குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சமய சமுதாய மறை

விக்கிமூலம் இலிருந்து


3. சமய சமுதாய மறை


முன்னுரை

திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் ஒரு சிறந்த அறநூல்; முழுதுறழ் அறநூல் மறைநூல்; பொதுமறை நூல்: மனிதராகப் பிறந்தோர் பேசும் எம் மொழியிலும் இது போன்றதொரு இலக்கியம்-அறநூல் தோன்றியதில்லை. புறநானூறு ‘அறம்பாடிற்றே’[1] என்று திருக்குறளைச் சிறப்பித்துக் கூறுகிறது. உமாபதி சிவம் ‘மெய் வைத்த சொல்’[2] என்று பாராட்டுவார். இருபதாம் நூற்றாண்டில் மனித இதயம் படைத்த மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர், “திருக்குறளுக்கு ஒப்பான நீதி நூல் எதுவுமில்லை” என்று புகழ்ந்துள்ளார். திருக்குறள் கற்பனையில் தோன்றியதன்று. திருக்குறளில் அதிசயம் கிடையாது; அற்புதம் கிடையாது; புனைந்துரையில்லை. மனித உலகத்தை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல். “இது” என்றும் “அது” என்றும் இரண்டாட்டுகின்ற சமயக் கணக்கர் வழியினின்றும் விலகிய பொது நூல். ஓருலகம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய நூல் திருக்குறளேயாம். திருக்குறள் நெறி, வையகத்தில் வாழ்க்கையாக மலருமானால், வீட்டுக்கு வீடு இடையில் இருக்கும் சுவர்கள் இடிபடும். நாட்டுக்கு நாடு இடையில் உள்ள எல்லைக் கோடுகள் மறையும். உலகம் ஒன்றாகும். மானிடச் சாதி ஒரு சாதியாக உருவெடுக்கும். எங்கும் பொதுமை நிலவும்! எல்லோரும் வாழ்வர்; இத்தகு பெரு நூலை- அரிய நூலைத் தந்த திருவள்ளுவர் திருவடிகளைப் போற்றுவோமாக அவர் காட்டிய வழி வாழ்வோமாக.

மறை நூல்

ஒரு சமுதாயத்தை வழிநடத்தி வாழ்விக்கும் சமய நெறிக்கு மறைநூல் வேண்டும். மறை என்பது தமிழ்ச் சொல். அதனையே வேதம் என்றும் கூறுவர். நமது சமயத்திற்கு எது மறை? இந்து சமயத்திற்கு எது மறை? மற்ற சமய நெறிகளுக்கு இருப்பதுபோல நமக்கென்று ஒரு மறை இல்லை; பலர் பலவிதமாகக் கூறுகின்றனர் என்ற குறை தொடர்ந்து இருக்கிறது. இந்த நிலைநோக்கி அறிஞர்களும் கவல்கின்றனர். மறை நூல் இல்லாது போனால் எங்ஙனம் சமுதாயத்தை ஒருமைப்பாடுடைய தாக்க முடியும்? என்பது அவர்கள் கவலை. ஆனால் உண்மையில் நமக்கொரு மறை இல்லாமலா போய்விட்டது? நமக்கென்று ஒரு மறை உண்டு. ஆனால், அதைத் துணிந்து மறை நூலாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றோம். தொல்காப்பியத்திலேயே மறை நூல் என்ற வழக்கு பேசப் பெறுகிறது. “அறங்கரை நாவின் நான்மறை முற்றிய”[3] என்பது தொல்காப்பியப் பாயிரம். இந்நூற்பாவுக்கு உரை கண்ட உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர், இது - பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்”[4] என்று எழுதும் உரை எண்ணுதலுக்குரியது. புறநானூற்றில் மிகத் தொன்மைக் காலத்துப் பாடல்களும் உள்ளன. வேத வியாதர் காலத்துக்கு முற்பட்ட பாடல்களும் உள்ளன. “நான்மறை முனிவர்”, “நால்வேத நெறி” எனவும் வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைகளிருந்தன என்பதை அறிவிப்பன. நமது திருமுறைகளில் மறையென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை. நமது சமய வரலாற்று அடிப்படையில் நமது சிவபெருமானும் உமையம்மையும் பேசுவது தமிழே தான்; அதனால்தான் வேதநெறி தழைத்தோங்கப் பிறந்த திருஞானசம்பந்தர், நமையாளும் உமையம்மையின் ஞானப் பாலுண்டவுடன் ‘தோடுடைய செவியன்’ என்று தூய தமிழிற் கவிதை பொழிந்தார். ஆதலால் நமது சமயத்திற்குப் பண்டு, தமிழ் மறைகளிருந்தன என்பது தெளிவு மறுக்க முடியாத உண்மை. ஆயினும், அந்த மறைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அவை கடற்கோள் பட்டிருக்கவேண்டும். அம்மறைகளை நாம் இழந்துவிட்டோம் என்று துயருறா வண்ணம் நமக்கொரு புதுமறை கிடைத்திருக்கிறது.

திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த திருக்குறள், மறைகளை ஒத்தது இல்லை, மறைகளை விஞ்சிய சிறப்புடையது; மறை நூலின் விழுமிய நோக்கமாகிய அறநெறி உணர்த்துகிறது; பொருள் நெறி காட்டுகிறது; இன்ப நிலை எய்த வழி நடத்துகிறது; திருவடிப்பேற்றினை வழங்குவிக்கிறது; கடவுளை வாழ்த்துகிறது; உயிரின் நிலையை உய்த்துணரச் செய்கிறது; அறியாமையை அடையாளம் காட்டுகிறது; ஆன்ற அறிவை வழங்குகிறது; ஆதலால், திருக்குறள் ஒரு மறை நூலே, மறந்தும் வேறுபாடுகளைக் குறிக்காத மறை நூல் அது! அதனாலன்றோ ஒளவையார்,

தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என் றுணர்[5]

என்று பாடினார்.

திருக்குறள் நமது சமுதாயத்தின் தனிமறை, பொது மறை. இம்மறை வழி நின்று விதித்தன செய்து, விலக்கியன ஒழித்து வாழ்தல் நமது சமய வாழ்க்கை.

உயிர்களின் வளர்ச்சி

மனிதன் ஓர் அற்புதமான தோற்றம். உலகத்தில் கோடானுகோடி உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கே பெயர்கள் காணப்பெற்றுள்ளன. இன்னும் சில, பெயர்கள் பெறவில்லை. உயிர்க்குலத்தின் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் அது நடைபெறும் என்றே தெரிகிறது. உயிர்க்குலத் தொகுதியினை,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்[6]

என்று முறைப்படுத்திக் கூறுவார் மாணிக்கவாசகர். இத்தகைய ஒரு கொள்கையினையேதான் உயிரியல் விஞ்ஞானி டார்வினும் கண்டு உலகத்திற்குத் தந்தார். ஆனால், நமது சமயநெறி படிப்படியாகப் பல பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து மனிதப் பிறப்பையடைகிறது என்று வகுத்துரைக்கும். இதனைத் தொல்காப்பியர் வாயிலாக நாம் எளிதில் உணரமுடிகிறது. அவர் உயிரினத்தை அறுவகையாகப் பிரிக்கிறார்.

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

என்பது தொல்காப்பியம்[7] ஓரறிவுடைய உயிர்கள் அந்த ஓரறிவில் முழுமையாக வளர்ந்து, உருமாறி (இறப்பு, பிறப்பின் மூலம்) ஈரறிவுயிர் உருவத்தை அடைந்து, அதில் முழுமையாகி மரணமடைந்து, வேற்றுருப் பெற்று, மூவறிவுயிராகி, அதில் முழுமையாகி மரணம் அடைந்து வேறுருப்பெற்று நாலறிவுயிராகி, அதில் முழுமையுற்று இறந்து-பிறிதோருருப் பெற்று ஐயறிவுயிராகி அதில் முழுமையடைந்து இறந்து ஆறறிவுயிராகிய மானிடப் பிறப்பை வந்தடைகின்றன.

மானிடப் பிறப்பின் உயர்வு

உயிர் பிறப்பு முறையில் வளர்ச்சியடைந்த-சிறப்புடைய பிறப்பு, மானிடப் பிறப்பே. அதனை அடுத்தது தேவர்நிலை. “அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது”[8] என நூல்கள் பாராட்டும். “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”[9] என்று அப்பரடிகளின் அருள் நூல் கூறும்.

பகுத்தறிவின் பயன்

மனிதன் ஆறாவது அறிவையுடையவன். அதாவது பகுத்தறிவுடையவன். பகுத்தறிவு என்பது ஒரு சிறந்த கருவி. பகுத்தறிவாவது “நல்லதன் நலனும் தீயதன் தீமையும்”[10] அறிந்து, ஏற்றும் விலக்கியும் ஒழுகுதல். உலகியல், குப்பை கூளங்கள் நிறைந்ததே. ஆயினும், முத்துக்கள் இல்லையென்று கூற முடியாது. குப்பை கூளங்களை விலக்கி முத்துக்களை ஏற்பதே பகுத்தறிவின் பயன். பகுத்தறிவு முறையாகத் தொழிற்பட வேண்டுமாயின் சிந்தனைக்குத் தளைகள் பூட்டக்கூடாது. அதாவது, “இது முன்னோர் வழக்கம்; இது அந்த ஞானி கூறியது; இது இந்த ஞானி கூறியது; இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பாவம், நரகம் கிடைக்கும்; இதை ஏற்றுக் கொண்டால் மோட்சம் கிடைக்கும்; இதனை ஏற்றுக் கொள்ளத் தவறினால் பலர் ஏசுவர்” என்பன போன்ற இன்னோரன்ன ஆசைகளுக்கும் அவலங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு[11]

என்ற குறளுக்கேற்ப யார்க்கும் அடிமைப்படாது மெய்ப்பொருள் காணத் தலைப்படல் வேண்டும். அங்ஙனம் அடிமைப்பட்டால், சிந்தனை செக்குமாடு போலத்தான் சுற்றும். அதற்குப் பகுத்தறிவு முறையாகத் தொழிற்படின் பழமையினின்றும் விலகாது. ஆனால், அங்கேயே கழித்துக் கொண்டு வட்டமிட்டுத் தேங்காது; விரிவடையும், வளரும்; பழமை மறையும்; புதுமை தோன்றும் விதை மறைந்து செடி தோன்றுவதில்லையா? அதுபோல! ஆதலால் பகுத்தறிவினால் பழமை அழியும் என்று அச்சம் கொள்ளுதல் தவறு. பகுத்தறிவினால் மனித உலகம் முதுமையடையாமல் உயிர்ப்புள்ள இளமையோடு வளரும்; வாழும், பகுத்தறிவு வளர வளர நியாயங்கள் தோன்றும்; அவ்வழி நெறிகள் தோன்றும்; மனம் தொழிற்படும். மனமுடையவன்தானே மனிதன். மனமுடைய மனிதன் மானிட உலகத்திற்கு வான்மழையை ஒத்தவன். அந்த மானிடச் சாதியை வளர்க்கும் உத்தம மனிதன் வளர்க! வாழ்க!

சிந்தனையாளர்கள் இயக்கம்

இந்த மனித குலம் தோன்றிக் கோடானுகோடி ஆண்டுகளாகிவிட்டன. வரலாற்றில் சென்று போன கோடிக் கணக்கான ஆண்டுகளில் மனித உலகத்தின் வரலாறு சிந்தனைக்குரியது. பல நூறு ஆயிரம் பக்கங்களில் விரிந்துள்ள இந்த வரலாற்றில் பல பக்கங்கள் கொடியோர்களின் செய்திகளைக் கூறும்; ஓரிரண்டு பக்கங்கள் உலகத்தை வாழ்விக்கத் தோன்றிய உத்தமர்களின் வரலாற்றினைக் கூறும். ஆனாலும் அந்த உத்தமர்கள் தொடங்கிவைத்த இயக்கமே பின்னால் மனிதரை வாழ்விக்கத் தவறுவதையும் காண்கின்றோம். மனித குலத்தின் வரலாறு நெடிய நேர்க்கோடாக வளரவில்லை. ஏராளமான வளைவுகள் அதில் உள்ளன. வளைவுகளின் காரணமாக நிகழ்ந்த விபத்துக்களும் அதிகம். ஒட்டுமொத்தமாக வரலாற்றுப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு நாம் பெறும் ஒரே உணர்வு, இன்னமும் மனிதன் மனித வடிவத்தில் உலாவருகிறானே தவிர, அவன் இன்னமும் மனிதனாகவில்லை என்பதே! இந்தச் சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது. அதனால்,

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்”[12]
என்றும்
மக்களே போல்வர் கயவர்”[13]
என்றும்

வேதனையுடன் கூறிய குறள்கள் சிந்தனைக்குரியன.

இங்ஙனம், பகுத்தறிவைப் பெற்றிருந்தும் அவற்றை உபயோகப்படுத்தாமல் நெறிமுறை தவறிச் சென்று இன்னல் பட்ட மனிதகுலத்திற்கு வழிகாட்ட அவ்வப்பொழுது தக்க ஞானிகள்-பேரறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்களின் பட்டியலை இங்குத் தருவது இயலாத ஒன்று. ஆனாலும், குறிப்பிடத்தக்கவர்கள் சிலரையாவது நினைவிற் கொண்டுவருவது நம் கடன். திருவள்ளுவரை ஒட்டி வருகின்ற சிந்தனையாளர்கள் சிலரை நினைந்து பார்ப்போம்.

