகம் செட்டியார் சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற இலக்கியங்களில் ஈடுபாடுடையவர். வி. சி. சுப்பய்யாக் கவுண்டர் நல்ல பக்தர். வேளாண்மைக் குடிக்குரிய இயல்புகள் அனைத்தும் நிறைந்தவர். சி. எஸ். ரத்தினசபாபதி முதலியார் நல்ல தமிழார்வலர்; தமிழின நலம் காக்கும் பண்பாளர். நீதிக் கட்சியாளர் நல்ல கூட்டுறவாளரும்கூட! இவர்களுடைய கூட்டுறவு அந்தக் காலத்தில் மிகவும் பயன் தந்தது. வி.சி. சுப்பய்யாக் கவுண்டரின் பெருமுயற்சியால் பேரூர்த் திருக்கோயிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப் பெற்றது.

தமிழ் அர்ச்சனை, வடமொழி வெறுப்பு இயக்கமல்ல. வழிபாடு-இதயங்கலந்ததாக அமையவேண்டும். அர்ச்சனையில் வழிபடுவோரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். கடிகாரத்தின் பெண்டுலம் அசைந்தால் மட்டும் போதாது. கடிகாரத்தின் முள்கள் நகர்ந்து காலம் காட்ட வேண்டும். அதுபோல திருக்கோயில்களில் மணிகள் அசைந்தால் மட்டும் போதாது, மனித இதயங்கள் அசையவேண்டும். நெகிழ்ந்து கொடுத்துப் பண்பாட்டு வளர்ச்சியைக் காட்ட வேண்டும். கல்லைப் பிசைந்து கனியாக்குதல் என்று திருவாசகம் கூறும். ஆன்மாவின் புலன்களை உழுது பக்குவப்படுத்தி வளர்த்தெடுப்பது வழிபாடு, மனிதன் விலங்கல்ல; மனிதனுமல்ல. அவனை விலங்குத் தன்மையிலிருந்து பையப்பைய மீட்டு மனிதனாக்கி அதன்பின் அருள்நலம் செறிந்த மாமனிதனாக்குவது வழிபாட்டின் நோக்கம். ஊனும் உயிரும் உணர்வும் உருகச் செய்யும் இயல்பு தாய்மொழிக்கே உண்டு. அதிலும் தமிழ், அருளியல் நலம் செழிப்பதற்கே முகிழ்த்த மொழி. ஆக, மனிதம் தோன்றவேண்டும். இதுதான் தமிழ் அர்ச்சனையின் விழுமிய நோக்கம். நாடு தழுவிய நிலையில் தமிழ் அர்ச்சனை விவாதப் பொருளாக மாறியது.

எந்த ஒரு செய்தி மக்கள் மன்றத்தில் பரவலாக விவாதிக்கப் பெறும் பொருளாக இடம் பெறுகிறதோ அந்தத் திசையில் நாடு நகரும். தமிழ் அர்ச்சனையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்ற நிலை உருவானது. இதற்கிடையில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாவலர் இரா. நெடுஞ்செழியன் போன்றவர்களும் தமிழ் அர்ச்சனை விவாதத்தில் பங்கேற்றனர். வணக்தத்துக்குரிய அகோபில மடம் ஜியர் தமிழ் அர்ச்சனையை எதிர்த்தார்கள். வடமொழி மட்டுமே அர்ச்சனை மொழி என்றார்கள். நாம் இல்லை, தென் தமிழும் அர்ச்சனைக்குரியது என்று வாதாடினோம். ஆனால், வடமொழியில் அர்ச்சனை செய்வதை மறுக்கவில்லை.

ஏன் வடமொழி அர்ச்சனையை மறுக்கவில்லை? நமது போற்றுதலுக்குரிய அப்பரடிகளே, வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’ என்று பாடியுள்ளார். வடமொழியும் நாயன்மார்களால் அங்கீகரிக்கப் பெற்ற ஒரு மொழியே! அதுமட்டுமல்ல, கடவுள் ஒருவர். உலகத்துக்கு ஒரேயொரு கடவுள்தான்! அந்தக் கடவுளைமொழி, இனம், மதம் எல்லைகளைக் கடந்த கடவுளை-மொழி என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் அமைப்பது தவறு-குற்றம், என்பது நமது கருத்து. நாவலர் தமது மன்றம் இதழில் "அகோபில மடத்துக்கு உள்ள துணிவு அடிகளாருக்கு இல்லையே! என்று எழுதினார். தவறுகள் செய்வதற்கு தைரியம் இல்லாதிருப்பது நல்லதுதானே!

நாளும் தமிழ் அர்ச்சனை இயக்கம் வளர்ந்தது. திருக் கோயில்களில் திருமுறை விண்ணப்பிப்பது. கட்டாயமா யிற்று! இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலம் தமிழ் அர்ச்சனை கோருபவர்கள் பண்பா டில்லாதவர்கள் என்று சாடினார், பரமக்குடியில் பேசிய ஒரு கூட்டத்தில்! இந்தப் பேச்சு மக்கள் மத்தியில் உணர்ச்சியைத் தூண்டிவிட்டது. அருள்நெறித் திருக்கூட்டத்தினர் கண்டனம் செய்யத் தொடங்கினர். தந்திகள் பறந்தன. நாம் எல்லோரையும் அமைதிப்படுத்தினோம். முதலமைச்சரை நேரடியாக அணுக முயற்சி செய்தோம்!

எந்த ஒரு செய்தியையும் நேரடியாகப் பேசித் தீர்வு காண்பதே மனிதப் பண்பாடு. இந்தப் பண்பாட்டு முறையே காலப்போக்கில் ஜனநாயகமாக வளர்ந்தது. கலந்து பேசிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது வளர்ச்சிக்குரிய வழி, தனி ஒரு மூளை எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அதன் முழுத்தன்மை ஆய்வுக்குரியதே. பல மூளைகள் ஒன்று கூடிச் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். ஆனால், கருத்துப் பரிமாற்றத்தில் கலந்து கொள்ளும் மூளைகள் சிந்திக்கும் கடமையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மற்றவர்களுக்கு ஒதுக்கி வைத்து விடக்கூடாது. நல்லதை எண்ணவும் செய்யவும் விரும்பு கிறவர்களுடைய சிந்திக்கின்ற சொல்லுகின்ற உரிமைகளை அடக்கக் கூடாது. ஆக்கிரமிக்கக் கூடாது. இந்தச் சித்தாந்தத்தை விளக்குவதாகக்கூட ஆறுமுகச் செவ்வேள் வழிபாடு கால் கொண்டிருக்கலாம். இங்ங்னம் எண்ணுவதில் தவறில்லை. இந்தப் பண்பாடு வரவரக் குறைந்து வருகிறது. இன்று ஒருவரோடு ஒத்துழைத்தல் என்பது சிந்திக்காமல், மறு கருத்து இல்லாமல் இருப்பதுதான் என்று கருதிப் பலர், கூடித்தொழிற்படுகின்ற அமைப்புகளில் கூட தனி மனித நிலை ஏற்றுக் கொள்ளப்பெற்று அசுர சேனைகள் உருவாகி வருகின்றன. இதுவே நமது நாட்டின் இன்றைய நிலை.

21

மிழ் அர்ச்சனை சம்பந்தமாக முதல்வர் பக்தவத் சலத்தை நேரடியாக அணுகும் முயற்சிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. சென்னையில் இருந்த 'திருக்கோயில்' நரா. முருகவேள் அழைக்கப் பெற்றார். ந. ரா. முருக வேள் மறைமலையடிகளின் மாணாக்கர், சைவத் தமிழறிஞர். இவரும் நாமும் சேர்ந்து தமிழ் அர்ச்சனைப் புத்தகம் ஒன்று தயாரித்து அச்சிட்டோம். அதில் எதிர்ப்பாளர்க்குரிய பதில் இருந்தது. ஒன்றை மறவாமல் நினைவில் கொள்ளவேண்டும். தமிழ் அர்ச்சனை இயக்கத்தை கண்டவர்கள் சிவபெருமானும் திருமாலும்தான்! அர்ச்சனை பாட்டேயாகும் என்று பாடச்சொல்லிக் கேட்டவன் சிவபெருமான். திருமாலும் ஆண்டாள் நாச்சியார் பாடலுக்குக் குழைந்தான். இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தத் தமிழ் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. சாத்து முறை இல்லாமல் பூஜை நிறைவுபெறுவது இல்லை. சைவத் திருக்கோயில்களில் தான் திருமுறைகள் போதிய இடத்தைப் பெறவில்லை. நமது விளக்கங்களுக்குரிய ஆதாரங்களையும் ஆதாரமாக அமையும் நூல்களையும் திரட்டி அடையாளம் வைத்து, 52 புத்தங்கள் அடங்கிய ஒரு சிறு நூலகம் போல அமைத்துப் பேட்டிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே முதலமைச் சருக்கு அனுப்பிவைக்கப் பெற்றது.

பேட்டிக்குச் செல்வோர் பட்டியல் தயாரிக்கப்பெற்றது. 63 தமிழறிஞர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப் பெற்றனர். தவத்திரு சாந்தலிங்க ராசமசாமி அடிகள், இளவழகனார், கழகப் புலவர் ப. ராமநாதபிள்ளை, மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர், மகாவித்வான் சி. அருணைவடிவேல் முதலியார் என்று அன்றைய தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் பலர் இந்தக் குழுவில் இருந்தனர். இவர்கள் எண்ணிக்கை 63. இது 63 நாயன்மார்களின் அடையாளம்! எல்லோரும் 12 கார்களில் முதலமைச்சரைக் கானச் சென்றோம். இது 12 திருமுறைகளுக்குச் சான்று. முதலமைச்சர் அகமும் முகமும் மலர வரவேற்றார். விவாதமே இல்லாமல் "திருமுறைத் தமிழ் அர்ச்சனை எனக்கு உடன்பாடே" என்று தெரிவித்தார்.

அதன்பின் 4-10-61-ல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பி.டி.ராஜன் தலைமையில், நமது முன்னிலையில் திருமறைத் தமிழ் அர்ச்சனையை பக்தவத்சலம் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்குத் திருக்கோயில் கருவறை நுழைவு கிடைத்தது. தமிழக வரலாற்றில் இது ஒரு திருப்புமையம். ஆயினும், பூரண வெற்றி கிடைக்கவில்லை. மக்களிடத்தில் வழிபாட்டின் நோக்கம், பயன், அதற்குத் திருமுறைத் தமிழ் துணை செய்யும் பங்கு பற்றிய அறிவு இடம்பெற்றால்தான் தமிழ் வாழும். பொதுவாகத் தமிழ் மக்களிடத்தில் மொழி உணர்வு குறைவு! இன்று வெகு வேகமாக ஆங்கிலத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தமிழரின் அறிவு வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என்னாகும்?

தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் சமுதாய மாற்றத்துக்கு உழைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. அவர் தமது வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தேசபக்தர்; தெய்வ பக்தியுடையவர். இதில் எத்துணையும் ஐயமில்லை. வரலாறு உண்மைகளைப் பேசவேண்டும். ஆனால், பெரியார் தமது வளர்ச்சிப் போக்கில் சமுதாயச் சீர்கேடுகளை, மனிதருக்குள் நிலவும் சாதி வேற்றுமைகளை, தீண்டாமையைப் பார்த்தார்; புழுங்கினார். வழக்கம்போல் இந்து மதம் நெகிழ்ந்து கொடுக்க மறுத்தது. இவையெல்லாம் கடவுளின் ஏற்பாடு-மாற்ற இயலாதது, மாற்றக்கூடாதது' என்று சொல்லத்தொடங்கினர். பெரியாருக்குக் கோபம் வந்து விட்டது. "மனிதருள் சூத்திரனை, தாழ்த்தப்பட்டவனைப் படைத்து இழிவுபடுத்தும் கடவுள் வேண்டாம்!” என்றார். இதுதான் அவர் வந்த வழி! கூர்ந்து நோக்கினால் மாணிக்க வாசகரும் அப்பர் அடிகளும், ராமானுசரும், வள்ளலாரும் வந்த வழி! அவர்கள் சாதிமுறைகளை எதிர்த்தார்கள் என்பது உண்மை! ஆனால், பெரியார் மாதிரி போராடவில்லை. தொடக்க காலத்தில் பெரியாரின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை நம்மால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. ஆதலால், நமது வாழ்க்கையின் தொடக்கத்தில் எதிர்த்தோம். காலப்போக்கில் நடந்தது என்ன? அது யாருக்குத்தான் தெரியாது?

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை, சிலை உடைப்புக் கொள்கையை எதிர்த்துப் போராட தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம் 1952-ல் தொடங்கப் பெற்றது. நமக்குத் தலைவர் பொறுப்பு தந்தனர். மாநிலச் செயலாளர்களாக கம்பன் அடிப்பொடி சா.கணேசன், ஈரோடு எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் இருவரும் பொறுப்பேற்றனர். பொருளாளராக தேவகோட்டை உராம.மெ.சுப.சேவு.மெ. மெய்யப்பச் செட்டியார் பொறுப்பேற்றார். மாநிலம் தழுவிய இயக்கமாக வளர்ந்தது. இந்த இயக்கம் பெரியாரின் கோயில் சிலை உடைப்புக் கொள்கையைக் கடுமையாக விமரிசித்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சமயப் பரப்புக்கென இயக்க அமைப்பில் தோன்றியது அருள்நெறித் திருக் கூட்டம் ஒன்றே யாம். இந்த இயக்கம் ஆதீனங்களின் வாழ்த்துகளைப் பெற்ற இயக்கம்.

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் தமிழிலக்கியங்களில் மட்டுமின்றி சிற்ப சாத்திரத்திலும் நல்ல அறிஞர்; ஆதாரங்களுடன் பேசினார். ஈரோடு எஸ். மீனாட்சி சுந்தர முதலியார் ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் வல்லமை யுடையவர். எனவே ஆங்கில மேற்கொள்களுடன் கடுமையாகப் பேசினார். மற்றும் பன் மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், இலக்கிய மேதை அ.ச. ஞானசம்பந்தன், கு. அருணாசலக் கவுண்டர் போன்ற பல அறிஞர்கள் அருள் நெறித் திருக்கூட்ட மேடைகளில் பேசினார்கள்.

பெரியார், விநாயகர் சிலை செய்து உடைப்பதாகக் கூறினார். அருள்நெறித் திருக்கூட்டத்தினர் அமைதி பெற்றனர். பக்தர்கள், சிலையில் கடவுள் இருப்பதாக நம்பி வழிபாடு செய்கின்றனர். பெரியாரும் அங்ங்னமே நம்பி உடைக்கின்றார். அருள்நெறித் திருக்கூட்டத்தின் பிரசார வேகத்தினால் ஆங்காங்கு மோதல்களும் வந்தன. திருவில்லிப் புத்துர் மம்சாபுரத்தில் நாம் பேசினோம். சரமாரியாகக் கல்வீச்சு! அன்று நம்மைக் காப்பாற்றியவர் திருவில்லிபுத்துார் கணக்குப் பிள்ளையாவார். கரூரில் தி.க வினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! திராவிட கழகத்தினர் மதவாதிகளுக்கு என்று பத்து வினாக்களை எழுதி அச்சிட்டுத் தமிழ்நாடு முழுதும் வழங்கினர். இந்த வினாக்களுக்கு விடை தயாரித்தும் மேலும் பத்து வினாக்களை திராவிடக் கழகத்தினரைக் கேட்கும் வடிவத்திலும் நூல் வெளியிட்டது. அருள்நெறித் திருக்கூட்டம். பிரசங்கங்கள் சூடாக இருந்தன.

22

தொடக்க காலத்தில் நாம் பெரும்பாலும் வியாழக் கிழமைதோறும் திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) சென்று வழிபட்டு வருவது வழக்கம். நமக்குத் திருவாசகத்தில் நிறைந்த ஈடுபாடு. நாட்காலையில் திருவாசகத்தைச் சிந்தித்தும் பாடியும் நடை பயிலுதல் பழக்கம்; இல்லை, வழக்கம். விடியற்காலையில் அருட்பாடல்களைச் சிந்திப்பது அதிகப் பயன்தரும். ஆயினும், வாயினால் சொன்னால்தான் புறத்தே செல்லும் பொறிகளை, புலன்களை மீட்டுக் கொணர இயலும்,

திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) மாணிக்க வாசகப் பெருமானால் கட்டப்பெற்றது. சிற்ப வேலைப் பாடுகள் அமைந்த திருக்கோயில். இங்கே எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் அருள்மிகு ஆத்மநாதசுவாமி. மாணிக்க வாசகர் திருவாசகத்தில் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே! என்று அருளிச்செய்துள்ளார். ஆதலால் ஆன்ம நாயகன், ஆத்மநாதசுவாமி என்றெல்லாம் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.

ஆன்மாவைக் கிராமப்புறத்தார், ஆவி என்பர். ஆன்ம நாயகர் என்பது ஆவி உடையார் என மருவியது. ஆவி என்பது பொருள் பிறழ உணரலாயிற்று. சோற்று ஆவி உடையார் எனப் பொருள் கொண்டு புழுங்கல் அரிசிச்சோறு படையல் போட்டு அந்த ஆவி, சுவாமி மீது படும்படி கதவைச் சாத்துகின்றனர். இது தவறான முறை. நமது புராணச் சடங்குகள் பலப்பல சொற்களையும் பிழைபடப் பொருள் கொண்டு தோன்றிய இவை தவிர்க்கப்படுதல் வேண்டும்.

இத்திருத்தலத்துக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்துகொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் திருக் கோயிலுக்கு எதிரிலேயே கறுப்புக்கொடி பறந்தது கண்ணில் பட்டது. சோதியனே! துன்னிருளே! என்ற திருவாசக அடி களை அடிமனம் சிந்தித்தது. ஆவுடையார் கோயில் நண்பர் முத்துதேசிகர், திராவிடர் கழக நண்பர்களை அழைத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்பெற்றார். முத்துதேசிகர் ஆவுடையார் கோயில் கிராம ஹெட்மேன், இனிய அன்பர். நல்ல வண்ணம் உபசரிப்பார். அருமையாகத் திருவாசகம் பாடுவார். முத்துதேசிகர், திராவிடர் கழக நண்பர்கள் சிலருடன் வந்து சேர்ந்தார். இரவு 8 மணிக்கு உட்கார்ந்து அவர்களுடன் பேசத் தொடங்கினோம். இரவு 2 மணிவரை பேச்சு நீண்டது. வினாக்களும் விடைகளும் பரிமாறிக் கொள்ளப்பெற்றன. பேச்சின் முடிவு திருக்கோயில் எதிரில் உள்ள திராவிடர் கழகக் கருப்புக் கொடியை அகற்றிவிடுவது. அருள்நெறித் திருக்கூட்டப் பணிகளுக்கு ஒத்துழைப்பது' என்பது. மறுநாள் காலை திருக்கோயில் முன் உள்ள திராவிடர் கழகக் கொடி இறக்கப்பெற்றது.

இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. அறந்தாங்கி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து தி. க. அன்பர்கள் மீண்டும் திராவிடர் கழகக் கொடியை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நமது அணியைச் சேர்ந்தவர்கள் மறுக்கின்றனர். மதுரையில் மேடை ஒன்றில் பேசிக் கொண்டிருந்த நமக்கு உடன் தகவல் தந்தனர். நாம் உடனே கூட்டத்தை முடித்துக் கொண்டு தேவகோட்டைக்கு போய் வழக்கறிஞர் வி.ஆர்.எஸ். மெய்யப்பனை அழைத்துக் கொண்டு ஆவுடையார் கோயில் போனோம். வி.ஆர்.எஸ். மெய்யப்பன் திறமையான வழக்கறிஞர் மட்டுமல்ல. நம்பால் பெரிதும் பற்றுடையவர். நம்முடைய சிறந்த ஆலோசகளில் ஒருவர். இரவு 12 மணி. ஆரவாரம் அடங்கியிருந்தது. நமது தரப்பினரை எழுப்பி ஊருக்கு வெளியே கொணர்ந்து நிலைமை விசாரித்து அறியப் பெற்றது. முடிவு என்ன?

