குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/சிந்தனை மலர்கள்

விக்கிமூலம் இலிருந்து





7
சிந்தனை மலர்கள்

மதங்களின் உண்மை அறி

மதம் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்கை என்பதாகும். பண்டைக் காலத்தில் மதம் என்பது ஆன்மிகத்தையும் கடவுட்சார்புடைய கொள்கைகளையும் குறிப்பதாயிற்று. வரலாற்றுப்போக்கில் மனித சமுதாயத்தை நெறிப்படுத்தும் கொள்ளைகள் பல்வேறு துறையினவாகப் பல்கிப் பெருகி வளர்ந்து வந்துள்ளன. எனவே, இன்று மதம் என்ற சொல் கடவுட்சார்புடையதாகவும் ஆன்மிகச் சார்புடையதாவும் மட்டுமே வழங்கப்பெறும் ஒரு பொருள் பொதிந்த பரந்த நிலையிலிருந்து சுருங்கிவிட்டது. இன்று மதங்கள் கடவுட்சார்புடையவனவாக மட்டுமே இருக்குமானால் ஏன் அவை தம்முள் ஒருமைப்பட்டு நிற்க முடியவில்லை? ஒருமைப்பட்டு இயங்காநிலை மட்டுமல்ல. தம்முள் முரணி நின்றும் போராடுகின்றன. உலக வரலாற்றுப் பேரேட்டில் மதச்சண்டைகளின் இரத்தக்கறை படிந்துள்ள பக்கங்களே மிகுதி. அதனால்தான் ‘சமயக்கணக்கர்’ என்று கல்லாடமும் “மதமெனும் பேய்” என்று திருவருட்பாவும் கடிந்து பேசின. மதம் என்ற சொல் சமுதாயத்தில் தனது மதிப்பை இழந்தவுடன் அந்த இடத்தை நிரப்ப மதத்தலைவர்கள் கண்ட புதுச் சொல்லே ‘ஆன்மிகம்’ என்பது

ஆன்மிகம்-உயிரியல் அறிவு. ஆன்மாவின் பண்பு எனப்படும். ஆன்மிகம் என்ற சொல்லை மார்ச்சியவாதிகளும் எடுத்தாள்கின்றனர். ஆன்மிகம் என்ற பெயரிலும் கண்மூடிப் பழக்கங்களே மேவி வளர்ந்தன. இதற்குக் காரணம் மதங்களல்ல. ஆதிபத்தியத்தையும் பொருளாதாரத்தையும் நாடிய மதத்தலைவர்களேயாவர். ஆனால், மானுடன் கண்ட வாழ்வியல் முறைகளில் மதம் மிகமிக உயர்நெறியாகவே தொடக்க காலத்தில் விளங்கியது. தன்னையறிதல், தன்குற்றங்களை உணர்தல், தன்னைப் பலவீனப்படுத்தும் குற்றங்களையும். குறைகளையும் தவிர்த்தல், குறிப்பாகத் தன்முனைப்பு, தன்னலம் இவற்றினின்றும் விடுதலை பெறுதல், அன்புடையராதல், அருள்நலம் சார்ந்த சீலம் பெறுதல், ஞானம் பெறுதல், உலக உயிர்களிடத்தில் ஒருமை யுடையவராக விளக்கம் பெறுதல் முதலிய உயர்நலன்களை மக்களுக்கு அறிவுறுத்தி, வழிகாட்டி வழிநடத்தி வாழ்வித்தலே மதங்களின் குறிக்கோள். இந்த நோக்கத்துடன் மதங்கள் இயங்கி வந்ததால்தான் மானுடம் வளர்ந்தது; வாழ்ந்தது!

உடல் எப்போதும் தற்சார்புடையது. அது தனது சுகத்தையே - இன்பத்தையே அவாவி நிற்கும். ஆனால் ஆன்மா - உயிர் - பிறர் நலத்தையே கருதும். ஆன்மாவின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டு இயங்கினால் மதம் வெற்றி பெறுகிறது. இங்ஙனம் வெற்றிபெற்ற தலைவர்கள் புத்தர், மகாவீரர், முகம்மது நபி, இயேசுகிறிஸ்து, அப்பரடிகள் முதலானோர். உடலுக்குத் தேவைகள் இருப்பதைப் போல ஆன்மாவிற்கும் தேவைகள் பலப்பல உண்டு. ஆன்மாவின் தேவைகளாகிய அன்பு, ஆற்றலின் பெருக்கம், மனித நேயம், அருள், ஞானம் முதலியவற்றை நிறைவு செய்யவே மதம் தோன்றியது. உலக மாந்தரை இதயத்தால் இணையச் செய்வதே மதங்களின் குறிக்கோள். ஆன்மநேய ஒருமைப்பாடே ஆன்மிகத்தின் இலட்சியம்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனாக, உயர்வற உயர்ந்து விளங்கும் தனக்குவமை இல்லாத பரம்பொருளுடன் ஆன்மா, ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்குரியனவே மதம், வழிபாடு என்பவையெல்லாம்! இந்த உறவு. பரம்பொருளை இடையறாது எண்ணுவதன்மூலமும் நினைந்து நெகிழ்ந்துருகுவதன் மூலமும்தான் கிடைக்க இயலும். இன்று மதங்கள், பரம்பொருளை வழிபடுதலுக்குரிய பயிற்சியைத் தருவதில்லை. மாறாகக் கடவுளையே கையூட்டுப்பெறும் நிலைமைக்குக் கீழ்ப்படுத்தி, தூப தீப ஆராதனை, அருச்சனையுடன் தொழும் சடங்கு வழிபாட்டு நிலையே எங்கும் வளர்ந்து வருகிறது; வளர்க்கப்படுகிறது. ஒரு கடவுள் வழிபாட்டு நெறியும் இல்லை. அன்பு, தியாகம், தன்னலமின்மை, பிறர்நலம் போற்றல் ஆகியன இன்று சமயத் துறையில் போதிக்கப் பெறவில்லை. வளர்க்கப் பெறவுமில்லை. இந்தப் போக்கு விரும்பத்தக்கதல்ல.

இன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை, உயிர்க்குல ஒருமைப்பாட்டை ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்கள் நடமாடுங் கோயில்கள். இந்த மனித உயிர்களை ஆதரிப்பது முதற்கடமை, மதம் வற்புறுத்திய தலையாய கடமை. ‘எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார்’. ஆதலால், மனித நேயமும் மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே இன்றைய அவசரக் கடமை! நம்முன் நிற்கும் மானுடம் நடமாடும் கோயில்! போற்றுவோம். வாரீர்!

