உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அழுக்காறு கொள்ளற்க!

விக்கிமூலம் இலிருந்து

41. அழுக்காறு கொள்ளற்க!

இனிய செல்வ,

தமிழினம் காலத்தால் முன்தோன்றி மூத்த இனம். தமிழகத்தின் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்த வேண்டிய இன்றியமையாமை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்த மையைப் பொருள் இலக்கணம் செய்ததன் மூலம் உய்த்துணர முடிகிறது. தொல்காப்பியத்தை ஒட்டித் தமிழில் தோன்றிய நீதிநூல்கள் பல. இனிய செல்வ, திருக்குறளும் நமது வாழ்வியலை முறைப்படுத்தத் தோன்றிய நூலேயாம். இத்தனை நீதிநூல்கள் தோன்றிய பிறகும் ஏன் தமிழகம் வளர வில்லை? தமிழர்கள் வாழ்க்கையில் ஏன் செழுமையில்லை? வடகொரியா, ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகளில் அரை நூற்றாண்டு வளர்ச்சியைப் பார்! இனிய செல்வ, திருவள்ளுவர் பொருட்டாலின் முடிவில் கயமை அதிகாரம் அல்லவா இயற்றியுள்ளார்! ஏன் இப்படி? திருக்குறள் சொல்லுவதை யார் கேட்கிறார்கள்! அப்படியே ஒரே வழிக் கேட்டாலும் திருப்பிச் சொல்வார்களே தவிரச் செய்வோர் யார்? இனிய செல்வ, நமது தமிழினம் உள்ளீடழிந்து உருக்குலைந்து வருவதன் அடையாளங்கள் உன் கண்ணுக்குப் படுகிறதா? உணர்கிறாயா? எங்கும் பல்குழு மனப்பான்மை! பாழ் செய்யும் உட்பகை! பரஸ்பரம் அழுக்காறு என்ற பாவி இன்று உலாவராத இடம் இல்லை! எத்தீமையிலும் முதல்தீமை அழுக்காறு! அதனால்தானே திருவள்ளுவர் அழுக்காற்றினைப் ‘பாவி’ என்று திட்டுகிறார்.

இனிய செல்வ, இன்று எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள்! ஆம்! சத்தியமாக எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள்! உண்மையாக நமக்கும் தான்! ஏன்? என்று கேட்கிறாயா? நல்ல கேள்வி! நாம் யாருக்கும் தீங்கு செய்ததில்லை! செய்யவும் எண்ணியதில்லை! ஏன், செய்ய வேண்டிய அவசியமும் இல்லை! ஆயினும் பகைவர்கள் உள்ளனர். ஏன்? இனிய செல்வ, நாம் சில காரியங்கள் உருப்படியாகச் செய்கிறோம்! அதனால், மக்கள் மதிக்கிறார்கள்! நாடு மதிக்கிறது! இந்த மதிப்பீடுகள் நமது தகுதியை மீறியதாகக் கூட இருக்கலாம். ஆயினும் சில அபூர்வ பிறவிகளுக்கு-பாடுபடாமல் திடீரென்று சவுரியாகிக் கூந்தலில் தொற்றிக் கொண்டு சிறப்புப் பெற்று வருபவர்களுக்கு இது பிடிக்கவில்லை! பிடிக்காது வெப்புநோய் கண்டவர்களுக்குக் கற்கண்டும் கசக்கும். அழுக்காற்றின் வயப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உண்டு, உடுத்து வாழ்வதே கூடப் பிடிக்காது! இஃது அழுக்காற்றின் இயல்பு! அழுக்காறு கையாலாகாக் குணமுடையவர்களின் குணம்! இனிய செல்வ, திருக்குறளைப் படி!

"உடுப்பது உம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்”

(1079)

இன்ப அன்பு

அடிகளார்