குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/வானொலியில்
வானொலியில்
அகப் பகையை வெல்க!
மனித உலகம் இன்பத்தையே விழைகிறது. அதற்காகவே உழைக்கிறது. ஆயினும், இன்பத்தின் சாயல் கூட இன்னும் மனித உலகத்தை அணுகவில்லை. இன்பத்தின் நிழல்களைத்தான் இன்பமென்று கருதி உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நிழல் நிழல்தானே! இன்று மனித உலகம், இன்பத்தை ஆரத் துய்க்க முடியாமல் தடையாக இருப்பது புறப்பகையன்று. ஒரு காலத்தில் புறப்பகையும் மனிதனை வருந்தியது. “நறுக்கென்று தைக்கும் புறப்பகைகளைக் கடிதில் உணர்ந்த மனிதன் புறப்பகைகளை வெற்றி காண்பதில் படிப்படியாக முன்னேறிவிட்டான்.
ஆதலால், இன்று அவனை வெள்ளம் வருத்துவதில்லை, தீ சுடுவதில்லை. கொடிய விலங்குகளும் கூட வருத்துவதில்லை; அவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தன் ஆற்றல் எல்லைக்குள் உட்படுத்தி, அனுபவத்திற்குக் கொண்டு வந்து விட்டான். அஃதோர் அற்புதமான சாதனை. அந்தச் சாதனையின் அருமையைக் குறைத்து மதிப்பிடுவதில் பொருளில்லை. ஆயினும் பலவற்றைப் பழக்கிய அவன், பழகத் தவறிவிட்டான். நாயினை, மிக நல்ல விதமாகப் பழக்கினான்.
ஆனாலும், அவன் பழகத் தவறிவிட்டான். அவனை இன்று வருத்துவது புறப்பகையல்ல. அகப் பகையேயாகும். அனல் அவனைச் சுடுவதில்லை. ஆனாலும் அழுக்காற்றுத் தீ அவனைச் சுடுகிறது. அலைகடல் அவனை வருத்துவ தில்லை. அதனை அடக்கிக் கலம் செலுத்துகிறான். ஆனாலும், அவா வெள்ளம் அவனை அலைக்கழிக்கிறது.
இந்த அகப்பகையை வென்று, வெற்றி பெற்றாலே மனிதன் பகைப்புலத்துக்கு ஆளாக மாட்டான். மனிதனின் வாழ்வில் படைக் கலங்கள் மட்டும் அஞ்சாமைக்கு அடையாளமல்ல. படைக்கலம் தாங்கியவர்களிலும், பஞ்சை மனிதர் உண்டு. படைக்கலம் தாங்காமலே கூடச் செருக்களத்தில் நின்ற வீரர்களும் உண்டு. அப்பரடிகள் படைக்கலம் தாங்கிய வீரரா? வில்லைத் தாங்கினாரா? வாளைத் தாங்கினாரா? ஒன்றையும் இல்லை! அவருடைய நெஞ்சத்தைப் பழுதிலாத் துறவு என்ற அரணில் சேர்த்தார். அங்கே நிலைநிறுத்தினார்.
ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார். ஒண்திறல் பிறந்தது. இறைவன் திருநாமமாகிய ஐந்தெழுத்தையே நாவினில் படைக்கலமாகக் கொண்டார். கோட்டை கொத்தளங்கள் பெற்று-கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை வெற்றி கண்டார். அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்ச வருவதுமில்லை என்று, அடலேறு என முழங்கினார். இந்தத் தறுகண்மை-பேராண்மை சமய நெறிக்கே உரியது. அருளியலுக்கே உரியது.
ஆனால் ஐயகோ! இன்றையச் சமய வாழ்க்கை அச்சத்தின் கொள்கலனாக மாறியிருக்கிறது. கோட்டைக்குரிய பல்லவப் பேரரசனையே கலங்கவைத்த நெறியினைச் சார்ந்தவர்கள் கோட்டையின் காவல்காரர்களைக் கண்டே கலங்குகிறார்கள். இன்று, சமயம் வாழ்க்கைக்காக இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக என்று ஆகிவிட்டது. பயனுக்காக அன்றி, படாடோபத்துக்காக என்றாகிவிட்டது. இன்றைய சமய உலகில் ஈர நெஞ்சினைக் காணோம். ஆதலால் கனிந்த அன்பினையும் காணோம். அஞ்சாமை யின்மையால் சைத்தானும் கைவரிசை காட்டுகின்றான்.
