குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12
குன்றக்குடி அடிகளார்
நூல்வரிசை
தொகுதி - 12
சமயம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
![]() |
![]() |
![]() |
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
நூல்வரிசை
16 தொகுதிகள்
6000பக்கங்கள்
தொகுதி - 12
சமயம்
முதன்மைப் பதிப்பாசிரியர்
தவத்திரு பொன்னம்பல அடிகளார்
விற்பனை உரிமை :
31, சிங்கர்தெரு, பாரிமுனை,
சென்னை-600108
முதல் பதிப்பு : செப்டம்பர், 2002
திருவள்ளுவர் ஆண்டு : 2033
உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்
மணிவாசகர் வெளியீட்டு எண்: 945
விலை : ரூ. 125-00
தமிழாகரர் தெ. முருகசாமி
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் |
கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
மதுரை : 622853
கோயமுத்துார் : 397155
திருச்சி : 706450
அச்சிட்டோர் : மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை-1.
- 5954528
தமிழ்மாமுனிவர் அருள்நெறித் தந்தை
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்க்கைக் குறிப்புகள்
ஆண்டு | நிகழ்வுகள் | |
---|---|---|
1925 | • | தோற்றம் |
• | பூர்வாசிரமம் : தந்தையார் : திரு. சீனிவாசம் பிள்ளை தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி | |
• | பிள்ளைத் திருநாமம் : அரங்கநாதன் | |
• | தோற்றம் பெற்ற ஊர் : தஞ்சை மாவட்டம், திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம். | |
1931- | • | சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம். |
1936 | • | ‘சொல்லின் செல்வர்’ ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு. |
1937- | • | தமையனார் திரு. கோபாலகிருஷ்ன பிள்ளை வீட்டில் |
1942 | • | கடியாபட்டியில் வாழ்தல். |
• | பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல். | |
• | 1942 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு. | |
• | ‘வினோபா பாவே’ படிப்பகம் தொடங்கி நடத்துதல். | |
1945 | • | தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் கயிலைக் குருமணி அவர்களிடம் கந்தசாமித் தம்பிரான் என தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல். |
• | தருமபுரம் தமிழ்க் கல்லூரியில் பயிலுதல். | |
1947- | * | சீர்காழிக் கட்டளைத் தம்பிரான் - திருஞான சம்பந்தர் |
1948 | • | திருமடம் தூய்மைப் பணி; திருமுறை வகுப்பு, விழா நடத்துதல். |
1949 | • | குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு பட்டம் ஏற்பு. திருநாமம் சிறீலசிரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள். |
1951 | • | காரைக்குடிக் கம்பன் விழாவில் ‘புதரிடைமலர்’ என்ற தலைப்பில், அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு. |
1952 | • | குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதான்மாக எழுந்தருளல். |
• | அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம். | |
• | ‘மணிமொழி’ என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல். | |
1953 | • | ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல். |
• | பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல். | |
• | இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம். | |
1954 | • | இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு. |
• | திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு. | |
• | தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்) | |
1955 | • | அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல். |
• | ‘தமிழ்நாடு’ நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல். | |
1956 | • | அறிஞர் அண்ணா குன்றக்குடி திருமடத்திற்கு வருகை |
• | ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை. | |
1958 | • | குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல். |
1959 | • | ஆ தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல். பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை. |
1960 | • | மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல். |
1962 | • | சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத் திருவொற்றியூர்க் கூட்டத்தில் ஏலம் விட்டு ரூ. 4000 தருதல் |
• | மதுரை அருளமிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல். | |
1965 | • | இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அரசு வழக்கு தொடர்தல். |
1966 | • | தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம். |
1967 | • | திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம். |
• | திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல். | |
1968 | • | இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - ‘திருக்குறள் உரைக்கோவை’ நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல் |
• | - திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல். | |
• | இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணா நோன்பிருத்தல். | |
• | கீழ வெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்; புத்தாடை வழங்குதல். | |
1969 | • | பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி ஏற்பு; |
• | கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை | |
• | கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல் | |
• | தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறல். | |
1970 | • | சட்டமன்ற மேலவையில் இந்து அறநிலையத் திருத்த மசோதா - சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல் பற்றிப் பேசுதல். |
1971 | • | தமிழ்நாடு சமாதான்க் குழுத் தலைவராதல். |
• | சோவியத் பயணம்; 22 நாள் சுற்றுப் பயணம். | |
1972 | • | பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உருவாதல். |
• | சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம். | |
• | குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் திறத்தல். | |
1973 | • | திருக்குறள் பேரவைத் தோற்றம். |
• | திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநில மாநாடு நடத்துதல். | |
• | “கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப்பெற்றது. | |
• | குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டம் உருவானது. | |
1975 | • | நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல். |
• | சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு. | |
• | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி. வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு. | |
• | அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொர்னம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு. | |
• | இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி. | |
1982 | • | குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல். |
• | மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல். | |
• | திருவருட்பேரவை தொடங்குதல். | |
• | மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம். | |
• | புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி. | |
1984 | • | பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல். |
1985 | • | நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல். |
• | பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல். | |
• | மணிவிழா | |
1986 | • | தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல் |
• | இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி “Kundrakudi Pattern” என்று அறிவித்தது. | |
1989 | • | இவர் எழுதிய ‘ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. |
• | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. | |
1991 | • | இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது. |
• | இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம். | |
• | அரபு நாடுகள் பயணம். | |
1993 | • | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருது வழங்கிச் சிறப்பித்தது. |
1995 | • | இறைநிலையடைதல். |
குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை 16 தொகுதிகளில் 6000 பக்க அளவில் செம்பதிப்பாக மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1999இல் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் குழு அமைக்கப்பெற்றது. அடிகளாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், 60க்கு மேற்பட்ட நூல்கள் அரும்பாடுபட்டுத் தேடித் தொகுக்கப்பெற்றன. பொருண்மை கருதி ஐந்து தலைப்புகளில் அவை வகை செய்யப்பெற்றன. 2002 நவம்பரில் 16 தொகுதிகளும் அச்சுப்பணி நிறைவு பெறுகிறது.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் எழுத்துக்கள் அனைத்தையும் தொகைப்படுத்தி வெளியிடும் விதை என் நெஞ்ச நிலத்தில் நட்டேன். அதற்கு நீரூற்றி உரம் இட்டுப் பூத்துக் குலுங்கச் செய்த புண்ணியர் பொன்னம்பல அடிகளார். குன்றக்குடி அடிகளார் வகுத்த அறங்களை வளர்ப்பதும் திருமடத்தின் மரபுகளையும் பெருமையையும் பேணிக்காப்பதும், அடிகளார் புகழ் பரப்புவதும் தம் கடமையாகக் கொண்டு பொன்னம்பல அடிகள் விரதம் பூண்டு, வீறு கொண்டு செயலாற்றி வருகிறார்கள். அவர்கள் பெருமுயற்சியின் பெருவிளைவே இப்பெருந்திட்டம், குன்றக்குடி அடிகளாரின் செயலராக, நிழலாக இருந்த பரமகுருவின் பங்களிப்பு பெரியது. மிகப்பெரியது. அவர் இன்றி இந்நூல்வரிசை வெளிவந்திருக்காது. அடிகளாரின் அசைவுகள், நினைவுகள் அனைத்தும் பரமகுருவின் நெஞ்சில் பதிவாகி விட்டன.
காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னை முதல்வர் முருகசாமி முனைந்துநின்று இம்மாபெரும் திட்டத்தை வெற்றிபெறச் செய்தனர். சமயநூல்களில் தேர்ச்சியும் அடிகளார் நூல்களில் பயிற்சியும் அடிகளாரிடத்தில் மிகுந்த மதிப்பும் உடைய முருகசாமி முன்னின்று ஆற்றிய பணிகள் பல.
இந்த 16 தொகுதிகளுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெருமக்கள் 15பேர் அரிய ஆய்வு மதிப்புரைகள் வழங்கியுள்ளனர். அவர்கள் வருமாறு:
தொகுதி | 1, 2. | சிலம்பொலி செல்லப்பனார் |
3. | முனைவர் தமிழண்ணல் | |
4. | முனைவர் வா.செ. குழந்தைசாமி | |
5. | முனைவர் ஒளவை நடராசன் | |
6. | முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன் | |
7. | தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் | |
8. | முனைவர் வை. இரத்தினசபாபதி | |
9. | தருமபுரம் ஆதீனம் தவத்திரு சண்முக தேசிக ஞானசம்பந்தர் | |
10. | முனைவர் ச.வே. சுப்பிரமணியன் | |
11. | முனைவர் கு. சுந்தரமூர்த்தி | |
12. | தவத்திரு அமுதன் அடிகள் | |
13. | தவத்திரு ஊரன் அடிகள் | |
14. | முனைவர் இ. சுந்தரமூர்த்தி | |
15. | முனைவர் க.ப. அறவாணன் | |
16. | புலவர் இரா. இளங்குமரன் |
நூல் நுவலும் பொருள், அடிகளின் எழுத்துக்கொடை, சமய ஞானம், மனிதநேயம், பொதுநல நோக்கம், அறிவியல் அணுகு முறை, சமூகப் பணி பற்றித் திறனாய்வாளர்கள் நுண்ணாய்வு செய்து திறம்பட விளக்கியுள்ளனர். மதிப்புரைகளே ஒரு தனி நூல் அளவுக்கு வளர்ந்துள்ளது.
தவத்திரு ஊரன் அடிகள் தாம் அரிதின் முயன்று உருவாக்கிய ‘சைவத் திருமடங்கள் 18’ என்னும் பெருநூலில் மணிவாசகர் பதிப்பகத்தின் தொகுப்பு மிகப்பெரிய பணி என்றும் அடிகளாருக்கு நிலைத்த நினைவுச் சின்னம் என்றும் நெஞ்சாரப் பாராட்டியுள்ளார். இத்தொகுதிகளின் பன்முக நலன்களைப் பாரித்துரைத்துள்ளார். திருமடத்தின் வரலாறு எழுதும்போது இப்பெருந்திட்டத்தின் பெரும்பயனை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடிகளார் நூலுக்கு இவர் அளித்துள்ள அணிந்துரையில் ஐவகை அமைப்புகளின் கலவை (Synthesis) அடிகளார் என்பதனை ஆராய்ந்து நிறுவி, அவரது பேரறிவையும் பேராற்றலையும் பெருஞ் செயல்களையும் விளக்கியுள்ளார்.
சங்ககாலத்தில் தனிப் பாடல்கள் தொகைபெற்றது போல இருபதாம் நூற்றாண்டு தொகைநூற் காலம் எனத் திறனாய்வாளர் மதிப்பீடு செய்துள்ளனர். எழுத்தாளரின் கதைகள், அறிஞரின் கட்டுரைகள், ஆய்வுகள், படைப்புகள் ஒரு குடைக்கீழ் தொகைப் படுத்தும் முயற்சி இந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடிகளாரின் நூற்றொகை 20ஆம் நூற்றாண்டுத் தொகைநூல் வரலாற்றில் வரலாறு படைத்து விட்டது. 6000 பக்கங்களையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்கும்போது பிரமிப்பு உண்டாகிறது. நாளும் சொற்பொழிவு, திருமடத்துப் பணிகள், பல்வேறு அமைப்புகளை உருவாக்குதல், பன்னாட்டுப் பயணம், பன்னாட்டு உறவு, பல்வேறு செயற்பாடுகள் இவற்றுக்கிடையே குன்றக்குடி அடிகளார் செய்த நூற்பணி மலைப்பைத் தருகிறது. கட்டுரைகள் பொழுதுபோக்குக் கட்டுரைகள் அல்ல. புதிய தமிழகம் தோன்ற, தமிழர்கள் விழிப்புணர்ச்சி பெற வழிவகுக்கும் படைக்கலன்கள். தமிழ் மறுமலர்ச்சி, சமய மறுமலர்ச்சி, சைவ சமய எழுச்சி, திருமுறை இயக்கம், திருக்குறள் இயக்கம், தமிழ் வழிபாடு முதலியவற்றுக்கு அடிகளார் அளித்த கருத்துக் கொடைகள் இத்தொகுதிகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன.
குன்றக்குடி அடிகளாரிடம் மறைமலையடிகளின் சைவநூற் புலமையும் திரு.வி.க.வின் சமயப் பொதுமையும் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பற்றும் ஒருங்கிணைந் திருப்பதைத் திறனாய்வாளர்கள் இனங்கண்டு அடையாளங் காட்டியுள்ளனர்.
கி.பி.2ஆம் நூற்றாண்டில் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்றொரு மணியாரம் படைத்துச் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தார் என்பர் 20ஆம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற எழுத்துப் பணியால், கருத்துப் புரட்சியால் குன்றக்குடி அடிகளார் குன்றாப் புகழ் பெற்றுக் குன்றேறி நிற்கிறார்.
