உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/மாத்தளையில்

விக்கிமூலம் இலிருந்து




7


ஈழத்துச் சொற்பொழிவுகள்

மாத்தளையில்


ஆன்மாக்களுக்கு ஆசையதிகம். மனிதர்களுக்கிருக்கும் ஆசையை அளவிட்டு உரைக்கவியலாது. ஆசையை அழித்து விடுதல் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. எந்த மனிதனுக்கும் ஏதாவதொன்றிலே ஆசையிருக்கத்தான் செய்யும். எல்லாச் செல்வங்களையுமேற்று-உண்டு- உடுத்து-உறங்கி வாழ விரும்புகின்றனர் சிலர்; செல்வாக்குப் பெருக்கால் சிறந்த பதவிகளைப் பெற்று வாழ ஆவல் கொள்கின்றனர் சிலர்; நாட்டை ஆளும் பேற்றினைப் பெற்று நனிசிறந்த தலைவர்களாக வாழ விரும்புகின்றனர் பலர். இவ்வாறு ஒவ்வொரு வகையான ஆசைகளுடன் மனித இனம் அலைந்து கொண்டிருக்கிறது.

நாமுங்கூட நல்ல அருள்நெறி வாழ்வு வாழ்ந்து அறச் செல்வர்களாகத் திகழ்பவர்களைக் காண ஆசைப்படுகின்றோம். ஆசையைப் பொறுத்தமட்டில் நாம் கைக்கொள்ள வேண்டியது ஒன்றேயொன்று-அதுதான் எல்லை. எதற்கும் ஒரு வேலி-எல்லை-வரையறை தேவைப்படுவது போலவே ஆசைக்கும் ஓர் எல்லை-வரையறை அவசியம் வேண்டும். மனிதனின் ஆசையுணர்வு அளவுக்கு அதிகமாக-எல்லை கடந்து செல்கிறபோது ஆபத்து நேருகின்றது. ஒரு வரையறையுடன் எந்த உயிருக்கும் இன்னலற்ற முறையில்-நன்மை பயக்கும் வகையில் ஆசை உருவெடுத்தால் அது போற்றப் பட வேண்டியதே.

மனிதனைக் குரங்குக்கு ஒப்பிடுவார்கள். இப்போதைய மனிதர்களில் சிலரைக் குரங்கோடு ஒப்பிடவும் முடிவதில்லை. இப்போதையச் சில மனிதர்களை விட குரங்கு எவ்வளவோ உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறதெனலாம். குரங்கினது இயல்பு வெள்ளிடைமலை. கொம்பு விட்டுக் கொம்பு தாவுவது அதன் இயல்பான செயல். அஃது ஒரு கொம்பை விட்டு மறு கொம்புக்குத் தாவும்போது முன்பு பிடித்த கொம்பை விட்டு விட்டுத்தான் தாவுகிறது. ஆனால், அளவு கடந்த ஆசை வழிப்பட்ட மனிதனோ ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற முயல்வதில்லை. எல்லாவற்றையும் ஒரு சேரப் பற்றி நிற்க விரும்புகின்றான். இந்த எல்லை கடந்த-வரம்பு மீறிய ஆசைப்பெருக்கினாலேதான் அவன் பல அல்லல்களுக்குள்ளாக வேண்டியிருக்கிறது.

அருமையான ஓர் ஆங்கிலக் கதையுண்டு: பொன்னிலே ஆசை கொண்டவன், தான் தொட்டதெல்லாம் பொன்னாக விரும்பி இறைவனிடத்திலே வரம் வேண்டித் தவமிருந்தான். துன்பங்கள் பலவற்றைத் தாங்கித் தவமிருந்ததால் இறைவன் எழுந்தருளினார். “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டருளினார். “யான் தொட்டதெல்லாம் பொன்னாக அருள்பாலிக்க வேண்டும்” என்று பக்தியுடன் விண்ணப்பம் செய்தான். இறைவன் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி மறைந்தருளினார்.

வரம்பெற்ற நேரம் தொடங்கி வகை வகையான பொருட்களைத் தொட்டுத் தொட்டு அவைகளைப் பொன்னாக்கினான். பொன்குவியல் நிறைய நிறைய அவனது பூரிப்பு அளவு கடந்து அவனது உடலையே பூரிக்க வைத்தது. மகிழ்ச்சிப் பெருக்கு அவனைப் புது மனிதனாக்கியது. பசியெடுத்தது. உணவுக்குப் பக்கத்திலே போய் உணவைத் தொட்டான். அவ்வுணவும் பொன்னாகியது-பசி அவனை வாட்டி வதைக்கக் கவலை தலைகாட்டியது. சாப்பிட முடியாத நிலை வந்துவிட்டதை எண்ணி எண்ணி ஏங்கினான். இந்த வருத்தத்தோடு வேறொரு பெருவருத்தமும் காத்திருந்தது. பக்கத்தில் நின்ற தன் பிள்ளையையும் தொட்டான். அதுவும் பொன்னாகியது. ஆசைவெறியால் ஆண்டவனிடம் கேட்டுப் பெற்ற வரம். வயிற்றுக்குள் சோற்றையே அனுப்ப முடியாமற் செய்து விட்டதை நினைத்து “ஆண்டவனே! வயிற்றுக்குணவு கிடைத்தாலே போதுமானது” என அரற்றினான். ஆகவே ஆசைக்குக் கட்டுப்பாடு தேவை.

