குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/ஜனவரி

விக்கிமூலம் இலிருந்து
திருவருட் சிந்தனை


ஜனவரி 1


இறைவா! காலத்தை முறையாகப் பயன்படுத்தக் கருணை செய்க!

இறைவா! காலத்தின் காலமாக நின்றருளும் இறைவா! நீ காலத்தைக் கடந்தவன். நானோ இரண்டு நிலையும் இல்லாதவன்! நான் கால எல்லைக்குள் சிக்கித் தவிக்கின்றேன்! அதனால் காலத்தைக் கடத்த முயற்சி செய்கிறேன். என்னால் காலத்தை வெல்ல முடியும். ஆனால் காலத்தைக் கடத்தி விடுவதில் எனக்கு ஒரு அற்ப திருப்தி.

வீணே காலம் கடத்தப் பெறுமானால் ஆற்றல் மிக்க காலம் வறிதே போகுமே. காலத்தை முறையாகப் பயன்படுத்துவேன், கடமைகளைச் செய்வேன்! இறைவா, நான் அறிந்து தவறு செய்யவில்லை. நீ எனக்கருளியுள்ள ஆணை ஒரு தேரை இழுத்து நிறுத்து என்பது. உன் ஆணையை நிறை வேற்றுவது என் கடமை! ஆனால் தேரை எப்படி ஒருவர் இழுப்பது? சிலரைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டேன். இறைவா, என் துணைவர்களுக்கு நல்லெண்ணத்தைக் கொடு. காலத்தைப் போற்றிக் கடமையைச் செய்ய வேண்டும் என்ற ஆவேசத்தைக் கொடு. அவர்களையும் வாழ்த்து!

இறைவா இந்த ஆண்டினை “உழைப்பு ஆண்டாக"ச் செலவிட உறுதி எடுத்துக்கொள்ள அருள் செய்! வீணான விவாதங்களைத் தவிர்த்திடக் கருணை பாலித்திடுக! யாரோடும் பகை கொள்ளாமல் வாழும் வண்ணம் அருள் பாலித்திடுக! எல்லோருக்கும் அன்பு செய்யும் விரிந்த இதயத்தைத் தா! உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!! இதுவே இந்த ஆண்டின் குறிக்கோளாகக் கூட்டித் தருக, இறைவா!

ஜனவரி 2


எல்லாரிடமும் அன்பு செய்யும் இதயம் தந்தருள்க!

இறைவா, நீ இயக்கும் உலகத்தில் தனித்தன்மை உடையது எதையும் நான் காண்கிலேன்! ஐம்பூதங்களின் கூட்டியக்கமே உலகியக்கம். உலகில் நான் காணும்-நுகரும் பொருள்கள் அனைத்துமே ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு பொருள்களின் கூட்டமைப்பேயாம். ஏன், இறைவா? என் உடம்புகூட நூற்றுக்கணக்கான பொருள்களின் கூட்டமைப்புத்தானே. இது மட்டுமா இறைவா? இந்த உடம்பில் உள்ள வேறுபட்ட அமைப்புகள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து இயங்கும்போதுதானே நான் வாழ்கின்றேன். ஒன்றோடொன்று ஒத்திசையாத பொழுது அல்லது வேறுபாட்டை இயக்கத்தில் காட்டும் பொழுது நோயாளியாகின்றேன், அல்லது பைத்தியக்காரனாகின்றேன். இறைவா, இது மட்டுமா?. உடம்பில் கிடக்கும் பல்வேறு தாதுப்பொருள்கள் தம்முள் மிகாமலும், குறையாமலும் இருக்கும்பொழுது வாழ்கின்றேன்.

எங்கும் கூட்டமைப்புக்களையே பார்க்கும் நான் மட்டும் ஏன் தனித்தன்மை கோருகின்றேன். எனது தனித் தன்மைக்காகப் போராடுகிறேன். மற்றவர்களை அழிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் புத்தியை நீ திருத்தக் கூடாதா? எங்கும் எதிலும் பொதுத்தன்மை காணும் அறிவைத் தரக் கூடாதா? பொதுமையில்தானே தனித்தன்மை விளங்கும்.

இறைவா, கூடிவாழத் தடையாக இருக்கும் எதுவும் எனக்கு வேண்டாம்; வேண்டவே வேண்டாம்! இறைவா அருள் செய்! எல்லோரிடமும் அன்பு செய்யும் இதயத்தைக் கொடு. மற்றவர்க்குத் தருவதிலே மகிழ்ச்சியடையும் மனத்தைத்தா. மற்றவர் சொல்லும் செய்திகளைக் கேட்கும் பக்குவத்தை அருள் செய்! யாரோடும் பகை கொள்ளாத அருள் உள்ளம் பாலித்திடு! அருள் செய்க!

ஜனவரி 3
கூட்டலே-மனித நிலையில் அறம்

இறைவா! கணிதம் எனக்கு அவ்வளவாக வராது. ஆனால் கணிதத் தத்துவங்களின் அருமையை என்னென்று புகழ்வது? இறைவா, கூட்டல், ஆம். நாம் நாள்தோறும் வாழ்க்கையின் ஆதாரமாக அமைந்துள்ள அறிவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். அது மட்டுமா? இறைவா! தனி "மனிதன்” அம்மம்ம! நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது! இந்தத் தனிமனிதன் என்ற நஞ்சிலிருந்து தானே, தனி உடைமை பிறந்தது. தனி உடைமை உணர்வு தானே, களவும், காவலும், பூட்டும் சாவியும், போரும் இன்றி வாழ்ந்த பொதுமை நலம்மிக்க சமுதாயத்தைச் சீரழித்துவிட்டது. ஏராளமான பிரிவினைகள், பிரிவினை உணர்வுகளால் ஏற்படும் மோதல்கள். பயன், வறுமை நிறைந்த சமுதாயம் !

ஆதலால், "தனிமனிதனாக" வாழலாம் என்ற தன்னல நயப்பிலிருந்து விடுதலைபெறப் பலரோடு கூடி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பலர் கூடித்தொழில் செய்வதன் மூலமே செல்வம் பெருகும். அன்பெனும் தண்ணளி ஊற்றெடுக்கும். மரங்கள் அடர்ந்து வளர்ந்ததே காடு; காடுகளே மழை பொழியத் துணைசெய்யும். அதுபோல இதயத்தால் ஒன்று பட்ட பலர் கூடி வாழ்தலே சமூகம்; சமுதாயம். இத்தகு சமுதாய அமைப்பே வளம் பல படைக்கும். இன்ப நலன்களைத் தோற்றுவிக்கும்.

இறைவா, பலரோடு கூடிவாழும் பண்பாட்டைக் கற்றுத்தா, மற்றவர் நலத்தை என் நலமாகக் கருதும் உயர் ஒழுக்கத்தினை ஏந்த அருள் செய்! இறைவா, கூட்டமாகக் கூடிவாழக் கருணை பாலித்திடு! அதுவும் அர்த்தமுள்ள கூட்டமாகக் கூடி வாழவேண்டும். இறைவா, எந்தச்சூழ்நிலையிலும் மனிதர்களைக் கழித்துக் கட்டும் இழிநிலை எனக்கு வேண்டாம். மனிதநிலையில் கூட்டலே அறம். இறைவா அருள் செய்க!

