குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/திருக்குறள் பேரவை-வெள்ளை அறிக்கை

விக்கிமூலம் இலிருந்து




1

திருக்குறள் பேரவை
வெள்ளை அறிக்கை

தி.பி. 2021,வைகாசி,5 (19.5.1990), சென்னை

திருக்குறள் தோன்றிய காலத்தில் மானிட உலகம் முடியாட்சியின் கீழ் அமைந்திருந்தது. ஆனால் மக்கள்நலந் தழீஇய முடியாட்சிகளாக இல்லாமல் கொடிய கொடுங் கோலாட்சிகளாகவே அமைந்திருந்தன. ஆயினும் தமிழகத்தில் மட்டும் கொடுங்கோலாட்சியாக அமையாமல் ஓரளவு மக்களுக்கு நலம் பயக்கும் ஆட்சியாக அமைந்து விளங்கியது. அதனால்தான் தமிழகத்தில் இங்கிலாந்தில் நடந்த புரட்சி போலவோ, பிரெஞ்சுப் புரட்சி போலவோ உண்டாகவில்லை. அதனால்தான் சமுதாய நலம் தழீஇய, அரசியற் சிந்தனை சார்ந்த வாழ்வியலை விளக்கும் திருக்குறள் தமிழகத்தில் தோன்றியது.

திருக்குறள் நெறியில் மாந்தர் ஒரு குலம். இனம், மொழி, சமயம், சாதி, நாடு வேறுபாடுகளற்ற ஒரு குல அமைப்பே இது. நாட்டுப்பற்றுக் கூடத் தன்னாட்டு வளர்ச்சியை மையமாகக் கொண்ட அளவுக்குட்பட்டதுதான். நாட்டுப் பற்றின் காரணமாக ஒரு நாடு பிறிதொரு நாட்டுடன் போராடுதல், அழித்தல் முதலிய கொடிய போர்க்களங்களைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஏடுகளில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் ஏற்று, "வரலாறு திரும்பி வரும்" என்ற பழமொழியைப் பொய்யாக்கும் வகையில் ஏற்படும் நாட்டுப்பற்று வரவேற்கப்படும். அஃதன்றி, நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையேயுள்ள எல்லைகளைப் பெரிதுபடுத்தி, பிரிவினை உணர்வுகளையும் ஆக்கிரமிப்பு உணர்வுகளையும் வளர்க்க நாட்டுப்பற்று கருவியாக அமைதல் கூடாது. நாட்டுக்கும் நாட்டுக்கும், இடையேயுள்ள எல்லைகளை அகற்றி மானிடத்தை இணைக்கவே திருக்குறள் நெறி முயற்சி செய்யும். காலப்போக்கில் உலக அரசு காண்பதே திருக்குறட் சமுதாயத்தின் இலட்சியம்.

திருக்குறட் சமுதாயத்தில் எந்தவித வேறுபாடுகளுக்கும் அங்கீகாரம் இல்லை. வேறுபாடுகளை வற்புறுத்துகின்ற, வளர்க்கின்ற எந்த ஓர் அமைப்பும் இயக்கமும் திருக்குறட் சமுதாயத்தில் இருத்தல் இயலாது; இருக்காது. சமயம், ஆன்மாவைச் சார்ந்த, வளர்ச்சியின்பாற்பட்ட அறிவியல் சாதனமாக அங்கீகரிக்கப் பெறும்; ஆன்மாவின் - உயிரின் தரப்பாடு, அறிவு, சால்பு, பண்பாடு ஆகியவைகளால் அறியப்பெறும். இத்தகு உயரிய விழுப்பங்களையே ஆன்மிகம் என்று திருக்குறள் கருதுகிறது. திருக்குறட் சமுதாய ஆன்மிகம் - கடவுள் தம்பிக்கை, குணங்கள் அடிப்படையில் - "எண் குணத்தான்", "வேண்டுதல் வேண்டாமையிலான்” என்ற நிலையிலேயே ஏற்றுக்கொள்ளப்பெறும். திருக்குறள் நெறியில் கடவுள் வழிபாடு என்பது 'பொய்தீர் ஒழுக்க நெறி" நிற்பதேயாகும்.