ஆதலால், எங்கு நோக்கினும் துன்பம், பகை இந்த இருண்ட சூழ்நிலையிலிருந்து நம்மை வழிகாட்டிக் காப்பாற்றவல்ல ஆசிரியன் அப்பரடிகளேயாம். அப்பரடிகள் மனித உலகத்தின் துன்பம் துடைக்க வந்த மாமணி! இருள் கடிந்து எழுந்த ஞாயிறு வாழ்க்கைக்கொரு வழித் துணை ! அப்பரடிகள் உபதேசங்களால் மட்டுமல்ல, அவர்தம் வாழ்க்கையாலும் நமக்கு வழிகாட்டினார். மனம் ஒரு தன்மைத்தாயிருக்கக் கூடியதல்ல. நெஞ்சமும் கூட அப்படித்தான். இறைவனை விட்டு ஒரு நொடி பிரிந்திருந்தாலும் அது கெட்டுவிடும். புறத்தே மண்டித் திணிந்து கிடக்கும் தீமைக்கு உடனே பற்றிக்கொள்ளும் ஆற்றலுண்டு. அதனாலன்றோ “நினையாது ஒருபோதும் இருந்தறியேன்” என்று கூறுகின்றார். மாணிக்கவாசகரும் “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்று குறிப்பிடுகின்றார். நெஞ்சத்தை இறைவனை நினைந்து கொண்டிருப்பதிலேயே பழக்க வேண்டும். அஃது ஒருபொழுது மறந்தாலும் உடன் பாசி மூடிக்கொள்ளும்.
ஆதலால், அப்பரடிகளுடைய நெஞ்சு எப்பொழுதும் இடையீடில்லாமல் இறைவனுடைய திருவடிகளைத் தடவிக் கொண்டிருந்ததாம். இன்றோ நம்முடைய கைகள்தாம் இறைவனின் திருமேனிகளைத் தீண்டித் தடவுகின்றனவே தவிர, நம்முடைய நெஞ்சு அவனைத் தடவித் தீண்டுவதில்லை.
உடலுக்கு உயிர்ப்பு உயிர். உயிர்க்கு உயிர்ப்பு இறை. உடல் உயிர் உறவுக்கு, இணைப்பு மூச்சுக் காற்று. உயிர்க்கு உயிர்ப்பு இறை. இந்த இணைப்புக்கு அன்பே காரணம். இங்ஙனம் நெஞ்சத்தை இறைவன் தாளிணைகளுக்குத் தந்து வாழும் வாழ்க்கையே வாழ்க்கையென்றார் அப்பரடிகள். இறைவனை நமக்குப் பெற்றுத் தர வல்லது-நம்மிடத்தில் இருத்தி வைக்க வல்லது-அன்பேயாகும். மாணிக்கவாசகர் இந்த அன்பினை ஆற்றல்மிக்க அன்பு என்று கூறுவார்.
அப்பரடிகள் “ஐயன் ஐயாறனார்க்கு அன்பலால் பொருளில்லை” என்றார். அது போலவே, தொண்டு செய்தலே உயிர்க்கு ஊதியம் என்றார். அப்பரடிகள் காட்டிய இறைவனை விட்டுப் பிரியாத நெஞ்சும் அவர் காட்டிய அன்பும், அவர் காட்டிய தொண்டும், நம்மைச் சேருமாயின் அவலம் வந்து அடையாது. ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பு கிடைக்கும். இம்மையோடன்றி, மறுமையும் ஏமாப்புடன் வாழலாம்.
இறைவன் எங்குள்ளான்! இஃது ஒரு பழைய வினா. மறைகள், இறைவனை இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றன. கடவுளை நாடும் நெறியில் பத்திமை பூண்டொழுகு கின்றவர்கள் இறைவனை ஓயாது தேடிக்கொண்டிருக்கின்றனர். தீர்த்தங்களில் மூழ்கித் தேடுகின்றனர். பூசனையில் புகுந்து தேடுகின்றனர். பக்தர்கள்தான் இப்படித் தேடுகின்றார்கள் என்றால் நாத்திகர்களும் தேடிக்கொண்டிருக் கின்றனர். ஆனால் இறைவன் அகப்படவில்லை. இருக்கின்ற இடத்தில் தேடினால்தானே அகப்படுவான். அப்படியானால் எங்கு இறைவனை எளிதிற் காணலாம்?