கன்பூசியஸ்

திருவள்ளுவர் காலத்துக்கு முந்தியவர்களில் சீன நாட்டில் தோன்றிய கன்பூசியஸும், கிரேக்க நாட்டில் தோன்றிய சாக்ரட்டிஸும், குறிப்பிடத் தகுந்தவர்கள். கன்பூசியஸ் ஒரு சிறந்த மாமேதை. மனித சமுதாயத்தை அறவே பழமையிலிருந்து விலக்கிச் செல்ல முடியாதென்ற எண்ணத்தின் காரணமாகச் சீன நாட்டில் வழங்கிய பழைய கருத்துகளுக்குப் புதுப்பொருள் கண்டவர். அவர் கண்ட புதுப்பொருள் அவருடைய சிந்தனையில் தோன்றியது. அவர், ஒழுக்கத்தையே முதல்நிலைப்படுத்தினார். அது மட்டுமன்று ஒழுக்கத்தை ஒழுக்கத்திற்காகவே கடைப்பிடிக்க வேண்டுமென்று வழி நடத்தினார். கன்பூசியஸ் கடவுளைப் போற்றுதல் மூலமே உயர்ந்துவிட முடியும் என்பதுபோல மறைநூல் செய்தாரில்லை. அவர், மனித இயற்கையைப் பெரிதாகப் பாராட்டினார். அந்த மனித இயற்கையை முழுமையுறச் செய்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் முழுமையுறத் துணை செய்வதே அறநெறிச் சட்டமென்றார். அறநெறிச் சட்டத்தின் வழியில் நின்று வாழ்ந்து பண்புடையோராக வாழ்வோரை உலகு பாராட்டுமென்றார். இதனையே திருவள்ளுவர்

நயனொடு நன்றி பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு[14]

என்றார். “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”[15] என்றார் திருவள்ளுவர். சிந்தனை ஒப்பு நோக்கத்தக்கது. “மனித உள்ளம் என்பது பிறரை நேசித்தல்” என்பது கன்பூசியஸின் தத்துவம். இதனைத் திருவள்ளுவர் “அன்பின் வழியது உயிர்நிலை”[16] என்றார். கன்பூசியஸின் சிந்தனைகள் சீனநாட்டு மக்களுக்கு இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக மழைகளைப் போல விளங்கி வந்துள்ளன.

சாக்ரட்டிஸ்

திருவள்ளுவருக்குச் சற்றேறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன் கிரேக்க நாட்டுச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ், அவன் மனித குலத்திற்கு அறிவை முதனிலைப்படுத்தி அறிவுறுத்தினான். அறிவாராய்ச்சி செய்யும்படி ஆற்றுப்படுத்தினான்.

“அறிவுடையார் எல்லாம் உடையார்”

என்பது ஒப்புநோக்கத்தக்கது. சாக்ரட்டீஸ் எழுதுகோல் ஆனாலும், அவனது சிந்தனையில் தோன்றிய சிந்தனை முத்துக்களை அவனுடன் இருந்த பிளேட்டோ அழகுறத் தொகுத்துத் தந்திருக்கிறான். சாக்ரட்டிஸ் உரையாடல்கள் மூலமே உயர்நெறியை யுணர்த்தியவன். வினாக்கள் மூலமே விடைகளைத் தந்தவன். சாக்ரட்டிஸும் கன்பூசியஸைப் போல உயிரினும் உயர்வாக ஒழுக்கத்தை மதிக்கக் கற்றுக்கொடுத்தான். சாக்ரட்டிஸ் மனித உலகத்தின் மனச்சாட்சிக்காகப் போராடினான். மனிதனின் சிந்தனை ஒருமைக்காகப் போராடினான். ஆயினும், அவனை அந்தக் காலச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. கன்பூசியஸ் தன் தலைமுறையிலேயே வெற்றி பெற்றார். சாக்ரட்டீஸ் அவன் தலைமுறையில் வெற்றி பெறவில்லை. உயிரைப் பணயமாகக் கொடுத்தான். ஆனால், மனித குலத்தின் அறிவு இயக்கம் உள்ளவரை சாக்ரட்டீஸின் பெயர் நினைவிலிருக்கும்.

திருவள்ளுவர்

திருவள்ளுவர், தமிழகம் முற்றாக நிலை தளர்ந்திருந்த பொழுது மறைநூல் செய்தாரென்று கூறமுடியாது. ஆயினும், திருவள்ளுவர் தோன்றிய காலம் தமிழகத்திற்கு ஒரு சோதனைக் காலமே. காதல் காமமாக உருமாறிப் பரத்தையர் ஒழுக்கம் பரவியிருந்தது. வீரம், சிறுகலகங்களாக உருமாறி ஒரு குலத்துள்ளோரே தமக்குள் ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர். தமிழ் வழக்குக் கொவ்வாத அயல் வழக்குகள் ஊடுருவி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இந்த நெருக்கடியான காலக் கட்டத்தில் திருவள்ளுவர் தோன்றினார். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றி, முறையே தனி மனிதன், குடும்பம், நாடு, அரசு ஆகியவைகளுக்கு அறநெறி காட்டி வழி நடத்தினார். திருவள்ளுவர் தந்த அறநெறி அவர் காலத்தில் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனாலும் முழுமையான வெற்றியை அது அடையவில்லை. திருவள்ளுவருக்குப் பிறகும் திருவள்ளுவர் நெறி இன்றுவரை முழுமையாக வெற்றி பெறவில்லை.

மார்க்ஸ் - லெனின்

சோவியத்து நாட்டில் லெனின், மாமுனிவர் மார்க்ஸ் தந்த மூலதனத் தத்துவக் கொள்கைகளுக்குச் செயல்முறைக் கோட்பாடுகளை வகுத்தான்; புரட்சிக்காகச் சிந்தித்தான்; சமுதாய மாற்றத்தைக் குறித்துப் பலரைச் சிந்திக்க வைத்தான். லெனின் அணியில் “கூட்டத்தில் கோவிந்தா” போட்டவர்கள் இல்லை. தன் அணியைச் சார்ந்தவர்களுக்குப் புரட்சித் தத்துவங்களைக் கற்றுக் கொடுத்தே அணிவகுத்து நடத்தினான். ஆதலால் புரட்சி எளிதாயிற்று; புதுயுகம் பிறந்தது.

பிரெஞ்சுப் புரட்சி - வால்டேர், ரூசோ

பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேரும் ரூசோவும் சிறந்த சிந்தனையாளர்கள். அவர்களுடைய சிந்தனை புரட்சி நெருப்பைப் பற்ற வைத்தது. ஆனால் அந்த நெருப்பு தொடர்ந்து எரிவதற்குக் கோட்பாடுகள் இல்லாமல் போயின. மக்கள் புரட்சியில் ஈடுபட்டார்கள்; உணர்ச்சி வசப்பட்டே ஈடுபட்டார்கள். புரட்சி தோன்றியது. அது அன்றிருந்த ஆட்சியை மாற்றியது. ஆனால் புரட்சிக்குப் பின் தோன்றிய ஆட்சியின் முறை மாறவில்லை. அதாவது சர்வாதிகாரிகள் மாறினார்கள் சர்வாதிகாரம் மாறவில்லை என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை. மார்க்ஸின் சிந்தனைக்குப் புரட்சிகரமான செயலுருவம் கொடுக்க லெனின் இருந்தான். அதனால் நிலையான மாற்றம் கிடைத்தது. வால்டேர், ரூசோ சிந்தனைகள் புரட்சி உருவம் பெற்றன. ஆனால் செயலுருவம் கொடுக்கப்பெறவில்லை. அதனால் புரட்சி வெடித்தது; ஆனால் புதுமைச் சமுதாயம் பிறக்கவில்லை.

புரட்சி விளக்கை அணைத்தனர்

கன்பூசியஸுக்குக் கிடைத்த வெற்றி திருவள்ளுவருக்குச் சமுதாயத்தில் கிடைக்கவில்லை; அரசியலில் கிடைக்கவில்லை. ஆனால், இலக்கிய உலகத்தில் திருவள்ளுவர் மிகவுயர்ந்த புகழைப் பெற்றார். சாக்ரட்டீஸுக்குக் கிடைத்த தோல்வி திருவள்ளுவருக்குக் கிடைக்கவில்லை. வால்டேர் ரூசோ போன்றவர்களின் சிந்தனைக் கொத்த புரட்சத் தன்மையுள்ள சிந்தனைகளைத் திருவள்ளுவர் தந்திருந்தாலும் இங்கும் புரட்சி வெடிக்கவில்லை, காரணம் திருவள்ளுவரின் புரட்சிச் சிந்தனையின் குறையன்று. பிரஞ்சு தேசத்திலிருந்தவர்கள் போன்ற கொடுங்கோலர்கள் தமிழ் நாட்டில் இருந்ததில்லை. குறைகளுடைய அரசர்கள் இருந்தனர். ஆனாலும் கொடுங்கோலர்கள் இருந்ததில்லை. மார்க்ஸின் மூலதனம், 'திருக்குறளுக்கு நெடுங் காலத்திற்குப் பின் தோன்றியது. மார்க்ஸ் ஒரு சிந்தனையாளன். கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளில் திருக்குறளின் கருத்து மூலங்கள் பதிந்துள்ளான. மார்க்ஸின் மூலதனம் எப்படிப் புதுமையும் போதுமையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க உதவியதோ அதுபோல் திருக்குறளும் பயன்பட்டிருக்கவேண்டும் அங்கனம் இயலாமற் போனதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதற்காரணம் முன்னர்க் குறிப்பிட்டது போல் தமிழக மன்னர்கள் ஜார் மன்னர் அளவுக்குக் கொடுங்கோலர்களாக இல்லாமல் இருந்தமையே. எல்லாவற்றையும் பெறும் முழுமையான சமுதாயத்தை உருவாக்கத் தவறினாலும் அவர்கள் கொடுங்கோலர்களாக இருந்ததில்லை. அது மட்டுமன்று நீதிமான்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை எதிர்த்துப்புரட்சி தோன்றக்கூடிய சூழல் இல்லாமற் போய்விட்டது. நலஞ்செய்யாத அரசுகளை நோக்கிப் புரட்சிகள் தோன்றாது. நலஞ்செயாதோடின்றித் தீங்கிழைக்கும் கொடுங்கோல் அரசுகளை நோக்கியே உலகில் புரட்சிகள் வெடித்துள்ளன. ஆதலால் திருக்குறள், புரட்சியைத் தோற்றுவிக்க இயலாமற் போயிற்று. மேலும், கார்ல்மார்க்ஸுக்குக் கிடைத்த மாணாக்கன் லெனின் ”மூலதனம்” என்ற தத்துவ நூலில் அடங்கிய கொள்கைகளுக்குக் கோட்பாடுகளைக் கண்டான்; செயலுருவம் தர முயன்றான்.காலமும் துணையாயிருந்தது; இடமும் அமைந்தது;புரட்சியும் தோன்றிற்று. முன்னர்க் குறிப்பிட்டதைப்போலத் திருவள்ளுவரின் சிந்தனைக்குக் காலமும் இடமும் துணையாக இல்லை: அது மட்டுமன்றித் திருவுள்ளுவர்க்குக் கிடைத்த மாணாக்கர்கள் அரசியல் சிந்தனையாளர்கள் அல்லர்; சமுதாயச் சிந்தனையாளர்களுமல்லர்; அவர்கள் இலக்கியச் சிந்தனையாளர்கள் சமயச் சிந்தனையாளர்கள் என்றே அமைந்துவிட்டார்கள். ஆதலால், அவர்கள் பதவுரையும் பொழிப்புரையும் எழுதினார்கள்; இலக்கணக் குறிப்புக்கள் எழுதினார்கள்; தெளிவாகச் சொன்னால் இலக்கியச் சிந்தனை என்ற பெயரால் திருவள்ளுவர் ஏற்றிவைத்த புரட்சி விளக்கை அணைத்தே விட்டார்கள். இன்னும் திருக்குறள் தந்த திருவள்ளுவர் வழிபாட்டுக்குத்தான், பயன்படுகின்றார். கவியரங்கம், பட்டிமன்றங்களுக்குத்தான் பயன்படுகிறார். இன்றுவரை திருவள்ளுவர் கண்ட அரசியல் சமுதாயக் கொள்கைகளுக்குச் செயலுருவம் தரத்தத்த கோட்பாடுகளை நினைந்து எழுத யாரும் முன்வாவில்லை. அது தமிழகத்தின் நல்லூழின்மையேயாம். இனிமேலாது வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறளுக்குச் செயலுருவம் தரமுயற்சிசெய்ய வேண்டும். அது காலந்தாழ்த்தாது உனடியாகக் கெய்ய வேண்டிய முதற்பணி. இந்த முயற்சி தொடங்கப்பெற்று முழுமையான வெற்றி பெற்றால் நமது சமயம் விளங்கும்; நமது சமுதாயம் உலகின் மற்றச் சமுதாயங்களோடு ஒத்து நிற்கும்-இல்லை, மற்றச் சமுதாயங்களை வென்று விளங்கும்.

பிறப்பும் - இறப்பும்

இனி, திருவுள்ளுவர் எப்படி முறையாக மனிதனை வளர்க்கிறார் என்பதைக் காணவேண்டும். நமது சமயத்தில் உயிர் உண்மை நிலையானது. உயிர் உடல்தாங்கி புலர்வரு தலையே பிறப்பு என்று குறிப்பிடுகின்றோம். மீண்டும் அந்த உலாவில் எய்த்துக் களைத்துழி உடலினைக் களைந்து புத்துடலைப் பெறுவதை இறப்பு-பிறப்பு என்று குறிப்பிடுகிறது நமது சமயம். உயிர்க்குப் பிறப்பு இறப்பு இல்லை; அது நிலையானது என்பதனைத் திருவள்ளுவர் ‘மன்னுயிர்’ என்பதன் மூலம் விளக்குகிறார். களைத்த உடலை விட்டுப் புது உடலைப் பெறுவதுதான் இறப்பு-பிறப்பு! புறநானூறு,

“சாதலும் புதுவன்றோ”[17] அதனையே திருவள்ளுவர்,

என்று கூறிவிளக்கும்

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு[18]

என்று கூறி விளக்குகிறார். அன்றாட உடற்களைப்பு நீங்க உறங்குதல் வழி. ஆனாலும் அவ்வப்பொழுது உறங்கும் உறக்கத்தில் முழுமையாகக் களைப்பு நீங்கிவிடுவதில்லை. காலத்திற்குக் காலம் களைப்பு முதிர்ந்து உடலுக்கு முதுமையைத் தந்து, களைப்பு மிக்குழி அறவே உடலை உயிர் உதிர்த்து விடுதலே இறப்பு: அது புதிய உடலைப் பெறுதல் பிறப்பு. இதுவே நமது சமயக் கொள்கை. இங்ஙனம் சாதலும் பிறத்தலும் எல்லையின்றிச் சுற்றி வருமா? வராது. உயிர் நிறைநலம் பெற்றுழி அதற்குப் பிறப்பில்லை; இன்ப அன்பில் அமைதியாகத் தங்குகிறது. அதுவே இறைநிலை; உயிரின் இலட்சியம்.

அறியாமை

மனிதன், இயல்பில் குறையுடைய வனாயிருக்கின்றான். மனிதனுடைய குறைகளில் தலையாயது அறியாமை. அறியாமைதான் எல்லாக் குற்றங்களுக்கும் முதலாக இருப்பது. அறியாமை, மயக்கும்; பொருளல்லவற்றைப் பொருளென்று போற்றச் செய்யும்; துன்பத்தை இன்பமாகக் கருதச் செய்யும்; பெரியோரைப் பகைவராகக் கொள்ளச் செய்யும்; சிற்றினத்தாரை நட்பாகக் கொள்ளத்துரண்டும். அம்மம்ம! அறியாமை செய்யும் தீமையைப் பகைவனாற் கூடச் செய்ய இயலாது ஆதலால், திருவள்ளுவர் முதலில் மனிதனை அறியாமையிலிருந்து விலகுக என்று அறிவுறுத்துகிறார்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு[19]

இது வள்ளுவர் வாய்மொழி.

புல்லறிவாண்மை

அறியாமையைக் கூட ஒரோவழி மன்னிக்கலாம். ஆனால் அறியாமையை அறிவு என்று நம்பி இறுமாத்தலாகிய புல்லறிவாண்மை மிகமிகக் கொடியது. அறியாமையுடையோர் திருந்த வாய்ப்புண்டு. காரணம் தாம் அறியாமை யுடையோம் என்று அவர்கள் அறிவதால். புல்லறிவாண்மை யுடையோன் திருந்துதல் அரிது. ஏன், திருந்தவே முடியாது. அவன் ‘அறிவுடையோம்’ என்ற இறுமாப்பால் ஏவவும் செய்யான்; அவனும் தேறான். அப்பரடிகள் கூறியதைப் போல் உலைப்பானையிலுள்ள இளஞ்சூட்டு நீரில் மகிழ்ந்து ஆடும் ஆமையைப் போல, அவன் மகிழ்ந்து ஆடுகின்றான்.[20] புல்லறிவாண்மை, அறியாமை நீக்கத்திற்கே தடையாகப் போய்விடும். புல்லறிவாண்மை அறிவின் வாயிலை அடைத்துவிடும். உலகமே திரண்டு கூறினாலும் அவன் ஒத்துக்கொள்ளமாட்டான். அவனை உலகத்துப் பேய் என்பார் திருவள்ளுவர். அறியாமை அதனை உடையவனுக்கு மட்டுமே தீமை செய்யும். புல்லறிவாண்மை பேயைப் போலச் சமுதாயத்திற்கே தீங்கு செய்யும். ஆதலால் புல்லறிவாண்மை முற்றாகக் கடியப்பெறுதல் வேண்டுமென்பது திருவள்ளுவர் கருதது.

கல்வி

அறியாமை அகன்று - புல்லறிவாண்மை போய் மனிதன் விளக்கமுற உதவி செய்யும் வாயில் கல்வியே. மனிதன், மனிதனாக விளங்கத் துணைசெய்யும் முதல் வாயில் கல்வி. அதனாலன்றோ அப்பரடிகள்,

கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னை[21]

-என்றும் திருமூலர்.

கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே[22]

என்றும் கூறிப்போந்தனர். ஞான நூல்களைக் கற்றலே “வேள்வி” என்று அறநூல்கள் கூறுகின்றன. திருவள்ளுவர் கல்வியை ஓர் இயக்கமாகவே வற்புறுத்துகிறார். “கற்க!” என்பது அவராணை. ஆம்;. உடல்நலத்துக்குரிய உணவு உண்பது மனித குலத்திற்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், உயிர் நலத்திற்குரிய நூல்களைக் கற்பது இன்னும் பலருக்கு வழக்கமாகவில்லை. உலக மானிடச் சமுதாயத்தில் கற்றவர் விழுக்காடு சற்றேறக்குறைய ஐம்பதேயாம். இந்த ஐம்பது விழுக்காடும்கூட, கற்கும் முறையைக் கற்றவர்களேயாம். கல்வியைக் கற்றவர்கள்-கற்றுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடு இருந்தாலே அரிது. மனிதன் ஓயாது கற்கவேண்டும்; ஒவ்வொருநாளும் கற்க வேண்டுமென்பதை,

என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு[23]

என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.

கசடறக் கற்க

கற்கும் ஆர்வம் தலைப்பட்டு முயற்சி தோன்றியவுடன், கற்பதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுட்பமான கலை, ஒரு மனிதனின் முன்னேற்றம் அவன் கற்பதற்குத் தேர்ந்தெடுக்கும் புத்தகத்திலேயே அடங்கியிருக்கிறது. இன்று வாழும் மானிடர் பலருக்கு இந்தக் கலை கைவந்ததில்லை. தாம் கற்பதற்குரிய நூலைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவர் தம்முடைய வாழ்க்கையில் அமைந்துள்ள மனக் குற்றங்களை அறிந்து கொள்ள வேண்டும். உடல் நோய்க்கு மூலிகைகள் மருந்து; மனக்குற்றத்திற்குக் கருத்துக்களே மருந்து. மனிதன் தன் மனக்குற்றங்களை அறிந்துகொண்டு அக்குற்றங்களை நீக்குதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனக்குற்றம் நீங்குகிறவரை கற்கவேண்டும். அக் குற்றங்கள் நீங்கிய நிறை நிலையில் ஒரோவழியன்றி என்றும் நின்று ஒழுக வேண்டும். இது வள்ளுவர் காட்டும் வழி.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக[24]

என்பது எண்ணத்தக்கது.

செவிச் செல்வம்

கற்பதற்குரிய நூல்கள் பல்கிப் பெருகி வளர்ந்து கிடக்கின்றன. அவை முழுவதையும் தேர்ந்தெடுத்துக் கற்றுத் தெளிவதற்கு ஒரு மனிதனுக்குரிய வாழ்நாள் போதாது. ஆதலால், நல்ல நூல்களைக் கற்றலோடு கற்றோர் வாயிலாகக் கேட்பது, மேலும் துணை செய்யும் என்பது திருவள்ளுவர் கருத்து. அதுமட்டுமன்று, தம்மில் மூத்த சான்றோர், நல்ல நூல்களைக் கற்று, கற்ற கல்வியை வாழ்க்கையில் சோதனைப் படுத்தி ஒழுக்கமாக்கிக் கூறுவர். அங்கனம் கூறும் சான்றோரின் சொற்களைக் கேட்பதன் மூலம் எளிதில் வாழ்க்கையில் முன்னேறலாம். கற்கும் இடர்ப்பாடுகளைத் தவிர்க்கலாம்.

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்[25]

என்பது வள்ளுவர் வாய்மொழி. ஆதலால் ஒரு மனிதன் முழுமையுறக் கற்கும் முயற்சி மட்டும் போதாது; நல்லவை கேட்கும் முயற்சியும் தேவை. நல்லவை கேட்க முனையாத செவிகளைத் திருவள்ளுவர், ‘தோட்கப் படாத செவி’[26] என்பார். “செவிகாள் கேண்மின்களோ”[27] என்று அப்பரடிகள் செவிகளை இரந்து வேண்டுவார். திருஞானசம்பந்தர் “கற்றல் கேட்டலுடையார் பெரியார்”[28] என்பார்.

எண்ணம்

கற்றலும் கேட்டலும் மனிதனின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் சிறப்புடைய பழக்கங்கள். ஆயினும் கற்ற - கேட்ட செய்திகளை எண்ணத்தில் தேக்கி உணர்வுகளாக மாற்ற வேண்டும். “எண்ணம் போல் வாழ்வு” என்பது பழமொழி. எண்ணம் ஆழமானதாக இருக்கவேண்டும். ஒப்புக்காக எண்ணுவது பயன்தராது. செயல்களின் வெற்றிக்கு எண்ணமே அடிப்படை எண்ணாமல் செய்யும் செயல் வெற்றியையும் தராது; பயனையும் தராது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்[29]

என்பது திருக்குறள்.

அறிவு

கற்றாலும், கேட்டாலும், எண்ணினாலும் கூட ஒரு மனிதன் முழுமையான அறிவைப் பெற்று விடுவதில்லை. ஏன்? மேற்கூறிய அகநிலை முயற்சிகளால் அவன் அறிவின் தாழ்வாரத்திற்கே வந்து சேர்கிறான்; அவன் அறிவுடையவனாகி விடுவதில்லை. கற்ற கருத்து, செவி வழிக் கொண்ட சிந்தனை, எண்ணிய எண்ணம் இவையனைத்தும் அறிவாக உருப்பெற வாழ்க்கையிற் செயற்பாடு தேவை. உணவு செரிக்கப்பெற்றுச் செங்குருதியாக மாறி, வலுமையாகித் துணை செய்வதைப் போலக் கல்வி வாழ்க்கைப் பட்டறையில் செரிக்கப்பெற்று அறிவாகமாறி உணர்வாக உருப்பெற்று ஒழுக்கமாக வளர்ந்து துணை செய்ய வேண்டும். நீச்சல் பற்றிப் படிப்பது நீந்துகிற அறிவாகாது. மருத்துவ நூல்களைக் கற்பதால் பிணிகள் நீங்கா. கடவுளைப் பற்றிய நூல்களைக் கற்பது கடவுட்டன்மையைத் தந்து விடாது. அன்பினைப் பற்றிய படித்தல், ஒப்பித்தல் அன்பினைத் தந்து விடா. அவையனைத்தும் வாழ்க்கையில் சோதனைப்படுத்தப்பட வேண்டும்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதே அறிவு தோன்றும். உலகில் தோன்றிய உயர்ந்த சிந்தனை நூல்கள், அறநெறி நூல்கள் இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் படிப்பவர்களும் ஆயிரம் ஆயிரம் பேர். அவற்றிற்கு உரை கூறுவோர்-விளக்கம் கூறுவோர் பல நூறு பேர். ஆயினும் உலகத்தில் முழுமையான அறிவுடையோரைக் காண்டது அரிதாகிவிட்டது. நூல்களைக் கற்பவர்கள் அறிவுடையராக மாட்டார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் கற்காதவர்களைவிட - நூல்களைப் படிக்காதவர்களைவிடக் கற்றவர்களில் பலர் முட்டாள்களாக இருப்பார்கள். “பலகற்றும் கல்லார் அறிவிலாதார்?[30] என்பது வள்ளுவர் வாக்கு. ‘கற்ற நிர்மூடர்’ என்பார் தாயுமானார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அறிவு, அனுபவத்தின் வழியிலேயாம்.

நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்[31]

என்று கூறி வள்ளுவர் விளக்குகின்றார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அவர்தம் அனுபவத்திற்கு வந்து உண்மையில் அவருக்கு உரிமையுடையதாக மாறிய அறிவே வாழ்க்கையில் மிகுந்து நிற்கும்.

அறிவுடைமைக்கும் அறிவின்மைக்கும் என்ன அடையாளம்? அறிவுடைமைக்கும் அறியாமைக்குமுள்ள வேறுபாடு மிகப்பெரியது. ஆனால் உலகம் அதனை முற்றாக உணரவில்லை. சில செய்திகளைத் தெரிந்து கொள்வது அறிவுடைமையாகாது; பேசுதலும் எழுதுதலும் கூட அறிவுடைமை யாகாது. இவையெல்லாம் அறிவின் வாயில்கள். உண்மையான அறிவுடைமை துன்பத்தை மாற்றுங்கருவி. நேற்று அழுத மனிதன் இன்று அழாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நேற்றைய தோல்வி இன்று வெற்றியாக வேண்டும். நேற்றைய துன்பத்தை இன்று இன்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்யப் பயன்படும் கருவியே ‘அறிவு’.

