குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/நவம்பர்
நவம்பர் 1
அமைந்திட அருள்க!
இறைவா என் செவிகள் எனக்கு உய்வைத் தருவனவாக அமைந்திட அருள்க!
இறைவா! தோடுடைய செவியை உடைய பெரு மானே! என் செவிகள் செல்வத்தைச் சேர்க்கும் செவிகளாக விளங்க அருள் செய்க!
செவிச் செல்வம் எது? செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்! உனது பொருளுடைய புகழைக் கேட்டலே செல்வம்!
குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே! "நன்றுடையான், தீயதில்லான், இன்பன் காண், துன்பங்கள் இல்லாதான் காண்” என்றெல்லாம் நின் புகழ் கேட்கப்படுதல் வேண்டும்! இறைவா, கேட்கப் பெற்ற நின் புகழ் என் சிந்தனையாக வளர, அறிவாக மாற்றம் பெற வேண்டும்! நின் புகழ்மிக்க குணங்கள் என் வாழ்வாக அமைந்திட அருள் செய்க! நான் குறைகள் இல்லாது வாழ்ந்திடுதல் வேண்டும். குற்றங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்! நன்றே கேட்க வேண்டும்! நன்றே செய்ய வேண்டும்! நல்ல வண்ணம் வாழ்ந்திடுதல் வேண்டும்! இறைவா, அருள் செய்க!
இறைவா, என் செவிகள் என்னை வளர்க்கும் செவிகளாக அமைதல் வேண்டும்! என் செவிகள் எனக்கு உய்வைத்தரக் கூடியனவாக இயங்குதல் வேண்டும்! இதுவே, எனது வேண்டுகோள்! தோடுடைய செவியனே! தோன்றாத் துணையாயிருந்து அருள் செய்க!
நவம்பர் 2
அருள் செய்க!
இறைவா, மொழிக்குமொழி தித்திப்பான மூவர் சொன்ன தமிழ் கேட்டருளிய இறைவா! என் சொற்ககளை நின் செவி கேட்கலாகாதா? கருணை புரியலாகாதா? என் செவிக்கு உணவே கிடைக்கவில்லை! வழங்குவாரையும் காண்கிலேன்!
உலகம் "பொருள்” என்று கூறிக்கொண்டு பணத்தின் பின் அலைகிறது! நானோ என் வாழ்வை வளமாக்கும் அறநெறிசார்ந்த உணர்வினைச் சொல்லித் தரும் ஆசிரியர்களை நாடி அலைகின்றேன்!
ஆலமர் செல்வா! அன்று நால்வர்க்கு அறமுணர்த்திய அறவாழி அந்தணனே! மாணிக்கவாசகர்க்குக் குருந்த மரத்தடியில் எழுந்தருளி மறைப் பொருளை அருளி ஆட்கொண்ட திருப்பெருந்துறை இறைவா! என்னை மாணாக்கனாக ஏற்றருளி மறை பொருளை அருளிச் செய்து, உய்வைத் தருதல் வேண்டும்!
செம்பொருளே, செம்பொருளின் பயனை எடுத்துக் கூறி, ஆட்கொண்டு பிறவியை நீக்க வேண்டும். பிரணவத்தின் பொருள் ஈதென விளக்கி என் பிறப்பைப் புனித மடையச் செய்தருளல் வேண்டும்.
இறைவா, ஆலமர் செல்வா! அண்ணலே அருள் செய்க! மறையை மறையின் பொருளை, அறிந்து ஓத அருள் செய்க!
நவம்பர் 3
செய்க!
இறைவா, தேரூர்ந்த செல்வா! ஏன் தேரூர்ந்து வருகிறாய்! எனக்குக் காட்சி மூலம் படிப்பினைகளைச் சொல்லித்தர நீ தேரூர்ந்து வருகிறாய்! ஆம் இறைவா, இந்தச் சமூகத்தில் நல்வாழ்வு, ஒரு பெரிய தேரைப் போன்றது.
தேர் எளிதில் செய்யப் பெறுவதா? பல தச்சர்கள் கூடிப் பலநாள் உழைப்பால் உருவாக்கப் பெற்றது தேர்! அதுபோலச் சமுதாய நல்வாழ்க்கையைப் பலரும் கூடிப் பலநாள் முயன்றுதானே நடத்திடுதல் இயலும்.
சமுதாயத்தில் நல் வாழ்வு வாழ இயலவில்லையே! சமுதாய இணக்கமே உருவாக வில்லையே. இல்லை. இல்லை. இறைவா! இன்னமும் சமுதாய அமைப்பே உருவாக வில்லையே! ஏன்?
சமுதாயத்தில் உறுப்பாகிய குடும்பமே, வடிவத்தில் தான், குடும்பமாயிருக்கிறது. உணர்வில், ஒருமையில் சிறந்த குடும்பமே இன்னமும் தோன்றவில்லை; இறைவா, இரங்கத்தக்க நிலை. இறைவா, காப்பாற்று.
நான் ஒரு சமுதாயப் பிராணியாகவே வாழ ஆசைப்படுகிறேன்! எனக்கு, சமுதாயத் தினின்று பிரித்துக் காட்டும் தனித்தன்மை மிக்க சிறப்புக்கள், விளம்பரங்கள் எதுவும் வேண்டாம்.
சமுதாய அமைப்பின் பகையாகிய தனிநபர் வழிபாட்டை, வெறுக்கும் மனப்பாங்கை அருள் செய்க! சமுதாயம் தழுவிய அன்பை அருள் செய்க! வேற்றுமைகளைக் கடந்து சமுதாய அமைப்பில்-ஒருமை நிலையில் வாழ அருள் செய்க!
சமுதாயத்தின் சராசரி நிலைக்கு மேலாக எனக்கு எதுவும் வேண்டாமையை விழுமிய செல்வமாக அருள் செய்க! சமுதாயம் தேர் போலானால் நீ எழுந்தருள் செய்வாய்! விரைந்து சமுதாயத்தேர் காண அருள் செய்க!
நவம்பர் 4
இறைவா! கங்கையைச் சடைக்கரந்தோனே! நீ கங்கை நீரைத் தலையில் வாங்கியது ஏன்? கங்கை வெள்ளம் பகுத்தறிவில்லாதது.
கங்கை நீர் எளிதில் பாய்ந்து பள்ளத் திசையிலேயே சென்று விடும். சென்று சேருமிடத்தின் தூய்மை பற்றி அறியாது. பயன்பாடு பற்றி அறியாது! ஆதலால் நீ தலையில் வாங்கி முறைப்படுத்தி நிலத்தில் விட்டனை!
இறைவா, கங்கைக்கு அளித்த கருணைமிக்க செயலை என் பொருட்டும் நீ செய்தருள வேண்டும்! என் வாழ்க்கை வறிதே பாழுக்கிறைத்ததாகி விடாமல் பாதுக்காக வேண்டும்! பயன்பாடு உடையதாக்க வேண்டும்!
பகுத்தறிவற்ற சடங்குகளில் என் ஆற்றல் பாழாகக் கூடாது! என் உயிரின் ஆற்றல் அனைத்தும் அறிவார்ந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
அன்பு நிறைந்த செயல்களையே செய்ய வேண்டும்! நின்னை நான் உயிர்க்குலத்திற்குச் செய்யும் தொண்டின் மூலமே காண வேண்டும்.
நடமாடுங் கோயில்களாகிய மானுடரின் உள்ளத்தில் நின்னை எழுந்தருளச் செய்து பூசனை செய்தல் வேண்டும். இந்த அருளைச் செய்தருள்! கங்கையைச் சடையிற் கரந்து தாங்கி அருள் செய்தனை! என் பொருட்டு உனக்கு அவ்வளவு துன்பம் வேண்டாம். நீ என்னை ஒரு சொல்லால் திருத்தி ஆட்கொள்ள முடியும்!