மனிதன், குறையுடையவன். ஆனால், நிறையை அடைய வேண்டியவன். குறை, அவனது மாற்ற முடியாத இயல்பன்று. குறை, நிறையாக மாறி வளரத்தான் வாழ்க்கை நிறை என்பது அற்புதமான சொல். நிறை உணர்த்தும் பண்பு அல்லது தன்மை இறையியற் சார்புடையது. இல்லை! இறையியலிலேதான் நிறையெனப் பெயர் பெறுகிறது. நிறை, நிலையில் நிற்றல்; மனித நிலையில் நிற்றல், பிறிதின் துயர் பொறாத தன்மையான மனம் என்பார், “மென்சிஸ்” என்ற சீன நாட்டு அறிஞர். வள்ளுவம், “பிறதின் நோய் தந் நோய்போல் போற்றுதல்” என்று வகுத்துக் காட்டும் நிறை, ஒழுக்கத்தின் நிறைவு என்பார் வள்ளுவர். “நிறைகாக்கும் காப்பே தலை” என்பார். இது மனித குலத்திற்குப் பொதுவென வகுத்த நெறியே! பொறிகள் வாயிலாகப் புறத்தே சென்று அலையாமல் உயர் அறிவின் வழி! உயிர் நிலை நிற்றல் நிறையெனப்படும். நிறையுடையார் ஆவலற்றோர்; அவா அற்றோர்; வெகுளுதல் இல்லாதவர். இத்தகு நிறையுடையார் நெஞ்சினுள்ளே இறைவன் இருக்கின்றான். அவர்களின் தூய அன்புத் தவத்தில் வெளிப்படுகின்றான். அவர்களின் கருணை நிறைந்த சீலத்தில் உறைகின்றான். நிறையுடையார் நெஞ்சம் இறைவன் வாழும் இடம்! நிறையுடையாரைக் கண்டால் தொழுது போற்றுமின்!
உலகியலின் உயிர்நாடி நீரினுள் அமைந்து கிடக்கிறது. “நீரின் றமையாது உலகு” என்பார் வள்ளுவர். தண்ணீர் உலகத்தின் இன்றியமையாத் தேவை. வெப்பம் தணிதற்கும் தூய்மை பெறுதற்கும், வளர்ந்து வாழ்தற்கும் நீரே பயன்படுகிறது. அதனாலன்றோ நீரின் சின்னமாகிய கங்கையைக் கடவுள் தன் தலைமீது தாங்கினான். அஃதொரு புராணமல்ல; வரலாறல்ல; வாழ்வியல் முறை. “தண்ணீரின் அருமை தெரிந்து தலைமேற்கொள்க!” என்பதே தத்துவம், தீர்த்தங்கள் ஆடுவதனால் மட்டும் பயனன்று. தீர்த்தங்களின் உயிர்ப்பு, நிலையான தூய்மைப் பெருக்கம்; வெப்பம் தணிதல், உயிர்க்குறு உதவி செய்தல் ஆகிய செய்தவம் மேற்கொள்வார் நிறைவுடைய நெஞ்சினராவர். நீரின் பெருமையறிந்து ஏற்றுப் போற்றுதல்-நீரைத் தொழுதல் நன்று. நீரினுள் நிமலன் நிலவுகின்றான். அப்பரடிகளும் இறைவனைத் “தீர்த்தங்கள் ஆனான்” என்பார்.
இயற்கை ! இஃது இறைவனின் மறுபெயர். இயற்கையின் விரிவு பசிய சோலைகள்! மலர்க்காடுகள்! அம்மம்ம! மலரின் எழிலும் வண்ணமும் கைபுனைந்தி யற்றாக் கவின்பெறு வனப்பாகும். மலரினுள்டே மண்டிக் கிடக்கும் தண்ணளியும் மணமும், மலரினுள் தேனும் இறைவனைக் கைதேர்ந்த சிற்பி என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. சிற்பி, சிற்பத்தினுள் உறைகின்றான்! இறைவன் மலராக இருக்கின்றான். “வாசமலரெலாம் ஆனாய் நீயே!” என்பார் அப்பரடிகள். “பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி, பனிமலர் எடுக்கவும் நண்ணுகிலேன்” என்பார் தாயுமனார். ஆம் ! மலராக-மலரினுள்ளே மணமாக மலரினால் விளையும் மகிழ்வாக இறைவன் இருக்கின்றான். இவ்வண்ணம் கண்டு ஏத்திடுக!
ஓசையும் ஒலியும் இயல்பில் இன்பமூட்டுவன. முறை தவறினால் இன்பம் தருவதுகூட ஏதம் விளைவிக்கக்கூடும். ஒலியை முறையாக நிரல்படுத்தி ஒலித்தால் அவ்வொலி இன்பம் தரும். அதுவும் பறையில் ஒலியெழுப்பினால் பறந்து திரியும் நெஞ்சம் உள்ளொடுக்கி ஒன்றி நினைக்கும். அதனாலன்றோ, “ஓசை ஒலியெலாம் ஆனாய்” என்றார் அப்பரடிகள். பறை தரு முறை ஒலியில், இதயம் தழுவும் இசையொலியில் இறைவனுள்ளான் என எண்ணித்தொழுக!
இறைவன் மீதுள்ள தணியாக் காதலால் அவனுக்குப் பொருள்களைப் படைக்கின்றோம். அப்பொருள் ஏது? அவனாற்றலால், அவனருளால் விளைந்தவை! அவைகளாகவே அவனிருக்கிறான். திருவிளக்கை ஏற்றி வழிபடுகின்றோம். ஆனால் அவனையே சூழொளி விளக்காக கருதுகின்றார் மாணிக்கவாசகர். பழங்களைப் படைக்கின்றோம். அப்பழத்திடையில் சுவையாகக் காண்கிறார் அப்பரடிகள். எனவே, அந்தப் பொருள்கள் வேறல்ல, அவன் வேறல்ல. அறிந்து ஏத்துக!
இதயம், உணர்வில் பொங்கி வழியும்பொழுது கவிதை பிறக்கிறது. அருவி, உயர்ந்தது. அருவியிழிந்து வரும் மலை அதனினும் உயர்ந்தது. செஞ்சொற் கவிதை உயர்ந்தது; கவிதை பொழிந்திடும் கவிஞனின் நெஞ்சம் அதனினும் உயர்ந்தது. அவன் தரும் பாட்டினுள் கடவுள் தங்குகின்றான். அதனாலன்றோ அவனே, “அருச்சனை பாட்டேயாகும்” என்று கூறினான் சுந்தரரிடம்! “அருச்சனை செயல்! காகிதப்பூ பாட்டு, இயற்கை அப்பாட்டினுள் அவன் தங்கியிருக்கின்றான். பாட்டினைப் பாடுக! பாட்டுடைப் பொருளை உணர்க! மாணிக்கவாசகர் உணர்த்தியதைப் போல அவன் பாட்டுடைப் பொருளாக நிலவுவதை நினைந்து தொழுமின்!
நமது தாய்மொழியில் நிறைய இலக்கியங்கள் உண்டு. புறத்தினை இலக்கியங்களும் உண்டு. அகத்திணை இலக்கியங்களும் உண்டு. இந்த இரண்டினையும் கடந்து வளர்ந்த அருள்திணை இலக்கியங்களாகிய பக்தி இலக்கியங்களும் உண்டு. கடவுள் நம்பிக்கையுடைய வராயிருப்பதும், அருள்நெறி வாழ்க்கை வாழ்வதும் எளியதொன்றல்ல.
விஞ்ஞானிக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களும்-அவ்வாற்றல்களோடு, மேலும் சிறந்த சீலமாகிய தவமும் தேவை. விஞ்ஞானத்தின் படைப்புக்கள் உலகியலை வளப்படுத்த மாறாது பயன்படுவன போலவே மனித இயலில் உள்ளங்களை மாறாது வளப்படுத்தப் பயன்பட வல்லவை மெய்ஞ்ஞானம். அதாவது பத்திமை வாழ்வு. ஆயினும் இன்று பத்திமை வாழ்வு அங்ஙனம் பயன்படாமையின் காரணமாக அதன் மீது ஐயங்கள் எழுந்துள்ளன. ஏன்? எதிர்க்களம் ஒன்றே தோன்றி வளர்ந்து வருகிறது.
அருளியல் வாழ்க்கை ஆற்றல் நிறைந்த வாழ்க்கை அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை. அன்பில் தழைத்த வாழ்க்கை அச்சத்தை உதறிய வாழ்க்கை. தனியுணர்வு செத்த வாழ்க்கை. பொதுவில் பூத்த வாழ்க்கை. இந்த இலக்கணத்தோடு நமது அருளியல் வாழ்க்கை அமையுமானால் மறுப்பார் யார்? கதிரவன் உலாப்போதலை மறுப்பாரும் உண்டோ? வீசு தென்றலை மறுப்பாருண்டோ? இறைவனிடத்தை உலகத்திற்கு அப்பரடிகள் அறிமுகப்படுத்துகின்றார். கோட்டையென விளங்கும் கோயிலைக் காட்டியா? அழியாப்பசிக்குப் பயன்படும் அப்பத்தைக் காட்டியா? இல்லை! இல்லை! மாசில் வீணையைக் காட்டுகின்றார். இசைக்குரிய இசைவிக்கும் ஆற்றல் வேறு எதற்கு உண்டு! கடக் களிற்றையும் அடக்க வல்லது இசை.
மாலையில், மஞ்சள் வானத்தில் திங்கள்! வீசுதென்றல்! அடைந்துகிடக்க வீடுகட்டிய ஒருவன் அதனைக் கடந்து வெளியே வருகிறான். காவலோடு வெளியே உலாப் போகிறான். ஏன்? வீசுதென்றலை அனுபவிக்க! இன்பத்திற்கு எல்லையேயான இளவெயிலை வஞ்சனையிற்றிக் காழ்ப்புக் கலப்பின்றிக் கலகப் புகைச்சலின்றி அனுபவிக்க! ஆகா! என்ன இனிமை! வண்டுகள் பாடுகின்றன! தண்ணீர் தங்கிய பொய்கை! அதன் எல்லையில் இனிய காற்று! தண்ணளி தழுவிய காற்று! இத்தகு இன்பமயமானதாக இறையின் திருவடிகளைக் காட்டுகின்றார்.
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!”
என்பது, அப்பர் திருப்பாட்டு.
இன்றைய சமுதாயத்தில் அருளியல் வாழ்க்கை இத்தகைய இன்பம் தழுவியதாக இருக்கிறதா? இன்று சமய வடிவம் தெரிகிறது. ஆனால் வாழ்க்கையைக் காணோம். ஆரவாரம் கேட்கிறது. ஆனால் அமைதியைக் காணோம். தண்ணளியைக் காணோம். தருக்குகளைக் காண்கின்றோம். ஒருமையினைக் காணோம். வேற்றுமையினைக் காண்கிறோம். இந்த அவல நிலைமை எங்கிருக்கிறது! எங்கில்லை! என்று சொல்ல முடியாது. எங்கும் பரவிக் கிடக்கிறது. சமயம் ஒரு தத்துவம் மட்டுமல்ல. அஃது ஒரு வாழ்க்கை முறை.
கடவுள் வாழ்த்துப் பொருளல்ல; வாழ்வுப் பொருள். சமயம் உருவங்களோடு நிற்பதல்ல. உருவங்களைக் கடந்த உணர்வால் உணர்வையும் கடந்த இன்ப அன்பால் மனித மனங்கள் மலரினும் சிறந்து மணம் பரப்ப வேண்டும். கனியிலும் சிறந்த கனிவு பெற வேண்டும். தீங்கரும்பினும் சிறந்த சுவை பெற வேண்டும். அப்பொழுதே சமய வாழ்வு முழுமை பெறுகிறது.
இறைவன் தீதற்றோர் திருவுளங்களில் எழுந்தருளவே விரும்புகின்றான். காஞ்சி மன்னன் கட்டிய பெருங்கோயிலை வறிதே விட்டுவிட்டு உள்ளத்தால் தூயதாகிய பூசலார் நாயனார் மனத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான்.
ஆதலால் உள்ளத்தைக் கோயிலாக்குங்கள்! அதனை அன்பினால் மெழுக்கிடுங்கள்! இறைவனை எழுந்தருளச் செய்யுங்கள்! பண்டு கண்ணப்பன் வழங்கிய அன்பினைப் போன்று இறைவனுக்கு வழங்குங்கள் ! அவனுடைய தண்ணருள் சுரக்கும்! புன்புலால் யாக்கை புனிதமாகும்! உங்கள் புலன்களில் இறைவன் தங்கித் திளைப்பான்! திருவருள் சுரப்பான்! இன்பதே சூழும். எல்லோரும் வாழ்க! காட்டக் குறையாது; மாறாக அது வளரும் இயல்புடையது. இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போர்க் கொடுமையினின்றும் மனித உலகைக் காப்பாற்றும் சாதனம் அன்புடமையேயாகும். இம்மைக்கும் மறுமைக்கும் எழுமைக்கும் இன்பம் தருவது அன்புடைமையே யாகும்.
இத்தகு உயர்ந்த அருள் நலம் கொழித்திடும் அன்பினை அன்றாட வாழ்வில் அகத்திலும், புறத்திலும் கண்டு வாழ்வித்து வாழ்வோமாக.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.”
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.”
நிலத்தின் கடினத் தன்மையை இளக்கி, நெகிழச் செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால் சுவைக்க முடியாதனவாக ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். அவன் ஐந்திணை இன்பத் துய்ப்பிற்கு எழிலுறு பருவம் எய்துதலைச் சமைதல் என்று கூறுவது தமிழ் வழக்கு. அதுபோல மதனித உள்ளங்களை இன்ப அன்பின் வினைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு-வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம்.
