உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/வள்ளுவர் நெறி

விக்கிமூலம் இலிருந்து
2

வள்ளுவர் நெறி

திருவள்ளுவர் ஒரு பிறவிச் சிந்தனையாளர். திருவள்ளுவர் மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே திருக்குறளை இயற்றினார். திருக்குறள் தோற்றத்திற்குரிய களம், அந்தக்காலச் சமுதாய அமைப்பு முறையேயாம். திருக்குறள் தோன்றிய காலம் பொற்காலம் அல்ல. தமிழின வாழ்வியல் செப்பமாக இல்லை. ஏன்? உலக மாந்தரினமே சிறப்புடன் வாழாத காலம் அது. அதனால் மனித சமூகம் சிறப்புடன் வளர, வாழத் திருவள்ளுவர் வழிகாட்ட விரும்பினார்.

திருவள்ளுவர் காலத்திலேயே கடவுள்கள் பலர் வழிபடு பொருளாயினர். சிந்தனையில் சிறந்த வழிபாடு இல்லாமல் ஆரவாரத் தன்மையுடைய சடங்குகள் அதிகமாயின. கடவுள் வழிபாடு பொறி, புலன்களைப் பக்குவப் படுத்துதற்குரியது. ஆனால், திருவள்ளுவர் காலத்திலிருந்து இன்றளவும் கடவுள் வழிபாட்டில் சிந்தனை ஒன்றியிருத்தல் முதலியனவற்றிற்குப் பதிலாக எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஆசை, அகந்தை, தீனி ஆகியவற்றிற்குரியனவாக வழிபாட்டு முறைகள் அமைந்து விட்டன. திருவள்ளுவர் இறைநெறி சார்ந்த ஒழுக்கமாகப் பொறிவாயில் ஐந்தவித்தலையே கூறுகின்றார்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.”

(6)

என்பது குறள். இந்தத் திருக்குறளுக்குப் “பொறிகளை அடக்குதல்” என்று அறியாதார் பொருள் கொள்வர். இது தவறான கருத்து. இயற்கைக்கு முரண்பட்டதும்கூட, “அடக்கு அடக்கு என்பர். அம்மா பொருளொன்றும் அறிந்திலனே!” என்று சான்றேர் அருளியுள்ளமை காண்க! பொறிகள், புலன்களில் இயக்கத்தை முறைப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்ந்து பயன் கொள்ளுதல் என்பதே முறை.

உயிரியற்கை சென்றவிடத்தெல்லாம் செல்வது. அதனை அங்ங்னம் செல்லவிடாது தடுத்துச் செலுத்தி மடைமாற்றம் செய்து நன்னெறிப்படுத்துதலே திருக்குறள் நெறி. சுவையும் பயனும் இல்லாதனவற்றைச் சமைத்தல் வழிப் பக்குவப்படுத்துதல் போல, அதாவது கிழங்கு அவித்தல் என்று சொல்வதைப் போலப் “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ள வேண்டும். அதாவது மானிடப் பரப்பாகிய சமுத்திரத்தில் மனிதன் சங்கமம் ஆவதற்குரிய தகுதியைப் பெறவேண்டும். அந்த வாழ்க்கையே பொறிவாயில் ஐந்தவித்தான் ஒழுக்க நெறிநிற்கும் வாழ்க்கை. திருக்குறள் காட்டும் சமய வாழ்க்கை. இறைவழிபாடும் இதுவே.