ஜனவரி 4


ஆகாதவற்றைக் கழித்தாலே வெற்றி விளையும்


இறைவா, கணிதத்தில் கழித்தல் என்பது ஒன்று! ஆம், இறைவா! வாழ்க்கையிலும் கழித்தல் இன்றியமையாத ஒன்று. ஏன்? கழித்தல் இருந்தால்தான் மற்ற கூட்டல், பெருக்கல், வகுத்தல் எல்லாமே நடைபெறும். ஆக, இறைவா! கணக்கில் மையம் கழித்தல். வாழ்க்கையிலும் அப்படியேதான்! உடலில் தோன்றும் கழிவுப் பொருள்களை அவ்வப்பொழுது கழித்து விட்டால் நோயே வராதாம். உடலின் கழிவுகள் அன்றாடம் கழிக்கப்பட்டால் அற்புதமான நலம் இருக்குமாம். இறைவா, இது மட்டுமா? என்னுடைய கெட்ட குணங்களை- கெட்ட நடைமுறைகளைக் கழித்தால்தானே நல்ல பழக்கத்தை ஏற்க முடியும்! நாள்தோறும் நேற்றைய தவறுகளை- தவறுக்கான காரணங்களைக் கழித்தால்தானே அவ்வழி வெற்றிகள் வந்தமையும். இறைவா! என்னுடைய இன்ப துன்பத்திற்கு நீ காரணமல்ல; உலகமும் காரணமல்ல; நானேதான் காரணம்! என்னுடைய செயல்களே காரணம்! என்னுடைய ஊழே காரணம். இறைவா, ஊழ் என்பது வேறு ஒன்றும் அல்லவே. என்னுடைய பழக்கவழக்கங்களின் பயன்பாடுகள் அனுபவத்திற்கு வரும்பொழுது ஊழ், விதி, வினை என்று நாமகரணம் செய்து கொள்கின்றன. இறைவா, இன்றுமுதல் ஆகாதன கழித்தலில் கவனமாக இருப்பேன்!

இறைவா, தன் முனைப்பைக் கழிக்க வேண்டும். அம்மம்ம, இறைவா "நான்" கெடுத்தது கொஞ்சமா? இறைவா எனக்குக் கோபம் உண்டு! இறைவா, கோபத்தைக் கழிக்க வேண்டுமா? சரி! கோபத்தையும் கழித்து விடுகிறேன். இறைவா, இந்த கழித்தல்கள் நடைபெற உறுதியைத் தா!

ஜனவரி 5


இறைவா! பெருக்கமுற வாழ அருள் செய்க!



இறைவா! கணிதத்தில் பெருக்கல். ஆம், இறைவா! வாழ்க்கையிலும் பெருக்கல் தத்துவம் செயற்பட வேண்டாமா? இறைவா, நீயே ஒரு பெருக்கலின் வடிவம் தானே! நின் திருவருள் நோக்கிலிருத்திக் கோடான கோடி உயிரி னத்தை அறியாமையிலிருந்து மீட்டு வாழ்வளித்து உன் புகழ் பாடும் வண்ணம் செய்திருக்கிறாயே!

ஆம், இறைவா! நானும் என் அறிவை நாள்தோறும் முயன்று கற்றும்கேட்டும் பன்மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும். எண்ணற்ற காரியங்களைச் செய்ய வேண்டும்! என் ஆற்றலையும் பல மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும். என் செல்வமும் ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருக வேண்டும்! இது பேராசையல்ல! நான் மனிதகுலத்தை வறுமையிலிருந்து மீட்க வேண்டாமா? என்னுடைய தோழர்களை மகிழ்வோடு வாழவைக்க வேண்டாமா? ஆதலால், நிறைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்! இறைவா, என் இதயமும் இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பும், பெருகியதாக விளங்க வேண்டும். அன்பின் பெருக்கு மனித குலத்தைப் பிடித்திருக்கின்ற அத்தனை இழிவுகளையும் அடித்துக் கொண்டு செல்லவேண்டும்! இறைவா, பெருக்கல் கணக்கில் எண், பன்மடங்காகப் பெருகி வளர்வதைப் போல என் அறிவு, ஆற்றல் செல்வம், அன்பு, தோழமை முதலியன பெருகி வளர வேண்டும்!

இறைவா, கற்றது போதும் என்ற முட்டாள் தனத்தை அறவே ஒழிக்க வேண்டும்! அன்பெனும் ஆறு, சாதி, சமய வாய்க்கால்களில் பாயாமல் மனித குலத்தை நோக்கிப் பேராறாகப் பெருக்கெடுத்துப் பாயவேண்டும். ஆம், இறைவா! எல்லாவற்றையுமே பெருக்கி வாழ்ந்தால் தானே, வளரும் உலகத்திற்கு ஈடுகொடுக்க முடியும். இறைவா, அருள் செய்! பெருக்கமுற வாழ அருள் செய்!
ஜனவரி 6

வகுத்தறிந்து வாழும் கூட்டுறவே இனி என் வாழ்க்கையாகட்டும்!

இறைவா, வகுத்தல்! ஆம், இறைவா, கணிதத்தில் வகுத்தல்! இறைவா, வாழ்க்கையிலும் வகுத்துக்கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆம் இறைவா! வாழ்க்கையில் காலம், ஆற்றல் இரண்டையும் முறைப்படுத்தி வகுத்துப் பயன்படுத்தினால் நிறைய காரியங்கள் செய்யலாம். வேலை நேரத்தில் என்ன வேலை செய்யலாம் என்று ஆலோசித்தல் அல்லது எங்கு வைத்தோம் என்று தேடுதல் நல்ல பழக்கமன்று. வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் வகுத்தலின் வீச்சு பிரதிபலித்தல் நல்லது. இறைவா, அவ்வண்ணமே அருள் செய்!

இறைவா! செல்வத்தின் பயன் நுகர்வே. கூடி மகிழ்ந்து வாழ்தலே! என்னுடையதுதான் செல்வம் என்பது குருட்டுத் தனமானது சட்டங்களின்படிதான். ஆனால், நியாயப்படி என்னுடையது அல்ல. இறைவா, நம்முடையது. என்னுடைய செல்வத்தை வகுத்துக் கொடுத்தால் வறுமையே மிஞ்சும். நுகர்வுப் பொருள்களை முறையாகத் தேவைக்கேற்ப வகுத்துக் கொடுத்து வாழ்வளித்துப்பின் வாழவேண்டும். வையகம் உண்ண வேண்டும். வையகம் உடுத்த வேண்டும். இறைவா, இங்ஙனம் வகுத்துக் கொடுக்கும் பெருவாழ்வு கிடைத்து விட்டால் எனக்கேது குறை. வகுத்துண்ணும் சமுதாய அமைப்பில் களவு இல்லை; கலகம் இல்லை; சிறைச்சாலை இல்லை.

இறைவா, வகுத்தளித்து வாழ்ந்திடும் வாழ்க்கையை நடத்த அருள் செய்க! தனியே உண்ணும் பழக்கத்தை நான் விரும்பியதில்லை! இனியும் விரும்பமாட்டேன். என்னுடைய வாழ்வில் தனிமை இல்லை. இனியும் இருக்காது. வகுத்தளித்து வாழும் கூட்டுறவே இனி என் வாழ்க்கை! இறைவா! அருள் செய்!
ஜனவரி 7

இன்ப வட்டமாக வாழ்க்கை அமைந்திட இன்னருள் புரிக!

இறைவா! கணிதத்தில் க்ஷேத்திர கணிதம் (GEOMETRY) என்று ஒன்று உண்டு. இதில் வட்டம் போடுவதற்கு ஒரு கருவி உண்டு. அதனைக் காம்பஸ் (Compus) என்பர். காம்பசின் நீண்ட பகுதியை வட்டத்தின் மையத்தில் நிறுத்திப் பிறிதொரு சிறிய பகுதியில் எழுது கோலைப் பொருத்தி வட்டம் போட்டால் வட்டம் அழகாக அமையும். இறைவா, எனக்கும் தான் ஆசை என் வாழ்க்கை இன்பவட்டமாக அமைய வேண்டும் என்று. ஆனால் இறைவா, வாழ்க்கையை வட்டமாக்கும் முயற்சிக்குப் பதிலாக வாழ்க்கையைக் கோழிமுட்டையாக்கிக் கொண்டே வருகிறேன், அதனால் எண்ணற்ற துன்பங்கள். இறைவா, எனக்கு வாழ்க்கையை வட்டமாக்கும் யுக்தி தெரியாமல் இல்லை. தெரிந்ததைச் செய்யவிடாமல் தடுப்பது உடற் சோம்பல்.