இந்த விழுமிய நோக்கத்தோடு, பரந்த நிலவுலகத்தின் கண், தோன்றியுள்ள சமயங்கள் பலப்பல. சமயங்கள் பலப்பல வாயினும் அவையனைத்திற்கும் நோக்கம் ஒன்றேயாம். ஓர் இசையரங்கில் பலர் பல வாத்தியங்களை இயக்கி இசையெழுப்புகின்றனர். அங்ஙனம் எழுப்பும் இசையொலி வேறு வேறு ஒலியமைப்புடையனவேயாம். ஆயினும், சுருதி, பண், தாளம் மாறுபடாது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். அது போலவே, சமயங்கள் மொழியால் மாறுபடலாம். காட்டும் கடவுளின் பெயர், வடிவம் மாறுபடலாம். ஆயினும், “மனித குலம் ஒன்றே” என்ற சுருதியில் மாறுபாடுகள் இல்லை. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பது சமய நியதி; நீதி.
உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும்-ஏன்? மற்றைய உயிரினங்களும் கூட இறைவனுடைய அன்பிற்குரியவை. இந்த உயிரினங்களைப் பேணிப் பாதுகாப்பதையே இறைவன் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டுள்ளான். உயிரினங்கள் துன்பத்தினின்று நீங்கி, ஆரா இன்ப அன்பினில் திளைத்து மகிழ வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளம். ஆனால், உயிர்கள் நிலைத்த இன்பத்தில் மகிழ வேண்டுமாயின் இன்பம் வழங்குதலைவிட, துன்ப நீக்கம் செய்வதே முதற்கடன்.
துன்பத்தையும் கூட மேலெழுந்தவாரியாக நீக்குவது நிறைவான பயனைத் தராது. துன்பத்திற்குக் காரணமாய அறியாமையை-உயிர்ப் பகையை அடியோடு அகற்ற வேண்டும். கிழங்குகளை வெட்டியவிடத்தில் மேலும் தளிர்ப்பதைப் போல, அறியாமையும் பகையும் மேலும் மேலும் வாய்ப்புக் கிடைத்துழியெல்லாம் தவழ்ந்து வளரும். அதனாலன்றோ சேக்கிழார், பாசப் பழிமுதல் பறிப்பார் போல என்றார். நிலம் கடினமாக இருந்தால் முளைத்த கீரையைப் பிடுங்கும்போது கீரை ஒடிந்தே கைக்கு வரும். மீண்டும் கட்டை தளிர்க்கும். நிலம் தண்ணீரால் நனைந்து மண் இளகியிருக்குமானால் கீரை பிடுங்கும்பொழுது வேரோடு வரும். அதுபோல நெஞ்சம் கல்லாக இருக்குமானால், துனபங்கள் மாற்றப்பட்டாலும் துன்பத்துக்குரிய காரணம் நீங்குவதில்லை. நெஞ்சு திருவருட்புனலால் நனைந்து, அன்பினால் நெகிழ்ந்து கொடுக்குமாயின் அப்பொழுது துன்பம் மட்டும் நீங்குவதில்லை; துன்பத்துக்குரிய காரணங்களும் நீங்குகின்றன. இன்பப் புதுமது வெள்ளமும் பாய்கின்றது. இவை அனைத்தும் உடன் நிகழும் நிகழ்ச்சிகள் ஆகும். இதுவே, வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய மாறுதல் என்று சமயங்கள் ஒரு குரலில் ஓதுகின்றன.
உயிர்க்கு உறுதியினைத் தந்து, ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தினைத் தந்து வாழவைக்கும் குணங்கள் பலப்பல. அவையனைத்துள்ளும் அன்பு என்ற குணம் மிகமிகச் சிறந்தது. அன்பு, துன்ப நோய்க்கு மருந்தாகவும் இருக்கிறது. இன்ப விளைவுக்கு ஊற்றுக் கண்ணாகவும் இருக்கிறது. அன்பு தன்னைக் கொண்டவனையும் மகிழ்விக்கிறது. சார்ந்தோனையும் மகிழ்விக்கிறது. ஏன்? எல்லாம் எல்ல இறைவனையும் கூட அன்பே மகிழ்விக்கிறது; இல்லை, அன்பு அவனைப் பைத்தியமாக்கி விடுகிறது. ஆண்டவனாகிய அவன் அன்பிற்கு அடிமையாகின்றான்; இரப்பாரைக் காப்பவன். இரப்பவனாக மாறுகின்றான். என்னே, அதிசயம்! இந்த அன்பினை உலகத்தின் சமயங்கள் பலவும் வாழ்த்துகின்றன. அன்பினைப் பெற்று வாழ்வாங்கு வாழ வையத்திலுள்ளோரை வழி நடத்தும் புதுமையைபொதுமையை என்னென்போம்.