மேடைத் தமிழுக்கு அடிகளார் மேன்மை சேர்த்தார். மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணங்களை வாரி வழங்கினார். செந்தமிழ்ப் பொழிவுகளால் தமிழரின் சிந்தை மகிழச் செய்தார். அடிகளின் பாணி தனிப்பாணி. அடிகளார் வழியில் பட்டி மண்டபங்கள் இன்று வெற்றி நடைபோடுகின்றன. அடிகளாரின் பேச்சே எழுத்து வடிவமாக இருக்கும். எழுத்தில் மேடைப் பேச்சின் செல்வாக்கு மிகுந்திருக்கும். இதனை இந்நூல்வரிசை கற்பார் எளிதில் உணர்வர்.
நாவுக்கரசரின் தொண்டு நெறியும் மாணிக்கவாசகரின் அருள்நெறி ஈடுபாடும் சேக்கிழார் வழியில் தொண்டர் சீர்பரவும் இயல்பும் அடிகளார் வாழ்வில் இயல்பாக அமைந்தவை.
அடிகளாரின் திருக்குறள் ஈடுபாடும் திருக்குறள் கல்வியும், திருக்குறள் தேர்ச்சியும் சமூகப் பார்வையும் முதல் நான்கு தொகுதிகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இவர்தரும் புதிய வெளிச்சங்கள் பல.
அடிகளின் நூலினை ஒரு சேரத் தொகுத்து நோக்கிடும்போது முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்வதற்குக் களங்கள் - சிந்தனைக் களங்கள் பல உள என்பதை உணர்கிறோம். அடிகளாரின் எழுத்தும் பேச்சும் இளைஞர்களை ஈர்த்தன. புதியதோர் உலகம் செய்ய வழிவகை செய்தன. நீடுதுயில் நீங்க - சமய உலகம் விழிப்புணர்வு கொள்ள அடிகளார் ஆற்றிய பணிகள் தனித்ததோர் பேராய்வுக்கு உரியன.
அவர் பேச்சுக்கள், எழுத்துக்கள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்து வழங்குகிற பெரும்பேறு. தனிப்பேறு மணிவாசகர் பதிப்பகம் பெற்றபேறு.
கார்ல் மார்க்ஸை எடுத்துரைக்கும் காவி உடையினர். மதக் கலவரங்களை முன்னின்று தீர்க்கும் முன்னோடி தமிழ்நாட்டுத் திருமடங்களுக்கு ஒட்டுமொத்தப் பெருமை சேர்த்த உயர்மதியாளர். உயர்தரும நெறிகளை ஓயாது பேசியும் எழுதியும் வந்தவர். எளியோர் வாழ்வு உயர, குன்றக்குடித் திட்டம் கண்ட அடிகளார் பெருமைகள் பேசி முடியாது. அடிகளார் உருவாக்கிய கோட்பாடுகள் பல. கோயிலைச் சார்ந்த குடிகள், குடிகளைச் சார்ந்த கோயில் என்பன போன்ற தொடர்கள் இவர் எழுத்துக்கள் முழுதும் விரவிக் கிடக்கின்றன.
- தமிழ் வழிபாடு
- தமிழ் அருச்சனை
- தமிழ் ஆட்சி மொழி
முதலிய தமிழியக்கச் செயற்பாடுகளால் அடிகளார் ஆற்றிய அடிப்படைப் பணிகள் அளவிடற்கரியன.
அடிகளாரை 50 ஆண்டுகளாக அறிந்த நான் அவர்தம் 50 ஆண்டு எழுத்துக்களை ஒரு சேரத் தொகுத்து நூற்றொகையாக்கி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியதை என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறேன்.
அடிகளார் பூர்வாசிரமத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றவர். என் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனாருடன் நெருங்கிப் பழகிய கேண்மையர். அடிகளார் தம் வாழ்க்கை வரலாற்றில் என் தந்தையாரைப் பற்றி (தொகுதி 16) நெஞ்சம் நெகிழ எழுதிஉள்ளார்கள். அண்மையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி இயற்கை எய்திய என் தந்தையார் நினைவு போற்றி இக்கருத்துக் கருவூலத்தை வெளியிடுகிறேன்.
புதிய தமிழ் இலக்கியத்திற்குக் கொடையாக அடிகளார் வழங்கிய இந்நூல் வரிசை, தமிழ்ச் சிந்தனைப் போக்கின் திருப்புமுனையாக அமைந்த நூல்களுள் சிறப்பிடம் பெறும் என்பது என் நம்பிக்கை.
இத்தொகை நூல் செழுமைபெறத் துணைநின்ற பதிப்புக் குழுவிற்கும் மெய்யப்பன் தமிழாய்வக அறங்காவலரான என் மகன் மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கும் அனைத்துத் தொகுதிகளையும் வலிவோடும் வனப்போடும் பொலிவோடும் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த மேலாளர் இரா. குருமூர்த்திக்கும் நன்றி.
சிறந்த தவச் செல்வரும் சிந்தனையாளருமாகிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் நம் காலத்து வாழ்ந்து அண்மையில் (16.1.1995) மறைந்தவர். சாதி, சமய, மொழி, கொள்கை வேறுபாடுகளைக் கடந்தவராக எல்லா மக்களுடனும் மனித நேயத்துடன் பழகியவர். மனித நேய ஒருமைப்பாட்டைத் தனது இலட்சியமாகக் கொண்டு அதை மக்களிடையே பரப்பிட அயராமல் உழைத்தவர்.
‘உலகத்தை அறிந்து கொண்டு அதற்குள் வாழ்ந்து, தங்களையும் உலகத்தையும் ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம்’ என்பார் அவர்.
‘ஆன்மிகம் மனிதத்தின் விழுமிய பயன் ஆன்மிகத்தின் மறுபெயர்தான் மனித நேயம்: ஆன்மிகம் பகுத்தறிவுக்குப் புறம்பானதல்ல; ஆன்மிகம் ஞானம்; ஆன்மிகம் உலகம் தழீஇயது’ என்றும் உறுதியாக நம்பினார் அடிகளார்.
ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள் சமாதானத்தின் காவலர்கள். ஆன்மிகம் எல்லோரையும் வாழவைக்கும் என்பது அடிகளார் கருத்து.
மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்தி, பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு - வாழ்க்கை முறைக்குச் ‘சமயம்’ என்பது பெயர் என அடிகளார் கூறுவார்.
‘மனிதகுலம்’ ஒன்றே என்னும் சுருதியில் மாறுபாடுகள் இல்லை. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதே சமய நியதி, ‘நீதி’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் அடிகளார்.
மதம் மனிதர்களின் உரிமைகளுக்கு அரண் செய்வதற்கு மாறாக வன்முறையாளர்களுக்கே கைகொடுத்தது. இதன் ‘விளைவாகச் சாதிகள் தோன்றின. பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மலிந்தன’ என்பார் அவர். ஆனால், ஆன்மிகம் தன்னலமற்றது. ஆன்மிகம் மற்றவர்களுக்கு உதவுவதில் முந்தும், ஆறுதல் தரும். இவ்வான்மிகத்தில் தாமே வாழ்ந்து பிறருக்கும் அவர் எடுத்தோதினார். அடிகளாரின் ஆன்மிகச் சிந்தனைகள் சமுதாயம் தழுவிய சிந்தனைகள் என்பதால் அடிகளார் ‘சமுதாய மாமுனிவர்’ என்று அழைக்கப்பட்டார்.
மனித வாழ்வு உழைப்பினாலானது. ‘உண்ணும் உணவைத் தங்கள் கடின உழைப்பால் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துப் படைத்து உண்பவர்கள் நல்லவர்கள், உத்தமர்கள்’ என்பார் அடிகளார்.
மனித குலத்தில் யாராவது சிலர் உழைக்காமல் வாழ்ந்தால் அவர்களுடைய உழைப்பின் பங்கை மற்றவர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தவறான முறை. இதைச் ‘சாபக்கேடு’ என்பார்.
உழைப்பு இரண்டு வகைப்படும். ஒன்று அறிவுழைப்பு, மற்றது உடலுழைப்பு. இவ்விரண்டு உழைப்புகளிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்பது கிடையாது. எனினும், காலப்போக்கில் உடல் உழைப்பு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, அறிவுழைப்பாளர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுதல் நெறியன்று என்பது அடிகளார் கருத்து.
ஊழ் (விதி) துணை இல்லாது போனால் காரியம் கைகூடாது என்னும் மூடநம்பிக்கை இன்றைய சமுதாயத்தைக் கெடுத்துள்ளதைக் கண்டு மனம் வருந்தினார். ‘ஊழினை வெற்றிபெறப் பழக்கங்களை, வழக்கங்களை வெற்றிபெற வேண்டும்’ என அறிவுறுத்தினார்.
உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் உழைப்பின் அடிப்படையில் கிடைக்கப் பெறுதல் வேண்டும் என்று வற்புறுத்திய அடிகளார் சமுதாயத்தின் பொருளாதாரம் பற்றியும் சிந்தித்தார்.
‘பொருளாதாரம் என்பதன் முழுப்பொருள் பணமுடை யோராதல் அல்ல, சொத்துடையோராதல் அல்ல. வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதாகும். பொருளுக்காக வாழ்க்கையல்ல, வாழ்க்கைக்காகவே பொருள். பொருளாதாரம் உயர்ந்து வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விளங்கினால்தான் பாதுகாப்புக் கிடைக்கும், சமாதானமும் அமைதியும் கிடைக்கும்’ என்பதை அடிகளார் என்றுமே மறந்தவரல்லர்.
சமநிலையற்ற பொருளாதாரத்தின் விளைவாக நாட்டில் வறுமை மலிந்து விட்ட நிலை கண்டு மனமுருகியவர் அவர். ‘வறுமையையும் ஏழ்மையையும் தொடர்ந்து போராடி அகற்றாத நாம்தான் குற்றவாளிகள்’ என்று வருந்தியவர் அவர். எல்லாப் பணிகளையும் விட வறுமை ஒழிப்புப் பணியை முதற்பணி எனக் கருதிச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மனிதர்கள் எப்போதுமே தன்னல உணர்ச்சியோடு செயல்படுவதை உணராதவர் அல்லர் அடிகளார். இத்தன்னல உணர்ச்சியைத் தடை செய்யாமல், மட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ‘ஆசைப்படுவது தவறல்ல. ஆனால், ஆசை அன்பாக மாற வேண்டும். ஏனெனில் ஆசை தற்சார் புடையது’ என்பார் அவர்.
விவசாயப் பொருளாதாரம் விவசாயிகளுக்கு எதிராக அமைந்திருக்கும் நிலை மாற்றப்பட வேண்டியதையும் அவர் வலியுறுத்தினார். இடைத் தரகர்களுக்கு இடமில்லாத விவசாயப் பொருளாதாரம் அமைய வேண்டும் என்பது அவரது கருத்து.
கால்நடை வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்றவற்றால் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்பதைப் பற்றியும் அடிகளார் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், படிப்படியாக அது பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு சிலர் செல்வத்தில் திளைக்கவும் பலர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழவும் பொருளாதார முறை வகை செய்திருப்பதைக் கண்டு மனம் பொங்கினார் அடிகளார். இந்நிலையைப் போக்க நாத்திகம் தவிர்த்த மார்க்சீயத்தைப் பற்றியும் அவர் சிந்தித்தார். மார்க்சீயத்தின் உயிர்க்கொள்கையாகிய ‘உழைப்புக்குத் தகுந்த ஊதியம்’ என்னும் கருத்தும் அடிகளாருக்கு உடன்பாடே மனித உலகத்துக்குச் சீரான வாழ்க்கையை வழங்க வேண்டுமென்ற விழுமிய நோக்கத்துடன் பொதுவுடைமைத் தத்துவத்தை, ஒரு புதிய வாழ்க்கை முறையை உலகத்துக்கு அறிமுகம் செய்தவராகக் கார்ல் மார்க்சைப் பாராட்டி, அவரை ‘மாமுனிவர்’ என அடிகளார் போற்றத் தவறியதில்லை.
எனினும், ஸ்டாலின் போன்றோர் பொதுவுடைமைக் கோட்பாட்டைத் தன்னலத்துக்கு உட்படுத்திப் பயன்படுத்தியதை அடிகளார் ஏற்றதில்லை. இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்றது கூட்டுறவு முறையே என்பதை ஓயாமல் வற்புறுத்தி வந்தார். தாம் குன்றக்குடிப் பகுதியில் மக்கள் மேம்பாட்டுக்காக வகுத்த பொருளாதாரத் திட்டத்தைக் கூட்டுறவு நெறியின் அடிப்படையிலேயே அவர் அமைத்து நன்மை கண்டார்.
மனித குலத்தில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய சமுதாய அமைப்பைத் தம் இலட்சியமாகக் கொண்ட அடிகளார் இத்தகைய சமுதாயத்தை அமைக்கக் கூட்டுறவுத் துறையே ஆவன செய்யும் என்பதை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் வலியுறுத்தினார். எனினும், இந்தியாவில் அரசாங்கத்தின் இரும்புப்பிடியில் சிக்கியிருக்கும் இன்றையக் கூட்டுறவு அமைப்புகளின் மூலம் இதைச் சாதிக்க முடியாது என்பதை அடிகளார் உணர்ந்திருந்தார். கூட்டுறவு இயக்கங்களை மக்களே கண்டு, தொடக்கத்திலிருந்து நடத்தி, நேரிடையாக என்று பங்கு கொள்கிறார்களோ, பயனடைகிறார்களோ அன்றுதான், கூட்டுறவு இயக்கம் வெற்றி பெறும் என்பதை எடுத்துரைக்க அவர் ஒரு போதும் தயங்கியதில்லை.
ஆதிபத்திய நஞ்சுக்கு மாற்று கூட்டுறவு என்பது அடிகளாரின் நம்பிக்கை. ஏனெனில், கூட்டுறவாளனின் விருப்பமும் விழைவும் பிறர் நலம் சார்ந்ததாகவே இருக்கும். பிறருக்குச் செய்யும் உதவியைக் கடமையாகவே கருதுவான் உண்மையான கூட்டுறவாளன் என்று அடிகளார் விளக்கினார்.
இந்நாட்டில் எல்லாரும் எல்லாமும் பெறச் செய்யும் அரசியலே நமக்குத் தேவை என்பது அடிகளாரின் அரசியல் நிலைப்பாடு.
அரசியலுக்கு ஆதாரம் அறமே என வள்ளுவர் கூறுவதை அடிகளார் அப்படியே ஏற்றுக் கொள்கின்றார். வளம், வறுமையென்னும் வேறுபாடுகளை அகற்றி, பொருளின் காரணமாகத் தோன்றும் ஒழுக்கச் சிதைவுகளை நீக்கி, நிறைவான ஒரு சமுதாயத்தைப் படைக்க முயலும் அரசியலுக்குப் பொருளியலும் அடிப்படை என்பது அடிகளார் கருத்து.
ஒரு சிறந்த நாட்டுக்கு முதல் இலக்கணம் வறுமையின்மை தான். ஆகவேதான், வையத்து மாந்தர்க்கெல்லாம் வாழ்வளிப் பதற்குரிய செல்வப் பங்கீட்டு முறையை, முறையாக நடைமுறைப் படுத்தி வாழ்வளிக்காதது. கொலை செய்யும் குற்றத்துக்கு ஒப்பானது என்று கூறும் குறள்நெறியைத் தமது நெறியாகவே அடிகளார் எடுத்தோதுவார். சமுதாயத்தில் பலரோடு கூடி இசைந்து வாழ்ந்து மனிதகுலக் கூட்டுச் சமுதாயம் அமைந்திட நாடு, மொழி, இனம், சமயம், சாதி வேறுபாடுகளற்ற ஒரு குலம் அமைய உறுதுணையாகச் செயல்படுவதே நல்ல அரசியல் என்று அவர் நம்பினார்.
அடிகளாரின் ஆன்மிக, பொருளாதார, அரசியல் சிந்தனைகள் அனைத்துமே மனித மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட மனித நேயச் சிந்தனைகள். ‘தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெற்றியே, மானுட இயக்கத்திற்கு உயிர்ப்பு, உந்து சக்தி’ என எழுதிய அடிகளார். தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து பெருமை பெற்றவர்.
‘ஒரு மனிதன் தனது பொறிப்புலன்களைப் பக்குவப்படுத்திப் பலருக்கும் பயன்பட வாழ்வதே சமய வாழ்க்கை’ என்று அவர் உறுதியாக நம்பினார். ‘மற்றவர்க்குப் பயன்படாதன எல்லாம் தற்சார்புடையன. அவையெல்லாம் காலப்போக்கில் அழியும். ஆகையால், மானுடத்தை முழுமையாக வளர்த்து. உயிர்க்குலத்துக்கு அர்ப்பணிப்பதே சமயத்தின் குறிக்கோள்’ என்று அவர் விரித்துரைத்தார்.
சமுதாயம் என்பது பலர் கூடி வாழும் ஒரு சமூக அமைப்பு, சமுதாய அமைப்பில் உள்ள ஒவ்வொருவருடைய ஆன்மாவும் செழித்து வளர்ந்தால்தான் சமுதாயம் செழிப்படையும். ஆதலால், சமயத்துக்கே அடிப்படை உறுப்பு சமுதாயம்தான். எனவே, சமுதாயத்தை வளர்ப்பது சமயத் தொண்டே என்பதை முற்றாக உணர்ந்து தெளிந்து, அதைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பிறருக்கும் அறிவுறுத்தியவர் அடிகளார்.
ஆகவேதான் அருள்நெறித் திருக்கூட்டமும் தெய்வீகப் பேரவையும் அமைத்து இந்து சமயத்துக்குப் பணியாற்றிய அடிகளார். திருவருட் பேரவையை அமைத்து, எல்லாச் சமயத்தினரும் இணைந்தும், இசைந்தும் வாழும் வகையில் தொண்டு புரிந்தார். தாம் ஒரு சமயத்தைச் சார்ந்தவராயினும், அச்சமயத் தலைவராயினும், பிற சமயங்களையும் மதித்துப் போற்றும் பண்பாளர் அடிகளார். ஆகவேதான், அடிகளாரை உண்மையான மனிதநேயச் செயல்பாட்டு வீரர் எனத் தமிழகம் போற்றிப் பெருமை கொள்கிறது.
