குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/ஆசீர்வாதப் பேருரை

விக்கிமூலம் இலிருந்து






4


ஆசீர்வாதப் பேருரை

சென்னை சைவ சித்தாந்த சமாஜம்
46-வது ஆண்டு விழா


சித்தாந்தச் சிவநெறிச் செல்வர்களே!

சைவ சித்தாந்த மகாசமாசம் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சி குன்றக்குடியில் நிகழ்ந்தது குறித்து மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சியில் திளைக்கின்ற உள்ளத்தோடு ஒரு சில சொல்ல விரும்புகின்றோம்.

சமயத்தின் தோற்றம்

உலகியல் பொதுவாக, துன்பச் சூழலிலேயே உழலுகின்றது. இத்துன்பச் சூழலிலும், இன்பதைக் காணமுயல்வது அறிவுடைமை. இதனையே,

“இன்னாதம்ம இவ்உலகம்
இனியகாண்க இதன் இயல்புணர்ந்தோரே”

என்று, புறநானூறு பேசுகின்றது. இன்பத்திற் கிடையூறாக, துன்பத்திற்குக் காரணமாக-நம்மை ஒருநோய் பிடித்துள்ளது. அந்த நோய் யாது? அந்நோய்க்கு மூலகாரணம் யாது? அந்நோயை நீக்கிக் கொள்ளும் வகை யாது? என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இக்கருத்தினையே, தமிழ்ப்பெரு நாவலராம் வள்ளுவர்,

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்று கூறி விளக்குகிறார். நோயினையும், அதன் காரணத்தையும் அது தீரும் உபாயத்தையும், சொல்லுவதே சமயம். எனவே துன்பத்தின் அழிவிலே-இன்பத்தின் தோற்றத்திலே அரும்புவது சமய உணர்ச்சியும் வாழ்க்கையுமாம்.

சித்தாந்தச் செந்நெறி

தமிழகத்தின் தவநெறி சைவத்திருநெறி. தொன்மையான பெருநெறி சைவசித்தாந்தத் திருநெறியேயாம். இத்திருநெறி, மிகப்ழமை உடையதாகவும், உலகப் பொது நெறியாகவும் காட்சியளிக்கிறது.

இது அது என்ற பிணக்குகள் இன்றி, பரந்துபட்ட நிலையில், விரிந்த மனப்பான்மையுடன், அமைந்துள்ள சமயம் சைவம் ஒன்றேயாம். அத்தன்மையினாலேயே, அது உலகப் பொது நெறியாக அமையக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளது. உலகெங்கும் ஒரு காலத்தில் சைவம் பரவி இருந்தது. சிந்து நதிக்கரையில், மொஹஞ்சதரோ, ஹரப்பா என்னும் இடங்களில், அகழ்ந்தெடுக்கப் பெற்ற புதை பொருள்கள், சைவத் திருநெறியின் தொன்மைக்கு எடுத்துக் காட்டாகும். சிவலிங்கங்களும், அம்மை, கூத்தப்பிரான், தென்முகக் கடவுள் முதலிய திருவுருவங்களும், பிறவும் கிடைத்துள்ளன. இவைகளிலிருந்து, அங்கு கி.மு. நாலாயிரத்திற்கு முன்னரே சைவத் திருநெறி நிலவி இருந்தது என்பதை உணரமுடிகிறது. சிந்துநதி, புதைபொருள்களை ஆராய்ந்த ஓர் அறிஞர்-சர்ஜான் மார்ஷல் (Sir John Morshal),

‘Saivism has a history going back to chalcolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in this world.’

என்று சைவத்தின் பழமையைக் குறிப்பிடுகின்றார். இங்ஙனம், சைவம் காலத்தால் பழமையாகவும், உணர்ச்சியாலும் வளர்ச்சியாலும் நலங்கள் மல்கிப் புதுமையாகவும், காட்சி அளிக்கிறது.

சித்தாந்த சமயத்தைப் பற்றிய புகழுரைகள்

திருவாசகத்தில் ஈடுபட்டு அகம் குழைந்த அன்பராகிய போப்பையர் அவர்கள், சைவசித்தாந்தக் கொள்கை தமிழரது பேரறிவின் சிறந்த பயன் என்று பாராட்டுரை கூறியுள்ளார். கெளடி என்னும் பாதிரியாரும், சைவசித்தாந்தத்தின் சீர்மையைச் செப்பமுறக் கூறியுள்ளார். அவர் கூறுவதாவது, ‘சைவசித்தாந்தக் கொள்கை தொன்மை நலம் பல அமையப் பெற்றது’, என்பதாம்.