உலகினரின் பாவத்தைத் தமது செந்நீரால் கழுவிய ஏசுபெருமான் அன்பின் திருவுருவம். அவரருளிய மலைச் சொற்பொழிவு அன்புப் பொழிவு. “ஒருவரையொருவர் அன்புகொண்டு ஒழுகுங்கள்; பகைமை பாராட்டாதீர்கள்; மன்னிக்கும் குணத்தினைப் பெறுங்கள்; எல்லோருக்கும் எப்பொழுதும் அன்பு காட்டுங்கள்” என்று வையகத்தை வழிநடத்தினார். ‘கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் மீது கருணை பொழியப்படும் என்ற விவிலிய அறவுரை எண்ணத்தக்கது. அர்ச் ஃபிரான்ஸஸ் என்ற பெரியார் ‘இறைவா, நான் அன்பு விதையை விதைப்பேனாக’, என்றும் ‘மக்கள் என்னிடம் அன்பு செலுத்துவதற்கு முன், நான் அவர்களிடம் அன்பு காட்டுவேனாக’ என்றும் கூறியுள்ள உரை உணரத்தக்கது.
முகமது சாகேபின் அருள் வாக்குகளில் அன்பின் நலம் சிறந்து விளங்குகிறது. பிறரிடம் அன்பு பாராட்டாமலும் பிறர் அன்புக்குப் பாத்திரமாகாமலும் இருப்பவனிடம் நற்குணங்களே இரா” என்பது முகமது சாகேபின் அருள் வாக்கு “கடவுள் படைப்பிலுள்ள மக்கள் அனைவரையும் தம் பிள்ளைகளைப்போற் கருதி அனைவர் இன்ப துன்பங்களையும் ஒருவன் எப்பொழுது தனதாகக் கருதுகிறானோ அப்பொழுதே அவன் ஸீபி ஆவான்” என்பதும் அருள் வாக்கு. மாந்தர் குலம் ஒன்றே என்பதும் அவர்கள் அனைவரும் ஒரு குலமாக வாழக் கடமைப்பட்டிருக்கின்றனர், என்பதும் புனித குர்-ஆனின் உபதேசம். “அல்லா மிகுந்த தயை உள்ளவர், கருணைக் கடல், கிருபா சமுத்திரம், பரமதயாளு” என்பதே புனித குர்-ஆனின் வாசகம். ஆதலால் உலகத்து உயிர்களுக்கு யாரால் அதிக இன்பம் கிடைக்கிறதோ அவர்களையே அவர் அதிகமாக நேசிக்கிறார் என்பது இஸ்லாமிய மதத்தின் இணையற்ற கொள்கை.
ஆசியாவில் பாரதத்திற்கு இணையான ஆன்மீக வளமிக்க ஞானிகள் பிறந்த நிலம் சீனநாடு. சீன தேசத்தில் கன்பூஷீயஸ் என்ற ஞானி தோன்றினார். அவர் ஒரு சமயத்தைத் தோற்றுவிக்காது போனாலும் அவர் சீன நாட்டில் பல நூற்றாண்டுகள் ஒரு சமய ஞானியாகவே பாராட்டப் பெற்றார். அவர் வாழ்க்கையின் மூல தத்துவமே அன்புதான் என்று குறிப்பிடுகிறார். அவர் ‘எல்லா மனிதர்களையும் விரும்புவதும் ஒவ்வொரு மனிதரிடமும் நேசமாய் இருப்பதுந்தான் அன்பு’ என்றும், நாம் “அன்பு காட்டுவதும் அன்பிற்காகவே காட்ட வேண்டுமேயொழிய பிறிதொரு நன்மைக்காகக் காட்டக் கூடாது” என்றும் கூறுகிறார், கன்பூஷியஸ் இந்த அன்பு நெறி மக்கள் மன்றத்தில் நிலவ ஒரு மூல மந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.
“உனக்குப் பிடிக்காத ஒன்றை, நீ பிறருக்குப் பிடிக்குமென்று நினைந்து செய்யாதே"
இவர் வற்புறுத்திய ஐந்து நற்குணங்களுன் கன்ஜு என்பது இரண்டாவது. அதாவது, “நாம் பிறருடன் சரியாகப் பழக வேண்டும்; எவருடனும் முறை தவறி நடக்கக்கூடாது; நம் உள்ளத்தில் தயையும் கருணையும் அன்பும் இருக்க வேண்டும்” என்பதாகும்.