இறைவா, நீ என் வாழ்க்கையின் நெம்பு கோலாக, தூண்டுகோலாக விளங்கி அருள் செய்தால் போதும். நான் வாழ்வேன். வாழ்வாங்கு வாழ அருள் செய்க!
நவம்பர் 5
இறைவா, தாம் வளர்த்த மரம் நச்சுமரம் என்றாலும் கொல்லத் தயங்குகின்றனர். இறைவா, என் கருமேனி கழிக்கத் திருவுருவம் கொண்டருளிய கோவே! ஆணவ இருளில் அறிவும், செயலுமிழந்து கிடந்த என்னை, எடுத்தாண்டவனே!
இறைவா, அறியும் கருவிகளையும் செயற் கருவிகளையும் வழங்கி வாழ்க்கையில் ஈடுபடுத்தினை! நுகர்வுக்குப் பொன், பொருள் ஆகியன் தோற்றுவித்துப் போகத்தினையும் வழங்கியருளினை! இந்தப் பெருங் கருணைக்கு ஏது கைம்மாறு?
இறைவா, ஆயினும், நீயே எடுத்து வளர்த்த நினது உடைமையாகிய என்னை, இன்று பாராமுகமாகக் கைவிட்டு விட்டது ஏன்? இது நீதியா? என் நிலை கண்டு இரங்குவார் நின்னருள் பற்றி ஐயங்கொண்டு சிரிக்க மாட்டார்களா?
இறைவா, நின் புகழ் மாசுபடாமல் இருக்க என்னைக் காப்பாற்றுக! என்னைப் புறம்போக விடேல். என்னைத் திருத்தி நெறி நிறுத்துக. இது உன் கடமை. கடமை, பொறுப்பு இவற்றை நிறைவேற்ற வேண்டுமானால் தகுதி முதலியன பார்க்கமாட்டார்கள். நான் பாவியேன்! ஆனால், உன்னைப் பார்க்கத் தடை இல்லை. என் ஆளுடைய ஈசனே! என் வேண்டுகோள் முழுவதையும் நிறைவேற்று!
இறைவா, நீ என்னில் பிரியக்கூடாது. பிரியில் தரியேன். இனி நான் உன்னைப் பிரியேன்! இறைவா பட்ட பாடெல்லாம் போதும். இனி நான் தாங்க இயலாது. புறம்போக விடாது ஆட்கொண்டருள் செய்க!
நவம்பர் 6
யினருக்குப் பாதுகாத்தளிக்கும் ஆற்றலை அருள்க!
இறைவா, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவித்தருளும் என் தலைவா! "கடன்", "கடமை” என்ற சொற்களின் பொருள் எல்லை, இன்று குறுகிவிட்டது! இல்லை, உண்மையான பொருளும் வழக்கில் இல்லை.
இறைவா, இன்று நான் துய்த்து மகிழ்ந்து வாழும் மொழிகள், பொருள்கள், திருக்கோயில்கள் அனைத்தும் எனக்கு முன்னே பல நூற்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் முயன்று செய்து வைத்துவிட்டுப் போனவைகளே! அவற்றைத் துய்த்து மகிழ்கின்றேன்!
இன்றைய வாழ்க்கை முறை எவ்வளவோ உயர்ந்து விட்டது. பண்டு இருந்த துன்பங்கள் இல்லை. இந்த அளவுக்கு வாழ்க்கை எளிமையாகவும் இன்பந்தரத் தக்கதாகவும், முன்பு ஒரு நாளும் அமைந்ததில்லை.
பல நூறு ஆண்டுகள் துன்பப்பட்டு மனிதகுலம் வாழ்ந்த இயக்கிய வரலாற்றின் பயனே இந்த வாழ்க்கை இலக்கியம், கலை அனைத்தும் அப்படியே! இன்றைய திருக்கோயில்கள் உயிரனுபவத்திற்குரிய பண்ணைகள்!
இத்திருக்கோயில்களை முன்னம் பலர்கூடி, கட்டி, இன்று நம்முடைய அனுபவத்திற்குத் தந்துள்ளனர். ஆதலால், வழி வழி தரும் சமுதாய அமைப்பில் இன்று வாழ்வோர், சமுதாயத்திற்குக் கட்டுப்பட்டிருக்கின்றனர்! அது என்ன? நமது வாழ்வுக் களத்தை முன்னே வாழ்ந்தவர்களுக்கு - அமைத்துத் தந்தவர்களுக்குத் திருப்பித்தரப் போகிறோமா? அது இல்லை! இன்றைய வாழ்க்கையமைப்பைக் கேடு செய்யாமல் வளர்த்துப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குத் தருவதே நமது கடன்.
இறைவா, நான் துய்ப்பன ஒவ்வொன்றையும் என் வழித் தலைமுறையினருக்குப் பேணிப் பாதுகாத்துத் தரும் பொறுப்புணர்வைத் தந்தருள் செய்க!
நவம்பர் 7
அருள்க!
இறைவா, பெண்ணின் நல்லாளொடும் வாழும் பெருந்தகையே! திருஞானசம்பந்தர் "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்றருளிச் செய்துள்ளார். "மண்ணில் நல்ல வண்ணம் துய்த்தும் களித்தும் மகிழ்ந்தும் வாழ்ந்தால், இன்ப அன்பாகிய கதி வாராமல் போகாது” என்றருளிச் செய்துள்ளார்.
இறைவா, நாள்தோறும் சில மூடர்கள் வாழ்க்கையை ‘மாயை' என்கின்றனர். சம்சார சாகரம் என்கின்றனர். நிலையிலாதது என்கின்றனர்! இறைவா, என் மனம் மயங்குகிறது.
மூத்தபிள்ளையாரின் அருமறை வாக்கினை நடைமுறைப்படுத்துக என்று ஆணை பிறப்பிக்கிறாய்? இறைவா, நான் மண்ணில் வாழ்வதற்காகவே பிறந்தேன். என்னைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் துய்ப்பதற்குரிய பொருள்கள்.
பொருள்களைத் துய்ப்பதிலேயே வாழ்க்கை வளர்கிறது. ஆதலால், இறைவா, கொடிய விரதங்கள் எனக்கு வேண்டாம். ஆனால் மனம் விகாரப்படாமல் துய்த்துப் பழகுதல் வேண்டும். இஃது ஒரு கலை.
துய்ப்பது துய்ப்பதற்காகவே நிகழ்தல் வேண்டும். துய்ப்பது தேவை. துய்ப்பது ஆசையாக வளர்ந்து விடக்கூடாது. இறைவா, துய்ப்பன துய்க்க அருள்செய்க! மண்ணில் நல்லவண்ணம் வாழ அருள் செய்க!
இம் மண்ணையும் விண்ணகமாக்கும் அருள் நலஞ் சார்ந்த உழைப்பினைத் தந்தருள் செய்க! துய்க்கும் பொருள்களின் நலம் கெடாமல் பாதுகாத்துத் துய்க்கும் பாங்கினைக் கற்றுத் தா! இறைவா, துய்ப்பில் பூரணத்துவம் அடையும் அமர வாழ்வை வழங்கி அருள் செய்க!
நவம்பர் 8
உயர்நிலையை அருள் செய்க!
இறைவா, நீதியே! நான் உன்னை வணங்குகிறேன். திருவிழாக்கள் கொண்டாடுகின்றேன். நான் உனக்கு ஒரு பக்தன். இது என் புறவாழ்க்கை நிலை. ஆனால் இறைவா! என்னுடைய அகநிலையோ சொல்லுந் தரத்ததன்று. சம நிலையில் நிற்பது என்பது உயர்ந்த ஒழுக்கம். எனக்கும் சமநிலைக்கும் வெகுதொலைவு.