மானுடம் வெற்றி பெறத் திருக்குறள் எழுந்தது. மானுடம் வாழ்வாங்கு வாழத் திருக்குறள் நெறி வழி காட்டுகிறது. வாழ்வாங்கு வாழ்தல் என்றால் பொருள் என்ன? மானுடத்திற்கு வாய்த்த பொறி, புலன்கள் ஆற்றல் உடையவை; படைப்பாற்றல் உடையவை. ஐந்தவித்தான் ஆற்றல் அளப்பரியது என்றும் திருக்குறள் கூறும். இங்கும் பொறி, புலன்களை அறிவார்ந்த நிலையில் - பயனுறு நெறியில் செலுத்தித் திறம்பட வாழ்தல் என்பதே கருத்து. எல்லாரும் உடல் தாங்கி உலா வரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். ஆனாலும் அவர்கள் எல்லாரும் வாழ்பவர்கள் அல்லர். “வாழ்கின்றாய், வாழாத நெஞ்சமே!” என்ற மாணிக்கவாசகர் அருள்வாக்கிற்கு ஏற்ப வாழாதவர்கள், பிழைப்பு நடத்துபவர்கள் பலர் வாழ்கின்றவர்கள் என்று கணக்கெடுத்தால் ஆயிரத்தில் ஒருவர்கூடக் கிடைத்தல் அரிது. வாழ்கின்றவர்கள் புவியை நடத்துவார்கள்: பொதுவில் நடத்துவார்கள்; போர்க்குணம் உடையவர்களாக இருப்பார்கள். ஓயாது ஒழியாது நலம் செய்வார்கள். நன்றே செய்வார்கள்; காலத்தை வென்று விளங்குவார்கள். இவர்கள் பூமிமேல் புகழத் தக்கவர்கள். புகழ்பட வாழும் நெறி திருக்குறள் நெறி.

மனிதன் சாதாரணமாகத்தான் பிறக்கிறான். ஆயினும் அவனுடைய வளர்ச்சிக்குரிய கருவிகள் - வாயில்கள் ஏராளம்; “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று தேவாரம் கூறும். மானுடம் வளர, வாழத் திருவள்ளுவர் காட்டும் நெறி கற்கும் நெறி! ஆம்! ‘கற்க’ என்றார் திருவள்ளுவர். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து கற்கவேண்டும். கற்ற நூலின் கருத்துக்களை அசைபோட்டு ஜீரணித்து அறிவாக்க வேண்டும். அறிவினைச் செயலாக்க வேண்டும். அறிவுடையார்க்கு அழகு “என்ன தெரியும்” என்பதல்ல; “என்ன செய்யத் தெரியும்” என்பது தான், அதனால் திருவள்ளுவர் அறிவைச் செயலுடன் தொடர்புடைய கருவியாக்கினார். “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார். கருவி என்றால் Instrument என்பது பொருள். துன்பமும் துயரும் இயற்கையுமல்ல நிலையானவையுமல்ல. அறிவினைக் கருவியாகக் கொண்டு துன்பத்தினை வெல்ல வேண்டும். நல்ல நிறைவான - பாதுகாப்பான - மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அறிவு கருவியாகப் பயன்படுதல்வேண்டும். அறிவைக் கருவியாகக் கொண்டு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் திருவள்ளுவர் காட்டும் நெறி, அறிவு இருக்கிறது. அறிவைக் கருவியாகவும் அறிந்திருக்கிறோம். ஆனால் அறிவைக் கருவியாகப் பயன்படுத்த, வாழ்க்கையை இயக்க உந்து சக்தி ஒன்று வேண்டுமே, அந்த உந்து சக்தி எது?

அந்த உந்து சக்திதான் ஊக்கம். ஊக்கம் உள்ளத்தைச் சார்ந்தது. சோர்வும், பயமும் ஊக்கத்திற்குப் பகை. “உள்ளம் உடைமை உடைமை” என்றார் திருவள்ளுவர். உள்ளம், ஊக்கத்தின் களமாதலால் உள்ளத்தையே ஊக்கம் என்றார். ஊக்கம் என்பது ஒரு நுண்ணுணர்வு. ஊக்கத்தின் வெளிப்பாடு முயற்சி; உழைப்பு. திருவள்ளுவர் முயற்சியை “ஆள்வினை” என்று குறிப்பிடுகிறார். ‘அறிவறிந்த ஆள்வினை’ என்பது திருக்குறள். ‘அறிவறிந்த ஆள்வினை’ என்று கூறியதால் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் என்று பொருள் படுகிறது. அறிவறிந்த ஆள்வினையே ஆகூழ். அறிவறிந்த ஆள்வினையே பயன் தரும். இதுவே திருவள்ளுவர் நெறி!

