குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அறிவின் அழகு

விக்கிமூலம் இலிருந்து

3. அறிவின் அழகு

இனிய தமிழ்ச் செல்வனுக்கு, வாழ்த்துக்கள்!

வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவு இரு வகையினது. ஒன்று ஆனது அறிதல், பிறிதொன்று ஆவது அறிதல். ஆனது அறிவதைப் பட்டறிவு என்பர். அதாவது இந்த நொடிக்கு முன்புவரை நம்முடைய வாழ்க்கையானாலும் சரி சமுதாய அமைப்பானாலும் சரி நடந்தனவற்றை அறிதல். இங்கு அறிதலாவது அவற்றின் நடைமுறைகளையன்று. சென்றகால நிகழ்வுகளின் விளைவுகளை அறிதல் அல்லது எதிர்விளைவுகளை அறிதல்.

வாழ்க்கை ஒரு தொடர்கதை. நேற்று நிகழ்ந்தனவற்றை ஆராய்ந்து அறிந்து கொண்டால்தான் எதிர்காலத்திற்குத் திட்டமிட முடியும். சென்றகால நிகழ்வுகள் நல்லனவாக அமைந்து நல்லன விளைந்திருந்தாலும் அந்த நன்மையின் தரத்தினை மேலும் மேலும் உயர்த்த வேண்டும். ஒரு நன்மை கூடத் தொடர்ந்து கண்காணிக்கப் பெற்று மேலும் மேலும் செழித்த நன்மையாக வளர்க்கப் பெறாது போனால் ஒரு தேக்கம் உருவாகும்! ஒரு சூன்யம் தோன்றும். பின் அந்த நன்மையும் கூட வளர்ச்சியின்மையின் காரணமாகத் தீமையாக மாறிவிடுதலும் உண்டு. ஆதலால், சென்றகால நிகழ்வுகளின் நன்மையை மேலும் மேலும் செழிப்படையச் செய்யவேண்டுமானால் ஆனதறிதலைத் தொடர்ந்து ஆவதறிதலும் வேண்டும்.

நன்மையே செய்தாலும் செய்யும் நன்மைகளனைத்தும் நன்மை என்ற காரணத்தினால் வெற்றி பெற்று விடுவதில்லை. மானிட வரலாற்றில் தீமைகள் வெற்றி பெற்ற அளவுக்கு நன்மைகள் வெற்றி பெற்றதில்லை. ஆனால் தீமைகள் பெற்ற வெற்றி நிலையானதன்று. பாரதி கூறியாங்கு,

"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்"

ஆனாலும் நன்மை செய்ததிலிருந்து இடர்ப்பாடுகளை அல்லது ஏற்பட்ட தோல்விகளை ஆய்வு செய்து கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் ஆனது அறிதலாகும்; பட்டறிவுமாகும். இந்த அறிவைப் பெறுவதால் நாம் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம். ஆனது அறிதலினும் ஆவதறியும் முனைப்பு மிகுதியாகத் தேவை. ஆவது அறிகின்ற அறிவு இல்லாமல் ஆனது அறிகின்ற அறிவுமட்டுமே பெற்றிருந்தால் வாழ்க்கையில் துன்பமே மேலிடும்; கவலையே மிகும். இத்தகையோர் சென்ற காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பர்; புத்துணர்வு கொள்ளார்; புதிய அறிவினையும் பெறார். புத்துழைப்பினையும் இவர்களிடத்தில் கான இயலாது. சென்றகாலத்தைப்பற்றிய அறிவு எதிர்காலத்திற்கு உந்தி செலுத்தக் கூடிய ஊக்கியாக இருக்க வேண்டுமே தவிர அதுவே வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது.

இனிய அன்ப, நம்மில் பலர் சென்ற காலத்திலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று விரைந்து வளரும் உலகத்தை அவர்கள் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தமிழைப்பற்றி நிறையப் பேசுகிறார்கள். அவ்வளவும் பழையகாலச் சிறப்பு, தமிழுக்குப் புதிய சிறப்பினைச் சேர்க்கும் முயற்சிகள் இம்மியும் இல்லை. தமிழ் இனத்தின் புகழ்பூத்த பழங்கால வாழ்க்கையைத் திறம்பட எழுதிக் காட்டுகின்றனர்; பேசிக்காட்டுகின்றனர். ஆனால் சதுரப்பாட்டுடன் வாழ்ந்து வையகத் தலைமை ஏற்க முன் வருவதில்லை.

இனிய தமிழ்ச் செல்வ! இயற்கை அமைப்பு எதிர்நோக்குடையதாகவே அமைந்திருக்கிறது. மனிதனுடைய உடலுறுப்புகளின் அமைப்பு முழுதும் முன்னோக்கிச் செல்வதாகவேதான் அமைக்கப் பெற்றிருக்கிறது. ஆதலால் நேற்று நடந்தவை நடந்தவையாகி விட்டன. அவற்றில் இனி எந்த மாற்றமும் எவ்வளவு முயன்றாலும் செய்ய முடியாது. அதனால் அவை வாழ்க்கைக்குப் பின்னணியாக அமைய முடியுமே தவிரப் பயன் தருவனவாக அமையமுடியாது. இனிய அன்ப, நம்மில் பலர் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே அச்சப்படுகின்றனர். கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் ஏதோ எதிர்காலம் நம்முடைய கையில் இல்லாதது போலச்சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். கடவுள் நாம் செய்யும் முயற்சிகளுக்கெல்லாம் துணை நிற்பவரே தவிர அவராக ஒன்றும் செய்து விடுவதில்லை.

இனிய அன்ப, நீ பேருந்துப் பயணம் செய்திருக்கிறாய் அல்லவா? அந்தப் பேருந்தில் வலவர் (டிரைவர்)க்கு முன்னால் ஒரு சிறிய கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதைப்

தி.18. பார்த்திருக்கிறாய் அல்லவா? அது ஏன்? அது அழகு பார்த்துக் கொள்ளும் கண்ணாடியன்று; வண்டிக்குப் பின் பகுதியில் என்ன நிகழ்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேயாம். அதுவும் ஒரளவு தெரிந்து கொள்ளத்தான்! அவ்வாறு தெரிந்து கொள்வதுங் கூட முன்னேறிச் செல்லும் பயணத்திற்கு யாதொரு இடையூறும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வதற்கேயாம். அந்த அளவுக்குமேல் பின் நோக்கிப் பார்த்தில் கூடாது. அதே வலவர் முன்னால் அவர் முன்னேறிச் செல்ல வேண்டிய எதிர்த்திசையைக் காட்ட அல்லது தெரிந்து கொள்ளப் பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதையும் பார்த்திருப்பாய்! இனிய அன்ப, போதும் போதும் பழம்பெருமை பேசியது! இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்! அஃதே அறிவுடைமைக்கு அழகு! அஃதே ஆவதறியும் அறிவு!

இன்ப அன்பு
அடிகளர்