குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/இந்தியா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நாடு
1. [1]இந்தியா

ந்தியா ஒரு துணைக்கண்டம்; பெரிய நாடு. இந்திய நாட்டை ஒரு நாடாக ஆக்கி ஆட்சி செய்ய விரும்பிய இந்திய அரசர்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி முதன் முதலாக இந்தியாவை ஒரு நாடாக ஆக்கி ஆண்டது. ஆங்கிலேயராட்சி அகன்று சுதந்திரம் வந்த பொழுதுகூட பாரதி கூறியதுபோல “சேதமில்லாத இந்துஸ்தானம்” நமக்குக் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் நாட்டைத் தூண்டிவிட்டனர். எஞ்சிய இந்தியப் பகுதி இந்தியாவாக இருந்துவருகிறது.

இந்தியா ஒரு நாடாக இருக்கவேண்டும். இந்திய ஒருமைப்பாடு இந்திய மக்களின் ஒழுக்கமாக வளர்ந்து உறுதி பெற வேண்டும். மொழி, இன, சமய வழி உணர்வுகள் இந்திய ஒருமைப்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது. மாறாக இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கக்கூடியதாக அமைதல் வேண்டும். இது வரலாற்றுப் போக்கில் இந்தியாவின் தேவையாகும்; கட்டாயமாகும்.

இந்திய ஒருமைப்பாடு என்பது எளிதில் வளரக் கூடியதன்று. பொதுவாக மக்களிடத்தில் இயல்பாக ஒருமைப் பாட்டுப் பழக்கம் காலூன்றுவதில்லை. அவரவர் தம் சார்புகளின் வழியிலேயே சிந்தித்தல், செயல்படுதல் என்பதே இயல்பானது. அதுவே நடைமுறையாக இருக்கிறது. சார்புகளைக் கடந்து நடுவு நிலையில் எண்ணுதல், செயற்படுதல் என்னும் வாழ்க்கை முறையை எளிதில் மக்கள் ஏற்க மாட்டார்கள். நமது மொழி, நமது சாதி, நமது சமயம் என்று அணுகி, மக்களுக்கு வெறியூட்டிப் போராட்டங்களில் ஈடுபடுத்தல் எளிது. இதுவே இன்றைய இந்தியாவில் நடப்பது. இந்நிலை அடியோடு மாறவேண்டும்.

எப்போழுது மாறும்? எப்படி மாற்றுவது? நடுவண் அரசு இந்த வகையில் அதிக ஆர்வம் காட்டிச் சிந்திக்க வேண்டும். திட்டங்கள் தீட்டவேண்டும். பொதுவாக யாருக்கும், எந்த வகையிலும் யாதொரு இழப்பும் இல்லை என்கிற நம்பிக்கை ஊட்டப்பெற்றால்தான் ஒருமைப்பாடு வளரும். மொழி, இனம், சமயம் தொடர்பான அமைப்புகள் மனிதனை வளர்த்த- வளர்க்கின்ற இயற்கைச் சூழ்நிலைகள். இவைகளிடம் மனிதன் கொண்டிருக்கின்ற பிடிப்புகள் தளர வேண்டிய அவசியமில்லை. மாறாக மொழிப்பற்றும் இனப் பற்றும் சமயப் பற்றும் செழித்து வளர்தல் வேண்டும். செழித்து வளர அரசு துணைசெய்தல் வேண்டும். எந்த ஒரு பிரிவினருக்கும் இந்திய ஒருமைப்பாட்டால் இழப்பு இல்லை என்கிற நிலை உறுதிப்படுத்தப்பெறுதல் வேண்டும். நாம் நம்மை வளர்த்துக் கொள்வது போலவே மற்றவையும் வளர வேண்டும்; அவற்றிற்கு நாம் துணையாக அமையவேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடத்திலும் தோன்றவேண்டும். ஒன்றின் வளர்ச்சி பாதுகாப்பு என்பன அதனிடத்திலேயே அமைந்திருக்கின்றன. மற்றதன் வீழ்ச்சியில் அல்ல என்ற வரலாற்று நியதியை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில் பல மொழிவழி இனங்களைக் கொண்ட சோவியத் ஒன்றியம் முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. மாநிலங்கள் பூரண ஆட்சியுரிமையும் தகுதியும் உடையவனவாக இருக்கவேண்டும். மாநிலங்கள் தன்னாட்சி பெற்ற சிறந்த குடியரசுகளாக விளங்குதல் வேண்டும். மாநிலங்கள் பஞ்சாயத்துக்கள் போல நடத்தப் பெறுதல் கூடாது. அதிகார வரம்புகளால் உருவாக்கப்பெறும் ஒருமைப்பாடு இந்தியாவை ஒன்றாக்கி விடாது. இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களும் பூரண உரிமைகள் பெற்றவைகளாக இந்திய ஒன்றியத்தில் இணைந்து வலிமைபெற வேண்டும். மாநிலப் பிரச்சனைகளில் மைய அரசு வழிகாட்டுதலும் வழி நடத்துதலும் இருக்கலாம்; தலையீடுகள் இருத்தல் கூடாது.

