உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/தொழிலாளர் நலம்

விக்கிமூலம் இலிருந்து


15. [1]தொழிலாளர் நலம்

ல்லனவற்றை நாடி வாழத்தான் நமக்குக் கடவுள் வழிபாடு இருக்கிறதே தவிர, தீயனவற்றைத் தேடித் திரிந்து பெறுவதற்காக அல்ல. வாழ்க்கையிலே உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமைக்குச் சிந்தனையற்ற போக்குத்தான் காரணம். வாழ்வில் சிந்தனையில்லாது போனால் வரும்பொருள் சேராது-வளமும் பெருமையும் கிட்டா. நாளும் உழைத்ததைச் சேமித்து நல்வாழ்வுவாழ ஆசைப்பட வேண்டும். பாடுபட்டு உழைத்து-அதற்குரிய பயனை அனுபவியாமற்போனால் அது மனிதத்தன்மையாகுமா? உங்களது வாழ்க்கைக்கு நல் வாழ்வுக்கு வழி சொல்லக்கூடிய பெரியாரை உங்களிடத்திலே தேடிப்பிடித்து-அவர் சொல்லும் அனுபவ உண்மைகளுக்குச் செவிசாய்த்து நீங்கள் வாழவேண்டும். வாழ்க்கைத் துணையில்லாது போனால் வாழும் இல்லறம் சிறக்காது என்பார்கள். இல்லாள் இல்லாத இல்லறம் இடுகாட்டுக்கு ஒப்பாகும் என்பது நம்மவர் வழக்கு. இதுபோல் நல்ல அறிவுக்கு-நற்சிந்தனைக்கு நாம் பெரியாரைத் துணைக் கொள்ளவேண்டும். ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என வள்ளுவரே ஓர் அதிகாரம் வகுத்திருக்கிறார். நல்லவர்களாகிய பெரியவர்களின் துணை நாம் சிந்தித்து வாழவும், சிரித்து மகிழவும் அடிகோலும். அவர்களின் துணையற்ற நிலை தீமையை உண்டாக்கும்; “பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” என்கிறது தமிழ்மறை. உங்களுக்கு முன்னேற ஆசை இருக்கிறது. ஒரு முறையான-நெறியான ஒழுங்கில்லை. உங்களிடையே நீங்கள் நல்லவர்களெனக் கருதிப் பின்பற்றும் பெரியார்கள் நன்முறையைக் காட்டினால் அவ்வழிச் சென்று அவனியில் உயர முயலவேண்டும். பெரியவர்கள் வழியை முறையைக் காட்ட முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாது. குதிரையை நீர்குடிப்பதற்காகக் குளத்துக்குக் கொண்டு செல்லலாம்; நீர் குடிக்கவேண்டியது குதிரையே தான். கொண்டு செல்பவரல்ல.

தொழிலாளர் என்ற முறையிலே ஒற்றுமையாக-ஒரு குலமாக இருத்தல் வேண்டும். தொழில் இனங்களிடையே பிரிவும்-பிளவும் இருந்தால் காலப்போக்கில் கசப்பு முற்றிக் கைகலப்பிலும்-பெருங்கலவரத்திலும் முடியும். உழைப்பவர்கள் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருந்தால் இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படும்பொழுது ஓடிச்சென்று உதவ முடியும்-உதவிகளைப் பெறமுடியும். தொழிலாளர்களது கட்டுக்கோப்பிலே-திட்டமானதொரு முயற்சியால் பெட்டி பெட்டியாகப் பணம் சேர்க்கலாம். பலருக்கு உதவலாம். கட்டுக்கோப்பு இல்லையேல் நல்லதிட்டமும் இருக்காது. பெட்டியில் பணமும் நிரம்பாது. அவற்றுக்குப் பதிலாக வீட்டில் கடன் இருக்கும்-கவலையிருக்கும்-அழகாக அலங்காரமாக உடையணிந்து உலாவமுடியாது போனால் மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து என்ன பயன்? நல்ல குறிக்கோளோடு ஒன்றி வாழவேண்டும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு” என்றும் “கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்றும் எண்ணி அதற்கேற்ற முறையில் வாழ்வை அமைக்கவேண்டும்.

தொழிலாளர்கள் பிளவுபட்டுப் பலப்பல சங்கங்களை உண்டாக்குவது பயன்தராது. பிரிவும்-பிளவும் நன்மையைத் தருவதில்லை. இதனாலேதான் வள்ளுவர் ‘பல்குழு’ கூடாதென்கிறார். தொழிலாளியின் நலனைப் பேணக்கூடிய மனக்கவலை பொருளற்ற துன்பம் போன்றவைகளை அகற்றக் கூடிய ஒரு மாபெரும் சங்கத்தை உண்டாக்க வேண்டும். உலகியலிலே-அதுவும் இன்றைய நிலையில் பொருள்தான் மிக முக்கியமானது, வேராடினால் மரம் வளராது; பூத்துக் காய்த்துக் கனி தராது. அதுபோலவே பல நன்மைகளுக்கும் பொருட்சேமிப்பு அவசியம் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லையென்பதைப் போலவே பொருளற்ற சங்கத்துக்கும் வாழ்வில்லை; வளர்ச்சியில்லை. பொருளாதார வளம் உண்டாகிவிட்டால் வறுமையில் செம்மையோடு வாழ்க்கையில் நேர்மையாக வாழவழிபிறக்கும். ஆன்மீகச் செழுமையும் அரும்பிவளரும். ஆகவே கட்டுக்கோப்பான ஒற்றுமையும்; உழைப்பும், சேமிப்பும், நேர்மையும், செம்மையும் உங்களிடத்தே உருவாக வேண்டும். அத்தகைய நிலைக்கு ஆண்டவனது துணையும் அவசியமானது.