அறிவு அற்றம் காக்கும் கருவி[32]
அறிவுடையார் ஆவது அறிவார்[33]

என்பன திருவள்ளுவர் வாக்கு.

மனிதன், தன் அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களைப் படிப்பினையாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வழி அறிவினைப் பெறவேண்டும். மனிதனின் வாழ்நாள் ஓடிக் கொண்டேயிருப்பது. அதில் சென்ற காலம் நிகழ் காலத்திற்கு வித்திடுகிறது. நிகழ்காலம் நாளைய எதிர்காலத்திற்குத் தளம் அமைக்கிறது. இதுதான் உண்மையான வாழ்வியலுணர்வு. ஆனாலும் நேற்றைய வாழ்க்கையை இன்று நினைந்து மகிழ்தல் அல்லது கவலைப்படுதல் ஓரளவு மருந்தென வரவேற்கப்படலாம். அங்ஙனம் மகிழ்தலும் அழுதலுமே இன்றைய வாழ்க்கையாக மாறிவிடக் கூடாது. நாளைய வாழ்க்கையை எண்ணி எதிர்பார்த்து இன்றையச் செயல்களை வகுக்க வேண்டும். ஆனால், இப்படிச் செய்ய சில மத போதகர்கள் இடம் தருவதில்லை. ‘நாளை பற்றிக் கவலைப்படாதே! அது கடவுள் கையிலிருக்கிறது’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் நம்முடைய சமயம், அங்கனம் கூறுவதில்லை. திருவள்ளுவர்,

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்[34]

என்று கூறி விளக்குகிறார்.

சேக்கிழார்,

சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனியெதிர்
காலத்தின் சிறப்பும்
[35]

என்று அருளியுள்ளார். ஆதலால், அறிவுடைய மனிதன் நாளைய வாழ்க்கைக்கு ஏற்றவாறு அறிந்து ஒழுகுதல் வேண்டும்.

அறிதோறறியாமை

அறிவு வளர்ந்து கொண்டேயிருப்பது. அதற்கோர் எல்லைக் கோடில்லை. அறிவு நிறைவாக வளர்ந்துழி பேரறிவாக மலரும். அதனை மாணிக்கவாசகர் “நின்னை அறியும் அறிவு” என்று பாராட்டுவார். அந்த உயர்ந்த அனுபவத்திற்குச் செல்லும் வரை அறிவு வளர்தற்குரியது. அதுவரையில் மனிதனிடத்தில் அறிவும் அறியாமையும் போட்டிபோடும். அறியாமை என்பது ஒன்றுமே அறியாததன்று. அறிவினிடத்தில் இருப்பதே அறியாமை. பலவற்றை அறிந்த மனிதன் இன்னும் அறியவேண்டியவை உள்ளனவே என்று உணர்வதே அறியாமை. அங்ஙனம் உணர்ந்தாலே அன்றாட வாழ்விற்குரிய அறிவைப் பெற முடியும்.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோ
டவ்வது உறைவது அறிவு[36]

என்பார், ஆதலின், “அறிதோறு அறியாமை”[37] உணர்ந்து, அறிவைப் பெறுதல் உயிர்ப்புள்ள மனிதனின் வாழ்க்கை முறை.

காலத்தின் அருமை

மனிதன், அவன் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத அறிவுடைமையைப் பெற்று விட்டான். அவன் அறிவினைப் பெறவும் இவ்வையகத்தில் வாழவும் கால எல்லை உண்டு. இக்கால எல்லையை யாரும் வெற்றிகண்டதில்லை. கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் கூட இந்தக் கால எல்லையை “The Determination of Law” என்று ஒத்துக் கொள்ளுகிறார்கள். ‘சாநாளும் வாழ்நாளும் யாரறிவார்’[38] என்பார் திருஞானசம்பந்தர். “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு”[39] என்பார் திருவள்ளுவர். ஆதலால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வரையறுக்கப்பட்ட வாழ்நாள் எல்லைக்குள்ளாகவே முழுமையுறல் வேண்டும்; நிறைநலம் பெறுதல் வேண்டும். ஆதலால் அவன் காலத்தின் அருமை அறிந்து போற்றுதல் வேண்டும். இயற்கையளித்த கொடைகளில் தலையாயது காலம். மனிதன் விரும்பினாலும் விரும்பாது போனாலும் காலத்தின் முத்திரை அவனிடம் பதிந்தே தீருகிறது. மனிதனின் வாழ்நாள், வினாடி வினாடியாகக் கரைந்து ஒடுகிறது. வினாடிகளைக் காப்பாற்றிப் பயன் கொண்டால் தான், வாழ்நாளை முழுமையாகப் பயன்படுத்த முடியும். நமது சமயம் இறைவனைக் காலம் கடந்தவன் என்று கூறும். அதற்குப் பொருள், அவன் காலங்களைக் கடத்துகிறவன் என்பதன்று. “ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே” என்று திருவாசகம் பேசும். அவனே காலமாக நிற்கின்றான். சேரமான் பெருமாள் நாயனார் பூசனையில், குறித்த காலத்தில் சிலம்பொலி காட்டியதும், காஞ்சியில் பல்லவ மன்னன் கட்டிய பெருங்கோயிலில் எழுந்தருள்வதற்குரிய நாளை மாற்றியதும், இறைவன் காலத்தைப் போற்றுகிறான்; குறித்த காலத்தில் நிகழ்வுகளைச் செய்கிறான் என்பதை உணர்த்துகின்றன. அதனால்தானே இறைவனின் நிகழ்வுகளாக இருக்கின்ற இயற்கை, ஓர் ஒழுங்கு, முறை பிறழாத நிகழ்ச்சி “Order and Constancy உளவாக அமைந்துள்ளது. அவன் காலங்கடந்தவன் என்பதன் பொருள், காலத்தினாலாய முதுமைத் தழும்புகள் - மூப்பின் அடையாளங்கள் அவனுக்கு இல்லை என்பதேயாம். ஆதலால், மனிதன் காலத்தைப் போற்றிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதனாலேயே “நாளைப் பார்” என்று பழமொழி வழி ஆணை பிறந்தது; அதற்குப் பொருள் “நாளின் அருமைப் பாட்டினை அறிந்து பாதுகாத்துப் பயன் கொள்க” என்பதேயாம். அதற்கு மாறாகப் பலர் பஞ்சாங்கத்தைப் புரட்டுகின்றனர். நல்லநாள் பார்க்கின்றனர். எது நல்லநாள்? வாழ்க்கையின் நாள்கள் அனைத்தும் முத்து முத்தான நல்ல நாள்கள். முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய நாள்கள். இதனை மனிதன் மறந்துவிட்டுச் சில நாள்களைக் கழிக்கின்றான். இது வாழும் முறையன்று.

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே[40]

என்றார். நாளென் செயும் வினைதான் என் செய்யும்’[41] என்பது கந்தரலங்காரம். ஆதலால் மனிதனின் வெற்றிக்கு முதற்படி காலத்தின் அருமையறிந்து பயன்படுத்துதலே!

உயிரறுக்கும் வாள்!

திருவள்ளுவர் காலமறிதல் என்றே ஓர் அதிகாரம் வகுத்து ஓதுகிறார். நகைச்சுவையாகக் காலம் கழிந்தோடும் செய்தியை நிலையாமை அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்[42]

என்றார். வாள் மரத்தினை ஒட்டு மொத்தமாக ஒரு நொடியில் அறுத்துவிடுவதில்லை. ஓர் இழுவைக்கு ஒரு நூல் அளவுதான் அறுபடும். அதுபோல ‘இன்று’ என்றும் ‘நாளை’ என்றும் ‘நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’என்றும் நாள்களைக் கடத்துகின்றவர்கள் வாழ்வு, பயனற்றுப் பாழ்படும் என்பது வள்ளுவர் செய்யும் எச்சரிக்கையாகும். இங்ஙனம் எதிர்மறையாக எச்சரித்த திருவள்ளுவர் ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’[43] என்றும் ‘கருவியால் காலம் அறிந்து செயல்[44] என்றும் கூறி வழி நடத்துகிறார். இறுதியாக, ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்’,[45] என்று வழி நடத்துகின்றார்.

இடமறிக

மனிதன் அறிவினைப் பெற்றாலும் காலமறிந்து கடமைகளை மேற்கொண்டாலும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பயன்தருதற்குரிய இடமறிந்து முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். முயற்சியும் இடமும் வாய்ப்பாக அமையின் வலிமை இன்மையும் வலிமையாக மாறும், வெற்றிகளைத் தரும். ஆதலால் காலம் அறிதலோடு களங்கள் அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏவலர்

மனிதன் மேற்கொண்டுள்ள வாழ்க்கைப் பயணம் ஒரு நெடிய பயணம். இந்நெடிய பயணத்தைத் தனியே நடத்துதல் அரிது. எண்ணிய பணிகளை இனிதே முடித்தற்குரிய துணைவர்களை-ஏவலர்களைக் கருவியாகப் பெற்றிடுதல் வேண்டும். ஏவலர்கள் எளிதில் அமைவதில்லை.

யான்கண் டனையர்என் இளையரும்[46]

என்று புறநானூறு பேசும். அதாவது, கண்கள்வழிக் கருத்தறிந்து, கருதியதை முடிக்க வல்லவர்கள் ஏவலர்கள். இன்று அத்தகு ஏவலர்கள் எங்குக் கிடைக்கின்றனர். அப்பூதியடிகளுக்கு வாய்த்த ஏவலர் மிகச்சிறந்த ஏவலர். அப்பரடிகள் எழுப்பிய ஒரு வினாவுக்குத் திரும்ப அவர் வினாக் கேட்கவேண்டிய அவசியம். இல்லாத வகையில் முழுமையான விடை சொன்ன அந்த ஏவலரின் அருமை நினைந்து நினைந்து மகிழத்தக்கது. அத்தகு ஏவலர்கள் இன்று கிடைப்பதில்லை. ஏவலர்களைத் தேர்ந்தெடுத்தல் வாழ்க்கையில் மிகச்சிறந்த சாதனைகளுள் ஒன்று. அறத்தின் காரணமாகவோ பொருளின் காரணமாகவோ இன்பத்தின் காரணமாகவோ உயிர்க்கு வரும் துன்பத்தின் காரணமாகவோ தமையுடைய தலைவனுக்கு மாறாக- எதிராகச் செயற்பட விழையாதோரையே ஏவலராகத் தேர்ந்து கொள்ளவேண்டும். ஏவலர்க்கு அறம் தம் தலைவன் வழி நிற்றலேயாம். தம் தலைவன்மாட்டு அறமல்லாதன இருக்குமாயின் அவனிடத்திலேயே போராடி அறம் காணவேண்டும். நல்லுழின்மையால் அவனிடமே திருத்தம் காண இயலாவிடின் அவனோடு மடிதலே ஏவலர் மேற்கொள்ள வேண்டிய அறம். ஏவலரைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுண்ணிய கலை, இக்கலையில் தேர்ச்சி பெறாதவரிடம் ஏவலர் கூட்டம் கூட்டமாக இருப்பர். ஆனால், பணிகள் நிகழா. ஏவல் கொள்வோர் எப்போதும் இது நடைபெறவில்லையே; அது நடைபெறவில்லையே; என்று அங்கலாய்த்துக் கொள்வார். அடிக்கடி ஏவலரோடு முரண்படுவார். ஏவலர் முணுமுணுப்பர்; ஏவலர்களும் மனிதர்கள் தாமே! அவரிடம் குணங்களும் உண்டு; குற்றங்களும் உண்டு. ஏவல் கொள்வோர் ஏவலரிடம் உள்ள குற்றங்களை மறக்கவேண்டும். அவரிடமுள்ள குணங்களைக் கண்டு கொள்ளவேண்டும். அவ்வழி ஏவல் கொள்ள வேண்டும். இஃதொரு செப்பமான வாழ்க்கை முறை,

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்[47]

என்பார் திருவள்ளுவர். ஏவலரைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். தெளிந்தபின் ஐயப்படுதல் அன்பினைக் கெடுக்கும்; உறவினை உருக்குலைக்கும். பணிகளைக் கெடுக்கும்; பகையை மூட்டும். ஆதலால் ஏவலரைத் தெளிந்தபின் ஐயம் கொள்ளுதல் கூடவே கூடாது.

தேரான் தெளிவும் தெளிந்தன்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்[48]

என்பார் திருவள்ளுவர்.

வலிமை பெருக்குக! அறிக!

மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தை இனிதே நிறைவேற்றி முடிக்க வேண்டுமானால் பிறர் வலிமையை ஆய்ந்தறிவதுடன் தன் வலிமையையும் பெருக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். வலிமையில்லா வழி, வளம் குன்றும்; புகழ் பெறுதலரிது: இறை நிலையையும் எய்துதலரிது; ஆதலால் நாள்தோறும் தம் வலிமையறிந்து மேலும் மேலும் காலத்தின் தேவைக்குரிய அளவுக்கு வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொள்ளவேண்டும். வலிமையில்லா வாழ்க்கை ‘நடலை வாழ்க்கை’. வலிமையில்லாதவருக்கு ஏமம் இல்லை; இன்பம் இல்லை. ஆதலின் பெறவேண்டிய வலியறிக. அவ்வலிமையைப் பெற்று உயர்க என்று மனிதனை வழி நடத்துகின்றார் வலியறிதல் என்ற அதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர்.