சமயக் கருத்துக்களில் மிகப் பழமையானவை யாவும், தென்னிந்தியாவின் இச்சமயத்திற்குத்தான் உரிமையுடையன. இதுவே தமிழினத்தாரின் பண்டைச் சமயமாகும். ஏனைய வெல்லாம் பின் வந்தனவாகவும், பிற சமயத்திற்குரியன வாகவும் காணப்படுகின்றன. அணிபெற அமைந்த சமயமாயும், நம்பிக்கைக்கும் நல்வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாகவும். இருப்பதில் சைவசித்தாந்தமே தென்னிந்தியாவில் உள்ள சமயங்கள் யாவற்றிலும் சிறந்ததாகும். இந்தியா முழுவதிலுங்கூட இந்தியரது நினைவின் சீர்மைக்கும் உயர்தர வாழ்க்கைக்கும் எல்லையாகும் பெருமை படைத்தது என்று கூறுதல் மிகுதியாகாது. நம் நாட்டு அருளாசிரியப் பெருமக்களும், சைவத்தின் சிறப்பினைப் பலபடப் பாராட்டிப் பேசியுள்ளனர். “சைவத்தின் மேற் சமயம் வேறில்லை” என்றும், “ராஜாங்கத்தமர்ந்து வைதீக சைவமே” என்றும் அவர்களால் பாராட்டப் பெற்றுள்ளது. நால்வர் பெருமக்கள் “திருநெறி” என்றும், “செந்நெறி” என்றும் பாராட்டுரை பகர்ந்துள்ளார்கள்.

சித்தாந்தத்தின் சீர்மை

உலகில் பயில்கின்ற சமயங்கள் பல. அவை, பலவும் ஒன்றோடொன்று ஒவ்வாது தம்முள் மாறுபட்டுள்ளன. சைவசித்தாந்தக் கொள்கை எச்சமயத்தினரோடும் முற்றிலும் பிணக்குக் கொள்ளவில்லை. அவ்வவற்றின் கொள்கைகளை யெல்லாம், சோபான முறையில் வைத்து, அவற்றில் மேம்பட்ட நிலையைப் போதிக்கின்றது. சமய உலகின் குழப்பங்கள் தலைகாட்டாத உயர்ந்த நெறியில் சைவம் இலங்குகின்றது.

“வேதாந்தத்தின் தெளிவாம் சைவசித்தாந்தத்திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் என்றார் உமாபதி சிவம். சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்தமுடிபு என்பதுதான் பொருள். வழக்கில் சித்தாந்தம் என்றால், அது சைவத்தையே குறிக்கிறது.

“சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூர்வபக்ஷங்கள்” என்பது இரத்தின திரயம். அந்தம் வேதாந்தம்; அந்ததரம் சித்தாந்தம் ஆகலின், அதனைப் பெற்றோரது பெருமை கூறுவார், “சிவமென்னும் அந்தர என்றார்” என்பது சிவஞான பாடியம்.

சைவ சாத்திரக் கொள்கை

சைவம் முப்பொருளுண்மையைப் பேசுகின்றது. முப்பொருளாவன, இறை, உயிர், தளை, என்பனவாம். இவற்றின் உண்மையினையும், இலக்கணத்தையும், தெளிவுற எடுத்துப் பேசுகிறது சைவம். இவ்வுலகம் உள்பொருள், தோற்றம், நிலை, இறுதியாகிய முத்தொழிற் படுகின்றது. இங்ஙனம் முத்தொழிற்படுகின்ற உலகம் சடப் பொருள். சடப்பொருள் தானாகத் தொழிற்பட முடியாது. மண் தானே தன் வடிவத்தைக் குடமாக மாற்றிக் கொள்ள மாட்டாது. அதனை அவ்வாறு மாற்றக் குயவனொருவன் வேண்டும். அவ்வாறே உலகின் காரண வடிவத்தைக் காரிய வடிவமாக மாற்றுவதற்கும், அவ்வடிவில் அதனை வளர்ப்பதற்கும், மீள அதனைக் காரண வடிவமாக ஒடுக்குவதற்கும் சேதனனாகிய கர்த்தா ஒருவன் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மெய்கண்டாரும்.

