குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/மார்ச்
இறைவா! நீ உன்னை எனக்குக் காட்டியருளும் துறைகள் எத்தனை! எத்தனை!! ஆனால், அங்க அற்புதத்தை உற்றறியும் ஆற்றல் பெற்றேனில்லை. எனக்கு வாய்த்துள்ள பொறிகளின் கொட்டம் தாங்க முடியவில்லை. அவை நெய்க்குடத்தில் எறும்பென என்னை மொய்த்துக்கொண்டு சீரழிப்பதின் மூலம் உன்னை ஆழ்ந்தனுபவிக்க முடியாமல் தடை செய்கின்றன. நானும் அவைகளோடு போராடிப் பார்த்தேன், பயனில்லை. நீ கொஞ்சம் கருணைகாட்டி, பொறிகளை நன்னெறியில் நிற்கும்படி செய்தருள்க.
இறைவா! என் பொறிகள் புறத்தே போகாமல்-அறிவு வாயில்களாக அமைந்து, என் ஆன்மாவை வளர்க்கும்படி அருள்செய்க! என் கண் நின் காட்சியில் களித்தால், எவ்வளவு இன்பம்! நின் படைப்பாகிய இயற்கையைக் கண்டுகளித்தால் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கும். என் இதயம் பொங்கும். என் கண் யாண்டும் யார் மாட்டும்-குளிர்ந்த, கனிந்த பார்வையைச் செலுத்தினால்-நான் செழிப்பேன். என் உலகம் செழிக்கும். அழுக்காறு என்ற பாவியே இல்லாத உலகம் தோன்றும். இறைவா! என் கண் அற்புதமான ஆற்றலுடையது. ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் காட்டும் திறத்தினது, என் கண் பேசினால் போதுமே, இறைவா! என் கண் எனக்குத் துணையாய் அமைந்து பணி செய்ய அருள் செய்தருள்க! ஞாலம் முழுதும் கொண்டு வந்து காணிக்கையாக்குகின்றேன். இறைவா, அருள் செய்க!
இறைவா! நீ ஆற்றலாக இருந்து இயக்குகிறாய். உன்னை அருச்சிக்கும் நான், உன் ஆற்றலைப் பெற்றேனில்லை. நின் திருவுள்ளப்படி ஆற்றல் மிக்குடையோனாக வாழ நினைத்தேனில்லை. உன்னிடம் ஆற்றலை இரந்து பெற்றேனில்லை. உன்னிடம் நான் சோறு, துணி என்று யாசிக்கிறேன். இறைவா, என்னுடைய அறியாமையை மன்னித்துவிடு. எனக்கு ஆற்றலை அருள் செய்க! வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க! இந்த வையகம் பயனுற வாழும்படி அருள் செய்க!
இறைவா, இந்த உலகமே ஓர் ஆற்றல், உலக இயக்கம் ஆற்றல் வழிப்பட்டது. இறைவா! ஆற்றலே உலக இயக்கம். "ஆற்றலுடன் வாழ்வதே வாழ்வு” என்ற உன் போதனை என் மனத்தில் தைத்துள்ளது.
இனி நான் ஆற்றலை வளர்க்கும் வழிபாடாகிய உழைப்பில் ஈடுபடுவேன். யாராயினும்-எவராயினும் ஆற்றலுடையோராக இருப்பின் அவர்தம் துணையை நாடிப் பெறுவேன். இறைவா என்னை வாழ்த்தியருள்க! உன்னுடைய அளப்பரிய ஆற்றலை நினைந்து நினைந்து வழிபாடியற்றி அவ்வாற்றலை எல்லாம் என் வாழ்க்கையில் என்னுடைய பொறிபுலன்கள் வாயிலாக வெளிப்படுத்தி வாழ்ந்திட அருள்செய்க! நான் வெற்றுப்பாவைக் கடந்து ஆடி ஓய்ந்திடாமல் அளப்பரிய ஆற்றலைப் பெற்று அனைவரும் இன்பமுறச் செய்து வாழ்ந்திட அருள்செய்க! நன்றின் தொடர்பிலாத் தீமையை வெறுத்து ஒதுக்கிடும் திண்மையை அருள்செய்க! என் வாழ்வு முழுவதும் ஆற்றலேயாகிடுக. இறைவா அருள் செய்க!
இறைவா! என்னை என் மனம் பிடித்தாட்டுகிறது. என் மனம் நான் சொன்னபடி கேட்க மறுக்கிறது. நான் என்ன செய்ய? உன்னுடைய திருவருள் எனக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. கல்லைப் பிசைந்து கனியாக்கக்கூடிய வல்லாளன் நீ, நீ, ஏன் என் மனத்தைத் திருத்தி எனக்கு ஒத்துழைக்கும்படி செய்யக்கூடாது? இறைவா, அருள் செய்க!
பெரும் புலர் காலை மூழ்கி, உனக்கு ஆர்வத்தை என் நெஞ்சிலே வைத்து, நின் திருக்கோயில் வலம் வருவதற்கு அருள் செய்க! நின் திருக்கோயில் திருவலகுப்பணி செய்திட அருள் செய்க! இறைவா உன்னை நாள்தோறும் விரும்பி அரும்பொடு மலர்கொண்டு-விதியினால் தூபம், தீபம் இட்டு வழிபாடு செய்யும் புண்ணியத்தின் புண்ணியத்தினை அருள் செய்க! நீ என் வழிபாட்டில் எழுந்தருளி-வழிபாட்டினை ஏற்று அருள்பாலித்திட வேண்டும். பழுத்த மனத்தினாக நான் வாழ்ந்திட அருள் செய்க. திருத்தொண்டின் நெறி நின்றிட அருள் செய்க!
இறைவா! திருவாரூரில், தேரோடும் வீதியில் நடந்த இறைவா, உன் தோழர் ஆரூராரின் நினைவுகளை நிறைவேற்ற நடந்த இறைவா! உன் தோழமைப் பண்புகளை எண்ணி-எண்ணி என் நெஞ்சம் உருகுகிறது. நான் உருகி என்ன பயன்? மகிழ்ந்துதான் என்ன பயன்? நானும்தான் பலரிடம் தோழமை கொண்டேன். என் தோழமை ஊற்றமாக இல்லையே. இறைவா! நான் தோழமைப் பண்புகள் சிறிதும் பெற்றேனில்லை. எனக்கு ஊர் மெச்ச, உலகு மெச்சப் பல தோழர்கள் உள்ளனர். ஆனால், நின் தோழமைப் பண்பை நான் பெற்றேனில்லை. இறைவா! நின் தோழமைப் பண்புகளைப் பெற எனக்கும் ஆசை. இறைவா அருள் செய்க.
"தோழன் தோளுக்கு நிகர்” என்பர். என் தோள் எனக்குத் தப்பாது என் உழைப்பிற்குத் துணை நிற்பது போல-பங்கேற்பதுபோல-என் தோழன் விளங்க அருள் செய்க! இறைவா, நானும் என் தோழனுக்குத் துணையாக இருக்க அருள் செய்க! இறைவா, என்னுடைய உள்ளுணர்வுகளைக் கலந்து பேசிப்பகிர்ந்து கொள்ளக் கூட ஒரு தோழன் கிடைக்கவில்லையே. இறைவா-என்னிடம் சிலர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் நெருக்கமாக வரவே கூசுகின்றனர்-எனக்கு உடனடியான அவசரத்தேவை ஒரு தோழன். இறைவா அருள் செய்க! அப்படி உன்னால் ஒரு தோழனை எனக்கு அனுப்ப இயலாது போனால் ஒரு விண்ணப்பம். இறைவா கோபிக்காது திருவுளம் பற்றவேண்டும். நீயே எனக்கும் தோழனாக வந்து உதவி செய்தால் என்ன? இறைவா அருள் செய்க!
இறைவா, காமனைக் கனன்னு எரித்தாய். காலனைக் காலால் உதைத்தாய். ஆனால் நின்பால் தொழும்பு பூண்டவர்களிடத்தில் நீ சினந்ததே இல்லை. அவர்கள் மிகை செய்த போதும் ஏற்றுக்கொண்டு பொறுத்திருந்தனை. உனக்குச் சினம், பகைவர்மாட்டே தொழும்பர் மாட்டு இல்லை. ஆனால், இறைவா, என் சினம் இனம் பார்க்காமல் கிளர்ந்தெழுகிறது. தொழும்பாய்த் தொண்டு செய்வார் மாட்டும் சினம் வருகிறது. பாழாய்ப்போன சினத்தை அடக்க முடியவில்லை.
ஆனால், இறைவா! ஒரு பொழுது கூட காரணமின்றிச் சினம் இல்லை! காலத்தில் செய்யாமை, முறையாகச் செய்யாமை, திறம்படச் செய்யாமை, முழுமையாகச் செய்யாமை, பயனுறச் செய்யாமை ஆகியனவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவா! நானும், மற்றவர்களும் மண்ணில் கையைப் பயன்படுத்தி-உழைப்புப் போர் செய்தால்தானே உண்ணலாம், வாழலாம்.
இறைவா! எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. முறையாக வேலை செய்யாதவர் மீதுதான் கோபம். இது தவறா? இறைவா! நல்ல ஆலோசனை, சொன்னால் நடவாது என்கிறாய். உடனிருந்து செய், ஊரே செய்யும் என்கிறாய். இறைவா இன்று முதல் செய்கிறேன். பணிக்காலத்தில் அனைவருடனும் நின்று ஒத்துழைத்துப்பணிகளை முடிக்க அருள் பாலித்திடுக! சொல் செயலினைப் பயவாது. செயலே, செயலினைப் பயக்கும், நல்ல புத்திமதி. இறைவா அருள் செய்க!
மார்ச் 6
இரவலர்க்கு ஈயும் வள்ளலாகவாவது வந்தருள்க!
இறைவா! ஆரூரர் எவ்வளவு புண்ணியம் செய்தவர். அதனால், நீ ஆரூரர்க்குத் தோழனாக வந்தாய். அதனால், ஆரூரர், தம் மனத்தில் நினைத்ததெல்லாம் உன்னிடம் கேட்டார்; பேசினார்; ஏசினார்; நீயும் அவர் பேச்சையும், ஏச்சையும் பொறுத்துக் கொண்டு அருள் செய்தாய். எனக்கு ஒரு தோழன் அப்படி வாய்க்கவில்லையே! நான் என்ன செய்ய! என் மனத்தில் இருப்பதைச் சொல்லி அழுவதற்குக் கூட தோழன் கிடைக்கவில்லையே!
இறைவா! எனக்கும் எண்ணற்ற ஆசைகள். யாரிடம் கேட்பது? கேட்பாரும், கொடுப்பாரும் இல்லாமல் என் ஆசைகள் முளையிலேயே கருகிப் போய் விட்டன. எனக்கு நீ தோழனாய் வரக் கூடாதா? என்னால் நீ விரும்பும் சுந்தரத் தமிழில் பாடத் தெரியாதே! இறைவா! நீ தமிழோடு இசை கேட்கும் இச்சை மீதூர்ந்தவன் என்று தெரிந்திருந்தால், நானும் கவிஞனாக வளர்ந்திருப்பேன்! பண் சுமந்த பாடல்களைப் பாடுந்திறனைப் பெற்றிருப்பேன். இது எனக்கு அன்றே தெரியாமல் போய், எனக்குப் புரியாத மொழியில் "அஷ்டோத்திரம்" செய்து ஏமாந்து போனேன். இறைவா மன்னித்துக் கொள். இனி நான் கவிஞனாதல் அரிது. ஏழிசையில் உனது புகழ் பரவுதலும் அரிது. எனக்குத் தெரிந்த தமிழில் இப்படி எழுதிப் பிரார்த்தனை செய்கிறேன். இறைவா அருள் கூர்ந்து ஏற்றுக் கொள். சுந்தரர் தமிழுக்குத் தோழனாக வந்தருளிய நீ என் தமிழுக்கு வர மாட்டாய். அது எனக்கே தெரிந்த உண்மை-ஆயினும் ஆசை வெட்கமறியாது. இரந்து கேட்கின்றேன். இரவலர்க்கு ஈயும் வள்ளலாகவாவது அருள் செய்க!
இறைவா, ஏன் சிரிக்கிறாய்? இறைவா! உன்னை இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக மந்திரங்கள், சடங்குகளினால் ஏமாற்றுகிறோமே என்றா? இல்லை, இறைவா! ஏமாற்றும் நோக்கமில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை அவ்வளவு தான். உனக்கு மலர்களால் ஆய அருச்சனையா வேண்டும்? வேண்டவே வேண்டாம். இதய மலர்களால் உன்னை அருச்சித்தால் போதும். ஆனால், என் இதயம் என்னிடத்தில் இல்லையே. அதை நான் சைத்தானிடத்தில் ஒத்தி வைத்துவிட்டேன். அதனால்தான் மலர்களால் அருச்சிக்கிறேன். இறைவா! என் இதயத்தை மீட்டுக்கொடு.
என் இதயம் ஆணவத்திற்கு அடிமையாகித் துரும்பாய்க் கிடக்கிறது; செயலிழந்து கிடக்கிறது. என் இதயம் என் வசம் இல்லை. நூறாயிரம் தடவை எடுத்துச் சொன்னாலும் அது கேட்பதில்லை, இறைவா!
நீ என்பால் முழுக்கருணை செலுத்தினால்தான் நான் பிழைப்பேன். இறைவா! என் இதயமும் எனக்குத் தேவை, நான் அதை இழந்து விடக்கூடாது. இறைவா நின் கருணையால்-பையத் தாழுருவிட ஆட்கொண்டருள் செய்க! இதயம் உடல் முழுவதும் பாய்ச்சும் குருதியோடு, அன்பையும் சேர்த்துப் பாய்ச்சும்படி செய்! நான் உய்தி பெற்று விடுவேன். இறைவா, அருள் செய்க!
இறைவா! நான் ஒரு புரியாத புதிர். ஆம், வெளியில் குப்பை கூளங்களைக் கண்டால் முகம் சுளிக்கிறேன். துர்நாற்றத்தைக் கண்டால் மூக்கைப் பிடிக்கிறேன். ஆனால், என் மனத்தில் உள்ள குப்பை கூளங்கள், அம்மம்ம! அந்தக் குப்பை கூளங்களைக்கண்டு ஒரு நாள் கூட முகம் சுளித்தே னில்லை. நாணினேன் இல்லை. என் புலன்களில் வீசும் சுயநலவாடை அம்மம்ம. கொடியது. இதற்கும் நாணினேனில்லை.
இறைவா, என்னைத் திருத்தி ஆட்கொள்! எப்படியிருந்தாலும் நான் உன் உடமைதானே! குப்பை கூளங்களும் கூட சூழ்நிலையால்தானே நாறுகின்றன! அவற்றை மண்ணிற்குள் முறையாக இட்டு மூடினால், படைக்கும் ஆற்றல்மிக்க உரமாகிவிடும். அங்ஙனமே யான்! என்னை நீ திருத்தி ஆட்கொள்ளலாம்; கொள்ள முடியும். உனது அருள் நோக்கு என் பால் விழீன் நான் படைப்பாளியாகி விடுவேன், வாழ்வேன். இறைவா, எடுத்தருள்க!
இறைவா! என் மனம் தெளிவாக இல்லை. குழம்புகிறது. ஏன், வேடிக்கை பார்க்கிறாய்? இன்றே, இப்போதே அருள்செய்! நீ என் புலன்களுக்கும், பொறிகளுக்கும் விருந்தாக வந்தருள் செய்தால்தான் நான் தேறுவேன்? இல்லையானால் என் நிலைபடுமோசம் ஆகிவிடும்.
வாழ்க்கையோ வழுக்கல். வழுக்கலில் ஊன்றி நிற்கக்கோலினைக் காணேன். வழுக்கல் திசையில் இழுத்துச் செல்லவே துணைகள் அதிகம் வந்தமைகின்றன. பொறிகளின் கொட்டத்திற்குத் தூபம் போடும் அமைப்பு ஏராளம். இந்நிலையிலும் நின்னை நினைக்க, பூசனை செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், இந்நெறியில் நிறுத்தத் துணை இல்லையே. நான் என் செய்வேன்? நின் துலாக்கோலும் ஏன் தடுமாறுகிறது? மாணிக்கவாசகருக்கும், சுந்தரருக்கும் ஒரு நியாயம்; எனக்கு ஒரு நியாயமா? நீயே வந்து என்னை வலிய ஆட்கொள்ளக்கூடாதா? ஆட்கொள்! எழுபிறப்பும் உனக்காட் செய்வேன். நீ என் தனித் துணையாக வந்தமைவுறின் என் வாழ்நாள் எல்லாம் பயனுடைய நாளே!
இறைவா, என்ன விந்தை. உன்னிடத்தில் கூட குற்றங்களை ஒத்துக் கொண்டு அழ, மன்னிப்புக் கேட்க மனம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. பெருமை பேசுகிறது. இறைவா, உன் சந்நிதியில் அழுதாலே போதுமே, மலை போலச் செய்துள்ள தீவினைகள் பறந்தோடிப் போகுமே.
இறைவா, மன்னித்துவிடு! அழக்கூடாது என்று நான் நினைக்கவில்லை. வெட்கம் அதனால்தான் அழவில்லை. உன் சந்நிதியில் அழ வெட்கப்படுவது பிழையென உணர்ந்துள்ளேன் இனி நாள்தோறும் நின் சந்நிதியில் நின்னை நினைந்து நினைந்து அழுவேன். உன்னைப் பெற அழுவேன். நீ ஆண்டான், நான் அடிமை. நின் அடிமை கெட்டுப்போதல் நினக்கு அழகன்று. காப்பது நின் கடமை. நீ என்னைக் காப்பாற்ற வேண்டும் இறைவா! உன் கருணைக்குப் பாத்திரமான ஏழை அழுகிறேன். இரங்கியருள் செய்! இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்..
இறைவா! உமையாள் கேள்வனே! “கற்பு, கற்பு” என்று கதறுகிறார்களே அது என்ன கற்பு? நின் மனைவி உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாளோ? இறைவா! உயர்ந்த அன்பு நலம்தானே கற்பு! நாட்டில் எங்கேயும் அன்பைக் காணேன் கடவுளே. நின்னை நினைவூட்டுபவளே பெண்தான்.
பெண்ணே வாழ்க்கையில் பெரும் பங்கு கொள்கிறாள் -அவள் தாயாகச் செய்பவை ஏட்டில் எழுதிப் பார்க்கக் கூடிய அளவினதா? ஆனால் பெண்மை சமூக வாழ்க்கையில் பெருமைப்படுத்தப்பட வில்லை.
இறைவா, நீ உமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறாய்! சக்தியாய்ச் சிவமாகி என்று சான்றோர் போற்றுவர். உன்னை வணங்கும் மக்களுக்கு ஏன் இந்தப் புத்தி வரவில்லை? பெண், காமப் பொருள் அல்ல; பெண், தாய்; அருளின் சின்னம். பெண்மையைப் போற்றும் மனப்பாங்கினை அருள்க!
இறைவா, வாழ்க்கை ஒரு நேர்கோடு. பல புள்ளிகள் இணைந்த ஒரு கோடு. ஒரு புள்ளி இடம் மாறினாலும் கோடு கோணலாகி விடும். ஆம். இறைவா, நானும் முயற்சி செய்கிறேன். என் வாழ்க்கை நேர்கோடாக, ஆனால், முடியவில்லையே? என் வாழ்க்கை நேர்கோடாக வேண்டும். அதுவே என் ஆசை. இறைவா, அருள் செய்க!
செம்மை- உழைப்பில் விளைவது. உழைத்து வாழ்தல்; பகுத்துண்டு வாழ்தல்; மனத்துக்கண் மாசிலனாக வாழ்தல்; பொறிகளில் அழுக்கு இன்றி வாழ்தல்; ஒன்றுபடுதல் ஆகியன, செம்மை நல்கும் பண்புகள். பண்பாள! இறைவா! செந்நெறியில் நின்று வாழ்ந்திட அருள் செய்க.
இறைவா! நீ அளித்த அருட் கொடைகள் எவ்வளவு ஆற்றலுடையன, பயன் உடையன. பற்றி நிற்கும் மனம்; ஆய்வு செய்யும் புத்தி; நிச்சயிக்கும் சித்தம்; அறிவு சுரக்கும் மூளை. அம்மம்ம! இவ்வளவு இருந்தும் ஏன் நாங்கள் மகிழ்ச்சியோடு வாழவில்லை; இன்பமாக வாழவில்லை? ஏன்? என்ன குறை? உன்மேல் ஒன்றும் குறை இல்லை.
நான்தான் தலைகீழாக நடக்க நினைத்தேன், நடந்தேன், அதன் விளைவு இது. இறைவா, உன் திருவடிகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன? என், என்னை உதைத்துத் திருத்தக்கூடாதா? இந்த முட்டாளுக்குத் திருவடித் தீட்சையா என்று நினைக்கிறாயா? காலனிலும் கொடியவனா நான் அப்படி ஒன்றும் இல்லை. உதைத்துத் திருத்து, ஓடிவந்தருள் செய்!
இறைவா, பாவம். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீ என்னை வளர்க்க எவ்வளவு அல்லற்படுகிறாய்? ஆனால், நான் முற்றாக உன்னுடன் ஒத்துழைப்பதில்லை. ஏன், இறைவா உனக்கு இந்த வேலை? ஒன்றுக்கும் உதவாத என்னைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு என்ன ஆள் பஞ்சமா? இருக்காதே. ஆம், இறைவா, அதுதான் நின் கருணை! நீ அற்பம் என்று எம்போன்றாரை இகழ்வதில்லை. அதுதான் உனது பெருமை. இறைவா, நீ இங்ஙனம் வலியவந்து ஆட்கொண்டாய், அடிமையாக்கிக் கொண்டாய். உன் கருணையை நினைந்து நினைந்து அழுகிறேன். அருள் செய்க! என் வாழ்க்கையைப் புனிதமாக்கி அருள் செய்க!
இறைவா, இந்த மனிதர்கள் விளையாடும் சாமர்த்தியத்தைப் பார்த்தாயா? என்ன சிரிக்கிறாய்? ஆம் இறைவா. முளைக் கொம்புக்கு வைக்கோல்புரி சுற்றுவது போல உடையைச் சுற்றிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களின் செயலின்மையைக் கண்டு இயற்கை சிரிக்கிறது; ஊர் அழுகிறது. வாழ்தலுக்கு வேண்டிய விழிப்புணர்வே இல்லை. ஐயோ! பிழைப்பு நடத்துகின்றனர். சிச்சி! இந்தப் பிழைப்பு நாயும் நடத்துமே. ஏன் இந்தக் கேவலம்? இறைவா, ஏன் இந்த அவமானங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாய் தாங்கிக் கொண்டிருக்கிறாய்?
இதுதான் நின் திருவிளையாட்டு, எலும்பைக் கடித்துக் குருதிகொட்ட வேதனையை அனுபவிக்கும் பொழுதுதானே நாய்க்கு எலும்புகடித்தலில் விருப்பம் குறைகிறது? அதுபோல நாங்களும் துன்பத்தில் சுழன்று எய்த்துக் களைத்தால்தானே தெரியும், நின் திருவருள் பெருமை!
துன்பம் இன்ப அன்பிற்கு ஆற்றுப்படுத்தும். துன்பத்தில் அழுதால் அதோ கதிதான். மாற்றும் கருத்தே தேவை. அறிவறிந்த ஆள்வினையே தேவை. எய்ப்பினில் வைப்பே. எங்கள் தவமே, போற்றி போற்றி! நின் அருட்கொற்றம்!
இறைவா, நான் என்ன செய்ய? நா, சுவையான தீனி கேட்கிறது. அது பேச்சுக் கச்சேரியைத் தொடங்கி விட்டால், கேட்கத்தான் ஆளில்லை. நேரமில்லை. நேரம் மட்டுமா இல்லை; வரம்பே இன்றிப் பேசுகிறது! நானும் அடக்கத்தான் பார்க்கிறேன். மௌன விரதம் இருந்து பார்த்தேன். அது மௌன விரதமா? நா, மற்றப் பொறிகளையும், எழுதுகோலையும் எழுதும் தாளையும் தன் படைக்கருவிகளாகக் கொண்டு ஆட்டுவித்த ஆட்டம் தாங்கமுடியவில்லை. இறைவா, என்ன செய்யச் சொல்கிறாய்? ஆம், இறைவா! நாவை அடக்குதற்குப் பதில் அதை நல்ல வழியில் பழக்க முயற்சி செய்கிறேன். நீயும் துணை செய். நாவடங்கினால் போதும், அனைத்தும் நடக்குமே.
திருவள்ளுவர் "யாகாவாராயினும் நாகாக்க” என்றார். ஒரோ வழி உடம்பிற்குள் - வாய் வழியாக அசுத்தமான உணவு சென்றாலும் உடல் கெடுவதில்லை. ஆம், சிறுகுடல் அசுத்தத்தைப் பிரித்து மலக்குடலுக்கு அனுப்பிக் கழித்துவிடும். ஆனால், வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் அசுத்தமாக இருந்தால்-தப்பாமல் அதன் எதிர்விளைவுகளை உருவாக்கியே தருகிறது. ஆதலால், நாவடக்கமே வேண்டும், உள்ளே செலுத்தும்-உணவிலும் அடக்கம் வேண்டும்.
சுவைக்காக நாக்கை நீட்டி உண்டால் நோய்க்கு விருந்தாவதைத் தவிர வேறு வழியில்லை! அது போலவே நாவிலிருந்து வெளியே வரும் சொற்களிலும் கட்டுப்பாடு தேவை இல்லையெனில் சமூகத்தால் வெறுக்கப் பெறும் நோயாவதைத் தவிர வேறு வழியில்லை. இறைவா, நாவடங்கி ஒழுகிட உன் திருநாமத்தைப் படைக்கலமாகத் தந்தருள் செய்க!
இறைவா, கோடி இன்பங்களை அள்ளித் தந்துள்ளாய். நாங்கள் இவைகளை அறியாமல் அவலத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம்? ஏன் இந்த நிலை? இறைவா, என்ன சொல்ல? வயிறாரச் சோறு கிடைத்தாலே தலை கனத்து விடுகிறது. உன்னையே யார் என்று கேட்கும் அளவுக்கு மூர்க்கத்தனம் வளர்ந்துவிடுகிறது.
இறைவா, என்ன செய்வது? ஊனை வளர்த்த அளவுக்கு உணர்வை வளர்த்துக் கொள்ளவில்லை. "ஊனினைப் பெருக்கி உயிரை இழந்தேன்” என்ற அனுபவவாக்கு எங்கள் வாழ்விலிருந்து பிறந்ததுதானே? இறைவா! ஊனினை உருக்கும் ஒப்பறிய பணியைச் செய்து வரும் நீ, என் ஊனினை உருக்கு என் உள்ளொளியைப் பெருக்கு! எங்களுக்கு எங்களைக் காட்டியருள்க; எங்களுக்கு உன்னையும் காட்டியருள்க! இன்பத் தொட்டிலில் எங்களை இட்டு ஆட்டு. ஏழேழ் பிறப்புக்கும் ஆட்டியருள்க!
என்னைக் கெடுத்து விடாமல் காப்பாற்றி அருள்க!
ஆண்டவனே! எல்லாம் நின் செயல் என்று கூறுகிறார்களே, இது உண்மையா? இறைவா, சில மனிதர்கள் தங்களுக்கு வாய்த்திருக்கும் எந்த நல்லதையும் பயன்படுத்துவதில்லை; முறையாக வாழ்வதில்லை; முறையாக வாழ ஆசைப்படுவதும் இல்லை. எதையாவது செய்து மாட்டிக் கொள்கிறார்கள், உன் அடியானாகிய என்னிடம் வருகிறார்கள். காப்பாற்ற வேண்டுகிறார்கள். எனக்கோ ஒரே குழப்பம். நல்லதின் வாசனையே இல்லாத இந்த மனிதனைக் காப்பாற்றக்கூடாது என்று மனம் போராடுகிறது. சமுதாயத்தின் மனசாட்சி காப்பாற்றக் கூறுகிறது.
ஆம்! இறைவா, நீ யாரையும் கெடுத்ததில்லை, அழித்ததில்லை. நானும் அந்த வழியில் தானே வரவேண்டும். ஆனால், இறைவா, உன்னால் வாழ்வு பெற்றோரெல்லாம் உன்னேயே எதிர்த்துப் போராடினார்கள். என்னோடும் அவர்கள் போராடினால் என்னால் தாங்க இயலுமா? என்ன இறைவா, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா? திருவருள் ஆணை இறைவா! உன் வழியில் பாவிகளையும் மன்னிக்கிறேன். ஆனால் இறைவா, ஒன்றை மறந்துவிடாதே தீயவர்களின் உறவு முட்புதர் அணையது. முட்புதர் அதனை அழிப்பவன் காலையும் குத்திக் காயப்படுத்தும். அதுபோல, தீயோரிடம் மன்னிக்கும் நெறியில் கொள்ளும் உறவு என்னையும் கெடுத்து விடாமல் காப்பாற்றி அருளுவது உன் கடமை.
இறைவா, உன்னைக் காலங்கடந்தவன் என்று எல்லாரும் கூறுகின்றனர். நீ, காலங்கடந்தவனாக இருந்தும் உனது படைப்பில்-இயக்கத்தில் காலத்தை முதன்மைப்படுத்துகிறாய். நானும் காலங்கடந்தவனாக இருந்தால் என்ன? ஏன் இந்த வேற்றுமை? நானும் காலங்கடந்தவனாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். விருப்பம் போல் வாழலாம். அதுவும் இந்தக் காலதேவதை இருக்கிறதே, அது ஒரு நொடி கூடக் காத்திருப்பதில்லை. அது ஓடிக் கொண்டே இருக்கிறது. அதைத் தொடர்ந்து என்னால் கூட முடியவில்லை. நான் காலத்தை ஓட்டி ஓடும் அளவுக்கு வாழ்கிறேன்.
காலத்தை நான் தவறவிட்டு, விழாமல் உயிர்ப்போடு வாழ்ந்தால் காலம் எனக்குச் சேவை செய்கிறது. ஆனால், அயர்வினால் அரைநொடியேனும் விட்டுவிட்டால் வந்தது மோசம்! இறைவா, காலம் என்முதுகில் முத்திரை குத்தி விட்டு ஓடிவிடுகிறது. அதனால், காரியங்கைள் பரிகொடுத்து, பெருமையை இழந்து, கிழவனாகி எய்த்து அலைகிறேன். இறைவா, என்னையும் காலங் கடந்தவனாக்கினால் என்ன?
ஆம், இறைவா! நீ, காலம் என்னும் கடிவாளம் போட்டு இழுக்காவிட்டால் நான் மதர்த்த சோம்பலாய் கெட்டேபோவேன். இறைவா, காலனைக் காலால் கடிந்த கண்ணிய! என்னைக் காப்பாற்று. கால உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயற்படும் புத்தியைத் தருக! புண்ணியா, இனிக்கால தாமதம் செய்யேன்.
இறைவா, தேவதேவா! என் உடல் சுறுசுறுப்பாய் இருக்கிறது. ஆம், இறைவா! உடலின் தேவைகளைக் கேட்டுப் பெறுவதில் உடல் என்றும் பின்தங்கியதில்லை. ஒழுங்காகச் சோறு கேட்கிறது; கூடி மகிழத் துணை கேட்கிறது. இவைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடைய முயற்சி செய்கிறது. அடைந்தே விடுகிறது. ஆனால் ஆன்மாவின் தேவைகள் என்னாயிற்று? ஆன்மாவுக்கு அழத்தெரியவில்லை. ஆன்மாவிற்குத் தன் தேவைகளைக் கேட்டுப்பெறத் தெரியவில்லை. ஆன்மாவில் ஒரே வெறுமை, வறட்சி. இறைவா, ஏன் இந்த அவலநிலை?
உடலை எவ்வளவு திருப்திப்படுத்தி வைத்தாலும் ஒரு காலத்தில் அது அழியக்கூடியது. ஆன்மா-உடலைத் துறந்து விட்டால் பட்ட மரத்திற்குரிய விலைமதிப்புக் கூட உடலுக்குக் கிடைப்பதில்லை. ஆம், இறைவா! பட்ட மரமாயினும் விறகுக்கு ஆகும். நான் எதற்கும் ஆகிலன்?
இறைவா; என்னைப்பார், என் ஆன்மாவில் பசியை உண்டாக்கு உடலால் வாழ விரும்பவில்லை, உயிர்வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ்த்து! உயிரின் தேவை வழங்கு.
ஆம், இறைவா! இப்போதே உடல் பயனுள்ள வாழ்க்கையை நடத்த அன்பை-அருளை வழங்குக! நான் அதனைப் போற்றிக் கொள்கிறேன். இப்பிறப்பிலேயே இல்லை, இறைவா இப்போதே நான் உயிர்ப்புடன் வாழ என்னை வாழ்த்துக!
இறைவா! ஏன் சொர்க்கத்தையும் படைத்து-நரகத்தையும் படைத்தாய்? என்னுடைய சுதந்தரத்தைப் பாதுகாக்கவா? நான் அனுபவிப்பது சுதந்தரமா? ஆம், இறைவா! நான் அனுபவிப்பது சுதந்தரம்தான். ஆனால், நானோ மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் தட்டிப்பறித்து அனுபவிக்கிறேன். ஆம், இறைவா! இதில் என்ன ஒளிவுமறைவு. எனக்கு எடுக்கத் தேரியுமே தவிர வைக்கத் தெரியாது. வாங்கத் தெரியுமே தவிர, கொடுக்கத் தெரியாது.
முடை நாற்றம் எடுத்த அம்மணமான சுரண்டல்-சுயநல வாழ்க்கை என் வாழ்க்கை! நாளும் என்னை ஊட்டி உண்பித்து வளர்க்கும் நிலத்துக்குக்கூட உரமிட மாட்டேன். காய்களால்-கனிகளால் வாழ்விக்கும் மரங்களுக்கு உரமிட மாட்டேன். ஏன்? பால் தந்து வாழ்வு தரும் பசுமாடுகளுக்கும் என்னிடமிருந்து எதுவும் கைம்மாறு இல்லை.
இறைவா! இதற்குப் பெயர்தான் சுதந்தர வாழ்க்கையா? ஆண்டவனே! என் மனத்தில் அன்பினைப் பெருக்கும் ஊற்றினைத் தந்தருள் செய்! என்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் நேசிக்கும் வரத்தினைத் தந்தருள் செய்! நான் என்னைப் பூரணத்துவமுடன் காப்பாற்றிக் கொள்ளும் வாழ்க்கையை முறையாக நடத்தினாலே மற்றவைகளுக்கு வாழ்வளிக்கும் பேறு கிடைத்துவிடுகிறது.
இறைவா! என்னை வளர்ப்பதும் இயற்கையை வளர்ப்பதுமான கடமையைச் செய்யும் மனத்தினைக் கொடு. இயற்கையை நேசித்து இயற்கையோடு இசைந்து வாழ்வேன், இது உறுதி!
இறைவா, நான் பிறப்பால் மானிடனே. ஆனால், இயல்பில் விலங்காயினேன். என்ன இறைவா! நான் விலங்கல்லவா? மனிதனேதானா? இல்லை. மனிதனும் இல்லை. விலங்கும் இல்லை. விலங்குகளில் கூட யானை, கிளி, நாய், பசு போன்றவை பயனுடையன. சிறப்புடைய பண்பாடுடையன. ஒழுங்குடையன, நன்றி பாராட்டும் இயல்பின. ஆம் இறைவா, என்னிடத்தில் ஏது ஒழுங்கு மனம் போன போக்குத்தான். இந்த உடல் எனக்குக் கருவியாக இல்லை. நான்தான் உடலுக்குக் கருவியாகிவிட்டேன். இந்த உடலுக்கே உழைக்கின்றேன்.
என்னிடம் ஏது நன்றி. உனது அருட்கொடைகளை நினைத்துப் பார்ப்பதில்லை. பொருளுடைய நின் புகழை நான் பாடுவதில்லை. யாருக்கும் பயன்பட்ட வாழ்வும் வாழ்ந் தேனில்லை. இறைவா! மன்னித்து விடு.
எனது உடம்பை இளைக்கச் செய்து வருகின்றேன். அது இளைத்துவிடும். நீ உள்ளொளி பெருக்கிவிடு! என்னைக் காப்பாற்று. என்னை முதலில் நல்ல விலங்காக்கு, பின் மனிதனாக்குக! பின் நின் திருவருளிலேயே தங்கியிருக்க அருள் புரிக!
இறைவா! என்னை எவ்வளவு பெரிய உப்பரிகையில் உட்கார வைத்தாய். ஆனால் நான் அங்கே இருக்க முடிகிறதா? என்னுடைய பொறிகள் இருக்க விடுகின்றனவா? ஒத்தநோக்கம் இல்லாத ஐம்பொறிகளோடு எனக்குக் கூட்டு வைத்தாயே. இறைவா! அந்த ஐவர்கள் என்னோடு தொடர்ந்து போராடுகிறார்கள். பல சமயங்களில் அவர்களே வலிமையுடையோராகி விடுகின்றனர்.
இறைவா! ஏன் இந்த நிலை? உனக்கு ஏன் இந்த நாச வேலை. இறைவா! ஆம் இறைவா, ஐவரையும் அடக்க அறிவைக் கொடுத்திருக்கிறாய். ஆம் இறைவா அறிவைக் கொடுத்திருக்கிறாய். எனது அறிவும் நயப்புகளுக்கு இரையாகி விடுகிறது. பல சமயங்களில் அறிவு சுயேச்சையாகவே வேலை செய்வதில்லை. இறைவா! அது மட்டுமா? குறைகளை நிறைகளாகவும், அநியாயங்களை-நியாயங்களாகவும் அது காட்டும் திறமையை வியப்பதற்கு ஏதுமனம்?
அம்மம்ம! இறைவா! கீழே விழுந்து கிடப்பதற்கும் இந்த மனம் கற்பிக்கும் சமாதானங்கள் அளப்பில. இறைவா! என்னைக் காப்பாற்று. ஐவர்களிடமிருந்து காப்பாற்று, அறிவை விருத்தி செய்!
மார்ச் 24
இறைவா, உனது திருவுள்ளம் என்ன என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. புழு-இழிந்த ஒரு புழு, கக்கும் எச்சில் நேர்த்தியான பட்டு நூலாகிறது. என்னால் பட்டுப்புழு போன்று நேர்த்தியான செயல் எதுவும் செய்ய முடியவில்லையே! நானோ மனிதன். பகுத்தறிவு உடையவன். எனது செயலில் நேர்த்தியில்லை. ஏன், இறைவா? ஆம், நீ சொல்வது உண்மை. நான் ஒரு நேர்த்தியான படைப்பே. ஆனால், சுதந்திரத்தின் பெயரால் கெட்டுப்போனேன்.
பட்டுப்பூச்சிப்போல நான் ஒழுங்காக வாழ்வதில்லை. ஆனால், இறைவா, பட்டுப்பூச்சியிலும் நான் உயர்ந்தவனே. எப்படி? பட்டுப்பூச்சியின் படைப்பாகிய பட்டினை நானே அனுபவிக்கிறேன். எனது அனுபவங்களுக்குத்தானே உலகம் இயங்குகிறது. ஆம்! இறைவா, நீ சொல்வது உண்மை. இந்த அனுபவங்கள் இடையீடின்றிக் கிடைக்க நான் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்!
இறைவா, நான் நல்லவனாக உழைப்பாளியாக இருப்பது எனக்கு நல்லது. ஆம்! நன்மையே நன்மையைத் தரும்! இறைவா, என் பிழைகளைப் பொறுத்துக் கொள். இன்று முதல் நான் நல்லனவே எண்ணுவேன். நல்லனவே செய்வேன் இது உறுதி!
இறைவா, நீ எப்போதும் உமையாளோடு இருக்கிறாய். உமையவளை ஒருங்கணைத்த வண்ணமே இருக்கிறாய். ஏன் இறைவா, நீ என்ன காமத்தில் மன்னனா? உமையவள் திருவடியில் பிறைநிலாத் தெரிகிறது, கொன்றை மலர் மணம் வீசுகிறது. ஆம், இறைா! நீ உமையவளிடம் சரணடைந் திருக்கிறாய். ஏன் இறைவா, அதில் என்ன தவறு? ஆற்றலைச் சரண் புகுகிறாய். உலகத்தின் இயக்கமே ஆற்றலில்தானே இருக்கிறது.
மானிட சாதி ஆற்றலில் குறைவின்றி இருப்பின் உலகத்தை இயக்கலாம், மாற்றி வளர்க்கலாம், எல்லாம் ஆற்றலின் மயம். இறைவா! உமை ஆற்றலின் ஊற்று. அவள் தரும் ஆற்றலே உன்னை ஐந்தொழிலில் ஈடுபடுத்துகிறது.
ஆம், இறைவா! எனக்கு ஓர் ஐயம். பெண்மை, ஆற்றலின் களம், ஊற்று, உரு என்றால் நாட்டில் பெண்கள் அப்படியில்லையே. இவர்கள் ஆற்றலே அற்று "ஜீவித்து" கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்! இவர்கள் ஆற்றலாக, ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக விளங்கின் இம்மண்ணுலகு செழிக்கும்! இந்தப் பெண்களுக்கு இத்தகைய வரத்தை நீ அருளல் கூடாதா? நீ, இந்தப் பெண்களுக்கு இந்த வகையில் அருளிச் செய்ய இயலாது. ஆனால், உமையவளிடமாவது எடுத்துக்கூறு!
இந்த நாட்டுப்பெண்கள் பிழைப்பு நடத்துவதை விட வேண்டும். ஆற்றலின் நிலைக்களனாக வாழ வேண்டும். நல்ல படைப்பாளிகளாக விளங்க வேண்டும்! இறைவா, அருள் செய்!
இறைவா, ஆண்டவனே! எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் நின்மலனே, உன் உண்மையான பெயர் என்ன? இன்னும் ஏன் அதை எங்களுக்குச் சொல்லித்தரவில்லை. அதனால்தானே நாங்கள் ஆளுக்கு ஒரு பெயர் சொல்லி உன்னை அழைக்கின்றோம், வாழ்த்துகின்றோம்.
கடைசியில் கடவுள் ஒருவர்தானா? அல்லது பலரா? என்ற அளவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகம் மட்டுமா? நாங்கள் பல்வேறு மதத்தவராகிச் சண்டை போட்டுக் கொள்கிறோம்! ஏன் இந்தச் சோதனை? இறைவா, என்ன சொல்கிறாய்? உண்மையாகவா? உனக்குப் பெயர் இல்லையா? உருவம் இல்லையா? ஒன்றுமே இல்லையா? அப்படியா இறைவா? உன் பெயர் உண்மை. நீ சுத்த அறிவு. நீ தூய அன்பின் திருவுரு. நீ உலகத்தை இயக்கும் பேராற்றல். புத்தி வந்தது. நீ உலகத்துக்கு ஓர் உண்மை, ஆற்றல், அன்பு, உனக்கு நாடு இல்லை. மதங்களின் எல்லை இல்லை.
நீ, எல்லை கடந்த பரம்பொருள். உன்னை நான் அடைய வழி, நானும் எல்லை கடப்பதே. ஆம் இறைவா, சிற்றெல்லைகள் வேற்றுமையை வளர்க்கின்றன; பகையை வளர்க்கின்றன. இறைவா, என்னைச் சிற்றெல்லைகளிலிருந்து விடுதலை செய்துகொள்ள அருள் செய்! உனது பறந்த எல்லைக்கு-அகண்ட வெளிக்கு வர அருள்செய்க!
இறைவா, நான் கடன்காரனாகிவிட்டேன். நாள்தோறும் கடன் வளர்ந்து வருகிறது. ஆம், இறைவா! என்னைச் சுற்றியிருக்கும் ஐம்பூத உலகங்கள் என்னை வளர்க்கின்றன. தாவரங்கள் நாளும் எனக்கு உயிர்ப்புக் காற்றைத் தந்து வாழ்விக்கின்றன. அதுமட்டுமா? அம்மம்ம! உடலுக்கு உரம் தரும் காய்கனிகளைத் தருகின்றன.
நாளும் பசு, இன்சுவைப் பால் தந்து வாழ்விக்கிறது. அறிவியல் அறிஞர்கள் நுண்ணறிவினை வழங்கி வையத்தினைப் பயன்படுத்தி மண்மேல் பயனுற வாழும் வாழ்க்கையைக் கற்பித்துத் தருகின்றனர். இவ்வளவு பேருக்கும் என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்? நாளும் செய்யக்கூடிய சிறுசிறு செயல்களைக் கூட நான் செய்வதில்லை.
ஏன், இறைவா! நான் என்ன செய்ய? இயற்கையும், அறிஞர்களும் யாதொரு கைம்மாறும் விரும்பமாட்டார்கள். கைம்மாறு செய்யவேண்டிய அவசியமும் இல்லை. அதனால் இந்த முறையில் கடனாளியாதல் இல்லை.
ஆயினும் இறைவா, என்னை உயிர்ப்புக் காற்றினாலும், சுவைமிக்க கனிகளாலும் வாழ்விக்கும் செடிகளை-மரங்களை அழிக்காமல் பாதுகாக்கவும் மறுக்கின்றேன். இது நியாயமா? இறைவா, அவை மண்ணில் தலை காட்டியதிலிருந்து மாந்தருலகை வளர்க்கின்றன, வாழ்விக்கின்றன. ஏன், பட்டுப்போன பிறகும் எரியும் விறகாகி வாழ்வளிக்கின்றன. நானோ யாதொரு பயனும் இன்றி வாழ்கின்றேன். இறைவா, கருணை காட்டு. என்னை இந்த வையகம் பயனுற வாழச்செய்!
இறைவா, நீ எனக்கு வாழ்வுதந்து அருள் செய்தனை. நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையென்றால் பலரும் கூடுவர், கூடுதல் என்றாலே கூடும் அனைவரும் பொதுவான குறிக்கோள்களுடனேயே கூட வேண்டும். இங்ஙனம் கூடுவதே கூட்டம். என் வாழ்க்கையிலும் பலர் கூடினர். இன்னும் கூடிக்கொண்டிருக்கின்றனர்.