இறைவா, எனக்குத் தேவைப்படும் பொழுது யாரிடமும் அணுகுவேன். உறவு கொண்டாடுவேன். எனக்கு வேண்டாத பொழுது என்னை அணுகிவந்தாலும் நான் பார்க்க மாட்டேன். எனக்கு ஏன் இந்த மனநிலை? இப்படி ஒரு தன்முனைப்பு நிலை? இறைவா, கூடவே கூடாது. தன் முனைப்பு அறவே கூடாது.
இறைவா, ஆணவம் இல்லாமல் அடங்கிவாழும் அமர நிலையைத் தா. எந்தச் சூழ்நிலையிலும் நான் சம நிலையிலிருந்து பிறழக்கூடாது. இறைவா, அருள் செய்க!
அதிகாரப்பித்து வேண்டாம். வேண்டவே வேண்டாம். என்றும் எப்போதும் எல்லாருக்கும் நான் வேண்டியவனாகவே இருக்க அருள் செய்க! நடுவு நிலை பிறழாத நன்னெஞ்சத்தைத் தந்தருள் செய்க!
மற்றவர்கள் வாழ்வதைக் கண்டு மகிழும் பேருள்ளத்தினைத் தந்தருள் செய்க! மற்றவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியென மகிழ்ந்து வாழும் மிக உயர்நிலையை அருள் செய்க!
நவம்பர் 9
இறைவா அருள்க!
இறைவா, மனிதரை ஆட்கொள்ளும் தெய்வமே! மனித நேயம் மிக்க தலைவனே! எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகிய மனித நேயத்தின் ஒரு திவலையை எனக்கும் அருள் செய்க! மனித நேயம்! ஆம்! மனித நேயமே தத்துவங்களின் முடிவு! இலக்கியங்களின் பயன். சொர்க்கத்தின் வாயில்.
மனித நேயம் அன்பை வளர்க்கும். போரிடும் கெட்ட உலகத்தைச் சாய்க்கும். மனித நேயம் வேற்றுமைகளைக் கடந்தது. மனித நேயம் எல்லைகளைக் கடந்தது.
மனித நேயம் பயன் கருதாதது! பண்புகளில் சிறந்தது. மனித நேயம் ஆணவத்தின் பகை அன்பிற்கு ஊற்று. மனித நேயம் அன்பின் ஆக்கம்; உறவுகளின் அரண், ஒப்புரவு சார்ந்த ஒழுக்கம். மனித நேயமிக்க வாழ்வினை அருளிச் செய்க!
யார் மாட்டும் அன்பு காட்டும் விரிந்த இதயத்தைத் தா! பகைமை எனும் பெரு நெருப்பு அண்டமுடியாத அருள் வாழ்வினை அருள் செய்க: மனித நேயத்தை வளர்க்கும் முகனமர்ந்த இன்சொல்லினைத் தா!
பிறர் இன்புறுதல் கண்டு மகிழும் பேருள்ளத்தினை அருள் செய்க! இறைவா, அர்ப்பணிப்பு உணர்வுடன் வையகம் வாழத் தொண்டு செய்யும் பெருவாழ்வினைத் தந்தருள் செய்க!
மனித நேயம் உயர்ந்தது. உயர்வற உயர்ந்தது! அறநெறி நிற்கும் வாழ்வே, அருள் நலம் சேர்க்கும் வாழ்வு. இறைவா, அருள் செய்க!
இறைவா! எல்லா உலகமுமாய் இருக்கின்ற இறைவா! வாழ்க்கை வெள்ளத்தில் நின்றவர்கள் சிலர். அவர்கள் உன்னை நினைந்து ஆட்பட்டவர்கள். உன் கருணையால் நின்றவர்கள்-நிற்கின்றவர்கள்.
"உண்ணாமலும் நீர் பருகாமலும் இருக்கமுடியும். ஆனால் இறைவனை எண்ணாமல் பிரார்த்தனை இல்லாமல் என்னால் ஒரு நொடி கூட இருக்க முடியாது” என்றார் அண்ணல் காந்தியடிகள். இறைவா, எனக்கும் இந்த வரம் வேண்டும்!
இறைவா, உன்னை எப்போதோ ஒருநாள் கும்பிடுகிறேன். எனக்கு இடர்ப்பாடுகள் வந்த பொழுது விரைந்து உன் சந்நிதிக்கு வருகிறேன். ஆனால் என்றும் எப்பொழுதும் உன் நினைவு எனக்கு இல்லை. இறைவா, மன்னித்தருள் செய்க!
இறைவா, இமைப்பொழுதும் நின்னை மறவாமை வேண்டும். இறைவா, உனது அருள் நலங்கனிந்த திருவடி களை நிறைந்த வண்ணம் வாழ்தல் வேண்டும். நினது அருட் புனலில் என் நெஞ்சம் நனைதல் வேண்டும். பத்திமை தோய்ந்த பெரு வாழ்வினை அருள் செய்க!
இறைவா, உன் திருநாமமே எனக்கு நிதியாக வைத்த பொருள்! என் சித்தத்தை நின் திருநாமத்தைச் சிந்திப்பதில் ஈடுபடுத்துதல் வேண்டும். உனக்குப் பணி செய்ய உன்னை எந்நாளும் நினைக்க வேண்டும். உன் திருக்கோயில் வலம் வருதல் வேண்டும்.
உன் திருக்கோயிலைத் துய்மை செய்ய வேண்டும். உன் புகழ் பாட வேண்டும். என் நா நின் திருநாமத்தை மறத்தல் கூடாது. என் நெஞ்சு நின்னை மறத்தலாகாது. இவ்வண்ணம் வாழ அருள் செய்க!
இறைவா! காரைக்கால் அம்மையை "அம்மை" என்று அழைத்த அண்ணலே! காரைக்காலம்மையார் தலையால் நடந்து கயிலையை அடைந்ததாகக் கூறுவர். நானும் தலைகீழாக நடக்கவே முயலுகின்றேன்.
ஆம். இறைவா! என்னை நாலு வார்த்தை புகழ்ந்து சொன்னால் போதும். அந்தப புகழ்ச் சொற்களை நான் முகமன் என்று எடுத்துக் கொள்வதில்லை. அல்லது ஆர்வ மூட்டும் சொற்களாக எடுத்துக் கொள்வதில்லை.
என்னைப் புகழ்ந்தால் புகழுக்கு உரியவனாகவே ஆகி விடுகிறேன். அதுமட்டுமா? தலை கனத்து விடுகிறது. உடனே உலகியலுக்கு உரிய "நடை" முதலியன இல்லாமல் தலை கீழாக நடக்கிறேன். நீ என்னைத் தடுத்தாளக் கூடாதா? இறைவா! தடுத்து ஆட்கொள்க!
திருக்கோயிலில் சண்டீசர் சந்நிதி உள்ளது. சண்டீசர், கடமைகளை நியமமாகக் கொண்டொழுகியவர். பெற்ற தந்தை என்ற பாசத்தைக் கூடக் கடந்து குறிக்கோளை உயிரெனக் கொண்டவர். தமது குறிக்கோளுக்கு இடையூறாக இருந்த தந்தையின் காலையே தடிந்தவர்.! உன்னால் சண்டீசப் பதம் அளிக்கப் பெற்றவர். அவர் சந்நிதி கூட சின்ன வாயில் உடையது.