உள்ளம் உடைமை உடைமை

மனிதன் அறிவைப் பெற்றான்; காலத்தினை அறிந்து ஆராயும் இயல்பினைப் பெற்றான்; வலிமையையும் பெற்றிருக்கின்றான். ஆயினும் அவனை உந்திச் செலுத்தி வளர்க்கும் ஊக்கமில்லா வழி, உரிய பயன்வராது. ஊக்கமென்பது உள்ளத்தின் எழுச்சி; பள்ளம் நோக்கிப் பாய்ந்துவரும் புனல்போலப் பணிகளையே நோக்கி விரையும் உள்ளத்து எழுச்சி, இயல்பான வாய்ப்புக்களின்மை குறையல்ல. வாய்ப்புக்கள் வந்தமைவனல்ல. மனிதன் படைத்துக் கொள்பவை. வாய்ப்புக்களைப் படைத்து வழங்கும் அறிவறிந்த ஆள்வினை வேண்டுமென்றார் திருவள்ளுவர்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்(து)
ஆள்வினை யின்மை பழி[49]

உலகத்தில் எதையிழந்தாலும் திரும்பப் பெறலாம்; ஆனால் ஊக்கத்தை இழந்த மனிதன் எதையும் பெற இயலாது. கடவுளாலே கூட அவனைக் காப்பாற்றமுடியாது. “உள்ளம் உடைமை உடைமை” என்பது வள்ளுவர் வாக்கு. அடுக்கிய உடைமைகளை உடைமையெனக் கொள்ளற்க! உடைமைகளைப் படைத்திடும் ஆற்றலுடைய உள்ளமே உடைமை. உள்ளத்தை இழந்த மனிதன் உயிரை இழந்த உடம்பு போல்வான். ஊக்கமிருப்பின் தெய்வத்தால் ஆகாதவைகளையும் கூடச் சாதிக்க முடியும். ஆதலால் வையகத்தின் வாழ்க்கையை வெற்றிகரமாக முடிக்கக் கருதும் மனிதன் ஊக்கத்தை உடைமையாகக் கொள்ள வேண்டும். அவனே ஊழை வெற்றி கொள்வான். ஊழிற்கு அடிமையாகும் கொள்கை நமது சமயத்தில் இல்லை. ஊழை மாற்றத்தானே இந்த வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் ஊழைக் கண்டு அஞ்சற்க! ஊழின் வலிமை, முயற்சியின் முன் தூள் தூள் ஆகும், ஊழை, ஆள்வினையுடைமை வெற்றி பெறும். ஆதலால் நம்பிக்கையுடன், ஊக்கக் கிளர்ச்சியுடன் வாழ்க்கையை நடத்துக. இதுவே வள்ளுவர் ஆணை !

ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்[50]

என்று தேற்றி வழி நடத்துகிறார்; ஊக்கம் தந்திடும் உரைகளைத் தந்துள்ளார். தொடர்ந்து செயற்படுக; துவளாதே; என்கிறார்.

மனிதன் பணிகளைத் தொடங்க வேண்டும். அங்ஙனம் பணிகளைத் தொடங்கிச் செய்வதன் மூலம் அவன் வாழும் உலகத்தை-சூழ்நிலையை இனியதாக அமைத்துக் கொள்கிறான்; அறிவை வளர்த்துக் கொள்கிறான். பணிகளின் வழி அவன் வாழ்தலே அவன் முழுமையெய்துதற்குரிய வழி. அதனாலன்றோ,

என் கடன் பணிசெய்து கிடப்பதே[51]

என்றார் அப்பரடிகள்.

இருவினையொப்பு

“பணி செய்து கிடப்பதே” என்ற அருள்வாக்கு எண்ணத்தக்கது. வாழ்வியல் ஒரு விந்தையான அமைப்பு. செயல் செய்வது, அதாவது வினைகளை இயற்றுவது தவிர்க்க முடியாத கடமை. ஆயினும், வினைவழி, இன்பமும், துன்பமும் நஞ்சு வட்டமாகச் சுழன்று வாராமல் தற்காப்பது அவசியம். அதற்கென்ன வழி? செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதனுடைய விளைவுகளை - பலாபலன்களைத் தன் வயப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னயந்த சார்புணர்வுடன் நல்லதே செய்தாலும் வினை நீக்கத்திற்கு வழியில்லை. இன்பம் வந்துழி மகிழ்தலும் துன்பம் கண்டுழித் துயருறுதலும் நடுநிலை வழுவிய வாழ்வியல், அதனால் திருவள்ளுவர் “நன்றாங்காலும் மகிழற்க; அல்லாக் காலும் அமைந்து அழாதிருக்க; வேண்டுதல் வேண்டாமை என்ற கறங்கு வட்டாரத்தினின்று விலகி வாழ்க்கை விளையாட்டை நிகழ்த்துக. அவ்வழி, வினை நீங்கும்; துன்பம் நீங்கும்” என்றறிவுறுத்தியுள்ளார்,

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்?[52]

என்பார்.

எடுத்த பணிகளில் இடையறவு படாமை

பணிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். தொடங்கிய பணிகளை இடையில் நிறுத்துதல் நன்றன்று. அப்பழக்கம், பணிகளின் பயனைக் குறைக்கும்; அது மட்டுமன்று, துன்பத்தையும் தரும் பற்றி எரியும் வீட்டை ஒரு புறம் அனைத்துவிட்டு இன்னொரு புறம் அணைக்காமல் இருப்பதால் யாது பயன்? தீயினால் வீடு அழிந்துவிடும். ஒரு புறம் அணைத்ததன் முயற்சியும் பயனற்றுப் போகிறது. ஆதலால் பணிகளை இடையில் நிறுத்துதல் நம் வாழ்க்கைக்குரிய வழியன்று. பணிகள் துன்பத்தோடு தொடர்புடையனதாம். இனிய மக்கட் பேற்றுக்குக் கூட, தாய் செங்குருதி சிந்தத்தானே வேண்டியிருக்கிறது. ஆதலால், பணிகளை மேற் கொண்டு வாழ்தல் என்பது மலர்கள் பரப்பப்பட்ட பாதையன்று. ஆயினும் துன்பம் கண்டு துவளாது, சோர்வடையாது - இடுக்கண்களின் காரணமாக இடையில் நில்லாது பணிகளைத் தொடர்ந்து செய்தலே வாழ்வாங்கு வாழும்நெறி. திருஞானசம்பந்தர், “இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும்”[53] என்பார். அப்பரடிகளின் வாழ்க்கைப் பயணத்தில் விளைந்த இடுக்கண்கள் ஒன்றா? இரண்டா? இடுக்கண்கள் நிறைந்த அவருடைய பயணத்தை நாடு உள்ளவாறு அறியவில்லை. ஏன், இடுக்கண்களுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சுகின்ற மதத் தலைவர்கள் அவரைக் கடவுளாக்கி விட்டனர்; அது மட்டுமா? கற்சிலையாகவும் செய்து விட்டனர். அப்பரடிகளின் புரட்சியினால் சமுதாயம் மாற்ற மடையவில்லை. ஆனால் சமயப் புரோகிதர்களுக்கு அப்பரடிகள் பெயரால் - குருபூசையின் பெயரால் விலாப்புடைக்க உண்ணச் சோறு கிடைக்கிறது. உண்ட களைப்பு நீங்கப் பேச, பேச்சுமேடை கிடைக்கிறது; கதாகாலட்சேபம் நடக்கிறது. வயிறு குலுங்கச் சிரிப்பதால் உடலசையாது போனாலும் உணவு செரித்து விடுகிறது. இன்றையச் சமய உலகம் அப்பரடிகளின் கொள்கைகளைக் கல்லறையில் புதைத்து விட்டு அவருக்குச் சிலை எடுத்து, விழா எடுத்துச் செகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை எதிர்த்து,

நாமர்க்கும் குடியல்லோம்[54]

என்று விடுதலை முழக்கம் செய்தவர் அப்பரடிகள். அந்த விடுதலை முழக்கத்திற்கு அவர் கொடுத்த விலை அம்மம்ம! நீற்றறையைக் கடந்து வென்றார். பண்ணொடு பாட்டுக் கலந்த வாழ்க்கையை, இயற்கையோடிசைந்த வாழ்க்கையை - காதலின்பம் நிறைந்த வாழ்க்கையைத் துன்பமாக்க முனைந்த சமணர்களை அவர் எதிர்த்துப் பெற்ற வெற்றி அம்மம்ம...! இன்றைய திருக்கோயில்கள் அந்த வெற்றியை வழங்காமலிருக்கலாம்; மடாலயங்கள் மறந்திடலாம்; ஆனால் மெள்ளத் தென்றலிலே மிதந்துவரும் இசை, அப்பரடிகளின் புகழை இசைக்கிறது. வசந்தத்திலே மலர்ந்து மணம் வீசும் மலர்களிலே மகிழ்ச்சி வெள்ளம், அந்த இயற்கை வெள்ளம் “சொல்லுக்கு வேந்தனாக” நிற்கும் அவர் புகழை வாழ்த்துகிறது. உலகெலாம் உடல் வேறாக - உயிர் ஒன்றிக் காதலித்து உயரின்ப நிலையில் வாழ்ந்திடும் காதலர்களின் இன்ப வெள்ளம் திருநாவுக்கரசரின் புகழைப் பாடிப் பரவுகிறது. இந்தச் சாதனைகளுக்கு அப்பரடிகள் பெற்ற இடுக்கண்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப்பல. ஆனாலும் அவர் இடுக்கண்களைக் கண்டுழி நிற்காமல் பணிகளைத் தொடர்ந்தார்; வெற்றியும் பெற்றார். வையகத்தார்க்கு இன்பம் தந்தார். அதுவே வாழும் வழியென்பது வள்ளுவர் தந்த பாடம்.

செய்க பொருளை

உயிர், நமது சமய நெறிப்படி துய்த்தலுக்குரியது. அதற்குத் துய்க்கும் வலிமை இயல்பானது. இறைநிலையிலும் கூட அது திருவருளைத் துய்க்கும் உரிமையுடையது. உலகில் வாழப் பிறந்த மனிதன், துய்த்தல் வேண்டும்; துய்ப்பதற்குரிய பொருள்களைப் பெறவேண்டும். துய்ப்பில்லாதவர் வாழ்க்கை, தூரில்லாத மரம் போலக் கெடும். அதனா லன்றோ “துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ”[55] என்றார் அப்பரடிகள். இம்மையே தரும் சோறும் கூறையும்"[56] என்பது சுந்தரர் வாக்கு “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”[57] என்பது வள்ளுவர் வாய்மொழி. இங்குப் பொருள் என்பது அணிந்து அல்லது எண்ணிச் சேமித்து மகிழும் - முழுமையாகத் துய்த்தற்குப் பயன் தராத - தங்கம், வைரம், முத்து முதலியனவல்ல; இக்கால நாணயங்களுமல்ல. பொருள் என்பது உயிர்கள் முழுமையாகத் துய்த்து மகிழ்தற்குரிய பொருள்களேயாம்; உண்டு, தின்று மகிழ்தற்குரிய பொருள்கள் இல்லையானால் உயிர் உடலோடு கூடி வாழ்தலரிது. அதனாற்றானே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”[58] என்ற வழக்கு தோன்றிற்று. ஆதலால் உடற் பிணியும், அவ்வழி உயிர்க்குச் சோர்வும் வராது வாழ்ந்திட விரும்பும் மனிதன், பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். உண்டு, தின்று துய்த்திடும் பொருள்கள் உடலுயிர்க் கூட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாதன. ஆனால், உணவுகளால் மட்டும் மனிதன் உயிர் வாழ்ந்து விடுவதில்லை. ஒரோ வழி வாழ்வது போலத் தோன்றினாலும் உடலில் சதைகள் வாழுமே தவிர உயிரியல்புகள் வாழ்வதில்லை.

அன்பு

உயிர் துய்த்துத் தளிர்த்து மகிழ்ந்து வாழ அன்பு தேவை. அன்பின் வழியல்லது உயிரில்லை; இருந்தாலும் இல்லை என்பதே திருவள்ளுவர் கருத்து.

அன்பின் வழியது உயிர்நிலை! அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு[59]

என்பார் திருவள்ளுவர்.

