குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/பிப்ரவரி
இறைவா! உன்னைப் பற்றிப்பலர் புகழ்ந்து கூறியுள்ளனர். கூர்ந்து கவனித்தால் அந்தப் புகழ்ச்சியனைத்தும் உண்மைதானா என்ற ஐயம் தோன்றுகிறது! சில மனிதர்களே போதும் உன்னுடைய தகுதியின்மையை விளக்க! சிலரை நீ உண்ணவும் உறங்கவும் என்றே படைத்தாயா? அவர்களிடம் உன் அறிவுரைகள்-உபதேசங்களை விட பரம்பரையாக வந்த குணத்தின் ஆற்றலே கூடுதலாக இருக்கிறது! அவ்வளவு தான்! பழைய பழக்கப் பைத்தியம் திடீர் என்று தெளியாதே! மெள்ள மெள்ளத்தான் தெளியும்! ஆனால், அதுவரையில் உலகம் காத்திருக்குமா? காத்திருக்காது! இப்பிறப்பை நான் முழுதாக வாழவே ஆசைப்படுகிறேன். அதுவரையில் அந்தக் காலனை ஒதுங்கி இருக்கச் சொல்! நான் விரைந்து முன்னேற முயற்சி செய்கின்றேன்! இறைவா! என் ஆசைகள் கூட உன்வழியில் தான். பேச ஆசைப்படுவதில்லை; கேட்கவே ஆசைப்படுகிறேன்! விளம்பரம் விரும்பவில்லை; வேலைகளையே விரும்புகின்றேன்! ஓய்ந்திருக்க விரும்பவில்லை! ஓயாது உழைக்கவே விரும்புகிறேன்! சண்டை சச்சரவுகளில் விருப்பம் இல்லை; சமாதானத்தை விரும்புகின்றேன்! ஆதலால் இறைவா! என்னை நம்பு! உன் புகழ் என்னால் குறையாது! வளரும்! ஏன்? உன் வேலைகளில் பங்கு பெறுவேன். இது உறுதி.
இறைவா, என்னுடைய மனம் கூட்டாட்சிக்கு ஒத்து வர மறுக்கிறது. நான் என் மனத்தினைக் கெஞ்சிக் கேட்டு விட்டேன். மனமே, புத்தியுடன் கலந்து ஆலோசனை செய். சித்தத்துடன் சேர்ந்துபேசி முடிவு செய் என்றால் மனம் மறுக்கிறது. புத்தியோ மனத்தை மேவ முடிவதில்லை. மனம் முன்பே ஐம்பொறிகளைத் தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. ஆதலால் புத்தியில்லாமல் மனம் போன போக்கில் ஊரைச் சுற்றி ஏய்த்துக் களைத்துப் போனேன். இறைவா, என்னை மன்னித்துக் கொள். மனத்தினை அடக்கியே தீர்வது என்று முடிவு செய்துவிட்டேன். முதலில் மனத்துக்குத் துணையாக இருக்கும் பொறிகளுக்கு இரை கொடுப்பதில்லை என்று உறுதி எடுத்துள்ளேன். உடலை வருத்தினால், மனம் அடங்கத்தானே செய்யும். இந்த மனம், வேலையில்லாத நேரத்தில்தான் வீண் வேலை செய்கிறது. ஆதலால் ஓயாது ஒழியாது மனத்துக்கு வேலை பொறிகளுக்குக் குறிப்பாக வாய்க்கு ருசியாகத் தீனி கொடுப்பதில்லை என்பது எனது முடிபு. எல்லாம் நினைப்பு, முடிபு. ஆனால், உன் துணை இல்லாமல் என்ன சாதித்துவிட முடியும். இறைவா, துணை செய். என்னுடனேயே இருந்தருள்செய். மனம் திருந்தி விட்டால் மண்ணில் சொர்க்கம்.
இறைவா! தவறுகளும், குற்றங்களும் பாவங்களாகி விடுமா? இவைகளை எல்லாம் நீ பாவங்கள் என்று கணக்கெடுத்துத் தண்டனை கொடுப்பாயா?
நான்தோறும் எண்ணற்ற தவறுகளைச் செய்கிறேன். இறைவா, என்னிடம் உள்ள குற்றங்களைப் பட்டியல் போட்டால் கணக்கில் அடங்கா. என்நிலை என்ன? நான் தவறு செய்கிறேன். ஆனால், நானாகச் செய்ய வில்லையே. என்னைச் சுற்றிவரும் சமுதாய அமைப்புமுறை என்னைத் தவறுகள் செய்ய நிர்ப்பந்தப்படுத்துகிறதே. இறைவா, நான் என்ன செய்வது? நான் நானாக வாழ இன்றைய சமுதாயம் அனுமதிக்கவில்லையே. இன்று முறையாக வாழ வேண்டுமானால்-ஏதாவது சில நல்ல காரியங்கள் செய்ய வேண்டுமானால் கூட, தவறு செய்யாமல் செய்ய முடியாது போலிருக்கிறதே. இதுதான் இன்றைய சமுதாயநிலை. இன்று உண்மை ஏற்கப்பெறமாட்டாது போலும், பொய்ம்மைக்கே வரவேற்பா? இந்தச் சூழ்நிலையில் குற்றங்களும் தவறுகளும் இல்லாமல் வாழவே முடியாதா? ஆம் இறைவா! இதுதான், இன்றைய சமுதாய அமைப்பு. நானும் உலகத்தோடு ஒட்டிச் செல்கிறேன். ஆனால் ஒன்று இறைவா! நான் யாருக்கும் தீமை செய்ததில்லை. செய்ய நினைத்ததும் இல்லை. இறைவா! எல்லாருக்கும் நன்மை செய்வதே என் மதம்!