இறைவா, நான் எதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்? ஏதோ கிடைத்த வேலைகள் சிலவற்றைச் செய்கிறேன். இது சீரான வாழ்க்கையன்று. தலைகீழான வாழ்க்கை இந்தப் பொய்ம்மையான வாழ்க்கையிலிருந்து எடுத்தாள்க. குறிக்கோளில் நிற்கும் வாழ்வைத் தருக! அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் பாங்கைத் தருக!
இறைவா, தொழுது எழும் மக்கள் வினையை நீறாக்கும் வண்ணம் நீறணியும் அம்பலத்தரசே! திருநீறு உன்சின்னம்! உன்னை நினைவூட்டும் அடையாளம். உன்னை நினைக்கத் துரண்டும் துரண்டுகோல்.
இறைவா, திருநீறு தோற்றுவிக்கும் மங்கல விளைவு களுக்காக, திருநீறு அணிந்தாரையே போற்றினர். பாராட்டினர். இறைவா, நாள்தோறும் தூயவெண்ணிறு அணிந்து உன்னை - உன் திருநாமத்தை நினைந்திடும் இனிய பேற்றினை அருள் செய்க!
பூசுந் திருநீற்றினைப் போலவே என் உள்ளமும் தூய்மையாக இருந்திட அருள் செய்க! மனத்தது மாசாக வாழ்தல் நன்றன்று. உடல் தூய்மை எளிதில் அமைந்து விடுகிறது.
ஆனால், மனத்துய்மைக்குரிய வாய்மை, வாழ்க்கையில் எளிதில் வந்து அமைவதில்லை.
வாய்மையை நல்கும் அன்பு, என் நெஞ்சத்தில் வந்து பொருந்துவதில்லை. நான் உடல் வசப்படுகின்றேன். உடல் தன்னலமே நாடுகிறது. அதற்குரிய துணையாகிய உயிர்க்கு ஊதியம் தேட அனுமதிப்பதில்லை.
உணவைத் தேடியலையும் நான், உணர்வினைத் தேட அருள் செய்க! வாய்மையில் வழாது நிற்க அருள் செய்க! மன்றுளானே! மனத்துய்மையை அருள் செய்க! மனத் துய்மை காத்து வாழ்ந்திட வழிகாட்டி அருள் செய்க!
இறைவா, மூவர் தலைவனாய் விளங்கும் முதல்வா! எந்த உலகத்திலும் முழுமையான ஒருமைப்பாடு இல்லை. இறைவா, அமரர் உலகத்திலும் ஆயிரம் ஆயிரம் சண்டைகள், மானிட சாதியில் கேட்கவே வேண்டாம். கூடி வாழ்தல் என்பது இயற்கை வாழ்வு.
கூட்டுறவுப் பண்பு இயற்கைப் பண்பு. அன்பில் தழைக்கும் பண்பு; பிறர்க்கென முயலும் நோன்பில் உருவாகும் பண்பு; ஒப்புரவறிந்து ஒழுகும் உயரிய ஒழுக்கமே கூட்டுறவுப் பண்பு. இறைவா, வையகத்தில் கூட்டுறவு செழித்து வளர அருள் செய்க!
கூட்டுறவு வாழ்க்கை, சீலம் செறிந்த வாழ்க்கை இறைவா, பலர் கூடினால் கூட்டுறவாகிவிடாது. பலர் ஒரு செயலில் ஈடுபட்டிருப்பதால் கூட்டுறவாகிவிடாது. ஒரே சிந்தனை வேண்டும். ஒரே மனம் வேண்டும்! இறைவா, நடக்கின்ற காரியமா? பலருக்கு மனமே இருக்கிறதா என்பது ஐயப்பாடு.
பலர் சிந்திப்பதில்லை. இல்லை! சிந்திக்கவே மறுக்கின்றனர். இறைவா, இந்தச் சூழ்நிலையில், பலர் விரும்பு வதையே நான் விரும்பினால் ஒரே மனம் வந்து விடுகிறது. மனத்தின் தொடர்ச்சியாகச் சிந்தனையும் வந்து விடும்.
இறைவா, நாங்கள் சிலராவது ஒரே மனம், ஒரே சிந்தனை உடையவர்களாக வாழ்ந்திட அருள் செய்க! எங்களுக்கு ஒரே மனத்தினை வழங்கியருள்க! ஒரே சிந்தனையை அருள் செய்க! நான் ஒரு சிறந்த கூட்டுறவாளனாக வாழ அருள் செய்க!
இறைவா! அறவாழி அந்தணனே! நான் வாழ ஆசைப்படுகின்றேன். நெடிய நாட்கள் வாழ ஆசைப்படுகின்றேன். நலத்துடன் வாழ ஆசைப்படுகின்றேன். ஆனால் நான் நினைக்கின்றபடி நடக்கவில்லையே! நான் வாழ முடிய வில்லையே! பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கின்றேன்.
என் வாழ்வில் நலம் என்பது நான் கனவில் கூடக் கண்டதில்லை. ஒவ்வொரு நாளும் இன்றோ, நாளையோ சாவு என்று, நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இறைவா, நீ எனக்கு வழங்கியதெல்லாம் நல் வாழ்வுதானா? இறைவா, நானேதான் கெடுத்துக் கொண்டேனா? என்னை மன்னித்துவிடு!
வாழ்க்கையின் இயற்கையாக அமைந்த நியதி கூடி வாழ்தல், ஒத்துழைத்து வாழ்தல், ஒப்புரவாக வாழ்தல் ஆகியன. இறைவா, உண்மை, உண்மை. இந்த விதிகள் என் வாழ்க்கையின் நியதிகளாக இல்லை.
நான் கூடித்தொழில் செய்து வாழவில்லை. ஒத்துழைத்தல் என்பது இல்லவே இல்லை! ஒருமைப்பாடு இல்லை. இறைவா, என் வாழ்க்கையை ஆரவாரமான போட்டிகள் தாம் உந்து சக்தியாக இருந்து இயக்குகின்றன. அதனால் கூட்டுறவுப் பண்பு இல்லை. கூட்டு வாழ்க்கை இல்லை.
இறைவா, நான் சாவூருக்குச் செல்லும் வழியில் செல்லுகின்றேன். ஆனால், வாழ ஆசைப்படுகின்றேன்! இறைவா, சாவூருக்கு அழைத்துச் செல்லும் தன் முனைப்பு, ஆதிக்க உணர்ச்சி, சிறிதும் நலமில்லாத போட்டிகள், இவை நிறைந்த வழியிலிருந்து நான் திரும்பி வாழ்வூருக்கு வழியாகிய கூட்டுறவு வாழ்க்கை வாழ அருள் செய்க!
இறைவா, உய்வார்கள் உய்யும் வகையில் ஆட்கொண்டருளும் கடவுளே! என்னை ஆட்கொள்வதற்குக் காலந்தாழ்த்துவது ஏன்? நான் உய்யுமாறு எங்ங்னம்? நான் உய்யும் நெறி எது? என்றெல்லாம் எண்ணாது, நீ அருள் செய்யவில்லை. நீ அருள் செய்யும் பாங்குடையான் இல்லை என்று கூறுவது எவ்வளவு பேதைமை !
இறைவா, நின் அருளுக்கு நான் பாத்திரமாக வேண்டாமா? சிந்தையில் தெளிவினைத் தந்தருள் செய்க! கருவுற்றநாள் முதல் உடனிருக்கும் கூட்டாளிகள் ஐவரின் கூட்டை நீக்கு அல்லது அவர்களுக்கு மடை மாற்றம் தந்து நன்னெறிப்படுத்துக. இந்த ஐவர் என்னுடன் ஒத்துழைத்தாலே நான் உய்தி பெற்றுவிடுவேன். இறைவா, அருள் செய்க!
