குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/நாவலப்பிட்டியில் - 1

விக்கிமூலம் இலிருந்து

நாவலப்பிட்டியில் - 1


அன்புக்கும் பாராட்டுக்குமுரிய அவைத் தலைவர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! பெரியோர்களே! தாய்மார்களே! நண்பர்களே ! நடமாடுந் தெய்வங்கள் கோவில் கொண்டிருக்கும் இந்நாவலப்பிட்டியிலே படமாடுந் தெய்வத்திற்கான திருமுறை விழாவிலே கலந்து கொள்ள நேர்ந்தமைக்குப் பெருமகிழ்வும் பூரிப்பும் அடைகிறோம். வரலாற்று வழியிலே கண்ணோட்டத்தைச் செலுத்துகின்ற போது, காலத்தால்- கருத்தால்-நாகரிக முதிர்ச்சியால் மூத்த பழமையுடைய இனமாக மிளிர்கிறது நமது தமிழினம். அத்தகைய இனத்தின் தனிச்சொத்துக்களாக, உலக இனங்களின் நலனில் நாட்டம் கொண்ட தத்துவங்களாக ஒளிர்கின்றன திருமுறைகள். திருமுறைகளைப் பயில்வதனாலே சமய அறிவு பெறுவதோடு, காலப்போக்கில் சமய உணர்வை-அனுபவத்தை நாம் பெறுகிறோம்; வாழ்க்கையில் இன்பத்தை அடைய அவாவுறும் நாம் திருமுறை நெறிகளால் பேரின்பப் பேற்றினையும் அடைகின்றோம். கடவுளை எங்கோ துரத்தில் வைத்து வணங்கிய நிலைமாறி மிகமிக அண்மையில் எம்பிரானை அழைக்க, காண வாழ்த்த வணங்கத் திருமுறைகள் வாய்ப்பளிக்கின்றன.

திருமுறைக் கடலிலே ஆழக் குளிக்கின்ற போது, சமுதாய நன்மைக்காக-மனித இன மேம்பாட்டிற்காகப் பாடுபட்டுழைக்க வேண்டுமென்ற வேட்கையுண்டாகின்றது. நாடு உய்யவந்த நாவுக்கரசரது திருவார் தேவாரத் திருப்பதிகங்களினாலே தீதற்ற திறமையும் திண்மையும் நிரம்பி, உள்ள உறுதியையும், பிறர்க்காக உழைத்துப் பேரின்பமடையும் மனோ பாவத்தையும் பெறமுடிகிறது. மனிதகுல வாழ்வுக்கும் வளத்துக்கும் அயராது சிந்தித்த சிந்தனைச் செம்மல்களில்- பேராசிரியர்களில் அப்பரடிகளும் ஒருவர். நமது கருத்துப்படி அப்பரடிகள் தொண்ணுறு விழுக்காடு சமுதாய மலர்ச்சிக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் மொழிவழி நாகரிகத்தையும் அவர் பேணிக்காக்கப் பெருந் தொண்டாற்றியமை மறக்க முடியாதது. சமணத்தின் நுழைவினால் சைவசமயமும் தமிழும் குன்றக் குற்றுயிராகிக் காலப்போக்கில் மறைந்தொழிய ஏதுவாகுமெனக் கருதியே, சமணர்களால் உண்டான இன்னல்களை எல்லாம் எதிர்த்துப் போராடினார்; இசையைத் துய்க்கத் தெரியாத-அனுபவிக்கத் தெரியாத அன்றையச் சமணர்கள், மலரை மணக்காதே என்பது போல் இசையைப் பொழியாதே என்பதுபோல் இசையைச் சுவைக் காதே எனத் தடை போட்டார்கள். தடைவரினும் படை வரினும் தளராது தன்னம்பிக்கையால் - உளவலிமையால் இன்னிசை பொழிந்து இசைத்தமிழ் வளர்த்தார் அப்பரடிகள்.

பிறர் நலம் பேணுகின்ற உள்ளத்தினரான அப்பரடிகள் அல்லும் பகலும் அறவாழி அந்தணன் தாளை இறைஞ்சி இறைஞ்சி அவனது ஆன்மாக்களிடத்து அன்பு காட்டி அரும்பாடுபட்டார்.

தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை
என்கடன் பணி செய்து கிடப்பதே!