இறைவா, என் மனம் நின்னருளில் நாட்டம் கொண்டிடுதல் வேண்டும். பின், என் புத்தியைப் பயன்படுத்தி வாழ்க்கை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இறைவா, அப்போது என் வாழ்க்கை இன்ப வட்டமாக அமையும். ஐயமில்லை! இறைவா, என் மனம் நின்னருளில் நாட்டம் கொண்டிருத்தலைப் பாதுகாத்தருள் செய்க! முயற்சியுடைய வாழ்க்கை, தவ வாழ்க்கை! அந்த வாழ்க்கை இன்ப வட்டமாக அமையும். இறைவா, அருள் செய்!
ஜனவரி 8

இறைவா! நான் பூஜ்யமாகி உன் பொன்னடி போற்றும்
வாழ்வினை அருள்க!

இறைவா, கணக்கில் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு. ஆம், இறைவா! ஒரு சாதாரண பூஜ்யம் ஒன்றுக்குப்பின் வருமானால் எண்ணிக்கையைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டுகிறது! நான் ஒரு பூஜ்யமானாலும், உனக்குப் பின்னால் நின்றால் எவ்வளவு மதிப்பு! பெருமை! ஆம், இறைவா! அருள் கூர்ந்து நீ எப்போதும் எனக்கு-முன்னால் - இடக் கைப்புறமாக நின்றருள் செய்! உன்னைச் சார்ந்து உன் வலப் பக்கத்தில் பூஜ்யமாக நான் நிற்பேன்; இதுவே போதும் இறைவா! இறைவா, நான் பூஜ்யமாவது எளிதான காரியமா? இல்லையே! ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்! ஆசைகள்! விருப்பு வெறுப்புகள்! இவ்வளவையும் நான் தொலைத்து பூஜ்யமாவது எப்போது? இப்பிறப்பில் நடக்குமா? நடக்காதா? இது என்ன ஜோசியம்! நின் கருணையிருந்தால் நடக்கும்!

இறைவா! நீ என் மனத்துள் வீற்றிந்தருளத் திருவுளங் கொண்டால் போதும்! நீ எழுந்தருளிய உடனேயே கதிரவன் ஒளி கண்ட பனித்துளி போல என் மனத்திற்குள் ஒன்றாக குடித்தனமாகப் புகுந்து காலப்போக்கில் ஆதிபத்தியம் செய்த ஆசைகள் அனைத்தும் அகன்று போகும்.

இறைவா என் மனக்கோயிலுள் எழுந்தருள்க! என்னை பூஷ்யமாக்குக! எனக்கு முன் இருந்து எனக்குப் பூஜ்யத்தின் மதிப்பைத் தந்தருள் செய்க! இறைவா, நான் பூஜ்யம், எனக்கு முன் நிற்கும் ஒன்று நீ!
ஜனவரி 9

கோபுரம் போல் என் வாழ்க்கை உயர அருள்க!

இறைவா, தஞ்சைப் பெருவுடையார் கோயில் கற்றுத் தரும் பாடத்தினை உணர்ந்தறியும் பேற்றினை அருள் செய்க! என் வாழ்க்கை, அந்தக் கோபுரத்தைப் போல உயர்தல் வேண்டும், ஆம்! இறைவா, அதுவே என்னுடைய விருப்பம். கோபுரம் உயர வேண்டுமானால் அடிப்படை மிக அகல மாகவும், ஆழமாகவும் போடவேண்டும். அது போல என் வாழ்க்கை, சமுதாயத்தை நோக்கி விரிந்ததாகவும், அன்பின் ஆழம்பட்டதாகவும் அமைய அருள் செய்க! அந்தக் கோபுரத் தின் உச்சி - கலசத்தின் நிழல் பூமியில் விழாது!

இறைவா, வாழ்க்கையின் உச்சி செல்வம், கலசம் புகழ்! இவை என்மேல்-என்னைச் சுற்றியிருப்பவர்கள் மேல் நிழலாக விழுந்துவிடக்கூடாது! ஆம், இறைவா! என்னைச் செல்வத்தாலும் புகழாலும் வரும் செருக்கிலிருந்து காப்பாற்று.

வாழ்க்கையின் வெற்றிக்குரிய ஆழமான அன்பினை அருளிச் செய்க! உயரிய குறிக்கோளினை ஏற்று வாழ்ந்திட அருள் பாலித்திடுக! சமுதாய மனிதனாக்கிவிடு. செல்வமும் புகழும் என்னைக் கெடுத்திடா வண்ணம் அடக்கத்தினைப் பொருளாகக்கொள்ளும் நெறியில் நிறுத்துக. இறைவா, அருள் செய்க!
ஜனவரி 10

இறைவா! அறிவார்ந்த ஆள்வினையில் என்னை
ஈடுபடுத்தியருள்க!

இறைவா வலிமையான கட்டடத்தைத் தாங்க நிலத்திற்கும்கூட வலிமை சேர்க்க வேண்டியிருக்கிறது. இறைவா, என் வாழ்க்கை, கட்டிய மாளிகையாக - நெடு நாள் நிற்கும் மாளிகையாக - நிற்கவேண்டுமானால் வலிமை தேவை, உறதி தேவை! 'பொக்கு' என்ற நிலையில் ஆசைகளுக்கும் அச்சத்திற்கும் இரையானால் எப்படி என் வாழ்க்கை மாளிகையாகும்? இறைவா, பெரிய காரியங்கள் செய்யப் பிறந்தவன் நான். என் வாழ்க்கை வெறும் ஆசைகளால்-அச்சத்தால் அழிந்து விடாமல் காப்பாற்று.

ஒயாது உழைத்திடும் வலிமையை உடலிற்குத் தந்தருள் செய்க! எடுத்த குறிக்கோளை நோக்கி அசைவிலாத-இடையீடு இல்லாத முயற்சியினை மேற்கொண்டு செல்ல வழி காட்டு!

என்னை அறிவார்ந்த ஆள்வினை நெறியில் ஈடுபடுத்துக. ஊக்கம் நிறைந்த உள்ளத்தினை உவந்தே தந்தருளல் வேண்டும். அறிவில் தெளிவையும், அசைவில், உழைப்பையும் வழங்கி வாழச் செய்திடுக. வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க!
ஜனவரி 11

இறைவா, எல்லாம் நன்மைக்கே என்று எண்ணும் உள்ளம் தா.

இறைவா, நன்று உடையானே, தீயது இல்லானே, இறைவா நன்மை எது? தீமை எது? உலகத்தின் நிகழ்வுகளில் நன்மை இல்லை; தீமை இல்லை. அந்த நிகழ்வுகளை அனுபவிக்கும் எனது உளப்பாங்கிலேயே நன்மை இருக்கிறது அல்லது தீமை இருக்கிறது. இறைவா, நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நன்மையே.-நன்மைக்கே என்று எற்றுக்கொள்ளும் நல்ல மனதைத் தா! நான் நல்லவனானால் என்னைச் சுற்றிலும் நன்மையே நிகழும். இது நியதி.

இறைவா, தீமையையும் நன்மையாக ஏற்கும் பேருள்ளத்தினைத் தந்தருள் செய்க! நல்லனவே எண்ணும் இதயத்தினைத் தந்தருள் செய்க! நல்லனவே நினைக்கும் உள்ளத்தினை உவந்தருள் செய்க! எங்கும், எதிலும், எந்தச் சூழ்நிலையிலும் நன்மையையே காணும் பேரருள் உளத்தினை வழங்கி அருள் செய்!