கொடிக்கம்பம் இருந்த இடம், தையற்கடை உரிமையாளர் மணி என்பவரின் கடைமுன். அது அவருடைய சொந்த இடம். அவர் தனது சொந்த இடத்தில் திராவிடர் கழகக் கொடியை அமைக்க விரும்பவில்லை என்று எழுதிக் காவல் நிலையத்தில் கொடுத்துப் பாதுகாப்புக் கேட்பது என்று முடிவு. காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வாளரை எழுப்பி, மணி கொடுத்த மனுவுடன் நமது சார்பிலும் ஒரு மனுவை வழக்கறிஞர் தயாரித்துக் கொடுத்தார். ஒருவழியாக அன்று விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.

திராவிடர் கழகத்தினரின் வேகம் அடங்கவில்லை. பரவலாகக் கிளர்ச்சி செய்தனர். நம் தரப்பிலும் கிளர்ச்சி செய்யப்பெற்றது. திருப்பெருந்துறையில் திருவாசக விழா தொடங்கப்பெற்றது.

மற்ற நூல்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருவாசகத்துக்கு உண்டு. அது என்ன? திருவாசகத்தைப் பூசை செய்து ஒதினால் சிவபூசை செய்ததற்கு ஒப்பு என்ற மரபு உண்டு. திருவாசகத்தின் அருமை கருதி, காரைக்குடியில் திருவாசக மடம் கட்டித் திருவாசகம் ஒத ஏற்பாடு செய்தனர். ஆண்டு தோறும் 'திருவாசக விழா' நடத்தி வருகின்றனர்.

திருவாசகர் தோன்றிய திருப்பெருந் துறையில் அரிமழம் அரு. அ. அண்ணாமலை செட்டியார் திருவாசக மடம் அமைத்துத் திருவாசகம் படிக்கவும் ஒதவும் ஏற்பாடு செய்துள்ளார். 1953-ம் ஆண்டு திருவாசக விழா, திருவாத ஆரில் முதலில் தொடங்கப்பெற்றது. மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வடக்குக் கோபுர வாசலில் உள்ளது மொட்டைக் கோபுரம் முனிஸ்வர சுவாமி கோயில், இந்தக் கோயில் பூசாரி யாழ்கீத சுந்தரம் பிள்ளை. குழைந்த அன்பினர்; வழங்கும் இயல்பினர்; நம்பால் தாயிற் சிறந்த பரிவினர். இவர் திருவாதவூர்த் திருக்கோயிலுக்கு ஒதுவார்.

திருவாதவூர் தமிழ் வழங்கிய நிலம்; புண்ணியத் திருத்தலம். 'புலனழுக்கற்ற அந்தணாளர் கபிலர்' தோன்றிய புண்ணிய பூமி, மாணிக்கவாசகர் திருவவதாரம் செய்த திருத் தலமும் திருவாதவூரே! ஆதலால், யாழ்கீத சுந்தரம்பிள்ளை திருவாதவூரில் திருவாசக விழாவைத் தொடங்கினார். (இப்போதும் காரைக்குடி-திருவாதவூர் ஆகிய ஊர்களில் தொடர்ச்சியாக திருவாசக விழா கொண்டாடி வருகின்றனர்!) கார்த்திகை மாதம் 4-வது திங்கட்கிழமை யன்று தொடர்ந்து திருவாதவூரில் திருவாசக விழா தவறாமல் நடைபெற்று வருகிறது. நாம் இவ்விழாவில் கலந்துகொள்ளும் கடமையில் தவறியதில்லை. யாழ்கீத சுந்தரம்பிள்ளை அமரர். அவருடைய அருமைப்புதல்வர் சுந்தரம் முறையாக நடத்தி வருகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருப்பெருந் துறை திருவாசக விழாவுக்கு அழைக்கப்பெற்றார். கம்பன் அடிப்பொடி சா. கணேசன் மற்றும் அறிஞர்கள் பலர் அழைக்கப் பெற்றனர்.

காலை 9 மணிக்கு ஊர்வலம் ஆவுடையார் கோயிலில். 'திருவாசக விழா' ஊர்வலத்தில் ஏராளமான அன்பர்கள், பக்தர்கள்! பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் வெண்கலக் குரலில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் சிவபுராணம் ஒத, அருள்நெறித் திருக்கூட்டக் கொடிகளுடன் ஊர்வலம்! இந்த ஊர்வலத்துக்குப் போட்டியாக இரு பக்கத்திலும்-திராவிடர் கழகக் கொடிகளுடன் பாலைவனம் ஜமீன் துரை அரசன் தலைமையில் ஊர்வலம். ஆயினும், எந்தவிதமான சலசலப்பும் இல்லை; மோதலும் இல்லை. திருவாசக விழா ஊர்வலம் முடிந்தவுடன் திருக்கோயில் முன்பு அருள்நெறித் திருக்கூட்டக் கொடி ஏற்றப் பெற்றது! பின் வழிபாடு நடந்தது.

திருவாசக விழா மாநாடு தொடங்கியது. மேடையில் ஈரோடு எஸ். மீனாட்சி சுந்தர முதலியார் பேசுகையில் ஒன்றிரண்டு சூடான சொற்கள் வந்துவிட்டன. உடன் மாநாட்டில் இருந்த திராவிடர் கழகத்தினர் கூச்சல்போட ஆரம்பித்து விட்டனர். தேவர் திருமகனாருக்கு ஆற்றொனா நிலை! தம்பி சிறுமருதூர் முத்துக்குமாரசாமி சேர்வைக்கு அளவற்ற கோபம் ! கழகத்தினரின் சலசலப்பை அறைகூவலாக ஏற்றுக்கொள்வதாகப் பேச்சு: இந்த நிலையில் நாம் ஒலிபெருக்கியின் முன் வந்து வழக்கம்போல் சமாதானம் கூறி வேண்டுதல் செய்தோம். கூட்டம் அமைதியாகியது. அடுத்து பசும்பொன் தேவர் திருமகனாரின் அற்புதமான பேச்சு. இந்த பணியில் உற்ற துணையாக இருந்த மணி இன்று அமரர். இன்று துரை அரசன் சிறந்த பக்தர். அறங்காவலர். நமக்கு மிகவும் வேண்டிய உழுவலன்பர்.

தம்பி முத்துக்குமாரசாமி. சேர்வை இன்றும் நமக்கு நல்ல உழுவலன்பராகத் திருப்பெருந்துறை ஈசனுக்கு நல்ல தொண்டராக விளங்கிப் பணி செய்கிறார். அண்மையில் திருப் பெருந்துறைத் திருக்கோயில் திருப்பணித் 'திருப்பணிநாயகம்’ என்று பாராட்டப்பெறும் தவத்திரு சுந்தரசுவாமிகளின் அரிய முயற்சியால் நடைபெற்றது. இந்தத் திருப்பணியிலும் தம்பி முத்துக்குமாரசாமி சேர்வையின் ஒத்துழைப்புப் பாராட்டுதலுக்குரியது. இங்ங்ணம் பெரியாருக்கும் நமக்கும் இடையே விவாதங்கள் முற்றி வளர்வதை தமிழகத்தில் அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. பெரியாரும் நாமும் நட்பாக இருக்கவேண்டும் என்று எண்ணினர். முயற்சி நடந்தது-முயற்சியின் முடிவு என்ன?

23

ருள்நெறித் திருக்கூட்டம் 1952-ல் தொடங்கி வெகு வேகமாக வளர்ந்தது. திருவிழாக் கூட்டங்களில் எல்லாம், ஊர்வலங்களும் தெருமுனைப் பிரசாரங்களும் செய்யப் பெற்றன. தெருமுனைப் பிரசாரங்களில் தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் பங்கேற்றுக் கொண்டது குறிப்பிடத் தக்கது. கும்பகோணம் மகாமகத்தில் (1956) பிரசாரம் நடந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது மகாமகம்.

அடுத்து மயிலாடுதுறையில் நடந்த கடைமுக முழுக்கின்போது நடந்த பிரசாரம் முதன்மையானது. பல மாவட்டங்களிலிருந்தும் அன்பர்கள், ஊழியர்கள் வந்திருந்தனர். மாநாடு போல் கூடியிருந்தனர். இந்த விழாவுக்கு குன்றக்குடி ஆதீனகர்த்தராகிய நாம் வருவதறிந்த அந்தப் பகுதியில் உள்ள வேளாளர் பெருங்குடி மக்கள் நமக்கு வரவேற்புக்கும் மகேசுவர பூஜைக்கும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வேளாளர் பெருங்குடி மரபினர் சிவநெறியைச் சார்ந்து ஒழுகும் சிறப்பினர் என்பதால் 'சைவர்கள்' என்றும் அழைக்கப்படுவர். சமயநெறி சார்ந்த பெயர் காலப்போக்கில் ஜாதிப் பெயராகி விட்டது. அந்தோ பரிதாபம்! திருஞான சம்பந்தர் திருமுறையில் ஆக்கூர் தேவாரத்தில், வேளாளர் குல மரபினர் பாராட்டப்பெற்றுள்ளனர்.

"வாளார் கண் செந்துவர் வாய்
மாமலையான் தன்மடந்தை
தோளாகம் பாகமாப்
புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள்
வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில்
தான்தோன்றி மாடமே!”


என்பது அத்திருப்பாடல்.

மகேசுவரபூஜை என்பது சைவ ஆதீனத் திருமடங்களில் அடியார்களுக்குக் குருமுதல்வரையும் இறைவனையும் எண்ணி உணவளிப்பது. உண்பதற்கு முன் பூஜையும் நடைபெறும். வைதீக மடங்களில், 'பிஷை' என்று சொல்வர். மயிலாடுதுரையில் மகேசுவரபூஜை ஏற்பாட்டில் நாம் அமர்ந்துவிட்டோம். பூசனை முதலிய சடங்குகள் முடிந்தன. உண்பதற்கு முன் பந்தியில் சுற்றி ஒரு கண்ணோட்டம். பந்தியில் அறிஞர்கள், தொண்டர்களைக் காணோம். கை. கனகசபை பிள்ளையை அழைத்து நாம் விவரம் கேட்டதில் "அவர்கள் சைவர்கள் அல்லர், ஆதலால் தனிப்பந்தியில் சாப்பிடுகிறார்கள்” என்றார்.

ஜாதி வேற்றுமைகளை அகற்றுவது லட்சியம். ஜாதி வேற்றுமைகளாலேயே சமுதாயம் அழிந்துவருகிறது. நோயால் உருக்குலைந்த உடல்போல் ஆகிவருகிறது. உண்பதிலும் உறவு கொண்டாடுவதிலும் ஜாதி வேற்றுமைகள் ஏன்? இந்த ஜாதி முறைகள் எப்படி வந்தன? முன்னோர்கள் ஜாதி முறைகளை அங்கீகரித்தார்களா? இல்லை. திருமுறைகளில் ஜாதி வேற்றுமைக்கு ஒரு சான்றும் இல்லை. மாறாக மறுத்துள்ளன. 'ஜாதி, குலம், பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை என்பது திருவாசகம்.

ஒழுக்கத்தின்பாற்பட்டதாக ஜாதி முறைகளைப் பின்பற்றினாலும் தவறில்லை. அதாவது சிவநெறியில் நின்றொழுகுபவர்கள் சைவர்கள் என்பது சமயம் ஜாதியாக மாறிய தீமை வைணவத்தில் இல்லை. வைணவர்கள் என்றால் திருமாலை வணங்குபவர்கள் என்பதே பெறப்படும் பொருள். ஆனால், சைவர்கள் என்று கூறினால், சிவனை வழிபடுபவர்கள் என்று பொருள்படுவதற்குப் பதிலாக ஜாதியையே குறிக்கிறது. ஆதலால், ஜாதி முறைகள் மீது வெறுப்பு. மகேசுவர பூஜை என்ற பெயரில் ஜாதி முறைக்கு அங்கீகாரமா? அல்லது மகேசுவர பூஜையைப் புறக்கணித்துப் போராடுவதா? போராட்ட உணர்வே வெற்றி பெற்றது.

மகேசுவர பூஜையை-பந்தியைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு... இதனால், வேளாண்குடி மரபினரின் பொல்லாப்பு ஏற்பட்டது. ஜாதிகளை எதிர்த்துப் போராடிய அனுபவம் உணர்த்துவது என்ன? ஜாதி வேற்றுமை எளிதில் நீங்காது. அது புரையோடிப்போன புண் என்பதேயாம். இன்று அனைத்துத் துறைகளிலும் ஜாதி உணர்வே மேலாதிக்கம் செய்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. வேதனைக்குரிய செய்தி.

அருள்நெறித் திருக்கூட்டமே காலப்போக்கில் ஜாதிகள் இயக்கமாக உருப்பெற்று விடுமோ என்ற ஐயத்தை நெல்லை, காமராஜர் மாவட்டங்கள் பாடம் புகட்டின. பல இடங்களில் இயக்கம் பொதுமை வடிவம் பெறவில்லை. ஒரு ஊரில் அருள்நெறித் திருப்பணி மன்றம் அமைத்து ஒரு பள்ளி தொடங்க எண்ணி, பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப் பெற்றதில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டதாக அந்தக் குழுவை அமைக்க அந்த ஊரார் உடன்பட்டுவரவில்லை. அரிதின் முயன்று செய்து முடிக்கப்பெற்றது. ஆனால், நடைமுறையில் மாற்றம் இல்லை. இது கால் நூற்றாண்டுக்கு முன் நடந்த நிகழ்வு. இப்போது அதைவிட மோசமான நிலை.

இன்று ஜாதி உணர்ச்சி தலையெடுத்து வளர்கிறது. ஜாதி உணர்ச்சி இறுக்கம் அடைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் ஜாதிச் சங்கங்கள்! அரசுகளின் நடைமுறைகள் ஜாதி முறைகளை வலுப்படுத்துகின்றன. வரலாற்றுப் போக்கில் தாழ்ந்தும் பின்னடைந்தும் இருக்கும் சமுதாயத்தில் பள்ளத்தில் கிடப்பவர்களை மேலே கொண்டு வருவது அவசியம். தலையாய கடமையும்கூட. இதற்கெனக் கல்வியில், பணியில் இடம் ஒதுக்கீடு செய்வது தவறன்று. வரவேற்கத் தக்கதும்கூட! ஆனால், இட ஒதுக்கீட்டைப் பள்ளத்தில் கிடப்பது -என்ற ஒரே கொள்கையை வைத்து வழங்க வேண்டும். அதற்காக ஜாதிப் பெயர்களைத் திரும்பத் திரும்ப நினைவுகூர்வது அவசியமா? சலுகைகளை வழங்குவது பள்ளத்தில் கிடப்பவர்களை மற்றவர்களுடன் சமநிலைக்குக் கொண்டு வருவதற்குத் தான். ஆனால், இன்று நடைமுறையில் சலுகைகளைக் காப்பாற்ற ஜாதிகளைக் காப்பாற்றும் முறை தோன்றி வளர்ந்து வருகிறது. ஆதலால், சமுதாயத்தில் நிலவும் ஜாதி வேற்றுமைகளை அகற்ற கல்வி, பொருளாதாரம், சமூகத்தகுதி இவற்றில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற பிறப்பின் காரணமாக அமையும் ஜாதிகளை, ஏற்காமல், தாழ்ந்தும் பின்னடைந்தும் கிடக்கும் தகுதியையே அளவு கோலாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

மக்கள் தொகுதி மூன்று பிரிவினர். தாழ்த்தப்பட்டவர்கள் என்பது சமூகத் தகுதியில், கல்வியில், பொருளாதாரத்தில் தக்க இடம் பெறாதவர்கள். இவர்கள் அரசின் முழு உதவியையும் பெறத் தகுதியினர் என்று கணக்கெடுத்து அட்டை வழங்கலாம். இந்தப் பிரிவினர் இன்றைய ஆதி திராவிடர் சமூகம்) ஜாதிச் சான்றுகளைத் தவிர்த்துவிடலாம். அடுத்து, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். அடுத்து, கல்வி அல்லது பொருளாதாரத்தில் ஏதேனும் ஒன்றில் பின் தங்கியவர்கள். இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சமூகத்தைப் பிரித்து காலக்கெடுவுடன் கூடிய திட்டம் வகுத்து நிறைவேற்ற வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்து, முன்னேறியவர்களிடமிருந்து அட்டைகளைத் திரும்பப் பெற வேண்டும். முன்னேறாதவர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டு களுக்கு அட்டை முறையை நீட்டிக்கலாம். இப்போதுள்ள இட ஒதுக்கீடுகூடத் திட்டுத் திட்டாக ஒரு சிலருக்கே பயன்படுகின்றது. கடைக்கோடி மனிதனுக்குச் சென்று சேரவில்லை. இத்தகைய கருத்துப்போக்கு நமக்கு உண்டு. இந்தக் கருத்தை இப்போது இந்திய உயர்நீதி மன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அன்று அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனையை ஏற்க முன்வரவில்லை. முன்வரமாட்டா. ஏன்? "உங்கள் ஜாதிக்கு நன்மை செய்தோம்” என்று கூறி ஜாதியின் ரீதியாக வாக்குகள் சேகரிக்க முடியாது. துரறலால் பயிர்கள் வளர்ந்து விடுவதில்லை. சலுகைகளால் சமுதாயம் வளர்ந்து விடுவதில்லை. மக்களைத் தற்சார்புடையவர்களாக, அறிவாளிகளாக, திறமைசாலிகளாக வளர்க்கும் முறையில் கவனம் தேவை. திட்டம் தேவை. இந்தக் கருத்துக்களை ஏற்பார்களா? பொதுவாக யாரும் ஏற்பதில்லை. அதனால், இயக்கங்களை நடத்துவதில் நமக்கு நம்பிக்கை இழந்தது. அண்மையில் இந்திய உயர்நீதி மன்றம்-மண்டல் கமிஷன் அறிக்கையின் மீது ஒரு வரலாற்றுப் புகழ்மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில் சில பகுதிகள் 1-10-80-ல் ரத்தினகிரியில் நடந்த திருக்குறள் பேரவை மாநில மாநாட்டுத் தீர்மானங்களைப் பிரதிபலிக்கின்றன. அதாவது,

1. பிற்பட்டோரில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது.

2. பதவி உயர்வுகளுக்கும்கூட ஒதுக்கீட்டுக்கொள்கை கூடாது என்ற தீர்ப்புகள். இவை ஓரளவு சமூகநீதிக்கு அரண் செய்யும்.


24

ரிய பல சான்றோர்களின் முயற்சியால் 1956-ல் தலைவர் பெரியாரை ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் வீட்டில் சந்தித்துப் பேச ஏற்பாடு. முற்றிலும் தனி ஏற்பாடு கூட்டம் இல்லை. அதுமட்டுமல்ல.சந்திக்கப் போகும் நிகழ்ச்சி செய்தியாகவில்லை; வதந்தியாகவும் உரு எடுக்க வில்லை.

'ஈரோட்டில் யாரை யார் சந்திப்பது? என்பது கேள்வி! ஐயத்துக்கு அல்லது யோசனை செய்யவேண்டியதற்கு அவசியம், இராமல் "மகாசந்நிதானம் இடத்துக்கு நான் போய்ச் சந்திக்கிறேன்" என்றாராம் பெரியார். அடுத்த வினா!

நாம் தங்கியிருப்பது சென்னியப்ப முதலியார் வள மனையின் மாடி! பெரியாரால் மாடி ஏறக் கூடுதல் முயற்சி தேவை இருக்குமா என்பது நமக்கு ஏற்பட்ட ஐயம். "கீழேயே ஒரு அறை பார்க்கலாம்!” இது நமது கருத்து. அவ்வாறே ஏற்பாடு செய்ய நினைப்பு. ஆனால், பெரியார் இதற்கு இசையவில்லை. "பரவாயில்லை! மாடியில் மகாசந்நிதானம் இருக்கும் இடத்திலேயே சென்று பார்ப்பது தான் முறை!” என்றாராம்.

மாடியில் ஒர் அறையில் இரண்டு நாற்காலிகள்! இருவர் உட்காரக்கூடிய நாற்காலி ஒன்று! இருவர் உட்காரும் நாற்காலியில் நாம் ஒரு முனையில் அமர்ந்திருந்தோம். பெரியார் வந்துவிட்டார். அறைக்குள் அவர் நுழையும்போது நாம் எழுந்து அவரை வரவேற்றோம். பெரியார் வணக்கம் செய்யக் கையிரண்டையும் அவசரத்தில் சேர்க்கும்போது, அவரது கைத்தடி கீழே விழுந்தது: "அமருங்க! அமருங்க!” என்று சொல்லிக்கொண்டே வருகிறார். நாம் உட்கார்ந்திருந்த இருவர் உட்காரக்கூடிய நாற்காலியின் மற்றொரு பகுதியில் உட்காரும்படி கேட்டுக் கொள்கிறோம்! பெரியார் மறுக்கிறார்! "மகாசந்நிதானத்துடன் ஒரு இருக்கையில் அமருவது முறையன்று” என்று கூறிக்கொண்டே, அருகில் இருந்த வேறு நாற்காலியில் உட்காருகிறார்!

