குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/கூட்டுறவு இயக்கம்

விக்கிமூலம் இலிருந்து

9. [1]கூட்டுறவு இயக்கம்

கூட்டுறவு ஒரு வாழ்க்கைத் தத்துவம்; ஒரு வாழ்க்கை முறை. மனிதகுலத்தின் மேம்பாடு கூட்டுறவின் மூலம்தான் நிகழ முடியும். கூட்டுறவு மனித குலத்தை அகநிலையிலும் புறநிலையிலும் வளர்த்துச் செழுமைப்படுத்தி வளர்க்கும். இந்திய நாட்டில் சோசலிச சமுதாயத்தை-பொதுவுடைமைச் சமுதாயத்தைக் கூட்டுறவின் மூலமே அமைக்கமுடியும். இந்த மகத்தான சாதனையைக் கூட்டுறவின் மூலம் சாதிக்க வேண்டும் என்றால் கூட்டுறவுக் கல்வி, கூட்டுறவுச் சிந்தனையை நிறைய வளர்த்து நமது மக்களை இயல்பான கூட்டுறவாளர்களாக வாழப் பழக்கவேண்டும். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது அறம். ஒழுக்கம், கடமை, தவிர்க்க இயலாதது என்ற கொள்கையை மக்கள் தங்களுடைய வாழ்க்கையின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும்.

ஒருவருக்கும் மற்றொருவருக்குமிடையில் மாறுபாடுகள் முரண்பாடுகள் தோன்றும். இதுவும் இயற்கை மானிடப் படைப்பு ஒரே அச்சு வார்ப்பல்ல, அச்சுவார்ப்பாக இருந்தால் சுவையில்லை, உயிர்ப்புமில்லை. ஆயினும் மாறுபாடுகளை முரண்பாடுகளைப் பகையாக்கி வளர்த்து வாழ்க்கையைப் பாழடிக்கக்கூடாது. மாறுபாடுகளையும் முரண்பாடுகளையும் அலட்சியப்படுத்தி உரியவர்களை ஒதுக்கி அல்லது ஒதுங்கி வாழ்தலும் சமுதாயக் கேடேயாகும். ஆதலால் மாறுபாடுகளையும் முரண்பாடுகளையும் திறந்த மனத்துடன், பரந்த மனப்பான்மையுடன் ஆராய்ந்து ஆக்க வழிக்கு மாறுபாடுகளை, முரண்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் மனிதர்களை மறந்துவிடவேண்டும். எது சரி? எது தவறு? எது மக்களுக்கு மிகுதியும் பயன் தரும் என்பதே எண்ணமாக அமைய வேண்டும். இந்த எண்ணப்போக்கு மிகுதியும் வளர்ந்து பயன் தரவேண்டுமானால் “நான்” “எனது” என்ற செருக்குணர்வு அழியவேண்டும். பெருமை என்பது மற்றவர்கள் தருவதேயன்றி தாமாக எடுத்துக் கொள்ளக்கூடியதன்று.

அடுத்து, அறிவார்ந்த நிலையில் கூட்டுறவு உணர்வு செயல்படுத்தப்படவேண்டும். ஒருவருக்கு ஒருவர் சிந்தனை செயலில் ஒத்துப்போதலில் தொடர்ச்சி இருக்கவேண்டும். ஒத்துப்போதலில் தொடர்ச்சி இருக்கவேண்டும். ஒத்துப் போதல் என்பது அருமைப்பாடுடைய நுண்ணிய வாழ்வியல் எதிலும் தொடர்ச்சி. நீங்காமல் நிலவவேண்டும். முழுமையாக, வளர்ச்சியடையும் வரையில் தொடர்ச்சி தேவை, வளர்ந்த நிலையில் தொடர்ச்சி ஒழுக்கமாகவும் பழக்கமாகவும் அமைந்துவிடும். பலருடைய வாழ்க்கையில் உறவுகளில் செயல்முறைகளில் தொடர்ச்சி இன்மையாலேயே வெற்றி கிடைக்கவில்லை. சோறு சமைக்கும்பொழுது இடையிடை விட்டுச் செய்தால் அது சோறாக இருக்காது. ஏன் நம்முடைய உயிர்ப்பு நிலையை இடையீடு இல்லாத தொடர்ச்சியாக மூச்சுத்தானே பாதுகாத்து வருகிறது. ஒரு விநாடிகூட மூச்சு தானாக நிற்காது நின்றால் கதை முடிந்தது. அதுபோல நமது பணிகளும் உறவுகளும் அமைய வேண்டும். அதனால்தான் திருக்குறளும்“ உணர்ச்சி நட்பாங் கிழமை தரும்” என்றது.