இந்தியாவின் மாநில மொழிகள் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் உரிமை பெற்ற மொழிகளாக இடம் பெறுதல் வேண்டும். பயிற்றுமொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தாய்மொழியே இடம் பெறுதல் வேண்டும். இந்த இடங்களில் உள்ள தாய் மொழியல்லாத மொழியை உடனடியாக அகற்றுதல் அறிவு வளர்ச்சிக்கும்-சுதந்திர உணர்வுக்கும் துணை செய்யும். இந்தியாவின் தொடர்பு மொழியாக இந்தியும் மைய அரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கட்டும். இந்திய மக்கள் அனைவரும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை மொழிப்பாடமாக கட்டாயம் படித்தல் வேண்டும். இது இந்திய ஒருமைப் பாட்டிற்கும் உலக உறவுகளுக்கும் தேவை, மூன்றாவது மொழியாக விருப்பப் பாடமாக இந்தியை இந்திய மாணவர்கள் அனைவரும் படித்தல் வேண்டும். மாநிலங்களில் தாய்மொழிகளின் நிலையும் மைய அரசில் இந்தி-ஆங்கிலம் என்கிற இருமொழி ஆட்சி நிலையும் அரசியல் சட்டரீதியாக உறுதிப்படுத்தப் பெற்றுவிட்டால் இந்தியை விருப்பப்பாடமாக ஏற்றுக் கற்க முன்வருவதில் தடையிருக்காது. இதனால் ஆட்சி ஒருமையும்-மக்கள் ஒருமையும் வளரும்.

இன்றிருக்கிற பாராளுமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் அமைந்துள்ளது. நிறைவான மக்களாட்சி முறைக்கு இது சால்பானதேயாம். ஆயினும், மாநிலங்களின் சிக்கல்களை, மாநிலங்களிடையே உருவாகும் சிக்கல்களை ஆய்வு செய்து வழிகாட்ட தேசிய நலக்குழு அமைதல் வேண்டும். இத்தேசிய நலக்குழு, மாநிலங்கள் அடிப்படையில் அமைதல் வேண்டும். இது அரசியல் சட்டரீதியானதாகவும் அதிகார வரம்புகள் உடையதாகவும் அமையவேண்டும்.

இந்திய அரசின் அமைச்சரவையில் எல்லா மாநிலங்களுக்கும் சமநிலையில் வாய்ப்புகள் வழங்கவேண்டும். இந்திய நீதி, ஆட்சிமுறைகள் சார்புகளைக் கடந்ததாக-தேவைகளை மையமாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். இந்தியக் குடியரசு தினவிழா அனைத்து மாநிலங்களும் கூடிக் கொண்டாடத்தக்கதாக- சுழற்சி முறையில் எல்லா மாநிலத் தலைநகர்களிலும் கொண்டாடப் பெறுதல் வேண்டும். குடியரசுத் தலைவர் பொறுப்பேற்றவுடன் அவர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் சட்டமன்ற உறுப்பினர்களையும் பொதுமேடைகளில் மக்களையும் சந்தித்துப் பேசவேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவரைக் கூட மாநில வாரியாக சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பொது நடைமுறையைச் செயற்படுத்துவது பற்றிக் கூட எண்ணிப்பார்க்கலாம். ஒரு மாநிலத்து இளைஞர்கள் அடுத்த மாநிலங்களில் உயர் கல்வி கற்க-ஆய்வு செய்ய விரும்பத்தக்க சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும். சிந்தனையும்-கல்வியுமே ஒருமைப்பாட்டுக்குத் துணை செய்யக் கூடியவை. இந்திய இலக்கிய விழாக்கள் நடத்தவேண்டும். இந்தியாவை ஒரு நாடாகக் கட்டிக் காப்பாற்றவேண்டும். அதற்கு ஏற்ற சிந்தனை-பழக்க வழக்கங்கள் உருவாதல் வேண்டும். இந்திய அரசு சிந்திக்கவேண்டும். இரண்டாந்தரக் குடிமக்களாக ஆகாமல் தடுப்பதற்குரிய முயற்சிகளும் தேவை. ஆதலால் தமிழ் நாட்டளவில் இந்தியைக் கற்பிக்கும் பள்ளிகளை-கல்வி நிலையங்களைப் பொறுத்தவரையில் சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது உடனடியாகத் தேவை.
-'மக்கள் சிந்தனை' 1-2-83

  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை