உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/டிசம்பர்

விக்கிமூலம் இலிருந்து


டிசம்பர் 1


என் அறியாமையை நானறிந்து அறிவை நாடிடும் ஆர்வத்தினை அருள்க!

இறைவா, பையவே கொடுபோந்து பாசமெனும் தாழ் உருவும் உத்தமனே! நாவிற்குச் சுவையான உணவு! உடலுக்கு நலமான உணவு! இவையிரண்டில் நாவிற்குச் சுவையான உணவு தயாரித்தலில் வேலை மிகுதி. பொருள்கள் நிறையத் தேவை! எனினும் உணவு, என் நாவிற்குச் சுவையாக அமைந்தாலும் உடலிற்கு நலமளிக்குமா என்பது ஐயப்பாடே!

இறைவா, இந்த உலகில் உயிர்க்கு மகிழ்வைத்தரும் சூழல்களை எல்லாம் நீ கருணையோடு அளித்துள்ளாய். பொன் உண்டு. மணி உண்டு. பொருள் உண்டு. துய்ப்பனவும் உண்டு. உய்ப்பனவும் உண்டு. யாதுமோர் குறைவில்லை. ஆயினும் ஏன் நான் கள் குடித்த குரங்குபோல் ஆனேன்? இல்லை, இல்லை! கள் குடித்த குரங்கை - தேள் கொட்டியது போல் ஆனேன். இவற்றையெல்லாம் முறையாகத் துய்க்கத் தெரியாமல் மன விகாரப்படுகிறேன். ஆசைப்படுகிறேன். இறைவா, என்னைக் காப்பாற்று.

என் பிழையைப் பொறுத்தருள். இனிமேலும் பிழைகள் வராமல் பாதுகாத்தருள் செய்க! என்னுடைய பொறிகளைச் சுவை நோக்கி அலையாமல் பயன் நோக்கி அடைந்து துய்க்கச் செய்யும் துணிவைத் தந்தருள் செய்க!

என் புலன்களின் மீது எனக்கு மேலதிகாரம் இருக்கும் படி, அருள் செய்க! என் புலன்களைத் தூய்மையாகப் பேணத் துணை செய்க! என் அறியாமையை நானறிந்து கொண்டு அறிவை நாடிடும் ஆர்வத்தினை அருள் செய்க!

வேண்டுதல் வேண்டாமை இல்லாத தூயவாழ்வினை அருள் செய்க! வேண்டாமை என்ற விழுப்பம் மிக்க செல்வம் பெறத் துணை செய்க! வாழ்க்கையில் ஒளி நிறையட்டும்! அறிவை நாடும் ஆர்வத்தினை அருள் செய்க! 


டிசம்பர் 2


இறைவா, அருள், என் வாழ்க்கையின் ஆக்கமாக அமையட்டும்! அருள் செய்க!

இறைவா, கயிலையைக் காணவேண்டும். கயிலையில் எழுந்தருளியுள்ள நின்திருக்கோலத்தைக் காணவேண்டும். இறைவா! உன் கோட்டையின் கதவுகள் சாத்தப்பட்டுள்ளன. பூட்டப்பட்டுள்ளன. அதைத் திறப்பதற்குரிய சாவியைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்!

இறைவா, நின் கோட்டையைத் திறப்பதற்குரிய சாவியாகிய அருள், வேண்டும். "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.” என்பது அருள்வாக்கு அருள்-அன்பினும் சேய். அன்பில்லாது அருள் வாராது.

அனைத்துயிர்களிடத்திலும் அன்பு காட்டுதல் என் ஒழுக்கமாக வேண்டும். என் வாழ்க்கையின் உயிர் நிலையாக அன்பு அமைதல் வேண்டும். அன்பை ஈன்று வளர்த்துப் பேணுவது உயிரிரக்கமாகிய பண்பாடே.

இந்த உலகத்தில் வாழும் அனைத்துயிர்களிடத்திலும் எனக்கு அன்புவேண்டும். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்கலாகாது. இறைவா! இந்தப் பாக்கியத்தினை எனக்கு அருள் செய்க!

வையம் உண்ட பிறகு உண்ணவும், வையம் உடுத்திய பிறகு உடுத்தவும் எனக்குக் கற்றுத் தா. துய்த்தலிலும் துறத்தலிலும் என்னை ஈடுபடுத்து. உயிரிரக்கம் என் வாழ்க்கையின் கொள்கையாகட்டும். அன்பு செய்தல் என் வாழ்க்கையின் ஒழுக்கமாகட்டும். அருள் என் வாழ்க்கையின் ஆக்கமாக அமையட்டும். இறைவா, அருள் செய்க! 


டிசம்பர் 3


சமுதாய விதிக்கேற்ப நான் நடந்திட அருள்க!

இறைவா! நீதியே! நியதியே! நின்னருள் போற்றி! போற்றி! இறைவா, இந்த உலகின் இயக்கத்தில் எண்ணற்ற நியதிகள் உள்ளன. நியதிகளே உலக இயக்கத்தை நடத்துகின்றன.

இந்த உலக இயக்கம் நியதிகளின் வழி நடப்பது. இறைவா, என் வாழ்க்கை விதியின்வழி நடப்பது நடக்க வேண்டியது. விதி என்றால் என்ன இறைவா? “தலை விதி" என்று கூறுகிறார்களே, அந்த விதியா? இறைவா, என்னை மன்னித்து விடுக. நான் தலை விதியில் நம்பிக்கை இல்லாதவன்.

இறைவா, விதி நியதியைப் போன்றது; விதி என்பது வகுத்துக் கொண்ட வழிமுறை. என் வாழ்க்கையின் விதிமுறை, இந்த உலகத்தை இயக்கும் இயற்கையின் விதிமுறைகளுடன் இசைந்து நடக்க வேண்டும். இயற்கையோடிசைந்த வாழ்க்கையே வாழ்க்கை. இயற்கையோடிசைந்த வாழ்க்கையே இன்ப வாழ்க்கை.

இறைவா, நான் தனிமனிதன். ஆனால் ஒரு சமுதாயத் தில் ஓர் உறுப்பினனாக வாழ்கின்றேன். ஆதலால் என்னோடு வாழும் மற்றவர்களின் நலமே என் நலம். ஆதலால் அவர்கள் மகிழ்வதற்குரிய விதிமுறைகளே என் வாழ்க்கையின் விதிமுறை.

இறைவா சமுதாய வாழ்நிலையே என் விதி, என் வாழ் நிலை. ஒரு விதி இன்பத்திற்கு முரணாக இருந்தால், அந்த விதியைச் சமுதாய விதியாக மாற்ற வேண்டும். இதுவே என் வாழ்நாளின் விதி. விதித்துள்ள கடமை. இறைவா அருள் செய்க!

இறைவா, நாடு உவப்ப நடக்கும் விதிமுறைகள் உயர்ந்தவை; உய்தி தருபவை. அந்த உயர்ந்த விதிமுறையின் வழி என் வாழ்வியல் நிகழ அருள் செய்க! 


டிசம்பர் 4


உழைத்தால் உறுதி உண்டு எனும் ஞானம் உணர்த்திய இறைவா, போற்றி!

இறைவா, உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் விளையாட்டுக் கொண்டருளும் தலைவா! போற்றி! போற்றி! உன்னிடம் நிறையக்கேட்க வேண்டும் என்றுதான் நின் சந்நிதி அடைந்துள்ளேன்! நீ அருளிச் செய்வதோ போதாது!

இறைவா, நீ குறைவிலா நிறைவு! நான் வேண்டியவாறு குறைவிலாது கொடுத்தருளினால் உனக்கென்ன குறை வந்துவிடப்போகிறது. நின் அருளிச் செயலுக்கும் அளவுகள்-நியதிகள் உண்டா?

நான் உன்னை, உன் நாமத்தை ஒரு தடவை சொன்னால் கூடப்போதும். நீ உடனே அருளிச் செய்வாய். நான் நிறையப்பெற்றுக் கொள்ளலாம் என்றிருந்தேன். நீ என் தகுதியறிந்து அருளுவதாக இருந்தால் நான் அடையக் கூடியது ஒன்றும் இல்லை.

எனக்கு இயல்பான பழக்கம் குறைவாக வேலை செய்து நிறையக் கேட்பது என்பது. இறைவா நான் ஒரு நாள் உழைக்கின்றேன். ஆனால் ஒன்பது நாள் ஊதியம் கேட்கின்றேன். சற்றே அன்புடையான் போல நடிக்கின்றேன். இந்த நிலையில் நான் எப்படி உன்னை அடைய முடியும்?

இறைவா, அறிவு அரும்புகிறது. தெளிவு தோன்றுகிறது. இறைவா, நீ ஒரு மதிப்பீட்டாளன்! அவ்வளவுதான். நான் நன்றாகச் செய்தால் நிறையக் கொடுப்பாய். இறைவா, நான் முற்றாக - முழுநலம் படைக்கத்தக்க உழைப்பினை வழங்க அருள் செய்க!

இறைவா, நான் பொய்யெலாம் தவிர்த்த அன்பினைக் காடடுகிறேன். இறைவா, அருள் செய்க! உழைத்தால் உறுதி உண்டு. இது நல்ல ஞானம்! இதனை அருளிச் செய்த பெருங்கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்.


டிசம்பர் 5

இறைவா, நான் வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா! களிற்றுரிவை போர்த்த புண்ணியனே! யானை ஒரு பெரிய மிருகம். எனினும் யானைக்குத் தன்னைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. யானை தன்னைச் செலுத்துகின்ற பாகனையும் அறிந்து கொள்ள இயலாதது; தன் தலையில் தானே புழுதியை அள்ளிக் கொட்டிக் கொள்வது; ஏன் தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுப்பது!

இந்தப் பெரிய யானையைப் போல நான் வாழ்கிறேன். என்னைப் பற்றியே நான் அறிந்து கொண்டேனில்லை. நான் யார்? என்னுடைய உடலியல்பு என்ன? என் பொறிகளின் ஆற்றல் என்ன? என்னுடைய புலன்களின் இயல்பென்ன?

நான் வழிவழியாக வாழ்ந்த வாழ்நிலைகளின் படிப்பினைகள், பெற்ற அனுபவங்கள், அனுபவங்கள் வழியாக வந்தமைந்த குணங்கள் ஆகியன ஊழென உருக்கொண்டு வந்த பழவினையின் தன்மை என்ன? இவைகளைப் பற்றியெல்லாம் நான் பூரணமாக அறிந்து கொள்ளாத நிலை!

இறைவா, ஏதோ உனக்கு, உன்னுடைய கணக்கு வழக்கைக் கடந்த கருணைக்கு வேலை வேண்டுமே என்பதற்காக, நான் உடம்பொடு புணர்த்தப் பட்டேன். என் பெற்றோர் விழைந்த காதலின்பத்தின் விளைவாக நான் பிறந்தேன்! இதில் என் விருப்பம் இல்லை. அதிகாரமும் இல்லை. எனினும் நான் ஒரு மனிதன்!

என் பொறிகள் செயல்திறன் உடையவை. என் புலன்கள் அறிவு நலம் செறிந்தவை. அறிவித்தால் அறியும் தன்மையுடையவை! என் வாழ்க்கையின் சென்ற காலம் அப்படியொன்றும் மோசமில்லை என்பது மானுடனாகப் பிறந்திருப்பதனாலேயே தெரிகிறது! ஆதலால், வாழ்வாங்கு வாழமுடியும்! வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க!


டிசம்பர் 6

சாதி, ஆசாரங்கள் எனும் சிறுபிள்ளை விளையாட்டுகளிலிருந்து விடுதலை செய்க, இறைவா!

இறைவா! எட்டினோடு இரண்டும், அ, உ, ம் என்ற ஓம் எனும் பிரணவ மந்திரத்தை அறியாத என்னைப் பட்டிமன்றம் ஏற்றினை! ஏற்றினை! நின் அருட் செயலுக்குப் பல நூறாயிரம் போற்றிகள்! ஆனால் இறைவா, நின் செயல் நற்பயனை விளைத்து வருகிறதா? கூர்ந்து நோக்கில் பயன் நன்றாக இல்லை.

இறைவா, பொய்-மெய் துணிதலே வாழ்க்கையின் நோக்கம்; பிறவியின் பயன். ஆனால், இன்றோ பெரும் பான்மையான விவாதங்கள் பொய்-மெய் துணிவதற்காக இல்லை. விவாதம் ஒரு பொழுதுபோக்கு. பலர் திண்ணையில் உட்கார்ந்து விவாதிப்பதிலேயே பொழுதைக் கழிக்கின்றனர்.

பல சமயங்களில் இந்த விவாதம் சூடேறி விபரீதமாகி விடுகிறது. பகைமூண்டு விடுகிறது. பிணக்குகளும் தோன்றி விடுகின்றன. விவாதத்தால் இந்த உலகில் விளைந்த தீமைக்கு அளவே இல்லை. இன்றும் அந்தத் தீமைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத விவாதங்கள், மதச் சண்டைகளாக மாறி மதத்திற்கு நேர் எதிரான பலனைத் தந்துள்ளன.

இறைவா, நான் உன்னை நம்புகிறேன். உன்னைப் போற்றுகின்றேன்! உன் வழியில்-அறவழியில் வாழ்கின்றேன்! உன்னுடைய இந்தப் பரந்த உலகத்திற்குத் தொண்டு செய்கின்றேன்! இது போதாதா?

இறைவா, எனக்கு எதற்கு மதம், சாத்திரக் குப்பைகள், சடங்குகள்?

சாதி ஆசாரங்கள் எனும் சிறுபிள்ளை விளையாட்டுக்களிலிருந்து விடுதலை செய்க! "நீயுண்டு நானுண்டு" என்று வாழ்ந்திட அருள் செய்க: இறைவா, அருள் செய்க!



டிசம்பர் 7

நிறை காணும் பண்பை எனக்கு வழங்குக!

இறைவா, எந்த ஒன்றிலும் குறை காண முடியும். யார் மீதும் குறை காண இயலும். இதனால் என்ன நன்மை? “நிறையில்லாதவர் கண்களுக்கே குறை தென்படும்” என் ஆப்த மொழி நினைவிற்கு வருகிறது.

குறை-குற்றங்கள் காணல் எளிது; தூற்றுதல் எளிது. நிறை காணல் அரிய முயற்சி. நிறை காணும் முயற்சியிலேயே அன்பு வளரும். உறவு வளரும். இறைவா, இந்த இனிய நிறை காணும் பண்பை எவ்விடத்தும் காணோமே?

இறைவா, என் மனம் ஏன் ஆத்திரப்படுகின்றது? அலமருகிறது? மற்றவர்கள் குறை காண்பதில்தானே சுறுசுறுப்பு. குறையை மறந்து நிறை காண முயன்றால், அது எனக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது.

இறைவா, நிறை காணும் பண்பை எனக்கு வழங்கு! குறைகளைக் கடந்ததே நிறை! அன்பு: ஆர்வம்! நட்பு! அமைதி!

இறைவா! உண்மைக்கு மட்டும் விசுவாசமாக இருந்தால் போதாது. ஒருவரிடம் கொண்ட நட்புக்கும், உறவுக்கும் கூட விசுவாசமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உண்மையிடம் விசுவாசம்.

இறைவா! உறவே முதல்-முடிவு எல்லாம்! இறைவா, நட்பு செய்யும் பாங்கினை அருள் செய்க! நிறைகாணும் பண்பை அருள் செய்க!


டிசம்பர் 8

ஆற்றலில் சிக்கனம் வேண்டும்! இறைவா, அருள்க!

இறைவா, என்னுடைய சேமநிதியே! நான் விரும்பும் துன்பத் தொடக்கிலாத சமுதாய அமைப்பைக் காண, உன் அருளால் வளர்த்துக் கொண்டுள்ளேன். நான் இன்று ஆற்றலுடையேன். ஆயினும் போதாது.

இறைவா, என்னுடைய பெருகி வளர்ந்த ஆற்றலை ஒருமுகப்படுத்தவில்லை. வெள்ளம் போன போக்குப் போல என் ஆற்றல் போய்க் கொண்டிருக்கிறது. என் ஆற்றல் ஒருமுகப்படுத்தப் படவில்லை! ஆதலால், ஆற்றல் இருந்தும் ஆற்றல் இல்லை என்பது போலாயிற்று!.

இறைவா, நான் என்ன செய்ய வேண்டி விரும்பிச் செய்கிறேன் இல்லை. தொல்லை தாங்க முடியவில்லை. இறைவா, நன்றருளிச் செய்தனை! என் ஆற்றலை ஒருமுகப் படுத்தச் சொல்கிறாய். நான் முயற்சி செய்கிறேன்.

எனக்குக் கொஞ்ச நாளாகவே பேச விருப்பமில்லை. இறைவா, இனிப் பேசாமல் குறிக்கோளை அடையும் வரையில் மௌனமாக இருந்து விடலாமா என்று கூட எண்ணம் வருகிறது.

ஆம், இறைவா, நீ அருளிச் செய்வது உண்மை! என் ஆற்றல் செய்ய வேண்டிய செயல்களுக்காக மிச்சப்படுத்தப் பெறுதல் வேண்டும். இறைவா, நான் இன்று முதல் சிக்கனத்தை என் ஆற்றலில் காட்டி என் ஆற்றலினை நான் ஏற்றுக் கொண்டுள்ள பணியில் ஈடுபடுத்த அருள் செய்க!

சிக்கனம் ஆற்றலில், பேச்சில், காலத்தில், செல்வத்தில் வேண்டும்! அச் சிக்கனத்தை என் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள் செய்க!


டிசம்பர் 9

இறைவா, ஞானத்தை அருள்செய்க!

இறைவா! 'கற்க' என்று திருக்குறள் சொல்கிறது. நாள் தோறும் கற்கின்றேன். எண்ணற்ற நூல்களைக் கற்கின்றேன். கற்றார் வாய் கேட்கிறேன். ஆயினும் என் இதயம் அடங்கவில்லை.

"நான்” என்ற முனைப்பு முடங்கவில்லை. "எனது” என்ற அகந்தை அடங்கவில்லை. எல்லாம் வேண்டும் என்ற ஆசை மற்றவர்க்கும் வேண்டும் என்ற எண்ணம் இல்லை, கவலை இல்லை! மற்றவர் படுந்துயரம் கண்டு இரக்கப் படுகின்றேன் இல்லை. நான் எப்படி உய்வது?

இறைவா, "கற்பனவும் இனி அமையும்” என்ற ஆப்த மொழியை வாழ்க்கை மொழியாக ஏற்கலாமா? ஆம்! எண்ணற்ற நூல்களைக் கற்கும் முயற்சியினால் மட்டுமே நான் உய்தி பெறல் இயலாது.

இறைவா, அருளையே கண்ணாகக் கொண்டு - கலை ஞானத்தைக் கற்க முயன்றால் எளிதில் ஞானம் சித்திக்கும். இறைவா, "நான்” அடங்க வேண்டும். உன்னுடைய பேருருவாக விளங்கும் மனித சமுத்திரத்துக்குள் சங்கமமாக வேண்டும்.

இறைவா, நீ காட்ட நான் காண வேண்டும். அப்பொழுதுதான் காணாதனவெல்லாம் காணமுடியும். கேளா தனவெல்லாம் கேட்க முடியும். இறைவா அருள் செய்க! நின்னருள் வழியதே என்னறிவு, உணர்வு, செயல், ஞானம் எல்லாம். இறைவா, அருள் செய்க!


டிசம்பர் 10

கணக்காக வாழ்ந்திட அருள்க!

இறைவா, கணக்கு வழக்கைக் கடந்த நின் திருவடிகளைக் கண்டு தொழ அருள் செய்க! இறைவா, நின் அருள் நிலை கணக்கு வழக்கைக் கடந்தது. நானோ கணக்கினைக் கடக்கவில்லை. கடக்கவும் கூடாது. நான் எதிலும் கணக்காக இருப்பது என் வாழ்க்கைக்கு நல்லது!

இறைவா, எல்லையற்றவை, கணக்குகளைக் கடந்தவையாக இருக்கலாம். நானோ எல்லாவற்றிலும் எல்லைகளை உடையவன் இல்லை. இறைவா! எல்லைகள் இல்லை யானாலும் எல்லைகளை உருவாக்கிக் கொண்டே வாழ்ந்து வருகிறேன்!

எல்லைகளையுடைய சூழ்நிலையில் நான் கணக்கைக் கடத்தல் இயலுமா? ஒருகாலும் இயலாது! நான் இம்மியும் பிழைபோகாது கணக்கோடு வாழ்ந்தால்தான் வாழமுடியும். இல்லையானால் படுதோல்வி வந்தடையும்.

ஒரு வேடிக்கை இறைவா, எங்கள் மனித உலகத்தில் காசு பணத்துக்குமட்டுமே கணக்கு வைக்கின்றனர்! வாழ்க் கையின் முதல், "காலம்" அல்லவா? காலத்திற்கு யாரும் கணக்கு வைப்பதுமில்லை. கேட்டதும் இல்லை! பலநொடிப் பொழுதுகள் கணக்கில்லாததால் பாழாகிப் போகின்றன.

இறைவா, நான் என் காலத்திற்குரிய பணிகளைத் திட்டமிட்டு அளந்து பயன்படுத்தும் உளப் பாங்கினை அருள் செய்க! இறைவா, என் வாழ்க்கையில் அடுத்த முதல் ஆற்றல்! ஆற்றலுக்குக் கணக்கு வைக்கும் பாங்கினை இனிமேலாவது தா!

என் ஆற்றல் கணக்கிடப்பட்டு, பணிகளுக்குத் தகுந்தாற்போலப் பகிர்ந்தளிக்கப் பெற்றால் ஏராளமான பணிகள் நிகழும். என் வாழ்வு கணக்காக அமைந்து கங்காளனாகிய நின்னை அடைய அருள் செய்க! இறைவா, கணக்காக வாழ்ந்திட அருள் செய்க!


டிசம்பர் 11

இறைவா, நான், என் நெறியில் நிற்கும் உறுதியினை அருள்செய்க!

இறைவா, பித்தனே! உன்னைப் "பித்தன்” என்று பாடிய பாடல்களைப்பாடி நான் மகிழ்கின்றேன்! ஆனால், புகழை விரும்புகின்றேன்! பெருமையை விரும்புகிறேன். ஏன் இறைவா, இந்த முரண்பாடு.

நான் பெருமையை விரும்பினால், புகழை விரும்பினால் அதைக் கொடுப்பவர்களையே நாடுவேன்! அவர்கள் பெரும்பாலும் இச்சை மொழிகளையே பேசுவார்கள்! அது போலவே, திரும்பிக் கொச்சை மொழியும் பேசுவார்கள்.

இறைவா, இந்த உலகத்தில் எல்லோரையும் திருப்தி செய்ய இயலுமா? ஒருபொழுதும் இயலாது. இறைவா, எனக்கு உடன்பாடில்லாதவர்களே இந்த உலகில் மிகுதி.

என்மீது பொறாமை கொண்டுள்ளவர்களே அதிகம்! இவர்களையெல்லாம் நான் திருப்தி செய்வது என்பது இயலாத காரியம், அவசியமில்லாத ஒன்று. இறைவா, நீ என் நெஞ்சத்தில் நின்றுணர்த்துகின்றனை! என் ஞானாசிரியர்கள் அப்பரடிகளும், திருவள்ளுவரும் உள்நின்று உணர்த்துகின்றனர். இது போதாதா எனக்கு!

இந்த வையகத்தில் நடந்து வந்த வரலாற்றின் வழி, எதிர் காலத்தை உய்த்துணரும் பொழுதில் என் நடையே சரி என்று தோன்றுகிறது. இதுபோதும். இறைவா! எனக்கு மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள், என்ன கூறுகின்றார்கள் என்பது பற்றிய கவலை வேண்டாம்.

நான் என் நெறியில் நிற்கும் உறுதியினை அருள் செய்க! சமூகம், "பேய்" என்று கூறினாலும் சரி! ஊரார் கூறும் வசையெலாம் வாழ்த்தென ஏற்றுக் கொள்ளும் இதயத்தினை அருள் செய்க! நான் உன் அடியான்! மக்கள் சேவகன்! இதுவே என் வாழ்வாக அமைய அருள்செய்க!


டிசம்பர் 12

இறைவா, புகழ் விரும்பும் இச்சையைத் தவிர்த்தருளுக!

இறைவா, என் நெஞ்சத்தில் துணையாய் அமர்ந்து துறப்பிக்கும் தூய தலைவா! இறைவா, துறக்கவேண்டும். மண், பெண், பொன், புகழ் ஆகியவற்றைத் துறக்க வேண்டும் என்று சான்றோர் கூறியுள்ளனர்.

இறைவா, ஆனால் இன்றைய துறவு நிலை? மண்ணைத் துறக்கவில்லை! பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்குத் துறவி சொந்தக்காரர்! பொன்!-சொல்லவே வேண்டாம்! பொன் னணிகளையே அணிந்து கொள்கின்றனர்! இறைவா, பெண் துறக்கப்பட்டிருக்கிறாள்! பெண்வழித் துறவுகூட அச்சத்தின் வழிப்பட்டதே!

இறைவா, "புகழ்" எந்த ஒரு துறவியினாலும் இது துறக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை! இன்றைய துறவிகள் புகழுக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள்! இன்றைய துறவிகளிடம் பக்தர்களைவிட பத்திரிகைக்காரர்களுக்கே செல்வாக்கு அதிகம்!