நன்மையே என் வாழ்வின் முதல். நன்மையை என் வாழக்கையின் ஆதாரச் சுருதியாக அமைத்து வாழ்ந்திட அருள் செய்க!
ஜனவரி 12

உண்மையாக நடந்திடும் உள்ளத்தினைத் தந்தருள்க!

இறைவா, முன்னைப் பழைமைக்கும் பழைமையனே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! அறிவில் புதுமை தேடலாம், படைப்பில் புதுமை தேடலாம்.

ஆனால், அன்பில் புதுமை உண்டா? அன்பு செய்வோரில் மாற்றம் வேண்டும். இறைவா, அன்பில் பழமை ஏது புதுமை ஏது? ஆனால் இறைவா, புதுமை என்ற பெயரில் நான் பல தவறுகளைச் செய்கிறேன்! இறைவா, எல்லாவற்றிலும் புதுமை நாடல் பைத்தியக்காரத்தனம்! எனக்கு இருப்பதில் மனநிறைவு இல்லை. இந்தப் பெரிய பிழையிலிருந்து என்னைக் காப்பாற்று, நான் எனக்கு வாய்த்தவர்களிடமெல்லாம் உண்மையாக நடந்து கொள்ளும் உள்ளத்தினைத் தந்தருள் செய்க! மனிதர்களில் புதியவர்களைத தேடுதல் வேண்டாம்! அன்பில் பழைய அன்பு-புதிய அன்பு என்ற வேற்றுமை இல்லை.

அலையும் மனத்தினை அடக்கி ஆண்டிடும் ஆளுமையைத் தந்தருள் செய்க! பொறிகளை நல்ல நெறியில் பயிற்றிப் பயன்கொள்ளும் பாங்கினைத் தந்தருள் செய்க! பழையோனே! பழைய அடியாரோடு கூட்டுவித்து வாழ்வித்திடு. இறைவா, அருள் செய்க!
ஜனவரி 13

வாய்மையே வாழ்வாக, தவமாக ஏற்கும் உறுதியினைத் தா!

இறைவா, கணக்கு வழக்கினைக் கடந்த கடவுளே! கணக்கில் 'கிராப்' என்று ஒரு பகுதி உண்டு! இந்தக் கணித முறையின் மூலம், ஒன்றின் வளர்ச்சியை, உயர்வை அல்லது தேய்மானத்தை, கண்ணுக்குப் புலனாகக் கூடிய கோடுகள் மூலம் காட்டலாம்! இறைவா, என் வாழ்க்கையின் வளர்ச்சியை இப்படி வரைபடம் போட்டுப் பார்த்தால் அழுவதா? சிரிப்பதா? என்ற நிலை தோன்றும்.

பொய் பெருகி வளர்கிறது. பொழுது சுருங்குகிறது. இறைவா, கள்ளமறியாத குழந்தையாக இருந்தபொழுது "பொய்” எனக்கு அறிமுகம் இல்லை. இன்றோ இறைவா "பொய்யின்றிப் பொருளுடைய வாழ்வில்லை" என்ற நிலைக்கு ஆளாக்கப் பெற்றுள்ளேன். "பொய்ம்மையும் வாய்மையிடத்த" என்ற திருக்குறள்தான் இன்றுள்ள ஒரே சமாதானம். நம்பிக்கை, இறைவா, ஏன் என்னை இந்தப் பொய்ம்மை நிறைந்த வாழ்க்கையில் ஈடுபடுத்தி விளையாடுகிறாய். பொய் பொய்தான்! இறைவா, பொய்ம்மையே வேண்டாம். வேண்டவே வேண்டாம்! அருள் செய்க!

வாய்மை நெறி நிற்க அருள் செய்க! வாய்மையே பேச வேண்டும். பொய் கலப்பில்லாத்தூய வாழ்க்கை வாழ அருள் செய்க. வாய்மையே வாழ்வாக, தவமாக ஏற்கும் உறுதியினைத் தந்தருள் செய்க! வாய்மையில் சிறந்த பிறிதொன்று இல்லை. இறைவா, வாய்மை வழுவாத நிலை அருள் செய்க!
ஜனவரி 14

வாழைபோல் வாழ அருள்க!

இறைவா! அழகு, பூரணத்துவத்தின் பொலிவு இல்லையா? இறைவா நீ அழகன்! நின் படைப்புகள் எல்லாம் அழகுடையன. இயற்கையில் கிடக்கும் அழகுப் பொலிவை, கைபுனைந்தியற்றாக் கவின்மிகு வனப்பை என்னென்று புகழ்வது போற்றுவது. வாச மலரெலாம் வண்ணக் களஞ்சியம் அல்லவா! இறைவா, வாழ்க்கையின் மங்கல நிகழ்ச்சி களுக்கெல்லாம் வாழை மரம் கட்டுதல், வாழைப்பழம் படைத்தற் சடங்குண்டு. இறைவா, இது ஏன்?

இறைவா, வாழைமரத்தின் தத்துவ விளக்கம் அருமை யாக இருக்கிறது. இறைவா, ஒழுங்காக அடுக்கப் பெற்ற வாழைமட்டைகள். பிசிறே இல்லாத வழுவழுப்பு. முறையாக அடுக்கிவைத்த வாழைத்தார். இறைவா, வாழையின் அமைப்பு, ஒழுங்கை உணர்த்துகிறது.

இறைவா, இவ்வளவு அழகை இரசித்து அனுபவிக்கும் நான் ஏன் அழகைப் படைக்க மறுக்கிறேன்? அழகை வளர்க்கவும்கூட ஆசைப்படுவதில்லையே. இறைவா, என் வாழ்க்கையில் ஒழுங்குகள் இல்லையாயின் நான் எப்படித் திருத்தமுறச் செய்ய முடியும்? திருத்தமுறச் செய்ய இயலாத நிலையில் ஏது பூரணத்துவம்? பூரணத்துவம் இல்லாத நிலையில் அழகு ஏது? நான் பூரணத்துவம் அடையாத நிலையில் பரிபூரணனாகிய உன்னை அடைதல் எங்ஙணம்?

இறைவா, இந்தப் பரந்த உலகில் இயற்கையில் எங்கு நோக்கினும் ஒழுங்குகள். முறை பிறழாத நிகழ்ச்சிகள்! நின்னை உபாசிப்பது என்றால் அழகை உபாசிக்க வேண்டும். ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும்! நோன்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதானே நின்னருள் கிடைக்கும். எதையும் திருத்தமுறச் செய்ய, அழகுறச் செய்ய இறைவா, அருள் செய்!

ஜனவரி 15
உழைப்பில் இன்பம் காணும் இனிய பேற்றினை அருள்க!


இறைவா! ஏறூர்ந்த செல்வா, நல்ல இளைய ஏற்றினை அடக்கி ஊர்தியாக்கி எழுந்தருளி வருகின்றவனை. நானும் தான் மஞ்சு விரட்டில் மாடு பிடிக்கிறேன். எப்படி? நாலுபேர் பறை கொட்டி மாட்டினை மிரளச்செய்கிறார்கள், இன்னும் நாலுபேர் கம்பு கொண்டு விரட்டுகிறார்கள். ஓர் ஏற்றினை அடக்கிப் பிடிக்க இத்தனை உதவிகள்! அப்படியும் அந்த ஏறு அகப்படுவதில்லை. இறைவா, இஃதொரு விளையாட்டு! எதற்காக?