வாழ்க்கையின் இயக்கம் நுகர்வுப் பொருள்களாலாகியது. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று திருக்குறள் கூறுகிறது. இந்த உலகியலில் “கடவுள் முதல்”, “கருத்து முதல்”, “பொருள் முதல்” என்ற தத்துவங்கள் பயிலப்படுகின்றன. இவற்றுள் திருக்குறள் பொருள் முதல் வாதத்தைச் சார்ந்தது என்று எண்ண இடமளிக்கிறது. “பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை” என்பதால் பொருளைச் சார்ந்தே வாழ்வியல் அமைகிறது. உடலோடு கூடிய உயிர் வாழ்க்கை இயங்க வேண்டுமாயின் நுகர் பொருள் தேவை. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்று பிறரும் கூறுவர். திருக்குறள் “செய்க பொருளை” என்று கூறுகிறது.

“யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும், போகமும் அல்ல” என்ற பரிபாடல் வரி, ‘பொன்’ வேறு ‘பொருள்’ வேறு என்று பிரித்துக் கூறியுள்ளமை அறிக. உண்பன, தின்பனவாகிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து குவிக்கவேண்டும். "வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்றான் பாரதி; மேலும் ஒருபடி மேலே போய்,

“தனியொருவனுக்கு உணவு இல்லை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்”

என்றும் கூறினான். திருவள்ளுவர்,

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான்”

(1062)

என்று கூறுகிறார். ஆதலால் திருக்குறள் நெறி, நுகர்பொருள் உற்பத்தி குவிக்கும் நெறி.

பசியும் பட்டினியும் இல்லாத நாட்டைக் காண்பதே திருவள்ளுவர் நெறியின் நோக்கம்.

கடவுள் இருக்கிறார்; பக்தி இருக்கிறது; மனிதன் இருக்கிறான். மனிதப் பிறப்பு உயர்ந்தது; மிக மிக உயர்ந்தது. மனிதனுக்கு வாய்த்த பொறி புலன்கள் அளவற்ற ஆற்றலுடையன; படைப்பாற்றலுடையன. இவ்வளவு இருந்தாலும் மனிதனை மனிதனாக்கும் அன்பு இல்லையேல் வெறும் என்பு தோல் போர்த்த உடம்புதான். மனிதனுடைய உயிர் நிலை அன்பில்தான் நிலை பெற்று இருக்கிறது. “அன்பின் வழியது உயிர் நிலை” என்றது திருக்குறள். திருவள்ளுவர் நெறி, அன்பு நெறி. அன்பு நெறியே அறநெறி. அன்பு பிறர் நலத்தையே நாடும். தியாகம் செய்யும்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

(72)

என்பது திருக்குறள். மானுட வாழ்வு தியாகத்திற்கே உரியது. மலர் மலர்ந்து மணம் பரப்பி உதிர்வதைப் போலத்தான் மானுட வாழ்க்கையும் அமையவேண்டும். திருவள்ளுவர் நெறி ஒப்புரவு நெறி. உலகத்தோடு ஒட்ட ஒழுகும் நெறி. ஒத்தது அறிந்து செய்து வாழும் நெறி.