அன்பு, உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். புலன்களில்-பொறிகளில் பொதுள வேண்டும். ஊற்றெழும் அன்பு, தடையின்றி மற்றவர்கள்பாற் பாயவேண்டும்; புயல் சுமந்த வான், மழையைப் பொழிந்தாலே அதற்கு விடுதலை; இன்பம்; வாழ்த்து கருவுற்ற தாய் ஈன்று புறந்தரலே அவளுக்கு விடுதலை, இன்பம்; தாய் என்ற பெயர்; பாராட்டு, பாதுகாப்பு: வாழ்த்துக்கள். அதுபோல் மனிதன் அன்புள்ளத்தைப் பெற்று மற்றவர்க்கும் காட்டுதல் மூலமே வாழ்வான். தன்னைப் பற்றிய கவலையினின்றும் விடுதலை பெறுவான். வாழ்வித்து வாழ்தலே மனிதனின் வெற்றிக்குரிய சுருக்கவழி. வையகம் உண்ணுதலே அவன் உயர்வதற்குரிய ஒரே வழி. வையகம் உண்ணாமல் உண்டால் அவன் சதை வளரலாம்; ஆனால் அவன் வளரமாட்டான். அவனைச் சுற்றிக் காக்கை கழுகுதான் வட்டமிடும். மனிதர்கள் வட்டமிடமாட்டார்கள். அவனுக்காக அவனழுதால் எவ்வளவு நாளைக்கு அழுவது? அவன் துன்பத்துக்கு அழுது முடிக்க அவன் கண்களுக்கு ஆற்றல் உண்டா? ஒரு போதும் இல்லை. அவனுடைய துன்பத்தைக் கண்டு அழ ஆயிரமாயிரம் கண்களை அவன் பெறவேண்டும். அவனுடைய துன்பத்தைத் துணித்து மாற்ற எண்ணில் கரங்கள் முன் வரவேண்டும். அது எப்பொழுது நிகழும்? இவன் மற்றவர் துன்பத்தை-மற்றவற்றின் துன்பத்தைத் தன் நோய் போல் எண்ணி அழும் பொழுது தான்; மாற்றத் துடிக்கும் பொழுதுதான். மனிதனே போதும், உனக்கு நீயே அழுது கொண்டது. அது வெறும் புலம்பல்; அதில் தன்னல வாடை வீசுகிறது; அன்பின் ஈரம் இல்லை; ஒரே வறட்சி மயம்! அழு; ஆனால் உனக்காக அழாதே; மற்றவர்களுக்காக அழக்கற்றுக்கொள். அதுவே அன்பின் தவம், வாடிய பயிரின் வாட்டமெலாம் கண்டு வாடி அழுதாரே, அந்த வள்ளலாரை நினைத்துக்கொள். அந்த உயர்ந்த அன்பை நீ எண்ணு; நெஞ்சத்தில் தேக்கு. அந்த அன்பே தவம். அந்த அன்பே சிவம்; அன்பும் சிவமும் இரண்டல்ல! ஒன்றேயாம். மனிதனைச் சிவமாக்குவது அன்பு என்ற ஒன்றேயாம்.

அன்பலால் பொருளும் இல்லை
ஐயன் ஐயாற னார்க்கே[60]

என்றார் அப்பரடிகள். இந்த அன்பு வையகத்தை ஆட்சி செலுத்த வேண்டும், வழி நடத்த வேண்டும் என்ற தணியாக் காதலினால் இன்று திருக்கோயில்கள் தோறும் எழுந்தருளியுள்ள இறைவன் - எல்லாமாக இருந்தருளும் இறைவன் திருவுருவங்களுக்குள் - கருவறைக்குள் அடைப்பித்துக் கொண்டான். ஏன்? உயிர்களிடத்து அன்பினை ஆரத்துய்க்க! உயிர்களுக்குத் தம் அருளை வழங்கித் துய்த்து வாழ்வித்திட! நம்பியாண்டார் நம்பியின் நிவேதனத்தைச் சுவைத்தவன் - கண்ணப்பர் மெள்ள வாயில் அதுக்கிச் சுவையுண்டாக்கிப் படைத்த புலால் உணவையும் விரும்பி வேட்டவன் - அரி வாட்டாயர் தந்த மாவடுவைக் கழனிகளின் வெடிப்பில் தங்கிச் சுவைத்த தயாபரன் இன்று ஏன் திருக்கோயிலில் உண்ணவில்லை? அன்று அவர்கள் படைத்தவைகளைவிட விலை மிகுதியுடைய பண்டங்களாய் இருந்தாலும் ஏன் உண்ணவில்லை? மறைவாகச் சுவைத்து உண்ணத் திரை இருந்தும் ஏன் சுவைக்கவில்லை? இறைவன் சுவைக்காதது ஏன்? என்று நினைந்து அழுவார் இல்லாது போயினர். அது ஒரு தவக்குறை. இறைவன் “தாயினும் நல்லான்'; தாயிற் சிறந்த தயாவுடையான். உலகத்தில் நடமாடும் குறைகளும் நிறைகளும் உடைய தாய் கூட, தான் ஈன்ற குழந்தை பசித்திருக்க உண்ணமாட்டாள். அங்ஙனம் இருக்க அண்ட மெலாம் பூத்தவளாக - பூத்தவண்ணம் காப்பவளாக விளங்கும் கடவுளாகிய தாய் “உலகத்தில் கோடானுகோடி உயிர்கள் உண்ணாமலிருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் உண்ணும்வரை உண்ணமாட்டேன்” என்று தவம் கிடக்கிறாள். அவள் தனக்குவமையில்லாத் தாய். ஆனாலும் கடவுளைப் பற்றிக் கவலை படாதவர்கள், கடவுளைப் பிழைப்புப் பொருளாக்கிக் கொண்டவர்கள் வழக்கம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் மனித வாழ்க்கைக்கு உயிர் நிலை அன்பேயாம். அன்பே துன்பத்திற்கு மாற்று. அன்பே இன்பத்திற்கு வித்து. அன்பே ஆக்கத்துக்கு வழி. அன்பில் இழப்பதும் ஆக்கமேயாம் இத்தகைய உயர்ந்த அன்பு நெறியில் மனிதனை வழி நடத்தி வளர்க்கிறார் வள்ளுவர். அன்பு நெறியே நமது சமயத்தின் உயரிய தவம்.

நட்பு

அன்பு பெற்றுத்தருவது நட்பு. காதலியின்றி வாழ்தல் இயலும், நட்பின்றி வாழ்தல் இயலாது. நமது கடவுளாகிய அம்மை அப்பனுக்கும் ஒரு தோழன் தேவைப்பட்டான். இருவரை மணந்து வாழ்ந்த ஆரூரருக்கும் நட்பு தேவைப்பட்டது. வள்ளுவர் காலத்து நட்பு என்ற சொல், ஆரூரர் காலத்தில் தோழன் என்ற புது உருப்பெற்றது. தன் தோள், தனக்கு உதவி செய்தலைப் போல உதவியாக இருப்பவன் தோழன். நட்பு, வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. நல்ல நட்பைப் பெற்றுவிட்டால் செயற்கரியது என்று ஒன்று இல்லை என்பதனை,

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு[61]

என்பார் வள்ளுவர். நட்பு, நாம் செய்யும் பணிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. நல்லோர் நட்பில் பிரிவே இல்லை. “காதலிற் பிரிவு” பாடிய கவிஞர்கள் உண்டு; ஆனால் நட்பிற் பிரிவு பாடிய கவிஞர்கள் இல்லை. ஒரோவழி பிரிந்தது போலத் தோன்றினாலும் அது, பழக்கங்களின் இடையிடே தவிர, நட்புணர்வின் இடையீடு இல்லை. ஆரூரர்சிவபெருமான் நட்பில் இந்த உண்மை புலப்படுகிறது. நட்பு என்பது குற்றங்களைக் காணாதது; குணங்களையே நாடுவது. அது பிறைநிலாப் போல வளரும். பயிலுழிப் பயிலுழி இன்பம் தரும். இதுவே நட்பு. இன்று, நட்பு என்ற சொல், தரம் தாழ்ந்து கிடக்கிறது. ஏன், கெளரவமான இரவலர்கள் நட்பு என்ற பெயரைப் பூண்டொழுகுகிறார்கள். மனிதன் வாழ்க்கையில் முழுமையான வெற்றியைப் பெற நல்ல நட்பினைப் பெறவேண்டும். நல்ல நண்பன் குற்றங்களைக் காணாதவன்; அவனுக்குக் குற்றங்கள் தெரியும் ஆனால் குற்றங்களின் வழியே அவன் மனம் திரிபடையாது. அதே போழ்து குற்றங் களுக்கு இசைந்து முகமன் கூறி உடனின்று அழிக்கவுமாட்டான். ஏற்புழி வடுப்படா வண்ணம் குற்றங்களைத் திருத்துவான். மாணிக்கவாசகரின் “பையத் தாழுருவி” என்ற சொற்றொடர் நினைந்து நினைந்து இன்புறற்பாலது. இறை வழி பாட்டுநெறியில் தோழமை நெறியும் ஒன்று. நமது சமயம் அச்சத்தில் பிறந்ததன்று அன்பில் பிறந்தது; அறிவில் தோன்றியது; நன்றிப் பெருக்கில் பிறந்தது. ஆதலால் கடவுளிடத்து அச்சத்தை வளர்ப்பதில்லை-கடவுளிடத்துத் தோழமையைக் கொள்ளத் துாண்டி வழிநடத்துவது. கடவுளும் விரும்பும் நல்ல நட்பைத் தேடிப்பெறுக என்று வழி நடத்துகிறார் வள்ளுவர்.

இல்லறம்

மனிதன் என்னதான் அறிவைப் பெற்றாலும், அரிய நட்பினைப் பெற்றாலும் சில காலம் கடந்தபிறகு அவன், வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்கிறான். அவன் அன்புடையவனாகிப் பலர்க்கு அன்பினை வழங்குகிறான். அதேபொழுது தன்னிடம் அன்பு காட்டுகிறவர்களை எதிர் நோக்கியே இருக்கிறான். அங்கேதான் மனிதன் இல்லறத்தை நாடுகிறான் இல்லறம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? என்ற விவாதம் நம்முடைய சமயத்தில் இல்லை. நம்முடைய சமயம் இல்லற நெறியை ஏற்றுப் போற்றுகிறது. ஏன் இறைவனையே சிறந்த இல்லறத் தலைவனாகக் காட்டுகிறது நம்முடைய சமயம். நம்முடைய தொன்மைக்கால வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பன் திருமேனியேயாம், அம்மையப்பன் திரு மேனியைத் “தொன்மைக் கோலம்” என்று திருவாசகம் போற்றுகிறது.

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்கவளை யும்உடைய தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி[62]

என்பது காண்க. திருமுறை ஆசிரியர்கள் அம்மையப்பனாகவே கடவுளைக் கண்டு வாழ்த்துகிறார்கள். திருவள்ளு வரும் “ஆதிபகவன்”[63] என்கிறார். ஆதலால் இல்லறம் தவமன்று என்று கருதுவது பிழை. இல்லறத்தில் துறவின் உட்கூறுகள் இல்லை என்று கூறுவதும் பிழை சிறுத்தொண்ட நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில், இளையான் குடிமாற நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில் துறவின் தோற்றங்கள் இல்லையா? விளைவுகள் இல்லையா? இளையான்குடிமாற நாயனார் குடும்பத்தில் விளைந்த அளவுக்குத் துறவு உணர்ச்சி, துறவிகளால் ஆட்சி செய்யப்பெறும் சமய நிறுவனங்களில் கூட இன்று இல்லையே. ஆதலால் இல்லறம் நல்லறமே. நன்றுடையானாக விளங்கும் நமது வழிபடும் தெய்வமாகிய சிவபெருமான் பெண்ணின் நல்லாளோடு பெருந்தகையாக இருந்தே உயிர்களைக் காப்பாற்றுகின்றான். இல்லறம் ஏற்க என்று மனிதனை வழி நடத்துகிறான்.

வாழ்க்கைத் துணை நலம்

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”[64] - என்பது வள்ளுவர் வாக்கு அறனெனப்பட்டதே என்ற தேற்றே காரத்தினால் இல்லறம் அறமே என்று ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாக்குகிறார். ஆயினும் இல்லறம் இருவர் சேர்ந்து செய்யும் அறம். அதில் ஒருமித்த அன்பில் பழி தோன்ற அனுமதிக்கக்கூடாது. ஒரோவழி அவர்தம் அன்பின் குற்றங்கள் தோன்றினாலும் அக்குற்றங்கள் அயலறியாவகையில் வாழ்தல்வேண்டும். மாறாத அன்பில் குற்றங்கள் குணமாக்கப்படுதல் வேண்டும். இதற்குத் திருநீலகண்ட நாயனார் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, கண்ணகியின் வரலாறு உயிரோட்டமான ஓர் ஒப்புமை. இல்லறத்தில் மனிதன் பெறும் துணை “சம்சாரம்” அன்று. அத்துணையை “வாழ்க்கைத் துணை நலம்” என்பார் வள்ளுவர். ஆம் அவள் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு துணை. அதுமட்டுமல்லள்; அவள் மூலம் அவன் பெறும் நலனே அவளாக இருக்கிறான். வாழ்க்கைத் துணை நலம் என்ற பெயர் ஆழ்ந்த பொருள் உடையது.

தமிழகத்துக் கற்புக் கொள்கை உடலைக் கடந்தது. உயிரில் காண்டது. மறந்தும் பிறர் நெஞ்சு புகாத கற்பே கற்பு. பெண்ணின் கற்பு கணவனால் காப்பாற்ற இயலாத ஒன்று. ஆதலால் வாழ்க்கைத் துணை, தன் கற்பைத் தானே காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். ஆனால் அவள் அவன் கற்பைக் காப்பாற்ற முடியும். அவள், தன்னுடைய தலைவ னுக்குப் பெட்புற ஒழுகின் அவன் நிச்சயமாகக் கற்புடையவனாக இருப்பான். அவளுக்கே தற்கொண்டானைப் பேணும் பொறுப்பைக் கொடுத்தார். தன் தலைவனுக்குக் கொடுத்த சொல்லையும் காத்துத், தன் தலைவன் கொடைப் பண்பின் காரணமாக மற்றவர்கட்கு வழங்கிய சொற்களையும் காத்து, முடிவாகக் குடும்பத்தின் நற்புகழையும் காப்பவள் வாழ்க்கைத் துணை நலம் ஆவாள். வினைமேற் செல்லும் தலைவன், வினையின்கண் பட்ட இடுக்கண்களால் ஒரோ வழிச் சோர்வடையலாம். ஆனால் வாழ்க்கைத் துணைநலம் சோர்வடையக் கூடாது. அவனுடைய தோல்விகளை வெற்றிகளின் படிகளாக்கவேண்டும். அவன் உள்ளத்துச் சோர்வுகளை அகற்றிச் சுறுசுறுப்பாக்கி விட வேண்டும். தலைமகனின் வருவாய்க்குத் தகுந்த வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும். அவன் தரும் செல்வத்தைக் கொண்டு பல பேரறங்கள் செய்ய வேண்டும். அன்னை காமாட்சி நாழி அரிசி கொண்டு அறங்கள் பலவற்றைக் காஞ்சியில் செய்த தாகக் கூறும் வரலாற்றின் நுண்பொருள், வாழ்க்கைத்துணை நலமாக அமைந்திருப்பவர்கள் உணரத்தக்கது. இத்தகு வாழ்க்கைத் துணை நலத்தைப் பெற்றவன் சொர்க்கத்தின் வாயிலை அடைந்து விட்டான். இல்லை, அவனுடைய வாழ்க்கையில் சொர்க்கம் வந்து அமைந்துவிட்டது என்பது தான் சேக்கிழார் - வள்ளுவர் ஆகியோர் காட்டும் உண்மை.

காதல்

மனையறத்தில் வாழ்வோர் இயற்கையின் காரணமாக ஈருடலில் வாழ்கிறார்கள். ஆனால் திருவள்ளுவர் அவர்களுடைய வாழ்க்கை அமையவேண்டிய முறையை,

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு[65]

என்று அழகுறக் கூறுகின்றார்.

குடும்பத் தலைவனாகிய தலைமகன், அவளைக் கண்ணின் பாவையாகக் கருதுகின்றான். அவள் அவனைத் தன் நெஞ்சத்தவராகக் கருதுகின்றாள். இந்தக் காதற் சிறப்பு குடும்பத் தலைவிக்கு அமையாவிடில், வழிபடும் அம்மையாகிய உமையே தக்கன் வேள்வியில் பெற்ற இழிநிலைமை எய்துவாள். அது வரலாறன்று! ஆயினும், வாழ்வோருக்கு உண்மையை உணர்த்த எழுந்த அறவுரை; ‘இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்க’ என்று மனிதனை வாழ்க்கைத் துணை நலத்துடன் சேர்ந்து இல்வாழ்க்கையில் அமர்த்துகிறார் வள்ளுவர்.

அறிவறிந்த மக்கட் பேறு

மனிதனை இல்வாழ்க்கையில் அமர்த்திய திருவள்ளுவர் விரைந்தோடிச் சென்று, தொட்டிலை வாங்கி வருகிறார்; ஆம்; வள்ளுவர் எதிர்பார்ப்பது மனித சமுதாயத்தைத் தொடர்ந்து வாழ்வித்தருளும் மக்கட்பேற்றை, அஃது இயற்கைதானே! அதற்கென்ன வள்ளுவரின் எதிர்பார்ப்பு? வள்ளுவர் மக்கட்பேற்றை மட்டுமா எதிர் பார்க்கிறார். தொட்டிலை வாங்கி நடு வீட்டில் வைத்த திருவள்ளுவர், மனையறம் மேற்கொண்டோரின் காதில் ஏதோ ஓதுகின்றார்; அங்ஙனம் காதில் ‘கிசுகிசு’வென ஓதியதும் எப்படியோ திருக்குறளில் இடம்பெற்றுவிட்டது. அவர்கள் செவிகளில் அவர் ஓதியது என்ன? கூடி வாழ்க, அதுவே நன்மக்கட் பேற்றுக்குரிய வழி என்றுதான் ஓதியிருக்கவேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற[66]

அடேயப்பா! வள்ளுவர் பல இடங்களில் இப்படிச் சொல்லியிருக்கிறார். அதுதான் அவரியல்பு போலும் என்று கருதுதல் கூடாது. உண்மையிலேயே இதுவரையில் மனிதன் கடந்து வந்துள்ள வாழ்க்கையின் சாதனைகளையும் அவன் அடைந்துள்ள குணங்களையும் அவனுள்ளத்து இயல்பினையும் ஒளிக்காமல் மறைக்காமல் உருக்காட்டுவது அவனுடைய மக்கட்பேறேயாம். தகுதி வாய்ந்த மக்களாக இல்லாது போனால் அவனுடைய அறிவில் குற்றம் காண்பிக்கப்பெறும். அவனுடைய குணங்கள் பழிக்கப்பெறும். அதுமட்டுமன்று. அவன் குற்றமுடையவனாக இருந்து தந்தையாகாமல் இருந்திருப்பானால், ஒரு தலைமுறையோடு அக்குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பெறுகிறது. தகுதியில்லாத மக்களை ஈன்று புறந்தருதல் மூலம் அடுத்த தலைமுறைக்குத் துன்பச் சுமையினைத் தருபவனை வையகம் எப்படிப் போற்றும்? உலகத்தில் நல்லவன் என்ற பெயரைக்கூட எளிதில் பெற்று விடலாம். ஆனால் நல்ல தாய், நல்ல தந்தை என்ற பெயரை அவ்வளவு எளிதிற் பெற இயலாது. அவனுடைய இயல்புகளாலேயே அவன் நல்ல தந்தை என்று பாராட்டப் பெறுவதில்லை. அவனுடை மக்கட் பேற்றின் குணங்களைப் பொறுத்தே அவன் நல்ல தந்தையென்று பாராட்ட பெறுகிறான்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்[67]

என்று திருக்குறள் பேசும். சேக்கிழார், அப்பூதியடிகள் வரலாற்றில் மூத்த திருநாவுக்கரசு வாயிலாக, “நல்ல தாய் தந்தை ஏவ நானிது செய்யப் பெற்றேன்”[68] என்று பாராட்டுவார். பெற்றோர், மகனை அறிவார்ந்த உணர்வில் பெற்றால் மட்டும் போதாது. மீண்டும் காலத்தின் சூழலால் கெட்டுவிடாமல், வள்ளுவர் அவனை வளர்த்தது போலத் தன் மகனை இவன் வளர்க்க வேண்டும். மகனும் தந்தையின் தகுதியறிந்து ஒழுகித் தந்தைக்குப் புகழைச் சேர்க்க வேண்டும்.

மனிதன் ஆற்ற வேண்டிய அறங்களும் பயனும்

இங்ஙனம் மனிதன் தனியே பிறந்து, வள்ளுவப் பேராசான் துணைகொண்டு குடும்பத் தலைவனாகி விட்டான். தனி மனிதனின் வாழ்க்கைப் பயணம் இந்த அளவோடு நிற்கவில்லை. அவன் சமுதாயத் தலைமையும் ஏற்கவேண்டும். அவனோடு வாழும் சமுதாயத்திற்கு அவன் தொண்டு செய்ய வேண்டும். ஒரு தலை சிறந்த மனிதன் வாழும் சமுதாயத்தில் கொலை நிகழக்கூடாது. கொல்லாமை ஒரு சிறந்த பேரறம். திருவள்ளுவரின் நெஞ்சம் கொல்லாமை அறத்தில் தோய்ந்திருந்தது.

ஒன்றாக நல்லது கொல்லாமை[69]

என்பார். பிறநெறியினர் வேள்வியின் பொருட்டுக் கொல் வதைக்கூட திருவள்ளுவர் மறுக்கின்றார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டவின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று[70]

என்பார். கொல்லாமை என்பதற்குத் திருவள்ளுவர் கண்ட கருத்தே புதிது. உலகில் யாதொரு மறையும் கூறாதது. அஃதென்ன? திருவள்ளுவர் கொல்லாமை அதிகாரத்தில்,

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை[71]

என்பார். பொருளமைதியை நோக்கினால் இத்திருக்குறள் கொல்லாமை அதிகாரத்திற்கு இயைபுடையதன்று. ஈதல் ஒப்புரவறிதல் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் பொருட் குறிப்பே இக்குறளிலும் கூறப்படுகிறது. அந்த அதிகாரங்களில் இந்தக் குறளை ஓதாமல் கொல்லாமை அதிகாரத்தில் வைத்தது ஏன்? வாழப் பிறந்த ஓருயிரை உணவளித்து வாழ்விக்காமல் சாகவிடுதலும் ஒருவகையில் கொலையே என்ற கருத்தில் இந்தத் திருக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் வைக்கப் பெற்றுள்ளது. பகுத்துண்ணும் பண்பு தழீய பழக்கம் பாரினில்-வையத்து மாந்தரிடத்தில் வராததினாலேயே திருக்கோயிலுள் எழுந்தருளியிருக்கும் இறைவன் உண்ண மறுத்திருக்கிறான். அவன் சந்நிதியில் இடப் பெற்றிருக்கும் திரை வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பாராதிருப்பதற்காக என்பதை அவன் திருவுள்ளம் அறியாதா என்ன? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நெறியே பரமன் நெறி. அந்நெறி நின்று ஒழுகுவோரே ஒழுக்கத்தின் நெறி நின்றவராவர்.

மனிதன் தான் பிறந்த குடியை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவனும் நிலையாக வாழ முடியும். அவனுடைய குடும்பமும் வாழும். எனவே மனிதனைச் சமூக மனிதனாக வள்ளுவர் மாற்றி வளர்க்கிறார். தனி மனிதனைச் சமூக மனிதனாக மாற்றும் பொழுது ஈதற் பண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றார்; ஒப்புரவறிதலை ஓதிக் காட்டுகின்றார். இவ்விரண்டு அறங்களும் சமுதாயத்திற்குத் தனி மனிதனால் செய்யப்பெறுபவை. மாறாக அவன் சமூகத்திலிருந்து புகழைப் பெறுகிறான். மனைவி, கணவனைப் பாராட்டுவது புகழாகாது. கணவன் மனைவியைப் பாராட்டுவது புகழாகாது. நண்பர்கள் பாராட்டுவது புகழாகாது. உண்மையான புகழ், பகைவர்களாலும் பாராட்டப் பெறுவதுதான். சூரபதுமன் செருக்களத்தில் அண்ணல் அறுமுகச் செவ்வேளைப் பாராட்டுகிறான்; போற்றித் துதிக்கிறான். இதுவே புகழ் தலையாய புகழ், பொதுவான அயலவரும் புகழலாம். சமுதாயம் தலைமகனைப் பாராட்டுவதுதான் புகழ். எனவே தனிமனிதனைச் சமுதாயத்தில் ஈடுபடுத்திச் சான்றாண்மை யுடையவனாக்கிப் பண்புடையவனாக்கிப் புகழுக்குரியவனாக்குகின்றார்.

அரசு

இவ்வளவும் தனி மனிதன் உடன்பாட்டு முறையில், தானே வளர்ந்த பயணம். கழனியில் வேளாண்மை செய்யத் தொடங்கும் பொழுது காவல் தேவையில்லை, பயிர் வளர்ந்த பிறகு காவல் தேவை. எனவே தனி மனிதனும் சமுதாயமும் இணைந்து வளரும் வழி, புலித்தோல் போர்த்த பெற்றங்களும் இடையில் தோன்றி விடுவதுண்டு. அத்தகைய வல்லுருவங்களிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்ற வலிமையான காவல் தேவைப்படுகிறது. கண்ணோட்டமில்லாத காவல் தேவைப்படுகிறது. அந்தக் காலத்தில்தான் வள்ளுவர் மனிதனுக்கு அரசைப் படைத்துக் காவலாக்குகிறார். அக்காவல் காவலுக்காக ஏற்பட்டதன்று. காவற்காரர்களுக்காகவும் ஏற்பட்ட தன்று. இன்றைய நிலையில், ஏன் இடைக்காலத்திலும் கூட வரலாற்றிலும் கூட மக்களுக்காக ஏற்படுத்தப்பெற்ற காவல் தன்மையுடைய அரசுகள் காவல் தன்மையை இழந்து, மக்களுக்கே துன்பம் செய்பவைகளாக உருமாறி விட்டன. அதனால்தான் போலும் ஆள்வோர் ஆளப்படுவோருக்குக் காவல் செய்யத் தவறியதால் ஆள்வோர் தமக்குக் காவல் அமைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது, வள்ளுவர் வகுத்தத் தந்த அரசு குடிதழுவிய அரசு முறை செய்து காப்பாற்றும் நல்லரசு, ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்[72] என்ற பொது நெறியில் மக்களைக் காப்பாற்றுவதே அரசு.

துறவு

இங்ஙனம் நல்ல அரசு அமைந்துவிட்ட போதிலும் மனிதன் அவனிடம், ஏதோ ஒரு இல்லாமையை உணர்கிறான். தவம் செய்தவன்தான். ஆனால் மேலும் மெய்யுணர்வு ஆர்வம் அலை மோதுகிறது. ஆதலால் அவனுடைய தகைமை சான்ற மகனிடத்தில் உடைமைகளை ஒப்படைக்கின்றான். அப்பரடிகள் கூறியது போலத் துணையாய் நின்று துறப்பிக்கும் திருவருளை நினைந்து அவனும் அவளும் தனித்து வாழ்கின்றனர். உடல்களால் மட்டும் தனித்து அல்ல. உயிர்களால் தனித்து அல்ல. காதலின்பத்தை அருளின்பமாக மாற்றிப் பரபரப்பான உலகத்திலிருந்து விலகித் தனித்து வாழ்கின்றனர். இப்போது விழைவு இல்லை; விருப்பமில்லை. தாம் கடந்து வந்த காலத்தின் வாழ்க்கைப் பயணங்களைத் திறனாய்வு செய்கின்றனர். புலன்களைத் துய்மையாக்குகின்றனர்; அவ்வழிப் பொறிகளில் தூய்மை காக்கின்றனர்; தவம் செய்கின்றனர். இறைநெறி நிற்கின்றனர். தமிழின் நாகரிகத்தில் இங்கேயே துறவு மலர்கிறது.