“அவன் அவள் அது எனும் அவைமூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்”

என்ற முதற் சூத்திரத்தில், அவை தோன்றிய என்னாது, ‘அவை தோற்றிய’ என்று பிறவினையில் ஓதியருளினர். உலகிற்கு முதற்காரணம் மாயை. மாயை என்ற சொல்லில் மா தோற்றத்தையும், யா ஒடுக்கத்தையும், உணர்த்தும். இங்ஙனம் முத்தொழிற்படுகின்ற உலகிற்குச் சர்வசங்காரனே கர்த்தா, அக்கர்த்தாவே அரன் அவனையே, சைவ சாத்திரம், அந்தம் ஆதி என்று பேசுகிறது. “அந்த மென்பது அந்தமாகிய ஒடுக்கத்தைச் செய்யும் அரன் என்பதையும், ஆதி என்பது அவனே முதன்மையுடையவன் என்பதையும் உணர்த்தும்.

உயிரியல்பு

உயிர்கள் எண்ணிறந்தன. நித்தியத்தன்மை உடையன. உயிர்கள் அநாதியே, பாசச் சார்புடையன. உயிர்களை அநாதியே பந்தித்திருப்பது ஆணவமாம். வியாபமாய் உள்ள உயிரை அணுத்தன்மை அடையச் செய்வதாலே ஆணவம் எனப்படும். இப்பாசத் தொடர்பிலிருந்து விடுதலை பெற்றுத் திருவருள் இன்பத்தை நுகர்ந்து இன்புறுதலே உயிர்களின் இறுதி நிலையாகும். இந்த நிலையையே ‘பேரா இயற்கை’ என்பர் வள்ளுவர். சைவப் பெருநூல்கள் திருவடிப் பேறு என்றும், முத்தி என்றும் பேசும். பசுக்கள் பாசத்தினை விட்டுப் பதியினை அடைதல் முத்தி என்று திறம்படக் கூறுவர் சிவஞானமுனிவர்.

சைவசாதனங்கள்

சைவத்தின் சாதனங்கள் அன்புள்ளத்தை அடிப்படையாகக் கொண்டவை. சைவசாதனங்கள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நால்வகைப்படும். இவைகள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. அரும்பு, மலர் பிஞ்சு, காய் என்று தொடர்பினை விளக்கிக் கூறுவர். தாயுமான அடிகள், சித்தத்தைச் சிவமாக்கிச் சிவஞானப் பெருவாழ்வைக் கொடுக்கும் இயல்பு, சரியை முதலிய மூன்றற்கே உரியதாகும். வேதவேள்விகள் நிலையற்ற காமியங்களை நல்கும். வேள்வி முதலாயின. ஞானத்தைப் பயவாமை யோடன்றி, தீவினைபோல அது நிகழவொட்டாது தடை செய்து நிற்றலும் ஆம். ஆதலால் தீவினைகள் இரும்பு விலங்கும் வேதத்துள் விதித்த வேள்வி முதலிய நல்வினைகள் பொன் விலங்கும் போல உணரற்பாலனவாம். வேள்வி முதலியவற்றாலாய இன்பம் முன் பசித்துண்டு பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியால் வரும் இன்பத்தைப் போலும். அவ்வேள்வி முதலியன போல அநுபவ மாத்திரையாற் கெடுதலின்றி மேன்மேல் முறுகி வளர்வனவாகிய சரியை கிரியை யோகங்களால் எய்தப் படும் சிவஞானம் பசித்து உண்டு பின்னும் பசித்தலில்லாத தேவர்களுக்கு அவ்வமுத உண்டியாலாய பயனைப் போலும் அவ்வமுத உண்டி நரைதிரை மூப்பின்றி நிலைபெறுதலாய பெரும்பயனைத் தருவதோடன்றி, பசி தீர்தலாகிய அவாந்தரப் பயனையும் தருதல்போல், சரியை முதலியனவும், சில ஞானத்தைத் தருவதோடன்றித் தத்தம்பத முத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம். இத்தகு முத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம். இத்தகு நெறிகளில் நின்றொழுகி, நல்வாழ்வு வாழ்ந்து, பேரின்பப் பெருநிலையை எய்துதலே மக்கள். வாழ்க்கையின் குறிக்கோள்.