நின் திருநாமம் மறவா நெஞ்சினை அருள் செய்க! உன்னுடைய பொருள் சேர் புகழையே கேட்கும் புண்ணியப் பேற்றினை அருள் செய்க! உன்னை நினைந்து ஆடி மகிழ அருள் செய்க! என்புருகிப் பாட அருள் செய்க! நின் திருவடி களுக்கு அரும்பொடு மலர்தூவித் தொழுது அரற்றிட அருள் பாலித்திடுக.
இறைவா நின் திருவடிகளை என் தலைக்கு அணியாகச் சூட்டிக் கொண்டு மகிழ அருள் செய்க! என்னை நின்னருள் பெறுவதற்குத் தகுதியில்லை என்று புறத்தே தள்ளாதே! துடைக்கினும் போகேன். நின் அருள் என் ஆவி! ஆவி காத்திட நின்திருநாமம் மறவா நெஞ்சினை அருள் செய்க!
இறைவா, அன்பின் வலையில் அகப்படும் அரும் பொருளே! உள்ளவாறு அன்பு செய்ய எனக்குக் கற்றுக் கொடு. ஆற்றல் மிக்க அன்பினை நான் பெற அருள் செய்க!
எல்லா உயிர்களையும் ஈர்த்துப் பிணிக்கும் இணையற்ற அன்பினை யான் பெற அருள் செய்க. இந்த மண்ணகத்தை விண்ணகமாக்கும் தூய அன்பை அருள்பாலித்திடுக. அன்பிலே கரைந்து ஒருலகமாகும் உன்னதப் பேற்றினை அருள் செய்க!
மானுடத்தை வாழ்விக்கும் வளமார்ந்த அன்பினை அளித்தருள்க. ஈரநெஞ்சினை நயந்தருள் செய்க! ஆருயிர் களுக்கு எல்லாம் நான் அன்பு செய்யும் வாழ்க்கையினை அருள் செய்க. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்யும் அன்பினை அளித்தருள்க!
பழகிய நட்பைத் தலைநாள் நட்பே போல வளர்த்துக் கொள்ள வழி காட்டுக! மற்றவர் கீழ்மையைத் தாங்கிக் கொள்ளும் அயரா அன்பினை அருள் செய்க. அருளினை ஈன்றருளும் அன்பினை அருள் செய்க!
இறைவா, நின் திருவடிக்குத் தொழும்பாய் ஆட்படும், அசைவில் அன்பினை அருள் செய்க என்னுடைய அன்பே! ஆண்டவா! அனைத்துலகமும் அன்பில் இயங்கட்டும்!
அன்பே உயிராக வாழ்ந்திடும் வகையினைக் கற்றுத் தந்திடுக. வையகம் சிறந்திடும் அன்பு யாண்டும் முகிழ்த்திடுக. முன்னே வந்தருள் செய்க. அன்பே சிவமாய்ச் சிந்தித்து வாழ்ந்திட அருள் செய்க!
இறைவா, அம்மை நீ! அப்பன் நீ! ஐயனும் நீ! அன்புடைய மாமனும் மாமியும் நீ! என்றெல்லாம் உறவு முறை காட்டி, உயிர்களிடத்தில் அன்பினாலாய இணக்கத்தை வளர்த்திடத் திருவிளையாடல் செய்தருளும் இறைவன் நீ!
ஆனால், என்னிடத்தில் உறவுப் பண்பு இம்மியும் கால் கொள்ளவில்லையே? இன்று தாய் - மகவு உறவு சீராக இல்லை. தந்தை மகன் உறவு சொல்லவே வேண்டாம். உடன் பிறந்தான் உறவும் பங்காளிக் காய்ச்சலாக மாறிவிட்டது.
இறைவா! இந்த உலகத்தில் பொருளாதாய வாழ்க்கை என்னைப் பாழ்படுத்தி விட்டது. இறைவா, என்னை எடுத்தாள்க. காப்பாற்றுக. மற்றவர்களுக்காக வாழும் அர்ப்பணிப்பு உணர்வினை உவந்தருள் செய்க!
அன்பினாலாய உறவுகளே இந்த உலக வாழ்க்கையின் பயன் எனக்கருதி, வாழ்ந்திடும் பேருள்ளத்தினை வழங்கிடுக. அனைத்துயிரும் சிவனருள் பெறும் பாத்திரங்கள் என்று கருதி அன்பு செய்யும் உள்ளத்தினைத் தா. ஆற்றலினைத் தா.
மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பூட்டும் இணையற்ற அன்பினை ஏற்றொழுகிட அருள் செய்க! பிணக்கை நீக்கி உயிர்க்குலத்தை வாழ்வித்திடச் செய்யும் அன்பினை அருள் செய்க!
தியாகப் பெருவாழ்வுக்குரிய அன்பினை அருள்செய்க! அன்பினாலாய உறவில் உலகம் ஒன்றாகிட உவந்தருள் செய்க!
இறைவா, "சினமடங்கக் கற்றிலை" என்ற அறிவுரை வாழ்க்கையாக உருக்கொள்ள வேண்டும். இதுவே என் பிரார்த்தனை சேர்ந்தாரைக் கொல்லும் நெருப்பாகிய சினத்திலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும்.
சினம் கொள்ளுதலுக்குக் காரணங்கள் இல்லாமற் போகா! அதனால் நான் சினம் கொண்டு என்னாவது? சினம் கூடவே கூடாது! வேண்டவே வேண்டாம்! சினத்தின் வாயில்களையே அடைத்திட அருள் செய்க!
இறைவா, பணிகளைத் திட்டமிட்டபடி செய்யாமையால் எழும் சினமே மிகுதி. காரியக் கேடுகள் ஏற்படும் பொழுது சினம் வருகிறது. ஏன், நான் காரியக் கேடுகள் வரும் வரையில் வாளா இருக்க வேண்டும்? ஏன் பணிகளில் பலரை நம்ப வேண்டும்?
நான் முறையாகத் திட்டமிட்டு உறுதியாகப் பணிகளைச் செய்து வந்தால் காரியக்கேடு வராதல்லவா? நான், எனக்கு மற்றவர்கள் உபயோகப்படுவார்கள் என்று எண்ணி வாளா இருப்பானேன்?
மற்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்வதுதான் முறை - நடைமுறை சாத்தியம் என்ற உணர்வை உணர்த்தியருள்க. மறந்தும் ஏமாறக்கூடாது. சினத்தைத் தரும் ஏமாற்றங்களிலிருந்து விடுதலை பெற எப்போதும் விழிப்பு நிலையில் இருந்திட அருள் செய்க! நம்பியும் நம்பாமலுமிருத்தல் என்பதுதான் வாழ்க்கை நெறி முறை என்றறிய அருள் செய்க!
அழுக்காறு அவா வேண்டாம் என்ற விருப்பத்தினை அருள் செய்க. சினத்தின் காரணங்களை அறிந்து மாற்ற அருள் செய்க, சினத்தின் வாயில்களையும் அடைத்திட அருள் செய்க! சினமடங்கக் கற்றுக் கொடு. அமைதி தவழும் இனிய வாழ்க்கையினை அருள் செய்க!
இறைவா, ஒழுங்கியல் அமைந்த உலகைக் கண்ட தலைவா! எனக்கு ஒழுங்கினைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தந்தருள் செய்க. ஒழுங்கில் உறுதியை அருள் பாலித்திடுக!
என்னுடைய முப்பத்திரண்டு பற்களும் ஒழுங்காக, வரிசையாக அடுக்கப் பெற்றிருப்பதால்தான் அழகாக இருக்கின்றன. உணவை அரைக்கப் பயன்படுகின்றன, ஒலிக் காற்றை முறைப்படுத்திச் சொற்களாக்கித் தருகின்றன! இதை நான் அன்றாடம் காண்கிறேன். ஆனால், வாழ்க்கையில் ஒழுங்கமைவுகள் இடம் பெறுவதில்லை!