என்பன போன்ற வரிகள் அப்பரடிகளின் தொண்டுள்ளத்தைத் தெளிவாக்கி நிற்பன. திருமுறைப் பாசுரங்களிலே என்னைப் பிணித்து உருக வைத்தவை மணிவாசகரின் திருவாசக மழையும், திருநாவுக்கரசரது தேவாரத் திருவமுத மழையுமேயாம். நாள்தோறும் நேரங்கிடைக்கின்ற போதெல்லாம் அப்பருடன் அருண்மணி வாசகருடன், பொழுதைப் போக்குவதில் பேரின்பமடைகின்றேன்.

பலர் இறைவனைக் காட்சிப் பொருளாக - கோயிற் பொருளாக-கற்பனைப் பொருளாகக் காண்கின்றனர். ஆனால் திருமுறைச் செல்வர்களோ கருத்துப் பொருளாக அனுபவப் பொருளாக-வாழ்வுப் பொருளாகக் கண்டார்கள். நமக்கும் அப்படியே காட்டுகின்றார்கள். புலன்வழித் தொண்டினால் கடவுள் நெறிகாட்டிப் பொறிவழித் தொண்டினால் மக்கள் சேவையின் மாண்பினை உணர வைத்திருக்கிறார்கள். நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தரின் தீந்தமிழ்க் கவிகள் கருத்தைக் கரைய வைத்துச் சமயச்சார்புடைய சிந்தனைக்கு வித்திடுகின்றன; ஆளுடைய பிள்ளை அருளிய எளிய இனிய தமிழ்ப் பனுவல்கள் அருள்வாழ்வுக்கு நம்மை யாற்றுப்படுத்து கின்றன. குறிக்கோளில்லாது கெட்டொழியும் நமக்கு நல்லதொரு கொள்கைப் பற்றை-இலட்சியத்தை- குறிக்கோளைத் திருமுறைகள் கொடுக்கின்றன; தமிழ் நெடுங் கணக்கிலேயுள்ள உயிரெழுத்துக்கள் பன்னிரண்டினைப் போல் பழமைவாய்ந்த நீண்ட சமயவரலாற்றிலே பன்னிரு திருமுறைகளும் உயிர்போன்றவைகளாகத் திகழ்கின்றன.

துன்பங்களை இன்பங்கள் எனக்கருதும் அறியாமையினால் மனிதன் அல்லலுறுகின்றான்; வீதியிலே நடக்கின்றான்; ஏதோ சில எண்ணங்களினால் தன்னையும் தான் நடந்து செல்கின்ற சாலையையுமே மறக்கின்றான்; வழி பார்த்து நடக்காமையினால் கல்லில் மோதுகின்றான்; காலில் புண்ணுண்டாகி விடுகின்றது “காலில் என்ன கட்டுப் போட்டிருக்கிறாயே!” என்று யாராவது கேட்டால் “கல் இடித்துவிட்டது” என்று கூறித் தன்குற்றத்தைக் கல்லின் மேல் சுமத்திவிடுகின்றான். அதுபோலத்தான் உயிர்கள் அறியாமை யினாலே பலப்பல அல்லல்களுக்கு ஆளாகின்றன.

நங்கை ஒருத்தி ஆமைக்கறி சமைக்கிறாள். அடுப்பிலே தீ மூட்டி ஆமை போட்ட உலையை ஏற்றுகிறாள்! சற்றுச் சூடானதும் ஆமையைப் பக்குவப்படுத்த எண்ணுகின்றாள். உலையிலே சிறுகுடு ஏறியதும் உள்ளிருந்த ஆமையின் உள்ளம் இன்பம் அடைகின்றது. சதா காலமும் குளிர்நீரிலே வாழ்ந்த ஆமைக்கு இளஞ்சூடு இதங்கொடுக்கின்றது, இன்பமளிக்கிறது. உலைப்பானைக்குள் மகிழ்ந்து ஓடியாடித் திளைக்கிறது. அறியாமையின் கொடுமையை அந்த ஆமை சிறிது நேரத்தில் அனுபவிக்கத்தான் போகிறது. இளஞ்சூடு கடுஞ்சூடானதும் இந்த உலகத்தையே இழக்கப் போகிறோமோ என்று உணரும் ஆற்றல் அதற்கு அப்பொழுது இல்லை. காரணம்? அந்த ஆமையின் அறியாமையே! அது போலவேதான் உயிரினங்கள் அனைத்தின் உள்ளமும் உணர்வும் இருக்கின்றன.