ஏறு, உழைப்பின் சின்னம்! உழைப்பினில் ஊர்ந்து வாழ்க்கை இயங்கின் வெற்றி பெறலாம். உலா வரலாம். இது தத்துவம். நானும்தான் உழைக்கிறேன். இல்லை உழைப்பது போல உழைக்கிறேன்! இதற்கே எத்தனை பேர் உதவி. குறைந்தது அரை டஜன் பேர். ஒட்டு மொத்தமான கணக்குப் பார்த்தால் பலன் பூஜ்யம்! மஞ்சுவிரட்டில் மாடு தப்பித்து ஓடிவிடுவதைப்போல், உழைப்பு தப்பிவிடுகிறது. உறுபயனும் கைக்குக் கிட்டவில்லை!


இறைவா, இந்த இரங்கத்தக்க நிலையிலிருந்து என்னைக் காப்பாற்று! நான் முழுமையாக உழைப்பின் வசத்தில் நின்று உழைத்திட அருள் செய்க, கூட்டாளிகளின் பலத்தை நம்பி நடைப் பிணமாகாமல் வெற்றிகள் பொருந்திய உழைப்பினை ஏற்றுக் கொள்ள அருள் செய்க! என் வாழ்க்கையின் குறிக்கோள் உழைப்பு. என் வாழ்க்கை இயங்குதல் உழைப்பையே ஊர்தியாகக் கொண்டதாய் விளங்க அருள் செய்க! உழைப்பில் இன்பம் காணும் இனிய பேற்றினை அருள் செய்க!

ஜனவரி 16


கண்களுக்கு அறிவுக் காட்சியினைக் கற்றுத் தருக!


இறைவா, கண்ணுதற் பெருமானே! உனக்கு மூன்று கண்கள். கண்ணின் அருமையும் பயனும் அறிந்து மூன்றாகக் கொண்டனையோ? எனக்கு மட்டும் இரண்டே கண்கள். ஏன் இந்தப் பாரபட்சம்! இறைவா, எனது இரண்டு கண்களே கூட என்னோடு ஒத்துழைப்பதில்லை. கண்ணினால் எனக்கு ஆக்கம் இல்லை! இறைவா, ஏன் இந்த அவலம். காணாதன வெல்லாம் காணும் ஆர்வம் என் கண்ணுக்கு இல்லை. பொறி களுக்குத் துணையாக அமைந்து ஏவல் செய்யும் என் கண்களைத் திறந்திடுக!


என் கண்களுக்கு அறிவுக்காட்சியினைக் கற்றுத்தருக. நின் திருக்கோலத்தைக்காணும் பேற்றினை அருள்செய்க! கண்களே நல்வாழ்க்கையின் வாயில்கள். இறைவா, அருள்,செய்க!

கூர்த்த மதியோடு கூடிய காட்சியைக் காணப்பயிற்சி தருக என் ஆன்மாவின் அருள் நிலையை மற்றவர்க்கு உணர்த்தும் கண்களாக விளங்க அருள் செய்க!

எனக்கு ஆகாதனவற்றைக் கண்ணினாலே பார்த்து ஒதுக்கும் ஆற்றலினைத் தந்தருள் செய்க!இறைவா, என் கண்கள் பொருள் நலம் பெற்றுப் பொலிவுறுதல் வேண்டும். ஒளிமிக்க கண்களாக விளக்கமுற வேண்டும். இறைவா, அருள் செய்க!

ஜனவரி 17


வாய் வழாதிருப்பின் வாழ்வு சிறந்திடும்


இறைவா, மறைகளை ஓதிய உத்தமனே! சொல்லாமல் சொல்லி உணர்த்திய தலைவா! என் வாய், பேசியே அலுத்துப் போயிற்று! இனியனவே கூறுக என்றது வள்ளுவம்!

என் வாய், இனிப்பு-கற்கண்டு சுவைக்கத் தவிக்கிறதே ஒழிய, இனிய சொற்களை வழங்க மறுக்கின்றது. சளசள என்ற ஒரே “அரட்டைக் கச்சேரியே” என் வாழ்க்கை மயமாகி விட்டது! வாய்ச் சவடால்களுக்குக் குறைச்சல் இல்லை. ஒரே ஆரவாரம்! பேசும் வாய்க்கு நீ அமைத்த தடைகள் பயன் இல்லை. இறைவா, இந்த வாயினால் விளைந்த கலவரம், படுகொலைகள், துன்ப நிகழ்வுகள் ஏராளம். இறைவா, என் வாய் மாறியாக வேண்டும்! பொருள் நிறைந்த சொற்களையே வழங்குதல் வேண்டும்!

வையகத்தை ஒன்று சேர்க்கும் சொற்களையே சொல்லுதல் வேண்டும். அறந்தழீஇய சொற்களையே மொழிதல் வேண்டும்! நின் பொருள்சேர் புகழையே கூறுதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! வாய் வழாது துணை செய்யின் என் வாழ்வு சிறக்கும், வையகம் மேம்பாடுறும்! இறைவா, அருள் செய்க!!. 

ஜனவரி 18.


வாய்மை நலம் தழுவிய வாழ்வினை அருள்க!


இறைவா! வாயில் பிறப்பது வாய்மை, வாய், சொல்லுவதற்காக உரியது அல்ல. வாய், உடலின் மற்ற உறுப்புகளுக்கும் கூட உணர்வினை வழங்கும் வாயிலாகும்.

எல்லா உறுப்புகளுக்கும் ஆசிரியன் போல விளங்கி நல்வாழ்க்கை நல்க வேண்டிய கடமை வாய்க்கு உண்டு!

உடலின் மேலாண்மைக்கும் வாயே பொறுப்பு. நாவடங்கினால் நோய் இல்லை; நாவடங்கினால் சமூகத்தில் கலவரம் இல்லை. வாய் இயற்றும் உண்பதற்குரிய பணி, ஒரு பகுதிப் பணியே யாம். வாய், பேசும் பணியும் செய்கிறது. சிரிப்பது ஒரோ வழி! முற்றிலும் தற்சார்பான நிலையில் பேசலாம். ஆனால், பெரும்பாலும் செவிக்குணவை வழங்கும் வினாக்களைத் தொடுப்பதே வாயின் முதற்பணி!

வாய், ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களைத் தொடுத்து ஆய்வுணர்வை வளர்க்க வேண்டும். அறிவு வினாக்களைத் தொடுத்து விளக்கம் பெறுவதே வாயின் தலையாய பணி. இறைவா, ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களைத் தொடுக்கக் கற்றுக் தந்து அருள் செய்க. இறைவா, என் வினாக்களுக்குரிய விடைகளைக் கூறி அறிவைப் புலப்படுத்தும் பணியையும் செய்ய நீயே அருள் செய்க வாய்மை நலம் தழுவிய வாழ்க்கையை அருள்க!

ஜனவரி 19


நின்னைப் போற்றும் வாழ்க்கையை அருள்க!


இறைவா, என் வாழ்க்கையைப் பொருளுடையதாகச் செய்ய வேண்டும் புண்ணியனே. என் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கைக்குப் பொருளாகி, முதலாகி நிற்கும்பேற்றினை அருள் செய்க!

பொருள் என்றால் குறுகிய நிலையில் கொச்சைப்படுத்திப் பணமே பொருள் என்று ஆக்கிய கொடுமையிலிருந்து இறைவா, என்னைக் காப்பாற்று! வாழ்க்கையை முழுமைப்படுத்தும் தகுதியுடைய அனைத்தும் பொருளே. செவி நுகர் கனிகளும் பொருளே! இறைவா, நீயே வாழ்க்கைக்குப் பொருள் அல்லவா? அதுவும் செம்பொருள் அல்லவா? நின்னைப் பெற்று வைத்த பொருள் நமக்கு ஆம் என்று வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்! இறைவா, அருள் செய்க! என் ஆன்மாவிற்கு அறிவினால் ஒளியூட்டும் கல்வியைப் பொருள் எனத் தந்தருள் செய்க.