இறைவா, புகழ் எதற்காக? அதுவும் வாழ்நாளில் சொல்லப் பெறுவது புகழா? இல்லை! இல்லை! வாழ்நாளில் சொல்லப்பெறுவது முகமன். முகம் நோக்கி அச்சத்தின் காரணமாகவோ, எதையோ ஒன்றை இச்சித்தோ சொல்லப் பெறுவது முகமன்! இது புகழன்று!

இறைவா, நான் முகமன் கேட்கும் விருப்பம் இல்லா திருக்க அருள் செய்க! புகழ் விரும்பும் இச்சையைத் தவிர்த் தருள்க! எனக்குப் புகழ் வேண்டாம். நான் உழைக்கக் கடமைப்பட்டவன்!

வேலை செய்வது எனது பிறப்புரிமை! ஒப்புரவு செய்தல் எனது சமுதாயக் கடமை! இவற்றை நான் செய்து வாழ அருள் செய்க! இறைவா, புகழ் எல்லாம் உனக்கே யாகட்டும்! இறைவா, புகழ் விழையா மனம் அருள்க!


டிசம்பர் 13

இறைவா, உணர்ச்சி வசப்படுவதிலிருந்து என்னைக் காப்பாற்றுக!

இறைவா, மோனத் தவமிருக்கும் முதல்வனே உணர் வெலாம் கடந்த ஒருவனே! நின் திருவருள் போற்றி! போற்றி! இறைவா, என்னைச் சிலர் உணர்ச்சியற்றவன், மரக்கட்டை, என்றெல்லாம் ஏசுகிறார்கள்!

இறைவா, வாழ்க்கைக்கு உணர்ச்சி தேவையா? இறைவா, ஆம் உண்மைதான்! வாழ்க்கைக்கு ஏன் உணர்ச்சி? எதற்காக உணர்ச்சி? உணர்ச்சி விலங்குகளுக்கே உரியது!

மானிடர்க்கு ஏன் உணர்ச்சி? அவசியமில்லை! அப்படியா இறைவா? உணர்ச்சி புலால் தொடர்புடையது; புற உலக வயமானது. எளிதில் அழிக்கக்கூடியது, அழியக் கூடியது: உணர்ச்சி தன்னை நோக்கியதே. பிறரை நோக்கியதன்று.

இறைவா, என்ன அற்புதம்! உணர்ச்சியைப்பற்றி ஒராயிரம் உணர்த்தியருளிய நின் கருணைக்கு ஏது கைம்மாறு? இறைவா, நான் இனி உணர்ச்சி வசப்படமாட்டேன்!

உணர்ச்சிக் களங்களை, காரண காரியங்களை ஆராய்ந்தறியும் துறையில் மடைமாற்றம் செய்து பயன் கொள்வேன்.

உணர்ச்சிக்கு எளிதில் ஆளாகும் பொறிகளை ஆளுமையுடன் தீர்வு காணும் நெறியில் திருப்பி விடுவேன். உணர்ச்சிக்கு எளிதில் இடம் தரும் சுயநலத்தை அடியோடு மாற்றிப் பிறர்நலம் பேணும் பெருநெறியில் சிறந்து நிற்பேன்!

உணர்ச்சிக்கு எளிதில் இடம் கொடுக்கும் தன் முனைப்பை அடியோடு மாற்றுவேன்! இறைவா! உணர்ச்சி வசப்படுவதிலிருந்து என்னைக் காப்பாற்று! நான் மனிதனாகச் சிறந்து வாழ்ந்திட அருள் செய்க!


டிசம்பர் 14

இறைவா, இப்பிறப்பிலேயே விடுதலை பெற அருள் செய்க!

இறைவா, பந்தமும் - விடும் ஆகிய பரம்பொருளே ! இறைவா, நீயே எனக்குக் கட்டுக்களையும் அருளிச் செய்தாய்! பின், வீட்டையும் அருளக் காத்திருக்கிறாய்!

இறைவா, நான் ஒரு பட்டுப் பூச்சி போல் ஆனேன்! நானே எனக்கு ஒரு சிறையை உண்டாக்கிக் கொண்டேன், பட்டுப்புழு தனக்கு ஒரு கூட்டைத் தானே செய்து அடைத்துக் கொண்டாற்போல! கூட்டில் அடைபட்ட பட்டுப்புழுதான், பட்டுப் பூச்சியாகிறது; பின் கூட்டை உடைத்து வெளியே வருகிறது, விடுதலை பெறுகிறது!

இறைவா! நான் எனக்காக விலங்கின் குணத்தன்மையுடன் ஒரு சுற்றுவட்டம் அமைத்தேன்! அது ஒரு சிறைக் கூடம்! என்னடையது அது, "நான்” அதற்குக் காவற்காரன்! காலப்போக்கில், என்னைச் சுற்றி இருந்த சுற்றத்தை என்னுடைய நலன் கருதி நேசித்தேன்! பாவனையாக நேசித்தேன்! இதுவே என்னை மெல்ல மெல்ல வளர்த்தது. மனிதனானேன்!

நான் மனிதனான நிலையில் சுற்று வட்டத்தை உடைத்தேன்! மற்றவர்களிடமும் அன்பு காட்டினேன்! அவர்களுக்காக வாழ்ந்தேன். இறைவா, இதுவே என் வளர்ச்சி!

இறைவா, பட்டுப்பூச்சி கூட்டை உடைத்துக் கொண்டு விடுதலை பெற்றது போல நான் பூரண விடுதலை பெற அருள் செய்க: தியாகம் செய்யும் பாங்கினை அருள் செய்க, புகழ் பெறும் இச்சையிலிருந்து விடுதலை பெற அருள் செய்க!

இறைவா, நான் இப்பிறப்பிலேயே விடுதலை பெற வேண்டும்! இனியும் காலந்தாழ்த்த இயலாது இறைவா, கனிந்த அன்பு, தியாகம், சீலம், நோன்பு, ஞானம் இவற்றை அருளி இப்பிறப்பிலேயே ஆட்கொண்டருள்க!


டிசம்பர் 15

இறைவா! வாழ்க்கையின் அச்சாகிய நம்பிக்கையை என் உயிரினும் மேலாகப் போற்றிட அருள்க!

இறைவா, நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு! இறைவா, நல்வாழ்க்கையின் அடித்தளம் நம்பிக்கை! தன்னம்பிக்கையும், பிறர்மீது நம்பிக்கையும் இன்றியமையாதன!

தன்னம்பிக்கையின்மை தன் வாழ்வையே கெடுக்கும்! பிறர் மீது நம்பிக்கையின்மை சமூக வாழ்க்கையைக் கெடுக்கும்! இறைவா, எனக்குரியன இரண்டு நம்பிக்கைகளுமே! இறைவா, என்ன இப்படிச் சொல்கிறாய்! எனக்கு இரண்டு நம்பிக்கைகளுமே இல்லையென்றா கூறுகிறாய்!

இறைவா, மன்னித்துக்கொள், மறுத்துக் கூறுவதற்காக! இறைவா, இரண்டுமே உண்டு! உண்டு என்று கூறக் கூடியவாறே இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கும் இருக்குகிறது. இதுவே உண்மை!

இறைவா, மின் இணைப்பில் மின் தொடர்புக்கட்டை இறுக்கமான தொடர்பு இல்லையானால் மின்னோட்டம் நிகழாது மின்சாரமும் பயன்பாட்டுக்கு வராது.

இனி, நான் மனிதர்களை நம்புகிறேன். முற்றாக, முழு வதுமாக மனிதர்களை நம்புகிறேன்! நான் என்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்வதன் மூலம் இன்னொருவரையும் செழுமைப்படுத்திக் கொள்ளும்படி செய்வேன்! இது இயலும்!

இனி நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். யாரிடமும் குற்றம் காண மாட்டேன். அவர்களை முறைப்படுத்த ஓயாது உழைப்பேன்.

என் வாழ்க்கையில் நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகிய நாணயம், நேர்மை, திறந்தமனம், திறந்த வாழ்க்கை முறை ஆகியவைகளை நான் பேணிப் பாதுகாப்பேன். இறைவா, வாழ்க்கையின் அச்சாகிய நம்பிக்கையை நான் என் உயிரினும் போற்றுவேன்! இறைவா அருள்க.


டிசம்பர் 16

நீ, கற்பிக்கும் பாடம் உணர்ந்து வாழ, அருள்க!

இறைவா! ஆலமர் செல்வா! கல்லாலின் கீழ் அமர்ந்து ஆசிரியப் பணி செய்த ஆண்டவனே! தென்முகக் கடவுளாக அமர்ந்து அறம் உணர்த்திய ஆசிரிய அண்ணலே!