வாழ்க்கை என்ற அடுப்பு - அனுபவம் என்ற பானை- ஆர்வம் என்ற தண்ணீர் உயிராகிய ஆமை; ஆசையென்ற தீ எரிகிறது. உலகியல் இன்பமாகிய இளஞ்சூடு உயிரை இதப்படுத்துகிறது. பாவம்! அறிவிலே தெளிவில்லாததால் உயிர் அல்லற்படுகிறது. இத்துன்பத்தினின்று நீங்கி எல்லையில்லா இன்பம் பெற உதவும் சமயக் கோட்பாட்டின் தலையாய தொகுப்பே திருமுறைகள்.

திருமுறைகளிலுள்ள பாடல்கள் தெய்வமணங்கமழும் செய்யுட்களாகவும், தீந்தமிழ்ச் சுவை சொட்டும் தெய்வீகக் கனிகளாகவும் திகழ்கின்றன. பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய நமது நாயன்மார்களின் பாடல்கள், பரமன்பதம் நாடுவதற்கும், பரமன் விரும்பும் செயல்களைச் செய்வதற்கும் தூண்டுகோல்களாய்த் தோன்றுகின்றன. நாளுக்கு நாள் நாழிகைக்கு நாழிகை-அவகாசங் கிடைக்கும் போதெல்லாம் திருமுறைகளைப் படித்து அனுபவித்தால் இனிய பரிபூரண் ஆனந்தத்தில் திளைக்க முடியும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. நெஞ்சைத்திறந்து நேசத்தைப் பெருக்கி அகத்தில் ஊற்றெடுக்கும் அன்பினை வெளிக் கொணர்ந்து அறமானவைகளைச் செய்து அருட் செல்வர்களாக வாழவைப்பவை திருமுறைகள். இறையருளால் இன்னல் களைந்து இன்பமடைந்து இறும்பூதடையச் செய்வதோடு சிவனைப் பற்றியும் சிவனருள் ஆர்ந்த செல்வர்களைப் பற்றியும் - சிவத்தலங்களைப் பற்றியும் தெளியத் திருமுறைகள் உதவுகின்றன.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சைவப் பெருமக்களுக்கு வாய்த்த தெய்வத்தமிழ் வேதமாகும். இறைவன் எல்லா உலகத்திலும் இருப்பவன்; அவனுக்குத் தென்னாட்டிலே அருமையான செல்லப் பெயருண்டு. அதுதான் சிவன் என்பது. “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்ட வர்க்கு மிறைவா போற்றி” என்கின்றார் மணிவாசகர். தென்னாட்டிலே சிவனாகக் கருதப்படுகின்ற நமது கடவுள் நாம் வாழ நமக்கு இடையூறாய் இருப்பவைகளைத் தானே எடுத்துக்கொண்டார். இதிலிருந்து இறைவனின் தாய்மை நிலையை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பாம்பும் புலித்தோலும் பார்க்குமிடத்து எவர்க்கும் தேவையற்றவை. அவற்றினை அவரே எடுத்துக் கொண்டார். குழந்தையின் நன்மையையும் வளர்ச்சியையும் குறிக்கொண்டு காக்கும் ஒர் உத்தமமான தாய் பத்தியமாக இருப்பது போலவே ஆன்மாக்களைப் பொறுத்தவரை அண்ட சராசரம் அனைத்தையும் ஈன்று புறந்தரும் அன்னையாக ஆண்டவன் இருக்கின்றான். “தாயிற் சிறந்த தயாவான தத்துவனாகவும்”, “பால் நினைந்தூட்டுந் தாயினுஞ்சாலப் பரிவுடையவனாகவும்” இருப்பதை அனுபவத்திலே கண்டு மணிவாசகர் பாடியருளினார்.

இத்தகைய இறையின் இயல்புகளைத் தெளிவாக்கி உலகுக்கு ஒளிபரப்ப எழுந்த சாதனங்களே திருமுறைகள் ஐம்புலவேடர்களின் இயல்புகளைக் குறைத்து-மறைத்து மாண்பார் நிலைக்கு மாந்தரை உயர்த்த உதவுவன நமது சைவத்திருமுறைகள் என்று அழுத்தமாகக் கூறி வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகின்றோம்.