அறிவியலும் ஆன்மிகமும்

வாழ்க்கையென்பது உடலும் உயிரும் சேர்ந்தது. வாழ்க்கையில் உடல் தேவைகளும் உண்டு; உயிர்த்தேவைகளும் உண்டு. உடலை இயக்கி உயிர் பயன்பெறுதலும் உண்டு. உயிரை இயக்கி உடல் பயன்பெறுதலும் உண்டு. வாழ்க்கை முழுமைபெற முதல் தேவை உடல் தேவை. வாழ்க்கையின் முடிவுநிலை உயிர்க்கு ஊதியமாகிய இன்ப அன்பினை எய்துதல்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை”

என்பது வள்ளுவம். பொருள், உடற்சார்புடையது. அருள், உயிர்ச் சார்புடையது. பொருள் நலம் பெறாத உடலியல் வாழ்க்கை வளமாக இருத்தல் இயலாது. உடலியல் வாழ்க்கை வளமாக அமையாத நிலையில் உயிர்நலமாகிய அருள்நலமும் சிறத்தல் இயலாது. பொருள்நலம் சிறந்தாலும் அருள்நலம் இல்லாது போயின் வாழ்க்கை வீணாகும். உடலியல் வாழ்க்கைக்குரிய பொருள்நலப் பேற்றுக்கு அறிவியல் அடிப்படை நம்மைச் சுற்றியுள்ள வான், மண், வளி, ஒளி, நீர் ஆகியவற்றை நல்வாழ்க்கைக்குரியவாறு பயன்படுத்தத் துணை செய்வது அறிவியல்; உடல்-உயிர்க் கூட்டு வாழ்க்கைக்குரிய நுகர் பொருள்களைப் படைத்தும் காத்தும் வகுத்தும் பயன்படுத்தத் துணை செய்வது அறிவியல். ஐம் பூதங்களின் மீது பெற்ற வெற்றியை மானிடத்திற்கு நன்மை செய்யத் தக்கவகையில் ஆற்றுப்படுத்துவது ஆன்மிகம். அறிவியலுக்கும்கூட ஆன்மவியலே அடிப்படையாக இருக்கிறது. ஆன்மாவின் அறிவில் தோன்றும் செய்திகளை அனுபவத்திற்குக் கொண்டு வரத் துணைசெய்வது அறிவியல். ஞானத்தின் விரிவுகளுள் ஒருபகுதியே விஞ்ஞானம். ஞானம் என்ற அறிவு, உலகியலைச் சார்ந்து-பூத பெளதிகவியலைச் சார்ந்து இயங்கிப் பயன்படும் பொழுது விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்று பெயர் பெறுகிறது. ஆன்மாவின் அறிவு, உடற்சார்புடையதாகவும் தற்சார்புடையதாவும் அமையும் பொழுது தரப்பாடு குறைந்த ஆன்மஞானமாகிறது. இதை ஆன்மஞானம் என்று யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. “பசுஞானம்” என்று சித்தாந்த நூல்கள் கூறும்.

ஆன்மாவின் தராதரத்தினை அறிந்துகொண்டு அதன் தரத்தை உயர்த்துவதற்குரிய முயற்சியுடைய வாழ்க்கைக்கு ஆன்மிக வாழ்க்கை என்று பெயர். ஆன்மா, இயற்கையில் குறைபாடுடையது; அறியாமைச் சார்புடையது; ஆனாலும் அறிவினைப் பெறும் தகுதியுடையது. குறையிலிருந்து நிறையை நோக்கிப் பயணம் செய்வதே வாழ்க்கை அறிவியலும் ஆன்மிகமும் உடம்பும் உயிரும் போல இணைந்து செயற்பட வேண்டியவை. ஒன்று, பிறிதொன்றுக்குத் துணை. ஒன்றின்றிப் பிறிதொன்றில்லை. அறிவியலும் ஆன்மிகமும் அல்லது அறிவியலும் அருளியலும் ஒரு நாணத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. ஆன்மிகச் சார்பில்லாத அறிவியல் நொண்டித் தனமானது. அறிவியற் சார்பில்லாத ஆன்மிகம் குருட்டுத்தனமானது. ஆன்மிகச் சார்பில்லாத அறிவியலால்தான் இன்று உலகத்தில் அணு ஆயுதப் போர்ப்பயம்! அருளியல் சார்பில்லாத அறிவியல், ஆக்கத்திற்குப் பதிலாக அழிவையே தரும். அறிவியல் சார்பில்லாத ஆன்மிகம், உலகியல் வாழ்வை வறட்சிக்கு ஆளாக்கி, நுகருமாறு நுகர்ந்து வாழ்வித்து வாழும் வாழ்வை இல்லாமல் பாழாக்கி விடும். வறுமையும் பிணியும் நிறைந்த வாழ்க்கையில் ஆன்மஞானம் இடம் பெறுவதில்லை. செழிப்பான மண்ணில்லாத நிலத்தின் எங்ஙனம் பயிர் வளர முடியும்? நீர்த்திவலைகள் செழித்த கருமேகம் இல்லாதபோது ஏது வான்மழை? அதுபோலவே வாழ்க்கையை நிறைவாக நடத்த இயலாதபோது ஆன்மா சிறப்படைவதில்லை. சாதாரண அறிவு கூட வறுமையாளர்க்கு இல்லை. அறிவுப் புலன்களுக்குரிய அறிவுவாயில்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதற்கே வாய்ப்பில்லையெனில் ஆன்மிகம் எப்படி வளரும் ? அதனால்தான்,

“நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும்”

என்று மாணிக்கவாசகரும்,

“வறுமையாம் சிறுமை தப்பி”

என்று அருணந்தி சிவமும் கூறினர்.

ஆதலால், அறிவியலும் ஆன்மிகமும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. அறிவியலையும் ஆன்மிகத்தையும் நெறி முறைப்படுத்தி வையகம் சிறக்க வாழ்ந்திடுதல் வேண்டும். ஆன்மிகத்திற்குக் துணை செய்வதற்கே அறிவியல். அறிவியல், ஆன்மிகத்தைச் சார்ந்தும். ஆன்மிகத்திற்கு அரண் செய்வதாகவும் இருக்குமானால் ஆக்கவழிப் பட்டதாக இருக்கும். ஆன்மிகம், அறிவியலைத் தழுவி முறையாகப் பயன்படுத்துமானால் மண்ணை விண்ணகமாக்கும்!