பிப்ரவரி 4
இறைவா, உண்மையைச் சொல். உனக்கும் எனக்கும் என்ன உறவு? நீ எனக்குத் தந்ததெல்லாம் தண்டனை தானே! இறைவா, பசிக்கிற வயிறு ஏன்? பருவத்தில் தோன்றும் காதற்பசி ஏன்? இவையிரண்டும் இல்லாது போனால் நான் சுதந்தரமான பிறவி. இறைவா, என்ன சொல்கிறாய்? உண்மை தானே? இயங்காதவையெல்லாம் அழியும்! நீ ஓர் இயக்கம் மட்டுமல்ல; இயக்குபவனுமாவாய். இயக்கத்தின் அடையாளமே பசிதானே! நன்றாகப் பசியுள்ள உடல், நல்லுடல். பசித்து உண்பவனே யோகி. மானிடா, உன் இயக்கம் வெறும் வறட்சித் தன்மையுடைய இயக்கமாகிவிடக் கூடாது. அதில் அன்பு, காதல், கலை, அழகுணர்வு அனைத்தும் இருக்க வேண்டுமல்லவா?
அதனாலேதான் காதற்பசி! இது மட்டுமா? மானிடம் வளர வேண்டும். மேலும் மேலும் தொடர் ஓட்டமாகச் சிறந்து வளர வேண்டும். மானிடத்தின் வழிமுறையைப் பராமரிக்க வேண்டும். அதனாலும் காதற்பசி தேவை! இறைவா, உன் செயலில் தவறில்லை. எனது இயலாமையை மறைத்துக் கொள்ள முயலுகிறேன். வறட்சியான சித்தாந்தங்களைப் படைத்து உலாவ விடுகிறேன். இவையெல்லாம் நின் சித்தத்திற்கு முரண். இனி இயற்கையோடிசைந்த வாழ்வே அற வாழ்வெனக் கொண்டு வாழ்வேன்.
பிப்ரவரி 5
இறைவா! முப்புரம் எரித்த முதல்வா! இன்று என்னைக் கடுமையான சினம் ஆட்கொண்டுவிட்டது. இறைவா, கோபம் சண்டாள குணம் என்கின்றனர். ஆனால் கோபத்தைத் தவிர்க்கவே முடியவில்லை. ஏன் இறைவா, நீ, மூண்ட சினத்தால் முப்புரம் எரிக்க வில்லையா? காமனை எரித்துச் சுடவில்லையா? காலனைக் காலால் உதைக்க வில்லையா? இறைவா, உனக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? அப்படியா இறைவா! முப்புரத்தை நீ எரிக்க வில்லையா? அது அறிஞர்களின் கற்பனையா? ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மூன்று தீமைகளைத்தான் சுட்டெரித்தனையா? இந்த மூன்றும் சுட்டெரிக்கத் தக்கனவே! அவற்றுள்ளும் ஆணவம் மிகவும் ஆபத்தானது. தன் முனைப்பிலேயே-எப்போதும் குடிகாரனைப் போல மயக்க நிலையிலேயே ஆழ்த்துவது. யார் மாட்டும் அன்பு, பணிவு காட்ட அனுமதிக்காது. எல்லாம் தனக்கே எனக்கருதும்; அறியாமையின் மொத்த வடிவம், அறிந்தது போலக் காட்டும். இந்தப் பொல்லாத ஆணவம் கெட்டாலே அனைத்தும் நன்றாக நடக்கும். இறைவா, உன் கோபம் ஆணவத்தைச் சுட்டெரித்த கோபம். அதுவும் என் ஆணவத்தைச் சுட்டெ ரித்த கோபம்! நின் கோபம் வளர்க! வாழ்க!
ஆனால், என் கோபமும் முற்றாகக் கெட்டவர்கள் மீது அல்ல. நல்லவர்கள், உழைப்பாளிகள், முயற்சி செய்யாத சாதாரண மக்கள் மீது! இது நல்லதல்ல. மன்னித்துக் கொள். கோபம் அற்ற குணம் நிறைந்த வாழ்க்கையை அருள் செய்க!
பிப்ரவரி 6
ஆற்றலைத் தா!
இறைவா, பழநியில் ஆண்டிக் கோலத்தில் நிற்கிறாய்! இறைவா, இஃதென்ன திருக்கோலம். நின் திருக்கோலம் துறவை நினைவூட்டுகிறதா? அல்லது ஆள்பவன்-ஆண்டவன் -ஆண்டி என்ற நினைவைத் தருகிறதா? ஆம். இறைவா! எனக்கும் ஆளத் தெரியும். நிலத்தை ஆள்வேன். ஆனால் இறைவா என்னை மட்டும் நான் ஆண்டு கொள்ள மாட்டேன். மிகமிகச் சாதாரணமான என் பொறிகள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. ஏன்? சோம்பலையும் தூக்கத்தையும் கூட நான் வென்று ஆண்டதில்லை, சுக போதையினால் அவற்றை வெல்ல நினைத்ததும் இல்லை!