இறைவா, என் வாழ்க்கையின் உடைமைப் பொருளாக, உன்னை எனக்குத் தந்தருள் செய்க. நீயே என் உடல், ஆவி, பொருள் அனைத்தும். நின்னைப் போற்றி என் வாழ்க்கையையும் பொருளுடைதாகச் செய்து கொள்ளும் பேற்றினைத் தந்தருள் செய்க!

ஜனவரி 20


புதுமை வேட்டல் தவமாகட்டும்


இறைவா! முன்னைப் பழமைக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்குப் பேர்த்தும் அப்பெற்றியதாய் விளங்கும் இறைவா, எனது வாழ்க்கை தேங்கிக் கிடக்கிறது. என் வாழ்க்கையில் மாற்றங்கள் இல்லை. இல்லை, மாற-மறுக்கிறேன். பழக்கம் தவிரப் பழகும் முனைப்பு இல்லை. இறைவா, என் கதி என்னாவது? நின் கருணை என்பால் படக்கூடாதா? விரைந்து அருள் செய்க! நீ, அடிபட்டுக் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டாய். தெருவில் நடந்தும் எய்த்து அலைந்தும் ஆரூரரை ஆட்கொண்ட அருளாள, என் பொருட்டு நீ அல்லற்பட வேண்டாம். எனக்குத் தண்டனை கொடு. காலனைக் காலால் உதைத்ததைப் போல என்னை உதைத்திடு, என் பிழையைத் திருத்து! பிழையெலாம் தவிரப் பணித்தருள் செய்க!

என் உள்ளம், மாற்றங்களை விரும்பத்தக்கதாக வளர அருள் செய்க! மாற்றங்கள் இல்லாதது அழிந்து போகும். நான் அழியத் திருவுள்ளமா? இறைவா, காப்பாற்று. நாள் தோறும் புதுமையை விரும்பி முயன்று நடத்தும் வாழ்க்கையை அருள் செய்க! புதுமை வேட்டலே எனது தவமாகட்டும். வளரும் செடிகளில் புதிய தளிர்கள்-அரும்புகள்! அதுபோல என் வாழ்க்கையில் புதிய எண்ணங்கள், புதிய புதிய முயற்சிகள் தோன்ற வேண்டும். இறைவா, அருள் செய்க!

ஜனவரி 21


வாழ்க்கை சிறக்க மகிழ்வு தேவை!


இறைவா, குமிண் சிரிப்பினையுடைய ஆடல் வல்லானே! வாழ்க்கை சிறக்க மகிழ்வு தேவை! மகிழ்ச்சி, கடைச் சரக்கன்று! மகிழ்ச்சி, புறத்தே உள்ள பொருள்களிலும் இல்லை! ஆம்! இறைவா! என் உள்ளம் மகிழ்தல் வேண்டும்! "என் மனம்தான் நரகத்தையும் படைக்கிறது! சொர்க்கத்தையும் படைக்கிறது"! இது கவிஞன் மில்டனின் வாக்கு. இறைவா! மகிழ்தல் என்பது உள்ளத்து நிறைவைப் பொறுத்தது! இன்றைய வாழ்வு நிகழ்வுகளின் தோல்விகள், வெற்றிகள், இழப்புகள்-சட்டங்கள் இவற்றைக் கணக்குப் பார்க்க வேண்டும். மறுநாள், தோல்விகளை வெற்றிகளாக்கும் முயற்சி தேவை! இழப்புகளை ஈட்டங்களாக்கும் முயற்சி தேவை!

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் மனவருத்தம், கவலை கொள்ளுதல் கூடாது. மனத்துன்பம் நிறைந்த வாழ்க்கை மோசமானது; அருவருக்கத்தக்கது. இறைவா, என்னை மன வருத்தத்திலிருந்து காப்பாற்று! என் மனக்கவலையை மாற்று. நான் மகிழ்ச்சியாக இருக்கும் வரத்தினைத் தா!

இன்றைய அறிவார்ந்த மகிழ்ச்சியே நாளைய முயற்சிக்கு வித்து! இறைவா, சிரித்து மகிழ்ந்து வாழும் வாழ்க்கையை அருள் செய்க! செடிகளில் மலர்கள் சிரித்து வாழ்கின்றன! எதிர் காலத்தை நினைந்து நினைந்து ஏங்குவதில்லை! என் வாழ்வும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும்! நான் மகிழ வேண்டும்! இறைவா, அருள் செய்க!

ஜனவரி 22


அதிர்ஷ்டம் ஒரு குருட்டுப் போக்கு!


இறைவா, இன்று காலை நாட்காட்டியைப் பார்த்தேன்! "அதிர்ஷ்ட நாள்" - என்றிருந்தது! இறைவா, நான் அதிர்ஷ்டத்தை நம்பத் தயாராக இல்லை! இறைவா! எனக்கு உன் கருணைதான் தேவை! நின்னருள் எனக்கு நரகத்தையே கொடுத்தாலும் நான் மறுக்க மாடடேன்! உவப்போடு ஏற்பேன்! நின் அருள் பெருக்கு! அதுவே என் அதிர்ஷ்டம் ! இறைவா, அதிர்ஷ்டம் ஒரு குருட்டுப் போக்கு! அதிர்ஷ்டம் பலருக்கும் பலவற்றைத் தருகிறது! ஆனால், யாருக்கும் மனநிறைவளிக்கத் தக்க வகையில் தருவதில்லை! அதனால் பயன் இல்லை.

இறைவா, நீயே எனக்கு அருள் செய்க! நான் வேண்டுவனவெல்லாம் ஒருங்கு ஈந்தருள் செய்க! பொன்வேண்டும் பொருள் வேண்டும் இன்பம் வேண்டும்! நின்னருள் வேண்டும்! உன்னை என்றும் மறவாமை வேண்டும்! நான் மறந்தாலும் நீ என்னை மறவாமை, வேண்டும்!

இறைவா, அருள் செய்க! பொன்னாய், மணியாய், பெண்ணாய் இருந்தருளி, போகத்தைத் துய்ப்பித்து அருள் செய்க! பின் துணையாயிருந்தும் என் நெஞ்சத்தைத் துறப்பித்தும் ஆட்கொண்டருள் செய்க!

ஜனவரி 23


உழைப்பால் வாழும் வாழ்க்கையை அருளுக!


இறைவா, நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்ளும் இறைவா! நீ, எனக்குச் சாட்சி! இறைவா, நீ என் மனத்துக்குச் சாட்சியாக இருக்கிறாய்! இறைவா! நான் பலவீனமடைந்து கொண்டே வருகிறேன்! அதனால் பயப்படுகிறேன்!

இறைவா, நான், என் பயத்தின் காரணமாக உன்னை அண்டிப் பிச்சை கேட்கிறேன்! விதி விலக்குக் கேட்கிறேன்! சலுகை கேட்கிறேன்! என்பால் இரக்கம் காட்டு என்று இறைஞ்சுகிறேன்! இறைவா, என்பால் இரக்கம் காட்டாதே! எனக்குச் சலுகைகள் வேண்டாம்! வாழ்வு உரிமைகளைத் தந்து அருள் செய்க! எனக்கு விதிவிலக்கு அளிக்காதே! நான் விதி-நெறிவழியே வாழ முயற்சி செய்வேன்!

சிறுதுாறல்களால் பயிர் வளர்ந்து விடாது! அது போல நான் சலுகையால் வளர்ந்து வாழ்ந்து விட முடியாது. எனக்கு உரிமைகளே வேண்டும். பயமற்ற வாழ்க்கையே வேண்டும்! நான் உழைத்தே உண்ண வேண்டும்!

நான் மனச்சாட்சி உணர்த்தும் வழியில் நடக்க வேண்டும்! அருள் செய்க! உரிமை நிறைந்த வாழ்க்கையை அருள் செய்க! உழைப்பால் வாழும் வாழ்க்கையை அருள் செய்க மனச்சாட்சியின் படி வாழும் நன்னெறியில் நிறுத்திடுக.