அருள்நெறித் தந்தை குரு மகா சந்நிதானம் நூல் தொகுதிகளில் - சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நூல்களின் தொகுப்பில் - இத்தொகுதி சிறப்புமிக்கதாய் விளங்குகின்றது. சமயத்தைப் பற்றிய புதிய பார்வை இன்றையக் காலத்தின் தேவையாக உள்ளது. இன்றையச் சமய உலகம் தம் சிக்கல்களை - பிரச்சினைகளைத் தாமே தீர்வு காண்பதை விட்டு விட்டு அரசிடம் ஒப்படைத்துவிட்டுத் தாம் விலகிக் கொண்டுள்ளது. தாம் ஆற்ற வேண்டிய பணியை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கள்வர்கள் - தோன்றிய சமூகத்தில் சட்டங்களும் சிறைச்சாலைகளும் தவிர்க்க முடியாதவை. சிறைச்சாலைகள் தேவையில்லாத சமூகத்தை உருவாக்குவதுதான் சமய உலகத்தின் கடப்பாடு, கள்வர்கள் தோன்றாத சமூகத்தை உருவாக்குவதுதான் சமய உலகத்தின் கடப்பாடு; நோக்கம். சமநிலைச் சமுதாயத்தைச் சமய உலகத்தின் மூலம் படைக்க வேண்டும் என்பதுதான் அருள்நெறித் தந்தையின் ஆழமான உட்கிடக்கை; கொள்கை; இலட்சியம். அதை இத்தொகுப்பு நிறைவேற்றித் தரும் என்று நம்புகின்றோம். இந்த நூலில் வளர்ந்து வரும் அறிவுலகத்துக்கு ஏற்புடையதாக சடங்குகளே சமயம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற மக்களைச் சமயம் ஒரு வாழ்வியற்கலை என்று அருள்நெறித் தந்தை நெறிப்படுத்துகின்றார்கள். “அறியாமை என்பது ஒன்றும் தெரியாமை அன்று, ஒன்றை முறை பிறழ அறிந்திருப்பதே அறியாமை. அதாவது நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும், உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும், இன்பத்தைத் துன்பமாகவும், துன்பத்தை இன்பமாகவும், நியாயத்தை அநியாயமாகவும், அநியாயத்தை நியாயமாகவும், நீதியை அநீதியாகவும், அநீதியை நீதியாகவும், நிலையானவற்றை நிலையில்லாதனவாகவும், நிலையில்லாத வற்றை நிலையானவையாகவும் கருதுவது. இன்றையச் சூழ்நிலையில் அறியாமை அறிவு என்று கருதப்படுகின்றது” என்ற கருத்து ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும். ஆணவத்தின் இயல்பால் அல்லல்படும் உயிர்க்குலம் தழைக்கத் தீர்வு காண வேண்டும். நான் யார்? என் உள்ளமார்? ஞானங்கள் யார்? என்னை யாரறிவார்? என்ற பாடல் முழுவதுமாகச் சிந்திக்கப்படுகிறது. “நான் யார்? நான் என்பது அஞ்சலக முகவரி அன்று. நான் என்பது வாழ்க்கை வசதிகளும் பதவி அடையாளங்களும் அன்று. நான் என்பது நாமாக மாறவேண்டும். அறியாமை களைந்து பேரறிவிடம் தம்மை இணைத்துக் கொள்வது வழிபாட்டின் பயனாகும். வழிபாடு இறைவனுக்காகவா? உலக உயிர்க்குலம் தம்மைப் போற்றித் துதிக்க வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கின்றாரா? வழிபாட்டின் பயன் உயிர்க்குலம் தம்மை ஈடேற்றிக் கொள்ளவே” என்ற கருத்து மிகவும் ஏற்புடையதாகும்.
“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்னும் சிலப்பதிகார நெறி ஏற்புடையதே. ஊழ்வினை என்பது செய்த வினைகளின் பயன்தானே நெல்லை விதைத்தால் நெல்லைத்தான் அறுக்க முடியும். எதை விதைக்கின்றோமோ அதைத்தான் அறுவடை செய்கின்றோம். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறது புறநானூறு. அதேபொழுது ஊழ்வினையை மாற்ற முடியாது என்ற கருத்தினை மறுத்து மகாசந்நிதானம் தெளிவுபடுத்துகின்றார்கள். “ஊழ் மாற்ற முடியாதது என்கின்றனர். கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியாதா? எழுந்திருக்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியும்: எழுந்திருக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள்’ என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றார்கள்.
- இடுகாட்டில் எரியும் பிணங்கள்!
- நடுவீட்டில் நடை பிணங்கள்!
அன்பில்லாத வாழ்க்கை வீட்டுக்குள் மயான அமைதியை வரவழைக்கும் அல்லது போர்க்களத்தை உருவாக்கும் இன்று பகுத்தறிவுச் செயற்பாடே இல்லை! தொகுப்பறிவுதான் இருக்கிறது. வேண்டும் என்று பழகும் காலத்தில் தமக்குச் சாதகமான நன்மைகளையே தொகுத்துப் பார்க்கிறார்கள். வெறுப்பு வந்தவுடன் நன்மைகளை எல்லாம் மறந்து விட்டு தீமைகளையே - தவறுகளையே தொகுத்துப் பழி சுமத்துகிறார்கள். இன்று சமயங்கள் நிறுவனங்களாக மாறிய பிறகு, சமய நெறியிலிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்ற பிறகு தம் தகுதியை இழந்துவிட்டன. அதனால் சமய அடிப்படையில் போர்கள் கூட நடந்தன; நடந்து கொண்டிருக்கின்றன.” என்ற கருத்து இன்றும் நடைமுறை உண்மையாகச் சமூகத்தின் போக்கில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
பொங்கல் சிந்தனையில் பொங்கல் நாளன்று “பழைய வீடு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. பழைய குப்பைகள் அகற்றப்பட்டுப் பழுது பார்த்துப் புதுவண்ணம் பூசிப் புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. அதைப் போல இதயத்தில் இடம் பெற்ற மாசுகள் அகற்றப்பட்டு நன்மைகள் எனும் புதுமைகள் சேர வேண்டும்.
- ‘முன்னைப் பழமைக்கும் பழமையாய்
- பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியதாய்’
என்று சொன்னால் போதுமா? எப்பொழுது அதை நிறைவேற்றுவது?” என்ற சிந்தனையில் ஒன்றும் செயல்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது!
“சமூக நோக்கில் அறிவியல்” என்ற கட்டுரையில் ‘நிலமகள் திருமேனியில் பசுமை ஆடை போர்த்தவேண்டும். நிலமகள் முகத்தில் அழுக்குகளை, கழிவுப் பொருள்களை இட்டு அவளை அவலப்படுத்தாதீர்கள் எல்லாக் கழிவுகளையும் சோம்பல் பாராமல் அவள் மடியில் வைத்துக் கட்டுங்கள்! அதாவது நிலத்தில் குழிவெட்டிக் கழிவுப் பொருள்களை அந்தக் குழியில் போட்டு மூடுங்கள் அவள் அவற்றை உரமாக்கிப் பொன்மதிப்பில் உங்களுக்குத் தந்து மகிழ்வாள்.” என்ற சிந்தனை மிகத் தேவையானது. ‘தண்ணீர் பட்ட பாடு’ என்று பணத்தைத் தண்ணீரைப் போல் செலவழிக்கின்றார்கள் என்றும் கூறுவார்கள். இதுமிகத் தவறு. தண்ணீரைச் சேமித்துச் செலவழிக்கத் தெரியாததால் தான் கர்நாடகத்தோடு சண்டைபோட வேண்டிய நிலை! தண்ணீரை, காற்றைப் பற்றி விழிப்புணர்வு மிக்க கருத்துக்கள் இன்றையக் காலத்தில் அவசியமான கருத்துக்கள். ‘வாழ்க்கை நெறி - கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள்’ என்ற கட்டுரையில்
- ‘இன்னா தம்மஇவ் வுலகம்
- இனிய காண்க! இதன் இயல்புணர்ந் தோரே!’