இறைவா, தன்னை ஆய்பவன் ஆண்டி நீ ஆள்பவனாக, ஆண்டவனாக, ஆண்டியாக நிற்கிறாய். நின்திருக்கோலம் மானுடத்திற்கு மருந்து. ஆம், ஆணவப்பேய் பிடித்து அலையும் மானுடத்திற்கு நீயே மருந்து பொருள்கள் வாழ்க்கைக்காகப் பொறிகள் துய்த்து மகிழ்ந்து இன்புற்று வாழ்வதற்காக, ஆனால் இவை வரம்பு கடக்கும் பொழுது வாழ்க்கை, வாழ்க்கையாக அமைவதில்லை. அதனை நின் திருக்கோலத்தில் காண்கிறேன். இறைவா, என் பொறிகளின் மீது ஆணை செலுத்தும் ஆற்றலைத்தா! அருள் செய்!
பிப்ரவரி 7
இறைவா! வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுவதும் தருவோய் நீ இறைவா, நான் வேண்டுவன வெல்லாம் அருள் பாலிக்கவில்லையே. ஏன் இறைவா? என்ன சொல்கிறாய்? நான் வேண்டுவனவெல்லாம் அப்படியே கொடுத்தால் நான் பைத்தியக்கார மருத்துவமனைக்குப் போய்விடுவேனோ? இந்த உலகத்தில் ஏன்? என்னைப் பற்றி இப்படி ஒரு மதிப்பீடு வைத்திருக்கிறாய். இறைவா, ஆம் இன்னும் நான் சிறு பிள்ளைதான். நான் என்னைப்பற்றி அறியேன். இருகை யானையைப்போல் தான் உள்ளேன்.
இறைவா, நான் விரும்புவனவற்றை அருள் செய்க என்பது என் பிரார்த்தனையல்ல. நான் பெறுவதற்குத் தகுதியுடையவற்றைப் பெற அருள் செய்க! ஆனால் இறைவா, ஒரு நிபந்தனை. என் தகுதி குறைவாக இருந்தால் முதலில் தகுதியை எனக்கு அருள் செய்க! என்னை ஆளாக்கிடுக. கேளாதனவெல்லாம் கேட்க கருணை பாலித்திடுக. காட்டாதனவெல்லாம் காட்டிடுக. என் குணம் மூன்றையும் திருத்தி, சாத்துவிகமே யாக்கிடுக. நான் பெற விரும்புவதெல்லாம் தகுதியே. உய்யும் நெறியே! ஞானமே! இறைவா அருள் செய்க! நீ காலந்தாழ்த்தினாலும் பரவாயில்லை. என்னைத் தகுதியுடையவனாக்கிடுக. என் அறிவைப் புலமாக்கி ஞான ஏர் உழுதிடுக. இன்னே அருள் செய்க!
பிப்ரவரி 8
இறைவா, உண்மையைச் சொல். உன் பெயர் என்ன? உருவம் என்ன? இறைவா, நீ உண்மையை உணர்த்தி விட்டால் இந்த உலகில் வாழும் மதத்தலைவர்கள், புரோகிதர்கள் என்னை அலைக்கழிக்க முடியாது. இறைவா, என்மீது கருணை காட்டு! உன்னை அறியும் அறிவைத் தா. இறைவா, என்ன சொல்கிறாய்? எல்லாம் நீ தானா?
இந்த ஏழை உயிர்கள் விரும்பி அழைக்கும் பெயரே, உன் பெயர். இறைவா, இந்த ஏழைமக்கள் அன்பினால் அரற்றி அழைக்கும் பெயர்களே உன் பெயர்கள் அப்படியா? அப்படியானால் எந்த மதம் உன் மதம்? இறைவா..! இறைவா..! என்ன சொல்கிறாய்! மதங்களே உனக்குப் பிடிக்காதா? ஆம், இறைவா! உண்மைதான். மதமென்னும் பேய் மக்களைப் பிடித்தாட்டும் பொழுதுதான் அன்பை இழக்கின்றனர்; உறவுகளைப் பகையாக்கிக் கொள்கின்றனர். ஒருமைப்பாட்டை இழக்கின்றனர். உன்னை மறக்கின்றனர். இறைவா, என்னைக் காப்பாற்று. ஆம் இறைவா! மதமெனும் சுழலில் சிக்கித் தவிக்காமல் நின்னையே நினைத்து நினைத்து வாழ்ந்திடும் அருளினைச் செய்!
இறைவா! இது என்ன நின் திருவிளையாட்டா? அல்லது உலகியலின் போக்கில் ஒரு காலத்தில் சராசரி மனிதர் செய்வதற்கு நாணிய-ஒளிவு மறைவாகச் செய்த தவறுகள் இன்று ஒழுக்கங்களாக மாறிவிட்டனவே. காசின்றிக் காரியம் எதுவுமே நடக்காது என்ற நிலை நியதியாகிவிட்டதே. பொய்ம்மை அரங்கேறுகிறதே. சிறுமையே எங்கும் சீராகப் போற்றப்படுகிறதே. இது என்ன இறைவா! நான் என்ன செய்ய? இறைவா, என்னைக் காப்பாற்று. பேராசையியின்றும் காப்பாற்று. அதிகாரத் திமிரினின்றும் காப்பாற்று. எல்லா உயிர்களிடத்தும் அன்பாகப் பழகும் வரம் கொடு!