அடுத்து கூட்டுறவின் தலையாய நோக்கம் மற்றவர்களுக்கும் பயன்படுதல் என்பதேயாகும். மற்றவர்க்குப் பயன்படும் வழியில் நமக்குப் பயன்படலாம் என்பதே கூட்டுறவின் தத்துவம் கூட்டுறவின் இந்த அடிப்படையைச் சிந்தனை செய்ய வேண்டும். இந்தச் சிந்தனை நமது கூட்டுறவாளர்களிடையே இருக்கிறதா? என்பதே ஐயப்பாடு இன்று கடன் வாங்கலாம் என்பதற்காகவும் கூட்டுறவு சங்கத்தில் பலர் சேர்கிறார்கள். ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வளரவில்லை. கூட்டுறவு சமூக நிறுவனம். குடியரசு நாட்டில் ஆட்சியும் அரசும் மக்களுடையது. நாட்டின் மூலதனத்தை நாம் விரும்பியவாறெல்லாம் பயன்படுத்தி அழித்தால் அந்நிய நாடுகளில் கடன் வாங்க வேண்டியதுதான்! வேறுவழி என்ன ? உண்மையில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றால் அதை எப்படி நிர்வகிப்பது என்ற பிரச்சனையைக் கூட்டுறவாளர்களிடம் விட்டுவிட வேண்டும். அவர்கள் விரும்பி, தேவை என்று கேட்டால் அரசு உதவி செய்யலாம். ஆனால், நமது நாட்டில் “கடன் வாங்குவதே திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்காகத்தான்” என்ற பழக்கத்தை உருவாக்க மக்களில் ஒரு சிலரும், அரசும் முயன்று ஓரளவு வெற்றி பெற்றுவிட்டார்கள்! இந்த வெற்றியில் மக்களின் ஏழ்மையைத் தொடர் கதையாக்கி விட்டார்கள்.

அடுத்து, கூட்டுறவு நிறுவனங்கள் சீராக நடைபெற அரசின் கண்காணிப்பு அவசியம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு, அரசின் பிறிதொரு அலுவலகமாக மாறிவிடக்கூடாது. கூட்டுறவுத் துறையில் பணிசெய்யும் அரசு அலுவலர்கள், தணிக்கையாளர்கள் புலனாய்வு காவல்துறையினரைப் போலவும் “பிரேத விசாரணை” செய்பவர்கள் போலவும் ஆகிவிடக் கூடாது. அவர்கள் கூட்டுறவாளர்களுடன் இயல்பாகக் கலந்து நின்று பழகித் தவறுகள் நிகழ வாய்ப்பில்லாமல் தடுக்க வேண்டும். இல்லை! நிறைகளின் வழியில் இயக்கப்படுவதால், குறைகள் நிகழவே வாய்ப்பில்லாமல் தடுக்கப்படுதல் வேண்டும். யாரும் யார்மீதும் எளிதில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தலாம். அந்தக் குற்றங்கள் நிகழாமல் தற்காக்க தடுக்க அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்ட அக்கறை என்ன? முன்முயற்சி என்ன? என்பதே கேள்வி. ஆதலால், கூட்டுறவுத் துறையில் பணி செய்யும் அரசு அலுவலர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

குடியாட்சி என்பது மக்களால் ஆளப்படுவது. அதற்கு ஏற்ப, மக்களே ஆட்சித்திறன் உடையவர்களாக ஆகக் கூட்டுறவைவிடச் சிறந்த சாதனம் இல்லை. இந்தக் கூட்டுறவில் அரசு நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலையிடுதல் அறவே தவிர்க்கப்படுதல் வேண்டும். கூட்டுறவு இயக்கத்தில் அரசியல் கட்சிகள் கட்சி உணர்வுகள் புகுந்து விட அனுமதித்தல் தற்கொலைக்குச் சமம். கூட்டுறவாளர்கள் அரசியல் வாதிகளாக இருக்கலாம். தவறில்லை, ஆனால் அரசியலுக்குக் கூட்டுறவைப் பயன்படுத்தக்கூடாது. அரசியல்வாதிகள் கூட்டுறவாளர்களாக இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் கூட்டுறவைப் பொதுமையானதாகப் பாதுகாக்கவேண்டும்.

உலக இயக்கத்தின் உயிர்ப்பு உழைப்பில்தான் இருக் கிறது. கூட்டுறவாளர்கள் உழைப்பாளர்களாக, உருமாற்றம் பெறவேண்டும். உழைக்காமல் உண்ணுவது காலப் போக்கில் மனிதனையும் கெடுத்து பொருள்களையும் அழித்துவிடும். உழைத்து உண்பதைக் கட்டாயமாக்கவேண்டும். எப்படியாவது பணம் வருவது என்ற வாழ்க்கை நாட்டுக்கு உகந்ததன்று.

இந்தக் கூட்டுறவு வாரத்தின்போது சபதம் ஏற்போமாக! உண்மையான கூட்டுறவுத் தத்துவத்தின் வழியில் கூட்டுறவாளர்களாக வாழ்வோம்! உழைப்போம்! உண்போம்! கதிரவன் ஒளியைப் பிரதிபலிக்கும் நமது கூட்டுறவுக் கொடியைப் போல, மக்கள் நலனைப் பிரதிபலிப்போமாக! பேச்சிலும் செயலிலும் கையோடு கை சேர்ப்பதால் கட்டு உழைப்பு! உற்பத்திப் பெருக்கம்! இதுவே கூட்டுறவு! இந் நிலையை நமது வாழ்க்கையாக-உழைப்பாக மாற்றுவோமாக!

‘மக்கள் சிந்தனை’ 15-11-81
  1. கடவுளை போற்று! மனிதனை நினை!