17–3–86


வழிபாட்டில் ஒருமைப்பாடு

மனம், ஒரிடத்தில் நிலைத்து நிற்கும் இயல்பு டையதன்று சலிக்கும் தன்மையுடையது; சென்ற சென்ற இடங்களில் எல்லாம் தங்கும் இயல்பினது. அதன் காரணமாக மனத்தின் ஆற்றல் கெடுகிறது. அவ்வழி ஆன்மாவின் வலிமையும் குறைகிறது. இங்ஙனம் அலைந்து திரியும் மனத்தை ஓரிடத்தில் நிற்கச் செய்தல் நல்ல முயற்சி. ஒருநிலை நிற்கும் மனம் ஆற்றலைத் தரும்; அறிவை வளர்க்கும்; எண்ணற்ற பயன்களைச் சேர்க்கும். இந்த நோக்கத்திலேயே வழிபாட்டுமுறை தோன்றியது.

இறைவனை வழிபடுதல் என்பதை, இறைவனுக்குச் செய்கின்ற ஒரு கடமையாகக் கருதுதல் கூடாது. வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன், வழிபடுவோர்க்கு நன்மை செய்வான் என்பதும் சாதாரண மக்களுக்கு வழிபாட்டின் அருமைப்பாடுதோன்ற எடுத்துக் கூறப்பட்டதேயாம். வழிபாட்டின் பயன் ஆன்மாவிற்கேயாம். ஆன்மா, அறிவில், ஆற்றலில், பயன்பாடு நிறைந்த வாழ்வில், அன்பில் சிறந்து விளங்க வழிபாடு துணை செய்யும். குவிக்கப்பெற்ற கதிரவனின் ஒளி, ஆற்றல் மிக்குடையதாக இருப்பதுபோல் ஒருநிலைப் படுத்தப்பெற்ற மனம், ஆற்றலுடையதாக இருக்கும்.

வழிபாட்டில் ஒருமைநிலை என்பது பொறிகள். புலன்கள், மனம் அனைத்தும் ஒருமுனைப்படுத்தப் பெறுதலாகும்.

“ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்” என்றார் வள்ளலார்.

“ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை” என்று அப்பரடிகள் மொழிந்தார்.

வழிபாட்டில் ஒருமைநிலை தோன்ற ஒரு கடவுள் வழிபாடு தேவை. “ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்றார் பட்டினத்தார். ஒரு கடவுள் வழிபாட்டிலும்கூட, திருநாமம், திருக்கோலம் அனைத்தும் வழிபாடு தொடங்கிய நாள் தொட்டு ஒரே தன்மையுடையனவாய் இருத்தல் வேண்டும்.

“பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து” என்றார் காரைக்காலம்மையார். ஆக, பிறந்து மொழி பயின்ற காலந்தொட்டு ஒருருவம், ஒருநாமம் என்ற பழக்கம் ஒருமை நிலைப்பட்ட வழிபாட்டுக்குத் துணை செய்யும். பழக்கத்திற்கு வந்து வழக்கமாகிவிட்ட எந்த ஒன்றும் எளிதில் நினைவிற்கு வரும்; எந்தச் சூழ்நிலையிலும் நினைவிற்கு வரும். இந்த அடிப்படையில்தான்,

“வழுக்கி விழினும் நின்திருப் பெயரல்லால்
மற்று நான் அறியேன் மறுமாற்றம்”

என்றும்,

“நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே”

என்றும், அருள்நூல் பேசும்.

வழிபாட்டில் ஒருமைநிலை காணத் தொடக்கக் காலத்தில் ஆரவாரமற்ற அமைதியான சூழல் தேவை. இயற்கைச் சூழல் நிறைந்த காடு, மலை, ஆற்றோரம், கடற்கரை முதலிய இடங்கள் எளிதில் மனம் ஒரு நிலைப்படுவதற்குத் துணை செய்வன, திருக்கோயில்களும் வழிபாட்டில் ஒருமைநிலை காணத் துணை செய்வன. திருக்கோயில் தோற்றத்தின் நோக்கமும் அதுவே. பலர் தனித்திருந்து ஒருமைநிலையில் இறைவனின் திருநாமத்தை எண்ணுதற்கேற்ற நிலையிலேயே பரப்பளவில் கூடுதலான திருக்கோயில்கள் தோன்றின. ஆனால், காலப்போக்கில் திருக்கோயில்களின் பல பகுதிகள் பயன்பாடில்லாது போயின. இன்று திருக்கோயிலில் இறைவன் எழுந்தருளியுள்ள. சந்நிதிகள் மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன. இறைவன் சந்நிதிகளிலும் அண்மைக்காலமாக நெரிசலும் இரைச்சலுமே தோன்றி வழிபாட்டிற்குரிய சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் ஆலமர் செல்வன் சந்நிதி. கொடிக்கம்பத்திற்கு முன்னிடம் ஆகிய இடங்களில் ஒருமைநிலையோடு உட்கார்ந்து இறைவன் திருநாமத்தை எண்ணும் பழக்கம் இருந்தது. இன்று பெரும்பாலும் இந்தப் பழக்கம் அருகிப் போய்விட்டது. இது விரும்பத்தக்கதன்று. ஆதலால், திருக்கோயில் சூழலில் எங்கோ ஓரிடத்தில் அமைதியாக இருந்து இறைவனை நினைந்து நினைந்து அவன் திருவருட் பெருக்கில் திளைத்துத் தியானித்தல் வழிபாட்டின் ஒருமை நிலைக்குத் துணை செய்யும். வழிபாட்டின் ஒருமைநிலை கண்டால்தான் ஆன்மாவிற்குப் பயன் கிடைக்கும்; அனுபூதி சித்திக்கும்.

14-4-86

ஒருவர் நெருங்கச் செய்வது; ஒருமையுடையராக்குவது; அகனமர்ந்த அன்பினராக ஒழுகச் செய்வது. வன்சொல் தோன்றும் களம் தற்சார்பேயாம். தற்சாார்பான தன்னலத் திற்குக் கேடுவருமோ என்று ஐயுறும் பொழுது, தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் வன்சொல் தோன்றுகிறது. அடுத்து, வன்சொல் தோன்றும் களம் ஏமாற்றங்களும் தோல்விகளுமாகும். அழுக்காற்றின் காரணமாகவும் வன்சொல் தோன்றும். இந்தக் களங்களில் தோன்றிய வன்சொற்கள் யாதொரு பயனையும் தந்ததில்லை. மாறாக எதிர்விளைவையே உண்டாக்கியுள்ளன என்பதே வரலாற்று உண்மை. அது மட்டுமல்ல, கருத்து வளர்ச்சியும் மாற்றங்களும்கூட வன்சொல் வழங்குவதின் மூலம் தடைப்படுகின்றன. நிலம் செப்பமாக இல்லாதபோழ்து விதைத்து என்ன பயன்? முளைக்காது. கேட்பார் மனம் செப்பமாக இருக்கத்தக்க வகையில் இன்சொற்களைக் கூறாது போனால் பயன் கிடைக்குமா? மற்றவர் கூறிய இனிய சொற்கள் இன்பம் விளைவித்திருப்பதைச் சென்றகால வரலாற்றிலும் காண முடிகிறது. நிகழ்கால வரலாற்றிலும் காண்கிறோம். இன்சொல் இன்பத்தைத் தருகிறது. பழகும் இனிய நட்பினைத் தரும் இத்தகு மேம்பட்ட பயன்களை இன்சொல் அளிப்பதை அறிந்திருந்தும் ஏன் வன்சொல் வழங்குகிறீர்கள்? வன்சொல், வாளினும் கொடிது, நாவினால் வன்சொல் கூறிச் சுடுவது தவறு. வன்சொல் இன்ப அன்பிற்குப் பகை அறத்திற்கு முரண். வன்சொல் அமைதியைக் கெடுத்திடும். வன்சொல் வழங்கற்க! இன்சொல்லைச் சொல்லிடுக!