'பொதுமை', 'கூட்டுறவு', 'உழைப்பு', 'திருப்தி' என்பனவற்றின் பொருள் புரியாதோர் பலர் கூடியுள்ளனர். விறகுக் கட்டில் அடங்கிய குச்சிகள் போன்ற கூட்டம். பாலொடு சேர்ந்த சர்க்கரை போன்றதன்று இக்கூட்டம்! கூட்டை உடைக்க வேண்டாம் என்கிறாயா? இறைவா? இந்தக் கூட்டில் நான் படும் அல்லல், தலையில் அடித்துக் கொண்டு அழுமளவுக்குப் போகிறது. ஆம் தோளோடு தோளாக நிற்கும் தோழமையைக் காணோம். சுந்தரருக்குத் தோழனாக இருந்தாய், எவ்வளவு செய்தாய். நீ ஏன் எனக்குத் தோழனாக வரக் கூடாது.
நீ எனக்குத் தோழனாக வந்துவிட்டால் பிரச்னைகள் எளிதில் தீர்ந்துவிடும், இங்குள்ள அதிருப்தியாளர்களும் கிராக்கி செய்து கொள்ள மாட்டார்கள். இம்மண்ணுலகில் தோழர்களுக்காப் பஞ்சம். ஆட்கள் நிறையக் கிடைப்பார்கள். ஆனால், அவர்கள் நமக்காக இல்லை. அவர்கள் அவர்களுக்காகவேதான். நீயோ என் பொருட்டுத்தான். ஏன் என்றால் உனக்காகவென்று ஒன்றும் இல்லை! இறைவா, நீ, வா! தோழனாக வா!
இறைவா, அம்மம்ம! என்னே உன் படைப்பின் ஆற்றல். உன் படைப்பில் பயனில்லாது போனது எது? என்னைத் தவிர. மற்றப் படைப்புகள் எல்லாம் பயன்படுகின்றனவா? நான் என்ன பயன் இல்லாதவனா, இறைவா? நச்சுப்பாம்பு பயன்படுவதுபோல் வேறு எது பயன்படுகிறது என்று கேட்கிறாயா? பாம்பின் தோல் அழகு சாதனமாக விளங்குகிறது. பாம்பின் நஞ்சு, நஞ்சுக்கு மாற்றாக- மருந்தாகப் பயன்படுகிறது.
ஏன் இறைவா, நான் பயனில்லாதவனா என்ன? இறந்தாலும் உனக்குப் பயன் இல்லையா? இருந்தாலும் பயனில்லையா? மன்னித்துக்கொள். நான் பயனற்றுப் போனதற்கு நான் மட்டுமா பொறுப்பு? இல்லவே இல்லை. நீ எனக்கு வழங்கிய சுதந்தரம்தான் காரணம்!
சுதந்தரம்தான் எனது மூச்சுக் காற்று. சுதந்தரமற்ற உயிர் நடைப்பிணம். நான் பிறக்கும்போதே சுதந்தரத்துடன்தான் பிறந்தேன். இறைவா, நீ கூட என்னைப் படைக்கவில்லை. நான் என்றும் உள்ளவன். ஆனால் நான் தலையால் நடக்கத் தலைப்பட்டேனே, அதன் விளைவு நான் பயனற்றவனானேன். இறைவா, என்னைக் கைவிடாதே. என் பிழை பொறுத்து என்னை ஏற்றுக்கொள். வழிகாட்டு. நான் உன்னால் வளர்க்கப்பெற்ற வளர்ப்பு நாய். இறைவா! உன் அடிதொழுது செய்ய வேண்டிய பணிகளைக் கேட்டறிவேன், செய்வேன் இது உறுதி! இறைவா, ஏற்றுக்கொள்.
இறைவா, நீ தானே உடல் தந்தாய், வாழ்க்கையளித்தாய். உடலின் தேவைகளை நீ தர மறுக்கின்றாயே. ஏன் இறைவா? வயிறு காலந்தவறாமல் சுவையான சோறு கேட்கிறது. காதலில் கலந்தினிது, மகிழ்ந்துறையும் வாழ்க்கையும் கேட்கிறது. இவைகளை எல்லாம் நீ வழங்காமல் வாளா இருத்தல் நியாயமா? நின் பெருமைக்கு அழகா? ஆம், இறைவா, இன்னும் கேள், நான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறேன். நீ, அளித்த பொறிகளுக்குப் பயனில்லாமல் அவை அழிந்து கொண்டிருக்கின்றனவே. நின் அருளிப் பாட்டில் எல்லோரையும் ஒக்கப்பார்க்கும் பண்பாடில்லையே. அன்று நீ, சுந்தரருக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறாயே. இறைவா, எனக்கு ஏன் நீ கொடுக்கக் கூடாது? என்ன இறைவா! சிரிக்கிறாய்! சிரித்து மழுப்பவிட மாட்டேன், சிக்கெனப்பிடித்திடுவேன்.
நீ வழங்கிய செல்வத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழாமல் நின்னை இரந்து கேட்பது குற்றம்தான், மன்னித்துக் கொள்! நின்னால் ஒரு குறையும் இல்லை! என்னால் அறியாப் பதங்கள் அனைத்தும் தந்திருக்கிறாய்! இறைவா! உழைக்கும் மனம் தந்தருள் செய்! கையுடைமை நெஞ்சம் தா! ஊருடன் கூடியுண்ணும் பெருந்தவத்தினை அருள் செய்! இறைவா வேறென்ன வேண்டும்.
இறைவா! ஏன் பாராமுகம்? இறைவா, மௌனம் வேண்டாம்! காலனைக் காலால், காய்ந்தகால், இன்று எங்கு போயிற்று! ஒறுத்தல்மட்டும் போதுமா? என்னைத் திருத்து! பணி கொள்! இறைவா, என்ன சொல்கிறாய்! எத்தனையோ தடவை திருத்தியாயிற்று என்று வருத்தப்படுகிறாயா, இறைவா! நான் என்ன செய்யட்டும்? உனக்கும், எனக்கும் உறவு ஏற்படும் முன்பே-ஆதியிலேயே எனக்கு ஆணவத்துடன் இரண்டறக் கலந்த நிலை! அதன் பின்தான் நீ, என்னுடன் உறவு கொண்டாய்! அதுவும் நீயே வலிய உறவு கொண்டாய். இன்றும் நான் உன்னோடு ஒன்றவில்லை! ஆணவத்தின் பிடியிலிருந்து நான் இன்னும் முற்றாக விடுதலை பெறவில்லையே! அதனால் நீ கூறும் புத்திமதிகள் செரிமானமாவதில்லை! ஆணவம் என்னையும் விஞ்சி முந்திரிக் கொட்டை மாதிரி மூர்க்கத்தனமாக ஆட்டம் போடுகிறது. என்னுடைய ஆணவச்செயல்களைக் கண்டு கோபிப்பாய் என்று உன்னையே கருவறைக் காவலில் வைத்திருக்கிறோம்! அன்று நான்முகன் தலையில் ஒரு குட்டுப் போட்டாயே! அதே போல் இன்று என்னை ஆட்டிப் படைக்கும் ஆணவத்தின் தலையில்குட்டுப் போடு! அதுவே வழி! இறைவா, சீக்கிரம் போடு.