என்ற கவிதைக்குத் தரப்படும் ‘இந்த உலகம் துன்பம் நிறைந்ததுதான் துன்பத்தை விட்டு விட்டு இன்பத்தை மட்டும் உற்றுநோக்கு!’ என்ற பழைய விளக்கத்தை மறுதலித்து விட்டு, ‘துன்பம் நிறைந்த உலகத்தை இன்பமாக ஆக்கிக் காட்டு!’ என்று புதிய விளக்கத்தை அளித்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
‘உழைப்பின் பெருமையை, சிறப்பை இறைவனே போற்றினான்’ என்று கார்ல் மார்க்ஸ் சிந்தனையோடு நமது ஆன்மிகச் சிந்தனையையும் இணைத்துக் கூறியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது. இறைவன் கொற்றாளாய் மண் சுமந்தான். அவன் பொன்மேனி புண் சுமந்தது. யாருக்குக் கூலியாளாய் இறைவன் தன்னை அமர்த்திக் கொள்கின்றான்? ஓர் ஏழை வந்திக் கிழவிக்குத் தன்னைக் கூலியாளாக அமர்த்திக் கொள்கின்றான். பெறுகின்ற கூலியோ வெறும் உதிர்ந்த பிட்டு “உழைப்புக்கு உணவு” என்ற தத்துவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை இறைவன் தரவில்லை. அதற்காகத் தண்டனையும் பெற்றுக் கொள்கின்றான். இது எதை நமக்குக் காட்டுகிறது? பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை யார் தர மறுத்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அவன் ஆண்டவனாய் இருந்தாலும் தண்டிக்கப்படுவான் என்ற அற்புதக் கருத்தைத்தான் இந்தக் திருக்கூத்து நமக்கு உணர்த்துகின்றது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பொதுவுடைமைச் சிந்தனையே நம் ஆன்மிக உலகம் என்பதைச் சிறப்பாக, புதிய பார்வையில் கூறி இருப்பது பாராட்டுக்குரியது.
அருள்நெறித் தந்தையின் கவிதைகள்: ஞானத் தந்தைக்கு உணர்வுகள் எழும்போது எல்லாம் தமிழ்த்தாய் அவர்களின் சிந்தனையிலிருந்து எழுதுகோல் வழியே நர்த்தனம் ஆடுவாள்! கவிதை ஒரு பேசும் ஓவியம் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு ஏற்புடையதாகக் கவிதை மலர்ந்து மணம் பரப்புகின்றது! சட்டமேலவை உறுப்பினர் பொறுப்பினை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் கவிதை ஒரு வரலாற்றுப் பெட்டகம்! தம்முடைய ‘நெஞ்சுக்கு நீதி’ வரலாற்று நூலில் முத்தமிழறிஞர் கலைஞர், அடிகள் பெருமான் கவிதையைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துப் போற்றியிருக்கின்றார்! அருள்நெறித் தந்தையின் மணிமண்டபத் திறப்பு விழாவில்கூட இக்கவிதையை முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது. “பரமகுரு வாழ்க!” என்ற கவிதை ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு அவர்களின் உண்மையான தொண்டிற்கு, உறுதியான உழைப்பிற்கு, சலனப்படாத நேர்மைக்கு, சஞ்சலமில்லாத வாய்மைக்கு அளிக்கப்பட்ட நற்சான்று அணுக்கையானவர்களிடம் விரைவில் விடைபெறப் போகின்றோம் என்ற முன்னறிவிப்பு தம்மோடு தோளோடு தோள் கொடுத்துத் தம் பணியை நிறைவாய் பரமகுரு செய்திருக்கின்றார் என்ற நிறைவு! தமிழய்யா கதிரேசனைப் பாராட்டிய வரிகள் அவரின் உண்மைத் தமிழ்த் தொண்டிற்கு அளிக்கப்பட்ட பாராட்டு நல்ல தோழமைக்கு இலக்கணமாய் விளங்கியது கபிலர் - பாரி நட்பாகும். முந்தி விடைபெற்றுவிட்ட பாரியை நோக்கி ‘என்னைத் தனியே விட்டுச் சென்றாயே!’ என்று கபிலர், மண்ணுலகில் பாரி விட்டுச் சென்ற கடமையை நிறைவேற்றி விட்டு விரைவில் செல்வார். அதுபோல் நம் அடிகள் பெருமான் தவத்திரு சுந்தர சுவாமிகளின் பிரிவின்போது பாடிய இரங்கற்பாவில் ‘விரைவில் உனைத் தொடர்ந்து வருகின்றோம்!’ என்று கூறிய வரிகளே வாழ்வில் உண்மையாகிவிட்டது. தவத்திரு சுந்தர சுவாமிகள் மறைந்த சிறிது காலத்திலேயே நம் தவத்தந்தையும் மறைந்துவிட்டார்கள் அடிகள் பெருமானின் கவிதைகள் சத்தியம் தாங்கிய கவிமாலை என்பதே உண்மையாகும்.
‘எங்கே போகிறோம்?’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் மதுரை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சி, இலக்கியம், ஆன்மிகம், சமூக மேம்பாடு பற்றிய அற்புதச் சிந்தனைகளை உள்ளடக்கியதாகும். ‘எங்கே போகிறோம்?’ என்று எழுப்பப்படுகின்ற வினாவே அற்புத வினா! இது நாட்டை நோக்கி, சமூகத்தை நோக்கிக் கேட்கின்ற வினா! மனச்சாட்சியோடு நடுநிலையோடு கேட்கின்ற வினா! கால்நடை என்றால் என்ன?’ என்று அருகிலிருப்பவரைக் கேட்கிறார். காலால் நடக்கின்ற ஆடு, மாடுகள் என்று அவர் பதிலளிக்க, ‘மனிதனும் காலால் தானே நடக்கின்றான்; அவனுக்கு இந்தக் கால்நடை மருத்துவமனை பயன்படுமா?’ என்று கேட்ட கேள்வியின் சிந்தனைக் கிளர்ச்சி, சிந்திக்க மறுக்கும் சமூகத்திற்குக் கொடுக்கின்ற சவுக்கடி! ‘விடுதலை விழா என்றைக்கு வீட்டு விழாவாகக் கொண்டாடப்படும்?’ என்று கேட்கும் கேள்வியில் ‘வழக்கமான சடங்குகளின் விழாவாக - தீபாவளி, பொங்கல் திருநாள் போன்று அமைந்திடாமல் கடைக்கோடி மனிதனும் ஏற்றம் பெறும் உண்மையான விடுதலைப் பெருவிழா - மக்களின் விழாவாக மலர வேண்டும்’ என்ற சிந்தனை, உண்மையான மக்களாட்சித் தத்துவத்தை நடைமுறைப் படுத்துமாறு கூறுகின்றது. அயோத்தி மக்களுக்கு இருக்கும் நாட்டு உணர்வு இராவணன் ஆண்ட இலங்கை மக்களுக்கு இல்லாது போனது ஏன்? ஒடுக்கும் தலைமையின் கீழ்ப் பல்லாண்டு காலம் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மனோபாவம் அது! இன்று நமது மக்களிடம் நாட்டுணர்வு மங்கிக் கிடக்கின்றதே! இன்று ஒடுக்கும் தலைமை இல்லை. தன்னலம் எனும் அரக்கன் நம் அனைவரையும் ஆட்சி செய்கின்றான். தன்னல அரக்கன் மாய்ந்தால்தான் நாட்டு நலம் என்ற அற்புத தீபஒளி மலரும்.