நின் போதனையில் யாதொரு குறையுமில்லை! நான் தான் கற்றேன் இல்லை. இறைவா, வலது திருவடி மடித்து, இடது திருவடியை நிலத்தின் ஊன்றி அமர்ந்துள்ள காட்சியே ஒரு பாடம். ஆம், இறைவா! சக்தியால், உழைப்பால் நிலத்தில் ஊன்றி வளர்க என்பது பாடம்!

இறைவா, நின் கைமுத்திரை, சின்முத்திரை ஒரு காட்சியால் உணர்த்திக் கற்பிக்கும் பாடம். சுட்டுவிரலாகியஉயிராகிய நான் ஆணவத்தால் தன் முனைப்புடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! செருக்கால் நிமிர்ந்த நிலை!

இந்த செருக்கு நிலை வாழ்க்கைக்குப் பயன்படாது. நான் கூட்டணியிலிருந்து முதலில் விடுதலை பெற வேண்டும். விலக வேண்டும். உன் திருவடியை அடைய வேண்டும்!

இறைவா! நல்ல பாடம்! ஆணவம் எனும் செருக்கி லிருந்து மீள அருள் செய்வாயாக! பொருள்மயக்கத்திலிருந்து மீட்பாயாக!

என்னை ஊழ்வினையின் பிடியிலிருந்து மீட்பாயாக! நின் தாளில் என் தலை பதித்து வணங்க அருள் செய்க! இறைவா, நீ கற்பிக்கும் பாடம் உணர்ந்து வாழ்வாங்கு வாழ அருள்க!


டிசம்பர் 17

இறைவா, சடங்கு வழிபாட்டினின்றும் விலகி நின்னை நினைந்து அழுதுநிற்பேன்! அருள் செய்க!

இறைவா, உன் திருவிளையாட்டு என்று சொல்வதா? அல்லது என்னையே நான் நொந்து கொள்வதா? என் மனம் உன்னைத் தேடுவதில்லையே! உன்னில் ஒன்றுவதில்லையே!

ஆனால், சடங்குகளே நின்னைக் காணும் வழி என்று நம்பி அலைகிறார்கள். சடங்குகளுக்கு நிறைய பேர் கூடுகிறார்கள்; பணம் நிறையச் செலவழிக்கிறார்கள்! பாழுக் கிறைத்துப் பழுதாகும் வாழ்க்கை: இறைவா, காப்பாற்று!

பாழுக்கிறைத்து பழுதாகுபவர்களைக் காப்பாற்று! உன்னைக் காண வந்தருள் செய்க! நின்னைக் காட்டு! என் கண்களால் காணத்தக்கவாறு வந்தருள் செய்க! நினக்குத் தொண்டு செய்ய அருள் பாலித்திடுக. நின் புகழ் பாட அருள் செய்க!

இறைவா, இனி, நின் புகழ் பாட வேண்டும். நின்னையே நினைந்து நினைந்து அழுதுநிற்பேன்; அருள் செய்க! நின்னை மறவாதிருக்க அருள் செய்க! ஒருகால் மறந்து விட்டால் நீ என்னை மறவாது இருக்கும் வரந் தர வேண்டும்.

இறைவா! எனக்குத் தந்தை நீ ஆதலால், உனக்குப் தொழும்பாய்ப் பணி செய்வது என் கடன்! நீ எனக்குத் தந்தை போல இருந்தருள் செய்க! இது நம்மிருவருக்கும் பல தலைமுறைகளாக இருந்து வரும் கடன்! இறைவா, நினக்குத் தொண்டு செய்து, புகழ்பாட அருள் செய்க!


டிசம்பர் 18<

இறைவா, உனக்கு அடிமை பூண்ட நான் அவலப்படுதல் ஆகாது! அருள் செய்க!

இறைவா! ஏன் இந்தச் சோதனை? நான் அறியாதவன்! வலிமையற்றவன்! உன் கருணையால் உய்ய வேண்டியவன்! அப்படி இருந்தும் ஐம்பொறிகளாகிய கள்வரோடு கூட்டு வைத்துக் கொடுத்தனை! ஐம்பொறிகளின் கூட்டு, என் வளர்ச்சிக்குத் துணையாக இல்லை! நான் நாள்தோறும் இவைகளுடன் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது! போராட்டத் திலும் அவைகளே வெற்றி பெறுகின்றன! இறைவா, என்னைக் காப்பாற்று!

இவைகளுடன் கூட்டு இப்போதைக்கு அகலாது போலிருக்கிறது. இவைகளுக்கு வேறு நல்ல வேலை கொடுத்து எனக்கு உண்மையான கூட்டாக இருக்கப் பணித்தருள் செய்க!

ஐம்பொறிகளின் சேட்டைகளால் நான் செய்த பிழை களைப் பொறுத்தாள்க! இனிமேல் பிழைகள் வராமல் காத்தருள்க! நான் உனக்கு அடிமை, நீ என்னை ஆண்டருள் செய்யும் கடமை உடையவன்! உனக்கு அடிமை பூண்ட நான் அவலப்படுதல் ஆகாது! என்னைக் காப்பாற்று!

என் கண்களுக்குக் கைபுனைந்து இயற்றாத அழகுமிக்குடைய இயற்கை எழிலைக்கண்டு மகிழ ஆணை தந்திடுக! என் செவிகள் நல்லனவே கேட்க, நின்னுடைய பொருள் சேர் புகழைக் கேட்கவேண்டும்.

இறைவா, நின் புகழை நான் நாளும் இசைத்திடுதல் வேண்டும். நின்னுடைய மணமே நுகர்ந்து அனுபவித்திடுதல் வேண்டும். இறைவா! இயற்கை எழிலைக் கண்டு மகிழ்ந்து வாழ அருள் செய்க!


டிசம்பர் 19

இறைவா, உயிரிரக்கமே என்னுடைய ஒழுக்கமாக அமைந்திட அருள் செய்க!

இறைவா! நான் பக்தி செய்ய ஆசைப்படுகின்றேன். நான் பக்தனாக வேண்டும் என்ற ஆர்வத்தால், நாள்தோறும் உன் சந்நிதிக்கு வருகின்றேன்! வணங்குகின்றேன்! உன்னைப் புகழ்ந்து பாடுகின்றேன்! ஆனால் என் மனத்தில் நெகிழ்ச்சி இல்லை; மனம் உருக மறுக்கிறது? ஏன் அழுவதற்குக்குக் கூட வெட்கப்படுகிறது? ஏன் இறைவா?

அப்படியா, இறைவா! நான் உன்னைச் சுற்றிச் சுற்றித் தான் வருகின்றேன்! இந்த உலகம் உன்னுடையது என்பதை நான் மறந்து விடுகின்றேன்! எல்லா உயிர்களும் உன்னுடைய வடிவம் என்பதை மறந்து விடுகின்றேன்!

அம்மையப்பராகிய நீயே இந்த உலகுக்கு அம்மை யப்பர்! எல்லா இடத்திலும்-எல்லா உயிர்களிடத்திலும் நீ பரவி இருக்கின்றாய். நீ இன்றி ஒன்றில்லை. இந்த உண்மையை நான் அறிந்தும் உணர்ந்தும் ஒழுகுதலே பக்தி.

இதனால் எவ்வுயிரிடத்தும் நான் மாறுபடுதல் கூடாது! பகை கூடாது! இவை சிந்தையிலும் கூடாது. உயிரிரக்கமே பக்தியின் களம்; உயிரிரக்கமே பக்தி,

உயிரிரக்கம் அன்பினைத் தரும், இன்ப அன்பினைத் தரும், அருளைத்தரும். இறைவா! எல்லா உயிர்களிடத்தும் உள்ளத்தாலும் செயலாலும் அன்பாக இருக்கும் அருளைச் செய்வாயாக உயிரிரக்கமே என்னுடைய ஒழுக்கமாக அமைந்து மன நிறைவு பெற்றிட அருள் செய்க!


டிசம்பர் 20

"சத்து-சித்து-ஆனந்தம்” சச்சிதானந்தமே! நின்னருளே துணை! அருள் செய்க!

இறைவா! என்னுடைய அன்பே! இன்பமே! நான் இன்பத்தை விரும்புகின்றேன்; எல்லையற்ற இன்பத்தை விரும்புகின்றேன். இன்பம் என்ன? வாங்குவதற்குக் கடைச்சரக்கா? இல்லையே!