ஆன்மிகம் என்ற பெயரில் மத வேற்றுமைகளையும் மூடப்பழக்கங்களையும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எந்தவோர் அமைப்பும் பரப்ப முடியாது. அத்தகைய முயற்சிகள் திருக்குறட் சமுதாயத்தில் முற்றாகத் தடை செய்யப்படும். கடவுள் நம்பிக்கையின் பெயரால் மனித குலத்தில் பிரிவினைப்படுத்துதலும் ஒதுக்கல் கொள்கைகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கும் முறை அல்லது மனப்போக்கும் முற்றாக வெறுத்து ஒதுக்கப்பெறும். வலிமைக்கும் வலிமையின்மைக்கும் இடையிலுள்ள இடைவெளி, தக்க பயிற்சியின்மூலம் குறைக்கப் பெறும்; காலப்போக்கில் முற்றாக அகற்றப் பெறும். வலிமையின்மை முழுமையான அனுதாபத்திற்குரிய சாதனமாகவோ, வலிமையுடைமை வெறுக்கத் தக்கதாகவோ கருதப் பெறாது.

இச்சமுதாயத்தில் ஒவ்வொரு பகுதியினரின் அறிவுத் திறனும் சமுதாயத்தின் சொத்தாகும். ஆனால், அந்தத் தனித்திறமையை, உயர் மனப்பான்மையுடன் ஒதுக்கவும், சமுதாயத்திலிருந்து சமுதாயத்தின் ஒரு பகுதியினரை ஒதுக்கவும், ஆதிக்கம் செய்யவும், சுரண்டவும் கருவியாகப் பயன்படுத்த உரிமை இருக்காது. சமுதாய மேம்பாட்டுக்கு அவர்களுடைய அறிவும் திறனும் பயன்பட வேண்டும். அதுபோலவே, வலிமையற்றவர்கள் தொடர்ந்து வலிமையின்மையைப் பட்சாதாபமாக்கித் தொடர்ந்து சலுகைகளில் திளைத்துச் சவலையாக வாழவும் அனுமதிக்காது. வலிமையில்லாதவர், திட்டமிட்டுச் சில ஆண்டுகளுக்குள்ளாகவே வலிமை பெறும்படி வளர்க்கப் பெறுவர். பொதுவாக, "ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்" என்னும் சமுதாய நியதி ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் இடம் பெறும்; நடைமுறைப்படுத்தப் பெறும்.

மனித குலத்தில் தனியுடைமைச் சமுதாய அமைப்புத் தோன்றிய பிறகும் பொருளியற் சார்பு கொண்ட பிறகும் உரிமைகளின் எல்லையைப் பராமரிக்கும் நோக்கத்தில் அரசியல் தோன்றியது. அரசியலும் ஒருவகை விஞ்ஞானமே. மானுடத்தின் சீலம் பொருந்திய நல்வாழ்க்கைக்கு அரசியல் தேவை. திருவள்ளுவரும் பொருட்பாலில் அரசியல் எனும் தலைப்பில் 25 அதிகாரங்கள் எழுதியுள்ளார்.

மானுடத்தின் அனைத்துச் சிறப்புக்கும் அரசியலே அடிப்படை என்கிறார் திருவள்ளுவர். நாட்டு மக்களிடத்தில் நல்லொழுக்கம் வளர வேண்டுமென்றால் அரசியலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். திருக்குறள் கூறும் ஆட்சிமுறை மக்களாட்சி முறையேயாகும். திருக்குறள் தோன்றிய காலத்தில் அரசுகள் இருந்தும் குடியாட்சி முறை தழுவிய முடியாட்சியைத்தான் அது கூறுகிறது. இம்முடியாட்சியில் குடியாட்சிக்குரிய தன்மைகளையே கூறுகிறது. இதனை,

  "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்  
   அடிதழீஇ திற்கும் உலகு" (544) 
  "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
   கெடுப்பா ரிலானும் கெடும்" (448) 

என்ற திருக்குறள்களால் அறியலாம். திருக்குறள் தோன்றிய காலத்தில் முடியாட்சி யிருந்தமையால் திருவள்ளுவர் இங்ஙனம் கூறினார். எனவே, திருக்குறள் நெறியில் அரசியல் அமைப்பு, குடியாட்சியமைப்பேயாம். வரலாற்றுப் போக்கில் உலக அரங்கில் முடியாட்சிகள் சடசடவெனச் சரிந்து விட்டன.