உடன் வந்தவர்கள் - இருந்தவர்கள். அனைவரும் போய்விட்டனர்; கதவுகள் சாத்தப்பட்டன். நாமும் பெரியாரும் மட்டும்தான் அறைக்குள் இருக்கின்றோம். முதலில் சில நிமிடங்கள் பரஸ்பர நலன் விசாரித்தல், மற்ற பொதுத் தகவல்கள் பேசப்பெற்றன. சிறிது நேரத்தில் பெரியாருக்கும் நமக்கும் இடையேயான பேச்சு ஆஸ்திக நாஸ்தீக பக்கம் திரும்பியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேச்சு தொடர்ந்தது. நமது சமயம் அவ்வப்போது கால, தேச வர்த்தமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு புதுமைப்படுத்திக் கொள்ளத் தவறியதன் விளைவே பெரியார்! நமது சமயத்தில் காலங்கள் தோறும் தோன்றிய மதத் தலைவர்கள், சிந்தனை யாளர்கள் கருத்துக்களை குறிப்பாக எம்பெருமானார் ராமானுஜர், அப்பரடிகள், வள்ளல் ராமலிங்கர் கொள்கைகள் பின்பற்றப்பட்டிருந்தாலும் பெரியாரின் வரவைத் தவிர்த்திருக்கலாம்.

"சமயம், கடவுள் எல்லாம் தீண்டாமையை ஒழிக்க வில்லையே...? மனிதனை மனிதனாக்கவில்லையே? ஜாதிகளை அகற்றவில்லையே? கடவுள் சாமி என்றெல்லாம் வாழும் மக்கள் இழிவிலும் வறுமையிலும் கிடந்து உழல்கிறார்களே! இதற்குப் பரிகாரம் இதுவரையில் மதங்கள் தேடவில்லையே. கடவுளும் தேடவில்லையே. அதுமட்டு மல்ல. கடவுள் பெயரால்தானே இந்த அவலமான காரியங்கள் செய்யப்படுகின்றன? என்றார் பெரியார். இதற்கு நாம் சொன்ன பதில்: "இவற்றைக் கடவுள் செய்யவில்லை!" என்பது. "அப்படியானால் இந்த அநியாயத்தைக் கடவுள் ஏன் தட்டிக் கேட்கவில்லை?” என்றார் பெரியார்.

என்ன பதில் சொல்வது? நம்முடைய தத்துவங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். கணியன்பூங்குன்றன் காலத்திலிருந்து கண்ணதாசன் காலம்வரை தோன்றிய எந்த சிந்தனையும் செயலுருவம் பெற்றதில்லை. மக்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காகவே இறைவன் சில திருவிளையாடல்களை நடத்தினான், ஆனால் மக்கள் அதையும் பின்பற்றத் தயாராக இல்லை. இன்று சமய ஆசாரங்களைப் பின்பற்றுகின்றனர். கடவுளைத் திருப்திப்படுத்தலாம் என்று எண்ணி ஆரவாரமாக வழிபாடுகள் செய்கின்றனர். ஆனால், சமயநெறி காட்டிய வழியில் மனித நேயத்தை ஏற்று ஒழுகுபவர்கள் எத்தனை பேர்?

பேச்சின் முடிவு: பெரியார், "எனக்கும் கடவுளுக்கும் என்ன விரோதம்? அவரை நான் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தேவை மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்பட வேண்டும் என்பதே நம்முடைய நாட்டில் இந்த இழிவை மாற்ற மத உலகத்திலும் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்ட பலன் தோல்வியே! நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். பலன் தருமா; சந்தேகந்தான்” என்றார்.

"இருவருமாகச் சேர்ந்து உழைப்போம் p. என்றோம் நாம். பெரியார் சிரித்துக்கொண்டே "எனக்கு ஆட்சேபணை இல்லை உங்கள் சம்பிரதாயங்கள் இடம் தருமா?" என்றார். நாம், "முயற்சி செய்யலாம். சம்பிரதாயங்கள் என்பவை காலந்தோறும் மாறுபவைதானே!" என்றோம்.

"சரி, பார்ப்போம்! முயற்சி செய்வோம்.” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூற, பேச்சு முடிந்தது.

பெரியார் விடைபெற்றுக் கொண்டு எழுந்தார். நாமும் அவரை வழியனுப்ப எழுந்தோம். உடனே பெரியார் "இல்லை! இல்லை! மகாசந்நிதானம் அமருங்கள்! எனக்கு எல்லா மரபுகளும் தெரியும். மரபுகளைப் போற்றும் ஆர்வமும் உண்டு. ஒரு காலத்தில் ஞானியார் சுவாமிகளை என் தோளில் தூக்கிச் சுமந்துள்ளேன். மகாசந்நிதானம் எழுந்திருக்கக் கூடாது.” என்றார்.

இந்தச் சந்திப்புக்கு பின் நம்மிடம் சூடான விவாதங்கள் குறைந்தன. பெரியார் கொள்கையை மறுக்கும் போக்கு குறைந்தது. உடன்பட்டு நின்று பேசும் பாங்கு கூடியது. அதாவது, பெரியார் கொள்கைகளை எதிர்மறையாக அணுகாமல் உடன்பாட்டு முறையில் அணுகி, பெரியாரின் நியாயமான கொள்கைகளை ஏற்றும் உடன்படாதவற்றை நயம்பட விவாத வடிவிலும் பேசும் முறை வளர்ந்தது.

தலைவர் பெரியார் 1955-ல் மலேயா சென்றார். நாமும் 1955-ல் மலேயா சென்றோம். நாம் ஒய்வு கருதி கப்பலில் சென்றோம். பினாங்கு துறைமுகத்தில் நாம் இறங்குவதாக ஏற்பாடு. அன்று பினாங்கில் பெரியார் உள்ளார். மலேயா அரசாங்கம் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இல்லாதபடி கவனமாகப் பார்த்துக் கொண்டது. மலேயாத் தமிழர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர். போட்டி உணர்ச்சி! ஆதலால், நல்ல வண்ணம் பழகக்கூடிய இருவர் ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் இருந்தும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள இயலவில்லை. ஒரே மேடையில் பேச இயலவில்லை! ஏன்? கருத்து வேற்றுமைகள் பல தீமைகளை உண்டாக்குகின்றன. இது வாழும் முறையன்று. வேற்றுமைகள் நீங்க நெருங்கிச் செல்வதே முறை!

பெரியார் பிறந்த நாள் விழாவை 1956 செப்டம்பரில் திருச்சி பொன்மலையில் திராவிடர் கழகத்தினர் எடுத்தனர். நம்மையும் விழாவுக்கு அழைத்திருந்தனர். ஈரோட்டில் சந்தித்ததற்குப் பின் எங்களுக்கிடையில் நட்பே இருந்தது. மேடையில் இருவரும் ஒன்றாகப் பேசியதில்லை. இந்தச் சூழ்நிலையில் திராவிடர் கழக நண்பர்களின் அழைப்பை ஏற்கத் தயக்கம்! ஏன் தயக்கம்? முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும், பழகி வரும் நட்பு பாதித்துவிடக் கூடாதே என்ற கவலை! கருத்தைவிட நட்பே முக்கியம்! நட்பும் உறவும் இடையூறின்றி வளர்ந்தால்தான் கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்து நிகழும். என்றாவது ஒரு நாள் கருத்தொருமை தோன்றும்! நாம் நமது வாழ்க்கையில் நன்மை, தீமை, நன்றி, பழி, பாவங்கள் எல்லாவற்றையும் விடப் பழகுதலுக்கும் நட்புக்கும் முதன்மை கொடுப்பது உண்டு. இதனால் பொல்லாப்புகள், இழப்புகள் வரும் ஆனாலும், இதுவே வாழ்க்கை முறை என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் என்றாவது ஒரு நாள் நன்றாக முடியும் பகைமை தீது, யாரோடும் பகை கொள்ளலன் என்றான் கம்பன்.

பெரியார் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள நம் இசைவு தரப்பெற்றது. திருச்சி பொன்மலைப்பட்டியில் விழா பெரியாருக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் இணைந்து மேடையில் உட்கார்ந்திருந்து கலந்து பேசியது. எங்களுக் கிடையில் அடிக்கடி சிரிப்பு. எல்லாவற்றிலும் திராவிடர் கழகத்தினருக்கு அளவற்ற மகிழ்ச்சி. போட்டோகிராபர்கள் பற்றிச் சொல்ல வேண்டாம்.

விழாவில் திருச்சி வழக்கறிஞர் திராவிடர் கழகப் பிரமுகர் தெ. பொ. வேதாசலம் முதலில் பேசினார். அவருடைய பேச்சு முழுவதும் கடவுள் மறுப்பு. மத மறுப்பு தான்! பெரியார் நயமாகத் தன் கைத்தடியினால் தட்டிப் பார்த்தார். ஆனால், அவர் கவனிக்கவில்லை. அடுத்து நாம் தலைவர் பெரியாரைப் பாராட்டிப் பேசி, அவருக்குப் பொன்னாடை போர்த்தி பெருமைப்படுத்தினோம். முதலில் அரை மணி நேரம் பெரியாரின் அரிய தொண்டுகளைப் பாராட்டிப் பேசின. பிறகு, வேதாசலத்தின் பேச்சுக்கு மறுப்புரை சொன்னோம். ஏன்? நமக்குத் திராவிடர் கழகத் தினரின் மேடைகளில் முதல் மேடை இது! நமது நியாயமான மறுப்புரைகளுக்குத் திராவிடர் கழகத்தினரிடமும் வரவேற்பு இருந்தது. அடுத்து, தலைவர் பெரியார் பேசினார். பேச்சு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. "எனக்கென்ன கவலை! தமிழன் - சூத்திரன் என்று இழிவுபடுத்தப்படுகிறான். இந்த இழிவு கடவுளால் துடைக்கப்பட்டாலும் சரி, மகாசந்நிதானத்தால் துடைக்கப்பட்டாலும் சரி! எனக்கு அது ஒன்றுதான் குறிக்கோள்! சென்ற காலத்தில் எந்தக் கடவுளும் செய்யவில்லையே என்ற ஏமாற்றம் எங்களுக்கு இருப்பதை திராவிடர் கழகத்தினருக்கு இருப்பதை மகாசந்நிதானம் புரிந்துகொள்ள வேண்டும்? மகாசந்நிதானம் வருத்தப்படக் கூடாது. அவர் வாழ்த்தை நான் நம்புகிறேன். எனது தோழர்கள் நான் பக்தனாகி விட்டேன் என்று எண்ணக் கூடாது. மகாசந்நிதானம் நமது இனத்தின்மீது ஆர்வம் காட்டு கிறார்கள். குறிப்பாக என்மீது நம்பிக்கை வைத்து வாழ்த்துகிறார்கள். இந்த வாழ்த்து பலிக்கும்படியாகத் தொடர்ந்து நமது பணிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்." என்று பேசினார்.

விழா முடிந்த பிறகு போட்டோகிராபர் ஒருவர் தனது ஸ்டுடியோவுக்கு இரண்டு பேரையும் படம் எடுக்க விரும்பி அழைத்தார். பெரியார், "மகாசந்நிதானம் அங்கெல்லாம் வரமாட்டார்கள்" என்று மறுத்துவிட்டார்.

25

ரு நாள் மதுரையிலிருந்து நெல்லை வரையில் (1956-ல்) பெரியாருடன் காரில் பயணம். திருப்பரங்குன்றம் கடந்தவுடன் பெரியார் தமது பையிலிருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்தார். அதில்,

"குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்."


என்ற திருக்குறளைக் காட்டி நம்மிடம் தந்து படிக்கச் சொன்னார். விளக்கம் கேட்டார்.

தாம் பிறந்த குடியை ஆக்க விரும்புபவர்கள் காலம் கருதிக் காத்திருக்க மாட்டார்கள், குடி வளர்வதற்குரிய பணிகளைச் செய்வதில் ஒருபோதும் சோம்பல் காட்ட மாட்டார்கள். பெருமையை ஒரு பொருளாக எண்ண மாட்டார்கள் என்று விளக்கம் கூறினோம். தொடர்ந்து எங்கள் இருவரிடையிலும் விளக்கம், விவாதம், கருத்துப் பரிமாற்றம் என்று வளர்ந்தது. -

அன்று பெரியார் தமிழின வரலாற்றுப் பேராசிரியராக விளங்கிப் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார். தமிழர்களின் ஆட்சிகள் வீழ்ந்ததையெல்லாம் காரண காரியங்களுடன் விளக்கினார். நீதிக் கட்சி வரலாற்றையும் எடுத்துக் கூறினார். இந்தப் பயணம் இலக்கிய சமூகச் சிந்தனைக்குத் துணை செய்தது.

பலதடவை பெரியார் நமது திருமடத்துக்கு வருகை தந்துள்ளார். முதல் வருகையின்போது ஆதீன மடத்து மரபுப்படி தலமரியாதை அவருக்கு வழங்கப்பெற்றது. அதில் திருநீறு அணிவித்தலும் உண்டு. அப்போது சின்னப் பட்டமாக இருந்த நடராஜ தேசிகர் தலைவர் பெரியாருக்கும் திருநீறு பூசிவிட்டார். பெரியாரும் தயக்கமும் மறுப்பும் இன்றிப் பூசிக்கொண்டார். திருநீறு பூசிக் கொண்டதை பற்றிக் கேட்ட போது, "நான் திருநீறு பூசிக்கொண்டது மகாசந்நிதானத்துக்காக, அது அவருக்குக் கெளரவத்தைக் கொடுக்கும் என்றால் நான் பூசிக்கொண்டது சரியே!” என்றார். இதுபோல உறவுகளைப் பேணிக் காப்பதில் விழிப்புணர்வு உள்ளவர் பெரியார்.

முத்துப்பேட்டைப் பகுதி த. கீழக்காடு கிராமத்தில் பழைய அரசியல் தியாகி - காங்கிரஸ்காரர் ஆர். எம். சோமுத் தேவர் இல்லத் திருமணம் 1957 ஜூலை மாதம் நடைபெற்றது. சோமுத் தேவர் இந்தத் திருமணத்துக்குப் பெரியாரை அழைக்க விரும்பினார். மாப்பிள்ளை நமது அணியைச் சேர்ந்தவர். எனவே, மாப்பிள்ளை திருமணத்துக்கு நம்மை அழைக்கிறார். அதுவரையில் தனி நபர்களின் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் வழக்கம் இருந்ததில்லை. மாப்பிள்ளையின் பிடிவாதத்தால் நாம் ஒப்புக்கொண்டோம். சோமுத்தேவர் மகன் ராஜமாணிக்கம் - நீலாவதி சோமுத் தேவர் மகள் பத்மாவதி - பன்னிர் செல்வம், சோமுத் தேவர் மகன் மகாலிங்கம் - செல்வநாயகி இவர்களின் திருமணம். திருமண நாள் வந்தது. நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகினோம். சமயச் சடங்குகள் இல்லாமலே திருமணத்தைப் பெரியார் வழியில் செய்யவும் விருப்பமில்லை. பெரியாருக்கும் நமக்குமுள்ள ஒரு பெரிய வேற்றுமை, பெரியார் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று எண்ண மாட்டார்; யோசிக்க மாட்டார்; பயப்பட மாட்டார். நாம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணுவதுண்டு. இந்தப் போக்கு மேடைகளுக்கு மட்டுமே. தனியே பேசும்போது கூறுவதுண்டு. இதன் காரணமாக இன்னமும்கூட மேடைகளில் நம்முடைய சிந்தனைகளை முழுமையாகக் கூறவில்லை. "ஊரார் தத்தம் மனத்தளவே பேசுவார்கள்” என்பது, நாம் ஒதும் திருவாசகம். ஆனால், இந்த ஏற்புக் குணம் இன்னமும் உருவாகவில்லை. வாழ்க்கையில் கடைசி அத்தியாயம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலாவது இந்தப் போக்கை ஏற்க எண்ணம். ஆதலால், சமயச் சடங்குகளுடன் திருமணம் நடைபெற வேண்டும் என்ற முடிவுடன் இசைவு.

திருமணத்தை நடத்தி வைக்க திருவாரூரிலிருந்து புலவர் மு. இரத்தின தேசிகர் என்பவர் அழைக்கப்பட்டார். மு. இரத்தின தேசிகர் தமிழ்த் தேசிகர் பரம்பரையைச் சேர்ந்தவர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் தேசிகர் என்ற பெயரிலும், தென் மாவட்டங்களில் ஒதுவார்' 'குருக்கள் என்ற பெயர்களிலும் சமூகங்கள் வாழ்கின்றன. இவர்கள் தமிழர் இல்லங்களில் திருமணம் முதலியன செய்து வைக்கும் புரோகிதர்களாக வாழ்ந்தனர். வாழ்ந்து கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற இனவழிப் போராட்டத்தின் விளைவாக இருக்குமா? ஆய்வுக்குரியது.

இரத்தின தேசிகரிடம் "சடங்குகளுடன் திருமணத்தை நடத்தி வையுங்கள். அதேபோழ்து சடங்குகளைக் குறைத்துக் கொள்ளவும்” என்ற ஆலோசனை கூறப்பெற்றது.

கீழக்காட்டுக்குப் பெரியார் வந்துவிட்டார். திருமண வீட்டார் போய், "திருமணத்தை எந்த முறையில் செய்வது?" என்று அவரிடம் கேட்கின்றனர். பெரியார் வழக்கம்போல் பெருந்தன்மையுடன் "மகாசந்நிதானம் விருப்பம்போல் செய்யுங்கள் எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை!" என்று கூறிவிட்டார். திருமணம் நடந்தது! திருமுறை வாழ்த்துகளுடன்! அடுத்து வாழ்த்துரை! தலைவர் பெரியார் தாம் முதலில் பேசுவதுதான் முறை என்றும், தாம் பேசிய பின் மகாசந்நிதானம் வாழ்த்துரை வழங்கி நிறைவு செய்வதுதான் மரபு என்றும் கூறினார். நாமும் பெரியாரும் கலந்துகொண்ட எந்தவொரு மேடையிலும் பெரியார் மறந்தும்கூட மரபுகளை மீறியதில்லை. பெரியார் ஒரு மணி நேரம் பேசினார். மக்களிடம் அதற்கு வரவேற்பு: பின் நாம் நமது உரையில் பெரியாரின் ஐயங்களுக்கு விடை கூறினோம். இதற்கும் மக்களிடம் வரவேற்பு! இன்று நாட்டில் ஒரே ஒரு குறை - நமது மக்களை நாம் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது தான்.

சேலம் மாவட்டம் நாகரசம்பட்டியில் பெரியாரைப் பின்பற்றும் குடும்பங்கள் பல உண்டு. நாகரசம்பட்டி சம்பந்தன் தீவிர திராவிடர் கழகப் பற்றாளர். நாமும் பெரியாரும் ஒரு விழாவுக்குப் போயிருந்தோம். மேடையில் நினைவுக் கையெழுத்து (Autograph) வாங்கும் கூட்டம் படையெடுத்தது. ஒரு கையெழுத்துக்கு ஒரு ரூபாய் என்று பெரியார் வாங்கினார். நாம் பணம் வாங்காமலே கையெழுத்துப் போட்டுத் தந்ததைக் கண்ட பெரியார், "காசு வாங்குங்கள். காசு வாங்காமல் கையெழுத்துப் போடாதீர்கள்” என்று சொன்னார். ஆயினும் உடனடியாக நாம் காசு கேட்க வில்லை. மீண்டும் பார்த்துவிட்டுக் காசு வாங்கும்படி வற்புறுத்தினார். நாமும் காசு கேட்டு வாங்கினோம். கையெழுத்துப் போட்டு முடிந்தவுடன் எண்ணிப் பார்த்ததில் 157 ரூபாய் இருந்தது. இந்த ரூபாயை இனிய நண்பர். கி. வீரமணி இன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்) கேட்டார்: "உங்களுக்குத்தான் காசு வாங்குவதில் விருப்பம் இல்லையே. பெரியாருக்குக் கொடுத்து விடுங்கள்!” என்றார். இது பெரியார் காதில் விழுந்தவுடன் "காசு நம்மிடம் இருந்தால் என்ன. மகாசந்நிதானத்திடம் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்!” என்றார்.

26

துரையில் டி. கே. சண்முகம் சகோதரர்களின் ‘ராஜ ராஜ சோழன் நாடகம். நாமும் பெரியாரும் கலந்து கொண்டு நாடகத்தைப் பார்க்கிறோம். டி. கே. சண்முகம் சகோதரர்களின் நாடகங்களில் மிகவும் சிறந்தது ராஜராஜ சோழன் நாடகம் என்பது நாடறிந்த செய்தி! பெரியார் நாடகத்தை நன்றாக அனுபவித்துப் பார்த்தார். நாடக முடிவில் வாழ்த் துரை! பெரியார் பேசும்போது டி.கே. சண்முகம் சகோதரர்களின் நடிப்புத் திறனை, கலையை மிகவும் பாராட்டிப் பேசினார். ஆயினும், முடிவில் இவ்வளவு அற்புதமான கலைத்திறன் வெளவால்கள் அடையும் கோயிலைப் பற்றியதாக அமைந்துவிட்டமையை கண்டு வருந்துவதாகவும் கூறினார். அடுத்து, நமது வாழ்த்துரை! நாம் பேசும்போது 'நயம்பட', 'பெரியாரும் பெரியாரைச் சார்ந்தவர்களும் கோயிலுக்குள் வராததால்தான் வெளவால்கள் குடிபுகுந்து விட்டன. பெரியார் திருக்கோயிலுக்குள் வந்துவிட்டால் வெளவால்கள் வெளியேறிவிடும்” என்று பேசினோம். மக்களிடம் ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு நம் மீது 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்ட வழக்குத் தொடுத்ததைக் கண்டித்து பெரியார் ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டார். வழக்கைத் திரும்பப் பெறாது போனால் போராடுவேன்' என்று அறிவித்தார். நமக்கும் பெரியாருக்கும் இடையே கால்கொண்ட உறவு நாளும் உழுவலன்பாக வளர்ந்து வந்தது.

1967-ம் ஆண்டு! அறிஞர் அண்ணா முதலமைச்சர். பொதுவுடைமைக் கட்சித் தோழர் அமரர் ஜீவானந்தம் மகளுக்கு திருமணம் செய்யவேண்டும். பெரியாரும் நாமும் பொறுப்பேற்றுக் கொண்டு திருச்சியில் திருமணம் நடந்தது. முதலமைச்சர் அறிஞர் அண்ணாவும் வந்திருந்தார். அண்ணாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி! அண்ணா பேசும் போது, "பொதுவுடைமைக் கட்சித் தோழரின் மகள் திருமணம்! பெரியாரின் தலைமை! அடிகளாரின் வாழ்த்துரை! ஒரே மேடையில் தமிழர்களின் தலைவர்கள் புழுக்கமின்றி இணைந்திருக்கும் இந்த விழா, தமிழினத்துக்கு நம்பிக்கையூட்டும் விழா!" என்றார். அண்மைக்காலமாக இத்தகைய சமுதாய நிகழ்வுகள் குறைந்து வருகின்றன. இது வளர்ச்சிக்கு உதவி செய்யாது. திருமண மேடைகள் தனிக் கட்சி மேடைகளாவதைத் தவிர்க்க வேண்டும். பலரும் பங்கேற்கும் சமுதாய விழாவாக நடத்தப்பட வேண்டும்.

திண்டுக்கல்லில் மாணிக்க நாடார் நல்ல செல்வாக் குள்ள மனிதர். அவர் பெரியார் சிலை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திராவிடர் கழகக் கொள்கையில் பிடிப்புள்ளவர். இது இனவழிப் பற்றேயாம். சமய எதிர்ப்பாளர் அல்லர் - நம்மிடத்திலும் அன்புடையவர், பெரியார் சிலையைத் திறந்து வைக்க நம்மை அழைத்தார். அப்போ தெல்லாம் பெரியார் சிலையின் அடியில்-

'கடவுள் இல்லை:

கடவுளைப் படைத்தவன் முட்டாள்

என்றும், இவற்றைப் போல மேலும் சில வாசகங்களும் பொறிக்கும் பழக்கம் இருந்தது. இதைக் காரணம் காட்டி இயலாமையை எழுதினோம். மாணிக்க நாடார் பெரியாரைக் கலந்ததில் "மகாசந்நிதானம் விரும்ப வில்லையென்றால் பொறிக்க வேண்டாம். அவர்கள் விருப்பப்படி செய்க!” என்று உடனடியாகப் பெரியார் பதில் எழுதிவிட்டார். கடவுள் மறுப்பு வாசகம் இல்லாமலேயே திண்டுக்கல்லில் பெரியார் சிலை நம்மால் திறந்து வைக்கப் பெற்றது.

பெரியார் மறைவு நமக்கு ஆற்றொனாத் துயரத்தைத் தந்தது. சமுதாயக் கலவரங்கள், தீண்டாமைக் கொடுமை ஆகியவற்றால் நெருக்கடி நேரும்போதெல்லாம் பெரியார் இல்லாத குறையை உணர்வது உண்டு. நினைந்து வருந்துவ துண்டு. அந்த இடத்தை யாரால் நிரப்ப இயலும்?

27

சுதந்திரப் போராட்டம் 1942-ல் சூடுபிடித்தது. அண்ணல் காந்தியடிகள் தைரியமும் மன உறுதியும் படைத்தவர். ஆயினும், சுதந்திரப் போராட்டங்களில் கூட்டத்தைக் கூட்டவோ வன்முறைகளைப் பயன்படுத்தவோ விரும்புவதில்லை. கூட்டத்தைக் கூட்டுவது எளிது. ஆனால், அந்தக் கூட்டத்தைக் கட்டுப்பாடாகக் கொண்டு செலுத்துவது கடினம் என்பதை நாட்டு வரலாறு உணர்த்துகிறது. ஆதலால், அண்ணல் காந்தியடிகள் 1942-ல் சுதந்திரப் போராட்டத்தைத் தனி நபர் சத்தியாக்கிரக இயக்கமாகத் தொடங்கினார். அந்தத் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்கு முதல் மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார் புனிதர் வினோபாபாவே, மாணவப் பருவத்தில் லட்சிய மனிதராக ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஒருவரை ஒரு மாமனிதரை வாழ்க்கையில் நேரில் காணவும் அவருடன் பணி செய்யவும் நமக்குக் கிடைத்த பேறு பெரும்பேறு என்று எழுதவும் வேண்டுமா?

புனிதர் வினோபாபாவே தவமுனிவர்; ஞானி; பலனில் பற்றின்றிப் பணி செய்த உத்தமர் வினோபாபாவே. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நிர்மாண வேலைகளில் ஈடுபட்டார். இந்தச் சூழ்நிலையில் சுதந்திர இந்தியாவில் நிலப்பிரச்னை தீராமல் இருந்தது. 1947-ல் இயற்றப்பெற்ற ஜமீன்தாரி இனாம் ஒழிப்புச் சட்டம் மூலம் ஓரளவு தீர்வு கிடைத்தது. ஆயினும் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளிகள் பல கோடியினர். நிலத்தை உழுது பிழைத்த விவசாயிகள், குத்தகை விவசாயிகள் மற்றும் கூலி விவசாயிகளேயாவர். இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் செய்ய அவசியம் இருந்தது. இருக்கிறது. 1951-ல் தெலுங்கானாவில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கலவரம் தோன்றியது. அப்போது வினோபாபாவே சமாதான யாத்திரையாக நாடு தழுவிய நிலக்கொடை (பூதானம்) இயக்கம் தொடங்கி பாரதம் முழுவதும் பாதயாத்திரை செய்தார்.

இது ஒர் அமைதிப் புரட்சி! பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கிடைத்தன. வினோபாபாவேயின் 1956 தமிழ் நாட்டு யாத்திரையில் நாம் பங்கு பற்றினோம். தமிழ் நாட்டு எல்லையில் வரவேற்றது; தென் ஆற்காடு மாவட்டத்தில் சில நாட்கள் யாத்திரை செய்தது. ராமநாதபுரம் மாவட்ட யாத்திரைப் பொறுப்பு நம்மிடமே விடப்பெற்றிருந்தது. புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் வினோபாபாவேக்கு வரவேற்பு நிகழ்ச்சி. சாக்கோட்டை, புதுவயல், காரைக்குடி வழியாகக் குன்றக்குடிக்கு வினோபாபாவே வந்திருந்தார்.

குன்றக்குடியில் சிறப்பான வரவேற்பு. மறுநாள் திருப்புத்துரர். அங்கு நமது ஆதீனத் திருமடத்தில் தங்கல். திருப்புத்துரரில் மடத்தில் தங்கியிருந்தபோதுதான் பூதான இயக்கம் கிராமதானமாக உருவெடுத்தது. இந்தக் கூட்டத்தில் காந்திகிராமப் பல்கலைக்கழக நிறுவனர் சகோதரி டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன், டி. கல்லுப்பட்டி குருசாமி நாடார், பூதான இயக்கத்தலைவர் ச. ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். நாம் அன்றைய சூழ்நிலையில் கிராமதான முறையை ஏற்கவில்லை. ஏன்? ஒரு கிராமத்திலுள்ள நிலங்களில் எழுபத்தைந்து சதவிகிதம் நிலக்கொடை யாகக் கிடைத்து விட்டால், தானே கிராமதானம் ஆகிவிடும். இதுதான் முறை. நேரடியாகக் கிராமதானம் உருவாகாது. ஆனாலும் சிக்கல் இருக்கும் என்பது நமது கருத்து. ஆயினும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு கிராமதானம் பெறுவது என்று முடிவு செய்யப்பெற்றது.

வினோபாபாவே நம்மிடத்தில் அதிகப் பரிவு காட்டினார். ஒய்வு நேரங்களில் பூதான இயக்கச் செயல்முறை, திருக்குறள், அத்வைதம், சுத்தாத்வைதம் என்பனபற்றியெல்லாம் கலந்து பேசுவார். வினோபாபாவேயின் எளிமையின் காரணமாக நம்மைப் பாராட்டுவார். "உங்கள் சக்திக்கு குன்றக்குடி மடம் நிர்வாகம் போதுமா? இன்னும் விரிந்த, பரந்த எல்லையில் பணி செய்யலாம்” என்றார். தம்முடன் பணியில் சேரும்படி அழைத்தார். நமக்கும் விருப்பம் தோன்றிவிட்டது. வினோபாபாவேயுடன் போவதாக முடிவு செய்து விட்டோம்!

மடத்தின் நிர்வாகத்தைத் திருநெல்வேலி மாவட்டம் பெருங்குளத்தில் உள்ள செங்கோல் மடத்தின் மடாதிபதியிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வதென முடிவு. பெருங்குளம் மடாதிபதிக்கும் தந்தி கொடுத்து வரவழைக்கப்பட்டு விட்டார். உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பெற்றுவிட்டன. அலுவலர்கள் கூட்டம் போட்டுப் பிரியாவிடை பெற்றுக் கொள்ளப்பெற்றது. காலையில் வழிபாடு முடித்துக் கொண்டு வினோபாபாவேயுடன் சேர்ந்து கொள்வதாகத் திட்டம். அன்று பூஜைக்கு எல்லா அலுவலர்களும் ஊராரும் திரளாக வந்திருந்தனர். வழிபாடு முடிந்த பிறகு ஆதீனத்தின் மேலாளராகப் பணி செய்த வி. புஷ்பவனம் என்பவரும் மற்றும் சில மூத்த அலுவலர்களும் வந்தனர். புஷ்பவனம் நல்ல நிர்வாகி. அவருக்கு அழுகை வந்தது. பேச முடியாமல் தவிக்கிறார். முயன்று தடுத்துக் கொள்வதை நம்மால் பார்க்க முடிந்தது; உணர முடிந்தது.

புஷ்பவனம் பேசத் தொடங்கினார்: "மகாசந்நிதானத்தின் விருப்பத்துக்குத் தடை சொல்லவில்லை. மன்னிக்க வேண்டும். தயவுசெய்து நன்றாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். "நமது மடத்தின் நிர்வாகத்தை இப்போது தேர்ந் தெடுக்கப் பெற்றிருப்பவரால் செய்ய இயலாது. அனுபவம் போதாது. மடத்துக்கு ஒரு நல்ல நிர்வாகியை அமர்த்தி விட்டுப் போகலாம்" என்றார். காலப்போக்கில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் இயங்கா நிலையை அடைந்தது என்பதை நோக்க வி. புஷ்பவனம் சொன்னது உண்மையா யிற்று. வேறுவழியின்றித் திட்டம் ஒத்திவைக்கப் பெற்றது. வினோபாபாவேயிடமும் நிலைமைகள் எடுத்துக் கூறப்பெற்று விரைவில் வருவதாகக் கூறி இசைவு பெறப்பட்டது. சுதந்திரமான பணிக்கும், வாழ்க்கைக்கும் நிறுவனம் தடை என்ற அனுபவ வாக்கு நமது நிலையிலும் உறுதியாயிற்று.

வினோபாபாவேயுடன் ராமநாதபுரம், மதுரை மாவட்ட யாத்திரைகளில் கலந்து கொள்ள முடிந்தது. பின், மடத்தின் நிர்வாகத்திலிருந்து மெள்ள மெள்ள விடுதலை பெற்றுச் செல்லும் முயற்சியில் தீவிரம் குறைந்தது.

28

யாவில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூட்டம் ஒன்றை 1968 அக்டோபரில் வினோபாபாவே கூட்டினார். அதற்கு அவசியம் வரும்படி அழைப்பு வந்தது. கயாவுக்குச் சென்றோம். கயா, புத்தர் ஞானோதயம் பெற்ற புண்ணியத் திருத்தலம். புத்தரின் காலம் கி. மு. 5-ம் நூற்றாண்டு. புத்தர் அரச குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் வாழ்க்கையின் துன்பம் - மக்களின் துன்பம் முதலியவற்றைக் கண்டு அரசுக் கட்டிலைத் துறந்தார். துன்பத்தின் காரணத்தை ஆராய்ந்தறிந்தார். ஆசையே காரணம் என்று கண்டார். ஆசையென்பது கொச்சையானது; நிர்வாணத் தன்மையுடையது. எப்படியும் அதாவது வழி, துறை பற்றிக் கவலைப்படாமல் பொருட்களை அடைய நினைப்பது ஆசை திருமூலரும்,

"ஆசை அறுமின்கள்; ஆசை அறுமின்கள்
ஈச னோடாயினும் ஆசை அறுமின்கள்"


என்றார். நெறிமுறைகளோடு இசைந்த விருப்பங்கள் தவிர்க்கத் தக்கனவல்ல. இந்திய வரலாற்றில் புத்தர் கொள்கைகளின் தாக்கம் மிகுதி. இந்து மதம் புத்தரின் கொள்கையை நேரடி யாக ஏற்காததால் புத்த மதம் தனி மதமாயிற்று. ஆயினும், பெளத்தத்தின் தாக்கம் இந்து மதத்தில் நிறைய ஏற்பட்டிருக்கிறது. இந்து நாகரிகத்துக்கு அஹிம்சையைத் தந்ததே பெளத்தம்தான் என்றால் மிகையன்று. கயாவில் உள்ள புத்தவிஹாரில் தியானம் செய்ய எண்ணம். ஆனால், எண்ணம் கைகூடவில்லை ஏன்? பிச்சைக்காரர்கள் கூட்டம் ! அமைதியான சூழ்நிலை கிடைக்கவில்லை! தூய்மை இல்லை! -

கயாவில் வினோபாபாவேயைச் சந்தித்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சிரித்துக்கொண்டே "இரும்பு விலங்கு அரசு போடுவது; கால நிர்ணயப்படி கழற்றப்பெறும். தங்க விலங்கு நாமே போட்டுக்கொள்வது எளிதில் கழற்ற முடியாது” என்று கூறி, "விடுதலை ! விடுதலை!" என்றார். அடுத்துப் பல்வேறு சமூகப்பணிகள் பற்றிக் கலந்துரையாடினார். சரியாகக் காலை பத்து மணிக்குக் கூட்டம் தொடங்கியது. நாம் நமது உரையை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொண்டு போயிருந்தோம். யு. என். தேபர் மற்றும் ஆங்கிலம் தெரிந்த பலர் வந்திருந்தனர். ஆயினும், ஆங்கிலத்தில் யாரும் பேசவில்லை. இந்தியிலேயே பேசினர். நமக்கு ஆற்றொணாத் துயரம்! நாமும் வல்லடி வழக்காகத் தமிழில் பேசினோம். உடன் அழைத்துப் போயிருந்த சகோதரி திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நமது தமிழ்ப் பேச்சை இந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார். மீண்டும் வினோபாப்ாவேயிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பி விட்டோம். அந்தக்கூட்டத்தின் முடிவு, பூதான நிலங்களை நல்லவண்ணம் சாகுபடி செய்வது, பூதானத்தின் மூலம் ஏழைகளுக்குக் கிடைத்த நிலங்களைக் கைமாறாமல் பார்த்துக் கொள்வது முதலியவை.

தமிழ்நாடு திரும்பியதும் மீண்டும் பணி; விரைந்து செய்யும் பணி தொடங்கியது. ஆனால், நிலக்கொடை இயக்க நிலங்களின் பயன்பாட்டில் ஏற்பட்ட அனுபவம், ஏழைகளும் கூடத் தனி உடைமைகளில் காட்டும் ஆர்வம் கூட்டுடைமையில் காட்டுவதில்லை என்பதுதான்! பல தலைமுறைகளாகச் சொத்து என்று ஏதும் இல்லாதிருந்ததால் ஏற்பட்ட ஆசையா? அல்லது பரஸ்பர நம்பிக்கையின்மையா? ஆய்வு செய்ய வேண்டும். இந்திய நாட்டின் நிலப்பரப்பளவையும் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லோருக்கும் நிலம் வழங்குவதன் மூலம் தீர்வுகாண இயலாது. அது மட்டுமல்ல, சாதாரணமாக ஏழைகள் சொத்தின் மேல் ஆசைப்படுவார்கள். ஆனால் வைத்துப் பாதுகாக்க மாட்டார்கள். நில உச்ச வரம்புச் சட்டம் மூலம் நிலமற்ற ஏழை விவாசயத் தொழிலாளர் களுக்கு வழங்கப்பெற்ற நிலம் அவர்கள் கைவசம் இல்லை என்பதை நீதிபதி கணபதியா பிள்ளை விசாரணை அறிக்கை அறிவித்தமையை நாடறியும். "உள்ளவர்களுக்கு மேலும் தரப்படும். இல்லாதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்ற விவிலிய வாக்கு நமது நாட்டு ஏழைகளைப் பொறுத்தவரை நூற்றுக்குநூறு உண்மையாயிற்று.

வினோபாபாவேயுடன் பழகிய தாக்கத்தால் நமது ஆதீன நிலங்கள் இடைத்தரகர் வழி குத்தகைக்கு விடும் பழக்கம் தவிர்க்கப் பெற்றது. விவசாயிகளுக்கே நேரடிக் குத்தகையாக ஒப்படைக்கப்பெறும் நடைமுறை அறிமுகப் படுத்தப்பெற்றது. நம் இளமைக்காலத்தில் கடியாபட்டியில் இருந்தபோது புனிதர் வினோபாபாவே மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக வாழ்நாள் முழுதும் அவர் நினைவு நம்மிடம் இருக்கும்.

29

றிவு வளர்ச்சிக்கு, ஆன்மாவின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பயணங்கள் மிகுதியும் துணை செய்யும். நமது நாயன்மார்கள், ஆழ்வார்கள் பயணம் செய்த வரலாறுகள் கவனத்துடன் படிக்கத்தக்கன.

தமிழ்நாட்டு மடாதிபதிகளில் கப்பல் வழியாகவும் விமானம் வழியாகவும் உலக நாடுகளைச் சுற்றி வந்த மடாதிபதி - ஆதீனகர்த்தர் நாம் ஒருவர்தான்! யாம் பயணம் செய்யாத பகுதி ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா மட்டும்தான். கம்யூனிஸ்ட் நாடுகளாகிய சோவியத் ரஷ்யா, செஞ்சீனா முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தமையால் சம வாய்ப்பு சமுதாயத்தில் ஈடுபாடு. "சம வாய்ப்புச் சமுதாயம் காண முதற்படி கூட்டுறவு” என்பது மாமேதை லெனின் வாக்கு. அதனால் கூட்டுறவு இயக்கத்தில் நமக்குத் தனி ஈடுபாடு. 1953-ல் முதன் முதலாக இலங்கைக்கு பயணம், இந்தப் பயணத்துக்குரிய ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர் பயண நூல் எழுதிச் சிறப்புப் பெற்ற சோம.லெ.! இவர் உலக நாடுகளைச் சுற்றி வந்தவர். நல்ல எழுத்தாளர். அவர் இப்போது அமரர். அவரது அருமை மகன் சோமசுந்தரம் அமெரிக்காவில் உள்ளார்.

இலங்கையில் மட்டக்களப்பில் தமிழ் மாநாடு நடந்தது. மாநாட்டை நடத்தியவர் அருள்தந்தை தனிநாயகம் அடிகளார். இவர் நல்ல தமிழறிஞர். உலகந் தழுவிய தமிழ் அமைப்பைக் கண்ட பெருமை தனிநாயகம் அடிகளாருக்கே உரியது. Tamil Literature என்ற ஆங்கில இதழை நடத்தியதன் மூலம் தமிழை உலகத்தின் வீதிகளுக்கு எடுத்துச் சென்றவர் தனிநாயகம் அடிகளார். இவர் தமிழ் மாநாட்டுக்கு அழைத் திருந்ததன் வாயிலாக நமது முதல் அயல்நாட்டுப் பயணம் அமைந்தது.

1953-ல் இலங்கையில் பதினைந்து நாட்கள் சுற்றுப் பயணம். தமிழ் மாநாட்டில் நல்ல கூட்டம். இலங்கைத் தமிழர்களின் தமிழார்வம், தமிழ்நாட்டினர் தமிழார்வத்துக்கு எத்துணையும் குறைந்ததல்ல. தமிழ் மாநாட்டில் இரண்டு நாட்கள் பங்கேற்பு! அதற்குப் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விரிவுரையாளர் மணி அருள்நந்தி அழைப்பு. பின் முஸ்லிம் கல்லூரியில் இந்து சமய மரபுப்படி வரவேற்பு.

அடுத்து, திரிகோணமலை தீவுப் பகுதிகள் சுற்றுப் பயணம். இந்தப் பயணம் தொடக்கம். அதன்பின் தொடர்ச்சி யாகப் பல முறை இலங்கைப் பயணம் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. பின் இலங்கைப் பயணம் தொடராமைக்கு காரணம் நாமே விதித்துக்கொண்ட தடை 1968 அக்டோபரில் நாம் யாழ்ப்பாணத்தில் பேசிய கடைசிக் கூட்டத்தில் "இனி இலங்கைக்கு-யாழ்ப்பாணத்துக்கு வரும் உத்தேசமில்லை" என்று அறிவிக்கப் பெற்றது.

ஏன்? இலங்கைத் தமிழர்கள்-சிங்களர்கள் சேர்ந்து ஒருமைப்பாட்டுடன் வாழ்வது தவிர்க்க இயலாதது என்பது கருத்து. இதைப் பலவாறாக மேடைகளிலும் தனிக்கலந்துரை யாடல்களிலும் வலியுறுத்தியும் கூடத் தீவிரவாதம் குறைய வில்லை. நடுநிலைவாதிகள் இணைந்து வாழ்வதை நம்பிய வர்கள்கூட அமரர் அமிர்தலிங்கம் உட்பட தீவிரவாதி களைக் கண்டு அஞ்சினர். என்.எம். பெர்ரா தலைமையில் சமசமாஜம் என்ற ஒர் அரசியல் கட்சி இயங்கியது. என்.எம். பெர்ராவை இலங்கை ஒருமைப்பாட்டுக்குத் தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் பெற்றது. ஆனால், நமது நாட்டு வரலாறுதான் அங்கேயும். இரண்டு தேசிய இன மக்க்ளும் கலந்து பழகுதற்குரிய வாயில்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தகர்க்கப்பட்டு வந்தன. அதுமட்டுமல்ல. பகையும் வளரத் தலைப்பட்டதை உய்த்துணர முடிந்தது.

எந்தவொரு நாடாயினும் நாம் வாழும் நாட்டை நமது நாடாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நாட்டு மக்களை நமது சுற்றத்தாராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் வாழும் முறைமை. இங்ங்ணம் வாழும் முறைமை சீன இனத்துக்கு இருக்கிறது. ஆரியருக்கும் உண்டு.

தமிழ் மக்கள் இந்த வழி வாழ்ந்து சிறப்புப் பெற முடியாத நிலையில் இலங்கைக்கு வந்துபோவதில் என்ன பயன் என்பதே நமது கவலை.

இன்றைய நிலையில் புவிக்கோளம் மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த உலகில் இன்று எந்தவொரு இனமும் தனித்து வாழ்ந்துவிட இயலாது. இன்று மனிதகுல ஒருமைப்பாடு என்பது கொள்கையல்ல. நாகரிகம் அல்ல. அறமும் அல்ல! இன்று மனித குல ஒருமைப்பாடு என்பது வாழும் முறைமை. மனித குலம் உயிர் வாழ இன்றியமையாதது. இந்த உணர்வால் உந்தப்பட்டு இலங்கை செல்வதை நாம் தவிர்த்தோம். அதற்குப் பிறகு, இலங்கையில் திரிகோண மலையில் உள்ள இளைஞர் அருள்நெறி மன்றத்தினர், தொண்டர் இ.சண்முகராசா தலைமையில் உண்ணாவிரதம் இருந்தும் கூட அழைக்க முயன்றனர். மறுப்பதே கடமையாகி விட்டது.

30

லங்கை அறநிலையத்துறை கொழும்பில் நடத்திய உலக இந்து மத மாநாட்டுக்கு நம்மை அழைத்தனர். நமக்கு உடன்பாடில்லை. வற்புறுத்தினர். ஒரளவு உடன்பட்டு நின்று, இலங்கையில் உள்ள ஆர்வலர்கள் கருத்தறிய ஐம்பது பேருக்குக் கடிதங்கள் எழுதப் பெற்றன. நாற்பத்தைந்து கடிதங்களுக்குப் பதில் வந்தது. ஐந்து கடிதங்கள் முகவரி மாற்றம் காரணமாகத் திரும்பி வந்தவிட்டன. ஒன்றிரண்டு கடிதங் களைத் தவிர, பல கடிதங்கள் இலங்கைக்கு வரும்படியே எழுதப் பெற்றிருந்தன. அவற்றுள் ஒரு கடிதத்தில் மட்டும் விரிவான ஆலோசனை இருந்தது. இதை எழுதியவர் 'இலங்கை காந்தி என்று பாராட்டப் பெறுபவரும், அகில இலங்கை காந்தி சேவா சங்கத் தலைவருமாகிய சி.சு. வேலாயுத பிள்ளை, இவர் ஒரு காந்தியத்தொண்டர். பிரம்மச்சாரி, சட்டை அணியாதவர். எப்போதும் கதர் உடுத்துபவர். அண்ணல் காந்தியடிகள் வழியில் நிர்மாணப் பணிகள் செய்து வருபவர், இவர், நாம் இலங்கைக்கு வருவதன் மூலம் நல்லிணக்கப் பேச்சு நடத்த வாய்ப்பிருக்கிறது என்று நம்பினார். அதற்காக வரவேற்றார். இலங்கையில் தமிழர்சிங்களர் நல்லிணக்கமின்மை ஒருபுறம் இருக்க, தமிழர்களிடையேகூட நல்லிணக்கம் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள்-மட்டக்களப்புத் தமிழர்களிடையேயாவது ஒருமைப்பாடு காணலாம் என்று ஆசைப்பட்டார் இவர். நமக்கும் நல்ல ஆலோசனையாகப்பட்டது. "மாநாட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்திலிருந்து அறிஞர்கள் அழைக்கப்பட்டுள்ளார்களா?" என்று உலக இந்து மாநாட்டு வரவேற்புக் குழுவினரிடம் கேட்டோம். அவர்கள் “இல்லை” என்றனர். நாம் ஒரு பெயர்ப்பட்டியல் கொடுத்து அவர்களை அழைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு வரவேற்புக் குழுவினர் உடன்படவில்லை. இந்த பெயர்ப் பட்டியலில் யாழ்ப் பாணத்தில் தலைசிறந்த சமய அறிஞர்கள்-பண்டிதமணி சி. கணபதியாபிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள் இருந்தார்கள். வரவேற்புக் குழுவினர் "யாழ்ப்பாணத்துக்காரர்கள் மட்டக் களப்புக்காரர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதுப வர்கள். அதனால் அழைக்க இயலாது” என்றனர். ஒரு மொழி பேசும் மக்கள் ஒரு சமய நெறி நின்றொழுகும் மக்கள் சேர்ந்து வாழ முடியாத நிலையில் உலகம் பற்றிய எண்ணம் ஏதாவது பயன் தருமா? இதுதான் இன்றைய போக்கு. உலகத்தில் வாழும் எந்த இனத்தாரையும்விட இன்றும் தமிழ்நாட்டில் வாழும் தமிழரிடையில் உலகம் என்ற பெயர் ஒட்டிக் கொண்ட அமைப்புக்கள் பலப்பல. தமிழ்நாட்டில் என்ன உலகம் வேண்டியிருக்கிறது?

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை. ஆனால், உலகத்துடன் இணைந்த தமிழ் அமைப்புக்கள் ஏராளம். விநோதமான சூழ்நிலை.

நாம் "ஒருமைப்பாடு காணும் நிலை இருந்தால் ஒழிய மாநாட்டுக்கு வர விருப்பமில்லை” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டோம். வரவேற்புக் குழுவினர் ஒப்புக் கொண்டனர். நமது இலங்கைப் பயணமும் உறுதி செய்யப் பெற்றது. எல்லோருக்கும் தெரிவிக்கப் பெற்றது. நமது நம்பிக்கைக்குரிய புதுக்கோட்டை வழக்கறிஞர் வீர. சா. மெய்யப்பனைச் சில நாட்களுக்கு முன்பே இலங்கைக்கு அனுப்பி, மாநாட்டு ஏற்பாடுகளை அறிந்து கணித்து அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் பெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழுவினர் நம்முடைய வருகையை விளம்பரப்படுத்தினர். ஆனால், யாழ்ப்பாணத்துக்காரர் யாரையும் அழைக்கவில்லை. எனவே, நாமும் மாநாட்டுக்குச் செல்லவில்லை. - -

அடுத்து முயன்றவர் பாராட்டுதலுக்கு உரிய இலங்கை அரசின் கிராமத் தொழில் அமைச்சர் தொண்டைமான், அமைச்சர் தொண்டைமான் நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர். நமக்கு மிகவும் வேண்டிய குடும்பம். அமைச்சரின் முழுப்பெயர் செளமியநாராயணத் தொண்டைமான். திருக் கோட்டியூரில் எழுந்தருளியுள்ள அருள்திரு செளமிய நாராயணப் பெருமாள், தொண்டைமானின் குலதெய்வம். நாம் இலங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதெல்லாம் மலைப் பகுதியில் அமைச்சர் தொண்டைமானும் அவர் இளவல் குமாரவேலுவுமே பயண ஏற்பாடுகளைச் செய்வார்கள். இவர்களுடைய வளமனைகளிலேயே தங்கும் பழக்கமும் உண்டு. அமைச்சர் தொண்டைமான் நல்ல அரசியல் தலைவர், நிர்வாகி,

இவர் தமது அரசியல் வாழ்வின் பொன்விழாவைக் கொண்டாட அழைத்தார். நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டோம்! என்ன நிபந்தனை? இலங்கையில் இனக்கலவரம்! மூண்டு எரிந்துகொண்டிருந்த நிலை I.P.K.F. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த நிலை! யாழ்ப் பாணத்தில் நமக்கு நல்ல உறவு உண்டு. இனக்கலவரத்தால், யாழ்ப்பாணத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நாம் கொழும்புக்கு வந்து மீள்வது முறையன்று. யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று அந்த மக்களைப் பார்த்து ஆறுதல் கூற வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்தால் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறினோம். அமைச்சர் தொண்டைமானின் முயற்சி கைகூடவில்லை. மீண்டும் நாம் வற்புறுத்தியதன் பேரில் I.P.K.F. விமானத்தில் செல்ல அனுமதி வாங்கினார். இந்த விமானத்தில் செல்வது உரிய பயனைத் தராது என்று கருதி நாம் மறுத்துவிட்டோம்!

ஆக, 1968-க்குப் பிறகு நாம் இலங்கை செல்லவில்லை. இனி என்று கைகூடுமோ? திருவருள் என்ன நினைத் துள்ளதோ? இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் "விதியே! விதியே! தமிழச்சாதியை என்செய நினைத்தாய்?" என்ற பாரதியின் புலம்பலையொட்டி நாமும் புலம்ப வேண்டியதுதானா?

இலங்கைப் பயணங்களில் இலங்கை மண்ணின் மைந்தர்கள் சிலரின் அறிமுகம் கிடைத்தது நல்ல பேறு. செந்தமிழ்ச் செல்வர் முதலியார் சின்னத் தம்பி. இவருக்கு முதலியார் என்பது பட்டப்பெயர். நல்ல பண்பாளர். யாழ்ப் பாணம் பகுதிப் பயணத்தின்போதெல்லாம் இவருடைய ஊராகிய வட்டுக்கோட்டையில் இவர் வீட்டில் தங்குவது வழக்கம். நாம் தங்குவற்கென்றே இவர் ஒரு வளமனை கட்டி, அதற்கு குன்றக்குடி என்று பேரும் சூட்டினார். இவருக்கு இரண்டு மகளிர் மட்டுமே! மூத்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இரண்டாவது மகள் பெயர் குஞ்சு படுசுட்டி! குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே இந்தப் பெண் நமக்குப் பழக்கம். இன்று இவர் கொழும்பில் வாழ்கிறார். நல்ல குடும்பம்! விருந்தளிப்பில் ஆர்வம் காட்டும் குடும்பம்! அடுத்து, பண்டிதர் துரைசிங்கம், இவர் மனைவி சத்திய தேவி. இவர்களிருவரும் இப்போது அமரர்கள். இவர்கள் நீர்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஈழத்துச் சிவானந்தன் புங்குடு தீவைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரர் சிதம்பர ராமலிங்கம் இந்துக் கல்லூரியில் பணி செய்தார். இந்துக் கல்லூரி நிர்வாகிகள் நமக்கும் பெரியாருக்கும் உள்ள நட்பு கருதி முதலில் மறுத்தனர். ஈழத்துச் சிவானந்தன் போராடி வெற்றிபெற்றார். ஈழத்துச் சிவானந்தன் துடிப்புள்ள இளைஞர்; நல்ல சொற்பொழிவாளர்; நம்பால் கனத்த அன்புடையவர். நமது ஈழத்துச் சொற்பொழிவுகள் நூலின் பதிப்பாசிரியர். அடுத்து பி. கனநாதபிள்ளை. இவர் ஆறுமுக நாவலர் பரம்பரையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் 19-ம் நூற்றாண்டில் செந்தமிழுக்கும் சிவ நெறிக்கும் செய்த தொண்டு அளப்பரியது, ஆறுமுக நாவலர் நிறுவிய அறச்செயல் இலங்கையிலும் உண்டு; தமிழ் நாட்டிலும் உண்டு. பி.கணநாத பிள்ளை ஆறுமுகநாவலர் செய்த அறத்தைக் காக்கும் கடமை பூண்டவர், முணு முணுக்கிறார்! அவ்வளவுதான் செயல் திறன்! ஆறுமுக நாவலர் நிறுவிய அறக்கட்டளை சார்பில் சிதம்பரத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி நடைபெறுகிறது. சென்னை தங்கசாலைத் தெருவில் ஒர் அச்சகம். இந்தப் பணிகளுக்கு ஊட்டமளிக்க வேண்டியிருக்கிறது. கனநாதபிள்ளை தமிழ் நாட்டில் உள்ள ஆறுமுக நாவலர் அறக்கட்டளைக்கு அறங்காவலராக நம்மை நியமனம் செய்துள்ளார்.

31

கஸ்ட் 1969-ல் ஒரு நாள் காலையில் தொலைபேசி ஒலித்தது. எடுத்துக் கேட்டோம். மாண்புமிகு சட்ட அமைச்சர் செ. மாதவன் பேசினார். அதாவது, தமிழ்நாடு மேல்சபை உறுப்பினராக இருக்க மாண்புமிகு முதல்வர் கலைஞர் சம்மதம் கேட்கச் சொன்னார் என்பதுதான் செய்தி! எதிர்பாராத செய்தி. வியப்பு: "அவசியமில்லை. வேண்டாம்." என்பது நமது பதில்.

இரண்டு நாள் கழித்துத் திரும்பவும் முதல்வர் மிகவும் விரும்புவதாகக் கூறித் தமது பங்கிலும் வற்புறுத்தினார். நமது பதில் யோசித்துச் சொல்வதாக இரண்டு நாள் தவணை கேட்கப்பெற்றது. முதல்வர் கலைஞரும் தொலைபேசி வழி பேசினார். உடனே, பொது வாழ்க்கை தொடங்கிய அந்த நாள் முதல் இன்று வரை நமது கெழுதகை நட்புக்குரியவர்களாக விளங்கும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள், தவத்திரு சுந்தர சுவாமிகள் இருவரிடமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கப்பெற்றது.

அடிகள் பெருமக்கள் இருவரும் மேல்சபைக்குப் போகலாம் என்றார்கள். அதன்பின் வளர்ப்புத் தந்தையாகிய தருமபுரம் மகாசந்நிதானம் கயிலைக் குருமனியின் கருத்தறிய முயற்சி. அவர்களும் மேல்சபைக்குப் போகலாம் என்று இசைவு தந்தார்கள். இதற்குப் பிறகுதான் கலைஞருக்கு இசைவு தரப்பெற்றது. தமிழ்நாட்டு மடங்கள் வரலாற்றில் இது ஒரு திருப்புமையம் ! கலைஞர் நமது சமுதாயச் சிந்தனைக்குத் தந்த ஆக்கம் இது.

கலைஞரிடம் நமக்கு நல்ல பழக்கம் உண்டு! திருமடத் துக்கு வந்திருக்கிறார். 1967 தேர்தலில் நாம் காங்கிரஸ் பக்கம்! நாம் மயிலாடுதுறை நகராட்சிப் பயண மாளிகையில் தங்கி யிருந்தபோது கலைஞரும் அங்கே தங்கியிருந்தார். அன்று மாலை இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது நமது சமய அமைப்பு செய்யவேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி அவர் கொண்டிருந்த உணர்வுகளைப் புலப்படுத்தினார். பயனுள்ள கலந்துரை யாடல். இந்தக் காலக்கட்டத்தில் தான் பல நல்ல நண்பர்கள் கிடைத்தனர். இன்றைய சட்ட அமைச்சராக இருக்கும் கே.ஏ. கிருஷ்ணசாமியும் அறிமுகமானார்.

மேல்சபை உறுப்பினராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி 1969 ஆகஸ்டில் நடந்தது. முதல்வர் கலைஞர், மற்ற அமைச்சர்கள் உடனிருந்து நடத்தி வைத்தனர். நாம் உறுதிமொழியைக் கடவுள் பெயரால் எடுக்காமல் மனச் சாட்சியின் பெயரால் எடுத்துக்கொண்டோம். இது பலருடைய கவனத்தை ஈர்த்த செய்தியாயிற்று. பல செய்தித்தாள்கள் கட்டம் கட்டிச் செய்தியாக்கின. இதனால் விளைவுகளும் தோன்றின. எதிர்விளைவுகளும் தோன்றின.

தமிழ்நாட்டில் ராய சொக்கலிங்கம் என்று அறிமுகமான ராய. சொ-வை அறியாதவர் யார்? நல்ல தமிழறிஞர். தமிழ் இலக்கியத்துக்கு கணிப்பான் போல விளங்கியவர். நம்பால் சாலப்பரிவு காட்டியவர். இவருக்குக் கோபம் வந்துவிட்டது! நீண்ட கடிதம் எழுதினார்-மனச்சாட்சியின் பெயரால் உறுதிமொழி எடுத்ததற்கு ! நாமும் நீண்ட கடிதமாக விளக்கமாகப் பதில் எழுதினோம். எதிர்பாராத சூழ்நிலையில் எடுத்த முடிவல்ல. நீண்ட மனப்போராட்டத்துக்குப்பின் எடுத்த முடிவு. உலகியலில் பொய் சொல்லும் வாய்ப்புகள் வரலாம் என்ற முற்காப்புணர்வுடனேயே திருவள்ளுவர்.

'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்...'


என்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கடவுள் முன்னால் உறுதிமொழி தர-சத்தியம் செய்ய உடன்படாது இறைவனை மகிழின்கீழ் இருக்க விண்ணப்பிக்கிறார். ஆதலால், ஒருவர் பொது வாழ்க்கையில் கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவுக்கு வாய்மையாளராக இருப்பது கடினம்! கண்ணோட்டம் கருதிப் பல வழுக்கல்களும் இழுக்கல்களும் வரும்! ஆதலால், 'தன்நெஞ்சறிவது பொய்யற்க என்ற மொழிவழி நடப்பதுதான் நடைமுறையில் இயலும் என்று விளக்கினோம். மேலும், சமய நெறிப்படி பார்த்தாலும் மனச் சாட்சி என்ற சொல்லேகூடக் கடவுளைக் குறிக்கும். எப்படி? மனதினது சாட்சி மனச்சாட்சி என்று விரியும். உயிருக் குயிராக விளங்கும் பரம்பொருளே மனத்தினுடைய சாட்சியாக விளங்குகிறது என்று கருதவும் இடமுண்டு ராய. சொக்கலிங்கம் ஒருவாறு சமாதானம் அடைந்தார்.

கலைஞர் எப்போதும் ஏதாவது புதுமையாகச் செய்வதில் ஆர்வமுடையவர்! விரைந்து முடிவெடுப்பார். முடிவெடுப்பதைத் துணிவுடன் செயலாற்றுவார். ஆற்றல் மிக்க பேச்சாளர் அண்ணாவின் அடிச்சுவட்டில் உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதி, நிலைமாறா அணி சேர்த்து வைத்துள்ளார். இவர் நம்மிடம் காட்டிய பரிவுக்குத் தமிழார்வம் மட்டுமே காரணம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தக்கார் ஒருவர் கலைஞரிடம், "அடிகளாரை நாம்தான் விரும்புகிறோம். ஆனால் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார். அவருடைய ஆதரவு முழுதும் காங்கிரஸுக்கு அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான்.” என்று கூறியுள்ளார். இதற்குக் கலைஞர், "நாம் அடிகளாரை ஆதரிப்பது கட்சிக்காக அல்ல. தமிழுக்காக!' என்று பதில் கூறியுள்ளார். கலைஞருக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. கலைஞரின் தமிழார்வம் பாராட்டி மகிழத்தக்கது.

அவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்வழிக் கல்வி கற்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை தர ஒர் அரசாணை பிறப்பித்தார். இந்த ஆணையைப் பிறப்பிக்க காரணமாக இருந்ததில் நமது பங்கும் உண்டு. தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த அரசு ஆணையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் அரசு ஆணையைத் திரும்பப் பெறுவதன் மூலம் அமைதி காண விரும்பி முதல்வர் கலைஞரை அணுகியபோது, "தமிழினால் பதவிக்கு வந்தோம். அதே தமிழினால் பதவி போகட்டுமே!" என்று உறுதியாகக் கூறினார். நாம்தான் பல காணங்களைக் கூறி 'லட்சுமணசாமி கமிஷனை நியமிக்கச் செய்து ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தோம்.

மேல்சபை உறுப்பினராக இருந்தபோது மகிழும் வண்ணம் கலைஞர் அரசின் வாயிலாக பல பணிகள் நடைபெற்றன. வள்ளுவர்கோட்டம் கருக்கொண்டது இந்தக் காலத்தில்தான்! இந்த அனுபவங்கள் முழுதும் எழுதினால், அது விரிவாகும்! அரசியல், சமூக வரலாறாகவும் அமையும்! பணிகளைத் தேடிப் போகலாம்; பதவிகளைத் தேடிப் போகக் கூடாது. இந்தக் கோட்பாடு மிகவும் நல்லது.

32

ராஜாஜி மூதறிஞர்; தத்துவஞானி. அவருடைய அரசியல் சமூகக் கோட்பாடுகளில் முரண்பாடுகள் இருக்கலாம். இருப்பினும் ராஜாஜியின் மூதறிவு வியக்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இந்தியாவின் அரிய சொத்து. 1952-ல் அருள்நெறித் திருக்கூட்ட மாநில மாநாடு தேவகோட்டையில் நடந்தது. மாநாட்டைத் தொடங்கி வைக்க ராஜாஜி அழைக்கப்பெற்று, தேவகோட்டைக்குச் செல்லுமுன் குன்றக்குடி திருமடத்துக்கு வந்தார். சில மணித் துளிகள் மானுடத்தின் தரம் பற்றி பேசினார்.

பின், தேவகோட்டை மாநாடு! ராமனின் அரசு, அதிகாரம், பதவி நிராகரிப்பு, பாண்டவர்களின் பொறுமை, சீதையின் தவம், பரதனின்.பரிவு ஆகியவை இன்றைய மனித சமுதாயத்தில் வளர வேண்டும் என்று குறிப்பிட்டு அற்புத மான உரை நிகழ்த்தினார். மாநாட்டின் முடிவில் நாமே இயக்கத் தலைமையில் இருக்க விரும்பவில்லை. அருள்நெறித் திருக்கூட்டம் மக்கள் இயக்கமாக வளரவேண்டும் என்ற விருப்பத்தில் நெல்ல மாவட்டத் தலைவராக அப்போது விளங்கிய இலஞ்சி ஐ. ஏ. சிதம்பரம் பிள்ளையைத் தலைவராகத் தேர்வு செய்யும்படி கோரினோம். அவை ஒப்புக்கொண்டது. -

இலஞ்சி ஐ. ஏ. சிதம்பரம் பிள்ளை முதுகலைப் பட்டம் பெற்றவர்; நன்றாகப் பேசுவார். பழகுதலுக்கு இனியவர்; மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அருள்நெறித் திருக்கூட்டத்தை வளர்த்தார்; திருக்கோயில் தவறாமல் வார வழிபாடுகள் நடந்தன. நாடு தழுவிய நிலையில் நமது பயணம் அமைந்தது. சங்கரன்கோயில் எஸ்.என். அம்பலவாணன் பிள்ளை இணைச் செயலாளர். நல்ல உழைப்பாளி. இயக்கப் பணிகளைப் பொறுப்புடன் செய்தவர். இவருடைய அருமைப் புதல்வர் நமசிவாயம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி செய்கிறார். பழகிய பழக்கம் விட்டுப் போகவில்லை. உறவுகள் பராமரிக்கப் பெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில்தான் அருள்நெறி இயக்கம் நாலாந்தர மட்டத்தில் உள்ள மக்களுக்கும் சென்றது. இப் போதைய மாவட்டத் தலைவர் ப. மூக்கப்பிள்ளை, இவர் சிவபூஜை செல்வர். பழந்தமிழகத்தின் கணக்காயரை நினைவூட்டும் வகையில் படித்தவர். பண்ணோடு திருமுறை பாடுவார். விகற்பம் இல்லாது பழகுபவர்; இவருடைய முயற்சியால் திருச்சி கைலாசபுரத்தில் அருள்நெறித் திருக் கூட்டம் தோன்றி நாளும் நல்ல பணிகளைச் செய்து வருகிறது. இப்போதைய திருச்சி மாவட்டச் செயலாளர் மா. சொக்கையன் நல்லவர். இவருக்குச் சேக்கிழார் மீது ஈடுபாடு. சேக்கிழார் மண்டபம் கட்ட ஆசை! நாம் மறுத்தோம். ஆனாலும் அவர் விடாப்பிடியாக அடிக்கல் போட்டார். சேக்கிழார் மண்டபம் எழவில்லை. விநாயகர் கோயிலே தோன்றியுள்ளது. ஏன்? சேக்கிழார் மண்டபம் வேண்டாமா, சேக்கிழார் திருத்தொண்டர்களின் புகழ்பாடிப் பரவியவர்; திருத்தொண்டின் நெறி வாழப் பெரிய புராணம் செய்தவர். சேக்கிழாருக்கு உண்மையான நினைவுச் சின்னம் சேக்கிழார் பாடிப் பரவிய திருத்தொண்டர்களின் திருத்தொண்டுகளை நமது தலைமுறையிலும் செய்தலே!

1972-ம் ஆண்டு மகாசிவராத்தியன்று இரவு நாயன்மார் அடிச்சுவட்டில் என்னும் திருத்தொண்டு வழிகாட்டிக் கையேடு எழுதப்பெற்றது. இது திருத்தொண்டு செய்வோருக்கு வழிகாட்டும்!

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மருத்துவமனை. இந்த மருத்துவமனையை நிறுவி வளர்த்து வருபவர் டாக்டர் ஜி. வேங்கடசாமி நாயுடு. இவர் நல்ல மருத்துவர்; பண்பாளர். இவருடைய அருமை மகள் நாச்சியார். இவர்கள் மருத்துவப் பணியைச் சேவையாக செய்துவருபவர்கள். டாக்டர் ஜி. வேங்கடசாமி நாயுடு, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் டீன் ஆகப்பணிசெய்தபோது, அருளாளர் ஒருவரின் கண் மருத்துவத்திற்காக ஒரு மாதம் நாம் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது டாக்டருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. டாக்டரிடம் கண்ணப்பநாயனார் வரலாற்றைக் கூறினோம் கண் மருத்துவத்துறைப் பார்வையில் கண்ணப்ப நாயனாரின் மருத்துவ அறிவு காலத்தால் முந்தையது என்று டாக்டர் பாராட்டினார். அதன்பிறகு அரசு பொது மருத்துவ மனையில் கண் மருத்துவப் பகுதிக்கென கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு 'கண்ணப்பர் கண் மருத்துவப் பகுதி என்று பெயர் சூட்டப்பெற்றது. இங்ங்ணம் அடியார்களைப் பின் பற்றித் தொண்டுகள் செய்வதுதான் முறை. வழிபாடு என்ற சொல்லே வழிப்படுதல் என்ற அடிப்படையில் பிறந்த சொல்லேயாம்.

தண்டியடிகள் திருவாரூர் வாழ்ந்த அடியார்; பிறவியிலேயே பார்வை இழந்தவர். திருவாரூர் கமலாலயம் பெரிய தெப்பக்குளம், ஐந்து வேலி பரப்பளவு உடையது. இது தூர்ந்து போயிற்று. இந்தச் செய்தியறிந்த தண்டியடிகள் கமலாலயத்தைத் துர்வை அள்ளித் துய்மை செய்ய விரும்பினார். கமலாலயத்தில் மண்ணெடுக்கும் இடத்தில் தறிநட்டு ஒரு கயிற்றின் நுனியை அதில் கட்டினார். அதற்கு எதிர்த்திசையில் கரையின் புறத்தே தறிநட்டு அதில் கயிற்றின் மறு நுனியைக் கட்டினார். கயிற்றைப் பிடித்துக் கொண்டே போய் ஒவ்வொரு தட்டாக மண்ணை அள்ளிக் கரையில் கொட்டினார். தொண்டின் ஆவேசம்!

மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோயில் என்று ஒன்று இருக்கிறது! அற்புதமான திருக்கோயில், திருக்கோயிலுக்குள்ளேயே திருக்குளம்! கட்டுமானத்துடன் கூடிய திருக்குளம்! ஆயினும் திருக்குளம் முழுதும் துர்ந்து குப்பை மேடாகிவிட்டது. 1953-ல் தண்டியடிகள் நினைவாக 30 நாட்கள் துர்வை எடுக்கப் பெற்றது. மதுரை மாநகர மக்கள்; மாணவர்கள், தொழிலாளர்கள் முதலியோர் ஒத்துழைப்புத் தந்தனர். இதுபோன்ற பணிகளைச் செய்வது தான் புராணங்களைப் போற்றும் நெறி!

இன்று நமது மக்களிடையே திருக்கோயில்கள், திருக் குளங்கள் இவற்றைப் பேணும் மனோநிலை அருகி வருகிறது மதுரை பொற்றாமரைக் குளம், மயிலை கபாலீசுவரர் திருக்கோயில் குளம் ஆகியவற்றின் தண்ணிர் வரத்துக்கால்களைத் துரர்த்து வீடுகள் கட்டிவிட்டனர். அதனால் தண்ணிர் வரத்து இல்லை. தெப்பக்குளம், நீர் நிலைகளை அமைத்தல் சமயஞ்சார்ந்த சமுதாய அறம் என்பதை நமது மக்கள் மறந்தது வருந்தத்தக்கது. அறம் செய்தலைவிட அறத்தைக் காப்பதுமேல் என்பதை நமது மக்கள் உணர வேண்டும்.

திருஞானசம்பந்தர் அடிச்சுவட்டில், பாலின்றி அழும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்குப் பால் வழங்கல், குழந்தை காப்பகங்கள் நடத்தல், அப்பரடிகள் அடிச் சுவட்டில் உழவாரத் திருத்தொண்டு செய்து நம்முடைய திருக்கோயில்களைப் பாதுகாத்தல், தண்டியடிகள் அடிச் சுவட்டில் திருக்குளங்கள் தூய்மை செய்தல் முதலிய பணி களைச் செய்யலாம். பட்டியல் போட்டால் விரிவடையும். இன்று திருத்தொண்டு செய்தால் புராணம் புத்துயிர்ப்புப் பெறும். மக்களையும் வளர்க்கலாம்; சமய நெறியையும் வளர்க்கலாம். இன்றைய உலகு அவாவி நிற்பது தொண்டு களையே!

இன்றும் திருச்சியைப் பொறுத்தவரை அனைவரும் அருள்நெறி இயக்கத்தில் உள்ளனர். அருள்நெறித் திருக் கூட்டத்துக்குக் கிடைத்த தீவிர ஊழியர் தொட்டியம் வீ.கிருஷ்ணமூர்த்தி. இன்றும் இடைவிடாது பணி செய்து வருகிறார். அணியே திரட்டி வைத்துள்ளார். அந்த அணியில் சந்திரசேகரன் நல்ல ஊழியர். பழுத்த பழம் கீழப்பழுவூர் உ. ரத்தின சபாபதி பிள்ளை. இவர் நல்லவர்? சொன்னதைக் கேட்பவர். இவர் ஆசிரியராகப் பணி செய்த கீழப்பழுவூர்ப் பள்ளியில் தீண்டாமை விலக்குக்கு ஒர் ஆலோசனைக் கூட்டம் கூட்டப் பெற்றது. அது என்ன ஆலோசனை? மகப்பேறு இல்லாதவர்கள் ஆதிதிராவிடர் குழந்தைகளைச் சுவீகாரம் எடுத்து வளர்க்கலாம் என்பது தான் இந்த ஆலோசனை! ஆசிரியர் உ. ரத்தினசபாபதி பிள்ளை, உடனே தனது பள்ளியிலேயே படித்த ஆதிதிராவிடர் பெண் குழந்தை ஒன்றைச் சுவீகாரம் எடுத்து வளர்த்து டாக்டருக்குப் படிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி நாடு முழுதும் விதைக்கப்படும் சொற்கள் செயலுக்கு வந்தால் நாடு வளரும்; மக்கள் வாழ்வர்.

33

சாதி, மத வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி மோதல் களை உருவாக்குவதை எதிர்ப்பது எப்போதும் நமது பழக்கம்.

1982 மார்ச் மாதம்! கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா. அபிஷேகத்துக்குக் கடலில் தண்ணிர் எடுப்பதில் இந்து கிறிஸ்துவ சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. பின் இஸ்லாமிய சமூகத்துக்கும் பரவியது. மிகவும் மோசமான கலகம்! இழப்பு ஏராளம்! துன்பமும் துயரமும் எழுதிக்காட்ட இயலாதது. கலகம் தொடங்கிய சில நாட்கள் வரை சரியாகப் போய்விடும் என்ற நம்பிக்கையில் நாம் மெளனம். பின் தணியாதது கண்டு நாகர்கோவிலுக்குச் சென்றோம். நாகர் கோவிலுக்கு வரும் தகவல் கெழுதகை நட்பும் பரிவும் கொண்ட அருமனை ஜி. ரீகுமாருக்குத் தரப்பெற்றது. அருமனை ஜி. ரீகுமார் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். உயர்ந்த பண்புகளை அணிகலன்களாகக் கொண்டவர். திருமணம் செய்து கொள்ளாமலே சமூகப் பணி செய்து வருபவர். கடுமையான உழைப்பாளி. கால் நூற்றாண்டுக்கும் மேலாக தம்முடைய பணிகளில் ஈடுபட்டு வருபவர். காந்தி மிஷன் தலைவர். முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவர் வடசேரி பயண மாளிகையில் நம்மை வரவேற்றார். உடனே அறநிலையத்துறை, காவல் துறை, வருவாய்த் துறைகளைச் சேர்ந்த பல்வேறு அலுவலர்களுடன் ஆலோசனை! அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் எம். பி. பிராணேஷைச் சந்தித்து நிலைமைகளை அறிந்துகொண்டு, செய்ய இருக்கும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் நாம் தனியே கலவரப் பகுதிகளுக்குச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஆயினும், நம்மால் அந்தக் கட்டுப்பாட்டை அனுசரிக்க முடியவில்லை. துணிவின்மைதான் நமது நாட்டுச் சிக்கல்களுக்குப் பெரிதும் காரணம், துணிந்து தொழிற்பட்டால் எல்லாம் நன்றாக நடக்கும்! விஞ்சினால் என்ன மரணம் தானே வரும். என்றாவது ஒருநாள் இறப்பது உறுதி - இதற்கேன் பயம்?

நாகர்கோயில் ஆயர் எம். ஆரோக்கியசாமி மருத்துவ மனையில் இருந்தார். அவரைக் கண்டு அமைதிப் பணிக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டோம். உடல்நல மில்லாமல் மருத்துவமனையில் இருந்தாலும் ஊக்கத்துடன் ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார். மண்டைக்காடு அமைதிப் பணியில் நமக்குக் கிடைத்த தோழமை எம். ஆரோக்கியசாமி. அவர் நம்மீது அளவற்ற பரிவும் பாசமும் காட்டி வருபவர். இப்போது மதுரையில் பேராயராக விளங்குகிறார், அடுத்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம். அகமத்கான். இவர் சிறந்த பேச்சாளர். தேர்ந்த வழக்கறிஞர். நல்ல பண்பாளர். அமைதிப் பணியில் பூரணமாக ஈடுபட்டவர். வடசேரி பயண மாளிகை நாள்தோறும் மக்கள் கூடும் பணிமனையாக வளர்ந்தது.

இந்த அமைதிப் பணியில் முழு ஒத்துழைப்பு அளித்தவர் பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகள். இவர் வைகுண்ட ஐயா மரபைச் சார்ந்த சமயத் தலைவர்; நல்ல இளைஞர் ஆர்வம் நிறைந்தவர்; நன்றாகப் பேசுவார். இவர் தம்பி பால ஜனாதிபதி நல்ல வழக்கறிஞர்; தொண்டில் ஆர்வலர். மற்றும் வழக்கறிஞர் ஆர். ராஜபாண்டியன், தியாகி வைத்தியலிங்கம், எல். செங்கோட முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுசீந்திரம் முத்துக்கிருஷ்ணபிள்ளையைச் சொல்லாமல் இருக்க இயலுமா? இவர் தொண்டர்களுக்கெல்லாம் உணவு வழங்கினார். தென்னிந்தியத் திருச்சபை ஆயர் ஜி. கிறிஸ்துதாஸ் மிகுந்த ஒத்துழைப்புத் தந்தார்.

அமைதிப் பணிக்கென தஞ்சை கோ. த. ரங்கநாதன், மேலுர் சுப. சொக்கலிங்கம், கோவை ப. ராஜேந்திரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். தஞ்சை கோ. த. ரங்க நாதன் சுதந்திரப் போராட்ட வீரர். 'பலனில் பற்றின்றிப் பணி செய்க' என்ற கீதை வாசகத்துக்கு இலக்கணமானவர் மேலுரர் சுப. சொக்கலிங்கம். நல்ல தேசத்தொண்டர். தீண்டாமை விலக்குப் பணியில் பல ஆண்டுகள் நம்முடன் தொடர்ந்து பணியாற்றியவர்.

நாகர்கோவிலில் தங்கி அமைதிப் பணி செய்யப் பெற்றது. தொடக்கத்தில் கடினமாகவே இருந்தது. தானுலிங்க நாடார்-இந்து முன்னணியினர் தொடக்கத்தில் உடன்படவில்லை. நாம் உண்ணா நோன்பு இருந்தபின் அமைதிப் பணிக்கு ஒத்துழைப்புத் தர ஒப்புக்கொண்டனர்.

ஊர் ஊராக, பாதித்த குப்பங்கள் எல்லாவற்றுக்கும் சென்றோம். குடும்பங்களையெல்லாம் சந்தித்தோம். தமிழ் நாட்டு மக்கள் நல்ல வண்ணம் நிதி, துணிகள், அரிசி முதலிய உதவிகள் செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி களும் செய்யப்பெற்றன. சேதப்படுத்தப்பட்ட பள்ளந்துறை சர்ச், மருத்துவமனை சீரமைப்புக்கு நாம் ஒரு பங்கு நிதி தந்தோம். திங்கள் சந்தையில் இடிபட்ட பிள்ளையார்கோயில் கிறிஸ்தவர்கள் சார்பில் ஆயர் செலவில் கட்டப்பெற்றது. பின் மூன்று சமயத்தாரும் சேர்ந்து ஊர் தோறும் ஊர்வலமாக (சாலைகளில் கார் பயணமாக அமைதிப் பயணம் சென்று ஒருவாறாக அமைதிப் பணி முடிந்தது. நாகர்கோவில் சுழற்குழு பாராட்டு செய்தது.

{குன்றக்குடிக்குப் பயணமாகும் முதல் நாள் இரவு கன்யாகுமரியில் அனைத்து சமயத்தினரும் ஒரு விருந்து கொடுத்தனர். அந்த விருத்தின்போது நடந்த கலந்துரையாடலில் பிறந்த இயக்கம்தான் 'திருவருட் பேரவை'. பேராயர் எம். ஆரோக்கியசாமி ஆலோசனையின் மீது தொடங்கப் பெற்றது. இன்று தமிழ்நாட்டில் திருவருட் பேரவை நாளும் வளர்ந்து வருகிறது. பாபர் மசூதி இடிப்பின்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் சந்தடியில்லாமல் அமைதியைக் காத்த பெருமை திருவருட்பேரவை இயக்கத்துக்கு உண்டு. குறிப்பாக மதுரை, தஞ்சை மாவட்ட அமைப்புகள் சிறப்பாகப் பணி செய்து மோதல்களைத் தவிர்த்திருக்கின்றன.

குமரி மாவட்ட அமைதிப் பணியின் போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், அமைதிப் பணியைப் பற்றி அடிக்கடி அக்கறையோடு கேட்டறிந்தார். ஏன்? நமக்குப்போதிய பாதுகாப்புக்கு காவலர்களை அனுப்பும்படி பணித்திருக்கிறார். நாம் வேண்டாம் என்று மறுத்து விட்டோம். இடையில் அமைதிப் பணி பற்றியும் எதிர்காலம் பற்றியும் தமிழக முதல்வரைச் சென்னையில் கண்டு கலந்து பேசினோம். பரிந்துரைகள் முழுதும் ஏற்கப் பெற்றன. மக்கள் நலத்தில் கெளரவப் பிரச்னையின்றி முதல்வர் எம்.ஜி.ஆர். காட்டிய ஆர்வம் என்றும் நினைவு கூரத்தக்கது.

அமைதிப்பணி நிறைவெய்திய நிலையில் மண்டைக் காடு பகவதியம்மனுக்குக் கடலில் மூழ்கித் தண்ணிர் எடுத்துச் சென்று திருமுழுக்கு செய்யப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்து சகோதரர்களும் சகோதரிகளும் கலந்துகொண்டனர். மண்டைக்காடு அமைதிப் பணி குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 29-3-82-ல் சட்டமன்றத்தில் பாராட்டினார். 'மடாதிபதிகள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளைப் பின்பற்றக் கூடாது' என்று பாராட்டியது நினைவில் நின்று பணிகளில் ஈடுபடுத்துகிறது. இனி எதிர்வரும் காலத்திலும் ஈடுபடுத்தும்.

மண்டைக்காடு தந்த படிப்பினை என்ன? எந்தக் காரணத்தை முன்னிட்டும் கலகம் செய்யக்கூடாது. கலகம் மனித உயிர்களைக் காவுகொள்கிறது. பொருள் இழப்பு ஏற்படுத்துகிறது. சில பல குடும்பங்களுக்கு ஈடு செய்ய இயலாத துன்பத்தைத் தந்துவிடுகிறது. எந்தவொரு பகுதியிலும் மக்கள் சாதி அடிப்படையிலோ மத அடிப்படையிலோ தனித்து ஒதுங்கி ஒரே கும்பலாக வாழக் கூடாது. பலரும் கூடி வாழ்தல் வேண்டும்.

ஒருவன் தன்னுடைய சமயத்தைப் பற்றி உயர்த்திப் பேசவும் அந்தச் சமயத்தில் நின்றொழுகவும் உரிமை உண்டு. ஆனால், மற்ற மதங்களை ஒப்பு நோக்கியும், தாழ்த்தியும் பேசுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். பொதுவாக, மதம் அனுட்டானத்துக்குரியது. பிரசாரத்துக்கு உரியதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்தல் வேண்டும். மதம் பிரச்சார வடிவம் கொள்ளுமானால் பூசலே உருவாகும். வளரும். மதம், கடவுளைப் போற்றுவது, மனிதனை வளர்ப்பது. இவையே மதத்தின் கொள்கை, கோட்பாடு என்று கொண்டால் வம்பில்லை. கடவுளே வான் பழித்து இம்மண் புகுந்து மனிதனை ஆட்கொள்கிறான் என்றால் மனிதனைப் பயமுறுத்துவதும் கொல்வதும் எப்படி மதமாக இருக்க முடியும்?

34

குன்றக்குடிக்கு அருகில் கொரட்டி என்ற சிற்றுார் உள்ளது. கொரட்டியில் 1977-ல் திடீர் திடீர் என்று வீடுகளில் தீப்பிடித்தது. காவலில் நிற்கவில்லை; மந்திரங்கள், பூஜைகளாலும் நிற்கவில்லை, இச்சமயத்தில் வீடுகள் எரிந்த சாம்பலை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்று கருதி காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் விஞ்ஞானிகளை அணுகினோம். நான்கு விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அவர்களின் ஆய்வு, முடிவினைத் தரவில்லை. அப்போது தனித்தனியே அவரவரைப் பாதிக்கும்படியான ஒரு செயலைச் செய்ததில் அடங்கியது. தேங்காய்களை மந்திரித்து ஊரார் ஒவ்வொருவருக்கு ஒன்று கொடுத்து, "தீ வைக்கிறவர் யாரோ அவர் வீட்டில் உள்ள தேங்காய் உடையும். உடனே அந்த வீட்டில் மரணம் நேரும்” என்று சொல்லப்பட்டது. கொடுத்தபிறகு தீப்பிடிக்கவில்லை. தன்னைச் சுடும் என்றால் ஏற்படும் பயம் பிறரைச் சுடும் என்றபோதும் தேவை அல்லவா?

இளமைக் காலம் தொட்டு நம்மிடம் வளர்ந்து வந்த மனிதநேயம் 'திருக்கோயில்களைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய திருக்கோயில்களும்' என்ற கோட்பாடாக உருப்பெற்றது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நமது ஆதினத் திருக்கோயில்களின் விழாக்களில் சமுதாய மேம்பாட்டுக் கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன. முதற்கூட்டம் 1962-ல் திருப்பத்தூர் திருவிழாவின்போது நடந்தது. இதன் செயற்பாடாகக் குன்றக்குடியில் மருதுபாண்டியர் காதி கிராமத் தொழிற் கூட்டுறவு சங்கமும் நேருஜி காகித அட்டைப் பெட்டி செய்யும் தொழிலும் தொடங்கப் பெற்றன. இது மெள்ள வளர்ந்து கிராமத் திட்டக்குழுவாக 1977-ல் வடிவம் பெற்றது.

விஞ்ஞானி சி.வி. சூரியநாராயணன் திட்டக்குழுவின் முதல் தலைவர் பொறுப்பை ஏற்றார். இவர் மனிதநேயம் மிக்கவர். குன்றக்குடி மேல்நிலைப்பள்ளிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானப் புத்தகங்கள் வழங்கினார். திட்டக் குழுவின் இரண்டாவது தலைவர் பி.ஏ. ஷெனாய் காலத்தில் திட்டப்பணிகள் ஒரு வேகத்தைப் பெற்றன. அன்றைய இயக்குநர் கே.எஸ். ராஜகோபாலன் குன்றக்குடி பாரதி பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலை தோன்றியது இந்தக் கால கட்டத்தில்தான்.

அடுத்து மத்திய மின்வேதியியல் ஆய்வகத்துக்கு இயக்குநராக வந்த பேராசிரியர் கை. இ. வாசு பணிபுரிந்த போது கிராமப்புறத்துக்கு விஞ்ஞானம் எடுத்துச் செல்லும் பல புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அடுத்து இயக்குநர் பொறுப்பேற்ற எஸ்.கே. ரங்கராஜன் காலத்தில் மேலும் சிறப்பாகப் பெயர் படுத்தப்பட்டன. திட்டக்குழுவின் அடுத்த தலைவர் டாக்டர் கே. பாலகிருஷ்ணன். கடின உழைப்பாளி. நன்றாகவே வேலை வாங்குவார். இன்று நாம் பதில் சொல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது டாக்டர் கே. பாலகிருஷ்ணனுக்குத்தான்! இன்று திட்டக்குழு கிராமப்புற அறிவியல் மையம், வளர்ச்சி மையம், சுதேசி விஞ்ஞான இயக்கம் என்றெல்லாம் கிளை பரப்பி வளர்ந்து - வந்துள்ளது. இந்தப் பணிகளில் இன்று மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநராக பொறுப்பேற்றிருக்கும் ஜி.வி. சுப்பாராவ் மற்றுமுள்ள மின்வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

இப்படிக் கிராம வளர்ச்சித் திட்டப்பணிகளில் பல நூறு பேர் பங்கு பெற்றிருக்கிறார்கள். பெயர்களை எடுத்தெழுத இயலாது.

கிராமத் திட்டப்பணிகள், தொழிற்சாலை அமைவுகள் பற்றிய வரலாறு கணியூர்க் குடும்பம் தந்த கொங்கு நாட்டுச் செல்வம் கே.ஏ.கே-யை வட்டமிடும். கே.ஏ.கே. திருக்குறள் வழி நமக்கு அறிமுகம். தொடர்ந்து வரும் ஒரு புரவலர்.

இன்று குன்றக்குடி கிராமம் நாட்டில் உள்ள பல அறிவியல் ஆய்வு மையங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. தொழில் நுட்பம் வாங்கியிருக்கிறது. மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் விஞ்ஞானி டாக்டர் ஜி. தியாகராஜன் மிகவும் அக்கறை காட்டுகிறார். இவர் ஹைதராபாத் மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்த போது முந்திரி எண்ணெயிலிருந்து வண்ணப் பூச்சுக் குரிய பெயிண்ட் செய்யும் தொழில் நுட்பத்தைத் தகுதிக் கட்டணம் இல்லாமலே கொடுத்து உதவி செய்தார். இன்று இவர் முயற்சியால் ஐ.நா. சபையின் உதவியுடன் தோல் தொடர்பான தொழில் மையம் ஒன்று, குன்றக்குடியில் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டில் தொடங்க இருக்கிறது. மேலும், முன்பு மத்திய அறிவியல் ஆய்வு மையமாக இருந்தது இன்று Indian Institute of Chemical Technology என்ற பெயரில் விளங்குகிறது. இதன் இயக்குநர் விஞ்ஞானி ராமாராவ் ஆமணக்கு எண்ணெய் அடிப்படையிலான தொழில் நுட்பம் தந்து உதவியுள்ளார். விளக்கெண்ணெய் என்று சொல்லப்படும் ஆமணக்கு எண்ணெய் விலைமதிப்புள்ள பொருள். அயல்நாட்டு செலாவணி சேகரிக்கக் கூடியது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் செம்மண் பூமி. மூன்றுமாத வித்து ஆமணக்கு மழையிலேயே விளைவிக்கலாம். மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் உப்பு நிலங்கள் மேம்பாட்டுத்திட்டம் ஒன்றை குஜராத் மாநிலம் பவநகரில் உள்ள உப்பு அறிவியல் ஆராய்ச்சி மையம் தந்துள்ளது. இதைப்போன்று பெங்களுர் உணவு ஆராய்ச்சி மையம் என். ஆர். டி. ஸி. ஆராய்ச்சி நிறுவனம் போன்றவைகளும் தொழில் நுட்பங்களைத் தந்துள்ளன. இன்று குன்றக்குடி கிராமம் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலாம் ஆண்டைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நான்காவது ஐந்தாண்டுத் திட்ட முடிவில் தன்னிறைவு பெறவேண்டும். இது நமது இலக்கு. திட்டப் பணிகள் வளர்ச்சித் தன்மை பொருந்தியவை. வளர்ச்சிக்கு ஏது முற்றுப்புள்ளி?

இனம், சாதி, மதம், அரசியல் கட்சி வேற்றுமைகள் இல்லாமல் ஒரு கூட்டுக் குடும்பமாகக் குன்றக்குடி வளர்ந்து வந்தது. வளர்ந்து கொண்டிருக்கிறது. தேவை - போதிய விழிப்பு உணர்வு, ஊழியர்களின் அயர்விலா உழைப்பு. குறிப்பாக, இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

குன்றக்குடி ஒரு மாதிரி கிராமமாக முழுமையடைந்து விடின் நமது பிறப்பின் நோக்கம் நிறைவேறும்.

35

ளமைக் காலம் தொட்டே நமக்குத் தேசியத் தலைவர்களிடத்தில் அளவற்ற ஈடுபாடு. அவர்களுள்ளும் அமரர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் மிகவும் ஈடுபாடு. பண்டித ஜவஹர்லால் நேரு, தம் அருமை மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களையும் (உலக சரித்திரம் என்ற புத்தகம்) "கண்டுணர்ந்த இந்தியா" Discovery of India என்ற புத்தகத்தையும் இந்த நாட்டு இளைஞர்கள் அனைவரும் படிக்கும்படி செய்யவேண்டும். இந்த நூல்கள் நாட்டுப் பற்றையும் சமூக சிந்தனையையும் தருவதில் தலை சிறந்தவை. இந்த நூல்களை நாம் பல தடவை படித்ததன் பயன் இன்றைய குறிக்கோள்.

இந்திய வரலாற்றின் சிற்பியாக - ஒப்பற்ற தலைவராக விளங்கிய நேருஜியின் காலம் பொற்காலம். நேருஜி இந்த நாட்டைச் சரியான திசையில் அழைத்துச் செல்ல அடி அடியாக எடுத்து வைத்தார். உள்ளேயும் சரி - வெளியேயும் சரி, அவர் சந்தித்த சோதனைகள் கணக்கில.

1957-62-ல் பண்டித நேரு அமைச்சரவையில் மரகதம் சந்திரசேகர் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். மரகதம் சந்திரசேகர் லண்டனில் படித்தவர். ஆயினும் பாரதப் பண்பாட்டைப் போற்றி வளர்த்தவர் வளர்த்து வருபவர். அமரர் நேரு குடும்பத்துடன் நல்ல உற உடையவர். நம் மீது பரிவு மிகவும் உடையவர்.

1960-ம் ஆண்டில் நாம் மத்திய சமூக நலக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பெற்றோம்.ஆறு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருந்து பணி செய்ய நேர்ந்தது. இந்தப் பொறுப்புக் காலத்தில் தமிழ்நாட்டளவில் ஆதிதிராவிடர்கள் மேம்பாடு குறித்துப் பயணங்கள் மேற்கொள்ளும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. சமூக நலக் குழுவில் இருந்தபோது நம்முடைய சமூகச் சிந்தனை ஒன்று வெற்றி பெற்றது. அது என்ன? மீண்டும் ஜாதிச் சிக்கல்தான்! ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை மட்டுமே சேர்த்தார்கள். இப்படி மாணவர்களைப் பிரித்து வளர்த்தால் - என்று தீண்டாமை போவது? தீண்டாமை என்பது ஆதிதிராவிடர்களிடம் இல்லையே! மற்ற ஜாதியாரிடம் உள்ள மனப்பான்மைதானே தீண்டாமை. இவர்கள் தீண்டாமையிலிருந்து விலகினால் தானே தீண்டாமை அகலும், நீங்கும். அன்றும் - இன்றும் இந்த முயற்சி மிகவும் குறைவு. ஆதலால், ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் நூற்றுக்குப் பத்து மாணவர்கள், இதர ஜாதிப் பிரிவு மாணவர்களைச் சேர்க்கவேண்டும். கங்கையும் காவிரியும் கலப்பதற்கு நாளானாலும் ஜாதிகளைக் கலக்கும்படி செய்ய வேண்டும் என்ற கருத்தை அரசுக்குப் பரிந்துரை செய்தோம். அரசு ஏற்றுக்கொண்டது; இன்றும் நடைமுறையில் உள்ளது. நமது ஆதீன நிர்வாகத்தில் திருப்பத்தூர் மடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி ஒன்று நடந்தது. இந்த விடுதியிலும் இது நடைமுறைக்கு வந்தது. இந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர் ஒருவர் வடவன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று இன்று இந்திய அரசின் உயர் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். மிகச் சிறந்த மதிநுட்பம் படைத்தவர்; நல்ல நிர்வாகி. அவர்தாம் ஏ.ஆர். சுப்பய்யர்!

நல்ல முறையில் பணி செய்துவரும் தமிழ்ச் சங்கங்களில் டெல்லி தமிழ்ச் சங்கம் முதன்மையானது. டெல்லி தமிழ்ச்சங்கம் கொண்டாடிய பாரதி விழாவில் ஜவஹர்லால் நேருவுக்குப் பக்கத்தில் இருக்கவும் அவர் முன் பேசவும் கூடிய இனிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அளவற்ற மகிழ்ச்சி. ஆதர்ச புருஷராக விளங்கியவர் அருகில் நிற்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமோ? அப்போது டெல்லிக்குச் செல்லும்போது 'சட்டை' அணிந்த கோலம்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் கல்விப் புரட்சி நடந்தது. தாமரைச் செல்வர் நெ.து. சுந்தரவடிவேலு தமிழ்நாடு கல்வி இயக்குநர். நெ.து.சுந்தரவடிவேலு சிறந்த சமூகச் சிந்தனையாளர். தமிழ்நாட்டில் கல்வியை மக்கள் இயக்கமாக்கிய பெருமை சுந்தரவடிவேலு அவர்களுக்கே உரியது. வீதிகள்தோறும் வீடுகள்தோறும் கல்வியைப் பற்றியே பேச்சு! பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள். பள்ளிகளுக்கும், பள்ளிகளின் மேம்பாட்டுக்கும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பெற்றன. இயக்குநர் சுந்தரவடிவேலு நிறையப் பயணம் செய்தார்; பேசினார் அவருடைய பேச்சு தூண்டு கோலாக விளங்கியது. 'இத்தகையதொரு பள்ளிச் சீரமைப்பு மாநாட்டை ராமநாதபுர மாவட்டத்தில் நடத்தவேண்டும்... அதற்குப் பண்டித ஜவஹர்லால் நேருவை அழைக்கவேண்டும். இது நமது விருப்பம், இயக்குநர் நெது. சுந்தரவடிவேலு ஏற்றுக் கொண்ட விருப்பம். பெருந்தலைவர் முதலமைச்சர் காமராஜரும் இசைவு தந்துவிட்டார். மாநாட்டுப் பணிகள் சுறுசுறுப்பாக நடந்தன.

பாரதப் பிரதமர் வருகிறார் என்ற காரணத்தால் நன் கொடைகள் குவிந்தன. ஆனால், பாரதப் பிரதமரின் வருகை தள்ளிக்கொண்டே போயிற்று.

இடையில் கேதார் யாத்திரை செல்ல நமக்கு விருப்பம். பயணம் தொடங்கியாயிற்று. திருவேணியில் இடைத்தங்கல் இருந்தபோது நேரு குன்றக்குடிக்குப் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டுக்கு வர நாள் கொடுத்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. கேதார் யாத்திைைரத் தொடர்ந்து மேற்கொள்ளாமல் குன்றக்குடிக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பள்ளிச் சீரமைப்பு மாநாட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. இடையில் மாநாடு நடக்கும் இடம் பற்றிய சிக்கல் தோன்றியது.

கலைத் தந்தை கருமுத்து தியாகராச செட்டியார் ஆ. தெக்கூரில் புதிய பள்ளிக் கட்டடம் ஒன்று கட்டியிருந்தார். அதை நேருவைக் கொண்டு திறக்கவும் விரும்பினார். பெருந் தலைவர் காமராஜர் "பெருஞ்செலவு வருமே! ஆதலால், ஆ. தெக்கூரில் நடத்தும் பொறுப்பை கருமுத்து தியாகராச செட்டியாரிடம் ஒப்படைக்கலாமே! இதமாக அடிகளாரிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்” என்று இயக்குநரிடம் கூற, இயக்குநர் தயக்க உணர்வுடன் நம்மிடம் ஆலோசனை கேட்டார். கருமுத்து தியாகராச செட்டியார் கேட்கும் நிலையில் நாம் எந்த ஆட்சேபணையும் கூறவில்லை. நேருஜி குன்றக்குடி வழியாக ஆ. தெக்கூர் வருவதாகத் திட்டம் தீட்டப்பெற்றது. அனுபவங்கள் வேறுமாதிரியாக அமைந்தன.

1959-ம் வருடம் ஏப்ரல் 15-ல் நேருஜியும் வந்தார். ஆனால், குன்றக்குடியில் நாம் இருந்து வரவேற்கத்தான் இயலவில்லை. பள்ளிச் சீரமைப்பு மாநாட்டுப் பணிகள் காரணமாக ஆ. தெக்கூரிலேயே தங்கவேண்டிய நிலை, ஆனால், "குன்றக்குடியில் மிகவும் சிறப்பான வரவேற்பு!” என்று நெருக்கடியான நிலையிலும் பாகனேரி ஆர். வி. சுவாமிநாதன் கூறினார்.

நேருஜி ஆ.தெக்கூருக்கு வந்தார். மேடைமீது ஏறினார். கலைத் தந்தை கருமுத்து தியாகராச செட்டியாரும் நாமும் பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து வரவேற்றோம். நமது இளமைப் பருவத்தில் தேசத் தலைவர்களைக் கண்டால் தேசிய முழக்கங்கள் விண்னைப் பிளக்கும். காங்கிரஸ் தொண்டர்கள் தலைவருக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்து வருவர். கூடவே பாதுகாப்பார்கள். தலைவரைப் போலீஸ் காவலில் ஒப்புவித்து விட்டு வேடிக்கை பார்க்கும் பழக்கம் இருந்ததில்லை. இந்தப் பழக்கம் இப்போது காங்கிரஸுக்கு அருகி வருகிறது. ராஜீவ்காந்தி மரணத்துக்குக்கூட இது ஒரு காரணம். நேருஜி, கடல் போல் இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, கைகளைக் கூப்பி வணங்கினார். மாநாட்டில் "நாட்டின் வளர்ச்சி மக்களின் கைகளிலேயே இருக்கிறது" என்று கூறினார். பள்ளிச் சீரமைப்பு முயற்சிகளைப் பாராட்டினார்.

1964 ஜனவரியில், புவனேசுவரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நேருஜியின் உடல்நிலை பாதிக்கப்பெற்றது. அதற்குப் பிறகு நடந்த பாராளுமன்றக் கூட்ட நடவடிக்கைகளைப் பார்க்கவும், நேருஜியைப் பார்க்கவும் அனுமதி பெற்று பாராளுமன்றத்துக்குச் சென்றிருந்தோம்.

36

பாராளுமன்றத்தில் கேள்வி நேரம். பிரதமர் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் வந்தன. உடல் நலம் பாதித்த நிலையில் நேருஜியால் எளிதாக எழுந்திருக்க இயலவில்லை. பாராளுமன்றத்தில் இருந்த அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்களும் அவரை உட்கார்ந்தபடியே பதில் சொல்லும்படி ஒருமுகமாகக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், நேருஜி அதை மறுத்ததோடு, "இந்த நாட்டின் மிக உயர்ந்த இடம் பாராளுமன்றம்தான். பாராளுமன்றத்தின் மரபுகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறினார். நேருஜி போன்ற தலைவர்கள் பாராளுமன்றத்துக்குக் கொடுத்த பெருமை என்ன! உயர்வு என்ன! இன்று நாம் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் கொடுக்கும் மரியாதை என்ன? தொலைக்காட்சி எடுத்துக் காட்டலாமா. வேண்டாமா என்று ஆலோசிக்க வேண்டியுள்ள நமது நிலை இரங்கத் தக்கது:

1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி நேருஜி அமரரானார்.

நேருஜி நிலச் சீர்த்திருத்தச் சட்டம் செய்வதிலும் விவசாயிகளின் உரிமைகளைக் காப்பதிலும் ஆர்வம் பெரிதும் காட்டினார். எல்லா மாநில அரசுகளும் நிலச் சீர்த்திருத்தச் சட்டங்கள் இயற்றின. அரசியல் சட்டத்துக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் சொத்துரிமையும் ஒன்று. ஆனால், இந்திய உச்சநீதிமன்றம் நிலச் சீர்திருத்தச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது. உடனே அரசியல் சட்டத்தைத் திருத்த, பாராளுமன்றம் கூடியது. 17-வது திருத்தம் - பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சரின் கடுமையான வாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி காங்கிரஸுக்குப் பெரும்பான்மையிருந்தும் சட்டத்திருத்தம் தோற்றுவிட்டது. இந்தத் தோல்வி நேருஜிக்குக் கடுமையான பாதிப்பைத் தந்துவிட்டது. உடன் திரும்பவும் மறுவாக்குக் கொண்டுவர வேண்டும் என்று நேருஜி வற்புறுத்தினார். பாராளுமன்றத்தின் மறு ஆய்வுக்கு நாள் குறிப்பிட்டு அறிக்கை தரும்படி கூறிவிட்டு குளு பள்ளத்தாக்குக்கு ஓய்வெடுக்கப் போனார்.

ஓய்வெடுத்த பிறகு புதுடெல்லி திரும்பினார். அரசியல் சட்டம் 17-வது திருத்தம் நிறைவேற்றுவதற்காகப் பாராளுமன்றம் கூடுகிறது. இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்று வழக்கமான கடமைகளைச் செய்துவிட்டுப் படுத்தவர் திரும்ப எழுந்திருக்கவில்லை; உயிர் பிரிந்துவிட்டது. ஏன் பிரிந்தது? மறுநாள் பாராளுமன்றத்தில் 17-வது திருத்தம் நிறைவேறுமா? விவசாயிகள் உரிமை பெறுவார்களா என்ற கவலை நேருஜியின் உயிரைக் குடித்து விட்டது! அதனால் தானே அவர் தமது உயிலில் தமது உடலை எரித்த சாம்பலை இந்த நாட்டு உழவர்கள் உழும் வயல்களிலே தூவுங்கள் என்று எழுதினார். இதை 'நான் இந்த நாட்டு உழவர்களுக்கு வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. என் சாம்பல்தான் இந்த உழவர்களுக்கு' என்று நினைத்து ஆற்றாமை தாளாமல் எழுதியிருக்க வேண்டும். இன்னமும் நம்முடைய நாட்டில் நிலத்தின் அடிப்படைச் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களில் பெரும்பாலோர் விவசாயிகளே! என்று கலி தீரும்?

நேருஜி அமரரான அன்று குன்றக்குடியில் காகிதப்பை தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்ப விழா. ஆனால், நேருஜி அமரரான துயரம் காரணமாக விழா இல்லாமல் தொழில் தொடங்கப் பெற்றது. அதுதான் இன்று நேருஜி பாலிதீன் கூட்டுறவுத் தொழிற்சாலையாக வளர்ந்து அறுபது பெண்களுக்கு வேலைவாய்ப்புத் தந்திருக்கிறது. நேருஜியின் நினைவுச் சின்னமாக அமைந்தது இந்தத் தொழிற்சாலையே!

ஓர் ஆன்மாவின் பயணம், நெடிய பயணமாகவே நடந்திருக்கிறது; வாழவேண்டிய அளவுக்கு வாழ்ந்திருக்கிறது. ஆனால், பயன் என்ன? இது அடுத்துவரும் தலைமுறை எடுக்கவேண்டிய முடிவு! நமது நிலையில் நிறை இல்லையானாலும் குறையில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அங்கீகாரம் தந்தன. அதிலும் நாம் ஒரு மத நிறுவனத்தைச் சேர்ந்திருந்தும் திராவிடர் கழகம், பகுத்தறிவுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரம் கிடைத்தது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாட்டின் செய்தித்தாள்கள், இதழ்கள் போதிய அளவு ஒத்துழைத்தன. 1955-ம் ஆண்டில் நாம் இந்தோனேஷியா சென்றிருந்தோம். அப்போது - ஜகார்த்தாவில் வரலாற்றுச் சின்னம் என்ற அடிப்படையில் அந்த நாட்டு அரசு பழைய சிவன்கோயில் ஒன்றின் இடிபாடுகளை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தது. தென்கிழக்காசியாவில் ஒரு பழைய சிவாலயத்தைப் பார்த்ததில் நமக்குக் கொள்ளை மகிழ்ச்சி! அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களுடன் நாமும் சேர்ந்து கல்தூக்கிக் கொடுக்கும் சிற்றாள் வேலை செய்தோம். அந்தச் சமயம் எடுக்கப்பட்ட புகைப்படம் தமிழ் நாட்டுக்கு வந்து ஆனந்த விகடனில் வெளிவந்தது.

தமிழ்நாட்டு மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். ஆனால், ஒரு குறை! அழைத்திடும்போது வரமாட்டார்கள்! ஏன்? நாம் ஜாதி, மொழி, மதம் பெயரில் மக்களைத் திரட்ட விரும்பியதில்லை. இனிமேலும் விரும்பமாட்டோம். நமது நாட்டு மக்களோ ஏதாவது ஒரு வகையில் சிக்கியிருக்கிறார்கள். அதனால், நமக்குப் பின்னால் வெறிபிடித்த கூட்டம் இல்லை. ஜாதிச் சங்கங்களின் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற நெறிமுறையைப் பின்பற்றுகிறோம். துறவிக்கு ஜாதி இல்லை என்பார்கள். ஆனால், நமது நாட்டில் துறவிகள்தான் ஜாதிகளைப் பாதுகாக்கிறார்கள்.

இந்து சமயம் உண்மையில் உயர்வானது; உலகம் தழுவியது. ஆனால், அதை இடையில் சின்னஞ்சிறு குட்டிச் சுவர்களை எழுப்பிக் கெடுத்துவிட்டார்கள். இதுவே குறை. இந்தக் குறையை நீக்க நாயன்மார்களும் ஆழ்வார்களும் சுவாமி விவேகானந்தரும் அருட்பிரகாச வள்ளலாரும் முயன்றனர். போதிய பயன் கிடைக்கவில்லை. வரலாறு என்பது ஒரு நாள் நிகழ்ச்சியல்லவே! தொடர்கதை தான். அதனால், இந்தச் சிந்தனை வாழ்வு மேலும் தொடர்ந்து நடக்கும். நமது வாழ்வில் புதிய சித்தாந்தங்கள் எதுவும் காணவும் இல்லை. காண ஆசையும் இல்லை. ஏன்! நமது பழமை மனிதம் தழுவியது; செறிவானது; செழிப்பானது; நீதி சார்ந்தது. பழமை வாய்ந்த மரபுகளைப் புதுப்பித்தாலே போதும்! இதுவே நமது குறிக்கோள்.

நமது சமுதாயம் வேற்றுமைகள் அனைத்தையும் கடந்து ஒன்றுபடவேண்டும். ஒருமைப்பாட்டு உணர்வில் கலந்து ஒரு குலமாகிக் கூடிவாழ்தல் வேண்டும். நமது திருக்கோயில்கள் விளக்கமுறுதல் வேண்டும். திருக்கோயில்களைத் தழுவிக் குடிகள் வாழ்தல் வேண்டும். திருக்கோயில்கள் குடிமக்களைத் தழுவி நிற்க வேண்டும். நாட்டு மக்களில் கடைக்கோடி மனிதனுக்கும் தேற்றம் வேண்டும். தமிழ், துறை தோறும் வளரவேண்டும். நாட்டு மக்கள் வறுமை - ஏழ்மையிலிருந்து மீட்கப்படுதல் வேண்டும். இந்தக் குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நடக்கவேண்டிய தூரம் அதிகம். ஆதலால், விரைவில் நடந்து முடிக்க அடுத்து வருபவர்கள் விரைந்து வந்து உதவுவதன் மூலம் வரலாற்றின் ஏடுகளை நிரப்ப உதவுவார்கள் என்று நம்புகிறோம்.

இந்தப் பயணத்தின் முன்னோடிகளாக நாம் ஏற்றுக் கொண்டவர்கள் திருவள்ளுவர், அப்பரடிகள், ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், திரு.வி.க. முதலியோர். நமது வாழ்க்கையில் ஊக்குவிப்புச் சக்திகளாகப் பெருந்தலைவர் காமராஜரும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இருந்தார்கள். இன்று நம்முடைய வாழ்வில் துணையாக - இயக்கும் சத்தியாகக் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் விளங்குகின்றனர்.

பொதுப்பணி என்றால் வங்கிகளின் உதவி தேவை. ஒரு நாள் திருப்புத்துர் ஸ்டேட் வங்கி மேலாளர் என். சீனிவாசன் டெப்பாசிட் திரட்டுவதற்காக வந்தார். நாம் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மீது ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்தோம். ஆதலால், அவர் வந்தவுடன் "இங்கு ஏது டெப்பாசிட்? உங்கள் வங்கி மூலம் கிராமங்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்யமாட்டீர்கள்!" என்று பேசி விட்டோம். அவர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "டெப்பாசிட் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன். இப்போது என்ன செய்யவேண்டும்? உத்தரவு!" என்றார் அமைதியாக குன்றக்குடி மாதிரித் திட்டம் சிற்பிகளில் இந்த சீனிவாசனும் ஒருவர்! இப்போது சென்னையில் மாநில அலுவலகத்தில் விவசாயப் பிரிவில் பணி செய்கிறார். அன்றிலிருந்து இன்று வரை பாரத ஸ்டேட் வங்கி தாய்போல உதவி வருகிறது. மேலும் மத்திய வங்கி, இந்தியன் வங்கி, மதுரை வங்கி மற்றும் கனரா வங்கியும் உதவி செய்து வருகின்றன.

நம்முடன் கூடவே நடந்தும் ஓடியும்வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி! ஆனாலும் வேகம் போதாது என்பதை இவர்கள் உணர வேண்டும்.

பொது வாழ்க்கையில், இயக்க வாழ்க்கையில் நமக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பெயர்களைப் பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகும். எழுதியவர்களை விட எழுதாதவர்கள் அதிகம்! எல்லோருக்கும் நன்றி! நமது பயணத்தில் கூட வரும் கடமைப் பாடுடையவர்கள் கூட வராமல் முந்துவார்களாக!

சராசரி வாழ்வு நிறைவேறியிருக்கிறது. பல்வேறு களங்களில் பணிகளும் செய்யப்பட்டுள்ளன. மனநிறைவு இல்லாது போனாலும் மனக்குறையில்லை. ஆயினும் இலக்குகள் எட்டாக்கனிகளாகவே இருப்பது நெஞ்சை அழுத்துகிறது. நமது இலக்கு-குறிக்கோள் தற்சார்புடையது அல்ல. சமுதாய வரலாற்றுடன் தொடர்புடைய குறிக்கோள். அதாவது, வலிமையும் வளமும் வாய்ந்த சமுதாயம் அமைய வேண்டும். இந்த இலக்கை அடைய மார்க்ஸியமே சிறந்த வழி. மார்க்ஸியத்துக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாம் கடவுளை நம்புகிறோம். புதுமை நலஞ்சார்ந்த அப்பரடிகள் நெறியை நாட்டுநெறியாக்க இயலவில்லை. தமிழ்த்தந்தை திரு.வி.க.

மார்க்ஸியம் உடலாகவும் காந்தியம் உயிராகவும்
எனக்குத் தோன்றுகின்றன. உடலும் உயிரும்
ஒன்றுபட்டுக் குலவுவதன்றோ வாழ்க்கை?

என்று கூறியிருப்பது நினைவுக்கு வருகிறது.

இந்த நெடிய வாழ்க்கைக்கு இதமான ஆறுதல் தரும் முனிவர் ஒருவர் மெளனமாகப் பின்தொடர்கிறார். அந்த முனிவருடைய இதமான அரவணைப்பு, பரிவு நமக்குப் புத்துயிர்ப்புத் தந்து வழிநடத்துகிறது. அந்த முனிவர் யார்? போற்றுதலுக்குரிய ரத்தினகிரி பாலமுருகனடிமை, அவர் நம் தலைமுறையில் வாழும் அருந்தவ முனிவர்; சித்தர். பொதுப் பணியில் ஆர்வம் காட்டும் அறநெறியண்ணல் லெ. நராயாணன் செட்டியார் நமக்கு வாய்த்த தனித்துணை; புரவலர். வெளிநாடுகளில் நிறைய அன்பர்கள்.

நமக்குக் கனவுகள் கிடையாது; கற்பனைகள் உண்டு. கற்பனைகள் கைகூடுமாக! வாழ்நாள் வீழ்நாள் படவில்லை. இது உறுதி. பல நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டதாலும், பலர் உறவு ஏற்பட்டதாலும் வளர்வதற்குரிய வாயில்கள் ஏற்பட்டுள்ளன. பலருக்கும் அறிமுகமான வாழ்வு! மக்களிடையே இருந்தது ஒரு மனநிறைவு. யாரையும், எவரையும் நாம் அந்நியமாக எண்ணியதில்லை. யாரோடும் பகை கொள்ள நினைத்ததில்லை. இனிமேலும் நினைக்க மாட்டோம். ஆனால், மக்கள் மத்தியில் குண தோஷங்கள் உண்டு என்பார் சிலர் உண்டு. இது அவர்கள் கருத்து. 'ஊரார் தத்தம் மனத்தன. பேச எஞ்ஞான்று கொல்சாவதுவே!' என்ற திருவாசக அடிகளை நினைவதைத் தவிர வேறு வழியில்லை.

எல்லா நூல்களையும்விட சேக்கிழார் அருளிய பெரியபுரணத்தில் ஈடுபாடு அதிகம்! 'அன்பலால் பொருளும் இல்லை; ஐயன்ஐயாற னார்க்கே!', 'தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை!' என்ற சொற்றொடர்களுக்கு - இலக்கணத்துக்கு இலக்கியம் பெரிய புராணம். நாயன்மார்கள் அடிச்சுவட்டில் தொடங்கியிருக்கும் தொண்டுப் பயணம் தொடர வேண்டும். நாடு தழுவிய நிலையில் தொண்டு வளர வேண்டும். நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களிலாவது நடக்க வேண்டும். புராணங்களைப் போதிப்பதன் மூலம் அல்லாமல், தொண்டின் வாயிலாக மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பயணம் இடையீடின்றி நடக்க வேண்டும். மங்கையக்கரசியார் பிறந்த மண் செழிக்க சு. கல்யாண சுந்தரம், பேராசிரியர் சாமி. தியாகராசன் ஆகியோர் உதவி மேலும் மேலும் தேவை. மங்கையக்கரசியாரின் சமயப் பணிக்கு உதவியாக இருந்த குலச்சிறை நாயனார் பிறந்த ஊர் மணமேல்குடி, இந்த ஊரில் குலச்சிறையார் வழிபட்ட திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு, நாட்பூஜை அறக்கட்டளையும் நிறைவெய்தியிருக்கிறது. இதற்குத் துணையாக அமைந்தவர்கள் ஏ. ஆர். பக்கிரிசாமி, கே. தியாகராசன் முதலியோர். குலச்சிறையார் நினைவாகக் கல்விப் பணி தொடங்கவும் இருக்கிறது. திருநாளைப் போவார் பிறந்த குலமும் ஊரும் செழிக்க இராம. சிதம்பரம், ராஜாங்கம் ஆகியோர் ஒத்துழைப்பு மேலும் மேலும் தேவை. தண்டியடிகள் நினைவாகக் கமலாலயம் துய்மை செய்யப் பெறுகிறது. பல அன்பர்கள் இந்தப் பணிக்கு வந்துள்ளனர். இனிதே நிறைவெய்தும்.

இந்தப் பயணம் இரண்டாவது சுற்று. ஆதலால், பயணம் விரைவாக நடத்த வேண்டும். பயணம் முடியும் வரையில் வரலாறு நிற்காது எழுதுவது நிற்கிறது. பணி தொடரும்.