அன்பெனும் பிடியுள் அகப்படும் ஆண்டவனே! என் முகம் பார். நான் ஓர் ஏழை நாளும் ஐம்பொறிகளுக்கும் ஐம்புலன்களுக்கும் ஏவல் செய்து பிழைப்பு நடத்தும் ஏழை. என்னைக் காப்பாற்று. நான் புண்ணிய வாழ்க்கை நடத்த வேண்டும். ஞானம் பெறுதல் வேண்டும். எப்போதும் நின் சந்நிதியிலேயே தவம் கிடக்க வேண்டும். இறைவா, இந்த வரத்தைக் கொடு! இறைவா, என்னைக் காப்பாற்று.
பிப்ரவரி 10
இறைவா, இறைவா! ஏன் நினது அருள் மன்னுயிர்த் தொகுதியின் மேல் பூரணமாகப் பாலிக்கப்படவில்லை? நாங்கள் உனக்குக் கட்டிய ஆலயங்களுக்குக் குறைவில்லையே! ஏன்? கொட்டு முழக்குடன் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் ஏராளமாக நடத்துகின்றோமே. உன்னைப் பற்றியே சித்திரித்துக் கொண்டிருப்பவரின் எண்ணிக்கை அற்பமல்லவே. இறைவா.
இறைவா, நின்கோலங்களும் அடையாளங்களும் ஆயிரம் ஆயிரமாக வளர்ந்துள்ளனவே! இறைவா, இவற்றால் என்ன பயன் என்றா கேட்கிறாய்? இறைவா, உனக்கு மனக் கோயில் வேண்டும். பின் ஆற்றல் மிக்க அன்பால் உன்னை அழைக்க வேண்டும். இறைவா, இஃதென்ன சோதனை. என்மனம் என்வசம்கூட இல்லையே. என் மனம் பொறிகளின் வழியே சுற்றித் திரிகின்றதே. அன்பு, எதன்எதன் மீதோ செல்கிறது. இறைவா, என்னிடம் அன்பே இல்லையா? ஆசைதான் இருக்கிறதா? ஆம் இறைவா, ஆசைப்படுவது தவறா? தவறல்ல. ஆனால் ஆசை அன்பாக மாற வேண்டும். ஆசை தற்சார்புடையது. அன்பு பிறர்நலச்சார்புடையது; தியாகத் தன்மையுடையது. இறைவா, இன்றுமுதல் உனக்கு என் மனக்கோயிலில் இடமுண்டு. இல்லை, நீ மட்டுமேதான் என் மனக்கோயிலில் இருப்பாய். ஆசையை விட்டேன், அன்பால் ஆட்பட்டேன் இறைவா, காத்தருள்க!
பிப்ரவரி 11
இறைவா! நீ கருணையால் அளித்த வாய்ப்புகளை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முயன்றும் முடியவில்லை. ஆனால் ஆசை மட்டும் குறையவில்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய கருணையை வேண்ட நின் சந்நிதியில் வந்து நிற்கிறேன். மன்னித்துக்கொள். அருள் பாலித்திடுக! வாய்ப்புகள் எளிதில் வருவன அல்ல.
ஆனால் என் வாழ்க்கையில் நின் கருணையால் நான் பெற்றவை அளப்பில! “என்னால் அறியாப்பதம் தந்தாய், உன்னால் ஒன்றும் குறை இல்லை! ஆனால் ஆண்டுக் கணக்கில் மூப்பு உடையேன். தன்மையால் பேதமை உடையேன். தங்கக் கிண்ணத்தைக் கொடுத்து, விளையாடுதற்கு மரப்பாச்சி வாங்கிய குழந்தையிலும் பேதமையுடையவன் யான்! இறைவா, அருள் செய்க! பேதமை நீக்கி ஆட்கொண்டருள்க! நின் அருமை அறிந்து போற்றும் பெற்றிமையை அருள் செய்க! நான் இப்பிறப்பிலேயே பெரு வாழ்வு வாழ்ந்திட அருள் செய்க! நின் அருள் போற்றியே வாழ்ந்திடுவேன். அருள் செய்க!
பிப்ரவரி 12
இறைவா! நீ எவ்வளவு கருணை கொண்டு என்னை வாழ்விக்க, கற்சிலையிலும் எழுந்தருளியிருக்கிறாய். உன்னைக் காணும் பொழுதெல்லாம் உன் திருவுருவத்தை ஆரத்தழுவி உச்சிமோந்து அழவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது.
ஆனால், நீ கருவறையிலன்றோ சிறைப்பட்டு விட்டாய். என்ன செய்ய? கண்ணப்பர் காலத்தில் இல்லாத தடைகள் தோன்றிவிட்டனவே. கடவுளே! ஏன் இந்த நிலை; கதவைத் திற, வெளியே வா என்னைத் தழுவி முத்தமிடு. வாழ்த்து. இறைவா! என்னை வளர்க்க இயலாத "திருக்கோயில் கொண்டருளும் நிலையை" விரும்புகின்றாயே. சத்தியமாக நீ விரும்பமாட்டாய். குறிக்கோள் இல்லாத என் வாழ்க்கையைக் குறிக்கோள் உடையதாக மாற்றுக என் வாழ்க்கையே நினக்கு வழிபாடு, இறைவா, அருள் செய்க!
பிப்ரவரி 13
இறைவா! உன்னுடைய எளிமை, பொதுமை, கருணை அளப்பரியன. ஆயினும் என்ன பயன்? வேலியே போட்டுப் பழகும் மானிட சாதிக்குள் சிக்கிவிட்டாய். அவர்கள் உனக்குச் சாதி, குலம், இனம், மொழி, சமயம் ஆகிய வேலிகளை வைத்து நான் எளிதில் காணமுடியாமல் தடுத்து விட்டார்களே !
இறைவா, ஏன் இந்த நிலை? என்னால் வேலிகளைக் கடந்து வரமுடியவில்லை. வந்தாலும் அவர்கள் விட மாட்டார்கள்! நீயே வேலியைத் தாண்டி வெளியே வா. உன்னைப் பார்த்து ஒரு அழுகை அழுவதற்குச் சந்தர்ப்பம் கொடு. அன்று ஆரூரருக்காக நீ தெருவில் நடக்கவில்லையா? மாணிக்கவாசகரின் பண்சுமந்த பாடலுக்காக நீ மண் சுமக்க வில்லையா? இன்று ஏன் என்னை அந்நியனைப்போல நடத்துகிறாய்? நான் வெளியே என்றால் நீ திருக்கோயிலின் உள்ளே இருக்க என்ன நியாயம்?
இறைவா, என் மனம் நீ இருக்கத்தக்க திருக்கோயில், என் மனத்தைக் கோயிலாக்கியுள்ளேன். இறைவா விரைந்து எழுந்தருள்க! பொய்யான ஆசாரங்களைக் கடந்து என்னை ஆட்கொள்க!
பிப்ரவரி 14
இறைவா! உன்னோடும் நான் "கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறேனே. உனக்குத் தெரியாதது என்ன? இறைவா! நின் அன்பு நெறியை நாங்கள் துறந்தோம். அன்றே, நீ எங்களுக்கு அந்நியனாகிவிட்டாய். அன்பும்-ஒப்புரவும் என்னிடத்தில் நீ காண விரும்பிய வாழ்க்கைப் பண்புகள். இவைகளை நான் கனவிலும் கண்டதில்லை. மாறாக - பகை 'நான்', 'எனது' என்ற உணர்வின் பாற்பட்ட வெறிச் செயல்கள். நின் திருவுள்ளம் நொந்தது. நீ என்னையும்-என் பொய்யையும் புறத்தே நிறுத்திவிட்டுப் போய் விட்டனை. நீ என்றோ எங்களைவிட்டு நீங்கிவிட்டாய். கற் சிலைகள் மட்டுமே கோயில்களில் உள்ளன. மீண்டும் வா. கற்சிலையில் எழுந்தருளி ஆட்கொள்வாயாக! நின்சித்தப்படி நடக்கச் சித்தமாயுள்ளேன். இனி உன் சந்நிதியில் பாவம் செய்ய மாட்டேன். இனி அன்பே என் தவம். தொண்டே என் வாழ்க்கை. இது சத்தியம்.
இறைவா! உறுப்புகளை மறைத்து ஆடைகள் உடுத்தி நாகரிகமானவன் என்று நாடகம் நடத்தி வருகிறேன். ஆனால் உணர்வுகளோ நாகரிகமானவையல்ல. இறைவா! எனது சமூக நிலைக்கு இசையாத உணர்வுகளை நான் மறக்கக்கற்றுக் கொண்டேனில்லை. "ஜாரவா" பழங்குடி மக்களோ உறுப்புகளை மறைத்தார்களில்லை. ஆடையின்றி அம்மணமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பால் தன்னலம் இல்லை. கூட்டு வாழ்க்கை இருக்கிறது. நானோ நிர்வாணமான தன்னலத்துடன் வாழ்கிறேன்.
"நான்” என்ற உணர்வு அற்ற நிலையில்தானே அன்பு அரும்பும்; ஒப்புரவு நிலையில்தானே ஒழுக்கம் கால் கொள்ளும் நின் அருள் கிடைக்கும். இறைவா அருள் செய்க. 'நான்', 'எனது' அற்ற நிலையில் நின் திருவடிக் காட்சியில் திளைத்து வாழ்ந்திட அருள் செய்க!
இறைவா! ஏன் இந்த நிலை? என்னை இப்படி எல்லோரையும் கொண்டு ஏசவைக்கிறாய். இறைவா! புரிகிறது உன் தந்திரம். ஏச்சுகள் மூலம்தான் புகழ் வேட்டையை நாடும் என்னைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறாய். மற்றவர் ஏச்சின் மூலம்தான் மான அவமான உணர்ச்சி மாறும் என்பது நின் திருவுள்ளம். எல்லோரும் ஏசட்டும். ஆனால், இறைவா, நீ ஏசமாட்டாயே! வாழ்த்தியருளுக.
என் மனம் நன்மையில் மகிழ்கிறது. புகழில் களிக்கிறது. இது ஒருதலை நிலை. நன்மை, தீமையில் நிலைதடுமாறக் கூடாது. "சகம் பேய் என்று" கூறினாலும் பொறுத்தாற்றும் பண்பு தேவை. இறைவா! நீ அமைத்த வாழ்க்கை என்ற எனது பள்ளியின் ஆசிரியர்கள் என்னை ஏசுபவர்களே; எதிரிகளே! வசையெலாம் வாழ்த்தெனக் கொண்டு உயர்ந்திட அருள் செய்க!