திருக்குறள் நெறி வழி அமையும் குடியாட்சி, முறையில் மட்டுமே குடியாட்சியாக இருக்காது. உண்மையிலேயே உணர்வாலும் மிகச் சிறந்த குடியாட்சியாக அமையும். இன்றைய குடியாட்சி முறையில் மக்களிடமிருந்து வாக்குகள் வாங்கப்படுகின்றன; மக்கள் வாக்களிப்பவராக வளர்க்கப் பெறவில்லை. இன்றைய குடியாட்சி முறையில் - குறிப்பாகத் தேர்தல் முறையில் சாதி, மதம், பணம் ஆகியவை செய்யும் அராஜகங்கள் எழுதிக் காட்ட முடியாதவை. திருக்குறள் ஆட்சியமைப்பில் தேர்தல்களில் சாதி, மதம், பணம் ஆகியவற்றின் ஆதிக்கங்கள் ஒழிக்கப் பெறும்; வாக்களிப்பதென்பது கட்டாயக் கடமையாக்கப்பெறும். தேர்தல் ஆணைக்குழு முழுச் சுதந்திரமுடைய தன்னாட்சியமைப்பாக இயங்கும். வேட்பாளர்களின் தேர்தல் செலவை, தேர்தல் ஆணைக்குழுவே ஏற்கும். அரசியற் கட்சிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த ஒழுங்கியல்முறை உருவாக்கப்பெறும். இப்போதுள்ளதைப் போல, ஆதிக்கப் போட்டிகளாலும் கோபதாபங்களாலும் அரசியற் கட்சிகள் தோன்ற இயலாது.

திருக்குறள் சமுதாய அமைப்பில் குறிக்கோளற்ற அரசியற் கட்சிகள் தோன்ற அனுமதிக்கப்பட மாட்டா. திருக்குறள் வழி தோன்றும் அரசியற்கட்சிகளைச் சார்ந்தவர்கள் மனித நேயம், சுயக்கட்டுப்பாடு, கடுமையாக உழைத்தல், சலத்தால் பொருள் செய்யும் விருப்பின்மை, எளிமை, தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் நோன்பு ஆகிய தகுதிகளைப் பெற்று விளங்குவர்; பெற்று விளங்கச் செய்வர்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியன "அளவிறந்த பெரும்பான்மை" பெற்ற ஒரே காரணத்திற்காகச் சிறுபான்மையினர் கருத்து மதிக்கப் பெறாதிருக்க அனுமதிக்க மாட்டா; கருத்தின் பயன்பாடு நோக்கி எடுத்துக் கொள்ளும். பொதுமைக்கு இடையூறில்லாத வகையில் தனி ஒருவரின் சுதந்திரம் மதிக்கப் பெறும். ஒப்புறுதி வழங்கப் பெறும். தனி ஒருவரின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதன் மூலமே சமுதாயத்தின் பொதுக்கடமை நிகழ்வுறும். "பொதுமைக்கு ஊறில்லாத தனிமனித உரிமைகள்" என்ற கோட்பாடு உறுதியாக நடைமுறைப்படுத்தப் பெறும். பெரும்பான்மையின் காரணமாகத் தோன்றும் முரட்டுத் தனத்திற்குத் திருக்குறளின் குடியாட்சிமுறை கடிவாளமாக அமையும்; எந்த ஒரு கருத்தும் அலட்சியப்படுத்தப்பட மாட்டாது. கருத்து வேற்றுமைகள் காழ்ப்பாகவும் பகைமையாகவும் வளர இடமளிக்கப் பெறமாட்டா குற்றம் சுமத்துதல், பழி துாற்றுதல் போன்றவைகள் திருக்குறள் நெறியில் சிறுமை என்று புறக்கணிக்கப் பெறும்; விதிமுறைகளாலும் கட்டுப்படுத்தப் பெறும். ஆனால் பயனுடைய விமர்சனங்கள் வரவேற்கப் பெறும்; ஊக்குவிக்கப் பெறும்.

திருக்குறள் காட்டும் ஆட்சியில் அரசுக்கும் மக்களுக்கு மிடையேயுள்ள இடைவெளி குறையும். திருக்குறளரசு எப்பொழுதோ ஒரு தடவை பயன்படுத்துவதற்குரிய அதிகாரங்களை மட்டுமே பெற்றிருக்கும். அரசின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பெற்று, ஆங்காங்கு ஆட்சி உறுப்புக்களாகிய ஊராட்சி, நகராட்சி, கூட்டுறவு அமைப்பு முதலிய பல்வேறு அமைப்புகளைக் கண்டு, ஆங்காங்கு உரிமைகளும் அதிகாரங்களும் பரவலாக்கப்பெறும். இன்று இருப்பதைப் போல் அரசு, மக்களைத் தாங்காது; மக்கள் தாம் வளர்வது மட்டுமின்றி அரசைத் தாங்கும் ஆற்றலாக விளங்கி, அரசின் பொறுப்புக்களை ஏற்பார்கள்; அரசை இயக்குவார்கள்.

மக்கள் வாழ்வுக்கும் அரசுக்கும் பொருளே அடிப்படை திருக்குறள் காட்டும் பொருளியல் நுட்பமானது. திருக்குறள் தனியுடைமைச் சமுதாயத்தை மறுப்பதன்று; ஆயினும், தனியுடைமைக்குச் சில அறநெறிகளை - விதிகளை விதிக்கிறது.

1. "வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள்"
(178)
2. "பழிமலைந்து எய்திய ஆக்கம்"
(657)
3. "தாழ்விலாச் செல்வர்"
(731)
4. "தீதின்றி வந்த பொருள்"
(754)

ஆகிய தொடர்கள் தாம் உழைக்காது உழைப்பவரின் பங்கைத் திருடிச் சேர்க்கும் செல்வத்தின் மதிப்பின்மையையும், அச்செல்வமுடையாரின் மதிப்பின்மையையும் கூறுவதுடன் இவற்றின் எதிர்மறைகளையும் கூறுவதாக அமைந்துள்ளமையைத் திருக்குறட் சமுதாயம் உய்த்துணர்ந்து நெறிப்படுத்தும். "பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்", "இரப்பின் கரப்பார் இரவன்மின்" என்று வரும் தொடர்கள் ஒப்புரவு நெறி மேற்கொண்டு ஒழுகுதலைக் கூறி நெறிப்படுத்தும் மாட்சிமையை உணர்க. ஆயினும் கடந்த கால வரலாற்றுப் போக்கைக் கூர்ந்து நோக்கினால், எந்தத் தனியுடைமை யாளரும் எந்த நெறிமுறையையும் பின்பற்றியதாகத் தெரிய வில்லை. அதுமட்டுமன்று. தனியுடைமையாளர்கள் எந்த நெறிமுறையையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பது போல அரசியல் ஆட்சிமுறைகளும், மதத் தலைவர்களின் சாத்திரங்களும் அமைந்துள்ளன.

எத்தகைய கொடிய சுரண்டல்காரர்களும் மதச் சடங்குகள் மூலம் புனிதமாக்கப்படுவர் என்ற இழிநிலை அமைந்துவிட்டது. அதுபோலவே, ஆள்கிறவர்களுடைய ஆசாபாசங்களுக்கு இரைபோடும் தனியுடைமை முதலாளிகள் மேலும் மேலும் கொழுத்து வளரும் வகையில் சட்டங்கள் தளர்ந்தன; அல்லது தளர்த்தப்பட்டன. இதுவே வரலாற்றின் படிப்பினை. இன்றும் இந்த நிலையே தொடர்கிறது. ஆதலால், இன்றைய சூழ்நிலையில் திருக்குறள் காட்டும் சமுதாயத்தில் தனியுடைமைச் சமுதாயத்திற்கு ஏற்பு வேண்டுமா என்பதை நாம் கவனமாக மறு ஆய்வு செய்தாக வேண்டும். அங்ஙனம் ஆய்வு செய்யும்பொழுது நம்மைப் பொறுத்தவரையில் தனியுடைமைச் சமுதாய அமைப்பு அவசியமில்லாதது என்றே தோன்றுகிறது. தனியுடைமைச் சமுதாயத்தில் பொருள், தீங்கு தருவதாக வளர்ந்திருக்கிறது. மனித மதிப்பீடு குறைந்து பணமதிப்பீட்டுச் சமுதாயமாக வளர்ந்திருக்கிறது. பரம்பரைச் சொத்துரிமையின் காரணமாக உழைப்பின் ஊற்றுக்கண்கள் அடைபட்டுவிட்டன. ஆதலால், பொதுவுடைமைச் சமுதாயமே ஏற்புடையது. பொதுவுடைமைச் சமுதாய அமைப்பைத் திருக்குறள் உடன்பட்டிருக்கிறது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. பொதுவுடைமைச் சமுதாயத்திலும் கூட உற்பத்திக் கேந்திரங்கள், கருவிகள் மட்டுமே பொதுவுடைமையாகும். உற்பத்தி செய்யும் மனிதன், உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெறுவதற்கும் தேவைக்குரியவற்றைப் பெறுவதற்கும் முற்றிலும் உரிமையுடையவன். ஆக, பொதுவுடைமைச் சமுதாயத்திலும் கூட உழைப்பின் ஆற்றலிலும், வாழ்வின் தவிர்க்க இயலாத நிலையில் உறுத்தல் தராத வேற்றுமைகள் இருக்கலாம்; இருக்கவும் கூடும். ஆயினும் காலப் போக்கில் இவையும் கூடத் தவிர்க்கப்படுதலே மனித குலத்திற்கு நல்லது. எப்பொழுது: திருக்குறள் கூறும் நெறியில் அறிவறிந்த ஆள்வினையுடைமை மானுடத்திற்கு அழகென்று உணர்ந்து, உளமார உழைக்கும் உள்ளப்பாங்கு ஏற்படும் நிலை வரும் வரையில்! உழைக்காமல் உண்பது வெட்ககரமானது என்று உணரும் நிலை வரும் வரை ஊதியத்தில் வேறுபாடிருக்கும்; ஊதிய வேற்றுமைகளுக்கேற்ப நுகர்விலும் வேறுபாடு இருக்கும். இந்த வேறுபாடு, வளரும் சமுதாயத்திற்கு உந்து சக்தியாக அமையும். எந்தச் சூழ்நிலையிலும் உற்பத்திக் களங்களையும், உற்பத்திக் கருவிகளையும் எவரும் தனியுடைமையாக்கிக் கொள்ளும் முயற்சிகள் முளையிலேயே ஒடுக்கப் பெறும். மனித குலத்திற்குத் தீங்கிழைக்கும் சுரண்டும் தன்மையுடைய பொருளாதார ஆதிபத்தியம் உருவாக இடமளிக்காது.

திருக்குறள் தோன்றிய காலத்தில் வேளாண்மைத் தொழிலும் கால்நடை வளர்ப்பும் தொழிலாகக் கொண்ட சமுதாயம் இருந்திருக்கிறது. உலோக அடிப்படையில் அமைந்த தொழில்களும் உழு கருவிகள் செய்தலும் ஊக்குவிக்கப் பெற்றன.

குழல், யாழ் முதலியன திருக்குறளில் பேசப் பெற்றிருப்பதால் இசைக்கருவிகள் செய்யும் தொழில்களும் வளர்ந்திருக்கின்றன என்று தெரிகிறது. "அறு தொழிலோர்" என்று திருக்குறள் குறிப்பிடுவது உழவர், நெசவாளர், தச்சர், கொல்லர், வணிகர், படை வீரர் ஆகிய தொழில்கள் செய்தோரையேயாகும். இத்தொழில் பிரிவுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன; இனியும் தொடர்ந்து வருவன.