உங்களின் கட்டுக்கோப்பில் சாதியோ, மொழியோ, மதமோ குறுக்கிடக்கூடாது. அவை தலைகாட்டினால் கட்டுக் கோப்புக் குட்டிச் சுவராகிவிடும். நாமெல்லாரும் மனிதர்கள்; ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள்; நமக்கெல்லாம் தாயும் தந்தையுமான அம்மையப்பன் தலைவனாக இருந்து அருள் சுரக்கிறான். அவனது அருள் மழை நம் எல்லாருக்கும் சொந்தமானது. எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கவே நம்மை ஆண்டவன் மனிதராகப் படைத்திருக்கிறான். பிறவிகளில் மனிதப் பிறவி உயர்ந்தது. “அரிது அரிது மானிடராதல் அரிது” என்று அவ்வைப்பிராட்டியும் “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று அப்பரடிகளும் சொல்லி யிருக்கிறார்கள். இவற்றை எண்ணி ஒற்றுமையைப் பேண வேண்டும். ஒற்றுமை உணர்வை உண்டாக்கக் கல்வியறிவு அவசியமானது. கல்வியில்லாத வாழ்வு காட்டு வாழ்வாகும். மற்றெல்லாச் செல்வங்களையும் விட, கல்விச் செல்வமே உயர்ந்ததென உயர்த்திப் பேசப்படுகிறது. “கேடில் விழுச் செல்வம் கல்வி” என்கிறார் வள்ளுவர். கல்வி இல்லையேல் சிந்திக்க இயலாது. சிறக்க இயலாது. கல்வி கற்கப் போதிய வசதி உங்களிடத்தில் இல்லாதது குறைதான், அக் குறையை நீக்கத் தோட்ட முதலாளிகள் முனையவேண்டும். அவர்கள் தொழிலாளிகளின் குழந்தைச் செல்வங்களைக் கல்விச் செல்வங்களாக்கினால் பொருட் செல்வத்தோடு புகழ்ச் செல்வமும் வந்தடையும்.

தொழிலாளர்களும் தமது குழந்தைகளைப் படிப்பிக்க ஆசைப்படவேண்டும். பட்டங்கள் பலபெற்றுப் பாரில் சிறக்க முடியாவிட்டாலும் பண்பாக வாழப் பழகி வாழவைக்கப் பழக்கக் கல்வி மிக அவசியம் தேவையானதென்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும். படித்தும் முட்டாள்களாகத் திரியும் இந்தக் காலத்தில் படிக்காதும் போனால் என்ன ஆகும்?

படிப்பு பக்குவத்தைத் தருவதோடு பல்லுயிர்களோடு அன்பாக வாழவும் தூண்டுகிறது. நகரமும் நாடும் படிப்பு விஷயத்தில் போட்டி போடுகின்றன; நகரத்தைத் தோற்கடிக்கக் கிராமமும் கிராமத்தைத் தோற்கடிக்க நகரமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் கெட்ட சிந்தனைகளைத் தோற்கடித்து நல்ல சிந்தனைகளை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி இன்றியமையாதது. சாப்பிடாமல் உயிர்வாழ முடியாதென்பதைப்போல் படிப்பில்லாமல் உயரமுடியாது. வேட்டி கட்டிக்கொள்வது தனிமனிதனின் மானத்தைக் காப்பதற்கு மட்டுமல்ல. சமுதாய ஒழுக்கத்துக்கும் பயன்படுகிறது. அதுபோலவே கல்வி தனிமனிதனின் நலத்துக்குமட்டுமல்ல-சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. வாழ்க்கையில் துணிவை-தன்னம்பிக்கையைப் பெற உங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்குமாறு வேண்டுகிறேன்.

இனி, கடவுளைப் பற்றிய எண்ணம் தொழிலாளர்களுக்கு எங்கும் எப்பொழுதும் வேண்டும். வேலைக்குச் செல்வதால் கடவுளை வணங்க நேரமற்ற நிலை உங்களுக்கு உண்டென்பதை நான் உணராமலில்லை. தேயிலைக் கொழுந்தைக் கொய்யும் பொழுதும், கூடையில் போடும் பொழுதும் கடவுளை நினைக்கலாம், வணங்கலாம். கூடையில் கொழுந்தைப் போடும்பொழுது, ‘முருகா! முருகா!’ என்று சொல்லிப் போட்டால் அது முருகனுக்கு லட்சார்ச்சனையாகிவிடும். மலையின் உச்சியிலே கொழுந்து கொய்யும் உங்களுக்கு ஏறுமயிலேறி மலைதோறும் மகிழ்வுடன் உலாவரும் முருகக்கடவுளின் கருணைகிட்டும்.

  1. முத்து மொழிகள்