இன்பத்தின் வாயிலாகிய சத்தியத்தை-உண்மையை நான் பற்றினால்தானே இன்பம் கிடைக்கம். சத்தியம்உண்மை இன்பத்தின் ஊற்றுக்களன்! நான், மனம், மொழி மெய்களால் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அகமும்-புறமும் ஒத்து வாழ வேண்டும் இறைவா அருள் செய்க! அறிவு தேவை. உலகம் வளர்கிறது! நானும் வளர்கிறேன். வளர்ச்சி நிலைமைகளுக்கு ஏற்ப அறிவும் வளர வேண்டாமா? வளர வேண்டும்.

அறிவு தேடும் வேட்கை தேவை. நூலறிவு, செவியறிவு, பட்டறிவு மூன்றும் தேவை! இறைவா! இந்த அறிவை அயர்வின்றித் தேடிப் பெறும் உணர்வினை வழங்கி அருள்க!

உண்மையும் அறிவும் என் வாழ்க்கையில் இடம் பெற்றால்தான் ஆனந்தத்தினை அடைதல் கூடும். இந்த மெய்ப் பொருளை விளக்கத்தானே. இறைவா, சத்து-சித்துஆனந்தம் (சச்சிதானந்தம்) என்ற பெயர் பெற்றனை!

இறைவா, நான் உனையடைந்தேன்! சத்திய வேட்கையைக் கொடு! அறிவை நல்குக! இன்ப அன்பாக என்னிடத்தில் நின்றருள் செய்க: இறைவா! சச்சிதானந்தமே! நின்னருளே துணை! மகிழ்ந்து மன நிறைவு பெற்றிட அருள் செய்க!


டிசம்பர் 21

இறைவா, நான் விளக்கமுற நானே பொறுப்பேற்கும் நயத்தக்க வாழ்வினை நல்கியருள்க!

இறைவா, தேசமெலாம் விளக்கும் என் தெய்வமே! அந்தத் தேசத்தில் நான் ஒருவன் இல்லையா? என்னை விளக்கமுறச் செய்யக் கூடாதா?

இறைவா, எனக்கு ஏராளமான செய்திகள் தெரியும். அதுவும் அடுத்தவர் குற்றங்கள் அனைத்தும் தெரியும்! ஆனால், இறைவா, எனக்கு என்னைப் பற்றித் தெரியாது! எனக்குத் தெரிந்ததும் தெரியாது! தெரியாததும் தெரியாது! நான் யார்? ஒரு மனித உருவம். அவ்வளவுதான்! இறைவா, இஃதோர் இரங்கத்தக்கநிலை. என்னைக் காப்பாற்று!

என்னை நானே துன்பத்தின் ஆட்படுத்திக் கொள்கிறேன்! எனக்கு நானே எதிரி! இறைவா, என்னை அறியும் அறிவை, துணிவை எனக்குத் தந்தருள் செய்க!

நாள்தோறும் என் வாழ்நாளின் கணக்கையும் சரி பார்த்து ஆன்ம லாபத்தில் இழப்பு-ஈட்டம் பார்க்கும் பழக்கத்தினை ஏற்றுக் கொள்ள அருள் செய்க! நான் விளக்கமுற என்னை நானே ஆய்வு செய்து கொண்டு திருத்தமுறுதல் வேண்டும்.

இறைவா, தன்னாய்வு முறையைத் துணிவோடு ஏற்கும் நிலையினை அருள் செய்க! ஒரோவழி என்னை மற்றவர் ஆய்வு செய்து சொன்னாலும் ஏற்கும் மனப்பாங்கினைத் தா! நான் விளக்கமுற நானே பொறுப்பேற்கும் நயத்தக்க வாழ்வினை வழங்கி அருள் செய்க! 


டிசம்பர் 22

எனது நாடு அமைதியோடு நிலவிடவும் எல்லோருக்கும் நான் அன்பு காட்டவும் இறைவா அருள்க!

இறைவா, பொதுவில் ஆடும் ஆடல் வல்லானே! போற்றி! போற்றி!! எனது நாடு இப்படிக் கலகக்காடு ஆகிறதே! இறைவா, இதனைக் காக்க உனக்குத் திருவுள்ளம் இல்லையா?

இறைவா, நீ மகிழ்ந்து திருவிளையாடல்கள் நிகழ்த்திய நாடல்லவா? புண்ணிய பூமி என்றெல்லாம் புகழ்கிறார்கள்! ஆனால் இன்றைய நடப்புகள் அப்படி இல்லையே? இறைவா! என் நாட்டைக் காப்பாற்று!

இறைவா, ஆம், உண்மை! நீ ஆயிரம் ஆயிரம் தடவை அருளாளர்கள் மூலம் எனக்கு எடுத்துக் கூறியும் நான் திருந்திய பாடில்லை! தனி மனித முனைப்பு, அலட்சியப் புத்தி, தன்னயப்பின் மிகுதி, இவைகளால் நின் அடியார்கள் கற்றுத் தந்த அறிவுரைகள் பயன்படாமல் போய் விட்டன!

நான் சார்புகள் காரணமாக அன்பு காட்டுவதில்லை. ஏன்? என்னைச் சாராதவர்கள் எனக்கு உடன்பாடில்லாத வர்கள்; இந்த உலகில் வாழ உரிமையில்லாதவர்கள் என்றே முடிவு செய்கிறேன்! நானே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறேன்! இறைவா, இந்த நிலையிலிருந்து எடுத்தாள்க!

இறைவா என் நாட்டை மீட்டருள்க! நான் விருப்பு வெறுப்பின்றி எச்சார்புகளையும் சார்ந்து வாழ்தல் வேண்டும். இத்திறனை அருள் செய்க!

இறைவா, எல்லாருக்கும் நான் அன்பு காட்டுதல் வேண்டும். நல்லன செய்ய வேண்டும்! உலக உயிர்கள் அனைத்தும் மகிழ்வாய் வாழ வேண்டும்! இந்த உயர் உள்ளத்தினை இறைவா, எனக்குத் தா! அன்பு அமைதி பெருக அருள் செய்க!


டிசம்பர் 23

இறைவா, எந்நாளும் பணி செய்து கிடக்க அருள் செய்க!

இறைவா! இருளும் ஒளியும் ஒரிடத்தில் கண்ணுக்குத் தெரியும் வகையில் இருக்காது, இருத்தல் இயலாது. இறைவா! "நான்" இருக்கும் வரை நீ இருத்தல் இயலாது. "நான்” என்பது பொதுமையுள் அடங்க வேண்டும் அல்லது அற்றுப் போக வேண்டும்.

"நான் எளிதில் அடங்காது; அதுவும் இந்த யுகத்தில் அடங்காது. இறைவா! இது ஜனநாயகயுகம்! மக்களாட்சி முறையில், அதிகாரத்திற்கு இடம் இல்லை. தொண்டு உண்டு, பணி இருக்கும்; ஆயினும் இந்த நாட்டு நிலை வேறு.

இந்நாட்டில், அடங்காத அதிகாரப் பசி, இந்தப் பசியையும் எடுத்து விழுங்கும் விளம்பரப் பசி! ஆம், இறைவா, காரியம் நடக்கிறதோ இல்லையோ? பத்திரிகைச் செய்திபாராட்டுக் கூட்டங்கள் ஆகியன இன்றைய சமுதாயத்திற்கு வெளிச்சம் போல்வன!

இந்தயுகத்தில் "நான்” எப்படி அடங்கும்? நான் என்னும் அகங்காரம் நீங்க வேண்டும். அந்த இடத்தில் நின் அருளாட்சி நடக்க வேண்டும், இறைவா, திருவுள்ளம் பற்றுக!

'நான்' இருப்பது தெரியாமலே வாழ்தல் வேண்டும். என் தலை வெளியே தெரியக் கூடாது. மண்ணிற்குள் வேர் போல இருக்க வேண்டும். இறைவா அருள் செய்க! பணி செய்து கிடக்க அருள் செய்க! நாளும் நினக்குப் பணிசெய்து கிடப்பதே என் பணியாக அருள்க!


டிசம்பர் 24

வையகம் துயர் நீங்க நான் துன்புறும் வாழ்க்கையை அருள்க!

இறைவா! துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். இது நின் அருள் வாக்கு! இறைவா, துன்பப்படுவதில் எனக்கு மறுப்பு இல்லை!

இறைவா, ஏசுபிரான் மற்றவர்கள் பாவத்தைக் கழுவ, சிலுவையில் துன்பப்பட்டார். அப்பரடிகள் நீற்றறையில் கிடத்தப்பட்டுத்துன்புற்றார்: திருஞானசம்பந்தர் தங்கியிருந்த இடம் தீயிடப் பெற்றுத் துன்புற்றார்.