ஜனவரி 24


பணி செய்து கிடக்கும் பாங்கினை அருள்க!


இறைவா! உயிராவணம் இருந்து உற்று நோக்கி, உள்ளக் கிழியில் உரு எழுதியோர்க்கு அருளும் உத்தமனே! என் வாழ்க்கையில் உயிர் ஆவணம் இல்லை. நான் உயிருக்கு ஊதியம் தேடும் நிலையில் இல்லை. எனது உடம்பு என்னை ஆட்டிப் படைக்கிறது. உடம்புக்கு உணவும் மருந்தும் தேடுவதிலேயே பொழுது கழிகிறது. போதும் போதாதற்குக் காமம் வேறு இறைவா! ஏன் இந்த அவலநிலை! நான் எழுச்சி வசப்படுகிறேன்!

அப்பப்ப, ஒரே உணர்ச்சி மயம்! ஆனால் எனக்கு; என்னைப்பற்றி நான் எப்படி ஆளாக வேண்டும் என்ற கற்பனைகூட இல்லை! இறைவா, அதனால் எனக்கு இப்படியொரு கற்பனை செய்யக் கற்றுத் தா!

இறைவா, நான் இந்த கற்பனையில் திளைத்து என்னை உருவாக்கிக் கொள்ளும்படி அருள் செய்க! ஆம் இறைவா! எனக்கு நீ நாள்தோறும் படிக்காசு தருதல் வேண்டும். இது எனது கற்பனை! ஆம் இறைவா, நான் அப்பரடிகளைப் போல், கைத்திருத்தொண்டு செய்ய வேண்டும்! உழைப்பால் உருவாகும் பணிகள் செய்யவேண்டும்! திருக்கோயில் திருத்தொண்டு செய்ய வேண்டும்! தெருவெல்லாம் கூட்டித் துப்புரவு செய்ய வேண்டும்! இறைவா, நான் தொண்டனாக வாழ அருள் செய்க! பணி செய்து கிடக்கும் பாங்கினைத் தந்தருள் செய்க! படிக்காசும் அருளுக!

ஜனவரி 25


இறைவா, நீ என்னைக் கைவிடாதே


இறைவா, முப்புரம் எரித்த முதல்வா! என்னே உனது முரண்பட்ட திருவிளையாடல்! கருணைக் கடலாகவும் விளங்குகின்றனை! அதே போழ்து முப்புரத்தையும் எரித்துள்ளனை! ஆம், இறைவா, கருணையும் தேவை! அதே போழ்து உறுதியும் தேவை! கருணை மறவர்களாக வாழ்தல் வேண்டும்!

இறைவா, எனது அன்பு உனது அருளைக் கடலாக்குகிறது! எனது அடாதநிலை உன்னைச் சினப்படுத்தி விடுகிறது! ஆணவத்தின் உருவமாக நின்று நின்னை மதிக்காத நிலை, பொய் மாய மயக்கம், செயல் வீரம் ஆகியன என்னைத் தலையால் நடக்கச் செய்திடும் போது நீ என்னை ஒறுத்தாளுகின்றனை! இறைவா, நீ எனக்குத் தரும் தண்டனைகள் என்னை வாழ்விப்பனவேயாம்! என்னைப் புளியம் வளாரினால் அடித்தாலும் நான் ஏற்பேன்! உடன்பட்டே நின்று நினக்கு ஆட்செய்வேன்!

ஆனால், இறைவா! ஒரு வேண்டுகோள்! நீ பாராமுகமாக மட்டும் இருந்து விடாதே! அன்னியனைப் போல நோக்காதே! நீ என்னை உடைமையாகக் கொண்டவன்; நான் உனக்குப் பணி செய்பவன்! உன்னையே நினைந்து நினைந்து ஆவி கழிக்கும் விருப்பமுடையவன்! நீ என்னைக் கை விடாதே! நீ என்னைத் துடைத்தாலும் போகேன்! உனக்குத் தொழும்பாய் ஆட்பட்டிருப்பதே என் விருப்பம்! ஏற்றுக் கொள்க! அருள் செய்க!

ஜனவரி 26


சிறியேன் செய்த பிழைகளைப் பொறுத்து ஆட்கொள்!

இறைவா, நினைந்து உருகும் அடியாரை ஆட் கொள்ளும் இறைவா! நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டருளும் என் தலைவா! நான் உன்னை நினைக் கிறேன், என்று கூறவும் வேண்டுமோ? இல்லை, இறைவா! நான் உன்னை நினைக்கவில்லை! நான் உன்னை மறந்திருந்தால்தானே நினைக்க வேண்டும்! தாயை மகவு மறந்த துண்டா? உடம்பை உயிர் மறந்ததுண்டா?

இறைவா, அதுபோல் நான் உன்னை மறந்ததே இல்லை! ஆதலால் நினைக்கவில்லை! நீ, என்னை நீங்காமல் இருந்து அருள் செய்கின்றனை! ஆனால் நினைப்பு பயன் தரவில்லை! இடையில் என் உழைப்பெல்லாம் வீணடிக்கப் பெறுகிறது. நில்லாதனவற்றையெல்லாம் நிலையாயின என்று கருதித் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்! ஆனால், புறத்தே உன்னைத் தேடியதில் ஒன்றும் குறைவில்லை! நீ நிறைந்திருக்கும் என் உள்ளத்தே தேட மறந்தேன். என் இதயத்தை நான் உன்னிடம் பூரணமாக ஒப்படைக்கவில்லை! இறைவா, என்னைக் காப்பாற்று!

நின்னையே நினைந்து நினைந்து என் ஆவிகழியும் அருட்பெரும் வாழ்வினை அருள் செய்க! புறத்தே போகாமல் தடுத்தாட் கொள்! சிறியேன் செய்த பிழைகளைப் பொறுத்தாட் கொள்க!

ஜனவரி 27


அன்பில் கசிந்துருகும் நிலையை அருள் செய்க!


இறைவா! வாழ்வாங்கு வாழ்வதும் ஒரு கலையே! இறைவா! வாழ்வாங்கு வாழும் கலையைத் கற்றுத்தா! இனிய சொற்களைப் பேசுதல் எளிமையான காரியமா? மற்றவர்களை மதித்தல் எளிதில் வரக்கூடிய பழக்கமா? மற்றவர்களுடைய அவமதிப்பைத் தாங்கிக்கொண்டு அன்பு செய்யும் ஆற்றல் எளிதில் வரக்கூடியதா? இறைவா, இந்த அரிய வாழ்க்கைக் கலைகள், வாழ்க்கையில் வந்து பொருந்த அருள் செய்யக்கூடாதா? இறைவா, இவை கற்றுத் தருவனவும் இறக்குமதி செய்வனவும் அல்ல என்கிறாயோ? இறைவா, இவற்றை வாழ்க்கையில் முயற்சி செய்து அடைய வேண்டும்! மனம் குழைந்தால் இனிய சொற்கள் தோன்றும். இரும்பு மனத்தை நாள்தோறும் அன்பின் நனைத்துக் குழைத்துப் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை அருள் செய்க!

இனிய மனத்தில்-குழைந்த உள்ளத்தில் இனிய சொல் தோன்றும்! அன்புக்குப் பகையான தற்செருக்கு, தன்னல நயப்பு வேண்டவே வேண்டாம்! எளியமனம், தாழ்வெனும் தன்மை, பணிவு எனும் பண்பு-இவையே என் வாழ்க்கையின் அணிகலன்களாக அமைந்து விளங்க அருள் செய்க!

எப்போதும் என்மனம் அன்பில் கசிந்துருகும் நிலையை அருள் செய்க. எனது அன்பே! அருள் செய்க.

ஜனவரி 28


நின் பணியே செய்ய அருள் செய்க!