இறைவா, பற்று கூடாது என்று சொல்கின்றனர். உன்னிடத்திலும் பற்று கூடாதா? உன்னிடம் பற்று இல்லாமல் நான் எப்படி வாழமுடியும்? இல்லை, இல்லை, இறைவா! உன்மீது பற்று கொள்ளலாம். தவறில்லை. ஏன், உன் மீதுள்ள பற்றினால் உயிர்க் குலத்திற்குத் தீமை இல்லை. எனக்கும் தீமை இல்லை, நன்மையேயாம். ஆனால் இறைவா, உனக்குத் தொல்லைதான். பற்று என்பது முற்றிலும் தற்சார்பானது; தனக்கு நலம் நாடி அதற்காகப் பிறிதொன்றின் மீது பற்று வைப்பது. உன் மீதும் எனக்குப் பற்று வேண்டாம். ஆனால் உன்னை விரும்புகிறேன். எனக்காக அல்ல உனக்காகவே, உனக்கே ஆட்செய்ய விரும்புகிறேன். இறைவா அருள் செய்க! உனக்கே தொழும்பாய்க் கிடந்து-உனக்கும் உன் உலகத்திற்கும் ஆட்செய்ய அருள் செய்க!
இறைவா! மூடர்களையும் படைத்து, புத்திசாலிகளையும் படைத்து ஏன் வேடிக்கை பார்க்கிறாய்? மூடர்களுடன் பேசவே முடியவில்லையே. பேசுபவர்களை முட்டாள்களாக்கி விடுகிறார்களே. மூடர்களுடன் தர்க்கம் செய்வதைத் தவிர்த்துவிட எனக்கு அருள் செய்! வேண்டவே வேண்டாம், விவேகம் இல்லாதவர்களுடன் தர்க்கம்.
முத்தி நெறி அறியாத மூர்க்கர்களுடன் கூடாமலே இருக்க அருள் செய்க. அறியாமையின் பிடிவாதம், மூர்க்கத்தனமானது, ஆபத்தானது. சிலர் தோளாச்சுரை போல இருப்பர், தோட்கப்படாத செவியுடையராய் இருப்பர். இறைவா! இவர்தம் உறவு வேண்டாம்.
அறிஞரோடு கூட்டுவித்து அருள் செய்க! அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரிந்து என்னை வளர்த்திடு. வாழ்வித்திடு!
இறைவா! நீ அருளிச் செய்த நன்னெறிகளைப் பின்பற்றினாலும் துன்பம் வருகிறதே, ஏன் இறைவா? இறைவா, என்னை முழுமையான பக்குவமான ஆத்மாவாக வளர்க்கத் துன்பங்கள்தான் துணை செய்யுமா? நின் திருவுள்ளம் என்ன?
என்னை வளர்ப்பதற்கே துன்பங்கள் என்றால் நான் எப்படி மறுப்பேன்? நுகத்தடியில் கழுத்தினைத் தரும் மாட்டினைப்போல் நானும் துன்பங்களிடம் என்னை ஒப்படைக்கச் சித்தமாக உள்ளேன்! ஆனால், ஒரே ஒரு பிரார்த்தனை, நீ என் நெஞ்சத்தைவிட்டு அகலக்கூடாது.
துன்பத்தின் வாயில்தோறும் படிப்பினை கற்பேன், முழுநிறை மனிதனாவேன். என் வாழ்வின் எல்லையில் "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்று முழங்குவேன். இறைவா, அருள் செய்க!
இறைவா! உனக்கே ஏன் இவ்வளவு பெரிய தோல்விகள்? நீ, என்னைப் படைத்த நோக்கத்தில் நான் வாழ்கிறேன் இல்லையே! இன்று பஸ்மாசுரர்கள் எண்ணிக்கையில் மிகுதி. நீ வரத்தைக் கொடுக்கிறாய். பின் மாட்டிக்கொண்டு விழிக்கிறாய். ஏன் இந்த நிலை?
இறைவா, புரிகிறது நின் திருவிளையாட்டு. எது ஆனாலும் சொல்லிக் கொடுத்த சொல் வாழ்க்கைக்கு உதவாது. அவரவர் உணர்ந்தாக வேண்டும். பட்டறிவு பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை அறிவாளியாக்க நீ முட்டாளாக நடிக்கிறாய். என்னே உன் கருணை.
இறைவா, என் சிந்தையுள் நீ தெளிவாக இருந்தருள் செய்க! தெளிவான நோக்கம், தெளிவான அறிவு, இவையே என் வாழ்க்கையின் அரண்களாக விளங்க அருள் செய்க.
இறைவா! இந்தத் தடவை மட்டும் மன்னித்துவிடு என்று எத்தனை தடவை உன்னிடம் மன்றாடிக் கேட்டிருப்பேன்; எத்தனை தடவை நீயும் மன்னித்தாய்! ஆனால், நான் எழுந்து நடப்பதாகத் தெரியவில்லையே. மன்னிப்பு, பொருளற்றுப் போயிற்றே. இறைவா, பொருளற்ற பொக்கையானேன். எடுத்தாள்க!