காலால் நடப்பது மட்டும் நடையன்று. தமிழ் வழக்கில் 'நடை' என்றால் ஒழுக்கம். இன்று காலால் நிலத்தில் நடப்போர் பலர் சமூக அமைப்பில் தலையால் தருக்கி நடக்கின்றனர். இறைவா! என்னைக் காப்பாற்று.
ஒழுங்கினைக் கற்றுத் தந்து ஒழுங்கமைவினை அன்றாட வாழ்க்கையில்-பணியில் ஏற்கும் படி அருள் செய்க. நன்றுடையானே! நன்னடை அருள் செய்க! கடமைகளைச் செய்வதில் கால நியதி ஒழுங்குகள், சிந்தனையில் ஒழுங்குகள், நடைமுறை வாழ்வில்-பணிகள் இயற்றுவதில் ஒழுங்குகள் அருளிச் செய்க!
காலத்தொடு நிற்றல் கடமைகளைச் செய்தல், எண்ணக் குவியல்களில் ஒழுங்கமைவுகள், உறவுகளில் ஒழுங்கமைவுகள்-அருளிச் செய்க!
ஒழுங்குகளின் பயனாகிய ஒழுக்கத்தினை அருள் செய்க! எம் உயிரினும் ஒழுக்கம் சிறந்ததெனக் கருதிப் பயின்றிடும் பாங்கினை அருள் பாலித்திடுக!
இறைவா, சாதி, குலம், பிறப்பு எனும் சுழிப்பட்டுத் தடுமாறும் என்னையும் ஆட்கொண்டருளும் தலைவா! "ஒன்றே குலம்" என்பது நான் கற்றது. நான் விரும்புவது!
ஆனால் இந்தப் பொல்லாத உலக அமைப்பு எண்ணற்ற பிரிவினைகளை உண்டாக்கி விட்டது! அந்தப் பிரிவினைகள் என்னைச் சுற்றி இருப்பவர்களிடத்தில் ஆழ மாகப் பதிந்துள்ளன. அவர்கள் அந்த உணர்வோடு என்னை அணுகுகின்றனர்.
இறைவா, நீயோ எனக்கு நுண்ணுடல் மட்டும் தான் தந்தனை. இந்த மண்ணுலகில் பலரறிய நடமாடும் இந்தப் பருவுடலை எனக்கு என் தந்தையும் தாயும் பெருங்கருணையுடன் தந்தனர்.
என் பெற்றோருக்கு ஒரு சாதி இருந்தது. குலம் இருந்தது. என் பெற்றோர் குலம், என் குலம் என்பது தவறல்லவே. இந்த அடிப்படையில் பலர் எனக்குச் சுற்ற மெனச் சூழ்ந்து வருகின்றனர்! எனக்கு அறச்சங்கட நிலை! இறைவா, என்ன சொல்கிறாய்! சுற்றம் போற்றுதல் தவறன்று.
குலம் தழீஇய வாழ்க்கை நிறையுடையதே. மனித குலத் தினின்றும் பிரிதல் கூடாது. வேற்றுமை கூடாது. அப்படியா, இறைவா, எனக்கு வேற்றுமையற்ற ஒருகுல உணர்வைக் கொடு. பிரிவினைகளை விரும்பாத பேருள்ளத்தினை அருள் செய்க!
மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப்பார்த்துப் பரிவுடன் கூடி வாழும் அருள் நெஞ்சத்தினை வழங்குக. நான் பிறந்து வளர்ந்த சுற்றந் தழிஇநின்று பேணும் பெருவாழ்வை அருள் செய்க!
இறைவா, ஞாலமாய் இவை வந்து போம் காலமாய் நின்றருள்பவனே! நின் சோதனைகளை ஏழையாகிய என்னால் தாங்க இயலவில்லை. பெற்ற தாயின் அன்பு எவ்வளவு உயர்ந்தது. அதனை நுகர்ந்தே மகிழ்ந்து வாழ்ந்து சாகலாம் என்றால், இடையில் தட்டிப்பறித்து விடுகிறாய். இது என்ன சோதனை!
இறைவா உனக்குக் கல்நெஞ்சமா? ஏன் உன்னையே காண்கிறேன். பேசி மகிழ்கிறேன்! உடனே ஓடி ஒளிந்து விடுகிறாய். ஏன் இந்தச் சோதனை இறைவா? இறைவா நன்றருளிச் செய்தனை! இந்த உலகின் அமைப்புகள் அனைத்தும் கடமைகளின் வழிப்பட்ட அமைப்பு. கடமைகளின் வழி மாறி மாறிச் சுழலும்.
ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் செய்யும் பொறுப்பேற்க வேண்டும். சார்பு இருந்தால் பொறுப்பு வராது. அதனால் பொறுப்பேற்கும் பருவத்தில் காலத்தில் பிரிகின்றாயே! அப்படியா இறைவா!
நல்லவர்களுக்குப் பிரிவு அன்பை வளர்க்கும், கடமை உணர்வைத் தூண்டும். இறைவா, உன்பால் என்னுடைய அன்பு நிரந்தரமாக ஊற்றெடுக்கப் பிரித்தருள் செய்கிறாய்!
நானே என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பேற்க என் தாயைப் பிரிந்தாய்! இறைவா, படைப்பியக்கத்தின் நுட்பம் புரிகிறது. மரணங்களின் உண்மை புலனாயிற்று.
நான் செத்தவர்களுக்காக அழமாட்டேன். அவர்கள் எதற்காகச் செத்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவேன். வாழ்க்கை குறிக்கோளுடையது.
இறைவா, குறிக்கோளினை நோக்கி என் வாழ்க்கையை இயக்குக!
இறைவா, தீதிலா நன்மைத் திருவருட் குன்றே! நின் தீதிலா நன்மைக் காட்சியை அடியேனுக்கு அளிக்கக் கூடாதா? தீதிலா நன்மையை நான் என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்படி ஆற்றுப்படுத்தி அருள் செய்யக் கூடாதா?
இறைவா, இன்று என் வாழ்க்கையில் என்னைச் சுற்றிலும் தீதுடைய நன்மைகளே நடைபெறுகின்றன. இல்லை, இல்லை. இறைவா! தீமையை நன்மையென்று கருதிச் செய்கிறேன்.
இறைவா, நான் என்ன செய்ய? தீமை மிகுதியும் உடைய நன்மையையே நான் நன்மை என்று கருதியுள்ளேன். அது மட்டுமா? இறைவா! நீ மற்றவர்களுக்கு அமுதத்தினைக் கொடுத்தாய். நீ நஞ்சை உண்டாய். என் வாழ்க்கையில் தலைகீழ்ப்பாடம்.
நான் மற்றவர்களுக்கு நஞ்சினைத் தருகிறேன். நான் அமுதத்தை விரும்பி உண்கிறேன். இத்தகு தற்சார்பான வாழ்க்கைக்கு "வள்ளல்" பட்டம் வேறு! இறைவா, என்னைக் காப்பாற்று! நான் தீதிலா நன்மையாகிய வாய்மையை ஏற்று ஒழுக அருள் பாலித்திடுக.
என்னைப் போலவே மற்றவர்களும் என்று கருதி அவர் தம் வாழ்வுக்குரிய நன்மைகளை நாடிச் செய்ய அருள் பாலித்திடுக! நன்மை தொண்ணூற்றொன்பது பங்கும் தீமை ஒருபங்குமாக இருந்தாலும் பாலில் நஞ்சு கலந்தாற் போன்றது என்ற அறிவினை எனக்குத்தா. நான் நன்மையை எண்ண அருள் செய்க! நன்மையே செய்திட வாழ்த்தி அருள் செய்க!