‘அறிவியல் இல்லாத ஆன்மீகம் குருட்டுத்தனம்’ It generates superstition என்று குறிப்பிடுவார்கள். ஆன்மீகம் இல்லாத அறிவியல் மூடத்தனமானது என்று குறிப்பிடுவார்கள். எந்நேரமும் மூன்றாம் உலகப்போரைத் தோற்றுவித்துவிடும். அறிவியலும் ஆன்மிகமும் இணைந்து செயல்படவேண்டும் என்று தம் அருளியல் வாழ்வோடு சமூக அறிவியல் தொண்டையும் இணைத்து முன்மாதிரியாக விளங்கினார்கள். கல்வி உலகம் படைப்புக் கல்வி உலகமாக மாறவேண்டும் என்ற சிந்தனை இன்றையக் காலத்தின் கட்டாயம். சோவியத் சிந்தனையாளன் சுகோம்லின்ஸ்கி, ‘குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்’ என்றான். பனித்துளி சிதறாமல் ரோஜா இதழைப் பறிப்பதுபோல் குழந்தைகளுக்குக் கல்வியினைச் செலுத்த வேண்டும் என்ற சிந்தனை நெகிழ வைக்கிறது. வறுமையும் ஏழ்மையும் முயன்று மாற்றத் தக்கவை. மனித முயற்சியால் வறுமையும் ஏழ்மையும் அகல வேண்டும். கடவுள் நம்பிக்கையென்ற பெயரில் மனித முயற்சிகள் முடமாகி விடக்கூடாது. கடவுள் நம்பிக்கை தேவை அறிவறிந்த ஆள்வினை முயற்சிகள் வெற்றி பெறுமாறு கடவுள் நம்பிக்கை வாழ்வியலோடு இணைந்து செயல்பட வேண்டும்.
வளரும் வேளாண்மை, கால்நடை அறிவியல் சிந்தனைகள் இன்றைய வளர்ந்து வரும் விவசாய, பொருளாதார உலகத்திற்கு உடனடித் தேவையாகும். கூட்டுறவுத் துறை என்பது அரசின் ஆதிக்கத் துறையாகி விட்டது. கூட்டுறவுத்துறை மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.
எங்கே பழங்காலத் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஆன்மிகம்? நாயன்மார்களும் ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மிகம் எங்கே? சராசரங்களெல்லாம் சிவம் பெருக்கிய சீலம் எங்கே? ‘எந்நாட்டவர்க்கும் இறைவா!’ என்ற உலகப் பொதுமை தழுவிய மாணிக்கவாசகரின் ஆன்மிகம் எங்கே? தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை என்றவாறு தொண்டு நெறியில் வளர்ந்த ஆன்மிகம் எங்கே? வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடும் மனித நேயமே ஆன்மிகம் என்று ஆன்மிக தளத்தைச் சரியாக அடையாளம் காட்டுகின்றார்கள். ‘எங்கே போகிறோம்?’ என்ற கட்டுரைகளின் தொகுப்பு, சமூகத்திற்கு எல்லாத் துறைகளிலும் சரியான பாதையை அடையாளம் காட்டுகின்றது.
‘மண்ணும் மனிதர்களும்’ ஆனந்தவிகடன் வார இதழில் நிறைவுக் காலத்தில் எழுதப்பட்ட தன்வரலாற்றுத் தொடர்! முழுமையான வரலாறு கிடைக்கும் முன் காலம் அடிகள் பெருமானை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. இந்தத் தொடர் வெளிவர அடித்தளமாய் விளங்கிய உளம்கவர் கயல் தினகரன், இந்த வரலாற்றினைப் பதிவு செய்த மரு. பரமகுரு ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள். மகாசன்னிதானத்தின் இளம் பருவத்திலேயே குருதியில் கலந்த தொண்டுணர்வு, நாய் இறந்து கிட்ந்த ஆலயத்தினைத் தூய்மைப்படுத்தி, பூசனை செய்ய வைத்தது. தமிழ் வழிபாட்டு நெறியைச் சமய உலகத்தில் நிலை நிறுத்தியது: புயல் நிவாரணப் பணிகள் ஆற்றியது. இது சமய சமூக மேம்பாட்டுக்குத் தம்மையே அர்ப்பணித்த தமிழ் ஞானியின் வரலாறு!
‘கோவிலைத் தழுவிய குடிகள்: குடிகளைத் தழுவிய கோவில்’, ‘கடவுளைப் போற்று மனிதனை நினை’ என்பவை தான் அருள்நெறித் தந்தையின் வாழ்வியல் தாரக மந்திரங்கள்! ஆன்மிகத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மனிதத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். மனிதத்தை மறந்து கடவுளைப் போற்றுதல் ஆன்மிகம் ஆகாது! கடவுளை மறந்து மனிதத்தைச் சிந்திப்பது வாழ்வியல் ஆகாது: கடவுளைப் போற்ற வேண்டும்; மனிதனை நினைக்க வேண்டும்.
அற்புதச் சிந்தனைகள் அடங்கிய இந்த அரிய தொகுப்பு நூலின் தொகுப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய அருமை நல்லுள்ளங்கள் இராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தமிழாகரர் தெ. முருகசாமி அவர்களுக்கும், ஆதீனக் கவிக்குயில் அருமை மரு. பரமகுரு அவர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றிகள் பாராட்டுக்கள்: வாழ்த்துக்கள்! இந்நூலுக்குச் சீரிய அணிந்துரை வழங்கிய தவத்திரு அமுதன் அடிகள் அவர்களுக்கு நன்றி! பாராட்டுக்கள்! இந்நூலைச் சிறப்பாகப் பதிப்பித்துள்ள ‘பதிப்புச்செம்மல், தமிழவேள்’ பதிப்புப் பணியில் முத்திரை பதித்த வித்தகர், மணிவாசகர் பதிப்பகம் கடியாபட்டி ச. மெய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சுநிறை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்: நன்றி!
1. | 17 |
2. | 168 |
3. | 268 |
4. | 279 |
5. | 289 |
6. | 301 |
7. | 330 |
8. | 352 |
9. | 371 |
10. | 387 |
11. | 406 |
12. | 417 |
13. | 433 |
14. | 439 |
15. | 443 |
16. | 445 |
17. | 448 |
18. | 451 |
19. | 457 |
20. | 464 |
21. | 469 |
22. | 475 |
23. | 481 |
24. | 485 |
25. | 489 |