நான் என்ன செய்ய? நீ என்னைத் தனியாய் படைத்திருந்தால் எப்படியோ? ஐவரோடு கூட்டுவைத்து அனுப்பினாய். அவர்கள் வலியராகி என்னோடு போராடுகிறார்கள். அவர்களுடன் போராடும் ஆற்றல் இல்லாமல் அவர்களுடன் சமரசம் செய்துகொண்டு வாழ்கிறேன். எல்லாம் உன்னால் வந்ததுதான். நன்றே செய்வாய் பிழை செய்வாய்! அடித்து அடித்து அக்காரம் தீற்று. நினைக் கண்டறியும் அறிவினைத் தந்தருள் செய்க!
இறைவா! உன்னை அருச்சிக்கவே ஆசைப்படுகிறேன். ஆனால், என்னுடைய பொறி புலன்கள் உன்னுடைய அருச்சனையில் ஈடுபட ஒத்துழைப்பதில்லை. பொறி புலன்கள் மட்டுமா? என்னைச் சுற்றியிருப்பவர்களும்கூட அப்படியேதான். ஆனால், அவமே பொழுது போகவில்லை. ஏதாவதொரு வேலை, வேலைக்குப்பின் வேலை.
இறைவா, கடமைகளின் காரணமாக உன்னை அருச்சிக்கத் தவறினால் என்னை மன்னித்துவிடு. இறைவா, மன்றாடுகிறேன். மன்னித்துவிடு. நீயே என் மனத்துக்குள் வந்து குடிபுகுந்துவிடு. அப்பொழுது உன்னை நினைப்பற நினைக்கிறேன். முன்பு கைத்திருத்தொண்டு செய்தவர்களுக்கு, உவப்படைந்து வாசியிலாக் காசு அருளியுள்ளாய்! எனக்கும் வாசியிலாக் காசு தந்தருள்க.
இறைவா! எத்தனையோ இயற்கை வனப்புமிக்க சூழ்நிலைகளை அமைத்துத் தந்தாய், நான் மகிழ்வோடு வாழ. ஆனால், மோசமான சில மனிதர்களையும் கூடவே படைத்தாயே ஏன்? இந்த மனிதக் கூட்டத்தில் வாழ்வது எளிதாக இல்லையே. ஆம்! வழுக்கலில்தானே காலூன்றும் பயற்சி கிடைக்கும். பொய்ம்மையில் தானே மெய்ம்மையின் தெளிவு தெரியும். வெயில் தானே நிழலின் அருமையைக் காட்டுகிறது.
இறைவா, இந்த மனிதர்களோடு சேர்ந்து அழிந்து போகாமல் காப்பாற்று. நான் உன் ஆணையை மீறவில்லை; அவர்களுடன் வாழ்கிறேன்! அவர்களுக்காகவும் வாழ்கிறேன். நான் எந்த மனிதரையும் அலட்சியப்படுத்த மாட்டேன்; என்னுடைய பகைவனையும் நான் மதிப்பேன்; அன்பு காட்டுவேன். மனிதகுலம் முழுவதும் என் சுற்றம் எனக் கொண்டு ஒழுகுவேன். இறைவா இங்ங்னம் வாழும் திறனை அருள்செய்க!
இறைவா! இன்று உன்கருணை எல்லையற்றதாக இருந்தது. ஆம்! இன்று காலை தனித்திருந்தேன். அமைதியான உள்ளத்துடன் நின்னிடம் உறவு கொண்டேன். அம்மம்ம! எவ்வளவு இன்பமாக இருந்தது. இன்றே போல் என்றும் நீ, என்னிடம் பேசக்கூடாதா? என்னுடன் கலந்திருக்கக் கூடாதா? உன்னைக் கேட்பானேன்! நீ எப்போதும் தான் காத்திருக்கிறாய், நான் தானே கவனிப்பதில்லை. நான் கவனிக்காது போனால் என்னவாம். ஈர்த்து என்னை ஆட்கொண்டால் உனக்கென்ன குறை வந்துவிடும்.
என்னை ஆட்கொள்ளுதல் நின் கடமையல்லவா? இறைவா! எங்கெங்கோ புறத்தே போகிறேன். இறைவா மன்னித்துக்கொள்! "வா” என்று வான் கருணை கலந்த அழைப்பினைக்கொடு. ஈர்த்து ஆட்கொள்க என் புத்தியினுள் புகுந்து என் புத்தியையே திருத்தி ஆட்கொள்க. நின்னொடு கலந்து இன்புறும் இனிய வாழ்க்கையினை அருள்செய்க!
இறைவா! நீ ஒரு நல்ல வியாபாரி. நான் உன்னை நினைந்து அருச்சிக்கும் அளவுக்கு நின்றருள் புரிகிறாய். அதற்குமேல் நெஞ்சில் நின்றருள் புரிவதில்லையே; ஏன்? இல்லை, இறைவா! பொய் சொல்லி விட்டேன்; மன்னித்து விடு, நீ என் நெஞ்சில் நீங்காமல் நிற்கிறாய், நான் தான் அஃது அறியாமல் கெட்டேன், மன்னித்துவிடு. என்மீது குற்றமில்லை; உலகம் என்னை அவ்வளவு பலமாக இழுக்கிறது. வினையே வாழ்க்கையாக மாறுகிறது. விதைக்கும் வினைகளை அறுவடை செய்ய வேண்டாமா?