மனித சமுதாயத்தின் சிறந்த தொழில்களில் ஒன்றாகிய வாணிகம் திருக்குறட் காலத்தில் இருந்திருக்கிறது. ஆயினும் தொழிற்புரட்சி ஏற்படவில்லை. இன்றைய மக்கள் தொகை அனைத்திற்கும் நல்வாழ்க்கை வழங்கவும் காலத்தொடு வளர்ந்துள்ள நுகர்வுப் பொருள்களின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக்கு இசைந்தவாறு மக்களின் நுகர்வுத் திறனை வளர்ப்பதற்கும் தொழில் வளர்ச்சி இன்றியமையாதது. "உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்" என்பது பழங்கால நாகரிகம். "கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி” என்பது கொழுத்த நிலப்பிரபுத்துவ காலத்தில் எழுந்த மொழி. இன்றைய சூழ்நிலையில் நுகர்வுத் திறன் வளர்வது வரவேற்கத் தக்க ஒன்றேயாம். நுகர்வுத் திறன் வளர வளரத் தொழில்கள் வளரும்; மானுடத்தின் வாழ்க்கையும் நலமுற அமையும். ஆதலால், திருக்குறள் காட்டும் சமுதாய அமைப்பில் நிலம் பொது விளைபொருள்களும் பொது. வேளாண்மைத் துறையில் கூட்டுச் சாகுபடி முறை அறிமுகப்படுத்தப் பெறும்; வளரும் புத்தம் புதிய தொழில்கள் கூட்டுறவு முறையில் அமையும்; வாணிகம் முழுவதும் கூட்டுறவு முறையில் அமையும்; நடைபெறும். கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வர்த்தகம் செய்யச் சில தனி நபர்கள் உரிமை பெறலாம். திருக்குறட் சமுதாய அமைப்பில் செல்வக் குவியல் கட்டாயம் தவிர்க்கப் பெறும்.

மானுட வாழ்க்கை சிறப்புறப் பல்வேறு நலன்கள் தேவை. அவற்றுள் சிறப்பானவை உடல் நலம், ஆன்ம நலம் ஆகியனவாம். இவையிரண்டும் பல்வேறு நலன்களை உள்ளடக்கியவை. காற்று, தண்ணீர், உணவு, உழைப்பு, குடியிருப்பு, மருந்து ஆகியவற்றால் உடல் நலம் அமையும். கல்வி, கேள்வி, அறிவு, மண வாழ்க்கை, பிரார்த்தனை ஆகியவற்றால் ஆன்ம நலம் அமையும். இவைகளை மக்கள் அனைவரும் எளிதில் பெறத் திருக்குறள் கண்ட ஆட்சி, வழி வகை செய்யும். ஆற்றல் துடிப்புடைய மக்கள் தம் தேவைகளைக் கூட்டுறவால் உருவாக்கிக் கொள்ளும் சூழலும் வாய்ப்பும் உருவாக்கப் பெறும். அரசு துறைதோறும் முழு அளவில் துணை நிற்கும்.

கிராம, நகர அளவில் நலன்களுக்குரிய அனைத்து நலப் பணிகளையும் மக்களே கூட்டு முயற்சியில் அமைத்து நிர்வாகம் செய்வர். கோட்டம், மாவட்டம் அளவில் - பெரிய அளவில் செய்யவேண்டியவற்றை அரசு அமைத்துச் செய்யும். அனைவருக்கும் கட்டாயமாக, மேல்நிலைக் கல்வி வரையிலும் மற்றும் தொழிற்கல்வியில் மேல்நிலை வரையிலும் கல்வி வழங்குவது சமுதாயத்தின் - அரசின் பொறுப்பும் கடமையுமாகும். கல்வித் தரம் பேணப் பெறும். கல்வித்துறையில் மாணவர்கள் தரத்திற்கும் நாட்டின் தேவைக்கும் ஏற்பக் கற்க அனுமதிக்கப் பெறுவர். அதாவது, இளைஞர்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த கல்வியிலேயே ஊக்குவிக்கப் பெறுவார்கள். எனினும், விருப்பார்வங்கள் புறக்கணிக்கப் பெறமாட்டா. மனித நலத்திற்குத் தேவையான கலை, இலக்கிய, கலாச்சார, பொழுதுபோக்கு வசதிகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வழி வகை செய்யப் பெறும்.