இறைவா! ஞாலமே! விசும்பே! இவை வந்து போம் காலமே! "காலம் மாறிவிட்டது. காலம் கெட்டுவிட்டது! காலம் கலி காலம்!” என்றெல்லாம் பேசுவது வாழத்தெரியாதவர்களின் புலம்பல்! ஆசைகள் நேராகின் அனைத்தும் நேராகும்! இன்ப நேர்வு ஒருநிலையுடையதாக அமைதல் வேண்டும்! இன்பமேகூட பலமுனையினதாக இருப்பின் இன்னல்களே விளையும். எனக்கு இன்பமளிப்பவர்கள் என் நோக்கத்திற்கு இசைந்தவர்களாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் இன்பம் முறைபிறழாது. என்னை வாழ்விக்கும் தலைவனுக்கே ஆட்செய்ய வேண்டும். கொச்சைத்தனமான ஆசைகளுக்கு ஆட்பட்டு அடிமையாதல் கூடாது! இறைவா, என் இன்ப விழைவுகள் எனக்கு வேண்டியவரைச் சுற்றியே சுழலட்டும்!

இறைவா, என் கைகள் உன் பணியே செய்வதாக! என் கண்கள் நின் பணியே செய்க! இறைவா இந்த வரங்களை எனக்குத் தா! அதன்பிறகு காலமும் சூழ்நிலையும் எனக்கு ஏவல் செய்யும்! ஞாயிறே கூடத் திசைமாறித் தோன்றினாலும் எனக்குக் கவலை இல்லை! எனக்கு இன்பம் விளைவிப்பவர் உனக்கும் ஆட்பட்டவராக இருத்தல் வேண்டும்! இறைவா, அருள் செய்க! என் கைகள் உனது பணிகளையே செய்திடுதல் வேண்டும்! என் கண்கள் உனது திருவிழாக் கோலத்தையே காணுதல் வேண்டும்! இறைவா, அருள் செய்க!

ஜனவரி 29


உயிரின் தரத்தை உயர்த்தி அருள்க!


இறைவா, அடித்து அடித்து அக்காரம் தீற்றும் என் துணைவா! நாடகத்தால் உன்னடியார் போல நடிக்கிறேன்! நடிப்பிலாவது உண்மை உள்ளதா? இல்லையே! "நான், எனது” என்ற நச்சுப் பாம்புகள் என்னைக் கடித்துவிட்டன! என் உடல் முழுதும் நஞ்சுபரவி, அதே நஞ்சை என்னைச் சுற்றியுள்ள பொருள்களின் மீதும் பரவ விடுகிறேன்! எங்குப் பார்த்தாலும் "நான்” என்ற வெறியாட்டம்! என் நிலம், என் வீடு, என் கோயில் என்ற வெறியாட்டம்!

இறைவா, இந்த நஞ்சனைய வாழ்க்கையை எப்போது மாற்றுவது! இன்றா? நேற்றா? பிறப்புத் தொடங்கிய காலந் தொட்டுச் செய்தவினைகள் என்னை ஆட்கொண்டுள்ளன! ஆடுகிறேன்! பாடுகிறேன்! இறைவா, இந்தப் படுமோசமான நிலை போதும்! இனி படமுடியாது துயரம்! கருணை காட்டுக! நான் நடிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும்! "நான்", "எனது" என்ற நச்சுப் பாம்புகளிடமிருந்து விடுதலை பெற வேண்டும்! முன்னை வினையின் முடிச்சுகளை அவிழ்த்திடுதல் வேண்டும்! இறைவா, இந்த வரங்களை அருள் செய்க! என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் அடி! என் உயிரின் தரத்தை உயர்த்தி அருள் செய்க!

ஜனவரி 30


அருள் நெறி வாழ்க்கையினை அருளுக!


இறைவா, அண்ணல் காந்தியடிகள் பிறந்தார்! இறந்தார் என்று கூறலாமா? காந்தியடிகள் இறந்து விட்டார் என்பது வரலாற்றுப் போக்கில் சரி! ஆனால் அவர் இறக்கவில்லை! அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்! ஆம்! மானுட சாதிக்குச் சுதந்தர உணர்வு இருக்கும்வரையில் காந்தியடிகள் வாழ்வார். அகிம்சை அதாவது யாரையும் துன்புறுத்தாது வாழ்தல் என்ற உயரிய கொள்கை, உலகம் தழுவிய கொள்கையாக விளங்கும் வரையிலும் வாழ்வார். சத்தியம்- உண்மை நிலவும் காலம் வரையிலும் வாழ்வார். இறைவா, எனக்கும் ஆசை! நான் மனிதசமுதாய வரலாற்றில் இழுத்தெறியப்படக் கூடாது! நான் அடுத்த தலைமுறையினருக்குக் "குருபூசை", "திதிப்" பொருளாக மட்டும் போய் விடக்கூடாது!

நான், மற்றவர் மறவா வண்ணம் என்றும் நிலைத்து வாழ வேண்டும். அதற்குரிய விலையாகிய நன்மையை எண்ணுதல் வேண்டும்; நன்மையைச் செய்தல் வேண்டும். ஓயாது உழைத்த மனிதகுலத்துக்குரிய நன்மையைச் செய்தல் வேண்டும். அதற்கு நானே நன்மையின் மொத்த வடிவமாக மாறி ஒழுகுதல் வேண்டும். நன்மைக்கு வரும் இடையூறுகளை நான் தாங்கிக் கொண்டு நன்மையைக் காப்பாற்ற வேண்டும்! இறைவா, இந்த நன்மை பெருக அருள்நெறி சார்ந்த வாழ்க்கையை அருள் செய்க! 



ஜனவரி 31


அன்பே, அன்பே என்று அரற்றி அழ ஆசைப்படுகிறேன்!


இறைவா! கண்ணப்பர் அன்பினை ஆரத்துய்த்த அண்ணலே! கண்ணப்பர் கண்களை ஏற்று உகந்த தலைவனே! ஆசாரம் பிழைத்ததற்காகக் கண்களை ஏற்று உகந்தாயோ? அல்லது உன் தேவைக்கு உகந்தாயா? அல்லது கண்ணப்பரின் அன்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்காக உகந்தாயா? இறைவா, உனக்கு ஏது ஆசாரம்? உனக்கு உரிய ஒரே ஆசாரம் அன்பேதான்!

இன்று எங்குப் பார்த்தாலும் வேதம், ஆகமம், சாத்திரங்களின் பெயரால் பொய்யான ஆசாரங்கள் அரங்கேறுகின்றன! ஆசாரத்தின் மறைவில் சாதிமுறைகள் ஆட்சி செய்கின்றன! இறைவா! நான் உனக்கு ஆசாரபூசை பண்ணேன்! யாதொரு சடங்கும் செய்யேன்! இறைவா, என்னைச் சிங்காரித்து என் அழகைக் காணாமல் உன்னைச் சிங்காரித்து உன் அழகைக்காண ஆசைப்படுகிறேன்!

எனக்கு நீ இந்த வரத்தினைத் தந்தருள்செய்க! "என்னுடைய அன்பே! அன்பே!” என்று அரற்றி அழ ஆசைப்படுகிறேன்! ஊனெலாம் நின்றுருக அழவேண்டும்! அன்பினில் விளைந்த ஆரமுதே, மாணிக்க வாசகரிடம் பெற்ற அன்புக் கடலில் ஒரு திவலையைத் தந்தருள் செய்க கண்ணப்பரின் அன்பில் ஒரு பகுதியை எனக்கும் அளித்தருள் செய்யும்படி கண்ணப்பருக்குப் பரிந்துரை செய்து திருமுகம் கொடுத்தருள் செய்க! அன்பிலே நின்னைக் காண ஆசைப்பட்டேன்! அருள் செய்க!