ஆசையை ஒழித்துவிடு என்பதைக் காட்டிலும் ஆசைக்கு எல்லை வகுத்துக்கொள் என்பது சாலச் சிறந்தது. ஏனெனில் ஆசை மனிதனைப் பொறுத்தமட்டில் ஒழிக்க முடியாதவொன்று. ஒரு சில நன்மைக்காக ஒரு சிலர் ஆசையுணர்வுக்குத் தடை விதிக்கலாம். பொதுப்படையாகச் சமுதாய வாழ்வில் ஆசையை அழிக்க முயல்வது முடியாத காரியம்-வரையறை செய்து கொண்டு வாழ்தலே இயலும்.

அன்பை-அறத்தைப் பேணி வாழ நாம் ஆசைப்பட வேண்டும். அறஞ்செய்வதற்காகவே வாழ்கிறோம் என்ற நினைப்போடு-அறமற்றவைகளை அறவே தள்ளி இன்பத் தமிழ் நாட்டினுடைய இணையற்ற பண்பினைக் காக்க ஆசை கொள்ள வேண்டும்.

‘அறத்தால் வருவதே இன்பம்’ என்ற கோட்பாட்டுக்குத் தலை சாய்த்து வாழ்ந்ததனாலேதான் பழந்தமிழகம் பாரில் உயர்ந்து பண்புவழிச் சிறந்திருந்தது. அகத்திலே அன்பை வளர்க்கவும் அறத்தைப் பேணவும் சமயச் சார்புடைய வாழ்வு தேவை. மனித வாழ்வுக்கு ஒரு கொள்கை-ஓர் ஒழுங்கு வேண்டும். அத்தேவைகளைச் சமய வாழ்வினாலே பெறமுடியும். ஒரு மனிதனுக்கு நல்ல கொள்கைப் பற்றும், ஒழுக்கமும் வாய்த்தவுடன் பிறர் நலம் பேணுகின்ற மனப்பண்பு உண்டாகும்; அந்த மனப்பண்பு பிறர்க்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்வதோடு பிறர்தருந் துன்பத்தைப் பொறுக்கும் பெற்றியையும் நல்குகின்றது.

தமிழரின் சமயப்பண்பு தன்னிகளில்லாதது; தலையாயது. அது பாவம் செய்யாதே என்று போதிக்காமல் பாவம் செய்ய நினைக்காதே என்கிறது. அது போலவே கொலை செய்ய நினைக்காதே, திருட நினைக்காதே என்கிறது. கொலை செய்தால்-திருடினால் பாவம் என்றும் சொல்லலாம். அவற்றை மனத்தில் நினைத்தாலே பாவம் என்று கூறுகிறது. இதிலிருந்து தமிழருடைய சமயநெறி சமுதாயத்தில் அன்பையும் அறத்தையும் உருவாக்க உழைத்திருக்கிற தென்பது புலனாகிறது. ஆன்மீக ஈடேற்றத்துக்குத் தமிழர் சமயம் தலைசிறந்த வழிகளைக் காட்டியிருக்கிறது. வழி வகைகளைக் காட்டியதோடமையாது, அவ்வழிப்பட்டு வாழ்ந்து வளமான நிலையையும் பெற்றிருக்கிறது. புறவாழ்வின் சிறப்புக்கு அகவாழ்வின் துணை இன்றியமையாததென்பதை உணர்ந்து உணர்த்திய சமயம் தமிழர் சமயம். அகப்புரட்சியின் பயனாகவே புறவாழ்வைத் தூய்மையுடையதாக ஆக்க முடியு மென்று எண்ணிச் செயல்பட்ட பண்பு பாராட்டி மகிழ்தற்குரியது.

சில வீடுகளிலே வெளிச்சுவர்களுக்கு வெள்ளையடித்து உட்சுவர்களைப் புறக்கணிக்கிறார்கள். வெளிச்சுவர், பார்ப்பவர்களின் பார்வையை ஈர்க்குமேயொழிய அவ்வீட்டில் வாழ்பவர்களுக்குப் பயன் தராது. உட்சுவர் துய்மையற்று இருந்தால் வீட்டிலுள்ளவர்களின் நல்வாழ்வு பாழ்பட்டுப் போகும். ஆகவே உட்சுவரின் துய்மையைக் கவனித்த பின்பே வெளிச்சுவரைத் துய்மையாக்க முனைய வேண்டும். மனித வாழ்விலுங்கூட அகவாழ்வைப் பற்றிய சிந்தனைக்குப் பின்பே புறவாழ்வைப் பற்றிய எண்ணம் எழவேண்டும். அதுவே மனித மரபு-தமிழ் மரபு. புறப் புரட்சியின் வெற்றிக்கு அகப்புரட்சி துணைசெய்யும். மணிவாசகர் போன்ற அனுபூதி மான்கள் அகத்துறைப் புரட்சியையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தார்கள்.

எனவே, ஆசைக்கு வரையறை வகுத்து, அன்பும், அறனும் கொண்ட வாழ்வு வாழ்ந்து, புறவாழ்வின் தூய்மைக்கு இன்றியமையாத அகவாழ்வை-ஆன்மீக வாழ்வைத் தூய்மையாக்கித் துன்பம் கண்டவிடத்துத் துடித்து-உடுக்கை இழந்தவன் கைபோல விரைந்து வேண்டியது செய்து என்றும் எல்லா உயிர்களிடத்தும் பற்று வைத்து வாழவாழ்த்தி விடை பெறுகின்றோம். வணக்கம்.