வன்சொல், சிறுமை பொருந்தியது. இன்சொல் பெருமையோடு தொடர்புடையது. வன்சொல் இம்மையையும் கெடுக்கும்; மறுமையையும் கெடுக்கும். நன்றைத் தரும் இன்சொல் கூறிப் பழகுக! இன்சொல்லை அணியெனப் பற்றுக!
22–3–1987
சீர்திருத்தக் கருத்தும்
சமூக மேம்பாடும்

இன்று தலைவர் பெரியார் பிறந்த நாள். பகுத்தறிவையே கருவியாகக் கொண்டு, சமுதாயச் சீர்திருத்தத்திற்காக உழைத்தவர் தலைவர் பெரியார். மூடத்தனங்களின் முடைநாற்றத்தையும். சாதிப் பிரிவினைகளின் புன்மையினையும் வாழ்நாள் முழுவதும் சாடியவர் பெரியார்; தாழ்த்தப் பட்டோருக்காகப் போராடி வைக்கம்வீரராக விளங்கியவர். பெரியாரின் சமுதாயத் தொண்டு நினைக்கத்தக்கது; பின்பற்றத்தக்கது. தலைவர் பெரியார் நினைவில் நாம் சிந்தித்துச் செயற்பாடுறுதல் வேண்டும்.

மனிதகுலத்தின் வரலாறு, ஒரு நீண்ட வரலாறு. இந்த நெடிய வரலாற்றில் மனிதகுலம் வளர்ச்சி பெற்றுள்ளது. மனித குலம் மண், நீர், தீ, வளி, வெளி ஆகிய ஐம்பூதங்களை அடக்கி ஆளுவதில் வெற்றிபெற்று விட்டது. அதேபோழ்து ஒளியின் அடியில் நிழல்போல்க் கொடிய துன்பங்களையும் அனுபவித்து வந்துள்ளது; அனுபவித்துக் கொண்டிருக்கிறது ஏன்? இன்றைய மனித குலம் தனது அழிவின் எல்லைக்கு வந்துவிட்டது. அதாவது அணு ஆயுதப்போர், நட்சத்திரப் போர், ஏவுகணைகள் என்றெல்லாம் அழிவின் ஆற்றல்கள் வளர்ந்து வந்துள்ளன! ஏன் இந்த நிலை? ஆளத்தெரிந்தால் மட்டும் போதாது! தானே ஆண்டுகொள்ளவும் தெரிந்தால் தான் மனித குலத்திற்கு விடிவு தோன்றும். அதுபோலவே ஆளப்படுதலுக்கும் ஆயத்தமாக இருந்தல் நயத்தக்க நாகரிகமாகும்.

மனிதப்பிறப்பு உயர்ந்தது; மிகமிக உயர்ந்தது. பயன்காணும் பெருவாழ்வு மனித வாழ்வு. இன்ப அன்பே பயன். இந்த அறிவை முதலில் வளர்த்தாக வேண்டும். இன்று, வாழ்வாங்கு வாழும் முனைப்புடன் வாழ்கின்றவர்களையே காணோம்; பிழைப்பு நடத்துகின்றவர்களையே பார்க்கின்றோம். மனிதகுலத்தின் இந்த நிலை அறியாமையின் விளைவு. “வாழ்க்கை துன்பமானது; வாழ்க்கை யாராலேயோ அமைக்கப்படுகிறது. இது இப்படித்தான் இருக்கும்” என்றெல்லாம் கூறும் அறியாமையிலிருந்து மக்களை மீட்கவேண்டும். “வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்வாங்கு வாழ்வதற்கே!” என்ற அறிவியல் சார்ந்த விழிப்புணர்வைத்தர வேண்டும். வறுமை, துன்பம், அவமானம் ஆகியவற்றோடு ஒன்றிப் பழகிப்போய் - இவையெல்லாம் இயற்கையென்றும், விதியின் விளைவு என்றும், இறைவனின் ஏற்பாடு என்றும், மாற்றமுடியாத ஏற்பாடு என்றும் நினைத்துக் கொண்டு இழிவினை எதிர்த்துப் போராட உந்துதலும் திறனுமின்றி வாழும் மக்களிடத்தில் பொய்ம்மைச் சாத்திரங்களைத் தோலுரித்துக் காட்டி விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். அவர்களிடம் போர்க்குணத்தினை உண்டாக்கிட வேண்டும்.

அறியாமையைப் போலவே இரக்கம் காட்டுதல், தானம் தருதல், இலவச வாழ்க்கை வழங்குதல் ஆகியவையும் மனிதகுலத்திற்குத் தீமையையே தரும். வாழப் பிறந்த மனிதனுக்குக் கல்வியும். தொழிற்நுட்பக் கல்வியும் இயல்பாகவே பெற உரிமை உண்டு. இது சமுதாய, அரசியல் அடிப்படையிலான உரிமை ஆகும். அந்த உரிமையை எந்தவிதமான வேறுபாடும் காட்டாமல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்விக்குக் கட்டணம் என்பது கூடாது! கூடாது! கல்விக்கு கட்டணம் என்ற நிலை நீடித்தால் மானுடத்தின் பிறப்புரிமையைப் பறிப்பது போல ஆகும்; செயற்கை வழியதாகிய ஏற்றத்தாழ்வுகளை நிலைப்படுத்துவதும் ஆகும்; மானிடத்தின் இயல்பே கெட்டுவிடும்.