குருவழிபாடு

சைவத் திருநெறியில் குருவழிபாடு முதன்மையாகவும் சிறப்பாகவும் எடுத்துப் பேசப் பெற்றுள்ளன. சிவம் உயிர்களுக்கு அதனியல்பை, சிறப்பியல்பை உணர்த்தும். சிவம் உயிர்களுக்கு மூன்று வேறு விதங்களாய் உணர்த்தும். இருமலமுடைய பிரளயாகலருக்கு அது போதாது. அவ்வுயிர்களுக்குச் சிவன் தன் இயற்கை வடிவோடு முன் நின்றுணர்த்தும். இவ்வுபதேசமும் மும்மலத்தவருக்குப் போதாது. இவர்களுக்கு நூல்முகமாயும், அநுபவமுகமாயும், உணர்த்த வேண்டும். இவர்களுக்கு உணர்த்துவதற்காகச் சிவம் குருவடிவத்தில் தங்கி நின்று நூல் முகத்தாலும் அநுபவமுகத்தாலும் உணர்த்தும். இங்ஙனம் சிவம் கருணையுள்ளங் கொண்டு நம்மனோர் போல எழுந்தருளி, நமது வாழ்க்கையைச் சிவஞானப் பெருவாழ்வாக ஆக்குகின்றது. இக்கருத்தினை நகர்த்தார் குலத்துதித்த சிவஞானச் செல்வராம் சொக்கலிங்க ஐயா அவர்கள், நமது திருவண்ணாமலை ஆதீன பிரதிஷ்டாபகர்களாகிய பிரதம பரமாசாரிய குரு தெய்வசிகாமணி சுவாமிகளைத் துதிக்கின்ற பாடல் ஒன்றிலே விளக்கிக் காட்டியுள்ளார்கள், மும்மலத்தவருக்கு அருள் பாவிப்பதற்காகச் சிவபெருமானே மாந்தர் உருக்கொண்டு, அருணையில் அமர்ந்தார். மக்கள், மனிதன்தானே என்று எள்ளி இடர்ப்படாவண்ணம், காப்பதற்காகத் தமது இயற் பெயரையே கொண்டார். தன்னைச் சார்கின்ற சீவர்களைச் சிவமாக்குகின்றர். அங்ஙனம் செய்வதினாலே மாந்தரது விகார உணர்ச்சியை எல்லாம் அழிக்கின்ற தேவ சிகாமணி என்று வாழ்த்துகின்றார்கள்.

“அவனியில் மும்மலர்க்கருள அவருருக்கொண்டு
அருணையில் வந்தமர்ந்தும் ஏனோர் புவியுரு

என்றுள்கி யிடர்ப்புகா வகை தன் சீர்ப் பெயரே
புனைந்துதற்சேர், பலர் பெயர் முன்விகாரமுறப்பண்ணி
அவர் விகாரமெலாம் படுக்கும் வாய்மைச், சிவகுரு
சிகாமணியாய்த் திகழ்தேவசிகாமணிதாள் சென்னி வைப்பாம்.”

என்பது பாடல். இத்தகைய தெய்வசிகாமணி நம்மனோர்க்கு அருளுள்ளங்கொண்டு வழங்குகின்ற சுகம் சுத்தாத்துவித சுகமேயாம். “நன்றென்ற இத்தாந்த மா மருணைத் தேவசிகாமணி செய் சுத்தாத்துவித சுகம்” என்று குமாரசாமி முனிவரின் கூறியது சுத்தாத்து வித சுகம் மட்டுந்தானா தெய்வசிகாமணி குருமூர்த்திகளின் திருவடிகளே, சிவபோக மெய்ஞ்ஞானத்தின் குரு என்றெல்லாம் பேசப் பெறுகின்றது.

“பருவமழியாஞ் சிவயோக மெய்ஞ்ஞானப் பலனுயிர்க்குங்
கருவழியாமெனக் காண் நெஞ்சமே யொருகா லையினுந்
திருவழியா துறு பேரின்ப வாழ்வு தினங் கொடுக்கும்
திருவருணாசலத் தேவசிகாமணி சிற்குருவே”

இத்தகு அருள் நலம் கனிந்த ஆசாரியப் பெருந்தகையின் திருவடி மலர்களை வந்தித்து வாழ்த்துகின்றோம்.

இதுவரையில், துன்பத்தை இன்பமாக்கிக் கொள்ளுகின்ற எண்ணத்திலே- முயற்சியிலே சமய உணர்ச்சியும் வாழ்க்கையும் அரும்புகின்றன என்பதையும், உலகின் பல்வேறு சமயங்களுக்கெல்லாம் சைவம் மிகப் பழமையான தென்பதையும், சைவத் திருநெறி பரந்த மனப்பான்மையுடன் வேற்றுமைகள் எல்லாங் கடந்து முடிந்த முடிபாக விளங்குகின்றது என்பதையும், சைவம் இறை உயிர் தளை என்ற முப்பொருள் இயல்பை விளக்கி, உயிர்கள் தளையினின்று விலகி இறையைச் சார்வதே சமய வாழ்க்கையின் பயன் என்பதையும் இந்தச் சிவானந்தப் பெருவாழ்வைச் சரியை முதலிய மூன்று நெறிகளால் அடைய முடியும் என்பதையும், அங்ஙனம் அடைய மும்மலத்தாராகிய சகல ஆன்மாக்களுக்கும் இறைவனே குருவடிவில் தங்கி உபதேசிக் கின்றான் என்பதையும், அத்தகைய அருண்ஞான குருமூர்த்திகளே திருவண்ணாமலை ஆதின தாபகர், பூரீமத் தெய்வசிகாமணி குருமூர்த்திகள் என்பதையும், அவர்களது திருவடிமலர்கள் சிவஞானப் பெருவாழ்வையும், ஒருநாளும் அழியாத வாழ்வையும் அளிப்பன என்பதையும், திருவருள் உணர்த்த உணர்த்தினோம்.

ஆசியுரை

அருள்ஞானத் தெய்வசிகாமணியின் உரிமைப்பதி அருணை என்று பேசப்பெற்றாலும், இன்று மூர்த்திகளது திருவருளில் திளைக்கின்ற பேறு இந்த மாவட்டத்து மக்களுக்கே கிடைத்துள்ளது. அதன் பயனாகவே இன்று சமாஜ ஆண்டு விழாப் பேரவையை இங்கே - குன்றக்குடியில் கூட்ட முடிந்தது. சமரசத் தொண்டரும் நமது அன்பிற்குரியாரும் ஆகிய திரு. ஜி. கல்யாணம் பிள்ளை அவர்களின் விருப்பத்திற்கிணங்க இங்கு சமாசத்தை நடத்த எண்ணினோம். அதனைச் செயல் முறையில் கொண்டுவர அன்புணர்ச்சியும் தொண்டுவளர்ச்சியும் உள்ள அன்பர்களது குழு ஒன்று அமைத்து அவர்களை இப்பணியில் ஈடுபடச் செய்தோம். அக்குழுவின் தலைவராகச் சைவ உணர்ச்சியில் தலை சிறந்தவரும், கலைவளர்ச்சியில் ஆர்வங்கொண்டவரும் உலகம் சுற்றிப் பேரனுபவம் பெற்றவரும் நமது தூய அன்பிற்குரியவருமாகிய கோட்டையூர், க.வீ. அள. மு. இராமநாதன் செட்டியார் அவர்கள் அமைந்தார்கள். சிறந்த அரசியல் தொண்டரும் நமது ஆதின உழுவலன்பரும் சிறந்த பண்பாட்டினருமாகிய சா. கணேசன் அவர்களது அருமை முயற்சி இந்த விழாவிற்குப் பெரிதும் துணையாக இருந்தது. இன உள்ளம் படைத்தவரும் உழைப்புணர்ச்சியிற் சிறந்தவரும், நமது ஆதினப் பணிகளிலே பங்குகொண்டு விளக்கமுறச் செய்கிறவருமாகிய இளவல் திரு. வீர. சா. மெய்யப்பன் அவர்களுடைய அயராமுயற்சி மறக்கற் பாலதன்று. இயற்கையாகவே, நமது ஆதீனத்தின் பணிகளைத் தமது பணிகளெனக் கருதிச் செயலாற்றும் நமது புரவலர், சேவு மெ. மெய்யப்பச் செட்டியார் அவர்களது பணி பாராட்டுதற்குரியது. இவர்களுக்கும் இவர்களோடு ஒன்றி நின்று பல்லாற்றாலும் பணிபுரிந்த ஏனைய அன்பர்களுக்கும் சீரும் செல்வமும் வாழ்நாளும் பெருக, அண்ணாமலை அண்ணலின் திருவருளைச் சிந்திக்கின்றோம். சமாசமும், சமாசத்து அன்பர்களும், பல்லாண்டு வாழ்ந்து சைவத்தின் ஆக்கத்திற்குப் பணிசெய்யத் திருவருள் துணை செய்வதாகுக.


வளர்க சைவம்!-வாழ்க சமாஜம்!


சீர்வாழி தெய்வ சிகாமணி; சீர்அருணை
ஊர்வாழி; வாழி உலகெல்லாம்;-கார்வாழி
சித்தமிழ்தம் ஆனசிவஆகமம் வாழி செழு
முத்தமிழும் வாழி முறை.