உலக உயிர்களின் உய்திக்காகவும் உயர் நோக்கங்களுக் காகவும் விழுமிய துன்பங்களை அனுபவித்தால் அது பேறு; பாக்கியம் ஆகும்! இறைவா! எனக்கு இத்தகைய துன்பங்கள் யாதொன்றும் வரவில்லை!

உடற்பிணியால் துன்பம்! வறுமையால் துன்பம்: உட்பகையால் துன்பம்! இவையெல்லாம் விலைமதிப்பு மிகுதியுடைய வாழ்க்கையைக் கெடுக்கின்றன. இம்மையையும் கெடுக்கின்றன. ஏழேழ் பிறப்பையும் கெடுக்கின்றன!

இறைவா, நான் துன்புற்று உழலவே விரும்புகின்றேன்! அத்துன்பம் விழுமிய துன்பமாக இருக்க வேண்டும்! விண்ண கத்தைத் தரும் துன்பமாக இருத்தல் வேண்டும்! உயிர்க் குலத்தின் உய்திக்காகப்படும் துன்பம் இன்பமாக அமைதல் வேண்டும்!

இறைவா, வையகத்தின் துயர் நீங்க நான் துன்புறும் வாழ்க்கையை அருள் செய்க! வையகம் வளர, வாழ உழைத்திடும் துன்ப வாழ்க்கையே என் பேறு! அருள் செய்க!


டிசம்பர் 25

இறைவா, மண்ணில் ஞானதீபம் ஏற்றுக!

இறைவா, அன்று ஏசுபெருமான், மண்ணில் விண்ணரசு வேண்டும் என்று விண்ணப்பித்தார்! அது மிகப் பெரியது மட்டுமன்று. புத்திசாலித் தனமான வேண்டுகோளு மாகும். ஆம், இறைவா!

இன்று மண்ணை மனிதர்கள் ஆளுகின்றனர்! எப்படி ஆளுகின்றனர்? இறைவா, இந்த அரசினால் யாது நன்மை? மாறாகத் தீமையே நன்மைபோல ஊடுருவுகிறது! ஆம், இறைவா! சாராயக்கடைகளின் சாம்ராஜயம்! பரிசு மழை? விலைவாசிகள் கட்டுப்பாடின்றி ஏறிக்கொண்டே போகின்றன!

ஆசிரியர்கள் அடியாட்களாகின்றனர்! சாமியார்கள் கலகக்காரர்களாகின்றனர்! முற்றுந்துறந்த முனிவர்களிடை யிலும் புகழ்ப்போட்டி! இறைவா, தாங்க முடியவில்லை இந்தக் கொடுமை! இறைவா, நின்னரசை மண்ணில் நிலைநாட்டு! இறைவா, மண்ணில் ஞானதீபம் ஏற்றுக!

"நான்", "எனது” என்னும் செருக்கினை அகற்று. சாராயக் கடைகளை மூடு பரிசுச் சீட்டுகளை நிறுத்து! அன்பமைதியே வாழ்க்கை! அன்பமைதியை வழங்கி வாழ்வித்திடுக! இறைவா, அன்பு ஊற்றெடுக்கும் இதயமே எனக்குத் தேவை. மண்ணில் ஞானதீபத்தினை ஏற்றி அருள்க!


டிசம்பர் 26

இறைவா, பழகிய பழக்கத்தைத் தொடர்ந்து பராமரிக்க அருள்க!

இறைவா, ஏறுமயிலேறி விளையாடும் அண்ணலே! ஆம் இறைவா! சூரன் வாழ்க்கையில் ஏறும் இயல்பினன்! ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்றம் பெறும் இயல்புகள் உண்டு! ஆனால், வழிதவறிப் போகும்பொழுது ஏற்றத்தை இழக்கின்றனர்! அப்போதுதான் இறைவனின் கருணை தேவைப்படுகிறது!

இறைவா, நீ சூரனின் இயல்பறிந்து அவனுடைய துடுக்குத் தனத்தைப் பார்த்து வெறுத்துப் புறத்தே ஒதுக்க வில்லை. நீ அருளும் திறத்துடன் சூரனுடன் போராடினாய். பின் ஆட்கொண்டருளினாய்! இறைவா, பின்பும் அவனைத் தனியே விட்டுவிடவில்லை. அவனை அருகிலேயே வைத்துக் கொண்டாய்! ஏறுமயிலாகப் பயன்படுத்திப் பெருமை அருளினை!

இறைவா, நின் செயல் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தின் வெளிப்பாடு! "விடப்பட்டவர்கள் பேய்களாவார்கள்” என்பது ஓர் உண்மை! இறைவா, என் வாழ்க்கையிலும் இந்தச் செயற்பாடு அமைய அருள் செய்க!

இறைவா, நான் யாரையும் அந்நியமாக ஆக்கக் கூடாது! பழகியவர்களை இடையில் விடக்கூடாது! பழகியவர்களிடம் பகைகொள்ளக்கூடாது! இறைவா, அருள் செய்க! நான் சுற்றிச் சுற்றி வந்து பெற்ற மனித உறவுகளைப் பராமரிக்க வேண்டும்!

இறைவா, என்னோடு பழகிய ஒவ்வொருவரும் நான் அவர்களை நினைவில் வைத்திருப்பதாக எண்ணி மகிழ்ச்சி அடையத் தக்க வகையில் என் கடப்பாடுகள் அமைய அருள் செய்க: இறைவா நிலையான அன்புடன் அனைத்து உயிர் களிடத்தும் பழகி மகிழ அருள் செய்க!


டிசம்பர் 27



தீமைக்குக் காரணமாகிய தற்சார்புகளை நீக்கி ஒருமைப்பாட்டுடன் வாழ அருள் செய்க!

இறைவா! எந்நாட்டவர்க்கும் இறைவா! நீ ஒரு விசித்திரமான தலைவன். நீ அன்பு: நீயே அன்பு! நீ கருணைக் கடல்! ஆயினும் உனக்குப் பன்னெடுங்காலமாகத் தொழும்பு பூண்ட இந்த மானிட சாதியை ஏன் பகை மூட்டத்திற்குள் சிக்கித் தவித்து அழியும்படி செய்கிறாய்!

ஐயனே! எண்ணத் தொலையாத பிரிவினைகள்! பிரிவினை வழிப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த கசப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி, பகைமை, கலகம், கொலை, இன்னோரன்ன தீமைகளில் இந்த மனித உலகம் அழிந்து கொண்டிருக்கிறது! இறைவா, உனக்குக் கருணை இல்லையா? எங்களைக் காப்பாற்று.

மனித உலகில் எந்தப் பிரிவினையும் கூடாது. வேற்றுமைகள் அனைத்தும் செயற்கை மனிதனின் படைப்பு! இறைவா, உலகம்- மனித உலகம் வாழ ஒருமைப்பாடு தேவை! ஒருமைப்பாடு உடைய மனித உலகத்தைக் காணும் ஆற்றலினை அருள் செய்க!

இறைவா, நான் சார்புகளின் வழி அமைபவன்! என் சுபாவம்கூட என் சார்புகளுக்கு ஏற்றாற்போல விளங்க வேண்டும். புதிய சார்புகளைப் பெறுதல் என்பது நின் திருவுள்ளம் ! தீமைக்குக் காரணமாகிய தற்சார்புகளை நீக்கி வாழ்ந்திட அருள் செய்க!

இந்த உலகம் உன்னுடையது! இந்த உலகில் உள்ள அனைத்தும் உன்னுடைய உடைமைகளே! எனக்கிங்கே என்ன அதிகாரம் வேண்டியிருக்கிறது? அதிகாரம் வேண்டவே வேண்டாம், இறைவா!

இறைவா! ஒருமைப்பாடே உன்னை வழிபடும் மந் திரம் ஒப்புரவே உனக்குச் செய்யும் வழிபாடு! ஒருமைப்பாடு, ஒப்புரவு ஒழுக்கங்கள் என்பால் அமைய அருள் செய்க! இறைவா, ஒருமையுடன் நின் மலரடி போற்றி மகிழ்ந்து வாழ அருள் செய்க! 


டிசம்பர் 28

இறைவா! உன்னைக்காணும் வழியை உணர்த்துக!

இறைவா! "மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பது திருக்குறள். அதாவது உண்மையைத் தேடுதல் அறிவு! இறைவா! எது உண்மை, எது உள்பொருள், எது என்றும் உள்ள பொருள் என்று தேடுவது?

எந்தப் பொருளால் நிலையான பயன் கிடைக்குமோ அது உள்பொருள்; உண்மைப் பொருள்! இறைவா, நீயே உண்மை! நீயே, மெய்ப்பொருள்! ஆனால் உன்னைத் தேடும் ஆர்வம் இல்லையே? ஒரோவழி தேடினாலும் நீ இருக்கும் இடத்தில் நான் தேடுவதில்லை.

இறைவா! நீ எங்கிருக்கிறாய்? இறைவா! நீ எங்கும் இருக்கிறாய்! சில இடங்களில் விளங்கித் தோன்றுகிறாய்! இறைவா! எல்லா உயிர்களிடத்திலும் நீ விளங்கித் தோன்றுகிறாய்!

இறைவா, உலக உயிர்களை நேசித்து அன்பு காட்டினால் உன்னைக் கண்டு கொள்ளலாம். இதுவே உண்மை! முதலில் உன்னைத் தேடும்வழி சரியாக இருத்தல் வேண்டும். நீ வேறு, நான் வேறு! நானே நீ என்றாகிவிட்டால் தேடும் முனைப்புத் தோன்றாது.

இறைவா, நீ என்உள்ளும் இருக்கிறாய்! உன்னை நான் காண வேண்டும். உன்னைக் காண்பதற்குரிய ஒரேவழி உயிரிரக்கம் காட்டுவதேயாகும்.

மனத்தால்-மொழியால்-உடம்பால் மற்ற உயிர் களுக்கு நன்மை செய்து வாழ்வதே- உண்மையைத் தேடுவ தற்கு- உன்னைத் தேடுவதற்குரிய ஒரே வழி! இறைவா உன்னைக் கண்டு மகிழும் வழியை அருள்க!


டிசம்பர் 29

இறைவா, மற்றவர்க்குச் சங்கடம் தரும் உண்மையினைச் சொல்லாத நெறி நிற்க, அருள் செய்க!

இறைவா! உண்மையுமாய், இன்மையுமாய் விளங்கும் இறைவா! உண்மையைச் சொல்லத்தான் ஆசைப்படுகிறேன்! ஆனால், அச்சம், உண்மை சொல்வதைத் தடை செய்கிறது! இறைவா, என்ன அச்சம் என்றா கேட்கிறாய்?

நான் உண்மையென்று நினைப்பதைக் கூறினால் பலருக்கு நெஞ்சினை உறுத்தும், வருத்தமுறச் செய்யும் என்று எண்ணுகிறேன்! இறைவா! ஆம் இறைவா, அதுவும் கூட உண்மைதான்! அவர்களால் நமக்குத் தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது என்ற தயக்கம்! இறைவா, இவ்வகையான அச்சம் கோழைகளினுடையதா?

தீங்குவரும் என்று கருதித் தீங்கு செய்யாமை அறமன்று! தீங்கு செய்யக்கூடாது என்பதற்காகவே தீங்கு செய்யா திருப்பதுதான் அறம், ஒழுக்கம் வாய்மை நெறி! ஆம் இறைவா, உண்மையைச் சொல்லாது போனால் பொய்ம் மையை எப்படி நீக்குவது?

ஒரு தீமையை நீக்கப் பிறிதொரு தீமை செய்வது அறமன்று; வாழ்வியல் நெறியுமன்று! தீமைக்குத் தீமை என்றால் தீமையின் வட்டமே சுழன்று கொண்டிருக்கும். பொய்ம்மையை - பொய்ம்மையுடையவரை அணுகி வாய்மை நெறி காட்டிப் (பொய்ம்மையைக் காட்டாமல்) பழகினாலே பொய்ம்மை அகலும்!

"பையத் தாழுருவி” என்ற திருவாசகம் நினைவுக்கு வருகிறது. "பொய்ம்மையும் வாய்மையிடத்த" என்றார் திருவள்ளுவர்! ஆதலால் இறைவா! நான் உண்மையைத் தேட அருள் செய்க! ஆனால், மற்றவர்க்குச் சங்கடம் தரும் உண்மையினைச் சொல்லாமை என்ற நெறி நிற்க அருள் செய்க!


டிசம்பர் 30

நீ பெரியோன்! வள்ளல்! அதற்கேற்ப அருள் செய்க!

இறைவா, நான் உனக்கு அடிமை! ஆயினும் உன்னுடைய அருளை யாசிக்கின்றேன்! அன்பிலே, உவகையின் முகட்டிலே நிற்கும் பொழுதெல்லாம் என்னை இழக்கின்றேன். இந்த நிலையில் அறிவும் கை கொடுப்பதில்லை.

இறைவா, அறியாமைச் சூழ்நிலையில் நான் அனா சாரமான காரியங்கள் பலவற்றைச் செய்கின்றேன். இறைவா, உனக்கு உவப்பில்லாதனவாகவுள்ள காரியங்களையும் செய் கின்றேன். இறைவா! இவையெல்லாம் நான் வேண்டும் என்று செய்வதில்லை! அறியாமையினால் செய்கிறேன்.

இறைவா என் சிறுமை கருதிப் பொறுத்தருள் செய்க! நான் என் பிழைகளைத் திருத்திக் கொள்ள முயல்கின்றேன்! நீயும் என்னைப் பிழைகளிலிருந்து மீட்பாயாக!

இறைவா! நான் அறிவில்லாதவன் என்ற உண்மையை அறிந்தே என்னை ஆட்கொண்டனை! நான் அறியாப் பதங்களைத் தந்தருளினை! இன்று என் பிழைகளைக் கண்டு சீறலாமா? அல்லது பாராமுகமாய்த்தான் இருக்கலாமா? ஒருகாலும் கூடாது.

இறைவா, எங்கள் நாட்டில் பிழுக்கையை நீக்கி பாலைக் கொள்வர். மணல் ஒட்டிய கனிகளை ஊதித் தூய்மை செய்து உண்பர்! இறைவா! அங்ங்னமே நான் உனக்கு!

இறைவா, நான் உன் அடிமை. என் பிழைகளைத் தவிர்த்து என்னை ஆட்கொண்டருள்க! நீ பெரியோன். அதற்கேற்ப அருள் செய்க!


டிசம்பர் 31

இறைவா, ஞானப்பேரொளி வழங்கி அருள்க!

இறைவா, ஜோதியே! சுடரே! சூழொளி விளக்கே! நீ அருட்பெருஞ்ஜோதி! ஞானப்பேரொளி.! உன்னை அறிவால் அறிதல் இயலாது. பொருளால் அறிதல் இயலாது!

நாளும் புருவ நடுவில் ஒளிச்சுடர் ஏற்றிக் காணின் காணலாம்! உன்னைக் காண, அறிய, அனுபவிக்க ஆயிரம் ஆயிரம் சடங்குகள் செய்கின்றேன்! ஆயினும் நின்னைக் கண்டறிந்தேனில்லை.

இறைவா, நின்னைக் காண உள்ளத்தே நோக்க வேண்டும்! ஒருகணம் நோக்கினும் சாலும்! இறைவா, அது தானே இயல்வதில்லை! உன் ஞானத்தை அனுபவிக்க, கற்ற நூல், அறிவு, கை கொடுப்பதில்லை! நோன்புகளும் துணை செய்வதில்லை!

இறைவா, நீயே பற்றுக்கோடு என்ற தெளிவுமிக்க துணிவு தேவை! இறைவா, இந்த ஞானத்தைக் கொடு! ஒவ் வொன்றாக ஒழிந்து ஒடுங்கும் தவத்தினைத் தந்தருள் செய்க! உயிர்க்கு உயிராக விளங்கும் உன்னை ஒளி விளக்காகஅறியாமை இருளகற்றும் ஞான விளக்காக ஏற்றிப் போற்றிட அருள் செய்க!

ஞானத்தினை அருள் செய்க! ஞானத்திற்குரிய பர மோனத்தை அருள் செய்க! மோனத்தின் எல்லையில் ஆன்மாவின் பரபரப்பு அடங்கட்டும்! அறிவின் ஆர்ப் பாட்டங்கள் அடங்கட்டும்! செல்வத்தின் அகந்தைகள் அழியட்டும்! என் அகத்தே வளர்ந்துள்ள அகந்தைக் கிழங்கு அகழ்ந்தெடுக்கப்படட்டும்! இறைவா, அருள் செய்க!

ஒளி வழங்கி அருள்க! ஞானப் பேரொளி வழங்கி அருள்க! ஜோதியாக நின்று என் ஆணவக்காட்டை எரித்து அருள்செய்க! என் ஆன்மா, உடல் அனைத்தும் ஒளிமயமாகி, நின்றிட அருள் செய்க, சூழொளி விளக்காகி என்னைக் காட்டியருள்க! சுடரொளியாகி இந்த உலகைக் காட்டி அருள் செய்க. இறைவா ஞானப் பேரொளி வழங்கி ஆருள் செய்க!