அடுத்து, உழைத்து உண்பது உயிரியற்கை உழைப்புக்கே மானிடப்பிறப்பு. உழைத்து வாழ்தலே இயற்கையான வாழ்வு; இறைமை சார்ந்த வாழ்வு. உழைக்காதவர்க்கு உண்ண உரிமை இல்லை. இதுவே புதிய அறம். உழைப்பிற்குரிய களங்களைச் சமுதாயமோ, அரசோ ஏற்படுத்தித் தரவேண்டும். உழைப்போர்க்கு உழைப்புக்குரிய சூழலை உருவாக்காத அரசு, சமுதாயம் ஆகியவை அதனதன் தகுதியை இழந்ததாகவே கருத வேண்டும். உழைத்து வாழும் நெறி நடைமுறைப் படுத்தப்பட்டால் செல்வ வாழ்க்கையில் அருவருக்கத்தக்க மேடுபள்ளங்கள் அமையா. ஒரோவழி அமைந்து விட்டாலும் அறத்தின் அடிப்படையில் சீராக்கப்படுதல் வேண்டும். இஃது அற வேள்வியாகும்.

நுகர்வுக் களங்கள் நாளும் வளர வேண்டும்; புதியன புதியனவாக வளர வேண்டும். ஆடம்பரமின்றி, போதையின்றி அதேபோழ்து நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்தலுக்குரிய நுகர்வு வேட்கை வளர்ந்தால்தான் புதிய படைப்புகளுக்குரிய கட்டாயம் தோன்றும் தொழில் வாய்ப்புகள் பெருகும்; தொழில் வாழ்க்கை நடத்தலாம். அங்ஙனமின்றிக் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி’ என்றெல்லாம் சொல்லி நுகர்வுத்திறனை மழுங்கடித்தல் கூடாது. உழைப்பு வாய்ப்புகளை நாளும் கண்டு பெருக்கி வளர்ப்பதைத்தான் வள்ளுவம் “இயற்றல்” என்று குறிப்பிட்டது.

அறிவறிந்த ஆள்வினை வழியில், உழைப்பு வழியில் மட்டுமே பொருளிட்டும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். பிறர் பங்கைத் திருடிச் சொத்துச் சேர்க்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். எந்த வகையிலும் பணம் வைத்திருப்பவனைவிட அறிஞனும் உழைப்பாளியும் தரம் தாழ்ந்தவராகார். இன்றைய சமுதாயத்தில் அரசியல் அதிகாரமுடையவர்களும், பணம் வைத்திருப்பவர்களும் எந்தவிதத் தகுதியும் இல்லாது போனாலும் - சுரண்டி வாழ்ந்தாலும்கூட - மதிக்கப் பெறும் கேவலம் வளர்ந்து விட்டது. வளரும் சமுதாயத்திற்கு இஃது ஏற்றதன்று. விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் உழைப்பாளிகளையும் மதிக்கும் மனப்பண்பு வளரவேண்டும். இன்று வளர்ந்துள்ள பண மதிப்பீட்டுச் சமுதாயம் அறவே மாற வேண்டும். மனித இயல் மதிப்பீட்டுச் சமுதாயம் அமைய வேண்டும்.

இந்தியச் சமுதாயம் - தமிழ்ச் சமுதாயம் இன்றும் வேதகாலத்திலேயே வாழ்கிறது. காலமும் துாரமும் வெல்லப்படாத காலத்தில் தோன்றிய வருணப்பிரிவினைகள், சாதி, குல, கோத்திரப் பிரிவினைகள் இன்றும் அப்படியே பின்பற்றப்படுவது நியாயமும் அன்று; மரபும் அன்று. அறநெறிக்கும் மனித நேயத்திற்கும் முரணான சாதிமுறைகளைக் காப்பாற்றுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அநீதி என்பதை உணர்தல் வேண்டும். இந்த வருணம் - சாதி வேற்றுமைகளில் ஆதாயம் கண்டவர்கள் இந்த முறைகளைக் காப்பாற்றப் பெரிதும் முயல்கின்றனர். இதற்கு ஆதரவாகச் சாத்திரங்களையும் ஆகமங்களையும் காட்டுகின்றனர். இது நமது காலத்தில் மட்டுமன்று; அப்பரடிகள் காலத்தில் அவரிடத்திலேயே இந்தக் கைவரிசைகளைக் காட்டியுள்ளனர். அப்பரடிகள் தம்மிடம் தீண்டாமை. சாதி முதலியவற்றிக்குச் சாத்திரங்களைக் காட்டி வாதாடியவர்களைப் பார்த்து,

“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும்கொண் டென்செய்வீர்!”

என்று கண்டிக்கிறார். இன்று அரசியல் நெறியினரும் மதங்களைச் சார்ந்த பிற்போக்குவாதிகளும் சாதிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடைகோடி மனிதனுக்கும் கடைத்தேற்றம் - மேம்பாடு தேவை. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால், கடைகோடி மனிதனை நிர்ணயிப்பதில் அளவை முறையாகப் பிற்பட்ட நிலையைக் குடும்ப அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாகச் சாதி, மதங்கள் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர். பிற்பட்டோரை நிர்ணயித்தல் கூடாது. இங்ஙனம் நிர்ணயித்தால் சாதிமுறைகள் நிலைப்பட்டுப் போகும். சலுகைகளைக் காப்பாற்றச் சாதிகளைக் காப்பாற்றுவார்கள். அதுமட்டுமா? எந்தக் காலத்திலும் “கடைகோடி மனித” னுக்கு மேம்பாடு கிடைக்கவே கிடைக்காது. ஆதலால், இன, சமய, சாதிப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவருக்கும் வாழ்க்கை உத்தரவாதம் வழங்கப் பெறுதல் வேண்டும்.

உலகம் இருபாலது வேற்றுமைப்பட்டது. இந்த வேற்றுமை ஆக்கத்தின் பாற்பட்டது; மகிழ்வின் பாற்பட்டது. இந்த வேற்றுமை தவிர்க்க இயலாத தவிர்க்கக்கூடாத அமைப்பு. அதாவது, ஆண்-பெண் என்ற அமைப்பு. இந்த வேறுபட்ட அமைப்பு இல்லையானால் களிப்பு இல்லை; மகிழ்ச்சி இல்லை; துணை இல்லை. ஆதலால், இந்த வேறுபாட்டை - இயற்கையின் நியதியை மதித்துப் போற்றி வாழ்தல் வேண்டும். பெண், அனைத்து உரிமைகளுக்கும் உரியவள். அவள் வாழ்க்கைத் துணைநலம். இஃதன்றிப் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாக, போகப்பொருளாகக் கருதுதல், மூடத்தனத்திலும் அடிமைத்தனத்திலும் ஆழ்த்துதல், பணம் காய்க்கும் கருவியாக மாற்றுதல் போன்ற தீமைகள் ஆகாதன! ஆகாதன! பெண் பெறும் பெருவாழ்வே ஆடவர்க்குப் பீடு சார்ந்த பெருமித நடையைத் தரும். பெண்மை வளர்தலும் வாழ்தலும் சமுதாயச் சீரமைப்பிற்கு இன்றியமையாததாகும்.