இறைவா, நான் தீதிலா நன்மையுடையோனாக-நன்மையே செய்வோனாக வாழ்ந்திட அருள்செய்க! யாண்டும் எங்கும் தீதிலா நன்மையே வளரும்படி அருள் செய்க!
இறைவா, எந்தையே! நின் திருவடி போற்றி! இறைவா! "நான் யார்?" என்று ஆய்வு செய்தால் அல்லவா நான் உய்தி பெறலாம். நான் யார்? இந்த உடலா? உடலினும் வேறாய உயிரா? இல்லை, நானே கடவுளா? "நான்’ நானேதான்! எனக்குப் பெயர் "உயிர்” அல்லது "ஆன்மா” என்பது.
நான் என்றுமே உள்ளவன். எனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. நான் ஒரு அறிவுப் பொருள். எனக்குச் சுதந்தரம் உண்டு. என்னிடம் குறையும் உண்டு. நிறையும் உண்டு.
இறைவா, என்னைப்பார்! நான் என்பதற்குப் பொருள் கற்றுக்கொடு! நான் மரபால் உனக்கு மகன், தொண்டன் என்று உணர்த்துக. நீ என்னை அறிவில் வளர்த்திடுக! நான் உய்தி நெறியில் செல்ல ஆர்வப்படுத்துக.
இப்பிறப்பிலேயே இன்ப அன்பினை எய்திட அருள் செய்திடுக! இறைவா, அட்ட மாசித்திகளும் தா! ஆனால் அவை எனக்குத் துணையாக இருக்க நின் திருவடிக்காட் செய்யும் பேற்றினை அருள் செய்க!
இறைவா, நின் நிழலில் வாழும் நிலையினை அருள்க! நின் அருளில் திளைத்து வாழும் வாழ்க்கையை அருள் செய்க! நான்மனிதன்! மனிதனாகவே வாழ அருள் செய்க!
இறைவா, நீலமணிமிடற்றினை உடையவனே! நின் தோழன் நம்பியாரூரரின் கண்களைப் பறித்த கண்ணுதல் பரம்பொருளே! இறைவா, என் வாழ்க்கையில் ஓரம்சாரும் தீய இயல்பு இருக்கிறது.
வன்கணாளர்கள் என் இதயத்தைப் பறித்து விடுகின்றனர். இறைவா! ஒரு தராசு கூட தன்நிலையில் இருக்கிறது. நானோ, என்னிலையில் இல்லை; இருக்க முடியவில்லை. இறைவா, என் பிழை பொறுத்தாட்கொள். நான் நடுவுநிலை பிறழ்தல் கூடாது.
இறைவா, நான் எனக்காகப் போராடினால் விலங்கிற்கும் எனக்கும் என்ன வேற்றுமை? நான் என் வாழ்நாள் முழுதும் மற்றவர்களுக்காகவே போராடுமாறு அருள் செய்க! வல்லாங்கு வாழ்வாரிடம் வாழ்விழந்து அல்லற்படும் சாதாரண மக்களுக்காகப் போராடும் தூய வாழ்க்கையை அருள் செய்க!
இறைவா, எந்தச் சூழ்நிலையிலும் நீதியின் பக்கமே நிற்கும் பெற்றிமையை அருள் செய்க, இறைவா, நீயே நீதி! இறைவா, என்னை அதிகாரம், செல்வம் இவை விலை கொள்ள முடியாவண்ணம் முறைபிறழா நடுவுநிலையில் நான் நிற்க அருள் செய்க!
இறைவா, இச்சைகள் மிகுதியும் நிறைந்த தற்சார்பான ஆசைகள் என் வாழ்க்கையின் சீலத்தை அரித்தழிக்கா வண்ணம் நடுவுநிலைமையை உயிரெனப் பற்றி ஒழுகும் பெற்றிமையை அருள் செய்க!
ஆதியே! அந்தமே! நடுவே! என் வாழ்க்கையின் பயனே! நான் ஒரு நடுவு நிலையினனாக நின் நீதியைச் சார்ந்தே வாழ்ந்திட அருள் செய்க!
இறைவா, என்ன சிரிக்கிறாய்! நான் நகைப்பிற்கிடமானவனாகி விட்டால் உனக்குப் பெருமையா? அது எப்படி இறைவா? ஏன் என்னை இப்படி அவலப்படுத்துகிறாய்? எனக்கென்ன வாய் இல்லையா? பேசத் தெரியாதா? தர்க்கம் செய்யத் தெரியாதா?
இறைவா, நான் பேசியே கெட்டேன். உலகத்தின் இயக்கம் செயலாலேதான்! என்னை ஆண்டருள் செய்யும் பெருமானே! என் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பிற்குரிய உயர் பணிகளைச் செய்யத்தக்க வழியில் பயிற்சி கொடு.
என் கால்கள் நின் திருக்கோயில் வலம் வரட்டும்! என் கால்கள் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழந்தோர் வாழ்வு நோக்கி நடை பயிலட்டும். வயிறு, அற்புதமான உறுப்பு! ஓயாது உழைப்பது, உழைப்பின் பயனை உடல் முழுதுக்கும் தருவது, தூய்மை தழுவியது.
நெஞ்சு மனித நீதியில் நிவைத்து நிற்கட்டும். வாய் நின் புகழ் பேசட்டும். நின் புகழனைய வாய்மைக்கு வழக்காடட்டும். இறைவா, இந்தப்படி அருள் செய்! புதிய மனிதனாக்குக!
இறைவா, என்னைப் புதிய மனிதனாக்கி அருள்க! நெஞ்சம் நீதியில் நிலைத்திட அருள் செய்க!
இறைவா, நின் படைப்பின் அதிநுட்பத்தை அறியும் ஆற்றல் எங்களுக்கு ஏது? நீ எதிலும் உபரியிருக்கும் படியாகவே படைத்து இயக்குகிறாய். சான்றாக ஒரு வயிறு; இரண்டு கைகள், இரண்டு கால்கள்.
கைகளும், கால்களும் இணைந்து உழைத்தால்-முறையாக உழைத்தால் ஒரு வயிற்றுக்குப் போதாதா? இறைவா, போதும்! போதும்! கூடுதல் உழைப்பின் உபரியை நம் வாழ்க்கைக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் தரலாம்!
ஆனால், இறைவா வயிறு முட்டச் சாப்பிட நினைப்பது போல - எத்தனையோ பேருக்கு முழு உழைப்பு உழைக்க மனமில்லையே? சுவைத்து உண்ண ஆசைப்படுவது போலத் தமது கடமைகளைச் சுவைத்து மகிழ்ச்சியுடன் செய்ய மனம் வரவில்லையே?
குறைபட்ட உழைப்பெல்லாம் குறைகளைத்தானே தரும். குறித்த நேரத்தில் பசிக்கிறது என்றுகூறி உணவுக்குத் தேடி அலைகிறேன். என் உடலுக்கு நான் ஒரு வஞ்சனையும் செய்ததில்லை. ஆனால் குறித்த காலத்தில் வேலை தேடித்திரிவதில்லை.
சோம்பல், கடமைப் பசியைத் தணித்துவிட்டது. இது மட்டுமா? மற்றவர்கள் உழைக்க அவர்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்பு நடத்தும் ஈனத்தனம் வேறு. உழைத்துண்ணும் மனிதனாக என்னை மாற்றுக!
கடமைகளைத் தேடி அலையும் மனம் தா! கிடைத்த கடமைகளையெல்லாம் பெரியது சிறியது என்று பாராமல் செய்யும் மனப்பாங்கைத்தா! கடமைகளை முழுமையாகச் செய்தலே நிறைவான வாழ்க்கையை அமைக்கும் பாதை. நான் உழைத்து வாழவே விரும்புகிறேன். உழைத்து, வாழும் மனம் தா. இறைவா, அருள் செய்க!