திருக்குறளில் விருந்தோம்பல், ஈகை, ஒப்புரவு ஆகிய அதிகாரங்கள் அமைந்துள்ளன. இம் மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையன. ஆனால், பரிணாம வளர்ச்சியில் ஒன்றைவிட ஒன்று வளர்ந்தது. இலட்சியத்தின் எல்லை ஒப்புரவேயாம். விருந்தோம்பல் மிக அரிய பண்புதான். ஆயினும் இயல்பாக நிகழக்கூடியது ஒரோ வழிதான். இழப்பு நேரினும் ஈதல், கொடுத்தல், உதவி செய்தலாகிய பண்பு எல்லோர் மாட்டும் இயல்பாக வருவதில்லை. ஆனால், ஈதற் பணியில் புகழ் பெற்றவர்கள் தமிழக வரலாற்றில் உண்டு. ஈதல் இயலாத நிலையில் சாவைக்கூட வரவேற்றுள்ளனர்.

“சாதலின் இன்னாத தில்லை; இனிததுரஉம்
ஈதல் இயையாக் கடை”

(230)

என்பது திருக்குறள். ஆயினும் ஈதற் பண்பிலும் விழுமியதாக, சிறந்ததாக விளங்குவது ஒப்புரவுப் பண்பே. ஒப்புரவு நெறியில் நம்பிக்கை, நல்லெண்ணம் கால்கொள்கிறது. ஈதற் பண்பில் கொடுப்பார் உண்டு வாங்குவார் உண்டு; இரு வேறு நிலை உண்டு. ஒப்புரவு நெறியில் அஃது இல்லை. ஒப்புரவு உரிமையும் கடமையும் இணைந்த நெறியாகும். கொள்வார் - கொடுப்பார் என்ற நிலை ஒப்புரவு நெறியில் இல்லை. மாமுனிவர் மார்க்ஸ் இலண்டனில் தங்கியிருந்த காலத்தில் அவர் வீட்டில் பண்டத்தை வைத்துப் பூட்டும் பழக்கம் இல்லை. மேசையின் டிராயரில் பணம் இருக்கும். கார்ல் மார்க்சின் நண்பர்கள் பலர் அங்கு வருவர். அவர்களில் யாருக்காவது பணம் தேவையானால் எடுத்துக்கொண்டு போவார்கள். திரும்பக் கிடைத்தபொழுது கொண்டு வந்து வைப்பார்கள். இதுபற்றி மார்க்ஸ் கண்டுகொள்வதில்லை; கண்டுகொள்ள முயற்சி செய்ததில்லை. இது ஒப்புரவு நெறிக்குச் சான்று. ஒப்புரவு நெறிக்குத் திருவள்ளுவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் அனைத்தும் கடப்பாடுடையனவேயாம். ஊருணி, பயன்மரம், மருந்து மரம் ஆகியன கைம்மாறு கருதாது மனித குலத்திற்குப் பயன்படுகின்றன. அவற்றினுள்ளும் மருந்து மரம் தனக்கு வரும் தீங்கினையும் ஏற்றுக்கொண்டு வாழ்வளிப்பது.

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”

(217)

என்பது திருக்குறள். இதனை வலியுறுத்தியே,

“ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து”

(220)

என்றார். நிர்வாணமான சுயநலமும் பணவேட்டையும் நிலவும் இந்தக் காலத்திற்குப் பொதுவுடைமைச் சமுதாயத்தை நிகர்த்த திருவள்ளுவரின் ஒப்புரவு நெறியே சாலச்சிறந்தது.

இன்று நாகரிகம் என்ற சொல் கொச்சைப்படுத்தப் பெற்று வருகிறது. இன்றைய நாகரிகம் நம்முடைய தோலைக் கூடத் தொடவில்லை. புறத்தோற்றங்களே நாகரிகம் என்று கருதப்பெறுகிறது. திருவள்ளுவர் நெறியில் நாகரிகம் என்பது அதிநுட்பமானது. மனித சமூகத்தில் எல்லோரும் ஒரு மாதிரியாக நடந்து விடுவதில்லை. நாட்டில் சமூக அமைப்பு மகாபாரதம் போலத்தான் அன்றுமுதல் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. அதாவது, நல்லவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியவர்களை வலைபோட்டுத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை. நம்முடன் பல நாள் பழகிய நட்பினராயினும் ஒரு சின்னச் செய்திக்கும் கூட மனம் புழுங்கிப் பகைமை உள்ளம் கொண்டு பழிவாங்க நினைத்து நஞ்சு கொடுப்பர். அப்படி நஞ்சு கொடுத்தாலும் நஞ்சை உண்பதே நனி நாகரிகம் என்று நற்றிணை பேசும்.

“முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”

என்பது நற்றிணைப் பாடல்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

(580)

என்று திருக்குறள் கூறுகிறது. தன் கண் முன்னாலேயே தனக்கு நஞ்சைக் கொடுத்தாலும் மனத்தில் சலனமின்றி வெறுப்பும் பகை உணர்வும் இன்றி அந்த நஞ்சை மன நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் குடித்துச் சாகாமல் வாழ்பவர்கள் நாகரிகமுடையவர்கள் என்று திருக்குறள் கூறுகிறது. தூய செங்குருதி ஒடும் உடலில் நஞ்சின் தாக்கம் பலிக்காது; நஞ்சு வலிமை இழக்கும். ஆதலால் “நஞ்சுண்டு அமைவர்” என்றார் திருவள்ளுவர்.

நன்றே செய்யும் கடப்பாட்டு நெறியே திருவள்ளுவர் நெறி. ஒருவர் ஒருவருக்கு நன்மையே செய்யாமல் இருந்திருக்க மாட்டார். ஏதாவது ஒரு நன்மை எந்தக் காலத்திலாவது செய்திருப்பார். பின், எழுந்த கருத்து வேற்றுமைகளால் கசப்புணர்வு வளர்ந்த காரணத்தால் கொலை நிகர்த்த கொடிய துன்பங்களைக் கூடச் செய்யலாம்; செய்யக்கூடும். அந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது? நாமும் எளிதில் பகை கொள்வதா? நாமும் கெடுதல் செய்வதா? வம்புகளை வளர்ப்பதா? இவையெல்லாம் திருவள்ளுவருக்கு உடன்பாடல்ல. பின் இந்த இடர்ப்பாடான சூழ்நிலையில் திருவள்ளுவர் நெறி என்ன? உன்னுடன் பழகியவர்கள் உனக்குக் கொலையணைய கொடுந்துன்பங்களைச் செய்யும் பொழுதும் செய்பவர் மீது சினவற்க, பகை கொள்ளற்க; யாதொரு தீமையும் செய்யற்க! அந்த நேரத்தில் முன்பு அவர் செய்த ஏதாவது ஒரு நன்மையை நினைத்துக் கொள்! அந்த நினைப்பு கொடுமை செய்வார் மாட்டு, அன்பைக் காட்டத் தூண்டும்; பகையை மாற்றும்; பண்பாடு வளரும். இத்தகு வாழ்வே மானுடத்தில் சிறந்த வாழ்வு. சால்பு மிகுதியும் உடைய வாழ்வு.

திருவள்ளுவர் நெறி எளிதானது; ஆனாலும் அருமையானது. திருவள்ளுவர் நெறியில் இந்த வையகம் நடை போடுமானால் இன்று இந்த உலகத்தை வருத்தும் துன்பங்கள் அனைத்தும் அகலும்; அன்பு வளரும்; அறம் வளரும்; பண்பாடு வளரும்; இந்த உலகமும் இடையீடின்றி இயங்கும்; இந்த உலகம் அழியாது என்றும் நிலைபெற்று விளங்கும்.

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்”

(996)

என்றும் திருக்குறள் கூறுகிறது. திருவள்ளுவர் நெறி மானுடத்திற்கு நிலையான வாழ்வளிக்கும் நெறியுங்கூட! திருவள்ளுவர் நெறி மண்ணில் விண்ணகத்தைப் படைத்துக் காட்டும் நெறி! உலகப் பொது நெறி!