வாழ்க்கை, நீரோட்டம்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்; தேங்கக் கூடாது. சோகத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது. பிரச்சினைகளை நாம் ஆளவேண்டும். பிரச்சனைகள் நம்மை ஆள அனுமதித்து விடக்கூடாது. இதற்குக் கலை துணைசெய்யும். பண்டைய வாழ்க்கையில் வீடே கலைபயில் கூடமாக இருந்தது. அழகுக்கலை பெண்களைச் சார்ந்து வளர்ந்தமைக்குக் காரணமே அதுதான்! பெண்கள் இசைக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தனர். வீடுகள் அழகுபொலியும் கவின்கலை பயில் மனைகளாக விளங்கின. திருக்கோயில்களும் கலைபல நடைபெறும் கலை தெரிகோயில்களாக விளங்கின. இத்தகு கலை வளர வேண்டும். இசை முதலிய கலைகளின் வாயிலாகக் களிப்பில், மகிழ்ச்சியில் ஈடுபடுவது சமுதாயச் சீரமைப்புக்குத் துணை செய்யும். இதனால் மன விகாரங்கள் குறையும்; அளவான சிறு குடும்பங்களே இருக்கும்.

தலைவர் பெரியாரின் பிறந்த நாள் நினைவாகச் சிறந்த முறையில் சாதிகள் அற்ற-சமநிலைச் சமுதாயம் காண முயற்சி செய்ய வேண்டும். சமூகச் சீர்த்திருத்தம் என்பது தொடக்கநிலை; சமூக மேம்பாடு என்பது முடிவுநிலை. சமூக மேம்பாடு பொருளாதார ரீதியானதாகவும் -சமநிலை யுடையதாகவும் சமூகம் அமையும் பொழுதுதான் சமூக மேம்பாட்டுப்பணி நிறைவுபெறும்! இந்தத் திசையில் நாம் அனைவரும் - சிந்திக்க வேண்டும்! செயல்பட வேண்டும்! என்பதை அறிவோமாக! உணர்வோமாக! செயற்படுவோமாக!
17-9-88


கலைமகள் வழிபாடு

கலைநலம் பொருந்திய வாழ்க்கையே வாழ்க்கை. இயல், இசை, நாடகக் கலைநலம் செறிந்த வாழ்வே சிறப்புடையது. அப்படியானால் இயல், இசை, நாடகத்தில் எல்லாரும் பயிற்சிபெற்று நிகழ்த்த வேண்டுமா? அப்படியல்ல. இயல், இசை, நாடகத்தில் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்றிருந்தால் நல்லது மட்டுமல்ல, வரவேற்கக்கூடியதே! அவற்றை நிகழ்த்தும் பயிற்சி இல்லையாயினும் அனுபவிக்க ஒவ்வொரு வரும் கட்டாயம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மானிட வாழ்க்கையில் கொடூரத்தன்மைகள் இல்லாமல் ஆக்கமும் அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பொருந்திய வாழ்க்கை அமையக் கலையை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கலைமகளை வழிபாடு செய்வதென்றால், கலைமகளைப் பூசிப்பது என்பது பொருல்ல. கலைகளைப் போற்றி வளர்த்துப் பேணுதல், கலைகளை அனுபவித்தல் ஆகியனவேயாகும்.

நாள்தோறும் காலையில் நல்ல பண் பொருந்திய பாடல்களைப் பாடிப் பத்திமை உணர்வில் திளைப்பது கலைமகள் வழிபாடு. அல்லது, நல்ல இசைப்பாடல்களைக் கேட்டு அனுபவிப்பது சிறந்த கலைமகள் வழிபாடு ஆகும்.

அடுத்து, நாடகம்! நாடகம் நாட்டைத் தன்னகத்தே கொண்டது. அதாவது நாட்டு மக்களை ஈர்த்துத் தன்பால் அணைப்பது நாடகம். நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு மகிழ்வூட்டி, அவர்களை நமக்கு வேண்டியவர்களாக - நம்பால் விருப்பம் உள்ளவர்களாக - அமைத்துக் கொள்ளும் முயற்சியும் ஒரு கலைதான்! இப்பண்பு, நாடகக் கலையைச் சார்ந்தது! நாள்தோறும் காலையில் எழுந்தது முதல், வணங்கிய கைகளும், இனிய சொற்களும். முகத்தில் படரும் புன்முறுவல் தாங்கிப் பழகுதல், அவரவர் நிலைமைகளுக்கு ஏற்ப, யாருடனும் பிணக்குகள் வாராது பழகுதல் ஓர் அற்புதக் கலை! சிறந்த கலை வழிபாடு!

இயல் - இலக்கியம்! சிறந்த இலக்கியங்கள் வடிவம் கொள்ளத் தக்கவாறு அறிவறிந்த ஆள்வினைகளை இயற்றி வாழ்தல் இயல்சார்ந்த வாழ்க்கை! பாட்டுடைப் பொருளுக்குக் கருவாய் அமையும்படி புகழ்பூத்த வாழ்வு வாழ்தல் எளிதன்று! அத்தகு இலக்கியமாய் அமைந்து இலக்கிய உருவாக்கத்திற்குக் கருவாய் அமையும் வாழ்க்கையை இயக்குதல் மிகச் சிறந்த கலைமகள் வழிபாடு!

“பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனும் என்பாற்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்”

என்று குமரகுருபரர் வேண்டுகிறார். தமிழிலக்கியம் முழுவதும் கவிதை இலக்கியங்களேயாம்! பாட்டுக்குப் பொருள், பதவுரையும் பொழிப்புரையும் மட்டுமல்ல. பாட்டின் பொருள். பாட்டுடைக் கருப்பொருளாகும். பாட்டுக்குரிய பொருளாய் அமையத்தக்கவாறு வாழ்வாங்கு வாழ்தல்: கவிதை இயற்றும் திறன் பொருந்தி வாழ்தல்! இந்த உலகத்தினை யாதொரு சுவடும் இல்லாமல் அனுபவிக்க வேண்டுமானால், கவிதை உள்ளம் தேவை! பாட்டின் கவிதையின் பொருளாக விளங்குதல், பாட்டின் பயனாகிய இன்ப அனுபவச் செறிவுடன் கூடிய வாழ்க்கை வாழ்தல் இவையே நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டிய முறை அல்லது நாம் நாள்தோறும் செய்ய வேண்டிய கலை வழிபாடு!

நாள்தோறும் இசைப்பாடல்களை வீணை ஒலியுடன் கலந்து நின்று பாடுக! பாட்டைக் கேட்டுக் கலந்து அனுபவித்திடுக! நாள்தோறும் காலையில் வாழ்க்கை இசையுடன் தொடங்கட்டும்!