இறைவா, புலித்தோல் உடுத்திய முதல்வா! உண்மையைச் சொல்! சமஸ்கிருதம், தமிழ்-இவ்விரண்டு மொழிகளில் எந்தமொழியைக் கேட்பதில் உனக்கு விருப்பம் அதிகம்?
இறைவா, நாடறிந்த ஓர் உண்மைக்குக் கேள்வியா என்று கேட்கிறாய்? ஆம், இறைவா! இன்று சிலர் சமஸ்கிருதம்தான் உனக்குரிய மொழி, தமிழ் அல்ல என்று கூறுகிறார்கள். வழக்காடுகிறார்கள். நீ உன் விருப்பத்தைச் சொல்லி வழக்கைத் தீர்த்து வைக்கக் கூடாதா?
நீ அன்று படிக்காசு கொடுத்துப் பைந்தமிழைக் கேட்டாய். பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெறுவதற்கு வைகை ஆற்றங்கரையில் மண் சுமந்தாய். சுந்தரரின் செந்தமிழுக்காகத் திருவாரூர்த் தெருவில் நடந்தாய்.
தமிழ் மந்திரத்தை எழுதி நெருப்பிலிட்ட ஏடு எரியவில்லை. வெள்ளத்தை எதிர் கொண்டு, கரை ஏறியது, ஆம், இறைவா! தமிழ், நீ விரும்பும் மொழி! இல்லை, இல்லை! தமிழே நீ! நீயே தமிழ்! என்ன இறைவா கூறுகிறாய்?
திருக்கோயில்களில் தமிழை அகற்றி, சமஸ்கிருதத்தை துழைத்ததால்தான் தமிழிருக்கும் இடம் தேடிப் போய் விட்டாயா அதனால்தான் உன்னைத் திருக்கோயிலில் தேடிப்பார்த்துவிட்டு, "கடவுள் இல்லை" என்று கூறுகிறார்களா?
இறைவா, எங்கள் தவறை மன்னித்து அருள்! நாங்கள் நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம். இறைவா, திருக்கோயிலுக்கு வா! எழுந்தருளி வாழ்த்துக!
இறைவா, நம்பிக்கைக்கு மிகுதியும் உரிய அண்ணலே! உன்னை நம்பியே கைதொழுகின்றேன்! இறைவா, என் நம்பிக்கை பொய்க்குமா? "நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” என்பர். இறைவா, வாழ்க்கையை இழுத்துச் செல்வது நம்பிக்கையேயாம்.
ஆனால் நம்பிக்கை என்பது வாழ்நாளின் தொடக்கத்தில்-காலை நேரத்தில் நல்லது. காலை உணவு உடலுக்கு நல்லது. இறைவா, காலை உணவு செரிக்கப் போதிய காலம் உள்ளது. உணவின் பயனாகிய உழைப்பை ஈடுசெய்யவும் இயலும். ஆனால் இரவு உணவோ பயன் குறைவுடையது.
இறைவா, வாழ்க்கையில் காலைப் பொழுதில் கொள்ளும் நம்பிக்கை, காலை உணவைப் போன்றது. மாலைப் பொழுது நம்பிக்கை என்பது இரவு உணவைப் போன்றது; பயன்குறைவானது.
என் வாழ்க்கையில் நம்பிக்கை கால் கொள்ளட்டும். காலை உணவு பயன்படுவதுபோல காலைப் பொழுதில் நான் கொள்ளும் நம்பிக்கை, நாள் முழுவதும் என் வாழ்க்கையே ஆவேசித்து நடத்தட்டும்.
இறைவா, நான் என்னை முதலில் நம்ப வேண்டும். என் ஆற்றலில் எனக்கு நம்பிக்கை வேண்டும். இந்த உலகத்தில் நான், என் வாழ்க்கையில் நிறையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
நம்பிக்கை எனது வாழ்க்கையின் ஆதாரமாகிட அருள் செய்க! என்னைச் சுற்றி இருப்பவர்களை நான் நம்ப வேண்டும். இறைவா, என்னுடைய வாழ்க்கையின் ஆதாரம் நம்பிக்கையே! இறைவா அருள் செய்க!
இறைவா, நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவனே! போற்றி! போற்றி! இறைவா, நான் யார்? என் உயிர் எது? இறைவா, என் உயிர், உடல் முழுதும் பரவி நீக்கமற நிறைந்து நிற்கிறது.
இறைவா, என் உச்சந்தலையில் உள்ள உரோமத்திலிருந்து கால் நுனியில் உள்ள நகம் வரையில் எங்கணும் என் உயிர் இருக்கிறது! ஆயினும் உயிரின் இயக்கம் மனத்தினாலேயாம்.
"மனமுண்டேல் வழியுண்டு” என்பதன் தத்துவப் பொருள் விளக்கம் என்ன? மனமிருந்தால் அறிவும் இயங்கும். இறைவா, என் மனத்தை மீட்டுத்தா!
இறைவா, என் மனத்தில் நீ எழுந்தருளியிருந்து கொண்டு என் மனத்தைப் புறம் போகவிடாமல் எனக்குத் துணையாக இருக்கும்படி அருள் செய்க. என் மனம் என்வசம் இருக்கும்படி அருள் செய்க! என் மனம் அட்டமாசித்தியும் இயற்றிடும் ஆற்றலைப் பெற்று விளங்க வேண்டும்!
இறைவா, மனம் போல வாழ்வு! என் வாழ்வும் மனமும் இசைந்தவை. நான் வாழ்ந்திட, வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க! மனமது செம்மையாகிப் புது வாழ்வு பெற்றிட அருள் செய்க! என்மனம்! ஆம், அதிசக்தி வாழ்ந்தது. என் மனோசக்தி தொழில்பட அருள் செய்க!
இறைவா, எனக்கு ஏன் இந்த ஆசை! ஆம், இறைவா வெளியில் தலைகாட்டிக் கொள்ள, அதாவது என்னை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள ஆசை! இது நல்லதா?
முந்திரிப் பழத்தில் கொட்டை வெளியே துருத்திக் கொண்டிருக்கிறது! அதனால் பழம் சுவையற்றுப் போய் விடுகிறது! ஒரே காரம்! கொட்டையும்கூட எளிதில் சுவைக்க முடியாத ஒன்று.
மாம்பழத்துக்குள் கொட்டை ஒடுக்கம். அதனால் பழம் சுவையாக இருக்கிறது. கொட்டைக்குள் இருக்கும் பருப்பும் மருத்துவத்திற்கு உபயோகம் ஆகிறது.
உலகின் எல்லா மரவகைகளின் வேர்களும் மண்ணிற்குள் மறைந்துதானே கிடக்கின்றன. ஆனால் மறைந்து கிடக்கும் வேர்களின் தொண்டால் மரங்கள் செழித்து வளர்கின்றன. மனிதகுலத்திற்குப் பயன்படுகின்றன.
இறைவா, எனக்கு ஏன் பெயர்? புகழ்? பெருமை? இவையெல்லாம் வளரும் வாழ்க்கையில் விழும் பூச்சிகளாகப் போய்விடும். வேண்டவே வேண்டாம். இறைவா. எங்கும் நின் புகழே நிலவுக! மற்றவர்கள் புகழே நிலவுக!
எனக்கு அடக்கமாக அமைதியாக இருக்கும் வரத்தைத் தா! பணி செய்யும் பண்பினைத் தந்தருள் செய்க! "என் கடன் பணி செய்து கிடப்பதே". இது என் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைய வரம் தா! இறைவா, அருள் செய்க!