இந்திய மண்ணில் தோன்றிய சமயங்கள் சில. அவற்றுள் புத்த மதமும் ஒன்று. சித்தார்த்தரைப் புத்தராக்கியதே அன்புதான். புத்தரின் அன்புநெறி கிறித்துப் பிறப்புக்கும் முன்பே போரில்லாத அமைதி நெறியை வையகத்துக்குத் தந்தது. புத்தர் அன்பின் வடிவமாகவே வாழ்ந்தார். அவர் மனித குலத்துக்கு உய்யும் நெறியாகக் காட்டியது அன்பு நெறியேயாம். ‘தாய் தன் உயிருக்கு ஆபத்து வருவதையும் கருதாது. தன் ஒரே பிள்ளையைப் பாதுகாப்பது போல மனிதன் எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் தங்கு தடையின்றி பகையோ விரோதமோ இல்லாமல் மனிதர் தமக்கு மேலும் கீழும், அங்கும் இங்கும் அகில உலகினிடமும் எல்லையற்ற அன்பு கொண்டு வாழ வேண்டும் என்றும் புத்த சமய வேதமாகிய பிடகம் பெருமையுடன் கூறுகிறது.
இந்தியச் சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. சமண சமயத்தின் புராணங்கள் தயையே தர்மத்தின் வேர் என்று வற்புறுத்துகின்றன. ஜினேந்திர தேவன் தர்மத்தின் இறுதி எல்லையிருப்பது கருணையில் என்று கூறியிருக்கிறார். கருணையில்லாத மனிதரிடம் தர்மம் இம்மியளவும் இராது என்றும் கூறுகின்றது. மகாவீரர் ‘பகைவனோ நண்பனோ விரோதியோ வேண்டியவனோ எல்லா உயிர்களையும் எல்லா மனிதர்களையும் ஒன்றுபோல் மதித்து எல்லோரையும் தாமாகக் கருதுதலே அகிம்சை’ என்று அருளிச் செய்துள்ளார்.
இந்து சமயத்தில் வேதங்கள் அன்பினையே மையமாகக் கொண்டு வாழ்க்கை நெறியை விளக்குகின்றன. இந்து வேதங்களுள் மிகவும் பழைமையாகிய ரிக் வேதம் ‘எல்லா மாந்தரும் இணக்கமாய் வாழ்ந்து வருவார்களாக எல்லோரும் அன்புடன் உரையாடட்டும்; அனைவர் உள்ளங்களிலும் ஒற்றுமை உணர்வு நிலவட்டும். நீங்கள் எல்லோரும், ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொண்டு வாழ்வீர்களாக’, என்று வழி நடத்துகிறது.
தமிழகம் தந்த ஒரு நெறியாகிய சிவநெறி அன்பினையே எல்லாமாக எடுத்துக்காட்டும் நெறியாகும். தமிழ்மறை தந்த திருமூலர் பரம்பொருளாகிய சிவத்தை அன்பு என்றே குறிப்பிடுகிறார். பரம்பொருளை, “அன்பே அன்பே” யென்று அழுது அரற்றினால், அடையலாம் என்று கூப்பிடுகிறார். அன்போடு உருகி அகம் குழைந்தால் இறைவனை எளிதிற் பெற்று அனுபவிக்கலாம் என்று குறிப்பிடுகின்றார்.
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாய தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.”
“அன்பும் சிவமும்-பொருளும் பொருளின் பயனும் போல” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். மேலும், இறையின்பத்தை ஈரமுடையவர்களே அனுபவிக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறார். சமய வாழ்க்கை நியதிகள், ஒழுக்கங்களனெத் திருமந்திரம் வகுத்து உரைக்கும் செய்திகளாவன.
“யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.”
இங்ஙனம் உலகிடை நிலவும் எல்லாச் சமயங்களும் மனித குலத்தை இன்ப அன்பு கலந்த அணைப்பில் ஒரு குலமாக்க முயற்சிக்கின்றன. மனித குலம், ஒன்று என்பதே பொது நீதி. இடையில் நிலவும் வேறுபாடுகள் வேடிக்கை மனிதரின் விளையாட்டு அமைப்புகளே ஆகும். சமயங்களின் ஒருமித்த குரல், “அன்பு காட்டு; உதவி செய்; பகையை மற; பண்பு பாராட்டு; அன்புப் புனலால் தனது மனம் மற்றோர் மனம் ஆகியவைகளைக் குளிப்பாட்டு; உயிர் வர்க்கத்தின் மகிழ்ச்சிப் புனலால் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களைக் குளிப்பாட்டுங்கள்” என்பதேயாகும்.