இறைவா! என் செய்ய? என் மனம் ஓயாது வினையாற்றுகிறது; இந்த வினை இயக்கம் ஓய்ந்தால் அல்லவா நின் பக்கம் வரலாம். இறைவா! என்ன அருளிச் செய்தனை, வினைகளைத் தொடர்ந்து செய்யச் சொல்கின்றாய்? வினைகளை இயற்றுவதுதான் உய்திக்கு வழியா? இறைவா! எனக்கும். புரிகிறது. "வினைகளைச் செய்! பிறர்க்கெனச் செய், வினைகளைப் பிறர்க்கெனச் செய்யின் அது நோன்பு" என்கிறாய். இறைவா! இனி எனக்கென்று முயற்சி செய்யேன்! பிறர்க்கென முயன்று வினைகளைச் செய்வேன். என்னை மறவாது நினைந்து வாழ்த்தியருளுக!
இறைவா! நான் ஒரு பாபமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்தத் தண்டனை? பலருடன் கூடிவாழ, மனிதனாய்ப் படைத்தாய். ஆனால், கூடிவாழ முடியவில்லையே. என்னைப்பற்றி யாரும் கவலைப்பட மறுக்கிறார்களே! மாறாக என்னிடம் நல்லெண்ணம் இல்லையென்று தத்தம் மனதிலே நினைப்பதை எல்லாம் கூறுகிறார்களே. என்ன செய்யச் சொல்கிறாய்?
இறைவா, இதுவா உன் பதில். உன் திருவுள்ளம் அதுவானால் சரி. பலருடன் கூடி வாழ்வதே அறம்! இன்பம்-துன்பம், புகழ்-பழி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை பண்பாடுறுமா? அப்படியானால் சரி. உன் ஆணையை என் நெஞ்சிற்கு எடுத்துக் கூறி சமாதானப்படுத்துகிறேன். வாழி, நின் கருணை!
இறைவா! என்னே உன் அற்புத விளையாட்டு. ஆனால், உன் விளையாட்டு எனக்கு வினையாகவல்லவா இருக்கிறது. ஏன், இறைவா! என்னோடு இந்த மனத்தையும் படைத்தாய்? ஒருநாளும் ஒருபொழுதும் இந்த மனம் சொன்னதைக் கேட்பதில்லை. ஓர் இடத்தில் இருப்பதில்லை. என்னையும் ஊர்நாய் போலச் சுற்றி இழுத்தடிக்கிறது? எனக்கு மனத்தோடு கூட்டுவைத்த நின் திருவுள்ளத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இறைவா, என்ன சொல்கிறாய்? மனத்தைப் புத்தியினிடத்தில் ஒப்படைக்கச் சொல்கிறாய். புத்தி சொன்ன படி செய்யச் சொல்கிறாய். மனத்தின் வசத்தில் வாழ்ந்திடல் வேண்டாம்; புத்தி சொல்லுவதுபோல நட என்கிறாய். சரி, இறைவா! அப்படியே நடக்கிறேன்.
ஆண்டவனே! உன் பெயரே "ஆட்கொண்டவன்" என்று இறந்த காலத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, நீ ஆட்கொண்ட எனக்கு ஏன் பிறப்பு, இறப்பு-இந்த வேலையெல்லாம். ஆண்டவா என்ன சொல்கிறாய்? என் பிறப்புக்கும், இறப்புக்கும் நீதானே காரணம்? என் அறியாமை, செயலின்மை, தன்னலம் துறவாமை, ஆகியனதான் பிறப்பிற்குக் காரணங்களா?
ஆம், ஆண்டவா யோசித்தால் தெரிகிறது, என் முட்டாள்தனம். ஆனால் படித்தவனாக வெளிச்சம் போடுவதில் எனக்கு ஈடு யாரும் இல்லை. எனக்குச் சோம்பலே-சுகம். அம்மம்ம! ஆண்டவா என் உடம்பு என்னை எவ்வளவு கெடுத்திருக்கிறது தெரியுமா? இந்த உடம்புதான் தன்னலத்தையே வளர்க்கிறது. உடம்பு பெருத்து உயிராகிய நான் சிறுத்துவிட்டேன். ஆண்டவா, என்பிழையை உணர்ந்தேன்; தெளிவு பெற்றேன்! இனி நீ ஆட்கொள்ளத்தக்க நிலையில் வாழ்வேன், உறுதி, நீயும் வழிநடத்து. வாழ்வித்தருள் செய்!
பிப்ரவரி 29
நீ எழுந்தருளும் திருக்கோயில்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்!
இறைவா! உன்னுடைய அளவற்ற கருணையை அறிந்து போற்றக் கற்றுக் கொண்டேன் இல்லையே. நீ என் பொருட்டு எழுந்தருளியுள்ள திருக்கோயிலை நான் தூய்மையாக வைத்துக் கொள்வதில்லையே? ஏன், நீ என் பொருட்டு எழுந்தருளியுள்ள என் உடம்பையும், நான் தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லையே? என்ன பாபம் செய்தேன்?
இறைவா, மன்னித்து விடு. இனி மேல், நீ எழுந்தருளும் திருக்கோயில்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.