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே[73]

என்பது தமிழர் வாழ்வியல் நெறி.

வீடு

திருவள்ளுவர் கடவுளை வாழ்த்தி வாழும்படி வழி நடத்துகின்றார். திருவள்ளுவர் முதிர்ந்த ஞானி; சீவன் முத்தர்; திருவடி ஞானம் பெற்றவர். அதனால், திருவடிகளையே தொழத் தூண்டுகிறார். வழிபாட்டால் பொறிகள் தூய்மை பெற்று, மற்றவர் சுவைத்தற்குரிய சுவையினைப் பெற்று விளங்க வேண்டுமென்பது வள்ளுவர் நெறி.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.[74]

பொறிகளை “அவித்தல்” திருவள்ளுவர் கண்டுணர்த்திய செந்நெறி. திருவள்ளுவர் பொறிகளை அடக்கவோ அழிக்கவோ சொல்லாமல் அவித்தல் என்று கூறுவது நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. சுவைத்தற்குரியனவாகவும் ஆனால் இயல்பில் சுவையில்லாதனவாகவும் இருப்பனவற்றைச் சுவைத்தற்குரியவாறு பக்குவப்படுத்தும் செயல்முறை “அவித்தல்” நெல் அவித்தல்; கிழங்கு அவித்தல் ஆகிய சொல் வழக்குகள் ஒப்புநோக்கி எண்ணத்தக்கன. இயல்பாகத் தற்சார்புடைய வேண்டுதல் வேண்டாமை, அலைவழிப்பட்டுக் காமம், வெகுளி மயக்கங்களில் சிக்கி, ‘யான்’, ‘எனது’ என்ற செருக்கால் சுவை இழந்து, அசுரநிலையை அடையாமல் இறைவனுடைய திருவடிகளை நினைந்து நினைந்து பணிவுடைமையைப் பண்பாகக் கொண்டு, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கநோக்கிப், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்வோர் இறைவன் திருவடியை எளிதில் எய்துவர். இல்லை, அங்ஙனம் வாழ்வோர் மனத்தில் இறைவன் எளிதில் வந்து தங்குவான். அந்த நிலையே வீடு பேறு உடற் களைப்பு நீங்க, உறங்கி மகிழ, உலகியல் வீடு துணை செய்கிறது. அதுபோல் எல்லாப் பிறப்பும் பிறந்து எய்த்து இளைத்த உயிர்க்குத் தங்கி இன்புறும் வீடு இறைவன் திருவடியே. உலகியல் வாழ்க்கையில் சொந்த வீடில்லாதார் படும் அல்லல் எவ்வளவு? அதுபோலப் பல்வேறு பிறப்புக்களை அடைந்து துயருறும் இந்த உயிர், இன்ப அன்பினில் நிலையாகத் தங்கியிருக்கும் வீடு திருவடியே. இந்த வீடு பெறாதாரை இரக்கமுடன் நோக்குகிறார். “சின்னஞ்சிறு வீட்டில் ஐவரோடு கூட்டுக் குடித்தனம் செய்யும் உயிரை நோக்கி உயிருக்கு இன்னமும் புகுந்து நிலையாகத் தங்கியிருக்கும் வீடு கிடைக்கவில்லையோ” என்று கேட்கிறார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு[75]

என்பது குறள். இங்ஙனம் உயிர்கள் நிலையான இன்ப அன்பினில் திளைத்து மகிழும் திருவடிப் பேற்றினை உணர்த்திய திருக்குறள் மறை வாழ்க! வையம் வாழ்க!

கடவுள் வாழ்த்து

பிறவி, இன்பமே ஆனாலும் கடலேயாம். கடலில் குளித்தல் சிலபொழுது மகிழ்ச்சி. ஆனால் தொடர்ந்து கடலில் கிடத்தல் மகிழ்வைத் தராது. கடலிடைக் கிடப்பவர் கரையேறவே நினைப்பர். பிறவிக் கடலில் கிடந்திடும் நம்மை எடுத்து ஆளும் திருவடிகள், இறைவன் திருவடிகள். நம்மைக் கடலிலிருந்து எடுத்திடும் திருவடி, அறத்தின் திருவுருவம். அறத்தின் வடிவமாய் அமைந்துள்ள கடல் அவன். உவர்ப்புக் கடலில் உருக்குலைந்து கிடக்கும் நம்மை, உவப்புக் கடலுக்கு எடுத்தாளும் திருவடிகள். உவர்ப்புக் கடல் அலைமோதுகிறது, அவலத்தைத் தருகிறது; கவலையைத் தருகிறது. மனக் கவலையை மாற்றத் ‘தனக்குவமை யில்லாதான் தாளினை’ வாழ்த்திடுவோம்; அத்திருவடிகளை அணைந்து இன்புறுவோம். அத்திருவடிகளை நாம் சார்ந்திட இருவினையும் கடந்திட வேண்டும். நல்வினையும் துன்பமே, தீவினையும் துன்பமே. இவ்விரண்டுக்கும் வித்து புகழ் விரும்பல். இறைவனின் பொருள் சேர் புகழை விரும்பிப் போற்றினால் இருவினையும் அகலும். புகழையே துறந்தமையால் வேண்டுதலும் இல்லை வேண்டாமையும் இல்லை. இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவனைச் சார்ந்த நமக்கு யாண்டும் இடும்பை யில வேண்டுதலும் இன்மையால் புகழ் நாட்டமில்லை. அதனால் பொறிகள் தூய்மையாயின. அதனால் அத் தூயோன் திருவடிகள் மனத்தகத்தே வந்து மன்னி நின்றன. அவன் கருணையினால் உலகம் ஒரு முதலாகி நிற்கிறது. உலகம் வாழ்க! எல்லா உலகமுமாய் நிற்கும் இறைவன் வாழ்க! இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!

தொகுப்புரை

நமது சமயத்திற்கு-இந்து சமயத்திற்கு உரிய உண்மையான மறைநூல், திருக்குறளேயாம். திருக்குறள் நமது சமயத்தின் தனித் தன்மையையும் விளக்குகிறது, அதே போழ்து எல்லைகளற்ற பொதுமைக்கும் துணையாக நிற்கிறது. இதுபோன்ற ஒருமறை நூல் உலகத்தில் வேறு எந்தச் சமயத்திற்கும் கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைத்தற்கியலாது. இந்திய தத்துவ-நீதி நூல்களுள் மிகவும் விழுமியது திருக்குறள் என்று ஆல்பர்ட் சுவைட்சர் கூறியுள்ளார். உமாபதி சிவமும் ‘மெய்வைத்த சொல்’ என்று பாராட்டுகிறார். ஆதலால் நமது மறை திருக்குறளே!

மறை நூலுக்குரிய இயல்புகள் அனைத்தும் திருக்குறளுக்குப் பொருந்தியிருக்கின்றன. கடவுள், உயிர், உயிரைப் பற்றிய அறியாமை, உயிர்பெற வேண்டிய அறிவு வாழ்க்கைப் பயணம், இன்ப துன்பம், வீடுபேறு ஆகிய அனைத்தும் திருக்குறளில் பேசப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சமய வாழ்வுக்குரிய உண்மைகளோடு மட்டுமன்றி உலகியல் நெறியும்-அரசியல் நெறி, பொருளியல் நெறி, படை நெறி ஆகியனவும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மனித குலத்திற்குத் தேவையான உணவு, மருந்து ஆகியனவும் எடுத்தோதப் பெற்றுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தனி மனிதன் எவ்வண்ணம் வளர வேண்டுமென்பதை ஒரு சிறந்த நல்லாசிரியன் எடுத்துக் கூறுவதைப் போலப் படிமுறையில் நூல் அமைந்திருக்கிறது.

தனிமனிதன், கல்வி கேள்வி வழி அறிவு பெற்று, அவ்வழி அன்பு பெற்று, ஆள்வினை - ஆற்றல்பெற்று, செயற்கரும் செயல்கள் செய்து, நட்பினை நாடிப் பெற்று, வாழ்க்கைத் துணையடைந்து நன்மக்கட் பேற்றினைப் பெற்று அவனை முறையாக நன் மகனாக வளர்த்து நாட்டிற்கு அளிக்கச் செய்து தவம் - நோன்பு ஏற்கும் வரையில் திருக்குறள் அவனை அழைத்து வருகிறது. தனி மனிதனை அவன் நிலையில் வளர்த்துக் குடும்பத் தலைமகனாக வளர்த்து ஒப்புரவு நெறி கொண்ட சமுதாயத் தலைமகனாக வளர்த்து, அவன்மூலம் நல்லாட்சியமைத்து நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்கிறார் திருவள்ளுவர். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். வாழ்க்கையில் மலர்ந்த மறை. அது வாழ்க்கையை வழி நடத்திச் செல்வது. திருக்குறள் மறைவழி வாழ்வோம்! வள்ளுவத்தின் வழி வையகத்தை வாழ்விப்போம்!

மீண்டும் அறக்கட்டளை கண்ட சொல்லின் செல்வர் பிள்ளை அவர்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றோம். சொற்பொழிவுகளுக்குத் தலைமையேற்று நல்லுரை வழங்கி ஆர்வநெறியில் ஆற்றுப்படுத்திய பல்கலைக் கழகப் பேராசிரியர் “நமது நூலறி புலவர்” பாராட்டு தலுக்குரிய அன்பர் ந. சஞ்சீவி அவர்களுக்கு நன்றி; பாராட்டு; வாழ்த்துக்கள்.

வாய்ப்பினை வழங்கிய பல்கலைக் கழகத்தினருக்கு நன்றி.

மேற்கோள் விளக்கம் 

  1. புறம்-34.
  2. நெஞ்சு விடு தூது, அடி-26,
  3. தொல்காப்பியம்-பாயிரம்
  4. தொல்காப்பியம்-பாயிரம் உரை
  5. நல்வழி.
  6. திருவாசகம்-சிவபுராணம் 26-31.
  7. தொல்காப்பியம், மரபியல், 28, 29, 30, 31, 32, 33,
  8. ஒளவையார் தனிப்பாடல்.
  9. திருநாவுக்கரசர், நாலாந்திருமுறை, 784,
  10. புறம், 29.
  11. திருக்குறள், 423.
  12. திருக்குறள், 278.
  13. திருக்குறள், 1071.
  14. திருக்குறள், 994.
  15. திருக்குறள், 131, 80.
  16. திருக்குறள், 430.
  17. புறம்-192.
  18. திருக்குறள்-339.
  19. திருக்குறள், 358.
  20. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 769.
  21. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 839.
  22. திருமந்திரம், 299
  23. திருக்குறள், 397.
  24. திருக்குறள், 391.
  25. திருக்குறள், 415,
  26. திருக்குறள், 418.
  27. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 84.
  28. திருஞானசம்பந்தர், முதல் திருமுறை 2
  29. திருக்குறள், 666,
  30. திருக்குறள்-140.
  31. திருக்குறள், 373.
  32. திருக்குறள், 421.
  33. திருக்குறள், 427.
  34. திருக்குறள், 429,
  35. திருத்தொண்டர்புராணம், 2562.
  36. திருக்குறள், 426.
  37. திருக்குறள், 1110,
  38. திருஞானசம்பந்தர், மூன்றாந்திருமுறை, திருச்சாய்க்காட்டுப் பதிகம், சீகாமரப்பண் 3-ஆவது பாடல்.
  39. திருக்குறள், 336.
  40. திருஞானசம்பந்தர், கோளறு திருப்பதிகம், 1.
  41. கந்தரலங்காரம், 38.
  42. திருக்குறள், 334.
  43. திருக்குறள், 482.
  44. திருக்குறள், 483.
  45. திருக்குறள், 484.
  46. புறம் 191.
  47. திருக்குறள் 504
  48. திருக்குறள் 510
  49. திருக்குறள், 618
  50. திருக்குறள், 620.
  51. திருநாவுக்கரசர், ஐந்தாந்திருமுறை, 192.
  52. திருக்குறள், 379.
  53. திருஞான சம்பந்தர், மூன்றாந்திருமுறை, 4-ஆவது பதிகம், திருவாவடுதுறை, 1.
  54. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 961.
  55. திருநாவுக்கரசர் - ஆறாந்திருமுறை-929,
  56. கந்தரர் - ஏழாந்திருமுறை-340.
  57. திருக்குறள் - 247.
  58. புறம்-18,
  59. திருக்குறள்-80
  60. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 399
  61. திருக்குறள், 781.
  62. திருவாசகம், திருக்கோத்தும்பி, 18,
  63. திருக்குறள், 1.
  64. திருக்குறள், 49.
  65. திருக்குறள், 1122.
  66. திருக்குறள், 81.
  67. திருக்குறள், 70.
  68. திருத்தொண்டர்புராணம், அப்பூதியடிகள், 24
  69. திருக்குறள், 323.
  70. திருக்குறள், 259.
  71. திருக்குறள், 322.
  72. திருக்குறள், 972.
  73. தொல்காப்பியம், கற்பியல், 51.
  74. திருக்குறள், 8.
  75. திருக்குறள் 340,