அனைத்து மட்டத்திலும் அனைத்துப் பணிகளையும் கண்காணித்து நெறிமுறைப்படுத்த அரசு அலுவலர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அடங்கிய "மக்கள் குழு"க்கள் அமைக்கப் பெறும். இம் மக்கள் குழுக்களே பணியாளர் தேர்வு, பணியாளர்களின் பணிக்காலக் கண்காணிப்பு முதலிய பணிகளை மேற்கொள்ளும். அனைத்து மட்டத்தி லும் பணித்திறன் கண்காணிக்கப் பெறும் வளர்க்கப் பெறும். முதியோர் இல்லங்கள் அமைக்கப் பெறும்.

ஒரு சிறந்த சமுதாயத்தில் நீதிமன்றங்கள் தேவைப்பட மாட்டா. ஆயினும் மானுடம் முழுமையான, ஆன்ம நலத்தை அடையும் வரை இங்கும் அங்குமாகச் சிற்சில மோதல்கள் இருக்கவே செய்யும். அதனால், குறைவான எண்ணிக்கையில் குறைவான அளவுக்கு முறைமன்றங்கள் அமைந்து இயங்கும். முறை மன்றங்களுக்கு எடுத்த எடுப்பில் சென்று விடாதவாறு நடைமுறைகள் கடினப்படுத்தப் பெறும். தொடக்க நிலையில், நகர, கிராம அளவில் மக்கள் முறையீட்டு மன்றங்கள் தனிமனித, குடும்பச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமைக்கப் பெறும். திருக்குறட் காலம் முடியாட்சிக் காலம். அதனால், திருக்குறளில் படை', 'அரண்' பேசப் பெற்றுள்ளன. திருக்குறள் ஆட்சி சமூக நலன் பேணும் குடியாட்சியாதலாலும், உலக முழுவதும் இந்த ஆட்சியே அமைய வேண்டும் என்பதாலும் திருக்குறட் சமுதாயம் படை வலிமையைப் பெருக்காது. அதுபோலவே, எந்தவொரு நாடும் படை வலிமை பெறாதபடி போராடும். அவசரத் தேவைக்கு மக்கள் குலத்துக்குப் பாதுகாப்பாகப் பொதுவான படையை - வலிமையான படையை அமைத்துக் கொள்ளத் துணை செய்யும்; அதற்காகத் தொடர்ந்து போராடும்.

திருக்குறள் ஆட்சி, ஒவ்வொருவரும் மூன்று மொழி கற்பதை வலியுறுத்தும். தாய்மொழி, நாட்டுமொழி, உலகப் பொது மொழி என்பவை அவை. ஐ.நா. பேரவை உலகப் பொதுமொழி ஒன்றைத் தேர்வு செய்யவேண்டும், இந்த உலகப் பொதுமொழியை உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களும் கட்டாயமாகப் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும். விருப்பமுடையவர்கள் அறிவு வளர்நிலையில் வரையாது கற்கலாம்.

பிறப்பினால் எல்லாரும் ஒத்த நிலையினர்; ஒரே உரிமை உடையவர்கள். சிலர், தனித்திறன்கள் பெற்றிருந்தாலும் அவற்றுக்கெனத் தனி உரிமை ஏதும் இல்லை. எல்லாருக்கும் கல்வி; உழைப்பாளர்க்கு உயர்வு: தாழ்விலாச் செல்வர் பலர் ஆவது; மலரினும் மெல்லிய காமம் கலந்து மகிழும் வீடுகள்; பிறை வளர்வது போன்ற நட்பு: முறை கெடாது காவல் புரியும் அரசு; செந்தண்மை பூண்டொழுகும் அத்தண்மை முதலியன கொண்ட சமுதாய அமைப்பே திருக்குறட் சமுதாய அமைப்பு.

இத்தகைய சமுதாயத்தை அமைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து பணி செய்வதென்று திருக்குறள் பேரவை உறுதி கொள்கிறது.