அடுத்து, நாள்தோறும் ஒருமணி நேரமாவது நல்ல புத்தகங்களைப் படித்து மகிழும் இனிய பழக்கம் தேவை. நமது வாழ்க்கை, உலகியல் காரணமாக வதைக்கப்படுதல் இயற்கை: இந்தச் சூழ்நிலையிலும் நாம் தேர்ந்தெடுக்கும் நல்ல இலக்கியம் நம்மை நிலைப்படுத்தும்; உறுதிநிலையை அளிக்கும்! ஆன்மாவின் - உயிரின் நோய் நன்னெறி சார்ந்த கருத்துகளாலேயே விலகும். “உயிர்க்கு மருந்து நூலகம்” என்பது அறிஞரின் அனுபவ வாக்கு படிக்கும் முயற்சியை விட, படிப்பதற்குரிய நல்லநூலத் தேர்ந்தெடுப்பதில்தான். வாழ்க்கையின் வெற்றி பொருந்தியிருக்கிறது. மானுட வாழ்க்கை சிறப்புற அமைவதற்கென்றே தோன்றிய திருக்குறள், சிறந்த வாழ்க்கை நூல் நாள்தோறும் திருக்குறள் கற்பது, திருக்குறள் தெளிவில் வாழ்க்கையைக் காண்பது என்பன கலைமகள் வழிபாட்டின் சிறந்த நடைமுறையாகும். இதுவே கலைமகள் வழிபாடு!

27.9.90
அலைமகள் வழிபாடு

பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனுடன் அலைகடலில் உறையும் திருமகள் - இலக்குமி, செல்வம்! திருமகள் வழிபாடு என்பது பொருளை, செல்வத்தைப் போற்றுதல் என்பதாகும். இந்த வையகத்தின் வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது திருக்குறள், இங்குப் பொருள் என்றது பணத்தையல்ல. வாழ்க்கையை இயக்கப் பயன்படும் - உண்டு, தின்று, உடுத்து வாழ்வதற்குப் பயன்படும் பொருள்களை யேயாம்!

பண்டமாற்றுமுறை வந்தவுடன் நம்மையும் அறியாமல் பணமதிப்பீட்டுச் சமுதாயம் வளர்ந்து வருகிறது. அதாவது, பணத்தை உண்மையில் மதிப்பைத் தந்த - மானுட வாழ்வை இயக்கும் நுகர்வுப் பொருள்களே செல்வமாகும். நெல், பயறு, கடலை, கரும்பு முதலிய பொருள்களைச் செல்வமாக - திருமகளாக எண்ணிப் போற்றிப் பாதுகாத்திடுதல் வேண்டும். இந்தச் செல்வங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடுவது ஒரு வகையில் திருமகள் வழிபாடாகும்.

சமயத்துறையினர் காத்தற் கடவுளாகிய திருமாலின் மனைவியே திருமகள் எனக் கூறுவர். இந்த உலக இயக்கத்தை, மானுடத்தைப் பேணிக்காத்து இயக்குவது திருமகள் வழிபாடு எனக் கொள்ளுதல் சாலப் பொருந்தும்.

மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்து மண்ணில் விளையும் பொருள்களை உண்டு வாழ்தலே வாழ்க்கை வாழ்க்கையை நடத்த உண்மையில் துணையாக அமைவது பணப்பெட்டியன்று; நிலமேயாகும். இன்று, பணப் பெட்டிக்குத் தரும் மரியாதையை நிலத்திற்கு யாரும் தருவதில்லை. நமது நாட்டில் பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தப் படாமல், மண் அரிப்புக்கு இலக்காகிப் பரிதாபமாகக் கிடக்கின்றன. தரிசு நிலங்களைச் சீர்திருத்தம் செய்தல், உழுது வேளாண்மை செய்தல், மரம் நடுதல் ஆகியன திருமகள் வாழிபாட்டுச் செய்முறைகள். மானுடத்தின் நல்வாழ்வுக்கு மரங்கள் இன்றியமையாதன. ஒரு மனிதனின் வாழ்வு செப்பமுறக் குறைந்தது பத்து மரங்களாவது தேவை. ஆம்! நாம் “வீட்டுக்கு ஒருமரம்” என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம் ! இது போதாது. குறைந்தது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரமாவது நட வேண்டும்; ஆண்டுதோறும் நடவேண்டும். இது, திருவினைச் சேர்க்கும் திருமகள் வழிபாடாகும்.

ஒன்பான்வகைத் தானியங்களையும் உற்பத்தி செய்து மானுடம் உண்டுவாழ, மகிழ்ந்து வாழ உதவுதல் சிறந்த திருமகள் வழிபாடாகும். செல்வத்தை பொருளை ஈட்டுதல் எளிது. செலவு செய்தல் கடினம். அதனால்தான் பலர் செலவு செய்வதே இல்லை! இது அல்ல உண்மை! உழைத்தால் பொருளிட்டலாாம். ஆனால், தேவைக்கேற்ப நெறிமுறை அறிந்து செலவு செய்யும் நுட்பம் எல்லாரும் வாய்ப்பதில்லை. ஏன், இன்று நமது நாட்டில் எல்லா மட்டங்களிலும் திட்டமில்லாத, திட்டம் சாராத செலவு செய்பவர்கள் தாம் மிகுதி. ஒரு பகுதியினர் எதற்குமே செலவு செய்வதில்லை என்று உள்ளனர். இது விரும்பத்தக்கதல்ல.

“பொருட்செல்வம் போற்றாதார்க்கு இல்லை” என்பது திருக்குறள் பயனற்ற - தேவையற்ற செலவுகள், விளம்பரம் செய்து கொள்ளும் செலவுகள், ஆடம்பரச் செலவுகள், முதலீட்டுத் தன்மையில்லாத செலவுகள் ஆகியன தவிர்க்கத்தக்கன. “நுகருமாறு நுகர்தல்” வாழ்வாங்கு வாழ்தலாம். ஆக்கத்தின் பாற்பட்ட முதலீட்டுச் செலவுகள் மட்டுமே செய்யத்தக்கன.

நாம் ஏழைகள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் பலகோடி மக்கள் வாழ்கிறார்கள். ஏன் இந்த அவலம்? ஆனால், நமது நாடு ஏழை நாடல்ல. நிலம் முழுவதாகப் பயன்படுத்தப் பெறவில்லை. இயற்கை வளங்கள் முழுவதாகப் பயன்படுத்தப் பெறவில்லை. ஆதலால், இன்று செல்வ உற்பத்தியில் ஈடுபடுவதே திருமகள் வழிபாடு. நாட்டைத் தானியக் களஞ்சியமாக்கும். முயற்சியே திருமகள் வழிபாடு! நாட்டில் நூறுகோடி மரங்கள் நட்டு வளர்த்துப் பாதுகாத்தலே திருமகள் வழிபாடு! பணத்தைத் தேடிச் செல்லாதீர்! பசுமையைத் தேடிச் செல்லுங்கள். எங்கும் பசுமையைக் காணவேண்டும். மனிதனுக்கு ஆடைபோல, நிலத்திற்குப் பசுமைப்போர்வை தேவை! அப்போதுதான் நிலமகள், விளைவிக்கும் ஆற்றலை இழக்காமல் இருப்பாள்! நிலம் போற்றுவோம்! உழுது, உரமிட்டு, விதையிட்டு, நீர்பாய்ச்சி நிலமகளை - உழைப்பால் வழிபடுங்கள்! இதுவே இன்று நாடு அவாவி நிற்கும் திருமகள் வழிபாடு!

28-9–90
மலைமகள் வழிபாடு

ஆற்றலோ, ஆற்றல்! இன்று, எங்குப் பார்த்தாலும் எரிபொருள் சிக்கல் பற்றிய ஆய்வு பேச்சு ஆம் ! வையகத்தை இயக்குவது ஆற்றல்-சத்தி! இந்தத் தத்துவம் தலைமுறை தலைமுறையாக நமதுநாட்டில் வளர்ந்து வந்ததுதான்! ஆயினும், காலப்போக்கில் சக்தி வழிபாடு சடங்காகப் போய்விட்டது!

பொருள் - Matter - சிவம். ஆற்றல் - Energy - சக்தி என்று அறிவியல் சார்ந்த சமயம் கற்றுக் கொடுத்தது. இயங்காநிலை. சிவத்தொடு சத்தி ஒன்றியிருக்கும் நிலை! சிவத்தினுள் அடங்கி நிற்கும் சக்தி, ஆன்மாக்களின் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்ற ஐந்தொழிலாற்றும் பொழுது சக்தி அம்மை! இந்த சக்தி, பெளராணிக உருப்பெற்ற பொழுது மலைமகள் ஆகிறாள்!

மலைமகள் என்பது காரணப் பெயர். மலை நிலையானது; உறுதியானது; வளம்பல தருவது; எல்லாமே மலைபடுவளம் ! படைப்பாற்றல் உடையனவெல்லாம் ஆற்றலுடையன, உமை சக்தி படைப்பாற்றல் உடையவள். ஆதலால், சக்தியை மலைமகள் என்று கருதுதல் சரியே! மலைமகள் வழிபாடு, சக்தி வாழிபாடு! சக்தி வழிபாடாவது நாம் ஒவ்வொருவரும் நமது சக்தியை, படைப்பாற்றலைப் பேணி வளர்த்துக் கொள்ளுதலாகும். நாளும் தாழாது வளர்ச்சியோடு பொருந்திய அரிய படைப்பாற்றல் மிக்க படைக்கும் தொழில் மேற்கொள்ளுதலே மலைமகள் வழிபாடு! “நாட்டுக்கு உழைத்தலே யோகம்” என்றான் பாரதி.

அளவற்ற சக்தியுடைய இந்த மானுட உடல், நாளும் ஆற்றல்மிக்குடையதாக வளர்க்கப்படுதல் வேண்டும். மானுடத்தின் ஆற்றலைச் சிதைக்கும் வறுமை, பிணி முதலியவற்றை எதிர்த்து நாள்தோறும் போராடுதல் மலைமகள் வழிபாடாகும். வறுமை என்பது நுகர் பொருள்கள் இல்லாமையாகும். நுகர்பொருள்கள் படைப்புப் பொருள்களேயாம்! உடல், அழியக் கூடாது! உடல் அழிந்தால் உயிர் அழியும் உயிர் அழியின் இந்த உலகத்தின் மானிடப் பேராற்றல் அழிவுறும்! எண்ணுக! "உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்” என்றார் திருமூலர். உடம்பை வளர்த்தலாவது உடம்பின் பயன்பாடு கொள்ளும் ஆற்றலை, உழைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதலாம்! ஆம்! அதுவே, பொருள்!

மானிடன் ஆற்றல் மிக்கவனாக, படைப்பாளியாக, வரலாற்றை இயக்குபவனாக வளர்தலும், வாழ்தலுமே மலைமகள் வழிபாடு: “எங்கெங்கும் சக்தி” என்றான் பாரதி! இந்த சக்தி வழிபாட்டின் முதிர்ச்சியே நவராத்திரி வழிபாடு!

நன்மை செய்யப்படுதல் வேண்டும். அப்போதுதான் தீமை அகலும், பின் நிகழ்ச்சியே அதாவது, தீமையை அடக்கி வெற்றிபெற்று வாழ்க்கையின் பேறுகளைப் படைத்தளிக்கும் விழாவே நவராத்திரி விழா! ஆனால், இன்றைய நவராத்திரி விழாவில் இந்தப் பொலிவு இல்லை! நமது வாழ்க்கை அடுக்கி வைக்கப் பெற்ற கொலுவைப் போன்றது! கொலு கலைவதற்கு முன்பே வாழ்க்கை வெற்றி பொருந்தியதாக அமைய வேண்டும். இதுவே, நவராத்திரி விழாவின் தத்துவம். மலைமகள் வழிபாடு வளர்ந்த முறை.

உலகை இயக்குவது சக்தி! ஆற்றல்! நாள்தோறும் நம் ஆற்றல்-உடலின் உழைப்பாற்றல், அறிவாற்றல், அன்பாற்றல், அருளாற்றல், படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வகை ஆற்றல்கள் பூசையால் வளர்வன அல்ல. உழைப்பால், பயன்படுத்தும் இயல்பால் வளர்வன. நாளும் கருவிகளைப் பயன்படுத்தினால் அவற்றின் பயன்படும் ஆற்றல் வளரும். இல்லையானால் கருவிகள் துருப்பிடித்து அழியும். உற்பத்தி ஆற்றலும் உற்பத்திக் கருவிகளும் பேணப்படுதலும் வளர்க்கப்படுதலுமே மலைமகள் வழிபாடு: “நான்” “எனது” என்ற அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து உள்ளத்தில் அன்பினைத் தேக்கி ஆற்றல் மிக்க உழைப்பால் பொருள்கள் பல படைத்து, உலகத்தை உண்பித்து, உண்டு வாழ்தலே மலைமகள் வழிபாடு!

நாள்தோறும் ஊனில், உயிரில் ஆற்றலை ஓம்புக! வளர்த்திடுக! அறிவில், உணர்வில் ஆற்றலை வளர்த்திடுக! இதயத்தில் ஆற்றலைப் பெருக்கி வலிமை பெறுக! இதுவே மலைமகள் வழிபாடு!
29–9-90